நிர்மலா ராகவன்

வதையைத் தடுக்க சில வழிகள்

உனையறிந்தால்1

கேள்வி: ஒருவரை அவருக்கு அச்சமூட்டும், அல்லது பிடிக்காத விதத்தில் நடத்துபவர்கள் எதில் சேர்த்தி?

விளக்கம்: பிறரை வதைப்பவர்கள் சிறு வயதில் வதைக்கு ஆளானவர்களாக இருப்பார்கள். வளர்ந்தபின்னர், தம்மை எதிர்க்க உடலிலோ, மனத்திலோ சக்தி இல்லாதவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவதால், தமது சக்தி பெருகிவிட்டதாக நினைப்பார்கள்.

சரி எது, தவறு எது என்று தெரியாத பிராயத்தில், குழந்தைகளுக்கு. எது ஒன்றையும் தமக்குத் தோன்றிய முறையில் செய்து பார்க்க சுதந்திர உணர்வு எழும். `இது குழந்தைகளின் இயல்பு!’ என்று புரிந்து விடமாட்டார்கள் சிலர். அவர்களை வன்முறையால் தண்டித்து, சிறுமைப்படுத்துவார்கள், அல்லது `சாமி கண்ணைக் குத்துவார்!’ என்று பயமுறுத்துவார்கள்.

`குழந்தைகள் தப்பே செய்யாமலிருக்கத்தான் அப்படிச் செய்கிறோம்!’ என்று இவர்கள் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஓயாது பயமுறுத்தலுடன் வளர்க்கப்படும் குழந்தை இயற்கையாக எழும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் எதிர்நோக்கும்போது அச்சமும், `பெற்றோர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்தோமே, ஏன் எதிலும் வெற்றி பெற முடியவில்லை?’ என்ற குழப்பமும் அடைகிறான்.

உடல் வதை, பாலியல் வதை, உணர்ச்சிபூர்வமான வதை என்று பலவிதமான வதைகள் இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்குமுன், கோலாலம்பூர் பெரிய ஆஸ்பத்திரியிலும், யூனிவர்சிடி ஆஸ்பத்திரியிலும் ஏதாவதொரு வதைக்கு உள்ளாகி சேர்க்கப்பட்ட சிறுவர்களின் அடிப்படையில், ஓராண்டில் பெரும்பாலும் தந்தைமார்கள் (30), அடுத்து குழந்தையைப் பார்த்துக் கொள்பவர்கள் (22), தாய்மார்கள் (14), தாயின் காதலன் (7) ஆகியோர் உடல் ரீதியாக (ஆயுதங்களால் அடிப்பது, சிகரெட்டால் சுடுவது) போன்ற உடல் வதைகளைச் செய்பவர்கள் என்ற தெரிய வந்தது.

குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைகூடக் கவனிக்காது நடக்கும் பெற்றோர் குழந்தைகளை உணர்ச்சிபூர்வமாக வதைக்கிறார்கள். இன்னும் பிறர் தாம் செய்வது வதை என்றே புரியாது நடக்கிறார்கள்.

என்னிடம் ஒருவர் கேட்டார்: `என் மகளை என் விருப்பப்படி நடத்த எனக்கு உரிமை கிடையாதா? அவளுக்கு வேண்டியதை எல்லாம் நான்தானே கொடுக்கிறேன்!’

பெற்ற மகளையே பாலியல் வதைக்கு உள்ளாக்கிய தந்தை ஒருவரும் இதே விவாதத்தைத்தான் எழுப்பினார் என்று என் நெருங்கிய தோழி (சமூக நல இலாகாவில் உயர்பதவி வகித்தவள்) என்னிடம் கோபமும், ஆச்சரியமும் கலந்த தொனியில் தெரிவித்திருக்கிறாள்.

தாம் பெற்ற குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்ய வேண்டியது ஒரு பெற்றோரின் கடமை. அதற்குப் பிரதிபலனாக தாம் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது விதண்டாவாதம்.

