இந்த வார வல்லமையாளர் ! (235)
செல்வன்
இவ்வார வல்லமையாளராக பெஜவாடா வில்சன் அவர்களை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
கர்நாடகாவை சேர்ந்த பெஜவாடா வில்சன் மனிதகழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வருபவர். மனித கழிவுகளை மனிதர் கையால் அகற்றுதல் 1993ல் இருந்து இந்தியாவில் சட்டவிரோதம் என்பதே பலருக்கும் தெரியாத தகவல். ஏனெனில் இன்னும் அந்த சட்டம் அமுல்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதே தெரியாத அளவு பல மாநிலங்களில் தொழிலாளர்கள் இன்னமும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்தகைய தொழிலாளரின் குடும்பத்தில் பிறந்தவர் தான் பெஜவாடா வில்சன். இவரது தந்தை ஜேக்கப் பெஜவாடா கர்நாடகாவின் கோலார் மாநகராட்சியில் மனித கழிவுகளை அகற்றும் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்தார். இதற்கு இந்தியில் சபாயி கரம்சோரி எனப் பெயர். இவரது சகோதரருக்கு இந்திய ரயில்வேயின் இரயில்களில் கழிவுகளை அகற்றும் வேலை கிடைத்தது. பள்ளியில் இவரை சகமாணவர்கள் தோட்டி என அழைத்து கேவலப்படுத்துவார்கள். இதனால் தற்கொலை செய்யகூட வில்சன் முயன்ற சூழல் எல்லாம் உருவானது.
பொலிட்டிகல் சயன்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற வில்சன் வேலைக்குப் போவதை விட்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுக்கு எதிராகப் போராட ஒரு இயக்கத்தைத் துவக்கினார். அதற்கு சஃபாயி கரம்சோரி அந்தோலன் என பெயர் சூட்டினார். கடிதங்கள் எழுதுதல், போராட்டம் என பலமுனைகளில் போராடி வந்தார். 1993இல் இந்திய பாராளுமன்றம் மனிதர்களின் கழிவை மனிதர்கள் அகற்றுவதை தடுக்கும் சட்டத்தை இயற்றியது. ஆனால் பலனின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இது இன்னமும் தொடர்ந்தே வருகிறது
2003இல் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் வில்சன். சட்டம் அமுல்படுத்தாமல் இருப்பதை கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு 16 அரசு அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட்டது. அனைத்து மாநிலங்களின் கேபினட் செக்ரட்டரிகளுக்கு இதை ஒழிக்க கடுமையான நெறிமுறைகளை அறிவித்து உத்தரவும் அனுப்பப்பட்டது.
பத்தாவது திட்டகமிஷனில் கரம்சோரி அந்தோலன் சார்பில் இதற்கான திட்டங்கள், நெறிமுறைகளை வகுக்கும் குழுவின் தலைவராக பெஜவாடா வில்சன் இடம்பெற்றார்.
இவருக்கு ஜூலைமாதம் ஆசியாவின் மிக உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது
துப்புரவு தொழிலாளிகளின் நலனுக்காக பாடுபடும் இவருக்கு அளிக்கப்படும் இந்த வல்லமையாளர் விருது, இக்கொடுமையை அகற்றும் பணிக்கான விழிப்புணர்வாக அமையும் என வல்லமை நம்புகிறது
பெஜவாடா வில்சன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
செல்வன்,
உன்னை எத்தனை பாராட்டினாலும் போதாது. என்னை பொறுத்தவரையில் பெஜவாடா வில்சனை காந்திஜியை அமரவைக்கும் மேடையில் அமர்த்தி வணங்குவேன். நான் பலவருடங்களாக, அவருடைய விசிறி. 2008ல் நான் எழுதி வந்த நூல் ஒன்றில் இவருக்கு ஒரு அத்தியாயம் இருக்கிறது. பிரசுரம் செய்ய வேளை வரவில்லை. அதை தேடி பார்க்கிறேன். ஒரு விஷயம் அழுத்தமாக சொல்ல வேண்டியது: மத்திய அரசும், பல மாநில அரசுகளும் கோர்ட்டார் முன் பொய் சத்தியம் செய்தன. நேற்றுக்கூட இரு துப்புரவு தொழிலாளிகள் மயக்கம் அடைந்தனர். அது கொலைக்கு சமானம்.
அன்புடன்,
இன்னம்பூரான்
இந்தியாவில் இருக்கும் எனக்கே பெஜவாடா வில்சன் அவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அவரின் நியாயமான போராட்டத்தைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.அவரைத் தலைவணங்கி மகிழ்கிறேன்.
செல்வன், அருமையான தேர்வு. திரு பெசவாடா வில்சன் அவர்களையும் அவரைப் பற்றி யெழுதிய உங்களையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
[துப்புரவு என்பது கட்டுரையில் துப்பறிவு எனப் பதிவாகியுள்ளது. இவ்வெழுத்துப்பிழையைத் திருத்தவேண்டுகின்றேன்]