இந்தியக் கணவன்மார்களும் அமெரிக்க மனைவிமார்களும்

நாகேஸ்வரி அண்ணாமலை

இந்தியக் கணவன்மார்கள் மீதும் அமெரிக்க மனைவிமார்கள் மீதும் எனக்கு மிகுந்த கோபம் உண்டு.  இந்த இரண்டு வகையினரும் தங்கள் வாழ்க்கைத்துணையை சரியாக நடத்துவதில்லை என்பது என் கணிப்பு.  இந்த விதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக.  இந்த இரண்டு வகையினரையும் தலைப்பில் ஒன்று சேர்த்திருப்பதால் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளையோ அல்லது வேற்றுமைகளையோ கூறப் போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.  இரண்டு வகையினரையும் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால்தான் இவர்களைத் தலைப்பில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறேன்

முதலாவது இந்தியக் கணவன்மார்களைப் பற்றிப் பார்ப்போம்.  ஏழைக் குடும்பங்களில் தவிர போன தலைமுறை வரை இவர்கள்தான் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வெளியில் போய் பணம் சம்பாதித்துக்கொண்டு வந்தார்கள்.  வெளியில் போய் பலரோடு பழகி அல்லது போட்டிபோட்டு பணம் சம்பாதிப்பது அப்படியொன்றும் எளிதான காரியம் இல்லைதான்.  மனிதன் மிருகங்களை வேட்டையாடிக்கொண்டு ஒரு இடத்தில் நிலைபெறாமல் நகர்ந்துகொண்டேயிருந்த காலத்திலிருந்து கணவன்மார்கள்தான் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்து வந்தார்கள்.  அதனால் எப்போதுமே கணவன் கை ஓங்கியிருந்திருக்கிறது.  மனைவி மட்டும் சும்மா இருந்தாளா என்ன?  அவளும் மற்ற குடும்ப வேலைகளைக் கவனித்து வந்தாள்.  இதோடு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதுவும் இவள் வேலையாயிற்று.  ஆனால் அன்று முதல் இன்று வரை பெண்ணிற்கு அவள் செய்த வேலைகளுக்கு எந்த வித அங்கீகாரமும் இல்லை; எந்த சம்பளமும் இல்லை.  (Working women என்கிறார்களே அது வெளியில் போய் வேலைபார்க்கும் பெண்களை மட்டும்தான் குறிக்கும்.  வீட்டில் இருந்துகொண்டு காலை முதல் இரவு வரை மாடாக உழைக்கும் பெண்களை இதில் சேர்ப்பதில்லை.  அவர்கள் ஒரு சம்பளச் செக்கைக் கொண்டுவரவில்லை என்பதாலா?)  அது மட்டுமல்ல, அவளுடைய வாழ்வாதாரத்திற்கே தான்தான் மூல காரணம் என்பது போல் கணவன் நடந்துகொள்கிறான்.  இது காலம் காலமாக கிட்டத்தட்ட இந்திய சமூகங்கள் எல்லாவற்றிலும் நடந்து வந்திருக்கிறது.  வட இந்தியாவில் மிகச் சமீப காலம் வரை திருமணம் செய்துகொண்டு கணவன் வீடு சென்ற பெண்கள் பிறந்த வீட்டிற்குத் திரும்ப வருவதேயில்லை.  இப்போது அதெல்லாம் மாறியிருக்கும்  என்று நினைக்கிறேன்.

கணவன் தன்னை ஏன் இப்படி அடக்கி ஆள வேண்டும் என்று இந்த மனைவிமார்களும் எண்ணிப் பார்ப்பதில்லை.  கணவன் சம்பாதித்துக்கொண்டு வருவதால் குடும்பத்தை நிர்வகிக்கும் எல்லா உரிமைகளும் கணவனுக்குத்தான் உண்டு என்று மனமார ஏற்றுக்கொள்கிறார்கள்.  இப்படி எல்லா மனைவிமார்களும் நடந்துகொள்வதால் சம்பாதிக்காத கணவன்மார்களின் மனைவிமார்களும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்.  இதற்கு முக்கிய காரணம் சமீபகாலம் வரை மனைவி இறந்துவிட்டால் கணவன் மறுமணம் செய்துகொள்ளலாம்;  ஆனால் கணவன் இறந்துவிட்டால் இவளுடைய வாழ்க்கையே அதோடு நின்றுவிடும்.  கணவன் இறந்துவிட்டால் அவனோடு மனைவியும் அவனுடைய சிதையில் எரிந்து சாம்பலாவதுதான் தலையாய கற்பு என்று வரையறுத்த சமூகமல்லவா நம் சமூகம்.  அப்படி இருக்கும்போது மனைவி கணவனுக்காக எதுவும் செய்யத் தயாராகிறாள்.  கணவன் நலம்தான் தன் நலம் என்று எண்ணத் தொடங்குகிறாள்.  இதனால்தான் வீட்டிற்கு வந்த மருமகளைக் கணவனும் அவனுடைய பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் சேர்ந்து அதிக வரதட்சிணை கேட்டு தீ வைத்துக் கொளுத்துகிறார்கள்.  ஆனால் அதே சமயம் மகளுடைய கணவனை அவளுடைய பெற்றோர் தீ வைத்துக் கொளுத்தியதாக சரித்திரமே இல்லை.

இந்தியக் கணவன்மார்கள் எப்படியிருந்தாலும் சரி – படித்தவன், படிக்காதவன், பணக்காரன், பணமில்லாதவன், அழகானவன், அழகில்லாதவன் – தாங்கள் தங்கள் மனைவியை விட மேலானவர்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.  கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று போதித்த சமூகமல்லவா.  கணவன்மார்களும் தங்கள் மனைவிமார்களை எப்படியும் நடத்தலாம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.  மனைவி தன்னைத் தவிர வேறு யாரையும் மனதில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் இந்தக் கணவன்மார்கள் திருமணத்திற்கு வெளியே வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்துக்கொள்வது அப்படியொன்றும் பெரிய தவறு என்று நினைப்பதில்லை.  ஏனெனில் சமூகமும் அப்படித்தான் நினைக்கிறது.  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் பெண்களுக்கே உரியவை.  கணவன்மார்களுக்கு இவற்றில் எந்த விதப் பங்கும் இல்லை.

இதற்கு மேல் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள் பெண்களுக்கு கற்பு எவ்வளவு முக்கியம் என்று வலியுறுத்தி வந்தார்கள்.  பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் எடுத்த ஒரு படத்தில் கதாநாயகன் கதாநாயகியை திருமணத்திற்கு முன் கெடுத்துவிடுகிறான்.  தவறு செய்துவிட்டதாக நினைத்து நினைத்து மனம் புழுங்குகிறாள் கதாநாயகி.  பின்னால் தன்னைக் கெடுத்தவனையே தன் கணவனாக அடைந்து நிம்மதி அடைகிறாள்.  ஆனால் கதாநாயகனுக்கு அந்த மாதிரிக் கவலை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

சமீப காலம் வரை பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்ததால் வெளி உலகம் பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது.  அவள் அவனை விட புத்திசாலி என்றாலும் வெளி உலகம் பற்றித் தெரியாதலால் கணவன் தன்னை விட அதிகம் தெரிந்தவன் என்று வைத்துக்கொள்கிறாள்.  கணவனும் அதை தனக்குச் சாதகமாக வைத்துக்கொண்டு எல்லாம் தெரிந்தவன் போல் நடந்துகொள்கிறான்.  வீட்டில் எல்லாம் அவன் வைத்ததுதான் சட்டம்.  வெளி உலகம் பற்றி நிறையத் தெரியாவிட்டாலும் சில விஷயங்களிலாவது இவளுடைய யோசனைகள் அவனுடையதை விட உருப்படியானதாக இருக்கலாம்.  ஆனால் அவளுடைய யோசனைகள் எடுபடுவதே இல்லை.

காலம் மாறிக்கொண்டு வருகிறது.  இப்போது பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்.  மனைவிமார்களும் சம்பாதிக்கிறார்கள்.  சில குடும்பங்களில் மனைவி கணவனை விட அதிகம் சம்பாதிக்கிறாள்.  ஆனால் இப்படிப்பட்ட குடும்பங்களிலும் மனைவிக்கு இரண்டாம் பட்ச இடம்தான்.

