Blog

  • ஜன்னல் தேசங்கள்!

    -கவிஜி 

    வீதி முழுக்க
    அடைத்துக் கிடக்க
    ஒற்றை ஜன்னல்
    மட்டும்
    திறந்தே கிடக்கும்
    வீட்டுக்குள்
    யார்தான் இருப்பார்கள்?
    என்றபடியே
    பயந்து பயந்து
    வீதியில் நடந்து
    மழையில் நனைந்தும்
    நனையாமலும்
    சுற்றும் முற்றும்
    பார்த்தபடி ஜன்னல்
    அருகே சென்று
    எட்டிப் பார்க்கும்
    முன் கணமொன்றில்
    ஏதேச்சையாக
    என்வீட்டு ஜன்னலை
    திரும்பிப் பார்த்தேன்…
    எப்போதும்போல்
    கன்னத்தில்
    கைவைத்து
    இந்த ஜன்னலைப்
    பார்த்துக் கொண்டிருந்தேன்
    நான்…!

     

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (9)

    க. பாலசுப்பிரமணியன்

    குழந்தையின் மனநலத்தில் ஒலியின் தாக்கங்கள்

    education

     ஒலி அதிர்வுகள் எவ்வாறு ஒரு குழந்தையின் மன நிலையையும் மன நலத்தையும் பாதிக்கின்றன என்பதைப் பற்றி நாம் பார்த்தோம். சில நேரங்களில் சில அதிர்வுகள் ஒரு குழந்தையுன் மனத்தில் பயத்தையோ அல்லது வேறு விதமான பாதுகாப்பின்மையையோ ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக ஒரு உலோகத் தட்டு கீழே விழும் பொழுதோ அல்லது ஒரு கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கும் பொழுதோ அல்லது ஒரு சைரனின்  ஒலி குறிக்கிடும் பொழுதோ ஏற்படும் ஒலி அதிர்வுகள் குழந்தையின் கவனத்தை திடீரெனறு ஈர்ப்பது மட்டுமின்றி ஒருவிதமான அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தலாம்.

    இந்த மாதிரி சூழ்நிலைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி குழந்தைகளை இதை ஏற்றுக்கொள்ள தகுந்த நிலைக்கு தயார் செய்வதில் பெற்றோருக்கு மிகப் பெரிய பங்குண்டு.

    சில நேரங்களில் வீடுகளில் ஏற்படும் தகராறுகளின் போது குழந்தைகளை அருகிலோ அல்லது மடியிலோ வைத்துக் கொண்டு பெற்றோர்கள்  அலறவோ, கத்தவோ அல்லது வெறுப்பும் நெருப்பும் கக்கும் வார்த்தைகளைக்  கூறுதல் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டிய செயல். இந்தச் சூழ்நிலைகள் குழந்தையின் மன உணர்வுகளையும்   மனத்தின் சமத்துவ நிலையையும் பாதிக்கின்றன.

    அடிக்கடி இப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் பார்த்து வளரும் குழந்தைகளின் பேச்சுத் திறன்களில் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது மட்டுமின்றி பேசுவதில் தயக்கம், பொறுமையின்மை மற்றும் தான் பார்த்த பேச்சு வழிகளைப்போலவே பேசுகின்ற திறன்களையும் குழந்தைகள் பெறுவதாகக் கூறப்படுகின்றது.  பொதுவாக குழந்தைகளை முன்னிறுத்தி பெற்றோர்கள் வாக்குவாதங்களிலும் உணர்வு மிஞ்சிய சொல்லாடல்களையும் தவிர்த்தல் அவசியம்.

    இதே போன்ற சூழ்நிலைகளை உருவாக்கும் தொலைகாட்சிப் படங்கள், உரையாடல்கள் மற்றும் நிகழ்சிகள் குழந்தைகளின் மனதை மிகவும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மனோதத்துவ வல்லுனர்கள் சொல்லுகின்றனர். மேலும் தொலைக்கட்சிகளில் வரும் சண்டைகள், கோபக்கனல்களை வெளிப்படுத்தும் காட்சிகள், வன்மையைத் தூண்டும் காட்சிகளால் குழந்தைகளின் மனத்தில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றிய அளவற்ற ஆராய்ச்சிகள் இவைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி விவரித்துள்ளன. இதை உடன் ஏற்படும் தாக்கங்கள் என்றும் நீண்ட காலத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்றும் பிரித்து விளக்கியுள்ளனர்.

    பேச்சுத் திறன்களைப் பற்றியும் அவைகளால் மூலையிலும் மனந்திலும் ஏற்படும் தாக்கத்தைப் பற்றியும் ஆல்பர்ட் மெஹ்ராபியன் செய்த ஆராய்ச்சியில் வெறும் 7 விழுக்காடுகள் வார்த்தை தருகின்ற பொருள்களாலும், 38 விழுக்காடுகள் குரல், உணர்வுகள், குரலின் ஏற்ற தாழ்வுகள் ஆகியவற்றாலும், மீதி 55 விழுக்காடுகள் அந்த நேரத்தில் ஒருவர் காட்டும் உடல் மொழிகளாலும் அறியப்படுகின்றன என்று கூறுகின்றார். ஆகவே ஒரு குழந்தை ஒலிகளைக் கேட்கும் பொழுது அதைச் சொல்பவரின் குரல் ஏற்ற தாழ்வுகள் மற்றும் நோக்கங்களையும் அவருடைய உடல் மொழியையும் மிகுந்த ஆர்வத்தோடும் கவனத்தோடும் நோக்குகின்றது.

    உதாரணமாக 5 முதல் 7 ஆண்டு வயதுள்ள சிறார்கள் ஒரு திரைப்படத்தில் வருகின்ற சண்டைக்காட்சிகளைப் பார்க்கும் பொழுது தாங்கள் அமர்ந்துள்ள இடத்திலிருந்து எழுவதும் அருகிலுள்ள பொருள்களைக் கைகளால் குத்துவதும் அல்லது ஒரு காதல் காட்சியைப் பார்க்கும் பொழுது வெட்குவதும் அடிக்கடிப் பார்க்கபடும் ஒரு நிகழ்வு, ஆகவே ஒலியும் ஒளியும் நம்முடைய மனத்திரையில் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

    எவ்வாறு இந்தத் திறன்களை ஆக்கபூர்வமாக மனநலத்தின் வளர்ச்சிக்கும் அறிதல் மற்றும் கற்றல் ஆகிய திறன்களை மேன்மைப் படுத்துவதற்கும் நல்ல ஒரு உபகரணமாக பயன்படுத்தலாம் என்பதை நாம் பின் வரும் தொடர்களில் பார்ப்போம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(101)

    –செண்பக ஜெகதீசன்

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை.  (திருக்குறள்-555: கொடுங்கோன்மை) 

    புதுக் கவிதையில்… 

    கொடுங்கோல் ஆட்சியாளர்தம்
    கீர்த்தி செல்வம் அழித்திட
    எதிரிப்படை
    எதுவும் வேண்டாம்,
    துன்பத்தில் துடித்து
    குடிமக்கள் சிந்திடும்
    கண்ணீரே போதும்…! 

    குறும்பாவில்… 

    கொடுங்கோலரை அழிக்கும் படை,
    குடிமக்கள் துன்புற்றழுத
    கண்ணீரே…! 

    மரபுக் கவிதையில்… 

    மக்களை வதைத்து முடிசூடி
      –மன்பதை ஆண்டிடும் கொடுங்கோலர்
    பக்கமாய் வந்தே அழித்திடத்தான்
      –படைகள் எதுவும் வேண்டாமே,
    துக்கம் மேலுறக் குடிமக்கள்
       -துன்பம் தாங்கா தழுதகண்ணீர்,
    மக்கள் படையாய் அவர்வாழ்வை
      –மீண்டும் எழாமல் அழித்திடுமே…! 

    லிமரைக்கூ… 

    கொடுங்கோல் ஆட்சியரை அழித்திடும் படை
    கொதித்திடும் குடிமக்களின் கண்ணீர்,
    கொடிய ஆட்சியாளர்க்குக் கொடுத்திடும் விடை! 

    கிராமிய பாணியில்… 

    ஆயுதம்வேண்டாம் ஆயுதம்வேண்டாம்
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்,
    கொடுங்கோலு ஆட்சியயையே
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்… 

    படவேண்டாம் படவேண்டாம்
    பொல்லாத அரசாங்கத்தப்
    போக்கிடத்தான் படவேண்டாம்,
    பாடுபட்ட பொதுசனங்க
    பொறுக்காத தும்பத்தில
    அழுதகண்ணீர் ஒண்ணேபோதும்,
    அழிஞ்சிடுவார் கொடுங்கோலர்… 

    அதால,
    ஆயுதம்வேண்டாம் ஆயுதம்வேண்டாம்
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்,
    கொடுங்கோலு ஆட்சியயையே
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்!

     

     

    Share
  • மார்கழி மணாளன்  12 திருக்குடந்தை      சாரங்கபாணி  

    க. பாலசுப்பிரமணியன்

     

    காவிரிக் கரையோரப் பஞ்சரங்கம்

    பூவிரி பொற்றாமரை விண்ணோக்கும் !

    மாமுனி ஹேமரின் தவக்கோலம்

    மாலினி இலக்குமி மகளாய் வேண்டும் !

     

    தவப் பயனோ தரணியின்  வினைப் பயனோ !

    தாமரை ஆயிரம் நடுவே வந்தது கோமளமே!

    தாயாரே தவமுனிக்கு வந்தாள் மகளாய்

    தரணிக்குக் குடமுழுக்குக் குடந்தையிலே!

     

    வில்லேந்தி வந்தான் வைகுந்தன் சாரங்கன்

    சொல்லேந்தி நின்ற தவமுனியர் பேரன்பன் !

    பண்ணேந்திப்  பாசுரங்கள் ஆழ்வார்கள் பாடிடவே

    தலையேந்திக்  கிடந்தானும் எழுந்தான் அருளிடவே    !

     

    பிரபந்தத்தைச் சேர்த்தளித்த பரந்தாமன்

    பிரபஞ்சத்தைக் காக்கின்ற பேரருளாளன்

    பிரகலாதன் துயர்தீர்த்த நரசிம்மன்

    பிறவிப்பயன் கொடுக்கின்ற நாரணன் !

     

    தங்கமென மின்னிவிடும் செங்கதிரில் திருமேனி

    பங்கமில்லா பக்தியிலே பொங்கிவரும் அருள்கேணி !

    மூதடைந்தும் சூதறியா சபரியும் பக்தியுடன்

    சுவைத்தளித்த பழத்தினையும் சுவைத்த தேனீ !

     

    அன்புடை நெஞ்சங்களில் அவன் ஆட்சி

    ஆராவமுதன் அகிலத்தின் அருள்காட்சி !

    நினைத்தாலே சொர்க்கம் அவன் வாசல்

    நிலையாத வாழ்வுக்கு அவன் காவல் !

     

    வாராக உருவெடுத்து வேதங்கள் காத்தவனே

    வாரணம் அழைத்திடவே விண்ணிருந்து வந்தவனே!

    வைகுந்த அழகுடனே  வாசலில் அருள்பவனே

    வாடுகின்றேன் வேண்டுகின்றேன் வந்தருள்வாய் வேதவனே !

     

     

    Share
  • காள​மேகப் புலவர்

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

    ஒவ்​வொரு காலத்திலும் ​புலவர்கள் பலர் ​தோன்றி தமிழன்​னைக்குக் காலத்தால் அழியாத பல காவியங்களைச் செய்து அணி ​செய்தனர். அவர்கள் ஆக்கியளித்துள்ள இலக்கியங்கள் உலகை வியக்க வைக்கும் அறிவுக் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.

    தமிழன்​னைக்குப் ​பெரு​மை ​சேர்த்த புலவர் ​பெருமக்களில் ஒருவர்தான் காளமேகப் புலவர் ஆவார். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காள​மேகப் புலவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்று அ​னைவராலும் புகழப்பெற்றார்.

    நினைத்தவுடன் எதைப் பற்றியும் கவிதை பாடுவதில் வல்லவர்களே ஆசுகவி என்று அழைக்கப்படுவார்கள். ஆசு கவிகளிலே​யே காளமேகப் புலவர் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவராக விளங்கினார்.

    காளமேகப்புலவர் பாண்டி நாட்டில் நூற்​றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருமோகூர் என்னும் திருத்தலத்திலே கோயில் பணியாளராக இருந்த அந்தணர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் என்றும், காளமேகம் என்பது அவரது இயற்பெயரே என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் வரதன் என்பதே அவரது இயற்பெயர் என்றும் ​வேறு சில அறிஞர்கள் எடுத்துரைப்பது ​நோக்கத்தக்கது.
    இதற்கு ஆதாரமாக,

    “வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
    வீசுகவி காள மேகமே – பூசுரா
    விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன்
    மண்தின்ற பாணமென்ற வாய்”

    என்ற அதிமதுரகவியின் பாட​லைச் சான்றாகக் கூறுகின்றனர். எனவே வரதன் என்பதே காள​மேகப் புலவரின் இயற்பெயர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது.
    ​
    மோகனாங்கியின் மீது காதல்:
    இளமைப்பருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால் கோயிலிலே வரதன் கோயிற் பணியாளாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார். திருவரங்கத்திற்கு அருகில் திருவானைக்கா என்ற சிவத்தலம் உள்ளது. அத்தலத்தில் நடனக்கலை மூலம் இறைப்பணி செய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அத்​தேவரடியார்களில் ஒருத்தியான மோகனாங்கி மிகவும் அழகானவள். அவளுக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது.
    ​
    வைணவரான வரதனும், ​சைவ மதத்​தைச் ​சேர்ந்த ​மோகனாங்கியும் அன்பால் கட்டுண்டு பழகி வந்தார்கள். ஒருநாள் ​மோகனாங்கி ​வெட்கம் அ​டையும்படியான ஒரு நிகழ்ச்சி ந​டை​பெற்றது.

    அது மார்கழி மாதம். திருவா​னைக்காவில் உள்ள சம்பு​கேசுவரர் ​கோயில் சன்னதியில் ​மோகனாங்கி திரு​வெம்பா​வை பாடும் மு​றை ​அன்று வந்தது. ​மோகனாங்கி தன் ​தோழிகளுடன் சன்னதியில் நின்று திரு​வெம்பா​வையில் வரும்,

    “உன்​கையில் பிள்​ளை உனக்​கே அ​டைக்கலம் என்று
    அங்கப் பழஞ்​சொல் புதுக்கு​மெம் அச்சத்தால்
    எங்கள் ​பெருமான்! உனக்​கொன்று உ​ரைப்​போம் ​கேள்;
    எம்​கொங்​கை நின்னன்பர் ​அல்லாதார்​தோள் ​சேரற்க!
    எம்​கை உனக்கல்லாது எப்பணியும் ​செய்யற்க!
    கங்குல் பகல் எம்கண் மற்​றொன்றும் காணற்க!
    இங்குஇப்பரி​சே! எமக்கு எங்​கோன் நல்குதி​யேல்
    எங்​கெழில் என்ஞாயிறு எமக்​கே​​லேஓர் எம்பாவாய்!”

    என்ற பாட​லை மனமுருகப் பாடினாள். அந்தப் பாட​லைக் ​கேட்டதும் அவளுடன் இருந்த ​தோழிகள் பலரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

    தான் ​வைணவரான வரத​னைக் காதலிப்பதா​லே​யே தம் ​தோழிகள் தன்​னை ஏளனம் ​செய்து சிரிக்கின்றனர் என்று புரிந்து ​கொண்ட ​மோகனாங்கி ​மிகுந்த ​வேத​னைக்கு உள்ளானாள். ​“உம்மு​டைய ​கைகள் உனக்​கேயன்றி ​வேறு எவர்க்கும் எந்தப் பணி​யையும் ​செய்யாது இருக்குமாறும், இரவும் பகலும் எம்மு​டைய கண்கள் உன்​னையன்றி ​வேறு எந்தப் ​பொரு​ளையும் காணாது இருக்குமாறும், இ​றைவ​னே அருள்புரிவாயாக! இவ்வாறு சிவ​பெருமானிடம் ​வேண்டுகின்ற ​மோகனாங்கி திருமா​லை வணங்கும் ​வைணவரான வரதனிடம் ​தொடர் ​கொண்டுள்ளா​ளே என்ப​தை நி​னைத்​தே ​தோழிகள் சிரித்தனர். அத​னைப் புரிந்து ​கொண்டு மன ​வேத​னைப்பட்ட ​மோகனாங்கி சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
    ​
    வைணவர் ​சைவரானார்:
    அன்றிரவு வரதன், ​மோகனாங்கியின் இல்லத்திற்குச் ​சென்றார். அவரது வர​வைக் கண்டதும் ​மோகனாங்கி கதவி​னை அ​டைத்துத் தாழிட்டாள். வரதன் கத​வைத் திறக்குமாறு ​கெஞ்சிக் கூத்தாடினார். ​​நெடு​நேரம் ​வேண்டியும் அவள் கத​வைத் திறக்கவி​லை. இதனால் வரதன் மிகுந்த மன உ​ளைச்சலுக்கு ஆளானார்.

    வரதன் வீட்டிற்கு ​வெளியிலிருந்தவா​றே, “​மோகனாங்கி! நீ கத​வைத் திறக்கவில்​லை என்றால் நான் என் உயி​ரை விட்டுவிடு​வேன்” என்று கூறிய​தைக் ​கேட்ட ​மோகனாங்கி, எங்​கே வரதன் இறந்து விடுவா​ரோ என்றஞ்சிக் கத​வைத் திறந்தாள்.

    கத​வைத் திறந்தவள் வரத​னை உள்​ளே விடவில்​லை. அவள் வரத​னைப் பார்த்து, “நான் உமக்கு ​வேண்டு​மென்றால் நீர் ​சைவராக மாற​வேண்டும். நீர் உட​னே ​சென்று சிவதீட்​சை ​பெற்றுக் ​கொண்டு வருக! இல்​லை​யெனில் என்​னை மறந்துவிடுக!” என்று கூறிவிட்டுக் கத​வைப் படீ​ரென்று சாத்திக் ​கொண்டாள்.

    இத​னைக் ​கேட்ட வரதன் சற்​றே நி​லை கு​லைந்து ​போனார். தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதை உணர்ந்த வரதன், ​மோகனாங்கியின் மீது ​கொண்ட அன்பினால், “​மோகனாங்கி நீ என்மீது ​கொண்ளுள்ள அன்புதான் எனக்கு முக்கியம். நான் உட​னே ​சென்று சிவதீட்​சை ​பெற்றுக் ​கொண்டு ​சைவனாக மாறி வருகி​றேன்” என்று கூறிவிட்டுச் ​சென்றார்.

    அவளிடம் கூறியவா​றே சிவதீட்​சை ​பெற்று ​வைணவராக இருந்த வரதன் ​​சைவராக மாறினார். அ​தோடு மட்டுமல்லாது திருவரங்கக் ​கோயில் பணியிலிருந்து நின்றுவிட்டார். திருவா​னைக்கா சம்பு​கேசுவரர் ​கோயிலில் (பரிசாரகர்) ச​மையற்காரராகப் பணியில் சேர்ந்தார். ​வரதன் சைவராக மாறியதால் ​மோகனாங்கியுடனான காதல் ​கைகூடியது. ​ ​மேலும் வரதன் திருவானைக்காவில் சிவனோடு வீற்றிருக்கும் தேவி அகிலாண்​டேஸ்வரி​யை நாள்​தோறும் வரதன் வழிபட்டு வந்தார். தேவியின்மீது தீராத அன்புகொண்ட அடியாராக வரதன் வாழ்ந்தார்.

    வரதன் காள​மேகமானார்:
    இங்ஙனம் வரதன் ​கோயிலில் பணியாற்றி வரும்​போது ஒரு நாளிரவு அவர் பணி​செய்த க​ளைப்பின் காரணமாகச் ​சோர்வினால் ​கோவில் மண்டபத்தி​லே​யே அயர்ந்து உறங்கிவிட்டார்.

    அப்​போது அக்​கோயிலில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்​டேஸ்வரி அசதியால் வாய் திறந்து உறங்கும் வரதன் முன் வந்து, கல்விக்குரிய பீஜாட்சரத்​தை அவரது நாவில் எழுதி, ‘இன்றுமுதல் உனக்குக் காள​மேகம் எனப் ​பெயர் விளங்குவதாக!’ என்று அருள் புரிந்து ம​றைந்தாள்.

    மண்டபத்தில் வரதானாகப் படுத்திருந்தவர் கனவு கண்ட​தைப் ​போன்று விழித்ததும் காள​மேகமாக எழுந்து நின்றார். கடல்ம​டை திறந்தாற்​போல் அவர் வாயிலிருந்து கவி ​வெள்ளம் பாய்​தோடி வந்தது.

    தமக்கு அருள்புரிந்தது ​தேவி அகிலாண்ட ஈஸ்வரி​யே என்ப​தை உணர்ந்து களிப்​பெய்தி கூத்தாடினார். அன்​னையின் அரு​ளை எண்ணி எண்ணி வியந்து வாயாரத் துதித்து, ‘திருவா​னைக்கா உலா” என்ற சிற்றிலக்கியத்​தைப் பாடினார். அதன் அரு​மை ​பெரு​மைக​ளை உணர்ந்த பலரும் கரிய ​மேகம் ம​​ழை​யைப் ​பொழி​வை​தைப் ​போன்று கவி ம​ழை ​பொழிவதால் “காள​மேக​மே” என்று வரத​னைப் ​போற்றி வாழ்த்தினர். அன்றிலிருந்து வரதன் காள​மேகப் புலவரானார்.

    இது குறித்து ​வே​றொரு வரலாறானது, “அக்காலத்தில் சம்பு​கேசுரத்தில் ஒரு ​வேதியன் அகிலாண்ட ஈச்வரி​யை வித்​தையின் ​பொருட்டு உபாசித்து வந்தனன். ஒரு நாள் ​மோகனாங்கி​யை ​நோக்கி அர்த்தசாம பூ​சையின் குடமு​றை கழிந்தவுடன் தம்​மை உடன​ழைத்துப் ​போகக் கூறித் தாம் ஒரு மண்டபத்தில் உறங்கினர். தாசி, அர்த்தசாமத்தில் குடமு​றை கழிந்ததும் ​வேதிய​ரைக் காணாது தனித்து வீடு ​சேர்ந்தனள். ​கோயில் தாணிகர் முதலி​யோர் திருக்​கோயில் தாளிட்டு வீடு ​சேர்ந்தனர்.

    பரிசாரகர் விழித்துக் ​கோயில் திருக்காப்பிட்டிருப்பதறிந்து மீண்டும் மண்டபத்தின் ஒரு புறத்திலுறங்கினர். முதலில் வித்​தை விரும்பி உபாசிப்பவனுக்கு அநுக்கிரகிக்க அம்​மை எழுந்தருளி அவன்முன் தரிசனந் தந்து வா​யைத் திறக்க என, உபாசகன் தாமதித்து அருவருத்த​மையால் மீண்டு மண்டபத்திலுறங்கும் பரசாரகரிடத்திற் ​சென்று வாய்திறக்கக் கட்ட​ளையிட்டனர். பரிசாரகர் ஆகூழால் வாய் திறந்தனர். அம்​மை வி​தைக்குரிய பீஜாட்சரத்​தை அவன் வாயிற் பதித்து இன்று முதலுனக்குக் காள​மேக​மெனப் ​பெயருண்டாக என ம​றைந்தனர்.

    காள​மேகர் கனாக் கண்டவர் ​போல் விழித்து எதிரில் யா​ரையும் காணாது தரிசனந் தந்தவள் உலக ராணியாகிய அகிலாண்ட ஈச்வரி​யென்றறிந்து வாயாரத் துதித்துத் திருவா​னைக்காவுலாப் பாடி மகிழ்ந்து அதுமுதல் பலதலங்களுக்குஞ் ​சென்று தரிசித்துப் பல தனிப்பாடல்க​ளைப் பாடினர்” (அபிதானசிந்தாமணி – ப.,510) என்று அபிதான சிந்தாமணியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

    காள​மேகப் புலவரின் தலப் பயணம்:
    காள​மேகப் புலவர் பல திருத்தலங்களுக்கும் ​சென்று இ​றைவ​ன்மீது தனிப்பாடல்கள் பல பாடி வழிபட்டார். திருவாரூர் ​சென்று தியா​கேச​ரை வழிபட்ட​போது அங்கிருந்தவர்கள் காள​மேகப் புலவரின் புல​மை​யைப் பரி​சோதிக்க விரும்பினர்.

    காள​மேகப் புலவரிடம் இ​றைவனான தியாகராசருக்கு அணிவித்திருந்த ​வைரப் பதக்கம் அறுந்து விழவும், பின் அப்பதக்கம் ​பொருந்தவும் பாடுமாறு கூறினார்கள். இதற்குக் காள​மேகப் புலவர் உடன்பட்டு,

    “அன்னவயல் சூழ்ந்திருக்கும் ஆரூரா ​நெஞ்சத்தில்
    இன்னம் வயிர மிருப்பதா – முன்ன​மொரு
    ​தொண்டன் மக​னைக்​கொன்றுஞ் ​சோழன்மக​னைக்​
    கொன்றுஞ்
    சண்டன் மக​னைக் ​கொன்றுந் தான்.”

    எனப் பாடி அப்பதக்கத்​தை அறுத்து கீ​ழே விழ ​வைத்து மீண்டும் அப்பதக்கம் ​பொருந்தப் பாடினார். இத​னைக் கண்ட அ​னைவரும் விப்பில் ஆழ்ந்தனர்.

    தாம் நி​னைத்த ​போதும், பிறர் விரும்பும்​​போதும் கவி பாடக்கூடிய ஆற்ற​​லைக் காள​மேகப் புலவர் ​​பெற்றிருந்த​தை அறிந்தவர்கள் அவ​ரை, “ஆசுகவியால் அகில உலகமும் புகழ் வீசும் கவி காள​மேகம்” என்று புகழ்ந்து ​போற்றினர்.
    ​
    மேலும் காள​மேகப் புலவர் தம்​மை மதிக்காது நடந்து ​கொண்ட சம்பந்தாண்டான் என்பவன் மீது வ​சை பாடினார். காள​மேகப் புலவர் வ​சைபாடுவதில் வல்லவராக இருந்ததால் அவ​ரை, “வ​சைபாட வல்லான் காள​மேகம்” என்று அவ​ரைப் புகழ்ந்தனர்.

    தனக்கு வந்திருந்த ​நோய் தீர ​வேண்டும் என்பதற்காக ​வைத்தீசுவரன் ​கோவில் மண்​ணை உண்டார். உட​னே காள​மேகப் புலவரின் ​நோய் முற்றிலும் குணம​டைந்தது. இத​னைக் கண்டுணர்ந்த அவர்,

    “மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும்
    கண்டவி​னை தீர்க்கின்றார் கண்டீ​ரோ – ​தொண்டர்
    விருந்​தைப் பார்த்துண்டருளும் ​வேளூ​ரென் னாதர்
    மருந்​தைப் பார்த்தாற்சுத்த மண்”

    என்ற பாட​லைப் பாடி இ​றைவ​னை வணங்கி வழிபட்டார்.

    பல தலங்களுக்கும் ​சென்று அங்குள்ள இ​றைவ​னைப் புகழ்ந்தும் இழிப்ப​தைப் ​போன்று ம​றைமுகமாகப் புகழ்ந்தும்​ ​சொல்நயமும் ​பொருள் நயமும் மிக்க பல பாடல்க​ளைக் காள​மேகப் புலவர் பாடினார். தமக்கு ஆதரவு நல்கியவர்க​ளைப் புகழ்ந்தும் அவமதித்தவர்க​ளை வ​சைபாடி இகழ்ந்தும் அவர் பல தனிப்பாடல்க​ளையும் பாடினார். இதனால் இன்றளவும் ‘வ​சைபாடக் காள​மேகம்’ ​என்ற ​பெயர் இலக்கிய வரலாற்றில் நின்று நி​லைத்துவிட்டது.

    திரும​லைராயன் அ​வைக்குச் ​செல்லுதல்:
    காள​மேகப் புலவ​ரை விரும்பி அவருடன் வாழ்ந்து வாழ்ந்த தாசி ​மோகனாங்கி தனக்கு அணிகலனில் (ந​கையில்) பதிப்பதற்காக திரும​லைராயன் பட்டினத்து முத்து ​வேண்டு​மென்று அவ​ரைக் ​கேட்டாள். என​வே காள​மேகப் புலவர் திரும​லைராயன் பட்டினத்திற்குப் புறப்பட்டார்.

    தஞ்​சை மாவட்டத்துக் கடற்க​ரை நகரமான நாகபட்டினத்துக்கு அருகில் உள்ளது திரும​லைராயன் பட்டினம். அத​னை விஜயநகரப் ​பேரரசிற்கு உட்பட்ட மன்னன் திரும​லைராயன் என்ற சிற்றரசன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனது காலம் கி.பி.1455 – 1468 என்று கூறுவர். இது​வே காள​மேகப் புலவர் வாழ்ந்த காலமாகும்.

    திரும​லைராயனின் அரச​வையில் 64 புலவர்கள் இருந்தனர். அவர்க​ளைத் தண்டி​கைப் புலவர்கள் என்று அ​ழைப்பர். சிவி​கை, பல்லக்கு, கழுத்தில் அணியும் ஒருவ​கை அணி என்று தண்டி​கை என்பதற்குப் பல ​பொரு​ளைக் கூறுவர். திரும​லைராயன் அப்புலவர்கள் அமர்ந்து ​செல்வதற்குப் பல்லக்குகள் அளித்துச் சிறப்புச் ​செய்திருந்ததால் அவர்க​ளை மக்கள் தண்டி​கைப் புலவர்கள் என்று அ​ழைத்தனர்.

    இவர்களின் த​லைவராக அதிமதுரகவிராயர் என்பர் திகழ்ந்தார். இப்புலவர் திரும​லைராயனிடம் ​பெரும் ​செல்வாக்கப் ​பெற்றவராகவும் அகந்​தை நி​றைந்தவராகவும் விளங்கினார். ​மேலும் அரச​வையில் மற்ற புலவர்கள் இடம்​பெறாத வ​கையில் வஞ்சகமாக அவர்க​ளைத் தடுக்கும் ​செயல்களிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இத​னையும் ​கேள்வியுற்ற காள​மேகப் புலவர் அவரது ​செருக்​கை அடக்க ​வேண்டும் என்று கருதி திரும​லைராயன் பட்டினத்திற்கு வந்து ​சேர்ந்தார்.

    அதிமதுரகவியும் தண்டி​கைப் புலவர்களும் தத்தமக்குரிய பல்லக்குகளில் அமர்ந்து வீதி வழி​யே அரச​வை​யை ​நோக்கி வந்து ​கொண்டிருந்தார்கள். அப்​போது தண்டி​கைப் புலவர்கள், “அதிமதுர கவியார் வாழ்க!” என்று தங்கள் த​லைவ​ரைப் ​போற்றி முழக்கமிட்டுக் ​கொண்டு வந்தார்கள்.

    அங்கு குழுமியிருந்த மக்கள் அ​னைவரும் எழுந்து நின்று அதிமதுரகவியாருக்கு வணக்கம் ​தெரிவித்தார்கள். அத​னை​யெல்லாம் பார்த்துக் ​கொண்டு ஒரு க​​டையின் முன்பல​கையில் காள​மேகப் புலவர் அமர்ந்திருந்தார். க​டையருகில் நின்றவர்கள் அதிமதுரகவிக்கு அடக்கத்துடன் எழுந்து நின்று வணக்கம் ​தெரிவித்தனர். இத​னை வியப்புடன் காள​மேகப் புலவர் பார்த்துக் ​கொண்டு அமர்ந்திருந்தார்.

    இத​னைப் பல்லக்கில் ​சென்று ​கொண்டிருந்த அதிமதுரகவி கவனித்துவிட்டார். தன்​னை மதிக்காது தனக்கு வணக்கமும் ​சொல்லாது அமர்ந்திருந்த காள​மேகப்புலவரின் ​செயல் அவருக்குச் சினத்​தை வரவ​ழைத்தது. தன் பல்லக்கு முன்​னே தடி​யோடு ​சென்று ​கொண்டிருந்த கட்டியங்கார​ன் காள​மேகத்திடம் ​சென்று தடியால் தட்டி எழுந்து நின்று வணக்கம் கூறுமாறு கூறிய​தையும் அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் காள​மேகப் புலவர் கட்டியங்கா​​​னைப் பார்த்து,

    “அதிமதுர​​ மென்​றே யகில மறியத்
    துதிமதுரமா ​யெடுத்துச் ​சொல்லும் – புது​மை​யென்ன
    காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக்
    கூட்டுச் சரக்குத​னைக் கூறு”

    என்று பழித்துப் பாடினார். அத​னைக் ​கேட்ட அதிமதுர கவி தனது தூதன் ஒருவ​னை காள​மேகத்திடம் ​சென்று ​அவர் யார் என்ப​தை அறிந்து வருமாறு கூறி அனுப்பினார். அவனும் ​சென்று காள​மேகப் புலவரிடம், “நீர் யார்?” என்று ​கேட்க அதற்குக் காள​மேகப் புலவர்,

    “தூ​தைந்து நாழி​கையிலாறு நாழி​கைதனிற்
    ​சொற் சந்தமா​லை ​சொல்லத்
    துகளிலாவந் தாதி​யேழு நாழி​கைதனிற்
    ​றொ​கைபட விரித்து​ரைக்கப்
    பாதஞ்​செய் மடல் ​கோ​வை பத்து நாழி​கைதனிற்
    பரணி​யொரு நாண் முழுது​மே
    பாரகாவிய​மெலா ​மோரிரு தினத்தி​லே
    பகரக் ​கொடிக் கட்டி​னேன்
    சீதஞ்​செயுந் திங்கண் மரபினானீடு
    புகழ் ​செய்ய திரும​​லைராயன்முன்
    சீறுமாறாக​வே தாறுமாறுகள் ​சொல்
    திருட்டுக் கவிப் புலவ​ரைக்
    காதங்கறுத்துச் ​செருப்பிட்டடித்துக் கதுப்பிற்
    பு​டைத்து ​வெற்றிக்
    கல்ல​ணையி​னொடு ​கொடிய கடிவாளமீட்​டேறு
    கவி காள​மேக நா​னே”

    என்று கவி பாடி அனுப்பினார்.

    அதிமதுரம் கடுஞ்சினம் ​கொண்டார் அந்தக் க​டையின் முன்பாக​வே காள​மேகப் புலவ​ரை அவமானப்படுத்த எண்ணி அரண்ம​னைப் பணியாளன் ஒருவ​னை அ​​ழைத்து, “கால் வராகனுக்கு ​மேகமும் பசுவும் இரத்தினமும் வாங்கி வா!” காள​மேகம் இருந்த க​டைக்கு அனுப்பி ​வைத்தார்.

    பணியாளன் க​டைக்காரரிடம் ​சென்று, “ஒரு வராகனுக்கு ​மேகமும் பசுவும் இரத்தினமும் ​கொடு!’ என்று காசி​னை நீட்டினான். க​டைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்​லை. அவர் திருதிரு என்று விழித்தார். இத​னைப் பார்த்த காள​மேகம் சிரித்தார்.

    காள​மேகம் சிரிப்ப​தைப் பார்த்த க​டைக்காரன் அவ​ரைப் பார்த்து, “இவர் என்ன ​கேட்கிறார்? நீர் ஏன் சிரிக்கிறீர்?” என்று எரிச்சலுடன் ​கேட்டார்.

    அத​னைக் ​கேட்ட காள​மேகப் புலவர், “ஐயா அவர் ​கேட்பது காராமணி. வராக​னை வாங்கிக் ​கொண்டு ​பொரு​ளைக் ​கொடுத்தனுப்புங்கள்” என்று கூறினார். க​டைக்காரர் ​பொரு​ளைக் ​கொடுத்து அரசப் பணியாள​னை அனுப்பிவிட்டு பணியாளன் கூறியதற்குரிய விளக்கத்​தைக் கூறுமாறு காள​மேகத்திடம் ​கேட்டார்.

    அதற்குக் காள​மேகப் புலவர், “ஐயா ​மேகம் என்றால் கார்; பசு என்றால் ஆ; இரத்தினம் என்றால் மணி இம்மூன்​றையும் ​சேர்த்துப் பாருங்கள் காராமணி என்பது வரும்” என்றார்.

    க​டைக்காரர் காள​மேகப் புலவருக்கு நன்றி​யைக் கூறிவிட்டு, ஐயா க​டைக்கு வந்து ​பொருள் ​கேட்டவன் அதிமதுர கவியாரின் ஆள் என்பது எனக்குத் ​தெரியும். எங்​கே அவர் ​கேட்கும் ​​பொரு​ளைப் புரிந்து ​கொண்டு தரமுடியாமல் கவிராயரின் கடுங்​கோபத்திற்கு ஆளாக ​நேரிடு​மோ என்று பயந்​தேன். நல்ல​வே​ளை காப்பாற்றினீர்கள்!” என்று நன்றி​யோடு காள​மேகப் புலவ​ரை வணங்கினார்.

    அதிமதுரகவியின் ​செயல் காள​மேகப் புலவருக்கு வருத்தத்​தை ஏற்படுத்தியது. அதிமதுர கவியார் தம் புல​மையால் எளி​மையான மக்க​ளையும் அதிகம் கற்காதவ​ரையும் மனம் ​போன ​போக்கில் மட்டம் தட்டி தற்​பெரு​மை ​கொள்கிறார் என்ப​தை அறிந்து ​கொண்ட காள​மேகம் அரச​வைக்​கே ​சென்று அவரது அகந்​தை​யை அடக்க ​வேண்டும் என்று கருதினார்.

    அ​தே​நேரத்தில் அதிமதுரகவியார் தன்​னை மதிக்காத காள​மேகப் புலவ​ரை மன்னனால்தான் அடக்க ​வேண்டும் என்று கருதி, மன்னனிடம் கூறி காவலர்க​ளை அனுப்பி காள​மேகப் புலவ​ரை அரச​வைக்கு வரவ​ழைத்தார்.

    புல​மைப் ​போட்டி:
    அதிமதுரகவியால் அரச​வைக்கு வரவ​ழைக்கப்பட்ட காள​மேகப் புலவருக்கு அ​வையிலிருந்த புலவர்கள் சிறிதுகூட இடம்​கொடுக்கவில்​லை. அ​னைவரும் ​நெருக்கியடித்துக் ​கொண்டு இருந்தனர். காள​மேகப் புலவர் புலவர்களின் எண்ணத்​தை உணர்ந்து ​கொண்டார்.

    அரசனைக் கண்டதும் அவனை வாழ்த்தினார். ஆனால் அவனோ புலவரை மதிக்காமல், இருக்கையும் கொடுக்காமல் ஏளனம் செய்தான். புலவர் புன்மூறுவல் செய்தார். அதிமதுரக்கவிராயரின் சூழ்ச்சிக்கு அரசன் அடிமையாகிவிட்டான் என்பதை உணர்ந்தார். கண்களை மூடி, கலைமகளைத் தியானித்தார். தனக்கொரு இருக்கை தருமாறு வேண்டினார். கலைவாணியின் அருளால் அரசனின் சிங்காசனம் அகன்று பெரிதாகியது. இன்னுமொருவர் இருப்பதற்கான இடம் உருவாகியது. புலவர் அதில் சென்று அரசனின் பக்கத்தில் அமர்ந்தார். புலவரின் ஆற்றல்கண்டு அரசனும் அ​மைச்சர்களும் வியந்தார்கள். தண்டிகைப் புலவர்கள் பயந்தார்கள். காளமேகப் புலவர், கலைவாணியின் அருளைப்போற்றி ,

    “வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
    வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை
    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
    சரியாசனம் வைத்த தாய்”

    என்று மனமுருக சரஸ்வதி மா​லை​யை 30 ​வெண்பாக்களால் பாடினார். அப்​போது அங்கிருந்த புலவர்க​ளைப் பார்த்துக் காள​மேகப் புலவர், “நீங்கள் யார்?” என்று ​கேட்டார். அத​னைக் ​கேட்டு சிரித்த புலவர்கள், “நாங்கள் கவிராஜர்கள்” என்று கூறினர்.

    அத​னைக் ​கேட்ட காள​மேகப் புலவர் நீங்கள் கவிராஜரா என்று வினவி,

    “வா​லெங்​கே நீண்ட வயி​றெங்​கே முன்னிரண்டு
    கா​லெங்​கே யுட்குழிந்த கண்​ணெங்​கே-சாலப்
    புவிராயர் ​போற்றும் புலவீர்காணீவிர்
    கவிராய ​ரென்றிருந்தக் கால்”

    என்று பழித்துப் பாடினார்.

    தங்க​ளைக் குரங்​கென்று பழித்த காள​மேகத்​தைப் பார்த்துக் கடுங்​கோபமுற்ற அதிமதுரகவியார், “எங்க​ளைக் கவி(குரங்கு) என்று கூறும் நீர்யார்?” என்று ​கேட்க, அதற்கு அவர், “யாம் கவி காள​மேகம்” என்று கூறினார். அதற்கு அதிமதுரகவி, “நீர் காள​மேகம் என்றீ​ரே ​மேகம் ​ம​ழை (கவிம​ழை) பொழியு​மோ?” என்று ​கேட்டார். காள​மேகப் புலவ​ரோ அதற்கு,

    “கழியுந் தியகடலுப்​பென்று நன்னூற்
    கடலின் ​மொண்டு
    வழியும்​பொதிய வ​ரையினிற் கால் ​
    வைத்து வான் கவி​தை
    ​மொழியும் புலவர் மனத்​தே
    யிடித்து முழங்கி மின்னப்
    ​பொழியும் படிக்குக் கவி காள​மேகம் புறப்பட்ட​தே”

    என்று பாடினார். அத​னைக் ​கேட்ட அதிமதுரகவியார் ​காள​மேகம் தன்​னை ​மென்​மேலும் அவமதித்ததால் வெகுண்டு,

    “மூச்சிவிடும் முன்​னே முந்நூறும் நானூறும்
    ஆச்சுது என்றால் ஆயிரம்பாட்டு ஆகா​தோ?​​ பேச்சென்ன?
    ​வெள்​ளைக் கவிகாள​ மேக​மே! நின்னு​டைய
    கள்ளக் கவிக் க​டை​யைக் கட்டு”

    என்று பாடினார்.
    காள​மேகப் புலவரா க​டை​யைக் கட்டுபவர்? அவர் தம் கவி​தையாற்ற​லைக் காட்டுவதற்கு மனந் துணிந்தார். அதிமதுரகவியா​ரைப் பார்த்து,

    “இம்​மென்னும் முன்​னே ​யெழுநூறு ​மெண்ணூறும்
    அம்​மென்றா லாயிரம் பாட்டாகாதா சும்மா
    இருந்தா லிருப்​பே ​னெழுந்​தே​னே யாயிற்
    ​பெருங்காள ​மேகம் பிளாய்”

    என்று பாடினார்.

    இவ்வாறு பாடிய கா​ள​மேகப் புலவ​ரைப் பார்த்து, அதிமதுரகவியார், “நீர் என்ன பாடுவீர்?” எனக் ​கேட்டார். அதற்குக் காள​மேகப் புலவர், “நான் யமகண்டம் பாடு​வேன்” என்று கூறினார். அதிமதுரகவியாருக்கு எமகண்டம் என்பது புரியாதிருந்தது. அதனால் தன்னு​டைய வாதத்​தை அத்துடன் நிறுத்திக்​கொண்டார்.

    புலவர்களின் வினாவும் காள​மேகத்தின் வி​டையும்:
    அதன் பின்னர் அங்கிருந்த புலவர்கள் திரும​லைராயன் வா​ளைப் பற்றிப் பாடுக என்றவுடன்,

    “​செற்றல​ரை ​வென்ற திரும​​​லைராயன் கரத்தில்
    ​வெற்றிபுரியும் வா​ளே வீரவாள் – மற்​றைய வாள்
    ​போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
    ஆவா ளிவாளவா ளாம்”

    என்று பாடி மன்ன​னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். திரும​லைராயனது வீரத்​தைப் பற்றிப் பாடுமாறு புலவர்கள் கூற​வே,

    “வீம​னென வலிமிகுந்த திரும​லைராயன்
    கீர்த்தி ​வெள்ளம் ​பொங்கத்
    தாம​ரையி னய​னோடிச் சத்திய ​லோகம்
    புகுந்தான் சங்கபாணி
    பூமி​தொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான்
    சிவன் கயி​லைப் ​பொருப்பி​லேறிச்
    ​சோம​னையுந் த​லைக்கணிந்து வடவ​ரைத்
    தண்டாலாழஞ் ​சோதித்தா​னே”

    என்று பாடினார். இவ்வாறு புலவர்கள் பலரும் பலவாறு வினாக்க​ளைத் ​​தொடுத்தனர். அப்​போது அங்கிருந்த திரும​லைராயன் மன்னன், “எம் அ​வையில் கங்​கைக் குடத்திலடங்கப் பாடுக” என்றான். அது​கேட்ட காள​மேகப் புலவர்,

    “விண்ணுக் கடங்காமல் ​வெற்புக் கடங்காமல்
    மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – ​பெண்​ணை
    இடத்தி​லே ​வைத்த வி​றைவர் சடாம
    குடத்தி​லே கங்​கையடங் கும்”

    என்று பாடினார்.

    தண்டி​கைப் புலவர்களில் ஒருவர் திரும​லைராய மன்ன​னைப் புகழ்ந்து பாடுக என்றவுடன்,

    “இந்திரன் க​லையா ​யென்மருங் கிருந்தானக்
    கினியுதிரம் விட்டகலான்
    யம​னெ​னைக் கருதா னா​னெனக் கருதி நிருதிவந் ​
    தென்​னை​யென் ​செய்வான்
    அந்தமரம் வருண னிருகண் விட்டகலான்
    அகத்தினின் மக்களும் யானும்
    அநிலம தாகுமமுதி​னைக் ​கொள்​வோம் யா​ரெதி​
    ரெமக்களா ருலகிற்
    சந்தத மிந்த வரி​சை​யைப் ​பெற்றுத் தித்திர
    ராஜ​னை வணங்கித்
    த​லை​செயு​மெம்​மை நி​லை ​செய்சற் கீர்த்திச்
    சாளுவ ​கோப்​பையா னுதவும்
    மந்தரப் புயத்தான் றிரும​​லைராயன்
    மகிழ்​வொடு வி​லையிலா வன்​னோன்
    வாக்கினாற் கு​பேரனாக்கினா னவ​னே மாசிலீ
    சானனபூ பதி​யே”

    என்று பாடி அ​னைவ​ரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
    ​
    மேலும் அங்கிருந்த மற்​றொரு தண்டி​கைப் புலவர் அரசனது குதி​​ரை​யைப் பற்றிப் பாடுமாறு கூறியவுடன்,

    “​கோக்குதி​ரை நின்குதி​ரை ​​கோவல் மதுரா ​வொன்னார்
    மாக்குதி​ரை ​​யெல்லாம் ம​னைக் குதி​ரை-தூக்குதி​ரைத்
    தூங்கக்க​ரைக் குதி​ரைச் ​சொக்கன் குதி​ரைசது
    ரங்கக் குதி​ரைக​ளே யாம்”.

    என்று காள​மேகம் பாடிட​வே அரசனும், அதிமதுரகவியும் ​சேர்ந்து ​கொண்டு காள​மேகப் புலவரிடம் திருஆரூரில் அதிமதுரக்கவிராயருடன் வந்து ​கோயிலில் ஒரு பாடல் பாடினால்தான் நீர் ஆசுகவி என்ப​தை ஏற்​போம் எனக் கூறினான். காள​மேகப் புலவர் அத​னை ஏற்று திருஆரூர்க் ​கோயிலுக்கு அதிமதுரக்கவிராயருடன் ​சென்று,

    “​சே​லையு​டை யழகா ​தேவாகண் டார்களு
    நீர்மா​ யழகா மணிமார்பா-​வே​லை
    அடங்கார் புர​மெரித்த யாரூரா வீதி
    விடங்கா பிரியா வி​டை”

    என்று பாடி அ​னைவ​ரையும் ​வெற்றி ​கொண்டார்.

    இருப்பினும் அவரது ​வெற்றி​யை அரசனும் தண்டி​கைப் புலவர்களும் ஒப்புக் ​கொள்ளவில்​லை. வெற்றிபெற்ற காளமேகப்புலவரை அரசன் எள்ளளவும் பாராட்டாமல் அவமதித்தான். தனது அரசவைப் புலவர்களைத் தோற்கடித்து அவமானப்படுத்தி விட்டதாக அவன் கருதினான். அரசனின் போக்கு காளமேகப் புலவருக்கு மிகுந்த வேதனையையும், கடுஞ்சினத்​தையும் கொடுத்தது. தன் ​வெற்றி​யை ஏற்றுக் ​கொள்ளாமல் தன்​​னை அவமதித்த மன்ன​னுக்கும் புலவர்களுக்கும் பாடம் கற்பிக்க ​வேண்டும் என்று நி​னைத்தார் காள​மேகப் புலவர். அவரின் ​கோபம்

    “கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
    காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
    விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து
    மண்மாரி பெய்கவிந்த வான்.

    என்ற வசைக் கவியாக வெளிப்பட்டது. திருமலைராயன் பட்டினம் அழிந்து போகட்டும் என்று வசைபாடினார்.

    கொலைகாரர்கள் இருக்கின்ற இந்த ஊர், கோள் மூட்டல், வஞ்சகம் செய்தல் என்பவற்றைக் கற்றிருக்கும் இந்த ஊர், கட்டுப்பாடற்ற காளைமாடுகளைப்போல கதறித்திரிவோரைக் கொண்ட இந்த ஊர், நாளை முதல் மழைபெய்யாமல் வறண்டு போகட்டும். மண்ணே மழையாகப் பெய்யட்டும் என்று சாபமிட்டுப் பாடினார். அத்துடன் அவரது கோபம் தணியவில்லை. மேலும்,

    “செய்யாத செய்த திருமலைராயன்வரையில்
    அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற்
    கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்
    மண்மாரி யாலழிய வாட்டு”

    என்று பாடினார்.

    என் அப்பனே சிவபெருமானே! நெருப்பாகவிருக்கும் உனது நெற்றிக்கண்ணினால் மன்மதனைச் சுட்டெரித்ததுபோல, செய்யத் தகாததையெல்லாம் எனக்குச் செய்த இந்தத் திருமலைராயனின் ஆட்சி எல்லைக்குள் வாழ்கின்ற தீயவர்கள் அரை நொடியில் அழிந்துபோகும் வண்ணம் மண் ம​ழை பொழிந்து அவர்களை வாட்டி வதைப்பாயாக! என்று சிவனை வேண்டிப் பாடிவிட்டுத் திரும​லைராயன் பட்டினத்​தைத் திரும்பிப் பாராது ​சென்றார்.

    இரட்​டைப் புலவர்களின் பாட​லை முடித்தது:
    திரும​லைராயன் பட்டினத்திலிருந்து கிளம்பிய காள​மேகப் புலவர் திருச்​செங்காடு, காஞ்சிபுரம், திரு​வொறிறியூர், திருக்கச்ச​பேசம், சிதம்பரம், திருக்கழுக்குன்றம், திருமுட்டம், திருஆலங்குடி, ​வைத்தீஸ்வரன் ​கோவில், திருவண்ணாம​லை, மது​ரை, திருவி​டை மருதூர், திருத்துருத்தி, திருக்குடந்​தை, திருக்கண்ணபுரம், ​தெண்டி நள்ளாறு, நா​கைப்பட்டினம் என்று பலதலங்களுக்கும் ​சென்று பல பாடல்க​ளைப் பாடி திருவாரூர் வந்த​டைந்தார்.

    அப்​போது திருவாரூரில் ​கோயி மதிற்சுவரில்,

    “நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்;
    பாணந்தான் மண்தின்ற பாண​மே – “

    என்ற இரண்டு அடிக​ளோடு அந்தப் பாடல் முடிக்கப் ​பெறாமல் இருந்த​தைக் கண்டார். அத​னைக் கண்டவுடன் காள​மேகப் புலவரின் மனதில் பாடல் ஊற்​றெடுத்தது. உட​னே அவர் முற்றுப் ​பெறாமலிருந்த அப்பாட​லை,

    “…………தாணு​வே!
    சீர்ஆரூர் ​மேவும் சிவ​னே! நீஎப்படி​யோ
    ​நேரார் புர​மெரித்த ​நேர்!”

    என்று அந்த ​வெண்பா​வை முடித்து மதிற்சுவரில் எழுதிவிட்டுப் புறப்பட்டார்.

    காலமாகிய காள​மேகப் புலவர்:
    காள​மேகப் புலவரின் சாபத்தின்படி திருமலைராயன் பட்டினம் சிலகாலத்தில் அழிந்தொழிந்தது. அப்​போதுதான் அவரது தமிழின் வலிமை தமிழ் உலகத்திற்குத் தெரிந்தது. தமது சிறுமதியின் நிலைமையைத் தண்டிகைப் புலவர்கூட்டம் உணர்ந்து வருந்தியது. அதிமதுரக்கவிராயர் தமது முதுமைக் காலத்தில் தாம் ​செய்த தவறுகளுக்காக மிகவும் வருந்தினார்.

    காளமேகப்புலவரைக் கண்டு அவரிடம் தாம் தவறாக நடந்து ​கொண்ட​மைக்குக் கழுவாய் ​தேட விரும்பினார். அவ்வாறு அவர் காள​மேகப் புலவ​ரை எதிர்பார்த்திருக்கும்​போது ஒருநாள் திருவாரூருக்கு காள​மேகப் புலவர் வந்திருப்பதை அறிந்து அவ​ரைக் காண்பாதற்குத் தேடிச் சென்றார். ஆனால் அதிமதுரகவியார் வருவதற்கு முன்​பே காள​மேகப் புலவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அத​னை அறிந்த அதிமதுரகவிராயர் மிகுந்த கவலையடைந்தார். காள​மேகப் புலவ​ரைப் பார்க்க முடியாம​லே​யே தம் ஊருக்கு அதிமதுரகவிராயர் ​திரும்பிச் சென்றார்.

    அவர் ​சென்ற சிலநாட்களில் காளமேகப்புலவர் திருவாரூருக்கு வந்தார். திருவாரூருக்கு வந்தவர் அங்​கே​யே முதுமையால் இவ்வுலக வாழ்​வை நீத்தார். காள​மேகப் புலவர் இறந்த செய்தியை அறிந்த அதிமதுரகவிராயர் உற்ற நண்பர் ஒருவரை இழந்ததுபோல் மிகவும் துன்பமடைந்தார். தன் மனத்துயரை,

    “வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
    வீசுகவி காள மேகமே – பூசுரா
    விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன்
    மண்தின்ற பாணமென்ற வாய்.”

    என்று பாடலாகப் பாடி வெளிப்படுத்தினார்.

    அப்​போது திருவாரூருக்கு வந்திருந்த இரட்​டைப் புலவர்கள் தாங்கள் எழுதிச் ​சென்ற ​வெண்பா முடிக்கப் ​பெற்றிருந்த​தைப் பார்த்து இப்பாட​லைப் முடித்தவர் காள​மேகப் புலவராகத்தான் இருக்க ​வேண்டும் என்று அறிந்து அவ​ரைப் பார்க்க நி​னைத்தனர். அவர் இறந்துவிட்டார் என்ப​தை அறிந்து சுடுகாட்டிற்குச் ​சென்ற அவர்கள் சி​தையில் காள​மேகப் புலவரின் உடல் ​வெந்து ​போவ​தைக் கண்டு கண்ணீர்விட்டுக் கலங்கியழுதனர். பின்னர் ​கையற்ற நி​லையில்,

    “ஆசுகவியால் அகில உல​கெங்கும்
    வீசுபுகழ்க் காள ​மேக​மே – பூசுரா
    விண்​கொண்ட ​செந்தணலாய் ​வேகின்ற ​தை​யை​யோ
    மண்தின்ற பாண​​மென்ற வாய்”

    என்று பாடி இரங்கினர். இப்பாட​லை அதிமதுரகவிராயர் பாடியது என்று கூறுவர். இதற்கு முன்னுள்ள பாட​லே அதிமதுரகவிராயர் பாடியது என்றும் அ​தே​போன்ற​மைப்பில் இரட்​டையர்கள் அங்கு வந்த​போது பாடினர் என்றும் கூறுவர்.

    தமது புல​மையால் பார்புகழ விளங்கிய காள​மேகப் புலவர் தமிழிலக்கிய உலகில் ஒளிவீசும் விண்மீனாக விளங்கிக் ​கொண்டிருக்கின்றார். அவர் திருவா​னைக்கா உலா, சரசுவதி மா​லை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம், பல தனிப்பாடல்கள் ஆகிய​வை காள​மேகப் புலவரின் ப​டைப்புகளாகும்.

    மக்கள் பலர் தன்னைச் சூழ்ந்துவர, தலைவன் உலா வருவதை வருணித்துக் கூறுவதாக அமைந்தது திருவானைக்கவுலா என்ற நூல். சித்திரமடல் என்பது காதல் தோல்வியடைந்த ஒருவர் தன்னை வருத்திக்கொள்வதான பொருளமைந்த நூலாகும்.

    இ​வை அ​னைத்தும் காள​மேகப் புலவரின் புல​மைத்திறத்​தை பூவுலகில் எடுத்து​ரைத்துக் ​​கொண்​டே இருக்கும். காலங்கள் கடந்தாலும் காள​மேகப் புலவரின் பாடல்கள் கற்றவர்களின் மனதில் களிப்​பை ஏற்படுத்திக் ​கொண்​டே இருக்கும்.

    ___________________________________________________________
    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    E.mail: Malar.sethu@gmail.com

    Share
  • உன்னையறிந்தால் … (36)

    நிர்மலா ராகவன்

    வதையைத் தடுக்க சில வழிகள்

    உனையறிந்தால்1

    கேள்வி: ஒருவரை அவருக்கு அச்சமூட்டும், அல்லது பிடிக்காத விதத்தில் நடத்துபவர்கள் எதில் சேர்த்தி?

    விளக்கம்: பிறரை வதைப்பவர்கள் சிறு வயதில் வதைக்கு ஆளானவர்களாக இருப்பார்கள். வளர்ந்தபின்னர், தம்மை எதிர்க்க உடலிலோ, மனத்திலோ சக்தி இல்லாதவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதால், தமது சக்தி பெருகிவிட்டதாக நினைப்பார்கள்.

    சரி எது, தவறு எது என்று தெரியாத பிராயத்தில், குழந்தைகளுக்கு. எது ஒன்றையும் தமக்குத் தோன்றிய முறையில் செய்து பார்க்க சுதந்திர உணர்வு எழும். `இது குழந்தைகளின் இயல்பு!’ என்று புரிந்து விடமாட்டார்கள் சிலர். அவர்களை வன்முறையால் தண்டித்து, சிறுமைப்படுத்துவார்கள், அல்லது `சாமி கண்ணைக் குத்துவார்!’ என்று பயமுறுத்துவார்கள்.

    `குழந்தைகள் தப்பே செய்யாமலிருக்கத்தான் அப்படிச் செய்கிறோம்!’ என்று இவர்கள் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஓயாது பயமுறுத்தலுடன் வளர்க்கப்படும் குழந்தை இயற்கையாக எழும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் எதிர்நோக்கும்போது அச்சமும், `பெற்றோர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்தோமே, ஏன் எதிலும் வெற்றி பெற முடியவில்லை?’ என்ற குழப்பமும் அடைகிறான்.

    உடல் வதை, பாலியல் வதை, உணர்ச்சிபூர்வமான வதை என்று பலவிதமான வதைகள் இருக்கின்றன.

    சில ஆண்டுகளுக்குமுன், கோலாலம்பூர் பெரிய ஆஸ்பத்திரியிலும், யூனிவர்சிடி ஆஸ்பத்திரியிலும் ஏதாவதொரு வதைக்கு உள்ளாகி சேர்க்கப்பட்ட சிறுவர்களின் அடிப்படையில், ஓராண்டில் பெரும்பாலும் தந்தைமார்கள் (30), அடுத்து குழந்தையைப் பார்த்துக் கொள்பவர்கள் (22), தாய்மார்கள் (14), தாயின் காதலன் (7) ஆகியோர் உடல் ரீதியாக (ஆயுதங்களால் அடிப்பது, சிகரெட்டால் சுடுவது) போன்ற உடல் வதைகளைச் செய்பவர்கள் என்ற தெரிய வந்தது.

    குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைகூடக் கவனிக்காது நடக்கும் பெற்றோர் குழந்தைகளை உணர்ச்சிபூர்வமாக வதைக்கிறார்கள். இன்னும் பிறர் தாம் செய்வது வதை என்றே புரியாது நடக்கிறார்கள்.

    என்னிடம் ஒருவர் கேட்டார்: `என் மகளை என் விருப்பப்படி நடத்த எனக்கு உரிமை கிடையாதா? அவளுக்கு வேண்டியதை எல்லாம் நான்தானே கொடுக்கிறேன்!’

    பெற்ற மகளையே பாலியல் வதைக்கு உள்ளாக்கிய தந்தை ஒருவரும் இதே விவாதத்தைத்தான் எழுப்பினார் என்று என் நெருங்கிய தோழி (சமூக நல இலாகாவில் உயர்பதவி வகித்தவள்) என்னிடம் கோபமும், ஆச்சரியமும் கலந்த தொனியில் தெரிவித்திருக்கிறாள்.

    தாம் பெற்ற குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டியது ஒரு பெற்றோரின் கடமை. அதற்குப் பிரதிபலனாக தாம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது விதண்டாவாதம்.

    தனது மூன்று வயதுக் குழந்தையை இரும்புச் சங்கிலியால் — பலரும் பார்க்க, வீட்டு வளாகத்தில் — அடித்த என் எதிர்வீட்டுக்காரி, `உன்னிடம்தான் தப்பு இருக்கிறது. அதற்கு நான் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். எல்லாம் உன் நன்மைக்காகத்தான்!’ என்று ஒவ்வொரு முறை அடித்த பின்னரும் தான் மகளிடம் சொல்வதாக என்னிடம் பெருமையாகச் சொன்னாள்.

    எனக்கு வாயடைத்துப் போயிற்று. அந்தக் குழந்தை தன் வயதொத்த பிற குழந்தைகளை அடிக்கும்.

    மகள் செய்த சிறு விஷமத்தைக்கூட (தானே கத்திரிக்கோலால் முடி வெட்டிக்கொண்டதை) பிறரிடம் கூறிச் சிரிப்பாள் அத்தாய். சிறுமி அவமானப்பட்டு அழுவாள்.

    பெண் குழந்தைக்கு ஒரு முறை முடியை வெட்டிவிட்டு, `அழகாக இருக்கிறாய்! என்று யாராவது பாராட்டினால், தினமும் தானே வெட்டிக் கொள்வாள்! அழகாக இருக்க வேண்டாமா! கத்தரிக்கோலை ஒளித்து வைப்பதுதான் ஒரே வழி. ஐந்து வயதானால், சற்று விவரம் புரியும்.

    நம் குழந்தைகள் செய்த `குற்றங்களை’ மிகைப்படுத்தி, பிறருடன் பகிர்ந்துகொள்வது சொல்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாகப் படலாம். ஆனால், இம்முறையால் தன்னம்பிக்கை குன்றி வளரும் குழந்தைகள், தம்மையும் அறியாமல், வதை செய்யும் ஒருவரையே காதலனாகவோ, கணவனாகவோ வரிக்கிறார்கள். காதலன் தன்னைப் புகழ்வதால், மதிமயங்கி, அவனுடனேயே இருக்கிறார்கள், வதையைப்பற்றி எவரிடமும் கூறாது.

    முதல் முறை அடித்து, உதைத்ததும், பெண்கள் பயந்து விலகுகிறார்கள். ஆனால் இவர்கள் விடுவதில்லை. `தயவு செய்து என்னை விட்டுப் போய்விடாதே! நீதான் என் உயிர்! என்னை மன்னிப்பாயா?’ என்று கடிதம் எழுதுவார்களாம். இதையே தினசரியில் விளம்பரமாகக் கொடுத்தவனும் உண்டு!

    திரும்பத் திரும்ப அவர்கள் கெஞ்சும்போது, மனமிரங்கி, உறவைப் புதுப்பித்துக்கொள்ள நம்பிக்கையுடன் வருவார்கள். அதன்பின், வதை அதிகரிக்கும். பெண்களுடைய பலமும் குன்றிக்கொண்டே வரும். தப்பு தன்மேல்தான் என்று எல்லாவற்றையும் பொறுத்துப் போவார்கள்.

    தினசரியில் கடிதம் எழுதினவன், ஐந்தே வாரங்களுக்குப்பின், காதலியை அடித்தே கொன்றானாம். இந்தச் சம்பவம் நடந்தது தென் அமெரிக்காவில், பெரு என்ற நாட்டில். உலகிலேயே பெண்கள் அதிகமாக கொடும் வதைபடும் நாடு (61%) இது.

    குடும்பத்தில் நடப்பது நான்கு சுவற்றுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பது காலத்துக்கு ஒவ்வாதது. இதனால் குற்றம் புரிபவர்களின் துணிச்சல்தான் அதிகரிக்கிறது.

    சில ஆண்கள் `பெண்’ என்றாலே இளக்காரம் என்றெண்ணி, முரட்டுத்தனமாக வளர்கிறார்கள்.

    `என் மேல் சாமி வந்துவிட்டது,’ `குடித்திருந்தேன்,’ என்பதெல்லாம் பொய்ச்சாக்கு. தாம் செய்வது பிறருக்கு என்ன துன்பம் விளைவிக்கும் என்பது தெரிந்தே செய்பவர்கள் இவர்கள். திருந்தவே மாட்டார்கள். சட்டம் தண்டித்தால்தான் உண்டு.

    ஒரு குழந்தையைப் பிறர் வதைக்காமலிருக்க தாய் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. குழந்தை ஆணோ, பெண்ணோ, அவர்களது உடலைப் பிறர் எப்படித் தொடலாம் , எப்படித் தொடக்கூடாது என்பதைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

    நான்கு வயதுக் குழந்தையின் கன்னத்தைத் தடவுவது சரிதான். ஆனால் வயதுக்கு வந்த பெண் உடலுறவைப்பற்றி புரிந்துகொள்ளாமல் இருப்பாளாகில், அவளுக்கு நன்கு பரிச்சயமான ஒரு ஆண் — நண்பன், உறவினர், அண்டை வீட்டுக்காரர் — அப்படித் தொடுவது தவறு என்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறாள். தந்தை இல்லாத பெண்ணோ, தாய் அருகில் இல்லாது, அல்லது உடல் நலக் குறைவாக இருந்தாலோ ஒரு பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது எளிது.

    வதைக்கு உள்ளாகும் சிறுமிகளிடையே திடீரென சில மாற்றங்கள் தென்படும். ஓயாமல் அழுவது, சோம்பி இருப்பது, ஓயாது தொணதொணப்பது அல்லது அதிகாரமாக நடப்பது, மிகுந்த ஆத்திரத்துடன் நடப்பது, காரணமில்லாமல் திருடுவது, சாமான்களை உடைப்பது, அடிக்கடி ஐஸ் கட்டிகளைச் சாப்பிடுவது — இதில் ஏதாவது இருந்தால், வீட்டிலோ, பள்ளியிலோ ஏதாவது ஒரு வகையில் வதைக்கப்படுகிறார்கள் என்று கொள்ளலாம்.

    சில சமயம், அக்குழந்தைகளிடம் நிறையப் பணம் புழங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பாலியல் வதை செய்துவிட்டு, ஐந்தோ, பத்தோ கொடுத்து, அவர்கள் வாயை அடைக்கிறார்கள். இதுவும் கவனிக்க வேண்டிய சமாசாரம்.

    இம்மாதிரியான குழந்தைகளை ஏதாவது கதை எழுதச்சொன்னாலோ, அல்லது படம் வரையச் சொன்னாலோ, அவர்கள் மனதின் வேதனை வெளிப்படும். வாய்ச்சொல்லாக வர்ணிக்கத் தெரியாதவர்கள் படம் மற்றும் எழுத்து வடிவில் தங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

    அன்பான குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் வதைப்பட்டாலும், பெற்றோரின் ஆதரவால் நீண்ட காலப் பாதிப்பு இல்லாமல் தப்புகிறார்கள். சில சமயம், உளவியல் நிபுணர்களின் உதவியும் தேவைப்படலாம்.

    பிள்ளைகள் மனக்குழப்பத்துடன் காணப்பட்டால், அவர்களுடைய நல்ல குணங்களைப் பாராட்டுங்கள்.

    `யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்று, யாராவது எதையாவது செய்தார்களா?’ என்று அனுதாபத்துடன் விசாரித்து, அவர்கள் மனந்திறந்து பேசும்போது, ஆதரவு கொடுக்க வேண்டும். `பிறருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?’ என்று அஞ்சாது, `இதில் உன் தப்பு எதுவுமில்லை!’ என்று பலமுறை அழுத்திக் கூறுங்கள். வதைத்தவர்தான் குற்றவாளி என்று புரிந்து போனால், அவர்களுடைய சோகம், குற்ற உணர்வு, அவமானம் எல்லாவற்றிலிருந்தும் நிரந்தர விடுதலை கிட்டும்.

    Share
  • பெங்களூர் நாகரத்தினம்மா வாழ்வில் …..

    –தஞ்சை வெ.கோபாலன்.

    திருவையாற்றில் அடுத்த மாதம் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையும், ஐந்து நாட்கள் இசைவிழாவும் மிகச் சிறப்பாக நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை வெளியுலகுக்குக் கொண்டுவந்து இந்த அளவுக்குச் சிறப்பாக விழா நடைபெற வழிவகுத்த ஒரு பெண்மணியைப் பற்றி தெரிந்து கொள்வோமே!

    திருவையாறு சற்குரு ஸ்ரீதியாகபிரம்மத்தின் புகழ் வெளியுலகத்துக்குப் பரவிட பெரும்பணியாற்றிய பெண்மணி பெங்களூர் நாகரத்தினம்மாள். இவர் வாழ்க்கையில் செல்வம், புகழ் இவற்றின் உச்சியையும் தொட்டவர்; சில நேரங்களில் கடுமையான வீழ்ச்சிகளையும் கண்டவர். இவர் ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர். தந்தையால் கைவிடப்பட்டு இவரும், இவரது தாயார் புட்டம்மாவும் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகி வளர்ந்தவர்கள். இசையிலும், நாட்டியத்திலும் இவர் தேர்ந்து மிகவும் மதிக்கப்பட்ட கலைஞராகத் தென்னாடு முழுவதிலும் திகழ்ந்தவர். இவர் மைசூரில் பிறந்ததனால் கன்னடமும், தெலுங்கும், சென்னையில் வாழ்ந்ததால் தமிழும், சம்ஸ்கிருதமும் நன்கு பயின்று அவற்றில் புலமை பெற்றிருந்தார்.

    பெங்களூர் நாகரத்தினம்மாநாகரத்தினம்மாள் அவருடைய சமகாலப் பெண்களோடு ஒப்பிடும்போது அதிகம் படித்த பெண்மணியாகத் திகழ்ந்தார். இவருடைய புலமைக்காக இவர் பல ஊர்களிலும் அழைத்துப் பாராட்டப் பட்டிருக்கிறார். புகழின் உச்சியைத் தொட்டவர் என்பதை பலகாலும் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர். அப்படிப்பட்ட இவர்தான் பின்னர் வாழ்க்கையில் பட்ட அடியின் காரணமாக, செல்வச் செழிப்பிருந்தும், வசதி வாய்ப்புகள் இருந்தும், கலைகளில் நல்ல பாண்டித்யம் இருந்தும், நிம்மதியில்லாமல் போயிற்று. காரணம் இவருக்கு வாரிசு இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கும் ஆளாகி மனம் வருந்தி, நெருங்கிய நண்பர்கள், கலைஞர்கள் ஆலோசனைக் கிணங்க திருவையாற்றுக்கு வந்து சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதி காவிரிக் கரையில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதை செப்பனிட்டு அங்கு அவருக்கு ஒரு சமாதி கோயில் எழுப்பி, இன்று அது உலகத்தையே சுண்டி இழுக்கும் இசையின் தலைமை பீடமாக உருவெடுத்து ஆண்டுதோறும் அவர் சமாதியில் ஆராதனை இசைவிழா நடைபெற மூல காரணமாகத் திகழ்ந்தவர். அதுமட்டுமல்ல பல புரட்சிகளைச் செய்த இவரே, திருவையாற்றில் தியாகராஜர் சமாதி ஆராதனையில் பெண்கள் பாடுவதற்கு அனுமதி இல்லாமலிருந்த நிலையை மாற்றி, பெண்களுக்கும் சம அந்தஸ்து பெற்று அங்கு மேடையேறி பாட வழிவகுத்தவரும் இவரே. இந்த உண்மை இன்றைய பெண் பாடகிகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.

    இவருடைய வாழ்க்கையில் இன்னுமொரு வேடிக்கையும் நடந்தது. அது வேடிக்கையான நிகழ்ச்சி மட்டுமல்ல, வேதனை தரும் நிகழ்ச்சியுமாகும். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் வரிசையில் பிரதாபசிம்ம ராஜா மிகவும் பிரபலமானவர். 18ஆம் நூற்றாண்டில் பிரதாபசிம்ம ராஜா தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டிருந்தார். 1739 முதல் 1763 வரை இவர் தஞ்சையை ஆண்டு வந்தார். ஆற்காடு நவாப் முகமது அலிக்கு ஆதரவாக இருந்து அவருடைய எதிரியான சந்தா சாஹேபை சிறைபிடித்துப் பின்னர் முகமது அலியின் வேண்டுகோளுக் கிணங்க அவரை பலியிட்டதும் இவரே. இவர் காலத்தில்தான் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வாணிபம் புரிய நாடுதேடி வந்து கொண்டிருந்தனர், அப்படிப்பட்ட நிலையில் அவர்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பிரதாப சிம்மருக்கு இருந்தது. இவருடைய மகன் தான் துளஜேந்திர ராஜா. அவருக்குப் பின் சுவீகாரம் எடுக்கப்பட்ட மகன்தான் இரண்டாம் சரபோஜி.

    இந்த பிரதாபசிம்ம ராஜாவின் அரண்மனையில் பல தேவதாசிகள் உயரிய அந்தஸ்துடன் இருந்து வந்தனர். அப்படிப்பட்ட பல தேவதாசிகளில் ‘முத்துப்பழனி’ எனும் பெயர் கொண்ட தேவதாசி அவருடைய ஆசை நாயகியாக இருந்தார். மன்னரின் அவையில் பல கலைஞர்கள் இருந்தனர், அவர்களில் முத்துப்பழனியும் ஒருவர்; அதுமட்டுமல்லாமல் அவர் மிகச் சிறந்த பண்டிதராகவும் திகழ்ந்தார். தெலுங்கு மொழியில் கவிதை இயற்றும் ஆற்றல் படைத்தவர்; சமஸ்கிருத மொழி அறிவும் இவருக்கு அதிகம். அப்படிப்பட்டவர் ஆண்டாளின் திருப்பாவையை யொட்டி அதே போல தெலுங்கில் ஒரு கவிதை நூலை இயற்றியவர். இவர் கவிதைகளில் பல புதுமைகளை செய்த போதிலும், இவர் இயற்றிய “ராதிகா சாந்தவனமு” (ராதையை சமாதானப் படுத்துதல்) எனும் தெலுங்கு மொழி கவிதை நூல் மிகவும் பிரபலமடைந்தது; பிரபலமடைந்தது மட்டுமல்ல, அரசாங்கத்தின் பார்வை பட்டு அது தடையும் செய்யப்பட்டது.

    இந்த “ராதிகா சாந்தவனமு” கதைப் பாடல் அப்படி என்னதான் சொல்லுகிறது என்பது தெரிய வெண்டாமா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ராதை ஆகியோர் பற்றிய கதைகள், வடமொழி, தெலுங்கு போன்ற இலக்கியங்களில் ராதை, கிருஷ்ணன் பற்றிய பல கவிதை நூல்கள், அஷ்டபதி, கீதகோவிந்தம் போன்ற பல புகழ் பெற்றன. இந்த கிருஷ்ணன் ராதை உறவை பொதுவாக, பரமாத்மா, ஜீவாத்மா ஐக்கியத்தை உருவகப்படுத்துவதாகத்தான் பெரும்பாலும் சொல்வார்கள். வடமொழி அறிஞர் கே.எம்.முன்ஷி தன்னுடைய “கிருஷ்ணாவதார்” “மேஜிக் ஆஃப் தி ஃப்ளூட்” எனும் நூலில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பாக “ராதா தி காண்ட்ரோவர்ஷியல் கேரக்டர்” என்று எழுதி, ராதை என்பவர் கிருஷ்ணனை விட வயதில் மூத்தவர், யாதவ குல தலைவன் ஒருவனின் மனைவி என்றும் குறிப்பிடுகிறார். அப்படியானால் ராதையையும் கிருஷ்ணனையும் இணைத்து இப்படி பக்தி மார்க்கத்தில் ஒரு பஜனை சம்ப்ரதாயம் உருவாகி விட்டது எப்படி?

    போகட்டும்! இப்போது பிரச்சனை அதுவல்ல. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் ராதை உறவு பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை விழையும் நோக்கத்தில் இருந்தாலும், தெலுங்கு கவி முத்துப்பழனி இயற்றிய “ராதிகா சாந்தவனமு” அப்படி அமையவில்லை. காம உணர்வால் தூண்டப்பட்ட ஒரு இளம் பெண் கிருஷ்ணனுடன் இன்பம் துய்க்கும் உறவாக சித்தரித்து அது இயற்றப்பட்டிருந்தது. எந்தக் கதையானாலும் அது ஒரு திருப்பம் (ட்விஸ்ட்) இருக்க வேண்டுமல்லவா? இந்தக் கதையில் வயதில் மூத்த அந்தப் பெண் கிருஷ்ணனுடன் உறவில் ஈடுபட்டிருந்தாலும், தன்னுடைய மருமகளான இலா என்பவள் வயதுக்கு வந்தவுடன் அவளை கிருஷ்ணனுக்கு அளித்து விடுகிறாள். அப்போது அந்த ராதை இலாவுக்கும், கிருஷ்ணனுக்கும் இவர்கள் உறவில் எப்படியெல்லாம் இன்பம் துய்க்க முடியும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். அதுதான் கவிதை. *(இணையத்திலிருந்து சில பாடல்களை கட்டுரையின் இறுதியில் காண்க)

    பிற்காலத்தில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் ஒருவர் இந்த நூலை இயற்றியவர் ஒரு பெண் என்பதறியாமல் முத்துப் பழனி எனும் ஒரு ஆண் என்கிறார். இந்த நூல் 1887இலும் பின்னர் 1907லும் சென்னையில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஒரு வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் பகுதியில் வாழ்ந்த சீர்திருத்தக்காரரும், தேவதாசி முறை ஒழிப்பு ஆதரவாளரும், விதவா விவாக ஆதரவாளருமான வீரேசலிங்கம் பந்துலு என்பவரின் கவனத்துக்கு இந்த நூல் வந்தது. மகாகவி பாரதி தன்னுடைய “சந்திரிகையின் கதை” எனும் நாவலில் இந்த வீரேசலிங்கம் பந்துலுவையே ஒரு கதாபாத்திரமாக்கியிருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறேன்.

    இந்த வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கு மொழி கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு”களைத் தொகுத்து வெளியிட்டிருந்தார். அந்தத் தொகுப்பு நூலில் இந்த “ராதிகா சாந்தவனமு” கவிதை நூலைப் பற்றியும், அதன் உள்ளடக்கம் பற்றியும் எழுதியிருந்தார். அப்படி குறிப்பிடும்போது அவர் தேவதாசிகளை வெறுப்பவர் என்ற முறையில் இதன் ஆசிரியரான முத்துப்பழனியைக் குறிப்பிட தெலுங்கில் மரியாதைக் குறைவாக விளிக்கும் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். கவிஞரின் சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழி அறிவைப் பாராட்டிவிட்டு, உள்ளடக்கம் அதிர்ச்சியாக இருப்பதாக அவர் எழுதினார். உச்சகட்டமாக கவிஞர் முத்துப்பழனியை நடத்தை கெட்டவள் என்றும், ஒரு விலைமாதினால் எழுதப் பட்டதால் நூல் ஆபாசம் நிறைந்ததாக உள்ளது என்றும் எழுதினார்.

    இந்த விவரங்களையெல்லாம் கேள்விப்பட்ட நாகரத்தினம்மாள் அந்த நூலை வாங்கிப் படித்துப் பார்த்தார். அதில் இருந்த பல பிழைகளை நீக்கி நல்ல முறையில் மீள்பதிவு செய்து வெளியிட்டார். அப்படி வெளியிட்ட பதிப்பின் முன்னுரையை எழுதிய நாகரத்தினம்மாள் சொல்கிறார். “வீரேசலிங்கம் இந்த நூலைப் பற்றி எழுதுகையில் ஆசிரியரும் கவிஞருமான முத்துப்பழனியை மிகக்கேவலமாக, அவர் ஒரு வேசி, இவரது தாயார் முத்தியாலு, முத்துப்பழனி பிரதாபசிம்ம ராஜாவின் ஆசைநாயகி என்றெல்லாம் எழுதியிருந்ததை நாகரத்தினம்மாள் கண்டித்து முத்தியாலு என்பவர் கவிஞரின் தாய் அல்ல, தந்தை என்பதையும் எழுதினார்.

    முத்துப்பழனி ஒரு விலைமாது, ஒழுக்கமற்றவர் என்றெல்லாம் விமர்சனம் செய்திருந்ததை நாக்ரத்தினம்மாள் விரும்பவில்லை. அதற்கு கண்டனங்களைத் தெரிவித்தார். தேவதாசியாகப் பிறந்ததாலேயே ஒருவர் ஒழுக்கமற்றவர் என்று வீரேசலிங்கம் எப்படி முடிவுக்கு வரலாம் என்பது அவர் வாதம். இதற்கிடையே 1911 ஜனவரி மாதம் சென்னையிலிருந்து வெளிவந்த தெலுங்கு பத்திரிகையான “சசிலேகா” வில் இந்த நூலைப் பற்றி “ஒரு விலைமாதினால் எழுதப்பட்டு, இன்னொரு விலைமாது அதை திருத்தி வெளியிட்டிருக்கிறார்” என்று எழுதினார்கள்.

    பல விவாதங்கள், அரசாங்க கடித பரிமாற்றங்கள், சமூக ஆர்வலர்களின் தலையீடு இவற்றின் முடிவில் இந்த நூல் காவல்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதில் பதிப்பாசிரியர் பெயரை பெங்களூரு நாகரத்தினம்மாள் (மதராசின் பிரபலமான விலைமாதுக்களில் ஒருவர்) என்று குறிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து 1911 மே மாதம் சென்னை காவல்துறை டெபுடி கமிஷனர் கன்னிங்ஹாம் தலைமையில் ஒரு குழு சென்று ஆய்வு நடத்தி மொத்தம் 18 நூல்களை ஆபாசம் என்று முடிவுக்கு வந்து ஒரு பட்டியல் தயாரித்தது. அதில் இரண்டாமிடத்தில் நாகரத்தினம்மாள் பிரசுரித்த முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” இருந்தது. இதில் இன்னொரு வேடிக்கை, இந்த பிரச்சனையைக் கிளப்பி சீர்திருத்தம் பேசிய வீரேசலிங்கம் பந்துலு எழுதிய “ரசிக ஜன மனோரஞ்சனம்” எனும் நூலும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதைவிட ஆச்சர்யமும், பெரிய கொடுமையும் என்ன வென்றால் பெரிய புராணத்தில் பாடப்பட்ட நந்தனார் வரலாற்றை இசை நாடகமாக மாயூரம் கோபாலகிருஷ்ண பாரதியார் ஆக்கினாரல்லவா “நந்தன் சரித்திர” நாடகம், அதுவும் பட்டியலில் இருந்தது.

    பின்னர் பல சர்ச்சைகள், கூட்டங்கள், ஆலோசனைகள் இவற்றுக்குப் பிறகு மற்ற நூல்கள், அடித்தல் திருத்தல், நீக்கல் ஆகியவைகளுடன் வெளியிட்டாலும் முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” சந்தையில் இல்லாமலே போய்விட்டது.

    இந்த சந்தடிகளெல்லாம் அடங்கிய பின் வாழ்க்கையில் விரக்தியுற்று நாகரத்தினம்மாள், தன் செல்வங்களையெல்லாம் ஒரு மகானின் நினைவிடத்தைப் புதுப்பித்து, ஒரு துறவி போல வாழ்ந்து வந்த கதை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. இன்று திருவையாற்றில் காவிரிக் கரையில் மெல்லிய பனிப் பொழிவிடையே இசை வெள்ளம் பெருக்கெடுத்தோடுவது, இவருடைய சிறந்த தொண்டினால் என்பதை அறியும்போது சாதனைதான் பெரிதாக இருக்குமே தவிர, சாதனையாளரைப் பற்றிய சொந்த விமர்சனங்கள் நிற்பதில்லை. போராட்டங்களை சந்தித்த அந்தப் பெண்மணியின் மன உறுதியும், அர்ப்பணிப்புணர்வும் அனைவரும் போற்றவேண்டிய குணங்கள். வாழ்க நாகரத்தினம்மாள் புகழ்!!

    _______________________________________________________________________________

    எனையின்றி பொன் பொருளீந்தவள்
    எனையின்றி என்குலத்தில் எவளுண்டு
    நலமிகு காவியத்தை நாவலர்கள் எனையன்றி
    எம் குலத்தார் எவர்க்கேனும் படைத்ததுண்டோ
    கலையெலாம் பயின் றோங்கி நின்றாள்
    எனையன்றி எம் குலத்தில் எவளுளாள்
    முத்துபழனியே உனக்கிணையாய்
    எவரேயுளார் உன் குலத்தில்

    தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ப. சிவனடி
    (http://puthagampesuthu.com/2014/04/16/தடை-செய்யப்படும்-புத்தகங/)
    _______________________________________________________________________________

    தேனே,
    நான் காளியை நசுக்கினேன்;
    ஏன் என்று நினைக்கிறாய்?
    அந்தப் பாம்பு
    உன் அழகான ஜடைப்பின்னுலுக்குப்
    போட்டி என்பதால்…
    நான் கம்சனின் வில்லை உடைத்தேன்
    எதற்கு என்று நினைக்கிறாய்?
    அது உன் வடிவான புருவத்திற்குப்
    போட்டி என்பதால்…
    நான் கோவர்தனமலையை
    வேரோடு பிடிங்கினேன்;

    ஏன் என்று நினைக்கிறாய்?
    அந்த மலை
    உன் திடமான முலைகளுக்குப்
    போட்டி என்பதால்…
    நான் குவளயபீடாவை வருத்தினேன்;
    எதற்கு என்று நினைக்கிறாய்?
    அந்த யானை
    உன் அழகான பின்னிடை அசைவிற்குப்
    போட்டி என்பதால்..
    தேனே,
    தயவுசெய்வு நீயே யோசித்துப்பார்..
    அவைகள் உன்னைப் போலவே
    அழகாய் இருந்தால்
    என்னை வருத்துமா இல்லையா…

    தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ஆ. ஈஸ்வரன்
    (http://meyveendu.blogspot.com/2014/03/blog-post_685.html)
    _______________________________________________________________________________

    விக்கிபீடியாவிலிருந்து:
    பார்க்க … https://en.wikipedia.org/wiki/R%C4%81dhik%C4%81-s%C4%81ntvanam

    “If I ask her not to kiss me,
    stroking on my cheeks
    she presses my lips hard against hers.
    If I ask her not to touch me,
    stabbing me with her firm breasts
    she hugs me.
    If I ask her not to get too close
    for it is not decorous,
    she swears at me loudly.
    If I tell her of my vow not
    to have a woman in my bed,
    she hops on
    and begins the game of love.
    Appreciative,
    she lets me drink from her lips,
    fondles me, talks on,
    making love again and again.
    How could I stay away
    from her company?”

    B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
    [If I ask her not to kiss me]’, in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
    by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.

    _______________________________________________________________________________

    பார்க்க … https://en.wikipedia.org/wiki/Muddupalani

    “Which other woman of my kind has
    felicitated scholars with such gifts and money?
    To which other women of my kind have
    epics been dedicated?
    Which other woman of my kind has
    won such acclaim in each of the arts?
    You are incomparable,
    Muddupalani, among your kind.
    […]
    A face that glows like the full moon,
    skills of conversation, matching the countenance.
    Eyes filled with compassion,
    matching the speech.
    A great spirit of generosity,
    matching the glance.
    These are the ornaments
    that adorn Palani,
    when she is praised by kings.”

    B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
    in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
    by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.
    _______________________________________________________________________________

    Share
  • படக்கவிதைப் போட்டி 44-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    ’வல்லமை’ வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பசியும் பிணியும் பகையும் நீங்கி
    அன்பும் அருளும் அறனும் ஓங்குக!

    ***

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. பிரேம்நாத் திருமலைசாமி. இப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமையின் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரியதாகுக!

    smiling baby

    முறுவலிக்கும் முகத்தோடு சிறுவிரலால் தாளமிடும் சின்னஞ்சிறு கிளியே! உனைக் காணும்போது என் உள்ளத்தில் எழுகின்றது ஆனந்தக் களியே!

    இனி, நம் கவிஞர்கள் கோத்திருக்கும் கவிதை மலர்ச்சரத்தின் சுகந்தத்தைச் சுவாசித்து வருவோம்… புறப்படுங்கள்!

    ***

    ’ஆவாரம் பூவாய்ச் சிரித்துக்கொண்டு, இந்தப் பாப்பா நாவாரப் பாடும் பாடல் காதில் தேன்பாய்ச்சுதே!’ என்று உளம்பூரிக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    பாவாடைச் சட்டை போட்ட
    ****
    பாப்பாவும் பார்க்குது !
    ஆவாரம் பூவைப் போல
    ****
    அழகாகச் சிரிக்குது !
    நாவாரத் தானும் பாடும்
    ****
    நாடகமும் நடத்துது !
    நோவாமல் தாளம் போட்டு
    ****
    நுள்ளியுள்ளம் இழுக்குது !!

    கால்கொலுசின் சலங்கைச் சத்தம்
    ****
    காதில்தேன் பாய்ச்சுது !
    பால்வடியும் பிள்ளை முகமும்
    ****
    பாங்குடனே இருக்குது !
    மேல்மாடி வீட்டிற் குள்ளே
    ****
    மெய்சொக்க வைக்குது !
    வேல்முருகன் அருளி னாலே
    ****
    விளையாடி மகிழுது !

    *** 

    ’குட்டிக் கவிதையே! உன் நகங்களில் பிறைநிலாக்கள் முகங்காட்டும்; உறக்கத்திலும் குறுஞ்சிரிப்பு சிந்தும் மென்மலரே! இப்போதைய பெருஞ்சிரிப்புக்கு யாது காரணம்?’ என்று வினயமாய் வினவுகின்றார் திருமிகு. கார்த்திகா.

    …மழலையின் மொழி
    குறுஞ் சிரிப்பென்று
    உறக்கத்திலும் புன்னகை வீசும் நீ
    உரக்கச் சிரிப்பது எதைக் கண்டோ

    செல்லச் சிட்டுக்கு
    பட்டு வண்ணப் பூச்சி
    கண்ணில் பட்டதோ
    […]

    தலை கொள்ளா
    உன் கேசம்
    தென்றலின் நேசமடி

    நீ சிணுங்கிச் சிரிக்கையில்
    கொலுசொலிகள் தோற்குமடி
    வெட்கத்தில் பூக்கும்
    விரலோடு பிறை நிலாக்கள்

    வளை குலுங்கும்
    உன் பிஞ்சுக் கரங்கள்
    பூக்கள் தொடச் சிவக்குதே
    பூவிதழ்கள் மோட்சமடையுதடி

    சங்குக் கழுத்தில் தொங்க
    என்ன தவம் செய்துவிட்டது
    இந்த மின்னும் பொன் சங்கிலி

    குட்டிக் கவி நீ
    சிரிக்க ஹைக்கூக்கள்
    சிதறுமடி என் செல்லமே!

     *** 

    இரண்டே சொற்களில் இந்த மழலையின் மணிச்சிரிப்பை வருணித்திருக்கின்றார் திரு. கவிஜி. 

    சித்திரம்
    சிரிக்குதடி…!

    ***

    ’மழலையே…இந்தப் புன்னகை இருக்கப் பொன்னகை எதற்கு? தேங்குரல் இருக்கப் பூங்குழல் இசைதான் எதற்கு?’ என்று அருமையாய் வினவுகின்றார் திரு. ஜெயபாரதன்.

    புன்னகை உள்ள போது
    பொன்னகை வேறெதற்கு ?
    தேங்குரல் கேட்கும் போது
    பூங்குழல் இசை எதற்கு ?
    கொஞ்சும் சிசு ஆடும் போது
    தஞ்சாவூர் பொம்மை எதற்கு ?
    பிள்ளைச் செல்வம் உள்ள போது
    பேரின்பம் வேறெதற்கு ?

    ***

    மழலைச் செல்வத்தின் மனங்கவரும் அழகுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய்ச் சொல்லி வியக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன். 

    சின்னக் குழந்தை சிரிக்கும் அழகு
    தெய்வம் காட்டும் பேரழகு…..அதன்
    கன்னக் குழியில் கனியும் அழகு
    கவிதை காட்டும் ஓரழகு.
    முன்னஞ் செய்யும் குறும்பு களாலே
    முற்றம் பெறுமே சீரழகு…..மெல்ல
    வண்ண மாகத் தத்தித் தவழ்ந்து
    வரும்போது தோற்கும் தேரழகு.

    முத்தா யுதிர்க்கும் ம்மா வென்னும்
    மொழியில் தோன்றும் தமிழழகு

    […]

    எண்ணத் தொலையா ஏட்டில் விளையா
    மழலைச் சொல்லின் மொழியழகு ….நலம்
    பண்ணும் குறும்பில் தெரியும் அரும்பின்
    பட்டுத் தெறிக்கும் விழியழகு.
    மண்ணும் விண்ணும் மறுக்க வியலா
    மாபெரும் படைப்பின் ஒளியழகு….தெய்வப்
    பண்ணும் கொடுக்கா பலவிசைப் பாட்டில்
    கேட்கும் இன்பக் களிப்பழகே.

    *** 

    ’உன் சிரிப்பே பூபாளம்; தட்டு நீ மிருதுவாய்த் தாளம்!’ என்று சின்னக் கண்மணியைப் பார்த்துப் பண்ணிசைக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

    தட்டு மிருதுவாய்த் தாளம்
    தரலாம் இசைக்கருவி ஓசை வேதாளம்
    தத்தை உன் மிருது வாய் சிரிப்போ
    தந்திடுமே எப்போதும் ஆசை பூபாளம் 

    *** 

    தன் பாடலுக்குத் தானே தாளம்போட்டு நாட்டியமும் ஆடும் இந்தக் கவின்மழலையைக் கண்டு மலைக்கின்றார் திருமிகு. பி. தமிழ்முகில்.

    கொஞ்சும் கொலுசொலியும்
    மழலை மொழியும் இசையாக
    கேட்போர் மனதை மயக்கி
    சுற்றம் அனைத்தையும்
    தன்வயப் படுத்திக் கொண்ட
    அழகுக் கிள்ளையே !
    உந்தன் இனிய பாடலுக்கு
    நீயே தாளமும் போட்டு
    காலை உதைத்து
    நாட்டியமும் ஆடுகிறாயே !
    உந்தன் புன்னகையில்
    சொக்கிப் போய்
    கண்கொட்ட மறந்து
    கட்டியணைத்து உச்சி முகர
    ஓடிவரும் அன்னையைக் கண்டு
    உந்தன் விழியிரண்டும் விரிகிறதோ ?
    கள்ளமறியா சிறு கிள்ளையே !

    ***

    ’இசைபாடிப் புன்னகைக்கும் இந்தப் பூவின் இன்சொற்கள், மலரும் புத்தாண்டில் நல்ல மாறுதல்களைக் கொணரும்!’ என்று நம்பிக்கை விதைக்கின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.

    பூவொன்று
    இசைப்பாடி
    புன்னகைக்கிறது
    புத்தாண்டை வரவேற்று
    கண்ணசைக்கிறது

    […]

    கற்பத்தில் விளைந்த
    கவிதையொன்று
    முரசு கொட்டி
    கலாமின் கனவுகள்
    நனவாகப் போகுதென்று
    கட்டியம் கூறுகிறது

    மழலையிவள் சொற்கள்
    மலருகின்றப் புத்தாண்டில்
    மாற்றத்தை உண்டாக்கும்
    மகேசனின் மந்திரமட்டுமல்ல
    கனவுகளை நிஜமாக்கும்
    காலதேவனின்
    கட்டளைகளுமாகும்!

     ***

    ’பொக்கைவாய்ச் சிரிப்புடன் ஞானச்சுடரேற்றும் இக்குழந்தை இறைவனின் அருட்கொடையே!’ என்று இன்மொழி பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    பொக்கை வாய் சிரிப்புடன்
    புதுக்கவிதையாய் புறப்பட்டு
    கள்ளங் கபடமின்றி என் செல்லம்
    தப்புத்தாளங்களில் வாசித்தாலும்
    ஏதோ ஞானச்சுடரென்றோ
    என்முன் விரிந்து தெரிகிறது
    நல்ல பண்புகள் ஓடி விட்ட காலத்தில்
    தீமைகள் ஆட்டம் போடும் உலகத்தில்
    மெல்ல தமிழ் ஊட்டி உன்
    அருளால் அறிவை ஊட்டி
    நாவும் கையும் நல்லனவற்றில்
    துலங்கச் செய்த இறைவா நீ
    ஈந்த இந்த அருட்கொடைக்கோ
    இனிதாய் சொன்னேன் நன்றியடா

    *** 

    மழலையின் மந்தகாச அழகில் மனங்கனிந்து, கவிமலர்களை அள்ளியிறைத்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு நன்றியும், பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை இனிச் சந்தித்து வருவோம்!

    குழந்தையின் குதலை மொழிகளும், துறுதுறு விழிகளும் மாந்தர்தம் உள்ளங்களை அள்ளுபவை; கொள்ளை கொள்ளுபவை. அதன் மெய்தீண்டலால் உண்டாகும் பேரின்பமோ வார்த்தைகளில் வடிக்கற்பாலதன்று! கள்ளமில்லா குழந்தையின் உள்ளமே இறைவன் குடிகொள்ளும் ஆலயமாகும். சின்னஞ்சிறு கிளிகளாய், பேசும் பொற்சித்திரங்களாய் இல்லங்களில் உலாவரும் குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

    அவ்வகையில், பேசுந்தெய்வமான இந்தச் சிறுகுழந்தை தன் செங்கனிவாய் திறந்து பாடுகையில், அதன் தளிர்க்கரங்கள் போடும் தாளங்கள் சுருதி பிசகினாலும் அவை சுந்தரத் தாளங்களே! வஞ்சமற்ற அதன் பிஞ்சுக் குரலோசையில் விளையும் தேவகானத்திற்குமுன் பக்திப் பாசுரங்களும் பலனின்றிப் போகின்றன!’ என்று குழந்தையைக் கொண்டாடும் ஓர் கவிதை மனவயலில் மகிழ்ச்சியை நட்டது!

    அக்கவிதை…

    பேசும் தெய்வமொன்று
    பாட ஆரம்பித்தது,
    தாளம் போட்டிடும்
    தளிர்க் கரங்கள்..

    இதில்
    பொய் வேடமில்லை
    போலிப் புனைவுகளில்லை..

    தப்புத் தாளங்கள்
    இலக்கணப் பிழைகள்,
    தலைமறைவாயின
    மழலையின் ஆட்சியில்…

    நெஞ்சில் வஞ்சமின்றி
    கொஞ்சும் மொழியில்வரும்
    பிஞ்சுக் குரலிசையின்முன்,
    பக்திப் பாசுரங்கள்
    பலனின்றிப் போகின்றன..

    இதோ,
    இதைரசிக்க வந்துவிட்டான்
    இறைவனும் நம்முடன்…!

    இக்கவிதையில், இறைவனையும் குழந்தையின் ரசிகனாக்கியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    ***

    குழந்தாய்! நீ ’ஆ’ காட்டும் அழகில் நான் அப்படியே விழுந்தேன்; உன் ’பா’ கேட்டுக் கைதட்ட ஓடிவந்தேன்! பொக்கைவாய்ச் சிரிப்பில் சொக்கவைக்கும் சொக்கத் தங்கம் நீயடி! என்று இந்தப் பெண்மகவைத் தொழுதுபோற்றும் இனிய கவிதை ஒன்று…

    பட்டுப் பாவாடைச் சட்டை மீனாட்சியே!
    குட்டிக்   கொலுசும் கட்டுதடி என்னையே!
    கெட்ட  திருஷ்டியை  வெட்டக் கறுப்பாய்
    பொட்டிட்ட  குட்டிச் சுட்டி ராணியே!
    எடுப்பாய் அமர்ந்த எழிலான தேவதையாய்
    அடுக்கடுக்காய் தாளமிட துடுக்காய்த் தயாரானாய்.
    ”
    ஆ” காட்டுமழகில் அப்படியே விழுந்தேன்.
    ”
    பா ” கேட்டுக் கைதட்டி ஊக்கிட வந்தேன்.

    பொக்கைவாய்ச் சிரிப்பு சொக்கு வித்தையடி!
    சொக்கத் தங்கமே! பெண் பிள்ளையென்றடி
    பொசுக்கவில்லை உலகமுன்னை பெரிய நன்றியடி!
    பெண் பெருமையையேற்று பண்ணிசை ராணியே!
    குழலினும் இனியது குழந்தை மொழி
    மழலையின் மயக்கமது இன்ப வழி
    தொழ வேண்டும்! மழலையின் அரங்கேற்றம்!
    தழலாய் உயரட்டும் தரணியில் புகழுடன்!
     

    பெண் குழந்தையைக் குடும்பச் சுமையாய் நினைக்கும் மனப்போக்கு, நம் சமூகத்தில் இன்னமும் முற்றாய் மாறிவிடவில்லை. இச்சூழ்நிலையில், பெண்குழந்தையைப் போற்றுவதோடு, அதனைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் தன் கவிதையில் நினைவுறுத்திச் சென்றிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விழைகின்றேன்.

    மீண்டும் சந்திப்போம்!

     

     

    Share
  • சுனாமி நினைவுதின அஞ்சலிக் கவிதை!

    –முனைவர். து. சந்தானலெட்சுமி

    டிசம்பர் 26.2004 ஞாயிற்று கிழமை
    ஞாயிறு உதயம்!
    வாரம் முழுவதும் உழைத்துக் களைத்தவர்கள் உறக்கத்தில்…
    ஓய்வே இல்லாதவர்கள் தம்கடமையில்…
    பெண்டிர் தத்தம் பணியில்…
    சுற்றுல்லாப் பயணிகள் உல்லாசத்தில்…
    இப்படி ஆயிரமாயிர மனிதர்கள் ஆயிரமாயிரம் சிந்தனைகளோடு
    தத்தம் பணிகளைத்தொடர
    இயற்கையோ தம் நீண்டநாள் பசியைத்தீர்க்க எண்ணியது.

    யாருக்குத்தெரியும்… இயற்கையின் கோரப்பசி?
    பசியைத்தீர்க்கப்
    பேரலையாக உருவெடுத்தது…
    ஆழிப்பேரலையாக!

    அள்ளிச்சென்றது அனைத்துஉயிர்களையும்
    துள்ளிவிளையாடிய விளையாடியச்சிறுவர்களை
    மண்ணுக்குள் புதைத்தது
    கொஞ்சுமொழிபேசும் மனிதர்களைக் கொன்றுகுவித்தது!

    இங்குமட்டுமா? உலகெங்கும்
    ஆம்!
    “சாறுகொண்டு கரும்பின் கோதுவீசுவார்போல”
    சாதிமதம்மொழிகடந்து
    உயிர்களை உறிஞ்சிவிட்டு
    உடல்களை வீசிஎறி்ந்தது!

    ஆங்காங்கே ஓலங்கள்…
    நினைத்தாலே மனம்நடுங்கும் அந்நாளில்
    விலைமதிப்பில்லா உயிர்களை
    அலைகளின் பசிக்கு
    உணவாய் அளித்த அனைவருக்கும் அஞ்சலி!
    எங்கள் கண்ணீர் அஞ்சலி!

     

     

    Share
  • மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !

    – எம்.ரிஷான் ஷெரீப்

          சூழப்பல தேசங்களிலும் என் தேசத்திலும் மழை விடாமல் பொழிவதாயும், வீடுகள்,வீதிகள், மரங்கள் அனைத்துமென வெள்ளம் வழிவதாயும் செய்தித்தாள் சொல்லிற்று. தடவிப் பார்த்தேன். ஈரத்தின் சுவடுகள் விரல்களில் பொசிந்தன. காலம் காலமாக என் வானில் பெய்த மழை இன்று நான் வாழும் இப் பாலைவன தேசத்தில் பொய்த்தது. சூழலை இருட்டாக்கி, தேகங்களை வெம்பச் செய்து, மேகக் கூட்டங்கள் கருக்கட்டி, வான நடை போட்டுப் பார்த்துப் பல காலமாயிற்று.

            மழையின் துளிகளை முகத்தில் வாங்கி , அன்னை கூப்பிட்டலுத்து அன்பால் திட்டித் திட்டித் தலை துவட்டி விடும் சிறுபராயம் நினைவுகளில் இடறுகிறது. தலையின் பின்புறம் கட்டாயம் துடைக்கவேண்டும். ஈரத்தின் சாயல் கண்டு தடிமன் வரும். பின்னர் காய்ச்சல் வரும். நீர் தேங்கி நிற்கும் குட்டைகள் தோறும் விஷக்கிருமிகள் பெருகித்தொற்றி விதவிதமான நோய்கள் வரும் என்றெல்லாம் தந்தை மடியிலிருத்தி மழை குறித்த கதைகள் சொன்னதும் ஞாபக அடுக்குகளிலிருந்து மீளெழும்பிக் கிளர்த்துகிறது.

            பல காலமாக மழையற்ற எனது சிறுவயதின் காலமொன்று நினைவுக்கு வருகிறது. ஊரின் குறுக்கே ஓடும் பேராற்றில் நீர் வரண்டு நிறைந்திருந்த மணல்மேட்டில் ஊரின் இளைஞர்கள் கிரிக்கெட்டும் கால்பந்தும் விளையாடினர். சிறுவர்கள் பட்டம் விட்டனர். மரங்கள், செடி கொடிகள் வாடிய அக்காலத்தில் பட்டாம்பூச்சிகளும், மழைக்குருவிகளும் கூட வேறெங்கோ பறந்திருக்கவேண்டும். தண்ணீருக்குக் கடும்பஞ்சம்.  எங்கும் கடும்வெயில். சொன்னது கேட்காப்பிள்ளையை பிசாசுகளை நினைவுருத்தி வெருட்டுவது போலச் சூடும் வெயிலும்  எல்லாவற்றையும், எல்லோரையும் மிரட்டியபடி அலைந்தது.

            அக் கோடையில் அத்தியவசியத் தேவைகளுக்கே நீரற்றுப் போனதனால் விவசாயங்கள் பொய்த்துப் போயிற்று. வளர்ப்புப் பிராணிகள் மெலிந்து கொண்டு வந்தன. நீரோடி வற்றிய ஆற்றில் ஆழக்குழி தோண்டி உள்ளே ஊறித் தெரிந்த நீரை அகப்பையிலள்ளிக் குடங்களுக்கு சேலைத் திரையிட்டு அதனூடாக வடிகட்டி நீரைச் சேகரித்ததையும் கண்டிருக்கிறேன். தெளிந்த நீர்க் கிணறு உள்ளதென அறிந்து வெகுதூரம் நடந்தும், சைக்கிள்களிலும் தேடிப் போய்த் தண்ணீர் காவி வந்தனர் ஊரார். நாடு முழுதும் இதே நிலைமை. எல்லா நீர்த் தேக்கங்களிலும் தண்ணீரின் மட்டம் குறைந்ததனால் மின்சாரம் வழங்குவது கூட அரசுக்குச் சிக்கலாயிற்று. நாளொன்றின் பெரும்பகுதிகள் மின்சாரமற்றுப் போக விதிக்கப்பட்டன. நாட்டின் பெரும் பாகங்கள் இருளுக்குள் மூழ்கின.

            கடல் எங்களூரிலிருந்து மிகத் தொலைவில் அலையடித்தபடி இருக்கிறது. நேரில் கண்டதில்லை. கடல் பற்றிய பிம்பங்களை போத்தலில் அடைக்கப்பட்ட பூதமொன்று அலையில் மிதந்து வந்து சிறுவனொருவனுக்கு எட்டிய கதையூடாக சிறுவயதில் அறிந்திருக்கிறேன். ஆழக் கடலெனில் அது நிறைய என்றும் வற்றா நீரிருக்கும் என்ற தந்தையிடம் நீர் எப்படி வற்றுமெனக் கேட்டுத் தெரிந்த பின்னர் , கடல் பிரதேசங்களில் சூரியன் அலையாதா எனக் கேட்டுத் திண்டாடச் செய்திருக்கிறேன்.

            பள்ளிக்கூடச் சுற்றுலா போய் கடல் பார்த்து வந்த பின்னர், வெயில் வராத தெருக்களோடு, எல்லா ஊர்களிலும் என்றுமே வற்றாத கடல்கள் இருப்பின் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமெனக் கூட்டாளிகளுடன் கூடிக் கதைத்த கதைகளும், கடற்கரை இரவுகளின் மணல் நடையும் நிலாச் சோறுண்ணும் ஆசையும் சில வருடங்களுக்கு முன் வந்து சென்ற சுனாமியுடனும், பின் வந்த அடைமழையுடனும், அது கொண்டு வந்த வெள்ளத்துடனும் வடிந்து போயிற்று.

             இலங்கையில் விடிந்தும் விடியாப்பொழுதுகளிலிருந்து புதுத்திரையிசைப் பாடல்களோடு கும்மாளமிடும், மொழிக் கொலையுடன் அரட்டையடிக்கும் பல வானொலிகள் 26-12-2004 அன்று சுனாமி குறித்தான நேரடி அறிவிப்பினைத் தொடர்ந்தும் தந்துகொண்டிருந்தன. வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்க கடைவீதிக்குச் சென்றிருந்த எனக்குள்ளும், பலரிடமும் ஆழிப்பேரலை குறித்து வானொலிகள் அலறியது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. வழமையாகக் காலைவேளையில் மகளிருக்கான நிகழ்ச்சிகளை அள்ளிவழங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் கூட அன்று பேரலைத்தாக்கத்தை நேரடியாகக் காட்சிப்படுத்தின. இந்நேரத்தில் நேரடிக்காட்சிப்பதிவுக்காக கடற்கரை சென்ற ஒரு தொலைக்காட்சி ஊடகவியலாளரையும் படப்பிடிப்பாளரையும் அலைவிழுங்கியதை வருத்தத்துடனும், இன்னும் இலங்கையின் மற்ற ஊடகங்களை நன்றியுடனும் நினைவுகூறுகிறேன்.

            அந்த ஞாயிறன்று பல தொலைக்காட்சிகளும் கடலனர்த்தம் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கையில்தான் அப் பாய் வியாபாரி வந்தார். இவ் அசம்பாவிதங்கள் குறித்து ஏதும் அறியா அவரிடம் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காட்டி ஊரை விசாரித்ததில் கடலுக்கு அண்மையிலுள்ள ‘காத்தான்குடி’ என்றார். சமையலறைக் கழிவு நீரைக் கடலுக்குள் வீசியெறியும் தூரத்தில்தான் அவர் வீடிருப்பதாகச் சொல்லி இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு செய்வதறியாது நிலத்தில் அமர்ந்து விசித்து விசித்தழத் தொடங்கினார். வாழ்வில் முதல்முறையாக கடலலைகளின் சீற்றம் குறித்து அறியக்கிடைத்தது அவருக்கும் எங்களுக்கும். எப்பாடுபட்டாவது இப்பொழுது ஊருக்குப் புறப்படவேண்டும். கர்ப்பிணி மனைவியும், இரு சிறுகுழந்தைகளும், பாரிசவாத நோய் தாக்கிப் பாயோடு முடங்கிய வயோதிபத்தாயும் குடிசையில் தனித்திருப்பதாகச் சொல்லி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டார். வானம் இருட்டியிருந்தது. சூரியன் வெட்கி எங்கோ ஒளிந்திருந்தது.

            ஊடகங்களின் தொடர்ந்த அறிவிப்புக்கள் எனது ஊர்மக்களின் மனதினை பெருமளவில் இளகச் செய்திருந்தன. ஊர்ப் பள்ளிவாயிலிலிருந்து அறிவிப்புக்களோடு பல வாகனங்கள் ஊர்த்தெரு முழுதும் உலா வந்தது. வீடுகளிலிருந்த அரிசி, பருப்பு, கோதுமை மா முதல் கடைகளிலிருந்த பால் மா, சீனி,பாண், நூடுல்ஸ்,பிஸ்கட்டுகள் எனப் பல உணவுப் பொருட்களையும் மக்கள் தாமாகவே அள்ளியள்ளிக் கொடுத்துதவினர். பல தாய்மார்கள் ஒன்று கூடி கோதுமை மாவை , ரொட்டிகளாக சுட்டுத்தந்தனர். இப்படியாக உணவுப்பொருட்களாலும் சடலங்களைப் போர்த்தவென வெள்ளைத்துணிகளாலும் பாண்டங்களாலும் இரு பஸ்கள் நிறைந்தன. மாலைத்தொழுகை வரை சேர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்கள் நோக்கி நகர்ந்த பஸ்ஸொன்றுக்குள் நானும் இருந்தேன்.

            வெகுநேரம் பயணித்து , விடிகாலையில் அம்பாறை எனும் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் எனப் பல பிரதேசங்களுக்கும் நிவாரணப்பணிக்கென வந்திருந்த நாம் மனம் முழுதும் வியாபித்திருந்த துயரச் சலனத்தோடு பிரித்தனுப்பப்பட்டோம். பள்ளிவாயல்களுக்கு இரவிரவாகத் தட்டுவண்டிகள் சடலங்களை அள்ளிக்கொண்டு வந்துசேர்ந்தன. ஒவ்வொன்றாகத் திண்ணையில் கிடத்தி (அனேகமான சடலங்களில் ஆடையிருக்கவில்லையாதலால் )  துணியால் போர்த்திப் பின்னர் தூய நீரால் குளிப்பாட்டினோம். குளிப்பாட்டி , வெண்துணியால் போர்த்தப்பட்டவைகளை ஏற்றியபடி தட்டு வண்டிகள் மயானம் நோக்கிச் சென்றன. ஒரு கட்டத்தில் சடலங்களின் மீட்பும் , வருகையும் அதிகரிக்க எல்லாவற்றையும் திண்ணையில் வரிசையில் கிடத்தி அவசரமாகக் குளிப்பாட்டி, அவசரமாக எடுத்துச் சென்று ஒரு பெரிய குழியில் பிரார்த்தனைகளோடு ஒன்றாகப் புதைக்கவேண்டியேற்பட்டது. அவ்வளவு சடலங்கள். நீர் குடித்து, ஊதிப் பெருத்த சடலங்கள். தலைமயிர்களில் கடல்வேர்கள் சிக்குண்டிருந்தன. ஹஜ் பெருநாளும், கிறிஸ்மஸும் அண்மித்த தினமாகையில் அனேகமான பெண் சடலங்களின் கரங்களில் மருதாணி விரல்கள். சிறு குழந்தைகள் பொம்மைகளைப் போலத் துயில் கொண்டிருந்தன.

            விடிந்து பார்க்கையில் எல்லா இடங்களிலும் அழுது சோர்ந்த விழிகளுடன், எல்லா மதத்தவர்களுமான ஊர் மக்கள் பரவிக்கிடந்தனர். நிந்தவூரின் கடற்கரைப்பள்ளிக்கூடம் அலையால் மூழ்கடிக்கப்பட்டதில் அதில் கல்விக்காகச் சென்றிருந்த ஊர்ச் சிறுவர், சிறுமியர்கள் அருகிலிருந்த மயானத்தில் தாமாகவே சடலங்களாக மூடப்பட்டிருந்தனர். கொண்டு போயிருந்த உணவும் , மற்றையவும் பள்ளிவாயில் தலைமைப் பொறுப்பிடம் ஒப்படைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இலங்கையில் மாவனல்லை மக்கள் சேர்த்தளித்த பொருட்கள்தான் முதன்முதலாக பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர்ந்தனவென்று ஊடகங்கள் செய்தியறிக்கைகளில் சொன்னதும் பல ஊர்களிலிருந்தும் நிவாரணப்பொருட்கள் குவியத் தொடங்கின.

            இந் நிலையில் ஆழிப் பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய சில பிரதேசங்களில் திருட்டுக்களும் நிகழ்ந்திருக்கின்றன. கடற்கரையோரமாகப் பயணித்த ஒரு ரயில் வண்டியும் அதன் தண்டவாளங்களும் காட்டேறியொன்றின் கோர நகங்களையொத்த வளைவு நெளிவுகளுக்காளாகியிருந்தபோது அதில் பயணித்தவர்கள் அனைவரும் மரணித்துப் போயினர். உலா வந்த கொள்ளையர்கள் ஊதிப் பருத்திருந்த அச் சடலங்களின் காதுச் சோனைகளை வெட்டித் தோடுகளையும், விரல்களை வெட்டி மோதிரங்களையும், கைகளை வெட்டி வளையல்களையும் சங்கிலிகளையும் திருடிப் போயிருந்தனர். நகைகளின் பிரகாசம், அனர்த்தம் குறித்தான அவர்களது அனுதாபங்களை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றியிருக்க வேண்டும்.

            இலங்கை, காலியில் நடந்த சம்பவமொன்று இன்னும் நினைவிலிருந்து அகற்ற முடியாதுள்ளது. சுனாமி தினத்தன்று தற்செயலாகத் தொலைக்காட்சிச் செய்தியில் காட்சிப்படுத்தப்பட்ட சில நிமிடக் காட்சிகளைக் கூர்ந்து கவனித்த ஒருவர் , அதிலொரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வழக்குப் பதிவு செய்தார். சில மாதங்கள் கழித்து வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது அவ் வீடியோக் காட்சிகள் பெரும் சாட்சியொன்றை அளித்தன. காலி நகரத்தை முழுதாக பேரலை தாக்கிய பொழுதில் தப்பி நீந்திவந்த ஒரு இளம்பெண்ணின் கழுத்துச் சங்கிலியைக் கழட்டியெடுத்து அவரைத் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொல்கிறான் ஒருவன். அக் கொலைகாரனைக் கண்டுபிடித்து மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

            இது போலப் பல கோரங்கள் சுனாமியினால் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா இன்னும் சில நாடுகளில் கடலலை அனர்த்தத்தோடு நிகழ்ந்து கொண்டேயிருந்தன. வைத்தியசாலைகளும், பிரதேச சபைகளும் அடையாளம் தெரியாச் சடலங்களால் நிறைந்தன. இந் நிகழ்வுகளின் போதும் நிவாரணப் பணிகளின் போதும் ஊடகங்கள் பெரிதும் உதவின. பல நாடுகளும் தம் உதவிக்கரங்களை நீட்டின. இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளும், தொழில் இழந்தவர்களுக்கு தொழிலும் மற்றும் இழப்புகளுக்கும் தாம் உதவுவதாகச் சொல்லின. சில நிறைவேறின.

            அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் சென்று அவர்களுக்குக் கைகொடுத்து உரையாடி வந்ததை உலகின் பேரதிசயம் போல ஊடகங்கள் எண்ணிப்பலவாறாக விளம்பரப்படுத்தி வந்தன. பிறகு வந்த காலங்களில் ஊடகங்களுக்கு எழுதத்தெரிந்த அனேகர் ஆழிப்பேரலை குறித்துக் கவிதை, கட்டுரை, கதைகளெனக் கிறுக்கத் தொடங்கினர். அது சுனாமியை விடவும் மோசமாக இருந்தது.

              ” சுனாமியை விடக் கொடுமையானவை அதையொட்டி எழுதப்பட்ட பல கவிதைகள். இவற்றை எழுதிய கவிஞர்கள் பலரையும் டிசம்பர் 26, 2004 காலை 8.20 மணிக்கு மீன் வாங்கி வரும்படி கடற்கரைக்கு அனுப்பாதது நாம் விட்ட மகா வரலாற்றுப்பிழை. ‘ஆடை களவாடும் சுனாமி நீதானோ?’ எனக் காதலியின் விரகக்குரலுக்குப் பாடல்வரிகள் எழுதிய வைரமுத்துவையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்” எனத் தன் பத்தியொன்றில் கூறும் எழுத்தாளர் திரு.உமா வரதராஜனின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்படியாகப் பல கவிதைகள் அலைகளின்றி ஆர்ப்பாட்டமின்றி ஆட்களைக் கொன்றன.

            அது போலவே அக் காலத்தில் மிகைத்திருந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்துதருவதாகச் சொன்ன அரசியல்வாதிகளின், நடிகர்களின் வாக்குறுதிகள் அனேகமானவை நிறைவேற்றப்படாமல் போன இடம் குறித்துத்தகவல்கள் இல்லை.

            இலட்சக்கணக்கான மக்களைக் காவுகொண்ட சுனாமியைப் போலவே தான் பேய்மழைகள் பெரும் இடர்களைக் கொண்டுவருவனவென்றும் அவை மரணத்தின் தூதுவனுக்கு உதவுபவையென்றுமான எண்ணங்கள் எல்லோர் மனதிலும் வலுப்பெற்று நிற்கும்படி பின் வந்த மழைநாட்கள் நாட்டின் பெரும்பாகங்களை வெள்ளத்துக்குள் மூழ்கடித்தன. எங்கு பார்க்கிலும் வெள்ள நீர் மட்டம். அனேக குடியிருப்புக்களின் கூரைகள் மட்டும் தமதிருப்பை உணர்த்தியபடி நீருக்குள் மிதந்தன. ஆட்களேற்றிய வள்ளங்கள் இடமற்ற காரணத்தால் விட்டுச் சென்ற செல்லப்பிராணிகள் சடலங்களாக மிதந்து காகங்களினதும் ,அனைத்துமுண்ணிப் பறவைகளினதும் வயிற்றினை நிரப்பின.

            பல இடங்களில் மண்சரிவினாலும், மழை, வெள்ளத்தாலும் மனிதர்களும் கூடத் தமது இருப்பிடங்களோடு மீளப்பெற முடியாச் சடலங்களாக மண்ணுக்குள் புதையுண்டனர். பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வெள்ளத்துக்காக விட்டுச் சென்ற வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து திரவியங்களைத் தேடினர். எல்லாம் பார்த்திருந்த மழை, தொடர்ந்தும் வருடங்கள் தோறும் சில காலங்களுக்கொரு முறை அமோகமாக வந்து மேலும் மேலும் இன்னல்களைத்தான் சேகரித்துத் தந்துவிட்டுச் செல்கின்றது.

            காலநிலை மாற்றங்கள், யாராலும் நிறுத்த முடியா மழை, புயலின் பாதிப்புக்கள், திசைகள் நோக்கி நகரும் சூறாவளியின் தாக்கங்கள் எனப் பல சொல்லும் வானிலை அறிக்கைகளைக் கூடச் சில சமயங்களில் மழை ஏமாற்றிவிடுகிறது. எதிர்பாராத் தருணங்களில் ஒரு திருட்டுப் பூனையைப் போல வந்துவிடுகிறது. அடைமழை வரலாம் என அறிவிக்கப்பட்ட நாட்களில் தபால்காரனின் கரத்திலிருந்து தொலைந்து போன கடிதமாய் மழை வராமலே போய்விடுகிறது.

            கடந்த இருமாதங்களாக இலங்கையின் பல பிரதேசங்களிலும், இந்தியாவின் தமிழ்நாடு, இன்னும் சில பிரதேசங்களிலும் புயலுடனான மழை கோரத்தாண்டவமாடிச் சென்று நகரங்கள் ஈரலித்துக் கிடந்தமையையும், மனிதர்கள் ஏற்றத்தாழ்வு பாராமல் வெள்ளம் தீண்டாத ஊர்ப்பொது இடங்களில் கூடிக் கதைத்தபடியிருந்ததையும் காணும் வாய்ப்புக்கள் புகைப்படங்கள் மூலம் கிட்டியது. நகரங்களில் நேர காலமற்ற பணி நெருக்கடி, அயலவரைக் கூட அறிமுகமற்றவர்களாக ஆக்கியிருக்கிறது. பெற்ற பிள்ளைகளிடம் பல விடயங்களை பேசுதல், அவர்களது கல்வி, வாழ்வியல் முறைகள், நடவடிக்கைகள் எனக் கலந்தாலோசித்தல் போன்றவைக்கும் துணைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கும் நேரம் இடமளிக்கா வீடுகளில் உள்ளவர்களையெல்லாம் கூட வெள்ளம் ஒன்றாக்கி ஓரிடத்துக்குக் கூட்டி வந்து கலந்துரையாட விட்டது.

            வெள்ளங்களும், பல இயற்கை அனர்த்தங்களும் சமூகத்தின் கீழ்நிலை மற்றும் நடுத்தர மக்களையே அதிகம் பாதிக்கிறது. அன்றாட வாழ்க்கைக்காக அன்றாடம் உழைப்பவர்களும், மாத வருவாய் போதா மக்களுமே அதிகளவில் இன்னல்களுக்குள்ளாகின்றனர். வசதிப்பட்டவர்களின் மாளிகைகளுக்கு வெள்ளம் வராது. வரினும் அவர்கள் மாடிகளிலிருந்து வேடிக்கை பார்ப்பர். அவர்களுக்கான உணவுகள் குளிரூட்டப்பட்ட இயந்திரங்களுக்குள்ளும் சூடான சமையல் உபகரணங்களுக்குள்ளும் அடைபட்டுக்கிடக்க, மாடிகளிலிருந்து வெள்ளநீரையும், மழையையும் வேடிக்கை பார்ப்பர். சினிமா நாயகிகள் நீரில் அழியா முக ஒப்பனைகளுடன் மழையில் குதித்தாடுவதை தொலைக்காட்சிகளில் வேடிக்கை பார்த்தும் பொழுதைக் கடத்தலாம் அவர்கள்.

            இன்னும்,  இலேசான மழை தூறும் நாட்களில் கூட சுகமான போர்வைக்குள் பலத்த நித்திரையிலிருக்கும் பலர் நனைந்த தரையில், குளிரெடுக்கும் இரவில் வீதியோரங்களிலும், வெளிப்புறக்கடைத் திண்ணைகளிலும், புனிதஸ்தல வாயில்களிலும் ஒண்டிக் கிடக்கும் யாசக மனிதர்கள் குறித்து சிந்திப்பதேயில்லை. மழை நாட்களில் அவர்களது பண வரவுகள், ஊண், உறையுள், உறக்கம் எதுபற்றியும் யோசித்துப்பார்ப்பதில்லை. மேற்கூறிய இடங்களில் அடைக்கலமாகி இரவுறக்கம் பெறும்  சகமனிதர்களின் நிலை குறித்தும், மழை வந்தால் அவர்களது போக்கிடம், இருப்பு குறித்தும் உரையாடுவதுவும், நினைவுபடுத்துவதும் இங்கு அவசியமாகிறது.

            இன்றைய காலகட்டத்தில் அரசு வழிநடத்தும் ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்கள் பலவும் இது போன்ற அனர்த்தங்களுக்காக, அதற்கான நிவாரணங்களுக்காக ஒன்றுகூடுவதென்பது குறைவாகவே உள்ளது. குடும்பமே கூடிப் பார்த்துக் களிக்கும் தொலைக்காட்சித் திரைகள் கூடத் திரைநாயகிகளின் அங்க அசைவுகளையும், அதி பல சூரக் கதாநாயகர்களின் அடிதடிகளையும் , பொய் சொல்லும் விளம்பரங்களையும் காட்சிப்படுத்திக் காட்சிப்படுத்தியே மக்களின் நேரங்களை வீணடிப்பதோடு அவர்கள் மனதில் வக்கிரத்தையும் வன்முறைகளையும் விதைத்தபடியிருக்கிறது.

            எழுத்து ஊடகங்கள் கூட அனேகமாக நடிகைகளின் நாய்க்குட்டிகளுக்கும், நடிகர்களின் புதுப்படங்கள், அரசியல் பொய் வாக்குறுதிகளுக்கும்  கொடுக்கும் முக்கியத்துவம் கூட இதுபோன்ற அனர்த்தங்கள் பற்றிய செய்திகளுக்கும், அதற்கான நிவாரணத்துக்காக ஒன்றுதிரள ஊக்கப்படுத்துவதற்கும் கொடுப்பதாயில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், இயலாதவர்களுக்காகவும் எவ்வளவோ செய்யமுடியுமானவை மக்களுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் ஊடகங்கள்தான். சில ஊடகங்கள் உள்ளனதான். மறுப்பதற்கில்லை. எனினும் அவையும் காலத்தின் இடர்நிலைக்குச் சிலகாலம் தம்மைக்கொடுத்துவிட்டுப் பின்னர் திரும்பவும் தமது இன்னிசைகளிலும், ஆட்டம்பாட்டங்களிலும், நடிகைகளின் இடைகளிலும், அரசியல் வீரப்பிரதாபங்களுக்குள்ளும் தம்மை ஒளித்துக்கொள்கின்றன.

            காலநிலை மாற்றங்களால் இது போன்ற இயற்கை அழிவுகள் தொடரும் சாத்தியக்கூறுகள் அனேகமிருப்பதால் பாதிக்கப்படும் மக்களின் அரசினை இது போன்ற இன்னல்கள் ஏற்படுமிடத்து உடனடியாகச் செய்யவேண்டியவை குறித்துப் பல நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டிய கடமையில் நாம் இருக்கிறோம். ஆறுகளில் நீர் நிரம்பி ஊருக்குள் திரும்பும் வெள்ளங்களைக் கட்டுப்படுத்த தேவையான அணைகளைக் கட்டி, வேற்று வழிகளினால் நீர் வழிந்தோடச் செய்யவேண்டும். அழுக்குகளும், கழிவுகளும் தேங்கி, நீர் வழிந்து நிரம்பும் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டு, குப்பைகளால் நகர வீடுகள் நீருள் மூழ்குவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதைத் தடுக்கத் தேவையான வழிவகைகளையும் செய்யவேண்டும்.

            இவையெல்லாவற்றுக்கும் ஊடகங்கள் தான் பேருதவி செய்யவேண்டும். மக்களின் காலடிக்கு தினமும் போய்வருகின்றன ஊடக அலைகள். உலகில் சுனாமி எச்சரிக்கை விடுக்கும் நல்ல சேவை செய்யும் ஆராய்ச்சி மையங்கள் பல இப்பொழுது தோன்றிவிட்டன. அது போலவே  இயற்கை அனர்த்தங்கள் குறித்தும், அதன் போதான முதலுதவிகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்விகள், பிரச்சாரங்கள் போன்றவற்றை ஊடகங்கள் தினமும் முன்னின்று செய்துவரின் பல பேரிழப்புக்கள் தடுக்கப்படலாம்.  அறிந்த மக்கள், அறியாதவர்களிடமும், பாமரர்களிடமும் எடுத்துச் சொல்லாவிடின், சுனாமிக் கொள்ளையருக்கும் நமக்குமென்ன வித்தியாசம் இருக்கப் போகிறது ? நீருக்குத் தாகமெடுத்து உயிர்களைப் பருகித் துப்பவிடுவது இன்னும் எத்தனை நாளைக்கு ?

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    மாவனல்லை,

    இலங்கை.

    mrishanshareef@gmail.com

    Share
  • மார்கழி மணாளன்  11 ஸ்ரீ வில்லிபுத்தூர்   ஆண்டாள் – வடபத்ரசாயி   

    க. பாலசுப்பிரமணியன்

    47_big

    மலர்வனத்தில் மலர்ந்த மழலை

    மாலனைத்தேடி மண்வந்த மங்கை

    மாதர் மனம் கவர்ந்த கோதை

    மார்கழிப் பாவை மாதருக்கு கீதை !‘

     

    விஷ்ணுசித்தன் அறியாத மாயை

    விஷ்ணுவின் சித்தம் அறிந்த ராதை !

    விடியலிலே கண்ணனைக் காணும் போதை

    வேங்கடனை நாடிச் சென்றாள் இந்த சீதை !

     

    கோகுலனுக்குக்  கோர்த்து வைத்த மாலை

    கோதை அணிந்தே கேட்டாள் நித்தம் காலை

    “குறையோ? கண்ணா !! உனக்கிணை இது சரியோ?

    இறையே ! உயிரே ! இதயத்தில் இடம் உளதோ ?”

     

    சூடிக்கொடுத்த சுடர்க்கொடி கண்டு

    சொல்லிழந்து உணர்விழந்து சித்தனுமே

    செயலிழந்து நிலையிழந்து நின்றான்

    சோதனையோ? மாதவனேயென வியந்தான் !

     

    ஆண்டவளின் அன்பில் வளர்ந்த அரங்கனும்

    ஆதவனின் ஒளிபோல் அவளை அணைத்தான்

    ஆயிரம் பாசுரங்கள் அண்டங்களில் ஒலிக்க

    அரங்கனின் அருளாட்சி ஆண்டாளின் சந்நிதியில் !!

     

    கோவிந்தனிடம் கோதை கொண்ட காதல்

    குவலயமே வியந்திடும் உறவின் தேடல் !

    பாவையவள்  பாசமுடன் பாடிட்ட பாவை

    பாரினிலே பாவையர்க்குக்  காதல் பாதை !

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 29

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    அவா என்பதை ஆசை என்றும் கூறுவர். அவா என்ற சொல்லைத் திருவள்ளுவர் ஆரா இயற்கை என்கிறார்!

    ஆசை என்பதும் அதையே குறிக்கும்! தமிழில் ‘அவா’ என்று கூறிப்பாருங்கள்! உங்கள் விரியும்வாய் மேலும் மேலும் அகன்று கொண்டே இருக்கும் இதனையே ஆரா இயற்கை – அதாவது நிறைவடையாத இயல்பு என்கிறார் திருவள்ளுவர். மனிதமனம் எதிலும் நிறைவை அடையாது! மனித மனம் மட்டுமன்று, இயற்கையே என்றும் நிறைவடையாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது!

    இந்தப் பிரபஞ்சம் ஐம்பூதங்களால் ஆனது, என்பார்கள்!
    ஐம்பெரும் பூதங்கள், நிலம், நீர்,நெருப்பு, காற்று, வெளி ஆகிய ஐந்துமேயாகும்!
    இவற்றுள் நிலத்தினை நமக்கு அண்மையில் உள்ள பூதம் என்பர்.
    நீர் நிலத்துடன் சேர்ந்திருக்கும், அவ்வப்போது வானில் சென்று மழையாகும், மீண்டும் நிலத்தையே அடையும்! காற்று பூமியைச் சூழ்ந்தே இயங்கும்.
    நெருப்பு வானைநோக்கிச்சென்று பரவும்.
    வானமோ விரிந்து விரிந்து சென்றுகொண்டே இருக்கும்.
    இவை ஐந்தும் நிறைவடையாமல் இயங்கிக்கொண்டே இருக்கும்.

    நிலம் செறிவடைந்து இறுகிக் கொண்டே இருக்கும்; பூமியின் சுழற்சியால், நிலப் படிவங்கள் நகர்ந்து இடத்தை நிரப்பிக் கொள்ளும்.ஆகவே, அதன் ஆசை அடங்காது!
    அவ்வாறே நீரும் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து, இடத்தை நிரப்பும்; அப்போதும் ஆவியாகி வானில் மேகமாகிக் கீழ் நோக்கி, மழையாய்ப் பாய்ந்து,அருவியாகி வழிந்து, ஆறாகி நடந்து கடலை நிரப்பும்!ஆனாலும் அதன் ஆசை நிறைவை அடையாது!
    நெருப்போ, தான் பற்றிக்கொண்ட இடத்தை அடுத்து மெல்லப் பரவி,விரிந்து அனைத்தையும் விழுங்கும்! அதன் ஆசையும் அடங்குவதில்லை!
    காற்றும், வெற்றிடத்தை நோக்கிப் பரவி, அந்த இடத்தை நிரப்பும்! அந்தக் காற்றின் திசைகளால் உலகில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்; அதற்கும் என்றும் நிறைவே இல்லை!
    வானின் விரிவைத் திருவாசகம் மிகவும் சிறப்பாகக் கூறுகிறது!

    “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
    ஒன்றனக் கொன்று நின்றெழில் பகரின்
    நூற்றொரு கொடியின் மேற்பட விரிந்தன!”

    என்பது அத்திருவாசகப் பகுதியாகும்! இந்த வானின் விரிவுக்கும் எல்லை அல்லது நிறைவு இல்லை! இவ்வாறு, ஐம்பெரும் பூதங்களும் நிறைவு பெறாத நிலையில், அனைத்தையும் கவர்ந்து, மேலும் மேலும், ஆரா இயற்கையாகிய அவாவுடன் விளங்குகின்றன! இவை யாவும் நிரம்பிய இயற்கையை உடைய பேரண்ட ஆற்றலுள் ஒடுங்கும்! அவ்வாற்றல் அழிவற்றது; அதனையே திருவள்ளுவர் ”பேரா இயற்கை” என அழைத்தார்!

    நம் உடல், வானம், தீ, நீர், காற்று, மண் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கையே யாகும்! என்றும் நிரம்பாத ஆசைகொண்ட ஐம்பெரும் பூதங்களின் கூட்டுப்பொருள் ஆதலால், நம் உடலும் ஆறாத இயற்கையாகிய அவா மிக்கதாக விளங்குகிறது! நிலையற்ற இந்த உடலுக்குள், நிலைத்த உயிராற்றலை மனமே இணைத்து வைக்கிறது! இந்த உடல், உயிருடன் இணைந்து, நன்மை, தீமை ஆகிய இருவகை வினைகளுடன் இயங்குகின்றது!இதனை வள்ளுவர் ,

    “இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற் றுலகு!”(23)

    என்று கூறுகிறார்! இவ்வுயிர் அருள், தவம், துறவு, மெய்யுணர்தல் ஆகியவற்றில் பழகிப் படிப்படியாகப் பக்குவம் பெற்று, மூல ஆற்றலுடன் ஒன்றி விடுவதுதான் ”பேரா இயற்கை”யை அடைவதாகும். இந்நிலையில், அவா நீங்கப் பெற்ற உயிர், மீண்டும் பிறவாத விடு தலையாகிய ”பேரா இயற்கை” நிலையை அடைகிறது!

    இவ்வாறே இந்த ஐந்து பூதங்களின் கூட்டுப் பொருளாகிய நம் உடல், மெய் ஆசையாகிய காம இன்பத்தில் மிகவும் ஈடுபடுகிறது. இந்த ஆசை எளிதில் குறைவதில்லை; நீங்குவதும் இல்லை; மனம் அதற்குக் கட்டுப்பட்டு விடுகிறது! நம் வாய் உணவுப் பொருள்களின் சுவைக்கு ஆசைப்படுவதை நிறுத்திக் கொள்வதில்லை; மனம் அதன்வழியே சென்று, கழி பேரிரை உண்ணவே விரும்பி விடுகிறது! கண் இப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியிலேயே தன் பார்வையைத் தொலைத்து விடுகிறது! வேண்டாத பொருளின் மேல் பார்வை செல்லும்போது காமம் தூண்டப் பெறுகிறது! மனம் அதனடிமை ஆகிறது! மூக்கு சுவைப் பண்டத்தின் வாசனையை அவாவி, மனத்தை அங்கே செலுத்தி விடுகிறது! செவியோ அளவின்றி இசை கேட்கிறது; இசையின் ஓசை அதிகமாகும்போது, மனம், மிகுந்த ஆசையுடன் செவிப்புலனைக் கெடுத்துக் கொள்கிறது! அவ்வகையில் மனம், இசைக்கு அடிமையாகிறது! இந்த ஆசை அளவின்றிப் பெருகுவதால், உயர்ந்த நோக்கமாகிய ஆன்ம விடுதலையைப் பற்றிச் சற்றும் கவலைப் படாமல் மீண்டும் மீண்டும் பிறப் பதை வழக்கமாக்கிக் கொண்டு துன்பத்தில் வீழ்கிறது! இதையே திரு வள்ளுவர் ”ஆரா இயற்கை அவா” என்கிறார்!

    ஆகவே ஐம்பெரும் பூதங்களும்,நம் உயிரும் ‘பேரா இயற்கையை’ அடைந்து நிறைவு பெறத் தடையாக இருப்பது ‘ஆரா இயற்கை’ யாகிய அவாவே , என்ற புதிய விரிவான பொருளை நாம் உணர்கிறோம்!இனிக் குறட்பாவைப் பயில்வோம்!

    “ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்!” (370).

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆண்டாள் -10
    ———————————-

    298398a0-1728-4f97-bff7-94874cbfb6f1

    சோற்றுச் சுவர்கத்தில் சோம்பித் திரிந்திடுவீர்,
    கூற்றன் வரக்கையைக் கூப்பிடுவீர்: -நூற்றிடுவீர்
    நாச்சியார் சொன்னவண்ணம், நோன்பு திருப்பாவை
    சேச்சியவள்(சகோதரி) வாக்கே சிறப்பு ….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் 10 ஆயர்பாடி -ஸ்ரீ நவமோகன கிருஷ்ணன்

     க. பாலசுப்பிரமணியன்

    271f5fd3-6b56-4fa8-aedb-d3459ea3b314

    இளநீல மயில்பீலி இனிதே தலைசூடி

    இளம்பச்சை பட்டொன்று இடுப்பில் கட்டி

    இளவேனில் மாலையிலே இனிய குழலூதி

    இளமைக்குப் பொலிவூட்டி இடையன் நடந்தான் !

     

    இளஞ்சிவப்புப் பொட்டங்கே எழுகின்ற கதிரவனோ?

    இமையிரண்டும் ஓங்கி உயர்ந்த மாமலையோ?

    இதமான கீதங்கள் இதழசைவில் இறங்கிவர

    இவையனைத்தும் அவன் கருவிழிகள் தேடிவிடும்!

     

    ஊதாப்பூ சேலையுடுத்தி ரோஜாப்பூ ராதை

    கொத்தாகப் பூக்களைத் தலையில் சூட்டி

    மத்தாப்பூ சிரிப்புடனே கண்ணனைத் தேடி

    தப்பாமல் நடந்தாள் கால்தடங்கள் மேலேறி.!

     

    கோலிரண்டைக் கையேந்திப் பாவைகள் ஆட

    கோலமயில் ராதையுடன் கோகுலனும் ஆட

    கைவண்ணம் கால்வண்ணம் கண்வண்ணம்

    வான்மின்னும் தாரகைகள் நிழல் வண்ணம் !

     

    சல் சல்லென்று சலங்கைச் சத்தம் ஒலிக்க

    சில்லென்ற காற்றும் சற்றே மயங்கியே நிற்க

    கோகுலத்தில் கொண்டாட்டம் என்றென்றும்

    கண்டாயோ கண்டாயோ ராசலீலை என்னுயிரே !

     

    தோளினிலே துவளும் ஒரு துளசிமாலை

    தோதாக ஆடிவர பிருந்தாவனப் பாதை !

    குழலிலிருந்து பிறக்கின்ற அவன் நாதம்

    கோகுலமென்ன, கூடிநின்று மூவுலகும் ஆடும் !

     

    கோகுலமோ கோவர்தனமோ இது வைகுந்தமோ,?

    கோவினங்கள் யாதவனைத் தேடிவந்த தேவர்குலமோ ?

    கோவிந்தன் கால்பட்டால் கோகுலமும் வான்வளமோ?

    கோலாட்ட வாழ்க்கையிது ! கோகுலனோடு ஆடிவிடு !

    Share
  • இணையத்தில் தொற்றுநோய் – 1

    — தேமொழி

    சமூக வலைத்தளங்களை சில நேரங்களில் கலக்கும் செய்திகள் வரும்.

    தொற்றுநோய் போல பரவுவதால் இதனை ‘It went viral’ அல்லது ‘gone viral’ என்று சொல்லிச் சொல்லி தங்களைக் கவர்ந்த செய்தியை அனைவருக்கும் பலசமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பிக் கொண்டிருப்பது நமது வழக்கம். அதாவது…இப்பொழுது இங்கு நான் பரப்புவது போல என்று வைத்துக் கொள்ளலாம்.

    கால்நூற்றாண்டிற்கு முன்னர் இணையம் பரவலாக பயனில் இல்லாதக் காலத்தில் gone viral என்றால் மருத்துவத் தொடர்பான செய்தியாக இருந்திருக்கக் கூடும். ஏதேனும் தீயநோய்க்கு அறிகுறியாக இருந்து, ஆளைப்பிடித்து தனிமைப்படுத்திப் பரவவிடாமல் செய்திருப்பார்கள். இணையச் செய்திகளில் இதெல்லாம் நடக்காது. செய்தி பரவிப் பரவி டிவிட்டர் மூலம் எகிப்து, ஈரான், மால்டோவா போன்ற சில நாடுகளின் புரட்சியாளர்கள் ஒருங்கிணைத்து அவர்கள் நாட்டின் அரசுக்கு எதிராகப் புரட்சிகள் செய்தனர், அவை அந்த நாடுகளின் ஆட்சியை அசைத்துப் பார்த்தன.

    ஒசாமா பின் லேடனனைப் பிடிப்பதற்காக அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானில் அதிரடித் தாக்குதலில் இறங்கிய பொழுது வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவுடன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியுடன் அதை நேரடி ஒளிபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது … உலகில் யாருக்குமே அந்தச் செய்தி தெரியாது.

    அபூத்தபாத் (Abbottabad) என்ற அந்த நகரில், ஒசாமா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் வசித்த, தொலைத்தொடர்பு ஆலோசகராகப் பணிபுரியும் ‘சோஹேப் அத்தர்’ (Sohaib Athar), என்ற 33 வயது இளைஞர், வீட்டிற்கு மேல் பறந்த இராணுவ ஹெலிகாப்டர் ஏற்படுத்திய ஓசை, தொடர்ந்த அதிரடித் தாக்குதல் ஆகியவை வழக்கத்திற்கு மாறாகத் தூங்கவிடாமல் தொல்லை செய்ததால் அதனை டிவிட்டர் வலைத்தளத்தில் நேரடிப் பதிவு செய்து கொண்டிருந்தார் (Sohaib Athar, @ReallyVirtual, https://twitter.com/ReallyVirtual).

    “Helicopter hovering above Abbottabad at 1AM (is a rare event).”

    “Go away helicopter – before I take out my giant swatter.”

    “A huge window shaking bang here in Abbottabad.”

    “I hope its not the start of something nasty.”

    என்ற செய்திகளாக, நடந்தது என்னவென்றே தெரியாமல் அவர் செய்த பதிவுகளின் முக்கியத்துவம் பின்னர் உணரப்பட்டு ஒரே நாளில் உலகின் புகழ் உச்சிக்குச் சென்றார். டிவிட்டர் வலைத்தளத்தில் அவரைப் பலர் தொடரத் தொடங்கினர். இது போன்று பல செய்திகள் பரவுவதும், நாம் பரப்புவதும் வாடிக்கை.

    சமீபத்தில் இணையத்தைக் கலக்குவது ஒரு படம். “பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற கேள்வியுடன் ஸ்னோமேன் கூட்டத்தில் மறைந்திருக்கும் பாண்டாக் கரடியை அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘டாடல்ஃப்’ (Dudolf) என்ற புனைப்பெயர் கொண்ட ஓவியர் ‘ஜெர்ஜிலி டூடஸ்‘ (Gergely Dudás), தனது ஃபேஸ்புக் தளத்தில் (https://www.facebook.com/thedudolf/) வரைந்து பதிவிட்ட படம் தொற்றுநோய் போலப் பரவிக் கொண்டிருக்கிறது.

    “ஸ்னோமேன் கூட்டத்தில் பாண்டாவைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்பது போல “ஆந்தையின் கூட்டத்தில் பூனையைக் கண்டுபிடிக்க முடிகிறதா?” என்ற மற்றொரு படமும் வரைந்து வெளியிட்டுள்ளார் தனது எதிர்பாராத புகழைக் கண்டு மகிழ்ந்த ஓவியர் டாடல்ஃப் அவர்கள்.

    விடுமுறை நாட்களில் பொழுதை ஓட்ட இது போன்ற விளையாட்டுகள் மக்களுக்கு உதவுகிறது. அனைவரும் பார்த்து மகிழப் படங்கள் கீழே …

    Gergely Dudás

    Gergely Dudás2

    Picture Courtesy:  https://en.wikipedia.org/wiki/Situation_Room  &  https://www.facebook.com/thedudolf/

    Share