Tag: சக்தி சக்திதாசன்

  • என் இனிய பாரதியே !

     

    என் இனிய பாரதியே !

    தமிழ்த் தாயின் தங்கப் புதல்வனே !

    தமிழ்த் தரணி போற்றும் பாவலனே !

    தமிழர்தம் மனமுறைந்த தமிழ்க் காவலனே !

    நிந்தன்

     

     

    பிறப்பால் எம் தாயகம் செழித்து

    பிறழ்ந்தோடிய வருடங்கள் நூற்றோடு சில

    பிழையில்லா வகையில் எம்மினம் வாழ

    பிறந்தாயோ எந்தன் தமிழ்ப் புரவலனே !

     

     

    தமிழ்த்தாயின் மடி தவழ்ந்து

    தன் வாழ்வை தமிழுக்கீந்து

    தியாகத்தின் மறு உருவமாய் வாழ்ந்த உந்தன்

    திருப்பெருமை உணராத மந்தைக் கூட்டமய்யா நாம் !

     

     

    தும்பிக்கை கொண்டெழுந்த ஒரு மதயானை

    நம்பிக்கை இழந்ததினால் உனைத் தாக்கி

    சிந்திக்க வகையில்லா வகையில் உந்தன்

    தன்னிகரற்ற வாழ்வை முடித்ததை என்னவென்போம் ?

    தமிழே உந்தன் உயிரென்றாய் . . .

     

     

    ஆயினும் பலமொழி கற்றறிந்தாய்

    எம்மொழியாயினும் அம்மொழிச் சிறப்புகளை

    எம்மொழியில் புகுத்திட ஆவல் கொண்டாய்

    தமிழ் எனும் பாறையெடுத்து உந்தன்

    அறிவென்னும் உளி கொண்டு எத்தனை

    அழகிய சிற்பங்களை கவிதைகளாய் நீ

    ஆக்கி எமக்களித்தாய் எந்தன் அற்புதக் கலைஞனே !

    அடிமைகள் அல்ல நாம் . . .

     

     

    அன்னைத் தமிழின் அழகிய குழந்தைகள்

    அன்னியர் எமக்கெப்படி விலங்கு பூட்டுவர் ?

    அடலேறு போல ஆர்ப்பரித்தெழுந்தவனய்யா நீ !

    அயல் தேசத்திலே . . .

     

     

    அந்நிய மண்ணிலே

    கரும்புத் தோட்டமதில் எம்மினத்தவர்

    கசக்கிப் பிழியப்படுவதைக் கண்டு

    கண்ணீர் வடித்துக் கலங்கியவனே !

     

     

    கண்ணிருக்கும் குருடராய் இம்மண்ணில்

    பெண்னிருக்கும் நிலை சொல்லி எமை

    கண்திறக்கப் பண்ணும் வகையில் பல

    பண்ணிசைத்த புரட்சிக் கவிஞனே !

     

     

    பிறப்பால் அல்ல – உயர்

    குணத்தால் உயர்ந்தவரே உண்மையில்

    உயர் குலத்தோர் எனும் உண்மையை

    உரக்கச் சொல்லி புதுக் கருத்தை விதைத்தனை !

     

     

    தமிழ்த்தாயின் தலைமைந்தனே !

    உந்தன் பிறந்தநாளி;ல் உனை வணங்கி

    உயிர் பிரியும் நாள் வரை என் விரல்வழி

    உருகி ஓடட்டும் தமிழ்வரிகள் என வேண்டுகிறேன் !

     

     

    வணக்கத்துடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (255)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மற்றொரு வாரம் அதிவிரைவாக முன்னே வந்து கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது. மனத்தில் ஓடும் எண்ணங்கள் மடல் வாயிலாக உங்கள் முன்னே விரல் வழி வடிந்து உதிக்கிறது. ஒரு நாட்டிலிருந்து வேறோர் நாட்டிற்குப் புலம்பெயர்வது என்பது ஏதோ இலகுவான காரியமன்று. இத்தகைய புலம்பெயர்வுகளின் காரணங்கள் பலவகைப்படுவதுண்டு. நாட்டின் போர்ச்சூழல்களில் இருந்து உயிர் தப்பிச் செல்வோர்கள் ஒரு வகையினர். கல்விக்காகப் புலம் பெயர்வோர்கள் ஒரு வகையினர். வேலைவாய்ப்புத் தேடி புலம்பெயர்வோர்கள் மற்றொரு ரகம் என ப்லவகையான் காரணங்களைக் காணலாம்.ஆனால் புலம் பெயர்ந்தபின் தாம் புகுந்த நாட்டில் தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதில் உள்ள சிரமங்களின் உண்மையான் தாக்கம் அத்தகைய ஒரு நிலையை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களே சரியான் வகையில் உள்வாங்கியிருப்பார்கள்.

    ஒருவகையான கலாசார சூழலில், வித்தியாசமான காலநிலைகளின் மத்தியில் வாழ்ந்துவிட்டு முற்றிலும் புதிதான ஒரு கலாசார சூழல் மற்றும் காலநிலை மாற்றம் என்ப்வனவற்றிற்கு ஏற்ப எம்மை மாற்றிக் கொள்வது என்பது ஒன்றும் சுலபமான காரியமல்ல; அதுவும் குறிப்பாக நிறவேறுபாடு கொண்ட ஒருநாட்டில் எம்மை இணைத்துக் கொள்ளும்போது அந்நாட்டில் வாழும் சிறுபகுதியான நிறவெறி, இனவெறி கொண்ட மக்களின் காழ்ப்புணர்ச்சிகளின் மத்தியில் எமக்காக ஓர் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும்போது ஏற்படும் இடர்களைச் சமாளிப்பது ஒரு பெரிய சவாலாகவே இருக்கும். சில சமயங்களில் அவசரம், அவசரமாக அகதிகளாகத் தாம் பிறந்த நாட்டை விட்டுவிட்டு ஓர் அந்நிய நாட்டினுள் புலம்பெயரும்போது அந்நாட்டின் மொழி எமக்கு அந்நியமானதாக இருப்பின் அம்மொழியைக் கற்றுக் கொள்ளும்வரை வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் போராட்டமே!

    நாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் ஒவ்வொன்றும் புலம்பெயர் மக்களாகிய எமது வாழ்வில் எத்தகைய தாக்கங்களைத் தோற்றுவிக்கப் போகிறது என்பதனை உன்னிப்பாகக் கவனித்து வாழவேண்டிய தேவையிருக்கிறது. நாம் வாழும் சமுதாயத்தை விட்டு எம்மை அந்நியப்படுத்தி வாழ்வது என்பது முடியாத காரியம். ஓரளவிற்கு எமது வாழ்க்கைச் சூழலை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாமும் நாம் வாழும் நாடுகளின் அடிப்படைச் செயற்பாடுகளில் எம்மை இணைத்துச் செயல்படுத்தி வாழ்வேண்டியது காலத்தின் கட்டாயமாகக் கருதப்படுகிறது. எமக்கென ஒரு தனியான வட்டத்தை ஏற்படுத்தி எம்மவர் மத்தியில் மட்டுமே நாம் எமது உறவுகளைப் பலப்படுத்தி வாழ்ந்துவிட்டு நாம் இப்புலம்பெயர் நாடுகளில் இரண்டாம்தரப் பிரஜைகள் போல நடத்தப்படுகிறோம் என்று கூச்சலிடுவதால் பலனேதும் ஏற்படப்போவதில்லை. எம்மை அந்நியப்படுத்தி வாழும்போது நாம் வாழும் நாட்டு மக்க்களின் பார்வை உன்னிப்பாக எம்மீது விழுவதும், அவ்வித்தியாசங்களை அரசியல் லாபங்களுக்காக வேறுபாடுகளை முதன்மைப்படுத்தி அரசியல் நடத்தும் சிலரின் கைகளில் நாம் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவதும் தவிர்க்கப்பட முடியாததாகி விடுகிறது.

    இப்படியான சூழலில் இன்று நாம் பல புலம்பெயர் மக்கள் வெற்றியான வாழ்க்கையைத் தமதாக்கிக் கொள்ளும் ஒரு நிலையைப் பார்க்கிறோம். இத்தகைய சாதனையாளர்களின் மனவைராக்கியத்தையும், இலட்சிய வேட்கையையும் வியந்து பாராட்டாமலிருக்க முடியாது. வாழ்க்கை தம்மீது தூக்கிப் போடும் அத்தனை தடைக்கற்களையும் படிக்கட்டுகளாக்கித் தமது முன்னேற்றம் தமக்கு மட்டுமல்ல தாம் வாழும் நாட்டுக்கும் பெருமை தேடித்தரும் ஒன்றாக ஆக்கி உதாரண புருஷர்களாக வாழ்வைதைக் காணும்போது அவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு புலம்பெயர் மனிதருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைவது இயற்கையே. இம்மடல்மூலம் அத்தகைய ஒரு சாதனையாளரின் வாழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே எனமது மனத்தில் இவ்வாரம் இழையோடும் எண்ணமாகிறது.

    யார் அவர் ?

    1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி தற்போதைய “ஸொமாலிலாண்ட் (Somaliland)”எனப்படும் நாட்டிலே “கபீலி” எனும் இடத்தில் “கவீர் அவால் LONDON, ENGLAND - AUGUST 04: Mo Farah of Great Britain celebrates winning gold in the Men's 10000 metres final during day one of the 16th IAAF World Athletics Championships London 2017 at The London Stadium on August 4, 2017 in London, United Kingdom. (Photo by Shaun Botterill/Getty Images)இசாக்” குடும்பத்தில் பிறந்தவர் “மோ ஃபரா (Mo Farah)” ஆனில ஜந்து என்றழைக்கப்படும் “மொகமட் முக்தார் ஜெமா ஃபரா (Mohamed Muktar Jama Farah ) “ இவரது பாட்டனார்.  “ஜெமா” அந்நாளில் இங்கிலாந்தின் கீழிருந்த ஸொமாலியாவிலிருந்த ஒரு பிரித்தானியப் பிரஜையாவர். இவரின் தந்தை “முக்தார் ஃபரா”லண்டனில் பிறந்த ஒரு ஸொமாலிய இனத்தவர். விடுமுறையில் அவர் மோ ஃப்ராவின் தாயரைச் சந்தித்து திருமணம் புரிந்தார். எட்டு வயதுவரை ஸொமாலிய நாட்டிலேயே வாழ்ந்து வந்த மோ ஃப்ரா , எட்டு வயதில் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தார். தான் இங்கிலாந்துக்குள் நுழைந்தபோது தனக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது என்று கூறுகிறார். இவர் இங்கிலாந்தில் Feltham எனும் இடத்திலுள்ள Isleworth and Syon school எனும் பள்ளியிலும், பின்பு Feltham Community College எனும் கல்லூரியிலும் கல்வி பயின்றார். படிக்கும்போது ஒரு கார் மெக்கானிக்காகவோ அன்றித் தனது விருப்பத்துக்குரிய உதைபந்தாட்டக் குழுவான Arsenal உதைபாந்தாட்டக் குழுவில் உதைபந்தாட்டம் விளையாட வேண்டும் என்றே கனவு கண்டதாகக் கூறுகிறார்.

    ஆனால் காலதேவனின் கணக்கோ வேறு. இவர் பயின்ற கல்லூரியின் விளையாட்டுப் பயிற்சியாளர் இவரின் ஓட்டப்பந்தயத் திறமையை இணங்கண்டார். இவர் தனது பதின்மூன்றாவது வயதில் கவுன்சிலோ நகரைப் பிரதிநிதிப்படுத்தி லண்டன் இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்று மரதன் ஓட்டப் போட்டியில் ஒன்பதாவதாக வந்தார். அதற்கடுத்த வருடம் அவர் ஐந்து ஆங்கிலப் பள்ளிக்கூடங்களுக்கான ஓட்டப் போட்டியில் முதலாவது பரிசினைப் பெற்றார். இவரது திறமையை அறிந்த ஒரு செல்வந்தரான Eddie Klukundis என்பவர் இவர் இங்கிலாந்துப் பிரஜையாவதற்குரிய தொகையினை நன்கொடையாகக் கொடுத்து இவரைச் சட்டபூர்வமாக

    Four-time Olympic champion Sir Mo Farah with wife Tania after he was awarded a Knighthood by Queen Elizabeth II at an Investiture ceremony at Buckingham Palace, London. PRESS ASSOCIATION Photo. Picture date: Tuesday November 14, 2017. See PA story ROYAL Investiture. Photo credit should read: Jonathan Brady/PA Wire

    இங்கிலாந்துப் பிரஜையாக்கினார். அதைத் தொடர்ந்து பல ஐரோப்பிய மற்றும் உலக ஓட்டப் பந்தயங்களின் நீண்டதூர ஓட்டப் பந்தயங்கள் பலவற்றில் பங்குபற்றி இங்கிலாந்து நாட்டுக்கும், தனக்கும் பல வெற்றிகளையும் , பதக்கங்களையும் வாங்கிக் குவித்தார்.  எமது நாட்டு ஓட்டப் பந்தயவீரர் என்று அனைத்து இங்கிலாந்து நாட்டு மக்களாலும் உரிமை கொண்டாடப்பட்ட ஒரு கறுப்பு இனத்தவர் எனும் பெருமையைத் தேடிக் கொண்டார். ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைத் தட்டிக் கொண்ட இவர் கடைசியாக நடந்து முடிந்த ஓலிப்பிக் பந்தயத்துடன் தனது ஓய்வினை அறிவித்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவர் இங்கிலாந்துக்கும், தான் பிறந்த ஸொமாலிய நாட்டிற்கும், இஸ்லாமிய மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

    எனது எண்ண முற்றத்தின் முன்றிலில் இவர் நினைவுகள் தவழ்வதற்குக் காரணம் சில தினங்களுக்கு முன்னால் இவருக்கு இங்கிலாந்து மகாரணியாரால் “சார்” பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமையேயாகும்.

    எட்டுவயதுச் சிறுவனாக , ஆங்கில வார்த்தை ஒன்றுகூடத் தெரியாமல் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து இன்று மகாராணியாரால் “சார்” பட்டம் பெற்ற “மோ ஃப்ரா” அனைத்துப் புலம்பெயர் மக்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியாக, முன்னுதாரணமாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது அல்லவா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (254)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இந்தவார மடலுடன் உங்கள் மத்தியில் மீண்டும் மனம் திறக்கிறேன். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடு. அதற்காக நாட்டிலிருக்கும் ஒவ்வொரு குடிமகனும் நாந்தானே இந்நாட்டு மன்னன் என்று கூறி தன் மனம் போன போக்கிலே தனக்குப் பிடித்தமான விதிகளை இயற்றி வாழ்ந்து விட்டுப் போக முடிகிறதா ? ஒவ்வொரு குடிமகனின் கைகளிலும் இருக்கும் வாக்குச்சீட்டு ஒன்றே அவனுக்கு அந்நாட்டு மன்னன் எனும் அந்தஸ்தை வழங்குகிறது என்பதே பொருளாகிறது. ஒரு நாட்டின் அனைத்துப் ப்ரஜைகளினதும் மனதில் ஒரே மாதிரியான எண்ணங்கள் விளைவதில்லை. நாட்டின் முன்னேற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், அதற்கு கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகள் எவை என்பன ஒவ்வோர் மனிதனின் மனதிலும் வெவ்வேறு கோணங்களில் பரிணமிக்கின்றன.

    ஒரு நாட்டின் மக்களின் பலதரப்பட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையிலேயே வெவ்வேறு அரசியல் கட்சிகள் தோற்றமெடுக்கின்றன. அவைகளின் தோற்றத்தின் காரணம் நியாயமிக்கதாக இருப்பினும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் இலட்சியம் வெறியாக உருவெடுக்கிறது. இதன் விளைவாக எந்தவழி சென்றாயினும், அன்றி எத்தகைய பிரச்சாரத்தை மேற்கொண்டாயினும் தாம் அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் எனும் அவா, மக்களின் நன்மையையோ அன்றி நாட்டின் நன்மையையோ இரண்டாம் பட்சத்துக்குப் பின் தள்ளிவிடுகிறது. இதுவே இன்று பல நாடுகளின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு ஆகியிருக்கிறது. இந்த நோக்கத்திற்காக “உண்மைக்குப் புறம்பான செய்திகள் அல்லது Fake news “ எனும் வழிமுறை மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுக்கிறது. சமூகவலைத்தளங்களின் மூலம் பல மக்களை சென்றடையக்கூடிய அனுகூலத்தினால் இவ்வகையான மாயச்செய்திகள் பிரபல்யம் பெற்று விடுகின்றன.

    இங்கிலாந்தின் பிரபல்யமான அகராதியான Collins Dictionary எனும் அமைப்பின் தகவலின்படி நடந்து கொண்டிருக்கும் இவ்வாண்டில் இந்த Fake News எனும் பதமே அதிகமாக உபயோகிக்கப்பட்டிருக்கும் எனும் பதம் எனப்படுகிறது. இதன் மூலம் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரதிகூலம் ஒன்றுண்டு. அதாவது ஒரு நாட்டின் தலைவரையோ அன்றி அந்நாட்டின் நிர்வாக இயந்திரங்களின் முக்கிய உறுப்புகள் அன்று உறுப்பினர்கள் மீதோ சுமத்தப்படும் பல உண்மையான குற்றச்சாட்டுகளைக் கூட அவர்கள் ” மாயச்செய்திகள் அன்றி Fake News “என்று மிக இலகுவாக உதறித் தள்ளி விட்டுச் செல்லும் ஒரு நிலையைப் பல இடங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம். இதனால் பல நேர்மையான , உண்மையான மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகள் அரசியலை விட்டு ஒதுங்கிச் செல்லும் நிலையைக் காண்கிறோம். இது எம்மை உலக வரலாற்றின் மிக இருளடைந்த ஒரு காலகட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிடுமோ எனும் அச்சம் பல அரசியல் அவதானிகள் மத்தியில் தோன்றியுள்ளது. உலக அரசியல் மாற்றங்கள் ஒரு வலுவான சினேகபூர்வமான நிலையை விட்டு விலகிச் செல்லும் நிலை போன்றதொரு பிரமை ஏற்படுகின்றது.

    கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களிலும் இங்கிலாந்து பி.பி.ஸி தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் பனோராமா எனும் நிகழ்ச்சியில் திடுக்கிடும் பல உண்மைகள் நிறைந்த செய்திகள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. “அப்பில்பீ” எனப்படும் ஒரு நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் அந்தரங்க கோப்புகள் கணிணியின் இரகசிய பாதுகாப்பை உடைக்கும் குழுவினரால் ஹக் செய்யப்பட்டு ஜெர்மனிய செய்திநிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ஜெர்மனியில் இத்தகைய அந்தரங்க கோப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனங்களைக் கூட்டி அவர்களுக்கு இக்கோப்புகளின் பிரதிகளைக் கொடுத்தார்கள். அவ்வரிசையில் இங்கிலாந்த்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனமான பி.பி.ஸிக்கும், கார்டியன் பத்திரிகைக்கும் இக்கோப்புகளின் பிரதிகள் கொடுக்கப்பட்டன. அக்கோப்புகளின் அடிப்படையில் இங்கிலாந்து பி.பி.ஸி நிறுவனம் மேர்சொன்ன நிகழ்ச்சியைத் தயாரித்து ஒளிபரப்பியிருந்தது.

    இங்கிலாந்தின் பல கோடீஸ்வரர்கள் இங்கிலாந்தின் வரியிலிருந்து தப்பிப்பதற்காக தமது பணத்தை வரிவிலக்களிக்கும் பெர்மியூடா போன்ற நாடுகளில் முடக்கியிருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அவர்களின் அத்தகைய நடவடிக்கைகள் சட்டத்துக்குப் புறம்பான செய்கைகள் அல்ல சட்டத்தின் பல ஓட்டைகளை உபயோகித்து அரசர்கள் இத்தகைய வழியில் இங்கிலாந்து அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்கள். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, மற்றும் போலிஸ் இலாகா ஆகியவை நிதிப் பற்றாக்குறையினால் அல்லாடிக் கொண்டு இருக்கும் நிலையில் கோடி,கோடியாக சம்பாதிக்கும் பலர் இத்தகைய வழியில் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரிப்பணத்தைக் கட்டாமல் இருப்பது தேசத்துரோகத்துக்கு நிகரானது எனும் வாதம் பல மூலைகளில் இருந்து ஒலிக்கிறது. இத்தகிய சிக்கல் இங்கிலாந்தின் மகாராணியைக் கூட விட்டு வைக்கவில்லை. அவரின் பணத்தைக் கையாளும் நிறுவனம் இத்தகைய வரிவிலக்களிக்கும் நாட்டில் முதலீடு செய்திருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது. அது மட்டுமின்றி தற்போது பதவியிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய நிதி உதவியாளர் இத்தகைய வழியில் தானும் வரி கட்டாமல் தப்பியிருப்பதும் தெரிய வந்துள்ளது, இது இங்கிலாந்தின் அரசுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய உறவு கொண்டவரும்,வியாபார அமைச்சருமான ஒருவருக்கும், இரஸ்ய அதிபருக்கு நெருக்கமான ஒருவருக்கும் இடையிலான வியாபார உறவுகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு நாட்டின் சாதாரணப் பிரஜை எனும் பகடைக்காயை உருட்டி அந்நாட்டின் பிரபலங்கள் தமக்குள் விளையாடிக் கொண்டிருப்பது போன்றே எண்ணத் தோன்றுகிறது. இது வந்த வழியில் இன்னும் என்னென்ன வரப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்ப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 253 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    காலம் எனும் படகு யாருக்கும் காத்திராமல் தன்னுடைய திசையிலே மிகவும் அவசர கதியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இக்கால ஓட்டத்தினைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு வாழ்வினில் வெற்றியடைந்தோர் பலர், கால ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திக்குமுக்காடிச் சிக்கித் தவிப்போர் பலர் எனப் பலவிதமான வாழ்க்கைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதும், அவிழ்ப்பதுமாக இக்கால ஓட்டப் பயணத்தின் விளைவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆண், பெண் என்று வித்தியாசம் காட்டாது அவர்களுக்கான பாதைகள் வகுக்கப் படுகிறது. பெண்ணின்மேல் ஆண் அதிகாரம் செய்வதென்பது அனைத்துக் கலாசாரங்களிலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

    ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதைக் காட்டும் முகமாகவே ஈசன், அர்த்தநாரீஸ்வராகப் பெண்ணுக்குச் சமபாகம் கொடுத்தார் என்கிறது இந்து வேதங்கள். ஆனால் இன்றைய உலகில் ஆண், பெண் எனும் வேறுபாடு பலவடிவங்களில் தலைதூக்கிக் கொண்டுதானிருக்கிறது. பெண் என்பவள் இல்லத்தரசி என்றும், குழந்தைகளைப் பெறுவதும்,பேணுவதும் மட்டுமே அவர்களுக்கு உகந்த பணி எனும் வகையில் இன்று சில ஆண்கள் நடப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இன்றும் இங்கிலாந்தில் சம பணிகளில் இருக்கும் ஆணைவிடப் பெண்ணுக்கு ஊதியம் குறைவாகவே கொடுக்கப்படும் ஒரு நிலையைக் காண்கிறோம். இந்த வித்தியாசத்தை அரசாங்கம் இனங் கண்டு கொண்டு இவ்விடைவெளி நிரப்பப்படுவதற்கு காலக்கெடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    நாட்டைக் காக்கும் பணியில் இராணுவத்தில் இணையும் பெண்கள் சமீபகாலம் வரை போர்க்களங்களில் முன்னணிக்கு அனுப்பப்படாமலிருந்த நிலை இங்கிலாந்தில் இருந்தது. அது சமீப காலத்தின் முன்னால்தான் சட்ட மாற்றம் மூலம் மாற்றியமைக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தேசங்களிலும், பின்புலங்களிலும் கணவன், மனைவி இருபாலாரும் வேலை பார்ப்பதன் மூலமே குடும்பத்தைப் பராமரிக்கக்கூடிய நிலை காணப்படுகிறது. ஆயினும் பல இடங்களில் இன்றும் வேலைக்குச் சென்று திரும்பும் பெண்களே வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு விதிவிலக்காகப் பலர் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது; இருப்பினும் ஆணாதிக்கத் தன்மையும் பல இடங்களில் ஓங்கி இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. எத்தனை கடினமாக உழைத்தாலும் பெண்ணாக இருந்தால் பதவி உயர்வுகளைப் பெறுவதிலும் பெண்கள் பல தடைகளைத் தகர்த்தெறிய வேண்டிய கட்டாயத்துக்குட்படுத்தப்படுகிறார்கள். சமீப காலத்தின் முன்னால் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் அவர்கள் பெண்ணாக இருந்ததால் அளவுக்கதிமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. உலகநாடுகளுக்கு முன்மாதிரியாக முன்னணியில் திகழ்வதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே இத்தகைய நிலையானால் மற்றைய நாடுகளைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா என்ன ?

    சரி, எதற்காக இந்த ஆய்வெல்லாம் எனும் எண்ணம் ஏற்படுகிறதா? சமீபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் அமைச்சரவையே உலுப்பும் அளவிற்கு வலுப்பெற்றதனை நோக்குவதே இம்மடலில் முக்கியக் காரணியாகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஹாலிவூட்டின் முன்னணித் தயாரிப்பாளரும், மிகவும் பிரசித்தி பெற்ற அமெரிக்கருமான “ஹார்வி வெயின்ஸ்டைன் (Harvey Weinstein)” என்பவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இச்சம்பவம் ஒரு பெரிய பாரிய பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. ஒரு பெரிய அணைக்கட்டை உடைத்து வெள்ளம் பாய்வதுபோலப் பல பிரபல்யமானவர்கள், தமது பிரபல்யத்தை உபயோகித்துத் தம்மைப் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளார்கள் என்று பல பெண்கள் குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்திருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த குற்றச்சாட்டுகள் இப்போது இங்கிலாந்து அமைச்சரவையில் வந்து நிற்கிறது. எப்படி என்கிறீர்களா? இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கு உதவியாளர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் பணிபுரியும் பல பெண்கள் தாம் ஒரு காமப்பொருளாக அங்குப் பணிபுரியும் பல ஆண்களினால் நடத்தப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள். பிரபல்யமானவர்கள் மீது குற்றம் சுமத்தினால் தமது எதிர்காலம் பாழ்பட்டு விடும் எனும் பயத்தினால் பல சமயங்களில் மெளனமாக இத்தகைய செயல்களைத் தாம் பொறுத்துக் கொண்டிருந்ததாகவும் இப்போது பல வழிகளில் இத்தகைய செயல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதால் தாமும் வெளிவருவதாகக் கூறியுள்ளார்கள்.

    ஆச்சரியமான் விடயம் என்னவெனில் இத்தகைய செயல்கள் சில நடந்தது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சிக்கலிலே மாட்டிக் கொண்ட இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் இன்று தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அப்படி இவர் மீது என்ன குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது? ஒரு முன்னணிப் பெண் ஊடகவியலாளர் கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர் சுமார் பதினைந்து வருடங்களின் முன்னால் இப்போதைய பாதுகாப்பு அமைச்சர் (நேற்றுவரை) அன்றைய பாராளுமன்ற அங்கத்தவர் தன்னுடன் தனிமையில் பேசும்போது தனது துடையில் கையை வைத்துப் பேசினார் என்றும், அத்தகைய செயலில் ஈடுபட்டால் விளைவு விபரீதமாகும் என்று தான் எச்சரித்ததினால் அவர் நிறுத்தினார் என்றும் கூறியதே அவ்வமைச்சரின் சரிவுக்குக் காரணம்.

    ஆனால் ஆச்சரியம் என்னவெனில் தான் கூறியதின் விளைவு அமைச்சர் தனது பதவியை இழப்பது என்று தான் கடைசிவரை எண்ணவில்லை என்றும் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சிறிய விடயம் இத்தனை பாரதூரமாக்கப்பட்டிருக்கத் தேவையில்லை என்று அப்பெண் ஊடகவியலாளர் இப்போது கூறியிருப்பதே இப்படியான பல குற்றச்சாட்டுகளில் சில பாரதூரமானவை என்றாலும் இத்தகைய விடயங்கள் பல மிகைப்படுத்தப் படுக்கின்றன என்று சில ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்துப் பாராளுமன்ற வளாகம் பல காமவெறியர்களைக் கொண்டது என்பது போன்ற தோற்றத்தையளிக்கும் வகையில் இருக்கிறது, இங்கிலாந்துப் பாராளுமன்றம் 14000 பேர்வரை பணிபுரியும் ஒரு கெளரவமான இடம் என்பதை மறந்து விடக்கூடது எனும் வாதமும் முன்வைக்கப்படுகிறது.

    பெண்களை நோக்கிய ஆண்களின் பார்வை மாற வேண்டியது அவசியம். பெண்களை வெறும் காமத்தின் அடையாளமாய்ப் பார்க்கும் பல ஆண்கள் இருப்பது உண்மையே ! இது சிறுவயது முதலே ஆண்களின் மனத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய வகையில் அவர்களது கல்விமுறை அமைக்கப்பட வேண்டும். இச்சமயத்தில் நிவேதிதா அம்மையார் பாரதியாருக்குச் சொன்னதை நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது ” பெண்கள் விடுதலையடையும் வரை ஒரு நாடு விடுதலையடைய முடியாது .”  இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் அதிபர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (252)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். வாரமொன்று ஓடியது. மடலொன்று தவறியது. மீண்டும் அடுத்த மடலுடன் உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். இருக்கும்போது தெரிவதில்லை இழக்கும் போதுதான் புரிகிறது. இது வாழ்க்கையில் பலவற்றிற்குப் பொருந்தும். எம்முடன் இருப்போரை, அல்லது எம்முடன் இருப்பவைகளை அவை எப்போதும் இருக்கும் தானே எனும் எண்ணத்தில் பெரிதாகக் கணக்கில் ஒன்றும் எடுத்துக் கொள்வதில்லை. இது மனித வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதோ ஓர் இடத்தில் நிகழ்கிறது. அதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கானவனில்லையே! என்ன எதைச் சக்தி கணக்கிலெடுக்காமல் விட்டு விட்டேன் என்று எண்ணுகிறீர்களா?

    சில வருடங்களுக்கு முன்னால் எனது இடது கண்ணில் ” யூவீஜட்டிஸ் ( Uveitis ) “என்றழைக்கப்படும் ஒரு நோய் வந்தது. இதன்போது கண் சிவப்பாகும், சூரியஒளியையோ அன்றி மின்விளக்கையோ நேரடியாகப் பார்க்கும்போது கண் வலிக்கும். இதற்கு உடனடியாகத் தகுந்த வைத்தியம் எடுக்காவிட்டால் கண்பார்வை வெகுவாகப் பாதிக்கப்படும்.

    ஹாஸ்பிட்டலுக்குச் சென்று வைத்தியம் செய்து கொண்டேன். ஆனால் இரண்டு மூன்று மாத இடைவெளிகளில் இந்நோய் திரும்பத் திரும்ப எனது இடது கண்ணைத் தாக்கியது. இதன் பின்னணிக் காரணத்தைக் கண்டறிய பலவிதமான பரிசோதனைகளை நடத்தியும் சரியான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து ஒன்றரை வருடத்துக்கு மேலாக கண்ணில் “ஸ்டெரோய்ட் (Steroid)“ஐ அடிப்படையாகக் கொண்ட மருத்தை இடது கண்ணில் உபயோகித்து வந்தேன். இதன் பக்கவிளைவு ” கண்புரை (Cateragh)” மிகவும் விரைவாக வளர்வது. அதன் காரணமாகச் சிறிது, சிறிதாக எனது இடது கண்பார்வை குறைந்து எதையும் இடது கண்ணால் பார்க்க முடியாது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். இடது கண்பார்வையைச் சரி செய்வதற்காக இடது கண்ணில் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்கள்.

    அறுவை சிகிச்சைக்கான திகதி அக்டோபர் 17ஆம் திகதி. இது மிகவும் பொதுவான, இலகுவான சிகிச்சை என்றாலும் மனதினில் உள்ளூர ஒரு சிறிய பயமிருந்தது. கண்பார்வை போய்விட்டால் . . . இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டேன். என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். அந்த நாளும் வந்தது காலை எட்டு மணிக்கு ஹாஸ்பிட்டலுக்கு வரும்படி பணித்திருந்தார்கள். காலையில் 7:15 மணிக்கு எனது மனைவியுடன் ஹாஸ்பிட்டலுக்குப் புறப்பட்டேன். அநேகமாக அன்றைய அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் நான் தான் முதலாவதாகச் சென்றிருப்பேன் போலும். அங்கிருந்த நர்ஸ் என்னை உள்ளே அழைத்து இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, இரத்த குளுக்கோஸ் அளவு என்பவற்றைக் குறித்துக் கொண்டு எனது பெயர் எழுதப்பட்ட பட்டியை எனது இடது கணுக்கையில் கட்டி விட்டார்.அதன் பின்பு மனைவியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன்.

    சுமார் 30 நிமிடங்களின் பின் என்னை உள்ளே அழைத்து ஒரு நர்ஸ் எனக்கு என்ன சிகிச்சை நடைபெறப் போகிறது என்பதை விளக்கி விட்டு இடது கண்ணுக்குள் சில மருந்துத்துளிகளை விட்டுவிட்டுக் காத்திருக்கச் சொன்னார். அதன் பின்னால் டக்டருடனான சம்பாஷணை. கண்களை ஒரு இயந்திரம் கொண்டு பரிசோதித்து விட்டுத் தாம் கூப்பிடும்வரை காத்திருக்கச் சொன்னார். எனக்கு முன்னால் ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க ஆங்கிலேயரை ஆபரேஷன் தியேட்டர் உள்ளே அழைத்துச் சென்றார்கள். மணியைப் பார்த்துக் கொண்டேன்.அடுக்கடுக்காக அன்றைய சிகிச்சைக்காக மேலும் பலர் வந்து அதே அறையில் நான் சென்ற அதே நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு அங்கே உட்கார்த்தி வைக்கப்பட்டார்கள். சிலர் சக்கர நற்காலிகளிலும் வந்திருந்தார்கள். எனக்கு அருகே உட்கார்ந்திருந்த ஆசிய மனிதரின் கைபேசி ஏதோ ராகத்தில் அவரையழைத்தது. அங்கே அமர்ந்திருந்த தாதி அவர் மீது ஒரு கடினப்பார்வை வீசினார். ஆனால் அவரோ தன்பாட்டுக்கு தன் பாஷையில் கைபேசியில் அரட்டை அடித்தார்.

    சுமார் ஒரு மணிநேரத்தின் பின்னால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட ஆங்கிலேயர் சக்கரநற்காலியில் உட்கார்த்தி அழைத்து வரப்பட்டார். அவரது இடது கண் மூடிக்கட்டப்பட்டிருந்தது. அனைவரும் அவரது முகத்தைப் பார்த்தார்கள் அவர் அனைவரையும் பார்த்துப் புன்னகைத்தார். அனைவரும் பெருமூச்சு விட்டார்கள். ஆசிய மனிதர் அந்த ஆங்கிலேயரிடம் ஆபரேஷன் நடக்குப்போது எப்படி இருந்தது? வலித்ததா? என்றெல்லாம் கேட்டார். இல்லை எதுவுமே தெரியவில்லை என்றார் அந்த ஆங்கிலேயர். மீண்டும் அதே ராகத்தில் கைபேசி பாடியதும் இப்போது தாதி மட்டுமல்ல அனைவரும் ஆசிய மனிதரை நோக்கி ஓர் கடினப்பார்வையை வீசினர். புரிந்து கொண்ட ஆசிய மனிதர் கைபேசியை மூடிப் பைகளில் திணித்துக் கொண்டார்.

    நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டேன்.  மனைவியிடம் சொல்லிக் கொண்டு பலிக்குச் செல்லும் ஆட்டுக்கடா போலச் சென்றேன். ஆபரேஷன் அறைக்குள் முதலில் விறைப்பு மருந்து விடும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான் உட்கார்ந்திருந்த நாற்காலியே ஒரு கட்டிலைப் போல விரிந்தது. இரண்டு ஆசியப் பெண் டாக்டர்கள் நின்றார்கள். இருவரும் எனது பெயர் , பிறந்த திகதி ஆகியவற்றை என்னிடம் கேட்டுச் சரிபார்த்த பின்னால் அவர்களில் ஒருவர் என் கண்களில் இரண்டு மூன்று சொட்டுத் துளிகளாய் மருந்திட்டார். எனது கண் உணர்வுகள் மரத்துப் போகும் வரை அவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். தாமிருவரும் எப்போது இந்தியாவுக்கு விடுமுறையில் போகப்போகிறார்கள் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். என் கண் உணர்வுகள் மரத்துப் போனதும் ஒரு ஊசி மூலம் மேலும் மருத்தை எனது விழிகளுக்குள் செலுத்தியது போலிருந்தது ஆனால் ஒருவிதமான உணர்வும் இருக்கவில்லை.

    அப்படியே அடுத்த அறையினுள் தள்ளிச் செல்லப்பட்டு மற்றொரு பெண்வைத்தியரிடம் கையளிக்கப்பட்டேன். பின்னணியில் ஆங்கில மென்மையான இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்படும் கண்ணுக்கு மட்டும் இடைவெளி விட்டு விட்டு ஒரு முகத்தை மறைக்கும் துணி விரிக்கப்பட்டது. இரு கூரிய வெளிச்சம் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. தான் இப்போது கண்புரையை அகற்றி விட்டுச் செயற்கை லென்ஸ் பொருத்தப் போவதாகக் கூறிய பெண் வைத்தியர் சிகிச்சையில் ஈடுபட்டார். சுமார் நாற்பது நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது. சிகிச்சை முடிந்த கண் மட்டும் கட்டப்பட்டு நான் வெளியே அழைத்து வரப்பட்டேன். அழைத்து வந்த நர்ஸ் மிகவும் அன்பாக என் மனைவியை அழைத்து என் அருகில் அமர்த்தி விட்டு தேநீர், பிஸ்கட் ஆகியவற்றைக் கையளித்தார். எனது நிலையை அக்கறையோடு என் மனைவி விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னால் மீண்டும் நர்ஸ் எனது இரத்த அழுத்தம், குளுக்கோஸ் ஆகியவற்றை அளந்து குறித்துக் கொண்டார். எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கித் தேவையான மருந்துகளைத் தந்து விட்டு அடுத்தநாள் காலை கண்கட்டுகளை அவிழ்க்கலாம் , கண்பார்வையில் பிரச்சனை இருந்தால் மட்டும் மீண்டும் வைத்தியசாலைக்கு வரும்படி கூறி வீட்டுக்கு அனுப்பினார்கள்.

    அடுத்தநாள் காலை எனது மனைவி தெரிந்த இறைவனின் பெயர்களையெல்லாம் அழைத்துத் துதித்த பின்னால் நம்பிக்கையோடு என் கண்கட்டை அவிழ்த்தேன். அப்பப்பா! இப்படிக்கூட அழகாகப் பார்க்கலாமா? எனும் அளவுக்கு எனது கண்பார்வை திரும்பியிருந்தது. ஆமாம் நண்பர்களே நாம் இழக்கும் வரை ஒன்றினதும் அருமை எமக்குப் புரிவதில்லை அது எமது உடல் உறுப்புக்களாக இருந்தால் கூட . . . கடந்தவாரம் எனது மடல் தவறிய காரணம் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் இல்லையா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(251)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மடலோடு உங்களுடன் கலந்துரையாட விரைந்து வரும் வேளையிது. இருந்தால் இருப்போம், மடிந்தால் மடிவோம் இதுதான் உலக வாழ்க்கையின் நியதி. காலங்கள் எத்தனையோ மாறினாலும், விஞ்ஞானம் கரைபுரண்டோடினாலும் அன்றும், இன்றும் இவ்வகிலத்தில் நாமறிந்த மாற முடியாத, எம் ஒருவராலும் மாற்ற இயலாத உண்மை இதுவேயாகும். இவ்வுண்மை தினமும் எமக்குள் உறைந்திருந்தாலும் சமயங்களில் அனைத்தையும்விட நாம் தேடும் விடயங்கள் எமக்கு வாழ்வினில் முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. நிலையற்ற வாழ்வில் நாம் தேடும் பொருள்கள் மட்டும் ஏனோ நிலையானவை போலத் தென்படுகிறது. இதுதான் மனத்தின் மாயை என்று கூறப்பட்டதோ எனும் எண்ணம் மனதில் எழாமலில்லை..

    எங்கெங்கோ பிறந்தவர்கள் இன்று எங்கெங்கோ இடம் பெயர்ந்து வேறெங்கோ தம் வாழ்வினை அமைத்து வாழும் நிலை காண்கிறோம். காலக் காற்றில் அகப்பட்ட சருகினைப் போல வாழ்வின் தேவைகள் எனும் திசையில் நாம் அடித்துச் செல்லப்படுகிறோம். ஆனால் அப்படியான பிரயாணம் கூட சில கட்டுப்பாடுகள், சில கட்டுக்கோப்புகள், சில நியதிகளுக்குள் தான் நடந்தேற வேண்டுமென்ற நியதி இவ்வுலகில் விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்விதிகளை, இந்நியதிகளை வெவ்வேறு நாடுகளில் அந்த நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். மன்னராட்சி என்று தொடங்கி இன்று மக்களாட்சி எனும் வகை ஜனநாயகம் எனும் பெயரில் பல நாடுகளில் காட்சிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு சில நாடுகளிலோ தனிமனித அதிகாரங்கள் சர்வாதிகாரமாக மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்விருவகையிலான அமைப்புக்களின் தாக்கங்கள் அந்த நாடுகளில் வாழும் சாதாரண பிரஜைகளின் மீதே தெறிக்கின்றன. தமது முறையில் நியாங்களை முன்வைப்பதையே ஊடகப் பிரசாரங்கள் மூலம் அந்த நாடுகளின் அதிகார வர்க்கங்கள் இயம்பிக் கொண்டிருக்கின்றன.

    உண்மைக்குப் புறம்பான விடயங்கள், உண்மையே அல்லாத விடயங்கள் ஊடகங்களின் மூலம் நியாயப்படுத்தப்படும்போது அங்கே உண்மையின் சாட்சியங்கள் வாயடைத்துப்போய் மெளனிகளாகி விடுகின்றன.

    என்ன எதை நோக்கி எனது இவ்வார மடல் பயணிக்கிறது? எனும் கேள்வி எழுகிறதா ? சற்றுப்பொறுங்கள்… விளக்கத்துக்கு வருகிறேன்.

    இன்றைய இங்கிலாந்தின் சரித்திரம் இன்று ஒரு முக்கியமான சந்தியில் நிற்கின்றது . இது முச்சந்தியோ அன்றி நாற்சந்தியோ அல்ல; வெறும் இரண்டே இரண்டு தெருக்களைக் கொண்ட ஒரு சந்தியே. இச்சந்தியில் எந்தப் பாதையில் போவது என்பதை மக்களே நீங்களே தீர்மானியுங்கள் என்று எமது முன்னால் பிரதமர் டேவிட் கமரன் மக்களின் முடிவுக்கு 2016ஆம் ஆண்டு விட்டார். ஆனால் எந்தப் பாதையில் போகக்கூடாது என்று தான் நம்புகிறேன் என்பதையும் கூறினார். விளைவு மக்கள் தேர்ந்தெடுத்த பாதை அவர் சிபாரிசு செய்த பாதைக்கு முற்றிலும் முரணானது. இன்று அவர் பிரதம மந்திரியாகக் கூட அல்ல அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார். இன்றைய இங்கிலாந்து மக்களின் முன்னால் இருக்கும் கேள்வி அவரைப் பற்றியதல்ல. அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையை தேர்ந்தெடுக்கும்படி செய்யப்பட்ட பிரசார கர்த்தாக்கள் உண்மைகளை உண்மையாக அவர்களுக்கு புடம் போட்டுக் காட்டினார்களா? அன்றி உண்மைகளின் தோற்றத்துக்கு மெருகேற்றி அவைகளை மிகைப்படுத்தப்பட்ட உண்மைகளாகக் காட்டினார்களா ?என்பதுவே ! ஒருவர் அரசியலுக்குள் நுழைவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு.

    1. ஒரு கொள்கை மீது கொண்ட தீவிரமான பிடிப்பு
    2. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் உன்னத நோக்கம்
    3. தம் தேசத்தின் மீது கொண்ட பற்று

    இங்கு எது முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் அரசியல் பிரவேசத்தின் உண்மையான பரிணாமம் விளங்கப் பெறுகிறது. நாடும், மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும் நான் கொண்ட கொள்கை வெற்றி பெற்றால் அதுவே என் வெற்றி என்று நினைப்பவர் ஒரு புறம், மக்களின் நன்மைக்காக, எனது தேசத்தின் சுபிட்சத்துக்காக எனது கொள்கை குறுக்கே வரும்போது அதைக் கொஞ்சம் மாறுதலுக்குள்ளாக்கி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் மறுபக்கம் நின்று மக்களுக்காக, மக்களையே குழப்பும் ஒரு நிலைக்கு இன்றைய இங்கிலாந்து மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு உணர்வு எழுகிறது.

    ஒரு தொண்டனுக்குக் கொள்கையும், கட்சியும் முக்கியம் என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் நாடு சீரழியப் போகிறது எனும் ஒரு நிலை வரும்போது தமது கட்சி பேதங்களை ஒருபுறம் தள்ளி ஒருமைப்பட்ட குரலில் , தமது வலுவினைக் காட்டி தமது நாட்டிற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் மன தைரியம் இன்றைய இங்கிலாந்து முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கு உண்டா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

    “ப்ரெக்ஸிட்” எனும் பாதையில் இங்கிலாந்தின் எதிர்காலப் பயணம் அமையப்போகிறது என்பதை மக்கள் தீர்மானித்த பின்னர் இப்பாதையில் பயணிப்பதற்கு அதன் கரடு முரடான பாதையின் குலுக்கல்களைச் சந்திப்பதற்கு பயணப்படும் வாகனம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நடத்தப்படும் பேச்சுக்களில் இங்கிலாந்து ஒரு வலுவற்ற நிலையில் கலந்து கொள்ளுமேயாகில் அப்பேச்சுக்களினால் விளையப் போகும் முடிவுகள் பயணத்தை இலகுவாக்க உதவாது. இன்று இங்கிலாந்துப் பிரதமர் தெரேசா மே அவர்களைக் கவிழ்க்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்குவது எதிர்பார்க்கக்கூடிய விடயமென்றாலும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே தமது சுயலாபங்களுக்காக அவரது முதுகில் குத்தும் முயற்சியில் இறங்குவது நடுத்தரமான நிலையில் நாட்டின் பொருளாதார நிலையை நோக்கி கவலைப்படுவோரை கலங்க வைக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. எமது படையை வழிநடத்தும் தளபதியை நாமே காயப்படுத்தி விட்டு எதிரணியில் இருப்பவர்களுடன் வலுவான நிலையில் எதிர்ப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனமான செயல்.

    இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகித் தனியான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய காலக்கெடுவின் இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. எமது எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கை ஒரு நிலையான அடித்தளத்தில் உருவாக்கப்பட வேண்டுமென்றால் இன்று எம்முன்னே இருக்கும் கடமை தெளிவானது. கட்சி பேதங்களை மறந்து எமது பிரதமருடன் ஆரோக்கியமான வாதங்களை முன்வைத்து அவருடைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைகளின் வெற்றிக்கு எமது பக்கபலத்தை அளிப்பது முக்கியமானது. எமது பிரதமர் முதலில் எமது ஆதரவுடன் எம்மால் எதிர்பார்க்கப்பட்ட வகையில் இப்பேச்சுகளை வெற்றியாக முடித்து எம்மை சரியான பாதையில் பயணிக்க வைக்கட்டும். அதன் பின்னால் நாம் எமது உள்நாட்டு அரசியல் சகோதரச் சண்டைகளை வாக்குப் பெட்டிகளின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

    “நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
    நாமென்ன செய்தோம் அதற்கு என நினைத்தால் நன்மை எமக்கு!
     

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 250 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலிலே உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். ஏதேதோ எண்ணங்களுடன் நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வினுள் புகுந்து கொள்கிறோம். எதை எமது இலக்காகக் கொண்டு வாழ்வைத் தொடங்குகிறோமோ அந்த இலக்கை அடைந்து விட்டோம் எனும் பெருமையோடு வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் சிலரே! அதற்காக வாழ்வின் முடிவில் நாமடைந்த நிலையைப் பற்றி மற்றையோர்கள் பெருமைப்படக்கூடாது என்பதல்ல பொருள். நாமடைந்தவற்றைப் பெருமையாக எடுத்துக் கொள்ளும் பண்பு வாழ்வின் எமது வளர்ச்சியோடு வளர்ந்துள்ளதா என்பதுவே கேள்வி. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எமது ஆரம்பப் புள்ளியிலிருந்து நாமடையப் போகும் புள்ளிக்கு இரண்டு மூன்று வழிகள் இருக்கும் அதை முன்கூட்டியே அறிந்து வைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிப்பதுவே எம்மில் அனுபவமிக்கவர்கள் செய்யும் செயல். ஏனெனில் ஒரு வழியில் தடையேற்பட்டால் மற்றொரு வழி மூலம் எமது இலக்கை அடையலாம் என்பதினாலேயே.