ஒரு குடும்பத்தில் மனைவி சீதனமாக பெற்றோருடைய முழுச் சொத்தையும் கொண்டுவருகிறாள்.  அவளுக்கும் இதே கதிதான்.  என் பாட்டி, தாத்தா காலத்தில் கணவன்மார்கள் எப்படி நடந்துகொண்டார்களோ அப்படித்தான் இப்போதும் நடந்துகொள்கிறார்கள்.  தாய் வீட்டிலிருந்து மனைவி கொண்டுவந்திருந்த சொத்தில் 90 சதவிகிதத்தை கணவன் தொலைத்துவிட்டான்.  ஆயினும் மனைவியின் சொத்தை இப்படித் தொலைத்துவிட்டோமே என்று அவனுக்கு எந்த வித மனஉளைச்சலும் இருப்பதாகத் தெரியவில்லை.  இன்னும் தான்தான் வீட்டின் எசமானன் என்பது போல் நடந்துகொள்கிறான்.  மனைவியும் கணவன் மேல் எந்த குற்றமும் கண்டுபிடிப்பதாகத் தெரியவில்லை.

என் கணவர் என் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பது என் நெருங்கிய உறவுப் பெண்ணிற்குப் பிடிக்கவில்லை.  பெண்ணுரிமை பற்றி நான் பேசுவதெல்லாம் அவளுக்குப் பிடிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என் கணவரிடம் ‘உங்கள் மனைவியை நீங்கள் கடிவாளம் போட்டு அடக்க வேண்டும்’ என்கிறாள்.  இப்படித்தான் பல இந்தியப் பெண்கள் இன்னும் நினைக்கிறார்கள்.  மனைவிமார்களே இப்படி நினைத்தால் கணவன்மார்கள் வேறு எப்படி நடந்துகொள்வார்கள்?  மனைவியை தனக்குச் சமமாக நடத்துவார்கள் என்று எப்படி நினைக்க முடியும்?   எல்லாக் காலங்களுக்கும் எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும் திருக்குறளை எழுதிய தெய்வப் புலவர் திருவள்ளுவரே ‘பெண் வழிச் சேறல்’ என்னும் அத்தியாயத்தில் மனைவி சொல்லைக் கேட்காதீர்கள் என்று கணவன்மார்களுக்கு அறிவுரை கூறுகிறார்.  தவறான அறிவுரை யாரிடமிருந்து வந்தாலும் – கணவனானாலும் சரி, மனைவியானாலும்சரி – அதைக் கேட்கக் கூடாது என்று பொதுப்படையாகக் கூறியிருக்கலாம்.  திருவள்ளுவரே அப்படிச் சொல்லியிருக்கும்போது யாரிடம் போய் நியாயம் கேட்பது?

இனி அமெரிக்க மனைவிமார்களைப் பற்றிப் பார்ப்போம்.  மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் வரை அமெரிக்க மனைவிமார்களுக்கும் எந்த விதச் சுதந்திரமும் இல்லை என்கிறார்கள்.  ஆனாலும் இந்தியப் பெண்கள் போல நடத்தப்பட்டார்களா என்று தெரியவில்லை.  1963-இல் பெட்டி ஃப்ரீடன் (Betty Friedan)  எழுதிய  ஃபெமினைன் மிஸ்டிக் (Feminine Mystique) என்ற நூல் வெளிவந்தது.  இந்த நூல் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன.  இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு அமெரிக்காவின் வளம் உயர்ந்துகொண்டே போனதால் அவர்களுடைய தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பதற்கு ஆட்கள் தேவைப்பட்டதால் பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். ஓரளவிற்கு பொருளாதரச் சுதந்திரம் கிடைத்ததும் அமெரிக்க மனைவிமார்களுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லலாம்.  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சிகரெட் விற்பனையாளர்கள் ‘பெண்களே உங்களுக்கும் புகைபிடிக்கும் சுதந்திரம் உண்டு’ என்று விளம்பரப்படுத்தினர்.  இந்தக் காரணங்களினால் பெண்களும் தங்களுக்கு ஆண்களோடு சம உரிமை வேண்டும் என்று எண்ண ஆரம்பித்தனர்.  ஃபெமினைன் மிஸ்டிக் இவர்களுடைய எண்ணங்களை இன்னும் கொஞ்சம் உசுப்பிவிட்டது.   அறுபதுகளில் கருத்தடைச் சாதனங்கள் கிடைக்கப் போக ஆண்கள் போல் தங்களுக்கும் பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர்.  இதனால் திருமணம் செய்துகொள்ளாமலே திருமணம் ஆன தம்பதிகள் போல் குடும்பம் நடத்தும் நிலை உருவானது.  திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் நிலையும் உருவாகத் தொடங்கியது.  திருமணம் செய்துகொண்டோ அல்லது செய்துகொள்ளாமலோ குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு துணை விட்டுப் போகும் பழக்கமும் தோன்றத் தொடங்கியது.  இதனால் தனித் தாய்மார்கள் (single mothers) என்ற ஒரு பிரிவு பெண்களிடையே தோன்றியது.