தனது மூன்று வயதுக் குழந்தையை இரும்புச் சங்கிலியால் — பலரும் பார்க்க, வீட்டு வளாகத்தில் — அடித்த என் எதிர்வீட்டுக்காரி, `உன்னிடம்தான் தப்பு இருக்கிறது. அதற்கு நான் தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். எல்லாம் உன் நன்மைக்காகத்தான்!’ என்று ஒவ்வொரு முறை அடித்த பின்னரும் தான் மகளிடம் சொல்வதாக என்னிடம் பெருமையாகச் சொன்னாள்.

எனக்கு வாயடைத்துப் போயிற்று. அந்தக் குழந்தை தன் வயதொத்த பிற குழந்தைகளை அடிக்கும்.

மகள் செய்த சிறு விஷமத்தைக்கூட (தானே கத்திரிக்கோலால் முடி வெட்டிக்கொண்டதை) பிறரிடம் கூறிச் சிரிப்பாள் அத்தாய். சிறுமி அவமானப்பட்டு அழுவாள்.

பெண் குழந்தைக்கு ஒரு முறை முடியை வெட்டிவிட்டு, `அழகாக இருக்கிறாய்! என்று யாராவது பாராட்டினால், தினமும் தானே வெட்டிக் கொள்வாள்! அழகாக இருக்க வேண்டாமா! கத்தரிக்கோலை ஒளித்து வைப்பதுதான் ஒரே வழி. ஐந்து வயதானால், சற்று விவரம் புரியும்.

நம் குழந்தைகள் செய்த `குற்றங்களை’ மிகைப்படுத்தி, பிறருடன் பகிர்ந்துகொள்வது சொல்பவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாகப் படலாம். ஆனால், இம்முறையால் தன்னம்பிக்கை குன்றி வளரும் குழந்தைகள், தம்மையும் அறியாமல், வதை செய்யும் ஒருவரையே காதலனாகவோ, கணவனாகவோ வரிக்கிறார்கள். காதலன் தன்னைப் புகழ்வதால், மதிமயங்கி, அவனுடனேயே இருக்கிறார்கள், வதையைப்பற்றி எவரிடமும் கூறாது.

முதல் முறை அடித்து, உதைத்ததும், பெண்கள் பயந்து விலகுகிறார்கள். ஆனால் இவர்கள் விடுவதில்லை. `தயவு செய்து என்னை விட்டுப் போய்விடாதே! நீதான் என் உயிர்! என்னை மன்னிப்பாயா?’ என்று கடிதம் எழுதுவார்களாம். இதையே தினசரியில் விளம்பரமாகக் கொடுத்தவனும் உண்டு!

திரும்பத் திரும்ப அவர்கள் கெஞ்சும்போது, மனமிரங்கி, உறவைப் புதுப்பித்துக்கொள்ள நம்பிக்கையுடன் வருவார்கள். அதன்பின், வதை அதிகரிக்கும். பெண்களுடைய பலமும் குன்றிக்கொண்டே வரும். தப்பு தன்மேல்தான் என்று எல்லாவற்றையும் பொறுத்துப் போவார்கள்.

தினசரியில் கடிதம் எழுதினவன், ஐந்தே வாரங்களுக்குப்பின், காதலியை அடித்தே கொன்றானாம். இந்தச் சம்பவம் நடந்தது தென் அமெரிக்காவில், பெரு என்ற நாட்டில். உலகிலேயே பெண்கள் அதிகமாக கொடும் வதைபடும் நாடு (61%) இது.

குடும்பத்தில் நடப்பது நான்கு சுவற்றுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பது காலத்துக்கு ஒவ்வாதது. இதனால் குற்றம் புரிபவர்களின் துணிச்சல்தான் அதிகரிக்கிறது.

சில ஆண்கள் `பெண்’ என்றாலே இளக்காரம் என்றெண்ணி, முரட்டுத்தனமாக வளர்கிறார்கள்.

`என் மேல் சாமி வந்துவிட்டது,’ `குடித்திருந்தேன்,’ என்பதெல்லாம் பொய்ச்சாக்கு. தாம் செய்வது பிறருக்கு என்ன துன்பம் விளைவிக்கும் என்பது தெரிந்தே செய்பவர்கள் இவர்கள். திருந்தவே மாட்டார்கள். சட்டம் தண்டித்தால்தான் உண்டு.

ஒரு குழந்தையைப் பிறர் வதைக்காமலிருக்க தாய் செய்ய வேண்டிய கடமைகள் சில உண்டு. குழந்தை ஆணோ, பெண்ணோ, அவர்களது உடலைப் பிறர் எப்படித் தொடலாம் , எப்படித் தொடக்கூடாது என்பதைப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

நான்கு வயதுக் குழந்தையின் கன்னத்தைத் தடவுவது சரிதான். ஆனால் வயதுக்கு வந்த பெண் உடலுறவைப்பற்றி புரிந்துகொள்ளாமல் இருப்பாளாகில், அவளுக்கு நன்கு பரிச்சயமான ஒரு ஆண் — நண்பன், உறவினர், அண்டை வீட்டுக்காரர் — அப்படித் தொடுவது தவறு என்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறாள். தந்தை இல்லாத பெண்ணோ, தாய் அருகில் இல்லாது, அல்லது உடல் நலக் குறைவாக இருந்தாலோ ஒரு பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவது எளிது.

வதைக்கு உள்ளாகும் சிறுமிகளிடையே திடீரென சில மாற்றங்கள் தென்படும். ஓயாமல் அழுவது, சோம்பி இருப்பது, ஓயாது தொணதொணப்பது அல்லது அதிகாரமாக நடப்பது, மிகுந்த ஆத்திரத்துடன் நடப்பது, காரணமில்லாமல் திருடுவது, சாமான்களை உடைப்பது, அடிக்கடி ஐஸ் கட்டிகளைச் சாப்பிடுவது — இதில் ஏதாவது இருந்தால், வீட்டிலோ, பள்ளியிலோ ஏதாவது ஒரு வகையில் வதைக்கப்படுகிறார்கள் என்று கொள்ளலாம்.

சில சமயம், அக்குழந்தைகளிடம் நிறையப் பணம் புழங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பாலியல் வதை செய்துவிட்டு, ஐந்தோ, பத்தோ கொடுத்து, அவர்கள் வாயை அடைக்கிறார்கள். இதுவும் கவனிக்க வேண்டிய சமாசாரம்.

இம்மாதிரியான குழந்தைகளை ஏதாவது கதை எழுதச்சொன்னாலோ, அல்லது படம் வரையச் சொன்னாலோ, அவர்கள் மனதின் வேதனை வெளிப்படும். வாய்ச்சொல்லாக வர்ணிக்கத் தெரியாதவர்கள் படம் மற்றும் எழுத்து வடிவில் தங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

அன்பான குடும்பத்திலிருந்து வரும் குழந்தைகள் வதைப்பட்டாலும், பெற்றோரின் ஆதரவால் நீண்ட காலப் பாதிப்பு இல்லாமல் தப்புகிறார்கள். சில சமயம், உளவியல் நிபுணர்களின் உதவியும் தேவைப்படலாம்.

பிள்ளைகள் மனக்குழப்பத்துடன் காணப்பட்டால், அவர்களுடைய நல்ல குணங்களைப் பாராட்டுங்கள்.

`யார்கிட்டேயும் சொல்லக்கூடாது என்று, யாராவது எதையாவது செய்தார்களா?’ என்று அனுதாபத்துடன் விசாரித்து, அவர்கள் மனந்திறந்து பேசும்போது, ஆதரவு கொடுக்க வேண்டும். `பிறருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?’ என்று அஞ்சாது, `இதில் உன் தப்பு எதுவுமில்லை!’ என்று பலமுறை அழுத்திக் கூறுங்கள். வதைத்தவர்தான் குற்றவாளி என்று புரிந்து போனால், அவர்களுடைய சோகம், குற்ற உணர்வு, அவமானம் எல்லாவற்றிலிருந்தும் நிரந்தர விடுதலை கிட்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.