காளமேகப் புலவர்
— முனைவர் சி.சேதுராமன்.
ஒவ்வொரு காலத்திலும் புலவர்கள் பலர் தோன்றி தமிழன்னைக்குக் காலத்தால் அழியாத பல காவியங்களைச் செய்து அணி செய்தனர். அவர்கள் ஆக்கியளித்துள்ள இலக்கியங்கள் உலகை வியக்க வைக்கும் அறிவுக் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.
தமிழன்னைக்குப் பெருமை சேர்த்த புலவர் பெருமக்களில் ஒருவர்தான் காளமேகப் புலவர் ஆவார். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்று அனைவராலும் புகழப்பெற்றார்.
நினைத்தவுடன் எதைப் பற்றியும் கவிதை பாடுவதில் வல்லவர்களே ஆசுகவி என்று அழைக்கப்படுவார்கள். ஆசு கவிகளிலேயே காளமேகப் புலவர் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவராக விளங்கினார்.
காளமேகப்புலவர் பாண்டி நாட்டில் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருமோகூர் என்னும் திருத்தலத்திலே கோயில் பணியாளராக இருந்த அந்தணர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் என்றும், காளமேகம் என்பது அவரது இயற்பெயரே என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் வரதன் என்பதே அவரது இயற்பெயர் என்றும் வேறு சில அறிஞர்கள் எடுத்துரைப்பது நோக்கத்தக்கது.
இதற்கு ஆதாரமாக,
“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசுகவி காள மேகமே – பூசுரா
விண்தின்ற வெவ்வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்”
என்ற அதிமதுரகவியின் பாடலைச் சான்றாகக் கூறுகின்றனர். எனவே வரதன் என்பதே காளமேகப் புலவரின் இயற்பெயர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது.
மோகனாங்கியின் மீது காதல்:
இளமைப்பருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால் கோயிலிலே வரதன் கோயிற் பணியாளாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார். திருவரங்கத்திற்கு அருகில் திருவானைக்கா என்ற சிவத்தலம் உள்ளது. அத்தலத்தில் நடனக்கலை மூலம் இறைப்பணி செய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அத்தேவரடியார்களில் ஒருத்தியான மோகனாங்கி மிகவும் அழகானவள். அவளுக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது.
வைணவரான வரதனும், சைவ மதத்தைச் சேர்ந்த மோகனாங்கியும் அன்பால் கட்டுண்டு பழகி வந்தார்கள். ஒருநாள் மோகனாங்கி வெட்கம் அடையும்படியான ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
அது மார்கழி மாதம். திருவானைக்காவில் உள்ள சம்புகேசுவரர் கோயில் சன்னதியில் மோகனாங்கி திருவெம்பாவை பாடும் முறை அன்று வந்தது. மோகனாங்கி தன் தோழிகளுடன் சன்னதியில் நின்று திருவெம்பாவையில் வரும்,
“உன்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன்று உரைப்போம் கேள்;
எம்கொங்கை நின்னன்பர் அல்லாதார்தோள் சேரற்க!
எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க!
கங்குல் பகல் எம்கண் மற்றொன்றும் காணற்க!
இங்குஇப்பரிசே! எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என்ஞாயிறு எமக்கேலேஓர் எம்பாவாய்!”
என்ற பாடலை மனமுருகப் பாடினாள். அந்தப் பாடலைக் கேட்டதும் அவளுடன் இருந்த தோழிகள் பலரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
தான் வைணவரான வரதனைக் காதலிப்பதாலேயே தம் தோழிகள் தன்னை ஏளனம் செய்து சிரிக்கின்றனர் என்று புரிந்து கொண்ட மோகனாங்கி மிகுந்த வேதனைக்கு உள்ளானாள். “உம்முடைய கைகள் உனக்கேயன்றி வேறு எவர்க்கும் எந்தப் பணியையும் செய்யாது இருக்குமாறும், இரவும் பகலும் எம்முடைய கண்கள் உன்னையன்றி வேறு எந்தப் பொருளையும் காணாது இருக்குமாறும், இறைவனே அருள்புரிவாயாக! இவ்வாறு சிவபெருமானிடம் வேண்டுகின்ற மோகனாங்கி திருமாலை வணங்கும் வைணவரான வரதனிடம் தொடர் கொண்டுள்ளாளே என்பதை நினைத்தே தோழிகள் சிரித்தனர். அதனைப் புரிந்து கொண்டு மன வேதனைப்பட்ட மோகனாங்கி சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
வைணவர் சைவரானார்:
அன்றிரவு வரதன், மோகனாங்கியின் இல்லத்திற்குச் சென்றார். அவரது வரவைக் கண்டதும் மோகனாங்கி கதவினை அடைத்துத் தாழிட்டாள். வரதன் கதவைத் திறக்குமாறு கெஞ்சிக் கூத்தாடினார். நெடுநேரம் வேண்டியும் அவள் கதவைத் திறக்கவிலை. இதனால் வரதன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
வரதன் வீட்டிற்கு வெளியிலிருந்தவாறே, “மோகனாங்கி! நீ கதவைத் திறக்கவில்லை என்றால் நான் என் உயிரை விட்டுவிடுவேன்” என்று கூறியதைக் கேட்ட மோகனாங்கி, எங்கே வரதன் இறந்து விடுவாரோ என்றஞ்சிக் கதவைத் திறந்தாள்.
கதவைத் திறந்தவள் வரதனை உள்ளே விடவில்லை. அவள் வரதனைப் பார்த்து, “நான் உமக்கு வேண்டுமென்றால் நீர் சைவராக மாறவேண்டும். நீர் உடனே சென்று சிவதீட்சை பெற்றுக் கொண்டு வருக! இல்லையெனில் என்னை மறந்துவிடுக!” என்று கூறிவிட்டுக் கதவைப் படீரென்று சாத்திக் கொண்டாள்.
இதனைக் கேட்ட வரதன் சற்றே நிலை குலைந்து போனார். தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதை உணர்ந்த வரதன், மோகனாங்கியின் மீது கொண்ட அன்பினால், “மோகனாங்கி நீ என்மீது கொண்ளுள்ள அன்புதான் எனக்கு முக்கியம். நான் உடனே சென்று சிவதீட்சை பெற்றுக் கொண்டு சைவனாக மாறி வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அவளிடம் கூறியவாறே சிவதீட்சை பெற்று வைணவராக இருந்த வரதன் சைவராக மாறினார். அதோடு மட்டுமல்லாது திருவரங்கக் கோயில் பணியிலிருந்து நின்றுவிட்டார். திருவானைக்கா சம்புகேசுவரர் கோயிலில் (பரிசாரகர்) சமையற்காரராகப் பணியில் சேர்ந்தார். வரதன் சைவராக மாறியதால் மோகனாங்கியுடனான காதல் கைகூடியது. மேலும் வரதன் திருவானைக்காவில் சிவனோடு வீற்றிருக்கும் தேவி அகிலாண்டேஸ்வரியை நாள்தோறும் வரதன் வழிபட்டு வந்தார். தேவியின்மீது தீராத அன்புகொண்ட அடியாராக வரதன் வாழ்ந்தார்.
வரதன் காளமேகமானார்:
இங்ஙனம் வரதன் கோயிலில் பணியாற்றி வரும்போது ஒரு நாளிரவு அவர் பணிசெய்த களைப்பின் காரணமாகச் சோர்வினால் கோவில் மண்டபத்திலேயே அயர்ந்து உறங்கிவிட்டார்.
அப்போது அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரி அசதியால் வாய் திறந்து உறங்கும் வரதன் முன் வந்து, கல்விக்குரிய பீஜாட்சரத்தை அவரது நாவில் எழுதி, ‘இன்றுமுதல் உனக்குக் காளமேகம் எனப் பெயர் விளங்குவதாக!’ என்று அருள் புரிந்து மறைந்தாள்.
மண்டபத்தில் வரதானாகப் படுத்திருந்தவர் கனவு கண்டதைப் போன்று விழித்ததும் காளமேகமாக எழுந்து நின்றார். கடல்மடை திறந்தாற்போல் அவர் வாயிலிருந்து கவி வெள்ளம் பாய்தோடி வந்தது.
தமக்கு அருள்புரிந்தது தேவி அகிலாண்ட ஈஸ்வரியே என்பதை உணர்ந்து களிப்பெய்தி கூத்தாடினார். அன்னையின் அருளை எண்ணி எண்ணி வியந்து வாயாரத் துதித்து, ‘திருவானைக்கா உலா” என்ற சிற்றிலக்கியத்தைப் பாடினார். அதன் அருமை பெருமைகளை உணர்ந்த பலரும் கரிய மேகம் மழையைப் பொழிவைதைப் போன்று கவி மழை பொழிவதால் “காளமேகமே” என்று வரதனைப் போற்றி வாழ்த்தினர். அன்றிலிருந்து வரதன் காளமேகப் புலவரானார்.
இது குறித்து வேறொரு வரலாறானது, “அக்காலத்தில் சம்புகேசுரத்தில் ஒரு வேதியன் அகிலாண்ட ஈச்வரியை வித்தையின் பொருட்டு உபாசித்து வந்தனன். ஒரு நாள் மோகனாங்கியை நோக்கி அர்த்தசாம பூசையின் குடமுறை கழிந்தவுடன் தம்மை உடனழைத்துப் போகக் கூறித் தாம் ஒரு மண்டபத்தில் உறங்கினர். தாசி, அர்த்தசாமத்தில் குடமுறை கழிந்ததும் வேதியரைக் காணாது தனித்து வீடு சேர்ந்தனள். கோயில் தாணிகர் முதலியோர் திருக்கோயில் தாளிட்டு வீடு சேர்ந்தனர்.
பரிசாரகர் விழித்துக் கோயில் திருக்காப்பிட்டிருப்பதறிந்து மீண்டும் மண்டபத்தின் ஒரு புறத்திலுறங்கினர். முதலில் வித்தை விரும்பி உபாசிப்பவனுக்கு அநுக்கிரகிக்க அம்மை எழுந்தருளி அவன்முன் தரிசனந் தந்து வாயைத் திறக்க என, உபாசகன் தாமதித்து அருவருத்தமையால் மீண்டு மண்டபத்திலுறங்கும் பரசாரகரிடத்திற் சென்று வாய்திறக்கக் கட்டளையிட்டனர். பரிசாரகர் ஆகூழால் வாய் திறந்தனர். அம்மை விதைக்குரிய பீஜாட்சரத்தை அவன் வாயிற் பதித்து இன்று முதலுனக்குக் காளமேகமெனப் பெயருண்டாக என மறைந்தனர்.
காளமேகர் கனாக் கண்டவர் போல் விழித்து எதிரில் யாரையும் காணாது தரிசனந் தந்தவள் உலக ராணியாகிய அகிலாண்ட ஈச்வரியென்றறிந்து வாயாரத் துதித்துத் திருவானைக்காவுலாப் பாடி மகிழ்ந்து அதுமுதல் பலதலங்களுக்குஞ் சென்று தரிசித்துப் பல தனிப்பாடல்களைப் பாடினர்” (அபிதானசிந்தாமணி – ப.,510) என்று அபிதான சிந்தாமணியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
காளமேகப் புலவரின் தலப் பயணம்:
காளமேகப் புலவர் பல திருத்தலங்களுக்கும் சென்று இறைவன்மீது தனிப்பாடல்கள் பல பாடி வழிபட்டார். திருவாரூர் சென்று தியாகேசரை வழிபட்டபோது அங்கிருந்தவர்கள் காளமேகப் புலவரின் புலமையைப் பரிசோதிக்க விரும்பினர்.
காளமேகப் புலவரிடம் இறைவனான தியாகராசருக்கு அணிவித்திருந்த வைரப் பதக்கம் அறுந்து விழவும், பின் அப்பதக்கம் பொருந்தவும் பாடுமாறு கூறினார்கள். இதற்குக் காளமேகப் புலவர் உடன்பட்டு,
“அன்னவயல் சூழ்ந்திருக்கும் ஆரூரா நெஞ்சத்தில்
இன்னம் வயிர மிருப்பதா – முன்னமொரு
தொண்டன் மகனைக்கொன்றுஞ் சோழன்மகனைக்
கொன்றுஞ்
சண்டன் மகனைக் கொன்றுந் தான்.”
எனப் பாடி அப்பதக்கத்தை அறுத்து கீழே விழ வைத்து மீண்டும் அப்பதக்கம் பொருந்தப் பாடினார். இதனைக் கண்ட அனைவரும் விப்பில் ஆழ்ந்தனர்.
தாம் நினைத்த போதும், பிறர் விரும்பும்போதும் கவி பாடக்கூடிய ஆற்றலைக் காளமேகப் புலவர் பெற்றிருந்ததை அறிந்தவர்கள் அவரை, “ஆசுகவியால் அகில உலகமும் புகழ் வீசும் கவி காளமேகம்” என்று புகழ்ந்து போற்றினர்.
மேலும் காளமேகப் புலவர் தம்மை மதிக்காது நடந்து கொண்ட சம்பந்தாண்டான் என்பவன் மீது வசை பாடினார். காளமேகப் புலவர் வசைபாடுவதில் வல்லவராக இருந்ததால் அவரை, “வசைபாட வல்லான் காளமேகம்” என்று அவரைப் புகழ்ந்தனர்.
தனக்கு வந்திருந்த நோய் தீர வேண்டும் என்பதற்காக வைத்தீசுவரன் கோவில் மண்ணை உண்டார். உடனே காளமேகப் புலவரின் நோய் முற்றிலும் குணமடைந்தது. இதனைக் கண்டுணர்ந்த அவர்,
“மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும்
கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ – தொண்டர்
விருந்தைப் பார்த்துண்டருளும் வேளூரென் னாதர்
மருந்தைப் பார்த்தாற்சுத்த மண்”
என்ற பாடலைப் பாடி இறைவனை வணங்கி வழிபட்டார்.
பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள இறைவனைப் புகழ்ந்தும் இழிப்பதைப் போன்று மறைமுகமாகப் புகழ்ந்தும் சொல்நயமும் பொருள் நயமும் மிக்க பல பாடல்களைக் காளமேகப் புலவர் பாடினார். தமக்கு ஆதரவு நல்கியவர்களைப் புகழ்ந்தும் அவமதித்தவர்களை வசைபாடி இகழ்ந்தும் அவர் பல தனிப்பாடல்களையும் பாடினார். இதனால் இன்றளவும் ‘வசைபாடக் காளமேகம்’ என்ற பெயர் இலக்கிய வரலாற்றில் நின்று நிலைத்துவிட்டது.
திருமலைராயன் அவைக்குச் செல்லுதல்:
காளமேகப் புலவரை விரும்பி அவருடன் வாழ்ந்து வாழ்ந்த தாசி மோகனாங்கி தனக்கு அணிகலனில் (நகையில்) பதிப்பதற்காக திருமலைராயன் பட்டினத்து முத்து வேண்டுமென்று அவரைக் கேட்டாள். எனவே காளமேகப் புலவர் திருமலைராயன் பட்டினத்திற்குப் புறப்பட்டார்.
தஞ்சை மாவட்டத்துக் கடற்கரை நகரமான நாகபட்டினத்துக்கு அருகில் உள்ளது திருமலைராயன் பட்டினம். அதனை விஜயநகரப் பேரரசிற்கு உட்பட்ட மன்னன் திருமலைராயன் என்ற சிற்றரசன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனது காலம் கி.பி.1455 – 1468 என்று கூறுவர். இதுவே காளமேகப் புலவர் வாழ்ந்த காலமாகும்.
திருமலைராயனின் அரசவையில் 64 புலவர்கள் இருந்தனர். அவர்களைத் தண்டிகைப் புலவர்கள் என்று அழைப்பர். சிவிகை, பல்லக்கு, கழுத்தில் அணியும் ஒருவகை அணி என்று தண்டிகை என்பதற்குப் பல பொருளைக் கூறுவர். திருமலைராயன் அப்புலவர்கள் அமர்ந்து செல்வதற்குப் பல்லக்குகள் அளித்துச் சிறப்புச் செய்திருந்ததால் அவர்களை மக்கள் தண்டிகைப் புலவர்கள் என்று அழைத்தனர்.
இவர்களின் தலைவராக அதிமதுரகவிராயர் என்பர் திகழ்ந்தார். இப்புலவர் திருமலைராயனிடம் பெரும் செல்வாக்கப் பெற்றவராகவும் அகந்தை நிறைந்தவராகவும் விளங்கினார். மேலும் அரசவையில் மற்ற புலவர்கள் இடம்பெறாத வகையில் வஞ்சகமாக அவர்களைத் தடுக்கும் செயல்களிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இதனையும் கேள்வியுற்ற காளமேகப் புலவர் அவரது செருக்கை அடக்க வேண்டும் என்று கருதி திருமலைராயன் பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார்.
அதிமதுரகவியும் தண்டிகைப் புலவர்களும் தத்தமக்குரிய பல்லக்குகளில் அமர்ந்து வீதி வழியே அரசவையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது தண்டிகைப் புலவர்கள், “அதிமதுர கவியார் வாழ்க!” என்று தங்கள் தலைவரைப் போற்றி முழக்கமிட்டுக் கொண்டு வந்தார்கள்.
அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று அதிமதுரகவியாருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். அதனையெல்லாம் பார்த்துக் கொண்டு ஒரு கடையின் முன்பலகையில் காளமேகப் புலவர் அமர்ந்திருந்தார். கடையருகில் நின்றவர்கள் அதிமதுரகவிக்கு அடக்கத்துடன் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். இதனை வியப்புடன் காளமேகப் புலவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
இதனைப் பல்லக்கில் சென்று கொண்டிருந்த அதிமதுரகவி கவனித்துவிட்டார். தன்னை மதிக்காது தனக்கு வணக்கமும் சொல்லாது அமர்ந்திருந்த காளமேகப்புலவரின் செயல் அவருக்குச் சினத்தை வரவழைத்தது. தன் பல்லக்கு முன்னே தடியோடு சென்று கொண்டிருந்த கட்டியங்காரன் காளமேகத்திடம் சென்று தடியால் தட்டி எழுந்து நின்று வணக்கம் கூறுமாறு கூறியதையும் அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் காளமேகப் புலவர் கட்டியங்கானைப் பார்த்து,
“அதிமதுர மென்றே யகில மறியத்
துதிமதுரமா யெடுத்துச் சொல்லும் – புதுமையென்ன
காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக்
கூட்டுச் சரக்குதனைக் கூறு”
என்று பழித்துப் பாடினார். அதனைக் கேட்ட அதிமதுர கவி தனது தூதன் ஒருவனை காளமேகத்திடம் சென்று அவர் யார் என்பதை அறிந்து வருமாறு கூறி அனுப்பினார். அவனும் சென்று காளமேகப் புலவரிடம், “நீர் யார்?” என்று கேட்க அதற்குக் காளமேகப் புலவர்,
“தூதைந்து நாழிகையிலாறு நாழிகைதனிற்
சொற் சந்தமாலை சொல்லத்
துகளிலாவந் தாதியேழு நாழிகைதனிற்
றொகைபட விரித்துரைக்கப்
பாதஞ்செய் மடல் கோவை பத்து நாழிகைதனிற்
பரணியொரு நாண் முழுதுமே
பாரகாவியமெலா மோரிரு தினத்திலே
பகரக் கொடிக் கட்டினேன்
சீதஞ்செயுந் திங்கண் மரபினானீடு
புகழ் செய்ய திருமலைராயன்முன்
சீறுமாறாகவே தாறுமாறுகள் சொல்
திருட்டுக் கவிப் புலவரைக்
காதங்கறுத்துச் செருப்பிட்டடித்துக் கதுப்பிற்
புடைத்து வெற்றிக்
கல்லணையினொடு கொடிய கடிவாளமீட்டேறு
கவி காளமேக நானே”
என்று கவி பாடி அனுப்பினார்.
அதிமதுரம் கடுஞ்சினம் கொண்டார் அந்தக் கடையின் முன்பாகவே காளமேகப் புலவரை அவமானப்படுத்த எண்ணி அரண்மனைப் பணியாளன் ஒருவனை அழைத்து, “கால் வராகனுக்கு மேகமும் பசுவும் இரத்தினமும் வாங்கி வா!” காளமேகம் இருந்த கடைக்கு அனுப்பி வைத்தார்.
பணியாளன் கடைக்காரரிடம் சென்று, “ஒரு வராகனுக்கு மேகமும் பசுவும் இரத்தினமும் கொடு!’ என்று காசினை நீட்டினான். கடைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் திருதிரு என்று விழித்தார். இதனைப் பார்த்த காளமேகம் சிரித்தார்.
காளமேகம் சிரிப்பதைப் பார்த்த கடைக்காரன் அவரைப் பார்த்து, “இவர் என்ன கேட்கிறார்? நீர் ஏன் சிரிக்கிறீர்?” என்று எரிச்சலுடன் கேட்டார்.
அதனைக் கேட்ட காளமேகப் புலவர், “ஐயா அவர் கேட்பது காராமணி. வராகனை வாங்கிக் கொண்டு பொருளைக் கொடுத்தனுப்புங்கள்” என்று கூறினார். கடைக்காரர் பொருளைக் கொடுத்து அரசப் பணியாளனை அனுப்பிவிட்டு பணியாளன் கூறியதற்குரிய விளக்கத்தைக் கூறுமாறு காளமேகத்திடம் கேட்டார்.
அதற்குக் காளமேகப் புலவர், “ஐயா மேகம் என்றால் கார்; பசு என்றால் ஆ; இரத்தினம் என்றால் மணி இம்மூன்றையும் சேர்த்துப் பாருங்கள் காராமணி என்பது வரும்” என்றார்.
கடைக்காரர் காளமேகப் புலவருக்கு நன்றியைக் கூறிவிட்டு, ஐயா கடைக்கு வந்து பொருள் கேட்டவன் அதிமதுர கவியாரின் ஆள் என்பது எனக்குத் தெரியும். எங்கே அவர் கேட்கும் பொருளைப் புரிந்து கொண்டு தரமுடியாமல் கவிராயரின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்று பயந்தேன். நல்லவேளை காப்பாற்றினீர்கள்!” என்று நன்றியோடு காளமேகப் புலவரை வணங்கினார்.
அதிமதுரகவியின் செயல் காளமேகப் புலவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதிமதுர கவியார் தம் புலமையால் எளிமையான மக்களையும் அதிகம் கற்காதவரையும் மனம் போன போக்கில் மட்டம் தட்டி தற்பெருமை கொள்கிறார் என்பதை அறிந்து கொண்ட காளமேகம் அரசவைக்கே சென்று அவரது அகந்தையை அடக்க வேண்டும் என்று கருதினார்.
அதேநேரத்தில் அதிமதுரகவியார் தன்னை மதிக்காத காளமேகப் புலவரை மன்னனால்தான் அடக்க வேண்டும் என்று கருதி, மன்னனிடம் கூறி காவலர்களை அனுப்பி காளமேகப் புலவரை அரசவைக்கு வரவழைத்தார்.
புலமைப் போட்டி:
அதிமதுரகவியால் அரசவைக்கு வரவழைக்கப்பட்ட காளமேகப் புலவருக்கு அவையிலிருந்த புலவர்கள் சிறிதுகூட இடம்கொடுக்கவில்லை. அனைவரும் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தனர். காளமேகப் புலவர் புலவர்களின் எண்ணத்தை உணர்ந்து கொண்டார்.
அரசனைக் கண்டதும் அவனை வாழ்த்தினார். ஆனால் அவனோ புலவரை மதிக்காமல், இருக்கையும் கொடுக்காமல் ஏளனம் செய்தான். புலவர் புன்மூறுவல் செய்தார். அதிமதுரக்கவிராயரின் சூழ்ச்சிக்கு அரசன் அடிமையாகிவிட்டான் என்பதை உணர்ந்தார். கண்களை மூடி, கலைமகளைத் தியானித்தார். தனக்கொரு இருக்கை தருமாறு வேண்டினார். கலைவாணியின் அருளால் அரசனின் சிங்காசனம் அகன்று பெரிதாகியது. இன்னுமொருவர் இருப்பதற்கான இடம் உருவாகியது. புலவர் அதில் சென்று அரசனின் பக்கத்தில் அமர்ந்தார். புலவரின் ஆற்றல்கண்டு அரசனும் அமைச்சர்களும் வியந்தார்கள். தண்டிகைப் புலவர்கள் பயந்தார்கள். காளமேகப் புலவர், கலைவாணியின் அருளைப்போற்றி ,
“வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
சரியாசனம் வைத்த தாய்”
என்று மனமுருக சரஸ்வதி மாலையை 30 வெண்பாக்களால் பாடினார். அப்போது அங்கிருந்த புலவர்களைப் பார்த்துக் காளமேகப் புலவர், “நீங்கள் யார்?” என்று கேட்டார். அதனைக் கேட்டு சிரித்த புலவர்கள், “நாங்கள் கவிராஜர்கள்” என்று கூறினர்.
அதனைக் கேட்ட காளமேகப் புலவர் நீங்கள் கவிராஜரா என்று வினவி,
“வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே யுட்குழிந்த கண்ணெங்கே-சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காணீவிர்
கவிராய ரென்றிருந்தக் கால்”
என்று பழித்துப் பாடினார்.
தங்களைக் குரங்கென்று பழித்த காளமேகத்தைப் பார்த்துக் கடுங்கோபமுற்ற அதிமதுரகவியார், “எங்களைக் கவி(குரங்கு) என்று கூறும் நீர்யார்?” என்று கேட்க, அதற்கு அவர், “யாம் கவி காளமேகம்” என்று கூறினார். அதற்கு அதிமதுரகவி, “நீர் காளமேகம் என்றீரே மேகம் மழை (கவிமழை) பொழியுமோ?” என்று கேட்டார். காளமேகப் புலவரோ அதற்கு,
“கழியுந் தியகடலுப்பென்று நன்னூற்
கடலின் மொண்டு
வழியும்பொதிய வரையினிற் கால்
வைத்து வான் கவிதை
மொழியும் புலவர் மனத்தே
யிடித்து முழங்கி மின்னப்
பொழியும் படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே”
என்று பாடினார். அதனைக் கேட்ட அதிமதுரகவியார் காளமேகம் தன்னை மென்மேலும் அவமதித்ததால் வெகுண்டு,
“மூச்சிவிடும் முன்னே முந்நூறும் நானூறும்
ஆச்சுது என்றால் ஆயிரம்பாட்டு ஆகாதோ? பேச்சென்ன?
வெள்ளைக் கவிகாள மேகமே! நின்னுடைய
கள்ளக் கவிக் கடையைக் கட்டு”
என்று பாடினார்.
காளமேகப் புலவரா கடையைக் கட்டுபவர்? அவர் தம் கவிதையாற்றலைக் காட்டுவதற்கு மனந் துணிந்தார். அதிமதுரகவியாரைப் பார்த்து,
“இம்மென்னும் முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம் பாட்டாகாதா சும்மா
இருந்தா லிருப்பே னெழுந்தேனே யாயிற்
பெருங்காள மேகம் பிளாய்”
என்று பாடினார்.
இவ்வாறு பாடிய காளமேகப் புலவரைப் பார்த்து, அதிமதுரகவியார், “நீர் என்ன பாடுவீர்?” எனக் கேட்டார். அதற்குக் காளமேகப் புலவர், “நான் யமகண்டம் பாடுவேன்” என்று கூறினார். அதிமதுரகவியாருக்கு எமகண்டம் என்பது புரியாதிருந்தது. அதனால் தன்னுடைய வாதத்தை அத்துடன் நிறுத்திக்கொண்டார்.
புலவர்களின் வினாவும் காளமேகத்தின் விடையும்:
அதன் பின்னர் அங்கிருந்த புலவர்கள் திருமலைராயன் வாளைப் பற்றிப் பாடுக என்றவுடன்,
“செற்றலரை வென்ற திருமலைராயன் கரத்தில்
வெற்றிபுரியும் வாளே வீரவாள் – மற்றைய வாள்
போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
ஆவா ளிவாளவா ளாம்”
என்று பாடி மன்னனை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். திருமலைராயனது வீரத்தைப் பற்றிப் பாடுமாறு புலவர்கள் கூறவே,
“வீமனென வலிமிகுந்த திருமலைராயன்
கீர்த்தி வெள்ளம் பொங்கத்
தாமரையி னயனோடிச் சத்திய லோகம்
புகுந்தான் சங்கபாணி
பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான்
சிவன் கயிலைப் பொருப்பிலேறிச்
சோமனையுந் தலைக்கணிந்து வடவரைத்
தண்டாலாழஞ் சோதித்தானே”
என்று பாடினார். இவ்வாறு புலவர்கள் பலரும் பலவாறு வினாக்களைத் தொடுத்தனர். அப்போது அங்கிருந்த திருமலைராயன் மன்னன், “எம் அவையில் கங்கைக் குடத்திலடங்கப் பாடுக” என்றான். அதுகேட்ட காளமேகப் புலவர்,
“விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த விறைவர் சடாம
குடத்திலே கங்கையடங் கும்”
என்று பாடினார்.
தண்டிகைப் புலவர்களில் ஒருவர் திருமலைராய மன்னனைப் புகழ்ந்து பாடுக என்றவுடன்,
“இந்திரன் கலையா யென்மருங் கிருந்தானக்
கினியுதிரம் விட்டகலான்
யமனெனைக் கருதா னானெனக் கருதி நிருதிவந்
தென்னையென் செய்வான்
அந்தமரம் வருண னிருகண் விட்டகலான்
அகத்தினின் மக்களும் யானும்
அநிலம தாகுமமுதினைக் கொள்வோம் யாரெதி
ரெமக்களா ருலகிற்
சந்தத மிந்த வரிசையைப் பெற்றுத் தித்திர
ராஜனை வணங்கித்
தலைசெயுமெம்மை நிலை செய்சற் கீர்த்திச்
சாளுவ கோப்பையா னுதவும்
மந்தரப் புயத்தான் றிருமலைராயன்
மகிழ்வொடு விலையிலா வன்னோன்
வாக்கினாற் குபேரனாக்கினா னவனே மாசிலீ
சானனபூ பதியே”
என்று பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
மேலும் அங்கிருந்த மற்றொரு தண்டிகைப் புலவர் அரசனது குதிரையைப் பற்றிப் பாடுமாறு கூறியவுடன்,
“கோக்குதிரை நின்குதிரை கோவல் மதுரா வொன்னார்
மாக்குதிரை யெல்லாம் மனைக் குதிரை-தூக்குதிரைத்
தூங்கக்கரைக் குதிரைச் சொக்கன் குதிரைசது
ரங்கக் குதிரைகளே யாம்”.
என்று காளமேகம் பாடிடவே அரசனும், அதிமதுரகவியும் சேர்ந்து கொண்டு காளமேகப் புலவரிடம் திருஆரூரில் அதிமதுரக்கவிராயருடன் வந்து கோயிலில் ஒரு பாடல் பாடினால்தான் நீர் ஆசுகவி என்பதை ஏற்போம் எனக் கூறினான். காளமேகப் புலவர் அதனை ஏற்று திருஆரூர்க் கோயிலுக்கு அதிமதுரக்கவிராயருடன் சென்று,
“சேலையுடை யழகா தேவாகண் டார்களு
நீர்மா யழகா மணிமார்பா-வேலை
அடங்கார் புரமெரித்த யாரூரா வீதி
விடங்கா பிரியா விடை”
என்று பாடி அனைவரையும் வெற்றி கொண்டார்.
இருப்பினும் அவரது வெற்றியை அரசனும் தண்டிகைப் புலவர்களும் ஒப்புக் கொள்ளவில்லை. வெற்றிபெற்ற காளமேகப்புலவரை அரசன் எள்ளளவும் பாராட்டாமல் அவமதித்தான். தனது அரசவைப் புலவர்களைத் தோற்கடித்து அவமானப்படுத்தி விட்டதாக அவன் கருதினான். அரசனின் போக்கு காளமேகப் புலவருக்கு மிகுந்த வேதனையையும், கடுஞ்சினத்தையும் கொடுத்தது. தன் வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் தன்னை அவமதித்த மன்னனுக்கும் புலவர்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார் காளமேகப் புலவர். அவரின் கோபம்
“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்.
என்ற வசைக் கவியாக வெளிப்பட்டது. திருமலைராயன் பட்டினம் அழிந்து போகட்டும் என்று வசைபாடினார்.
கொலைகாரர்கள் இருக்கின்ற இந்த ஊர், கோள் மூட்டல், வஞ்சகம் செய்தல் என்பவற்றைக் கற்றிருக்கும் இந்த ஊர், கட்டுப்பாடற்ற காளைமாடுகளைப்போல கதறித்திரிவோரைக் கொண்ட இந்த ஊர், நாளை முதல் மழைபெய்யாமல் வறண்டு போகட்டும். மண்ணே மழையாகப் பெய்யட்டும் என்று சாபமிட்டுப் பாடினார். அத்துடன் அவரது கோபம் தணியவில்லை. மேலும்,
“செய்யாத செய்த திருமலைராயன்வரையில்
அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற்
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்
மண்மாரி யாலழிய வாட்டு”
என்று பாடினார்.
என் அப்பனே சிவபெருமானே! நெருப்பாகவிருக்கும் உனது நெற்றிக்கண்ணினால் மன்மதனைச் சுட்டெரித்ததுபோல, செய்யத் தகாததையெல்லாம் எனக்குச் செய்த இந்தத் திருமலைராயனின் ஆட்சி எல்லைக்குள் வாழ்கின்ற தீயவர்கள் அரை நொடியில் அழிந்துபோகும் வண்ணம் மண் மழை பொழிந்து அவர்களை வாட்டி வதைப்பாயாக! என்று சிவனை வேண்டிப் பாடிவிட்டுத் திருமலைராயன் பட்டினத்தைத் திரும்பிப் பாராது சென்றார்.
இரட்டைப் புலவர்களின் பாடலை முடித்தது:
திருமலைராயன் பட்டினத்திலிருந்து கிளம்பிய காளமேகப் புலவர் திருச்செங்காடு, காஞ்சிபுரம், திருவொறிறியூர், திருக்கச்சபேசம், சிதம்பரம், திருக்கழுக்குன்றம், திருமுட்டம், திருஆலங்குடி, வைத்தீஸ்வரன் கோவில், திருவண்ணாமலை, மதுரை, திருவிடை மருதூர், திருத்துருத்தி, திருக்குடந்தை, திருக்கண்ணபுரம், தெண்டி நள்ளாறு, நாகைப்பட்டினம் என்று பலதலங்களுக்கும் சென்று பல பாடல்களைப் பாடி திருவாரூர் வந்தடைந்தார்.
அப்போது திருவாரூரில் கோயி மதிற்சுவரில்,
“நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்;
பாணந்தான் மண்தின்ற பாணமே – “
என்ற இரண்டு அடிகளோடு அந்தப் பாடல் முடிக்கப் பெறாமல் இருந்ததைக் கண்டார். அதனைக் கண்டவுடன் காளமேகப் புலவரின் மனதில் பாடல் ஊற்றெடுத்தது. உடனே அவர் முற்றுப் பெறாமலிருந்த அப்பாடலை,
“…………தாணுவே!
சீர்ஆரூர் மேவும் சிவனே! நீஎப்படியோ
நேரார் புரமெரித்த நேர்!”
என்று அந்த வெண்பாவை முடித்து மதிற்சுவரில் எழுதிவிட்டுப் புறப்பட்டார்.
காலமாகிய காளமேகப் புலவர்:
காளமேகப் புலவரின் சாபத்தின்படி திருமலைராயன் பட்டினம் சிலகாலத்தில் அழிந்தொழிந்தது. அப்போதுதான் அவரது தமிழின் வலிமை தமிழ் உலகத்திற்குத் தெரிந்தது. தமது சிறுமதியின் நிலைமையைத் தண்டிகைப் புலவர்கூட்டம் உணர்ந்து வருந்தியது. அதிமதுரக்கவிராயர் தமது முதுமைக் காலத்தில் தாம் செய்த தவறுகளுக்காக மிகவும் வருந்தினார்.
காளமேகப்புலவரைக் கண்டு அவரிடம் தாம் தவறாக நடந்து கொண்டமைக்குக் கழுவாய் தேட விரும்பினார். அவ்வாறு அவர் காளமேகப் புலவரை எதிர்பார்த்திருக்கும்போது ஒருநாள் திருவாரூருக்கு காளமேகப் புலவர் வந்திருப்பதை அறிந்து அவரைக் காண்பாதற்குத் தேடிச் சென்றார். ஆனால் அதிமதுரகவியார் வருவதற்கு முன்பே காளமேகப் புலவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதனை அறிந்த அதிமதுரகவிராயர் மிகுந்த கவலையடைந்தார். காளமேகப் புலவரைப் பார்க்க முடியாமலேயே தம் ஊருக்கு அதிமதுரகவிராயர் திரும்பிச் சென்றார்.
அவர் சென்ற சிலநாட்களில் காளமேகப்புலவர் திருவாரூருக்கு வந்தார். திருவாரூருக்கு வந்தவர் அங்கேயே முதுமையால் இவ்வுலக வாழ்வை நீத்தார். காளமேகப் புலவர் இறந்த செய்தியை அறிந்த அதிமதுரகவிராயர் உற்ற நண்பர் ஒருவரை இழந்ததுபோல் மிகவும் துன்பமடைந்தார். தன் மனத்துயரை,
“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
வீசுகவி காள மேகமே – பூசுரா
விண்தின்ற வெவ்வழலில் வேவுதே பாவியேன்
மண்தின்ற பாணமென்ற வாய்.”
என்று பாடலாகப் பாடி வெளிப்படுத்தினார்.
அப்போது திருவாரூருக்கு வந்திருந்த இரட்டைப் புலவர்கள் தாங்கள் எழுதிச் சென்ற வெண்பா முடிக்கப் பெற்றிருந்ததைப் பார்த்து இப்பாடலைப் முடித்தவர் காளமேகப் புலவராகத்தான் இருக்க வேண்டும் என்று அறிந்து அவரைப் பார்க்க நினைத்தனர். அவர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து சுடுகாட்டிற்குச் சென்ற அவர்கள் சிதையில் காளமேகப் புலவரின் உடல் வெந்து போவதைக் கண்டு கண்ணீர்விட்டுக் கலங்கியழுதனர். பின்னர் கையற்ற நிலையில்,
“ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காள மேகமே – பூசுரா
விண்கொண்ட செந்தணலாய் வேகின்ற தையையோ
மண்தின்ற பாணமென்ற வாய்”
என்று பாடி இரங்கினர். இப்பாடலை அதிமதுரகவிராயர் பாடியது என்று கூறுவர். இதற்கு முன்னுள்ள பாடலே அதிமதுரகவிராயர் பாடியது என்றும் அதேபோன்றமைப்பில் இரட்டையர்கள் அங்கு வந்தபோது பாடினர் என்றும் கூறுவர்.
தமது புலமையால் பார்புகழ விளங்கிய காளமேகப் புலவர் தமிழிலக்கிய உலகில் ஒளிவீசும் விண்மீனாக விளங்கிக் கொண்டிருக்கின்றார். அவர் திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம், பல தனிப்பாடல்கள் ஆகியவை காளமேகப் புலவரின் படைப்புகளாகும்.
மக்கள் பலர் தன்னைச் சூழ்ந்துவர, தலைவன் உலா வருவதை வருணித்துக் கூறுவதாக அமைந்தது திருவானைக்கவுலா என்ற நூல். சித்திரமடல் என்பது காதல் தோல்வியடைந்த ஒருவர் தன்னை வருத்திக்கொள்வதான பொருளமைந்த நூலாகும்.
இவை அனைத்தும் காளமேகப் புலவரின் புலமைத்திறத்தை பூவுலகில் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கும். காலங்கள் கடந்தாலும் காளமேகப் புலவரின் பாடல்கள் கற்றவர்களின் மனதில் களிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
___________________________________________________________
முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E.mail: Malar.sethu@gmail.com
அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்