மார்கழி மணாளன்  12 திருக்குடந்தை      சாரங்கபாணி  

0

க. பாலசுப்பிரமணியன்

 

காவிரிக் கரையோரப் பஞ்சரங்கம்

பூவிரி பொற்றாமரை விண்ணோக்கும் !

மாமுனி ஹேமரின் தவக்கோலம்

மாலினி இலக்குமி மகளாய் வேண்டும் !

 

தவப் பயனோ தரணியின்  வினைப் பயனோ !

தாமரை ஆயிரம் நடுவே வந்தது கோமளமே!

தாயாரே தவமுனிக்கு வந்தாள் மகளாய்

தரணிக்குக் குடமுழுக்குக் குடந்தையிலே!

 

வில்லேந்தி வந்தான் வைகுந்தன் சாரங்கன்

சொல்லேந்தி நின்ற தவமுனியர் பேரன்பன் !

பண்ணேந்திப்  பாசுரங்கள் ஆழ்வார்கள் பாடிடவே

தலையேந்திக்  கிடந்தானும் எழுந்தான் அருளிடவே    !

 

பிரபந்தத்தைச் சேர்த்தளித்த பரந்தாமன்

பிரபஞ்சத்தைக் காக்கின்ற பேரருளாளன்

பிரகலாதன் துயர்தீர்த்த நரசிம்மன்

பிறவிப்பயன் கொடுக்கின்ற நாரணன் !

 

தங்கமென மின்னிவிடும் செங்கதிரில் திருமேனி

பங்கமில்லா பக்தியிலே பொங்கிவரும் அருள்கேணி !

மூதடைந்தும் சூதறியா சபரியும் பக்தியுடன்

சுவைத்தளித்த பழத்தினையும் சுவைத்த தேனீ !

 

அன்புடை நெஞ்சங்களில் அவன் ஆட்சி

ஆராவமுதன் அகிலத்தின் அருள்காட்சி !

நினைத்தாலே சொர்க்கம் அவன் வாசல்

நிலையாத வாழ்வுக்கு அவன் காவல் !

 

வாராக உருவெடுத்து வேதங்கள் காத்தவனே

வாரணம் அழைத்திடவே விண்ணிருந்து வந்தவனே!

வைகுந்த அழகுடனே  வாசலில் அருள்பவனே

வாடுகின்றேன் வேண்டுகின்றேன் வந்தருள்வாய் வேதவனே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *