Blog

  • வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

    IMG_20170815_091243

    தன்வந்திரி பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா இன்று 15.8.2017 ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது

    IMG_20170815_110002

    காலை 8.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பாரத மாதா சன்னதியில் கோ பூஜை, கணபதி பூஜை, பூ சூக்த ஹோமம் நடைபெற்று பாரத மாதாவிற்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

    IMG_20170815_092407

    9.00 மணியளவில் சுதந்திர தின கொடியேற்று விழாவும் நடைபெற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் சென்னை டாக்டர் திருமதி கோகிலா செல்வராஜ், இராணிபேட்டை ஆடிட்டர் ஜி.தேவராஜன், ஆம்பூர் டாக்டர் ப்ரித்வீராஜ் மற்றும் தன்வந்திரி பீட நிர்வாகிகள் சேவார்த்திகள் கிராம பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆடி கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஹோமம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • ஆனந்த சுதந்திரம் !

     

    சுதந்திரதின நல்வாழ்த்துகள் !

    unnamed

     எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     
    unnamed (4)ஆன்மீகக் கொள்கைதனை அரவணைக்கும் பாரதமே
    அஹிம்சையினை உள்ளுணர்வாய் ஆக்கிநிற்கும் பாரதமே
    அகிலத்தில் பலநிலையில் வளர்ந்துவரும் பாரதமே
    ஆனந்த சுதந்திரத்தை அமுதமெனக் காத்திடுவாய் !

    பலபேரின் கண்ணீரால் எழுச்சிபெற்ற பாரதமே
    பலபிரிவு மக்களையும் இணைத்துநிற்கும் பாரதமே
    நிலமீது பலசண்டை நிகழாமல் இருப்பதற்காய்
    பலநீதி இலக்கியங்கள் படைத்தளித்தாய் உலகினுக்கே !

    சர்வவுமே இறைவனென சாற்றிநிற்கும் பாரதமே
    சமத்துவத்தை நிலைநிறுத்த தானுழைக்கும் பாரதமே
    இவ்வுலகை இரட்சிக்க ஞானிகளை ஈந்தளித்தாய்
    இவ்வுலக மாந்தரெலாம் இந்தியாவை நோக்குகிறார் !

    வேதமொடு சாத்திரங்கள் வியந்துவிடும் இலக்கியங்கள்
    பாரதத்தாய் உலகினுக்கு ஈந்தளித்தாள் பொக்கிஷமாய்
    யார்வந்து போனாலும் நலம்விளைக்கும் எனும்நினைப்பை
    நாநிலத்துக் கீந்தளிக்கும் பாரதத்தாய் வாழியவே !

    புத்தர்காந்தி புனிதநபி புதுவெளிச்சம் யேசுபிரான்
    அத்தனைபேர் கொள்கைகளும் அடக்கிநிற்கும் பாரதமே
    உத்தமர்கள் பலபேர்கள் உன்மடியில் பிறந்தார்கள்
    உயர்வான சுதந்திரத்தை உயிர்ப்புடனே வைத்திடுவாய் !

    இமையும்முதல் குமரிவரை எல்லையினைக் கொண்டுள்ளாய்
    இயலாமை எனும்நினைப்பை இன்மையாக்க முனைகின்றாய்
    தவவலிமை மிக்கோரால் தான்வரங்கள் பெற்றுள்ளாய்
    தகைமைநிறை சுதந்திரத்தை தக்கபடி காத்திடுவாய் !

    சுதந்திரமாய் உலவுதற்குச் சுதந்திரத்தை விட்டிடுவோம்
    சுதந்திரத்தை யாவருமே சுவாசிக்கச் செய்துநிற்போம்
    சுதந்திரத்தை சுகமாக சுவையாக்க முனைந்நிதிடுவோம்
    சுதந்திரத்தைக் குலைப்பார்க்குச் சுதந்திரத்தை உணர்திடுவோம் !

    ஆனந்த சுதந்திரத்தை அகமகிழக் கொண்டாட
    ஆனந்தப் பூங்காவை அமைத்திடுவோம் பாரதத்தில்
    ஆனந்தம் எனுமுணர்வை அனைவருமே பெற்றுவிட
    அன்புபாசம் நேசமொடு அஹிம்சைதனை அரவணைப்போம் !

    Share
  • சுதந்திரம் எங்கே

    ரா.பார்த்தசாரதி

     

    எழுபத்தொன்று ஆண்டுகள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றோம்

    பெயரளவில்  வளர்ச்சியினை   கண்துடைப்பாக காட்டுகின்றோம்

    முக்கிய திட்டங்களுக்கு அரசாங்கம், முன்னுரிமை கொடுப்பதில்லை

    நதிநீர்  இணைப்பும்,  விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படவில்லை !

     

    இன்று சுதந்திர நாட்டின் நிலைமை என்ன   நினைக்கத்தோன்றுதே

    அண்டை மாநிலங்களே  உதவி  அளிக்க மறுக்கிறதே

    ஜாதி, மத  பிரிவினையால் எல்லா திட்டங்களும் முடக்கப்படுகிறதே

    அரசியல் தலைவர்கள் ஒற்றுமை விலகி, பிளவு ஏற்படுகின்றதே !

     

    அன்றைய அரசியல் தலைவர்கள் நாட்டிற்காக பாடுபட்டனரே

    இன்றைய அரசியல் தலைவர்கள் தனக்காக பாடுபடுகின்றனரே

    லஞ்சமும், தீவிரவாதமும் எங்கும் தலைவிரித்து ஆடுகின்றதே

    கோடி, கோடியாக பணம் மந்திரிகள் கைகளில் புழங்குகிறதே     !

     

    இன்று சுதந்திரமாக எதிர்க்கவோ, எழுதவோ துணிவு    இல்லை

    பத்திரிகைகளும், இலைமறை,காய்மறைவாய்  வெளிப்படுத்துதே

    பத்திரிகை சுதந்திரமும், அரசியல் ஆதிக்கத்தால் ஒடுக்கப்படுகிறதே

    அரசியல் செல்வாக்கால் எல்லாவற்றையும் அடிபணிய வைக்கிறதே !

     

    சுதந்திரத்திற்காக  தன் உயிரையும் தியாகம்  செய்தனர்  அன்று

    சுதந்திரமாக கோடிகணக்கில் பணம் கொள்ளையயடிக்கின்றனர் இன்று

    நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட  அரசியல் அராஜகம்

    மக்களே ! இன்றே எழுமின் கடைசி வரை போராடி எதிர்த்து வெல்வீர்!

     

    சுதந்திர நாட்டில், சுதந்திரம் எங்கே என கேட்க தோணுதே?

    மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல்  அமையுமா

    நல்ல அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வரவேண்டாமா

    எழுபத்தோராவது சுதந்திர தினம் இதற்கு விடை காணுமா ?

    Share
  • இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    indianflag
    அந்நிய ஆதிக்கத்திலிருந்து நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவுற்று இன்று 71 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இனிய தருணத்தில் நம் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இன்னுயிரையும் ஈந்துள்ள தியாகச் செம்மல்களை நினைவுகூர்வோமாக! நம் நாட்டின் முன்னேற்றத்தில் மகளிரின் பங்கு குறிப்பிடும் வகையில் அமைந்திருப்பதும் மகிழ்வான செய்தி.

    சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு!

    ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது தனிமனிதர்கள் வளர்ச்சியின் அடிப்படையிலேயே அமைய முடியும். அத்தகைய தனிமனித வளர்ச்சியின் ஆணி வேராக இருப்பவர்கள் பெண்கள் மட்டுமே. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் மட்டுமல்ல வாழ்வாதாரத்தின் அடிப்படையிலேயே பெண்தான் இருக்கிறாள் என்பதே நிதர்சனம். ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பான்மையான சமூக அமைப்புகள் பெண்களின் தன்னலமற்ற சேவையின் மூலமே கட்டமைக்கப்பட்டுள்ளன. அதாவது பாலின வேறுபாடுகளின்றி, சமுதாய முன்னேற்றத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பும் உள்ளது. தற்போது பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக சம ஊதியம், சம கல்வி, சம வேலை வாய்ப்புகள் என பல்வேறு வகையான வாய்ப்புகளும் பெருகி வருவதும் கண்கூடு. கல்வியில்லாத பெண்கள் களர் நிலம். அங்கே புல்விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஒரு குடும்பத்தில் ஓர் ஆண்மகன் கல்வி கற்றால் அதனால் அவனுக்கு மட்டுமே பயனுண்டு. ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமைக்கும் பயன்படுகிறது. அக்கல்வியால் குழந்தைகளை நன்றாகப் பேணி வளர்க்கவும் முடிகிறது. ஆம் கல்வி கற்ற பெண் தன் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க முடிகிறது.

    bharat-mata-
    சமுதாய அமைப்பு என்று எடுத்துக்கொண்டால் அதில் பெண்கள் பெற்றுள்ள செல்வாக்கு மட்டுமே அந்நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமையும். அத்தகைய வளர்ச்சிக்கு பெண் கல்வி மட்டுமே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதாவது நற்பண்பை வளர்க்கக்கூடிய அறிவை புகட்டுவதும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கக்கூடியதுமான திறன்களை உருவாக்குவதுமே பெண் கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருக்க வேண்டும். சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு இயங்க வேண்டுமாயின் கல்வியின் அவசியத்தை முதலில் உணர்தல் வேண்டும். சமுதாயத்தில் உன்னதமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்றால் அது பெண் கல்வி மட்டுமே. ஆம் பல துறைகளிலும் ஆண்களுக்கு சரி நிகராக முன்னேறிவரும் இன்றைய பெண்கள்தான் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகிறவர்கள் என்றால் அது மிகையல்ல. அத்தகைய கல்வி, இலட்சிய வேட்கை மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு முன்னேற்றம், புதிய சிந்தனையில் நாட்டம், ஆகியவற்றை முன்னெடுக்கக்கூடியதாக அமைய வேண்டும்.

    ஆதிகாலந்தொட்டு பெண்கள் வீரம், விவேகம், உழைப்பு, பொறுப்பு, பொறுமை என அனைத்திலும் ஆண்களைக்காட்டிலும் சிறந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர். புலியை முறத்தால் விரட்டிய பெண்மணிகள் சங்க காலத்திலேயே இருந்துள்ளனர். வயலில் இறங்கி பாரபட்சமின்றி ஓயாது உழைத்தவர்கள் அக்காலத்திலும் இருந்தனர். ஆயினும் கல்வி கற்பதில் மட்டும் பெண்களுக்கான எல்லைக்கோடு அழுத்தமாகவே பதியப்பட்டிருந்தது.

    ஆனால் இன்றைய நிலையே வேறு. “புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்ற பாரதிதாசனின் வார்த்தைகளை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுதந்திரம் இல்லாமல் அடிமைத்தளையில் சிக்குண்டு கிடக்கும் பெண்கள் உருவாக்கும் சந்ததியினரின் துணிவும், தன்னம்பிக்கையும் கேள்விக்குறியாகிவிடுகின்றன.

    மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடமையைக் கொளுத்துவோம்
    என்றார் பாரதி.

    அதாவது, பெண்களை எண்ணத்தால், சொல்லால், செயலால் என எவ்வகையிலும் இழிவுபடுத்தும் அறிவற்ற செயலை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்பதே இதன் பொருள்.

    ஆனால் இன்றைய நிலையில் அன்றாடம் ஊடகங்களில் பெண்கள் பலவகையிலும் இழிவுபடுத்தப்படும் செயல்பாடுகளில் முன்னணியில் நிற்கின்றன. விளம்பரங்களில் தேவையின்றி பெண்களை அரைகுறை ஆடைகளுடன், மோசமான பாலுணர்வைத் தூண்டுகின்ற உடல் மொழிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று மிகக் கேவலமாக நடத்துவதைக் காணமுடிகிறது. தொலைக்காட்சி தொடர்களில் மேலும் ஒருபடி மோசமாக, பெண்களை கலாச்சார சீர்கேடுகளை ஊக்குவிப்பவர்களாக புனையப்படுவதுதான். குடும்பத்தில் வன்முறைகளை எப்படி செயல்படுத்துவது என்பதை பெண்களைக்கொண்டு வகை வகையாகத் திட்டமிட்டு காட்சிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொலை, கொள்ளை, கர்பத்தைக் கலைத்தல், பாலியல் வன்கொடுமைகள் போன்ற கொடுமைகளை சர்வ சாதாரணமாக பெண்கள் செய்வதுபோல காட்சியமைப்பதை எந்த தணிக்கைக் குழுவும் கண்டுகொள்வதில்லை என்பது வேதனையான விசயம். பண்பாடு மற்றும் கலாச்சார சீரழிவிற்கு மிக முக்கியமான காரணிகளில் முதன்மையாக இருப்பது ஊடகங்கள் என்பதை மறுக்கவியலாது.

    ஒரு பெண்ணின் வாழ்வியல் என்பது ஆரம்பம் முதல் கல்வியில் தொடங்க வேண்டும். மகாகவி பாரதி சொல்வது போன்று,

    “அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன. முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி; மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது என்பது கருத்து”

    (சக்கரவர்த்தினி கட்டுரை-பக்.83) 

    ஓரளவிற்கேனும் படித்த பெண்கள் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்பதோடு அரசியல் செயல்பாடுகளிலும் பங்கேற்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் பல நன்மைகள் விளைகின்றன. இன்று கணினித் துறையில் இருக்கும் பெண்கள் பல நாடுகளுக்கும் பயணம் செய்து தங்கள் அறிவின் மேன்மையை வெளிப்படுத்தி புகழ் பெறுகிறார்கள். அதுமட்டுமட்டுமின்றி அங்குள்ள புதுமைகளை நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும் முனைவதன் மூலம் பாரதியின் கனவை நினைவாக்குகின்றனர்.

    கல்வி, ஆளுமை, சுதந்திர உணர்வு, அச்சமின்மை, என ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டெழுந்து வெற்றிவாகை சூடிவரும் புதுமைப் பெண்களை பரவலாகக் காணமுடிகிறது.

    எதிர்படும் சவால்களனைத்தையும் சமாளிக்கும் வல்லமையையும் பெற்றிருக்கிறார்கள். ஆக சமுதாயப் புரட்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள எந்த தடையும் இல்லாத வகையில் பெண்கள் இன்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்கள்.

    பொருளாதார முன்னேற்றம் என்பது மட்டுமே ஒருவரின் உண்மையான வளர்ச்சியை நிர்ணயிக்கக் கூடியதாகும். குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரமும், முன்னேற்றமும் மிகவும் அவசியமானதாகும். இன்றைய உலகமயமாக்கல், பொருளாதார மறு சீரமைப்பு போன்றவைகளால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் பெருகி வருவது பெண்களுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. பலர் தொழில் துறைகளிலும், உற்பத்தித் துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர்.

    சிலகாலம் முன்பு தனியார் அல்லது அரசு நிறுவனங்களில் பணிபுரிவது மட்டுமே பெண்களின் வழமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றைய நிலையில் மற்றைய உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும், சமுதாயத்தில் பெண்களின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுய தொழில் செய்வதிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வெற்றியும் கண்டு வருகின்றனர் என்பதும் மகிழ்வான செய்தி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவின்படி அரசியல், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய அனைத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் பெண்களின் சுதந்திரமான பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் பாரபட்சமின்றி வழங்கவேண்டும் என்றும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

    இத்தனைச் சட்டங்களும், கல்வியறிவும் இருந்தாலும் பெண்களுக்கு போதுமான அதிகாரங்களும் வாய்ப்புகளும் குறிப்பிட்ட மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதும் உண்மை. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இந்திய சமுதாயம் ஆணாதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்றே சொல்லமுடிகிறது. அலுவலகங்களில் ஒரே விதமான பணிகளுக்கு ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு குறைந்த அளவிலுமே சம்பளம் வழங்கப்படுகிறது. கூலி வேலை செய்யும் தொழிலிலும் இதே நிலையே உள்ளது.

    பெண்களும் பொறுப்பு அளிக்கப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட்டு தாமே முன்வந்து முக்கியமான பொறுப்புகளை ஏற்கவேண்டும்.

    ஆயினும் பாரம்பரியமாக குடும்பம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கும் பெண்களும்கூட பொருளாதார நிலையில் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைதான் இன்று இருக்கிறது. தடைகளைத் தகர்த்தெறிந்து சுயமாக நின்று தொழில் புரிய முன்வரும் பெண்களும் தொழிலில் சந்திக்கும் சவாலை விட பன்மடங்கு சவால்களையும் பிரச்சனைகளையும் தங்கள் சமுதாயம், குடும்பம் போன்றவற்றில் அதிகமாகவே சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களைப் போன்றல்லாமல் பெண்கள் குடும்ப பொறுப்புகளையும் சேர்த்தே சுமக்க வேண்டியுள்ளது. ஆனால், அவள் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்ப பொறுப்பையும் இயல்பாக ஏற்கும் நிலையே இருக்கிறது. பல காலங்களாக பழக்கத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமே குடும்பம், குழந்தைகள் பராமரிப்பு என்று இருக்க வேண்டும் என்ற நிலையில் மாற்றங்கள் கொண்டுவருவது எளிதாக இருப்பதில்லை. சமுதாயத்தில் எந்த மட்டத்தில் இருக்கும் ஆண்களும் இதனை புரிந்து கொள்ள முயல்வதில்லை.

    இதுமட்டுமின்றி, தேவையான அளவிற்கு உழைப்பதற்கும், சவால்களை சமாளிப்பதற்குரிய பக்குவம் பெற்றிருந்தாலும் பெண்கள் எதிலும் சுயமாக முடிவு எடுக்க முடியாத வகையில் பெற்றோர், கணவர், உறவினர்கள் என்று பலரின் தலையீடுகளை சமாளிக்க வேண்டியுள்ளது. தொழில் விசயங்களிலும் இந்த தலையீடு இருப்பதால் பல நேரங்களில் அது வெற்றி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்பதும் நிதர்சனம்.

    வெற்றி பெற்ற பெரும்பாலான பெண் தொழிலதிபர்கள், ஆண்களை விட பன்மடங்கு அதிகமாக உழைத்தவர்களாகவோ அல்லது குடும்பத்தின் முழுமையான ஒத்துழைப்பு பெற்றவர்களாகவோ இருப்பவர்கள் என்பதில் ஐயமில்லை.

    பெண்களுக்கான சிறப்பு திட்டங்களும், சலுகைகளும் நிறைய இருக்கின்றன. இவைகள் பற்றிய விழிப்புணர்வுடன் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில் துவங்கி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தொழில் தொடங்க முன் வரவேண்டும்.

    அனைத்திற்கும் மேலாக பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராடுவதோடு தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் தயங்கக்கூடாது.

    ஒரு நாட்டின் புகழ் அந்த நாட்டின் மக்கள் தொகையைக் கண்டு மதிப்பிடப்படுவதில்லை. மாறாக அந்நாட்டிலுள்ள சிறந்த மேதைகள், சிந்தனையாளர்கள், நல்ல தலைவர்கள், பண்பாளர்கள் ஆகயோரின் எண்ணிக்கையைக் கொண்டே கணிக்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அப்படிப்பட்ட நல்ல குடிமக்களை உருவாக்கும் தாய்க்குலத்தை சுதந்திரமாக செயல்படவும், துணிவுடன் சவால்களை எதிர்கொள்ளவும் வழியமைக்க வேண்டும்.

    சேமிக்கின்ற நல்ல பழக்கமும், குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்கும் திறமையும் பெண்களிடம் தான் அதிகமாக உள்ளது என்பதையும் மறுக்கவியலாது.

    தற்கால பெண் சாதனையாளர்களில் மறக்க முடியாதவர்கள் என்றால், 

    துர்காபாய் தேஷ்முக், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தவர். ஆந்திர மகிளா பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். அர்த்தமற்ற சமூகக் கட்டுப்பாடுகளை பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என முழங்கியவர். நம் நாட்டில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்தவர். பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ, பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். ‘சமூக சேவைகளின் அன்னை’ என்று புகழாரம் சூட்டிய இந்திரா காந்தி இவரை தனது குருவாகக் கொண்டார். இரும்புப் பெண்மணி என்று போற்றப்பட்டவரான இவர் தமது இறுதிமூச்சு வரை பெண்கள், குழந்தைகளின் நலனுக்காகவே பாடுபட்டவர்.

    santhaடாக்டர்.சாந்தா, உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தவரும் இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினர், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவர் என பல அமைப்புகளில் இணைந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர். இவரது தன்னலமற்ற மருத்துவ சேவையால் அடையாறு புற்று நோய் மருத்துவமனை பல சாதனைகளைப் படைத்துள்ளது. 61 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக் கொண்டவர். புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மருத்துவமனை வளர்ச்சிக்கே செலவு செய்வது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மன நோயாளிகளின் புனர் வாழ்விற்கு வழியமைத்த டாக்டர் சாரதா மேனன் , இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மற்றும் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பெண்மணி. பத்ம பூசண் விருது, அவ்வையார் விருது ஆகியவற்றைப் பெற்றவர். தங்கள் வாழ்நாள் முழுவதும் முழுமையான அர்ப்பணிப்புடன் எதிர் நீச்சல் போட்டு சாதனை புரிந்தவர்கள் இவர்கள்!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

     

    150916 Rajagopala-lr

    கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
    இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
    ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனை
    ஏகிட எல்லாம் எளிது….

     
    நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
    கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
    அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
    குப்பம் நுழைந்தவனே காப்பு….

     
    சுதாமன்(குசேலர்) அவலுக்கு சொத்தை அளித்த
    கதாதரன் கண்ணன், பரம -பிதாவாம்
    அலர்மேல் அன்னை மணாளன் அருளால்
    மலரும்நாள் காசின் பிறப்பு….

     

    நிவேதனம் கோகுலாஷ்டமி
               ———————————-
    திருக்கண் ணமுது திரள்கின்ற வெண்ணை
    பருப்புதயிர் சாதம், பழங்கள் -உருக்குலைந்து
    அண்டாவில் சாறு, அதிரசம், சீடைமுறுக்கு,
    உண்டேனுன் நாமம் உரைத்து….

    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
    அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
    அப்பயலுக்(கு) அன்பே அமுது ….!கிரேசி மோகன்….!

    Share
  • கிருஷ்ண ஜெயந்தி சிந்தனைகள்

     

    கிரேசி மோகன்
    —————————————————————

    கோலத்தால் காலிட்டு கைகூப்பி கும்பிட்டு
    ஞாலத்தை உண்டுமிழ்ந்த நாதருக்காய் -தாலத்தில்(தட்டில்)
    பக்ஷணத்தை ஏந்திநின்றால், பக்தராதைக்(கு) ஈடாக
    தக்ஷிணையாய் கேட்டார் தபஸ்….!

    போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
    ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
    அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்(யமன்)
    கொய்யா(து) இருப்பானா கூறு….!

    பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் ! (235)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளராக பெஜவாடா வில்சன் அவர்களை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    கர்நாடகாவை சேர்ந்த பெஜவாடா வில்சன் மனிதகழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வருபவர். மனித கழிவுகளை மனிதர் கையால் அகற்றுதல் 1993ல் இருந்து இந்தியாவில் சட்டவிரோதம் என்பதே பலருக்கும் தெரியாத தகவல். ஏனெனில் இன்னும் அந்த சட்டம் அமுல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதே தெரியாத அளவு பல மாநிலங்களில் தொழிலாளர்கள் இன்னமும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இத்தகைய தொழிலாளரின் குடும்பத்தில் பிறந்தவர் தான் பெஜவாடா வில்சன். இவரது தந்தை ஜேக்கப் பெஜவாடா கர்நாடகாவின் கோலார் மாநகராட்சியில் மனித கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்தார். இதற்கு இந்தியில் சபாயி கரம்சோரி எனப் பெயர். இவரது சகோதரருக்கு இந்திய ரயில்வேயின் இரயில்களில் கழிவுகளை அகற்றும் வேலை கிடைத்தது. பள்ளியில் இவரை சகமாணவர்கள் தோட்டி என அழைத்து கேவலப்படுத்துவார்கள். இதனால் தற்கொலை செய்யகூட வில்சன் முயன்ற சூழல் எல்லாம் உருவானது.

    1

    பொலிட்டிகல் சயன்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற வில்சன் வேலைக்குப் போவதை விட்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுக்கு எதிராகப் போராட ஒரு இயக்கத்தைத் துவக்கினார். அதற்கு சஃபாயி கரம்சோரி அந்தோலன் என பெயர் சூட்டினார். கடிதங்கள் எழுதுதல், போராட்டம் என பலமுனைகளில் போராடி வந்தார். 1993இல் இந்திய பாராளுமன்றம் மனிதர்களின் கழிவை மனிதர்கள் அகற்றுவதை தடுக்கும் சட்டத்தை இயற்றியது. ஆனால் பலனின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இது இன்னமும் தொடர்ந்தே வருகிறது

    2003இல் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் வில்சன். சட்டம் அமுல்படுத்தாமல் இருப்பதை கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு 16 அரசு அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டது. அனைத்து மாநிலங்களின் கேபினட் செக்ரட்டரிகளுக்கு இதை ஒழிக்க கடுமையான நெறிமுறைகளை அறிவித்து உத்தரவும் அனுப்பப்பட்டது.

    பத்தாவது திட்டகமிஷனில் கரம்சோரி அந்தோலன் சார்பில் இதற்கான திட்டங்கள், நெறிமுறைகளை வகுக்கும் குழுவின் தலைவராக பெஜவாடா வில்சன் இடம்பெற்றார்.

    இவருக்கு ஜூலைமாதம் ஆசியாவின் மிக உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது

    துப்புரவு தொழிலாளிகளின் நலனுக்காக பாடுபடும் இவருக்கு அளிக்கப்படும் இந்த வல்லமையாளர் விருது, இக்கொடுமையை அகற்றும் பணிக்கான விழிப்புணர்வாக அமையும் என வல்லமை நம்புகிறது

    பெஜவாடா வில்சன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • A Ruby – மாணிக்கம்

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜின்மன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

    Light-in-Heart

     

    மலையுச்சியில் கருகுமொரு மலரது,
    நொறுங்கியதொரு இருதயத்தின் 
    வழியுமொருத்துளிக் குருதி,
    வெள்ளியாய் ஒளிரும் ஆழ்கடலினூடே
    எவருமறியா, தூய்மையானதோர் நிர்வாணத்துளி
    மர்மமிகு காலைக் கடலினூடே
    புதைந்து கிடக்கிறது.
    இரவின் பின் இரவாக
    இப்புவியை கனவின் கனவாக்கி
    தீச்சுவாலையாக உருக்கொண்டதது.

    Share
  • படக்கவிதைப் போட்டி 123-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சாலையின் ஓரத்தில் குவிக்கப்பட்டிருக்கும் கழிவுகளைத் தின்று நம்மைக் கழிவிரக்கம் கொள்ளவைக்கும் பசுவொன்றைப் படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. முருகானந்தன். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

    cowonstreet

    பசுவைக் கோமாதாவாய்க் கும்பிடும் நம் சமூகம், அதன் கறவை நின்றதும் அதனுடனான தம் உறவை முறித்துக்கொண்டு அதனை அடிமாடாய் ஆக்குகின்ற அவலம், பயனில்லா உயிரெதையும் தள்ளிவைப்பதும் அதன் வாழ்வுக்குக் கொள்ளிவைப்பதும் மாந்த இயல்பு என்பதை மன்பதைக்குச் சொல்லாமல் சொல்கின்றது.

    சாலையில் உணவைத்தேடும் இந்த மாடு, நம் கவிஞர்களின் கற்பனைக்கும் நல்ல தீனி போட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.

    ’செவிநுகர் கனிகளை’ நமக்குத் தரவிருக்கும் கவிகளை இனி வாழ்த்தி வரவேற்கின்றேன்!

    ***

    தன் பாலை மட்டும் விரும்பும் மனிதன் தன்பால் அன்பின்றி நடந்துகொள்வதை உணர்வுபூர்வமாய்ப் பசு விவரிப்பதைத் தன் பாட்டில் காட்டியுள்ளார் திரு. ரா. பார்த்தசாரதி.

    கோமாதா என் குலமாதா என்று சொல்வதில்தான் பெருமை
    தனியே பசுவினை வீதியில் உணவுக்காக அலையவிடுவது சிறுமை
    நான் பால் கொடுத்தால்தான் எனக்கு நல்ல உணவு
    பாலை நிறுத்தினால் அலையவிடுவதோ நடைபாதைத் தெருவு !

    வயிறுக்காக கண்டதை தின்று நான் உயிர் வாழ்கின்றேன்
    என் உடம்பு பாழானாலும் ஊசி போட்டு பால் கறக்கின்றான்
    தவிர, வைக்கோல் கன்றை வைத்தும் ஏமாற்றி பால் கறக்கின்றான்
    ஏனோ, இன்று வரை காப்பாற்றியதற்கு நான் பாலை கொடுத்தேன்!

    என் பாலிலும் தண்ணீர் கலந்து, கலப்படம் செய்து விற்கின்றான்
    என் முதுமையை உணர்ந்து என்னை தெருவில் அலைய விடுகிறான்
    என் கன்றுகளை சொத்தாக கொடுத்து அவனை மேம்படுத்தினேன்
    என்னைச் சொத்தையாக நினைத்து அடிமாடாய் நினைக்கின்றான் !
     

    நம் உயிரையும், உடலையும் வளர்ப்பது தாயும், பசுவுமே
    பால் தரும்வரை அதனை தெய்வமாய் நினைக்கின்றோம்
    முதிர்ந்த பசுவினை கோசாலையில் விடத் தோன்றவில்லை
    தாயை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்துவர மனமில்லை!

    பறவைகளும், மிருகங்களும் ஜாதி மதம் பார்ப்பதில்லை
    பணத்தால் ஏழை பணக்கார ஜாதி தோன்றாமல் இல்லை
    தாயாரையும் பசுவினையும் தெய்வமாகக் கருதவில்லை
    ஆறறிவிற்கும் ஐந்தறிவிற்கும் இவ்வுலகில் மதிப்பில்லை!

    ***

    ”பசு பால்கொடுக்கும் என்று போதித்த நம் கல்வி, பசுவுக்கும் பசியெடுக்கும்; அது புசிக்க நல்லுணவை நாம் தரவேண்டும் என்று போதிக்கத் தவறிவிட்டதே!! கோமாதா என்று பசுவைக் கொண்டாடவும் வேண்டாம்; அடிமாடாய் (இறைச்சிக்கு) அதனைத் துண்டாடவும் வேண்டாம்” என்று வேதனையோடு விளம்புகின்றார் திரு. அ. இராஜகோபாலன்.

    விதியோ?

    பசு பால் கொடுக்கும்என்றுதான்
    பள்ளியில் கற்றோம்.
    பசுவின் பசி பற்றியும்
    அதன் உணவின் ருசி பற்றியும்
    பாடத்தில் இல்லை.

    புல்லும், நெல்லும் விளைந்த மண்ணில்
    கட்டிடங்கள் முளைத்துவிட்டன.
    இந்த,
    நகரப் பசுக்களுக்கு
    ருசிக்க அல்ல, பசிக்குக்கூட,
    எத்தனை தேடியும், பாவம்,
    கழிவுகள் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

    நெகிழியைத் தின்று கழிந்து சாக விதியோ?
    கோ மாதாஎன்று போற்றுதலும் வேண்டாம்.
    அடிமாடு என்று அழித்தலும் வேண்டாம்.
    அது பற்றியதான
    அரசியல் உரசல்களும் வேண்டாம்.

    நம் போல்
    ரத்தமும் சதையும் கொண்ட
    இன்னொரு உயிர்.
    வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.

    (நெகிழி = பாலித்தீன் காகிதங்கள்)

    ***

    ”பயிர்த்தொழில் செய்து உயிர்வளர்க்க வழியின்றிப் பிழைப்புக்காகப் பட்டணம்வந்த உழவனுடன் அவன் வளர்த்த மாடும் வந்தது; புல் உணவு கிடைக்காது குப்பைகளைத் தின்று நொந்தது” என்று உளம் வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பட்டணந்தான்

    கழனியில் இன்று பயிரில்லை
    கட்டிடம் பயிராய் வளர்ந்ததுவே,
    உழவனும் இங்கே தங்கவில்லை
    ஊரை விட்டே போய்விட்டான்,
    பழகிய மாடும் அவனுடனே
    பட்டணம் வந்து சேர்ந்ததம்மா,
    வழக்கமாய்த் தின்னும் புல்லில்லை
    வாய்க்குக் கிடைத்தது குப்பைகளே…!

    ***

    ”பட்டிக்காட்டிலேயே புல் இல்லாதபோது பட்டணத்தில் பசும்புல்லின் தலை காண்பதேது?  புல்முளைத்துப் பசு மேயும் பொற்காலம் பட்டணத்தில் வாய்த்திடுவ தெக்காலம்?” என்று ஏக்கத்தோடு வினவுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    பட்டணத்தில் புல் முளைக்காது!

    கெட்டுப்
    பட்டணம் போ !
    பட்டி யெல்லாம் வெறும்
    பாலை யானது !
    ஆறெல்லாம் நீரின்றி
    அழுது கொண்டி ருக்குது !
    மழை யின்றிப்
    பட்டியிலே புல் இல்லை !
    பட்டணத்தில்
    பச்சைப் புல் முளைக்குமா ?
    கண்ணீர் வரவும்
    தண்ணீர் இன்றி முகமும்
    காய்ந்து விட்டது!
    பட்டணத்தில் பட்டினிக்குப்
    பஞ்சம் இல்லை!
    லஞ்சம் வாங்கிய அரசினர்
    லட்சாதி பதியாகிக்
    கோடீஸ்வர ராகிச் சிறையில்
    வாடி வதங்கித்
    தேடுகிறார் தெய்வத்தை !
    பால் கறந்த பசு மாடு
    பட்டினியில்
    தோலும் எலும்பு மானதில்
    வியப்புண்டா ?
    புல் முளைத்துப் பசு மேயும்
    பொற்காலம்
    புலர்வது எக்காலம் ?

    ***

    ”தன் உதிரத்தைப் பாலாக்கி மனிதருக்குத் தருகின்ற பசு, பெற்ற தாயினும் நனிசிறந்தது; பால் மட்டுமா தருகின்றது பசு? தன் தோலைக்கூட அல்லவா செருப்பாய்த் தருகின்றது! ஆதலால், பசு ’வதை’ தடுப்போம்; பசுவதைக் காப்போம்!” என்று கருணையோடு கழறுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    பட்டணத்து மாடுகள் : மாடென்றால் செல்வம் என்று வான் மறை பேசும்!
    மாடென்றால் தியாகம் என்று என் மன மொழி பேசும்!
    அயராமல் உழைப்பவரை மாடென்று சொல்வதுண்டு!
    அன்னைக்கு ஈடாய் , அவனியிலே பசுவன்றி யாருண்டு?
    உதிரத்தை, அமுதாக்கித் குழந்தைக்குத் தருபவள் தாயன்றோ!
    உதிரத்தை, பாலாக்கி, மனிதருக்குத் தருகின்ற. பசு மாடு தாய்க்கும் மேலன்றோ!
    ஈசனைச் சுமப்பதும் மாடன்றோ!
    நிலத்தை உழுவதும் மாடன்றோ!
    தன் தோலைக் கூட செருப்பாய்த் தருவதும் மாடன்றோ!
    தன்னைக் கொடுப்பதில், வாழைக்கீடு மாடன்றோ!
    இத்தனைச் சிறப்புகள் இருந்தாலும் மாட்டின்
    இன்றைய நிலையைப் பாருங்கள்!
    வயிற்றுப் பசிக்குக் கண்டதை தின்னும்
    கொடுமையை இங்கே பாருங்கள்!
    காகிதம் தின்று, நமக்குப் பாலைத் தரும்
    அவலத்தை இங்கே பாருங்கள்!
    பசு வதை சட்டம். உண்மையாய் வரட்டும்!
    பசியால் மாடுகள் பரிதவித்துப் போகாமல்!
    உணவு தரும் உணர்வு, பட்டணத்து மனிதருக்கு ,உடனடியாய் வரட்டும்!
    அன்ன தானம் மனிதருக்கு மட்டுமன்றி,
    உணவு தானம் மாட்டிற்கும் நடக்கட்டும்!

    ***

    ”பண்ணை நிலமெல்லாம் பங்களாக்கள் ஆனது; பசுஞ்சோலைகளெல்லாம் தார்ச்சாலைகளாய்ப் போனது. எனவே, புல்உணவு கிடைக்காமல் செல்வழியினிலே கிடைப்பதையே உணவாகப் புசிக்கின்றோம். சொல்லெடுத்துப் பாப்புனையும் பாவலரே! என் பசி போக்கும் வழியொன்று புகலுங்களேன்!” எனும் ஆவின் குரலைத் தன் பாவில் பதிவுசெய்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    ஆவின் குரல்..!

    நஞ்சையும் புஞ்சையும் நான்கு போகமும்..
    ……..
    நலமாய் விளைந்திட்ட நன்னிலம் தான்!
    தஞ்சைத் தரணியென்று போற்றிப் புகழ்ந்த
    ……..
    தாரணி அறிந்த நெற்களஞ்சிய நகரம்தான்!
    வஞ்சகர் கைக் குளிப்போது அடைபட்டே..
    ……..
    வயல் நிலமெல்லாம் பாழ்பட்டுப் போனது!
    தஞ்சமடைந்து தாழ்கிறோம் தரணியிலே இன்று..
    ……..
    பஞ்ச முண்டானதால்பச்சைப் புல்லுக்கே.!

    விண்ணை முட்டும் வானுயர் கோபுரம்தனை..
    ……..
    வியந்து மனிதர்கள் மட்டுமே நோக்கமுடியும்.!
    பண்ணை நிலமுழுதும் பங்களாக்கள் ஆனது..
    ……..
    பச்சை வயல்களெலாம் சாலைகள் ஆனதே.!
    கண்ணை முட்டும் கண்ணீர்க் காட்சியாக..
    ……..
    கழினியும் காடுமெங்கே காணாமல் போனது?!
    மண்மறைக்கும் தார்ச்சாலை யெங்கும் குப்பை..
    ……..
    மலையால் பச்சைப் புல்லுக்குக் கூடப்பஞ்சம்.!

    ஆறில்லை என்றாகிப் போனது எங்கும்..
    ……..
    அனைத்தும் அறிவியல் ஆன பின்புதான்.!
    சோறில்லை என்றாகிப் போனது எங்கும்..
    ……..
    நீரில்லை நிலத்தடியில் என்றாகிப் போனதாலே.!
    பாரிலிலை இதுபோல் கொடுமையெனப்பச்சை
    ……..
    பசேலென இருந்த வயல்வெளி யழித்தசெயல்.!
    ஊரிலில்லை பசுமைப் புல்வெளி இனிவாயில்லா..
    ……..
    உயிர்களுக்குப் பசித்தால் குப்பைதான் உணவு.!

    கோவின் ஆட்சியில் ஆவுக்கும் நிலத்துக்கும்..
    ……..
    கோவிலுக்கும்குந்தக மென்றுமில்லை மகனே.!
    நாவினை யடக்கி நாங்கள் இளைத்து விட்டோம்..
    ……..
    நற்செயலாகப் பாலைக் கொடுத்தே பழகிவந்தோம்.!
    ஆவின் பசிக்கு அறுகம்புல்லாவது கிடைக்குமா.?
    ……..
    அம்மாவெனும் குரலில்..ஆவின்குரல் கேட்கிறதா.?
    பாவின் துணையொடு புலவர்களே நீர்..ஆவின்..
    ……..
    பசிக்கொரு உபாயமுந்தன் பாட்டிலே கூறுவீரே..!

    ***

    மாடு படும்பாட்டை உள்ளம்தொடும் வரிகளால் பாட்டுக்களாக்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டு!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதை நம் கவனத்திற்கு…

    ஒரு பசுவின் சுய சரிதை

    ‘கோ’ என்றால் குலமகளாகக்
    கொண்டாடிய தேசம் ஒன்றில்
    கன்றுக்குக் குட்டியாக நானும்
    அன்றொரு நாள் அவதரித்தேன்!

    பச்சைப்பசேல் கழனித் தோட்டம்
    படுத்துறங்க மாட்டுத் தொழுவம்
    பழகித் திரிய அத்துணைச் சொந்தம்
    பண்ணை வீட்டில் நாளும் இன்பம்!

    வளமை எல்லாம் வானில் மறைய
    வந்ததன்றோ வறட்சியும் பஞ்சம்
    நதி நீரைத் தடுத்க ஓர் கூட்டம்
    எரிவாயு எடுக்க ஓர் கூட்டம்

    அவரவர் செயும் அரசியல் சூதில்
    பகடைக் காயானதினாலே
    பல தூரம் நடந்து நடந்து
    அபலை நான் நகரம் சேர்ந்தேன்

    சிறு புல்லும் தென்பட வில்லை
    சீண்டுபவர் எவரும் இல்லை
    பெரு நகரின் பேருந்துக் கிடையில்
    நடப்பதுவே தினம் ஒரு தொல்லை

    அடைக்கலம் புகத் தொழுவமும் இல்லை
    அணைத்துக் கொள்ள உழவனும் இல்லை
    எஞ்சிய தென்றன் உணவாய் இன்று
    எச்சில் குப்பை கழிவுகள் மட்டும்!!

    தன் பழைய வளமான வாழ்வையும், இன்றைய அவல வாழ்வையும் அசைபோட்டுப் பார்க்கும் பசுவினை நம் கண்முன் நிறுத்தி நம்மைக் கலங்கச் செய்திருக்கும் கவிஞர் திருமிகு. இராஜலட்சுமி சுப்பிரமணியத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • வெண்பூ வெண்பாக்கள்

     

    கிரேசி மோகன்
    ————————————————–
    துங்கா நதிக்கரைச் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)

    சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
    துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
    சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
    வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)

    கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
    சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
    கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
    கிரகங்கள் கூப்பும் கரம்….(25)

    வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
    மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
    அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
    முளைத்திடு முண்டக மா….(26)

    உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
    களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
    ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
    ஓசை சதங்கையொலி ஓம்….(27)

    நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
    ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
    படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)….கிரேசி மோகன்….!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (124)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    20646075_1399823163405212_967560007_n
    ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம

    Share
  • “செவ்வரத்தம் பூ!!”

     

    320798_265797463459029_373147311_n

    *********************************

    கிராமத்துப் பூக்காரி
    நீதான்!

    மண்வாசனை வீசுவதால்
    நீதான்
    எங்கள் மண்ணின் மகாராணி!

    சினிமாப் பாணியில்
    சொல்வதானால்
    நல்லதொரு நாட்டுக்கட்டை!

    உனக்குக் கவர்ச்சி அதிகம்!
    எத்தனை கூட்டத்துள்ளும்
    கண்கள் உன்னையே தேடும்!

    மூக்கும் முழியுமாக
    முந்தானையால்
    பாதிமுகம் மறைத்துச் சிரிப்பாய்
    அற்புதம்!!

    ஒற்றைக் கல்லு
    மூக்குத்தியில் தான்
    உன் அழகின் உச்சம்
    இருக்கிறது!

    வீட்டில் நிறைகுடம் வைத்தால்
    சுமங்கலி நீதானே
    முன் நிற்பாய்!

    உச்சி முதல் பாதம்வரை
    உன்னை ஒருமுறை
    பார்த்தாலே போதும்
    கண்களுக்கு அப்படி ஒரு குளிர்ச்சி!!

    அது என்ன
    உனக்கு மட்டும் விதி விலக்கு??

    பெண்கள் வாடையே பிடிக்காத
    பிள்ளையார்
    உன்ன மட்டும் தன் தலையில்
    தூக்கி வைத்திருக்கிறார்?

