“பிரத்யங் கரா”மா” , பிரகிருதி சக்தி ,
வரத்தயக்கம் ஏனோ!, வருவாய் -சிரத்தில் ,
சஹஸ்ராஹா ரத்தினை ,செய்வாய் மலர
அஹஸ்மாத்தாய் என்னுள் அரும்பு….கிரேசி மோகன்….!
“பிரத்யங் கரா”மா” , பிரகிருதி சக்தி ,
வரத்தயக்கம் ஏனோ!, வருவாய் -சிரத்தில் ,
சஹஸ்ராஹா ரத்தினை ,செய்வாய் மலர
அஹஸ்மாத்தாய் என்னுள் அரும்பு….கிரேசி மோகன்….!
எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்
ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும்
அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர
ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும்
மேனி வரிகளோடு
அச்சுறுத்தும் சிலவேளை அதன்
அசட்டுச் சிப்பிக் கண்கள்
இரைக்காகக் காத்திருக்கும்வேளையில்
அக் கண்களினூடு ததும்பும்
சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்
வேட்டை விலங்கின்
உடல் மொழியைப் பேசும்
பின்னங்கால்களில் அமர்ந்து
மீதிப் பாதங்களை ஊன்றி
நிமிர்ந்து பார்க்கையில்
ஏதேனும் யாசித்துப் பின் தொடரும்
அதன் பார்வையில்
தயை கூறக் கோரும்
கெஞ்சல் மிகைத்திருக்கும்
அபூர்வமானவை
பூனைப் பார்வைகளற்ற
குடியிருப்புக்கள்
அரூபமான கண்களைக் கொண்ட
பூனைகள்
பூனைகள் மாத்திரமேயல்ல
– எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
அன்பினியவர்களே!
அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்த வாரம் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் உறவாடும் வேளை வந்து விட்டது. எதிர்பாராத பல நிகழ்வுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை. எண்ணியிருக்காத நேரத்தில் எண்ணவே முடியாத நிகழ்ச்சிகள் நடந்தேறுவது வாழ்க்கையில் பல சமயங்களில் நாம் கண்கூடாகக் பார்ப்பதுவோ அல்லது செய்திகளாக கேள்விப்படுவதோ வாழ்வில் நிகழும் சாதாரண நிகழ்வுகளாகும். இவற்றில் சில எமக்கு மகிழ்வையும், இன்பத்தினையும் தரவல்லன, மற்றும் சிலவோ துயரத்தையும், துன்பத்தினையும் அளித்துச் செல்கின்றன. உலகில் பிறந்த அனைவருமே ஒரு நாள் இறப்பது என்பது வாழ்க்கையின் யதார்த்தம். ஆனால் அந்த இறப்பு என்பது நடக்கும் துரதிருஷ்ட வசமான நிகழ்வினாலே எதிர்பார்க்காத தருணத்தில் நிகழ்வது என்பதனை ஏற்றுக் கொள்ள மனதுக்குப் பலகாலம் எடுக்கின்றது.
இங்கே நான் படித்த ஒரு கதை ஞாபகத்துக்கு வருகின்றது. ஒருமுறை புத்த பகவான் தனது சீடர்களுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு நடந்து கொண்டிருந்தார். அப்போது அனைவரும் களைப்படைந்து ஓய்வெடுத்துக் கொள்ள எண்ணினார்கள். ஆற்றங்கரையிலிருந்து சிறிதுதூரத்தில் இருந்த ஆலமர நிழலில் அனைவரும் அமர்ந்து கொண்டார்கள். அப்போது ஒரு சீடன் ” குருவே என் மனம் மிகவும் குழப்பமடைந்திருக்கும் வேளையில் அமைதியடைய என்ன செய்யலாம் என்று கேட்டான். அதற்கு புத்த பகவான் ஒரு பதிலும் கூறவில்லை. சிறிது நேரம் கழித்து புத்த பகவான் அச்சீடனிடம் அருகிலிருந்த ஆற்றிலிருந்து குடிப்பதற்கு நீர் எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டார். அச்சீடனும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றான். அப்போது அவன் தண்ணீர் எடுக்க வந்த இடத்தில் சில மனிதர்கள் அவ்வாற்றினுள் இறங்கி அடுத்த கரையை நோக்கி அவசரமாக நடந்தார்கள். அதனால் ஆற்றுநீரின் அடியிலிருந்த சேறு மேல்நோக்கி வந்து ஆற்றுநீர் அவ்விடத்தில் முற்றாகக் கலங்கி விட்டது.
கலங்கிய சேற்று நீரைத் தனது குருவுக்கு குடிக்க கொடுக்க முடியாது எனும் காரணத்தினால் அச்சீடன் திரும்பவந்து புத்த பகவானிடம் நடந்ததைக் கூறினான். புத்த பகவானும் சிறிது நேரம் கழித்துத் திரும்பச் செல்லுமாறு கூறினார். அவன் திரும்பச் சென்ற போது ஆற்றில் அவன் முன்பு சென்ற இடத்தில் சேறு எல்லாம் அடியில் அடைந்துவிட நீர் தெளிவாக, சுத்தமாக இருந்தது. அவனும் அந்நீரை அள்ளிச்சென்று புத்த பகவானிடம் கொடுத்தான். அவனிடம் புத்தர் ” நீ முன்பு பார்த்தபோது கலங்கிய நிலையில் இருந்த நீர் இப்போது தெளிவடைந்திருந்தது அல்லவா? அதற்கு நீ ஏதாவது செய்தாயா?” என்றார். அதற்கு அச்சீடன் “இல்லை” என்று பதிலளித்தான். அப்போது புத்தர் ” அதுபோலத்தான் மனம் குழப்பமடையும் போது அச்சமயத்தில் நாம் எதுவும் செய்யத்தேவையில்லை; மனதை அதன் போக்கிலேயே விட்டு விட்டால் அது தானாகவே தெளிவாகிவிடும். மனதின் குழப்பத்தின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான காலம் தேவைப்படுகிறது” என்றார்.
அதைப் போலவே எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளைத் தாங்கிக் கொள்வதற்காக எதுவிதமான நடவடிக்கைகளை எடுப்பதென்பது இயலாத காரணம் . அத்தகைய ரணங்களை ஆற்றும் மருந்து காலம்தான் என்பதுவே மறுக்க முடியாத உண்மை. கடந்த வருடம் இங்கிலாந்தில் ஒரு பயங்கரத் தீ விபத்து நிகழ்ந்தது . இலண்டன் நகரின் பகுதியாகிய வெஸ்ட் மினிஸ்டர் நகரசபையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட வாடகை இருப்பிடங்கள உள்ளடக்கிய கிறென்வெல் எனும் கட்டிடம் யதேச்சையாகப் பயங்கர தீ விபத்துக்குள்ளாகியது. அதன் விளைவாக 72 பேர் உயிரிழந்தார்கள்.
அதைத்தொடர்ந்து அத்தீவிபத்தின் காரணத்தையும், அது நிகழ்வதைத் தடுத்திருக்கக்கூடிய வல்லமை கொண்டவர்களையும் அடையாளம் காண்பதற்காகவும் இங்கிலாந்து அரசாங்கத்தினால் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அவ்விசாரணைக் கமிஷன் அத்தீவிபத்தோடு மிக நெருங்கிய சம்பந்தமுடையவர்களின் பிரத்தியேக வாக்குமூலங்களைச் செவிமடுக்கும் பணியினை கடந்த வாரம் ஆரம்பித்தது. சாட்சியளித்தவர்கள் அத்தீவிபத்தில் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வழங்கிய வாக்குமூலங்களைக் கேட்ட அனைவரது கண்களிலும் கண்ணீர் திரண்டது என்பது மிகையாகாது. இத்தகைய ஒரு நிகழ்வு ஒவ்வொரு குடும்பத்தையும் எவ்வகையில் பாதிக்கிறது என்பதைப் பார்க்கும்போது உணர்வுகள் கொந்தளிக்கின்றன.
குறிப்பாக இந்தக் கட்டிடத்தில் வசித்து வந்தவர்களில் பெரும்பான்மையோர் இங்கிலாந்துக்குள் அகதிகளாகத் தஞ்சம்கோரி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாம் பிறந்து வளர்ந்த தமது தாய்மண்ணில் வாழ வகையின்றி அரசியல் சூழல்களினாலும், வேறு பல பிரச்சனைகளாலும் மொழிபுரியாத நாடுகளுக்குள் தமது உயிரைப் பணயம் வைத்து வந்தவர்கள் தீயின் நாவினால் தமது உயிரை இழந்த பரிதாப நிகழ்வு பல அரசியல் கேள்விகளை ஆழமாகத் தூக்கிப் போட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இவ்விசாரணையின் முடிவு அடுத்த வருடமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தீ விபத்தினால் எழுப்பப்பட்டுள்ள பல கேள்விகளுக்கான பதிலில் பல அரசியல் கொள்கைகளின் நியாயத்தன்மையின்மீது விமர்சனங்கள் எழும் என்பது பலரது கணிப்பாக இருக்கிறது.
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன்
-கா. தினேஷ்
முன்னுரை
அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த அனைவரையும் அன்பால் இச்சகத்தே திருத்தவந்தவர் சிதம்பர இரமலிங்கம் என்னும் வள்ளலார். இவர் வடலூரிலே மக்கள் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாடு காண விரும்பிச் சமரசச் சுத்தச் சன்மார்க்கச் சங்கத்தை ஏற்படுத்திச் சத்திய ஞான சபையை நிறுவியவர். இவர் கொண்ட மார்க்கம் சன்மார்க்கம். இது ஞானமார்க்கமாகும். ஞானத்திற்கு அடிப்படை அன்பேயாகும். இம்மார்க்கத்தின் மூலம் மரணமிலாப் பெருவாழ்வை அடைந்துள்ளார்; அத்தகைய வாழ்விற்கு அன்பு என்ற ஒன்றையே வழியாகக் கொண்டவர். அத்தகைய அன்பு எத்தகைய வல்லமையைப் பெற்றது என்பதைக் காண்பதே இக் கட்டுரையாகும்.
வல்லமை – பொருள் விளக்கம்
வல்லமை என்னும் சொல்லுக்கு வலிமை, ஆற்றல் எனப் பொருள் கூறுகிறது தமிழ்மொழி அகராதி[1]. வல்லமை என்பது ஓர் ஆற்றலாகும். வல்-என்ற வேர்ச் சொல்லிலிருந்து பல சொற்கள் உருவாகியுள்ளன. வல்லமை, வல்லாண்மை, வல்லபம் போன்றவை ஒரு பொருள் குறித்த பல சொல்லாகும். “பெயர்ச்சொல்லில் உயர் வழக்காகப்பெறும் வலிமை (‘ராணுவ வல்லமை உள்ள நாடு’‘) என்றும் ஒன்றை நிகழ்த்தக் கூடிய ஆற்றல், சக்தி, திறன்” (சர்வ வல்லமை படைத்த இறைவன், கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்ட ஏவுகணைகள்) என்றும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது[2].
வல்லமை என்னும் சொல்லுக்கு நேரடிப்பொருள் ஆற்றல் என்றே பெரும்பாலான அகராதிகளிலும் இலக்கியங்களிலும் பயின்று வருகின்றது. ஆனால் இத்தகைய ஆற்றல் இறை ஆற்றல், இயற்கை ஆற்றல், இயந்திர ஆற்றல் எனப் பல வகைப்படுகிறது. அனைத்தையும் பெறும் ஆற்றலைச் சர்வ வல்லமை என்ற அடைமொழியால் வழங்குவர். சர்வ என்பதற்கு அனைத்தும் என்பது பொருள்[3]. (சான்று- சர்வச் சாக்கிரதை, சர்வ நாசம், சர்வ முட்டாள்).
பாரதியார் தம் பாடலில் வல்லமை என்னும் சொல்லை நேரடியாகப் பயன்படுத்துகிறார்.
வல்லமை தாராயோ, வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே சொல்லடி, சிவசக்தி [4]
என்று கூறுகிறார். இந்நாட்டிற்காக வாழ்வதற்கு நல்லதோர் ஆற்றல் (வல்லமை) தர வேண்டும் என்று வினவுகிறார்.
திருக்குறளுக்கு உரைசெய்த முனைவர் மு.வ. அவர்கள் வல்லமை என்ற சொல்லை அநேக இடங்களில் பயன்படுத்துகிறார்.
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.[5] இதற்கு உரையாக மு.வ அவர்கள் வறுமையுள் வறுமையாகக் கருதப்படுவது விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும். என்று கூறுகிறார்[6]. இங்கும் வல்லமை என்பது ஆற்றல் அல்லது வலிமையைக் குறிக்கிறது. இதுபோன்று வலிமை என்று வரக்கூடிய பல குறள்களுக்கு வல்லமை என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்.
வள்ளலார் வகுத்த வல்லமை
வள்ளலார் தம் வாழ்நாளில் ஒரு தனி வல்லமையைப் பயன்படுத்தி இறைவனின் சர்வ வல்லமையைப் பெற்றுள்ளார். அது சாகாக்கல்வி என்னும் மரணமிலாப் பெருவாழ்வேயாகும். அவ் வாழ்வைத் தாம் பெற்றதோடு பிறருக்கும் உபதேசித்தார். அத்தகைய வல்லமை யாதெனில் அன்பு என்ற ஒன்றேயாகும். அன்பு என்ற ஒன்றாலே அனைத்தையும் பெற முடியும் என்று உறுதிபூண்டவர். அன்பு என்னும் சொல்லிற்கு அநேக இடங்களில் வல்லமை என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார்.
இதனைத் தம் உபதேசக் குறிப்பில்
“கடவுள் சர்வ வல்லமையுடையவன் ஆகையால் நம்மையும் சர்வ ஜீவத் தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லமையும் பெற்றுக்கொள்ளும்படி மனிதத் தேகத்தில் வருவித்தார்; ஞானிக்குத் தயவு அதிகம் அதிகப்படியிருக்கிறபடியால் கேளாத கேள்வி முதலிய மகா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கிறார்”[7]. என்று கூறுகிறார். உயிர்களிடத்தே இரக்கம் செலுத்துவதற்காகவே இறைவன் மனிதத் தேகத்தில் இவ்வுயிரை வருவித்தான் என்றும் ஞானிகளுக்கு உயிரிரக்கம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இறந்தவரை எழுப்பும் அற்புத வல்லமை பெற்றுள்ளனர் என்றும் கூறுகிறார். ஆகவே உயிரிரக்கத்திற்கு அடிப்படை அன்பு ஒன்றேயாகும். இதனைத் தம் உபதேசக் குறிப்பில்,
“நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும்; அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையால் அடைவது அரிது. அவ்வன்பு ஜீவகாருண்ணியமல்லவல்லது வேறு வகையால் வராது. ஜீவகாருண்யத்தின் இலாபமே அன்பு; இந்த ஜீவகாருண்யம் உண்டாவதற்கு மார்க்கம் யாதெனில் கடவுளினது பெருமையும் வல்லமையும் தரத்தையும் நம்முடைய சிறுமையும் தரத்தையும் விசாரித்தால்தான் அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே ஜீவகாருண்யம். இதுதான் சித்தி பெறுவதற்கு வழி”[8].
என்று கூறுகிறார். இறைவனை அடைவதற்கு அருள் வேண்டும். அந்த அருள் அன்பினாலே தோன்றும் வேறுவகையால் தோன்றாது. இதனை வள்ளுவர்,
அருளென்னும் அன்பீன் குழவி.[9]
என்று கூறுகிறார். அருள் என்பது அன்பின் வழிப் பெறப்படுவது என்பது தெளிவாகிறது. இதனை வள்ளலார்,
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரொளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபேரொளியே
அன்புருவாம்பர சிவமே[10].
என்று கூறுகிறார். அன்பு என்னும் வல்லமையால் அனைத்தையும் பெற முடியும் என்பதே இப் பாடலின் பொருளாகும். வள்ளலார் அன்பை ஜீவகாருண்யம் என்ற சொல்லால் குறிக்கிறார். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே ஜீவகாருண்யம் என்று குறிப்பிட்டார். இதற்கென ஒரு தனி உரைநடை நூலினைப் படைத்தார். ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்று வலியுறுத்தினார்.
ஜீவகாருண்யம்-உயிரிரக்கம்
வள்ளலாரால் எழுதப்பெற்ற இந்நூல் உயிர்களிடத்தே அன்புகாட்டுதலும், பசித்தோர்க்கு உணவிடுதலும், புலை என்னும் கொலையைத் தவிர்த்தலும் பற்றிக் கூறுகிறது. இதனைக் கடைபிடித்தால் இயற்கை உண்மை விளங்கி ஆன்ம இலாபம் பெற்று இறைவனைத் தயவு என்னும் வல்லமையால் அடையலாம் என்று முன்நிறுத்திக் கூறியுள்ளார்.
புலால் மறுத்தல்/ புலை கொலை தவிர்த்தல்
ஜீவகாருண்யத்தின் அங்கமான உயிர்க்கொலை புரிதலைத் தடுத்தல் என்பது பெரும்பங்காகத் திகழ்கிறது. ஜீவகாருண்யத்தின் முக்கிய இலட்சியமே உயிர்க் கொலை செய்யாதிருத்தலும், புலால் புசிக்காமல் இருத்தலுமே ஆகும். இதனை வள்ளுவர்
“அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்”[11]
கொல்லாமை நெறியை வள்ளலார் அகவலில் பல இடங்களில் கூறியுள்ளார். இதனை,
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே[12]
என்றும்,
“கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்சிவமே[13]” என்று கூறுகிறார்.
புலால் மறுத்தல்
கொல்லாமையை வலியுறுத்தியே புலால் உண்ணுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று வள்ளலார் கூறுகிறார். புலால் உண்பதால் ஏற்படும் அவத்தைகளைத் திருமூலர்
“பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே[14]”
என்று கூறுகிறார். கொல்லாமை மற்றும் புலால் மறுத்தவனை எல்லா உயிர்களும் தொழும் என்பதை வள்ளுவர்
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்[15]”
என்று புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தின் வாயிலாகக் கூறுகிறார். எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி ஒழுகும் உத்தமர்களின் அடிக்கு ஏவல் செய்ய என் சிந்தை விழைந்தது என்பார் வள்ளலார் இதனை
எவ்வுயிரும் பொதுஎனக்கண்டிரங்கி உப
கரிக்கின்றார் யாவர் அந்தச்
செவ்வியர்தம் செயல் அனைத்தும் திருவருளின்
செயல் எனவே தெரிந்தேன் இங்கே[16]
என்று கூறுகிறார். அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி அன்பு செலுத்த வேண்டும். எவ்வுயிரும் தம்முயிர்போல் கருதுவதே ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை ஆகும். உயிர் இரக்கத்தின் மூலம் கடவுளைக் கண்டவர் வள்ளலார். உயிர் இரக்கத்தின் மூலம் கடவுளை மக்களுக்குக் காட்ட வந்தவர் வள்ளலார் இதனை
“உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக என்றுரைத்த மெய்ச்சிவமே[17]”
என்று இறைவனே தமக்கு அறிவித்ததாகக் கூறுகிறார். இறைவனை அடைய அன்பு என்ற ஒன்றே போதும் என்று வலியுறுத்துகிறார்.
முடிவுரை
வள்ளலார் வாடிய பயிரைக் கண்ட போது வாடிய தகைமையர். இரக்கமே வடிவானவர். உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக் கோல் என்று வலியுறுத்தியவர். அவர் அன்பு என்னும் வல்லமையைக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை அடைந்தவர். அத்தகைய வல்லமையைக் கொண்டு இறாவாத வாழ்வை இகத்திலே பெறலாம் என்பதே இவ்ஆய்வின் முடிவாகும்.
ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்
[2] . தமிழ்மொழி அகராதி.
[2] . ’https://ta.oxforddictionaries.com
[3] . ’https://ta.oxforddictionaries.com
[4] . பாரதியாரின் தெய்வப்பாடல்கள்-12
[5] . திருக்குறள்-153
[6] . திருக்குறள் டாக்டர் மு.வ உரை.
[7] .திருவருட்பா உரைநடைப்பகுதி-உபதேசக்குறிப்பு.
[8] . திருவருட்பா உரைநடைப்பகுதி-உபதேசக்குறிப்பு.
[9] .திருக்குறள்-757
[10] .திருவருட்பா-3269
[11] .திருக்குறள்-321
[12] .அகவல்-962,963
[13] .அகவல்-968,969
[14] .திருமந்திரம்-199
[15] .திருக்குறள்-260
[16] .திருவருட்பா-5296
[17] .அகவல்-974,975
*****
கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழியல் துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர்-608002
-கி. ரேவதி
முன்னுரை
நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் மக்களைச் சுற்றிப் படர்ந்திருப்பவை. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. நம் தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன.
நிமித்தம்
நிமித்தம் என்ற சொல்லிற்குக் காரணம், பொருட்டு அடையாளம் என்ற பல பொருள்கள் உண்டு.
“வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு ஈண்டுஇருள் மாலைச் சொல்ஓர்த் தன்று” (புற.பொருள்.ப.17)
நம்பிக்கை அடிப்படையில் நிமித்தத்தினை நோக்கும்போது சகுனம் பார்த்தல் என்ற பொருளைத் தந்து சிறப்பிக்கின்றது.
சகுனம் அறிவிப்போரையும் சகுனத்தின் பயன்களைக் கூறுவோரையும் நிமித்திகர்கள் என்று கூறுவர். அறிஞர்கள் கருத்துக்கேற்ப நிமித்தம் என்பது நல்ல, தீய சகுணங்களைப் பார்த்தல் என்பது புலனாகின்றது.
தெய்வ நம்பிக்கை
சங்க காலம் முதற்கொண்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை உள்ளது. உலகம் கடவுளால் காக்கப்படுகிறது என்ற உண்மையை,
“சேவல் அம்கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே” (குறுந்.1)
என்று குறுந்தொகையின் முதல்பாடலே கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது.
தலைவன் களவுக் காலத்தில் சூளுரை செய்தல், தலைவிக்கு வரும் காதல் நோய்க்கு கடவுள் காரணம் என்று நம்புதல், தெய்வங்களின் உறைவிடம் மலை போன்ற செய்திகளின் மூலம் அக்கால மக்களின் தெய்வ நம்பிக்கையை அறியலாம். மேலும்,
“மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்” (குறுந்.87)
என்ற பாடலில் தெய்வமானது கொடியவரை வருத்தும் என்ற செய்தியும் கூறப்படுகிறது.
விண்ணியல்
பண்டைய நாளில் தூரத்தில் இயங்கும் கோளையும், விண்மீன்களையும் கண்டு உணர்ந்து அவைகளின் இயக்கத்திற்கும் மண்ணில் வாழும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
நற்றிணையில் விண்மீனைக் கைதொழுது வணங்கி வந்தனர் என்பதை,
“மையற விளங்கிய மணிநிற விசும்பின்
கைதொழுது மரபின் எழுமீன் போலப்” (நற்.231)
என்ற அடிகள் முனிவரின் தோற்றமாகிய ஏழு விண்மீனை மக்கள் தொழுதனர். எனவே விண்மீனையும் தெய்வமாகத் தொழும் பழக்கம் மக்களிடம் இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.
