Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181020 Vatsalya -wcol -Strathmore 160gsm tnt 9×12″ icam -lr

     

    ”மாலோலன் பாடுகிறார் மாடதனை மார்தாங்கி,
    தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -ஏலேலோ
    வாழ்க்கையில் சிக்கி வழிதவறும் எங்களை
    ஊழ்கையில் சிக்கா(து) உதவு”….!

    ’வெள்ளைப் பசுங்கன்று, பிள்ளைக் கரியமுது
    கொள்ளை அழகாக கேசவ்நீர் -தெள்ளத்
    தெளிவாகத் தீட்டி அளித்திடுவோய், இன்று,
    பொலிவுடன் கண்ண பிரான்’’….கிரேசி மோகன்….!

    Share
  • நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா

    ஸ்ரீரீ தன்வந்திரி பீடத்தில்

    நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன்

    சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா

    நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம், குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், மஹா சரஸ்வதி ஹோமம், ருத்ர ஹோமம், அஷ்ட பைரவர் சகித காலபைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், காயத்ரீ ஹோமம், அன்னபூரணி ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று உரிய தெய்வங்களுக்கு மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மேலும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாச பூஜையும் சரஸ்வதி தேவிக்கு பாலபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சீரடி சாயிபாபாவின் 100 ஆம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சாயிபாபா மூலமந்திர ஹோமமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மேலும் நாளை ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181018 Mahishasuramardhini wcol Strathmore 160 gsm -72 dpi 9×12” lr

    மகிடா சுரனின் மகுடம் தெறித்து
    பகடைபோல் பாய்ந்து பறித்தோய்! -சகடனை
    செற்ற முகுந்தனின் உற்ற சகோதரி
    வெற்றி(விஜய தசமி) வழிக்கு வரம்….!

    இலவுகாத்த பச்சை இலைக்கிளி போலாம்
    உலவுகாத்தில் ஓடும் உடம்பு -நிலவுகோர்த்த
    தாழ்சடையான் சம்சாரம் தாள்பணிந்து நிற்போர்க்கு
    ஆழ்கடல் சம்சாரம் ஆறு…!கிரேசி மோகன்….!

    Share
  • அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் நீண்ட பயணம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான நீண்ட பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றாலும் இப்போது எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  இருபது வருஷங்களுக்கு முன்புகூட இவர்கள் பலரால் நிந்திக்கப்பட்டார்கள்.  (இன்னும் சில சமூகங்களில் இவர்களுக்கு மரண தண்டனைகூடக் கொடுக்கப்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.)

    1998-இல் வயோமிங் என்னும் மாநிலத்தைச் சேர்ந்த லாரமீ என்னும் ஊரில் ஒரு ஓரின ஈர்ப்பாளனை இரண்டு திருடர்கள் கடத்திக்கொண்டுபோய் துன்புறுத்திப் பின் ஒரு வேலியில் தொங்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.  அந்தப் பக்கமாக சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒருவன் – முதலில் வயல்களில் வைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மை என்று நினைத்துப் போகவிருந்தவன் – பின் நிலைமையை உணர்ந்து மருத்துவமனையில் அவனைச் சேர்த்தும் அவன் – மேத்யூ ஷெப்பர்ட் – இறந்துவிட்டான்.  வயோமிங்கில் நடந்த அவனுடைய ஈமச்சடங்குகளுக்கு நிறையப் பேர் வந்திருந்தாலும் சிலர் அது அங்கு நடைபெறுவதைக் கண்டித்து சுலோகங்கள் தாங்கிய அட்டைகளைச் சுமந்துவந்தனர்.  இதனால் அங்கு மகனுடைய அடக்கம் நடைபெற்றால் பின்னால் அவனுடைய கல்லறை அப்படி எதிர்த்தவர்களால் அசிங்கப்படுத்தப்படலாம் என்று பயந்து அவனுடைய பெற்றோர்கள் இருபது வருஷங்களாக மகனுடைய அஸ்தியை புதைக்காமல் வைத்திருந்தார்கள்.  இப்போது மகனுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கிடைத்திருக்கிறது.  கடைசியாக மகனுக்கு அவனுக்குப் பிரியமான இடத்தில் அவனுடைய கடைசி இருப்பிடம் அமைந்திருக்கிறது என்று அவனுடைய தந்தையும் தாயும் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.  முதலில் மகனுடைய அஸ்தியை வயோமிங்கின் மலைகளின் மீதும் சம வெளிகளிலும் தூவிவிட முடிவுசெய்தனர்.  இருந்தாலும் மகனிடம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதுவாக ஒரு பாதுகாப்பான இடம் தேடினர்.  இப்போது கடைசியாக வாஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் அஸ்தியைப் புதைக்க இடம் கிடைத்திருக்கிறது.  வரும் அக்டோபர் 26-ஆம் தேதி மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  இது ஜெபக் கூட்டங்களும் ஞாபகார்த்தக் கூட்டங்களும் தினமும் நடைபெறும் கதீட் ரல்.  இங்கு பெரிய அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.   பெரிய புள்ளிகளான அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸன், அமெரிக்கக் கப்பற்படையில் பெரிய அதிகாரியாக விளங்கிய ஜார்ஜ் டூயீ, ஹெலென் கெல்லர், அவருடைய ஆசிரியை ஆனா சல்லிவன் ஆகியோர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.  “இவர்களோடு மேத்யூவும் புதைக்கப்பட்டிருப்பது சிறந்த காரியம்தான்” என்று பிஷப் புத்தே கூறியிருக்கிறார். சமீபத்தில் அமெரிக்க செனட்டராக இருந்த, அமெரிக்காவின் கடற்படையில் பணிபுரிந்த, வியட்நாம் சிறையில் ஐந்தரை வருடங்கள் போர்க் கைதியாகக் கழித்த செனட்டர் மெக்கெயினைக் கவுரவித்து இறைவழிபாடு நடத்தினார்கள்.

    அக்டோபர் 26-ஆம் தேதியன்று பொதுமக்களுக்கான ஜெபக்கூட்டம் முடிவடைந்ததும் மேத்யூவின் குடும்ப அங்கத்தினர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் நடக்கப்போகும் நிகழ்ச்சியில் மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  அந்த நிகழ்ச்சிக்கு பிஷப் புத்தேயும் ராபின்ஸனும் (இவர் 2003-இல் முதல் ஓரின ஈர்ப்பாள பிஷப்பாக எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் சேர்ந்தவர்) தலைமை தாங்குவார்கள்.  மேத்யூவின் பெற்றோர்கள் ஓரின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினர் என்று பலவிதமான பால் பாகு

    பாடுகளுடையவர்களின் ((LGBTQ) உரிமைகளுக்காகப் பாடுபட்டு வருகிறார்கள்.  இவர்களோடு சேர்ந்து ராபின்ஸனும் பாடுபட்டு வருகிறார்.  மேத்யூவின் அம்மா கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தக் கதீட்ரலில் மேத்யூவின் அஸ்தியைப் புதைக்க ராபின்ஸன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

    மேத்யூவின் நண்பன் ஜேஸன் மார்ட்ஸன் நண்பனின் பெயரில் ஒரு பவுண்டேஷனை ஆரம்பித்து மேத்யூவுக்குப் பிரியமான உலக அரசியல், மனித உரிமைகள் பற்றி அவன் பெயர் விளங்குமாறு செய்யப் போகிறார்.  அக்டோபர் 26-ஆம் தேதி ஜேஸனும் மேத்யூவின் அஸ்தி புதைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.  பிஷப் ராபின்ஸன் கூறியதுபோல் இம்மாதிரி பால் பாகுபாடு உடையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா இப்போது – மேத்யூ கொல்லப்பட்டபோது இருந்ததைவிட – எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  மத்திய அரசாலும்  சில மாநில அரசுகளாலும் ஓரின ஈர்ப்புத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

    2009-இல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதாவில் மேத்யூவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.  அந்த மசோதா சட்டமாக்கப்பட்டபோது ஒருவரை வெறுப்பதால் இழைக்கப்படும் கொலைகளில் (Hate Crimes- அமெரிக்காவில் இவ்வகைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு) பால் பாகுபாட்டினால் ஒருவரை வெறுத்து இழைக்கப்படும் கொலைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  2013-லேயே ‘மேத்யூ, என் நண்பன்’ என்னும் ஆவணப் படமும் கதீட் ரலால் வெளியிடப்பட்டது.

    “மேத்யூ கொலைசெய்யப்பட்டதிலிருந்து இந்த இருபது வருடங்களில்  எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  ஆயினும் இன்னும் எவ்வளவோ மாற வேண்டியிருக்கிறது.  பால் பாகுபாடு உடையவர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.  அவர்களும் கடவுளின் குழந்தைகள்.  அதனால் அவர்களுடைய பால் பாகு பாட்டினால் அவர்களை வெறுப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்” என்றார் பிஷப் புத்தே.

    இப்போதைய போப் பிரான்சிஸும் ஓரின ஈர்ப்பாளர்கள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, “அவர்களைப் பற்றிக் கணிப்பதற்கு நான் யார்?  அவர்களும் கடவுளின் குழந்தைகள்” என்றார்.

    “இந்தக் கத்தீட்ரலில்  புதைக்கப்பட்டிருக்கும் மற்றப் பெரிய மனிதர்களோடு எங்கள் மகன் மேத்யூவுக்கும் இடம் கிடைத்திருப்பது நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான மகிழ்ச்சியான விஷயம்” என்று மேத்யூவின் தந்தை கூறியிருக்கிறார்.

    அமெரிக்கா பல வழிகளில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது.  பால் பாகுபாடுடையவர்களுக்கு சமூகத்தில் உரிய இடத்தை வழங்கியிருப்பதிலும் முதன்மை வகிக்கிறது.

    இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அவருடைய ஆதரவாளர்களும் இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளை மறுத்துச் சட்டம் இயற்றிவிடுவார்களோ என்ற பயமும் வருகிறது.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (284)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரத்தில் உங்களுடன் மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். காலத்தின் வேகம் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் போல அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. அன்றைய நாட்டின் நடப்புகள் இன்றைய நாட்டின் நடப்புக்கு ஏற்றதாகக் கருதப்படாததால் சமுதாய நிலைப்பாடுகளும் காலத்திற்கேற்பத் தமது போக்குகளை மாற்றிக் கொண்டே செல்கின்றன. இது நாட்டிற்கு நாடு அந்தந்த நாட்டின் கலாசார நிலைப்பாடுகளை ஒட்டி வேறுபடுகின்றதேயொழிய அடிப்படையில் அனைத்தும் காலத்தின் மாற்றங்களே!

    இங்கிலாந்தில் இன்று அரசியல்களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கிலாந்தின் பிரதமர் தெரேசா மே அவர்கள் தமது பதவியில் நிலைத்து இருப்பாரா? எனும் கேள்வி பல அரசியல் அவதானிகள் மத்தியில் எழுப்பப்பட்டு அலசப்பட்டு வருகிறது. “ப்ரெக்ஸிட்” எனும் அந்தப் பூதம் மீண்டும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குவளையிலிருந்து மெதுவாக தலையை வெளியே நீட்டினாலும் அந்நிகழ்வு பூதாகரமான நிகழ்வாகவே நோக்கப்படுகிறது. இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றத்தின் பின்னால் எவ்வகையான வியாபார ஒப்பந்தத்தை எட்டப்போகின்றன என்பதே இன்றைய முக்கியமான விவாதமாக இருக்கின்றது.

    இந்த ஒப்பந்தத்தை எட்ட இருக்கும் காலக்கெடுவானது அவசரமாகத் தனது எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும், பிரதமரும் அவசரம், அவசரமாக பல கருத்துப்பரிமாறல்களை ஜரோப்பிய ஒன்றியத்துடன் நிகழ்த்தினாலும் இன்னும் தீர்க்கப்படாத சில முக்கிய விவகாரங்கள் தலையிடியைக் கொடுக்காமலில்லை. இங்கிலாந்தின் பிரதமரின் வைராக்கியத்தைப் பாராட்டமலிருக்க முடியாது. ப்ரெக்ஸிட் வேண்டும் எனும் தீர்ப்பளித்த பெரும்பான்மை இங்கிலாந்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அரசின் ஜனநாயகக் கடமை என அதற்குச் சார்பான அரசியல்வாதிகள் ஒருபுறம், மக்கள் ஆதரவாக வாக்களித்தார்கள் எனும் ஒரே காரணத்திற்காக நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டாலும் பரவாயில்லை ப்ரெக்ஸிட்டை நிறைவேற்றுவோம் என்பதல்ல உண்மையான ஜனநாயகம் என்று வாதிடும் அரசியல்வாதிகள் ஒருபுறம், இந்த இக்கட்டான சூழலை உபயோகித்து அரசாங்கத்தைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலுக்கு வழிவகுத்தால் தமக்கு வெற்றியடைய ஒரு வாய்ப்பிருக்கும் என்று செயல்படும் எதிர்கட்சி ஒருபுறம், பிரதமரின் சூழலை உபயோகித்து பிரதமரை வீழ்த்தித் தாம் பிரதமராகலாம் எனும் எண்ணம் கொண்ட பிரதமரின் கட்சியைச் சார்ந்தோரின் முதுக்குப் பின்னால் விழும் கத்திக் குத்துகள் ஒருபுறம் என அனைத்தையும் சமாளித்துக் கொண்டு ஒரு பெண் என்று எண்ணி என்னை விழுத்தி விட முடியாது என்று செயற்படும் பிரதமரின் வைராக்யம் அலாதியானது.

    பிரதமருக்கான இந்த பிரச்சனைகள் ஓரிடத்தில் இருந்து மட்டும் வந்து விடவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ப்ரபல்யமான அரசியல்வாதிகள் எனப்பலரும் இந்நிலைக்கு காரணகர்த்தாக்கள். இங்கே செயற்படும் எத்தனை பேர் நாட்டின் நன்மையை முன்வைத்து செயற்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே! இன்னும் இரண்டு தினங்களில் கூட இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் ஒரு முடிவும், உடன்படிக்கையும் எட்டப்படாவிட்டால் உடன்படிக்கையற்ற ஒரு விலகலையே இங்கிலாந்து எதிர்நோக்க வேண்டிவரும். அத்தகைய ஓர் முடிவினால் எத்தகைய பொருளாதாரப் பின்னடைவுக்கு இங்கிலாந்து முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது யாராலும் கூறமுடியாத ஒரு விடயமாகும். பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொண்டாலும்,ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவானவர்கள் இப்பின்னடைவு மிகவும் தற்காலிகமானது அதைத்தொடர்ந்து வரும் முன்னேற்றம் இப்பின்னடைவினை நியாயப்படுத்தும் என்கிறார்கள். ஆனால் ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்களோ இப்பின்னடைவு எமது பொருளாதாரத்தை ஒரு பத்து வருடங்களுக்கு மேலாகப் பின் தள்ளும் என்கிறார்கள். இத்தகைய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் படலத்தை இதுவரை எந்த ஒரு நாடுமோ மேற்கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்திலேயே இத்தகைய ஒரு நிகழ்வு இப்போதுதான் முதன்முறையாக நிகழ்கிறது.

    பிரதமர் திரேஸா மே அவர்கள் நாட்டின் முன்னேற்ற்த்துக்கான உடன்படிக்கையை நிறைவேற்றித் தனது சங்கற்பத்தை நிறைவேற்றுவாரா? இல்லை பதவியைப் பறிகொடுப்பாரா?  இங்கிலாந்தின் பொருளாதாரம் எவ்வகையில் பாதிக்கப்படப் போகிறது? இக்கேள்விகளுக்கெல்லாம் விடையை அடுத்த வாரம் பகன்று விடுமா? இல்லை இன்னும் ஏக்கத்தின் விளிம்பில் காத்திருக்க வேண்டுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்
    16.10.2018

     

    Share
  • சங்க காலப் பெண் கவிஞர்கள் போற்றும் மானுட விழுமியங்கள்      

    முனைவைர் பா.தமிழரசி

    தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,

    அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,

    சிவகாசி.

    மானுட விழுமியங்கள்:

    பண்பாட்டைச் சோர்ந்தோர் தம் வாழ்க்கைக்கும் செயல்முறைக்கும் தொடர்புடையதான விழுமியங்களைக் கொண்டு ஒழுகுவர். தவிர்க்க வேண்டியவற்றை நீக்குவர். அவை தம் பண்பாட்டு விழுமியங்களோடு கலந்து விடாது பார்த்துக் கொள்வர். தனிமனித விழுமியம் என்றில்லாமல் தனித்த ஒரு சமூக விழுமியம் என்று காத்துக் கொள்வர். ஒரு சமூகத்தைச் சார்ந்தோரின் பண்பாடு உடைய வாழ்வியலின் இன்றியமையாத அடிப்படைப் பண்புகள் இவை இவை என்று கூறுவது மானுட விழுமியங்கள் என்பார் ராபர்ட் பியர்ஸ்டெட். விழுமியம் எனும் சொல் சங்க இலக்கியங்களுள் இடம்பெறவில்லை. ‘விழுமிய’ எனும் சொல் சங்க இலக்கியங்களுள் காணப்படுகின்றது. இச்சொல்லுக்கு சிறந்த – (சென்னைப் பல்கலைக்கழகக் கழகத் தமிழ்ப் பேரகராதி) செழித்த, வளமான, உயர்ந்த என அகராதிகள் பொருள் தருகின்றன. பத்துப்பாட்டில் இடம் பெறும் ‘விழுமிய’ என்னும் சொல்லுக்கு நச்சினார்க்கினியர் ‘சீரிய’ எனப் பொருள் கொள்கிறார். இப்பொருளை உட்கொண்டே அகராதிகள் ‘சிறந்த’ எனும் பொருளை முன் வைக்கின்றன எனலாம். வள்ளவர் குறிப்பிடும் ‘விழுப்பம்’ என்னும் சொல்லும் ‘சீர்மை’ என்னும் பொருளுடையது. எனவே, மனித வாழ்வில் பின்பற்றத்தக்க நெறிகளுள் சீர்மையுடையனவற்றைத் தனித்து அடையாளப்படுத்த ‘விழுமியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தலாம்.

    மானம் பெரிது :

    வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் சேர மன்னனின் மானத்தைப் பெரிதாகப் போற்றுகிறார். வீரம் சமூக விழுமியமாக இருந்தாலும் வீரத்தை விட மானமே உயர்ந்ததாக சங்க காலத்தில் போற்றப்பெற்றது. சங்க காலத்தில் மார்பில் பட்டு முதுகுப்பக்கம் அம்பு வந்து விட்டாலும் புறப்புண் பெற்றதாகக் கருதப்பட்டது. புறப்புண் பெற்றால் அவமானம். அவமானம் நேரும் பொழுது அரசரே ஆனாலும் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீப்பது அக்காலச் சமூக விழுமியம். வீரத்தை விட மானம்பெரிதாகப் போற்றப்படுகிறது.

    “  நளியிரு முந்நீர் நாவாயோட்டி

    புறப்புண்ணாணி வடக்கிருந்தோனே” (புறம்.66)

    ஒழுக்கம்:

    ஏமாற்றாமை, திருடாமை, பரத்தையர் ஒழுக்கம் ( கண்டிக்கத் தக்கதாகவே இருந்நதது ) இவை விழுமியங்களாக இருந்தன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ (கலித்.133) இவை பண்பு தொடர்பான விழுமியங்களை உணர்த்துகின்றது.

    ஒருவனுக்கு ஒருத்தி எனும் கோட்பாடு :

    சங்க விழுமியங்களுள் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற பண்பாட்டு விழுமியம் சங்ககால ஆண், பெண் வாழ்வில் காக்கப்பெற்றுள்ளது. இல்லற முறைமையால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறி போற்றப் பெற்றது. அரசியல் காரணங்களுக்காகக் கூட இருதார முறை சங்ககாலச் சமுதாயத்தில் அனுமதிக்கப் பெறவில்லை.

    இரண்டாம் மனைவியராகவோ அல்லது காமக்கிழத்தியராகவோ கூட பெண்கள் அரசனுக்கு இருத்தல் கூடாது என்பதைப் பேகன்-கண்ணகி வரலாற்றில் பேகனைக் கண்டித்த பாணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பாடல்கள் காட்டுகின்றன. புறநானூற்றில் 143 முதல் 147 வரை உள்ள பாடல்கள் இதை வலியுறுத்துகின்றன.

    ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மனைவியை இழந்து வாடும் கணவன் பற்றிய செய்தி புறம் 251, 252 பாடல்களில் மாற்பித்தியார் சுட்டுகின்றார்.

    “ கள்ளி போகிய களியம் பறந்தலை

    வெள்ளிடைப் பொத்திய வினை விறகு ஈமத்து

    ஒள்ளழற் பள்ளிய பாயல் சேர்த்தி” (புறம். 245)

    கள்ளிச் செடி நிறைந்த சுடுகாட்டில் எரியும் நெருப்பில் விறகுப் படுக்கையில் அன்பிற்குரியவளைக் கிடத்தி விட்டு இன்னும் என் உயிரைப் போக்கிக் கொள்ளாது உயிர் வாழ்கின்றேன் எனப் புலம்பும் ஆணின் குரல் பெண் பற்றிய சமூக மதிப்பீடாகும். ஆண் துயரத்தால் அழமாட்டான் என்ற புனைவைத் தகர்த்துப் புனையப்பட்டுள்ள சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பாடல் வரிகள், பெண்ணைப் போற்றுவதாக அமைந்துள்ளன. மேலும்,

    “கறங்கு வெள் ளருவி யேற்றலினிறம் பெயர்ந்து

    தில்லை யன்ன புல்லென சடையோ

    ……….

    இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

    சொல்வலை சேட்டுவ னானாயினன் முன்னே” (புறம்.252)

    மனைவியின் நினைவிலேயே வாழும் கணவனின் நெஞ்சம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மனைவியோடு சோ்ந்திருந்த இன்பச்சூழலையும், அவனை இழந்ததால் ஏற்பட்ட சோகத்தையும் சடைமுடி வளர்த்த கோலத்தையும் இப்பாடல் காட்டுகிறது. மனைவியை இழந்து வாடும் துன்பம் தாங்காமல் வீட்டை விட்டு ஊரை விட்டும் வெளியே சாமியாராகப் போய் விட்டதை இப்பாடல் சுட்டுகின்றது. மனைவியைப் பிரிந்த கணவன் பிற்காலத்தைப் போல, அக்காலத்தில் பிறிதொரு பெண்ணை மணம் முடிக்காமை சங்க இலக்கிய ஒருவன் – ஒருத்தி விழுமியத்துக்கு அரண் சோ்க்கிறது. இது ‘தபுதார நிலை’ எனப்படும்.

    பெண் கொல்லாமை :

    ஆடவர், அரசர் மற்றோர் யாவராலும் பேணிக் காக்கத்தக்க தகைமை சான்றவள் பெண். அவளைக் கொலை செய்தல் பெரும் பழியாக எண்ணப்பெற்றது. பெண் கொலை புரிந்த நன்னன் என்று மன்னனை வெறுத்து ஒதுக்கியதைக் குறுந்தொகை, ‘பெண் கொலை புரிந்த நன்னன் போல்’ (பா.292) பாடலடி புலப்படுத்துகின்றது.

    வீரர்கள் போருக்குச் செல்லும் போது போர் அறமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்களுள் பெண், குழந்தை, பசு, பார்ப்பனர், பிணியுடையோர்; ஆவார். குழந்தை பெறாத மணம் முடித்த பெண்களுக்குப் போர் தொடுக்கும் போது பகை மன்னரோ படையினரோ ஊறு செய்தல் கூடாது என்பது அறமாகப் போற்றப்பட்டது. நெட்டிமையார் எனும் பெண் புலவர் படை தொடுக்கும் காலங்களில் படையினரால் ஊறு செய்யப்படக் கூடாதோர் என்று பட்டியல் இடுகிறார். அப்பட்டியலில் குழந்தை பெறாதோர் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

    தாய்மைப்பேறு :

    பெண்ணின் பெருமைகள் பலவாயினும் அனைத்தினும் தாய்மைப் பண்பே தலையாயச் சிறப்பும், பெருமையும் ஆகும். தன்னலம் கருதாத தொண்டு மனமே தாய்மை. என்பும் பிறர்க்கு ஈயும் அன்பு தாய்மை. தெய்வங்களுள் தலையாய தெய்வம் தாய்மை. மணமான பெண் தாய்மை அடைவது பெரும் பேறாகப் போற்றப்பட்டது. பெண்பாற் புலவராகிய பொன்முடியார் எழுதியுள்ள புறநானூற்றுப் பாட்டில்,

    “ ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே” (புறம்.312)

    பெண்ணின் கடமையோடு ஏனையோரின் கடமையும் வற்புறுத்தப்பட்டமை தெளிவாகப் புலப்படுகிறது.

    சுயநலம் அகற்று, பொது நலம் பேணு :

    மனிதம் என்பதன் பொருள் சுயநலம் அன்று, பொதுநலம். தன்னை விட மற்றவரை நினைப்பது அதுவும் அறிஞரை நினைப்பது போற்றுவது தன்னையே வளர்க்கும் என்பதை அவ்வை அதியனின் வாழ்வு எடுத்துரைக்கிறது. அரசனாக இருந்த அதியமான் தன்னிடம் அரசியல் ஆலோசராக இருந்த அறிஞர் அவ்வையை மிக மதிக்கிறான். அதன் விளைவாக மரணமிலாப் பெரு வாழ்வைத் தரும் மலையிடைப் பழுத்த நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் அவ்வையாருக்குத் தருகிறான். அதியமானைத் தன் கவிதைப் படைப்புகளின் ஊடே மரணமிலா வாழ்வை அவ்வை வழங்குகிறார். உதவுபவனையே உலகம் உயர்த்துகிறது. இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் உழைத்து உற்பத்தி செய்து பிறர்க்கு உதவும் தன்னலமற்ற பண்பு உடையவர்கள் என்பதனை அகநூல்கள் உயர்ந்த விழுமியங்களாக காட்டுகின்றன.

    உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை :

    சங்கப் பெண் கவிஞர்கள் காதல் உணர்வுகளையும் காமவேட்கையையும் மனத்தடைகளற்றுக் கவிதை களாக்கியுள்ளனர். பெண்களுக்குத் தங்கு தடையற்ற விடுதலை உரிமை அளிக்கப்பட்டிருந்தது. மணம் ஆகும் முன்னரே காதல் புரிதல், காதலித்த ஆடவனுடன் உடன்போக்கு கொண்டு வாழ்தல், பின்னர் மீண்டு வந்து பெற்றோருடன் கூடி வாழ்தல் ஆகியன வழக்கில் இருந்தன. இவை தகாதனவாகக் கருதப்படவில்லை, தடை செய்யப்படவும் இல்லை. ஆண் மேலாதிக்கச் சமூகத்தில் அதிகாரத்தின் ஆளுகைக்கேற்ப எல்லா நிலைகளிலும் பெண் ஒடுக்கப்பட்டாலும் அவளுடைய எதிர்க்குரலும் தனித்துவமும் கவிதைகளில் பதிவாகியுள்ளன. வெள்ளி வீதியாரின் காமம் பற்றிய மனப்பதிவுகள் வாசிப்பில் உருக்கத்தை ஏற்படுத்துகின்றன. “ வானத்தில் திங்கள் ஒளிர்கின்றது., கடல் அலை கரையில் மோதுகிறது., அன்றில் பறவை பனைமர உச்சியிலிருந்து கத்துகிறது., யாமத்திலும் யாழ் மீட்டப்படுகிறது., இவை எல்லாவற்றையும் விட காமத்தைக் களையும் தலைவன் அருகில் இல்லையே! (நற்றிணை. 385) என தலைவி வருந்துகிறாள். இம்மன நிலை தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகும். காதல் வயப்பட்ட அகப்பாடல்களில் வெளிப்படும் பெண் பற்றிய பிம்பம் நாடக வழக்கியல் தன்மையுடையது.

    பெண்பாற் புலவர்கள் மொழிப்புலமை வாய்ந்தவர்களாகவும் மொழிவளம் பேணும் மாண்பினராகவும், கவியாற்றலும், கற்பனைத்திறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர். தங்கள் பாடல்களில் மன உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்துள்ளனர். ஔவையார், வெள்ளிவீதியார் போன்றோர் தமது கவித்திறனால் இலக்கியத்துள் தனியிடம் பெற்று விளங்கினர் என்பதை உணர முடிகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181017 -Saraswati wcol A4 -300 dpi scan wm

    ”மீட்ட ஒருகை, மெருகூட்ட மற்றோர்கை,
    பாட்டின் சுருதியைப் போட்டொருகை, -காட்டும்,
    பலேபேஷ் அபிநயம், போட்டபடி ஒர்கை,
    தலேபா ரதிடர்பன் தா’’….!

    ”மீட்டும் ஒருகை, மெருகூட்டும் மற்றோர்கை,
    பாட்டின் சுருதியைப் போட்டொருகை, -காட்டும்
    மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு,
    தகாதோர் செவிக்கவள் திட்டு’’….!

    ”வித்யா வினய சம்பன்னே”…..!
    —————————————————————-

    ”சகல கலாவல்லி, சங்கீத சாம்ராட்,
    அகல விடாதுனை ஆட்கொண்டு, -இகபர,
    சுகங்க ளுடனே சுவிகாரம் கொள்வாள்,
    அகங்கார நெஞ்சை அழித்து”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181017 Mahagowri A4 wcol icam lr

    புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
    பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி
    விடையேறி ஈசர் இடபாகம் ஈஷீ
    மடையோனென் நாவில் மலர்….கிரேசி மோகன்….!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 7

    ======================

    திருச்சி புலவர் இராமமூர்த்தி.

    —————————————————

     

    தற்கு  முன் எழுதிய கட்டுரையில்  சேய்மையிலிருந்து அண்மைநோக்கி வரும்

    காட்சியின்  அழகு கூறப்பெற்றது. இனி, இக்கட்டுரையில்  அண்மையிலிருந்து  சேய்மையை  நோக்கும் காட்சி கூறப்பெறுகிறது.  திருக்குறளிலும் , இத்தகைய காட்சி உண்டு. ஒரு குளத்தில் மீன்கள் அங்குமிங்கும் நீந்துகின்றன. அந்தக் குளத்தருகே இரவுநேரத்தில் பெண்ணொருத்தி வருகிறாள். அக்காலத்து நீரினுள்  எட்டிப் பார்க்கிறாள். அந்தப் பெண்ணின் முகம் நீரில் தெரிகிறது. அருகில் வானத்து நிலவின் பிம்பமும் தெரிகிறது. அந்த நீரில் மீன்கள் அங்குமிங்கும் அலைகின்றன!  அதைக் கண்ட வள்ளுவர், மீன்கள் கலங்கித்திரிவதற்குக்  காரணம் கற்பிக்கிறார். அவை எதையோ பார்த்துக் கலங்கி விலகி, விலகி ஓடுவது போல் தெரிகிறது. இயல்பாகத் தம் அருகில் வரும் பெண்ணின் முகத்தைக் கண்டு அஞ்சி விலகாத மீன்கள் வானத்து நிலசுவின் வெண்திரை ஒளியைக் கண்டு வேறுபாடாக உணர்ந்து விலகுகின்றன!  அதாவது வழக்கமாக நாள்தோறும் இரவில் வரும் பெண்களைப்  போலில்லாமல், வெண்மை  ஒளிவீசி விளங்கும் நிலவைக் கண்டு மீன்கள் விலகி நீந்துவதாகத் தன்  குறிப்பை  ஏற்றிக் கூறுகிறார். அதே மீன்கள், வானத்தில் உள்ள விண்மீன்களும் நிலவின் பிம்பத்துடன் தெரியும் பெண்ணின் முகநிழலும் தோன்றுவதால், அவையும் கலங்கித்  திரிகின்றன, என்று கருத்து கின்றன, என்று வள்ளுவர் தன்குறிப்பை  ஏற்றிக் கூறுகிறார் ! அருகிலுள்ள நீரில் தெரியும் பிம்பங்களிலிருந்து குளத்து மீன்களையும், அதற்கும் மேலே தெரியும் வானத்து மீன்களையும் காண்பது, அண்மையிலிருந்து சேய்மையைக் காணும் காட்சியைக்  குறிக்கிறது! இதனை,

    ’மதியும்  மடந்தை முகனும்  அறியா 

      பதியிற்  கலங்கின  மீன்!’’

    என்ற திருக்குறள் புலப்படுத்துகிறது. பெரிய புராணத்திலும்  கரும்புகலின் அருகில் நின்ற கடைசியர், அக்கரும்புகள், மூங்கில்போல்பருத்து  அடர்ந்து வளர்ந்திருப்பது  காடுபோல் இருப்பதாகக் கருதுகின்றனர். அதனைக்

    ’காடெலாம்  கழைக் கரும்பு ‘’

    என்ற தொடறால் சேக்கிழார் விளக்குகிறார்! இன்னும் சற்றே எட்டிப் பார்த்தால்  அங்குள்ள சோலைகளின் செடி ,கொடிகளில் உள்ள சிறுகிளைகளாகிய குழைகளில்  இலைகள் தளிர்த்து அரும்புவது தோன்றுகின்றது! இதனைக்

    ‘’  காவெல்லாம் குழைக்கு  அரும்பு’’

    என்று சேக்கிழார் பாடுகிறார். அதன்பின்னர் சற்றுத் தொலைவில் தெரியும் , வயல் நீரில்  கருமையான குவளைப்பூக்கள் மலர்கின்றன. அதனை அடுத்துள்ள நீரில், சங்குகள் நெருங்கி யுள்ளன! இதனைச் சேக்கிழார்,

    ‘’மாடெல்லாம்  கருங்குவளை, வயலெல்லாம் நெருங்கும் வளை ‘’

    எனப்படுகிறார்! அவற்றை அடுத்து வெளியில் தெரியும் மரக்கிளைகளில்  மென்மையான அன்னங்கள் அமர்ந்திருக்கின்றன! அவற்றை அடுத்துப் புறத்தே தெரியும் குளங்களில்    எங்கெங்கும்  கடலன்னங்கள் எனப்படும் நாரைகள்  விளங்குகின்றன! இதனை,

    ‘’கோடெல்லாம் மடவன்னம்,  குளமெல்லாம்  கடலன்னம் ‘’

    என்று புலவர் பாடுகின்றார். அதனையும் அடுத்து பக்கத்து நாடுகளை அப்பெண்கள் பார்க்கின்றனர்! அந்த நாடுகளை  நீர்வளம் பெருகிய சோழநாடு என்று கருதுகின்றனர்;  அதற்கும் அப்புறத்தே உள்ள நாடுகள் இச்சோழ நாட்டுக்கு இணையானவை அல்ல! என்றும் கருதுகின்றனர்! இதனைச் சேக்கிழார் ,

    ‘’நாடெல்லாம் நீர்நாடு  தனையொவ்வா  நலமெங்கும் ‘’

    என்கிறார். இனி முழுப் பாடலையும் காண்போம் ,

    ‘’காடெல்லாம்  கழைக்கரும்பு  காவெல்லாம்  குழைக்கரும்பு

     மாடெல்லாம்  கருங்குவளை  வயலெல்லாம்  நெருங்குவளை

     கோடெல்லாம் மடவண்ணம்  குளமெல்லாம்  கடலன்னம்

     நாடெல்லாம்  நீர்நாடு  தனையொவ்வா  நலமெல்லாம்!’’

    இப்பாடல் அருகிலிருந்து தொலைவில் பார்க்கும் நிலையைத் தெளிவாக்கு கின்றது.முதலில் கரும்பு வயல்,பின்னர் சோலைகளில் அரும்பும் குழைகள்,அடுத்து வயல்கள், அடுத்து வரப்புகள் , அடுத்து குளங்கள்,அடுத்து சோழ நாடு , அடுத்து உலகநாடுகள்  புலனாகின்றன.

    இதில் சிந்தாந்தம் குறிக்கும் தியான நிலையை உய்த்துணரலாம். தியானம் செய்யும் போது அனைத்தும் உள்ளே ஒடுங்கி இறைமையை யோக நிலையில் அருகில் உணரலாம். அந்த ஒடுக்கத்தினுள், வெளிப்பிரபஞ்சம் யாவும் அடங்கி நிற்கும்! அதில் வெளியில் உள்ள பிரபஞ்ச தரிசனம் கிட்டும். உள்ளிருந்தே புறமெங்கும் கண்டறியும் சித்தி, தியான யோகத்தினர்க்கு  வாய்க்கும் என்ற தத்துவ உண்மையை, தெய்வச் சேக்கிழார் ஸ்வாமிகள் இப்பாடல் மூலம்  விளக்கியருளுகின்றார்.

    ========================================================================

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 21

    -மேகலா இராமமூர்த்தி

    திருக்குறள், அறம் பொருள் இன்பம் எனும் முப்பொருளும் பேசுவதுபோலவே நாலடியும் இவை மூன்றையும் பேசுகின்றது. இங்கே காமம் என்பதே இன்பம் எனும் பெயரால் சுட்டப்படுவது என்பதறிக. வள்ளுவத்தில் காமம் 25 அதிகாரங்களில் விரிவாகப் பேசப்படுகின்றது. ஆனால் நாலடி பல்தரப்பட்ட காமஞ்சார் செய்திகளையும் ஒரே அதிகாரத்தில் சுருக்கமாய்ப் பேசிவிடுகின்றது.

    அவற்றில் சில நம் கவனத்துக்கு…

    முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம் – வயங்கோதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு.
    (நாலடி – 391)

    தலைவியைத் தழுவாவிடின் அவளுடம்பில் பசலை நிறம் பரவும்; ஆனால் இடையிடையே அவள் ஊடல் கொள்ளாவிடில் காமச் சுவை குன்றும். ஆகலின், அலைகள் நில்லாது அலைத்துக்கொண்டிருக்கும் நீண்ட கழியினை உடைய குளிர்ந்த துறைவனே! ஊடுதலும் பின் கூடுதலுமே காமத்துக்கு இனிய நெறியாகும் என்று வாயில் நேர்ந்த தோழி, தலைமகளின் ஊடல் தவிர்த்துக் கூடிய தலைமகற்குக்  கூறியது இது எனும் குறிப்பு இப்பாடலில் காணப்படுகின்றது.

    புலவி என்று சொல்லப்படும் ஊடல் காமத்துக்குச் சுவையூட்டும் உப்பாகும்; அதுவே அளவுகடந்து சென்றால் சுவைகெட்டுத் தப்பாகும். இதனையே வள்ளுவர்,

    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்.
    (1302) என்றுணர்த்தினார்.

    அதுபோன்றே,

    ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின். (1330) என்று காமம் துய்க்கும் கலையைக் கருத்தாய்ச் சொன்னவரும் அவரே.

    மாலைக்காலம், தலைவனோடு கூடியிருக்கும் தலைவியர்க்கு இன்பத்தையும் அவனைப் பிரிந்திருக்கும் தலைவியர்க்கு அளவற்ற துன்பத்தையும் அளிக்கக்கூடியது.

    தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியர்க்கு மாலைக்காலம் எத்தகு வருத்தத்தைத் தரும் என்பதைப் ‘பொழுதுகண்டு இரங்கல்’ எனுல் அதிகாரத்தில் வள்ளுவர் விளங்கவுரைப்பார். அதில், தலைவனை முதன்முறையாய்ப் பிரியும் தலைவி ஒருத்தி, தலைவனோடு தான் கூடியிருந்த காலத்தில் இம்மாலைக்காலம் இத்தகைய துன்பத்தைத் தரவல்லது என்று அறிந்திலேனே என்று வருந்துவதை, பெண்களின் உளவியலை நன்குணர்ந்தவராய், வள்ளுவர் வெளிப்படுத்தியிருக்கும் திறம் எண்ணி இன்புறத்தக்கது.

    மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்த திலேன்
    . (1226)

    தலைவன்  தன்னைப் பிரிந்து பொருள்தேட விழைகின்றான் என்பதை அறிந்தாள் ஒரு தலைவி. அதன்பின்னர் அவள் செயற்பாடுகளில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்த தோழி, ”கம்மத்தொழில் செய்கின்ற மக்கள் தம் தொழிலை நிறுத்திக் கருவிகளை ஏறக்கட்டிச் சென்ற  மயங்கஞ் செய்யும் இம் மாலைப்பொழுதில், மலர்களை ஆராய்ந்து மாலை தொடுத்துக்கொண்டிருந்த  தலைவி, நின் பிரிவு கேட்டுத் தனது கையிலிருந்த மாலையை நழுவவிட்டுத் தலைவராகிய துணையைப் பிரிந்த மகளிர்க்கு இந்த மலர்மாலை என்ன பயன் தரும்?” என்று சொல்லி வருந்தி அழுவாளாயினள்” என்று தலைவனிடம் தலைவியின் உளநிலையை உணர்த்துகின்றாள். ஈண்டு அவள் நோக்கம் தலைவன் தன் செலவினைத் தவிர்க்க வேண்டும் என்பதே.

    கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
    மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
    கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
    இம்மாலை என்செய்வ தென்று. 
    (நாலடி – 393) 

    அகநூல்களில் தலைமகன் தலைவியின் நலம் பாராட்டும் பாடல்களில் புலவர்களின் கற்பனைத் திறன் கொடிகட்டிப் பறப்பதைக் காணலாம். அவ்வரிசையில் நாலடியின் ஆசிரியர்களும் எம் கற்பனைத் திறன் யார்க்கும் குறைந்ததன்று என்று பொற்போடு நிறுவியிருக்கும் பாடலை அடுத்துக் காண்போம்.

    கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
    பின்சென்றது அம்ம சிறுசிரல் – பின்சென்றும்
    ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
    கோட்டிய வில்வாக் கறிந்து. 
    (நாலடி – 395)
     

    ”கண்களைக் கயல்மீன் என்று கருதிய கருத்தினால் அதனைக் குத்தித் தின்னும் பொருட்டு, நம் காதலியின் பின்னே சென்றது சிச்சிலி என்னுஞ் சிறிய மீன்குத்திப் பறவை. ஆனால் அவ்வாறு பின்சென்றும் அவளின் ஒள்ளிய புருவத்தைக் கண்டு இது வில்லின் வளைவென்று எண்ணிக் குத்தாமல் விட்டுவிட்டது” என்று  தன் கற்பனையை வி(வ)ரிக்கின்றான் தலைவன்.

    வள்ளுவத்திலும் தலைவன் தலைவியின் நலம் புனைந்துரைக்கும் பாடல்கள் நினைந்தின்புறத் தக்கவை.

    குறட் காதலனின் கற்பனை இது!

    வானத்தில் ஒளிவிடும் விண்மீன்கள் வெண்ணிலவைப் பார்த்தன; அப்படியே சற்றுக் குனிந்து புவியிலுள்ள பெண்ணிலவின் முகத்தையும் பார்த்தன.  அவ்வளவுதான்…உண்மையான மதி எது என்பதில் அவற்றிற்கே குழப்பம் வந்து மதிகலங்கிப் போயினவாம்!

    மதியும் மடந்தை முகனும் அறியாப்
    பதியிற் கலங்கிய மீன். (1116)

    நலம் பாராட்டும் அன்பினால் காமம் மாட்சிமைப்படும் என்பது நம்மனோரின் எண்ணம்.

    தலைவி ஒருத்தி தன் காதற் தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்டாள். அதனை அறிந்த செவிலித்தாய், தலைவியின் மென் தன்மையையும் அவள் கடந்துசென்ற பாதையின் வன்மையையும் நினைந்து கலங்கும் பாடலிது!

    அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
    பரற்கானம் ஆற்றின கொல்லோ – அரக்கார்ந்த
    பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
    அஞ்சிப்பின் வாங்கும் அடி.  (நாலடி – 396)

    செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப்போல நறுமணத்தோடு விளங்கும் வாயையும் அழகிய இடையையுமுடைய நம் புதல்விக்கு, அழகுக்காகச் செந்நிற மிக்க செம்பஞ்சிக் குழம்பைத் தடவினாலும் ‘மெதுவாக, மெதுவாக’ வென்று அஞ்சிக் கூறிப் பின் இழுத்துக்கொள்ளும் அத்துணை மெல்லிய பாதங்கள் தலைவனோடு உடன்போக்கிற் பிரிந்த இப்போது பரற்கற்களையுடைய கானத்திற் செல்லப் பொறுத்தனவோ? என்றெண்ணிக் கலங்குகின்றது அத் தாயுள்ளம்.

    தலைவியுடைய திருவாயின் நறுமணத்துக்கு ஆம்பல் மலரின் மணத்தைப் புலவோர் பலரும் ஒத்த மனத்தினராய்ச் சான்று காட்டியுள்ளனர். அவற்றில் சில…

    ஆம்ப னாறுந் தேம்பொதி துவர்வாய்  (குறுந்தொகை – 300)

    ஆம்பனா றமுதச் செவ்வாய் (சீவக. 561)

    ஆம்ப னாறுந் தேம்பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய் (சிலப். 4: 73-4)

    தலைவனோடு உடன்போக்கு மேற்கொள்ளத் தலைப்பட்டாள் மற்றொரு தலைவி. அதனை அறிந்த அவள் தோழி, மெல்லியளான இவள் இந்தக் கடுமையான காட்டுவழியில் எவ்வாறு நடந்துசெல்வாள் என்று ஐயுற்றுத் தலைவியிடமே அதுபற்றி வினவ, அதற்குத் தலைவி தந்த மறுமொழியே இப்பாடல்!

    கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
    நடக்கவும் வல்லையோ என்றி – சுடர்த்தொடீஇ!
    பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
    கற்றான் அஃதூரும் ஆறு. (நாலடி – 398)

    ”வன்மையுடையதும் யாருங் கடந்து செல்லுதற்குக் கடுமையானதுமான காட்டுவழியில் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமையுடையையோ என்று கேட்கின்ற சுடர்த் தொடியே! பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றவனொருவன் அப்பொழுதே அதில் ஏறி ஊர்ந்துசெல்லும் நெறியைக் கற்றவனாகின்றான்” என்றாள் தலைவி.

    இங்கே அவள் உணர்த்துவது, உழுவலன்பினால் ஒன்றுபட்ட உள்ளம் அளப்பரும் ஆற்றலைப் பெறுகின்றது; அஃது எத்துணைக் கடுமையையும் தாங்கவல்லது என்பதே.

    நம் அன்றாட வாழ்வில்கூட, வலிமை குறைந்த கோழியானது தன் குஞ்சுகளை வலிய பருந்து கவர்ந்துசெல்ல முனையும்போது அதனைப் பறந்து தாக்குவதைப் பார்க்கமுடியும். அவசியமும் தேவையுமே வலியற்ற மனிதர்களையும் மகத்தான ஆற்றலாளர்களாக மாற்றுகின்றது என்பது மறுக்கவியலா உண்மை.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்  பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • மீன்குளத்தி அம்மன் கோயில் வழிபாடு

    -முனைவர் ரா.திவ்யா

    திருக்கோயில் அமைப்பில் தமிழகக்கோயில்கள் சிறந்து விளங்குகின்றன.  அதுபோலவே, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோயில்களும் தனித்தன்மையுடன் சிறப்புப்பெற்று விளங்குகின்றன.  தமிழகக் கோயில் அமைப்புக்கும் கேரளக் கோயில் அமைப்புக்கும் வேறுபாடு உள்ளமை யாவரும் அறிந்த ஒன்றாகும்.  கேரளாவில் பத்மநாபன் கோயில், குருவாயூர் கோயில், சபரிமலைக் கோயில், கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயில் ஆகியவை பெரும்புகழ் பெற்று விளங்குகின்றன.

    வரலாறு

    ஏறத்தாழ பல ஆண்டுகளுக்கு முன்னர் பிற இடங்களுக்குப் பிழைப்பைத் தேடி முதியவர் ஒருவர் கேரளாவிற்கு நடைப்பயணமாகி வந்து சேர்ந்தார்.  அவர்கள் வீரசைவ வேளாள மன்னாடியார் வகுப்பைச் சேர்ந்த மூன்று தாய் வழிக் குடும்பத்தார் ஆவார்கள்.  அம்முதியவர் தொழிலுக்காக எங்கு சென்றாலும் அந்நாட்களில் எல்லாம் தங்களது தெய்வமான மீனாட்சி அம்மனைத் தரிசித்து விட்டே செல்வார்.  பின்னைய நாளிலெல்லாம் தனக்கு வயதானதால் அடிக்கடிப் போக முடிவதில்லை.  ஒரு சமயம் அம்மனைத் தரிசித்து உன்னை வணங்க இனி வரமுடியாது என்று வருந்திக் கொண்டு சிறு மூட்டையும், குடையும் எடுத்தவாறு நடந்து வந்தார்.  சிறிது தூரமாக நடந்த பின் அவருக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்பட்டது. அங்கிருந்த குளத்தின் அருகிலே மூட்டையையும், குடையையும் வைத்துவிட்டு, தண்ணீர்க் குடிக்கச் சென்றார்.  சிறிது நேரம் கழித்து அம்மனை நினைத்துக் கொண்டு மூட்டையைத் தோளிலே போட்டு, குடையைத் தூக்க, அது நகராததை எண்ணினார்.  அங்கு விளையாடுகின்ற சிறுவர்களை அழைத்துப் பார்க்கச் சொல்லி அங்கு வாழுகின்ற மக்களை அழைத்தார்.  அங்கு குடியிருப்பது அம்மன் மீனாட்சியே எனக் கூறினார்கள்.  அங்குள்ள இடங்களுக்கெல்லாம் இச்செய்தியானது பரவியது.  அம்மன் குடியிருந்த காரணத்தால் அவ்விடமானது குடமந்து எனப் பெயர்பெற்றது. என்று தகவலாளி அம்மன் வந்த வரலாற்றினைக் கூறுகிறார்.  இந்நாளில் குடமந்து என்ற பெயரானது மருவி கொடுமந்து எனப் பெயர் பெற்றது. இக்கொடுமந்து என்ற இடத்தில் தான் அம்மன் எண்ணூறு ஆண்டுகளாக எழுந்தருளியுள்ளதாகக் கூறுகின்றனர்.

    கோயில் பெயர்க்காரணம்

    இக்கோயிலில் மீன்கள் மிகுந்து காணப்படுகின்றன.  இங்குள்ள மீன்களுக்கு “மீனூட்டு” நிகழ்ச்சி நடைபெறும்.  “மீன்கள் குளத்தில் அதிகமாக இருப்பதால் மீன்குளத்தி அம்மன் என்று பெயர் வந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

    “குளத்தில் மீன் இருப்பது, அம்மன் மதுரையில் இருந்து வந்தாள்.  அம்மதுரையை பாண்டியன் ஆண்டு கொண்டிருந்தான்.  அவனுடைய கொடி மீன் கொடி என்பதாலே இக்குளத்தில் மீன்கள் வளர்கிறது” என்ற (தக.நடராஜ்) கருத்தினைக் குறிப்பிடுகிறார்.

    தகவலாளிப் பெயர்ப்பட்டியல்

    1. தக.நடராஜ் – பல்லசேனா
    2. வசந்தி – கோயமுத்தூர்
    3. தாமஸ் – பொள்ளாச்சி

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

     

    Share
  • சங்க இலக்கியங்களில் எதிரொலி

     

    செ. முத்துமாரி,முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ் உயராய்வு மையம், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,

    திருநெல்வேலி – 8.

    முன்னுரை

    மாறாத சுவையும் தோய்ந்த இன்பமும் அளவின்றிச் சுறப்பன சங்கப் பாடல்கள். அவை பழந்தமிழர் வாழ்வை படம் பிடித்தாற் போல் கண்ணெதிரில் நிறுத்தி காட்டும் காலக்கண்ணாடியாக அமைத்துள்ளது. உற்றுநோக்கி, அதன் சிறப்பை, ஆற்றலை, நுட்பமான நிகழ்வுகளைத் தம் இலக்கியங்களில்  பதிவு செய்தனர். சங்கப் புலவர்களின் கூர்மையான  கவனத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட ஒலி வகையுள் ஒன்றான எதிரொலிக்கும் மனித குரல் வழி எழும் எதிரொலி பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    எதிரொலி

    echo  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழில்

          எதிரொலி என்பது பொருளாகும் ஒருவர் எழுப்பும்

           ஒலியை ஒலி அதிர்வினால் மீண்டும் திரும்பக்

           கேட்பதே எதிரொலி ஆகும்1

    “எதிரொலி என்ற பொருள் தரும் ‘சிலம்பு

          என்னும் சொல்லை சங்க இலக்கியங்களில்

          பரவலாகக் காணலாம் எதிரொலி செய்தலால்

          மலைக்குச் சிலம்பு என்ற பெயரும் உண்டு“ 2

    குரல் ஒலி

    குரல் ஒலித் தோற்றுவிப்பன மனிதனின் உடல் உறுப்புகளே அவற்றைப் பேச்சு உறுப்புகள் அல்லது ஒலிவுறுப்புகள் எனக் குறிப்பிடுவர். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுகுழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் குரல் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. குரல்ஒலியானது, முணுமுணுப்பு ஒலி கீச்சுகுரல் ஒலி, கிசுகிசு ஒலி, பேரொலி என ஒலிக்கும் தன்மையைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றது.

    குரல் ஒலி மனிதர்கள் பேசும் சுழலமைவைப் பொருத்து மிகுந்தும் குறுகியும் ஒலிக்கும் மிகுந்து ஒலிக்கும் போது அவ்வொலி  எதிரொலியாகத் திரும்பக் கேட்பதும் உண்டு இவ்வெதிரொலி பற்றிய சான்றுகளைச் சங்கப் பாடல்களில் காணலாம்.

    சங்க இலக்கியங்களில் எதிரொலிக் குறித்த செய்திகள் பரவலாக காணப்படிகின்றன. ஆயினும் மனிதக் குரல் ஒலி மூலமாக எழும் எதிரொலிகள் பற்றிய செய்திகள் ஒருசிலவே காணப்படுகின்றன அவை பின்வருமாறு அவை பின்வருமாறு

    1. அதட்டும் ஒலி
    2. அழைப்பொலி
    3. வாழ்த்தொலி
    4. மலைவாழ் மக்கள் எழுப்பும்
    5. அதட்டும் ஒலி

    பெரியவர்கள் தம்மைவிட வயதில் சிறியவர்களையோ, விலங்குகளையோ, பறவைகளையோ அதட்டி தாம் கருதியதைச் செய்து முடிப்பது உண்டு. அவ்வாறு அதட்டும் ஓசையானது பேரொளியாக எழும்பி எதிரொலியாகக் கயமனார் என்னும் புலவர் அகநானூற்றில் அழகுற எடுத்தியம்பியுள்ளார்.

    பாலை நிலத்தின் அரிய வழியில் சகடத்தை இழுத்துச் செல்லும்  எருதுகள் அவ்வழியில் போக முடியாமல் இடற்படுகின்றன. அவ்வெருதுகளை உப்புவணிகர் அதட்டி ஓட்டுவதால் அவரது அதட்டும் குரல்வொலியனது மலைப்பகுதிகளில் எதிரொலிக்கின்றது. இதனை,

    “கொடுங் கோல் உமணர், பகடு தெழி தென் விளி

    நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்”

    (அகம்: 17:13-14)

    எனும் பாடல்வரிகள் அறியலாம்.

    1. 2. அழைப்பொலி

    ஒருவர் இன்னொருவரை  அழைக்கும் பொது அருகில் இருந்தால்  மெதுவாகவும், தொலைவில் இருந்தால் சத்தமாகவும் அழைப்பது வழக்கம். அவ்வாறு  சத்தமாக அழைக்கும் பொது இடத்தின் சூழலமைவைப் பொறுத்து அவ்வழைப்போலி எதிரொலியாகக் கேட்பதும் உண்டு. இதனை பரிபாடலில் காணலாம்.

    பேதை பருவத்தில் உள்ள ஓர் இளம்பெண் தன் உறவினரை விட்டுப் பிரிந்ததால் மலைப்பகுதியில்  இட வேறுபாடு  காரணமாக எங்கு செல்ல வேண்டும் என்பது  கூடத் தெரியாமல் திகைக்கிறாள். பின் தன் உறவினரைச் ‘சிறந்தவரே! சிறந்தவரே!’ என்று அழைக்கிறார்.  அங்குள்ள குகைகள் அவள் அழைப்பை ஏற்காமல்  விளியின் இசையே மட்டும் ஏற்றுக்கொண்டு எதிரொலிக்கின்றன.  அப்பெண் குகையின் எதிரொலி என்பதறியாமல் உறவினரின் அழைப்பொலி என்று நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப அழைத்துக் கூவுவதை,

    ‘ஏஎ’ ஓஒ’ என விளி ஏற்பிக்க

    ஏஎ’ ஓஒ’  என்று ஏலா அவ் விளி

    அவ் இசை முழை ஏற்று அழைப்ப அழைத்துழிக்

    செல்குவர் ஆங்குத்  தமர்க் காணாமை

    மீட்சியும், கூவுக் கூஉ  மேவும் மடமைத்தே

    வாழ்த்து உவப்பான் குன்றின் வகை’’ (பரி. 19;61-66)

    எனும் பரிபாடல் வரிகளால்  அறியலாம்.  இப்பாடல் அவ்விடம் பெண்ணின் வழியாத்  துயரத்தை எதிரொலி மூலம் நுட்பமாக புலப்படுத்தி நிற்பது படித்து இன்புறத் தக்கதாகும்.

    1. வாழ்த்தொலி:

    ஒருவரைப் பலர் கூடி வாழத்தும்  பொது மிகுந்த ஆரவாரத்துடன் வாழ்த்தி மகிழ்வது வழக்கம். திருமுருகாற்றுப்படை இத்தகைய வாழ்த்தொலி மூலம் எழும் எதிரொழி குறித்த செய்தியைப்  பதிவு செய்திருப்பது நோக்கத்தக்கது.

    சூரர மகளிர் பலரும் ஒன்று கூடி விளாமரத்தின் தளிரை ஒருவர் மேல் ஒருவர் அத்தளிர் படும்படி விரலால் தெறிக்கச் செய்வர். அத்தளிர்  பட்டவுடன் ‘அசுரர்களை வென்று, அவர்களைக் கொன்றொழித்து அவ்வெற்றி குறித்துத்  தூக்கிய கோழிக்  கொடி வாழிய பெரிது’ என்று வாழ்த்திப் பலரும்  ஒன்றாக  கூடி ஆடிப்பாடும் ஆரவாரம் மலையெங்கும் எதிரொலிக்கின்றது. இதனை,

    ‘கோழி ஓங்கிய வென்றுஅடு விறற் கொடி

    வாழிய  பெரிது! என்று ஏத்தி  பலர் உடன்

    சீர்திகழ் சிலம்புஅகம்  சிலம்பப் பாடி

    சூரர  மகளிர் ஆடும் சோலை” (தி.மு. 38-41)

    எனும்  திருமுருகாற்றுப்படையின் பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

    1. மலைவாழ் மக்கள் எழுப்பும் குரல் ஒலிகள்

    பொதுவாக எதிரொலி மலைப்பகுதிகளில்  அதிகமாக எழுவது உண்டு. விலங்குகளின்  ஓசையும், இடி ஓசையும், மலைகளில்  பட்டு எதிரொலிப்பது வழக்கம். அவற்றோடு மலைவாழ் மக்கள்  எழுப்பும் குரல் ஒலிகளும் மலைகளில் பட்டு எதிரொலிக்கும் செய்தியைச் சங்க இலக்கியங்களில் ஒன்றான மலைபடுகடாம் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளது வியப்பிற்குரியதாகும்.  மலைபடுகடாம்  மலைவாழ் குறவர்கள் விலங்குகளைப் பிடிக்கும் போது எழுப்பும் ஒலி, தேன் எடுக்கும்  போது எழுப்பும் ஆரவார ஒலி, ஆகியவற்றின் எதிரொலிகளை எடுத்துரைக்கின்றன.

    “விலங்கல், மீமிசைப் பணவைக் கானவர்

    புலம்புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்”

    (மலைப்படு 298-299)

    எனும் பூசல் ஒலியும்,

    “கலை கையற்ற  காண்பின் நெடுவரை,

    நிலை பெய்திட்ட மால்பு நெறியாகப்,

    பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை””

    என்னும் தேன் எடுக்கும் போது எழும் ஒலியும் எதிரொலிகளை ஏற்படுத்துவதை இப்பாடல் வரிகள் வரிகள் எடுத்துரைக்கின்றன.

    மேலும், மலைவாழ் பெண்களின் பாட்டொலி, கிளியோட்டும் ஒலி, சூரர மகளிரின் ஆரவார ஒலி, ஆகியனவும் அவற்றின் பாடலைப் படிப்பவர்க்குப் புதிய அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

    ‘கொடுவரி பாய்ந்தெனக்  தொழுநர் மார்பின்

    நெடுவிசி விழுப்புண் தனிமார், காப்பென

     

    அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் மாடல்’

    (மலைபடு: 302-304)

    ‘தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்’ (மலைபடு:342)

    எனும் பாட்டொலிகளும்,

    ‘ஒலிகழைத் தட்டை புடைநர் புனன்தொனும்,

    கிளிகடி மகளிர் விளிபடுபூசல்’ (மலைபடு:328-329)

    எனும் கிளியோட்டும் ஒலியும்,

    ‘அருவிருகளும் வான் அரமகளிர்

    வருவிசைதவிராது வாங்குபு குடைதொறும்

    தெரிஇமிழ்  கொண்டதும் இயம்போல் இன்னிசை’

    (மலைபடு:294-296)

    எனும் சூரர மகளிரின் ஆரவார ஒலியும்  மலைப்பகுதிகளில் பட்டு எதிரொலிப்பதை மலைபடுகடாம் அழகுற எடுத்துரைக்கிறது எனலாம்.

    இவ்வொலிகள் தவிர மலைவாழ்மக்கள் எழுப்பும் குரலைக் கூத்தொலியும் (மலைபடு:322), காட்டுப்பசுக்கள் ஒன்றோடு ஓன்று போர் இடுவதைக் கண்டும் குறவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியும் (மலை 330-333), குறவச் சிறுவர்கள் எழுப்பும் ஓசையும் (மலை 336-339)  எதிரொலிகள் எழுப்புவதை மலைபடுகடாம் நுட்பமாக பாடிக் களிக்கிறது.

    முடிவுரை

    எதிரொலிகள் அறிவியல் நுட்பம் ஆகும். திரும்பக் கேட்டல் என்பது மனித மனதிற்கு இன்பம் விளைவிப்பது மலை பகுதிகளே பெரும்பாலும் எதிரொலிகளின் பிறப்பிடமாகும். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் குரல் ஒலிகளும் மலைபகுதிகளிலேயே பட்டுத் திரும்ப எதிரொலிக்கும் எதிரொலிகளாக அமைத்துள்ளன. பெரும்பாலும் மனித உணர்வுகளும் சூழல் அமைவுகளுமே எதிரொளிக்குக் காரணமாக அமைவதை இக்கட்டுரை உறுதிபடுத்துகிறது எனலாம்.

    அடிக்குறிப்புகள்

    1. English Dictionary oxford P.No.54
    2. ச. பவானந்தம் பிள்ளை, தமிழ் சொல்லகராதி. ப .

    துணைநூற்பட்டியல்

    1.மறைமலை இலக்குவனார், சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு கட்டுரை, 2010.

    1. இரா. குணசீலன், பழந்தமிழர் ஒலிச்சூழல், இந்திய பல்கலைகழகத் தமிழாசிரியர் மன்ற பன்னாட்டு கருத்தரங்கு கட்டுரை, 2007.
    2. இரா. குணசீலன், சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, 2003.

    4.மு.பூங்கோதை, மதுரைக்காஞ்சியில் ஒலிச்சூழலமைவு, முத்துக்கமலம், இணைய இலக்கிய இதழ்.

       

    Share
  • மஞ்சரி இலக்கியமும் வகைகளும்

    முனைவர் இரா.வீரபத்திரன்,உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்

    தமிழ் சொல்வளமும் பொருள்வளமும் மிக்க உயர்தனிச் செம்மொழி. இத்தமிழ்ச் சோலையில் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்றவற்றைவிட சிற்றிலக்கியங்களே அளவாலும் வகைகளாலும் மிகுதியான எண்ணிக்கையில் பூத்துக் குலுங்கின. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, உலா, தூது, பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை போன்ற சில வகைகள் சிறப்பாகச் செல்வாக்குப் பெற்றுள்ளன எனலாம். இன்னும் பல சிற்றிலக்கிய வகைகள் செல்வாக்குப் பெறாமலும், பெயரளவில் மட்டுமே அறிமுகத்துடனும் காணப்படுகின்றன. இவ்வகை இலக்கியங்கள் தமிழ்ச் சோலையில் செல்வாக்குப் பெற்று வளர்ந்தால் தமிழ்மொழி சீரிளமைக் கன்னியாய் என்றும் தொடர்ந்து வாழும். காலந்தோறும் தமிழ்ச் சோலையில் பல புதுவகையான இலக்கியங்கள் புதுமணம் பரப்பிக் கொண்டே இருக்கின்றன.

    மஞ்சரி இலக்கியம்விளக்கம்

    ‘மஞ்சரி’ என்பதற்குப் பூங்கொத்து, பூமாலை, தளிர், மலர்க்காம்பு, ஒழுக்கம், மஞ்சரிப்பா என்னும் ஆறு பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி விளக்கம் தருகிறது.1 பலவகைப் பாவும் பாவினமும் கலந்து பாடுதலை கலம்பகம் என்பர். இதேப்போல் பூங்கொத்துப் போல, பூமாலைப் போலப் பல்வேறு வகையான பாடல் தொகுப்புகளுக்கு மஞ்சரி எனப் பெயர் சூட்டியுள்ளனர். தனிப்பா மஞ்சரி, காமரச மஞ்சரி முதலியன இவ்வகையின. யானையின் போர்த்தொழில் பலவற்றையும் விவரித்துப் பாடும் ஒரு சிற்றிலக்கியத்திற்கு ‘ஆதோரண மஞ்சரி’ எனப் பெயரிட்டு உள்ளனர். பற்பல பொருள் பற்றி வெளிவரும் சிறந்த கட்டுரைகள், கதைகள் முதலியவற்றைத் தொகுத்துக் ‘கலைமகள்’ அலுவலகம் வெளியிட்டுவரும் திங்கள் இதழ் ‘மஞ்சரி’ என்னும் பெயருடையதாதலைப் பலரும் அறிவர். இங்கெல்லாம் பலவற்றையும் ஒருங்கு திரட்டிய திரட்டு நூல் என்னும் கருத்திலேயே ‘மஞ்சரி’ என்னும் பெயர் வழங்கப்படுதலைக் காணமுடிகின்றது. இலக்கியம் என்பதற்கும் செய்யுள் உறுப்புக்களை இணைத்துக் கட்டுதல் என்பது பொருள். ஆகவே பூங்கொத்து, பூமாலைப் போல் பல்வேறு வகையான பாடல் தொகுப்புக்கள் அடங்கிய நூலுக்கு மஞ்சரி இலக்கியம் என்று பெயர் கொள்ளலாம்.

    மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணம்

    இலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் பிரபந்த மரபியல், பிரபந்தத்திரட்டு ஆகிய இரண்டு நூல்கள் மட்டுமே மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணத்தைக் கூறுகின்றன. மஞ்சரி இலக்கியத்தின் முழு உருவமும் போக்கும் இவ்விரு பாட்டியல் நூலும் தெளிவாக வரையறை செய்யவில்லை.

    பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த பாட்டியல் நூலான பிரபந்த மரபியல்,

    “கருதுபொருள் இடம் காலம் தொழிலின்

    முப்பான் நாற்பான் எழுபான் தொண்ணூறு

    நூறான் வெண்பாக் கலித்துறையின் ஆதல்

    மன்னும் அவ்வெண்ணான் மாலை மஞ்சரி

    காஞ்சி மாலை முல்லைக்கலி சதகமென்று

    இயலும் செய்யுட்கு ஏற்ற பெயரே”2

    என்று பொருள், இடம், காலம், தொழில் என்ற நான்கின் அடிப்படையில் வெண்பா அல்லது கலித்துறைப் பாவினால் பாடப்படுவது மஞ்சரி இலக்கியம் என்கின்றது. இதனால் பொருள், இடம், காலம், தொழில் பற்றி நால்வகை மஞ்சரிகள் உள்ளன என்பது தெரிய வருகிறது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த பாட்டியல் நூலான பிரபந்தத்திரட்டு,

    “வரும்பவனி பத்து வருமவர்காண் நாலில்

    அரும்பும்ஒன் பானாள்முன்றிற் காகும் – விரும்புகரி

    பத்தாநா ளையப்பவனி பாவைபிரிவே ; வணிக

    வத்தருக்கா காமஞ்சரி”3

    தலைவன் பத்துநாள் உலா வரல் ; அவ்வுலாவின் நாலாம் நாள் பாவை ஒருத்தி அவனைக் காணல் ; அவனிடம் அன்பு அரும்புதல் ; ஒன்பதாம் நாளில் தன் முன்றிலில் வந்து அவனைக் காணுதல் ; பத்தாம் நாள் யானையின் மேல் அவன் உலா வரல் ; பின்னர் பாவை பிரிவால் வருந்துதல் – என்னும் பொருளில் வருவது ‘மஞ்சரி’ என்னும் இலக்கியமாகும்.

    மஞ்சரி இலக்கிய வகைகள்

    சிற்றிலக்கியங்களின் பெயர்களில் அமைந்த முடிவுச் சொல்லின் ஒற்றுமை வேற்றுமை கருதிச் சிற்றிலக்கியங்களைப் பாகுபடுத்துவர். சிற்றிலக்கியப் பெயர்களில் அமைந்த இச்சொல் முடிவுகள் சிற்றிலக்கியப் பாடுபொருண்மை, யாப்புவகை, பாடல் எண்ணிக்கை ஆகிய இவற்றுடன் கூடி அமைகின்றன.

    சிற்றிலக்கியங்களில் மாலை என்னும் சொல் முடிவைப் பெற்று அமைந்த சிற்றிலக்கியப் பெயர்கள் மிகுதியாக உள்ளன என்பதை அறிவோம். இதேபோல் மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமையும் இலக்கியங்கள் உள்ளன. வெற்றிக்கரந்தை மஞ்சரி, வாதோரண மஞ்சரி என்பன மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமைந்துள்ளன. மஞ்சரி என்னும் பெயர்க் கொண்ட இலக்கிய வகையும் உள்ளது.

    வெற்றிக்கரந்தை மஞ்சரி

    பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரையை மீட்கின்றவர், கரந்தை மலர்மாலை சூடிச்சென்று மீட்டு வருவதனை விரித்துப் பேசுவது வெற்றிக்கரந்தை மஞ்சரி என்பர். இதனை பிரபந்த தீபிகையும், முத்துவீரியமும் கூறுகின்றன.

    பிரபந்த தீபிகை,

    “மாற்றலர்கள் கொண்டநிரை மிட்போர் கரந்தைப்பூ

    மாலைசூ டிப்போகிமீள்

    வகையினை விரித்தோத லைவெற்றிக் கரந்தையின்

    மஞ்சரியெ னக்கூறுவா்.;”4

    பிரபந்த  மரபியல் முதலான நூல்கள் ‘கரந்தை’ என நிரை மீட்டலை மட்டும் சுட்டுகின்றன. முத்துவீரியம் வெற்றிக்கரந்தை என்றும், பிரபந்த தீபிகை வெற்றிக் கரந்தையின் மஞ்சரி என்ப பெயர்சூட்டிச் செயல்விளக்கம் அளிக்கின்றது. வெற்றிக் கரந்தை மஞ்சரி என்ற பெயர்நிலை பிரபந்த தீபம் முதல் காணப்படுகின்றது. மாலையிலக்கிய வகையாகவும் எவ்யாப்பின் முப்பது செய்யுளாலாவதாகவும் பிரபந்த மரபியல் இதனை நுவலுகின்றது. பிற்காலப் பாட்டியலில் இது காணப்படவில்லை.

    வாதோரண மஞ்சரி

    யானையை வயப்படுத்தி அடக்கினவருக்கும், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியனவருக்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவருக்கும், அவர்தம் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப்பாடுவது வாதோரண மஞ்சரியாகும்.

    “யானை வயப்படுத்தி அடக்கின வருக்கும்

    எதிர்பொரும் யானையை ஈரவெட்டி

    அடக்கின வருக்கும் அதட்டிப் பிடித்துச்

    சேர்த்த வருக்கும் வீரச் சிறப்பை

    வஞ்சியாற் பாடுவ ததுவா தோரண

    மஞ்சரி எனப் பெயர் வைக்கப் படுமே”5

    என்று முத்துவீரியம் இலக்கணம் கூறுகின்றது.

    மஞ்சரி இலக்கியத்திற்குச் சொல்லப்பட்டுள்ள இலக்கணமும் பாடுபொருளும், வெற்றிக்கரந்தை மஞ்சரி, வாதோரண மஞ்சரி முதலிய இலக்கியங்களுக்கு சொல்லப்பட்டுள்ள இலக்கணமும் பாடுபொருளும் வேறுபடுகின்றன. அந்தாதி இலக்கியங்களின் வகைகளான பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி போன்றவை அந்தாதி எனும் அமைப்பு நிலையில் ஒன்றுபட்டு பாடல் எண்ணிக்கையால் வேறுபடுகின்றன. ஆனால் மேற்குறிப்பிட்ட மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெறும் இலக்கிய வகைகள் ‘மஞ்சரி’ இலக்கியத்தின்று முற்றிலும் வேறுபடுகின்றன. இவைகளை மஞ்சரியின் இலக்கிய வகைகள் என்று கூறுவது பொருந்துவதன்று.

    திரிபு மஞ்சரி

    “திரிபு எனும் சொல், வேறுபாடு, தோன்றல், திரிதல் முதலிய இலக்கணப் புணர்ச்சி விகாரம், முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீத உணர்வு எனும் பொருண்மைகளுடன், முதலெழுத்தொழிய இரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக்கையிற் பொருள் வேறுபடப் பாடுஞ் செய்யுள் எனவும் பொருள் படுகின்றது.”6 இதன் அடிப்படையில், திரிபுச் செய்யுட்கள் பல அமைந்த இலக்கிய வகை, திரிபு மஞ்சரி எனக் கொள்ளல் பொருந்தும்.

    இவ் இலக்கிய வகையையும் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய தில்லைத் திருவாயிரத்தில் இத்திரிபு மஞ்சரி 25 கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் உருவாகியுள்ளது. திருவரங்கத் திருவாயிரத்தில் மற்றொரு திரிபு மஞ்சரி காணப்படுகிறது. இது 32 கட்டளைக் கலித்துறைகளைப் பெறுகின்றது. இவை அனைத்தும் முதற்சீரில் திரிபு கொள்கின்றன. முதலெழுத்தொழிய ஏனைய எழுத்துக்கள் ஒரு பாடலின் நான்கு அடியின் முதற்சீரிலும் ஒத்து அமைந்து இத்திரிபை உருவாக்குகின்றன.

    யமக மஞ்சரி

    யமகம் என்பது ‘வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி’ என விளக்கப்படுகின்றது. யமக அந்தாதி, இத்தகைய செய்யுட்கள் அந்தாதியும் பெற்று அமைந்த இலக்கிய வகையைக் குறிக்க, யமக மஞ்சரி என்பது, அந்தாதி இலக்கிய வகையைக் குறிக்க, யமக மஞ்சரி என்பது, அந்தாதி பெறாது தொடரும் பல யமகச் செய்யுளுடைய நூலைக் குறிக்கின்றது எனலாம்.

    ‘ஒரு சொல்லானே நான்கடியும் மடக்குவதனை இயமா வியமகமென்ப’ எனத் தண்டியலங்கார (96) உரை கூறுவது யமகமும் மடக்கும் ஒத்து வந்த பண்டை அணியிலக்கணக் கோட்பாட்டை விளக்குகின்றது.

    கலம்பக உறுப்புகளுள் ஒன்றாக யமகம் அமைதலைப் பாட்டியல்களும், இலக்கியங்களும் புலப்படுத்துகின்றன.

    “மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே

    மான்கண்டால் மானுக்கே வாடி மாதர்

    குயில்கண்டால் குயிலுக்கே குழைதி ஆகில்

    கொஞ்சுரம்போக் கொழி நெஞ்சே…..”7

    தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடும் இடத்தில் மயில், குயில், மான் ஆகியவற்றைக் காண நேரும். அவ்வாறு காணும்போது தலைவியை நினைத்து வருந்துகிறான் என்னும் பொருளில் இவ்வடிகள் அமைந்துள்ளது.

    மயில், மான், குயில் என்னும் சொற்கள் அ்றிணைப் பொருளையும் மயிலுக்கே, குயிலுக்கே எனவரும் சொற்கள் தலைவியைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. ஆகவே வந்த சொற்களே மீண்டும் வந்து வேறு பொருள் தர நின்றது. அதனால் இது கலம்பக உறுப்புகளுள் யமகத்திற்கு ஆகி வந்தது.

    ரச மஞ்சரி

    ஒன்பான் சுவைகள் நவரசம் எனப்படுகின்றன. வீரம், அருவருப்பு, பெருநகை, அச்சம், கோரம், கருணை, சாந்தம், அற்புதம், சிங்காரம் எனும் ஒன்பது சுவைகளும் இலக்கியப் பொருளானமையைத் தண்டபாணி சுவாமிகளின் நவரச மஞ்சரி காட்டுகின்றது.

    ஒவ்வொரு சுவைக்கும் ஒன்பது பாடலாக, வெவ்வேறுபட்ட யாப்பில் 81 கவிதைகள் இதன்கண் அமைகின்றன. சிங்காரமாகிய ஒன்பதாவது பகுதி பொருட்பகுப்பிற்கேற்ப, அகத்துறைகள் கொண்டு அமைகின்றது. செந்திலாண்டவன் புகழ் புலப்படும் வண்ணம் இப்பல்சுவைச் செய்யுட்கள் பொருந்துகின்றன.

    மேற்குறிப்பிட்ட யமக, திரிபு, ரச மஞ்சரி முதலியவையும் மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமைதலைக் காணமுடிகின்றது. பாடல்களில் சொல் வேறுபடுதல், பொருள் வேறுபடுதல், போன்ற அமைப்பு முறைகளைக் கொண்டு, மஞ்சரி எனும் பெயர் கொண்ட இச்செய்யுட்களை மஞ்சரி இலக்கியத்தின் வகைகளாகக் கொள்ளுதல் பொருந்தாது எனலாம். ஏனெனில் மஞ்சரி இலக்கியத்திற்கு கூறப்பட்டுள்ள இலக்கண அமைப்பு முறைகளில் இருந்து இவை முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

    சிவத்தல மஞ்சரி

    இருபதாம் நூற்றாண்டில் ஆ. சிங்காரவேலரால் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் உரைநடை வடிவில் அமைந்துள்ளது. இந்நூலைத் தொகுத்தவர் நெ.சி. தெய்வசிகாமணி ஆவார். பூங்கொத்துப் போல, சிவனின் பெருமைகள் இந்நூல் முழுவதும் கூறப்பட்டுள்ளன.

    சிவபெருமான், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களின் துயரம் போக்குதல், செருக்கால் மதி இழந்த அசுரர்களைக் கொல்லுதல், சிவனடியார்களுக்கு அருள் பாலித்தல், சிவனின் திருவிளையாடல்கள் போன்றவை கூறப்பட்டுள்ளன. கைலாசாதி பர்வத விவரம், சிவராத்திரி பற்றிய குறிப்புக்கள், சிவனின் மூர்த்தங்கள் (64) குறிப்பிடப்பட்டள்ளன.

    சிவன் உறையும் தலங்கள், வடநாட்டில் 32 தலங்கள், தொண்டை நாட்டில் 36 தலங்கள், மகதநாடு அல்லது நடுநாட்டில் 22 தலங்கள், சோழநாடு காவேரியின் வடகரையில் 65 தலங்கள், காவேரியின் தென்கரையில் 128 தலங்கள், பாண்டி நாட்டில் 15 தலங்கள், கொங்கு நாட்டில் 7 தலங்கள், மலை நாட்டில் 2 தலங்கள், ஈழநாட்டில் 2 தலங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், திருவாசகம் பெற்ற சிவத் தலங்கள், திருவாசக வைப்புத் தலங்கள், திருவிசைப்பா பெற்ற தலங்கள் போன்றவை பற்றிய குறிப்புக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

    மஞ்சரி இலக்கியத்தின் அமைப்பு முறை

    காதலை முதன்மைப் பொருளாக வைத்துத் தலைவன் ஒருவனின் புகழ் பேசுகின்ற முறையில் மஞ்சரி இலக்கியம் அமைந்துள்ளது.

    பாட்டுடைத் தலைவன் உலா வருகிறான். அவனைக் கண்ட பெண்கள் வேட்கையுற்றுப் புலம்புகிறார்கள். தலைவியும் அவன்மீது காதல் கொள்கிறாள். உலா வந்த தலைவனின் எதிரே சென்று, அவனைப் புகழ்ந்து, அவனிடம் தனக்குள் ஆராக் காதலை வெளிப்படுத்திப் பேசுகிறாள். பின்னர் தன் தோழியை அத்தலைவனிடம் தூதாக அனுப்பி அவனுடைய மாலையை அத்தோழியின் வாயிலாகப் பெற்று மகிழ்கிறாள். தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வருகிறான். அவனை அவள் வரவேற்று, மஞ்சத்தில் அமரச் செய்து உபசரித்து மகிழ்கிறாள். அவனுடன் கூடிக் குலாவி அவள் இன்பம் துய்த்து வாழ்கிறாள்.

    மஞ்சரி என்பது பூங்கொத்துக்கும் பெயராதல் போல மஞ்சரி இலக்கியமும் அகப்பொருள் புறப்பொருள் பற்றிய சில சிற்றிலக்கியங்களின் கூட்டமைப்பாயும் உள்ளது. கேசாதிபாதம், விறலியாற்றுப்படை, தசாங்கம், காதல், குறம், உலா, தூது முதலியனவும் காதல் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கின்ற வகையில் உள்ளமையால் மஞ்சரியில் விஞ்சி நிற்பது காதற்சுவை நிகழ்ச்சிகளே ஆகும். மஞ்சரி இலக்கியங்கள் கண்ணியமைப்பில் கலிவெண்பாவினால் பாடப்பட்டுள்ளன.

    தொகுப்புரை

    மஞ்சரி என்பதற்கு பூங்கொத்து, பூமாலை, தளிர், மலர்க்காம்பு, ஒழுக்கம் முதலிய பொருள்கள் குறிக்கப்படுகின்றன.பலவகை மலர்களால் தொடுக்கப்படுவது பூமாலை ஆதல் போல பல பாடல்களைத் தொகுத்துக் கூறும் நூல் மஞ்சரி எனப்படுகின்றது.

    மஞ்சரி இலக்கியத்திற்கு பிரபந்தத் திரட்டு, பிரபந்த மரபியல் முதலிய பாட்டியல் நூல்களே இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விலக்கியம் 16ஆம் நூற்றாண்டில் சில புலவர்களால் சிறப்பாகப் போற்றிப் பாடப்பட்டுள்ளது.

    மாலை இலக்கியங்கள் போன்று மஞ்சரியும் இறுதியில் மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெற்று விளங்குகின்றது. வெற்றிக்கரந்தை மஞ்சரி, வாதோரண மஞ்சரி போன்றன மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெற்றுள்ள வேறொரு வகை இலக்கியமாகக் கருதப்படுகிறது.

    யமக மஞ்சரி, திரிபு மஞ்சரி என்பன செய்யுளில் சொற்களின் அமைப்பு முறையில் ஏற்படும் மாற்றம் வைத்து குறிக்கப்படுகிறது. ரச மஞ்சரி என்பது சுவைகளைப் பற்றிப் பேசும் இலக்கியமாகும். மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணமும், அமைப்பு முறையும் மேற்குறித்த மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெற்று வந்த இலக்கியங்களின் இலக்கணமும் அமைப்பு முறையும் வேறுபட்டுள்ளன. இவை மஞ்சரி இலக்கியத்தின் வகையாகக் கருதமுடியாது.

    சிவத்தல மஞ்சரி, சிவனின் பெருமைகளை அவனது அடியார்களுக்கு எடுத்துரைத்தல் போலவும், சிவனின் திருவிளையாடல்கள் பற்றியும், சிவன் உறையும் தலங்கள் பற்றியும் உரைநடைவடிவில் எடுத்துரைக்கின்றது. காதலை முதன்மைப் பொருளாக வைத்துத் தலைவன் ஒருவனின் புகழ் பேசுகின்ற முறையில் மஞ்சரி இலக்கியம் அமைந்துள்ளது.

    பாட்டுடைத் தலைவன் உலா வருகிறான். அவனைக் கண்ட பெண்கள் வேட்கையுற்றுப் புலம்புகிறார்கள். தலைவியும் அவன்மீது காதல் கொள்கிறாள். உலா வந்த தலைவனின் எதிரே சென்று, அவனைப் புகழ்ந்து, அவனிடம் தனக்குள் ஆராக் காதலை வெளிப்படுத்திப் பேசுகிறாள். பின்னர் தன் தோழியை அத்தலைவனிடம் தூதாக அனுப்பி அவனுடைய மாலையை அத்தோழியின் வாயிலாகப் பெற்று மகிழ்கிறாள். தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வருகிறான். அவனை அவள் வரவேற்று, மஞ்சத்தில் அமரச் செய்து உபசரித்து மகிழ்கிறாள். அவனுடன் கூடிக் குலாவி அவள் இன்பம் துய்த்து வாழ்கிறாள்.

    மஞ்சரி என்பது பூங்கொத்துக்கும் பெயராதல் போல மஞ்சரி இலக்கியமும் அகப்பொருள் புறப்பொருள் பற்றிய சில சிற்றிலக்கியங்களின் கூட்டமைப்பாயும் உள்ளது. கேசாதிபாதம், விறலியாற்றுப்படை, தசாங்கம், காதல், குறம், உலா, தூது முதலியனவும் காதல் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கின்ற வகையில் உள்ளமையால் மஞ்சரியில் விஞ்சி நிற்பது காதற்சுவை நிகழ்ச்சிகளே ஆகும். மஞ்சரி இலக்கியங்கள் கண்ணியமைப்பில் கலிவெண்பாவினால் பாடப்பட்டுள்ளன.

    குறிப்புகள்

    1. சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி தொகுதி-6 ப.201
    2. பிரபந்தமரபியல் , நூற்பா.102
    3. பிரபந்தத்திரட்டு, நூற்பா.109
    4. பிரபந்த தீபிகை, நூற்பா .35
    5. முத்துவீரியம், நூற்பா.1070
    6. உ.வே. சாமிநாதையர், இலக்கிய வகையும் வடிவும், ப.516
    7. நந்திக்கலம்பகம், பா.17
    Share
  • கேரளத் தமிழர்களின்  மொழிச்சூழலும் மொழிப்பயன்பாடு

    முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி.அ,உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்காரியவட்டம், திருவனந்தபுரம்.

    தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் ஒரு நெடும் பாரம்பரியம் மிக்கவர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சங்க இலக்கியம் தமிழர்தம் பண்பாட்டினை  உணர்த்துகின்றன.  நீண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஒரு சமூகம் அது தோன்றிய காலம் முதல் பல்துறைச் சார்ந்த வாழ்வியல் கூறுகளில் குறை நிறைகளைச் செம்மைபடுத்திக் கொண்டே வருவது இயல்பு.  கால வளர்ச்சிக்கேற்பவும் சமூகத்தேவைக்கேற்பவும் கருத்துக்கள் புத்தாக்கம் பெறுவதும் புதுப்பொலிவு பெறுவதும் இயற்கை.  இத்தகைய வளர்ச்சியைக் காலந்தோறும் பெற்று வந்தாலும் அடிப்படையான கருத்தாக்கங்களில் மாற்றம்பெற எந்த சமூகமும் விரும்புவதில்லை. ஆனால் மொழியைப் பொருத்தவரை அச்சமூகத்தின் பேச்சுமொழியில் அதிசீக்கிரத்தில் மொழிக்கலப்பு நிகழ்வதைக் காணலாம். காரணம் ஒரு சமூகம் பிறசமூதாயத்தின் மொழியைக்கற்று அவர்களோடு இடைத்தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதாலாகும். இக்கட்டுரை கேரளத்தமிழர்தம்  மொழிச்சூழலையும் மொழிப்பயன்பாட்டையும் எடுத்துரைப்பதாக  அமைகிறது அதிலும் குறிப்பாக திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்களை மையமிட்டே இக்கட்டுரை அமைகிறது.

    மொழிப்பயன்பாடு:-

    மொழி என்பது ஒரு சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கும் கருத்துப் பரிமாற்றாத்திற்காகவும் பயன்படும் ஒரு கருவியாகும்.  பொதுவாக இன்றைய சமுதாயம் இருவேறுபட்ட சமுதாயமாகவோ பல்வேறுபட்ட சமுதாயமாகவோ காணப்படுகின்றது.  இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பல இனங்கள் வாழ்கின்றன.  தமிழகத்தில் தமிழர்களோடு கேரள மாநிலத்தவர்களும் , கர்நாடக, தெலுங்கு , உருது , இந்தி போன்ற மொழிகள் பேசும் மக்களும் இணைந்து வாழ்கின்றனர்.  அவ்வாறு பல இனமக்கள் இணைந்து வாழும்போது அவ்வினங்களுக்கு இடையே இடைத்தொடர்பு ஏற்படுவதால் பண்பாடு, கலாச்சாரம், மொழி போன்றவை உள்வாங்கப்படுகின்றதைக் காணலாம்.  அவற்றுள்ளும்  மொழியே அதிகமாக உள்வாங்கப்படுகின்றது.  அதற்குக் காரணம் ஒவ்வொரு இனமக்களும் தமக்கும் இடைத்தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு முதன்மைக் காரணியாக மொழியைப் பயன்படுத்திக் கொள்கின்றமையாகும்.  தமது எண்னங்கள், விருப்பு வெறுப்புகள் , நேர்மறை, எதிர்மர்றை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மொழியைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஒரு சமூகம் ஏனைய சமூகத்தின் மொழியை மிக இலகுவாகக் கற்றுக் கொள்கின்றது.

    கேரளத்தமிழர் வரலாறு

    கேரளம் பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாகவும் இப்பகுதியில் பேசும்மொழி தமிழாகவும் இருந்தது. பண்டுதொட்டே கேரளமும் தமிழகமும் நெருங்கிய தொடர்புடையது.  இதற்குச் சான்றாக விளங்குவது சங்க நூல்களில் 350 பாடல்கள் சேர நாட்டோடு தொடர்புடையனவாக இருந்தன. {மு. இராகவையங்கார் 1947: முன்னுரை). மலையாள மொழியின் முதல் இலக்கண நூலான லீலாதிலகம் மலையாளத்தை மலை நாட்டுத்தமிழ் என்றே அழைக்கிறது. மலையாளத்தில் தொடக்கத்தில் இருந்த பாட்டு ,மணிப்பிரவாளம்  என்ற இலக்கிய நெறிகளில் பாட்டுமரபு தமிழ் மரபைத் தழுவியதாகும். அன்று வழக்கத்தில் இருந்த மலை நாட்டுத்தமிழ் காலவோட்டத்தால் வேறுபட்டு தமிழ் மலையாளமாக வேறு வேறாகப் பிரிந்தது. தமிழ் மலையாள வேறுபாடு நிலையாக ஏற்பட்ட பின்னர்  கி.பி 17 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்திலிருந்து குடியேறிய மக்கள் இன்று தமிழர்கள் என வேறுபடுத்தி அழைக்கப்படுகின்றனர்.

    கேரளத்தில் இருமொழிச் சூழல்

    தாய்மொழியை மட்டும் அறிந்தவர்களைத் தனிமொழியாளர் என்றும் தாய்மொழியோடு இன்னொரு மொழியினையும் அறிந்து,    பேசும் சூழலுக்கு ஏற்ப  அவற்றைத் தனித்தனியே பயன்படுத்துவோரை இருமொழியாளர் என்று குறிப்பிடுவர். தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக இருப்பன கேரளமும் கர்நாடகமும் ஆகும். அதிலும் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய மாநிலம் கேரளமே. கேரளத்தின்  எல்லையோர மாவட்டங்ககளான திருவனந்தபுரம், பாலக்காடு , இடுக்கி மாவட்டங்களில்  ஏராளமான தமிழர்கள வாழ்கின்றனர். அவர்களது பேச்சுமொழியில் மலையாளத்தின் கலப்பு மிகுதியாகக் காணக்கிடக்கின்றன.  அவ்வண்ணமே தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமாரி மாவட்டத் தமிழரின் பேச்சு மொழியிலும் மலையாளம் கலந்திருப்பதைக் காணலாம்.

    திருவனந்தபுரத்தில் தமிழ் பேசுவோர்

    தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்து வேளாளர், ரெட்டியார், செட்டியார், நாடார் பிராமணர் போன்றோர் குடிபெயர்ந்து கேரளத்தின் பல பகுதிகளில் குடியேறி வாழ்கின்றனர். குறிப்பாகப் பாலக்காடு, இடுக்கி மாவட்டங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்கின்றனர்.  இம்மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்கள் குறைவாகவே இருக்கின்றனர் எனலாம்.  இன்று திருவனந்தபுரத்தில் வாழும் தமிழர்களின் மொழிப்பயன்பாட்டடிப்படையில்  பின்வருமாறு மூன்று நிலைகளில் பிரித்துப் பார்க்கலாம்.

    • சமீபகாலத்தில் தொழில், வேலை காரணமாகத் தமிழகத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குக் குடியேறியவர்கள். இவர்கள் தங்கள் வீட்டில் தமிழ்பேசுவதோடு தமிழை முதல்மொழியாகக் கற்பவர்கள். மாநில மொழியாம் மலையாளத்தைப் பேச முயல்பவர்கள்.
    • தமிழகத்திலிருந்து குடியேறி இரண்டு மூன்று தலைமுறையினராக திருவனந்தபுரத்தில் வாழ்பவர்கள். இவர்களை மூன்றாககப் பிரிக்கலாம்.      முதலாவதாக வீட்டில் தமிழ் பேசுவதோடு கல்வி, தொழில்சார்பாகத்      தமிழைப் பயன்படுத்துவோர்.
    1. இரண்டாவதாகத் வீட்டில் தமிழ் பேசுவோர் ஆனால் கல்வி , வாணிபம், தொழில் முதலியவற்றில் மலையாளத்தைப் பேசுபவர்கள்.
    2. மூன்றாவதாக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆனால்   வீட்டிலும் அலுவலகத்திலும் மலையாளத்தைப் பேசுபவர்கள்
    • தமிழர்கள் கேரளத்தில் குடியேறி மலையாளிகளை மணந்து வீட்டில் மலையாளமொழியைப் பயன்படுத்துவதோடு கல்வி/ தொழிலிடங்களிலும் மலையாளத்தைப் பயன்படுத்துபவர்கள்.
    • தொடக்கத்தில் தமிழ் பேசுபவர்களாக இருந்தோர் காலப்போக்கில் தமிழை மறந்து வீட்டுமொழியாகவும் தாய்மொழியாகவும் மலையாளத்தை ஏற்றுக்கொண்டு மலையாளிகளாக மாறிவிட்டவர்கள்.

    முதல் இரண்டு பிரிவினரும் காலப்போக்கில் திருமண உறவு, சமூகமதிப்பீடு, பொருளாதாரம், நடைமுறை வசதிகாரணமாக மூன்றாம் பிரிவினராக மாறிவிடுகின்றனர். கலப்புத்திருமணம் காரணமாகத் தமிழர்கள் மலையாளத்தை மட்டுமே பேசிவருகின்றனர். வியாபாரத்தின் பொருட்டு திருவனந்தபுரம் வந்த நாடார்களில் சில பிரிவினர் திருவனந்தபுரம பகுதியில் வாழ்பவர்கள் இன்றும் மலையாளத்தை மட்டுமே பேசிவருகின்றனர்.  அதே நேரத்தில் தமிழகத்தில் வாழும் மலையாளிகள் தமிழை முதல்மொழியாகக் கொண்டு வெளியே செயல்பட்டாலும் தங்களது வீட்டில் மலையாளத்தையே பேசுகின்றனர்.

    கேரளத்தமிழர் தமிழை விட்டுவிடுவதற்குக் காரணம்:

    கேரளத்தில் வாழும் தமிழர்கள்  தமிழை விட்டுவிடக் காரணம் யாது? என நோக்கும்போது பின்வருவனவற்றைக் காரணங்களாகச் சுட்டலாம்.

    • அவர்கள் வாழும் பிறமொழிச்சூழலின் வற்புறுத்தல் முதன்மைக் காரணமாக அமைகின்றது.
    • இரண்டாவதாகத் தமிழர்கள் தாங்களே தாம் பேசும் தமிழ் மொழியையே கைவிடத் தயாராகின்றனர். சான்றாகப் பொது இடங்களில் தமிழைப் பேசினால் மலையாளிகள் தமிழர்களை பாண்டி ( பாண்டி நாட்டவர் என்றும்) அண்ணாச்சி என்றும் கிண்டலாக அழைப்பர் என்ற மனப்பான்மை தமிழர்களிடையே நிலவுகின்றது.
    • பள்ளி விண்ணப்ப படிவங்களில் தாய்மொழியைப் பதிவுசெய்யுமிடங்களில் தங்களுக்குத்தெரியாத தமிழைப் பதிவுசெய்வதைவிட தங்களுக்குத்தெரிந்த மலையாளத்தையே பதிவுசெய்கின்றனர்.
    • மூன்றாவதாக மூன்று சக்கர வாகனங்களில் தமிழ்பேசிக்கொண்டே பயணித்தால் அதிகமான கூலி வசூலிக்கப்படுகிறது என்ற காரணத்தால் பொது இடங்களில் தமிழர்கள் தமிழைப் பேச தயக்கம் காட்டுகின்றனர்.
    •  நான்காவதாகச் சமூக அந்தஸ்து காரணமாகத் தமிழர்களே தங்களுக்குள் மலையாள மொழியைப்பேசுகின்றனர்.
    • திருவனந்தபுரத்திற்கு வந்து இரண்டு மூன்று தலைமுறை ஆகினவர்கள் தங்களைத் தமிழன் என்பதற்குப் பதில் மலையாளி என்றே கூறிக்கொள்கின்றனர்.
    • கேரளத்தில் குடிபெயர்ந்து அரசு நிறுவனங்களில் வேலைபார்க்கும் தமிழர்கள் தங்களது குழந்தைகளின் தாய்மொழியாக மலையாலத்தையே பதிவுசெய்கின்றனர். தமிழ் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் கூட தங்களது குழந்தகளுக்கு இரண்டாம் மொழியாகக் கூட தமிழைக் கற்றுக்கொடுக்க முன்வருவதில்லை. இதற்கும் பல காரணங்கள் நிலவுகின்றன. அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியும் இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் உயர்மட்டத் தமிழர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் கல்வி நிறுவனங்களிலேதான் படிக்கவைக்கின்றனர். அங்கு இரண்டாம்மொழியாகத் தமிழைக் கற்கும் சூழல் இல்லை. இந்நிலையில் அவர்கள் மலையாளம், இந்தி, ஃப்ரென்ஞ் போன்ற மொழிகளை இரண்டாம் மொழியாகக் கற்கின்றனர். இதுவும் வீடுகளில் தமிழைப் பேசுவதற்குரிய சூழலைக் குறைக்கிறது. இச்சூழல் ஒன்றிரண்டு தலைமுறை மாறும்போது அவர்கள் மலையாளிகளாக உருமாறுவதற்குக் காரணமாக அமைகின்றது.

    கேரளத்தமிழ் – ‘தமிழாளம்

          கேரளத்தமிழர்கள் பேசும் தமிழை தமிழாளம் என்றுதான் கூறவேண்டும். தமிழும் மலையாளமும் கலந்த தமிழ் தமிழாளம் என்று கூறலாம். கேரளத்தமிழர்கள் அனைவரும் தமிழாளத்தைப் பயன்படுத்துவது இல்லை. தமிழைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற கல்வியாளர்கள், தனித்தமிழை நிலைனிறுத்தவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் மட்டுமே தனித்தமிழைப் பேசுகின்றனர்.  கல்வி கற்காதவர்களும் வியாபாரிகளும் இந்த தமிழாளத்தைப் பேசுகின்றனர்.  மலையாள மொழித் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் பெரும்பான்மையான மக்களும் மலையாளச் சொற்களை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பயன்படுத்துகின்றனர்.  மேலும் பல மலையாளச் சொற்களைத் தமிழ்ப்படுத்தியும் பேசுகின்றனர்.  தனித்தமிழ்ச் சொற்கள் இவர்கள் பேச்சில் மிகக் குறைந்த அளவில்தான்  காணப்படுகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள பெரும்பான்மையான தமிழர்களும் மலையாளச் சொற்களை எவ்வித மாற்றமும்மின்றி அப்படியே பயன்படுத்துகின்றனர்.

    எ.டு

    அத்தற – அவ்வளவு, – நீ அத்தற ரூபாய் கொடுத்தியா?

    சோறு அத்தறதான் இருக்கு

    அவதி – விடுமுறை,

    நாளைக்கு பள்ளிக்கூடம் அவதின்னு சொன்னாங்க

    அவசானம்- கடைசியில்,

    அந்த சினிமாவோட அவசானம் கதா நாயகன் செத்துட்டான்

    ஓர்ம – ஞாபகம்,

    என்ன ஒனக்கு ஓர்ம இருக்கா?

    கள்ளம் பொய்

    நீ கள்ளம் சொல்லாதே

    பூச்சா- பூனை      அந்த பூச்சய விரட்டு

    பொக்கம் – உயரம்,  அந்த மாப்பிள்ளைக்குக் கொஞ்சமும் பொக்கமில்ல

    ஒருமிச்சு- சேர்ந்து – நீங்க என்வீட்டுக்கு ஒருமிச்சு வாங்க

    குளிக- மாத்திரை- காச்சல் போக குளிக சாப்பிடு

    கரயாதே – அழாதே,இத்தற, இத்தறே – இவ்வளவு, எடபாடு – ஒழுங்குபடுத்துதல், ஒடக்கு – சண்டை, ஒருபாடு- அதிகமாக, நாணம் – வெட்கம், கள்ளம் – பொய், பேடி-  பயம், கொச்சு – பிள்ளை, செமச்சு – இருமல், செலப்பம்- சில நேரம், தெற்று – தவறு, பூச்சா- பூனை, பொக்கம் – உயரம், விர்த்தி – சுத்தம், வெள்ளம்- தண்ணீர், வையா – சுகமில்லை, வையிட்டு – சாயங்காலம், சர்தி – வாந்தி போன்ற  மலையாலச் சொற்களை எவ்வித மாற்றமும்மின்றி அவ்வாறே தங்கள் மொழியில் பயன்படுத்துகின்றனர்.

    ஒலிமாற்றம்

    சில மலையாளச் சொற்களை ஒலிமாற்றம் செய்து பயன்படுத்துகின்றனர்.

    எ.டு

    அக்‌ஷரம் – அச்சரம் –  க்‌ஷ>ச்ச் ( எழுத்துப்பிழை)

    தேசியம்     – தேச்சியம் ஷ்>ச்ச் (கோபம்)

    ஆழ்ச்ச      – ஆச்ச      –      ழ்ச் > ச்ச் (வார்ம்)

    எப்போள்    –      எப்பழு            ப்போ >ப்ப ஓ > அ (எப்போது)

    பாற்ற –      பாச்ச – ற்ற் .>ச்ச் ( கறப்பான் பூச்சி)

    முழுவன் > முளுவன்     ழ>ள (முழுவதும்)

    எணி – எளி –ண > ள ( எந்தி)

    பறஞ்ஞு – பறஞ்சு ( சொல்லுதல்)

    குறச்சு – கொறச்சு – உ > ஒ (கொஞ்சம்)

    தமிழில் மஞ்சள், பஞ்சு, கஞ்சி என்ற ஞகரத்திற்கு முன் சகர வல்லினத்தையே பயன்படுத்துகிறோம்.  மலையாளத்தில் இரண்டு மெல்லின எழுத்துக்கள் இணைந்து வருவது மரபு எனவே தான் ஞகரம் வந்தவுடன் சகரம் ஒலிக்கப்படுகிறது). தமிழ் மொழியில் மலையாள மொழி கலப்பதால் உரையாடலில் குறி மாற்றம் (  code switching ), குறிக்கலத்தல் (code mixing ) நிகழ்வதைக் காணலாம்.

    கேரளத்தமிழர்கள் தொடர்ந்து தக்கவைத்தலின் அவசியத்தை இக்கட்டுரை உணர்த்துகிறது. அவர்கள் வெளியே மலையாளத்தைப் பேசினாலும் தங்களது இல்லத்தில் தமிழைக் கட்டாயமாகப் பேசவேண்டும். தங்களது குழந்தைகளுக்குத் தமிழை பேசுவதற்கும் எழுதுவதற்கும் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும்.  சமூக அந்தஸ்தை விரும்பி மொழியை மறக்காமல் தமிழர்கள் தங்களிடயே தமிழைப் பேசப்பழகிக்கொள்ளவேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களிலும் இரண்டாம் மொழியாகத் தமிழைக் கற்றுத்தரும் சூழலை உருவாக்கவேண்டும். இதற்குத் தமிழ்சங்கங்களும் தமிழ்வளர்ச்சிக்கழகம் போன்ற அமைப்புக்களும் முயன்றால் நலம் பயக்கும். தமிழ்ச்சங்கங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழ்தெரியாத தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் தமிழைக் கற்றுத்தருவதற்குரிய குருகியகால வகுப்புக்களை நடத்தலாம்.  தமிழன் என்ற உணர்வையும் தாய்மொழியின் சிறப்பையும் உணர்த்தும் வகையில் கருத்தரங்கங்கள், சிறப்புச்சொற்பொழிவுகள் போன்றவற்றை நடத்தலாம்.

     

    Share
  • சமணக் கல்வெட்டுக்களும், சங்ககாலச் செஞ்சியும்

    நிலவளம் கு.கதிரவன்

           மொழியைக் குறித்த சொல்லே காலத்தையும் குறிக்கும்.  அத்தகைய  சிறப்பு வாய்ந்த சொல் ” தமிழ் ”.  ஆம்.  சங்கத் தமிழ் என்றாலே சங்க காலத்தையும் குறிக்கும் சொல்லாடலாக உள்ளது நமது தனித் தமிழ்ச் சிறப்பாகும்.  சங்க காலம் தொடர்பான கால வரையறையில் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் கி.மு.5ம் நூற்றாண்டு  முதல் கி.பி.3ம் நூற்றாண்டு வரையிலான காலத்தை சங்க காலம் என  பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அக் கால வரையறையின் வாயிலான பற்பல ஆய்வுகள் மேற்கொண்டு மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் தொடர்பான ஆய்வுரைகளை வழங்கியுள்ளனர்.

    தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் வளர்த்த நமது தமிழ்ச் சமூகம், தமிழ் எழுத்துக்கள் இன்றைய பயன்பாட்டில் பயன்படுத்தும் வடிவத்திற்கு முன்னர் சங்க காலத்தில்  பிராமிய வடிவத்தில் இருந்தது.  சங்க காலத்தில் தமிழ் மொழிக்கு வழக்கில் இருந்தது தமிழி அல்லது தமிழ் பிராமி எழுத்துரு வகையே ஆகும்.  பிராமிய எழுத்துருவை ஆய்வாளர் ஐராவதம்  மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமி என்றும், ஆய்வாளர் நாகசாமி அவர்கள் தமிழி என்றும், நடனகாசிநாதன், பேராசிரியர் ராசவேல் அவர்கள் தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் என்றும் அழைக்கின்றனர்.

    வடஇந்திய பிராமி எழுத்துக்களுக்கும், சங்க காலத்தில்  தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த எழுத்துக்களுக்கும் உருவ அளவில் ஒற்றுமை உண்டு. ஆனால் இதில் பல வேறுபாடுகள் இருந்தன.  தமிழில் உள்ள ழ,ள,ற,ன போன்ற எழுத்து வடிவங்கள் வட பிராமியில் இல்லை.  இந்தியாவின் பிற பகுதிகளில் கிடைக்கும் பிராமி எழுத்துக்கள் புத்த தர்மத்தைப் போதிக்கும் பிராகிருத மொழியில் இருக்கும் பொழுது, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.  எனவே இந்திய பிராமியிலிருந்து வேறுபடுத்தி உணர்த்தும் பொருட்டு தமிழ் பிராமி அல்லது தமிழி என்றழைத்தனர்.  இவற்றை சங்க காலத் தமிழ் எழுத்துக்கள் என்றே கூறலாம்.

    சமணக் கல்வெட்டுகள் வாயிலாக தமிழின் தொன்மையையும், தமிழர்களின் பண்பாட்டு வாழ்வியல் முறைகளையும் நாம் அறியலாம்.  இக் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் பிராமி எழுத்துரு வடிவங்களிலே இருப்பது இதன் தொன்மையை பறைசாற்றுகிறது. அதனால் இவை சங்க கால கல்வெட்டுகள் என்றும், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் என்றம், தொல்தமிழ்க் கல்வெட்டுகள் என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது.  இதுவரை 32 இடங்களில் ஆய்வு செய்து கிடைத்த 95 கல்வெட்டுகளில் 5 விழுப்புரம்  மாவட்டத்திலும், குறிப்பாக செஞ்சி மற்றும் செஞ்சி வட்டத்தை உள்ளடக்கிய பகுதிகளில் 4 கல்வெட்டுகள் இருப்பது செஞ்சி பகுதியின் சிறப்பாகும். திருக்கோவலூர் ஜம்பையில்  1 கல்வெட்டு உள்ளது. இதன் வாயிலாக செஞ்சி சங்க காலத்தில் சிறப்பு பெற்ற பகுதியாக இருந்தது இவ்வாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சங்க காலத்தில் செஞ்சி :

    சங்க கால செஞ்சியின் சிறப்புகளை அறிவதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது தமிழ்பிராமியக் கல்வெட்டுகளான சமணக் கல்வெட்டுகளே ஆகும்.  பிராமிய எழுத்து என்ற பெயரே, சமண சமயத்தின் முதல் தீர்த்தங்காரரான ரிஷப தேவருக்கு இரு மகள்கள் என்றும் அவற்றுள் ஒருவர் பெயர்  சுந்தரி, மற்றொரு மகளின்  பெயர் ”பிராம்மி” என்றும், சுந்தரி மொழியையும், பிராமி எழுத்தையும் குறிப்பதாகவும், இதன் வாயிலாகவே பிராமி எழுத்துரு பெயர் வழக்கு வந்தது என்றும்  ஆய்வாளர் கணேசன்  அவர்கள் கூறுகின்றார்.

    தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைப்பதற்கு இன்றும் அதன் பழமையை உணர்த்தும் தமிழ்பிராமி எனப்படும் தமிழி எழுத்துக்களே பெரும் காரணம்.  இவை 2400 ஆண்டுகள் பழமையானது.  தமிழ் எழுத்தின் தொடக்கத்தைக் காட்டும் இந்த அரிய கல்வெட்டு எழுத்துக்கள் சமண துறவியர்கள் நடத்திய அறப் பள்ளிகளிலேயே அதிகமாக காணக் கிடைக்கிறது.

    செஞ்சி பகுதியானது இயற்கையிலேயே கல்குவியலாகவும், பாறைகளாகவும், கனிம வளம் கொண்டவையாகவும் விளங்கும் இயற்கையான மலைகள் நிறைந்ததாகும்.  இதன் காரணமாகவே இம் மலைப்  பகுதிகள் தமிழகத்தின் தொன்மை கல்வி நிறுவனங்களாக, சமூக ஒழுக்கத்தை மேம்படுத்தும் அறப் பள்ளிகளாக விளங்கியிருக்கின்றன.

    செஞ்சிக்கு தென்மேற்கே உள்ளது வரிக்கல் கிராமம்.  இங்குள்ள சிவகிரி மலையில் 2000 ஆண்டு பழமையான சமண படுக்கைகளை பேராசிரியர்கள்  ரமேஷ், ரங்கநாதன் குழுவினர் கண்டறிந்து ஆய்வு செய்து வழங்கியுள்ளனர். இந்த சிவகிரி மலையின் தெற்கே 89 அடி நீளம் கொண்ட குகை உள்ளது. குகையின்  மேற்கே 10 சமணப்  படுக்கைகளும், மலையின் கீழ்ப் பகுதியில் தெற்கில் சிறிய பாறையில் சமணப் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சமணத்துடன் தொடர்புடைய ஜைனகிரி என்ற பெயர் கொண்ட இம்மலையே 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிவகிரி என மாற்றி உள்ளனர்.

    மேலும்  மலையின் உச்சியில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானக் கோயில் இருந்துள்ளது.  அடித்தளத்தில் காணப்படும்  செங்கல்லின் நீளம் 34 செ.மீ, அகலம் 6.5 செ.மீ இருப்பதால் இது சங்க காலத்தைச்சேர்ந்தது என உறுதியாகின்றது.  அரிக்கமேடு பகுதியில் சங்க காலத்தில் காணப்படும்  செங்கல் அளவில் இது ஒத்துப் போவதாக ஆய்வாளர் கூறுவதிலிருந்து செஞ்சியின் சங்க காலச் செழுமையை அறிய முடிகிறது.

    இது தவிர செஞ்சியின் சுற்றுப் பகுதி ஊர்களான சிறுகடம்பூர், தொண்டூர், நெகனூர் பட்டி, பறையன்பட்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால கல்வெட்டுகளில்  சமண  முனிவர்களுக்கு  அறப்  பள்ளிகள் அமைத்துக் கொடுத்ததை தொண்டூர், நெகனூர்பட்டி  கல்வெட்டுகள் வாயிலாகவும், சமண முனிவர்கள் வடக்கிருந்த நிகழ்வு, திருநாதர் குன்று, பறையன்பட்டு கல்வெட்டுகள் வாயிலாகவும் நம்மால் அறிய முடிகிறது.  இங்கு காணப்படும் குகைக் கல்வெட்டுகள் வாயிலாக அமைந்த அறப் பள்ளிகள் மூலம் கணிதம், வானியல், விஞ்ஞானம், உயிர் ஞானம், மொழியறிவு, மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.  மேலும் உணவு தானம், புகலிட தானம் அளித்த செய்திகளையும் அறிய முடிகிறது.

    சிறுகடம்பூர் திருநாதர் குன்று :

           செஞ்சிக் கோட்டையின் வடக்கே  சிங்கவரம் செல்லும் சாலையின் மேற்கே அமைந்துள்ளது திருநாதர் குன்று.  இப்பகுதி சிம்மபுரி என்றும் அழைக்கப்பட்டதாகும். சமண அறத்தைப் பரப்பிய 24 தீர்த்தங்கர்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில் இச் சிற்பங்களின்  தலையின் மேற்பகுதியில் முக்குடை காணப்படுகிறது. மதுரை கழுகுமலையில்  உள்ள சமணச் சிற்பங்கள்போல் இது காணப்படுவதாக  ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  இது 4-5ம் நூற்றாண்டு  காலத்தைச் சேர்ந்ததாகும். பாறையின் வலது பாகத்தில் ஒரு தீர்த்தங்கரர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.  மலையின் நடுப்  பகுதியில்  ஒரு பெரிய பாறையில் பத்மாசனத்தில் ஒரு தீர்த்தங்கரரின் சிலையும், மேல் பகுதியில் கல்வெட்டுச் சான்றும் இருந்துள்ளது தெரிகிறது.

    மலைமீது மூன்று கல்வெட்டுகள் உள்ளன.  முதிர்ந்த நிலை பிராமி மொழியிலிருந்து வட்டெழுத்தாக தமிழ் வளர்ந்த, மாறுதல்  அடைகின்ற கால கட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன் முதலில் தென்படுகிறது என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் திரு.வெங்கடேசன்.  இந்த திருநாதர் குன்றின் கல்வெட்டில்தான் ” ஐ ” எனும் தமிழ் எழுத்து பிறந்துள்ளது என்றும் வெங்கடேசன் கூறுகிறார்.  ஆகவே ஐ  பிறந்து தை பிறந்த மலையாகிறது.  தமிழுக்கு எழுத்து  தந்த மலையாகிறது.

    இங்குள்ள கல்வெட்டுகளில் சந்திரநந்தி ஆசிரியர் என்னும் சமணத் துறவி 57 நாட்கள் நோன்பிருந்து ( சல்லேகனை ) வீடுபேறு  பெற்றார் என்றும், இளைய பட்டாரகர் என்னும் சமணத் துறவி 30 நாட்கள் நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்றும், கோயில் விளக்கேற்ற 400 ஆடுகள் தானம் தரப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது.

    பறையன்பட்டு கல்வெட்டு :

    செஞ்சி, அவலூர்பேட்டை அருகே உள்ளது பறையன்பட்டு.  இங்கு கண்டெடுக்கப்பட்ட  கல்வெட்டில் வடக்கிருந்து வீடுபேறு பெற்ற நிகழ்வு  பொறிக்கப்பட்டுள்ளது.

    நமோத்து, பாணாட்டு வச்

           ச ணந்தி ஆசாரிய

           ர் மாணாக்கராராத னி

           நோற்று (மு)டித்த (நி)

           சீதிகை

    ” நமோத்து ” என்பது  நமோஸ்து என்ற சமஸ்கிருதச் சொல்லைக் குறிக்கிறது.  தமிழில் வணங்குகிறேன் என்று பொருள்.

    பாணாட்டைச் சேர்ந்த வச்சநந்தி என்ற சமண ஆசாரியரின் மாணாக்கர் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததற்காக எடுக்கப் பெற்ற தவம் செய்யும் இருக்கை என்று பொருள்.  சமணத் துறவிகள் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பதற்காக இந்நிசீதிகைகள் ஏற்படுத்தபபடுவது இயல்பாகும்..

    இக் கல்வெட்டின் வாயிலாக  சமண முனிவர்களின் சமய மாண்பினை அறியலாம்.  பிற கல்வெட்டுகளில் சமணத் துறவிகளுக்குப் பிறர் செய்த கொடைகளை – பாளிய் – இருக்கை- அமைத்துக் கொடுத்ததை  மட்டுமே பேசுகிறது.  ஆனால் இக் கல்வெட்டில் சமண சமயத்தின் கொள்கை பேசப்படுகிறது.

    தொண்டூர் கல்வெட்டு :

         செஞ்சியின் கிழக்கே தொண்டூர் கிராமம்  உள்ளது.  இங்கு காணப்படும் சமணக் கல்வெட்டு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.  இங்குள்ள பஞ்சனார்படி என்ற மலைக் குன்றில்  தெற்கு வடக்காக 3 சமணப் படுக்கைகள் உள்ளன.  இங்கு கி.மு.2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இக் கல்வெட்டில் அகழ் ஊரைச் சேர்ந்த அறமோசி என்பவர் அமைத்துக் கொடுத்த சமணப் பள்ளி என உள்ளது.  இந்தக் கல்வெட்டுதான் நடுநாடு என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் மிகப் பழமையான கல்வெட்டு என்பது ஆய்வாளர்கள் கருத்து.

    மலையின் மேல் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய வெள்ளை நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளது. பஞ்சனார்படி குகைத் தளத்தின் வெளியே தரைப் பாறையில் இரு வரிகளில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

    ” இளங்காயிபன் ஏவ

            அகழ் ஊரறம் மோசி செயித அதிடானம்

    என்பது இதன் வாசகம்.  அதிடானம் என்பது  புனித இருக்கையை குறிக்கும் சொல்லாகும்.  அகழூர் என்பது அகழ் ஊர் என இக் கல்வெட்டில் உள்ளது. இன்று  தொண்டூர் அருகில் அகலூர் என்ற ஊர் உள்ளது இதை மெய்ப்பிப்பதாக உள்ளது.  மேலும் அகழூரினர் ஒன்றாக இணைந்து இளங்காயிபன் என்பவர் பணிக்க அறம் செய்துள்ளனர்.  மோசி  என்பது ஒரு நபரின் பெயராகக் கொள்ளலாம்.

    ” திருந்து மொழி மோசி பாடிய ஆயும் ”    ( புறம் : 158 )

    புறநானூற்றுப் பாடலான இப் பாடலின் பொருள், திருந்திய சொல்லையுடைய மோசி என்னும் புலவனாற் பாடப்பட்ட ஆயும் என்பது பொருளாகும். இதில் உள்ள மோசி சங்க காலப் புலவர் பெயரை  சுட்டுவதால்,  கல்வெட்டில் உள்ள மோசி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு நபரின் பெயர் என்பது உறுதிப்படுகிறது.

    நெகனூர்பட்டி கல்வெட்டு :    

    இக் கல்வெட்டு 3 – 4 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.  இக் கல்வெட்டும் சமணர் இருக்கை செய்வித்துக் கொடுத்ததை கூறுகிறது.

     பெரும் பொகய்

           செக்கந்தி தாயியரு

           செக்கந்தண்ணி  செ

           யிவித்த பள்ளி

    பெரும் பொகய் என்ற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவனின் தாயார் சேக்கந்தண்ணி செய்வித்த பள்ளி  ( சமணர் இருக்கை ) என்று கல்வெட்டு கூறுகிறது என்பது  பேராசிரியர் சு.ராஜவேலு அவர்களின் கருத்தாகும்.

    நெகனூர்பட்டி மேற்கே உள்ள அடுக்கண்கல் என்ற குன்றின் கீழ் அருகில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் கூரைப் பகுதியில் விளிம்பில் இக் கல்வெட்டு உள்ளது.  சேக்கந்தண்ணி என்பதை ” சேக்கந் அண்ணி ” என பிரித்துப் படிக்க வேண்டும். இவரை சமணப் பெண் துறவியாகக் கொள்ளலாம்.  சேக்கிழார் என்பதில்  சே குடிப் பெயராக இருப்பது போல சே குடிப் பெயராகக் கொள்ளலாம்.  சே என்பது காளை என்ற பொருளில் ,

    ” கயிறு இரு கதச் சேப் போல”    ( அகம் : 36 )

    என்று அகப்பாடலில் அகநாநூறு கூறுகிறது.

    கந்தி என்ற சொல்

    ” கறந்த பால் அணைய  கந்தி “ ( சீவகம் : 26 : 49 )

    கறந்திட்ட பால் போலுந் தூய தவப் பெண் என்று சீவக சிந்தாமணி கூறுகிறது. அதேபோல் சூடாமணி கந்தி, கௌந்தி என்ற சொற்களுக்கும் பெண் துறவி என்று பொருள் சொல்கிறது.  இதன் மூலம் சே என்பது  காளையையும், கந்தி என்பது துறவியையும் குறிப்பது உறுதிப்படுகிறது.

    தொகுப்புரை :

    • திருநாதர் குன்று, நெகனூர்பட்டி, தொண்டூர், பறையன்பட்டு போன்ற இடங்களில்கண்டெடுக்கப்பட்ட தொல் தமிழ்க் கல்வெட்டுகள் வழியாக சங்க  காலத்தில் செஞ்சி பகுதியானது சிறப்பு பெற்ற நிலையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  மேலும் செஞ்சியைச் சுற்றியுள்ள சுமார் 20  கிராமங்களில் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டால் செஞ்சியின் தொன்மையை அறியலாம் என்பது இதுவரை கிடைத்த கல்வெட்டுகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
    • செஞ்சி பகுதியில் வாழும் மக்கள் 13ம் நூற்றாண்டுக்குப் பின் சிறப்புபெற்ற செஞ்சிக் கோட்டை, ராஜா தேசிங்கு புகழ் இவற்றை ஒட்டியே பெருமிதம் கொள்வதால், சுமார் 2500 ஆண்டுக்கு முன்னரே சங்க காலச் சிறப்பு பெற்ற செஞ்சியின் தொன்மத்தை அறிய முற்படவில்லையோ என  ஐயம் கொள்வதாக உள்ளது.  சங்க கால ஆய்வுக்கான முன்னெடுப்புகளை தொடர்ந்து  எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இவ்வாய்வின் வழியாக எழுகிறது.
    • கி.மு.3ம் நூற்றாண்டில் பரவிய சமணமும், அதன் வழியாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் வாயிலாகவும் அக் கால சமண முனிவர்கள் தமதுசமயக்  கருத்துகளை பரப்புவதற்காக வரவில்லை என்பதும், மாறாக அவர்கள் அறப் பணிகளான மக்களின் ஒழுக்கம், கல்வி, ஞானம், உணவு, மற்றும் புகலிட தானங்களை செய்வித்ததை மட்டுமே தங்களின் தலையாய நோக்கமாக கொண்டிருந்ததை அறிய முடிகிறது.
    • கல்வெட்டுகளில் உள்ள பெயர்களும், அதற்கு சான்றாதாரமாக சங்கத்தமிழ்ப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள பெயர்களையும் இணைத்து ஒப்புமைப்படுத்தும்போது இக் கல்வெட்டுகள் சங்க  காலத்திற்கு உரியது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
    • செஞ்சி பகுதியில் கிடைத்த தொல் தமிழ் கல்வெட்டுகளின் வழியாக சமண சமயத்தின் பரவலான போக்கினையும், சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட, செஞ்சிக்கு அருகில்உள்ள மேல்சித்தாமூரில் ஜினகஞ்சி மடம் என்ற சமணர்களுக்கான தலைமை பீடம்  செஞ்சி பகுதியின் தொன்மத்தை பறைசாற்றுவதை நம்மால் அறிய முடிகிறது.

    முடிவுரை :

           ஒரு இனத்தின்  நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், வாழ்வியல்  முறைகள் ஆகியவற்றை அறிய வரலாற்றோடு கல்வெட்டுகள், தொல்லியல் ஆய்வுகள் வழியாகவே நிறுவப்பட்டு நம்மால் அறிய முடிகிறது.  செஞ்சி பகுதியில் கிடைத்த இக் கல்வெட்டுகளின் மூலம் சமண முனிவர்களின் மலைப் பள்ளிகள் மானிடருக்கு, இம்சை செய்யாமை, களவு செய்யாமை, பொய் சொல்லாமை, பிறன் மனை விழையாமை, மிகு பொருள் விரும்பாமை போன்ற வாழ்வியல் நெறிகளை விளக்கிக் கூறுவதை அறிய முடிகிறது.  இதன் வழியாக சங்க கால மக்களின் வாழ்வியல் அறங்களையும் இதன் வழியாக அறிய முடிகிறது. தொடர்ந்து  தற்கால மக்களும் மேற்கண்ட அறங்களை கடைபிடித்து ஒழுகினால் சமூகம் உய்வுறும் என்பது தெளிவு.  அதற்கு மேலதிக ஆய்வுகளும், தொல்லியல் கல்வெட்டு ஆய்வுகளும் அவசியம் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும்.

    துணைநின்ற நூல்கள் :

    1. ரிஷபா – ஆதிபகவன் – ஸ்வாமி ஆர்.பி.பிரக்வாட் – தமிழில் சன்மதி –

    ஸ்ரீ ரத்னா ஹீரிபாய் இலக்கிய பிரசுரங்கள், 46, கோவிந்தப்ப நாய்க்கன்

    தெரு, சென்னை – 1.

    1. புறநானூறு மூலமும், உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம்,

    சென்னை – 14

    1. அகநானூறு – மூலமும், உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம்,

    சென்னை – 14

    1. சீவக சிந்தாமணி மூலமும், உரையும் – ஔவை சு.துரைசாமிப் பிள்ளை

    – திருநெல்வேலி தென்னிந்திய  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் –

    சென்னை – 18.

    1. களப்பிரர் கால கல்வெட்டுகள் – பேராசிரியர் மா.பவானி., கல்வெட்டியல்

    மற்றும் தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

    குறிப்புதவிகள் :

    1. திரு.ஸ்ரீதர்., தமிழ் பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல்

    துறை.

    1. Thiru.Mahadevan., Early Tamil Epigraphy., – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

    சென்னை.

     

    Share