     

    ***************************************

    சிறீ சிறீஸ்கந்தராஜா

    13/08/2017

    Share
  • உன் அந்தப்புரத்தில் சாஜகான் அடிமை

    – ராஜகவி  ராகில் –

     

    விழி விரல்களாலும் விழிக்கால்களாலும்

    உன் அழகு தொட்டுத் தொடர்கிறேன் நான்

    உன் வெள்ளைப் பள்ளத்தாக்குப் புன்னகைக்குள்

    தூக்கி வீசுகிறாய்

    நீ என்னை

     

    ஆயுள் வரை

    ஈரமாகவே இருக்க விரும்புகிறேன்

    உன் காதல் மழையில் நனைந்து

     

    என் காதல்

    இனி

    பூக்கள் விரும்பாது

    உன் வார்த்தை வாசம் நுகர்ந்த பின்

     

    உன் ஜன்னல் வழியாய் நிலவாய் ஒளிர்கிறது

    உன்னைக் கனவு காண்கின்ற

    என் இரவு

     

    பனியாக்கிவிடும் உன் அழகு

    நீ

    நெருப்பில் நூலெடுத்து

    சேலை நெய்து உடுத்தினாலும்

     

    நீ வருகின்ற நாளில்

    என் ஊருக்குக் கிடைக்கலாம் மின்சாரம்

    உன்னிடம் வாசம் வாங்கக் காத்திருக்கும்

    ரோஜாப் பூக்கள்

    ஒவ்வொரு வீட்டு வாசலிலும்

     

    உன்னால்

    என் அறை குளம்

    கட்டில் மிதக்கிறது

    தாமரையாய்

     

    காதல்

    கண்கள்

    கண்களுக்கு ஊட்டுகின்ற நஞ்சு

    நீ பருக்கிய பின்

    என் உயிர் மூச்சு வீசுகிறது புயலாய்

     

    என்னை

    அந்தப்புரமாக்கிய அரசியே

    நீ ஒரு பூ பார்த்திடின்

    பழமாகி

    நுழைந்திடும் உன் வாய்க்குள்

    அல்லது

    பட்டாம் பூச்சியாகி

    அமர்ந்திடும் உன் கைக்குள்

     

    – ராஜகவி  ராகில் –

    Share
  • ஏனென்று கேள் !

     unnamed

     

     

     

     

     

     

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    நேசிப்பது நான் உன்னை !

    நீ மொழிய மாட்டாயா நான் விழைவதை !

    எனக்குத் தெரியும்,

    உண்மை, அது காட்டப் போகுது

    ஒரு போதும் நான் கவலை யுறக் கூடாது.

    இப்போது நீ என்னவள் !

    அந்த மகிழ்ச்சி என் கண்ணை நிரப்புது !

    கால நேரத்தில் உனக்கதன்

    காரணம் புரியும் !

    கவலையா என்னை அழ வைக்கும் ?

    இல்லை ! இல்லை !

    என்னை அழ வைப்பது,

    எனக்கி ருப்பது நீ ஒருத்தி என்பது !

    நம்ப வில்லை நான், எனக்கு

    நட்பு நேர்ந்து விட்டது.

    நானினித் துயரடையேன் !

    ஏனென்று கேள் !

    நானு ரைப்பேன் உன்னை நேசிப்பதாய்,

    எப்போதும் உன்னையே நினைத்து !

    Share
  • ஆனந்த சுதந்திரம் !

     

                     (  எம் .  ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

     

    ஆன்மீகக் கொள்கைதனை அரவணைக்கும் பாரதமே

    அஹிம்சையினை உள்ளுணர்வாய் ஆக்கிநிற்கும் பாரதமே

    அகிலத்தில் பலநிலையில் வளர்ந்துவரும் பாரதமே

    ஆனந்த சுதந்திரத்தை அமுதமெனக் காத்திடுவாய் !

     

    பலபேரின் கண்ணீரால் எழுச்சிபெற்ற பாரதமே

    பலபிரிவு மக்களையும் இணைத்துநிற்கும் பாரதமே

    நிலம்மீது பலசண்டை நிகழாமல் இருப்பதற்காய்

    பலநீதி இலக்கியங்கள் படைத்தளித்தாய் உலகினுக்கே !

     

    சர்வவுமே இறைவனென சாற்றிநிற்கும் பாரதமே

    சமத்துவத்தை நிலைநிறுத்த தானுழைக்கும் பாரதமே

    இவ்வுலகை இரட்சிக்க ஞானிகளை ஈந்தளித்தாய்

    இவ்வுலக மாந்தரெலாம் இந்தியாவை நோக்குகிறார் !

     

    வேதமொடு சாத்திரங்கள் வியந்துவிடும் இலக்கியங்கள்

    பாரதத்தாய் உலகினுக்கு ஈந்தளித்தாள் பொக்கிஷமாய்

    யார்வந்து போனாலும் நலம்விளைக்கும் எனும்நினைப்பை

    நாநிலத்துக் கீந்தளிக்கும் பாரதத்தாய் வாழியவே !

     

    புத்தர்காந்தி புனிதநபி புதுவெளிச்சம் யேசுபிரான்

    அத்தனைபேர் கொள்கைகளும் அடக்கிநிற்கும் பாரதமே

    உத்தமர்கள் பலபேர்கள் உன்மடியில் பிறந்தார்கள்

    உயர்வான சுதந்திரத்தை உயிர்ப்புடனே வைத்திடுவாய் !

     

    இமையம்முதல் குமரிவரை எல்லையினைக் கொண்டுள்ளாய்

    இயலாமை எனும்நினைப்பை இன்மையாக்க முனைகின்றாய்

    தவவலிமை மிக்கோரால் தான்வரங்கள் பெற்றுள்ளாய்

    தகைமைநிறை சுதந்திரத்தை தக்கபடி காத்திடுவாய் !

     

    சுதந்திரமாய் உலவுதற்குச் சுதந்திரத்தை விட்டிடுவோம்

    சுதந்திரத்தை யாவருமே சுவாசிக்கச் செய்துநிற்போம்

    சுதந்திரத்தை சுகமாக சுவையாக்க முனைந்திடுவோம்

    சுதந்திரத்தைக் குலைப்பார்க்குச் சுதந்திரத்தை உணர்த்திடுவோம் !

     

    ஆனந்த சுதந்திரத்தை அகமகிழக் கொண்டாட

    ஆனந்தப் பூங்காவை அமைத்திடுவோம் பாரதத்தில்

    ஆனந்தம் எனுமுணர்வை அனைவருமே பெற்றுவிட

    அன்புபாசம் நேசமொடு அஹிம்தனை அரவணைப்போம் !

     

    Share