பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

20646075_1399823163405212_967560007_n
ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (124)

 1. தனிமையின் மகிமை: கடல் அழகு !
  கடல் வரும் அலை அழகு!
  கடல் வாழ் மீன் அழகு!
  கடல் தரும் முத்தழகு!
  வான் அழகு!
  வான் சேர் வண்ணங்கள் அழகு!
  வான் தோன்றும் நிலவு அழகு!
  கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் தனி அழகு!
  முகில் அழகு!
  முகில் தரும் மழை அழகு!
  மண் அழகு!
  மண் தந்த அத்தனையும் பேரழகு!
  இத்தனையும் ரசிக்கும் பெண் அழகு!
  ரசிக்க வழி தந்த தனிமை தனி அழகு!
  பிறந்தது தனியாக!
  போவதும் தனியாக!
  தனிமை ஞானம் தரும்!
  தனிமை உனை உணர்த்தும்!
  தனிமை, இனிமை எனும்
  உண்மை, நீ உணர்ந்தால்!
  மன அமைதி, உடனே கை கூடும்!

 2. விடியுமா…

  அலையே அலையே வருவாயே
  அங்கே அவனை காண்பாயா,
  சிலையாய் நானும் காத்திருக்கும்
  சேதி நீயும் சொல்வாயே,
  நிலையிலா செல்வம் போதுமென்பாய்
  நிம்மதி தரவே வரச்சொல்வாய்,
  கலைநிறை வானம் வெளுத்ததுவே
  காரிகை யெனக்கு விடியாதோ…!

  -செண்பக ஜெகதீசன்…

 3. இறைவனின் படைப்பாற்றல்..!
  ========================

  அற்புதக் காட்சியொன்றை கண்டுவிட்டால் அதன்
  ……….அழகைப் படம்பிடித்து மூளைக்கனுப்பும் நம்மனது.!
  கற்பனைத் தேரிலேறி காட்சியோடது ஓடும்போது
  ……….கட்டுக்கடங்கா மகிழ்வும் புத்துணர்ச்சியு மதிலெழும்.!
  சுற்றிலும் அலைபாயும் அம்மனதைக் கட்டுப்படுத்த
  ……….சுகமாயங்கே காட்சிதரும்கடலும் மேகமும் நிலவும்.!
  பற்றுமிக்கப் புலவர்களதை பார்த்துவிட்டால் போதும்
  ……….பாட்டோடதைப் பண்ணுடன் பாமாலையாக்கி விடுவர்.!

  விண்ணைப் படைத்தானிறைவன் தொடரும் அதனுடன்
  ……….விரிகதிர் மதியொடு விண்மீனுமேகமும் படைத்தான்.!
  மண்ணினைப் படைத்தான் மண்ணொடு தொடரும்
  ……….மலைகளும் மூவகை உயிர்களும் படைத்தான்..!
  தண்ணீரைப் படைத்தான் தொடரும் அதனுடன்
  ……….பந்நெடும்நதி கொடுக்கும்மழை கொடுத்ததுடன் புவி..
  மண்டலத்தில் காற்றைப் படைத்தான் அதனால்
  ……….பூங்காற்று தென்றலொடு உயிர்மூச்சைக் கொடுத்தான்.!
  தணலென நெருப்பைப் படைத்தான் அதனால்
  ……….எதையும் இயங்கவைக்கும் எரிசக்தி படைத்தான்.!

  எத்துணையோ நுண்ணுயிரும் மண்ணுயிரும் புவியுலகில்
  ……….இயற்கையாகத் தோன்றவொரு நெறிவகுத்தான் இறைவன்.!
  வித்தாக அவையெல்லாம்….விதையொன்றைப் படைத்தான்
  ……….வியந்துநோக்க எவ்வுயிர்க்கும் கண்களைப் படைத்தான்.!
  அத்தனையும் கண்டுகளித்து அனைத்தையும் பாதுகாக்க
  ……….பஞ்சபூத இயற்கையினைப் படைத்தனைத்தையும் காத்தான்.!
  இத்தனையும் விண்மண் நீர்நெருப்பு காற்றென விரியும்
  ……….இறைவனின் படைப்பாற்றலை யதிசயித்துப் பாடுகிறேன்.!

 4. அத்தமனம் !

  சி. ஜெயபாரதன், கனடா

  கரு நிலவுதான் நாம்
  காண்பது !
  ஒருமுகம் காட்டி நிலவு
  மறுமுகத்தை மறைக்குது !
  கரு நிலவுக்கு ஒளியூட்டும்
  கதிரோ னின்றி
  இருளடைந் துள்ளது
  இனிய மாலை பொழுது !
  கணவன் அத்தமித்த கருவானம்
  ஒளி மங்கி, இருள் மண்டி
  மனம் பொங்கி
  அழுகிறது !
  விடிவு காலம் வருமா ?
  மனைக்கு விளக்கு வனிதை !
  மனைவி இல்லாத
  இல்லம் பாலை வனம் !
  ஆயினும்
  கதிரோன் இல்லாத
  தரணி இடுகாடு !

  +++++++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *