குறளின் கதிர்களாய்…(101)
–செண்பக ஜெகதீசன்
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. (திருக்குறள்-555: கொடுங்கோன்மை)
புதுக் கவிதையில்…
கொடுங்கோல் ஆட்சியாளர்தம்
கீர்த்தி செல்வம் அழித்திட
எதிரிப்படை
எதுவும் வேண்டாம்,
துன்பத்தில் துடித்து
குடிமக்கள் சிந்திடும்
கண்ணீரே போதும்…!
குறும்பாவில்…
கொடுங்கோலரை அழிக்கும் படை,
குடிமக்கள் துன்புற்றழுத
கண்ணீரே…!
மரபுக் கவிதையில்…
மக்களை வதைத்து முடிசூடி
–மன்பதை ஆண்டிடும் கொடுங்கோலர்
பக்கமாய் வந்தே அழித்திடத்தான்
–படைகள் எதுவும் வேண்டாமே,
துக்கம் மேலுறக் குடிமக்கள்
-துன்பம் தாங்கா தழுதகண்ணீர்,
மக்கள் படையாய் அவர்வாழ்வை
–மீண்டும் எழாமல் அழித்திடுமே…!
லிமரைக்கூ…
கொடுங்கோல் ஆட்சியரை அழித்திடும் படை
கொதித்திடும் குடிமக்களின் கண்ணீர்,
கொடிய ஆட்சியாளர்க்குக் கொடுத்திடும் விடை!
கிராமிய பாணியில்…
ஆயுதம்வேண்டாம் ஆயுதம்வேண்டாம்
அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்,
கொடுங்கோலு ஆட்சியயையே
அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்…
படவேண்டாம் படவேண்டாம்
பொல்லாத அரசாங்கத்தப்
போக்கிடத்தான் படவேண்டாம்,
பாடுபட்ட பொதுசனங்க
பொறுக்காத தும்பத்தில
அழுதகண்ணீர் ஒண்ணேபோதும்,
அழிஞ்சிடுவார் கொடுங்கோலர்…
அதால,
ஆயுதம்வேண்டாம் ஆயுதம்வேண்டாம்
அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்,
கொடுங்கோலு ஆட்சியயையே
அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்!
