Blog

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (8)

    பவள சங்கரி

    தீய சக்திகளுக்கு வெறுப்புணர்ச்சி, சாந்தமான உணர்வு, நல்ல போதனைகளை மகிழ்வுடன் இரசித்துக் கேட்கும் போழ்தும் ஒருவரிடமிருந்து அச்சமென்ற அந்த ஒன்று விலகிவிடுகிறது.
    புத்தர்


    வெறுப்பை வெறுத்து ஒதுக்குவோம்

    எப்போது ஒருவருக்கு சிலரைக் கண்டால் அதீத வெறுப்புணர்ச்சி வருகிறதோ, அப்போதே அவர் தான் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் சுய பச்சாதாபத்தில் உழன்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகிறது. சக மனிதர்களை நேசிக்காமல் இருப்பதைக் காட்டிலும் வெறுப்புணர்வைக் காட்டுவது மிக மோசமானது. அவர் தன்னை மிஞ்சிவிடுவாரோ என்ற படபடப்பும்கூட வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாளடைவில் அடுத்தவரிடம் காட்டும் அந்த வெறுப்புணர்ச்சி, நம்மீதே சுய அனுதாபத்தை ஏற்படுத்தி மெல்ல மெல்ல சுய வெறுப்பிற்கும் வழிவகுத்துவிடும். நம்மை நாமே வெறுக்கும் சூழல் தன்னம்பிக்கையை முற்றிலும் குலைத்துவிடும். இதைத் தவிர்க்க ஒரே வழி எவரையும் வெறுக்காமல் இருக்க பழகிக்கொள்ள வேணடும். தன்னைப் போல பிறரையும் நேசிப்பது வெற்றிப் பாதையின் மலரணை என்பதில் ஐயமில்லை.

    அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

    எந்த ஒரு காரியத்தைச் செய்யும் போதும் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் வந்தால் அந்த காரியத்தை சரியாகக் கொண்டு செலுத்துவது சிரமம். காரணம் தோல்வி என்பதே கற்பனையான ஒன்று. தோல்வி என்று கற்பனையாக நினைப்பதெல்லாம் வெற்றிக்கான படிகள் என்பதுதான் நிதர்சனம். இதை முழுமையாக உணர்நது கொண்டாலே தேவையற்ற சலனம் இல்லாமல் தெளிவான சிந்தனையுடன் முன்னேற முடியும்.

    என் உறவினர் ஒருவர் மிகச் சிறந்த இருதய அறுவை சிகிச்சை  நிபுணர். ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்தவர். வாழ்க்கையில் தம் பதவிக் காலத்தில் பல ஆபத்தான அறுவை சிகிச்சைகளையும் சர்வ சாதாரணமாகச் செய்து பல உயிர்களை காத்தவர். தம்முடைய  பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற வேண்டிய நேரத்தில் இறுதி அறுவை சிகிச்சையின் போது, நோயாளி இறந்துவிட, அந்த சம்பவம் அவர் மனதை வெகுவாக பாதித்து, தம் கவனக் குறைவினால்தான் தன்க்கு தோல்வி ஏற்பட்டது என்று கற்பனை செய்து கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி, அதே நோயாக மாறி பத்து ஆண்டுகள் படாதபாடுபட்டார். தன்னுடைய 35 ஆண்டுகால சேவையின்போது காப்பாற்றிய எத்தனையோ உயிர்களைப் பற்றியும், அந்த வெற்றியைப் பற்றியும் மன நிறைவு கொள்ளாத அவர், தன் கையை மீறி நடந்த ஒரு அசம்பாவிதத்தை அதீத கற்பனைக் கண்களுடன் பார்த்து, அமைதியாக வாழ வேண்டிய நாட்களை தொலைத்ததோடு, தாம் மேற்கொண்டு செய்ய வேண்டிய கடமைகளையும் சரிவரச் செய்யத் தவறிவிட்டார். இதனால் பிரச்சனைகள் அதிகமானதே தவிர வேறு எந்த பலனும் இல்லை.

    இன்னொரு சம்பவம் நான் மிகவும் ஆச்சரியப்பட்டது, இரண்டு நண்பர்கள் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரும் பாராட்டுக்களுடன் நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். அடுத்தவரோ இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்று வெளியே வந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரையும் தனித்தனியாகச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த போது பெரிய ஆச்சரியம் காத்திருந்தது எனக்கு. ஆம் அதிக மதிப்பெண் வாங்கி வெளியில் வந்த மாணவர் சரியான வேலை கிடைக்காமல் பெரும் மன வருத்தம் கொண்டிருக்க, மற்றொரு மாணவரோ நல்ல ஒரு பிரபலமான பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். இது எப்படி சாத்தியம் என்று விசாரித்த போது, நல்ல மதிப்பெண் வாங்கி வெளியில் வந்து, முதல் நேர்ககாணலுக்குச் சென்றவர், அங்கு வேலை கிடைக்காமல் போனவுடன், தோல்வி என்ற அச்சம் சிறைபிடிக்க, அடுத்து வந்த அத்தனை நேர்காணல்களையும் அதே அச்சத்துடன் அணுக, நாளடைவில் தன்னம்பிக்கை குலைந்து புதிய முயற்சி என்ற வார்த்தைக்கே இடமளிக்காமல், கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு குறைவான ஊதியத்தில் திருப்தி இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இறுதி ஆண்டில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றாலும் அதைக்கண்டு அச்சம் கொள்ளாமல் அடுத்த முறை இன்னும் பெரு முயற்சியுடன் தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற்றதோடு அதே தன்னம்பிக்கையுடன் போன முதல் நேர்க்காணலே வெற்றியைக் கொடுக்க அன்றிலிருந்து ஏறுமுகம்தான் அவருக்கு!

    எந்த ஒரு செயலையும் கெட்டியாக பிடித்துக் கொள்வதோடு, அதை இலகுவாக அவிழ்த்துவிடவும் பழக வேண்டும். ஆம் நம்மால் முடிந்தவரை நூறு சதவிகித முயற்சியை மூலதனமாக்கிவிட்டு, நம் இருதயத்தையும், ஆன்மாவையும் ஒருங்கே அதில் முழுமையாகச் செலுத்திவிட்டு அடுத்த நொடி அதிலிருந்து என்ன பலன் கிடைக்கப் போகிறது என்ற அச்சம் இல்லாமல், மகிழ்ச்சியுடன், தன்னம்பிக்கையுடன் வளைய வந்தால் போதும், வெற்றிப்பாதை தெளிவாகப் புலப்படும்!

    நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம் என்பதே சத்தியம். இதைத்தான் எண்ணம் போல வாழ்வு என்பார்கள் இல்லையா!

    தொடருவோம்

    படத்திற்கு நன்றி

    Share
  • வாழ்க்கை நலம் – 5

    குன்றக்குடி அடிகள்

    5. நீத்தார் பெருமை

    மனம்-மொழி-மெய்களால் தீண்ட முடியாத கடவுளுக்கு முதலில் கடவுள் வாழ்த்து! அடுத்து, அந்த ஒப்பற்ற இறைவனை நினைவிற் கொண்டுவரும் வான் மழை; வான்மழையின் உண்மை உய்த்துணர்ந்தவாருக்கே புலப்படும்;அங்கனம் உணர மாட்டாதவர்களுக்கு உரைகளால் உணர்த்தும் பெரியோர் தேவை! யார் நம்மைத் தமது உரைகளால் உயர் நெறியில் உய்த்துச் செலுத்த இயலும்! அத்தகு பெரியோரை இனங்காட்டும் அதிகாரமே, நீத்தார் பெருமை அதிகாரம்.

    பற்றுக்களின்று முற்றாக விடுதலை பெற்றவர்கள் நீத்தார் ஆவர். ஆம்! தற்சார்பான பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள்! மானுட உலகம் இன்று துன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பதற்குக் காரணம் ஆசைகளேயாம். இயல்பாக உயிரினம் – குறிப்பாக மனித இனம் தற்சார்பு நிலையிலே மையம் கொள்ளும். அதன் காரணமாகவே வேலிகள், சட்டங்கள், அரசாட்சிகள், சிறைக்கூடங்கள் மானுட வாழ்க்கையில் இடம் பெறலாயின.

    இன்று மனிதன் களிப்பை – அமைதியைத் துய்ப்பதில் வெற்றி கண்டானில்லை. மாறாக அமைதியின்மை துக்கம் இவைகளையே அனுபவிக்கிறான். இந்த அவலம் ஏன்? உலகந் தழீஇய ஒட்பத்திற்கே விரிவு உண்டு. ஊக்கம் உண்டு. இந்த ஓட்பம் – அறிவு தனக்குரிய இயலாமையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை; அலட்டிக் கொள்வதில்லை.

    மானிட உலகத்தின் தேவைகள் நிறைவேறாமல் நமது தேவை மட்டுமே நிறைவேறும்பொழுதுதான் தீமைகள் கால்கொள்கின்றன.கடைசியில் இவன் தேவையும் நிறைவேறுவதில்லை. ஒரோவழி நிறைவேறினாலும் துய்க்க இயல்வதில்லை. ஒரே ஒரு மாமிசத்துண்டு. இவற்றிற்கு காத்திருக்கும் பருந்துகளின் எண்ணிக்கையோ மிகுதி. என்ன ஆகும்?

    உலகம் இல்லாமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே சிறந்த கொள்கை – கோட்பாடு. உலகத்தை –இந்த உலகத்தின் இயக்க அமைதிகளை அறிந்துகொண்டு அந்த உலக அமைதிகளுக்கு ஏற்றவருக்கு – இசைந்தவாறு ஒழுகும் உரம் நம்மிடத்தில்லை.

    “சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு”

    என்பது திருக்குறள்.

    மானுட உடலமைப்பில் பொறிகள் ஐந்து. இவை முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாம். இவை அறிவுக் கருவிகள்; நுகர்தலுக்கு – அனுபவித்தலுக்கு உரிய கருவிகள். இவற்றை அறிவுக் கருவிகள் என்று கூறினாலும் இவை முழுமையான அறிவுக்கருவிகள் அல்ல. இவற்றை அறிவு வாயில்கள் – என்று கூறுவதே பொருந்தும். இந்தப் பொறிகளின் இயக்கத்தை அறிவார்ந்தனவாக ஆக்குபவை புலன்களேயாகும். இவை அகநிலைக் கருவிகள். புலன்களின் தகுதிப்பாடே, பொறிகளின் தகுதிப்பாட்டிற்கு அடிப்படை.

    இன்று பெரும்பாலும் – புலன்கள் செயலற்றுப்போய்ப் பொறிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. எதுபோலவெனில், எல்லா அதிகாரங்களையும் தமக்கே உடையராகப் பெற்றிருக்கும் மக்கள் – வாக்காளர்கள் அரசியல்வாதிக்கு அடிமைப்பட்டுக் கிடத்தல் போல! புலன்களை நெறிபடுத்தும் இயல்பு – புலன்களின் நுகர்வுக்கு அனுபவத்திற்குரிய பொருள்களைப் பொறுத்தது.

    புலன்களின் அனுபவத்திற்குரிய சுவை – ஒளி – ஊறு – ஓசை – நாற்றம் ஆகியவற்றின் இயல்புணர்ந்தோர் அவற்றை முறைப்படுத்திக் கொள்வான கொள்வர் உயர் அறிவினர்! இவைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பூத பௌதிகம் அறிந்து – அவற்றின் இயக்கத்துக்கு மாறுபடாமலும், முற்றாக உடன்படாமலும் தக்காங்கு ஒத்திசைந்து வாழ்தலே வாழ்க்கை! சிறப்புடைய வாழ்க்கை! இத்தகையாரே நீத்தார்!

    புலன்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் பொறிகள் மிகவும் ஒழுங்கும், ஒழுக்கமும் உடையவனவாக அமையும் புலன்களுக்கு அழுக்கினைச் சேர்க்கும் பொறிகளைப் பக்குவப்படுத்த வேண்டும்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்”

    “அவித்தல்” என்றால் அழித்தல் – அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறையன்று. அவித்தல் – பக்குவப் படுத்துதல். உண்ண முடியாத கிழங்கு முதலியவைகளை அவித்துப் பக்குவப்படுத்துதலைப் போல என்று அறிக. பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர் உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும்; பக்குவம் அடையும்; புலன்களும் தூய்மையாக இருக்கும்.

    பற்றற்ற நிலை என்ற ஒரு சூன்ய நிலை – வாழ்க்கையில் இல்லை. பற்று இல்லாமல் இருக்க முடியாது. பற்று எதன்மீது வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே சீலம் அமைகிறது; நீத்தாருக்குரிய இயல்பு வந்தமைகிறது. தன்மீதும் தனக்குரிய தேவைகள் மீதும் பற்று வைப்பதற்குப் பதில், மற்றவர்கள் மீதும் மற்றவர்களின் இன்பங்களை நாடும்போழுதும் – நீத்தார் தன்மை வந்தமைகிறது.

    இத்தகு நீத்தார்க்குத் தற்சா ர்பின்மையால் விருப்பு வெறுப்புகள் இல்லை. விருப்பு வெறுப்பு இன்மையால் சார்பு இல்லை. சார்பு இன்மையால் சமநிலை! சார்பு இல்லையேல் நன்மையையும் தீமையும் இல்லை. இத்தகையோரே அறம் இன்னதென நமக்கு உணர்த்தவும் முடியும். இத்தகு நீத்தார் பலர் இன்று தேவை.

     

    படம் உதவி: http://www.hindu.com/2006/02/03/images/2006020318081401.jpg
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

    Share
  • “ திருட்டுப் பூனைகள் “

    தமிழ்த் தேனீ

    நல்ல தூக்கம்  , திடீரென்று  டொம் என்று ஏதோ விழுந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் மாதவன் , பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த  மைதிலி  அது ஒண்ணுமில்லேங்க ,  நம்ம ஜன்னலுக்கு மேலே இருக்கே  சன்ஷேட்   அதுலே இந்தப் பூனை ரெண்டு குட்டி போட்டிருக்கு,  நம்ம கார் ஷெட்டுக்குக்கு மேலே பிளாஸ்டிக் ஷீட் போட்டிருக்கீங்களே  அதுமேலே பூனை குதிச்சிருக்கும்  அதான் சத்தம் என்றாள்  .
    ஆமா இருந்த இட்த்திலே இருந்தே  நீயா  ஏதாவது கற்பனை செய்து எதையும் சொல்லாதே, பதினோரு மணி  பாதிராத்திரி, காலம் கெட்டுக் கிடக்கு, போனவாரம் கூட ராமன் தெருவிலே ஜன்னலை உடைச்சு வீட்டிலே இருக்கறதையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிட்டாங்க மர்ம நபர்கள், இப்பல்லாம்  மர்ம நபர்கள் அதிகமாயிட்டாங்க,
    போலீஸ்காரங்க நிறைய மர்ம நபர்களை தேடிக்கிட்டே இருக்காங்க , என்று மைதிலிடம் கூறிவிட்டு, நீ ஒண்ணும் பயப்படாதே  நான் போயி பாத்துட்டு வரேன்  என்றபடி டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு  மெயின் கேட்டைத் திறந்து வெளியே போனான் மாதவன் .
    வீட்டைச் சுற்றி எல்லா இடத்திலேயும் பார்த்தாச்சு , ஒண்ணும் தெரியலே, யோசித்துக்கொண்டிருக்கும்போதே மறுபடியும் அதே சத்தம், கார் ஷெட்டின் அருகே சென்று டார்ச் அடித்துப் பார்த்தான்,
    ஒரு பூனை அதன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு  பிளாஸ்டிக் ஷீட் மேலே குதித்து, மிக லாவகமாக அங்கே இருந்து ஜன்னலுக்கு தாவி , குட்டிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல், ஜன்னலிலிருந்து கீழே குதித்து ,  பம்ப்செட் மோட்டார் இருக்கும் அறையின் கிரில் வழியாக உள்ளே போய் குட்டியை மிகப் பத்திரமாக தரை இறக்கி வைத்துவிட்டு  மாதவனைப் பார்த்து மிய்யாவ் என்றது.  அந்த மியாவ் வுக்கு என்ன பொருள் என்று மாதவனுக்கு புரிந்தது, பயப்படாதே  நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் உன் குட்டியை , ஏதோ சத்தம் கேட்டுதேன்னு வந்து பாத்தேன், என்று ஏதோ ரொம்பநாள் பழகினா மாதிரியும் , இவன் பேசறதெல்லாம் அந்தப் பூனை புரிந்து கொள்ளும் என்னும் எண்ணத்துடன் அதுனாலே நான் இங்கேயே இருக்கேன் நீ  மேலே போயி உன்னோட இன்னொரு குட்டியையும்  தூக்கிண்டு வா  என்றான்.
    பூனை இப்போது வேறு தொனியில் மியாவ் என்று கத்திவிட்டு குட்டிப் பூனையின் பக்கத்திலே  படுத்துக் கொண்டது. மாதவன் மனதில் அந்தப் பூனையின் மியாவுக்கு என்ன அர்த்தம் என்றும் அதன்   எண்ணம் என்ன என்பதும்  புரிந்தது . ஆமாம் அந்தப் பூனை கண்களின் பாவத்தாலும் முக அசைவாலும்  இவனுக்கு மிக அழகாக அதன் எண்ணத்தை  புரியவைத்தது.   அட கூர்ந்து கவனித்தால் இந்தப் பூனையின் மொழியைக் கூட கற்றுக் கொள்ள முடியும் போல் இருக்கிறதே என்று தோன்றியது மாதவனுக்கு.
    உன்னாலே ஆபத்தில்லேன்னு புரிஞ்சிகிட்டேன்   ஆனா இன்னொரு குட்டி அங்கே மேலே இருக்கு  அதைப் பத்தியும் கவலையா இருக்கு,  இப்போ இந்தக் குட்டியை  கொண்டு வந்து வெச்சிருக்கேனே  இந்த இடம் பாதுகாப்பா இருக்குமான்னு  யோசிச்சிண்டு இருக்கேன்  இந்த இடம் பாதுகாப்பானதுன்னு   என் மனசுக்கு பட்டால்தான்   இன்னொரு குட்டியையும் இங்கே கூட்டி வருவேன்  அப்படி என்று அந்த மிய்யாவுக்கு அர்த்தம் புரிந்து கொண்டான் மாதவன் ,
    அவனுக்கு திடீரென்று ஒரு ஆசை எப்படியும் இந்தப் பூனை மேலே இருக்கற இன்னொரு குட்டியை எடுத்துண்டு வர மேலே போகும் , அப்பிடி அந்தக் குட்டியைக் கவ்விண்டு வரும்போது ஒரு புகைப்படம் எடுக்கலாம்னு உள்ளே போயி கேமராவை எடுத்துக்கொண்டு  மைதிலி நீ சொன்னது சரியா இருக்கு, அதேதான் அந்தப் பூனைதான், குட்டியைக் கவ்விண்டு வந்து கீழே வெச்சிருக்கு, இன்னொரு குட்டியைக் கவ்விண்டு வரும்போது ஒரு போட்டோ எடுத்திண்டு வரேன்  , என்றபடி வெளியே போனான்,
    இவன் வீட்டுக்குள் வந்து மைதிலியிடம் பேசிவிட்டுத் திரும்பி வரும் நேரத்துக்குள் அந்தப் பூனை இன்னொரு குட்டியையும் கவ்விக்கொண்டு வந்து  மோட்டார் ரூமில் வைத்துவிட்டு அதன் பக்கத்தில் படுத்துக்கொண்டு இவனையே பார்த்துக்கொண்டு இருந்தது.
    மாதவன் ஜன்னல் வழியே இதோ பாரு  மைதிலி  சத்தமே போடாம பூனை மாதிரி அதுக்குள்ளே இன்னொரு குட்டியையும் கொண்டு வந்து வெச்சிடிச்சு  என்றான்  போட்டோ எடுக்க முடியாத  ஏமாற்றத்துடன்  .
    ஏங்க அது பூனைதானே   என்றாள் மைதிலி   அது அப்பிடித்தான் செய்யும் , நீங்க தள்ளி வந்துட்டீங்க இல்லே அந்த நேரத்திலே உங்களாலே கீழே இருக்கற குட்டிக்கு ஆபத்து ஏற்படாதுன்னு யோசிச்சு  நீங்க அங்கே போறதுக்குள்ளே கொண்டு வந்து வெச்சிடிச்சு பாத்தீங்களா . நம்மளைவிட எல்லாமே  புத்திசாலியா இருக்கு என்றாள்.  அட ஆமாம் என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே   அதை  போட்டோ எடுத்துட்டு   உள்ளே வந்தான்  மாதவன் ,
    நாய்   நாம குடுக்கறதை தின்னுட்டு காவல் காக்கும் , அதை வளக்கலாம் ஆனா  பூனைக்கு முன் யோசனை அதிகம், திருட்டுத் தனம் அதிகம்னு  சொல்வாங்க, அதுனாலே பூனை என்ன செய்யுமாம் அந்த வீட்டிலே இருக்கறவங்க  எப்போ போவாங்க  நாம போயி திருட்டுத் தனமா கிடைக்கறதை சாப்படலாம்னு  காத்துகிட்டு இருக்குமாம், அதுனாலே பூனை வளக்கக் கூடாதுன்னு சொல்வாங்க,  என்றாள்  மைதிலி.
    வாசற் கதவைப் பூட்டிவிட்டு வந்து படுத்தான் மாதவன், ஆமாம் அதெப்பிடி  நீ இங்கேருந்தே சரியா கண்டு பிடிக்கறே ,ஆமாம் தூங்கலையா நீ முழிச்சிகிட்டே படுத்திருந்தியா என்றான்.
    இல்லே இல்லே தூங்கிட்டேன் ,ஆனாலும்  பொம்பளைங்க  தூக்கமெல்லாம் கோழித் தூக்கம் மாதிரி, பூனைத் தூக்கம் மாதிரிதான் ,அசந்து போயி தூங்குவோம் ஆனாலும் ஒரு விழிப்பு இருந்துகிட்டே இருக்கும் , ஆனா ஆம்பிளைங்க  அசந்து போனா ஆழ்ந்து தூங்கிடுவீங்க  , அதுனாலே இந்த சத்தம் இதுனாலேன்னு  அனுபவத்திலே கண்டுபிடிக்க முடியும் எங்களாலே என்றாள்.
    அதெல்லாம் சரி மைதிலி நீ சொன்னியே பூனைக்கு திருட்டுத் தனம் அதிகம்  வீட்டிலே இருக்கறவங்க எப்போ போவாங்க அப்பிடீனு காத்துகிட்டு இருக்கும் அப்பிடீன்னு , அதை ரொம்ப தப்பா புரிஞ்சிகிட்டு தப்பா சொல்லிக் குடுத்துட்டங்களோ  நம்ம பெரியவங்க, இல்லே  பெரியவங்க சொன்னதை தப்பா நாம புரிஞ்சிகிட்டோமான்னு  தெரியலே,
    மெதுவா சத்தமே போடாம இருக்கறது பூனையோட குணம், அவ்ளோதான் உண்மை, அதுக்கு இருக்கற  இருட்டிலேயும் கண்ணு தெரியும்கிற சக்தியைப் பயன்படுத்தி அது தனக்கு வேண்டிய உணவைத் தேடிக்கிது  அவ்ளோதான், ஆனா அதுக்கு பயம் அதிகம்  அதுனாலே நாம யாரும் இல்லேன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கப்புறம் வந்து அதுக்கு வேணுங்கற  உணவை சாப்பிடுது, அதை நாம திருட்டுத் தனம்னு சொல்றோம்,
    நம்மைப் பாத்து பயப்படறதாலே நாம எப்போ தள்ளிப் போவோம்ம்னு காத்திருக்கும் அவ்ளோதான், அதை தப்பா சொல்லிட்டாங்கன்னு நெனைக்கிறேன்    மனுஷன் எப்போ  போவான்னு காத்திருந்து  வந்து திருடும்னு.   இப்போ நீயே ஒத்துகிட்டே நான் அசந்து தூங்கறேன்னு , ஆனா நீ அசந்து தூங்கினாலும் ஒரு விழிப்புணர்வு இருக்கும்னு.
    அப்போ நான் அசந்து தூங்கும்போது  உனக்கு விழிப்பு வருதுன்னு வெச்சிக்கோ, அப்போ உனக்கு தாகமா இருக்கு , பிரிட்ஜிலேருந்து  ஏதாவது எடுத்து தாகத்துக்கு குடிக்கறேன்னு வெச்சிக்கோ, யதேச்சையா   எனக்கு அப்போ விழிப்பு வந்தா , உடனே நான் அசந்து தூங்கற நேரமாப் பாத்து  எனக்கு கூடக் குடுக்காமே நீ குளிர்பானம் குடிக்கறேன்னு நான் நெனைச்சிகிட்டா எவ்ளோ  முட்டாள் தனமோ அதே மாதிரிதான் பூனை நமக்குத் தெரியாம வந்து பாலைக் குடிக்கும் போது  அதைத் திருட்டுப் பூனைன்னு சொல்றதும் என்றான் மாதவன்.
    அட ஆமா .நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு,  , நான் மாடியிலே  துணி காயப் போடும்போது நெனைச்சிகிட்டேன் , இந்தப் பூனை குட்டிகளுக்கு பால் குடுக்குதே,  ,இதுக்கு குட்டிகளுக்கு பால் குடுக்க சக்தி வேணுமே அதுனாலே  இந்தப் பூனைக்கு ஏதாவது குடுக்கலாமா ன்னு ஆனா பெரியவங்க  பூனைக்கு சாப்பிட ஏதாவது குடுத்தா அப்புறம் நம்ம வீட்டிலேருந்து போகவே போகாது  எப்போ நாம அடுத்து அடுத்து அதுக்கு குடுப்போம்னு காத்திருக்கும் , அப்பிடிக் குடுக்கலேன்னா  திருடியாவது சாப்பிடும்னு சொல்வாங்களே அப்பிடீன்னு பயந்து ஒண்ணுமே குடுக்காம விட்டுட்டேன் என்றாள் மைதிலி
    நீ சொல்றதும் சரிதான்  அதுவும் ஒரு ஜீவன்தானே , அதுக்கும் பசிக்கும், குட்டிகளுக்கு பால் குடுக்க அதுக்கும் சக்தி வேணும், அதுனாலே  நாம ரெண்டு பேரும் போயி கொஞ்ச பால் எடுத்து ஒரு கிண்ணத்திலே வெச்சு அந்தப் பூனைக்கு குடுக்கலாமா  என்றான் மாதவன்.
    இதோ எடுத்துகிட்டு வரேன் என்றபடி ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு  வந்து வாங்க போயி அந்தப் பூனைக்கு குடுக்கலாம்னு மாதவனும் மைதிலியும் வெளியே வந்து அந்தப் பால் கிண்ணத்தை பூனையிடம் வைத்துவிட்டு , அது பாலைக் குடிக்கும் என்று காத்திருந்தனர்  இருவரும்,  ஆனால் இவர்களை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இவர்களையே அந்தப் பூனை இவர்களையே பார்த்துக்கொண்டு  சும்மா உட்கார்ந்து இருந்தது .
    உனக்காத்தானே பால் கொண்டு வந்தோம் , நமபவே மாட்டேங்கறையே  நாங்க உனக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டோம்,பாலைக் குடி என்றான் மாதவன், மியாவ் என்றது பூனை சரி  புரிஞ்சு போச்சு  யாரோட இயல்பையும் மாத்த முடியாது நம்மாலே , நாம தள்ளிப் போனாத்தான் இந்தப் பூனை பாலைக் குடிக்கும் போல இருக்கு  ,  சரி வா நாம போயி தூங்கலாம் என்றபடி உள்ளே வந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள் இருவரும்,
    மெதுவே மெல்ல அடிஎடுத்து வைத்து கிண்ணத்தில் வாயை வைத்து பாலைக் கொஞ்சம் குடித்துவிட்டு மீண்டும் சந்தேகத்துடன் தலையைத் தூக்கி  சுறும் முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் பாலைக் குடிக்க ஆரம்பித்த்து  பூனை. சிரித்தபடி  மாதவன் பாத்தியா  அதோட திருட்டுத் தனத்தை என்றான்.
    ஏன் திருட்டுத் தனம்னு சொல்றீங்க அதோட இயல்பு ஜாக்கிறதை உணர்வு என்றாள் மைதிலி, சபாஷ் நீயும் சரியாப் புரிஞ்சிக்கறே, அது சரி நாம எதைச் சாப்பிட்டாலும்  கடவுளுக்கு படைச்சிடு சாப்படறோமே . உண்மையாவே இந்தப் பூனை மாதிரி நாம் படைச்ச பாலை கடவுள் குடிச்சா அடுத்த முறை படைப்போமா  என்றான் மாதவன்.
    எல்லாம் மனசுதாங்க காரணம்  அங்கே பூனைக்கு சந்தேகம், இங்கே நமக்கு சந்தேகம் நாம  தயாரிச்சிருக்கற உணவுப் பொருள்லே ஏதாவது ஒவ்வாமை இருந்தா நம்மைப் பாதிக்குமே.அப்பிடீன்னு .
    அதுனாலே எல்லா வல்லமையும் படைச்ச இறைவா  ,நாங்க இதை உனக்கு படைக்கிறோம் இதிலே ஏதேனும் தோஷமிருந்தா அதைப் போக்கற சக்தி உனக்குதான் இருக்கு, இதிலே இருக்கற தோஷங்களை நீக்கி ஆரோக்கியமான  அமைர்தமா  இந்த உணவை மாத்தி  எங்களுக்கு குடுன்னு வேண்டிக்கறோம்,
    ஜீவராசிகளையும் படைச்சு அதுக்கு வேண்டிய உணவையும் படைச்ச இறைவனுக்கு நன்றி சொல்றா மாதிரிதான் அவனை அப்பப்போ நெனைச்சுக்கணும் ,மறக்க் கூடாதுங்கறதுக்காக  பெரியவங்க சில வழிமுறைகளை ஏறபடுத்தி வெச்சிருக்காங்க அதிலே இதுவும் ஒண்ணு என்றாள் மைதிலி.
    ஆமாம் மைதிலி  சாப்பாட்டிலே யாராவது எதையாவது கலந்து குடுத்துட்டா என்ன செய்யறதுன்னு  சாப்பிட்டுப் பார்த்து அதிலே ஒண்ணும் பாதிக்கறா மாதிரி எதுவும் கலக்கலே  என்று  உறுதி படுத்திக்க முன்னெல்லாம் ராஜாக்கள் ஒரு ஆளை வெச்சிருப்பாங்களாம். அவர் முதல்லெ சாப்பிட்டுட்டு  அவருக்கு எதுவும் பாதகமா ஆகலைன்னா  ராஜா சாப்புடுவாராம்.
    அது மாதிரி ஒரு ஆளா நாம தெய்வத்தை வெச்சிருக்கோம்னு எனக்கு தோணுது,  நாமளும் இந்தப் பூனை மாதிரிதான்  சந்தேகப் பிராணி என்றான் மாதவன் .   மனுஷன்தாங்க எப்பவுமே திருட்டுப் பூனை  என்றாள் மைதிலி.
    அதுசரி மைதிலி  மைதிலி அந்தப் பூனை  தன் குட்டியை வாயாலே கவ்வி எடுத்துகிட்டுப் போவுதே  குட்டிப் பூனைக்கு வலிக்காதா என்றான்.
    குட்டிப் பூனைக்கு வலிக்காம ஜாக்கிறதையா எடுத்துகிட்டுப் போவும் தாய்ப்பூனை. இது ஒரு மாதிரி தாய்மை , தாய்மைங்கறதே பக்திதானே ,  நாம பக்தீன்னு சொல்றோமே  அதை ரெண்டு விதமா பெரியவங்க சொல்வாங்க ,  ஒண்ணு  மர்க்கட நியாயம், இன்னொண்ணு மார்ஜார நியாயம்
    மர்க்கடம்ன்னா குரங்கு , குரங்கு  அது பாட்டுக்கு கிளைக்கு கிளை தாவிக்கிட்டே போவும் , ஆனா அதோட குட்டி  தாய்க் குரங்கை கெட்டியா பிடிச்சிக்கும் , குட்டிக் குரங்கு சரியாப் பிடிச்சுக்காம கையை விட்டுடிச்சுன்னா கீழே விழுந்துடம் ,அதுனாலே  கெட்டியாப் பிடிச்சிக்கும் , இது மாதிரி ஒரு பக்தி, நாமதான் தெய்வத்தை  பிடிச்சிக்கணும்னு சொல்லுது
    இன்னொண்ணு இந்தப் பூனை மாதிரி, மார்ஜாரம்ன்னா பூனை  இந்தப் பூனை குட்டிகளை எப்பவும் விடாம காப்பாத்தும், வாயாலே பூனைக்குட்டிகளுக்கு வலிக்காமே கவ்விகிட்டு போயி பத்திரமா வெச்சுக் காப்பாத்தும் . அதுனாலே குட்டிகள் கவலைப் படாமே  எல்லாத்தையும் தாய்ப்பூனையை நம்பி ஒப்படைச்சிட்டு  நிம்மதியா இருக்கும்.
    ஆனா மனுஷன் இந்த ரெண்டு பக்தியையும் முழுசா நம்பறதில்லே. வேணும்னா கடவுளைக் கும்புடறான், இல்லாட்டி கடவுளை நெனைக்கறதே இல்லேன்னு  மாறி மாறி நிலையில்லாத புத்தியை வெச்சிகிட்டு அல்லாடறான்.
    அது மாதிரிதான்  நானும் படுத்தவுடனே எல்லாத்தையும் நீ பாத்துப்பேன்னு  நம்பி நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிடறேன் மைதிலி , தாய்க்குப் பின் தாரம் சரிதானே என்றான் மாதவன்
    மியாவ் என்றது பூனை,   பத்தியா நான் சொன்னது சரின்னு பூனை கூட சொல்லிடிச்சு  என்றான் மாதவன். இருவரும் சிரித்துக் கொண்டே  தூங்க ஆரம்பித்தனர்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (52)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இம்மடலை வரைகின்றேன். என்னுடைய மடல் வரிசையில் இது 52 வது மடல். ஆமாம் ஜம்பத்திரண்டு வாரங்களாக தொடர்ந்து உங்களுடன் இம்மடல் வாயிலாக உறவாடி வருகிறேன்.

    52 வாரங்கள் ! ஓ ! ஒரு வருடமல்லவா? ஆமாம் இம்டலின் உறவாடலுக்கு இத்தோடு ஓராண்டு பூர்த்தியாகிறது. இவ்வோராண்டு காலமாக இப்புலம்பெயர் தேசத்திலேயிருந்து புலம்பும் இச்சிறியேனின் புலம்பல்களை பொறுமையுடன் படித்து ஆதரித்து வந்த உறவுகள் அனைவருக்கும், இம்மடலை அழகாக தவறாமல் பதிப்பித்து வரும் எனதினிய வல்லமை நிர்வாகத்தினருக்கும் முதற்கண் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புத்தம்பி அண்ணாகண்ணனின் அன்பான ஆதரவுடன் வல்லமையில் இதுவரை நான் படைத்து வந்த அனைத்தையும் அதேபோல அன்பான ஆதரவுடன் பவள சங்கரி அவர்களும் தொடர்ந்து பதிப்பித்து வருவது மனதை நிறைக்கிறது.

    நான் எனது முதலாவது மடலில் குறிப்பிட்டது போல ஒரு காலத்தின் பதிவு என்பது காலத்தின் கண்ணாடியைப் போன்றது. நாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை எதிர்காலச் சந்ததியினரின் பார்வைக்கு எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு உன்னத ஊடகக் கண்ணாடியே பதிவுகளாகும்.

    எனது 38 வருட புலம்பெயர் வாழ்க்கையில் நானடைந்த, கண்கூடாகக் கண்ட மாற்றங்கள் பல. இதே மாற்றங்களை ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமானவை. ஓ! இப்படி நடந்திருக்கிறது என்று நாம் நினத்திருக்கும் வேளையில் மற்றொருவரின் பார்வையில் அது வேறுவிதமாகப் பதிந்திருக்கிறது என்பதை அறியும் போது மிகவும் விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கிறது.

    வாழ்க்கையெனும் இந்த அற்புதக் கல்லூரியில் நான் இன்னமும், மாணவனே. தினமும் புதிதாக பலவற்றை பலவிதமான என்னை விட வயது முதிர்ந்தவர்கள், வயதில் இளையவர்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவை அனைத்தும் எனக்கு அளிப்பது எவ்வளவு உழைத்தாலும் அடைய முடியா அனுபவச் செல்வங்களே !

    இவ்வேளையில் எனக்கு இப்படியான ஒரு மடல் வகையிலான பதிவைச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை அளித்த அமரர் அலிஸ்டர் குக் ( Akister Cook) அவர்களை எண்ணிக் கொள்கிறேன்.

    1975ம் ஆண்டு 18 வயதே நிரம்பிய கல்லூரி மாணவனாக இங்கிலாந்தில் வாழ்ந்திருந்த வேளை எனது வாழ்வாதாரத்திற்காக பகுதி நேர காவல் ஊழியனாக ( Security Guard) பணி புரிந்த வேளை தனிமையான ஆபிஸ் கட்டிடங்களின் இரவுநேரக் காவல்காரனாக பணிபுரிகையில் எனது தனிமையைப் போக்க உதவுவது பி.பி.ஸி வானொலியில் அவர் தன்னுடைய சொந்தக்குரலில் நடத்தி வந்த “அமெரிகாவிலிருந்து ஒரு கடிதம் ( A Letter From America) “ எனும் நிகழ்ச்சியேயாகும்.

    இங்கிலாந்திலிருந்து, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் ஒரு புலம்பெயர் இங்கிலாந்து தேசத்தவரின் அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும்.

    எனது உங்களுடனான இந்த மடல் வடிவான உரையாடலுக்கு பின்னனி இந்த நிகழ்வின் மீது நான் கொண்டிருந்த நெகிழ்வாகும்.

    நான் வாழ்ந்த வாழும் காலத்தில் இங்கு நடைபெறும் பல நிகழ்வுகளை எனது பார்வையில் பட்டவாரு உங்களுக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். இந்நோக்கத்தில் நான் எத்தனை தூரம் முன்னேறியிருக்கிறேன் என்பதன் நீதிபதி நீங்களே. எனது இந்த மடல் வல்லமையின் ஆத்ரவு நீடிக்கும் வரை, உங்களின் அன்பான ஆதரவு தொடரும் வரை எனது வாழ்வு இப்பூவுலகில் நிலைத்திருக்கும் வரை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

    “தம்பி உன் உள்ளத்தில் உண்மையிருந்தால் எழுதுகோலை எடு , எழுது” என்றான் புரட்சிப் பாவலன் பாரதி.

    என்னுடைய முயற்சிக்கு எனது உள்ளத்தில் குடியிருந்து என்னை என்றும் வழிநடத்தும் அண்ணாமலையானின் அருள் தொடர்ந்து கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு அடுத்த மடலில் சந்திக்கிறேன்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    04.04.2013

    Share
  • மார்ச் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன்

    இந்த முறை கதைகளின் வருகை குறைந்திருந்தாலும் நல்ல எழுத்தின் சதமானம் பெருகியுள்ளது என்பதோடு சில புதிய கைகளும் தென்படுகின்றன். ஒரு வேளை நான் மறதியில் புதிய கை என்கிறேனோ என்னவோ.

    இம்முறை எனக்கு மூன்று கதைகள் குறிப்பிடத் தக்கனவாகப் படுகின்றன. இரண்டு பழைய கைகள்.  மாதவன் இளங்கோவின் “அமைதியின் சத்தம்”. அயல் நாட்டு வாழ்வின் சிக்கல்கள். கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல் போய்விடுவதைல்லை.

    அதே மனிதப்பண்புகள் தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருபபது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே. பழமை பேசியின் ”ககனமார்க்கம்”.கதையில். தன் ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார் பழமை பேசி.

    கடைசியாக எனக்குப் புதியவராகத் தோன்றும் பார்வதி ராமச்சந்திரனின் “நம்மில் ஒருவர்” இம்மாதத்திய பரிசுக்குகந்த கதையாகச் சொல்லத் தோன்றுகிறது. புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம்.

    பரிசுக்குரிய கதையாக பார்வதி ராமச்சந்திரனின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்.

    அதே சமயம் முடிவில் இந்த வருடத்திற்கான சிறந்த கதைத் தேர்வின் போது, மாதவன் இளங்கோவின் அமைதியின் சத்தம், பழமை பேசியின் ககனமார்க்கம் கதைகளையும் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளலாம். அவை முன்னரே பரிசு பெற்ற கதைகள் மாத்திரமலல, இக்கதைகளும் சேர்த்துக்கொள்ளலாம்.

    பார்வதி ராமச்சந்திரனுக்கு என் பாராட்டுக்கள்.

    இந்த மாதப் போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகளின் விவரம் வருமாறு:

    மறுபடியும் ஒருமுறை

    நம்மில் ஒருவர்….

    அமைதியின் சத்தம்

    பதில்??

    முத்தம்

    நவீன ரோபோக்கள் “

    ககனமார்க்கம்

    சாய்ந்து சாய்ந்து… அவள் பார்த்த போது …

    உண்மைக்காதல்

    தாமரை நெஞ்சம்

    பயம் “

    எழுச்சி

    பரிசு பெற்ற திருமிகு பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். திரு பழமைபேசி மற்றும் மாதவன் இளங்கோ இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து அனைவரும் பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

    Share
  • இந்தியக் கணவன்மார்களும் அமெரிக்க மனைவிமார்களும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியக் கணவன்மார்கள் மீதும் அமெரிக்க மனைவிமார்கள் மீதும் எனக்கு மிகுந்த கோபம் உண்டு.  இந்த இரண்டு வகையினரும் தங்கள் வாழ்க்கைத்துணையை சரியாக நடத்துவதில்லை என்பது என் கணிப்பு.  இந்த விதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக.  இந்த இரண்டு வகையினரையும் தலைப்பில் ஒன்று சேர்த்திருப்பதால் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளையோ அல்லது வேற்றுமைகளையோ கூறப் போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.  இரண்டு வகையினரையும் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால்தான் இவர்களைத் தலைப்பில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறேன்

    முதலாவது இந்தியக் கணவன்மார்களைப் பற்றிப் பார்ப்போம்.  ஏழைக் குடும்பங்களில் தவிர போன தலைமுறை வரை இவர்கள்தான் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வெளியில் போய் பணம் சம்பாதித்துக்கொண்டு வந்தார்கள்.  வெளியில் போய் பலரோடு பழகி அல்லது போட்டிபோட்டு பணம் சம்பாதிப்பது அப்படியொன்றும் எளிதான காரியம் இல்லைதான்.  மனிதன் மிருகங்களை வேட்டையாடிக்கொண்டு ஒரு இடத்தில் நிலைபெறாமல் நகர்ந்துகொண்டேயிருந்த காலத்திலிருந்து கணவன்மார்கள்தான் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்து வந்தார்கள்.  அதனால் எப்போதுமே கணவன் கை ஓங்கியிருந்திருக்கிறது.  மனைவி மட்டும் சும்மா இருந்தாளா என்ன?  அவளும் மற்ற குடும்ப வேலைகளைக் கவனித்து வந்தாள்.  இதோடு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதுவும் இவள் வேலையாயிற்று.  ஆனால் அன்று முதல் இன்று வரை பெண்ணிற்கு அவள் செய்த வேலைகளுக்கு எந்த வித அங்கீகாரமும் இல்லை; எந்த சம்பளமும் இல்லை.  (Working women என்கிறார்களே அது வெளியில் போய் வேலைபார்க்கும் பெண்களை மட்டும்தான் குறிக்கும்.  வீட்டில் இருந்துகொண்டு காலை முதல் இரவு வரை மாடாக உழைக்கும் பெண்களை இதில் சேர்ப்பதில்லை.  அவர்கள் ஒரு சம்பளச் செக்கைக் கொண்டுவரவில்லை என்பதாலா?)  அது மட்டுமல்ல, அவளுடைய வாழ்வாதாரத்திற்கே தான்தான் மூல காரணம் என்பது போல் கணவன் நடந்துகொள்கிறான்.  இது காலம் காலமாக கிட்டத்தட்ட இந்திய சமூகங்கள் எல்லாவற்றிலும் நடந்து வந்திருக்கிறது.  வட இந்தியாவில் மிகச் சமீப காலம் வரை திருமணம் செய்துகொண்டு கணவன் வீடு சென்ற பெண்கள் பிறந்த வீட்டிற்குத் திரும்ப வருவதேயில்லை.  இப்போது அதெல்லாம் மாறியிருக்கும்  என்று நினைக்கிறேன்.

    கணவன் தன்னை ஏன் இப்படி அடக்கி ஆள வேண்டும் என்று இந்த மனைவிமார்களும் எண்ணிப் பார்ப்பதில்லை.  கணவன் சம்பாதித்துக்கொண்டு வருவதால் குடும்பத்தை நிர்வகிக்கும் எல்லா உரிமைகளும் கணவனுக்குத்தான் உண்டு என்று மனமார ஏற்றுக்கொள்கிறார்கள்.  இப்படி எல்லா மனைவிமார்களும் நடந்துகொள்வதால் சம்பாதிக்காத கணவன்மார்களின் மனைவிமார்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்.  இதற்கு முக்கிய காரணம் சமீபகாலம் வரை மனைவி இறந்துவிட்டால் கணவன் மறுமணம் செய்துகொள்ளலாம்;  ஆனால் கணவன் இறந்துவிட்டால் இவளுடைய வாழ்க்கையே அதோடு நின்றுவிடும்.  கணவன் இறந்துவிட்டால் அவனோடு மனைவியும் அவனுடைய சிதையில் எரிந்து சாம்பலாவதுதான் தலையாய கற்பு என்று வரையறுத்த சமூகமல்லவா நம் சமூகம்.  அப்படி இருக்கும்போது மனைவி கணவனுக்காக எதுவும் செய்யத் தயாராகிறாள்.  கணவன் நலம்தான் தன் நலம் என்று எண்ணத் தொடங்குகிறாள்.  இதனால்தான் வீட்டிற்கு வந்த மருமகளைக் கணவனும் அவனுடைய பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் சேர்ந்து அதிக வரதட்சிணை கேட்டு தீ வைத்துக் கொளுத்துகிறார்கள்.  ஆனால் அதே சமயம் மகளுடைய கணவனை அவளுடைய பெற்றோர் தீ வைத்துக் கொளுத்தியதாக சரித்திரமே இல்லை.

    இந்தியக் கணவன்மார்கள் எப்படியிருந்தாலும் சரி – படித்தவன், படிக்காதவன், பணக்காரன், பணமில்லாதவன், அழகானவன், அழகில்லாதவன் – தாங்கள் தங்கள் மனைவியை விட மேலானவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.  கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று போதித்த சமூகமல்லவா.  கணவன்மார்களும் தங்கள் மனைவிமார்களை எப்படியும் நடத்தலாம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.  மனைவி தன்னைத் தவிர வேறு யாரையும் மனதில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் இந்தக் கணவன்மார்கள் திருமணத்திற்கு வெளியே வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்துக்கொள்வது அப்படியொன்றும் பெரிய தவறு என்று நினைப்பதில்லை.  ஏனெனில் சமூகமும் அப்படித்தான் நினைக்கிறது.  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் பெண்களுக்கே உரியவை.  கணவன்மார்களுக்கு இவற்றில் எந்த விதப் பங்கும் இல்லை.

    இதற்கு மேல் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியம் என்று வலியுறுத்தி வந்தார்கள்.  பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் எடுத்த ஒரு படத்தில் கதாநாயகன் கதாநாயகியை திருமணத்திற்கு முன் கெடுத்துவிடுகிறான்.  தவறு செய்துவிட்டதாக நினைத்து நினைத்து மனம் புழுங்குகிறாள் கதாநாயகி.  பின்னால் தன்னைக் கெடுத்தவனையே தன் கணவனாக அடைந்து நிம்மதி அடைகிறாள்.  ஆனால் கதாநாயகனுக்கு அந்த மாதிரிக் கவலை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

    சமீப காலம் வரை பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்ததால் வெளி உலகம் பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது.  அவள் அவனை விட புத்திசாலி என்றாலும் வெளி உலகம் பற்றித் தெரியாதலால் கணவன் தன்னை விட அதிகம் தெரிந்தவன் என்று வைத்துக்கொள்கிறாள்.  கணவனும் அதை தனக்குச் சாதகமாக வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்தவன் போல் நடந்துகொள்கிறான்.  வீட்டில் எல்லாம் அவன் வைத்ததுதான் சட்டம்.  வெளி உலகம் பற்றி நிறையத் தெரியாவிட்டாலும் சில விஷயங்களிலாவது இவளுடைய யோசனைகள் அவனுடையதை விட உருப்படியானதாக இருக்கலாம்.  ஆனால் அவளுடைய யோசனைகள் எடுபடுவதே இல்லை.

    காலம் மாறிக்கொண்டு வருகிறது.  இப்போது பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்.  மனைவிமார்களும் சம்பாதிக்கிறார்கள்.  சில குடும்பங்களில் மனைவி கணவனை விட அதிகம் சம்பாதிக்கிறாள்.  ஆனால் இப்படிப்பட்ட குடும்பங்களிலும் மனைவிக்கு இரண்டாம் பட்ச இடம்தான்.

    ஒரு குடும்பத்தில் மனைவி சீதனமாக பெற்றோருடைய முழுச் சொத்தையும் கொண்டுவருகிறாள்.  அவளுக்கும் இதே கதிதான்.  என் பாட்டி, தாத்தா காலத்தில் கணவன்மார்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அப்படித்தான் இப்போதும் நடந்துகொள்கிறார்கள்.  தாய் வீட்டிலிருந்து மனைவி கொண்டுவந்திருந்த சொத்தில் 90 சதவிகிதத்தை கணவன் தொலைத்துவிட்டான்.  ஆயினும் மனைவியின் சொத்தை இப்படித் தொலைத்துவிட்டோமே என்று அவனுக்கு எந்த வித மனஉளைச்சலும் இருப்பதாகத் தெரியவில்லை.  இன்னும் தான்தான் வீட்டின் எசமானன் என்பது போல் நடந்துகொள்கிறான்.  மனைவியும் கணவன் மேல் எந்த குற்றமும் கண்டுபிடிப்பதாகத் தெரியவில்லை.

    என் கணவர் என் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பது என் நெருங்கிய உறவுப் பெண்ணிற்குப் பிடிக்கவில்லை.  பெண்ணுரிமை பற்றி நான் பேசுவதெல்லாம் அவளுக்குப் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என் கணவரிடம் ‘உங்கள் மனைவியை நீங்கள் கடிவாளம் போட்டு அடக்க வேண்டும்’ என்கிறாள்.  இப்படித்தான் பல இந்தியப் பெண்கள் இன்னும் நினைக்கிறார்கள்.  மனைவிமார்களே இப்படி நினைத்தால் கணவன்மார்கள் வேறு எப்படி நடந்துகொள்வார்கள்?  மனைவியை தனக்குச் சமமாக நடத்துவார்கள் என்று எப்படி நினைக்க முடியும்?   எல்லாக் காலங்களுக்கும் எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும் திருக்குறளை எழுதிய தெய்வப் புலவர் திருவள்ளுவரே ‘பெண் வழிச் சேறல்’ என்னும் அத்தியாயத்தில் மனைவி சொல்லைக் கேட்காதீர்கள் என்று கணவன்மார்களுக்கு அறிவுரை கூறுகிறார்.  தவறான அறிவுரை யாரிடமிருந்து வந்தாலும் – கணவனானாலும் சரி, மனைவியானாலும்சரி – அதைக் கேட்கக் கூடாது என்று பொதுப்படையாகக் கூறியிருக்கலாம்.  திருவள்ளுவரே அப்படிச் சொல்லியிருக்கும்போது யாரிடம் போய் நியாயம் கேட்பது?

    இனி அமெரிக்க மனைவிமார்களைப் பற்றிப் பார்ப்போம்.  மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் வரை அமெரிக்க மனைவிமார்களுக்கும் எந்த விதச் சுதந்திரமும் இல்லை என்கிறார்கள்.  ஆனாலும் இந்தியப் பெண்கள் போல நடத்தப்பட்டார்களா என்று தெரியவில்லை.  1963-இல் பெட்டி ஃப்ரீடன் (Betty Friedan)  எழுதிய  ஃபெமினைன் மிஸ்டிக் (Feminine Mystique) என்ற நூல் வெளிவந்தது.  இந்த நூல் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன.  இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவின் வளம் உயர்ந்துகொண்டே போனதால் அவர்களுடைய தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டதால் பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். ஓரளவிற்கு பொருளாதரச் சுதந்திரம் கிடைத்ததும் அமெரிக்க மனைவிமார்களுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லலாம்.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சிகரெட் விற்பனையாளர்கள் ‘பெண்களே உங்களுக்கும் புகைபிடிக்கும் சுதந்திரம் உண்டு’ என்று விளம்பரப்படுத்தினர்.  இந்தக் காரணங்களினால் பெண்களும் தங்களுக்கு ஆண்களோடு சம உரிமை வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தனர்.  ஃபெமினைன் மிஸ்டிக் இவர்களுடைய எண்ணங்களை இன்னும் கொஞ்சம் உசுப்பிவிட்டது.   அறுபதுகளில் கருத்தடைச் சாதனங்கள் கிடைக்கப் போக ஆண்கள் போல் தங்களுக்கும் பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர்.  இதனால் திருமணம் செய்துகொள்ளாமலே திருமணம் ஆன தம்பதிகள் போல் குடும்பம் நடத்தும் நிலை உருவானது.  திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் நிலையும் உருவாகத் தொடங்கியது.  திருமணம் செய்துகொண்டோ அல்லது செய்துகொள்ளாமலோ குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு துணை விட்டுப் போகும் பழக்கமும் தோன்றத் தொடங்கியது.  இதனால் தனித் தாய்மார்கள் (single mothers) என்ற ஒரு பிரிவு பெண்களிடையே தோன்றியது.

    பெண்களும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டதால் வீட்டில் சமைப்பதற்கு இருவருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது.  வீட்டில் சமைப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.  இதைச் சாதகமாக்கிக் கொண்டு உணவு தயாரிப்பவர்களும் நிறைய ‘ரெடிமேட்’ உணவுகளைச் சந்தையில் புகுத்தத் தொடங்கினர்.  ஏன் பெண்கள் சமைக்கவேண்டும் என்ற நிலை போய் ஏன் யாரும் சமைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  இரவு உணவையாவது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதையும் விட்டுவிட்டார்கள்.  இப்போது மனைவிதான் சமைப்பது என்ற நிலை மாறி கணவன் மனைவி இருவரில் யாருக்கு சமையலில் ஆர்வம் இருக்கிறதோ அவர் சமைக்கலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.  எங்கள் வீட்டில் சமைப்பது என் கணவர்தான் (My husband is the chef at our place) என்று ஒரு மனைவி சொல்லும் அளவிற்கு அமெரிக்க மனைவிமார்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் சமையல் என்பது பெரிய வேலையாகி விட்டது.  ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்ணை எங்கள் வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்திருந்தோம்.  அவர் ‘தினமும் இவ்வளவு சமைக்கிறீர்களா?’ என்றார்.  ‘ஆம், கிட்டத்தட்ட’ என்றேன்.  அந்தப் பெண்ணிடம் ‘நான் இப்போது வேலைக்குச் செல்லவில்லையாதலால் எழுதுவதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது’ என்று சொன்னேன்.  ‘அவ்வளவு சமைத்துக்கொண்டு உங்களால் எழுதவும் முடிகிறதா?’ என்றார்.  இந்தியாவிலாவது உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ளாமல் நாமே சமைத்தால் வேலை நிறைய இருக்கும்.  அரைப்பது, வறுப்பது, பொரிப்பது என்று எந்நேரமும் வேலை இருந்துகொண்டே இருக்கும்.  அமெரிக்காவில் அப்படியில்லை.  சமையலறையில் காஸ் அல்லது மின்சார அடுப்புகள் நான்கு, குளிர்சாதனப் பெட்டி, வழக்கமான அவன் (traditional oven), மைக்ரோவேவ் அவன் (microwave oven), டோஸ்டர் (toaster) என்று பல உபகரணங்கள் இருக்கின்றன.  இதற்கு மேல் எப்போதும் குளிர்ந்த நீரும் சுடுநீரும் வந்துகொண்டிருக்கும்.  பாத்திரங்களைக் கழுவிக்கொள்ள ஒரு தொட்டி (sink) இருக்கும்.  இதுவரை குறிப்பிட்ட எல்லா வசதிகளும் எல்லா சமையலறைகளிலும் இருக்கும்.  வீட்டின் அளவைப் பொறுத்து சமையலறை பெரியதாகவோ சிறிதாகவோ இருக்கும்.  அவ்வளவே.  வசதியான வீடு என்றால் பாத்திரம் கழுவும் மெஷினும் இருக்கும்.  இத்தனை வசதிகள் இருந்தும் கோடையில் சமைப்பது எவ்வளவு கஷ்டம் என்கிறார் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட வீட்டில் வசிக்கும் ஒரு பெண்.  இவர் நர்ஸாக வேலை பார்க்கும்பெண்.  இவரே இப்படிச் சொன்னால் பேராசிரியையாக வேலைபார்க்கும் ஒரு பெண் ‘நேரம் கிடைத்தால் சமைப்பதைவிட ஒரு புத்தகம் படிப்பதையே நான் விரும்புகிறேன்’ என்று ஏன் சொல்ல மாட்டார்.

    சமையலை விட்டுவிட்ட மனைவிமார்கள் வேறு ஏதாவது வீட்டு வேலைகள் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  கணவனுக்குப் பிடித்த உணவு அயிட்டம் எதையும் சமைத்துக் கொடுக்கும் எந்த அமெரிக்க மனைவியையும் நான் இதுவரை சந்திக்கவில்லை.  கணவனுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுக்கும் இந்திய மனைவிமார்களைச் சந்தித்திருந்த எனக்கு இது எப்போதும் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.  ஏன் இந்தப் பெண்கள் கணவனுக்குப் பிடித்ததைச் சமைப்பதே இல்லை என்று சிலரைக் கேட்டால் சமைப்பது பெண்களின் வேலை என்பது இப்போது முழுவதுமாகப் போய்விட்டது என்ற பதில் கிடைக்கிறது.

    சமையல் மனைவிமார்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலை என்ற எண்ணம் சமூகத்தில் இல்லை என்றே வைத்துக்கொள்வோம்.  பொதுவாக அமெரிக்க சமூகத்தில் பிறருக்காக தன்னலத்தை விட்டுக்கொடுப்பது, அவர்களுக்காக தன் நேரத்தைச் செலவழிப்பது, பிறர் நன்மைக்காக உழைப்பது போன்றவை எல்லாம் மறைந்துகொண்டு வருகின்றன.  அதனால் கணவனுக்காக மனைவி எதுவும் செய்யத் தேவையில்லை என்ற எண்ணமும் வலுப்பெற்று வருகிறது.  அடிக்கடி ‘I love you’ என்று கூறிக்கொள்வது அதிகரித்து வருகிறது;  ஆனால் கணவன் மனைவிக்கிடையேயான பிடிப்பு குறைந்துகொண்டு வருகிறது என்றே நான் நினைக்கிறேன்.  தான், தனது என்ற உணர்வை அமெரிக்க சமூகம் அளவுக்கதிகமாகவே மனிதர்கள் மத்தியில் வளர்த்துவிட்டிருக்கிறது.

    எனக்குத் தெரிந்த ஒரு கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பிடிப்பே இல்லை என்று நினைக்கிறேன்.  இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.  இவளுக்கு முதல் கணவன் இறந்த பிறகு துணை தேவைப்பட்டதால் எங்கள் நண்பரை மணந்துகொண்டாள்.  எங்கள் நண்பரின் முதல் மனைவி இவர் நிறையச் சம்பாதிக்கவில்லை என்பதால் இவரை விட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டாள்.  எங்கள் நண்பரும் வசதிக்காகத்தான் இவளை மணந்துகொண்டார்.  இவள் அவரை விட அதிகம் சம்பாதிக்கிறாள்.  இவருக்காக எதுவும் செய்வதில்லை.  வீட்டில் சமையல் எல்லாம் கணவைனின் பொறுப்புத்தான்.  அவருக்கு உடல்நலம் சரியில்லை.  இருந்தாலும் அவர்தான் சமையல் செய்ய வேண்டும்.  இந்தக் கணவனே இந்தியாவில் பிறந்திருந்தால் முதல் மனைவியும் இவரை விட்டுப் போயிருக்க மாட்டாள்; இரண்டாவது மனைவியும் இவர் மட்டுமே சமைக்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டாள்.  இந்தியக் கணவன்மார்களைக் கண்டால் எனக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ அந்த அளவு கோபம் இந்த மாதிரி அமெரிக்க மனைவிமார்களைப் பார்த்தால் ஏற்படுகிறது.

    Share
  • “ ஐ லவ் யூ “

    தமிழ்த்தேனீ

    மேசைமேல் இருக்கும் கோப்புகள் முக்கியமானவை, அவருடைய கோடிக்கணக்கான சொத்துக்கள், அவர் தொடங்கிய பல தொழில்களின் வெற்றியின் அறிகுறியாக  அவரிடம் சேர்ந்த  அதிர்ஷ்ட தேவதையின்  கணக்குகள்  .அவரைத் தவிர யாருக்குமே தெரியக் கூடாத ரகசியங்கள் அடங்கிய கோப்புகள்.  ஆனால் நாணயமாக சேர்த்த சொத்துக்கள், முறையாக வருமான வரி செலுத்திய ரசீதுகள் அடங்கிய கோப்புகள்,
    அவற்றை மிகப் பத்திரமாக  ஒரு ப்ரீப்கேசில் அடுக்கி மறைவான பெட்டகத்தில் வைத்து மூடி அதன் மேல் இருக்கும்  நகரும் சுவர் போன்ற அமைப்பை நகர்த்தி அந்த சுவற்றின் மேல்  ஒரு முருகன் படத்தை மாட்டிவிட்டு அந்த முருகன் படத்துக்கு மாலை போட்டு வணங்கிவிட்டு தன்னுடைய சுழல் நாற்காலியில் வந்து உட்கார்ந்து  அன்று அவர் பார்க்க வேண்டிய கோப்புகளைப் பார்வையிட்டார்  கதிரேசன்.
    சார் நான் உள்ளே வரலாமா என்று குரல் கேட்டது. அதுவரை அவர் அனுமதி இல்லாமல் யாரும் திறக்க முடியாதபடி பூட்டியிருந்த அறைக் கதவை  மேசையின் அடியே இருக்கும் ஒரு குமிழை அழுத்தி திறக்கச் செய்து , யெஸ் உள்ளே வாங்க  என்றார் கதிரேசன்.  அவருடைய பெர்சனல் செகரட்ரி  முருகன்   குட் மார்னிங் சார் . என்றார் பவ்வியமாக, எஸ் குட் மார்னிங்  முருகன் என்ன இன்னிக்கு நான் ஏதாவது முக்கியமா செய்ய வேண்டிய வேலை இருக்கா என்றார்.

     

    இல்ல சார், இன்னிக்கு வெள்ளிக் கிழமை ,நாளைக்குதான் பாரின்லேருந்து டெலிகேட்ஸ் வராங்க அவங்களை நான் வரவேற்று ஸ்கைலேண்ட் ஹோட்டல்லே தங்க வெச்சிருவேன் ,அவங்களை நீங்க நாளைக்கு மூணு மணிக்கு சந்திக்கணும்.இன்னிக்கு நீங்க ப்ரீ  என்றார் முருகன்.சிரித்துக் கொண்டே.
    நீங்க எல்லாத்தையும் கவனமா கச்சிதமா செய்யறதினாலே  நான் நிம்மதியா இருக்கேன். எனக்கு ஐம்பத்து ஐஞ்சு  வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கறாங்க எல்லாம்  உங்க உபயம் , அந்த அளவுக்கு  எனக்கு எந்த டென்ஷனும் இல்லாம நீங்க நடத்திகிட்டு வரீங்க, தேங்க்ஸ் முருகன் என்றார் கதிரேசன்.
    சார் என்னோட ட்யூட்டியைத்தான் செய்யறேன் அதுக்கு எதுக்கு சார் தேங்ஸ் எல்லாம், இன்னிக்கு சமூகத்திலே  நானும் ஒரு பெரிய மனுஷனா வளைய வரேன். என் குடும்பம் நல்லா இருக்குன்னா நீங்கதானே காரணம் ,நான்தான் உங்களுக்கு தேங்ஸ் சொல்லணும்.    நீங்க அடிக்கடி சொல்வீங்களே  நாம என்னதான் பிளான் செஞ்சாலும்  சில நாட்கள் அது இஷ்டத்துக்கு  நடக்கும்   நம்மகிட்ட ஒண்ணும் இல்லே. அந்த நேரத்திலே  நாமதான் கொஞ்சம் வளைஞ்சு குடுத்து போகணும்னு  , எனக்கென்னவோ  இன்னிக்கு அது மாதிரி ஒரு நாள்னு மனசிலே ஒரு பக்‌ஷி சொல்லுது என்றார் முருகன் .   ஓ அப்பிடியா என்ன விஷயம்  சொல்லுங்க என்றார்  கதிரேசன்.

    ஆமா இன்னிக்கு உங்களை சந்திக்கணும்னு பிடிவாதமா ஒருத்தர் உட்கார்ந்திருக்காங்க  வெளியிலே, என்றார் முருகன்.    ஏற்கெனவே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்காங்களா என்றார் கதிரேசன்
    இல்லை சார் புதுசா இருக்காங்க. ஆனா பாத்துட்டுத்தான் போவேன்னு பிடிவாதமா உக்காந்திருக்காங்க என்றார்
    ஓ இன்ட்ரெஸ்டிங்  சரி அனுப்புங்க யாருன்னு பாப்போம்  என்றார் கதிரேசன்.
    முருகன் வெளியே சென்றார். மே ஐ  கம் இன்   என்று ஒரு குரல் கேட்டது.
    எஸ் ப்ளீஸ் கம் இன்   என்றார் கதிரேசன், ஒரு தென்றல் உள்ளே நுழைந்தது.  கதவைத் திறந்தால் காற்று வரும் என்பது உண்மைதானோ என்று தோன்றியது கதிரேசனுக்கு , இங்கே தென்றலே வருகிறதே .
    முருகனோட இன்டியூஷன் சரியாத்தான் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டே   எதிரில் இருக்கும் நாற்காலியைக் காட்டினார் கதிரேசன்.  நன்றி கூறிவிட்டு அமைதியாக உட்கார்ந்தது தென்றல்.
    என்ன  யாரு நீங்க என்பது போல் பார்த்தார் கதிரேசன்.

    என் பேரு தென்றல்  என்றாள் .  என்னது தென்றல்னு கூடப் பேரு வைப்பாங்களா  நான் கேள்விப்பட்டதே இல்லே, என்றார் கதிரேசன்.   வெச்சிருக்காங்களே  எங்க வீட்டிலே , நான் இன்னிக்கு உங்களை எப்பிடியும் சந்திக்கணும்னு வந்தேன் . அதுவும் ரொம்பக் கிட்டத்திலே பாக்கணும்னு வந்தேன் ,பாத்துட்டேன்  மகிழ்ச்சி என்றாள் அவள்.     மிஸ் தென்றல் நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலே என்றார் கதிரேசன்.
    ஒரு விஷயம் உங்க கிட்டே சொல்லணும்னு தோணிச்சு   அதை சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன் என்றவள் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டே இருந்தாள். சில நேரங்களில் மௌனம் புயலைப் போன்ற ஒரு இரைச்சலை ஏற்படுத்திவிடும் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்தார் கதிரேசன்.  சற்று நேர மௌனத்தையே தாங்க முடியாமல்   சொல்லுங்க என்றார்.

    “ ஐ  லவ் யூ “   என்றாள் அவள்.
    கேட்ட வினாடியிலேயே வியர்த்துப் போனது அவருக்கு . என்னது ..என்னது நீங்க என்ன சொல்றீங்க என்று தடுமாறினார் கதிரேசன். ஏன் இவ்ளோ டென்ஷனாறீங்க  அமைதி அமைதி என்றாள் தென்றல்.  ஆனால் அவரால் அமைதியாக உட்கார முடியவில்லை. எழுந்துபோய் ஜன்னல் அருகே நின்றுகொண்டு நான் ஒரு சிகரெட் பிடிக்கவா என்றார்.

     

    ஓ எஸ் தாராளமா பிடிங்க  ,  எங்க அப்பாகூட பைப் பிடிப்பாரு என்றாள் அவள்.
    சிகரெட்டைப் பற்ற வைத்து நுரையீரல் முழுவதும் அந்த  நிகோடின் காற்றை உள் வாங்கி  மெதுவே வெளியே அனுப்பி சற்றே தெளிந்து அதை  ஆஷ் ட்ரேயில் போட்டு  நசுக்கி அணைத்துவிட்டு மறுபடியும் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்தார் .    என்னது இது நீங்க பாட்டுக்கு வந்தீங்க  இப்போ  ஐ லவ் யூ ங்கறீங்க எனக்கு ஒண்ணும்  புரியலே.

    சரி நீங்க யோசிங்க   நான் ஒரு வாரம் கழிச்சு வரேன், என்றபடி எழுந்தாள் தென்றல்.
    உங்க காண்டாக்ட்  எண் என்ன என்றார், முகவரி என்ன என்றார்,   ஒரு வாரம் கழிச்சு நானே வந்து தரேன்  அது வரைக்கும் யோசியுங்க  பை பை நன்றி வருகிறேன்  என்று கூறிவிட்டு போனாள்…போயேவிட்டாள்.
    என்ன செய்வதென்றே புரியாமல் அப்படியே சிலைபோல உட்கார்ந்திருந்தார் கதிரேசன்,  முருகன் உள்ளே வந்து சார்  காஃபி  குடிங்க என்று ஒரு கோப்பையை வைத்தார்.   காஃபியை எடுத்து  குடித்துக் கொண்டே ஆழ்ந்த யோசனையுடன் முருகன் உக்காருங்க என்றார்.

    சார்  என்றார் முருகன்  ..உக்காருங்கன்னு சொன்னேன் என்றார் கதிரேசன்.  முருகனுக்கு புரிந்தது  ஏதோ முக்கியமான விஷயம் இல்லையென்றால் அலுவலக நேரத்தில் உட்காரச் சொல்லமாட்டார்  அவர் என்று,அமைதியாக உட்கார்ந்தார் முருகன்.    முருகன்  இப்போ வந்துட்டுப் போனாங்களே  தென்றல்  அவங்களை உங்களுக்குத் தெரியுமா? இதுக்கு முன்னே எங்கேயாவது பாத்திருக்கீங்களா? நாம பாத்திருக்கோமா  என்றார்.
    இல்லே சார்  இவங்களை இப்போதான்  நான் பாக்கறேன், நீங்க பாத்திருக்கீங்களா என்றார் முருகன்.   இல்லே  முருகன் நானும் பார்த்ததில்லே. இப்போ அந்தப் பொண்ணு என்கிட்ட ஒரு விஷயம் சொன்னா   அதை எப்பிடி எடுத்துக்கறதுன்னே புரியலே. எனக்கு பேச சந்தர்ப்பமே குடுக்காம அவங்க பேசினாங்க போயிட்டாங்க  என்றார்.
    இந்த அளவுக்கு நீங்க அதிர்ந்து போற அளவுக்கு என்ன சார் சொன்னாங்க என்றார் முருகன்.    கதிரேசன்   சொன்னார்..  சார் என்னா சொல்றீங்க என்று அதிர்ந்தார் முருகன். பின் சுதாரித்துக் கொண்டு  சார் நீங்க எவ்ளோ பெரிய அந்தஸ்திலே இருக்கீங்க , உங்களுக்கு  லக்‌ஷ்மிகரமா மனைவி , தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளை,
    இதெல்லாம் தென்றலுக்குத்   தெரியுமா?  , எப்பிடி இப்பிடி நேருக்கு நேரா வந்து  ஒரு வயசுப் பொண்ணாலே இப்பிடிப் பேச முடியுது? இது அசட்டுத் தைரியமா, இல்லே விவேகமான  அணுகுமுறையா ஒண்ணும் புரியலே சார் என்றார் முருகன்.
    சரி எனக்கும் புரியலே ,. காலையிலே  நீங்க சொன்னீங்களே    இன்னிக்கு அது மாதிரி ஒரு நாள்னு மனசிலே ஒரு பக்‌ஷி சொல்லுது அப்பிடீன்னு   அது சரியாப் போச்சு அது மாதிரி ஒரு நாளேதான் இது   , வளைஞ்சு குடுத்துதான் போகணும் .   ,ஆனா இவ்ளோ அதிர்ச்சியா இருக்கும்னு நெனைக்கலே .
    சரி அந்தப் பொண்ணு அடுத்த வாரம் வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கா ,அவ வந்தா  நேரா என் ரூமுக்கு அனுப்பிடுங்க, இப்போ நான் வெளியிலே போய்ட்டு  மாலை நாலு மணிக்கு வரேன்.  என்றபடி கிளம்பினார்  கதிரேசன்.
    ஒரு வாரம் மிக இயல்பாக வேலைகள் தொடர்ந்தன. மறு வாரம் வெள்ளிக் கிழமை  சொல்லி வைத்தாற் போல் மே ஐ கம் இன் சார் என்று கேட்டபடி கதிரேசனுடைய அறைக்குள் நுழைந்தாள் தென்றல்,
    ஒருகணம் உள்ளுக்குள்ளே காலிலிருந்து தலை வரை ஒரு மின்னல் ஓடியது கதிரேசனுக்கு, சமாளித்தபடி புன்னகைத்து வாங்க தென்றல் உக்காருங்க என்றார். வந்து இயல்பாக நாற்காலியில் உட்கார்ந்தாள்.
    சில நொடிகள் மௌனத்துக்குப் பிறகு தென்றல் பேசத் தொடங்கினாள், நீங்க எல்லாம் வேண்டாம் ,  என்னை நீ அப்பிடீன்னே சொல்லலாம், தென்றல்ன்னு அன்பாக் கூப்பிடலாம் ,அவள் பேசிக்கொண்டே இருந்தாள் கதிரேசன் கேட்டுக்கொண்டிருந்தார், சுமார் ஒரு மணி நேரம் தென்றலின்  பேச்சை  கதிரேசன் கேட்டுக் கொண்டே இருந்தார் எந்தவித இடையூறும் இல்லாமல் .
    அவள் பேசி முடித்தாள், இதோ என்னுடைய தொலைபேசி எண் , என்னுடைய விலாசம் என்று ஒரு  ஒரு காகிதத்தில் எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு சரி மீண்டும் சந்திப்போம் , ஆனால் இந்த முறை நீங்களாக அழைத்தால்தான் வருவேன்  என்று கூறிவிட்டு  கிளம்பினாள் தென்றல்.
    வியர்த்துப் போயிருந்த நெற்றியை கர்சீப்பினால் துடைத்துக் கொண்டு நாற்காலியில்  சாய்ந்தார் கதிரேசன்.  சார் நான் உள்ளே வரலாமா  என்று கேட்டுவிட்டு   கதிரேசன் அனுமதித்தவுடன் உள்ளே நுழைந்தார் முருகன்.
    முருகன்  இன்னிக்கு  தென்றல் ஒரு மணிநேரம்  பேசினாங்க, எனக்கென்னவோ அவங்க சொல்றதெல்லாம்  சரின்னு படுது, அதுனாலே நான் சில முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கு. முருகன்  உங்களுக்குத் தெரியும் நான் எந்த முடிவையும் உணர்ச்சி பூர்வமா எடுக்க மாட்டேன்னு, அதுனாலே நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். என்றார்.
    சார்  என்ன சார் இது நீங்க ஆர்டர் போட்டா  செய்யப் போறேன் என்றார் முருகன்.    முருகன் ஆர்டர் போட்டா  சொன்னதைச் செய்வீங்க  எனக்குத் தெரியும்  ஆனா அதையே உதவியா செஞ்சா  எனக்கு எது நல்லதுன்னு புரிஞ்சுகிட்டு செய்வீங்க , அதுனாலேதான் உதவின்னு சொன்னேன் முருகன் என்றார் கதிரேசன்.
    அதை சொல்றதுக்கு முன்னாலே தென்றல் என்ன பேசினாங்கன்னு உங்களுக்கும் சொல்லணும் , ஆனா  அதுக்கு சரியான நேரம் இன்னும் வரலேன்னு நெனைக்கிறேன். அதுனாலே  இப்போ நான் சொல்றதை மட்டும் செய்யுங்க என்றார் கதிரேசன்.
    இங்கே கிட்ட வாங்க முருகன்  என்று அழைத்து என்ன செய்யவேண்டும் என்பதை மெல்லிய குரலில்  கூறினார் கதிரேசன் , முருகன் ஒருகணம் அதிர்ந்தாலும்  சமாளித்து சரி சார் அப்பிடியே செய்யறேன் என்றார் .
    அலுவலகத்தில் கிளம்பியது கிசுகிசுக்கள்,  நம்ம முதலாளி எப்பவுமே சரியான முறையிலே நடப்பவராயிற்றே ,அவரா இப்படி, ,  என்ன இருந்தாலும் அழகா ஒரு பொண்ணு நெனைச்சா எப்படிப்பட்ட ஆட்களையும் கவுத்துருவாங்கங்கறது உண்மைதான், சரித்திரத்திலேயே படிச்சிருக்கோமே, இவரு மட்டும் என்ன விதிவிலக்கா?
    அடப் போடா ஆனானப்பட்ட விஸ்வாமித்ரரே  கவுந்துட்டாரு இவரு என்னா செய்வாரு பாவம், ஆனா ஒண்ணு அந்தப் பொண்ணு கெட்டிக்காரி. நல்ல புளியங் கொம்பாத்தான் பிடிச்சிருக்கா .
    இப்படி யார் எங்கே பேசினாலும்   அவர் கேட்கும் படி அமைக்கப்பட்டிருந்த மறைவான ஒலிபெருக்கிகள் கதிரேசனுடைய அறையிலே வைக்கப் பட்டிருப்பதை அறியாமலே  கிசுகிசுக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது.
    ஒரு மாதம் விளையாட்டாக ஓடிவிட்டது, அந்த நிர்வாகத்தில் அவள் முக்கியமானவளாக கருதப்பட்டாள். அவளைக் கேட்காமல்  உதவியாளர் முருகன் கூட செயல்பட முடியவில்லை.
    முருகன் முகம் சுளிக்காமல் அவர் கடன் பணி செய்து கிடப்பதே என்று இயங்கிக் கொண்டிருந்தார்.   அலுவலகத்தில் இருக்கும் அனைவரும்  இந்தச் செய்தியைப் பற்றி அலுவலகத்தில் பேசக் கூட பயப்பட்டனர், ஆனால் வெளியிலே ஆசைதீர பேசிக் கொண்டனர், செய்தீ காட்டுத் தீயாய் பரவியது.
    ஆனால் மிக இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டார்  கதிரேசன், அவர் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியாமல் தவித்தனர்  அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்,   யாரைப் பற்றியும் கவலைப்படமால் மிக இயல்பாக வந்து போய்க்கொண்டிருந்தாள் தென்றல்.  அடிக்கடி தென்றலும் அவரும் சேர்ந்தே பல விழாக்களுக்கு செல்வதை தொழிலதிபர்கள் முதற்கொண்டு, அனைவரும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர். மக்களுக்கு ரசமாய் இருக்க சில பத்திரிகைகள் கூட கிசுகிசுக்களை அள்ளி வழங்கி சர்குலேஷனை அதிகப்படுத்திக் கொண்டது.
    திடீரென்று ஒரு வாரமாக தென்றலைக் காணவில்லை, புயல் வந்தால் தென்றல் காணாமல் போகும்போல் இருக்கிறது, ஏதோ ஒரு புயல் வரப் போகிறது என்று எதிர் பார்த்தனர்  எல்லோருமே
    இப்படி இருக்க ஒரு நாள் முருகன் அலுவலகத்தில் இருப்போருக்கும் , பல தொழில் அதிபர்களுக்கும்  பத்திரிகைக்காரர்களுக்கும் பொதுவாக ஒரு அழைப்பிதழை அளித்துக் கொண்டிருந்தார். அலுவலக காவல்காரர் முதல், உயர்தர அதிகாரிகள் வரை எல்லோருக்கும்  ஒரு அழைப்பு .

    ஆம் கதிரேசன் அவர்கள் கட்டிய புது பங்களாவில்  வருகிற ஞாயிற்றுக் கிழமை அனைவரும் வந்து கலந்து கொள்ளும்படி  அன்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார் . அவரே அவர் கைப்படவே எல்லோருக்கும் பத்திரிகை அளித்து அவசியம் வரும்படி வேண்டிக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அனைவருக்கும்.
    அந்தப் பத்திரிகையின் சாராம்சம் இதுதான். தொழிலதிபர் கதிரேசன் அவர்களின்  30 ஆவது  திருமண நாள் விழா. குடும்பத்துடன்  அனைவரும் வருக . அனைவரும் வந்து விருந்தில் கலந்து கொண்டு வாழ்த்த வேண்டியிருந்தார்  கதிரேசன் அவர்கள்.
    கதிரேசன் அவர்களின் பிரும்மாண்ட பங்களாவில் .அனைவரும். விருந்தின் ருசி ,அதையும்  தாண்டி செவிக்குணவு இல்லாதபோது சற்றே காதுக்கும் ஈயப்படும் என்னும் கோட்பாட்டுக்குட்பட்டு காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தனர்.  நாதஸ்வரம் முழங்கிக் கொண்டிருந்தது  கதிரேசனுடைய  மனைவி காத்யாயினி சிரித்த முகத்துடன் லக்‌ஷ்மிகரமாய் அனைவரையும் வரவேற்று உணவு உண்ண அழைத்துப்  போய் உட்காரவைத்து உபசரித்துக் கொண்டிருந்தார் .
    மனதுக்குள் இந்த அம்மாவுக்கு த்ரோகம் செய்ய  கதிரேசனுக்கு எப்பிடி மனசு வருதோ என்று எண்ணமிட்டபடி வெளியிலே புன்சிரிப்புடன்  அனைவரும் உணவு அருந்திவிட்டு  கூடத்தில் குழுமினர்.
    கதிரேசன் சூட் கோட்டுடன் வந்து நின்றார், அவருக்கு  ஒரு பக்கத்தில் அவர் மனைவி காத்யாயினி ,  மறு பக்கத்தில் அவர் மகன்   சந்தோஷ்  கையில் ஆளுயர மாலையை  எடுத்துவந்து ஒன்றை கதிரேசனிடமும் மற்றொன்றை காத்யாயினியிடமும் கொடுத்துவிட்டு  மாலை மாற்றிக் கொள்ள வேண்டினான். கதிரேசனும் காத்யாயினியும் மாலை மாற்றிக் கொண்டனர்.

    கிசுகிசுவை மறந்து  அனைவரும்  கைதட்டி ஆரவாரமாய் வாழ்த்தினர். ஒரு பெரிய ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலில்  அனைவரும் கூடியிருந்தனர்.   வருக நண்பர்களே இந்த மகிழ்ச்சியான நன்நாளில் என் அழைப்பை ஏற்று  விழாவுக்கு வந்திருந்து  என்னை கௌரவப்படுத்திய உங்கள் அனைவருக்கும்   என் மனமார்ந்த நன்றி  .இன்று  நான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப் போகிறேன்.,
    ஆமாம்  எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எங்கள் குடும்ப உறுப்பினர்களில் புதியதாக ஒரு நபர் இன்று முதல் இணையப் போகிறார். என்று கூறிவிட்டு கண்ணைச் சிமிட்டினார் கதிரேசன்.     அழையா விருந்தாளியாக அமைதி அங்கே தானாக வந்து ஆனால் ஆர்வத்துடன் காதுகளைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தது.
    அதற்கு முன்பாக  இங்கே ஒரு படத்தை திரையிட்டு மூடியிருக்கிறேன்  . அந்த திரையை தென்றல் அவர்கள் திறந்து வைத்து விழாவின் முக்கிய நாயகியாக  உங்களை வரவேற்பார்  என்றார்.
    தென்றல் மிக நளினமாக நடந்து வந்து அந்த திரையை விலக்கினாள், அங்கே கதிரேசன் அவர்களின் உருவப் படம் மாட்டி அதற்கு மாலையும் போடப்பட்டு இருந்தது . ஹா ! என்று ஒருமித்த அதிர்ச்சிக் குரல் வெளிப்பட்டது  அனைவரின் வாயிலிருந்தும் , அமைதி சற்றே சலனப்பட்டது.
    ரகசியக் குரல்கள் ஆச்சரியக் குரல்கள், கூடமெங்கும் உலா வந்தது. அந்த அமைதியைக் கிழித்தார்  கதிரேசன் .  உங்களுக்கெல்லாம் தெரியாத   ஒரு ரகசியத்தை இப்போது நான் கூறப் போகிறேன்.
    நண்பர்களே இதோ இந்தப் படத்தில் இருப்பது நானல்ல . உலகில் ஒருவரைப் போலவே ஏழு பேர் இருப்பார்கள் என்று படித்திருக்கிறோம் , ஆனால் பார்த்ததில்லை. நமக்கெல்லாம் ஒரு அரிய வாய்ப்பு  இதோ என்னைப் போலவே இருக்கும் இவரைப் பாருங்கள், இவர் பெயர் சிதம்பரம், இவர் தென்றல் அவர்களின் தகப்பனார்.
    தென்றலின் தந்தை  திரு சிதம்பரம்.

    உருவத்தில் என்னைப் போலவே இருந்ததும் , ஏறக்குறைய  என்னைப் போலவே நேர்மையான முறையில் தொழில்கள் செய்து இலங்கையிலே ஒரு பெரிய தொழிலதிபராக  மாறி பெரும் பணக்காரராக இருந்தார். தென்றல் அவருடைய தகப்பனார் மீது அளவுகடந்த அன்பும் ,பாசமும் வைத்திருந்தார். ஆனால் காலம் சில நேரங்களில் பல கொடுமைகளைச் செய்துவிட்டு  தடையங்களே இல்லாதபடி அழித்து விடுகிறது என்பதற்கு திரு சிதம்பரம் அவர்களின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணம்.
    ஆமாம் ஒரே நாளில் பங்கு வர்த்தகம் சரிந்து , அவருடைய சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டு களவாடப்பட்டு  சில மிருகங்களாலே கொலையும் செய்யப்பட்டார்  திரு சிதம்பரம் . தென்றல் ஆதரவு தேடி நம்ம நாட்டுக்கு வந்திருக்காங்க. அப்போ  யதேச்சையா என்னைப் பாத்திருக்காங்க .
    ஒருவர், தணிந்த குரலில்  சரிய்யா  முடிவு என்னான்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு அதுக்கு ஏன் இவ்ளோ பீடிகை போடறீங்க  விஷயத்துக்கு வாங்க என்று மெதுவே முணுமுணுத்தார்.
    உங்களுக்கெல்லாம் தெரியும் தென்றல் என்னிடம் வந்து   ஐ லவ் யூ சொன்னதும் ,அதன் பின்னர் நேற்று வரை நடந்ததும்.அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் உங்கள் ஊகத்துக்கு விதையாக மலர்ந்ததும்  எனக்கும் தெரியும்
    ஆனால் நாம் எல்லோருமே எதையுமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எனக்கே என்னை உணர்த்தினா இந்தப் பொண்ணு  தென்றல் அவளுக்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
    ஐ லவ் யூ இந்த மூன்றெழுத்து மந்திரம் பலரை ஆட்டி வைக்கிறது, ஆனால் அதன் அர்த்தமே தெரியாமல், அந்த மந்திர சொற்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் ,ஆனால் எப்படிப் பயன்படுத்துகிறோம்  என்று எனக்கும் புரிய வைத்தாள் இந்தப் பெண்  தென்றல் .
    காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
    வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
    நாதன் நாமம் நமசிவாயவே
    என்று திடீரென்று சீர்காழி கோவிந்தராஜன்  மனம் உருகிப் பாடினர் .
    யாருப்பா அங்கே முக்கியமா பேசிகிட்டு இருக்கோமில்லே, பாட்டை நிறுத்துங்க  என்றார் கதிரேசன்  ,பாட்டு நின்றது.

    அகராதியிலே பாத்தேன்  ஐ லவ் யூ அப்பிடீங்கற சொல்லுக்கு எத்தனை பொருள் இருக்கு அப்பிடீன்னு
    நான் உன்னைக் காதலிக்கிறேன், நான் உன்மேல் அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை நேசிக்கிறேன், நான் உன்னை விரும்புறேன்  ,இப்பிடியெல்லாம் பொருள் இருக்கு .  ஆனா ஒரு இடத்திலே கூட   உன்னைத் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்னு  பொருளே போடலே.
    கண்ணன் என் காதலன் அப்பிடீனு சொன்ன பாரதியார் கண்ணனை நண்பனாய்  மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பார்த்தாரே தவிர தப்பா பேசலை.  ஆழ்வார்கள் நாயன்மார்கள் எல்லாருமே இறைவனைக் காதலிச்சிருக்காங்க. தப்பான பொருள் யாருமே சொல்லலே.  இந்தக் காதல்ங்கற சொல்லுக்கு யாரு காமம்னு பொருள் சொன்னாங்கன்னே புரியலே,     ஜீவாத்மா  பரமாத்மா இரண்டறக் கலந்து த்வைதம் அத்வைதமா மாறுவதைத்தான் காதல்ன்னு  ஆண்டாள் கூட  உருகி இருக்காங்க.
    காதல்ன்னா காதல்தான் ,அன்புதான் பாசம்தான் ,நேசம்தான்  நிச்சயமாக் காமம்  இல்லே.இதை நாமெல்லாரும் மனசார ஏத்துக்கணும் ,  தென்றலோட அப்பா இறந்து போன துக்கத்தை தாங்க முடியாம இலங்கையிலேருந்து  இந்தியாவுக்கு வந்து என்னை யதேச்சையா பாத்திருக்காங்க, அப்பிடியே அவங்க அப்பா மாதிரியே நான் இருக்கறதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நெகிழ்ந்து போயி அவங்க மனசுக்குள்ளே அவங்க அப்பாவைப் பாக்கறா மாதிரியே ஒரு உணர்வை அனுபவிச்சு,  என்னை அவளோட அப்பாவா நெனைச்சு என் கிட்ட வந்து ,
    மனசு பூரா பாசத்தை வெச்சுகிட்டு ஐ லவ் யூ அப்பிடீன்னு சொன்னா.

     

    அவங்க அப்பாகிட்டே அப்பிடித்தான் சொல்லுவாளாம்.   நான் கூட முதலே தப்பா நெனைச்சேன் , நாம வாழற சமூகம் நமக்கு அப்பிடி ஒரு தப்பான பொருளைச் சொல்லிக் குடுத்திருக்கு. லவ் ன்னாலே அன்பு ,பாசம் , நேசம் அப்பிடிஎல்லாம் நமக்கு தோணறதே கிடையாது, நம்ம மனசைக் குப்பையா ஆக்கி வெச்சிட்டாங்க . லவ்வுன்னு சொன்ன உடனே நம்ம மனசு குப்பையை நோக்கிப் போக ஆரம்பிச்சுடுது. இந்த மனோ நிலைக்கு நம்மைத் தள்ளிய எல்லாரும்  வெக்கப்படணும். நாமெல்லாருமே வெக்கப் படணும் .
    இந்தப் பொண்ணு  என்னைப் பொறுத்த வரை  அப்பனுக்கு பாடம் சொன்ன அந்த முருகக் கடவுள் மாதிரிதான்  தெரியறா. அதுனாலே இந்த பொண்ணு  ஐ லவ் யூ அப்பிடீங்கற சொல்லுக்கு  சரியான பொருளை என்னிக்கு எனக்கு சொல்லிக் கொடுத்தாளோ  அந்த வினாடியிலேருந்து இவ என் பொண்ணுதான்  , நம்ம பொண்ணுன்னு சொல்லுங்க ,  நம்ம பையன் சந்தோஷுக்கு   தங்கைன்னு சொல்லுங்க   என்றார். காத்யாயினி .
    எஸ் நம்ம பொண்ணு இவ  .  ஐ லவ் யூ மை டியர் டாட்டர்  என்று நெற்றியிலே முத்தமிட்டு தென்றலை அணைத்துக் கொண்டார் கதிரேசன்.
    ஒட்டுமொத்த  மனிதர்களும்  கதிரேசனைப் பார்த்து அர்த்தம் புரிந்துகொண்டு   ஐ  லவ் யூ சார்   என்று ஏகோபித்த குரலில் புரிந்து வாழ்த்தினார்கள்

    Share
  • ஒரு அன்றாடத்தின் சில நொடிகள்

    ஈரோடு கதிர்

    காலையில் வீட்டில் கோடை பண்பலை ஓடிக்கொண்டிருப்பது வாடிக்கை. ஓடிக்கொண்டிருப்பது சொல்லலாமா? சரி பேசிக்கொண்டிருப்பது அல்லது பாடிக்கொண்டிருப்பது. பெரும்பாலும் மனம் அதன் நிகழ்ச்சிகளில் லயிப்பதில்லைலை. அது அதுபாட்டுக்கு சப்பதமிட்டுக்கொண்டிருக்கும். வீட்டில் ஒரு கூடுதல் ஜீவன் போல பலநேரங்களில் ரேடியோவும் டிவியும்.  சமீப நாட்களாய் ஒரு விளம்பரம் என்னை திடீரென வசப்படுத்திவிடுகிறது. ஒரு குழந்தையின் மழலை  உடைந்த குரலில் திடீரென   வரும் “எல்ல்லாலாலாஆஆஆருக்கும் நன்றி”. இது ஒலிக்கையில் மட்டும் மனசு அப்படியே மலர்ச்சியில் இழுத்துச் சொருகிக்கொள்ளும். அந்தக் குரலுக்கேற்ப ஒரு குழந்தையை மனசு உடனே உருவகிக்க முயலும். ஒவ்வொரு தினமும் வேறுவேறு முகங்களும், வேறுவேறு வித முகபாவங்களும் வந்துபோகும். இதுநாள் வரையில் இல்லாமல் நேற்று அந்த ”எல்ல்ல்ல்ல்லாஆஆஆஅருக்கும் நன்றி” நான் யாரிடமோ நன்றி சொன்னதுபோலவும், யார்யாரோ என்னிடம் நன்றி சொன்னது போலவுமான ஒரு உணர்வைத்தந்தது. படியிறங்கும்போது வழக்கத்துக்கு மாறான புன்னகையோடு மனைவிடம் பேசிவிட்டுப் புறப்பட்டேன்.

    கையில் காசு இல்லாதது நினைவுக்கு வந்தது, போகும் வழியில் எந்த ஏடிஎம் போகலாம் என மனசு நினைக்கையில், வண்டி தானாக பெருந்துறை சாலையை நோக்கித் திரும்பியது. டீச்சர்ஸ் காலனி கிழக்கு மூலையிலிருந்து பெருந்துறை சாலைக்கு குறுக்குவழியாக வரும் ரொம்பவும் இக்கட்டான் சந்தில் நுழைந்தபோது, எதிரில் பைக்கில் வந்தவர் சட்டென நின்று கொண்டு, பெரிதாக புன்னைத்தவாறு தொப்பியைக் கழட்டிக்கொண்டே

    ”அண்ணா” என்றார்.

    ”ஆஹா…. பிரபு” என்றவாறே நின்றேன்.

    சார்ட்ஸ், பனியன், பேட் எல்லாம் ஷட்டில் முடிந்து வருவதை உணர்த்தியது. சில நண்பர்கள் இணைந்து ஒரு சிறகுப்பந்து மைதானம் அமைத்து விளையாடி வருவது நினைவிற்கு வந்தது. விடைபெற்று நகர்கையில் மனதிற்குள் ஒரு நவீன சிறகுப்பந்து மைதானம் வந்துபோனது.

    ஏடிஎம் குறித்து யோசித்துக்கொண்டே மெதுவாக வண்டி ஓட்டுகையில், இந்தப் பகுதியில் மின்சாரம் இருக்குமா இருக்காதா என்றும் யோசனை தோன்றியது. மின்சாரம் இல்லையென்றால் பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் முடங்கிப்போவது வாடிக்கை. அப்படியே பெருந்துறை ரோடில் ஊர்ந்துகொண்டே ஆக்ஸில் வங்கி ஏடிஎம் முன் வண்டியை நிறுத்தினேன். மேலே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி ”எங்கே போறீங்க” என சைகையால் கேட்டார். ஏடிஎம் பக்கம் விரல் சுட்டினேன். ஓராமா போடுங்க என்பது போல் பணிவாக பாவனை செய்தார். சிரித்துக்கொண்டே அவர் சொன்னதைவிட ஓரமாகப் போட்டேன். இந்த மாதிரி சூழல்களில் என்னத்துக்கு ஓரமாப் போடனும், அதும் காலையிலையே! உடனே எடுக்கிறதுதானே எனப் பலமுறை எதிர்நிலை உணர்வு கொண்டதும் உண்டு.

    ஏடிஎம்மை நெருங்கையில் அந்த செக்யூரிட்டி புன்னகைத்தார். உள்ளே ஆள் இருப்பதாகச் சொன்னார். உள்ளேயிருந்தவர் ரொம்ப நேரம் ஏதேதோ ஆராய்ச்சிகள் செய்து பொறுமையாக வெளியேறினார். என்ன பேங்க் இது ரெண்டு மெசின் வைக்கமாட்டாங்களா எனத் தோன்றியது. ஏடிஎம் வந்த பிறகு கொஞ்சம் சோம்பேறித்தனம் கூடிப்போனதாக அவ்வப்போது உணர்வேன். அப்போதும் உணர்ந்தேன்.

    இயந்திரத்தில் அட்டையைச் சொருகி இழுத்தேன். “ஓடிப்போய்டு” என அதன் பாசையில் சொன்னது. மீண்டும் எடுத்து சொருகினேன். மீண்டும் அதையே சொன்னது. என்னடா இது என்று தலைப்பை மாற்றிச்(!) சொருகினேன். அது கேணத்தனம் என்பது புரிந்தது. சட்டையில் வைத்து தேய்த்து, மீண்டும் பலமுறை முயன்றும் ஏடிஎம் மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. வெளியில் பார்த்தேன். ஒருவர் காத்திருந்தார். சரி அப்புறம் போராடலாம் என வெளியில்வந்து அவருக்கு வழிவிட்டேன். அவரும் போராடுவதுபோல் தெரிய, கொஞ்சம் தலை எம்பி எட்டிப்பார்த்தேன். எனக்கு வந்த அதே ”ஓடிப்போ”. இப்போது திருப்தியாக இருந்தது. அப்போ அட்டையில் சிக்கல் இல்லை, இயந்திரத்தில்தான் போல.

    அவர் பாதுகாவலரிடம் எதோ சொல்ல, அவர் ரொம்பவும் சர்வசாதரணமாக “நெட் பிரச்சனையா இருக்கும் சார்” என்றார்.

    கடகடவென படிகளில் இறங்கும்போது அடர்த்தியான புகையிலை வாசம் அடித்தது. அது சிகரெட் வாசம் அல்ல. காய்ந்த புகையிலையின் மூர்க்கத்தனமான வாசம். அதெப்படி அங்கே. யாராச்சும் மூக்குப் பொடி போட்டிருப்பாங்களோ?.

    சட்டென குமாரவேலு நினைவுக்கு வந்தான். போனவாரம் ஊருக்குப் போயிருந்தபோது, அங்கிருக்கும் மஞ்சக்காரர் தோட்ட தென்னைமரச் சாரியில் புகையில கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. குமாரவேலுவோடது என்றார்கள். அவனும் அவன் தம்பியும் விவசாயத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இருவருமே என்னோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் பள்ளியில் படித்தவர்கள். கடிமான உழைப்பு. தொடர்ந்து மஞ்சளாகப் போட்டு சேர்த்து வைத்து சட்டை 15000 இருக்கும்போது விற்று மிகப்பெரிய தொகை ஈட்டியவர்கள். பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை என்பதாலும், விவசாயிகள் என்பதாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் சிரமப்படுவதையும் அறிவேன். பெருமாள் முருகனின் கங்கணம் கதை நாயகன் மாரிமுத்து நினைவுக்கு வந்துபோனார்.

    நொடியில் வந்த புகையிலை வாசம், நினைவுகளில் என்னை எங்கெங்கோ இட்டுச் சென்றதை உணரும் நேரத்தில் பெட்ரோல் பங்குக்குள் என் வண்டி தன்னிச்சையாய் நுழைந்து கொண்டிருந்தது. பெட்ரோல் போடவேண்டும் என்பதை நினைவில் தானாக முளைத்திருந்திருக்க வேண்டும். பெட்ரோல் அடிக்கும்போது அலுவலக அறையில் பங்க்காரர் இருக்கிறாரா எனப்பார்த்தேன். பல ஆண்டுகளாகத் அவரைத் தெரியும். எங்கள் அரிமா சங்கத்தின் முதல் தலைவரும் கூட. இருந்தால் மரியாதை நிமித்தம் ஒரு புன்னகையும், வணக்கத்தையும் பரிமாறிக்கொள்வதுண்டு. சமீபத்தில் இரண்டு கூட்டங்களில் நான் பேசியபோது உடனிருந்ததில் என்மீது பிரியம் கூடியிருப்பதை, அதன்பின் எங்கு பார்த்தாலும் சட்டென கையைப் பிடித்துக்கொள்வதின் மூலம் அறிந்ததுண்டு. அவருடைய மெலிந்த கரமும், எப்போதும் அதிலிருக்கும் ஒரு சில்லிப்பும் ஒரு கணம் நினைவில் வந்துபோனது.

    நினைவை வெட்டி அருகிலிருக்கும் ஸ்டேட்பேங்க் ஏடிஎம் பக்கம் நகர்ந்தேன். அப்போது வந்துநின்ற காரிலிருந்து இறங்கி ஏடிஎம் போய்க் கொண்டிருந்தார் ஒருவர். அட, ஆக்ஸிஸ் வங்கியில் நான் வழிவிட்ட நபர் அல்லவா இவர் எனப்புரிந்தது. கார் ஒரு கால் டாக்ஸி நிறுவனப் பெயரை முன்னும் பின்னும் பதித்திருந்தது.

    திடீரென சில மாதங்களில் கால் டாக்ஸிகள் ஈரோட்டை நிரப்பத் தொடங்கிவிட்டன. எல்லா ஊர்களிலும் கால் டாக்ஸிகள் இருக்கும்போது ஏன் ஈரோட்ல மட்டும் இல்லை என்று நினைப்பதுண்டு. ஆனால் திடீரென மூன்று நான்கு நிறுவனங்கள் கால் டாக்சிகளை இயக்கத் தொடங்கிவிட்டன. சமீபத்தில் ஒரு கால் டாக்ஸியில் போகையில், சும்மா பேச்சுக்கொடுத்தபோது அவர்கள் மட்டும் 80 டாக்ஸிகளை இயக்குவதாகவும், கால்டாக்ஸிகள் குறித்தும் நிறையச் சொன்னார். ஈரோட்டில் மொத்தம் 200 வண்டிகளுக்கு மேல் இருக்குமென்றும் சொன்னார். எப்படி அளந்தாலும் 2 – 3 கி.மீ தூரம் மட்டுமே இருக்கும் நகரத்தில் அத்தனை வண்டிகளுக்கு வேலையா எனக்கேட்டபோது ஆட்டோக்களுக்கு போட்டியாக என்று சொன்னது உண்மைதான் என்றும் பட்டது.

    ஈரோடு மாதிரி ஊர்களில் ஆட்டோக்களை அணுகுவது அவ்வளவு எளிதல்ல. எடுத்த எடுப்பில் நூறு ரூபாய் வரைக் கேட்கும் இடத்தில் முதல் 4 கிலோ மீட்டருக்கு 75 ரூபாய், அதற்கு மேல் கிமீக்கு 10 ரூபாய் என்றிருப்பது ரொம்பவும் வசதிதான். நம் வீட்டு வாசப்படி தேடிவந்து புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடம் வரை மட்டுமே கட்டணம் என்பதும் நன்றாகத்தான் இருக்கின்றது. நாலு பேர் வரை வசதியாகச் செல்லும் வாய்ப்பும் கூட.

    அதே சமயம் காலம் காலமாய் இருக்கும் ஆட்டோக்கள் நசுங்கிப்போவதை நினைக்கவும் சங்கடமாக இருந்தது. மளிகைக்கடைகளை முடக்க வரும் வால்மார்ட் நிறுவனங்களும் இதுபோன்றதொரு திட்டம்தானே என யோசிக்கும்போதே சிந்தனை எங்கு போகிறதெனக் மனக்குரல் கேட்டது.

    அலுவலகப் படியேறுகையில், அங்கே நின்று கொண்டு பின்னாள் வீட்டு ஆயா, இரண்டு வயதுப் பேரனை இக்கத்தில் இடுக்கிக்கொண்டு சோறூட்டிக் கொண்டிருந்தார். முகத்தை இறுக்காம வைத்துக்கொண்டு மென்று கொண்டிருந்தான். வழக்கமாக பார்த்தவுடன் சிரிக்கக்கூடிய குழந்தை. அவனைப் பார்த்து ”வணக்கம் சார்” என்றேன். காரணம் அவன் எப்போது என்னைப் பார்த்தாலும் பாட்டி சொல்லிக்கொடுத்தபடி கும்பிட்டவாறு வணக்கம் எனச் சொல்ல முயல்வான். என் வணக்கத்தை அவன் கண்டுகொள்ளவில்லை. “ஏன் சார் வணக்கம் சொன்னாக்கூட கண்டுக்க மாட்டேங்குறார்” என்றேன்.

    ”சோறு திங்கச் சொன்னதுக்கு கோவத்த பாருங்க” என்றவாறு அடுத்த வாய் சோறூட்டினார். கோவித்துக்கொள்ள 2 வயது சிறுவனுக்கும் கூட காரணம் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவாரசியம்.

    தேநீர் நேரம். வெயில் அநியாயத்துக் கொளுத்தத் தொடங்கியிருந்தது. டீக்கடையில் நானும் கார்த்தியும் நின்று கொண்டிருக்கின்றோம். எதிரில் இருக்கும் சிந்தாமணி ஒயின்ஸ் பின்புற வழியில் வந்த ஒரு ஆள் கைகளில் மதுபானப்புட்டியும், தண்ணீர் பாக்கெட்டும் வைத்திருந்தார். கார்த்தியிடம் கேட்டேன்.

    “அந்தாளென்ன ராவாவா அடிக்கப்போறானா?”

    “இப்பப் பாருங்க என்ன நடக்கப்போவுதுனு”

    ”என்ன நடக்கும்”

    “அப்படியே கப்னு அடிச்சுட்டு, பாக்கெட் வாட்டர வாய்க்குள்ளே சர்னு அடிச்சு கொப்பளிச்சு துப்பாம முழுங்குவான் பாருங்க. ஒரு சொட்டுக்கூட வீணாயிடக்கூடாதுல்ல”

    ”அப்படியே ராவாவா, இந்த வெயில்ல டீ குடிக்கவே அலறுதே. சரக்கை ராவாவா அடிக்கிறதா… யெப்பா சாமீ?”

    அந்த ஆள் பாட்டிலை கவிழ்த்து ஒரே மடங்கில் குடித்துவிட்டு, பாட்டிலை ஸ்டைலாக சாக்கடையில் வீசிவிட்டு, பாக்கெட் வாட்டரை வாயில் பீய்ச்சி, கார்த்தி சொன்னதுபோல் குடிக்காமல் கீழே துப்பினார்.

    கார்த்தியை பார்த்து புன்னகைத்தேன். அந்த ஆள் புறப்பட்டார்

    ”எப்படி கார்த்தி இப்படி?”

    “அதெல்லாம் இப்படித்தான், இப்பப் பாருங்க அந்தத் தள்ளுவண்டியில ஒரு மாங்காத்துண்டு எடுத்து வாய்ல போட்டுட்டுட்டுப் போவான் பாருங்க”

    அந்த ஆள் ஒரு கம்மங்கூழ் வண்டியைக் கடந்து கொண்டிருந்தார்.

    மாங்காய்த் துண்டை எடுக்கவில்லை.

    ”ம்ம்ம்.. அவ்ளோதான் ஜனசங்கமத்தில ஆளு ஐக்கியமாயிடுச்சு” என்றார் கார்த்தி

    சில நொடிகளுக்கு முன் பார்த்த குடிமகன் என்ற அடையாளம் ஏதுமற்று அங்கிருந்த கூட்டத்தில் கலந்து நகர்ந்து போய்க்கொண்டிருந்தார்.

    “ஸ்பிரிட் படம் மாதிரி, ஒரு கேமரா எடுத்துட்டுச் பின்னாடியே போனோம்னா செம இண்டரஸ்டிங்கான மேட்டர் கிடைக்கும்” என்றார் கார்த்தி

    மோகன்லால் நடித்த ஸ்பிரிட் படத்தை சமீபத்தில்தான் நாங்கள் இருவருமே பார்த்திருந்தோம். ஒரு பின்இரவில் வீட்டில் நான் தனியே பார்த்துக் கொண்டிருந்தேன். படம் பாதிமுடியும் தருணத்திற்குள்ளேயே என் மூளை சூடேறிவிட்டது. சரக்கு அடிப்பதிலிருந்து ஒதுங்கியிருக்கும் எனக்கு, எங்காச்சும் போயி ஒரு ரெண்டு பெக் அடிச்சிடுவோமா எனத்தோன்றியது. ஒரு சினிமா என்னசெய்துவிடும் என்று சொல்பவர்களுக்கு என் பதில் சினிமா “சிலவற்றைச் செய்துவிடும், நல்லதைச் செய்ய இயலுமா எனத் தெரியவில்லை, நல்லதல்லாதவற்றை வெகு எளிதாகச் செய்துவிடக்கூடியதுதான்”

    அதே படத்தின் பின்பாதியில் அந்த பாடலாசிரியர் சமீர் மரணிக்கும் நொடியில் “அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ” என அலறும் நொடியை அப்படியே உள்வாங்குபவன் அந்த நொடியே குடியை விட்டு ஓடிவிடவும் சாத்தியமுண்டு. சமீபத்தில் நண்பர்களிடம் ”பாருங்க, பாருங்க” எனப்பரிந்துரைத்த படங்களில் அதுவும் ஒன்று.

    ஸ்பிரிட் என கார்த்தி சொன்னவுடனே, அதன்பின்னர் நானும் கார்த்தியும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அந்த 11.30 மணி நேரத்து பகல் ”ராவா” குடிமகன் எனக்கு பாஸ்கர் அண்ணனின் நினைவை மீட்டிவிட்டார். சமீபத்தில்தான் பாஸ்கர் அண்ணனின் பெண்ணைப் பார்த்தேன். என் மகள் படிக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்போ, ஒன்பதாம் வகுப்போ படிக்கின்றாள். தனது தாத்தாவோடு பள்ளியில் எதோ கலைநிகழ்ச்சி முடித்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தாள். பாஸ்கரின் அப்பாவைப் பார்த்த பின்தான், அந்தக் குழந்தை பாஸ்கரின் பெண்தான் எனப்புரிந்தது. அவள் பிறந்த அன்றே மருத்துவமனையில் பார்த்ததும் அப்போது நினைவுக்கு வந்தது.

    எத்தனை அற்புதமான மனிதன் பாஸ்கர். 80களிலேயே பிஇ முடித்து பின்னர் எம்பிஏ படித்து வேலைக்குச் செல்லாமல் தொழிலில் சிறப்பாகயிருந்த மனிதர். பழகுவதற்கு அத்தனை இதமான மனிதன். அந்தக் காலத்தில் எங்களை வெளியூர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் அவர்தான். அவருடன் RX-100ல் போவது உலகின் உற்சாகமிகு சந்தர்ப்பங்களில் ஒன்று எனக்கு.

    நான் முதன்முதலில் பியர் குடித்ததுகூட அவரோடுதான். அவர், இப்போது ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் அவரின் நண்பர், நான் என மூவரும் பியர் குடித்துவிட்டு ரவி தியேட்டரில் எதோ மோகன்லாலின் படமோ சுரேஷ்கோபியின் படமோ பார்த்ததாக நினைவு.

    பெரிய நட்பு வட்டம் அவருடையது. நானெல்லாம் அதில் பொடிப்பையன். அவர்களின் நட்பு வட்டம் எப்போது கூடினாலும் குடி பிரதானப்படும். அப்போதெல்லாம் குடிப்பது எத்தனை பெரிய ஆண்மை (!) நிறைந்த விசயமென்று ஆச்சரியப்பட்டதுண்டு. காலம் உருண்டோடியது. எங்களுக்குள் தொடர்புகள் குறைந்துபோனது. 10-15 ஆண்டுகளில் குடியால் மட்டுமே உடல்நிலை சீரழிந்து, மஞ்சள் காமாலை தாக்கி ஒரு கட்டத்தில் இறந்து போனார் பாஸ்கர். குடி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது பாஸ்கர் எப்படிப்பட்ட கம்பீரத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பார் என ஒரு காட்சிக்கோர்வை அவ்வப்போது மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

    இந்த தினத்தை எந்த நொடியில் தொடங்கினேன்? இதெல்லாம் காண்பேனென்றோ, உணர்வேனென்றோ நினைத்திருந்திருப்பேனா? ஒரு நொடிக் காட்சி, உணர்தல் ஒரு கொத்து நினைவுகளை அள்ளியள்ளிக் கொட்டிவிடுகிறது. ஒரு அன்றாடத்தின் சில உணர்தல்களிலிருந்து ஒவ்வொருவரும் எங்கெங்கோ தாவி, தவித்து, நிரம்பி, வறண்டு, மீண்டு வருவதை நினைக்கும்போது நான் என்பது சிந்தனைகளின் தொகுப்போ என்று தோன்றுகிறது.,

    ஒரு எல்ல்லாலாலாஆஆஆருக்கும் நன்றி, ஒரு புகையிலை வாசம், ஒரு பெட்ரோல் பங்க் நுழைவு, கண்ணில்படும் ஒரு கால் டாக்ஸி, ஒரு ’ராவா’ குடிமகன், இதுபோல் சட்டென நினைவுகளைக் கிளர்ந்து நம்மை அதில் மூழ்கடிக்கவோ, தாலாட்டிடவோ, தவிக்கவிடவோ ஆயிரமாயிரம் நம்மைச்சுற்றி அன்றாடங்களில் எல்லா நொடிகளிலும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டேயிருக்கின்றன.

    முழு இரவும் வேலைகள் செய்துவிட்டு காலை 6 மணிக்குப் படுத்து 9 மணிக்கு எழும் ஏதாவது ஒரு அபூர்வ நாட்களில் சிந்தனைகளற்ற ஆழ்ந்த உறக்கத்தினை உணர்வதுண்டு. அப்படியொரு தூக்கத்திற்காகக்கூட முழு இரவு விழிப்பு நிலையை ரொம்பவும் அனுபவிப்பதுமுண்டு. எதையும் உணராமலும், எதுவும் உரசாமலும். சிந்தனைகள் யாதுமற்றிருக்கும் கணம், அவ்வளவாக வாய்த்து விடுவதில்லை. அப்படியொரு நொடி கிடப்பதை ஒரு வரமாக உணர்கிறேன்.

    சிந்தனைகளற்று இருப்பது குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் என சமீபத்தில் ஒரு வரி எழுதியது இப்போது என் சிந்தனையை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

    வேறொன்று நிரம்பும் வரை அதுதான் சுழலும். பின்னர் வேறொன்று நிரம்பும்.

    Share
  • பிக்கோலிம் புளுகு – 2

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

     

    Goa at its height under Portuguese occupation: Novas Conquistas (highlighted in yellow), Velhas Conquistas (highlighted in red)

    வரலாற்றுப் பின்னணி:
    வாஸ்கோட காமா (Vasco da Gama) கோவாவிற்கு வரும் கடல் வழிப் பாதையைக் கண்டறிந்த பிறகு, போர்சுக்கீசிய வர்த்தகர்கள் 1498 இல் இந்தியாவில் கோவாவை தங்களது முதல் வர்த்தக மையமாக அமைத்தார்கள். இதனால் 1542 ற்குள், கோவாவின் ‘வெலஸ் கான்கியுஸ்டாஸ்’ (Velhas Conquistas) பகுதி செழிப்படைந்தது [4]. இந்துவாகவோ, இஸ்லாமியர்களாகவோ இருக்கவே விரும்பியவர்களை விட, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய அப்பகுதி மக்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழக்கப் பட்டன [4]. கோவாவில் 1560 இல் ஒரு விசாரணை அமைப்பு நிறுவப்பட்டு, முதல் சில ஆண்டுகளிலேயே கிறிஸ்துவ மத அமைப்புடன் மாறுபட்ட மனப்போக்கு கொண்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர் [5]. இதனால் அருகாமையில் இருந்த இந்துப் பகுதிகளில், குறிப்பாக கோவாவின் வட பகுதியிலும், ‘நோவா கான்கியுஸ்டாஸ்’ (Nova Conquistas) பகுதியிலும் வாழ்ந்த மக்கள், புதியதாக நிறுவப்பட்ட இந்த விசாரணைக் குழுவினால் கலவரம் அடைந்தார்கள் [4].

    இக்காலத்தில் கோவாவின் வளர்ச்சி மிகுதியாக இருந்தாலும், வடக்கில் இருந்த மராட்டிய அரசின் வளர்ச்சியும் பரவலும் இதனைவிட அதிகமாக இருந்தது [6]. இதனிடையில், 1603 க்கும் 1639 க்கும் இடைப்பட்ட காலத்தில், டச்சுக்கரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போரினால், டச்சு கடற்படை கோவாவின் கடல் வழியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடல் வழித் தொடர்பைத் துண்டித்தது. இதனால் போர்ச்சுகீசியர்களால், தங்கள் போர்சுகல் நாட்டிலிருந்து எந்த உதவியையும் அடைய முடியாமல் போனது. இதனால் கோவாவில் வாழ்ந்தவர்களின் வாழ்வு வறுமையில் சீரழியத் தொடங்கியது. டச்சு அரசு பிற நாடுகளில் உள்ள போர்சுகீசியர்களின் வர்த்தக மையங்களை வென்று, தங்கள் நாட்டுடன் இணைத்துத் தங்கள் பேரரசை விரிவாக்க நினைத்த முயற்சியின் விளைவே டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் கோவாவில் நிகழ்ந்த போருக்குக் காரணம் [4]. இதே காலத்தில் மராட்டியப் பேரரசர்  **சிவாஜி பான்ஸ்லே (Shivaji Bhonsle), பல தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தனது மராட்டியப் பேரரசை விரிவு படுத்திக் கொண்டிருந்தார். இதனால் 1635 ஆம் ஆண்டு வாக்கில், மராட்டியப்பேரரசு விரிவடைந்து போர்சுக்கீசிய கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் ஒரு பொதுவான எல்லை அமைந்தது [7]. மராட்டியப் பேரரசின் வளர்ச்சியும், அதே சமயம் கோவாவில் நிகழ்ந்த பஞ்ச நிலையும், கோவாவின் வட பகுதியில் வாழ்ந்த மக்களை மராட்டியப் பேரரசை ஆதரிக்கச் செய்தது. அப்பகுதில் வாழ்ந்த பிறரும், குறிப்பாக கோவாவின் எல்லைப் பகுதியில் இருந்த, செல்வாக்கு நிறைந்த கோலாப்பூர் (Kolhapur) பகுதியில் உள்ள ஊர்களின் மக்களும் மராட்டியப் பேரரசின் வருகையை மிக விரும்பி ஆதரித்தார்கள் [7].

    டச்சுக்காரர்கள் ஏற்படுத்திய கடல்வழித் தடை நீங்கிய அதே காலத்தில், 1639 ஆம் ஆண்டில் மராட்டியப் பேரரசு அண்மையில் உள்ள மைசூர் அரசுடன் ஒரு உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உடன்படிக்கையின்படி, மராட்டிய அரசும் மைசூர் அரசும், இரு அரசுகளுக்கும் பொதுவாக உள்ள நாடுகளின் எல்லையை மதிப்பதென்றும், ஒருவர் நாட்டின் எல்லைக்குள் மற்றவர் ஊடுறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டன [8]. அத்துடன் மராட்டியப் பேரரசு தக்காணத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பாதுகாப்பாக இருக்க முடிவு செய்தது. மராட்டியப் பேரரசின் ஒரே ஒரு அமைதியும் பாதுகாப்பும் அற்றப் பகுதியாக அந்நாட்டின் தெற்கு எல்லை, அதாவது போர்சுக்கீசியர்கள் வசம் இருந்த கோவாவின் பகுதி அமைந்திருந்தது. கோவாவின் வடபகுதியும், கிழக்க்குப் பகுதியும் மராட்டியப் பேரரசை எல்லையாகக் கொண்டிருந்தது [8].

    மோதலின் பாதையில்:
    மராட்டியர்கள் 1640 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவாவின் போர்சுக்கீசிய தலைமை ஆளுநருடன் (Governor-General) பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டனர் [8] [9]. சமயத் தலைவர்கள் தனக்குக் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, தலைமை ஆளுநர் ‘மத்தியாஸ் டி ஆல்பகுர்கே’ (Matias de Albuquerque) மராட்டியர்களுடன் முரண்படும் பேச்சுவார்த்தைக்குத் தயங்கினார். மதத் தலைவர்களின் ஆதிக்கம் அக்கால கோவாவின் போர்ச்சுக்கீசிய அரசாங்கத்தின் மீது அதிகம் இருந்தது. அவர்களது விருப்பத்தை மீறி, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மராட்டிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவர்கள் மதத்தின் குறிக்கோளுக்கு எதிரானதாகக் கருதப் பட்டது [4] [10].

    இந்த தயக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட மராட்டிய அரசு, அமைதி நிலவிய மைசூர் எல்லையில் இருந்த தனது படைகளை கோவாவின் எல்லைக்குத் திருப்பியது. மராட்டிய அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, மராட்டியப் பிரதிநிதியுடன் பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். ஆனாலும் பேச்சு வார்த்தை எந்த ஒரு தீர்வும் இன்றி முடிவுற்றது. மதசார்பின்மைக் கொள்கையைக் கொண்ட மராட்டிய அரசு, மதத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்ததாக கோவா அரசு அங்கு வாழும் இந்துக்களின் மேல் எடுக்கும் நடவடிக்கைகளையும், கொடுக்கப்படும் தண்டனைகளையும் சுட்டிக் காட்டிக் கண்டனம் தெரிவித்தது [4] [9]. எந்த தீர்மானத்திற்கும் வர இயலாது போன இந்தப் பேச்சு வார்த்தைதான் பிறகு ஏற்பட்ட மோதல்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது [9].

    1640 ஆம் ஆண்டு, கோவாவின் கோடை காலம் தொடங்கிய நிலையில் (பிப்ரவரி – மார்ச் 1640), தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, போர்ச்சுக்கீசியப் படைகளை பேர்னம் ( (Pernem) மற்றும் பிக்கோலிம் பகுதிகளைச் சார்ந்த கோவாவின் கிராமங்களில் குவித்தார். சந்தேகத்திற்குரிய இந்த நடவடிக்கைகளினால், மராட்டிய அரசும் தனது சிறிய படை ஒன்றை பிக்கோலிம்மை ஒட்டியிருந்த மராட்டிய எல்லைக்கு நகர்த்தியது. நில வழி போர்சுக்கீசிய ஊடுருவலை எதிர்பார்த்திராததால் அதுவரை அப்பகுதி பாதுகாப்பினை மராட்டிய அரசு பலப்படுத்தாமல் விட்டு வைத்திருந்தது [9]. பிக்கோலிம் பகுதியானது, கோவாவில் பிறந்து வளர்ந்து, பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ‘நிக்கோலா டி மெல்லோ’ (Nicolau de Mello) என்ற போர்ச்சுக்கீசிய அரசுப் பிரநிதியின் மேற்பார்வையில் இருந்தது. நிக்கோலா டி மெல்லோ கோவா மக்களிடையே பிரபலமாகவும் அவர்களது நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்தார் [9]. கோவாவின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றறிஞர் ‘டேவிட் டிஸோஸா’ (David D’Souza), பிக்கோலிம் பகுதி வாழ் இந்துக்கள், நிக்கோலா டி மெல்லோ இந்துக்களுக்கு எதிரானவர் என்று கருதி மாராட்டியருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர் என்று கூறுகிறார் [11]. வசந்தகுலன் ஸ்ரீனிவாசன் என்ற அறிஞரோ, தங்களின் மீது நிக்கோலா டி மெல்லோ கொண்ட அடக்குமுறையால் ஆத்திரமடைந்திருந்தாலும் இந்துக்கள் அவருக்கு விசுவாசத்துடன் இருந்ததாகவும், மராட்டியர்கள் எல்லைப் பகுதியில் படை குவித்ததை அறியாதவர்களாகவும் இருந்தார்கள் என்று கருதுகிறார் [9].
    (தொடரும்)

    படம் உதவி:
    Chapel of St. Catherine, built in Old Goa during the Portuguese occupation: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Churcholdgoa_%2864%29.JPG/450px-Churcholdgoa_%2864%29.JPG

    Portuguese Goa: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/GoaConquistas.png/477px-GoaConquistas.png

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    **என் குறிப்பு:
    சிவாஜி பிறந்தது 1630 இல் என்பதையும், அவருக்கு அரசராக முடி சூட்டப்பட்டது அவரது 44 வயதில் (1674இல்) என்பதையும் கவனத்தில் கொள்க. இந்தக் கட்டுக்கதை குறிப்பிடும் காலத்தில் அவர் பதின்ம வயது சிறுவனாகக் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை.

     

    Share
  • கல்யாணப் புடவை

     

    -பொன். இராம்

    “என்னங்க?. . . கோவிந்தனைப் பார்த்தீங்களா? நம்ப பொண்ணு கலாவுக்கு ஒரு புடவை வாங்கணும்னு தேடிக்கிட்டிருக்கேன்”

    “யாரு?. . . அந்த பழைய சைக்கிள்ல துணியால மூட்டை கட்டித் தெருத் தெருவா வித்துட்டு வருவாரே அவரா?”

    “ஆமாங்க! அவரைத்தான் தேடுறேன்”

    சும்மா   செல்ல கைல வைச்சுக்கிட்டு—–எப்பப் பாத்தாலும் பிரஸ் பண்ணிக்கிட்டு….

    காலேஜ் பசங்க மாதிரி காதுல வேற  செருகியாச்சு……

    பிடுங்கி அதை எறிந்தாள் நந்தினி.

    நந்து….உனக்கு விஷயமே புரிய மாட்டேங்குதே…கரெண்ட் டேட் சயின்ஸ் விஷயமெல்லாம் தெரிஞ்சுடணும். இல்லேன்னா வேலை பாக்கற இடத்துல குப்பை கொட்ட முடியாது.

    அதுக்காக கண்ணுல கண்ணாடி வேற—– வெள்ளெழுத்து ஆரம்பிச்சு வருஷக்கணக்கா ஆகுது.

    இந்த  செல் கண்டுபிடிச்சவன் நம்பரெல்லாம் கொஞ்சம் பெரிசா வைக்கப்படாதா? எனக்கொரு டவுட்.

    ‘ பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா ‘ ன்னார் பாரதியார்.

    ”பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே”ன்னும் அவர்தானே பாடியிருக்கார். இதுக்கு என்ன பொருள்?

    ரெண்டும் ஒரே ஆளாயிருந்தாலும் அவர் எந்த நேரத்துல பாடினாரோ? கவி தன் கற்பனைச் சிறகை எப்போது சிறகடிக்குமோ? யாருக்குத் தெரியும்?

    சரி! என்னவோ கேட்டியே!

    பேச்சை மாத்தாதீங்க……விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னாங்களாம்!

    புடவைக் கடை கோவிந்தனைக் கேட்டேன்……

    “இல்லையே! நான் அவரைப் பாத்துக் குறைஞ்சது மூணு மாசமாவது இருக்கும். அவர் வீடு எங்கன்னு தெரியுமா?”

    “எனக்குத் தெரியாது. அடுத்த தெரு அம்புஜம் மாமிக்குத் தெரியும். கேட்டுச் சொல்றேன்”

    “ஊரிலே எவ்வளவோ ஜவுளிக்கடையெல்லாம் இருக்கும் போது ஏன் கோவிந்தனைத் தேடிக்கிட்டிருக்கே?”

    “ரங்கநாதன் தெருவில போனா ஆயிரம் கடை இருக்குறது எனக்கும் தெரியும். கோவிந்தன் ஒரு ராசியான ஆள். அவர் கையால ஒரு நூல் புடவை வாங்கினா கூட வாங்கினவங்க வீட்லயும், வாங்கினவங்களுக்கும் நல்லது நடக்கும்.இது உங்களுக்குத் தெரியாதா?

    ஏன் நம்ம மூத்த  பொண்ணு லதாவுக்கு அவர்கிட்ட புடவை வாங்கினதக்கப்புறம் தானே மாப்பிள்ளையே அமைஞ்சது. அதை மறந்துட்டீங்களா?”ஆனாலும் கார்த்திகை நட்சத்திர மாப்பிள்ளை தானே கிடைச்சது..

    ஏன் அதுக்கென்ன….இந்த பொம்பளைங்களே இப்படித்தான்….அமையற வரைக்கும் அப்படி…இப்படின்னு சொல்ல வேண்டியது……..அதுக்கப்புறம் ஏமாத்தி செஞ்சுட்டாங்கன்னு ஒரே குறை பாட வேண்டியது. பொண்ணப் பாத்துட்டு ஜாதகம் பாக்கறது, மாசக்கணக்குல வாழ்ந்துட்டு ஜாதகம் பாக்கறது இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

    ஆமா…. கார்த்திகை நட்சத்திரத்துக்காரங்ககிட்ட கல்மிஷம் இருக்கும். கண்மூடித்தனமா சொந்தங்ககிட்ட பாசம் இருக்கும். ஆனா வெளியே ஒண்ணு உள்ளே ஒண்ணா இருக்கும். அடுத்தவங்க அந்தரங்கம்னு தெரியும்.இருந்தும் மத்தவங்க கிட்ட சொல்றதுன்னா முதல் ஆளுதான். இது சரி தப்புன்னு ஒரு வயசுக்கு மேல தான் அவங்களால உணர முடியும். தன்னை வெளிப்படுத்திக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க……”அறை பறையன்ன கயவர்”னு தெரியுமா?

    உன் ஜாதகம் பாக்கற புத்திய விட மாட்டியா? பொண்ணு கலியாணம் முடிஞ்சு ஒரு புள்ளையும் பெத்து அது அஞ்சு படிக்குது. இப்ப போய் விதைச்ச நெல்லை பிடுங்கிப் பாத்த மாதிரி……………திரும்பப் புது அத்தியாயமா எழுத முடியும்?பொண்ணு ஒங்கிட்ட வந்து குறை படிச்சாளா?சும்மா பிலாக்கணம் படிக்காதே.

    ஜோதிடம்  ஒரு சயின்ஸ் அது எல்லாருக்கும் பாக்க அமையாது. அதுக்கு முக ராசி வேணும். ………..அப்படியென்று இழுத்தார். சொன்னா கோபிச்சுக்கக் கூடாது.பெண்கள் ஜாதகம் பார்ப்பது வீட்டுக்கு நல்லது கிடையாது. சொன்னா நீ திட்டுவ….ஆனாலும் நீ சொன்னது கரிநாக்கு போல டாண்ணு தான் நடந்துக்கிட்டு இருக்கு….இருந்தும் உன்னைப் பாராட்ட மாட்டேனே…..என்று சிரித்தார் ராம் அர்த்தத்துடன்.

    முப்பது வருடமாக என்னைக்கு நீங்க என்னை பாராட்டியிருக்கீங்க………………. விட்டா பெண் படிக்கக்கூடாதுன்னு சொல்வீங்களா?

    சிரித்தபடி முகத்தை மலர்த்தினாள் நந்தினி. அவர்களுக்குள் மலர்ந்த தாம்பத்தியத்தின் சுவை அவள் பேச்சில் இனித்தது. அவள் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கணவன் சொல்லும் வாயசைவிற்காகக் காத்திருந்தாள். .இல்லடா! பெண்கள் படிக்கணும். தன்னை,தன்னைச் சார்ந்து வாழும் சமூகம் இவற்றிற்குத் தொண்டு செய்து வாழணும். நேர்மையான முறையில. அதுக்குத்தான் உன் அறிவை விருத்தி செய்வதை நான் இவ்வளவு வருஷம் ஆகியும்  தடுக்கல. ஆனா…….  நந்து……………..நட்சத்திரம் பாத்திருக்கியா…………அதைச்சுத்தி இருக்கிற எல்லாவற்றையும் எனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா? எல்லாவற்றையும் தெரிந்தவர்கள்தாம்மா சரியா வாழ்க்கையைச் சொல்ல முடியும்.

    வெட்டித்தனமா சில பேர் கிடைச்ச சுவடிய வைச்சிக்கிட்டு வயித்தைக் கழுவ உட்கார்ந்து பொழுதைக் கழிக்குதுங்க. ஹூம்…நான் என்ன சொன்னாலும் மாறவா போற….சொல்ல வந்ததைத் தெளிவா சொல்லு…

    “ஆமா! அத நானும் மறந்துட்டேன். “இப்ப கலாவுக்கும் மாப்பிள்ளை தேடிட்டிருக்கோம். எதுவும் அமையல. அதான் கோவிந்தன் கையால ஒரு புடவை வாங்கலாம்னு. . .”நீ கூட பர்ப்பில் கலர்ல லதா கலருக்கேத்த மாதிரி எடுத்த. நான் கூட ஏன் லைட் கலர்ல எடுத்தேன்னு கேட்டேன்”அந்தக் கதை தானே…….

    அதே தாங்க………..

    அவனவன் இருக்கற தகப்பனைச் செத்ததாச் சொல்லி பிள்ளையை பத்து மணிக்கு மேல ஓட விடுறானுங்க……தவிக்க விடுறானுங்க……….இந்த காலத்துல போய் நீ ……….

    என்ன சொல்றீங்க….ஒண்ணுமே புரியலையே……..

    ஜாதகம், சுவடின்னு ….. ஒரு பழைய கதை அம்புலிமாமா கதை மாதிரி இருந்தது. எதுல படிச்சோம்னு கவனமில்லை. நீ ஏதோ சந்தேகம்னு கேட்டாயே? மறுபிறப்பு பத்தி….அதைப்பத்தி நெட்ல தேடினேன். ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்றாங்க….  என்ன இருமற.. ஹாஸ்பிடல் போகலையா……..

    போகணும்….ஆனா மருந்துக்கு ஆயிரத்துக்கு மேல செலவாகும்….சேல எடுத்துடலாம் அதுக்கு.. உடம்புக்கு வந்தா செத்தா போய்டுவோம் இந்த காலத்துல……

    உன் ஆசைய ஏன் கெடுக்கணும்? இந்தப் பொண்ணுக்குப் பரணி நட்சத்திர மாப்பிள்ளையைப் பாப்பமா? கோவிந்தன் அட்ரஸைக் கொடு. நான் போய்ப் பாத்து வர்றேன்” உன் நம்பிக்கையைப் போய்க் கெடுப்பானேன்! பரணி தரணி ஆளுமில்லையா?

    நந்தினி அம்புஜம் மாமியிடம் அட்ரஸைக் கேட்டு வாங்கிக் கொடுத்து விட்டாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணி வாக்கில்  டிவிஎஸ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலிகிராமம் கிளம்பி விட்ட ராமை உள்மனம் ஏதோ எச்சரித்தது. அதை வெளிக்காட்டாமல் சாலிகிராமத்தை அடைந்தார் ராம்.

    “சாலிகிராமம், தசரதபுரம் 3வது தெரு, 10ம் நம்பர் வீடு இது தானே?”

    “ஆமாம்! நீங்க யாரு? எங்கேயிருந்து வர்றீங்க?” என்றபடி வந்தாள் வெள்ளைப்புடவை உடுத்திய பெண் .

    “என் பேர் ராம். திருவல்லிக்கேணியிலிருந்து வர்றேன். இங்க கோவிந்தன்னு புடவை விக்கறவர் இருந்தாரே!

    “ஆமாங்க!”

    “அவரைப் பாக்கலாம்னு தான் வந்தேன். அவர் இல்லையா?”

    பெண்ணை உற்றுப்பார்க்கும் பழக்கம் ராமிடம் இல்லையென்றாலும் அவள் கண்களில் தெரிந்த ஒளி அவரை என்னவோ செய்தது.

    நீங்க என்ன விஷயமா வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    “உங்க வீட்டுக்காரர் கிட்ட ஒரு புடவை எடுத்த ராசி என் மூத்த பொண்ணுக்கு கல்யாண யோகம் கூடி வந்த மாதிரி என் இளைய பொண்ணுக்கும் ஒரு புடவை அவர் கையால எடுத்து கட்டலாம்னு நினைச்சி வந்தேம்மா!”

    கொஞ்சம் உள்ளே வரீங்களா?

    உட்காருங்க! நீங்க வந்தது சரியான வீடுதான்.

    கொஞ்சம் இருங்க!  புடவையை எடுத்துட்டு வரேன். அவர் நாலு மூட்டை புடவை வாங்கினது கிடக்கு……

    அவள் உள்ளே சென்ற நொடியில் ராமின் மனம் யோசித்தது. இவள் கோவிந்தனுக்கு என்ன உறவு! வெள்ளைப்புடவை வேறு……..என யோசித்தபடி அருகிலிருந்த புத்தக அலமாரியை உற்று நோக்கினார் ராம். பகவத் கீதை தொடங்கி அபிராமி அந்தாதி, ராமகிருஷ்ணர்,சாரதாதேவி, அரவிந்தர் என ஒருவர் விடாமல் இடம்பெற்றிருந்த அந்த இடத்தை விட்டு கண்கள் ஏனோ அகல மறுத்தன.

    ராம் பார்ப்பதைப் புடவை மூட்டையுடன் வந்த அந்தப் பெண் வெங்கலமணிகள் இணைந்த சப்தம்போல் சிரித்தாள். இவையெல்லாம் அவர் படித்தவை.என் பெண்……. எனக்கூறியவள்….கோவில் மணி எங்கோ ஒலிப்பதைக் கூர்ந்து கவனித்தாள்.

    நீங்கள் இந்தப் புடவை மூட்டையில் உங்களுக்குப் பிடித்ததை எடுங்கள். இதோ வருகிறேன் எனக் கூறியபடி விர்ரெனப் பறந்து சென்றதைப்போல ராமிற்குத் தோன்றியது.

    வெளியே நிறைய பேர் பேச்சுக்குரல் கேட்கவே,இலேசாக எட்டிப் பார்த்தார் ராம்.

    வெளியே புழுதி பறக்க கையில் பூஜைத்தட்டுடன் ஒரு ஊரே கூடியிருந்தது.

    ஐயா யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    நான் ராம். கோவிந்திடம்  என் பெண்ணுக்கு கல்யாணம் செ்யவதற்காகப் புடவை வாங்க வந்தேன்.

    இதைக் கேட்ட மறுநிமிடம் மஞ்சள் புடவை உடுத்தியிருந்தவள்  புடவைத் தலைப்பால் வாயை மூடி அழத் தொடங்கி விட்டார்.

    “ஏம்மா அழுவுறீங்க? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?”

    இல்லப்பா! ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்யப் புடவை வித்தவரு தம்பொண்ணு ஓடிப்போனதால பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்து வச்ச புடவையில நாண்டுக்கிட்டாங்க புருசன் பொண்டாட்டி  ரெண்டு பேரும்.

    செத்து ஒரு மாதத்துக்கும் மேல ஆவுது. அவுங்க தொழிலை இங்க செய்யறதாகவும், அடிக்கடி வெங்கலமணிக்குரல் சிரிக்கறதா சொன்னாங்க எல்லாரும். அதான் பூசாரி கிட்ட சொல்லி பூஜை செஞ்சு தாயத்து வீட்டுல கட்லாம்னுட்டு வந்தோம்.

    அது என்ன உங்க கைல….. இது கோவிந்து தம் பொண்ணுக்காக எடுத்து வைச்ச புடவையாச்சே…அது உத்தரத்துல பாதியால்ல தொங்குச்சு…

    இதுதானே அவுங்க ரெண்டு பேர் உயிரையும் எடுத்தது.

    சொன்னது தான் தாமதம் டிவிஎஸ்ஸை மறந்து புடவையைத் தூக்கி வீசியபடி ஓடினான் ராம்.

    ‘எங்கோ மூடப்பழக்கத்தினை ஒழிப்போம் ‘ என மைக்கில் யாரோ பேசியது ராமின் காதில் தெளிவாக ஒலித்தது.

     

     

    Share
  • கொலஸ்டிரால் ரிப்போர்டை அறிந்து கொள்வோம்!… (4)

    செல்வன்      

       உங்கள் கொல்ஸ்டிரால் டெஸ்டில் பொதுவாக கீழ்காணும் வகை கொலஸ்டிரால்கள் காணப்படும்.

    1) மொத்த கொலஸ்டிரால்: இது 200க்கு கீழ் இருந்தால் பாதுகாப்பு என ரிப்போர்ட் கூறும்

    2) எச்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது நல்ல கொலஸ்டிரால்): இது 40க்கு அதிகம் இருக்கணும்

    3) எல்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது கெட்ட கொலஸ்டிரால்): இது 130க்கு கீழே இருக்கணும்

    4) ட்ரைகிளிசரைட்: இது 150க்கு கீழே இருக்கணும்.

    இதில் பலரும் மொத்த கொலஸ்டிரால் 200 தாண்டினால் உடனே தான் கொல்ஸ்டிரால் பேஷண்ட் என நினைத்து பீதி அடைவார்கள். கூடவே கெட்ட கொல்ஸ்டிரால் எனும் எல்டிஎல் 130 (சில நாடுகளில் 100) தாண்டினால் அவ்வளவுதான். “எனக்கு ஸ்டாடினை பரிந்துரையுங்கள்” என தானாக மருத்துவரிடம் போய் நோயாளியாக ஆகிறவர்கள் உண்டு.

    உண்மையில் கெட்ட கொல்ஸ்டிரால், நல்ல கொல்ஸ்டிரால் என்பது எல்லாம் பொதுமைபடுத்துதல். எல்டிஎல்லில் பல உள்வகை உண்டு. அதில் சில நமக்கு நல்லது, சில கெட்டது. நல்ல கொல்ஸ்டிரால் எனப்படும் எச்டிஎல்லில் கூட சிலவகை எச்டிஎல் நல்லது, சிலவகை எச்டிஎல் கெட்டது.

    எல்.டி.எல்லில் இரு வகை. சின்ன சைஸ் எல்.டி.எல் (LDL-B), பெரிய சைஸ் எல்.டி.எல் (LDL-A).பெரிய சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் ஆபத்தற்றது. காரணம் அது உங்கள் ரத்த நாளங்களில் ஒட்டி மாரடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் சின்ன சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் மிக ஆபத்தானது.

    ஆனால் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் இது எதையும் காட்டுவது இல்லை. உங்கள் எல்டிஎல் கொல்ஸ்டிராலின் உள்வகைகள், எச்டிஎல் கொலஸ்டிராலின் உள்வகைகள் இவற்றை உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் பிரித்து காட்டுவது இல்லை. அப்படி பிரித்து ஆராயாமல் உங்களுக்கு இதயநோய் வரும் ஆபத்து உள்ளதா, இல்லையா என்பதை கொலஸ்டிரால் ரிப்போர்டை மட்டும் வைத்து கண்டுபிடிக்கவே முடியாது. அதற்கு NMR lipoprifile test என்பது போன்ற மேலும் அட்வான்ஸ்டான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அதை எல்லாம் செய்யாமல் “உங்களுக்கு கொல்ஸ்டிரால் பிரச்சனை” என உங்கள் மருத்துவர் கூறினால் அதை ஏற்று நீங்கள் ஸ்டாடின்களை உண்டு நோயாளியாக வேண்டாம். NMR lipoprofile பரிசோதனை செய்ய சொல்லி கேளுங்கள். அந்த சோதனை முடிவை விளக்க சொல்லி உங்கள் மருத்துவரை கேளுங்கள்.

    மேலும் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் பல சிக்கல்கள் உள்ளன. அதில் முக்கியமானது என்னவெனில்

    உங்கள் எல்.டி.எல் கொல்ஸ்டிரால் அளவை நேரடியாக அளக்கும் சக்தி அடிப்படையான கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் இல்லை. பல கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் LDL-calculated என எழுதி இருப்பார்கள். சிலவற்றில் எழுதி இருக்க மாட்டார்கள். ஆனால் எழுதி இருந்தாலும், இருக்காவிட்டாலும் நூற்றுக்கு 99.99% ரிப்போர்டுகளில் உங்கள் எல்.டி.எல் நேரடியாக அளக்கபடுவது இல்லை. கணக்கிடதான் படுகிறது.

    எல்.டி.எல்லை கணக்கிட உதவும் பார்முலாவின் பெயர் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா. அது எப்படி கணக்கிடபடுகிறது என எழுதினால் கட்டுரை கணக்கு வகுப்பாக மாறிவிடும் அபாயம் இருப்பதால் அதை செய்யவில்லை. ஆனால் தேவைபட்டால் பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

    எல்.டி.எல்லை நேரடியாக அளக்காமல் பார்முலாவை வைத்து கணக்கிடுவதில் உள்ள தவறு என்ன?

    இதில் தவறு என்னவெனில் உங்கள் ட்ரைகிளசரடு எண் 100க்கு கீழ் அல்லது 400க்கு மேல் இருந்தால் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா வேலை செய்யாது. அது உங்கள் எல்.டி.எல் எண்ணை மிகைபடுத்தி காட்டும். ஆக உங்கள் ட்ரைகிலசரைட் நூறுக்கு கீழ் இருந்தால் உங்கள் எல்.டி.எல் எண் என உங்கள் கொலஸ்டிரால் ரிப்போர்ட்டில் காட்டபடும் எண் முழுக்க தவறானது.

    ஆக கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டை வைத்து ஸ்டாடினை உட்கொள்ள துவங்குவது என்பது தெர்மாமிட்டரை மட்டும் பார்த்து டைபாய்டு மருந்து உட்கொள்வதற்கு சமம். தெர்மாமீட்டர் மிக அடிப்படையான சோதனை. டைபாய்டு இருக்கா இல்லையா என்பதை அறிய மேலும் பல சோதனைகளை செய்யவேண்டும்.அப்படி செய்யாமல் ஸ்டாடினை உட்கொள்வது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஸ்டாடின் என்பது விளையாட்டு இல்லை. அதில் நினைவு இழப்பு மாதிரி பல பக்கவிளைவுகள் உண்டு. மேலும் அது கொலஸ்டிராலை குறைக்குமே ஒழிய இதய அடைப்பை தடுப்பதற்கான சாத்தியகூற்றை மிகவும் குறைவாக தான் குறைக்கும். இப்படி பக்கவிளைவுகளை உன்டாக்கும் மருந்தை தவறாக இருக்க கூடிய கொல்ஸ்ட்ரால் ரிப்போர்ட்டை மட்டும் நம்பி உண்பது சரியல்ல.

    என்.எம்.ஆர் டெஸ்ட் செலவு பிடிக்கும் விஷயம் தான். ஆனால் கொல்ஸ்டிராலை குறைக்க உண்ணும் ஸ்டாடின் விலையை விட அது குறைவானது தான்.

    மற்றபடி உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் முக்கியமான எண்கள் எவை?

    எச்.டி.எல் மற்றும் ட்ரைகிளசரைடு

    எச்.டி.எல் என்பது குப்பை லாரி மாதிரி. அது உங்கள் ரத்தநாளங்களுக்குல் சென்று கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை வாரி கொண்டு வந்து உங்கள் லிவரில் சேர்க்கும். லிவர் அந்த கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை உடைத்து கழிவாக மாற்றி அனுப்பிவிடும். ஆக எச்.டி.எல் அதிகமாக இருந்தால் அது மிக ஆரோக்கியமான விஷயம். எச்.டி.எல் 40க்கு கீழே இருந்தால் உங்கள் உடனாடி வேலைகள் அனைத்தையும் ஒத்தி போட்டுவிட்டு எச்.டி.எல்லை 40க்கு மேல் உயர்த்த நீங்கள் முயலவேண்டியது அவசியம். உங்கள் எச்.டி.எல் 60 தான்டினால் அது மிக பெரிய பலம். உங்கள் ட்ரைகிளிசரடு 100க்கு கீழ் இருந்து உங்கள் எச்.டி.எல் 60க்கு மேல் இருந்தால் அது நீங்கள் புல்லட் ப்ரூப் ஆடையை அணிந்து இருப்பது போன்ற பாதுகாப்பை உங்கள் இதயத்துக்கு அளிக்கும். உங்கள் எச்.டி.எல் 60 தான்டி, ட்ரைகிளிசரைடு 140க்கு கீழ் இருந்தால் அப்புறம் உங்கள் எல்.டி.எல்  ஆபத்தை விளைவிக்காத நல்ல வகை எல்.டி.எல்லாக இருக்கும் வாய்ப்பு தான் மிக அதிகம்.

    ட்ரைகிளசரைடு என்பது என்ன?அது எப்படி உருவாகிறது?அதை எப்படி குறைப்பது? எச்.டி.எல்லை எப்படி அதிகரிப்பது?

    இதற்கு இரன்டு வழிமுரைகள் தனியாக இல்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதாவது……

    ட்ரைகிளசரிடு அதிகமாக இருந்தால் எச்.டி.எல் தானாக குறையும்.

    ஆக எச்.டி.எல்லை அதிகரிக்க ட்ரைகிளீசரைடை குறைத்தே ஆகவேன்டியது அவசியம். ட்ரைகிளிசரைடை குறைத்தால் எச்.டி.எல் தானாக அதிகரிக்கும்.

    ட்ரைகிளசரைடை எப்படி குறைப்பது?

    இதை அறிய ட்ரைகிள்சரைடு எப்படி உருவாகிறது என்பதை அறிவது முக்கியம்.

    ட்ரைகிளிசரைடு என்பது வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை தான் ட்ரைகிளிசரைடு. நீங்கள் அரிசி, கோதுமையை உன்டால் அதில் உள்ள சர்க்கரை உங்கள் உடலால் குளுகோஸ் ஆக மாற்ரபடும். குளுகோஸ் தான் எரிபொருள். ஆனால் அந்த எரிபொருலை செலவு செய்யாவிடில் அதை சேமிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இரன்டுநாளுக்கு மேல் தேவையான அளவு குளுகோசை சேமிக்கும் சக்தி உடலில் இல்லை. ஆனால் உடலில் ஒவ்வொரு செல்லிலும் ஏராளமாக கொழுப்பை சேர்க்கும் சேமிப்புதிறன் உங்கள் உடலுக்கு உள்ளது. ஆக மீதம் குளுகோஸ் உங்கள் லிவருக்கு அனுப்பபடும். லிவர் அதை ட்ரைகிளிசரைடு ஆக மாற்றி ரத்தத்தில் அனுப்பும். அது உங்கள் உடலில் ஊளைசதையாக சேமிக்கபடும்.

    ட்ரைகிளசரைடை குறைக்க வழி இதில் இருந்தே தெரியும்.

    சர்க்கரைசத்து (carbohydrates) உள்ள உணவுகளை உண்பதை குறைப்பது, அல்லது நிறுத்துவது.

    சர்க்கரை சத்து நிரம்பிய உணவுகளை உண்பதை குறைத்தால் குரைவான அளவில் ட்ரைகிளிசரடை உடல் உருவாக்கும்.

    சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகளை உண்பதை சுத்தமாக நிறுத்தினால் ட்ரைகிளிசரைடு உருவாகும் வழியே உடலில் கிடையாது. உடலில் குளுகொஸ் குறைவு எண்கையில் அதிக குளுகோசை சேமிக்கும் அவசியமே இல்லையே?

    ட்ரைகிளிசரடு குறைந்தால் எச்.டி.எல் தானாக் அதிகரிக்கும். இவை இரண்டும் நடந்தால் உங்கள் எல்.டி.எல் ஆபத்தை விளைவிக்கும் சின்ன வகை எல்.டி.எல்லில் இருந்து உடலுக்கு நலனளிக்கும் பெரிய வகை எல்.டி.எல் ஆக மாறும். அதன்பின் உங்களுக்கு கொல்ஸ்டிராலை பற்றி யாதொரு கவலையும் வேண்டியது இல்லை.

    (தொடரும்)

    Share
  • நடிகை(கள்)

     

    -பொன். இராம்


    வண்ணச்சாயப் பூவிதழ்

    உதடுகள் கூறும்

    கண்ணீர் வரிகள்!

    அடிமை விலங்கு

    அவிழ்க்கப்பட்டும்

    அரிதார பொம்மைகளாய்

    நனவுலகில் சிரிக்கின்றோம்!

    கள் மட்டுமே

    போதை!

    இங்கு நாங்கள்

    திரையுலகக்

    கண்ணாடிக் குடுவைக்குள்

    போதைப் பதுமைகளாய்

    வாழ்கின்றோம்!

    இடியாக  மாறி

    படியாத ஆணுலகை

    மாற்றிவிட எத்தனையோ முயன்றாலும்

    பணமழை தான் ஜெயிக்குதடி!

    பட்டமொன்று பெற்றாலும்

    பாவி மனம்

    புகழுக்கு ஏங்குதடி!

    விடியாத பெண்ணுலகத்

    திரையுலகக் கும்மிருட்டில்

    விரைவாய்  யார் வருவார்

    அறிவு விளக்கேற்ற?


    படத்துக்கு நன்றி: http://www.123rf.com/photo_10204675_single-bottle-of-beer-with-shiny-woman-s-silhouette-inside.html

     

    Share
  • வளர்ச்சியான பாதையில் இந்தியா செல்ல.. குடும்ப அட்டையில் முதலில் மாற்றம்….!

    சித்திரை சிங்கர்

    புதியதாக இப்போது விண்ணப்பித்துள்ள பொது மக்களுக்கு, ஏப்ரல் மாதம் புதிய ரேசன் அட்டைகள் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும்  இந்த ரேசன் அட்டைகள்…. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளின் “உண்மை நிலை” கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியதே. இது வரை போனது போகட்டும் என்றாலும் இனியாவது  முறையாக உண்மையாக பதிவுகள் இருக்கும் வண்ணம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான சாதாரண மக்களின் நெடுநாள் ஆசை.

    இதில் முதலில் குடும்ப வருமானம் அரசுப் பணியில் உள்ளவர்கள் கூட தங்களது சம்பளத்தை இந்த குடும்ப அட்டைகளில் ஒழுங்காக பதிவு செய்வதில்லை என்பது வேதனையான விஷயம்….! இவர்கள் அரசுப் பணியில் தொடரவே  தகுதி இல்லாதவர்கள் என்பதுதான் உண்மை…!  இலவசங்கள் ஓட்டுக்காகவே அரசியல்வாதிகளால்  மக்களின் பணத்தில் இருந்து அவர்களுக்கே கொடுக்கப்படும் ஒரு கண்கட்டி வித்தைதான். இலவசங்கள் மக்களை மிகுந்த சோம்பேறியாக்கி விடுகிறது  என்றாலும் ஓட்டுக்காக அரசு தரும்  இந்த இலவசங்கள்  குடும்ப அட்டைகளின் உண்மையான வருமானத்தை அடிப்படையாக கொண்டு கொடுக்காமல் அரசு வழங்கும் குடும்ப அட்டைகளின்  வண்ணங்களை வைத்து கொடுக்க்கபடுவது ஒரு வேடிக்கையான விஷயம். வெள்ளை கார்டு வைத்துள்ளவர்கள் (தேவையான “சர்க்கரை”க்காக) விருப்பமான பொருளை வாங்குவதற்கு என்று பதிவு செய்பவர்களே தவிர இவர்கள் அரசு தரும் இலவச பொருட்களை வாங்க தகுதியில்லாதவர்கள் அல்ல…!  அரிசி கார்டு  வைத்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அரிசி வாங்குகிறார்களா அதை அவர்கள் உப்யோகிக்கிறார்களா என்றால்…  குடிசை வீடுகளிலும் பிளாட்பாரங்களிலும் வசிப்பவர்களையும் தவிர்த்து மற்றவர்கள் ‘இல்லை’ என்ற பதில்தான் மனசாட்சியுள்ளவர்கள் சொல்லும் பதிலாக இருக்கும். இப்போது இந்த ரேசன் அரிசிகள் பெரும்பாலும் புதிதாகத் தோன்றி பெருகிவரும்  உணவகங்களுக்கு, முழுமையாகப் பயன்படுகிறது என்பது   மகிழ்ச்சியான உண்மை..

    வருமான அடிப்படையில் என்றால் கூட  அரசு வேலையில் உள்ளவர்கள் அனைவருக்குமே “கௌரவ கார்டு” வாங்கும் தகுதிக்கு உள்ளவர்களே…! இதை நன்கு உணர்ந்த அரசாங்கமே…..அந்தந்த அரசு அலுவலகங்கள் வழியாக  தங்கள் பணியாளர்களுக்கு இப்போதுள்ள குடும்ப அட்டைகளை சமர்ப்பித்து இந்த கௌரவ அட்டைகளை தங்கள் துறையின் மூல்ம் சுலபமாக வழங்கலாம். இது போன்ற முறையான மாற்றங்களை இப்போது தாள் ஒட்டி உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் குடும்ப அட்டைகள் புதியதாக கொடுக்கும் நிலையில் சீர் செய்தால் குடும்ப அட்டைகளும் குறைந்து விடும்….! ரேசன் கடைகளில் கூட்டமும் கொஞ்சம் குறைந்து விடும்.

    பொதுவாக சொந்த வீடு வைத்துள்ளவர்களில் ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் அனைவருமே ஓரளவுக்கு வசதியானவர்கள்தான்….! நகர்ப் புறங்களில் வேண்டுமானால் புதிதாக வீடு வாங்குபவர்கள் வருமான வரி கழிவுக்காகவும், வாடகைக்கு இருப்பது போன்ற எண்ணத்தில் மாதாமாதம் தவணைகள்  தங்களின் வருமானத்துக்கு தகுந்தவாறுதான் வீட்டு வாடகைக்கு இணையாக தவணைகளை கட்டுகிறார்கள்.   இவர்களும் தங்களின் உண்மையான வருமானத்தைக் கொடுத்து தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். சொந்த வீட்டுகாரர்கள் தாங்கள்  செலுத்தும் “சொத்து வரி” அடிப்படையில் இவர்களுக்கும் குடும்ப அட்டைகளை வழங்கலாம்.  கூட்டு குடும்பங்களுக்கு அந்தந்த  குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு சிறப்பு சலுகை கொடுக்கலாம். ஓன்று…  இரண்டு… காஸ் சிலிண்டர்கள் வைத்துள்ளவர்களுக்கு மண்ணெண்னை கொடுப்பதை குறைக்கும்… நிறுத்தும்…  உணவு பொருள் வழங்கும் துறை பல இடங்களில் வாடகை வீடுகளின்  வருமானத்தால்  வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வந்தர்கள் இன்னமும் ரேசனில் முழுமையாக மண்ணெண்ணை வாங்குவதை நாம் கண் கூடாக காண முடிகிறது. நியாயமான குறைகளை அகற்றி முறையான பதிவுகளுடன் புதிய குடும்ப அட்டைகளை  இந்த “ஒட்டுதாள்” முடிய இன்னும் 18 மாதங்கள் இருக்கும்  நிலையில் உண்மையான விபரங்களை பதிவு செய்து புதியதாக குடும்ப அட்டைகளை 2015 ஜனவரி முதல் மக்கள் பயன்படுத்தும் வகையில், வழங்க, இந்த ” உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை” தக்க நடவடிக்கை எடுத்தால்தான் குடும்ப அட்டைகளை  ஒழுங்கு படுத்த  முடியும். நமது பொது மக்களும் அரசின் கணக்கெடுப்பு. நேரத்தில் உண்மையான தகவல்களைக் கொடுத்து பதிவு செய்து நமது முன்னேற்றத்துக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவ வேண்டும். அரசு வேலையில்  நிரந்தரமாக பணிபுரியும் கடை நிலை ஊழியர்கள்  கூட “கௌரவ குடும்ப அட்டை” வாங்கவே தகுதியானவர்கள் என்பதுதான் உண்மை நிலை….! தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து  மற்றைய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பள அடிப்படையில் மிகவும் பின் தங்கிதான் உள்ளார்கள்.

    எந்த ஒரு மாற்றமும்  அரசின் திட்டத்தாலோ… அரசின் கொள்கை  முடிவினால் வந்து விடாது நாட்டு மக்கள் மனது  வைக்க வேண்டும். எழுச்சியான தமிழகம் காண வேண்டுமானால்…. வளர்ச்சியான பாதையில் இந்தியா  செல்ல வேண்டுமானால் முதலில் அடிப்படையில் இது போன்ற மாற்றங்களை  மக்கள முழுமனதுடன் செய்ய வேண்டும். மக்கள் சக்திதான் மகேசன் சக்தி…! இந்திய மக்களே கொஞ்சம் திருந்துங்கள்…! உங்களின்  உண்மை நிலையை குடும்ப அட்டைகளில் பதிவு செய்து மாற்றங்களை உருவாக்குங்கள்…!
    அவர்கள் சரியில்லை…! இவர்கள் சரியில்லை என்று மற்றவர்களை மட்டுமே குறை கூறி காலத்தை வீணாக்காமல் நமக்கு நாமே திருந்த வேண்டும்..! நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும்….!.

    சித்திரை சிங்கர் , சென்னை.

    Share
  • திருமுருகன் துதிமாலை (2)

     

    சத்தியமணி

    காரணம்தேடி கலங்கிடும் போதுநீ

    காரியம் ஆகவேண்டும்

    ஆரணமோதி அடைந்திடும் மகிமைநின்

    அடிகளில் காணவேண்டும்

    சீரணமாகா திண்டாடும் பிணிநீக்கி

    சேமங்கள் சேர்க்க வேண்டும்

    பாரணங்  கண்டு பலகாலந் தொண்டு

    பணியாற்றும் ஆசி வேண்டும்

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (2)

    Share
  • வார ராசி பலன்!….(31-03-13 – 06-04-13)

    காயத்ரி பாலசுப்ரமணீயன்                                                                                                                                                                                                                                                                                                                                                                               மேஷம்:  பெற்றோர்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும்  கல்வி விஷயத்திலும், அக்கறை செலுத்தி வந்தால்,  குழந்தைகளோடு இல்லத்தில் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சி யாக இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு  செலவினங்கள் கூடினாலும்  பணப் பிரச்னைகளை தீர்த்து வைக்க நட்பு கை கொடுக்கும்.  பங்கு வர்த்தகத்தில் ஈடுப ட் டி ருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும்.மாணவர்கள் வீண் சந்தேகங்களை ஒதுக்கி துணிச்சலுடன் பணியாற்றினால். எதிலும் வெற்றிதான்!  இந்த வாரம்  கலைஞர்களுக்கு  ஆரோக்கியத்தில் சிறு சங்கடங்கள் தோன்றினாலும் இயல்பான வேலைகள் சீராக ஓடிக்கொண்டிருக்கும்.
    ரிஷபம்:  இந்த வாரம் பணியில் இருப்பவர்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் சிறப்பாக இருக்கும். பெண்கள்  செய்யும் முயற்சிகள் வெற்றி பெற உறவுகள் உறுதுணையாய் இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத  தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். வியாபாரிகள்  வெளி நாட்டில் இருந்து எதிர்பார் த்த வர்த்தக  உதவி தக்க சமயத்தில் வந்து சேரும்.மாணவர்கள் கோபத்தை கைவிட்டு  செயல்பட்டால், எடுத்த காரியம் நினைத்ததது போல் முடியும்,   சிறு தொழில் புரிபவர்கள்  வாகன சம்பந்தமாக தேவையற்ற செலவுகளை சமாளிக்க வேண்டி வரும்.
    மிதுனம்
    : அலங்காரப் பொருட்கள்,  மற்றும் ஆயத்த ஆடைகளை விற்கும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும்.   பெண்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் அவ்வ ளவாய் இராது . மாணவர்கள் மற்றவர்களுக்காக  உதவுவதாக எண்ணி  வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.  இந்த வாரம்  குடும்ப  மருத்துவ செலவுகள் சற்று  அதிகமாக இருக்கும்.. . செய்யும் செயல்களுக்கு உரிய பாராட்டு கிடைப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் மீண்டும் சுறுசுறுப்புடன் செயலாற்றி நல்ல பெயர் பெறுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலைச்சுமை ஓரளவு குறையும்
    கடகம்:  பெண்களின் மனக் குறை தீர, குல தெய்வ வழிபாடு கை கொடுக்கும். வியாபாரிகள் அறிமுகம் இல்லாதவர்களை நம்பிபொருட்களை கடன்  கடன் கொடுத்து ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்கவும்.  பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்ப உள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தேவைக்கதிகமாக பணம் கொடுக்க வேண்டாம்.  பணியில் இருப்பவர்கள் உடன் வேலை செய்பவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.   இந்த வாரம் கலைஞர்களுக்கு திடீர் பண  நெருக்கடி உண்டாகலாம்.
    சிம்மம்:   இந்த வாரம் கலைஞர்கள் தங்கள் பெயரை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளும், மன நிம்மதிக் குறைவும் ஏற்படாமலிருக்க  பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த சூழலிலும் கவனமாக இருப்பது அவசியம்.  சரளமான பணவரவால்  பெண்களின் கடன் பிரச்னைகள் தீரும். .மாணவர்கள் முன் கோபத்தைக் குறைத்து பெற்றோரின் சொல் கேட்டு நடப்பது நல்லது.  பொறுப்பில் இருப்பவர்கள் மற்றவர்களை  குறை சொல்வதைத் தவிர்த்து நல்ல முறையில் வழி காட்டினால், வேலைகள் விரைந்து முடியும்.
    கன்னி:   குடும்பத்தில் இருந்த பனிப்போர் விலகுவதால் மீண்டும் மகிழ்ச்சியும், கலப்பும் மலரும். பெண்களுக்கு உறவுகளால் சில அனுகூலங்கள் வந்து சேரும். வேலையில் இருப்பவர்கள்  எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்காக அதிக பணம் ஒதுக்க வேண்டி வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள்  சமூகத்தில் இருக்கும் நற்பெயரை காத்துக்கொள்ள வேண்டாத செயல்களில்   ஈடுபடுவதை தவிர்க்கவும் இந்த வாரம் மாணவர்களுக்கு நண்பர்களால் செலவுகள், சங்கடங்கள் வந்து நீங்கும்.  கலைஞர்கள்   வெளி இடங்களுக்கு செல்லும் போது  ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
    துலாம்: கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள், எந்த ஒரு மாற்றத்தையும் செய்யும் முன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது அவசியம். குடும்பப் பிரச்னையில் பக்குவமாகக் கையாள்வதன் மூலம், பெண்கள் தங்கள் அமைதியை தக்க வைத்துக் கொள்ளலாம் . கலைஞர்கள் சுமையாய் தோன்றிய பணியை சவாலாய் எடுத்து செயல்பட்டு பாராட்டு பெற்று மகிழ்வர். வியாபார வட்டத்தில் சிறு சலசலப்பும், சலிப்பும் உண்டாகும் சூழலிருப்பதால், சரக்கு வினியோகத்தில் குள்றுபடிகள் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்கள், வேண்டிய லாபம் பெற, அன்றாட நிலவரங்களைக் கவனித்து செயல்படுவது அவசியம்.
    விருச்சிகம்:   மாணவர்களுக்கு நெருங்கிப்பழகியவரால் சில தொந்தரவுகள் தோன்றும் வாய்ப்பிருப்பதால், செல் போன்களின் பயன்பாட்டில் விழிப்பாய் இருப்பது அவசியம். பெண்கள் கண்ணில் பட்ட பொருளையெல்லாம் வாங்குவதைக் குறைத்துக் கொண்டால், உங்கள் சேமிப்பு குறையாமலிருக்கும்.  வியாபாரிகள் கடனை வசூல் செய்யும் பொழுது பக்குவமாக நடந்து கொண்டால், வாடிக்கையாளர்களின் ஆதரவு குறையாது. பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பேச்சு வார்த்தைகளைக் குறைத்துக் கொண்டு கடமையில் கவனம் செலுத்தி வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.
    தனுசு:    மாணவர்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிறிய தவறுகளும் மற்றவர்களின் பார்வையில் பெரிதாகத் தெரியக் கூடும்.  சுய தொழிலில் ஈடு ப ட்டுள்ளவர்கள் வங்கி மற்றும் வருமான வரி விவகாரங்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், பிரச்னைகளை எளிதில் தீர்த்துவிடலாம்.இந்த வாரம்   வேலையில் இருப்போர், நிர்வாகத்தினரின் அதிருப்திக்கு ஆட்படும் வாய்ப்பிருப்பதால், வீண் அரட்டை, விவாதம் ஆகியவற்றில் கலந்து கொள்ளாதிருப்பது நல்லது. உயர்கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும் வரை பொறுமையாய் இருந் தால் நல்ல பலன் கிட்டும்.
    மகரம்:   முதியவர்கள்  கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. பணி புரியும் பெண்கள் மன உறுதியுடன் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரை ப் பெறலாம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் யோசனை செய்த பின் பிறர்க்கு வாக்குறுதிகளை அளிப்பதே புத்திசாலித் தனம்  கலைஞர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். நிம்மதியாக வேலைகளை செய்ய முடியும்,  வியாபாரிகள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களையும், மன உளைச்சலையும் தவிர்த்து விடலாம்.
    கும்பம்: இந்த வாரம் கலைஞர்கள் சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்கள் மூலம் முழுமையான லாபமும் நல்ல பெயரும்  பெறலாம்.பணியில் இருப்பவர்கள்  உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால் எந்த தொல்லையும் தோன்றாது. சுய தொழிலில் இருப்பவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களையும் உங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், பெறுகின்ற லாபம் கணிசமாக இருக்கும்.
    மீனம்: மாணவர்கள்  கணினி, புகைப்படக் கருவி போன்ற விலையுயர்ந்த பொருட்களை பத்திர மாக வைப்பதுடன், அவற்றை கவனமாகவும் கையாண்டால் வீண் விரயங்களைத் தவிர் த்துவிடலாம்.    வியாபாரிகள் பெரிய நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கும் முன்  நிதி நிலவரத்தை கவனத்தில் கொண்டு காசோலைகளை வழங்குவது நல்லது.  கர்ப்பிணிப்  பெண்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். பணியில் இருப்பவர்கள் தங்களுக்கு  கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது அவசியம்

    Share