    ஆனால் வாழ்க்கைப் பயணம் அத்தகைய இலகுவானது அல்ல. எமது இலக்குக்கான பாதைகள் பல ஆரம்பிக்கும்போதே எமது கண்களுக்குத் தெரிவதில்லை. போகும் வழியில் எங்கோ ஓரிடத்தில் ஒரு தடையேற்படுகிறது. எமது இலக்குக்கான மாற்றுவழி தென்படாவிட்டால் நாம் இலக்கையே மாற்ற வேண்டிய தேவையேற்படுகிறது. இது நாம் வாழ்வில் தோல்வியடைந்து விட்டோம் என்று அர்த்தமாகுமா ? இங்கிலாந்துக்கு முதன் முதலில் வரும்போது ஐந்து வருடத் திட்டத்துடன் நுழைந்தவன் நான். ஐந்தே ஐந்து வருடங்களின் பின்னால் என் தாய்நாட்டிற்குத் தேர்ச்சி பெற்ற பொறியியலாளனாகத் திரும்பி எனது தாய்நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்பது அன்றைய இலட்சியமாக இருந்தது. ஆனால் காலம் போட்ட கணக்கே வேறு.  இன்று ஏறத்தாழ 43 வருடங்களின் பின் அதே இங்கிலாந்தில் இருந்து மடல் வரைந்து கொண்டிருக்கிறேன். எனது பொறியியல் அனுபவங்கள் இங்கிலாந்து நாட்டின் நிறுவனத்துக்கு ஏறத்தாழ முப்பது வருடங்கள் சேவையாற்றியுள்ளது. என் வாழ்வினை நான் தோல்வி எனவும் எடுக்கலாம் அன்றி வெற்றி என்றும் எடுக்கலாம். ஒரு தோல்வியின் பின்னால் மறைந்துள்ள வெற்றி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

    விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்புவது ஒன்றே மனத்துக்கு அமைதியைக் கொடுக்கும்.  ஓர் ஓட்டப்போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக முன்னதாக இலக்கை அடைந்த முதல் மூன்று பேருக்கு மட்டுமே பரிசு கிடைக்கிறது. அவ்வோட்டப் போட்டியில் பங்குபற்றி இலக்கைத் தொட்ட அனைவருமே வெற்றி பெற்றவர்கள் எனும் உண்மையை இலகுவாக மறந்து போய்விடுகிறோம். வாழ்க்கையை ஓர் ஓட்டப்போட்டி என்று எடுத்துக் கொள்வோம். அதன் இறுதி இலக்கு அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் அதை யார் முதலில் தொடுவார்கள் என்பதை எம்மால் அறுதியிட்டுக் கூறி விட முடியுமா? ஒரு எண்பது வயதுப் பெரியவர் இன்னமும் ஓடிக் கொண்டேயிருப்பார் ஒரு முப்பது வயது இளைஞன் அவருக்கு முன்னாலேயே இலக்கைத் தொட்டு விட்டிருப்பான். இங்கு வெற்றி பெற்றவர் யார் ? எனது நல்ல நண்பர் ஒருவர். இங்கிலாந்தில் வாழும் வேளையில் தனக்கும், ஈழத்தில் வசிக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை கனடாவில் அமைத்துக் கொள்ள விரும்பினார் அதற்காக ஏறத்தாழ நான்கு முறைகள் முயற்சித்து நாலாம் தடவையே தன் முயற்சியில் வெற்றி கண்டார். இன்றோ கனடாவில் ஒரு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதலாவது தோல்வியிலேயே மனம் தளர்ந்து போயிருப்பாரேயாகில் இன்றைய நல்ல வாழ்க்கையை அவர் அனுபவித்திருப்பாரா என்பது கேள்விக்குறியே!

    பூரணமான கணத்தைத் தேடுவதை விடுத்து எமக்குக் கிடைக்கும் கணங்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பூரணப்படுத்துவது என்று எண்ணுவதே சாலச்சிறந்ததாகும். எனது நாற்பதாவது வயதுவரை நான் ஒரு எழுத்தாளானாவேன் என்று கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் இன்று எழுத்து இல்லையேல் நானில்லை எனும் அளவுக்கு எழுவதை நேசிக்கும் ஒரு மனிதனாக வாழ்கிறேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ஒவ்வொருவருடைய பாதையும் அவர்களின் ஆரம்ப இலக்கை அடையவில்லை எனினும் நாம் பயணிக்கும் பாதையை ரசிக்கவும், விரும்பவும் கற்றுக்கொள்ளும்போது அது ஒரு வெற்றிகரமான இலக்கையே எமக்குப் பரிசளிக்கிறது என்பதனை என் வாழ்வின் அடிப்படையில் இருந்து சுட்டிக்காட்டுவதற்காகவே! கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகள், “மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று” இவ்வுண்மையை எமக்கு அழகுறவே எடுத்துக்காட்டுகிறது.

    உங்களுடனான எனது மடல் உறவாடலில் 250 வாரங்களை எட்டிப்பிடித்து விட்டேன் என்று எண்ணும்போது கால ஓட்டத்தின் வேகத்தை உணர முடிகிறது. ஒரு நீண்ட பயணத்தை நடத்தும் ஒருவன் இடையிடையே சில மைல் கற்களில் அமர்ந்து தான்வந்த பாதையின் அனுபவங்களையும் இனித்தான் எட்ட வேண்டிய தூரத்தின் நீளத்தையும் அலசுவது போல இத்தகைய மைல் கற்களில் நானும் எனது இந்த எழுத்துப் பயணத்தின் நீளத்தையும், நோக்கத்தையும் அலசும் முகமாகவே இந்த மடல் வரைவு.

    இந்தப் பிரபஞ்சத்தின் காலத்தோடு ஒப்பிடுகையில் ஒரு நீர்க்குமிழி போன்ற எனது வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்களின் நீளம் இத்தனை பெரிதா? என்று எண்ணும் போது “எறும்பும் தன் கையால் எண்சாண்” எனும் முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது. எழுத்து என்பது புனைவு எனும் காலத்தை மாற்றியவர்களில் கவியரசர் வகித்த பாத்திரமும் முக்கியமானது. அவர் எழுத்துக்குக் கொடுத்த வடிவம் ஒரு புதுவகை அர்த்தத்தைத் தந்தது. சுய அலசல் எத்தனை தூரம் ஒரு மனிதனின் மனத்தின் அழுக்குகளைக் களைய உதவுகிறது எனும் உண்மை புலர ஆரம்பித்தது.

    எங்கோ பிறந்தேன் இன்று எங்கோ வாழ்கிறேன். ஆனால் நான் வாழும் இந்தப் புலம்பெயர் மண்ணில் நான் காணும் அன்றிக் கேட்கும் விடயங்களின் தாக்கங்களை ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையிலும் அந்நிய நாட்டிலிருந்து இங்கு வந்து இந்நாட்டின் குடியுரிமை பெற்றவன் எனும் வகையிலும் என் உடன்பிறவா உறவுகள், தமிழன்னை ஈந்த சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வது அதுவும் தெரிந்தவற்றை எதுவித மாற்றமுமில்லாமல் அப்படியே பகிர்ந்து கொள்வது எனும் எனது நோக்கில் எத்தனை தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதைத் தீர்மானிப்பவர்கள் என் அன்பு உள்ளங்களாகிய நீங்களே!

    ஒன்று மட்டும் எனது உள்ளத்துக்கு உறுதியாகத் தெரிகிறது. என் கையில் வலுவிருக்கும்வரை, எனது மனத்தின் உணர்வுகளை நான் காணும், கேட்கும், அனுபவிக்கும் விடயங்களை மடலாக பகிர்ந்து கொள்வேன் என்பதே அது.

    உங்கள் அன்பிற்கும் , ஆதரவுக்கும் அனைத்துக்கும் மேலாக பொறுமைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (249)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். அடுத்தொரு மடலில் உங்களுடன் உரையாடுவதில் மனமகிழ்வடைகிறேன். சமீபத்தில் அமேரிக்காவில் ஒரு நகரத்தில் மக்களுக்கிடையிலான இனத்துவேஷம் பயங்கர உருவெடுத்தது. விளைவாக நிறவேற்றுமைக்கெதிராகக் குரல் கொடுக்கும் ஓர் இள அமெரிக்க நங்கை இனத்துவேஷி ஒருவரால் காரினால் அடித்துக் கொல்லப்பட்டார். இது நடந்தது திரு. டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் அதிபராயிருக்கும் அமேரிக்க நாட்டில் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்று பார்ப்போமா?

    அந்த நகரில் அமெரிக்க வரலாற்றில் முக்கியமாகக் கருதப்படும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இராணுவத் தளபதி ஒருவரின் சிலை பலவருடங்களாக வைக்கப்பட்டிருந்தது. அவ்வமேரிக்கத் தளபதியின் காலத்தில் அடிமை முறை நடைமுறையிலிருந்தது. அந்நடைமுறைகளுக்கமைய அத்தளபதியும் பல ஆப்பிரிக்க அடிமைகளைக் கொண்டிருந்தார். ஆனால் இன்றைய அந்நகரத்தில் பல கறுப்பு இனத்தவர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இப்போது அச்சிலை அகற்றப்பட வேண்டும், அச்சிலை இருப்பதால் அது தமது மனதை சஞ்சலத்துக்குள்ளாக்கிறது எனும் கோஷத்தை அந்நகர கறுப்பு இனத்தவர் முன்வைத்தார்கள். அது எப்படி முடியும் ? அது எமது சரித்திர முக்கியம் வாய்ந்ததொரு சிலை அதை அகற்றுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நகரப் பழமைப் பெருமைகளை மதிக்கும் வெள்ளை இனத்தவர் கோஷமிட்டார்கள். எங்காவது ஓரிடத்தில் இனங்களுக்கிடையில் சிறிய பேதமேற்படாதா? அங்கு தாம் புகுந்து ஓர் அரசியல் குழப்பநிலையை உருவாக்கலாம் என்று காத்திருந்த அதிதீவிர இனத்துவேஷிகளை உள்ளடக்கிய தீவிரவாத அமைப்பு அந்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள். விளைவாக அங்குள்ள வெள்ளை இனத்தவர்களின் உணர்வுகளை ஒன்று திரட்டி ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்துக்கு எதிராக இனத்துவேஷத்தை எதிர்க்கும் அந்நகர மக்கள் தாமும் ஓர் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள். அவ்வூர்வலத்தில் தான் ஒரு இனத்துவேஷி அணியின் மீது தனது மோட்டார் வாகனத்தை மோதியதில் ஓர் இளநங்கை உயிரிழந்தாள்.

    அதே பாணியில் இங்கிலாந்தில் சில சிலைகளை அகற்ற வேண்டுமென சில பகுதிகளில் இருந்து கிளம்பியுள்ளது. இது இங்கிலாந்தில் ஊடகங்களில் பல விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது. இங்கேதான் பல முக்கியமான வினாக்கள் எழுப்பப் படுகின்றன. மனித வாழ்க்கை பலவிதமான மாற்றங்களுக்குள்ளாகின்றது. ஆதி மனிதனுக்கும், இன்றைய மனிதனுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசங்கள் எண்ண முடியாத அளவுக்கு இருக்கின்றன. அன்றைய நிலையில் இருந்து இன்றைய நிலைக்கு மனிதன் மாற்றம் அடையும்போது அவனுடைய வாழ்க்கை முறைகளும் பலவிதமான மாற்றங்களுக்குள்ளாகி வந்துள்ளது. இவ்வாழ்க்கைமுறைகளில் சில இன்றைய உலகுக்கு ஏற்றுக் கொள்ளப்படக்கூடியனவாகவும், வேறுசில ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகவும் இருக்கின்றன. ஆனால் நடந்தவைகள் சரித்திர உண்மைகளே! அவைகளின் மாறுபடாத, திரிபடையாத பதிவுகள்தாம் மனிதனின் வாழ்க்கைச் சரித்திரம் ஆகிறது. எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நடைபெற்ற ஒன்றை நாம் இல்லையேன்று கூறிவிடமுடியாது. அப்படிக் கூறிவிடுவதால் மட்டும் அவை இல்லாமல் போய்விடாது.

    அதில் ஒரு பகுதிதான் மனிதனை மனிதன் அடிமைகொள்ளும் நிகழ்வும். ஒரு காலத்தில் அடிமைகளைக் கொண்டிருந்த தலைவர்கள் தான் பின்பு அடிமைத்தளையை உடைத்தெறிந்தவர்களாகவும் இருந்தார்கள் என்பதும் உண்மையே! அதில் ஓர் அங்கமாகத்தான் சில இடங்களில் சிலர் சரித்திர அடையாளங்களாக நிலைநிறுத்தப்படுகிறார்கள்.அப்படி நிறுத்தப்படுபவர்கள் சிலைகளின் சரித்திரத்தில் சில கறுப்பு நிகழ்வுகள் இருந்தால் அச்சிலைகளை பார்ப்பதன் மூலம் அத்தகைய நிகழ்வுகளை இனி உலகில் நடந்தேற அனுமதிக்கக்கூடாது எனும் உறுதி மனதில் ஏற்படவேண்டும். வெறுமையாக அச்சிலையை அகற்றி விடுவதால் மட்டும் சரித்திரத்தை மாற்றியமைத்து விட முடியாது.

    சரித்திர உண்மைகள் சரித்திர உண்மைகளே! ஆனால் அவற்றின்மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் மட்டும் முன்னேற்றப்பாதையில் உலகில் அமைதியையும்,சமாதானத்தையும் முன்னிலைப்படுத்துபவையாக இருக்க வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (248)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    நானிங்கு நலம், நீங்களனைவரும் நலமா ? எனும் கேள்வியுடன் எனது இவ்வார மடலுக்குள் என் எண்ணங்களைப் புதைக்கிறேன். தனிமனித வாழ்வாகட்டும், சமுதாயமாகட்டும், நாடாகட்டும் சரித்திரம் என்பது கடந்து போன காலங்களில் நடந்து போன உண்மை நிகழ்வுகளின் தொகுப்பேயாகும். அச்சரித்திர உண்மைகளுடன் நாம் ஒத்துப் போகிறோமோ இல்லையோ அவை உண்மைகள் எனும் நிலைப்பாட்டில் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் உலக மக்கள் இருக்கிறார்கள். சில இனிப்பவையாகவும், வேறு சில எமக்குக் கசப்பானவையாகவும் இருக்கலாம். அதற்காகக் கசப்பானவற்றைத் தள்ளி வைத்து விட்டுப் பெருமையானவைகளைப் பற்றிப் பேசிப் பேசி மார் தட்டிக் கொள்வது உண்மைக்குப் புறம்பானது.

    இந்த வகையிலே எனது இந்த 42 வருட இங்கிலாந்து அனுபவத்தில் இருந்து நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பலவற்றில் இச்சரித்திரம் பற்றியவை மிகவும் முக்கியமானவை. சரித்திர நிகழ்வுகள் அவை தமக்கு எவ்வளவு கசப்பூட்டுபவையாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் இங்கிலாந்து மக்களின் செயற்பாடுகள் எனது அறிவுக்கு தீனி போட்டிருக்கின்றன. நான் இப்போது ஓய்வூதியம் பெற்று வருடங்கள் மூன்றாகப் போகிறது. எனது மனைவி இன்னமும் தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். நாம் வாழும் சறே (Surrey) எனும் பகுதியில் அமைந்திருந்த அவளது கம்பெனி சுமார் எட்டு வருடங்களின் முன்னால் இங்கிலாந்தின் வடபகுதியான ரக்பி(Rugby) எனும் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது ஆபிஸின் பலரும் கட்டாய ஓய்வில் பணிநீக்கம் செய்யப்பட்ட போது எனது மனைவிக்கு முக்கியமான நிர்வாகப் பொறுப்பையளித்து அவ்வடபகுதி ஆபிஸைத் தளமாகக் கொண்டு இயங்குமாறு பணித்தார்கள். அதன் நிமித்தம் வாரத்தில் இருநாட்கள் எமது இல்லத்திலிருந்து சுமார் 120 மைல் தொலைவிலுள்ள அவளது ஆபிஸுக்குச் சென்று பணிபுரிவாள். அப்போது ஓரிரவு அருகேயிருக்கும் ஹோட்டலில் அவளது ஆபிஸ் அவளுக்குத் தங்குவதற்கு ஏற்பாடு செய்வார்கள்.

    சரி எதற்காகச் சக்தியின் இந்த முன்விளக்கம் என்று சிந்திக்கிறீர்களா? அவசரப்படாதீர்கள் விஷயத்துக்கு வருக்கிறேன்.

    sakthi1அப்படியாக என் மனைவி தன்னுடைய ஆபிஸுக்கு வரும் வேளைகளில் சிலசமயங்களில் அவளுடன் இணைந்து நானும் அங்கே செல்வதுண்டு. அப்படியான ஒரு பொழுதுதான் நேற்றைய பொழுது. காலையில் எமது இல்லத்திலிருந்து புறப்பட்டு இரண்டரை மணி நேரங்களின் பின்னால் மனைவியை ஆபிஸில் இறக்கி விட்டு ஓட்டலை வந்தடைந்தேன். பின்பு இரவு உணவு உண்பதற்காக இருவரும் அருகிருந்த “டன்சேர்ச்(Dunchurch)” எனும் சிறிய கிராமத்திலிருந்த உணவு விடுதிக்குச் சென்றோம். இந்தக் கிராமத்திற்கு முன்பும் சில தடவைகள் எனது மனைவியுடன் வந்திருக்கிறேன். மிகவும் அமைதியான ஓர் இடம். இக்கிராமம் மிகவும் சிறிய கிராமம்; இரண்டு மூன்று உணவகங்கள், ஒரு சிறிய வாசகசாலை, கிராமங்களுக்கேயுரிய தேவாலயமென ஓர் ஆங்கிலக் கிராமத்தை அடையாளைப் படுத்தும் அம்சங்கள் அமைந்திருந்தன. மையத்திலே அழகாக “விலேஜ் கிறீன் (Village Green)” அதாவது கிராமத்துப்பச்சை எனப்படும் அழகிய பச்சை புற்தரை அமைந்திருந்தது.

    இத்தகைய அழகிய, அமைதியான ஆங்கிலக் கிராமம் தன்னுள் ஒரு முக்கிய சரித்திர நிகழ்வின் அங்கமொன்றை உள்ளடக்கியுள்ளது என்று கேள்வியுற்றதும் நான் ஆச்சரியப்பட்டேன். அது என்ன என்கிறீர்களா?

    அது 1605ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை “கிங் ஜேம்ஸ்sakthi2 1” எனும் கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிவுற்ற “புரட்டஸ்டண்ட்( Protestant) “ மதத்தைச் சேர்ந்த அரசன் ஆண்டு கொண்டிருந்த காலம். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சில தீவிர கத்தோலிக்கர்கள் இந்த அரசனை வீழ்த்தி அடுத்த முடிசூட்டும் தகுதிக்கான “எலிஸபெத்” எனும் இளவரசியை இராணியாக்குவதற்கு முயற்சித்தார்கள். அதற்கான திட்டத்தில் அவர்கள் இங்கிலாந்தின் யோக் நகரைச் சேர்ந்த Guy Fawkes என்பவனைத் தேர்ந்தெடுத்தார்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவன் தனது தாய் மறுமணம் செய்து கொண்ட கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவனால் தீவிர கத்தோலிக்க மதப்பற்றுடையவனாக வளர்க்கப்பட்டான். தனது வாலிபப் பருவத்தில் ஐரோப்பா சென்று அங்கே ஸ்பானிய கத்தோலிக்க படையில் இணைந்து எண்பதாண்டு யுத்தம் எனும் பெரும் யுத்தத்தில் போரிட்டு விட்டுப் பின் இங்கிலாந்து திரும்பியிருந்தான்.

    அவர்களது திட்டத்தின்படி இங்கிலாந்து பாராளுமன்றத்தை வெடிமருந்துகளைக் கொண்டு தகர்ப்பதாகும். திட்டப்படி பாராளுமன்றத்துக்கு கீழுள்ள கட்டிடத்தில் வெடிமருந்துகளுடன் Guy Fawkes முதல் நாளே தங்கியிருப்பது என்றும் சரியான நேரத்தில் வெடிமருந்துகளைப் பற்ற வைத்து பாராளுமன்றத்தை தகர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. சரியான நேரத்தில் அவனது திட்டம் இங்கிலாந்து அரசுக்குத் தெரிந்து அவன் வெடிமருந்துகளுடன் கைதாக்கப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டான். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவனுக்குத் தூக்கு எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக அவன் மாடிக்கட்டத்திலிருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டான். அதுவே இந்நாள்வரை இங்கிலாந்து முழுவதும் Guy Fawkes day நவம்பர் மாதம் 5ஆம் திகதியொட்டி வரும் சனிக்கிழமை ஒன்றில் வாணவேடிக்கைகள் நடத்திக் கொண்டாடப் படுகின்றது.

    சரி அதற்கும் இனி போன டன்சேர்ச் எனும் கிராமத்துக்கும் என்ன தொடர்பு ? கேள்வி எழுகிறது அல்லவா?

    இந்த டன்சேர்ச் கிராமத்தில் பல விடுதிகள் இருக்கின்றன. அந்நாளில் இங்கிலாந்தின் வடக்கிலிருந்து மற்றப் பகுதிகளுக்குத் தபால் கொண்டு செல்லும் குதிரை வண்டிகள், மக்கள் பிரயாணம் செய்யும் குதிரை வண்டிகள் அனைத்தும் இவ்விடுதிகளில் தங்கி ஓய்வெடுத்துப் பிரயாணம் செய்வது வழக்கமாம். இத்தகைய விடுதி ஒன்றிலேயே 1605ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி ௸ Guy Fawkes இன் முயற்சியின் வெற்றிச் செய்தியைக் கேட்பதற்காக அவனுடன் சேர்ந்த சதிக்கும்பல் தங்கிருந்தார்கள். அந்த விடுதி இன்றும் Guy Fawkes House என்று அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்து அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது அவனது முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இங்கிலாந்தின் சரித்திரமே மாற்றியமைக்கப்பட்டிருக்கும். இந்த விடுதியில் தங்கிய பல பிரபலங்களில் இங்கிலாந்தின் பழைய மகாராணி விக்டோரியாவும் அடங்குகிறார். இத்தகைய ஒரு சிறிய அழகிய கிராமம் தன்னுள் இத்தனை பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றின் ஓர் அம்சமாகத் திகழ்ந்த உண்மையைப் புதைத்து வைத்துள்ளது என்று எண்ணும்போது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

    அது சரி பயங்கரவாதிகள் எல்லோருக்கும் முன்னோடிகள் இவர்கள் தானோ ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (247)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    ஏற்கனவே வாழ்க்கைச் சிக்கல்களுக்குள் சிக்கி வாழ்வோடு கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் தென்கிழக்காசிய நாட்டு பகுதிகள் பலவற்றில் வாடும் மக்களை இயற்கையன்னை அடைமழை எனும் ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருக்கிறாள். அதேநேரம் வசதிகளுடன் வாழும் மேலைத்தேசமான அமெரிக்க நாட்டின் பல பகுதிகளை இதுவரை கண்டிராத சூறாவளியினால் சிதைத்துக் கொண்டிருக்கிறாள். ஆம், இயற்கையன்னை மனிதன் தன் சுயலாபத்திற்காக இயற்கையைச் சீரழிப்பது கண்டு சீற்றம் கொண்டிருப்பது போல உலகின் பல பகுதிகளிலும் இயர்கையன்னையின் ஆவேசக்கோலம் நர்த்தனமாடிக் கொண்டிருக்கிறது. உலகில் மனிதராகப் பிறந்த எம் அனைவருக்கும் எமது இறுதி முடிவு எதுவெனத் தெரிகிறது. இது ஓர் ஓட்டப் போட்டியே! அதன் இறுதிக் கயிற்றை யார் முதலில் தொடுகிறார்கள் என்பதுதான் யாருக்கும் தெரியாத மர்மமாக அமைந்துள்ளது. அது யாருக்கும் தெரியாமல் இருக்கும் காரணத்தினால் தான் மனிதர்களில் பெரும்பான்மையோர் இன்றும் மனிதத் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    “அரிது, அரிது மானிடராகப் பிறப்பது அரிது ” என்றாள் தமிழ் மூதாட்டி. இத்தகைய அரிய பிறப்பெடுத்த நாமே , மற்றைய அரிய பிறப்புக்கைளை மதம், பணம், பொருள், காமம், காணி எனும் பல பேராசைகளின் காரணமாகச் சர்வசாதாரணமாக அழித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. பிறப்பு என்பது யாரையும் கேட்டு நடப்பதல்ல. ஆணும்,பெண்ணும் அனுபவிக்கும் இல்லற சுகத்தின் பலனாக அவர்களுக்கு அளிக்கப்படும் அன்புப்பரிசு என்பது அதற்கான ஒரு தூய விளக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய நாகரிக உலகத்திலே இல்லற வாழ்க்கை என்பதன் அடையாளமே மாறிப்போய்விட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக மேலைத்தேசங்களில் வாழ்வோர் எப்படியும் வாழலாம் எனும் ஒரு கருத்துக்குள் தம்மைப்புதைத்து வாழ்வது போலத் தென்படுகிறது. ஆனால் அதே மேலைத்தேசங்களில் தமது பழைய கலாசார, சமயக் கோட்பாடுகளை வாழ்வின் நெறிமுறைகளாக வகுத்து வாழ்வோர் இல்லையென்று கூறி விட முடியாது. வேறு நாட்டினைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் தம்நாடுகளில் குடியேறி அங்கு அவர்களது கலாசாரங்களைப் பரவவிட்டு எங்கே தமது கலாசாரக் கோட்பாடுகளை அழித்து விடுவார்களோ எனும் அச்சம் பல மேலைத்தேச நாடுகளின் மக்கள் மனங்களில் ஊசலாடுவதின் காரணமே இங்கிலாந்தின்”ப்ரெக்ஸிட்” தேர்தல் முடிவு.

    அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப் என்பதுவே இன்றைய யதார்த்தமாகத் தென்படுகிறது. ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியின் பின்னால் அத்தகைய ஒரு நிலை உலகில் வந்துவிடக்கூடாது எனும் காரணத்தினால் மேலைத்தேசங்கள் பலவும் சுதந்திர நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது என்பது உண்மையே. அடுக்கடுக்காய் வந்த அரசாங்கங்கள் நிறவெறி, மதவெறி, இனவெறி என்பன தலைதூக்கி விடக்கூடாது என்பதற்காக பல சட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தன. அடிப்படையில் இவையனைத்தும் அந்தந்த நாடுகளில் குடியேறி வாழும் வேற்று நாட்டினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. ஆனால் அவைகளின் அதியுச்ச நிலையாக அந்த நாட்டின் மக்கள் தமது மனத்தில் நிலவும் கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. காலப்போக்கில் வேற்று நாட்டினரின் குடியேற்றம் கட்டுமீறிச் சென்றதாலும், மேலைத்தேச நாடுகளின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதாலும் ஒரு விகாரநிலை உருவெடுத்தது. இந்நிலையால் பொதுவாக மிகவும் மிதமான கொள்கைகளைக் கொண்ட பல மேலைத்தேச மக்கள் மனங்களில் கடுமையான வேற்றினத்தவருக்கெதிரான கொள்கைகள் வலுப்பெற்றன. அதன் பிரதிபலிப்பே இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இங்கிலாந்தின் “பிரெக்ஸிட்” எனும் சிக்கலும் என்பதே உண்மை.

    இந்தப் பின்னணியில்தான் இப்போது இங்கிலாந்தில் ஒரு புதிய கடுமைப் போக்கைக் கொண்ட ஒரு தலைமை கன்சர்வேடிவ் கட்சிக்குள் உருவாகிறதோ எனும் கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்தின் தற்போதைய பிரதமரும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவியுமான தெரேசா மே அவர்களின் அரசியல் எதிர்காலம் மிகவும் குறைந்ததாகவே காணப்படுக்கிறது. அவரைத் தொடர்ந்து யார் கன்சர்வேடிவ் கட்சியை வழிநடத்தப் போக்கிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. இங்கேதான் “ஜேக்கப் ரீஸ் மொஹ் ( Jacob Rees-Mogg) என்பவர் பிரசன்னமாகிறார். ஆக்ஸ்வேர்ட் பல்கலைகழகத்தில் பட்டாதாரியான இவர் இங்கிலாந்தின் பொருளாதார நிறுவனங்களில் பணிபுரிந்தவராவார். 1997ஆம் ஆண்டு தொடங்கி தேர்தல்களில் முயன்று 2010ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகியவர். தீவிரமான கத்தோலிக்கரான இவர் மதக்கோட்பாடுகளுக்கு முதன்மை அளிப்பவர். ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதித்துவத்துக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர். இன்றைய இங்கிலாந்து மக்களின் அரசியல் உணர்வு இத்தகைய கடுமையான கொள்கைகளை உடைய தலைவர்கள்பால் திரும்புமா ? எனும் கேள்வி இங்கிலாந்து அரசியல் அவதானிகளிடமும் எழுகிறது.

    இந்தச் சூழலில் தான் இவர் சமீபத்தில் தான் கருக்கலைப்பு மற்றும் ஓரினத் திருமணங்கள் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். கத்தோலிக்க மதத்தில் இவையிரண்டும் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இங்கிலாந்தின் சட்டநிலைப்பாடுகள் இவையிரண்டையும் ஆதரிக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி பழமைவாய்ந்த கொள்கைகளையும், கிறீஸ்துவ மதக் கோட்பாடுகளையும் முக்கியமாகக் கொண்டிருந்தாலும் இந்த இரண்டு அம்சங்களிலும் அவருக்கு எதிரான நிலையையே பெரும்பான்மையான கன்சர்வேடிவ் பாரளுமன்ற அங்கத்தினர்கள் கொண்டிருக்கிறார்கள். திடீரென இவர் இத்தகைய தனது தீவிரக் கொள்கைகளை வெளியிட்டிருப்பது சந்தேகங்களுடன் கூடிய சர்ச்சையை அரசியல் வட்டாரங்களில் கிளப்பி விட்டிருக்கின்றன. இவர் தனது கொள்கைகளைச் சமூக வலைத்தளமான ட்வீட்டர் மூலமாக வெளியிட்டிருந்தார். இன்றைய மேலைத்தேச அரசியல் சூழலில் ட்ரம்ப் உட்பட பல தீவிர வலதுசாரப் போக்குடைய தலைவர்கள் தமது பிரசாரங்களுக்கு வழமையான ஊடங்களான பத்திரிகை,வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றை விடுத்துச் சமூக வலைதளங்களை உபயோகிக்கும் நிலையேற்பட்டுள்ளது.அமெரிக்காவில் ட்ரம்ப் அவர்களுக்கு ஏற்பட்ட திடீர்ச் செல்வாக்குப் போல இவர் தனக்கும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் செயற்பட்டு, கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைமைப் பதவிக்கு வலைவீசுகிறாரா? என்பதுவே தற்போதைய சர்ச்சை ஆகும்.

    அதுமட்டுமல்ல… பொதுவாகக் கருக்கலைப்புக்கு எதிரானவன் என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை இவரோ கற்பழிப்பு மற்றும் முறைகேடான உறவுகளின் மூலம் தோன்றிய கரு என எதுவாக இருப்பினும் அனைத்தையும் கலைப்பதற்கு எதிரானவன் என்று கூறியிருப்பதுதான் தன்னை ட்ரம்ப் வகையிலான ஒரு தீவிர வலதுசாரத் தலைவன் என்று முன்னிலைப்படுத்த முனையும் செயலா? என்பதுவே கேள்வியாகிறது.

    இதன் எதிரொலிகள் அரசியல் அரங்குகளில் மட்டுமல்ல பல பெண்களின் பதுகாப்புக்கான அமைப்புக்களையும் மிகவும் ஆவேசத்துக்குள்ளாக்கியிருக்கின்றன.  பல வானொலி கருத்தாடு களங்களில் பலமாக இவர் பற்றிய விவாதங்கள் கடந்த சில தினங்களாக நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன.

    ஒருவேளை இவைகள்தாம் இயற்கையன்னையின் சீற்றத்துக்குக் காரணமோ?

    என்னதான் நடக்கும் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (246 )

    அன்பினியவர்களே!

    அன்பான இனிமை பூத்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன் காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. மாரி, வசந்தம், கோடை , இல்லையுதிர் காலம் என இயற்கை யார் எதில் தவறினாலும் தான் தனது கடமையில் தவறாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இலைகள் உதிர்ந்து மீண்டும் மரத்தில் துளிர்க்கிறது மாரி மாறி வசந்தமாகிறது ஆனால் நாம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வயது முதிர்ந்தவர்களாகிறோம். நாம் மீண்டும் துளிர்ப்பதில்லை; நாம் எப்போது சருகாகி விழுகிறோம் என்பதும் எமது கைகளில்லை. ஆதவன் கிழக்கில் உதிப்பதும் பின் மேற்கு எனும் பள்ளத்துள் விழுந்து மறைவதும் எதுவித இடையூறுமின்றி நடந்துகொண்டு இருக்கிறது. மனித வாழ்வில் மட்டும் உறவு எப்போது வருகிறது பின் பிரிவு எப்போது வருகிறது என்று மட்டும் தெரிவதில்லை.

    இந்த மனித வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். வாழ்வில் தாங்க முடியாத துயரத்திலோ அன்றி மீளமுடியாத கஷ்டத்திலோ வாழ்பவர்கள் இதனை ஏற்க முடியாதிருக்கலாம் ஆனால் வாழ்வில் அனைவரும் அனுபவிக்கும் அப்போதைய நிலைகள் தற்காலிகமானவைகளே ! காலம் மாறும் அவரவர் நிலைகளும் மாறும். இன்றிருப்போர் நாளை இருப்பது நிச்சயமில்லை எனும் ஒரு நிலையிலே நாம் எம்மோடு தக்க வைத்திருக்கும் இப்போதைய நிலைகள் மட்டும் எப்படி நிரந்தரமானவையாக இருக்கலாம்? இத்தகைய ஒரு நிலையற்ற வாழ்விலே நாம் எம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எம்மீது பல கலாசார அணிகலன்களைப் பூட்டிக் கொள்கிறோம். இவற்றிற்கு மதச்சாயத்தைப் பூசிக் கொள்கிறோம். நாம் எந்த மதத்தில் எந்த குலத்தில் பிறக்கிறோம் என்பது எமது கைகளில்லை. ஆனால் எங்குப் பிறக்கிறோமோ அங்கு எமக்கு மதச்சாயம் பூசப்பட்டு விடுகிறது.

    மத நம்பிக்கை அல்லது இறை நம்பிக்கை என்பதற்கு நான் எப்போதும் எதிரானவனில்லை. மதமும், இறை நம்பிக்கையும் மனிதர்களது ஆன்மீக பலத்தை அதிகப்படுத்தி ஒவ்வொருவருடைய மனதிலும் மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்காகவே அமைந்துள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. ஆனால் ஒவ்வொருவருடைய மனத்திலும் தாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது.அந்த எல்லைக்கோட்டைத்தாண்டும்போது எது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஜீரணிக்கப்படக்கூடிய நியாயமான நம்பிக்கையாக இருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக நியாயமற்ற வெறியாக மாறத் தலைப்படுகிறது. இங்கேதான் மத நம்பிக்கை மனிதாபிமானத்தை விட்டு அகலத் தொடங்குகிறது இதுவே மக்கள் மனங்களில் இத்தகைய நம்பிக்கைகளை நோக்கி விசனப் பார்வைகளைத் தூண்டுகிறது. உலகில் இன்று பேணப்படும் அத்தனை மதங்களின் அடிப்படியும் மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிப்பவைகளாகவே இருக்கின்றன. ஆனால் அம்மத நம்பிக்கைகளையும், அதனை மூர்க்கத்தனமாக எவ்வித கேள்விகளுமின்றிப் பின் தொடர்பவைகளையும் தமது இலட்சியம் எனும் போர்வையிலடங்கிய வெறிக்கு உபயோகப்படுத்திக் கொள்வதற்காக இம்மதங்களின் காவலர்கள் என்று தமக்குத் தாமே முடிசூட்டிக் கொண்டவர்கள் இம்மதக் கோட்பாடுகளை மனிதம் எனும் இலட்சியத்திலிருந்து வேறுபடுத்தி விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    எதற்காக இந்த முன்னெடுப்பு என்று பார்க்கும்போது சமீபத்தில் இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்றில் நடத்தப்பட்ட வழக்கும் அதையடுத்த தீர்ப்பும் என்பதுமே காரணமாகிறது. ஒரு கிறீஸ்தவ மதப் பின்னணியைக் கொண்ட குழந்தை அதனுடைய தாயிடமிருந்து கடந்த மார்ச் மாதம் காவற்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டு அரச சமூகநலத் துறையினரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. காரணம் அக்குழந்தையைத் தாயார் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்பதுவே. இது நடந்தது இங்கிலாந்தின் கிழக்கு இலண்டனின் பகுதியான “டவர் ஹம்லெட் (Tower Hamlet) எனும் பகுதியிலேயாகும். இப்பகுதி ஆசியர்கள் பெரும்பான்மையாக அதுவும் இஸ்லாமிய மதத்தினைப் பின்னணியாகக் கொண்டோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாகும். அரசு நடைமுறைப்படி இப்படி பெற்றோரிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த வளர்ப்புப் பெற்றோர் யாரெனத் தெரிந்து அவர்களிடம் வளர்ப்புப் பொறுப்பை கையளிப்பதேயாகும். இப்படியான வளர்ப்புப் பெற்றோர்கள் அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. அப்படியான அதே கலாசாரப் பின்னணி கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் இல்லாத நிலையில் மற்றைய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் முன்வருவாராகில் அவர்களிடம் கையளிப்பார்கள்.

    நான் மேற்குறிப்பிட்ட அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர் அப்பகுதியில் கிடைக்காத காரணத்தினால் கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்ட அக்குழந்தை இஸ்லாமிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. அங்கேதான் சிக்கல் உருவானது. அக்குழந்தை அதனது வளர்ப்புப் பெற்றோரினால் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளைப் பின்பற்றும்படியாக வற்புறுத்தப்பட்டது என்பதே குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அக்குற்றச்சாட்டுக்களை பரிசீலனையின் பின்னால் ஏற்றுக்கொண்டு அக்குழந்தை அதனது பாட்டியுடன் வாழும்படி தீர்ப்பளித்துள்ளார். இக்குற்றச்சாட்டுகள் சரியான வகையில் பரிசீலிக்கப்பட்டு நிரூபணமாகியது எனில் இங்குப் பல கேள்விகள் எழுகிறது. சந்தர்ப்ப சூழலினால் தான் வாழும் கலாசாரப் பின்னணியில் இருந்து பிரியும் ஒரு குழந்தை தானே தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாத நிலையில் நிர்ப்பந்தமாக தனக்குப் பரிச்சயமில்லாத கலாசாரச் சூழலுக்குள் தள்ளப்படுவது நியாயமானது தானா ? தனது உரிமைத்தாயிடமிருந்து சட்டத்தின் கரங்களினால் பிரிக்கப்பட்ட ஒரு குழந்தையைப் பராமரிக்க முன்வரும் மனிதர்கள் போற்றப்பட வேண்டியவர்களே! ஆயினும் அக்குழந்தையின் இயற்கையான கலாசாரப் பின்னணியில் இருந்து அதனை முழுமையாக தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்ற முயல்வது அக்குழந்தையின் தன்னுரிமையைப் பறித்தெடுப்பதாகாதா?அன்றி அக்குழந்தைக்கும் தமது சொந்தக் குழந்தைகளுக்கும் எதுவித பேதங்களும் இருக்கக்கூடாது எனும் தூயநோக்கில் அக்குழந்தையையும் தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்றுவது என்பதில் எதுவிதமான தவறுமில்லை என்பதுதான் உண்மையாகுமா? இவைகள் பல முனைகளில் இருந்து கிளம்பும் யதார்த்தமான கேள்விகளே!

    அதேநேரம் பல வேற்றுமதக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் கிறீஸ்தவ மத வளர்ப்புப் பெற்றோர்கள் மீது இத்தகைய நுணுக்கமான பார்வையோ அன்றி அவர்கள் மதத்தின் மீது ஒரு தீவிரக் காட்டம் நிறைந்த பார்வையோ நடத்தப்படுவதில்லையே! ஏன் எம்மீது மட்டும் இப்படி என்று வேதனையடையும் சில இஸ்லாமிய மதத்தினரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நீதித் தராசு என்பது இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் நம்பும் வரைதான் சட்டமும், ஒழுங்கும் உள்ளத்தில் முதன்மை நிலைபெறும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

    மிகத் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்ன என்கிறீர்களா?

    ஒரு குழந்தையின் இக்கட்டான நிகழ்வு இங்கிலாந்தில் இன்று இஸ்லாமிய மதத்தின் மீதான ஒரு நுணுக்கமான கண்ணோட்டத்தை அம்மதத்துக்கு எதிராகத் திருப்பும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளும் சில தீவிர வலதுசாரப் பத்திரிகைகளின் இப்பிரச்சார வேட்கைக்குத் தீனிபோடும் நிலையாக உருவெடுத்திருப்பதே !

    கவியரசரின் வரிகளில் “மதம் என்பது ஒரு மனிதனுக்கு அணிகலனேயன்றி ஆடையல்ல!”

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(245)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். கடந்தவாரம் மடல் வரைய முடியாத ஒரு சூழ்நிலை. நண்பர்களின் ஒன்றுகூடல் நிகழ்வுக்காக கனடா வரைசென்றிருந்த நான் அங்கிருந்து திரும்பாத நிலையில் மடல் வரையும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தேன். இப்போது நான் வரையும் இந்த மடல் கனடாவிலிருந்து திரும்பி இங்கிலாந்திலிருந்து வரையும் மடலாகும்.

    வாழ்க்கையில் சில சில சந்தர்ப்பங்கள்
    ஒரேயொருமுறைதான் பலருக்குக் கிட்டுகிறது. சில சமயங்களில் பற்பல காரணங்களினால் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடும் நிலையேற்படுகிறது. தவறவிட்ட பின்னால் அந்நிகழ்வின் மகத்துவத்தை, அதன் தாத்பரியத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இழந்து விடுகிறோம். கடந்து போன சாதாரண நாள்களைப் போல் இந்நிகழ்வையும் கடந்து போய்விட்ட ஒரு சாதாரண நிகழ்வென்றே எடுத்துக் கொள்கிறோம்.

    கடந்த ஐந்து வருடங்களின் முன்னால் இதே போன்ற நான் படித்த யாழ் மத்திய கல்லூரியின் எழுபதுகளின் மாணவர்களின் ஒன்றுகூடல் ஒன்று இதே கனடாவின் ரொராண்டோ மாநகரில் நிகழ்ந்தது. அதற்கும் எனது நண்பர்களின் மூலம் அழைப்பு கிடைக்கப்பெற்ற நான் பல காரணங்களினால் அந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது போய்விட்டது. காலங்கள் கரைய அதுவும் காற்றோடு காற்றாகக் கலந்து போய்விட்டிருந்தது. அந்நிகழ்வினால் தாமடைந்த அளப்பரிய அனுபவங்களை எனது நண்பர்கள் மூலம் அறிந்தாலும் நான் எத்தகைய ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டேன் என்பதின் முழுத்தாக்கத்தையும் நான் அறிந்து கொள்ளவில்லை என்பதுவே உண்மை. வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே கல்விபயின்ற பாடசாலையின் மீது இவ்வளவு ஈர்ப்பா என்று எண்ணும் என் சில நண்பர்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டு வருடங்களும் எனக்கு வாழ்வின் இனிய இருபது வருடங்களின் அனுபவத்தினைக் கொடுத்தது என்பதுவே உண்மை. அது எனது பள்ளிப்பருவத்தின் ஒரு பொற்காலம் என்றே கூற வேண்டும். அப்பொற்காலத்தில் நான் பழியறிந்து, பார்த்துப் பேசிய தோழர்களின் ஞாபகங்கள் இன்றும் என்னுள்ளத்தில் ஈரப்பசையோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது.

    என் வாழ்வினில் நான் என் சகோதரனைப் போல, சகோதரனைவிட நேசத்தோடு பழகிய எனது உற்ற நண்பன் வாழ்வது கனடா நகரிலே என்பது எனது இந்த விஜயத்தின் மற்றொரு மகிழ்ச்சியாகும். அதுதவிர கனடாவில் வாழும் எனது மூத்த சகோதரன் ஓர் பேரனைப் பெற்று பாட்டனாகிய நல்ல நிகழ்வும் நான் கனடா செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. லண்டனில் வாழும் என் குடும்ப அங்கத்தினர் சார்பில் பேரனைப் பார்த்த முதல் அங்கத்தினன் எனும் பெருமையையும் எனக்கு ஈட்டிக் கொடுத்தது என்பதும் இவ்விஜயத்தின் குரிப்பிடக்கூடிய அம்சங்களில் ஒன்றாகும். நிகழ்வுகள் ஆரம்பமாவது ஜூலை மாதம் 29ஆம் திகதி என்ற போதும் பத்து நாள்களுக்கு முன்னதாகவே நான் கனடா சென்றிறங்கி விட்டேன். நிகழ்வுகள் ஆரம்பத்தின் முன்னால் எனக்குக் கிடைத்த இந்தப் பத்து நாள்கள் அவகாசம் நான் பார்க்க வேண்டிய எனது முக்கிய உறவினர்களைச் சந்திப்பதற்கான கால இடைவெளியைக் கொடுத்தது. எனது தாய்வழிச் சொந்தங்களே கன்டாவில் அதிகமாக உள்ளனர். அவர்களை, அதுவும் மூத்தோர்களைச் சந்திப்பதையே முக்கியமான கடமையாகக் கொண்ட எனக்கு எனது உற்ற நண்பனின் உதவியோடு என்றோ எப்போதோ லண்டனில் ஏதோ என்னாலான சிறிய உதவியைச் செய்த நண்பரொருவர் ஓடோடி வந்து உதவியது வாழ்வின் உண்மையான உறவுகளின் உன்னதமான யதார்த்த நிலைகளைப் படம் போட்டுக்காட்டியது.

    sakthi

    இந்த ஒன்றுகூடலின் உண்மையான் நோக்கம் எழுபதுகளில் யாழ் மத்தியக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் இன்று அகிலம் முழுவதும் பரவிக் கிடப்போரை ஒன்றிணைத்து அக்கால பசுமையான நினைவுகளை மீண்டும் உள்ளத்தில் மலரச் செய்து தொலைந்து போன கணங்களை சிலநாள்களுக்கு மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வதே. இவ்வற்புத நிகழ்வுகளுக்கான மேடைகளை அமைத்து, இத்தகைய ஓர் அரிய சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் நான்கே நான்கு பேர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ? இவர்களின் பின்னால் நின்று பலர் தார்மீக ஆதரவை நல்கியிருந்தாலும் இவர்களின் இந்த மகத்தான சேவையும் இச்சேவையைப் புரிவதற்கு இவர்கள் பின்னால்நின்று இவர்களை இயக்கிய இவர்களின் வாழ்க்கைதுணைகளும், அவர்தம் குடும்ப அங்கத்தினர்களும் ஆற்றிய அளப்பரிய சேவைகளை வெறும் வார்த்தை அலங்காரங்களினால் விவரித்து விட முடியாது. ஆமாம், சிவா, மதி, ரமீஸ், பேரி எனும் இந்த நான்கு அன்பு உள்ளங்களும் இவர்களுக்குப் பக்கதுணையாக நின்று பணியாற்றிய இவர்களின் வாழ்க்கைத்துணைகளும் எம் அனைவருடைய அன்பான நன்றிகளுக்கு உரித்தானவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகிறது.

    சரி, இனி இந்த விழாவிற்கு வருவோம். இவ்வொன்றுகூடலில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் இவ்விழாவினை ஒழுங்கு செய்தோரின் இல்லங்களில் அறிமுக ஒன்றுகூடலுக்கான விருந்துகளில் கலந்து கொண்ட நிகழ்வோடு 29ஆம் திகதி ஆரம்பமாகியது விழா. ஆகா ! சுமார் 43 வருடங்களின் பின்னால் நான் சந்தித்த பழைய நண்பர்களின் தற்போதைய தோற்றம் மாறியிருந்தாலும் மத்தியக் கல்லூரியின் வாசம் அவர்களது மனத்தை விட்டு அகலவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரம் ஆகவில்லை.. தொடர்ந்து 30ஆம் திகதி இளையோருக்கான சிறப்பு நிகழ்வு, மற்றும் விடுதி இரவு, கிரிக்கெட் போட்டி என ஒவ்வொரு நாளும் களைகட்டிய நிகழ்வுகளும் அதனோடு நண்பர்களின் ஒன்றுகூடலின் சிறப்புகளும் வெறும் வார்த்தைகளினால் விளக்கக்கூடிய ஒன்றல்ல. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாகக் கச்சேரி இரவு ஆண்கள் பெரும்பான்மையோர் தமிழ்க்கலாசார உடையான வேஷ்டி, சட்டையுடனும், பெண்கள் சேலையுடனும் கலந்துகொண்டு மேடைப்பாடல் நிகழ்ச்சிகளில் பாடிக்களித்த நிகழ்வும்,இதற்காகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு, மேற்கு கலந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் உள்ளத்தைக் குதூகலத்தில் ஆழ்த்தியது. அத்தோடு இந்நிகழ்வுகளை பசுமையான காலநினைவுகளைக்கூட்டும் நண்பர்களும் அமர்ந்து ரசிப்பதென்றால் கேட்கவும் வேண்டுமா?

    அடுத்த முக்கியமான நிகழ்வாக 1000 தீவுகளுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு அனைவரும் ஓரிடத்தில் கூடி இரண்டு சொகுசு பஸ் வண்டிகளில் அக்கப்பற்தளத்தை நோக்கிப் பிரயாணித்தோம். பிரயாணித்தோம் என்றால் சும்மாவா? பஸ்ஸுக்குள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மீண்டும் அப்பதின்ம வயது மாணவர்களாகவே மாறிவிட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! மிகவும் வசதியான ஒரு சீன உணவு விடுதியில் அனைவருக்கும் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மதிய விருந்து, மீண்டும் பஸ்ஸிலே பிரயாணித்து அக்கப்பற்தளத்தை அடைந்தோம். அங்குக் கப்பலில் ஏறுவதற்கு முன்னால் இருமணிநேர இடைவெளி அனைவரும் காலாற நடந்தும், அப்பிரதேசத்தின் அழகினை ரசித்தும் இருக்கும்போது , அடடா ஆச்சரியம் தேநீர் தயாரிக்கும் உபகரணங்களையும் அப்பிரயாணத்தில் கொண்டு வந்திருந்த அமைப்பாளர்கள் அனைவருக்கும் யாழ் முறையில் தேநீரும்,பிஸ்கட்டும் கொடுத்து கலக்கி விட்டார்கள் போங்கள்!

    சொகுசுக் கப்பலில் ஏறி உட்கார்ந்தோம். அப்பப்பா !அருமையான பிரயாணம், அற்புதமான ஆங்கிலப் பாடகரின் தொடர்ந்த இசைமழையுடன் கூடிய இராப்போசனம். இப்பிரயாணத்தின் முக்கிய அம்சமே ஆதவன் மேற்கினுள் வீழ்வதைக் காணும் அற்புதக் காட்சி.  இது ஒருபுறமிருக்க நண்பர்கள் அனைவரும் சிறு சிறு குழுக்களாக ஆங்காங்கே கப்பலின் மேற்தளத்தில் நின்று தமக்குள்ளே இசைமழை பொழிந்து மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம் வாழ்வினில் ஒரேயொருமுறை கிடைக்கக்கூடிய அற்புதமான அனுபவம் என்றே கூறவேண்டும். அடுத்த நாள் பிரசித்தி பெற்ற பூங்காவில் ஒரு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு. அங்கேயே உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் மிகவும் ஆறுதலாக, அமைதியாக அந்நாளைக் கழித்தார்கள்.

    இவ்விழாக்களின் இறுதி நிகழ்வாக அனைத்துக்கும் மகுடம் சூட்டும் வகையில் நடனத்துடன் கூடிய இராப்போசன வைபவம் பிரசித்தி பெற்ற ஒரு மண்டபத்திலே நிகழ்த்தப்பட்டது.

    யாழ் மத்திய கல்லூரியின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது யாழ் மணிக்கூட்டுக் கோபுரமே! யாழ் மத்தியக் கல்லூரியின் சில பிரபல்யமான கிரிக்கெட்வீரர்கள் இக்கோபுரத்தை நோக்கி சிக்சர்களாக விளாசித்தள்ளிய வீரசாகசக் கதைகளும் உண்டு. இவ்விழா அமைப்பாளர்கள் இக்கோபுரத்தைச் கட்டமைப்பாகச் செய்வித்து அதனை இவ்விழா மண்டபத்தின் வரவேற்பு மண்டபத்தில் முக்கிய அடையாளமாக நிறுத்தி வைத்திருந்தமை அனைத்துக்கும் சிகரமாக அமைந்தது. அனைவரும் பழைய ஞாபகங்களின் வழிநின்று இம்மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் நின்று புகைப்படம் பிடித்துக் கொண்டார்கள். அதுமட்டுமின்று! அக்கால மாணவர்களின் மனத்தில் என்றும் அழியாமல் பதிந்திருப்பது பள்ளியோடு ஒட்டியிருந்த “மணியம் கடை.” அதேபோல ஒரு பெட்டிக்கடையை உருவகித்து அதிலே வாழைப்பழக் குலைகளைத் தொங்கவிட்டது மட்டுமின்றி காலத்தோடு ஓட்டிய சினிமாப் போஸ்டர்களை ஒட்டியிருந்தமை அபாரமான, அற்புதமான திட்டமாகும். இதற்காக இவ்விழாவினை ஒழுங்குசெய்த நால்வரும் எத்தனைதூரம் கடினமாக உழைத்திருப்பார்கள் என்பதைச் சொல்லித்தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. மிகவும் ஆடம்பரமாக , அழகாக, அமைதியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்விழாவினிலே மத்தியக் கல்லூரி பழைய மாணவர்கள் பங்கேற்று நடித்த சில பாடல் காட்சிகளோடு பிரபல்யமான ஆங்கில நடனக்குழுவினரும் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் எம்மனைவருக்கும் அக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமாகப்பட்டது எமது அருகிருந்த சகோதர பெண்கள் கல்லூரியான “வேம்படி மகளிர் கல்லூரி” ஆகும். இவர்களது யூனிபார்மாக அவர்களது டை மஞ்சள் கறுப்பு வரிகளைக் கொண்டது. இவ்வமைப்பாளர்கள் இவ்விருந்து வைபவத்தில் பரிமாறும் ஆங்கிலப் பெண்கள் வெள்ளை சார்ட்டுடன் இவ்வேம்படி மகளிர் கல்லூரி டைகளை அணிவிக்கச் செய்திருந்தது அனைத்துக்கும் மகுடம் சூட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    என் வாழ்வின் என்றுமே மறக்க முடியாத இனிமையான ஒரு நிகழ்வினை அனுபவிக்கச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித்தந்த அந்நால்வருக்கும், வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த அந்நாளைய நட்பினை மீண்டும் எனக்கு நினைவூட்டக் காரணமாயிருந்த அனைத்து நேச உள்ளங்களுக்கும், கனடா நாட்டில் வசிக்கும் பழைய மாணவர்கள் அளித்த நல்வரவேற்புக்கும் இவைகள் அனைவரினது வாழ்க்கைத்துணைகளுக்கும், குடும்ப அங்கத்தினருக்கும் எனது உளம் நிறைந்த, தாழ்மையான, அன்பான நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

    நாலுபேருக்கு நன்றி – அந்த
    நாலுபேருக்கு நன்றி
    நானிலமெங்கும் சிதறி வாழ்ந்த
    நம்மை ஒன்றுகூட்டி
    நெஞ்சில் நிழலாய்ப் பதிந்த
    அந்தநாள் ஞாபகங்களைப்
    பசுமைபூசி மீண்டும் மலர்வித்த
    புதுமைகள் பூட்டி நிகழ்வினைப்
    பெருமைகொள் ஒன்றாய்
    நிகழ்த்திக் காட்டிய அந்த
    நாலுபேருக்கு நன்றி!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (244)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். ஒருவாரம் தப்பி மீண்டும் உங்களுடன் மடல் வாயிலாக உறவாட விழைகிறேன். அனைவரது உள்ளத்தின் அடியிலும் வாலிபக்கால கோலங்கள் எங்கோ ஒரு மூலையில் உறைந்து கிடக்கின்றன. முதுமையின் வாசலில் நுழைந்து வாழ்வின் அனுபவ அத்தியாயங்களைப் புரட்டும்போது சிற்சில வேளைகளில் எமக்குப் புத்துணர்ச்சி அளிப்பதற்காக எமது இளமைக்கால இனிமைகளைத் தட்டிப் பார்க்கத் தேவையாகிறது.. இதயம் எனும் வீணையில் இளமைக்கால இனிய அனுபவங்கள் எனும் சங்கீதப் புத்தகத்தைத் தூசு தட்டி ஞாபக ராகங்களை இசைக்கும்போது எழும் உன்னத இசை உள்ளத்தைத் தாலாட்டி மகிழ்விப்பது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவான ஒரு அனுபவமாகும்.
    சரி எதற்காக சக்தி இந்த ஆரம்பத்தோடு மடல் வரைய முற்பட்டான் என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. காரணம் இருக்கிறது ஒவ்வொருவாரமும் இனிய உறவுகளாம் உங்களுடன் மடல் வாயிலாக மனம் திறப்பது என்பது எனக்கு இப்போது ஒரு சம்பிரதாயச் சடங்காகி விட்டது. ஒரு வாரம் மடல் வரையத் தப்பினால் கூட உள்ளத்தில் ஏதோ தவறிழைத்தது போன்ற உணர்வு. உள்ளத்தை நெருடும். சரி இனி விடயத்துக்கு வருவோம். நான் இங்கிலாந்துக்கு மாணவனாக புலம் பெயர்வதற்கு முன்னால் கடைசியாக எழுபதுகளின் மத்திய பகுதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி பயின்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில். சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னால் கனடா ரோரோன்றோவில் வசிக்கும் என்னுடன் அதே காலக் கட்டத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் 70பதுகளில் யாழ் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றை மிகவும் கோலாகலமாக வெற்றிகரமாக நடத்தினார்கள்.
    அதற்கு பல தரப்புகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தாலும் இன்னோபின்னோரான காரணங்களினால் என்னால் கலந்து கொள்ள முடியாது போய்விட்டிருந்தது.. ஆனால் அந்த ஒன்றுகூடலின் மகிழ்வான தருணங்களை அதில் கலந்து கொண்ட நண்பர்கள் எடுத்துரைத்த போது எனது மனதில் ஏதோ ஒரு பெரிய வாழ்வில் ஒரேயொரு முறை கிடைக்கக் கூடிய இனிய தருணத்தைத் தழுவ விட்டது போன்ற மனக்குறை நிழலாடியது. இபோது 2017ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு மீண்டும் அதே போன்ற ஒன்று கூடல் நிகழ்வை அதே ரோரொன்றோ நகரத்தில் நிகழ்த்த நண்பர்கள் ஒரு வருடத்தின் முன் முடிவு செய்து அறிவித்த போது தவற விட்ட மகிழ்வான தருணம் மீண்டும் என் வீட்டுக் கதவைத் தட்டுவதைப் போன்ற ஒரு எண்ணம் மனதில் ஆனந்தத்துளிகளை அள்ளித்தெளித்தது.
    என் வாழ்க்கையில் யாருடன் அனைத்தையும் கலந்தாலோசிப்பேனோ , யாரை எனது உற்றதோழியாகக் கருதுகிறேனோ . . . அதுதான் எனது மனைவியுடன் இதைப்பற்றிக் கலந்தாலோசித்தேன். சுமார் 41 வருடங்களின் பின்னால் சந்திக்கப் போகும் எனது பல நண்பர்களை சந்திக்கும் ஆவல் என்னுள்ளத்தில் எத்தனை தூரம் ஆழப்பரவியுள்ளது என்பதை என் மனைவி நன்கறிவாள். ஆயினும் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நாம் மேற்கொண்ட சென்னை விஜயம், அதைத்தொடர்ர்ந்து வரும் நவம்பர் மாதம் நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த கப்பற்பயணம் என்பனவற்றிக்கு தனது விடுமுறை நாட்களைப் பகிர்ந்து கொண்ட என் மனைவியின் வேலையிலிருந்து மேலதிக விடுமுறை பெற்றுக்கொள்வது அவளுக்கு மிகவும் கடினமாகப் பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் விருப்ப ஓய்வூதியம் பெற்றுக்கொண்ட எனக்கு வருடமெல்லாம் லீவுதானே ! என்பதைச் சுட்டிக்காட்டிய என் மனைவி ஏன் நான் தனியாக கனடா சென்று இவ்வொன்றுக்கூடல் சந்தர்ப்பத்தில் நண்பர்களின் உறவில் திளைக்கக் கூடாது எனும் வினாவை எழுப்பி என்னை இந்நிகழ்வை நோக்கித் தனியாக பிரயாணம் செய்ய தூண்டி விட்டாள். எங்கு சென்றாலும் எனது மனைவியுடனேயே செல்லும் எனக்கு எமது முப்பத்தியாறு வருட திருமண வாழ்வில் தனியாக மேற்கொள்ளும் மூன்றாவது பயணம். முந்தைய இரு பயணகங்களைப் பற்றி மற்றைய மடல்களில் பேசுவோம்.
    சரி நண்பர்களைச் சந்திக்கப் போகிறோம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருந்தாலும் எனது அம்மா வகையிலான சின்னம்மாக்கள் சிலர் கனடாவில் இருப்பது அப்பெரியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டுமே எனும் ஒரு அவாவையும் எனக்கு ஏற்படுத்தியது. அந்நாளும் வந்தது அதாவது ஜூலை 19ம் திகதி விண்ணேகி விட்ட என் அன்னையின் 96வது அகைவைத் தினத்தில் லண்டன் கட்விக் விமானநிலையத்தில் இருந்து எயார் ட்ரான்சாட் விமானத்தில் புறப்பட விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டேன். விமான ஊர்ந்து செல்லத் தொடங்கியது, “டிங்”, “டிங்” எனும் சத்தம் “கப்டன் பேசுகிறேன், எமது விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று சில பிழையான சமிக்ஞைகளைக் காட்டுகிறது. நாம் திரும்ப விமானத்தை நிறுத்திச் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மீண்டும் அறிவிக்கிறேன்” என்றார். “ போச்சுடா ! ஆரம்பிச்சுட்டாங்கய்யா , ஆரம்பிச்சுட்டாங்க ” என்று வடிவேல் பாணியில் உள்லம் ஓலமிட்டாலும், பரவாயில்லை அனைத்தையும் பரிசோதித்துச் செல்வது நமக்குத்தானே பாதுகாப்பு ” எனும் எண்ணமும் உள்ளத்தின் ஓரத்தில் மின்னலிட்டது.
    ஒருவழியாக அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து என்னையும் எனது மனைவியையும் எனது மைந்தன், மருமகள், பேத்தி ஆகியோரைப்பிரிந்து செல்லும் வேதனையை ஈடு கட்டும் நண்பர்களின் சந்திப்பு எனும் மகிழ்வினையும் கொண்டு கனக்கும் என் இதயத்தையும் சுமந்து கொண்டு எயார் ட்ரான்ஸிட் விமானம் கனடா ரொரான்றோ விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது.. சரி இனி என்ன விமான நிலையத்தில் எனது உற்ற நண்பன் காத்திருப்பான் பைகளைத் தூக்கிக் கொண்டு அவனுடன் செல்ல வேண்டியதுதானே ! எனும் எண்ணத்தில் ரொரான்றோ விமான நுழையத்தின் குடிவரவு பகுதியை நோக்கி நடக்கும் போதுதான் வளைந்து, வளைந்து பத்துப் பதினொரு வளைவுகளுக்குள்ளால் வரிசையில் செல்ல வேண்டிய நிலையக் கண்ணுற்றதும் பயணத்தின் முடிவு ஒன்றும் அத்தனை இலகுவாக முடியப் போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஒருவாறு உத்தியோக பரிவர்த்தனைகளை முடித்துக் கொண்டு என்னை நோக்கிக் காத்திருந்த என் உயிர் நண்பனுடன் அவன் வீடு வந்து சேர்ந்ததும் தான் அடுத்த கட்ட நிகழ்வை ஆனந்தத்துடன் நோக்கக் கூடியதாகவிருந்தது.
    அனைத்துக்கும் மேலாக எனது மூத்த சகோதரன் கனடாவில் வசிப்பரின் மகன் ஒரு ஆண்மகவுக்குத் தந்தையாகி என் அண்ணனை தாத்தாவாக்கிய நிகழ்வும் நிகழ்ந்ததினால் அண்ணன் வகையிலான் எனது பேரனைக் காணும் பாக்கியமும் கிடைத்தது. சரி நான் இத்தனையும் குறிப்பிட்டதன் காரணம் ஏன் எனது கடந்த வார மடல் தடைபட்டுப் போனது என்பதை விளக்குவதற்காக என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா ?

    ஆமாம் ” இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ” எனும் எனது பத்தியை இப்போது கனடாவில் இருந்துதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

    இன்னும். . . . வரும். . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 243 )

     

    சக்தி சக்திதாசன்

     

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்..

    இன்னுமொரு வாரம் ! இன்னுமொரு மடல் ! அடுக்கடுக்காய் ஆனந்தங்கள்,அடுக்கடுக்காய் அனர்த்தங்கள். அப்படி ஒரு நிகழ்வு ! இப்படி ஒரு நிகழ்வு ! ஒரு இன்பம், ஒரு துன்பம் அதுதான் வாழ்க்கையென்றிருந்தால் அடுத்தடுத்து இன்பம், அடுத்தடுத்து துன்பம். இவைகளை வகுப்பவர் யார், அவர்தம் விதிகள் தாமெவை ?

    இன்றைய உலகின் அவசர நிகழ்வுகள் அடுக்கடுக்காய் எம்மீது தூக்கிப் போடும் சவால்கள் இவை. இன்றைய உலகின் பலநாடுகளிலும் ஒரு புதிய சமுதாயம் உருவாகியிருக்கிறது . அதுதான் ” புலம்பெயர் சமுதாயம்” இப்புலம்பெயர் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் உள்ளடக்கியதல்ல. பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களினால் இடம் பெயர்ந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரும் அவலமான நிலையில் இருக்கும் மக்களை உள்ளடக்கியதே இச்சமுதாயமாகிறது.  இச்சமுதாயத்தினரால் படைக்கப்படும் இலக்கியம் அவர்களின் மனவோலங்களின் அடிப்படையில் எழுந்தவைகளே ! ஆனால் புலம் பெயர்ந்து வந்து வாழும் அனைவராலும் இலக்கியம் படைக்க முடிகிறதா ? இல்லையே ! தமது மன உணர்வுகளை எழுத்தில் வடித்து வெளியிட முடியாதோரின் மனவோலங்களுக்கு வடிகால் தான் என்ன ?

    எனது எழுத்துக்களின் எல்லைகளை நிர்ணயிப்பது நான் பிறந்த என் தாய்மண்ணான ஈழம், நான் வாழ்க்கைத்துணையைத் தேடிக்கொண்ட தாய்த்தமிழகம், எனக்கு வாழ்வளித்த இங்கிலாந்து எனும் என் மாற்றாந்தாய். எனது பார்வையின் கோணம் இவைகளின் பின்னனியில் விளைபவைகளே ! எனக்குள் எனது பின்புலத்தால் வரைந்து வைக்கப்பட்ட கலாச்சாரக் கோலங்கள் அழிக்கப்பட முடியாதவை. அதேநேரம் பதின்ம வயதின் இறுதிப்படிகளில் இருந்து எனக்கு வாழ்வளித்த இந்த இங்கிலாந்து தேசத்தின் கலாச்சாரப் பின்னனி எனக்குள் எழுதப்பட்ட கலாச்சார விதிகளுக்கு முற்றிலும் மாறானவை. ஆயினும் எந்த வித வற்புறுத்தல்களுமின்றி எனது சொந்த விருப்பில் நான் வாழ்வதற்குத் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து நாட்டின் காலாச்சாரத்தை சுவீகரித்துக் கொள்ளும் மனப்பான்மையை எனது வாலிப வயதில் வரித்துக் கொள்வதில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆயினும் என் தாய்மண்ணின் கலாச்சாரப் பின்னனியைத் தொலைத்து விடாமல் காப்பாற்றிக் கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்தன.

    இவை யிரண்டுக்கிடையில் இருந்த கலாச்சார இடைவெளியை நிரப்புவதே ஒரு போராட்டமாக இருந்தது. அப்போராட்டக் களத்தில் பல சமயங்களில் பல குழப்பநிலைகள் தோன்றி மறைந்துள்ளன. ஆனால் இன்று எனது முதுமையின் வாசலில் நான் இன்னமும் தமிழையும், அது கற்றுத் தந்த கலாச்சார முக்கியத்துவத்தையும் மனதில் கொண்டிருப்பது எனது போராட்டத்தில் நான் ஓரளவு வெற்றியடைந்தேன் எனும் மகிழ்வை எனக்குத் தந்திருக்கிறது. இந்தப் பின்னனியில் தான் நான் இங்கிலாந்தில் எமது புலம்பெயர் தமிழ்ச் சமுதாயத்தின் மத்தியில் நிகழும் நிகழ்வுகளை எனது கோணத்தில் இருந்து பார்க்க விழைகிறேன். தமிழையும், அதன் கலாச்சாரப் பெருமைகளையும் தாம் வாழும் புலம்பெயர் தேசத்தில் காப்பாற்றி வளர்த்து வருகிறோம் எனும் நம்பிக்கையில் எம்மவர் நிகழ்த்தும் பல நிகழ்வுகளுக்கான உண்மை விளக்கங்களின் அடியில் ஒளிந்திருக்கும் மனப்பான்மையை கொஞ்சம் வெளிக்கொணர்வதே எனது இந்த மடலின் சாரமாக அமைகிறது. மனம் நிறைய எமது கலாச்சாரப் பெருமைகளைச் சுமந்தபடி அந்நிய தேசத்தினுள் நுழைகிறோம். நாம் நுழையும் அந்நிய தேசங்களில் எமக்கு வரவேற்பளித்து எமது தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நாம் அவர்களின் சட்டவரம்புக்கு உட்பட்டு எமது கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் எவ்விதத் தடையும் போடுவதில்லை. எமது உள்ளங்களில் தேக்கி வைத்திருக்கும் கலாச்சாரங்களைக் காப்பாற்றும் திறன் எமக்குள் இல்லை என்றாலும் இருக்கவே இருக்கிறார்கள் எமது குழந்தைகள். என்ன செய்கிறோம் ? எமது கனவுகளை கலாச்சாரம் எனும் பெயரில் எம்மைப் பிணைத்திருக்கும் விலங்கினை நாம் பாசக்கடமை எனும் பெயரில் எமது குழந்தைகளின் மீது பூட்டி விடுகிறோம். இந்தப் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த எமது குழந்தைகள் தம் வாழ்வுக்கான கல்வியைப் பெற்றிட செய்யும் முயற்சிகளோடு பெற்றவர்களின் கலாச்சார சுமைகளையும் சேர்ந்தே சுமக்கிறார்கள்.

    என்ன சக்தியின் மடல் எந்தத் திசை நோக்கிச் செல்கிறது என்கிறீர்களா ? இங்கிலாந்தில் நிகழும் பல அரங்கேற்றங்களையும் அவற்றின் பின்னால் புதைந்திருக்கும் பல துயரங்களையும் கண்ணுற்றதினாலும், கேள்வியுற்றதினாலும் எழுந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இம்மடல். ஆமாம் நடனம், இசை, பாடல் எனும் பல கலாச்சார விழுமியங்களின் அடையாளச் சின்னங்களாக தமது வாரிசுகள் வருவதின் பெருமைக்காக பெற்றோர்கள் பலர் படும் இன்னல்கள் சொல்லிலடங்கா. இங்கே நடைபெறும் அரங்கேற்றங்கள் சிலவற்றின் செலவு ஒரு வாரிசின் ஆடம்பரமான திருமணச் செலவுக்கு இணையானது. அத்தகைய நிதியை வங்களில் கடனாகப் பெற்றுக்கூட இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பல அந்த ஒரு அரங்கேற்ற நிகழ்வின் பின்னால் ,அவ்வரங்கேற்றம் செய்த மாணவ மாணவிகளினால் மீண்டும் ஒருபொழுது கூட உபயோகிப்படக்கூடாத நிலையை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் அதேசமயம் தங்களுக்கு பிடித்ததினால், இக்கலைகளைப் பயிலும் பல மாணவ மாணவிகள் இல்லாமல் இல்லை. அவர்களின் திறமைகளையும், அவர்களின் கலச்சார அடையாளப் பாதுகாப்பையும் பார்த்து நான் பிரமிக்கத் தவறுவதில்லை.

    என்னுடைய ஒரே ஆதங்கம் கலாச்சாரப் பாதுகாப்பு எனும் பெயரில் பிடிக்காத ஒன்றைத் தமது சுயமகிழ்வுக்காக தமது குழந்தைகளின் மீது திணிக்கும் முறை சரிதானா என்பதே ! புலம்பெயர் வாழ்வில் எமது இளமைக்காலத்தில் தாய்நாட்டுக் கலாச்சாரத்தில் வளர்ந்து விட்டு பின்பு புலம்பெயர் தேசக் கலாச்சாரப் பின்னனியில் இணைந்து வாழ்வதென்பது ஒரு சுலபமான காரியமல்ல. அவ்வாழ்வில் எங்கே நாம் நமது அடையாளத்தை இந்த அந்நிய தேசத்தில் தொலைத்து விடுவோமோ எனும் பயத்தில், தீவிரமான நடவடிக்கைகளில் இறங்குவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றே. ஆயினும் இப்புலம்பெயர் தேசத்தை நமது வாழ்நாடாக எடுத்துக் கொள்ளும் போது, இத்தகைய குழப்பங்களுக்குள் நம்மைப் புகுத்திக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 242 )

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். மற்றொரு வாரம், மற்றொரு மடல். என் அன்புக்கினிய வாசகர்கள் அனைவரும் நலம் கொள்ள வேண்டுமெனும் பிரார்த்தனையுடன், இவ்வார மடலில் கருத்தாட விழைகிறேன். அரசியல் என்பது ஒரு சூறாவளி. அது எந்த நேரத்தில் எந்தத் திசையில் சுழன்றடிக்கும் என்பது அனைவருக்குமே புரியாத புதிர். அன்றாடம் ஒவ்வொரு ஊடகங்களிலும் வித்தியாசமான, வெவ்வேறு கருத்துக் கணிப்புகளைக் கொண்ட அரசியல் அவதானிகள் என்று ஊடகங்களினால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் தமது அனுமானத்தில் இந்த அரசியல் சூறாவளி, அப்போது களத்தில் நின்றாடும் நிலையையும், அடுத்து அது எத்திசையில் செல்லலாம் என்பதையும் ஊகித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் இவர்களின் கருத்துக்கணிபுப் படிதான் அரசியல் சூறாவளியின் அசைவுகள் இருக்கப் போகிறதா? என்பது நியாயமான கேள்வியே ! ஆயினும் இத்தகைய கருத்துக் கணிப்புகள் மக்களின் கருத்துக்களின் மாற்றங்களிலும், அவர்களின் போக்குகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.

    உதாரணமாக லண்டனின் ஒரு பிரபல வானோலி ஊடகம் மக்களுடனான கலந்துரையாடலையே அச்சாரமாகக் கொண்டு இயங்குவது, நடுநிலை எனும் கொள்கையை முன்வைத்து இடதுசார, வலதுசார கொள்கைகளைக் கொண்டவர்களைத் தமது தொகுப்பாளர்களாகக் கொண்டுள்ளது. இவர்களில் சிலர் தீவிர இடதுசாரப் போக்கைக் கொண்டவர்களாகவும், வேறு சிலர் தீவிர வலதுசாரப் போக்கைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவரில் தீவிர இடதுசாரப் போக்கை எடுத்துக் கொண்டோமானால் இங்கே பேதமென்பது வர்க்கத்தின் அடிப்படையிலேயே பேசப்படுகிறது. நிறம், மதம், இனம் என்பனவற்றின் அடிப்படையில் இங்கு மக்களிடையே பேதங்கள் தூண்டப்படுவதில்லை. அதே சமயம் இவர்களது அதிதீவிரவாத மென்பது முதலாளித்துவ அரசியல் போக்கைக் கொண்ட, அதாவது ஆங்கிலத்தில் Capitalism என்று சொல்லப்படும் கொள்கையின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையே வலுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இவர்களின் போக்கில் வன்முறையென்பது அரசுக்கு எதிரான போராட்டமாகப் பரிணமிக்கிறது.

    அதேசமயம் அதிதீவிர வலதுசாரக் கொள்கையாளர்களை எடுத்துக் கொண்டால் தேசப்பற்று எனும் கோஷத்தின் கீழ் வெளிநாட்டினரின் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதன் அடைப்படையில் வாதங்கள் இனம், மதம், நிறம் எனும் வேறுபாடுகளை வளர்த்து இவ்வகையிலான பேதங்களுக்கு நீரூற்றும் செயலைப் புரிகின்றன. இக்கொள்கையால் தூண்டப்படும் வன்முறையானது இனத் துவேஷ  அடிப்படையிலான தனிமனித தாக்குதல்களுக்கு வழி வகுக்கின்றது. தெரிந்தோ,தெரியாமலோ ஊடகத் தொகுப்பாளர்கள் தமது போக்கினால் இவ்விரு வகையிலான தீவிரவாதங்களுக்குத் துணை போகிறார்கள் என்பது உண்மையே ! ஆனால் இங்கிலாந்தின் அரசியல் ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையே பேச்சுரிமை. இப்பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக அமைகிறதா ? இல்லையா என்பதை நிர்ணயிக்கும் எல்லைக் கோடு மிகவும் மெல்லியதே !

    எதற்காக இந்தத் தீவிர அரசியல் விளக்கம் என்று எண்ணுகிறீர்களா ? இங்கிலாந்தின் இன்றைய அரசியல் களம் என்னைப் போன்றவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது மட்டுமல்ல, உள்ளத்தில் ஒரு சிறு பீதியையும் தோற்றுவிக்கத்தான் செய்கிறது. அதிதீவிர வலதுசார கொள்கையாளர்கள் எந்த அளவிற்கு இனத்துவேஷத்தைத் தூண்டுகிறார்கள் என்று எண்ணுகிறோமோ அதே அளவில் அடுத்தமுனையான அதிதீவிர இடதுசாரக் கொள்கையுடையவர்களின் எழுச்சி, நாட்டின் சட்டங்களைக் குலைக்கும் வகையிலான போராட்டத்துக்கு இட்டுச் செல்கிறதோ எனும் அச்சம் எழத்தான் செய்கிறது. ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்களின் மனதில் சமநிலையிலான கருத்துக்கள் நிலவி வரும் மட்டும்தான் அந்நாட்டின் சட்டம்,அமைதி, ஒழுங்கு என்பது பேணப்படுகிறது. எப்போது அச் சமநிலை நீங்குகிறதோ அப்போதே அங்கு நிலவும் அமைதியும் விடைபெற்றுச் செல்கிறது. கடந்த ஏழு வருடங்களாக இங்கிலாந்தில் கடுமையான பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது. இக்கொள்கைகளின் நிமித்தம் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு வருடமொன்றுக்கு 1 சதவிகிதம் மட்டுமே எனும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஏழு வருடங்களாக டாக்டர்கள்,நர்சுகள், போலிஸார், தீயணைக்கும் படையினர், மற்றும் அரசாங்க அதிகாரிகள் மிகவும் சொற்ப அளவிலான சம்பள உயர்வையே பெற்றிருக்கிறார்கள். ஆனால் தற்போது பணவீக்கம் அதாவது inflation மூன்று சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவுகள் உயரும் விகிதத்தில் மக்களின் சம்பளம் உயராவிடில் அவர்கள் எவ்வாறு வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பார்கள் என்பதே இன்றைய கேள்வி. இது மக்களின் மனங்களில் ஒரு வகையிலான விரக்தியைத் தோற்றுவித்திருப்பது போலத் தென்படுகிறது.

    இந்தப் பின்னனியில் தான் சமீபத்தில் இங்கிலாந்தில் நார்த் கென்சிங்டன் எனும் இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் மாபெரும் தீவிபத்துக்குள்ளானது. இதில் சுமார் எண்பது பேர்வரை உயிரிழந்துள்ளார்கள். இதைப்பற்றி நான் கூட சில வாரங்களின் முன் மடல் வரைந்திருந்தேன். இக்குடியிருப்பில் வசித்த பெரும்பான்மையினர் இங்கிலாந்துக்கு அரசியல் தஞ்சம் புகுந்தவர்கள் அநேகமானோர் இஸ்லாமிய மதத்தினர். இவ்வுண்மை இத்தீவிபத்தின் பின்னால் தான் பகிரங்கமாகியுள்ளது. இது சில கேள்விகளை தீவிர வலதுசாரிகளிடமும், இடதுசாரிகளிடமும் தூக்கிப் போட்டுள்ளது.

    • எம் இங்கிலாந்து தேசக் குடியுரிமையுள்ள மக்கள் வாழ வீடின்றி காத்திருப்போர் பட்டியலில் இருக்கையில், எவ்வாறு வெளிநாட்டிலிருந்து தஞ்சம் கேட்டு வந்தவர்களுக்கு லண்டன் நகரின் முக்கியமான பகுதியில் வாழ குடியிருப்பு வசதி கிடைத்தது?

    இது தீவிர வலதுசாரப் போக்குடையவர்களின் கேள்வி

    • இக்குடியிருப்புக் கட்டிடத்தில் வாழ்வோரில் பெரும்பான்மையினர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எனும் காரணத்தினால் தான் இக்குடியிருப்புக் கட்டிடத்தில் நவீன தீ தடுக்கும் உபகரணங்கள் பொருத்தப்படவில்லை. இது ஒரு இனத்துவேஷ அடிப்படையில் விளைந்த தவறு.

    இது தீவிர இடதுசாரக் கொள்கையுடையவர்களின் கேள்வி.

    இவையிரண்டுமே ஒரு சமுதாய முன்னேற்றத்துக்கான கேள்விகளாகத் தென்படவில்லை. மக்களிடையே இருக்கும் பேத உணர்வுகளுக்கு நெய்யூற்றி வளர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் தான் அரசாங்கம் இத்தீவிபத்தின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய ஒரு பகிரங்க விசாரணைக் கமிஷன் அமைத்து, அதற்கு ஒரு ஓய்வு பெற்ற பிரபல்யமான நீதியரசரைத் தலைமையாக நியமித்துள்ளது.

    இந்தக் குடியிருப்புக் கட்டிடத்தின் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோரின் நலனை முன்னெடுக்க அவர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் கோரிக்கை இந்த நீதியரசரை மாற்ற வேண்டும் என்பது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் இந்த நீதியரசர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த அரசதரப்பினராவார். வேற்றினத்தவரே பெரும்பான்மையாக வசித்த இக்குடியிருப்புக் கட்டிடத்தின் தீ விபத்தைப் பற்றி விசாரிக்கும் கமிஷனின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவர் ஒரு சிறுபான்மை வேற்றினத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே எமக்கு தீதி கிடைக்கும் என்பது. இதற்கு தீவிர இடதுசாரக் கொள்கையுடையவர்களும்,சோஷலிஸ்டுகள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்களும் இவர்கள் பின்னால் உந்து சக்தியாக இருக்கிறார்கள். இந்த நீதியரசரின் விசாரணை இத்தீவிபத்தின் காரணங்களையும் இதற்கு யார் பொறுப்பு என்பதனையும் மட்டுமே ஆராயப் போகிறது, இதன் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்புகளை ஈடு செய்யும்  நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதில்லை, அதற்கு எந்த இனத்தைச் சேர்ந்தவராயிருந்தாலும் என்ன ? எனும் கேள்வி பொதுவானவர்களிடம் இருந்து எழுகிறது.

    இங்கேதான் காலத்தின் கோரத்திற்கு பலியானவர்களின் வாழ்வு அரசியல்மயப் படுத்தப்படுகிறதோ எனும் கேள்வி எழுகிறது. தீவிர இடதுசாரக் கொள்கையுடயவர்களின் ஆதரவு ஜெர்மி கோர்பன் தலைமையிலான லேபர் கட்சிக்கே உண்டு. பெரும்பான்மை பலத்திலிருந்து மைனாரிட்டி எனும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தெரேசா மே அவர்களின் அரசு கொஞ்சம் நிலை தளைர்ந்து போயிருப்பது போன்ற தோற்றம் இருப்பதால் இத்தகைய நிகழ்வுகளைக் கொண்டு அரசை மேலும் ஆட்டம் காணப்பண்ணி வீழ்த்தி விட்டால் , மறுதேர்தலில் ஜெர்மி கோர்பன் அரசமைக்கலாம் என்பது இந்தத் தீவிர இடதுசாரிகளின் நோக்கம் போலத் தென்படுக்கிறது, அதிதீவிர வலது சாரம் எவ்வகையில் சமுதாய பேதங்களுக்கு வித்திடுகிறதோ, அதேயளவில் இடதுசார அதிதீவிர போக்குகள் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வல்லமை உடையது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

    துரதிஷ்டவசமாக மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வினை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடுவதுதென்பது ஜனநாயக அரசியல் கோட்பாடுகளுக்கு எதிரானது. இங்கிலாந்து அரசியல் களத்தில் நிலை கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இதனை நினைவில் கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புவதே இப்போதைக்கு மனதுக்கு இதமளிக்கும் நம்பிக்கை.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share