உன் அந்தப்புரத்தில் சாஜகான் அடிமை
– ராஜகவி ராகில் –
விழி விரல்களாலும் விழிக்கால்களாலும்
உன் அழகு தொட்டுத் தொடர்கிறேன் நான்
உன் வெள்ளைப் பள்ளத்தாக்குப் புன்னகைக்குள்
தூக்கி வீசுகிறாய்
நீ என்னை
ஆயுள் வரை
ஈரமாகவே இருக்க விரும்புகிறேன்
உன் காதல் மழையில் நனைந்து
என் காதல்
இனி
பூக்கள் விரும்பாது
உன் வார்த்தை வாசம் நுகர்ந்த பின்
உன் ஜன்னல் வழியாய் நிலவாய் ஒளிர்கிறது
உன்னைக் கனவு காண்கின்ற
என் இரவு
பனியாக்கிவிடும் உன் அழகு
நீ
நெருப்பில் நூலெடுத்து
சேலை நெய்து உடுத்தினாலும்
நீ வருகின்ற நாளில்
என் ஊருக்குக் கிடைக்கலாம் மின்சாரம்
உன்னிடம் வாசம் வாங்கக் காத்திருக்கும்
ரோஜாப் பூக்கள்
ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
உன்னால்
என் அறை குளம்
கட்டில் மிதக்கிறது
தாமரையாய்
காதல்
கண்கள்
கண்களுக்கு ஊட்டுகின்ற நஞ்சு
நீ பருக்கிய பின்
என் உயிர் மூச்சு வீசுகிறது புயலாய்
என்னை
அந்தப்புரமாக்கிய அரசியே
நீ ஒரு பூ பார்த்திடின்
பழமாகி
நுழைந்திடும் உன் வாய்க்குள்
அல்லது
பட்டாம் பூச்சியாகி
அமர்ந்திடும் உன் கைக்குள்
– ராஜகவி ராகில் –