என் இனிய பாரதியே !
என் இனிய பாரதியே !
தமிழ்த் தாயின் தங்கப் புதல்வனே !
தமிழ்த் தரணி போற்றும் பாவலனே !
தமிழர்தம் மனமுறைந்த தமிழ்க் காவலனே !
நிந்தன்
பிறப்பால் எம் தாயகம் செழித்து
பிறழ்ந்தோடிய வருடங்கள் நூற்றோடு சில
பிழையில்லா வகையில் எம்மினம் வாழ
பிறந்தாயோ எந்தன் தமிழ்ப் புரவலனே !
தமிழ்த்தாயின் மடி தவழ்ந்து
தன் வாழ்வை தமிழுக்கீந்து
தியாகத்தின் மறு உருவமாய் வாழ்ந்த உந்தன்
திருப்பெருமை உணராத மந்தைக் கூட்டமய்யா நாம் !
தும்பிக்கை கொண்டெழுந்த ஒரு மதயானை
நம்பிக்கை இழந்ததினால் உனைத் தாக்கி
சிந்திக்க வகையில்லா வகையில் உந்தன்
தன்னிகரற்ற வாழ்வை முடித்ததை என்னவென்போம் ?
தமிழே உந்தன் உயிரென்றாய் . . .
ஆயினும் பலமொழி கற்றறிந்தாய்
எம்மொழியாயினும் அம்மொழிச் சிறப்புகளை
எம்மொழியில் புகுத்திட ஆவல் கொண்டாய்
தமிழ் எனும் பாறையெடுத்து உந்தன்
அறிவென்னும் உளி கொண்டு எத்தனை
அழகிய சிற்பங்களை கவிதைகளாய் நீ
ஆக்கி எமக்களித்தாய் எந்தன் அற்புதக் கலைஞனே !
அடிமைகள் அல்ல நாம் . . .
அன்னைத் தமிழின் அழகிய குழந்தைகள்
அன்னியர் எமக்கெப்படி விலங்கு பூட்டுவர் ?
அடலேறு போல ஆர்ப்பரித்தெழுந்தவனய்யா நீ !
அயல் தேசத்திலே . . .
அந்நிய மண்ணிலே
கரும்புத் தோட்டமதில் எம்மினத்தவர்
கசக்கிப் பிழியப்படுவதைக் கண்டு
கண்ணீர் வடித்துக் கலங்கியவனே !
கண்ணிருக்கும் குருடராய் இம்மண்ணில்
பெண்னிருக்கும் நிலை சொல்லி எமை
கண்திறக்கப் பண்ணும் வகையில் பல
பண்ணிசைத்த புரட்சிக் கவிஞனே !
பிறப்பால் அல்ல – உயர்
குணத்தால் உயர்ந்தவரே உண்மையில்
உயர் குலத்தோர் எனும் உண்மையை
உரக்கச் சொல்லி புதுக் கருத்தை விதைத்தனை !
தமிழ்த்தாயின் தலைமைந்தனே !
உந்தன் பிறந்தநாளி;ல் உனை வணங்கி
உயிர் பிரியும் நாள் வரை என் விரல்வழி
உருகி ஓடட்டும் தமிழ்வரிகள் என வேண்டுகிறேன் !
வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்