பண்டைக்காலத்தில் வாழ்ந்த மக்கள் நட்சத்திரத்தைக் கூட்டம் கூட்டமாக வகுத்து அவை இன்ன இன்ன உருவம் என்று பிரித்தனர். புறநானூற்றில் வெள்ளிமீன் தெற்குத்திசை தோன்றினால் மழை பொய்த்துவிடும் என்ற செய்தியை,
“அலங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (புறம்.35)
என்ற அடிகள் உணர்த்துகின்றன.
பட்டினப்பாலையில் மகம் என்னும் வெண்ணிற விண்மீன் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
மழை நீங்கிய மாவிசும்பில்
மதி சேர்ந்த மகவெண்மீன்
உரு கெழு திறல் உயர் கோட்டத்து” (பட்டின.34-36)
என்ற வரிகள் நிலவுடன் சேர்ந்து விளங்கும் விண்மீன்களை மக்கள் தொழுது வணங்கினர்.
பறவைகளின் நிமித்தம்
தனிமனிதப் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் காலப்போக்கில் உணர்ச்சிப் பெருக்கால் மாறும் தன்மையுடையன. ஆனால் ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் எளிதில் மாற்றத்திற்கு உட்படா.
நற்றிணையில் பறவை நிமித்தத்தை கூறும் தலைவன் நம் வருகையைக் காக்கை முதலிய புள்ளினங்கள் அவருக்கு அறிவுறித்தினவோ என்று கூறுவதாகப் பாடலொன்று அமைகின்றது.
தோள்வழி யாப்ப ஈண்டுநம் வரவினைப்
புள்அறி வுறீஇயின கொள்ளோ தௌளிதின்” (நற்.161)
என்ற வரிகள் பறவை நிமித்தத்தை உணர்த்துகின்றன.
காகம் கரைதல்
சங்க காலத்து மகளிர் நம்பிக்கையுடன் வாழ்ந்தனர். காகம் தம் இல்லத்தருகில் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது.
“பெருந்தோள் நெகிழ்ந்த செல்வதற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே” (குறுந்.210)
காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்தமையை அறிய முடிகிறது. இன்றும் இந்த நம்பிக்கையை மக்கள் பின்பற்றுகின்றன.
விலங்குகளின் சகுனம்
பழந்தமிழர் விலங்குகள் வாயிலாகவும் சகுனம் பார்த்து வந்துள்ளனர். பல்லி, ஓணான், கூகை போன்ற உயிரினங்கள் எழுப்பும் ஓசைக்கும் பலன் உண்டு என்பதை அறிந்துள்ளனர்.
பல்லிச்சகுனம்
சங்க இலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தலைவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நல்ல பலனை எதிர்நோக்கும் போது பல்லியும் ஓசை எழுப்பி அதற்கு இணக்கமான நல்ல நிமித்தத்தை ஒலிக்கின்றது.
“முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்
வருவம் என்னும் பருவரல் தீரப்
படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி” (நற்.பா.169-வரி.1-3)
வினைமுற்றி மீளும் தலைவன் தன் வருகையை பல்லி தலைவிக்கு அறிவிக்குமெனத் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துகிறான். அஃறிணை உயிரும் அஃறிணையான பல்லியின் சகுனத்தைப் பார்க்கின்றது.
பன்றியும் பல்லிச் சகுனம் பார்த்துத் தனக்கு இடையூறு நேரும் என்று குகையில் பதுங்குவதை நற்றிணையில் 98-ம் பாடலும், 169, 246 பாடலும், அகநானூற்றில் 9, 88, 151, 289, 351 பாடலும் சகுனத்தை உணர்த்துவதாக அமைகின்றன.
குறுந்தொகையில் ஆண் பல்லி தன் துணையை அழைக்க ஒலி எழுப்பிய செய்தியும் குறிப்பிடப்படுகின்றது.
“உகிர்நுதி புரட்டும் ஓசை போல
செங்காற் பல்லி தன்துணை பயிரும்
அம்காற் கள்ளி அம்காடு இறந்தோரே” (குறுந்.16)
கட்டுவிச்சி
குறி கேட்கும் வழக்கம் பண்டைத்தமிழ் மக்களிடம் இருந்து இன்று வரை வழக்கில் இருந்து கொண்டிருக்கின்றது. குறி கூறுகின்றவர்கள் தெய்வத்தின் உதவியினால் உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என நம்பி வந்தனர். குறி கூறும்போது குலதெய்வத்தை வழிபட்டுக் கூறுகின்றமுறை இருந்திருக்கின்றது.
குறுந்தொகையில் குறி கூறுகின்ற பெண்டிரைக் கட்டுவிச்சி என்று கூறுகின்ற மரபு இருந்திருக்கின்றது.
“அகவன் மகளே! அகவன் மகளே!
மனக் கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே” (குறுந்.23)
என்ற அடிகள் தெய்வத்தை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி என்ற கருத்தைக் கூறுகின்றது.
கண்துடித்தல்
பெண்களுக்கு இடதுகண் துடிப்பதைச் சங்க இலக்கியங்கள் நல்நிமித்தமாகக் கொண்டுள்ளன. கண் துடித்தல் தலைவன் வருகையை உணர்த்தும் நற்குறியாக அமைந்துள்ளது.
“நுண்ணோர் புருவத்த கண்ணும் ஆடும்
மயில்வார் முன்கை வளையும் செறுஉம்” (ஐங்.218)
என்று ஐங்குறுநூற்றுப் பாடல் விளக்குகின்றது.
சொர்க்கம் – நரகம்
சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள் மக்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. நன்மை செய்தால் சொர்க்கத்திற்குச் செல்லலாம். தீமை செய்தால் நகரத்திற்குச் செல்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை பழந்தமிழரிடம் இருந்ததை இலக்கியங்கள்வழி தெரிந்துக்கொள்ள முடிகின்றது.
தமிழர்கள் மட்டுமின்றி அமெரிக்கர், ஜப்பானியர் போன்ற நாட்டினருக்கும் சொர்க்கம் நரகம்மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்துள்ளது. போர்க்களத்தில் வீரர்கள் விழுப்புண்பெற்று மாண்டுபோனாலும் அவர்கள் தேவர்கள் உலகத்திற்குச் செல்வர் என்றும் அதுதான் அவர்களுக்குப் புகழ் என்றும் மதிக்கப்பட்டது. வடமோதங்கிழார் இதனைக்,
“கையகத்து உயர்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த உரையான் ஆகி
உரிகளை அரவ மானத் தானே
அரிது செல் உலகில் சென்றனன் உடம்பே
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால் உற்று” (புறம்.260)
என்கிறார். மேலும் யானைப்படையையுடைய நெடுமாவளவன் தேவர் உலகத்தை அடைந்தான். ஆதலால் வீரமரணமும் சொர்க்கத்தை அடையும் ஒரு வழியாக உள்ளது.
“கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர் உலகம் எய்தினன் ஆதலின்” (புறம்.228)
என்ற புறநானூற்றுப் பாடலும் தேவர் உலகம் பற்றிய செய்தியைக் கூறுகின்றது.
தேவர் உலகம் என்பது சொர்க்கம் ஆகும். தேவர்கள் அமுதம் உண்டு வாழ்பவர்கள் என்றதால் குறுந்தொகையில் தோழி தலைவியிடம் கூறும்போது செவிலித்தாய் தலைவன் வரைவோடு வருவான் என்று கூறுகிறாள். எனவே இந்த நற்சொல்லைக் கூறிய அவள் பெறுதற்கு அரிய அமுதமே உண்ணும் உணவாகக் கொண்ட தேவர்கள் வாழ்கின்ற பெரும் உலகத்தை அடையப் பெறுவாளாக! என வாழ்த்துகிறாள்.
முடிவுரை
மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்துவிடுகின்றன. நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று சொன்னாலும் அது விளக்க இயலாத தன்மைபெற்று விளங்குகிறது. திருமணச் சடங்குகளும், இறப்பு பற்றிய சடங்குகளும் தமிழரின் வாழ்வியல் சடங்குகளும் பெரும்பாலும் அக்கால மக்களின் நம்பிக்கை சார்ந்தே அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது.
அடிக்குறிப்பு
1.ஐயனாரிதனார்., – புறப்பொருள் வெண்பாமாலை,கழக வெளியீடு, சென்னை,2002.
2.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.
3.மேலது
4.நாகராசன்.வி;, (ப.ஆ) நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009
5.நாகராசன்.வி;, (ப.ஆ) புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009
6.இராசமாணிக்கனார்.ம, பத்துப்பாட்டுஆராய்ச்சி, சென்னைப்பல்கலைக்கழகம்,2010.
7.நாகராசன்.வி;, (ப.ஆ) நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009
8.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004
9.நாகராசன்.வி;, (ப.ஆ) நற்றிணை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009
10.நாகராசன்.வி, (ப.ஆ) குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.
11.மேலது
12.மாணாக்கனார்.ஆ, (உரை) ஐங்குறுநூறு, சாரதா பதிப்பகம், சென்னை, 2009
13.நாகராசன்.வி;, (ப.ஆ) புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009
14.நாகராசன்.வி;, (ப.ஆ) புறநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2009
*****
கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி),
விழுப்புரம்.
ஆண்டுகள் பலகடந்து குழந்தைவரம் வேண்டி
=====ஆவலாய்க் காத்திருக்கும் தம்பதிகள் பலராவர்.!
ஆண்டாண்டு காலமாய் ஆலயங்களின் முன்
=====அரிதான தவம்பூண்டு அரசமரத்தைச் சுற்றுவர்.!
சீண்டி விளையாட பிள்ளையிலை எனும்பெரு
=====குறைகொண்ட மாந்தர்கள் வாழுமிவ் வுலகில்..
வேண்டாமினிப் பெண்குழவி யென்றே..பிறவி
=====வருமுன் கருவையழிப்பார் தாய்மை அறியார்.!
கருவிலிருப்பது ஆணா? பெண்ணா? வென்பதை
=====கண்டுகொள்வது சட்டப்படி குற்றமாம்..வளர்ந்த
கருவைக் கலைப்பதுவும் குற்ற மென்பதைக்
=====கருத்தில் இருத்திக் கொளாத் தாய்மாருமுண்டு.!
கருவிலே தொலைந்த பெண் சிசுக்களைக்
=====கணக்கிட்டால் கலியுகத்தின் தீமை அறியலாம்.!
கருவில் தப்பிவிட்டாலோ?பின்கள்ளிப் பாலும்
=====கதிர்நெல்லும் கொலைக் குதவும் ஆயுதமாகும்.!
உருவில் பெண்ணாயினும் உளமதில் உரமுடன்
=====உருமும் புலியை விரட்டியவள் தமிழ்ப்பெண்.!
பெரும்பகுதி வாழ்வை வெள்ளையருக் கெதிராக
=====போராடிக் கழித்தவீர மங்கை வேலுநாச்சியார்.!
குருவாக அண்ணலையேற்று அவரின் விடுதலைக்
=====கொள்கைக்குத் தியாகம் செய்த அம்புஜம்மாள்.!
கருவில் தொலைந்த பெண் குழந்தையாகின்
=====காலமிவர்களை இன்றளவும் நினைவு கூறுமா..?
=========================================================
நன்றி:: தினமணி கவிதை மணி வெளியீடு::
நன்றி படம்:: கூகிள் இமேஜ்
முனைவர் இரா.முரளி கிருட்டினன்
உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை,
தூய வளனார் தன்னாட்சி்க் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி-2
பறக்க முடியவில்லை என்பதற்காக
எந்தப் பறவையும்
சிறகுகளை உதிர்ப்பதில்லை
நீ மட்டும் ஏன்
தன்னம்பிக்கையை உதிர்க்கிறாய்
சோம்பலாய் இருந்தால்
தனிமை கூட சிறை தான்
புறப்படு
தென்றலாகவோ
புயலாகவோ
இல்லை
காற்றாக
உயிர்மூச்சாக
இயங்கு…
பூமிப் பந்தைப் பார்
இயங்கிக் கொண்டு
இருக்கிறது
அதன் மேல் ஏன்
தூங்கிக் கொண்டிருக்கிறாய்…
ஓடும் குதிரையின்
பிடரி போல
அங்கும் இங்கும்
அலையாதே
சிங்கத்தின் பிடரி போல்
சிலிர்ப்போடு இரு.
வறுமை யானையென்றால்
அடக்கும் அங்குசமாய் இரு
வெற்றி கனியென்றால் அதை
உண்ணும் பறவையாய் இரு…
தோல்வி ஒன்றும் எட்டிக்காயல்ல
அமிழ்தம் அடைந்து பார்..
சூரியன் சுடும் தான்
இருந்தாலும் பீனிக்ஸ் விடுவதில்லையே..
நீ மட்டும் ஏன் ….
சொந்த சிறகுகளை
அடமானம் வைக்கிறாய்….
இயங்கிக் கொண்டே இருப்போம்
ஒரு வேளை
மரணித்துப்போனால்
மண்ணுக்குள்
விதையாக மட்டும்.
க. பாலசுப்பிரமணியன்
சந்தமின்றிப் பாட்டொன்று வந்திடுமே காற்றோடு
சேத்துமண்ணு வாசனையைக் கூட்டிவரும் நட்போடு
சலசலவென்றே தாளங்கள் தந்திடுமே தென்னங்கீற்றோடு
சருகாகி இலையெல்லாம் சுருதிசேர்க்கும் மண்ணோடு !
குட்டையிலே குளித்திருக்கும் எருமையெல்லாம் சுகத்தோடு
கும்மாளமிடும் குழந்தைகளே குதித்திடுமே கூட்டத்தோடு
குறைவில்லா மாக்கோலம் வாசலிலே செம்மண்ணோடு
குறைவின்றி வந்திடுமே சிற்றெறும்புகள் குலத்தோடு !
குலதேவன் கோயிலிலே விளக்கொன்று ஆற்றோரம்
கும்மிருட்டில் குவிந்திடுமே மின்மினிகள் தெருவோரம்
குறைவில்லா வாழ்வுகண்ட கிழமொன்று வாசலிலே
குழந்தையொன்று அழுகின்ற குரலோ வீட்டினிலே !
கூரையிலே அமர்ந்து கூவுகின்ற சேவலொன்று
குளிர்காற்று வந்ததுமே தோகைவிரித்த மயிலொன்று
கூட்டத்தையே சேர்க்கக் காத்திருக்கும் காகமொன்று
குரைத்து ஓய்ந்து உறங்குகின்ற நாயொன்று !
பசுவொன்று பால்சுரக்கும் பாவையவள் பாத்திரத்தில்
பசிதீர்க்கப் பதனிவரும் பனங்கள்ளின் தோற்றத்தில்
பனைவெல்லம் உருகிடும் வாசனையோ பக்கத்துவீட்டில்
பச்சிலையில் மருந்திடுவார் பாட்டியோ தேள்கொட்டில் !
வீடுதேடி வந்தோருக்கு விருந்துவைக்கும் நெஞ்சுண்டு
கூழ்குடித்து வாழ்ந்தாலும் குணம்காக்கும் மனிதருண்டு
குடிசையுள்ளே மண்விளக்கில் முகத்தினிலே சிரிப்புண்டு
குறையினிலும் நிறைகாணும் குடும்பத்தில் அமைதியுண்டு !
பட்டணத்து வாழ்க்கையிலே பதற்றமே மிஞ்சுதன்றோ
பாழடைந்த மனத்தினிலே பாசங்கள் மறைந்ததன்றோ
குதிரைவண்டி குலுங்கையிலே கொட்டுகின்ற பாசமெல்லாம்
கோடிப்பணம் கொடுத்தாலும் குறையாமல் கிடைத்திடுமோ ?
எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா
படைக்கின்ற இலக்கியங்கள் பயனளிக்கும் பாங்கினிலே
கிடைக்கின்ற போதுதான் படைப்பினுக்கு உயர்வாகும்
படைக்கின்றார் மனப்பாங்கும் படைப்பூடே வந்துநிற்கும்
படைப்பவர்கள் சமூகத்தை மனத்திருத்தல் அவசியமே !
நெறிபிறளும் வகையினிலே படைக்கின்ற இலக்கியங்கள்
நீண்டகாலம் கொண்டதாய் நின்றுவிடல் அரிதாகும்
குறிக்கோளை மனமிருத்தி வருகின்ற இலக்கியங்கள்
குவலயத்தால் என்னாளும் கொண்டாடி போற்றப்படும் !
தனிப்பட்ட கருத்துக்களை தானுரமாய் கொண்டபடி
தரமற்ற படைப்புகளும் தரணிக்கு வருகிறது
நுனுப்புல்லை மேய்ந்தவராய் படைக்கின்றார் இருந்துவிடின்
வருகின்ற படைப்புகளும் வளமற்றே வந்துநிற்கும் !
வாழுகின்ற வழிகூறும் வகையினிலே இலக்கியங்கியங்கள்
வருகின்ற போதிலேதான் வரட்சிநிலை அகன்றுநிற்கும்
மோதுகின்ற குணமதனை முன்னிறுத்தி இலக்கியங்கள்
சேதிசொல்லும் போதிலேதான் திசைகூடக் கெட்டுவிடும் !
வள்ளுவரின் படைப்பதனை வையகத்தார் வாழ்த்துகிறார்
இனங்கடந்து மொழிகடந்து எல்லோரும் விரும்புகிறார்
சொல்லவரும் அத்தனையும் நல்லபடி சொல்லுகிறார்
வெல்லுகின்ற இலக்கியமாய் வள்ளுவமும் இருக்கிறது !
சாதிபற்றிச் சொல்லவில்லை சமயம்பற்றிச் சொல்லவில்லை
நீதிபற்றி சொல்லுவதில் நியாமும் நிறைந்துளது
கடவுள்பற்றிச் சொல்லவில்லை கட்சிபற்றிச் சொல்லவில்லை
கட்டாயம் செய்வதனை கண்ணியமாய் சொல்கிறது !
இலக்கியத்தைப் படைப்பார்கள் இங்கிதமாய் படைப்பதற்கு
ஏற்றபல பாடங்களை வள்ளுவத்தில் படித்திடலாம்
நலந்திகழ மனம்நிறைய நாலுபேர்க் கேற்றபடி
நற்படைப்பைப் படைப்பதற்கு நாம்படிப்போம் வள்ளுவத்தை !
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++
ஏய் ! பங்களா கோமானே !
எதைக் கொன்றாய் இன்று ?
எதைச் சுட்டாய் இன்று ?
புலி வேட்டை ஆடப்
போனாய் நீ நேற்று
யானை மீதேறி,
துப்பாக்கி நீட்டிக் கொண்டு !
விபத்து நேர்ந்தால் துணைக்கு
தாயைக் கூட்டிச் சென்றாய்
தனக்கு !
அமெரிக்கன்,
ஆங்கிலோ சாக்ஸன் அன்னைக்குப்
புதல்வன் !
துப்பாக்கி யோடு பிறந்தவன் !
பிள்ளைகள் யாவும் சேர்ந்து பாடின :
ஏய் ! பங்களா கோமானே !
எதைக் கொன்றாய் இன்று ?
எதைச் சுட்டாய் இன்று ?
இருண்ட காட்டில் தீக்கண்கள்
சுருட்டி
படுத்துக் கிடந்த வேங்கை விழித்து
வெடுக்கெனப் பாய்ந்தது !
மிரண்டு போனது யானை !
கோமான்
அரண் டெழுந்தான் !
கூலி ஆட்கள் அலறி ஓடினர் !
கோமான் நெற்றிப் பொட்டில்
வேங்கை அடி விழுந்தது !
பிள்ளைகள் யாவும் சேர்ந்து பாடின :
ஏய் ! பங்களா கோமானே !
எதைக் கொன்றாய் இன்று ?
எதைச் சுட்டாய் இன்று ?
பிள்ளைகள் நின்று கேட்டன :
கோமானே !
கொல்வது பாபம் அல்லவா ?
காயப் பட்ட மகனுக் காகப் பேசத்
தாயே குறுக்கிட்டாள் :
மகனிடம்
துப்பாக்கி இல்லாது போனால்,
இப்போது
புலிக்குப் பலியாகி இருப்போம்
நாங்கள் யாவரும் !
பிள்ளைகள் யாவும் சேர்ந்து கேட்டன :
துப்பாக்கி கோமானே !
இப்போது செத்தது எது ?
தப்பிப் பிழைத்தது எது ?
+++++++++++
கேட்ட தோழனின் குரலிலுள்ள
ஆவேசத்தை அறிந்தீரா…?
யார் நீங்க?
இரத்தம் தின்ற அதிகாரத் திமிரை
கேட்காத முதிய நடிகரை மட்டுமா
அந்த தோழன் கேட்டான்..
யார் நீங்க…?
துப்பாக்கித் தோட்டா
போராட்டத் தோழர்களை
துளைத்த செய்தியறிந்ததும்
மனசாட்சியோடும்
மனசாட்சியற்றும்
மீம்ஸ் போடுவோரே..
முகநூல் ஸ்டேஸஸ் போடுவோரே
கருப்பு வண்ணத்தை
துக்க சின்னமாய்
சுயவிவரபடமாய் வைத்தோரே…
உங்களையும் என்னையும்தான்
கேட்கிறான் தோழன்..
யார் நீங்க?
உச்சி வெயிலில்
தொண்டை வற்றி
அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து
சிறுகுடல் கிழிய கிழிய
”தடை செய்.. தடை செய்..
போராடுவோம்.. போராடுவோம் ”
என்றாவது கோஷமிட்டீரா…
பிறகு…..
யார் நீங்க..?
அந்த தோழன்
ஆணவத்தில் கேட்கவில்லை
அதிகாரத் தோட்டாக்கள்
நெஞ்சுக்கீறிய வலியினிலும்
திமிராய் கேட்கவில்லை.
அடிப்படை மனிதமற்ற
வெகுஜனத் திரளை
தன் ஒற்றைக் கேள்வியில்
சத்தமில்லாத
புரட்சி வினாவாய் கேட்கிறான்..
யார் நீங்க..?
யார் நீங்கலாம்…?
தினத்திற்கொரு
ப்ரேக்கிங் நியூஸூக்கு ஏற்ப
பச்சோந்தியாய்…
வலைத்தளங்களில் பொங்குவோரே…
உங்களையும் என்னையும் தான்
கேட்கிறான்..
யார் நீங்க…?
அன்றாடம் வேண்டாம்
என்றாவது வந்தீரா?
ரோட்டில் இறங்கி…
உரிமைக் கேட்டு…
அரசை எச்சரித்து……?
யாரு நீங்க..?
போராட்டக்காரர்களை
சமூகவிரோதியென்றவருக்கு எதிரான கேள்வியல்ல அது..
சமூக பரதேசிகள் நமக்கும் அதே கேள்விதான்..
யாரு நீங்க…?
சோற்றில் உப்பை போட்டு சாப்பிட்டது போதும்
இனி
உப்பில் சோற்றை இட்டு
உண்டு விழுங்கி வாருங்கள்..!
யாரு நீங்க..?
சூடு சொரணை ஏதும் மிஞ்சினால்
புரியலாம்..!
—
இரா.சந்தோஷ் குமார்.
கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !
‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு
– கத்யானா அமரசிங்ஹ
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, ‘மந்திரி மனை’ என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.
முதன்முறையாக ‘மந்திரி மனை’யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
எனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’’ எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த யாழ்ப்பாண ராஜதானி நகர அமைப்பு குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.
எனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல் எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.
“சிறு பராயத்திலிருந்து தென்னிந்திய வரலாற்று நாவல்களை வாசிக்க நேர்ந்தபோதும், அனுராதபுரம் போன்ற இதிகாசப் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்த விபரங்களை அறியக் கிடைத்த போதும், அக் காலத்தில் இலங்கையின் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த ராஜதானிகள் எவ்வாறிருந்திருக்கும் என எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அத்தோடு, நான் பாடசாலைக்குச் செல்லும் காலத்தில், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானியைக் குறித்து தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதிய நந்திக்கடல் எனும் நாவலை வாசித்ததுவும் நினைவிருக்கிறது.”
எனினும் தொல்லியல் ஆய்வுத் துறை மூலம், இலங்கையிலிருந்த சிங்கள ராஜதானிகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதோடு வடக்கின் தமிழ் ராஜதானிகள் குறித்த போதிய ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது அவருக்கு வளரும்பருவத்தில் தெளிவாகிறது. அது மாத்திரமல்லாது, அக் காலகட்டத்தில் வடக்கிலிருந்த தொல்லியல் பெறுமதி வாய்ந்த ஸ்தலங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கவுமில்லை.
“அது மாத்திரமல்ல. இலங்கை தமிழ் மக்கள் வரலாறு குறித்து முறையான ஆய்வு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுவும் எனக்குத் தெளிவானது. சிங்கள மக்களுக்கு வரலாற்று நூலாக மகாவம்சம் எனும் தொகுப்பாவது இருக்கிறது. தமிழ் மக்கள் தமது பழங்காலப் பெருமைகளை அதிகம் கதைத்தபோதிலும் கூட, அவர்களுக்கென இருக்கும் ஒரே வரலாற்றுக் கிரந்தம் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்பது புரிந்தது. எனினும் அதுவும் எழுதப்பட்டிருந்தது இற்றைக்கு இருநூறு, முன்னூறு வருடங்களுக்கு முன்னர்தான். அடுத்தது, அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்வாறிருந்தது என்பது எமக்குத் தெரியவில்லையே எனவும் எனக்குத் தோன்றியது.”
யாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த நவரத்னம் கிரிதரன், பட்டப்படிப்புக்காக எண்பதுகளின் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலைத் துறையில் பிரவேசிக்கிறார். மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலை பிரிவானது அவரது நல்லூர் ராஜதானி கனவை பெரு விருட்சமாக செழித்து வளர்ந்திட உரமிட்டது.
“எமது விரிவுரைகளின் போது ஒரு தடவை பேராசிரியர் நிமல் த சில்வா (Nimal De Silva) அவர்கள், அனுராதபுர ராஜதானி குறித்தும், அங்கு ராஜதானி நகர அமைப்பு எவ்வாறிருந்தது என்பது குறித்து பேராசிரியர் ரோலண்ட் சில்வா நடத்திய ஆய்வு குறித்தும் விவரித்தார். அனுராதபுர நகரமானது ஸ்தூப வளையங்கள் இரண்டு மற்றும் நகரத்தின் மத்தியிலிருந்த வியாபார மத்திய நிலையத்தோடு திட்டமிடப்பட்ட ஒன்றெனவும் கூறக் கேட்டபோதுதான் எனக்கு அந்த எண்ணம் திடீரென உதித்தது. அக் கணத்தில் பேரானந்தத்தை உணர்ந்தேன். நல்லூர் இராசதானியைக் குறித்து நான் சிந்திக்கத் தலைப்பட்டது அப்போதிலிருந்துதான்”
அப்போது அவர்களுக்கு பட்டப்படிப்புக்கான ஆய்வுக்காக வரலாற்றோடு சம்பந்தப்பட்ட கட்டடக் கலை தொடர்பான தலைப்பொன்றின் கீழ் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
“அக் காலத்தில் என்னுடனிருந்த சிரேஷ்ட மாணவரான தனபாலசிங்கம், எனக்கு முன்பே அதைக் குறித்து எழுதத் திட்டமிட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். எனினும் போதியளவு தகவல்களும், சாட்சிகளும் இல்லாத காரணத்தால் அவர் அந்த எண்ணத்தைக் கை விட்டதாகவும் அறிந்து கொள்ளக் கிடைத்தது. எனினும் இதைக் குறித்துத் தேடிப் பார்க்க அவர் எனக்கு ஊக்கமளித்தார்” என கிரிதரன் கூறுகிறார்.
அவர் கூறும் விதத்தில், அந்த ஆய்வை போதியளவு தொல்லியல் சான்றுகள் இல்லாமலேயே செய்ய நேர்ந்திருக்கிறது. போர்த்துக்கேயர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் கடந்த ஐநூறு வருடங்களுக்குள் யாழ்ப்பாண ராஜதானியின் நகர அமைப்பானது முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. எனினும் அண்மைக்கால ஆய்வாளர்களால் யாழ்ப்பாண வரலாறு குறித்து எழுதப்பட்டிருக்கும் தொகுப்புக்கள் அவருக்கு பெருமளவு உதவி புரிந்திருக்கின்றன. அவற்றுள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றையும் வாசித்து பரிசீலித்துப் பார்த்ததில் அவருக்கு முதலியார் ராசநாயகம் எழுதிய ‘The Ancient Jaffna’ எனும் தொகுப்பை தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ள முடியுமாக இருந்திருக்கிறது.
கிரிதரனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருக்கும்போது நானும் கூட அவர் எனக்கு அனுப்பி வைத்திருந்த அந்தத் தொகுப்பின் பி.டி.எஃப் பிரதியை வாசிக்கத் தொடங்கினேன். அந்தத் தொகுப்பிலும், ஏனைய வரலாற்று நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லூர் ராஜதானி உருவாகும் வரைக்கும், யாழ்ப்பாணக் குடா நாட்டில் நிலவி வந்திருக்கும் ராஜதானிகள் குறித்த வரலாற்றை இவ்வாறு விவரிக்க முடியும்.
கிறிஸ்துவ வருடம் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் நாக மன்னர்களின் ராஜதானியொன்று இருந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிவதோடு அதன் தலைநகரம் இப்போது யாழ்ப்பாணத்தில் ‘கந்தரோடை’ எனத் தமிழிலும் ‘கதுருகொட’ என சிங்களத்திலும் அழைக்கப்படும் பிரதேசத்தில் அமைந்திருந்ததை அனுமானிக்க முடிகிறது. இந்த நாக ராஜதானியானது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாணத்தில் நிலவி வந்திருக்கிறது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும், யாழ்ப்பாண குடா நாட்டுக்கும் இடையே நிகழ்ந்த பாரியளவிலான தொடர்பாடல்களின் காரணமாக இலங்கை அடையாளத்துடன் கூடிய தமிழ் குடியிருப்புக்கள் வடக்கில் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் சோழ மன்னரொருவர், நாக இளவரசியொருவரை சுயம்வரம் செய்திருக்கிறார். சோழ மற்றும் நாக வம்சத்தின் இத் திருமணத்தினால் அத் தொடர்பாடல் மேலும் பலம் பெற்றிருக்கக் கூடும் என எண்ணிப் பார்க்க முடிவதோடு அப்போது இலங்கையில் வாழ்ந்து வந்த நாக, யட்ச, காலிங்க போன்ற இனங்களுடன் அத் தமிழ்மக்கள் ஒன்றாகக் கலந்து இலங்கைக்கே உரித்தான தமிழ் குயிருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகியிருப்பதையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. (அது, இந்தியாவிலிருந்து வந்த விஜயன் உள்ளடங்கிய குழுவின் பரம்பரையிலிருந்து உருவானதாகக் கூறப்படும் சிங்கள இனத்தவர்கள் இந் நாட்டின் பூர்வீக இனங்களான யட்ச, நாக இனங்களோடு ஒன்றாகக் கலந்ததை ஒத்திருக்கிறது.)
அதன்பிறகு உருவாகிறது வெற்றிடமொன்று. அதாவது கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாண ராஜதானி குறித்த போதியளவு விபரங்கள் கிடைக்கப் பெறாத தெளிவற்ற கால கட்டம். (நாக மன்னர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலம் தோன்றுவது அக் காலகட்டத்திலாக இருக்கக் கூடும்.) அந்தக் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாழ்ப்பாண ராஜதானியானது பருத்தித் துறையை அண்டிய சிங்கை நகரில் தோன்றியிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது. யாழ்ப்பாண ராஜதானி வரலாற்றில் ‘நல்லூர் காலம்’ தோன்றுவது அதன்பிறகுதான். அது, கி.பி. 1250 களில் சோழ இளவரசர்களில் ஒருவரான சேகராஜசேகரன் இலங்கைக்கு வருகை தந்து சேகராஜசேகர சக்கரவர்த்தி என யாழ்ப்பாணத்தில் முடிசூடப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது. அவர் மூலமாக யாழ்ப்பாணத்தில் ஆரிய சக்கரவர்த்தி ராஜ வம்சம் தோன்றத் தொடங்குவதோடு சக்கரவர்த்தி தனது ராஜதானியாக நல்லூரைக் களமமைத்துக் கொள்கிறார்.
நல்லூர் ராஜதானியின் அடுத்த முக்கியமான அத்தியாயம் உருவாவது கி.பி. 1450 களில் தெற்கிலிருந்து வந்த சபுமல் இளவரசன் யாழ்ப்பாணத்தை ஆண்டு கொண்டிருந்த சக்கரவர்த்தி வழித் தோன்றலான மன்னர் கனக்சிங்காரியனை தோற்கடித்து, ஸ்ரீ சங்கபோதி புனனேகபாகு எனும் பெயரில் அங்கு மன்னராக முடிசூடிய போது நிகழ்ந்திருக்கிறது. அவர் நல்லூர் கந்தஸ்வாமி கோயிலை முற்றுமுழுதாக புணர்நிர்மாணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் தென்பகுதியிலிருந்து கிளம்பி, தமிழ் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சபுமல் இளவரசன் குறித்து எழுதப்பட்டிருக்கும் ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தின் கவிதைகள் பலவற்றிலும் அக் காலத்தில் இருந்த நல்லூர் ராஜதானியின் பெருமை பாடப்பட்டிருப்பதாக கிரிதரன் தனது ஆய்வு நூலில் எழுதியிருக்கிறார். அது வரையில், பல தடவைகள் கேள்விப்பட்டிருக்கும், ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தை நான் முதன்முதலாக தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் கவனமாக வாசிக்கத் தொடங்கியது, அக் கவிதைகளை வாசிப்பதன் மூலம் நான் வாசித்துக் கொண்டிருந்த நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் மீது மிகுந்த நேச உணர்வை உள்ளத்தில் தோற்றுவித்துக் கொள்ளத்தான்.
தங்கத் தோரணங்களும் மணிகளும் தொங்கும்
அலங்கரித்த விசாலமான அரண்மணை வீற்றிருக்கும்
ஆங்காங்கே பூத்துச் செழித்திருக்கும் மலர்த் தோப்புக்களுடன்
வைஷ்ணவ எனும் கடவுள் குடியிருக்கும் யாழ் நகரை (நல்லூர் ராஜதானியை) பாருங்கள்
இவ்வாறு உரைக்கப்பட்டிருக்கும்விதமாக அந்தக் காலத்தில் திகழ்ந்த அழகிய நல்லூர் ராஜதானியானது பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களின் படையெடுப்பின் காரணத்தால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருக்கிறது. மந்திரி மனையையும், இன்னும் சில இடிபாடுகளையும் தவிர வேறு எதுவும் அங்கு எஞ்சியிருக்கவில்லை. நல்லூர் ராஜதானியைக் குறித்த சான்றுகள் பலவும் அழிந்துபோயிருந்த அவ்வாறானதோர் இக்கட்டான நிலைமையில்தான் கிரிதரன் தனது ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். எனினும் அவர் தனது முயற்சியைக் கைவிடத் தயாராகவிருக்கவில்லை.
பௌத்த மற்றும் இந்து கட்டடக் கலை மற்றும் நகர அமைப்புக்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள், மற்றும் போர்த்துக்கேயர்களால் எழுதப்பட்ட குறிப்புக்களை ஆய்வு செய்ததன் மூலம் அவருக்கு யாழ்ப்பாண தமிழ் ராஜதானிகளின் அமைவுகள் குறித்த விடயங்களை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. நில அளவையாளர் காரியாலயத்திலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்களினூடாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களினதும் பாதைகளினதும் பெயர்களைக் கண்டறிந்து அதனூடாக கடந்த காலத்தில் ஓரோர் இடங்களினதும் அமைவிடங்கள் குறித்த தெளிவையும் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.
போர்த்துக்கேயர்களால் பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கும் Early Christanity of Ceylon தொகுப்பில் நல்லூர் ராஜதானியில் அமைக்கப்பட்டிருந்த வியாபார மத்திய நிலையம் ஒன்றைக் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் செயற்பாடுகளை மன்னர் தனது மாளிகையிலிருந்தே கண்காணிக்கக் கூடிய விதமாக அது அமைக்கப்பட்டிருந்தது என அத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நல்லூர் ராஜதானியின் பாதுகாப்புக்காக நகரத்தைச் சூழவும் சிறிய காவலரண்கள் மூன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், அக் காவலரண்களைத் தொடர்புபடுத்தி ஒவ்வொன்றினூடாகச் செல்லும் பிரதான பாதைகளிரண்டும் அமைந்திருந்ததாகவும் அத் தொகுப்பில் எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.
அதற்கும் மேலதிகமாக, இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் சிதைவுகளாகக் காணப்படக் கூடிய யமுனை ஏரி அல்லது யமுனாரி எனப்படும் ஏரியானது நல்லூர் ராஜதானி குறித்த ஆராய்ச்சியின் போது கிரிதரனுக்கு பெரிதளவில் பயனளித்திருக்கிறது. ராஜவம்சத்தினர் தமது குளியல் தேவைகளுக்காகவோ அல்லது நல்லூர் கந்தஸ்வாமி கோயில் பூஜைகளுக்குப் பயன்படுத்திய ஏரியாகவோ இந்தப் பொய்கை பாவிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.
இந்த அனைத்து விடயங்களோடும் பண்டைய இந்து வாஸ்து ரீதியான கட்டடக் கலை பொருந்துவதால் கிரிதரனுக்கு தனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பை கட்டமைக்க முடிந்திருக்கிறது. அது சதுர வடிவான நகரமாகத் திகழ்ந்திருக்குமெனத் தீர்மானிக்கும் அவர் அதில் வட மேற்குத் திசையில் அரச மாளிகை, யமுனை ஏரி, வியாபார மத்தியநிலையம் மற்றும் கந்தஸ்வாமி கோயில் இருந்திருக்கலாமென தீர்மானிக்கிறார். வட கிழக்குத் திசையில் பணியாளர்களது குடியிருப்பும், வேலைத்தளங்களும்,, தென்கிழக்குத் திசையில் படையினரதும், வியாபாரிகளினதும் குடியிருப்பும், தென் மேற்குத் திசையில் புலவர்களினதும், மந்திரிகளினதும், ராஜ குலத்தவர்களினதும் காணிகளாகவும், நகரத்தைச் சூழவும் நான்கு கோயில் இருக்கத் தக்கதாகவும் அவர் அந்த நகர நகர அமைப்பை நிர்மாணித்திருக்கிறார். அந்தத் திட்டமிடலுக்கேற்ப நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் மந்திரி மனையானது அமையப் பெறுவது தென் மேற்குத் திசையிலாகும்.
“மந்திரி மனை அமைந்திருக்கும் காணிக்கு பண்டைய காலத்திலிருந்து குறிப்பிடப்படும் பெயர் சங்கிலித் தோப்பு என்பதாகும் என நில அளவையாளர் காரியாலயத்தின் வரைபடத்தைப் பரிசோதித்துப் பார்த்தபோது எனக்குப் புலப்பட்டது. அதற்கு முன்பு அதனை யாரும் கண்டுபிடித்திருக்கவில்லை. சங்கிலித் தோப்பு என்பது ராஜாவுக்கு உரிய தோப்பு (சோலை) என்பதாகும். ஆகவே அதைச் சுற்றிவர அரச மாளிகையும், ஏனைய உயரதிகாரிகளின் கட்டடங்களும் இருந்திருக்கக் கூடுமென தீர்மானிக்க முடிகிறது” என கிரிதரன் விவரிக்கிறார்.
அவர் இந்த ஆய்வுத் தொகுப்பை மீளவும் எழுதி ஒரு நூலாக வெளியிடுவது, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் காலப்பகுதியில்தான். அந்த நூல் 1996 ஆம் ஆண்டு இந்தியாவிலிருக்கும் சினேகா பதிப்பகத்தினூடாக வெளிவந்திருக்கிறது.
“இன்னும் கூட எனது ஆராய்ச்சி முடிவடையவில்லை. நான் இடைக்கிடையே அதற்குரிய பாகங்களைச் சேகரித்து வருகிறேன். அந்தக் காலத்தில் போதியளவு தொல்லியல் சான்றுகளேதுமற்றுத்தான் நான் இந்த ஆய்வை எழுத வேண்டியிருந்தது. இது இலகுவான விடயமல்ல. மிகவும் பாடுபட வேண்டியதொன்று. உண்மையில் இதனூடாகப் பயணித்து இதைக் குறித்து மேலதிக ஆய்வுகளைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு அடிப்படை அத்திவாரமாக எனது ஆய்வு நூலை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்” என நவரத்தினம் கிரிதரன் குறிப்பிடுகிறார்.
அவரது இந்த ஆய்வு நூலுக்கு ஆய்வாளர்களதும், வாசகர்களதும் உச்ச வரவேற்பு கிடைத்துள்ளதோடு, நல்லூர் மற்றும் யாழ்ப்பாண ராஜதானிகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், இணையத்தளங்களில் அதைக் குறித்து எழுதப்படும் கட்டுரைகளிலும் அவரது ஆய்வை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதை இன்றும் கூடக் காண முடிகிறது.
“இலங்கை வரலாற்றைக் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது அது ஒருதலைப்பட்சமாக அமையக் கூடாது என நான் ஆழமாக நம்புகிறேன். இலங்கையில் தெற்கு, மேற்கிலிருப்பதைப் போலவே வடக்கிலும் கிழக்கிலுமிருக்கும் தொல்லியல் சான்றுகள் குறித்த ஆய்வுகளை ஒருதலைப்பட்சமாக நிகழ்த்தக் கூடாது என்பதே எனது கருத்து. இந்த அனைத்துப் பிரதேசங்களும் இலங்கை எனும் நாட்டுக்கே உரித்தாகிறது. அனைத்துப் பிரதேசங்களினதும் வரலாறுகள் ஒன்றிணைந்துதான் ஒரு நாட்டின் வரலாறு உருவாகிறது. அவ்வாறு நோக்கும்போது நாங்கள் எமது வரலாறு குறித்து செய்திருக்கும் ஆய்வுகள் போதாது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. இந்த நாட்டின் வரலாறானது நாம் நினைத்துப் பார்ப்பதை விடவும் மிகவும் புகழ் வாய்ந்தது.”
கிரிதரனின் அந்தக் கூற்றோடு என்னாலும் இணைய முடிகிறது. நான் ஒரு கணம் நல்லூர் ராஜதானியை மனதால் உருவகித்துப் பார்க்க முயன்றேன். அதில் மனிதர்களின் குரல்களால் எழுந்து நிற்கும் தெருக்கள், உயர்ந்த மதில் சுவர்கள், வியாபார மத்திய நிலையம், இடையறாது மணியோசை எழுப்பும் கோயில்கள், கம்பீரமாக எழுந்து நிற்கும் அரசவை, மாளிகைகள் மற்றும் காவலரண்கள் எனது கற்பனையில் எழுகின்றன.
நான் கிரிதரனுக்கு திரும்பவும் நன்றி தெரிவிக்கிறேன். மரித்துக் கொண்டிருந்த எனது பண்டைய யாழ்ப்பாண நினைவுகளுக்கு அவரால்தான் உயிர் கிடைத்திருக்கிறது. நான் அவரது நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எனும் கால யந்திரத்தினூடாக கடந்த காலத்துக்குச் சென்று நல்லூர் ராஜதானியைக் கண்டு கொண்டிருக்கிறேன்.
– கத்யானா அமரசிங்ஹ
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
பி.கு.
பல நூறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில், யாழ்ப்பாண மண்ணில் தமிழ் மக்களும், தமிழ் மன்னர்களும் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதற்கு தற்போதும் சிதைவுகளாகவேனும் எஞ்சியிருக்கும் நல்லூரின் ‘மந்திரிமனை’ எனும் அரண்மனை ஒரு முக்கிய சான்று. அதனைக் குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டால்தான் தமிழருக்கு உரித்தான மண்ணின் பூர்வீகத்தை ஆதாரபூர்வமாக நிரூபிக்கலாம் என்ற நிலையிலும் கூட அதைக் குறித்து ஆய்வுகள் செய்ய எவருமில்லை. அல்லது எவருக்கும் நேரமில்லை. இலங்கை அரசு கூட அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, கண்டி போன்ற பண்டைய சிங்கள ராஜதானிகளை அகழ்வாராய்ச்சி நிலையத்தில் பதிவு செய்து அதன் புராதன வரலாறையும், தொல்பொருட்களையும் இன்றும் கூட பேணி வருகிறது. ஆனால் அவற்றைப் போலவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாணம், நல்லூர் ராஜதானியை கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது.
ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பு, பல சிரமத்துக்கு மத்தியில் இந்த நல்லூர் ராஜதானியைக் குறித்து ஆய்வு செய்து ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் நவரத்தினம் கிரிதரன். அவரது இந்த அரும்பெரும் முயற்சி கூட தமிழ் பேசும் சமூகத்தில் பெரிதும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது. அண்மையில் இத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியை வாசித்த சிங்களப் பெண் எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ, அத் தொகுப்பைக் குறித்து பிரபல சிங்கள வார இதழொன்றில் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை பலரது கவனத்தை நல்லூர் ராஜதானி பக்கம் ஈர்த்திருக்கிறது. அந்தக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து இத்துடன் இணைத்திருக்கிறேன்.
இப்போதும் கூட நல்லூர் ராஜதானி, சிதைவுகளோடு ஆய்வுகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆய்வுகளுக்கு, நல்லூர் ராஜதானி குறித்து எழுத்தாளர் நவரத்தினம் கிரிதரன் எழுதியுள்ள ‘நல்லூர் ராஜதானி அமைப்பு’ நூலும் பெரிதும் உதவியாக அமையும். ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பும் எவரும் இந்தத் தொகுப்பையும் அதிலுள்ள விபரங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நூலையும் இணைத்திருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
-முனைவர் க. இராஜா
சங்க காலத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, கணிதம், வானநூல், உளவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் புலமை எய்திய அறிஞர்கள் இருந்தார்கள் என்பது சங்க இலக்கியங்களிலிருந்து புலனாகின்றது. அதிலும் ஆற்றுப்படை இலக்கியம் படைத்த புலவர்கள் வானியல் அறிவினை அதிகம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகின்றது. அதன்படி ஆற்றுப்படை நூல்கள் குறிப்பிடும் வானியல் குறிப்புகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
“தமிழரின் வான நூலறிவு மிகவும் சிறப்பு மிக்கது என சிலேட்டர் போன்ற அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்” (அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.44) என்று அ. தட்சிணாமூர்த்தி கூறுகிறார்.
ஞாயிறு செல்லும் வான வழியையும், அதன் இயக்கத்தையும் காற்று இயங்கும் திசையையும், ஓர் அடிப்படையுமின்றி நிலைபெற்றிருக்கும் ஆகாயத்தையும் அவ்வவற்றின் எல்லையளவும் சென்று நேரில் அளந்து அறிந்தவரைப் போல ஒவ்வொரு நாளும் இத்துணை அளவுடையன என்று ஆராய்ந்து திட்டமாகச் சொல்லும் அளவு ஆழ்ந்த அகன்ற அறிவு பெற்றவர்கள் இருந்தனர் என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். இதனை,
“செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்றும்
இனைத்தென் போரு முளரே” (புறம்.30) என்னும் புறநானூற்றுப் பாடலடிகள் குறிப்பிடுகின்றன.
இயற்கையின் சீற்றத்தைக் கண்டு அஞ்சிய ஆதி மனிதன் கோள்களை வழிபடத் தொடங்கினான். விண்ணில் நிறைந்துள்ள ஏதோ ஒன்றின் மாறுதல்கள் தங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதை மனிதன் உணர்ந்தான். இங்ஙனம் தான் கண்டறிந்த சில விண்மீன்களுக்குப் பெயர் சூட்டிய மனிதன் அதன் இயல்புகளையும் அதனால் விளையும் நன்மை தீமைகளையும் காண முற்பட்டான். தான் கண்டறிந்தச் செய்திகளை எல்லாம் இலக்கியங்களிலும் ஆங்காங்கே பொதிந்து வைத்துள்ளான்.
நுண்பெருங் கலையாகிய வானநூல் சங்க காலத்தில் ஒப்புயர்வற்ற நிலைமையில் இருந்தது. வானின்கண் மின்னுவன யாவும் மீன்கள் என்பதை,
“வானத்தின் கண்ணுள்ள மீன்” (புறம்.9)
“வானம் பல மீனையும் பூக்கும்” (புறம்.7)
“வானத்தில் விளங்கித் தோன்றும் விண்மீன்” (புறம்.15)
எனப் புறநானூறு கூறும்.
எல்லாக் கோள்களும் சூரியனை நடுவாகக் கொண்டு சுற்றி வருவனவாம். பொன்னால் செய்யப்பட்ட ஒரு கலத்தின் தோற்றம், ஆகாயத்தில் ஒளி பொருந்திய நிறத்தினையுடைய கோள்மீன்கள் சூழ்ந்த இளைய கிரணங்களையுடைய ஞாயிற்றின் தோற்றத்தை ஒக்கும் என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதனை,
“வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயிற்றெள்ளுந் தோற்றத்து
விளங்குபொற் கலம்” (சிறுபாண்.242-244) என்னும் அடிகள் குறிப்பிடுகின்றன.
வெள்ளை நிறமுடைய கோள் வெள்ளி எனப்படும். இது மாலையில் அல்லது காலையிலேதான் காணப்படும். இராக்காலம் விடிதற்குக் காரணமாகிய மீன் என இதனைப் பெரும்பாணாற்றுப்படை குறிக்கும்.
“வைகுறும் மீன்” (பெரும்பாண்.318)
சூரியன் மேருவலம் வருதலை,
“உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு” (முருகு.1-2) என்கிறது திருமுருகாற்றுப்படை.
சூரிய மண்டலத்தை ‘செய் மண்டிலம்’ (பெரும்பாண்.442) என்று பெரும்பாணாற்றுப்படையும், வெவ்வெஞ் செல்வன் (பொருநர்.136) என்று பொருநராற்றுப்படையும் கூறுகின்றன.கிழக்குத் திக்கிலே உலகைக் கவ்வியுள்ள இருளைத் தன் பொற்கிரணங்களாகிய கைகளினால் ஆர உண்டு, உலகம் உவப்பக் கடலினின்றும் செந்நிற வண்ணம் எங்கும் பரவ, என்றும் விடியலில் காட்சி தருகிறான் சூரியன். இதனை,
“அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று, எழுதரு பல்கதிர்ப் பருதி” (பெரும்பாண்.1-2)
என்று பெரும்பாணாற்றுப்படையும், திருமுருகாற்றுப்படையும் (முருகு.1-2) கூறுகின்றன. மேலும் பெரும்பாணாற்றுப்படையில்,
“குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு” (பெரும்பாண்.441-442)
என்று கூறுவதைக் காணமுடிகின்றது.
இந்தச் செஞ்ஞாயிற்றையே ‘இளஞாயிறு’ (சிறுபாண்.242 மலைபடு.464) என்று அழைக்கின்றனர். ஞாயிறு மறைந்ததும் அந்தியில் செக்கர் வானம் நெஞ்சை அள்ளும் இயற்கைப் பொலிவுடன் தோற்றம் அளிக்கிறது. அவ்வானத்தில் பிறை தோன்றும் காட்சியையும் காணுதல் கூடும். இதனைப் பெரும்பாணாற்றுப்டையில் காணலாம்.
“அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய்
அந்தி வானத்து ஆடுமழை கடுப்ப” (பெரும்பாண்.412-413)
திங்களின் தண்கதிரையும், அதன் பால்போன்ற வெள்ளிய தன்மையையும் பாராட்டியுரைப்பார் போன்று இதற்குப் பல சிறப்புப் பெயர்களையும் அடைமொழிகளையும் சார்த்தி உரைப்பர் ஆற்றுப்படைப் புலவர்கள். அவை
“திங்கள்” (பெரும்பாண்.11)
“நெடுவெண் திங்கள்” (பெரும்பாண்.251, சிறுபாண்.219)
“பாற்கதிர்” (பெரும்பாண்.250)
திங்களினுடைய வளர்ச்சியின் உச்ச நிலையை,
“பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி
உருவ வான்மதி ஊர் கொண்டாங்கு” (சிறுபாண்.250-251) என்கிறது சிறுபாணாற்றுப்படை.
சுக்கிரன் எனப்படும் கோள் வெண்ணிறம் வாய்ந்தது என்பதாலேயே இது வெண்மீன், வெள்ளி என்னும் பெயரிட்டு அழைக்கப்பெறுகின்றது. சூரியன் உதயமாவதற்கு முன்னதாக ஞாயிற்றுப் புத்தேளுக்குக் கட்டியங்கூறி வருவது போல வைகறையில் காட்சி தருவது. எனவே, ‘வைகுறு மீன்’ என்றும் இதனைக் குறிப்பர். ‘குற்றங் கூறுதல் இல்லாத புகழையுடைய விளக்கமான வெள்ளிமீன்’ என்று பட்டினப்பாலை இதன் சிறப்பைப் பேசுகின்றது. இருள்செறிந்த விடியற் கருக்கலிலே விரிகின்ற வெள்ளிய கிரணங்களைக் கொண்டு எழுவது, ‘விரிகதிர் வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்’ (பொருநர்.72-73) என்கிறது பொருநராற்றுப்படை (மு. சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், ப.164).
நன்னன் சேய் நன்னன் தனது பகையாகிய இருளைப் போக்கிய செயலுக்கு, இருள்நீக்கி எழும் ஞாயிற்றை ஒப்பிட்டு,
“பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன, அவன் வசைஇல் சிறப்பும்” (மலைபடு.84-85) எனப் பேசப்பட்டுள்ளது.
இரும்பகை போக்கித் தோன்றிய இளஞாயிற்றுச் செல்வன் விசும்பில் படர்ந்து மேலெழுகின்றான். கரிகாலன் இளமை தொடங்கிச் சிறுகச் சிறுக வலிமை மேன்மேல் வளரத் தன் நாட்டைத் தோள் வலியால் கொண்டமைக்கு இளஞ்சூரியன் விசும்பில் மேன்மேலும் உக்கிரமுடன் எழுந்து செல்லுதலை உவமிக்கிறார் முடத்தாமக் கண்ணியார். இதனை,
“பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி,
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்தநன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப” (பொருநர்.135-138) என்னும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.
அமாவாசை அன்று திங்களின் உருவம் முற்றும் மாய்ந்துவிடுகிறது. அந்நாளின் பின்நாள் தொடங்கி பிறை பிறந்து வளர்ந்து வருகின்றது. ‘பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை’ (பெரும்பாண்.11) என்று யாழின் பின்புறத்தில் ஏந்தியிருக்கின்ற கவைத்தலையையுடைய கடைப் பகுதியை முதற் பிறைக்கு ஒப்பிடுகின்றார் பெரும்பாணாற்றுப்படைக்காரர்.
எட்டாம் பக்கத்துத் தோன்றும் அரைத் திங்களைப் பெரும்பாணாற்றுப்படை,
“எண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி,
அண்-நா இல்லா அமை வரு வறுவாய்” (பெரும்பாண்.11-12) என்று வர்ணித்துள்ளது.
அரும்பு விரிந்த வெண்டாமரையானது நாட்காலையில் மலர்ந்த பூவில் சென்று தேனை நுகரும். நீல நிறமும் சிவந்த கண்ணும் கொண்ட வண்டுகளின் நிரையொழுங்கு திங்களைச் சேர்ந்து பற்றுகின்ற கரும் பாம்பிற்கு ஒப்ப உளது என்று,
“முள்அரைத் தாமரை முகிழ்வரி நாட்போது
கொங்கு கவர் நீலச் செங்கட் சேவல்
மதிசேர் அரவின் மானத் தோன்றும்” (சிறுபாண்.183-185)
என்று வரும் சிறுபாணாற்றுப்படை அடிகள் அறிவிக்கின்றன.
திங்களின் அருகில் வியாழனும், வெள்ளியும் எப்பொழுதும் நீங்காமல் விளங்குகின்றன என்பதை,
“சேண்விளங்கு இயற்கை வான்மதி சுவைஇ
அகலா மீளின் அவர்வன விமைப்ப” (முருகு.87-88)
என்ற திருமுருகாற்றுப்படை அடிகளின் வழி நக்கீரர் உணர்த்துகின்றார் (தி. மகாலட்சுமி, இலக்கியத்தில் சோதிடம், ப.70).
இரவுப் பொழுது புலரும் விடியற் காலத்தே வெள்ளியானது வானத்தில் தோன்றும் என்ற உண்மையினைப் பல இடங்களில் கவிஞர்கள் எடுத்தியம்பியுள்ளனர். செறிந்த இரவில் விரிகின்ற கிரணங்களை உடையதாக வெள்ளி மீன் எழுந்தது. உடன் பொழுது விடிந்தது என்பதை,
“கைக் கசடிருந்த என்கண்ணகல் தடாரி
இருசீர்ப் பாணிக்கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்” (பொருநர்.70-72)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. அதிகாலையில் எழுந்து விடிவெள்ளியின் உதயம் கண்டு நீராடுதல், பயணம் தொடங்குதல் முதலிய நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன.
மலைபடுடாத்தில் கார்த்திகை நட்சத்திரம் பற்றிய செய்தி இடம்பெறுகின்றது. இதனை,
“அகல் இருவிசும்பின் ஆஅல் போல
வாலிதின் மலர்ந்தன புன்கொடி முசுண்டை” (மலைபடு.100-101) என்னும் அடிகள் உணர்த்துகின்றன.
வானத்து வடவயின் விளங்கும் ஏழு முனிவருள் வசிட்ட முனிவரின் பத்தினி அருந்ததி. அருந்ததி, சாலினி என்று குறிப்பிடுகின்ற இவ்வடமீனானது பெண்களின் கற்போடு தொடர்புபடுத்தப்பட்டு மக்களால் வழிபடும் தன்மையதாகக் காணப்படுகின்றது. திருமணமானதும் புதுமணமக்களை அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கச் செய்கின்ற ‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்’ என்ற வழக்கு இன்றும் நம்மிடம் நிலவி வருகின்றது. இதனை,
“பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்” (பெரும்பாண்.302-303) என்று பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
முடிவுரை
சங்ககால மக்களிடத்தில் இருந்த வானியல் பற்றிய அறிவினைச் சங்கப் பாடல்களான ஆற்றுப்படை பாடல்கள் மூலம் அறியமுடிகின்றது. சூரியன், சந்திரன் ஆகிய இருசுடர்கள் பூமியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தின. சூரியன், கிரகங்கள் இயங்குவதற்கு நடுவணாக அமைந்தது. நிலவு தேய்ந்து அமாவாசையானது; பின் வளர்ந்து முழுநிலவு நாளானது. கார்த்திகை நட்சத்திரம் மக்களிடம் சிறப்பிடம் பெற்றது. வெள்ளி, அருந்ததி போன்ற மீன்கள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றன. அதனை அவர்கள் வாழ்க்கையின் முன்மாதிரியாகப் பாவித்துப் பின்பற்றி வந்தனர்.
உதவி:
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
*****
கட்டுரையாசிரியர் – இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
ஸ்ரீ வித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டினகிரி (மா.).
-முனைவர் அ.மோகனா
‘வைகாசி’ அருளாளர்கள் பல அவதரித்த மாதம். சைவ அடியார்களுக்கும் வைணவ ஆழ்வார்களுக்கும் உகந்த மாதம். பல விசேஷங்கள் நிறைந்த மாதமும் கூட. இந்த வைகாசி மாதத்தின் மூல நட்சத்திர நாளன்று அவதரித்தவர்தான் திராவிட சிசு என்று ஆதிசங்கரரால் அழைக்கப்பட்ட திருஞானசம்பந்தர். இதே நாளில்தான் திருநீலநக்கரும், திருநீலகண்ட பாணரும் அவதரித்தனர். சம்பந்தரின் வாழ்வில் இந்நாள் பல முக்கியத் தருணங்களைக் கொண்டதாக உள்ளது. சம்பந்தர் பிறந்த இதே நாளில்தான் அவருக்குத் திருமணமும் நிகழ்ந்தது. அந்நாளின் பின்னிரவு விடியலில்தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தது.
சம்பந்தர் தமிழ்ப் பக்தி இலக்கியத்தின் தலைசிறந்த முன்னோடி. இவர் பாடிய பாடல்களைக் காணும்போது இவர் பற்றிய நிகழ்வுகளின் உண்மையை உணரமுடிகின்றது. தம் மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டு அதன் பெருமையால் தேவாரம் பாடியவர். சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றவர். வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியவர். திருநீற்றுத் திருப்பதிகம் பாடிப் பாண்டியனுக்கு வெப்பு நோயை நீக்கியவர். எலும்பைப் பெண்ணாக்கியவர் எனப் பல அற்புதங்கள் நிறைந்த வாழ்வினை வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர். தலங்கள் தோறும் சென்று சம்பந்தர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாகக் கோளறு திருப்பதிகம். ஏனெனில் இறைவனிடம் சரணடைந்த அடியார்களை நாளும் கோளும் எதுவும் செய்வதற்கில்லை என்பதை உலகிற்கு உணர்த்த சம்பந்தரால் இப்பதிகம் பாடப்பட்டது. மதுரை அரசி மங்கையர்க்கரசி அழைப்பைஏற்று மதுரை செல்லக் கிளம்பினார். அப்போது அந்த நாள் நல்ல நாள் இல்லை என்று அவர் பயணத்தை தடுத்தார் திருநாவுக்கரசர். இறைவன் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான் என்று சொல்லி கோளறு பதிகம் என்னும் இந்த பத்துப் பாடல்களைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர். பத்துப் பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர். இதில் பதிகப் பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் இதில் உண்டு. இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது இன்றளவும் மக்களின் நம்பிக்கையாகஉள்ளது.
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. (இரண்டாம் திருமுறை, கோளறு திருப்பதிகம், பாடல்.1)
மூங்கிலைப் போன்ற தோளினை உடைய உமையினை ஒருபாகமாகக் கொண்டவன். விடத்தை உண்ட கண்டத்தினை உடையவன். அவன் திங்களையும் கங்கையையும் முடிமேல் அணிந்தவன். மகிழ்ச்சியுடன் வீணையை மீட்டிக்கொண்டு என் உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால் ஞாயிறு, திங்கள் முதலிய ஒன்பது கோள்களும் எனக்குக் குறறத்தைச் செய்யாது. எனக்கு மட்டுமல்ல அவை அடியார்களுக்கும் நல்லதை மட்டுமே செய்யும் என்கிறார் சம்பந்தர். மேலும் கோள்கள் மட்டுமா அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பது, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்களும் அடியார்களுக்கு அன்போடு மிக நல்லனவே செய்யும். சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும். வலிய குரங்கு, புலி, கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியனவும் நல்லனவே செய்யும்! கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியனவும் அடியார்களைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் என அடியார்களுக்கு இப்பூவுலகில் உள்ள அனைத்து உயிர்களும், பொருட்களும் நல்லதை மட்டுமே செய்யும் என்கிறார் சம்பந்தர்.
சம்பந்தரின் பாடல்கள் பக்திச் சுவையில் மட்டுமன்றி இலக்கிய வடிவத்திலும் சிறப்புற்று இருக்கின்றன. இரண்டு சீர்களாலான அடியில் தொடங்கிப் ஒன்பது, பத்துச் சீர்களாலான அடிகள்வரைப் பாடல்களைப் புனைந்துள்ளார் சம்பந்தர். இரண்டு சீர்களால் ஆனவற்றைத் திருவிருக்குக்குறள் என்பர். ஒன்பது சீர்களைக் கொண்ட அடிகளால் ஆனது யாழ்முரிப்பதிகம். பத்துச் சீர்களால் ஆனது திருத்தாளச்சதி. ஒன்று யாழில் அடங்காதது. மற்றொன்று ஆடுவதற்கு உகந்தது. சம்பந்தர் பாடிய பதிகங்களுக்குள் தனிச்சிறப்பு வாய்ந்த பதிகமாக இவ்விரு பதிகங்களும் அமைகின்றன. யாழ்முரிப் பதிக வரலாறு சுவாரசியமானது. சம்பந்தரின் பாடல்களுக்கு யாழ்வாசித்துத் தொண்டு செய்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவர் வாசித்த யாழ்க்கருவி சகோடயாழ் என்னும் பெயருடையது. அவரைச் சேக்கிழார் “சகோடயாழ்த் தலைவர்” எனப் போற்றுகின்றார். சகோடயாழின் பண்டைத் தமிழ்ப் பெயர் “செம்முறைக் கேள்வி” என்பது. இதில் பதினான்கு நரம்புகள் கட்டப் பெற்று இருக்கும். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் உறவினர்கள் யாழ்ப்பாணர் தேவாரப்பதிகங்களை யாழில் வாசித்து வருவதனைக் கேட்டு, “நீங்கள் அத்திருப்பதிகங்களை யாழிலிட்டு வாசிக்கும் சிறப்பினாலே அப்பதிகங்களின் இசை அகிலமெல்லாம் வளர்கின்றது” என்று பாராட்டி மகிழ்ந்தனர். யாழ்ப்பாணர் அந்த பாராட்டுரைக்கு மகிழவில்லை. அதற்கு மாறாகச் செவிபொத்தி உளம் நடுங்கினார். திருஞானசம்பந்தப் பிள்ளையாரை அடைந்து அவரது திருவடியைப் போற்றித், “திருப்பதிக இசை அளவுபடாத வகையில் இவர்கள் மட்டுமேயன்றி உலகிலுள்ளோரும் அறியும் வகையில் பலரும் புகழும் திருப்பதிகம் பாடியருள வேண்டும். அவ்வாறு பாடியருளப் பெற்றால் பண்புமிக்க அந்த இசை யாழின்கண் அடங்காமை யான் காட்டப் பெறுவன்” என்று விண்ணப்பித்தார். பிள்ளையாரும், “மாதர் மடப் பிடி”என்ற திருப்பதிகத்தை, “பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலு நிலத்தநூல் புகன்ற பேத நாதவிசை முயற்சிகளா லடங்காத வகை `காட்ட”ப் பாடியருளினார். கண்டம் என்றால் மிடறு என்று பொருள். கலம் என்றால் கருவி, யாழ் என்று பொருள். அதுவரையிலும் மிடற்றிலோ, யாழிலோ நாதவிசை முயற்சிகளால் இசைக்கப் பெற்றிராத, இசைநூல்களில் சொல்லப் பெற்றிராத இசை வகை காட்டிப் பிள்ளையார் பாடியருளினார், எனச் சேக்கிழாரும் இந்நிகழ்ச்சியைக் கூறியுள்ளார். பாடல் வருமாறு,
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
-நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
-அவர்படர் சடைநெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
-இரைந்நுரை கரைபொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைத யங்குமலர்ச் சிறை வண்டறை
-எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
(முதல் திருமுறை, யாழ்முரிப் பதிகம், பாடல் 1)
இப்பாடல் ஒன்பது சீர்களைக் கொண்டிருந்தாலும் சந்த வாய்பாட்டில் தான தனத்தனனா – தன – தானன தானனா/ தனா – தனா – தனா தனதன தனனா என்றவாறு அமைந்துள்ளதை ந.சுப்புரெட்டியார் குறித்துள்ளார். அடிமுதற்கண் தொடங்கிய இயலும் இசையும் அவ்வடிக்குள்ளேயே முரிந்து மாறுபடும்படி அமைந்தமையால் முரி ஆனது. திருநீலகண்ட பாணர் யாழை முரிக்க முயன்றதனாலும் முரியாயிற்று.
திருஞானசம்பந்தர் தான் வாழ்ந்த பதினாறு ஆண்டுகளுக்குள் பல்லாயிரம் ஆண்டுகள் புரிய வேண்டிய சாதனையைப் புரிந்தவர். அவர்தம் பக்திச்சிறப்பையும் இலக்கியப்புலமையையும் கருத்து நிலைப்பாட்டையும் புரிந்து கொண்டதால்தான் ஆதிசங்கரர் அவரைத் திராவிட சிசு என்றார்.
*****
பார்வை நூல்கள்
சம்பந்தர், திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரப் பதிகங்கள், திருமுறை (1,2,3), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப்பெற்றன, கழகம், சென்னை, 1973.
சேக்கிழார்,பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் (பன்னிரண்டாந்திருமுறை), சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 1950.
ந.சுப்பிரெட்டியார், மூவர்தேவாரம் – புதிய பார்வை, நிவேதிதா பதிப்பகம், சென்னை, 2003
*****
கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை
8056621869