பெண்களும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டதால் வீட்டில் சமைப்பதற்கு இருவருக்கும் நேரம் இல்லாமல் போய்விட்டது.  வீட்டில் சமைப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.  இதைச் சாதகமாக்கிக் கொண்டு உணவு தயாரிப்பவர்களும் நிறைய ‘ரெடிமேட்’ உணவுகளைச் சந்தையில் புகுத்தத் தொடங்கினர்.  ஏன் பெண்கள் சமைக்கவேண்டும் என்ற நிலை போய் ஏன் யாரும் சமைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  இரவு உணவையாவது வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதையும் விட்டுவிட்டார்கள்.  இப்போது மனைவிதான் சமைப்பது என்ற நிலை மாறி கணவன் மனைவி இருவரில் யாருக்கு சமையலில் ஆர்வம் இருக்கிறதோ அவர் சமைக்கலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.  எங்கள் வீட்டில் சமைப்பது என் கணவர்தான் (My husband is the chef at our place) என்று ஒரு மனைவி சொல்லும் அளவிற்கு அமெரிக்க மனைவிமார்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் சமையல் என்பது பெரிய வேலையாகி விட்டது.  ஒரு முறை ஒரு அமெரிக்கப் பெண்ணை எங்கள் வீட்டிற்கு இரவு உணவிற்கு அழைத்திருந்தோம்.  அவர் ‘தினமும் இவ்வளவு சமைக்கிறீர்களா?’ என்றார்.  ‘ஆம், கிட்டத்தட்ட’ என்றேன்.  அந்தப் பெண்ணிடம் ‘நான் இப்போது வேலைக்குச் செல்லவில்லையாதலால் எழுதுவதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது’ என்று சொன்னேன்.  ‘அவ்வளவு சமைத்துக்கொண்டு உங்களால் எழுதவும் முடிகிறதா?’ என்றார்.  இந்தியாவிலாவது உதவிக்கு ஆள் வைத்துக்கொள்ளாமல் நாமே சமைத்தால் வேலை நிறைய இருக்கும்.  அரைப்பது, வறுப்பது, பொரிப்பது என்று எந்நேரமும் வேலை இருந்துகொண்டே இருக்கும்.  அமெரிக்காவில் அப்படியில்லை.  சமையலறையில் காஸ் அல்லது மின்சார அடுப்புகள் நான்கு, குளிர்சாதனப் பெட்டி, வழக்கமான அவன் (traditional oven), மைக்ரோவேவ் அவன் (microwave oven), டோஸ்டர் (toaster) என்று பல உபகரணங்கள் இருக்கின்றன.  இதற்கு மேல் எப்போதும் குளிர்ந்த நீரும் சுடுநீரும் வந்துகொண்டிருக்கும்.  பாத்திரங்களைக் கழுவிக்கொள்ள ஒரு தொட்டி (sink) இருக்கும்.  இதுவரை குறிப்பிட்ட எல்லா வசதிகளும் எல்லா சமையலறைகளிலும் இருக்கும்.  வீட்டின் அளவைப் பொறுத்து சமையலறை பெரியதாகவோ சிறிதாகவோ இருக்கும்.  அவ்வளவே.  வசதியான வீடு என்றால் பாத்திரம் கழுவும் மெஷினும் இருக்கும்.  இத்தனை வசதிகள் இருந்தும் கோடையில் சமைப்பது எவ்வளவு கஷ்டம் என்கிறார் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட வீட்டில் வசிக்கும் ஒரு பெண்.  இவர் நர்ஸாக வேலை பார்க்கும்பெண்.  இவரே இப்படிச் சொன்னால் பேராசிரியையாக வேலைபார்க்கும் ஒரு பெண் ‘நேரம் கிடைத்தால் சமைப்பதைவிட ஒரு புத்தகம் படிப்பதையே நான் விரும்புகிறேன்’ என்று ஏன் சொல்ல மாட்டார்.

