கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கஷ்டம் கலைந்திடும் நஷ்டம் நகர்ந்திடும்
இஷ்டம் நமக்கு இணங்கிடும் – அஷ்டமி
ரோகினியில் தோன்றிய லேகிய வண்ணனை
ஏகிட எல்லாம் எளிது….
நடுநிசியில் ரோகினி நட்ஷத் திரத்தில்
கொடுஞ்சிறையில் தோன்றிய கண்ணா-முடிமிசையில்
அப்பன் சுமந்திட ஆயர்தம் கோகுல
குப்பம் நுழைந்தவனே காப்பு….
சுதாமன்(குசேலர்) அவலுக்கு சொத்தை அளித்த
கதாதரன் கண்ணன், பரம -பிதாவாம்
அலர்மேல் அன்னை மணாளன் அருளால்
மலரும்நாள் காசின் பிறப்பு….
நிவேதனம் கோகுலாஷ்டமி
——————————
திருக்கண் ணமுது திரள்கின்ற வெண்ணை
பருப்புதயிர் சாதம், பழங்கள் -உருக்குலைந்து
அண்டாவில் சாறு, அதிரசம், சீடைமுறுக்கு,
உண்டேனுன் நாமம் உரைத்து….
தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
அப்பயலுக்(கு) அன்பே அமுது ….!கிரேசி மோகன்….!