சங்க காலப் பெண் கவிஞர்கள் போற்றும் மானுட விழுமியங்கள்      

முனைவைர் பா.தமிழரசி

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,

சிவகாசி.

மானுட விழுமியங்கள்:

பண்பாட்டைச் சோர்ந்தோர் தம் வாழ்க்கைக்கும் செயல்முறைக்கும் தொடர்புடையதான விழுமியங்களைக் கொண்டு ஒழுகுவர். தவிர்க்க வேண்டியவற்றை நீக்குவர். அவை தம் பண்பாட்டு விழுமியங்களோடு கலந்து விடாது பார்த்துக் கொள்வர். தனிமனித விழுமியம் என்றில்லாமல் தனித்த ஒரு சமூக விழுமியம் என்று காத்துக் கொள்வர். ஒரு சமூகத்தைச் சார்ந்தோரின் பண்பாடு உடைய வாழ்வியலின் இன்றியமையாத அடிப்படைப் பண்புகள் இவை இவை என்று கூறுவது மானுட விழுமியங்கள் என்பார் ராபர்ட் பியர்ஸ்டெட். விழுமியம் எனும் சொல் சங்க இலக்கியங்களுள் இடம்பெறவில்லை. ‘விழுமிய’ எனும் சொல் சங்க இலக்கியங்களுள் காணப்படுகின்றது. இச்சொல்லுக்கு சிறந்த – (சென்னைப் பல்கலைக்கழகக் கழகத் தமிழ்ப் பேரகராதி) செழித்த, வளமான, உயர்ந்த என அகராதிகள் பொருள் தருகின்றன. பத்துப்பாட்டில் இடம் பெறும் ‘விழுமிய’ என்னும் சொல்லுக்கு நச்சினார்க்கினியர் ‘சீரிய’ எனப் பொருள் கொள்கிறார். இப்பொருளை உட்கொண்டே அகராதிகள் ‘சிறந்த’ எனும் பொருளை முன் வைக்கின்றன எனலாம். வள்ளவர் குறிப்பிடும் ‘விழுப்பம்’ என்னும் சொல்லும் ‘சீர்மை’ என்னும் பொருளுடையது. எனவே, மனித வாழ்வில் பின்பற்றத்தக்க நெறிகளுள் சீர்மையுடையனவற்றைத் தனித்து அடையாளப்படுத்த ‘விழுமியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தலாம்.

மானம் பெரிது :

வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் சேர மன்னனின் மானத்தைப் பெரிதாகப் போற்றுகிறார். வீரம் சமூக விழுமியமாக இருந்தாலும் வீரத்தை விட மானமே உயர்ந்ததாக சங்க காலத்தில் போற்றப்பெற்றது. சங்க காலத்தில் மார்பில் பட்டு முதுகுப்பக்கம் அம்பு வந்து விட்டாலும் புறப்புண் பெற்றதாகக் கருதப்பட்டது. புறப்புண் பெற்றால் அவமானம். அவமானம் நேரும் பொழுது அரசரே ஆனாலும் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீப்பது அக்காலச் சமூக விழுமியம். வீரத்தை விட மானம்பெரிதாகப் போற்றப்படுகிறது.

“  நளியிரு முந்நீர் நாவாயோட்டி

புறப்புண்ணாணி வடக்கிருந்தோனே” (புறம்.66)

ஒழுக்கம்:

ஏமாற்றாமை, திருடாமை, பரத்தையர் ஒழுக்கம் ( கண்டிக்கத் தக்கதாகவே இருந்நதது ) இவை விழுமியங்களாக இருந்தன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ (கலித்.133) இவை பண்பு தொடர்பான விழுமியங்களை உணர்த்துகின்றது.

ஒருவனுக்கு ஒருத்தி எனும் கோட்பாடு :

சங்க விழுமியங்களுள் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற பண்பாட்டு விழுமியம் சங்ககால ஆண், பெண் வாழ்வில் காக்கப்பெற்றுள்ளது. இல்லற முறைமையால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நெறி போற்றப் பெற்றது. அரசியல் காரணங்களுக்காகக் கூட இருதார முறை சங்ககாலச் சமுதாயத்தில் அனுமதிக்கப் பெறவில்லை.

இரண்டாம் மனைவியராகவோ அல்லது காமக்கிழத்தியராகவோ கூட பெண்கள் அரசனுக்கு இருத்தல் கூடாது என்பதைப் பேகன்-கண்ணகி வரலாற்றில் பேகனைக் கண்டித்த பாணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர் பாடல்கள் காட்டுகின்றன. புறநானூற்றில் 143 முதல் 147 வரை உள்ள பாடல்கள் இதை வலியுறுத்துகின்றன.

ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மனைவியை இழந்து வாடும் கணவன் பற்றிய செய்தி புறம் 251, 252 பாடல்களில் மாற்பித்தியார் சுட்டுகின்றார்.

“ கள்ளி போகிய களியம் பறந்தலை

வெள்ளிடைப் பொத்திய வினை விறகு ஈமத்து

ஒள்ளழற் பள்ளிய பாயல் சேர்த்தி” (புறம். 245)

கள்ளிச் செடி நிறைந்த சுடுகாட்டில் எரியும் நெருப்பில் விறகுப் படுக்கையில் அன்பிற்குரியவளைக் கிடத்தி விட்டு இன்னும் என் உயிரைப் போக்கிக் கொள்ளாது உயிர் வாழ்கின்றேன் எனப் புலம்பும் ஆணின் குரல் பெண் பற்றிய சமூக மதிப்பீடாகும். ஆண் துயரத்தால் அழமாட்டான் என்ற புனைவைத் தகர்த்துப் புனையப்பட்டுள்ள சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பாடல் வரிகள், பெண்ணைப் போற்றுவதாக அமைந்துள்ளன. மேலும்,

“கறங்கு வெள் ளருவி யேற்றலினிறம் பெயர்ந்து

தில்லை யன்ன புல்லென சடையோ

……….

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை சேட்டுவ னானாயினன் முன்னே” (புறம்.252)

மனைவியின் நினைவிலேயே வாழும் கணவனின் நெஞ்சம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மனைவியோடு சோ்ந்திருந்த இன்பச்சூழலையும், அவனை இழந்ததால் ஏற்பட்ட சோகத்தையும் சடைமுடி வளர்த்த கோலத்தையும் இப்பாடல் காட்டுகிறது. மனைவியை இழந்து வாடும் துன்பம் தாங்காமல் வீட்டை விட்டு ஊரை விட்டும் வெளியே சாமியாராகப் போய் விட்டதை இப்பாடல் சுட்டுகின்றது. மனைவியைப் பிரிந்த கணவன் பிற்காலத்தைப் போல, அக்காலத்தில் பிறிதொரு பெண்ணை மணம் முடிக்காமை சங்க இலக்கிய ஒருவன் – ஒருத்தி விழுமியத்துக்கு அரண் சோ்க்கிறது. இது ‘தபுதார நிலை’ எனப்படும்.

பெண் கொல்லாமை :

ஆடவர், அரசர் மற்றோர் யாவராலும் பேணிக் காக்கத்தக்க தகைமை சான்றவள் பெண். அவளைக் கொலை செய்தல் பெரும் பழியாக எண்ணப்பெற்றது. பெண் கொலை புரிந்த நன்னன் என்று மன்னனை வெறுத்து ஒதுக்கியதைக் குறுந்தொகை, ‘பெண் கொலை புரிந்த நன்னன் போல்’ (பா.292) பாடலடி புலப்படுத்துகின்றது.

வீரர்கள் போருக்குச் செல்லும் போது போர் அறமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்களுள் பெண், குழந்தை, பசு, பார்ப்பனர், பிணியுடையோர்; ஆவார். குழந்தை பெறாத மணம் முடித்த பெண்களுக்குப் போர் தொடுக்கும் போது பகை மன்னரோ படையினரோ ஊறு செய்தல் கூடாது என்பது அறமாகப் போற்றப்பட்டது. நெட்டிமையார் எனும் பெண் புலவர் படை தொடுக்கும் காலங்களில் படையினரால் ஊறு செய்யப்படக் கூடாதோர் என்று பட்டியல் இடுகிறார். அப்பட்டியலில் குழந்தை பெறாதோர் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

தாய்மைப்பேறு :

பெண்ணின் பெருமைகள் பலவாயினும் அனைத்தினும் தாய்மைப் பண்பே தலையாயச் சிறப்பும், பெருமையும் ஆகும். தன்னலம் கருதாத தொண்டு மனமே தாய்மை. என்பும் பிறர்க்கு ஈயும் அன்பு தாய்மை. தெய்வங்களுள் தலையாய தெய்வம் தாய்மை. மணமான பெண் தாய்மை அடைவது பெரும் பேறாகப் போற்றப்பட்டது. பெண்பாற் புலவராகிய பொன்முடியார் எழுதியுள்ள புறநானூற்றுப் பாட்டில்,

“ ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே” (புறம்.312)

பெண்ணின் கடமையோடு ஏனையோரின் கடமையும் வற்புறுத்தப்பட்டமை தெளிவாகப் புலப்படுகிறது.

சுயநலம் அகற்று, பொது நலம் பேணு :

மனிதம் என்பதன் பொருள் சுயநலம் அன்று, பொதுநலம். தன்னை விட மற்றவரை நினைப்பது அதுவும் அறிஞரை நினைப்பது போற்றுவது தன்னையே வளர்க்கும் என்பதை அவ்வை அதியனின் வாழ்வு எடுத்துரைக்கிறது. அரசனாக இருந்த அதியமான் தன்னிடம் அரசியல் ஆலோசராக இருந்த அறிஞர் அவ்வையை மிக மதிக்கிறான். அதன் விளைவாக மரணமிலாப் பெரு வாழ்வைத் தரும் மலையிடைப் பழுத்த நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் அவ்வையாருக்குத் தருகிறான். அதியமானைத் தன் கவிதைப் படைப்புகளின் ஊடே மரணமிலா வாழ்வை அவ்வை வழங்குகிறார். உதவுபவனையே உலகம் உயர்த்துகிறது. இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் உழைத்து உற்பத்தி செய்து பிறர்க்கு உதவும் தன்னலமற்ற பண்பு உடையவர்கள் என்பதனை அகநூல்கள் உயர்ந்த விழுமியங்களாக காட்டுகின்றன.

உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை :

சங்கப் பெண் கவிஞர்கள் காதல் உணர்வுகளையும் காமவேட்கையையும் மனத்தடைகளற்றுக் கவிதை களாக்கியுள்ளனர். பெண்களுக்குத் தங்கு தடையற்ற விடுதலை உரிமை அளிக்கப்பட்டிருந்தது. மணம் ஆகும் முன்னரே காதல் புரிதல், காதலித்த ஆடவனுடன் உடன்போக்கு கொண்டு வாழ்தல், பின்னர் மீண்டு வந்து பெற்றோருடன் கூடி வாழ்தல் ஆகியன வழக்கில் இருந்தன. இவை தகாதனவாகக் கருதப்படவில்லை, தடை செய்யப்படவும் இல்லை. ஆண் மேலாதிக்கச் சமூகத்தில் அதிகாரத்தின் ஆளுகைக்கேற்ப எல்லா நிலைகளிலும் பெண் ஒடுக்கப்பட்டாலும் அவளுடைய எதிர்க்குரலும் தனித்துவமும் கவிதைகளில் பதிவாகியுள்ளன. வெள்ளி வீதியாரின் காமம் பற்றிய மனப்பதிவுகள் வாசிப்பில் உருக்கத்தை ஏற்படுத்துகின்றன. “ வானத்தில் திங்கள் ஒளிர்கின்றது., கடல் அலை கரையில் மோதுகிறது., அன்றில் பறவை பனைமர உச்சியிலிருந்து கத்துகிறது., யாமத்திலும் யாழ் மீட்டப்படுகிறது., இவை எல்லாவற்றையும் விட காமத்தைக் களையும் தலைவன் அருகில் இல்லையே! (நற்றிணை. 385) என தலைவி வருந்துகிறாள். இம்மன நிலை தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகும். காதல் வயப்பட்ட அகப்பாடல்களில் வெளிப்படும் பெண் பற்றிய பிம்பம் நாடக வழக்கியல் தன்மையுடையது.

பெண்பாற் புலவர்கள் மொழிப்புலமை வாய்ந்தவர்களாகவும் மொழிவளம் பேணும் மாண்பினராகவும், கவியாற்றலும், கற்பனைத்திறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர். தங்கள் பாடல்களில் மன உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்துள்ளனர். ஔவையார், வெள்ளிவீதியார் போன்றோர் தமது கவித்திறனால் இலக்கியத்துள் தனியிடம் பெற்று விளங்கினர் என்பதை உணர முடிகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.