புலவர் இரா. இராமமூர்த்தி.

அவா என்பதை ஆசை என்றும் கூறுவர். அவா என்ற சொல்லைத் திருவள்ளுவர் ஆரா இயற்கை என்கிறார்!

ஆசை என்பதும் அதையே குறிக்கும்! தமிழில் ‘அவா’ என்று கூறிப்பாருங்கள்! உங்கள் விரியும்வாய் மேலும் மேலும் அகன்று கொண்டே இருக்கும் இதனையே ஆரா இயற்கை – அதாவது நிறைவடையாத இயல்பு என்கிறார் திருவள்ளுவர். மனிதமனம் எதிலும் நிறைவை அடையாது! மனித மனம் மட்டுமன்று, இயற்கையே என்றும் நிறைவடையாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது!

இந்தப் பிரபஞ்சம் ஐம்பூதங்களால் ஆனது, என்பார்கள்!
ஐம்பெரும் பூதங்கள், நிலம், நீர்,நெருப்பு, காற்று, வெளி ஆகிய ஐந்துமேயாகும்!
இவற்றுள் நிலத்தினை நமக்கு அண்மையில் உள்ள பூதம் என்பர்.
நீர் நிலத்துடன் சேர்ந்திருக்கும், அவ்வப்போது வானில் சென்று மழையாகும், மீண்டும் நிலத்தையே அடையும்! காற்று பூமியைச் சூழ்ந்தே இயங்கும்.
நெருப்பு வானைநோக்கிச்சென்று பரவும்.
வானமோ விரிந்து விரிந்து சென்றுகொண்டே இருக்கும்.
இவை ஐந்தும் நிறைவடையாமல் இயங்கிக்கொண்டே இருக்கும்.

நிலம் செறிவடைந்து இறுகிக் கொண்டே இருக்கும்; பூமியின் சுழற்சியால், நிலப் படிவங்கள் நகர்ந்து இடத்தை நிரப்பிக் கொள்ளும்.ஆகவே, அதன் ஆசை அடங்காது!
அவ்வாறே நீரும் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்து, இடத்தை நிரப்பும்; அப்போதும் ஆவியாகி வானில் மேகமாகிக் கீழ் நோக்கி, மழையாய்ப் பாய்ந்து,அருவியாகி வழிந்து, ஆறாகி நடந்து கடலை நிரப்பும்!ஆனாலும் அதன் ஆசை நிறைவை அடையாது!
நெருப்போ, தான் பற்றிக்கொண்ட இடத்தை அடுத்து மெல்லப் பரவி,விரிந்து அனைத்தையும் விழுங்கும்! அதன் ஆசையும் அடங்குவதில்லை!
காற்றும், வெற்றிடத்தை நோக்கிப் பரவி, அந்த இடத்தை நிரப்பும்! அந்தக் காற்றின் திசைகளால் உலகில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்; அதற்கும் என்றும் நிறைவே இல்லை!
வானின் விரிவைத் திருவாசகம் மிகவும் சிறப்பாகக் கூறுகிறது!

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கொடியின் மேற்பட விரிந்தன!”

என்பது அத்திருவாசகப் பகுதியாகும்! இந்த வானின் விரிவுக்கும் எல்லை அல்லது நிறைவு இல்லை! இவ்வாறு, ஐம்பெரும் பூதங்களும் நிறைவு பெறாத நிலையில், அனைத்தையும் கவர்ந்து, மேலும் மேலும், ஆரா இயற்கையாகிய அவாவுடன் விளங்குகின்றன! இவை யாவும் நிரம்பிய இயற்கையை உடைய பேரண்ட ஆற்றலுள் ஒடுங்கும்! அவ்வாற்றல் அழிவற்றது; அதனையே திருவள்ளுவர் ”பேரா இயற்கை” என அழைத்தார்!

நம் உடல், வானம், தீ, நீர், காற்று, மண் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கையே யாகும்! என்றும் நிரம்பாத ஆசைகொண்ட ஐம்பெரும் பூதங்களின் கூட்டுப்பொருள் ஆதலால், நம் உடலும் ஆறாத இயற்கையாகிய அவா மிக்கதாக விளங்குகிறது! நிலையற்ற இந்த உடலுக்குள், நிலைத்த உயிராற்றலை மனமே இணைத்து வைக்கிறது! இந்த உடல், உயிருடன் இணைந்து, நன்மை, தீமை ஆகிய இருவகை வினைகளுடன் இயங்குகின்றது!இதனை வள்ளுவர் ,

“இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு!”(23)

என்று கூறுகிறார்! இவ்வுயிர் அருள், தவம், துறவு, மெய்யுணர்தல் ஆகியவற்றில் பழகிப் படிப்படியாகப் பக்குவம் பெற்று, மூல ஆற்றலுடன் ஒன்றி விடுவதுதான் ”பேரா இயற்கை”யை அடைவதாகும். இந்நிலையில், அவா நீங்கப் பெற்ற உயிர், மீண்டும் பிறவாத விடு தலையாகிய ”பேரா இயற்கை” நிலையை அடைகிறது!

இவ்வாறே இந்த ஐந்து பூதங்களின் கூட்டுப் பொருளாகிய நம் உடல், மெய் ஆசையாகிய காம இன்பத்தில் மிகவும் ஈடுபடுகிறது. இந்த ஆசை எளிதில் குறைவதில்லை; நீங்குவதும் இல்லை; மனம் அதற்குக் கட்டுப்பட்டு விடுகிறது! நம் வாய் உணவுப் பொருள்களின் சுவைக்கு ஆசைப்படுவதை நிறுத்திக் கொள்வதில்லை; மனம் அதன்வழியே சென்று, கழி பேரிரை உண்ணவே விரும்பி விடுகிறது! கண் இப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியிலேயே தன் பார்வையைத் தொலைத்து விடுகிறது! வேண்டாத பொருளின் மேல் பார்வை செல்லும்போது காமம் தூண்டப் பெறுகிறது! மனம் அதனடிமை ஆகிறது! மூக்கு சுவைப் பண்டத்தின் வாசனையை அவாவி, மனத்தை அங்கே செலுத்தி விடுகிறது! செவியோ அளவின்றி இசை கேட்கிறது; இசையின் ஓசை அதிகமாகும்போது, மனம், மிகுந்த ஆசையுடன் செவிப்புலனைக் கெடுத்துக் கொள்கிறது! அவ்வகையில் மனம், இசைக்கு அடிமையாகிறது! இந்த ஆசை அளவின்றிப் பெருகுவதால், உயர்ந்த நோக்கமாகிய ஆன்ம விடுதலையைப் பற்றிச் சற்றும் கவலைப் படாமல் மீண்டும் மீண்டும் பிறப் பதை வழக்கமாக்கிக் கொண்டு துன்பத்தில் வீழ்கிறது! இதையே திரு வள்ளுவர் ”ஆரா இயற்கை அவா” என்கிறார்!

ஆகவே ஐம்பெரும் பூதங்களும்,நம் உயிரும் ‘பேரா இயற்கையை’ அடைந்து நிறைவு பெறத் தடையாக இருப்பது ‘ஆரா இயற்கை’ யாகிய அவாவே , என்ற புதிய விரிவான பொருளை நாம் உணர்கிறோம்!இனிக் குறட்பாவைப் பயில்வோம்!

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்!” (370).

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.