Tag: திரை விமர்சனம்

  • பராசக்தி – திரை விமர்சனம்

    பராசக்தி – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    பராசக்தியின் அடிப்படைத் தோல்வி, அதன் கதையிலிருந்து தொடங்குகிறது. மொழிப் போராட்டத்தில் 70 பேர் துடிதுடித்து மாண்டுள்ளனர். தங்கள் உடலுக்குத் தீவைத்துக்கொண்டு பலர் கருகிச் சாய்ந்துள்ளனர். இத்தனை உணர்ச்சிமிகு வரலாற்றுப் பின்புலத்தை எடுத்துக்கொண்டு, சப்பையான இறுதிக் காட்சியை வைத்தது, இயக்குநரின் திறமையின்மையைக் காட்டுகிறது.

    இந்தித் திணிப்பு என்பதற்கு உரிய காட்சிகள் குறைவாகவே உள்ளன. அதிலும் சமூகத்தில் அனைத்து நிலையினரையும் பாதிக்கும் வகையில் அது இருந்தது என முன்வைக்கவில்லை. அஞ்சல் நிலையத்தில் படிவங்கள் இந்தியில் மட்டுமே இருந்தன எனக் காட்டப்படுகிறது. பணம் அனுப்ப வந்த பெண்கள், தங்களுக்கு அதை நிரப்பத் தெரியாது என்று கூறுகின்றனர். சரி இதை நீங்களே நிரப்புங்கள் என அஞ்சல் அலுவலர்களிடம் கூறுகின்றனர். அவர்கள், எங்களுக்கும் இந்தி தெரியாது என்று கூறுகின்றனர். அஞ்சல் அலுவலர்களுக்கே இந்தி தெரியாத போது, அவர்களால் எப்படி இந்திப் படிவங்களைக் கையாள முடியும்? படத்தில் இது மிகப் பெரிய ஓட்டை. நடைமுறையில் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

    புறனானூற்றுப் படையினர், தமிழின் ஆதி வடிவமான பிராமி மொழியில் செய்திகள் பரிமாறுவதாகக் காட்டுகிறார்கள். இதை நாயகன் தன் நெஞ்சில் பச்சை குத்தியும் இருக்கிறார். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மொழியினர் பிராமி மொழியை எவ்வாறு கற்றுக்கொண்டனர், இதைக் கற்பித்தவர் யார் எனப் படத்தில் காட்டவில்லை. இது அவ்வளவு எளிதான செயல் இல்லை. புதிதாக இந்தி மொழியைக் கற்க முடியாது என்று எதிர்க்கின்றனர். ஆனால், பிராமி மொழியில் கற்றுச் சங்கேத மொழியில் எழுதவும் பச்சை குத்தவும் கற்கின்றனர். இதிலும் இந்தி மொழியைக் கற்க அமைப்புகள் இருக்கின்றன. ஆசிரியர்களும் இருக்கின்றனர். ஆனால், பிராமி மொழியைக் கற்க உரியவர்கள் இல்லை. எப்படிப்பட்ட முரண் இது?

    நாயகன் இந்தி மொழியைக் கற்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த ஊரில் நாயகியைத் தவிர, இந்தி ஆசிரியர் ஒரே ஒருவரே இருக்கிறார். அவரும் நான் யாத்திரை செல்கிறேன் எனக் கிளம்புகிறார். இந்தித் திணிப்பு எனக் காட்டப்படும் படத்தில் தான் இந்த நிலை. பிறகு எங்கிருந்து திணிப்பு வருகிறது எனில், அரசின் கொள்கை அறிவிப்பு அளவில்தான் அது உள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் நம் வாழ்க்கை அவ்வளவுதான், நம் மொழி அவ்வளவுதான் என்ற கற்பனை அச்சமே மாணவர்களைப் போராடத் தூண்டுகிறது. அதாவது, திணிப்புக்கு முன்னதாகவே அதை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள்.

    ரெயில்வே துறை நேர்காணல், தில்லியில் நடக்கிறது. ரெயில்வே பயணச் சீட்டுப் பரிசோதகர் வேலைக்கு உனக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்தி மாநிலங்களில் பணியமர்த்தப்பட்டால் அது தேவைதான். ஆனால், இதே போல் தென் மாநிலங்களில் பணியமர்த்தப்படும் வடமாநிலப் பயணச் சீட்டுப் பரிசோதகர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்தித் திணிப்பு என்ற அளவில் இந்தக் காட்சி முடிந்துவிடுகிறது.

    தமிழக முதலமைச்சராகக் காட்டப்படும் பக்தவத்சலம், மதுரையில் இந்தி மொழி வாரத்தைத் தொடங்கி வைக்கிறார். ஆனால், அவரோ, தமிழக அமைச்சர்களோ இந்தியில் ஒரு வார்த்தையும் பேசவில்லை. படத்தில் காட்டப்படும் கள யதார்த்தத்தின்படி சமூகத்தில் எந்தப் பெரிய தாக்கத்தையும் இந்தி செலுத்தவில்லை. இந்தித் திரைப்படங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடியதைக் கூட இந்தத் திரைப்படத்தில் தெளிவாகக் காட்டவில்லை.

    இந்தித் திணிப்பு என வாய் ஓயாமல் பேசினாலும் அவற்றைத் தெளிவாகத் திரையில் காட்டவில்லை. தில்லியில் எல்லாப் பேருந்துகளிலும் தமிழில் எழுதியது போன்ற நடக்காத போராட்டங்களைக் காட்டியிருக்கிறார்கள். இறுதிக் காட்சி, மிக மிக மொக்கையாக அமைந்திருக்கிறது. எழுச்சி ஊட்டியிருக்க வேண்டிய ஒரு திரைப்படம், இயக்குநரின் அலட்சியத்தால் பிசுபிசுத்துவிட்டது. இதைப் படக்குழுவினரும் தயாரிப்பாளரும் கூடச் சரியாகக் கவனிக்கவில்லை.

    ஆனால், கற்பனை அச்சத்தைக் காட்டியே காலத்தை ஓட்டலாம், வாக்குகளை அறுவடை செய்யலாம் என்ற அரசியல் சாதுர்யத்தைப் படம் எடுத்துக் காட்டுகிறது.

    மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குச் சார்பாக இயக்குநர் வளைத்துள்ளார். இந்தப் போராட்டம் குறித்து, அண்ணாவின் கருத்துகள் மட்டும் ஆங்காங்கே காட்டப்படுகின்றன. இதர கட்சியினர், தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோரின் குரல் காட்டப்படவில்லை. இது, திட்டமிட்டு மாணவர்களைத் திமுக சார்பாளர்களாகக் காட்டுகின்றது.

    படத்தின் ஒரே நல்ல கூறு, இந்தித் திணிப்புப் போரை ஒடுக்கும் அதிகாரியாகத் தமிழர் ஒருவரைக் காட்டியதே. இவரை வட இந்தியராகக் காட்டியிருந்தால், வட இந்தியருக்கு எதிரான உணர்வு இங்கே பெருகியிருக்கும்.

    படம் என்பது வெறும் தொழில்நுட்பம், ஒப்பனை, அரங்கப் பொருள்கள் மட்டுமில்லை. அதற்கு வலுவான கதையும் பாத்திரங்களும் தேவை. எல்லாப் படங்களையும் எல்லோரும் எடுத்துவிட முடியாது என்பதைச் சுதா கொங்கரா உணர வேண்டும்.

    Share
  • பறந்து போ – திரை விமர்சனம்

    பறந்து போ – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    பறந்து போ படத்தைப் பார்த்த போது, கவலையாக இருந்தது. இது குழந்தைகளுக்கான படம் என முன்வைக்கும்போது சற்றே அச்சமாகவும் இருந்தது. படத்தின் அதீதமான காட்சிகள் பலவும் இயல்பானவையாகக் காட்டப்படுகின்றன. இவை தவறானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், சரிதான் எனக் குழந்தைகளே நினைக்கும் அளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    படத்தின் நாயகனாக வரும் சிறுவன் அன்பு (மிதுல் ரயான்), அப்பாவிடம் கோபித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது சென்று விடுகிறான். அப்பா மிர்ச்சி சிவா, அவனைப் பல இடங்களில் தேடுகிறார். இதற்காகவே ஒரு பாடல் வைத்திருக்கிறார், இயக்குநர் ராம். வேர் இஸ் அன்பு? அன்பைக் காணவில்லை. காணோம் காணோம் கா கா காணோம். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? கிட்னாப்பர் கிட்ட மாட்டிக்கிட்டானா? டைம் மிஷின் ஏறித் தொலைஞ்சு போனானா? ஹைட் அண்ட் சீக்கே ஆட்றானா? என மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? என ஒரு குழந்தையைச் சொல்வது, மிகவும் அதிகப்படி. மதன் கார்க்கி இப்படி எழுதுவார் என எதிர்பார்க்கவில்லை.

    சிறுவன் தொலைவதும் அப்பா தேடுவதும் கண்டுபிடிப்பதும் ஏதோ நகைச்சுவை போல் வருகிறது. இதைப் பார்க்கும் சிறுவர்களுள் யாரேனும் இப்படி வேண்டுமென்றே தொலைந்தால் என்னாவது? இப்படிப் பெற்றோரிடம் சொல்லாமல், எங்காவது செல்வதும் பெற்றோரைத் தேட வைப்பதும் சரி எனப் பிள்ளைகள் நினைத்தால், எத்தகைய ஆபத்துகள், சிக்கல்கள் எழும் என இயக்குநர் யோசிக்கவே இல்லையா?

    அடுத்து, கிரஷ். பள்ளித் தோழியை அப்பா பார்த்தால், இவர் தான் உன் கிரஷ்ஷா? எனச் சிறுவன் அன்பு கேட்கிறான். தன் பள்ளித் தோழியைப் பார்க்கப் போகும்போது, நான் என் கிரஷ் வீட்டுக்குப் போகிறேன் என்கிறான். ஸ்லீப் ஓவர் எனச் சிறுவனும் சிறுமியும் சேர்ந்து படுத்துத் தூங்குகிறார்கள். பிறகு, அப்பா வேண்டும் என்கிறான் எனச் சொல்லி, சிறுவனைச் சிறுமியின் அம்மா தூக்கிக்கொண்டு வந்து, சிவா அறையில் படுக்க வைக்கிறார்.

    சிறுவர்கள் இயல்பாக நண்பர்களாக இருக்கலாம். இதில் கிரஷ் என்ற வார்த்தை எதற்கு? பூ கொடுப்பதும் ஓரக் கண்ணால் பார்த்துச் சிரிப்பதும் ஒன்றாகப் படுப்பதும் அவர்களுக்குத் தேவையற்ற கற்பனைகளைக் கொடுக்கும் வாய்ப்பு உண்டு. பத்து வயதுச் சிறுவர்களுக்கு இவையெல்லாம் தேவையா? பல திரைப்படங்களும் திரைப்பாடல்களும் பள்ளிப் பருவக் காதலைக் காட்டுவதால் அது இயல்பு என்ற எண்ணம் எழக் கூடாது. பல நிலைகளில் சமூக அடுக்குகள் கொண்ட தமிழ்ச் சமூகம், இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டது. இந்தப் பின்னணியில் உன் கிரஷ், என் கிரஷ் எனச் சிறுவர்கள் பேசுவது நல்லதில்லை. நகரத்து மாணவர்களுக்கும் கிராமத்து மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் வாய்ப்பும் இந்தப் புதிய பண்பாட்டுக்கு உண்டு.

    பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், சிறுவனை வீட்டில் பூட்டிவிட்டுச் செல்கிறார்கள். சிறுவன் அன்பு, பீட்சா, பர்கர் எனக் கேட்டும் ஆர்டர் செய்தும் சாப்பிடுகிறான். வேவ்போர்டு விளையாடுகிறான். வீட்டில் நெட்பிளிக்ஸ் பார்க்கிறான். வீடியோ கேம் விளையாடுகிறான். கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் இசைக்கும் பாடல்களைப் பார்க்கிறான். இந்தப் பெருநகர வழக்கங்களைக் காட்டுவதால், சிறுநகரத்திலும் கிராமத்திலும் இருந்து இதைப் பார்க்கும் சிறுவர்கள், தாங்களும் இவ்வாறு பீட்சா, பர்கர் சாப்பிட வேண்டும் எனக் கேட்கக்கூடும். பெருநகரத்திலேயே எல்லோர் வீடுகளிலும் இப்படி எந்த நேரமும் ஆர்டர் செய்து சாப்பிடுவதில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு, புதிய இயல்பாகச் சிறுவர்கள் அடம் பிடித்துக் கேட்கலாம்.

    படம் முழுவதும் ஒரு பொறுப்பின்மை விரவி இருக்கிறது. சிறுவன் அன்பு எண்ணெய் டின்னை உடைத்து, தரை முழுவதும் எண்ணெய் பரவியுள்ள நிலையிலும் அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பது போல் கேம் விளையாடுகிறான். அப்பாவே கண்டுபிடித்துத் துடைக்கிறார். தான் எண்ணெய் கொட்டியதால் மற்றவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே, அவர்களை எச்சரிக்க வேண்டுமே என்று கூட அன்புக்குத் தோன்றவில்லை. படம் நெடுகிலும் இருசக்கர வாகனம் ஓட்டும் சிவா, பெரும்பாலும் தலைக்கவசம் அணியவில்லை. கடன் கொடுத்தவருக்கு உரிய பதில் சொல்லவில்லை. கடன் கொடுத்தவர் துரத்தும்போது சாலையோரப் பாப்கார்ன் கடையில் இடித்துப் பாப்கார்ன் சிதறுகிறது. அவருக்கு இவர்கள் எந்த இழப்பீடும் தரவில்லை.

    சிறுவன் அன்பு அடம் பிடிப்பதுடன் திமிராகவும் நடந்துகொள்கிறான். அப்பாவை வீட்டுக்குள் பூட்டி வைக்கிறான். உடனே இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். 25 கி.மீ. தள்ளிக் கடை இருந்தாலும் உடனே பர்கர் சாப்பிட வேண்டும் என்கிறான். சாலையில் வேவ்போர்டு விளையாடுகிறான். மலை சூழ்ந்த இடத்துக்கு வீட்டை மாற்று என்கிறான். பெற்றோர் எதற்கும் கோபப்படாமல், ஐயம் ப்ரவ்டு ஆப் யூ என்கிறார்கள். அதிகம் செல்லம் கொடுக்கும் இந்தக் காலத்துப் பெற்றோர்களை இதில் காண முடிகிறது. ஆயினும் பிள்ளைகள் நினைத்ததை எல்லாம் உடனே செய்ய வேண்டும் என நினைக்கக் கூடாது. பெற்றோர்களும் அவர்கள் கேட்டதை எல்லாம் உடனே நிறைவேற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது.
    படம், இந்த வகையில் சமநிலையில் இல்லை.

    கிறித்துவப் பெண், இந்துவைக் காதலித்துத் திருமணம் செய்வதும் இந்த இந்து அப்பாவும் மகனும் முஸ்லிம் வீட்டுக்குப் போய்த் தங்குவதும் இயல்பாக உள்ளன. இதிலும் கிறித்துவப் பெண், தம் கணவரைத் தம் வீட்டார் சொல்வது போல் சாத்தானே என அழைப்பது இயல்பாக இல்லை.

    படத்தில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. நல்ல விஷயத்துக்கு அடம் பிடியுங்கள். நீங்கள் அடம் பிடித்தால், உங்கள் அப்பாவின் புகைப் பழக்கத்தை விடச் செய்யலாம் என வழிகாட்டியது நன்று. சிறுவன் அன்பு துணிச்சலாக நீச்சல் அடிப்பதும் டிராக்டரை நிறுத்தி லிப்ட் கேட்பதும் புதிய நண்பர்களைப் பெறுவதும் புதிய விளையாட்டுகளைக் கற்பதும் சிறப்பாகக் காட்டப்பட்டு உள்ளன.

    மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையில், 11 பாடல்கள், படத்தில் இடம் பெற்றுள்ளன. பாடலுக்குத் தேர்ந்தெடுத்த சூழ்நிலைகளும் அதற்கு எழுதிய வரிகளும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால், பின்னணி இசையிலும் சூழலுக்கு ஏற்ற மனநிலைக்குப் படம் பார்ப்பவர்களைக் கொண்டு வருவதிலும் இசையமப்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

    மாணவர்களிடம் திரைப்படம் செலுத்தக்கூடிய தாக்கம் மிகப் பெரியது. மாணவர்கள் படம் பார்க்கும்போது என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற கண்ணோட்டம், இயக்குநருக்குத் தேவை.

    ஊர் சுற்றுங்கள், உலகம் சுற்றுங்கள், புதிய இடங்களுக்குச் செல்லுங்கள், புதியவர்களைச் சந்தியுங்கள் என்பதே இயக்குநர் ராம் சொல்ல வந்த செய்தி. அவரது அனுபவத்திற்கு அவர் இன்னமும் சிறப்பாகப் பாத்திரங்களைப் படைத்திருக்கலாம். படத்தை எடுத்திருக்கலாம்.

    பறந்து போ – இன்னும் பறக்க வேண்டும்.

    Share
  • 3 BHK – திரை விமர்சனம்

    3 BHK – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்
    3 BHK திரைப்படத்தை இன்று பார்த்தேன். படத்தின் தொடக்கத்தில் காசா கிராண்டு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். இது வழக்கமானது தானே என்று நினைத்தால், இந்த ஒட்டுமொத்தப் படமும் காசா கிராண்டுக்கும் அது போன்ற இதர ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய விளம்பரப் படமாக அமைந்துள்ளது.
    வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கான எல்லாத் தூண்டில்களும் வலைகளும் சரியாக வீசப்பட்டுள்ளன. வாடகை வீட்டில் உள்ள சிக்கல்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் உள்ள கட்டுப்பாடுகள், போதாமைகள், சிக்கல்கள் அனைத்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. தண்ணீரை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடங்கி, மழைக் காலத்தில் வீட்டில் தண்ணீர் புகுந்துவிடுவது வரை. இதற்கு ஒரே தீர்வு, சொந்த வீடு வாங்க வேண்டும் (சொந்த வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது என்பது தனிக்கதை).
    சொந்த வீடு வாங்குவோருக்கான அடுத்த தூண்டில், இந்த இடம் பெரிய அளவில் வளரும். உங்கள் முதலீடு பல மடங்கு உயரும் என்பது. இதைப் படிப்படியாகப் படத்தில் காட்டுகிறார்கள். 2006க்கு முன்பு ஏழரை லட்ச வீடு, பிறகு பதினைந்து லட்சமாகி, அது பிறகு இருபத்தைந்து லட்சமாக உயருகிறது. இப்போது எவ்வளவு லட்சம் என்பதைச் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை மனத்தளவில் இந்த விலைக்குத் தயார் செய்வதற்கு இந்த முந்தைய விலை விவரம் உதவுகிறது.
    கடன் வாங்காமல் வீடு வாங்க முடியாது என்பது படத்தின் அடுத்த மையக் கருத்து. இது வசனமாகவே வருகிறது. எனவே கடன் வாங்கத் தயங்குபவர்களை அதிலிருந்து வெளிவந்து கடன் வாங்கத் தூண்டுகிறார்கள்.
    வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்பதை ஏதோ பெரிய வெற்றி என்பதைப் போல், பல முறைகள், பல காட்சிகளில் காட்டுகிறார்கள். வீட்டுக் கடன் அளிப்பவர்கள், உரிய சான்றுகள் இருந்தால் மட்டுமே அளிப்பார்கள். இது முழுவதும் வணிகம். இதில் குடும்பக் கண்ணீருக்கு எல்லாம் இடமில்லை. வருவாய்ச் சான்று உள்பட வங்கி கேட்கும் சான்றுகள் உங்களிடம் இருந்தால் கடன் கிடைக்கும். இல்லை என்றால் இல்லை. இதற்கு எல்லாம் ரொம்ப உணர்ச்சிவசப்படக் கூடாது. இப்போது நிலையான வருவாய் இல்லாவிட்டாலும், அதிக வட்டிக்கு வீட்டுக் கடன் கொடுக்கப் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறி, வட்டி வருவாய் தான். அப்படியே உங்களால் கடன் கொடுக்க முடியாவிட்டால், வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட்டுவிடுவார்கள். எனவே, வீட்டுக் கடனால் வங்கிகளுக்கோ நிதி நிறுவனங்களுக்கோ பெரிய இழப்பு எதுவும் கிடையாது; லாபமே அதிகம்.
    சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள், புறநகரில், சற்று தூரத்தில், சிறு நகரங்களில், கிராமங்களில் மனையாக வாங்கி வீடு கட்டலாம்; தனி வீடும் வாங்கலாம். இந்த வாய்ப்புகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் அடுக்குமாடி வீட்டை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு காட்சிகள் அமைந்துள்ளன. இது அடுக்குமாடி நிறுவனங்களுக்கே சாதகமானது.
    படத்தின் நிறைவுக் காட்சியில், சித்தார்த் வாங்கும் சொந்த வீடும் காசா கிராண்டு வீடாக இருப்பது தற்செயலானது இல்லை.
    அந்த வீட்டைப் பார்க்க வரும் வீட்டுத் தரகர் யோகி பாபு அதன் சுவரைத் தடவிப் பார்த்து, தரமாகத்தான் கட்டியிருக்கிறார்கள், உங்கள் அப்பாவைப் போல என்று சொல்வதும் தற்செயலானது இல்லை.
    படம் பார்க்கும் ரசிகர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் உள்நோக்கத்துடன் இந்தப் படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார்கள். இதற்குள் கச்சிதமான குடும்பக் கதையை, அதன் உணர்ச்சிகரமான தருணங்களோடு, ஆசைகளோடு கனவுகளோடு காட்சிப்படுத்தி இருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
    படத்தில் நடித்துள்ள சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்பட அனைவரும் இது விளம்பரப் படம் இல்லை; உண்மையான கதை என்ற உணர்வை ஏற்படுத்தும் படியாகவே நடித்திருக்கிறார்கள்.
    அடுக்குமாடி வீட்டின் சிக்கல்களை, வீட்டுக் கடன் வாங்குவதன் சிக்கல்களை இன்னொருவர் இன்னொரு படமாகத் தயாரிக்கலாம்.
    Share
  • விடுதலை 1 & 2 – திரை விமர்சனம்

    விடுதலை 1 & 2 – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தேன். பொதுவுடைமைக் கட்சியின் சித்தாந்தப் பிடிப்பையும் தமிழர் விடுதலைப் படையைப் பற்றியும் அதை நடத்திய விஜய் சேதுபதி உள்ளிட்ட தோழர்களைப் பற்றியும் அழித்தொழிப்பு வரலாற்றையும் தெரிந்துகொள்ள முடிந்தது. இவற்றை விட, காவல் துறையில் உள்ளே போட்டி, பொறாமை, அதிகார அடுக்குகள், விசாரணை என்ற பெயரில் நிகழ்த்திய கொடூரங்கள், போராளிகளுடன் சண்டையிடும்போது சகோதரக் காவலர்களையே இரகசியமாகக் கொன்றது, தனக்குப் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சரணடைய வந்தவரையே சுட்டுக் கொன்றது, மனிதர்களைக் கொன்றதை விட அறம் கொன்ற நிகழ்வுகளை அதிகமாக அறிய முடிந்தது.

    சூரியின் காதலியாக நடித்த பவானி ஸ்ரீ (தமிழரசி), முதல் பாகத்தின் இறுதியில், காவல் துறையின் நிர்வாண விசாரணையில் உண்மையை ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என இரண்டாம் பாகத்தில் எங்கும் காட்டவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட சூரி, நான் தமிழரசியுடன் எங்காவது போய் வாழ்ந்துக்கிறேன் என்கிறார். அப்படியானால், அவரைக் காவல் துறை விடுவித்துவிட்டதா?

    சுயநலத் தலைவர்கள், அவர்களின் நலனுக்காக உழைக்கும் அதிகாரிகள், இவர்கள் இணைந்து சுரங்கத் திட்டத்துக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி, இதை எதிர்க்கும் அனைவரையும் கொன்று சாய்க்கிறார்கள். இந்தத் தலைவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றுவதே நியாயமான காவலர்களுக்கும் கடமை ஆகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் அற வீழ்ச்சியின், அதிகார துஷ்பிரயோகத்தின், அரச பயங்கரவாதத்தின் களமாக மாறி நிற்பதைக் கனத்த நெஞ்சத்துடன் காண்கின்றோம்.

    சூரி, விஜய் சேதுபதி, கிஷோர், ராஜிவ் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பு மிகச் சிறப்பு. முக்கியமாக, விஜய் சேதுபதியின் உடல்மொழியும் துணிச்சலும் தலைமைத்துவமும் அபாரம். இந்தப் படத்துக்காக அவரைத் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன். இளையராஜாவின் இசை சிறப்பு. இயக்குநர் வெற்றி மாறன், தனது அறச்சீற்றத்தைக் கலாப்பூர்வமாகத் தொடர்ந்து முன்வைக்கிறார். போராடியவர்களின் நியாயத்தைக் காட்டுவதோடு, அநியாயம் செய்தவர்களுக்கு என்ன ஆகிறது என்பதையும் அடுத்தடுத்த படங்களில் அவர் காட்ட வேண்டும்.

    #viduthalai #viduthalai1 #viduthalai2 #soori #vijaysethupathi #vetrimaaran

    Share
  • டிரான்ஸ் – திரை விமர்சனம்

    டிரான்ஸ் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    மிகத் துணிச்சலான படம், டிரான்ஸ் (மலையாளம்). கிறித்துவ மதப் பிரசாரகர்களின் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களின் பின்னணியை, உண்மை நிலையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அமேசான் பிரைமில் கிடைக்கிறது.

    நாயகன் பஹத் பாசில், அபாரமாக நடித்திருக்கிறார். சுய முன்னேற்றப் பயிற்சியாளரான அவர், கிறித்துவ மத போதகராக எப்படி மாற்றப்படுகிறார், எப்படியெல்லாம் பயிற்சி அளிக்கப்படுகிறது, மக்கள் எப்படி நம்ப வைக்கப்படுகிறார்கள் எனத் தத்ரூபமாகச் சொல்கிறார்கள். உச்சஸ்தாயியில் அல்லேலுயா எனக் கத்துவது, முடவர்களை நடக்க வைப்பது, பார்வையிழந்தவர்களைப் பார்க்க வைப்பது, மக்களை எழுச்சி கொள்ள வைப்பது என ஒவ்வொன்றிலும் பஹத் பாசில் கலக்கியிருக்கிறார்.

    இந்தக் கூட்டங்களை நடத்துவோர், கார்ப்பரேட் பாணியில் எப்படி நடத்துகிறார்கள் என்பதை, நன்கொடை திரட்டுவதை, புனித நீர் என்று புட்டியில் அடைத்து விற்பதைப் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார்கள். மதம் மிகப் பெரிய வணிகப் பொருளாக மாறியிருப்பதை, மத நம்பிக்கையாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைத் துணிச்சலாக முன்வைத்திருக்கிறார்கள். அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் படம் செல்கிறது.

    கதை எழுதிய வின்சென்ட் வடக்கன், தயாரித்து இயக்கிய அன்வர் ரஷீத் இருவரின் துணிச்சலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்கள், விழிப்புணர்வு பெற வேண்டும்.

    Share
  • புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா

    புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா

    அண்ணாகண்ணன்

    புஷ்பா படத்தில் நாயகன், செம்மரங்களை வெட்டிக் கடத்திக் கோடிகளைக் குவிக்கிறான். மட்கா படத்தில் நாயகன், சூதாட்டத்தின் மூலம் பெரும் பணம் குவித்து, துபாய்க்குத் தப்பிச் செல்கிறான். லக்கி பாஸ்கரில் நாயகன், பங்குச் சந்தையில் பணம் குவித்து, அமெரிக்காவில் செட்டில் ஆகிறான்.

    இவை மூன்றும் தெலுங்குப் படங்கள். ஒரே காலத்தில் வெளிவந்தவை. இவற்றில் குற்றவாளிகளே நாயகர்கள். குற்றங்களில் படிப்படியாக முன்னேறி, கோடிகளைக் குவிக்கிறார்கள். தந்திரமாகத் தப்பிச் செல்கிறார்கள். இவர்களுடன் ஒத்துழைத்தவர்களும் பணம் குவிக்கிறார்கள். எதிர்த்தவர்கள் அழிக்கப்படுகிறார்கள். குறுக்குவழியில் வேகமாக ஜெயிக்கலாம். தண்டனையிலிருந்து தப்பித்தும் விடலாம் என அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.

    இவை இந்திய மொழிகள் பலவற்றில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானவர்கள் பார்த்துள்ளார்கள். இவற்றைப் பார்ப்பவர்கள் மனத்தில் இவை என்ன சிந்தனையை விதைக்கும்?

    #pushpa #pushpa2 #luckybaskhar #matka

    Share
  • நந்தன் திரை விமர்சனம்

    நந்தன் திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    நந்தன் திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்தேன். வணங்கான்குடி என்ற ஊராட்சியின் தலைவர் பதவியை மேல்சாதித் தலைவர் ஒருவரே மீண்டும் மீண்டும் வகிக்கிறார். அந்தத் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்த பிறகு, தாழ்த்தப்பட்ட ஒருவரே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற நிலை உருவாகிறது. தன் தீவிர விசுவாசியை அந்தப் பதவியில் நிறுத்தி ஜெயிக்க வைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படம் துணிவாக முன்வைக்கிறது.

    தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அவலங்களை, அவர்கள் சந்திக்கும் கொடுமைகளை, தனித் தனிச் சுடுகாடு இருப்பதை, அடிமைகளாக நடத்தப்படுவதை நெஞ்சை அறுக்கும் வகையில் காட்டியிருக்கிறார்கள். இன்னும் இப்படியெல்லாம் நடக்கிறதா எனக் கேட்பவர்களின் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று காட்டத் தயார் என அவர் திரையில் காட்டியது, வலிமையான வாக்கியம்.

    திரைப்படம் முடிந்த பிறகு, ஊராட்சித் தலைவர்கள் பலரும் திரையில் தோன்றி, தங்கள் அனுபவத்தைச் சொல்வது, அழுத்தமாக உள்ளது. இந்தப் படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று வெளிக்கொணர்ந்த இரா.சரவணன், பெரும் பாராட்டு உரியவர்.

    காலத்துக்கும் நீங்க எங்க காலுக்குக் கீழ தான்டா என்ற ஆதிக்கவாதிகளின் குரல் ஒலிக்கும்போது, (தாழ்த்தப்பட்ட) நாயகர்களின் செருப்பின் அடிப்பாகம், திரை முழுவதும் வருமாறு காட்டியிருப்பது, இயக்குநரின் முத்திரை.

    அதிகாரத்துக்கு வா. அதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அதிகாரத்துக்கு வந்தாலும் இங்கே பல பேரால நிமிரக் கூட முடியலை.

    இது, படத்தில் இடம்பெறும் ஒரு வசனம். இதுவே படத்தின் சாரமாகவும் இருக்கிறது.

    ஆதிக்க சாதித் தலைவராக நடித்துள்ள பாலாஜி சக்திவேலும் அவரது விசுவாசியாக அம்பேத்குமார் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமாரும் வட்டார வளர்ச்சி அலுவலராக நடித்துள்ள சமுத்திரக்கனியும் தத்ரூபமாக நடித்துள்ளார்கள்.

    சசிகுமாரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்துவிட்டு வரும் பாலாஜி சக்திவேலை அவர் அம்மா ஒரு கேள்வி கேட்கிறார். அவன் பலத்துக்கு உன்னை அடிக்கிறதுக்கு என்னேரம் ஆகும்? என்ற அவரது கேள்வி, முக்கியமானது. உடல் வலிமையை முன்னிறுத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் படத்தைக் கொண்டு செல்லாமல், ஜனநாயக ரீதியில் படத்தை நகர்த்திய இயக்குநருக்குப் பாராட்டுகள். மகாத்மா காந்தி, இந்த வழிமுறையையே பின்பற்றினார்.

    அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதையே மிகப் பெரிய இலக்காகக் கட்டமைக்கிறார்கள். அதுவே எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு என்பது எத்தகைய மாயை என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். அப்படியானால் எது தீர்வு என்பதை இன்னும் வெளிப்படையாக, தெளிவாக, அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.

    ஊரை விட்டு விரட்டப்பட்ட பிறகு, மகனுடைய கேள்விக்கு, சசிகுமாரின் மனைவி பதில் சொல்கிறார். நமக்குன்னு ஒரு வீடு இருந்திருந்தா யார் நம்மைத் துரத்தியிருக்க முடியும்? ஒரு குழி இடத்தைச் சம்பாரிக்கலேன்னா இப்படி ஊர் ஊரா ஓடிக்கிட்டே தான் இருக்கணும்.

    நிலத்துக்கு, வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக ஆனால், நம்மைத் துரத்த முடியாது என்பது ஒரு தெளிவான செய்தி. தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதார வலிமை அடைந்து, நில உரிமை பெற வேண்டும். அத்துடன், கூட்டாக நின்று அரசியல் வலிமை பெற வேண்டும்.

    ஆனால், எதிர்த்துக் கேள்வி கேட்பவனை லாரியை ஏற்றிக் கொல்லும்போது என்ன செய்வது? சமூக மதிப்பைப் பெறுவதற்கு என்ன செய்வது? உரிமை மறுக்கப்படும்போது என்ன செய்வது? அச்சுறுத்தப்படும்போது என்ன செய்வது? ஏமாற்றப்படும்போது என்ன செய்வது? ஒரே சமுதாய மக்களிடம் பிளவு ஏற்படுத்தி, அவர்களின் வாக்கு வலிமையைப் பிரிக்கும்போது என்ன செய்வது? யாரின் பின்னால் அணி திரள்வது? எந்தக் கூட்டணியில் நிற்பது? எந்தக் கோரிக்கைகளை முன்வைப்பது? யார் நமக்கு நன்மை செய்வார்? இந்தக் கேள்விகள் ஓயப் போவதில்லை. நம் தேடலும் தான்.

    Share
  • ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

    ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்ற வலைத்தொடரை, அமேசான் பிரைமில் பார்த்தேன். இது சிறுவர்களை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட வலைத்தொடர். சிறுவர்களுக்கான வலைத்தொடர் எனச் சொல்ல முடியாது.

    பள்ளிச் சிறுவர்கள், துப்பாக்கியால் சுடுவதும் பிணத்தை மறைத்து வைப்பதும் சாட்சியங்களை அழிப்பதும் பிணத்தைக் குழிதோண்டிப் புதைப்பதும் சொந்த அப்பாவையே தலையில் அடித்து அறையில் கட்டிப் போட்டு அடைத்து வைப்பதும் கார் ஓட்டுவதும் கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரிய குற்றங்கள்.

    பள்ளி ஆய்வகத்திலிருந்து குளோரோபார்ம் எடுத்து வந்து, மயங்க வைப்பது ஓரளவு லாஜிக்குடன் இருக்கிறது. ஆனால், திருடனிடம் கைப்பற்றிய நகைகளைக் காவல் துறை மூலம் உரியவர்களிடம் கொண்டு சேர்க்காமல், வெள்ள நிவாரணத்துக்குச் சேர்ப்பது தவறு.

    ஒரு தவறு நடந்தால், உரிய வழியில் தீர்க்க வேண்டுமே தவிர, குறுக்கு வழிகளில் தீர்க்க முயலக் கூடாது. அப்படி முயன்றால் அதற்கு உரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றாவது காட்டியிருக்கலாம். இதில் இறுதியில் பிள்ளைகள் எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் அவரவர் இயல்பாகப் படிக்கிறார்கள்.

    இதைப் பார்க்கும் சிறுவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு தவறுகள் செய்தாலும் இறுதியில் எதுவுமே நடவாதது போல் தப்பிவிடலாம் என நினைப்பார்களா? மாட்டார்களா?

    சிறுவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும். சாகசங்கள் கூடச் செய்யலாம். ஆனால், அறத்தோடு கூடிய நெறிமுறைகளுடன் வளர வேண்டும். தவறுகளைக் காணும்போது முறையாகப் புகார் தெரிவிக்க வேண்டும். குற்றவாளிகளைச் சிக்க வைக்கலாம். அதே நேரம் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாங்களே தவறு செய்யும் பட்சத்தில் அதை ஒப்புக்கொண்டு தண்டனைகளை ஏற்க வேண்டும். அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் திருந்த வேண்டும். இந்த அடிப்படையோடு எடுத்திருந்தால், படம் வலிமையாக இருந்திருக்கும்.

    காட்சி ஊடகங்கள் அதிகத் தாக்கம் உள்ளவை. அவ்வாறே செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுபவை. அதிலும் சிறுவர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள், வலைத்தொடர்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் இவ்வாறு செய்வது தவறில்லை என நினைத்தால், இதே போல் எங்காவது செய்து பார்க்க நினைத்தால், செய்தாலும் தப்பிவிடலாம் என நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். வலைத்தொடரை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜ், இவற்றை யோசிக்கவில்லையா?

    சிறுவர்கள் ஐவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் இரட்டை முகத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார். காவல் துறை உதவி ஆய்வாளராக வரும் நந்தா துரைராஜ், சிறுவனுக்கு அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சிறப்பாகக் காட்டுகிறார். கதை நேர்த்தியாக அமைந்திருந்தால், வலைத்தொடர் இன்னும் வலிமையாக, வசீகரமாக இருந்திருக்கும்.

    Share
  • லப்பர் பந்து – திரை விமர்சனம்

    லப்பர் பந்து – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    லப்பர் பந்து, ஒரு நல்ல முயற்சி. ஆனால், இன்னும் சிறந்த முயற்சியாக வந்திருக்கலாம்.

    விளையாட்டுத் துறைகளில் ஆர்வமாக ஈடுபடுவோர் பலரும் அதில் வெற்றி பெற்று, விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற வேண்டும் என்பதைத் துணை இலக்காக இல்லாமல், முதல் இலக்காகவே வைத்திருப்பர். ஆனால், வேறு பொருளாதார இலக்குகள் ஏதுமின்றி, நடுத்தர வயதினை எட்டிய பிறகும் விளையாடும் ஆர்வத்துக்காகவே விளையாடுவோர் பலர். இதற்காக, ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, அணி நடத்துவோரும் போட்டி நடத்துவோரும் பற்பல ஊர்களில் உண்டு. இந்த உள்ளூர்க் கிரிக்கெட்டை விறுவிறுப்பாகக் காட்டுவதில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெற்றி அடைந்திருக்கிறார்.

    இத்தகைய போட்டிகளில் ஒரு சிக்கல் இருக்கிறது. விளையாட்டுத் திறமையும் இருக்க வேண்டும், அதை நேசிக்கவும் வேண்டும். இதையும் தாண்டி, விளையாட்டு உணர்வு என்பது அடிப்படையாக இருக்க வேண்டும். அடுத்தவர் திறமையை மதிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாராட்டி, ஊக்கம் கொடுத்து, தட்டிக் கொடுத்துப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் இது குறைவாகவே இருக்கிறது.

    விளையாட்டு மைதானம், கெத்து காட்டுகின்ற இடமில்லை. திறமையைக் காட்டுகின்ற களம். இங்கே நான் பெரியவனா, நீ பெரியவனா என ஈகோ காட்ட வேண்டிய தேவையில்லை. இதில் நான், என் அணி, என் கிரிக்கெட் கிளப் என வீரர்களின் அகந்தையே மேலோங்கி இருக்கிறது. ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி, கேலி செய்து, சீண்டி, வம்பிழுத்து, சண்டை போடுவது தேவையே இல்லாதது. அப்படியே நடந்தாலும் இயக்குநர் அதற்கு முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லை.

    கெத்து தினேஷ், உள்ளூர் அணிகளில் பெரிய கிரிக்கெட் வீரர். லப்பர் பந்துக் களங்களில் வாகை சூடுகிறார். ஆனால், கார்க் பந்து வைத்து விளையாடும் போது, அவரால் ஜொலிக்க முடியவில்லை. கடைசியில் இறுதிப் போட்டியில் குறிமூடி, கால்மட்டை, கையுறை போன்ற முறையான பாதுகாப்பு ஏதுமின்றி, கார்க் பந்தினை எதிர்கொண்டு விளையாடி 94 ஓட்டங்கள் எடுக்கிறார். இத்தனை ஆண்டுகளாகக் கிரிக்கெட் ஆடும் தினேஷ், இத்தகைய தொழில்முறை விளையாட்டுக் களத்துக்கு ஏன் தயாராகவில்லை? அவருக்கு அதன் மீது அச்சமா? அவரிடம் இதற்கான திறமை இல்லையா? அப்படி விளையாடி அடிபட்டால் என்னாகும் என்று அவருக்குத் தெரியாதா? இதைப் பற்றிய எந்த எச்சரிக்கையும் இல்லாமல், வெறும் கெத்துக்காக ஆடலாமா? தினேஷ் உடன் விளையாடுபவர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி, பயிற்சி அளித்திருக்கலாம். நவீன விளையாட்டுக்கு இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் அரிய வாய்ப்பினை இயக்குநர் இங்கே தவறவிட்டிருக்கிறார்.

    ஓட்டப் பந்தயங்களில் ஆப்பிரிக்க வீரர்கள் முன்னர் வெறுங்காலில் விரைவாக ஓடி எளிதாக வென்றனர். ஆனால், புதையணி அணிந்து வெற்றி பெற அவர்கள் போராட வேண்டியிருந்தது. வெறுங்காலில் களிமண் தரையில் விளையாடியவர்கள், புதையணி அணிந்து உள்ளரங்கக் களத்தில் ஆடுவதற்குக் கடும் பயிற்சி தேவைப்பட்டது. உள்ளூர் அணி வீரர்களை இப்படியாக ஆற்றுப்படுத்தி, ஊக்குவித்திருக்கலாம்.

    அடுத்து, உள்ளூர் அணிகளுக்கு ஆடும் பலரும், நாள்முழுவதும் அதே கதி எனக் கிடப்பர். வேலைக்குச் செல்வதையோ தொழில் நடத்துவதையோ செய்யாமல், குடும்பத்தைக் கவனிக்காமல், பொறுப்புகளைச் செய்யாமல் இருப்பார்கள். இதனால் குடும்பத்தினர், விளையாடப் போகக் கூடாது என எதிர்ப்பார்கள். அவர்களை ஏமாற்றி இவர்கள் விளையாடச் செல்வார்கள். இந்தப் பகுதியை இயக்குநர் நன்றாகக் காட்டியிருக்கிறார்.

    தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகா, பிரமாதமாகச் செய்திருக்கிறார். சிறுவர்களிடமிருந்து தவறி வந்த லப்பர் பந்தினை அரிவாள் மணையில் இரண்டாக நறுக்கி எறிவது, அவரது கோபத்தை நன்றாகக் காட்டுகிறது. தினேஷின் மகளாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அழகாக, அருமையாக நடித்திருக்கிறார். அவரது காதலனாக வரும் ஹரிஷ் கல்யாண், கவனமாக நடித்திருக்கிறார். இவர் சற்றே அடக்கி வாசித்தது போல் இருக்கிறது. ஆண்கள் அணியில் ஒற்றைப் பெண்ணாக அகிலாவை விளையாட வைத்த இயக்குநருக்குப் பாராட்டு. அட்டகத்தி தினேஷ், இதில் கெத்து தினேஷாக ஜமாய்த்திருக்கிறார். பிரிந்து சென்ற மனைவியின் சேலையில் அவர் படுத்துத் தூங்கும் காட்சி மிக அழகு. நண்பர்களாக வரும் பால சரவணனும் காளி வெங்கட்டும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

    படத்தின் இறுதிக்கட்டக் காட்சி, மிகுந்த ஏமாற்றம் அளித்தது. விளையாட்டை முதன்மையாக வைத்துள்ள படத்தில், ஜாதியைப் புகுத்தியது முதல் தவறு. எதிரணியில் பாலய்யா என்ற பட்டியலின வீரர் ஆடுவதற்காக, அந்த அணியே ஜெயிக்கட்டும் என விட்டுத் தருவது போல் காட்டியது மிகத் தவறு. அவர் ஜெயித்ததால், அவர் ஜாதியில் அவர் போல் இன்னும் சிலர் அணியில் இடம் பிடித்துள்ளனர் எனக் காட்டியது, ஜாதியை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. விட்டுத் தந்துதான் அவர்கள் ஜெயிக்க வேண்டும் எனக் காட்டியது, அவர்களின் திறமையை மட்டம் தட்டியதாகவும் அமைந்துவிட்டது. இயக்குநர் சறுக்கிய இடம், இதுதான்.

    வெட்டி வீறாப்பு, வாய்ச்சவடால், கெத்து – இவற்றையெல்லாம் விளையாட்டுத் துறையில் அகற்ற வேண்டும். மாறாக, விளையாட்டு நுணுக்கம், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நம் உள்ளூர் அணிகள், சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களைத் தயார் செய்யும் களங்களாக இருக்க வேண்டும். சாதிக்கும் ஊக்கத்தைத் தருபவையாக இருக்க வேண்டும். நம் துரதிருஷ்டம், குடும்ப உணர்வுகளில், ஈகோ மோதல்களில் சிக்கி, படம் எங்கோ வழி தவறிச் சென்றுவிட்டது.

    தொலைந்து போன அந்த லப்பர் பந்தினை யாராவது தேடிக் கண்டுபிடியுங்கள். அடுத்த பந்தினை வீச்சுடன் வீசுவோம்.

    Share
  • வேட்டையன் – திரை விமர்சனம்

    வேட்டையன் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    வேட்டையன் படத்தில் ரஜினியின் செயல் வேகம் சிறப்பாக உள்ளது. 73 வயதுள்ள அவர், 58 வயது காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரவுடிகளையும் போக்கிரிகளையும் சுட்டுத் தள்ளி, என்கவுன்டர் புலியாகப் புகழ் பெறுகிறார். அவரது உடல்வாகுக்கு ஏற்ப, சண்டைக் காட்சிகளையும் நடனக் காட்சிகளையும் அமைத்துள்ளது நன்று. முதிய வயதிலும் துடிப்பாக இயங்க முடியும் எனக் காட்டிய வகையில், ரஜினி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தளர்ந்திருக்கும் முதியவர்கள், இவரிடமிருந்து உத்வேகம் பெற முடியும்.

    படத்தின் முதல் சிக்கல், நீட்டுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வலுவாக இல்லை என்பதே. எந்தப் பயிற்சி நிறுவனமும் உன்னைத் தேர்வில் வெற்றி பெற வைக்கிறேன், மருத்துவர் ஆக்கிக் காட்டுகிறேன், வேலை வாங்கித் தருகிறேன் என்று எல்லாம் சொல்வதில்லை. தேர்வில் வெற்றி பெறப் பயிற்சி அளிப்பதும் திறன்களை வளர்க்க உதவுவதும் மட்டுமே அவர்கள் பணி. மற்றபடி படித்துத் தேர்வில் பெறுவது, மாணவர்களின் கடமை. இதை விதிமுறைகளில் தெளிவாக எழுதியிருப்பார்கள். இதற்கென்றே சட்ட நிபுணர் குழுவை வைத்திருப்பார்கள்.

    மாணவர்களிடமிருந்து அவர்கள் பெறும் கட்டணம், பயிற்சி அளிப்பதற்கே. மாணவர்களுக்கு ஆசை காட்டுவது எல்லாம் வாய்மொழியாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் எத்தனைப் பேர் புகார் அளித்தாலும் சட்டரீதியாக அதை அந்த நிறுவனம் எளிதாகக் கடந்துவிடும். இந்த இடத்தில் BUDS Act (The Banning of Unregulated Deposit Schemes Act, 2019) செல்லுபடி ஆகாது. இதை வைத்து, நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடியாது. அப்படிச் செய்வதானால், தங்கள் சாதனைகளை விளம்பரப்படுத்தும் எல்லாப் பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் இத்தகைய வழக்குகளைத் தொடுக்க முடியும்.

    பயிற்சி நிறுவனம் கொடுத்த கைக்கணினிகள் வேலை செய்யவில்லை என்றால், அது வேறு வகையான புகார். அதை நிறுவனம், வேறு விதமாகச் சமாளிக்க வாய்ப்பு உண்டு.

    தங்கள் மீது புகார் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபாசமாகப் படம் எடுப்பதையும் கஞ்சா புகைப்பதையும் வீடியோ எடுத்து ஒரு நிறுவனம் பரப்பும் என்பது மிகையான கற்பனை. இதை வைரலாகப் பரவச் செய்தாலும் அந்த நிறுவனம் மீது புகார் கொடுப்பதை இவை எப்படித் தடுக்கும் என்பது புரியவில்லை.

    அரசுப் பள்ளி ஆசிரியையாக வரும் துஷாரா விஜயனைக் கொன்றது பயிற்சி நிறுவனத் தலைவர் ராணா டகுபதி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. பிறகு எப்படி அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தார்கள்? நீதிமன்றம் எந்த அடிப்படையில் சிறைத் தண்டனை அளிக்கிறது என்பதும் புரியவில்லை.

    துஷாரா விஜயன், குணா உடன் சேர்ந்து சேகரித்த ஆதாரங்களை உடனே இணையத்தில் ஏற்றி, ரஜினியின் மின்னஞ்சலுக்கு அடுத்த நிமிடமே கிடைக்கச் செய்திருக்கலாம். அந்த வன்தட்டை எதற்காகப் பார்சலாக அனுப்ப வேண்டும்? இத்தனைக்கும் குணா, கணிப்பொறி படித்தவர்.

    படத்தில் பலரைச் சுட்டுக் கொன்ற ரஜினி, ராணா டகுபதியை மட்டும் சிறையில் தள்ளுகிறார். உன்னைப் போன்ற பணக்காரர்களையும் சிறையில் தள்ள முடியும் என்று மக்களுக்குக் காட்டவே இப்படிச் செய்தேன் என்கிறார். இதற்கான காரணம், வலுவாக இல்லை.

    கடைசியில் ராணா டகுபதி தப்பித்துச் செல்லும் இடத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் ரஜினி. எப்படி? எந்தத் துப்பினைக் கொண்டு அவர் சரியாக அங்கே வந்து இறங்கினார் என்று காட்டவில்லை. கீழே அத்தனை அடியாட்கள் துப்பாக்கியுடன் காத்திருக்கும்போது, மேலிருந்து இறங்கும் ரஜினியின் ஹெலிகாப்டரை மேலேயே சுட்டு வீழ்த்தியிருக்கலாமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் உள்ளன. இன்னும் கச்சிதமாகச் செய்திருக்க வேண்டும்.

    அமிதாப் பச்சன், மனித உரிமை காக்கும் நீதிபதியாக இருந்தாலும் என்கவுன்டர் நிபுணர் ரஜினியிடம் மென்மையாக நடந்துகொள்கிறார். அவருக்கு ரகசியமாக உதவுகிறார். கடைசியாக, ரஜினியை என்கவுன்டருக்கு எதிராகப் பேச வைக்கிறார்.

    யூடியூபராக வரும் மஞ்சு வாரியர், கவர்கிறார். பகத் பாசில், ரசிக்கும்படி நடித்திருக்கிறார். காவல் துறைக்கு உதவத் தொடங்கிய பிறகும் கடைகளின் கியூ ஆர் கோடினை மாற்றி, அவர்களை ஏமாற்றும் விதமாகக் காட்டியிருக்க வேண்டாம். ரித்திகா சிங்கின் நடிப்பு நன்று.

    எல்லோருக்கும் சமமான கல்வி, சமமான சட்டம் என்ற நிலையை மெக்காலே கொண்டு வந்தார் எனச் சொல்கிறார். மெக்காலேவுக்குப் பிறகு தான் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடக்கிறது. அதை நிகழ்த்திய ரெஜினால்டு டையர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஆயினும் ஆங்கிலேய அரசு அவரை ஆதரித்ததுடன், அவருக்கு எந்தத் தண்டனையும் விதிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது, ரெஜினால்டு டையருக்குப் பொருந்தாதா? அவருக்கு அந்த அதிகாரத்தை அளித்தவர்களுக்குப் பொருந்தாதா? சட்டம் ஆளுக்கு ஏற்றபடி வளையும் என்பதற்குப் படத்தில் வரும் ராணா டகுபதியே சான்று இல்லையா?

    இயக்குநர் த.செ.ஞானவேல், நீட்டுக்கு எதிராகப் படம் எடுத்ததாகச் சொன்னால், அது தவறு. படம் மொத்தமும் ஒரு பயிற்சி நிறுவனத்துக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. மேலும், பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற வாதமே பலவீனமானது. இதை மீண்டும் மீண்டும் சொல்லி, மாணவர்களை நம்ப வைப்பது, மாணவர்களுக்குச் செய்யும் தீங்கு ஆகும். அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள் என்பதே உண்மை.

    நீட் எதிர்ப்புக் குழுக்களைக் குளிர்விக்க வேண்டும், அவர்களின் அரசியலை ஆதரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வசனங்களும் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. பகடையை உருட்ட வேண்டிய ரஜினி, தானே ஒரு பகடைக் காயாக உருண்டுகொண்டிருக்கிறார்.

    Share
  • கொட்டுக்காளி – திரை விமர்சனம்

    கொட்டுக்காளி – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    கொட்டுக்காளி – இந்த ஒன்றரை மணிநேரப் படத்தில் கடைசி 13 நிமிடங்கள் மட்டுமே கதை. இதற்கு முந்தைய 76 நிமிடங்களும் இந்த இடத்திற்கு வந்து சேருவதற்கான நீண்ட பயணத்தைச் சலிக்கச் சலிக்கக் காட்டியிருக்கிறார்கள்.

    பெண் வேற்றார் ஒருவரைக் காதலிக்கிறார் என்றால், அந்த வேற்றார் ஏதோ மருந்து மாயம் செய்து பெண்ணை வசப்படுத்தியுள்ளனர். அதனால் தான் அவள் நம் பேச்சைக் கேட்கவில்லை என அவள் குடும்பத்தினர் நினைக்கின்றனர்.

    மருந்து மாயத்தால் விளைந்த காதலைச் சாமியார் அழிக்கிறாராம். அந்த நினைவுகளே இல்லாமல் செய்துவிடுவாராம். அதன் பிறகு அவள் குடும்பத்தினர் சொல்லும் ஆணை விரும்பத் தொடங்கிவிடுவாளாம். இதற்காக வேறு ஒருவரை விரும்பும் அன்னா பென்னை இந்தச் சாமியாரிடம் அழைத்து வருகிறார்கள். அவளுக்குச் சூரியைத் திருமணம் முடிக்க வேண்டும் என்பது குடும்பத்தினர் விருப்பம்.

    இதை அந்தச் சாமியார் எப்படிச் செய்கிறார் என்று காட்டுகிறார்கள். பெண்ணின் முன்கழுத்து, பின்கழுத்து, வயிறு, அடிவயிறு, பின்னிடுப்பு என உடல் முழுவதும் அழுத்திப் பிடிக்கிறார். திருநீறு பூசித் தடவுகிறார். எலுமிச்சம் பழத்தை உச்சந்தலையில், கழுத்தில், தொப்புளில் வைக்கிறார். வாயில் குழல் வைத்து ஊதுகிறார். உச்சந்தலையில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேய்க்கிறார். கடைசியாக, சேவலைப் பலி கொடுக்கிறார். உங்கள் பெண்ணிடத்தில் இருந்த மருந்தை அகற்றிவிட்டேன். இனி நீங்கள் அடித்து விரட்டினாலும், இவள் உங்கள் காலடியில் கிடப்பாள் என்கிறார்.

    இவர் செய்வதைப் பார்த்தாலே இவர் போலி சாமியார் என்று தெரிகிறது. இதைப் பார்க்கும் சூரி, அன்னா பென்னை இவரிடத்தில் காட்ட வேண்டுமா என யோசிக்கும் இடத்தில் படம் நிறைவடைகிறது.

    போலி சாமியார் எனத் தலைப்பு வைத்து, இந்தப் படத்தை வேறு கோணத்தில் எடுத்திருக்கலாம். இவர் மருந்தை எடுத்த பெண்கள், உண்மையிலேயே தங்கள் காதலை மறந்துவிட்டார்களா என ஆராய்ந்திருக்கலாம். போலி சாமியாரின் தந்திரங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கலாம். காவல் துறையில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கலாம். இப்படியெல்லாம் செய்திருந்தால், சமூகத்துக்கும் இவற்றை நம்பும் மக்களுக்கும் எத்தகைய பயன் விளைந்திருக்கும் என யோசித்துப் பார்க்கலாம்.

    இவற்றையெல்லாம் செய்யாமல், முதல் 76 நிமிடங்கள் ஷேர் ஆட்டோவிலும் இருசக்கர வாகனங்களிலும் வளைந்து வளைந்து சென்றுகொண்டே இருப்பதைக் காட்டுகிறார்கள். இது சுவாரசியமாகவும் இல்லை. சமூகத்திற்குப் பயன் உள்ளதாகவும் இல்லை. வாழ்வியலைக் காட்டுகிறோம் என்றாலும் திரும்பத் திரும்ப ஒரே விதமான காட்சிகளை நீண்ட நேரம் காட்டுவது, நேயர்களுக்குச் சலிப்பையே தரும். இதன் மூலம் பல்லாயிரம் பேரின் நேரத்தை வீணடித்துவிட்டார், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் இதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறார்.

    கொட்டுக்காளி என்ற பெயர், நன்றாக இருக்கிறது. சேவல், இதில் ஒரு பாத்திரமாகவே உடன் வருகிறது. அன்னா பென், வெறித்த பார்வையோடு உணர்வுகளை அலட்டாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி இயல்பாக நடத்திருக்கிறார். ஆனால், காதல் பாடலை முணுமுணுத்த காரணத்துக்காக, அன்னா பென்னையும் உடன் வந்தவர்களையும் அவர் அடித்து வெளுப்பது, பலவீனமான காட்சி. அதற்கு உரிய காரண வலு, அதில் இல்லை.

    இதைக் கலைப் படம் என்பதைவிட, ஆர்வக் கோளாறு எனலாம்.

    Share
  • ஹடினெலன்டு – திரை விமர்சனம்

    ஹடினெலன்டு – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஹடினெலன்டு (Hadinelentu / Seventeeners) என்ற கன்னடப் படத்தைப் பார்த்தேன். 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவனும் மாணவியும் பள்ளி வகுப்பறையிலேயே உறவு கொண்டு, அதை அவர்களே நிகழ்படமாக எடுக்கிறார்கள். பிறகு அது இணையத்தில் கசிந்து பரவுகிறது. அதைத் தொடர்ந்து பள்ளியிலும் நீதிமன்றத்திலும் நடைபெறும் பரபரப்பான விசாரணைகளும் திருப்பங்களுமாகப் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.

    இதில் சாதி, வயது, சட்டங்கள், அணுகுமுறைகள் உள்ளிட்ட பலவும் ஒரு சம்பவத்தை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகின்றன என்பதை இயல்பாகக் காட்டியுள்ளார்கள்.

    படத்தின் தொடக்கத்தில் பள்ளி முடிந்ததும் ஒருவர் எல்லா வகுப்பறைகளையும் பூட்டுகிறார். பெண்மணி, வகுப்பறை வராண்டாக்களைப் பெருக்கித் தூண்மை செய்கிறார். மாணவனை அழைத்துக்கொண்டு மாணவி, ஒரு வகுப்பறையின் உள்ளே நுழைகிறார். புகுந்து கதவையும் ஜன்னலையும் மாணவியே உள்புறமாகச் சாத்துகிறார். தங்கள் பைகளை இறக்கி வைக்கிறார்கள். மாணவன், ஐ லவ் யூ என எழுதிய சங்கிலியை மாணவிக்குப் பரிசளிக்கிறார். அடுத்து, மாணவன் தன் ஆடைகளைக் களைய முயல்கிறார். அதை அந்தப் பெண்ணே தன் செல்பேசியில் வீடியோ எடுக்கத் தொடங்குகிறார். மாணவன் அந்தச் செல்பேசியைப் பறித்து, நீ முதலில் என்று அந்தப் பெண் உடை களைவதை வீடியோ எடுக்கிறார்.

    இப்போது இந்தக் காட்சியை நாம் ஆராயலாம்.

    படத்தின் பெரும்பகுதி நம்பகத்தன்மையுடனும் லாஜிக் எனப்படும் தருக்கத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. ஆனால், படத்தின் ஆதாரமான இந்தக் காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.

    மாணவி, அந்த மாணவனை அழைத்துக்கொண்டு செல்வது ஏன்? உறவு கொள்ளும் முயற்சியை மாணவி முன்னெடுக்கிறாரா? அவ்வளவு சகஜமாக, சாதாரணமாக வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை மூடுவது எனில், இது பழகிய இடமா? சிறிய அச்சமோ தயக்கமோ இல்லையே. ஏற்கெனவே இவ்வாறு செய்துள்ளார்களா? இதை மாணவி ஏன் வீடியோ எடுக்க வேண்டும்? இது திட்டமிட்ட செயலா? இந்த அறையை ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த அறையைப் பணியாளர்கள் பூட்டாதது ஏன்? மாணவர்கள் வெளியேறிச் செல்லும்போதும் பள்ளியில் யார் கண்ணிலும் படவில்லையா?

    இதில் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தேடினால், படத்தின் பலவீனம் புரியும். இந்த வீடியோ, இணையத்தில் வைரல் ஆகிறது. பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால், யாரும் இதைப் பற்றிக் கேட்கவில்லை. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம், காவல் துறை, நீதிமன்றம் உள்ளிட்டவை, இந்தக் கேள்விகளை நுணுக்கமாக எழுப்பவில்லை.

    தாங்கள் செய்யும் விளைவுகள் குறித்து, இதில் ஈடுபட்ட மாணவர்களுக்குத் தெரியாதா? இதை வீடியோ எடுப்பதும் பகிர்வதும் எத்தகைய சிக்கல்களைக் கொண்டு வரும் என்று அவர்களுக்குத் தெரியாதா? வீடியோ கசிந்தது ஒரு விபத்தாக இருக்கலாம். ஆனால், பெண் இயல்பிலேயே விழிப்புணர்வுடன் இருப்பவள். பட்டப் பகலில் உறவு கொள்வதை அவரே வீடியோ எடுக்கிறார். அல்லது அப்படி கேமரா எதிரில் உறவு கொள்ளச் சம்மதிக்கிறார் எனில் இது நம்பும்படியாகவா இருக்கிறது?

    படத்தின் முடிவிலும் ஒரு லாஜிக் சிக்கல் இருக்கிறது. மாணவன், தானே அதை ஒரு பேஸ்புக் நண்பருடன் பகிர்ந்ததாகச் சொல்லிவிட்டுப் பிறகு மறுக்கிறான். மாணவியின் வழக்கறிஞர், இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுகிறார். மாணவனின் பேஸ்புக் கணக்கை ஆராய்ந்தால் (அது நீக்கப்பட்டிருந்தாலும்) பகிர்ந்தாரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். இதை ஏன் அவர் செய்யவில்லை?

    படத்தின் மையச் சிக்கல், பதின் பருவத்தினர் உறவுகொள்வதையும் அதை வீடியோ எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இதில் ஈடுபடுவோரின் வயதே பிரதான சிக்கல் என்பதாகப் போய் முடிகிறது. கதை, வசனம் எழுதி இயக்கிய பிரித்வி கோனனூர், இந்தச் சிக்கல்களைத் தவிர்த்திருந்தால், வேறு வகையில் கையாண்டிருந்தால், இன்னும் சிறப்பாக இந்தப் படம் வந்திருக்கும்.

    எனினும், இது தரமான படம். பதின்ம வயது இளைஞர்களுக்கு இந்தப் படம், நல்ல பாடம் புகட்டும். ஷெர்லின், நீரஜ் மேத்யூ, ரேகா குட்லிகி, பவானி பிரகாஷ் உள்பட நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். எனவே தமிழிலும் இதர மொழிகளிலும் மொழிமாற்றி வெளியிடலாம்.

    முழுப் படமும் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இடைவெளியிலும் இறுதியிலும் கியூ ஆர் குறியீடுகள் காட்டப்படுகின்றன. வாய்ப்புள்ளவர்கள் நன்கொடை அளிக்கலாம்.

    Share
  • போட்டோகிராப் – திரை விமர்சனம்

    போட்டோகிராப் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    போட்டோகிராப் (Photograph) என்ற இந்திப் படத்தைப் பார்த்தேன். இப்படி ஒரு கவித்துவமான படத்தை, அண்மையில் நான் பார்க்கவில்லை. மும்பை கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சுற்றுலாப் பயணிகளைப் படமெடுத்துத் தரும் நிழற்படக் கலைஞர், நவாசுதீன் சித்திக். படமெடுத்து அங்கேயே அச்சிட்டுக் கொடுக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.30 வாங்குகிறார்.

    கேட் வே ஆப் இந்தியாவில் சான்யா மல்ஹோத்ரா நடக்கும்போது, அவரை உடனடிப் படம் எடுத்துத் தருகிறேன் என நவாசுதீன் சித்திக் பின்தொடர்ந்து கேட்கிறார். வேண்டாம் என்று சான்யா சொல்ல, இன்று நீங்கள் என்னிடம் படம் எடுத்தால், உங்கள் முகத்தில் விழும் சூரிய ஒளியையும் உங்கள் கூந்தலை இந்தக் காற்று கலைப்பதையும் பின்னொரு நாள் பார்க்கும்போது காண்பீர்கள் என்பார். இங்கே கேட்கும் அனைத்துக் குரல்களையும் அப்போது கேட்பீர்கள் என்பார். உடனே சான்யா சம்மதிக்கிறார். அவர் சி.ஏ. படிக்கும் மாணவி. சற்றே வசதியானவர். அவசரத்தில் நிழற்படத்துக்கு அந்த 30 ரூபாய் கொடுக்காமல் சென்றுவிடுகிறார்.

    நவாசுதீன் சித்திக்கின் பாட்டி, இவரைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி நச்சரிக்கிறார். மருந்து சாப்பிடவும் மறுக்கிறார். அவரைச் சமாதானம் செய்ய, பாட்டிக்கு இவர் ஒரு பொய்க் கடிதம் எழுதுகிறார். இங்கே நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். எனக்காக அவளை நீயே தேர்ந்தெடுத்தது போல் உணர்ந்தேன். அவள் கண்கள், கேள்விகளால் நிரம்பியிருந்தன. ஆனால், பதில்களாலும் நிரம்பியிருந்தன. அவள் புன்னகையைக் கண்டால், எல்லாத் துக்கமும் துயரமும் பறந்தோடிவிடும். நமது நிலத்தில் விழுந்த முதல் மழை, உனக்கு நினைவிருக்கிறதா? அதே போல் இருந்தது அவளது சிரிப்பு. அவளது பெயரும் அழகானது என எழுதுகிறார். அந்த நேரத்தில் தொலைவில் ஓ நூரி நூரி என ஒரு திரைப்படப் பாடல் ஒலிக்கிறது. எனவே, நூரி என்றே அவளுக்குப் பெயர் சூட்டிவிடுகிறார். பாட்டி, இவர்களைப் பார்க்க ஊரிலிருந்து வருகிறார்.

    பணம் கொடுக்காமல் சென்ற சான்யாவை நவாசுதீன் சித்திக் மீண்டும் சந்திக்கிறார். பாட்டிக்காக, தன் காதலியாக நடிக்க முடியுமா எனக் கேட்கிறார். சான்யா அதற்குச் சம்மதிக்கிறார். இவர்களை ஒருசேரப் படம் எடுக்குமாறு பாட்டி கேட்கிறார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரே தட்டில் ரசகுல்லாவும் குலாப் ஜாமூனும் இருப்பது போல் இருக்கிறது எனச் சொல்வது ருசிகரம். பாட்டி ஊரிலிருந்து வரும்போது உடன் வரும் கர்ப்பிணிப் பெண், ரயிலில் குழந்தை பெறுகிறாள். அவளுக்கு ரயில் மலர் எனப் பெயர் சூட்டினார்களாம். பாட்டி இரவெல்லாம் கண்விழித்திருந்து கோமதி நதி வரும்போது அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வீசி எறிந்தாளாம். இதையெல்லாம் பாட்டியே சொல்கிறார்.

    சான்யா இளம் வயதில் கெம்ப கோலா குடித்தது பிடிக்கும் என்கிறார். இப்போது உற்பத்தியை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது என்றாலும் நவாசுதீன் சித்திக், அந்த உற்பத்தியாளரைத் தேடிச் செல்கிறார். உன்னைப் போல் முன்னர் ஒருவர் தேடி வந்தார். அவருக்கு இந்த பார்முலாவை நான் கொடுத்தேன். அவர் வீட்டில் அதை இன்றும் தயாரிக்கிறார் என நினைக்கிறேன் என்கிறார். அந்த இன்னொருவரைத் தேடிச் சென்று ஒரு புட்டி கெம்ப கோலாவை வாங்கி வருகிறார். இது உன் சிறப்பு நண்பருக்காக எனச் சொல்லிக் கொடுக்கிறார்.

    நடிக்க வந்த சான்யா, உண்மையிலேயே நவாசுதீன் மீது காதல் வயப்படுகிறார். தன் வீட்டில் பார்க்கும் அமெரிக்க மாப்பிள்ளையை மறுத்துவிட்டு, இவருடன் பழகுகிறார். படத்தின் முடிவை வெளிப்படையாகச் சொல்லாமல், பார்ப்பவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். பாட்டியாக நடித்திருக்கும் பரூக் ஜாபர் கலக்கியிருக்கிறார்.

    படத்தில் ஆங்காங்கே கவித்துவமான காட்சிகள் வருகின்றன. ஆனால், இது கலைப்படம் போன்று மெதுவாக நகர்கிறது. உரையாடல், ஒளிப்பதிவு, பின்னணி ஒலிகள், நடிப்பு அனைத்தும் இயல்பாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. ஆனால், நிறையப் படங்களைப் பரபரப்பாகவே பார்த்துப் பழகிவிட்டதால், இயல்பாகச் செல்லும் இந்தப் படம், மெதுவாக நகர்வது போல் தெரிகிறது.

    இயக்குநர் ரிதேஷ் பாத்ராவின் திரைமொழி, மேம்பட்ட ரசனை உள்ளவர்களுக்கானது. வணிகத் திரைப்படமாக எடுத்து வருவாயை வாரிக் குவிக்க நினைக்காமல், தரமான படத்தினை அளித்துள்ளார். இயல்பான திரைப்படங்களை விரும்புவோர், இதை வரவேற்றுக் கொண்டாடுவார்கள்.

    Share
  • விசேஷம் – திரை விமர்சனம்

    விசேஷம் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    விசேஷம் (Vishesham) என்ற மலையாளப் படத்தைப் பார்த்தேன். இரண்டாம் திருமணத்தில் இணையும் இருவர், ஒரு குழந்தைக்காகக் காத்திருப்பதும் அந்தக் கருவுறுதலுக்கான போராட்டங்களுமே கரு. படம் நெடுக எதார்த்தமான நகைச்சுவை மிளிர்கிறது. சிரிப்புடன் சேர்த்துச் சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

    நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் மதுசூதனன், அப்பாவியாக, வழுக்கைத் தலையுடன், ரகளை செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அடிபொலியாக ஈர்க்கிறார். கழுகு சிறகடிப்பது போல் கைவீசி, இன்னும் இன்னும் உயரப் பற எனத் தன்முனைப்பு வகுப்பு நடத்துகிறார். இயற்கை விவசாயியாகக் களத்திலும் உழைக்கிறார். இவரது முதல் திருமணத்தில், தாலி கட்டிய அடுத்த நிமிடம், இவர் கண்ணெதிரே மனைவி தன் காதலனுடன் ஓடிப் போகிறார். மனம் தளராமல் ஆனந்த், அடுத்த திருமணத்திற்குத் தயாராகிறார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, போராட்டக்காரர்கள் மீது விழ வேண்டிய அடி, ஒதுங்கி, ஒளிந்து நின்ற இவருக்கும் விழுகிறது. அடித்து விளாசிய காவல் துறை அம்மணியே இவருக்கு இரண்டாவது மனைவியாக வருகிறார்.

    ஆனந்தின் இரண்டாவது மனைவியாக வரும் சின்னு சாந்தினி நாயர், படத்தின் மிகப் பெரிய சுவாரசியம். பெண் காவலராக லத்தியைச் சுழற்றுவது ஆகட்டும், ஏதும் விசேஷம் உண்டா என நச்சரிக்கும் பாட்டியிடம் சிங்கமெனச் சிலிர்த்துச் சண்டைக்குப் போவது ஆகட்டும், காதல் காட்சிகளில் குழைவது ஆகட்டும், குழந்தைக்காக ஏங்கிச் சோகத்தில் ஆழ்வது ஆகட்டும்… நவரசங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். காவல் உடுப்பில் நீ செக்சியாக இருக்கிறாய் என ஆனந்த் உணர்ந்து சொல்கிறார். இப்படி புஷ்டியாக இருப்பதும் சிலருக்கு அழகைத் தருகிறது. நடிப்பிலும் மிரட்டுகின்ற சின்னு சாந்தினி நாயருக்கு விருதுகள் காத்திருக்கின்றன.

    கருவாக்க மருத்துவமனைகளின் வேறு முகத்தைப் படத்தில் காட்டுகிறார்கள். பணமே குறியாக இயங்கும் இத்தகைய நிறுவனங்கள் குறித்துப் படம் விழிப்புணர்வு ஊட்டுகிறது. தன்னைக் கொடுமைப்படுத்திய முதல் கணவரைப் பழிதீர்க்கவே காவல் துறையில் இணைந்ததாக, சின்னு சாந்தினி நாயர் கூறுகிறார். ஆனால், காவலர் ஆன பிறகும் தானாகவே அவர் மீது புகார் கொடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. ஏதோ ஒரு வழக்கில் அந்த முதல் கணவர் சிக்கி, இவரது காவல் நிலையத்துக்கு வரும் வரைக்கும் காத்திருக்கிறார். இது சற்றே இடிக்கிறது. மற்றபடி, சிறப்பான படம். அத்புதமே அத்புதமே என்ற பாட்டு, மிக அருமை (ஆனந்த் மதுசூதனன், இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் கூட).

    புதுமணத் தம்பதிகளிடம் ஏதும் விசேஷம் உண்டா என்றும் தம்பதிகளிடம் உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள் என்றும் கேட்பதைத் தடுத்து நிறுத்துவதே இந்தப் படத்தின் விசேஷம்.

    Share
  • ஜமா – திரை விமர்சனம்

    ஜமா – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஜமா திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். பாரி இளவழகன், சேத்தன், ஸ்ரீகிருஷ்ண தயாள், அம்மு அபிராமி ஆகியோரின் நடிப்பு நன்று. நீயிருக்கும் உசரத்துக்கு நானும் எப்போ வருவதம்மா என்ற பாடல், மிக அருமை.

    இந்தப் படம், கூத்துக் கலையை உயர்த்திப் பிடிப்பதாக, அந்தக் கலைக்கு வலிமை சேர்ப்பதாகப் பலரும் எழுதியிருந்ததைப் பார்த்தேன். கூத்துக் கலையை விட, அந்தக் கலைக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே இந்தப் படத்தில் அதிகம் வெளிப்படுகிறது. கூத்துக் கலையை முழுமையாக நேசிப்பதை விட, அதில் அர்ஜுனன் வேடம் கட்டுவதையே இலக்காக நாயகனும் எதிர் நாயகனும் நினைக்கிறார்கள். தாங்கள் ராஜாவாக, கதாநாயகனாக மக்கள் முன் நிற்க வேண்டும் என்ற வேட்கையே இதன் முக்கிய நடிகர்களுக்கு இருக்கிறது. அந்த வேடத்தைக் கட்டிய பிறகு அதைத் தக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார்கள். வாத்தியார் ஆக வேண்டும், ஜமா நடத்த வேண்டும் என்ற விருப்பங்கள் அனைத்தும் அதிகார மையம் என்ற புள்ளியை நோக்கியே செல்கின்றன.

    இதற்காக, எந்தத் தியாகத்தையும் செய்யக் கல்யாணம் என்ற நாயகன் தயார் ஆகிவிடுகிறான். தன்னை நாடி வந்து காதலிக்கும், அரவணைக்கும் பெண்ணை உதறுகிறான். அம்மாவிடம் இருக்கும் ஒரே நிலத்தை அவளிடம் பொய்சொல்லி அவள் கையொப்பத்தைப் பெற்று விற்று, ஜமாவில் பங்கேற்பவர்களுக்கு முன்பணம் கொடுக்கிறான். அப்படிப் பணம் பெற்றவர்கள் வராமல் போய்விடுகிறார்கள். ஒரே ஆதாரமான நிலத்தை இழந்தது அறிந்த அம்மாவும் இறந்துவிடுகிறார். முட்டாள்தனமாகக் கல்யாணம் அலைகிறான்.

    நிலத்தையும் அம்மாவையும் அடுத்தடுத்து இழந்த கல்யாணத்தின் மீது எனக்குக் கோபமே ஏற்பட்டது. அப்பாவைப் போல ஜமா நடத்த வேண்டும், அப்பாவைப் போல அர்ஜுனன் வேடம் கட்ட வேண்டும் என நினைப்பவன், அப்பாவைப் போன்ற தோற்றப் பொலிவையும் கம்பீரத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. பணிந்து, வளைந்து நிற்கிறானே தவிர நிமிர்ந்து நிற்கவில்லை. பெண்வேடம் போடுவதை ஒரு காரணமாகக் கூறினாலும் உள்ளுக்குள் ஒரு தழல் எரியவில்லை. அதற்காகக் கடுமையாக உழைக்கவில்லை. இலக்கிற்கு ஏற்ப, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாதவனுக்கு அந்த வாய்ப்பு எப்படி அமையும்?

    கடைசிக் காட்சியில் குந்திதேவியின் வேடத்தில் கல்யாணத்தின் நடிப்பு, தாண்டம் என்ற எதிர்நாயகன் காலில் விழுந்து சாகும் அளவுக்கு எல்லாம் இல்லை. குந்தியே வந்து அந்த இடத்தில் இறங்கியிருக்க வேண்டாமா? கல்யாணமே அங்கே நின்றுகொண்டிருந்தான். அதன் பிறகு அர்ஜுனன் வேடத்திற்காக, தீப்பந்தங்களுக்கு நடுவில் ஆடுவது நன்று. ஆனால், இங்கும் அர்ஜுனனின் தரிசனம் முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை.

    எனவே, இதை கூத்துக் கலை பற்றிய படம் எனச் சொல்வது பொருத்தமற்றது. வளரும் கலைஞனின் மனோரதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    Share