சமையலை விட்டுவிட்ட மனைவிமார்கள் வேறு ஏதாவது வீட்டு வேலைகள் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.  கணவனுக்குப் பிடித்த உணவு அயிட்டம் எதையும் சமைத்துக் கொடுக்கும் எந்த அமெரிக்க மனைவியையும் நான் இதுவரை சந்திக்கவில்லை.  கணவனுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுக்கும் இந்திய மனைவிமார்களைச் சந்தித்திருந்த எனக்கு இது எப்போதும் ஆச்சரியத்தைக் கொடுக்கும்.  ஏன் இந்தப் பெண்கள் கணவனுக்குப் பிடித்ததைச் சமைப்பதே இல்லை என்று சிலரைக் கேட்டால் சமைப்பது பெண்களின் வேலை என்பது இப்போது முழுவதுமாகப் போய்விட்டது என்ற பதில் கிடைக்கிறது.

சமையல் மனைவிமார்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலை என்ற எண்ணம் சமூகத்தில் இல்லை என்றே வைத்துக்கொள்வோம்.  பொதுவாக அமெரிக்க சமூகத்தில் பிறருக்காக தன்னலத்தை விட்டுக்கொடுப்பது, அவர்களுக்காக தன் நேரத்தைச் செலவழிப்பது, பிறர் நன்மைக்காக உழைப்பது போன்றவை எல்லாம் மறைந்துகொண்டு வருகின்றன.  அதனால் கணவனுக்காக மனைவி எதுவும் செய்யத் தேவையில்லை என்ற எண்ணமும் வலுப்பெற்று வருகிறது.  அடிக்கடி ‘I love you’ என்று கூறிக்கொள்வது அதிகரித்து வருகிறது;  ஆனால் கணவன் மனைவிக்கிடையேயான பிடிப்பு குறைந்துகொண்டு வருகிறது என்றே நான் நினைக்கிறேன்.  தான், தனது என்ற உணர்வை அமெரிக்க சமூகம் அளவுக்கதிகமாகவே மனிதர்கள் மத்தியில் வளர்த்துவிட்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு கணவன், மனைவி இருவருக்கும் இடையில் பிடிப்பே இல்லை என்று நினைக்கிறேன்.  இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.  இவளுக்கு முதல் கணவன் இறந்த பிறகு துணை தேவைப்பட்டதால் எங்கள் நண்பரை மணந்துகொண்டாள்.  எங்கள் நண்பரின் முதல் மனைவி இவர் நிறையச் சம்பாதிக்கவில்லை என்பதால் இவரை விட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டாள்.  எங்கள் நண்பரும் வசதிக்காகத்தான் இவளை மணந்துகொண்டார்.  இவள் அவரை விட அதிகம் சம்பாதிக்கிறாள்.  இவருக்காக எதுவும் செய்வதில்லை.  வீட்டில் சமையல் எல்லாம் கணவைனின் பொறுப்புத்தான்.  அவருக்கு உடல்நலம் சரியில்லை.  இருந்தாலும் அவர்தான் சமையல் செய்ய வேண்டும்.  இந்தக் கணவனே இந்தியாவில் பிறந்திருந்தால் முதல் மனைவியும் இவரை விட்டுப் போயிருக்க மாட்டாள்; இரண்டாவது மனைவியும் இவர் மட்டுமே சமைக்க வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டாள்.  இந்தியக் கணவன்மார்களைக் கண்டால் எனக்கு எவ்வளவு கோபம் வருகிறதோ அந்த அளவு கோபம் இந்த மாதிரி அமெரிக்க மனைவிமார்களைப் பார்த்தால் ஏற்படுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *