மஞ்சரி இலக்கியமும் வகைகளும்

0

முனைவர் இரா.வீரபத்திரன்,உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்

தமிழ் சொல்வளமும் பொருள்வளமும் மிக்க உயர்தனிச் செம்மொழி. இத்தமிழ்ச் சோலையில் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்றவற்றைவிட சிற்றிலக்கியங்களே அளவாலும் வகைகளாலும் மிகுதியான எண்ணிக்கையில் பூத்துக் குலுங்கின. தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, உலா, தூது, பரணி, குறவஞ்சி, பள்ளு, கோவை போன்ற சில வகைகள் சிறப்பாகச் செல்வாக்குப் பெற்றுள்ளன எனலாம். இன்னும் பல சிற்றிலக்கிய வகைகள் செல்வாக்குப் பெறாமலும், பெயரளவில் மட்டுமே அறிமுகத்துடனும் காணப்படுகின்றன. இவ்வகை இலக்கியங்கள் தமிழ்ச் சோலையில் செல்வாக்குப் பெற்று வளர்ந்தால் தமிழ்மொழி சீரிளமைக் கன்னியாய் என்றும் தொடர்ந்து வாழும். காலந்தோறும் தமிழ்ச் சோலையில் பல புதுவகையான இலக்கியங்கள் புதுமணம் பரப்பிக் கொண்டே இருக்கின்றன.

மஞ்சரி இலக்கியம்விளக்கம்

‘மஞ்சரி’ என்பதற்குப் பூங்கொத்து, பூமாலை, தளிர், மலர்க்காம்பு, ஒழுக்கம், மஞ்சரிப்பா என்னும் ஆறு பொருள்களைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி விளக்கம் தருகிறது.1 பலவகைப் பாவும் பாவினமும் கலந்து பாடுதலை கலம்பகம் என்பர். இதேப்போல் பூங்கொத்துப் போல, பூமாலைப் போலப் பல்வேறு வகையான பாடல் தொகுப்புகளுக்கு மஞ்சரி எனப் பெயர் சூட்டியுள்ளனர். தனிப்பா மஞ்சரி, காமரச மஞ்சரி முதலியன இவ்வகையின. யானையின் போர்த்தொழில் பலவற்றையும் விவரித்துப் பாடும் ஒரு சிற்றிலக்கியத்திற்கு ‘ஆதோரண மஞ்சரி’ எனப் பெயரிட்டு உள்ளனர். பற்பல பொருள் பற்றி வெளிவரும் சிறந்த கட்டுரைகள், கதைகள் முதலியவற்றைத் தொகுத்துக் ‘கலைமகள்’ அலுவலகம் வெளியிட்டுவரும் திங்கள் இதழ் ‘மஞ்சரி’ என்னும் பெயருடையதாதலைப் பலரும் அறிவர். இங்கெல்லாம் பலவற்றையும் ஒருங்கு திரட்டிய திரட்டு நூல் என்னும் கருத்திலேயே ‘மஞ்சரி’ என்னும் பெயர் வழங்கப்படுதலைக் காணமுடிகின்றது. இலக்கியம் என்பதற்கும் செய்யுள் உறுப்புக்களை இணைத்துக் கட்டுதல் என்பது பொருள். ஆகவே பூங்கொத்து, பூமாலைப் போல் பல்வேறு வகையான பாடல் தொகுப்புக்கள் அடங்கிய நூலுக்கு மஞ்சரி இலக்கியம் என்று பெயர் கொள்ளலாம்.

மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணம்

இலக்கியத்திற்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் பிரபந்த மரபியல், பிரபந்தத்திரட்டு ஆகிய இரண்டு நூல்கள் மட்டுமே மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணத்தைக் கூறுகின்றன. மஞ்சரி இலக்கியத்தின் முழு உருவமும் போக்கும் இவ்விரு பாட்டியல் நூலும் தெளிவாக வரையறை செய்யவில்லை.

பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த பாட்டியல் நூலான பிரபந்த மரபியல்,

“கருதுபொருள் இடம் காலம் தொழிலின்

முப்பான் நாற்பான் எழுபான் தொண்ணூறு

நூறான் வெண்பாக் கலித்துறையின் ஆதல்

மன்னும் அவ்வெண்ணான் மாலை மஞ்சரி

காஞ்சி மாலை முல்லைக்கலி சதகமென்று

இயலும் செய்யுட்கு ஏற்ற பெயரே”2

என்று பொருள், இடம், காலம், தொழில் என்ற நான்கின் அடிப்படையில் வெண்பா அல்லது கலித்துறைப் பாவினால் பாடப்படுவது மஞ்சரி இலக்கியம் என்கின்றது. இதனால் பொருள், இடம், காலம், தொழில் பற்றி நால்வகை மஞ்சரிகள் உள்ளன என்பது தெரிய வருகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த பாட்டியல் நூலான பிரபந்தத்திரட்டு,

“வரும்பவனி பத்து வருமவர்காண் நாலில்

அரும்பும்ஒன் பானாள்முன்றிற் காகும் – விரும்புகரி

பத்தாநா ளையப்பவனி பாவைபிரிவே ; வணிக

வத்தருக்கா காமஞ்சரி”3

தலைவன் பத்துநாள் உலா வரல் ; அவ்வுலாவின் நாலாம் நாள் பாவை ஒருத்தி அவனைக் காணல் ; அவனிடம் அன்பு அரும்புதல் ; ஒன்பதாம் நாளில் தன் முன்றிலில் வந்து அவனைக் காணுதல் ; பத்தாம் நாள் யானையின் மேல் அவன் உலா வரல் ; பின்னர் பாவை பிரிவால் வருந்துதல் – என்னும் பொருளில் வருவது ‘மஞ்சரி’ என்னும் இலக்கியமாகும்.

மஞ்சரி இலக்கிய வகைகள்

சிற்றிலக்கியங்களின் பெயர்களில் அமைந்த முடிவுச் சொல்லின் ஒற்றுமை வேற்றுமை கருதிச் சிற்றிலக்கியங்களைப் பாகுபடுத்துவர். சிற்றிலக்கியப் பெயர்களில் அமைந்த இச்சொல் முடிவுகள் சிற்றிலக்கியப் பாடுபொருண்மை, யாப்புவகை, பாடல் எண்ணிக்கை ஆகிய இவற்றுடன் கூடி அமைகின்றன.

சிற்றிலக்கியங்களில் மாலை என்னும் சொல் முடிவைப் பெற்று அமைந்த சிற்றிலக்கியப் பெயர்கள் மிகுதியாக உள்ளன என்பதை அறிவோம். இதேபோல் மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமையும் இலக்கியங்கள் உள்ளன. வெற்றிக்கரந்தை மஞ்சரி, வாதோரண மஞ்சரி என்பன மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமைந்துள்ளன. மஞ்சரி என்னும் பெயர்க் கொண்ட இலக்கிய வகையும் உள்ளது.

வெற்றிக்கரந்தை மஞ்சரி

பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரையை மீட்கின்றவர், கரந்தை மலர்மாலை சூடிச்சென்று மீட்டு வருவதனை விரித்துப் பேசுவது வெற்றிக்கரந்தை மஞ்சரி என்பர். இதனை பிரபந்த தீபிகையும், முத்துவீரியமும் கூறுகின்றன.

பிரபந்த தீபிகை,

“மாற்றலர்கள் கொண்டநிரை மிட்போர் கரந்தைப்பூ

மாலைசூ டிப்போகிமீள்

வகையினை விரித்தோத லைவெற்றிக் கரந்தையின்

மஞ்சரியெ னக்கூறுவா்.;”4

பிரபந்த  மரபியல் முதலான நூல்கள் ‘கரந்தை’ என நிரை மீட்டலை மட்டும் சுட்டுகின்றன. முத்துவீரியம் வெற்றிக்கரந்தை என்றும், பிரபந்த தீபிகை வெற்றிக் கரந்தையின் மஞ்சரி என்ப பெயர்சூட்டிச் செயல்விளக்கம் அளிக்கின்றது. வெற்றிக் கரந்தை மஞ்சரி என்ற பெயர்நிலை பிரபந்த தீபம் முதல் காணப்படுகின்றது. மாலையிலக்கிய வகையாகவும் எவ்யாப்பின் முப்பது செய்யுளாலாவதாகவும் பிரபந்த மரபியல் இதனை நுவலுகின்றது. பிற்காலப் பாட்டியலில் இது காணப்படவில்லை.

வாதோரண மஞ்சரி

யானையை வயப்படுத்தி அடக்கினவருக்கும், எதிர்த்த யானையை வெட்டி அடக்கியனவருக்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவருக்கும், அவர்தம் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால் தொகுத்துப்பாடுவது வாதோரண மஞ்சரியாகும்.

“யானை வயப்படுத்தி அடக்கின வருக்கும்

எதிர்பொரும் யானையை ஈரவெட்டி

அடக்கின வருக்கும் அதட்டிப் பிடித்துச்

சேர்த்த வருக்கும் வீரச் சிறப்பை

வஞ்சியாற் பாடுவ ததுவா தோரண

மஞ்சரி எனப் பெயர் வைக்கப் படுமே”5

என்று முத்துவீரியம் இலக்கணம் கூறுகின்றது.

மஞ்சரி இலக்கியத்திற்குச் சொல்லப்பட்டுள்ள இலக்கணமும் பாடுபொருளும், வெற்றிக்கரந்தை மஞ்சரி, வாதோரண மஞ்சரி முதலிய இலக்கியங்களுக்கு சொல்லப்பட்டுள்ள இலக்கணமும் பாடுபொருளும் வேறுபடுகின்றன. அந்தாதி இலக்கியங்களின் வகைகளான பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி போன்றவை அந்தாதி எனும் அமைப்பு நிலையில் ஒன்றுபட்டு பாடல் எண்ணிக்கையால் வேறுபடுகின்றன. ஆனால் மேற்குறிப்பிட்ட மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெறும் இலக்கிய வகைகள் ‘மஞ்சரி’ இலக்கியத்தின்று முற்றிலும் வேறுபடுகின்றன. இவைகளை மஞ்சரியின் இலக்கிய வகைகள் என்று கூறுவது பொருந்துவதன்று.

திரிபு மஞ்சரி

“திரிபு எனும் சொல், வேறுபாடு, தோன்றல், திரிதல் முதலிய இலக்கணப் புணர்ச்சி விகாரம், முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீத உணர்வு எனும் பொருண்மைகளுடன், முதலெழுத்தொழிய இரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக்கையிற் பொருள் வேறுபடப் பாடுஞ் செய்யுள் எனவும் பொருள் படுகின்றது.”6 இதன் அடிப்படையில், திரிபுச் செய்யுட்கள் பல அமைந்த இலக்கிய வகை, திரிபு மஞ்சரி எனக் கொள்ளல் பொருந்தும்.

இவ் இலக்கிய வகையையும் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய தில்லைத் திருவாயிரத்தில் இத்திரிபு மஞ்சரி 25 கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் உருவாகியுள்ளது. திருவரங்கத் திருவாயிரத்தில் மற்றொரு திரிபு மஞ்சரி காணப்படுகிறது. இது 32 கட்டளைக் கலித்துறைகளைப் பெறுகின்றது. இவை அனைத்தும் முதற்சீரில் திரிபு கொள்கின்றன. முதலெழுத்தொழிய ஏனைய எழுத்துக்கள் ஒரு பாடலின் நான்கு அடியின் முதற்சீரிலும் ஒத்து அமைந்து இத்திரிபை உருவாக்குகின்றன.

யமக மஞ்சரி

யமகம் என்பது ‘வந்த எழுத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி’ என விளக்கப்படுகின்றது. யமக அந்தாதி, இத்தகைய செய்யுட்கள் அந்தாதியும் பெற்று அமைந்த இலக்கிய வகையைக் குறிக்க, யமக மஞ்சரி என்பது, அந்தாதி இலக்கிய வகையைக் குறிக்க, யமக மஞ்சரி என்பது, அந்தாதி பெறாது தொடரும் பல யமகச் செய்யுளுடைய நூலைக் குறிக்கின்றது எனலாம்.

‘ஒரு சொல்லானே நான்கடியும் மடக்குவதனை இயமா வியமகமென்ப’ எனத் தண்டியலங்கார (96) உரை கூறுவது யமகமும் மடக்கும் ஒத்து வந்த பண்டை அணியிலக்கணக் கோட்பாட்டை விளக்குகின்றது.

கலம்பக உறுப்புகளுள் ஒன்றாக யமகம் அமைதலைப் பாட்டியல்களும், இலக்கியங்களும் புலப்படுத்துகின்றன.

“மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே

மான்கண்டால் மானுக்கே வாடி மாதர்

குயில்கண்டால் குயிலுக்கே குழைதி ஆகில்

கொஞ்சுரம்போக் கொழி நெஞ்சே…..”7

தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடும் இடத்தில் மயில், குயில், மான் ஆகியவற்றைக் காண நேரும். அவ்வாறு காணும்போது தலைவியை நினைத்து வருந்துகிறான் என்னும் பொருளில் இவ்வடிகள் அமைந்துள்ளது.

மயில், மான், குயில் என்னும் சொற்கள் அ்றிணைப் பொருளையும் மயிலுக்கே, குயிலுக்கே எனவரும் சொற்கள் தலைவியைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது. ஆகவே வந்த சொற்களே மீண்டும் வந்து வேறு பொருள் தர நின்றது. அதனால் இது கலம்பக உறுப்புகளுள் யமகத்திற்கு ஆகி வந்தது.

ரச மஞ்சரி

ஒன்பான் சுவைகள் நவரசம் எனப்படுகின்றன. வீரம், அருவருப்பு, பெருநகை, அச்சம், கோரம், கருணை, சாந்தம், அற்புதம், சிங்காரம் எனும் ஒன்பது சுவைகளும் இலக்கியப் பொருளானமையைத் தண்டபாணி சுவாமிகளின் நவரச மஞ்சரி காட்டுகின்றது.

ஒவ்வொரு சுவைக்கும் ஒன்பது பாடலாக, வெவ்வேறுபட்ட யாப்பில் 81 கவிதைகள் இதன்கண் அமைகின்றன. சிங்காரமாகிய ஒன்பதாவது பகுதி பொருட்பகுப்பிற்கேற்ப, அகத்துறைகள் கொண்டு அமைகின்றது. செந்திலாண்டவன் புகழ் புலப்படும் வண்ணம் இப்பல்சுவைச் செய்யுட்கள் பொருந்துகின்றன.

மேற்குறிப்பிட்ட யமக, திரிபு, ரச மஞ்சரி முதலியவையும் மஞ்சரி என்னும் சொல் முடிவைப் பெற்று அமைதலைக் காணமுடிகின்றது. பாடல்களில் சொல் வேறுபடுதல், பொருள் வேறுபடுதல், போன்ற அமைப்பு முறைகளைக் கொண்டு, மஞ்சரி எனும் பெயர் கொண்ட இச்செய்யுட்களை மஞ்சரி இலக்கியத்தின் வகைகளாகக் கொள்ளுதல் பொருந்தாது எனலாம். ஏனெனில் மஞ்சரி இலக்கியத்திற்கு கூறப்பட்டுள்ள இலக்கண அமைப்பு முறைகளில் இருந்து இவை முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

சிவத்தல மஞ்சரி

இருபதாம் நூற்றாண்டில் ஆ. சிங்காரவேலரால் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் உரைநடை வடிவில் அமைந்துள்ளது. இந்நூலைத் தொகுத்தவர் நெ.சி. தெய்வசிகாமணி ஆவார். பூங்கொத்துப் போல, சிவனின் பெருமைகள் இந்நூல் முழுவதும் கூறப்பட்டுள்ளன.

சிவபெருமான், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களின் துயரம் போக்குதல், செருக்கால் மதி இழந்த அசுரர்களைக் கொல்லுதல், சிவனடியார்களுக்கு அருள் பாலித்தல், சிவனின் திருவிளையாடல்கள் போன்றவை கூறப்பட்டுள்ளன. கைலாசாதி பர்வத விவரம், சிவராத்திரி பற்றிய குறிப்புக்கள், சிவனின் மூர்த்தங்கள் (64) குறிப்பிடப்பட்டள்ளன.

சிவன் உறையும் தலங்கள், வடநாட்டில் 32 தலங்கள், தொண்டை நாட்டில் 36 தலங்கள், மகதநாடு அல்லது நடுநாட்டில் 22 தலங்கள், சோழநாடு காவேரியின் வடகரையில் 65 தலங்கள், காவேரியின் தென்கரையில் 128 தலங்கள், பாண்டி நாட்டில் 15 தலங்கள், கொங்கு நாட்டில் 7 தலங்கள், மலை நாட்டில் 2 தலங்கள், ஈழநாட்டில் 2 தலங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், திருவாசகம் பெற்ற சிவத் தலங்கள், திருவாசக வைப்புத் தலங்கள், திருவிசைப்பா பெற்ற தலங்கள் போன்றவை பற்றிய குறிப்புக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

மஞ்சரி இலக்கியத்தின் அமைப்பு முறை

காதலை முதன்மைப் பொருளாக வைத்துத் தலைவன் ஒருவனின் புகழ் பேசுகின்ற முறையில் மஞ்சரி இலக்கியம் அமைந்துள்ளது.

பாட்டுடைத் தலைவன் உலா வருகிறான். அவனைக் கண்ட பெண்கள் வேட்கையுற்றுப் புலம்புகிறார்கள். தலைவியும் அவன்மீது காதல் கொள்கிறாள். உலா வந்த தலைவனின் எதிரே சென்று, அவனைப் புகழ்ந்து, அவனிடம் தனக்குள் ஆராக் காதலை வெளிப்படுத்திப் பேசுகிறாள். பின்னர் தன் தோழியை அத்தலைவனிடம் தூதாக அனுப்பி அவனுடைய மாலையை அத்தோழியின் வாயிலாகப் பெற்று மகிழ்கிறாள். தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வருகிறான். அவனை அவள் வரவேற்று, மஞ்சத்தில் அமரச் செய்து உபசரித்து மகிழ்கிறாள். அவனுடன் கூடிக் குலாவி அவள் இன்பம் துய்த்து வாழ்கிறாள்.

மஞ்சரி என்பது பூங்கொத்துக்கும் பெயராதல் போல மஞ்சரி இலக்கியமும் அகப்பொருள் புறப்பொருள் பற்றிய சில சிற்றிலக்கியங்களின் கூட்டமைப்பாயும் உள்ளது. கேசாதிபாதம், விறலியாற்றுப்படை, தசாங்கம், காதல், குறம், உலா, தூது முதலியனவும் காதல் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கின்ற வகையில் உள்ளமையால் மஞ்சரியில் விஞ்சி நிற்பது காதற்சுவை நிகழ்ச்சிகளே ஆகும். மஞ்சரி இலக்கியங்கள் கண்ணியமைப்பில் கலிவெண்பாவினால் பாடப்பட்டுள்ளன.

தொகுப்புரை

மஞ்சரி என்பதற்கு பூங்கொத்து, பூமாலை, தளிர், மலர்க்காம்பு, ஒழுக்கம் முதலிய பொருள்கள் குறிக்கப்படுகின்றன.பலவகை மலர்களால் தொடுக்கப்படுவது பூமாலை ஆதல் போல பல பாடல்களைத் தொகுத்துக் கூறும் நூல் மஞ்சரி எனப்படுகின்றது.

மஞ்சரி இலக்கியத்திற்கு பிரபந்தத் திரட்டு, பிரபந்த மரபியல் முதலிய பாட்டியல் நூல்களே இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விலக்கியம் 16ஆம் நூற்றாண்டில் சில புலவர்களால் சிறப்பாகப் போற்றிப் பாடப்பட்டுள்ளது.

மாலை இலக்கியங்கள் போன்று மஞ்சரியும் இறுதியில் மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெற்று விளங்குகின்றது. வெற்றிக்கரந்தை மஞ்சரி, வாதோரண மஞ்சரி போன்றன மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெற்றுள்ள வேறொரு வகை இலக்கியமாகக் கருதப்படுகிறது.

யமக மஞ்சரி, திரிபு மஞ்சரி என்பன செய்யுளில் சொற்களின் அமைப்பு முறையில் ஏற்படும் மாற்றம் வைத்து குறிக்கப்படுகிறது. ரச மஞ்சரி என்பது சுவைகளைப் பற்றிப் பேசும் இலக்கியமாகும். மஞ்சரி இலக்கியத்தின் இலக்கணமும், அமைப்பு முறையும் மேற்குறித்த மஞ்சரி எனும் சொல் முடிவைப் பெற்று வந்த இலக்கியங்களின் இலக்கணமும் அமைப்பு முறையும் வேறுபட்டுள்ளன. இவை மஞ்சரி இலக்கியத்தின் வகையாகக் கருதமுடியாது.

சிவத்தல மஞ்சரி, சிவனின் பெருமைகளை அவனது அடியார்களுக்கு எடுத்துரைத்தல் போலவும், சிவனின் திருவிளையாடல்கள் பற்றியும், சிவன் உறையும் தலங்கள் பற்றியும் உரைநடைவடிவில் எடுத்துரைக்கின்றது. காதலை முதன்மைப் பொருளாக வைத்துத் தலைவன் ஒருவனின் புகழ் பேசுகின்ற முறையில் மஞ்சரி இலக்கியம் அமைந்துள்ளது.

பாட்டுடைத் தலைவன் உலா வருகிறான். அவனைக் கண்ட பெண்கள் வேட்கையுற்றுப் புலம்புகிறார்கள். தலைவியும் அவன்மீது காதல் கொள்கிறாள். உலா வந்த தலைவனின் எதிரே சென்று, அவனைப் புகழ்ந்து, அவனிடம் தனக்குள் ஆராக் காதலை வெளிப்படுத்திப் பேசுகிறாள். பின்னர் தன் தோழியை அத்தலைவனிடம் தூதாக அனுப்பி அவனுடைய மாலையை அத்தோழியின் வாயிலாகப் பெற்று மகிழ்கிறாள். தலைவன் தலைவியின் இல்லத்திற்கு வருகிறான். அவனை அவள் வரவேற்று, மஞ்சத்தில் அமரச் செய்து உபசரித்து மகிழ்கிறாள். அவனுடன் கூடிக் குலாவி அவள் இன்பம் துய்த்து வாழ்கிறாள்.

மஞ்சரி என்பது பூங்கொத்துக்கும் பெயராதல் போல மஞ்சரி இலக்கியமும் அகப்பொருள் புறப்பொருள் பற்றிய சில சிற்றிலக்கியங்களின் கூட்டமைப்பாயும் உள்ளது. கேசாதிபாதம், விறலியாற்றுப்படை, தசாங்கம், காதல், குறம், உலா, தூது முதலியனவும் காதல் வளர்ச்சிக்குத் துணையாய் நிற்கின்ற வகையில் உள்ளமையால் மஞ்சரியில் விஞ்சி நிற்பது காதற்சுவை நிகழ்ச்சிகளே ஆகும். மஞ்சரி இலக்கியங்கள் கண்ணியமைப்பில் கலிவெண்பாவினால் பாடப்பட்டுள்ளன.

குறிப்புகள்

  1. சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி தொகுதி-6 ப.201
  2. பிரபந்தமரபியல் , நூற்பா.102
  3. பிரபந்தத்திரட்டு, நூற்பா.109
  4. பிரபந்த தீபிகை, நூற்பா .35
  5. முத்துவீரியம், நூற்பா.1070
  6. உ.வே. சாமிநாதையர், இலக்கிய வகையும் வடிவும், ப.516
  7. நந்திக்கலம்பகம், பா.17

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *