Blog

  • அவன்,அது,ஆத்மா (32)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 32

    கருவில் உருவானது

    அவனுக்கு அமைந்த நண்பர்களிடம் உள்ள திறமையைப் பார்த்து அவன் வியந்திருக்கிறான். அதுவும் கிராமத்தில் இருந்து கொண்டு, அந்தக் காலத்தில் இருக்கும் குறைந்த விஞ்ஞான வசதிகளை வைத்துக் கொண்டு அவனுக்கு நண்பர்கள் சிலர் தங்களது திறமையை எப்படி வளர்த்துக் கொண்டார்கள் என்று இன்றும் நண்பர்களுடனும், குடும்பத்தார்களுடனும் சொல்லிப் பெருமை கொள்வான். அப்படி அமைந்த நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்.வி. என்ற எஸ்.வெங்கடராமன், சங்கர் என்ற ஆ.சங்கரநாராயணன். இவர்கள் இருவரையும் அவன் குறிப்பிடக் காரணம், அவர்களது திறமையை அவர்களது அருகில் இருந்தே கவனித்தவன் என்ற காரணத்தினால்தான்.

    எஸ்.வி. என்ற எஸ். வெங்கடராமன்

    “சீதாராமன் அப்பளம் டெப்போ” நிறுவனர் சீதாராமன் ஐயர், திருமதி. மீனாக்ஷி என்ற சம்பு மாமியின் மூத்த மகன் வெங்கடராமன். அவனும், நண்பர்களும் வெங்கடராமனை “எஸ்.வி.” என்றே அழைப்பார்கள். அவனைவிட “எஸ்.வி.” மூன்று வயது மூத்தவன். அவன் லக்ஷமீபதி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது எஸ்.வி.யும் அங்கு படித்துக் கொண்டிருந்தான். ஒரு வருடம் பள்ளி விழாவுக்கு எஸ்.வி. திருடன் வேடமும், ஆர்.எஸ். என்ற ரமணி பெண் வேடமும் ஏற்று ஒரு நாடகம் நடந்தது. அதற்கு வசனங்கள் சொல்லிக் கொடுத்து இயக்கியவர் “சீதாராமன் சார்”. அந்த நாடகத்தின் ஒத்திகையின் போது அவனும் அங்கிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். போலீஸ் காரர்களால் தேடப் பட்டுக் கொண்டிருக்கக் கூடிய திருடன் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியை சந்திக்கும் காட்சியை சீதாராமன் சார் விளக்கிக் கொண்டிருந்தார்.

    திருடன்: (தன் மனைவியைப் பார்த்து) ” …உஸ்ஸ்…சப்தம் போடாதே..கூச்சல் போட்டாயோ குத்திவிடுவேன் ” என்று சொல்ல அதற்கு மிகவும் பயந்த குரலில் அந்தத் திருடனின் மனைவி,” நாதா..பதட்டப் படாதீர்கள்…இந்தாருங்கள் இந்தப் பாயாசம் குடித்து ஆயாசம் தீருங்கள்” என்று சொல்லுவாள்.

    இந்தக் காட்சிக்கு எஸ்.வி.க்கு கருப்பு நிறத்தில் ஒட்டு தாடி வைத்து, அவனது கையில் ஒரு அட்டைக் கத்தியும் கொடுத்திருந்தார்கள். அந்தக் காட்சியில் மெதுவாகப் பூனையைப் போல தன்னுடைய கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து எஸ்.வி. பேசிய அந்த வசனமும், அதன் உச்சரிப்பும் இன்றும் அவனுக்குப் பசுமையாக இருக்கிறது. எஸ்.வி.க்கு இயற்கையாகவே விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறமை இருந்தது. அவன் நன்றாக விளையாடுவான், நீந்துவான், நகைச்சுவையாகப் பேசுவான், நன்றாகவே படிக்கவும் செய்வான். எஸ்.வி.யுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. அவன் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் P.U.C. படித்துக் கொண்டிருக்கும் பொழுது எஸ்.வி. மூன்றாம் ஆண்டு B.Sc. படித்துக் கொண்டிருந்தான். எஸ்.வி.க்கு பௌதிகத்தில் (Physics) மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே “எஸ்.வி.” தொலைகாட்சிப் பெட்டிக்கான உதிரி பாகங்களை வரவழைத்து, தானே ஒரு தொலைகாட்சிப் பெட்டியைத் தயாரித்து நண்பர்களுக்குக் காட்டினான். அப்பொழுது நம் நாட்டில் தொலைக்காட்சி வராத காலம். எஸ்.வி.யின் பெற்றோர்கள் இது போன்ற திறமைகளை நன்றாக ஊக்குவித்தனர். எஸ்.வி.யின் திறமையைப் பார்த்தது அவனுக்கும், நண்பர்களுக்கும் பெருமையாக இருக்கும்.

    எஸ்.வி.தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், எஸ்.வி.யின் நண்பர்கள் சங்கர், வெங்காச்சம் போன்றவர்களுக்கு B. A .R . C. (மும்பையில்) நிறுவனத்தில் இருந்து வேலைக்கு நேர்காணல் வந்ததில், சங்கர் மாத்திரம் தேர்வாகி விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்துவிட்டதாகவும், மற்றவர்களுக்கு அதில் வேலை கிடைக்கவில்லை என்றும் எஸ்.வி.யின் சகோதரன் குட்டிச் சங்கர் அவனிடம் சொன்னான். அந்த சமயத்தில் நண்பர்களுடன் ஆற்றங்கரைக்குக் குளிக்கச் செல்லும் பொழுது, கிராமத்துப் பெரியவர் ஒருவர் .” என்ன ரமணி ஒனக்கு வேலை கிடைக்கலியா” என்று ஏளனாமாகக் கேட்ட பொழுது,” ஒய்..நான் என்ன ஒங்க வீட்டுலையா சோறு தின்னறேன்..எங்கப்பாதானே சோறு போடறார்..ஒம்ம வேலையப் பாத்துட்டு பேசாமப் போங்கோ ” என்று எஸ்.வி. பளிச்செனச் சொன்னான். இப்படி வம்பு பேசும் ஆட்களுக்கு எஸ்.வி. உடனுக்குடன் “டோஸ்” விடுவதை அவனே பலமுறை பார்த்திருக்கிறான். அவனது திறமைக்கேற்ற வேலை B.S.N.L.ல் கிடைத்து பெங்களூருக்குச் சென்று விட்டான்.

    1987ம் வருடம் ஆதிவராகப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எஸ்.வி. கல்லிடைக்குறிச்சிக்கு வந்திருந்தான். அப்பொழுது கோவிலுக்காக சில மரங்களைக் கொண்டு வருவதற்காக மணிமுத்தாறு காட்டுப் பகுதிக்கு ஒரு ஜீப்பில் சிலர் கிளம்பினார்கள். எஸ்.வி., ” கண்ணா இவாளெல்லாம் போய் மரம் எடுத்துண்டு வரட்டும் நாம ரெண்டுபேரும் அந்தக் காட்ட ரசிக்கலாம்..நீயும் வா ” என்று அவனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது “அருவித் தண்ணீர் ஏன் இப்படி ஜில்லுனு இருக்கு தெரியுமா?” என்று கேட்டு ,”அத்தனை உயரத்தில் இருந்து விழும் பொழுது ஒரு நிலையில் அது “zero degree”க்குக் கீழே போய்விடும். அப்பொழுது தண்ணீர் ஜில்லுனு ஆகிவிடும்.” என்று ஒரு ஆசிரியரைப் போலச் சொல்லிக்கொடுத்தான். மேலும் “ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்..சர்வதேவ நமஸ்கார ஸ்ரீ கேசவம் ப்ரதிகச்சதி” என்ற சந்தியாவந்தனத்தின் மந்திரத்தைச் சொல்லி “கடல் நீர் ஆவியாகி, மழைமேகமாகி, மலைதனில் மழையைப் பொழிந்து இப்படி அருவியாக விழுந்து ஆறாக ஓடி மீண்டும் சமுத்திரத்தில் கலப்பதுபோல, யார் என்ன பெயரைச் சொல்லி அழைத்தாலும் எல்லாப் பெயரும் அந்த ஒருவனையே சேரும்” என்ற கருத்தையும் சொன்னான். “ஆழிமழைக் கண்ணா” என்ற பாசுரத்திலும் ஆண்டாள் இந்த தத்துவத்தைத் தொட்டுக் காட்டுகிறாள் என்று ஆன்மிகமும், இலக்கியமுமாக அவனோடு எஸ்.வி. அந்த மணிமுத்தாறு மலையில் வைத்துப் பேசினான்.

    நீண்ட இடைவெளிக்குப் பின் எஸ்.வி. கல்லிடைக்குறிச்சிக்கு ஒரு விடுமுறை நாளில் வந்திருந்தான். அன்று ஊரில் கோலாட்டப் பல்லக்கு உற்சவம் நடத்தது. எஸ்.வி. அந்த ஊர்வலத்துடன் எல்லாத் தெருவுக்கும் கூடவே வந்தான். தெருவில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை எல்லோரிடமும் தானே சென்று பேசிக் கொண்டிருந்தான். மறுநாள் மதியம் அவனும், எஸ்.வியும் குட்டிச்சங்கரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “கண்ணா…நீ எழுதின “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுப்பை சங்கர் தந்தான். படிச்சேன். நீ ரொம்ப நன்னா எழுதிருக்காய்..அதுவும் எல்லாக் கதையையும் நம்ம கிட்டேந்தே எடுத்து எழுதி இருக்கிறது எனக்குப் பிடிச்சிருந்தது …ஒன்னோடு கவிதைகளும் படிச்சிருக்கேன்..நீ ஒரு “கிரியேட்டிவ் ஆள்டா”..என்று அவன் தோள்களை தழுவிக் கொண்டு பாராட்டினான் எஸ்.வி. அந்த வார இறுதியில் எஸ்.வி. பெங்களூருக்குச் சென்று விட்டான். அதுதான் அவன், “எஸ்.வி.” யைக் கடேசியாகப் பார்த்தது.

    ஒருவாரம் சென்ற பிறகு ஒருநாள் இரவு பத்து மணிக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு,” கண்ணா …நீ சங்கருக்கு வாங்கிகொடுத்திருந்த சுவாமி பரமார்தானந்தாவின் “சந்தியாவந்தனம்” விளக்க உரையைக் கேட்டேன். பிரமாதம். “சந்தியாவந்தனம் செய்யும் பொழுது தண்ணீர் இல்லாத பாலைவனத்தில் இருந்தோம் என்றால் கூட, அங்கிருக்கும் மணலையே கையில் எடுத்து அர்க்கியமாகக் கொடுக்கலாம்” என்று அவர் சொன்னதைப் போலவே என்னுடைய அப்பாவும் சொல்லியிருக்கிறார்”, எனக்கு அந்த உரையின் “ஒரு செட்” உடனே வாங்கி அனுப்பிவை. உன்னுடைய சிறுகதைகளைப் பற்றி என் கொழந்தைகளுக்குச் சொன்னேன். அவர்கள் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். நீ பெங்களூருக்கு என்னுடைய வீட்டுக்கு அவசியம் வா என்று “எஸ்.வி.” பேசினான். எஸ்.வி.யின் ரசனை அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எஸ்.வி. அழைத்தது போலவே அவன் அடுத்த மாதம் பெங்களூருக்குச் சென்றான். ஆனால் எஸ்.வி.யைத்தான் பார்க்கமுடியவில்லை. தனது நாற்பத்தொன்பதாவது வயதில் திடீரென வந்த இதயவலியால் இறந்து போய்விட்டான்.

    எஸ்.வி. இறந்து இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும், ஒரு நாள் மதியம் அவனுக்கு நண்பனும், எஸ்.வி. யின் தம்பியுமான மூர்த்தி அவனைத் தொடர்புகொண்டு,” கண்ணா நீ..இப்ப ஆபீசில்தானே இருக்காய்” என்று கேட்டான். “ஆமாம்” என்று பதில் சொன்னான். ” ரமணியோடு ரெண்டாவது பொண்ணு “வசந்தா” வந்திருக்கா..ஒன்னப் பாக்கணும்னு ஆசைபடறா..கூட்டிண்டு வரேன்” என்றான். சரியாக இரண்டு மணிக்கு அவன் வேலை செய்கிற “காட்பரீஸ்” அலுவலகத்திற்கு மூர்த்தியும், எஸ்.வி.யின் இளைய மகள் வசந்தாவும் வந்தார்கள். அவனும் மூர்த்தியும் பேசிக் கொண்டிருந்தார்கள். எஸ்.வி.யின் பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்னம்மா சொக்கியமா இருக்கயா” என்ற அவனது கேள்விக்கு அந்தப் பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்கரையே” என்றான் அவன்.

    “ஒங்களப் பத்தியும், ஒங்களோடு கதைகள், கவிதைகளைப் பத்தியும் எங்கா அப்பா எங்களோட ரொம்ப நேரம் பேசிண்டிருந்தார்..சில கதைகளப் படித்தும் காட்டினார்…ஒங்களோட எழுத்து எங்களுக்கு பிடித்திருந்தது. அப்பா உங்களப் பத்திச் சொன்னதுலேந்து உங்களப் பாக்கணும் போல இருந்தது. அதுதான் ஒங்களப் பாக்கணும்னு சித்தப்பாட்டச் சொன்னேன். …இப்ப பாத்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று அவனுக்கு நண்பன் எஸ்.வி. என்கிற ரமணியின் பெண் வசந்தா சொன்னது அவன் காதுகளில் “எஸ்.வி.”யின் குரலாகவே ஒலித்தது.

    நண்பன் எஸ்.வி.க்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் மீனாக்ஷி என்ற அகிலா. இரண்டாவது மகள் வசந்தா. இரண்டு பேருமே அப்பாவின் பெயர் போற்றும் புத்திசாலிக் குழந்தைகளாக அமெரிக்காவிலும், ஜெர்மனியிலுமாக வாழ்கிறார்கள். எஸ்.வி. இன்றும் அவர்களை வாழ்த்திக் கொண்டே இருக்கிறான்.

    01.10.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    படம்  உதவி  குட்டி சங்கர்

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 18

    –சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நமது பூமி

     

    நமது பூமி
    ____________________________

    “பலவீனம், கவலை ஆகியவற்றின் மெய்ப்பாடை விட்டுவிட்டு நமது கிழக்காசியர் வற்புறுத்துவதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.”
    “எனது அன்புக்குரிய நாடு பாடுவது மகிழ்ச்சிக்காக இல்லாது, மக்களிடையே பயக் கொந்தளிப்பை உண்டாக்க என்னும் போது நான் வேதனைப் படுகிறேன்.”
    கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
    ____________________________

    புவியே உனை நாடினேன்
    ____________________________

    ஒருநாள் தெளிவான இரவின்
    அமைதியில்
    உனைக் காண வெளியில் வந்தேன்,
    என் ஆத்மாவின் கதவையும்
    ஜன்னலையும் திறந்து,
    இதயத்தில்
    இச்சையும் மோகமும் மிகுந்து !
    விண்ணை நோக்கி
    புன்னகை புரியும்
    விண்மீன்களைப் பார்த்த
    வண்ணம் நீ
    இருந்தாய் ! என்
    கால்கட்டுச் சங்கிலியை
    கழற்றி எறிந்தேன் !
    ____________________________

    என் ஆத்மா குடியிருக்கும் இடம்
    உன் சூழ்வெளி ! அதன்
    காரணம் நான் அறிந்தேன் !
    என் ஆத்மாவின் ஆசைகள்
    ஒன்றி யுள்ளன
    உன் ஆசைகளில் !
    என் ஆத்மாவின் அமைதி
    ஓய்வெடுக்கும்
    உன் அமைதியில் !
    விண்மீன்கள்
    உன் உடலில் தெளித்திடும்
    பொன் தூசிகளில்
    புதைந்திருக்கும் ஆத்மாவின்
    பூரிப்பு !
    ____________________________

    ஒருநாள் இரவு வானம்
    சாம்பல் நிறத்தில்
    இருந்த போது
    களைத்துப் போனது
    என் ஆத்மா !
    கவலை யுற்றது
    என் ஆத்மா !
    உன்னை நாடி வந்தேன்
    வெளியில் !
    பூத வடிவில் தோற்றினாய்
    நீயே !
    புயல்களை ஆயுதமாய்ப்
    போர்த்திக் கொண்டி ருந்தாய் !
    கடந்த காலத்தோடு
    நிகழ் காலம்
    சண்டை இட்டது !
    பழையவை இடத்தைப்
    புதியவை
    பற்றிக் கொண்டது !
    பலவீனரைத் துரத்திக் கொண்டு
    வாழ்ந்து வந்தார்
    வலுத்தவர் !
    ____________________________

    Share
  • விருந்தும் மருந்தும்..

    விருந்தும் மருந்தும்…(குறள் வெண்பா)

    வாராரோ என்றேதான் வாசலிற்க்கண் வைத்தீதல்
    சாராம்சம் பக்கமென்றும் சாய்!

    வந்தபின்னே இன்முகத்தில் வாவென்று வாசலில்நேர்
    சந்திப்பைக் காத்தலன்றோ சால்பு!

    வாசலிலே வந்தவரை வாயார வாழ்த்தியவர்
    பாசத்தின் ஊற்றென்றுப் பாடு!

    வந்தவரை ஆதரித்து வாழ்வுக்குப் பாலமாகி
    இந்தமண்ணில் சேர்ந்தொருமை ஈந்து!

    வாய்திறந்து கேட்டுநிற்கும் வாட்டமுடன் வாழுகின்ற
    சேய்களுக்கே பாலன்னம் சேர்!

    வாவென்று அன்பொழுக வாய்திறந்துக் கூப்பிடாமல்
    ஆவென்று நோக்காதீர் ஆழ்ந்து!

    வாவென்று உள்ளார்ந்து வாய்மொழியா இல்லத்தில்
    தாவென்று கேட்டிடாதீர் தாழ்ந்து!

    வாழ்த்துதலை நோக்கியெதிர் வாசலிலே நிற்காதோர்
    தாழ்விலுமே மானஸ்தர் தான்!

    வாஞ்சையாய் காப்போரின் வாசலைதான் எவரும்தம்
    ஊஞ்சலாய் ஏறிடுவார் ஊர்ந்து!

    வந்தாரை வாழ்விக்கும் வளமான வாழ்வதுதான்
    நொந்தாலும் ஈரநெஞ்சோர் நோக்கு!

    … நாகினி

    Share
  • கூகிள் கடோத்கஜன்

    கிரேசி மோகன்

     

    crazy

     

    crazy1

    (நன்றி : ஆனந்த விகடன்)

    Share
  • ஆன்மீகமும் நானும் (3)

    நடராஜன் கல்பட்டு

    மறு நாள் ஆறரை மணிக்கே நான் உபநிஷத் வகுப்பு நடக்கும் இடத்தை அடைந்து முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டேன். சரியாக 7-00 மணிக்கு சுமார் 25 முதல் 28 வயது நிரம்பிய, வெள்ளை வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்த இளைஞர் ஒருவர் மேடையை வந்தடைந்தார். (நேரம் காத்தல் என்றால் என்ன என்பதை சின்மயா மிஷனிடம்தான் கற்க வேண்டும்.)

    எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம்.

    கம்பீரமான, ஆனால் அதே சமயம் சாந்தமான குரலில் அவர் பேச ஆரம்பித்தார், “உங்களில் எவ்வளவு பேர் இதற்கு முன் சின்மயா மிஷன் வகுப்புகளில் பங்கேற்றுக் கொண்டுள்ளீர்கள்? நான் அளிக்கப் போகும் முன்னுரை உங்கள் பதிலைப் பொருத்து இருக்கிறது” என்றார் அவர்.

    உடனே நான் எழுந்து, “பிரும்மச்சாரி அவர்களே இந்தக் கூட்டத்தில் நான் ஒருவன் மட்டுமே இதற்கு முன் சின்மயா மிஷன் வகுப்புகளில் பங்கேற்காதவன் என்று இருந்தாலும் கூட தயவு செய்து முழுமையான முன்னுரையை அளியுங்கள்” என்று கேட்டேன்.

    அவரும், “சரி” என்று சொல்லித் தன் பேச்சை ஆரம்பித்தார்.

    “நேற்றைய தினசரியை நீங்கள் திறக்கிறீர்கள். அதனுள்ளே ஒரு துண்டுப் பிரசுரம். ‘பிரும்மச்சாரி ஹரிதாஸ், அணு பௌதீக சாஸ்திரத்தில் தங்கப் பதக்கம் பெற்ற மேல் நிலைப் பட்டதாரி, கீதை பற்றிய உரை நிகழ்த்துகிறார் இன்று மாலை 6-00 மணியளவில் ……… அரங்கில். நாளை காலை 7-00 மணி முதல் உபநிஷத் வகுப்பு ஆரம்பம். சின்மயா மிஷன், விஜயவாடா’.

    அணு விஞானம் பற்றிப் படித்தவர் ஆன்மீகம் பற்றி என்ன பேசப் போகிறார் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும் நான் என்று நினைத்து வீட்டை விட்டுக் கிளம்ப ஆரம்பிக்கிறீகள் நீங்கள். அப்போது பல நாட்களாக ‘வருகிறேன் வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்த உங்கள் நண்பர் தன் மனைவி குழந்தையுன் வருகிறார் உங்கள் வீட்டிற்கு. அவரை வரவேற்று உள்ளே செல்கிறீர்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தமின்றி பதிலளிக்கிறிர்கள். உங்கள் உடல் அங்கிருந்த்தே யொழிய மனம் இங்கு இருந்தது. இதுதான் இன்று நம் எல்லோரிடமும் ஏற்படும் மனதுக்கும் உடலுக்குமான போராட்டம். இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி இதை நமக்குச் சொல்லித் தருவதுதான் சனாதன தர்மம் என்றழைக்கப்படும் நமது இந்து மதம். இந்த அறிவுரைகள் வேத உபநிஷத் மந்திரங்களாகவும், புராண இதிகாசங்களாகவும் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கின்றன.”

    இந்த வார்த்தைகளை அவர் சொன்ன போது என் உடலின் ஒவ்வொரு ரோமமும் எழுந்து நின்றது என் உடலில். அன்று முதல் அடுத்த பத்து நாட்களுக்கு முதல் வரிசையில் நான்.

    முதல் நாள் பேசிய பேச்சில் எனக்கு எழும் சந்தேகங்களை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டு செல்லுவேன் பிரும்மச்சாரியிடம் கேட்க வேண்டும் என்று.

    என் மனத்தில் எழுந்த சந்தேகங்கள் அவருக்கு எப்படித் தெரியுமோ. நான் கேட்காமலேயே அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை முதலில் தந்து விட்டுப் பின் தன் அன்றைய பேச்சினைத் துவக்குவார்.

    எல்லா நல்ல விஷயங்களுமே ஒரு நாள் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. பத்து நாட்கள் சொற்பொழிவும் முடிந்தது.

    “இந்த நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புவோர் மேடைக்கு வந்து பேசலாம்” என்று அறிவித்தார்கள்.

    அன்று வரை மேடை ஏறிப் பேசாத நான் அந்தப் பத்து நாட்களில் அனுபவித்த ஆனந்தத்தைப் பற்றியும் நிகழ்ச்சி முடிவடைந்ததால் என் மனத்துள் உண்டான வருத்தத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் பேசினேன்.

    பத்து நாட்களிலும் பக்தர்கள் சிலர் பழங்களைக் கொண்டு வந்து பேச்சாளர் கையில் கொடுத்து விட்டு நமஸ்காரம் செய்து விட்டுச் செல்வார்கள். முதலில் நமஸ்கரிப்பவருக்கு விபூதிப் பிரசாதம் கிடைக்கும், பின் வருபவர்களுக்கு முன்னவர் கொடுத்த பழங்கள் கிடைக்கும். எதையும் உள்ளே எடுத்துச் செல்வதில்லை. கடைசீ நாளன்று பிரும்மச்சாரி இரண்டு ஆப்பிள் பழங்களை எடுத்துத் தன் தோள் பைக்குள் போட்டுக் கொண்டார். நான் நினைத்தேன் அவர் ரயில் பயணத்தின் போது சாப்பிடுவதற்காக எடுத்து வைத்துக் கொள்கிறார் போலும் என்று.

    கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கலைந்தது. பிரும்மச்சாரி, “நான் நடராஜனுடைய வண்டியில் வருகிறேன்” என்றார்.

    “ஐந்து நிமிஷத்தில் வருகிறேன்” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் எனது மனைவியையும் அப்போது என் கூட வசித்து வந்த இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு அரங்கிற்குத் திரும்பினேன். அன்று வரை நான் அவர்களை அங்கு அழைத்துச் சென்றதில்லை.

    பின் ரயில் நிலையத்தில் வண்டி கிளம்பும் போது பிரும்மச்சாரி தன் ஜோல்னாப் பைக்குள் கையை விட்டு இரண்டு ஆப்பிள்களையும் எடுத்து என் மகள்களிடம் கொடுத்தார்.

    அவருக்கு எப்படித் தெரிகிறது என் மனத்துள் நடப்பவை எல்லாம்? எப்படித் தெரிகிறது அவருக்கு அவரை வழி அனுப்ப என்னுடன் வசித்து வந்த இரு பெண்களும் ரயில் நிலையம் வருவார்கள் என்று? அதிர்ச்சியில் ஆழ்ந்தேன் நான்.

    சின்மயா மிஷனோடு எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு பற்றியும் நான் எடுத்துக் கொண்ட பங்கினைப் பற்றியும் எழுதும் முன் நான் வாழ்க்கையில் கண்ட, கேள்விப் பட்ட சில போலி ஆன்மீகவாதிகள் பற்றி எழுத நினைக்கிறேன். அதன் பின்னர் மீண்டும் திரும்புகிறேன் சின்மயா மிஷனுக்கு.

    (தொடரும்……)

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – மின்னஞ்சல் கணக்கின் பாதுகாப்பு

    – எஸ். நித்யலக்ஷ்மி.

    email safetyமின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின்னஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார்கள். ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது. வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக்கின்றன. இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.

    இந்தப் பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்தப் பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.

    அடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.

    உங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும். எடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

    ஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர்களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.

    தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.

    நம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/help/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும். நான் அடிக்கடி கம்ப்யூட்டர், இணைய இணைப்பு, மொபைல் போன் ஆகியவற்றை மாற்றி என் ஜிமெயில் தளத்தினை அணுகுகிறேன். எனவே இது போலக் காட்டப்படும் எச்சரிக்கை பட்டியல் எனக்குத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா? அப்படியானால், இந்த வசதி இயங்குவதை நிறுத்திவிடலாம். இந்தப் பட்டியலின் கீழாக இதற்கான வசதி தரப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆப்ஷன் தெரிவித்து ஒரு வாரம் கழித்தே இந்த வசதி நிறுத்தப்படும்.

    picture credit: http://blogs.securebeans.com/

    Share
  • புதுக்கவிதை

    -மெய்யன் நடராஜ் 

    நவீனத்துவத்தின் பொற்காலம்
    தொடங்கிவிட்டது
    வரைந்தவன் கைகளுக்கு
    மோதிரம் அணிவிக்கணும் என்று
    ஓவியன் வியந்திருக்கிறான்!

    சாஸ்திரிய சங்கீதத்தையும்
    மேற்கத்தைய சங்கீதத்தையும்
    கலவை செய்த இசைக்குறிப்பு
    இந்த நூற்றாண்டின்
    மாபெரும் புதுமை
    ஒஸ்கார் விருதுக்குப்
    பரிந்துரை செய்யவேண்டும்
    அபாரம் அபாரம்
    பாராட்டித் தள்ளியிருக்கிறார்
    பாகவதர்!

    குணப்படுத்த முடியாத
    நோய் ஒன்றுக்கான
    வைத்தியரின் மருந்து சீட்டு
    விலை அதிகமென்று
    மயக்கம்போட வைத்திருக்கிறான்
    மருந்துக்கடைக்காரன்!

    மேல்நாட்டுப் பாணியிலான
    நவீனக் கட்டடமொன்றிற்கான
    வரைபடக் கூறு என்று
    வரையறுத்துக் கூறிவிட்டான்
    பொறியியலாளன் ஒருவன்!

    பயங்கரக் கொலை கொள்ளையோடு
    சம்பந்தப்பட்ட குற்றவாளியின்
    கைரேகை அடையாளமென்று
    திட்டவட்டமாகக் கூறி இருக்கிறான்
    உளவுத்துறை நண்பனொருவன்!

    சட்டைப் பையில் இருந்த
    காகிதக் குறிப்பைப் பாராமல்
    சலவை செய்துவிட்டு
    இஸ்திரி கைபோடும்போது
    அவதானித்துப் பதறிப்போனவள்
    தெரிந்தவர்களிடம் கேட்டுக் குழம்பியதை
    மாலையில் வீட்டுக்குவந்த
    என்னிடம் காட்டினாள்

    பார்த்துவிட்டுக் கேட்டேன்
    “உனக்கு ஏதும் விளங்குகிறதா?”
    “இல்லை” என்றவளிடம்
    எனக்கும் விளங்கவில்லை
    ஊரிலுள்ள எவருக்கும் விளங்கவில்லை
    என்றால் நிச்சயம் இது
    கையெழுத்து அழகில்லாதவன்
    யாராவது எழுதிய ’புதுக்கவிதை’தான்
    அடித்துச் சொன்னேன் நான்!

    வாங்கிப் பார்த்துவிட்டு
    “ஐயோ அப்பா” இது நேத்து
    பேனா வாங்கும்போது
    எழுதுதான்னு
    கிறுக்கிப் பார்த்த காகிதம்
    என்று  மகன் எடுத்து வீசும்மட்டும்
    புரியவேயில்லை…
    விளங்காத என்
    கிறுக்கிப் பார்த்த காகிதம்!

     

    Share
  • கூறு கெட்ட உலகம்

    -றியாஸ் முஹமட்

    கூறு கெட்ட உலகம்
    குனியக் குனியக் குட்டும்
    துணிந்து நீ எழுந்து நின்றா
    உன்னையே அது சுற்றும்

    பாடுபட்ட உள்ளம்
    விழுந்து கிடப்பதோ பள்ளம்
    சும்மாப் பார்த்துக் கொண்டே
    நின்றிருந்தா….
    அடித்தொதுக்கும் வெள்ளம்

    கேடு கெட்ட மனிதம்
    பகுத்தறிவு இல்லா மிருகம்
    பசி என்று வந்துவிட்டால்
    வேலியே பயிரை மேயும்!

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: கட்டி அடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்றுபவர்

    மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
    பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
    கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
    இட்டிகை தீற்று பவர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘மறுமை ஒன்று உண்டோ? மனப் பட்ட எல்லாம்
    பெறுமாறு செய்ம்மின்’ என்பாரே-நறு நெய்யுள்
    கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,
    இட்டிகை தீற்றுபவர்.

    பொருள் விளக்கம்:
    மறுபிறவி என்ற ஒன்று உண்டா? (அதனால் பாவம், புண்ணியம் போன்ற கவலைகளற்று) மனம் விரும்பியதை எல்லாம் அடையும் வகையில் வாழுங்கள் என்று அறிவுரை கூறுபவர்; நறுமணம் கொண்ட நெய்யில் செய்வித்து, சுவைப்பாகில் ஊறிய அடையைக் கொடுக்காது, கண்மூடித்தனமாகச் செங்கல்லை உண்ணக் கொடுப்பவரை ஒத்தவர்.

    பழமொழி சொல்லும் பாடம்:
    அறிவற்றவர் நன்னெறி புகட்டாது, தீமை தரும் வழியில் வாழும் வகை காட்டுவார். இந்தப்பிறவியில் நாம் ஆற்றும் செயல்கள்தாம் நமது மறுபிறவியில் நாம் வாழும் நிலையை நிர்ணயிக்கும் என்பது மக்களை நல்வழியில் செலுத்துவதற்கான நம்பிக்கை அடிப்படையிலமைந்த ஓர் முயற்சியாகும். ஆதலால், அதனை எடுத்துரைத்து நல்வழி நடப்பீராக என்று வழிகாட்டாது, மனம்போனபடி வாழ அறிவுரை கூறுபவர் சுவை உணவைப் பரிமாறாது, செங்கல்லை ஊட்டுபவர் என்பது இப்பழமொழி பாடல் தரும் விளக்கம். குறள் என்ன நெறி காட்டுகிறது எனப் பார்ப்போமானால்,

    சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு. (குறள்: 422)

    மனம் போனபடியெல்லாம் நடக்காமல், தீமைகளில் இருந்து விலகி நல்வழி நடப்பதே அறிவுடையார் செயல் என்று கூறுகிறது. ஆகவே, தீமை விளக்கி நன்னெறி வழி நடப்பது நம் கடமை.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 49 (2)

    அரிசி அருங்காட்சியகம், கெடா, மலேசியா (2)

    சுபாஷிணி

    மிக ரம்மியமான சூழலில் உள்ள புற நகர் பகுதியில் இந்த அரிசி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு வரும்போதே பசுமையான வயல் வெளியையும் ஆங்காங்கே நிற்கும் காளை மாடுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டே பயணிக்கலாம்.

    12,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றனர். மூன்று மாடிகளில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகக் கட்டிடத்தின் வடிவமே நெற்களஞ்சியத்தைக் காட்டுவது போலவும், நெற்பயிர்களின் படங்களுடனும், அலங்கரிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் பற்றியும் அரிசி வகைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்ய யாரேனும் விரும்பினால் எந்த ஐயமும் இன்றி இந்த அருங்காட்சியகத்திற்கு வரலாம். நெற்பயிர் தொடர்பான பல்வேறு தகவல்களை வழங்கும் ஒரு நிலையமாகவும் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

    asu
    ​

    நெல் பயிர் உற்பத்தி செய்யும் முறை பற்றிய தகவல்கள், வெவ்வேறு வகையான நெல் பயிர்கள், நெல் பயிரிடுவதற்கான விவசாயக் கருவிகள் ஆகியன இங்கு காட்சிப் பொருட்களாகவும் மூன்று தளங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

    ​asu1

    நெற்பயிர் உற்பத்தி என்பது இன்றோ நேற்றோ தொடங்கிய ஒரு விசயமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நெல்பயிரிடுதல் என்பது மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக அமைந்திருந்தது. மக்கள் நாகரிகம் அடைய அடைய விவசாயம் என்பதைக் கற்றுக் கொண்டு உணவு தயாரித்தலுக்காகப் பயிரிடுதல் என்பதை வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகக் கடைபிடிக்க ஆரம்பித்தனர். நெல்பயிரில் இயற்கையாக விளைந்த பயிர்கள் என்பது போக அறிவியல் தொழில்நுட்பத்தின் வழியாக அரிசி வகைகளில் சில நுணுக்கமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி சில வகை அரிசிகள் உருவாக்கப்பட்டதும் விவசாய உலகில் நிகழ்ந்திருக்கிறது.

    ​asu2
    மலேசிய மக்களின் உணவில் அரிசி மிக முக்கிய உணவாக அமைகின்றது. காலை பசியாறுதலுக்கும் அரிசி உணவு வகை. மதிய உணவுக்கும் அரிசி வகை, மாலை உணவுக்கும் அரிசி வகை. என ஒரு நாள் முழுமைக்குமான உணவுத் தேவைக்கு ஒவ்வொருவரும் அரிசியை மிக அதிகமான அளவில் இங்கே பயன்படுத்துகின்றனர்.

    ​asu3

    மலேசியா மலாய், சீனர், இந்தியர் என்ற வகையில் மூன்று இனங்களை பெருவாரியாகக் கொண்ட ஒரு நாடு. மூன்றுமே மிகச் சிறந்த உணவு பாரம்பரியத்தைக் கொண்ட இனங்கள்.

    ​asu4

    காலை, மதியம் மாலை உணவு வகைகள் எனும்போது பல வித்தியாசமான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் முறை அறிந்த இனங்கள் இவை மூன்றும். தமிழர்கள் அரிசியை குழம்புடன் சேர்த்து உண்ணும் சோறு என்ற வகை மட்டுமன்றி அரிசியைப் பயன்படுத்தி தோசை, இட்டிலி, ஆப்பம், ஊத்தப்பம், பணியாரம், வடகம், அப்பளம், என பல வகைப் பலகாரங்கள் செய்கின்றோம். சீனர்கள் அரிசியை குழம்புடன் சாப்பிடுவதோடு, கஞ்சி, நூடல் வகைகள் தயாரிப்பு என்ற வகையில் பயன்படுத்துகின்றனர். மலாய் இனத்தவர்கள் குழம்புடன் சேர்த்த சோறு என்ற ஒரு வகை மட்டுமன்றி மாறுபட்ட வகையிலான உணவுகளைத் தயாரிக்கும் முறை அறிந்தவர்கள்.

    ​​asu5

    ஆக, இந்த மூன்று இனங்களுமே அரிசியை வெவ்வேறு வகையில் தங்கள் அன்றாட உணவில் பயன்படுத்துவதை நன்கு அறிந்து கொள்ளலாம்.

    மலேசியா முழுமைக்கும் காலை உணவு எனச் சாலையோரக் கடைகளிலும், சந்தைகளிலும், உணவு விடுதிகளிலும் தேடினால் நமக்கு மிக எளிதாகக் கிடைப்பது நாசி லெமாக் எனும் தேங்காய்ப்பால் சாதமும் கெட்டியான மிளகாய்ச்சாந்து சேர்த்த குழம்பும் இணைந்த ஒரு வகை உணவு.

    நாசிலெமாக், அத்துடன் ‘தே தாரிக்’ (மலேசிய வகை தேநீர்) – இதனை மலேசியா செல்லும் ஒவ்வொருவரும் கட்டாயம் சுவைத்துப் பார்க்க மறக்கக் கூடாது.

    தொடரும்…

    Share
  • லஞ்சம் பிடிபடும்!

    -பா.ராஜசேகர்

    பிரசவத்தில் பிள்ளையைக்
    கொடுக்க லஞ்சம் !
    கல்லறைக்குச் சவத்தைக்
    கொடுக்க லஞ்சம்!

    பாட்டி தாத்தா ஊதியம்
    கொடுக்க லஞ்சம்!
    பயனாளிகளுக்குப் பயன்
    பொருள் கொடுக்க லஞ்சம்!

    படுகாயம் அடைந்தோர்
    முதலுதவிக்கு லஞ்சம்!
    சட்டத்தை வளைக்க
    வேலைகள் நடக்க லஞ்சம்!

    லஞ்சம் லஞ்சம் லஞ்சம்
    நாட்டைக் கெடுக்குது லஞ்சம்!
    கொடுப்பதைக் கொடுத்துத்
    துடிப்பது ஏனோ?!

    கொடுப்பதை நிறுத்து
    கொதிப்பது அடங்கும்!
    கொதித்தெழு மனிதா
    பிடிபடும் லஞ்சம்!

     

    Share
  • சிகரம் நோக்கி ….. (24)

    சுரேஜமீ

     

    திறமை

     apeak

    உலகில் அறிவும், திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் வெற்றி காண்பது என்பது மிகவும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், திறமையால் மட்டுமே வென்றவர்கள்தான், வரலாறு படைக்கிறார்கள். அப்படியென்றால், வாழ்வின் வெற்றிக்கு அறிவு தேவையில்லையா எனும் கேள்வி எழலாம். அதற்கு பதில் காண்பதற்கு முன், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    அனைத்து வெற்றிக்கும் அடிப்படையாக இருப்பது அறிவுதான்!

    ஆனால், அந்த அறிவை ஒவ்வொரு மனிதனும், தன் சூழ்நிலைக்கு ஏற்ப, தன்னுடைய லட்சியத்தை நோக்கிச் செலுத்தி, செயலில் வெற்றி காணச் செய்வதுதான்

    ‘திறமை’ என்பதை வெற்றியாளர்களின் சரித்திரம் நமக்குச் சொல்கிறது.

    ஆக, திறமை என்பதே அறிவில் ஒளிந்து இருப்பதுதான் என்பதும், அதை ஒவ்வொருவரும், அவரவர் முயற்சியாலும், பயிற்சியாலும், தீவிர முனைப்பாலும், வெளிக்கொணர்ந்து, சாதனைகளுக்குச் சாதகமாக்கிக் கொளல் வேண்டும் எனவும் அறிதலே திறமையின் முதல் படி!

    சரி, அறிவுக்கும், திறனுக்கும் உள்ள நுட்பத்தைத் எப்படி தெரிந்து கொள்வது? திறனை அறிவது எப்படி? திறனை வளர்ப்பது எப்படி? திறனைச் சோதித்துக் கொள்வது எப்படி? அதனால் வெற்றி காண்பது எப்படி?

    அறிவோமா?

    மனதை வெற்றிடமாக்குங்கள்….சிந்தையை ஒருமுகப்படுத்துங்கள்….சில விதைகள் இங்கே தூவப்படலாம்…முளைப்பதற்கு உங்களிடம் முனைப்பு இருக்கட்டும்!

    அறிவு என்பது ஒரு செயலில் நமக்கு உள்ள நுணுக்கங்களையும், அது சார்ந்த அடிப்படைக் கூறுகளையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும்,

    நூல்களின் மூலமாகவோ, ஊடகங்களின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ பெறுவதாக இருக்கக் கூடியது.

    மாறாகத் திறமை என்பது ஒரு செயலில் நமக்கு இருக்கக் கூடிய விருப்பத்தைப் பொறுத்து, அது சார்ந்த அறிவைப் பெற்று, அந்த அறிவின் அடிப்படையில் ஒரு கனவை உருவாக்கி, அந்தக் கனவை நினைவாக்க, நாம் நாளும் செய்யும் தவம் என்றால் மிகையாகாது.

    அறிவுகூடச் சிலவேளை மரபணு சார்ந்த விஷயமாகவோ, அல்லது பிறப்பின் அடிப்படையில் வருவதாகவோ கூட இருக்க வாய்ப்புண்டு! ஆனால், திறமை நிச்சயமாக, ஒருவரின் சொந்த முயற்சியில்தான் வர இயலும் என்பதே, அதன் தனித்தன்மை!

    ஆக, அத்தகைய முயற்சிக்கு வித்தாக பல காரணிகள் இருக்கலாம். குடும்பச் சூழல், நண்பர்கள், சமூகம், இருப்பிடம், நாடு என எது வேண்டுமானலும் உங்களுக்குள் ஒரு நெருப்புப் பொறியை ஏற்படுத்திவிட்டு, உங்களின் திறமையைச் செதுக்கத் தூண்டலாம்!

    மீண்டும் மீண்டும் நினைவின் ஆழத்தில் பதியுங்கள்…….

    ‘திறமை’ என்பது தனி மனிதனின் மட்டற்ற முயற்சியால் மட்டுமே விளையக் கூடியது!

    நாளும் வளர்க்கும் திறமைதான் நாளைய வரலாறு ஆக முடியும்!

    அத்தகைய திறமையை வளர்க்க உதவும் காரணிகளை அடையாளம் காணலில்தான், நாளைய வெற்றியின் சரித்திரம் அடங்கி இருக்கிறது.

    ஆர்க்கிமிடிஸ் எனும் தத்துவ ஞானி என்ன சொல்கிறார் தெரியுமா?

    நான் நிற்பதற்குத் தேவையான இடத்தையும் ஒரு நெம்புகோலையும் என்னிடம் கொடுங்கள். இந்த பூமியையே நகர்த்திக் காட்டுகிறேன் என்கிறார்!

    இதைவிட உங்கள் முயற்சிக்கு வித்தாகக் கூடிய வார்த்தைகள் வேறென்ன இருக்க முடியும்?

    திறனைப் பெறுவதற்குப் பல காரணிகள் இருந்தாலும், அதனை வளர்ப்பதற்குத் தேவையானது

    திடமான எண்ணமும், தீவிர நம்பிக்கையும், தொடர்ந்து செயலாற்றுவதும், பிழைகளைத் திருத்தித் தடைகளைக் களைந்து, இலக்கினை நோக்கிப் பயணிப்பதேயாம்!

    சரி திறனைக் கண்டுகொண்டோம்….பெருக்குகின்றோம்….பின் என்ன செய்யவேண்டும்? நம்மிடம் உள்ள திறனைச் சோதிக்க வேண்டாமா? எப்படிச் சோதிப்பது?

    எந்த வேலையானாலும், அதில் தன்னை விட யாரும் சிறப்பாகச் செய்ய இயலாதவாறு ஒரு செயல் இருக்குமானால்,

    நீங்கள் திறமைசாலி என்பதில் ஐயம் துளிகூடத் தேவையில்லை!

    தாம் எடுத்துக்கொண்ட செயலில், தம்மை விட யார் திறமைசாலியோ, அவர்களோடு போட்டியிட்டுத் தன்னை மேம்படுத்தித் தன் திறனை அவ்வப்போது மெருகேற்றிக் கொள்ளக் கற்றுக் கொண்டால்,

    நம் திறமையை வியந்து வெற்றித் திருமகள் நம்மை நாடி வருவாள்! அந்நாள், இந்த உலகமே நம்மைப் பார்த்து வியக்கும்!

    இதற்குச் சான்றாக எத்தனையோ பேர் நம் கண்முன்னே வாழ்ந்தார்கள்! வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சிலரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

    1. சிவாஜிராவாக இருந்த ஒரு சாதாரண மனிதருக்குள் இருந்த திறமைதான் ஒரு சிறந்த நட்சத்திர நடிகரான ரஜினிகாந்தை உருவாக்கியது.

    2. குண்டுராவாக மத்திய அரசுப் பணியில் இருந்தவரை, அப்பணியை உதறித் தள்ளிவிட்டு, அவருக்குள் இருந்த திறமைதான், ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரான நாகேஷைக் கண்டெடுத்தது.

    3. எண்பதுகளின் ஆரம்பத்தில், ஒரு பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இன்ஃபோஸிஸ் எனும் நிறுவனத்தை, அமெரிக்கச் சந்தை முதல் கொண்டு சேர்த்தது,

    நாரயணமூர்த்தி எனும் தனிமனிதனின் திறமைதான்!

    எடுத்துக்காட்டுகள் அடுக்கிக் கொண்டே போகலாம்; ஏன் உங்கள் அருகாமையிலேயே எத்தனையோ மனிதர்கள், தங்கள் திறமைகளை ஏதோ ஒரு வகையில் மேம்படுத்தி,

    தங்கள் வாழ்வில் ஒளி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே, நாம் செய்ய வேண்டுவன எல்லாம், நம்முள் இருக்கக் கூடிய சிறந்த வேட்கை என்ன என்பதைத் தன்னாய்வு செய்வதும்,

    அதைச் செயல்வடிவம் கொடுத்து, ஒரு இலக்கினை நிர்ணயித்து, அதன் வழி பயணத்தைத் தொடர்வதும்தான்!!

    வழிகள் பல இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுக்கக் கூடிய இடத்தில் இருப்பது நாம்தான் என்பதை அறிந்து

    நகர்வோம் சிகரத்தை நோக்கி!

    தொடரும்………………

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 17

    –சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

     

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நமது பூமி

     

    நமது பூமி
    ____________________________

    மதக்குருவை ஒரு வாலிபன் புராதனச் சடங்கு ஒன்றைப் பற்றி விளக்கும்படி வினாவும் போது உபதேசி “மதத்தை நம்பிக்கையோடு நோக்காதவன் கண்கள் வெறும் மூடுபனி மூட்டத்தைத்தான் காணும்” என்று அவனைக் கடிந்துரைப்பார்.
    கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
    ____________________________

    புவியே என்னே உன் நறுமணம் !
    ____________________________

    புவியே ! நீ பலவீன மானவள் !
    பலம் உடையவள் ! பணிவு உள்ளவள் !
    நிமிர்ந்து நிற்பவள் !
    நீ வளைந்து கொடுப்பவள்
    நீ அடம் பிடிப்பவள்
    மனத் தெளிவும்
    இனத்தின் ரகசியம் அறிந்தவள்.
    ஆறுகளைத் தேடிச் சென்றேன்
    சிற்றோ டைகளின் பின்சென்றேன்
    நிலத்தின் ஏற்றத்தில்
    நகர்ச்சியில்
    நித்திய நிலைப்பகம்
    நெறி கூறக் கேட்டேன் !
    குன்றுகளில்
    நின் பாடல்கள் எதிரொலித்தன
    யுக யுகமாய் !
    மலைச் சரிவுகளில் கேட்கும்
    குடிவாசி மற்றோர் குடிவாசியை
    விளிக்கும் குரல் !
    ____________________________

    நீயே நித்தியத்தின்
    வாயும் அதன் இதழ்களும் !
    நீயே காலத்தின்
    விரல்களும் நூல்களும் !
    நீயே வாழ்வின்
    புதிரும் தீர்ப்பும் ஆகும்!
    நின் வசந்த காலம்
    எழுப்பி விட்ட தென்னை !
    ஊதுபத்தி போல் நறுமணம்
    ஊர்ந்திடும்
    நில வெளியில்
    இழுத்துச் சென்றாய் என்னை !
    ____________________________

    வேனிற் காலப் பருவத்தில்
    வேர்வை சிந்தும்
    உழைப்பின் பலனைக் கண்டேன் !
    இலையுதிர் காலத்தில்
    திராட்சைக் கொடிப் பந்தல்களில்
    ஒயின் மதுவாக
    உன் குருதி ஓடுவதைக்
    கண்டேன் !
    உன் குளிர் காலம்
    என்னைத் தூக்கிச் செல்லும்
    உன் படுக்கைக்கு !
    பனித்தளம்
    உனது தூய்மையைக் காட்டும் !
    மீண்டும் வசந்த காலத்தில்
    தோன்றும் நறுமணம் !
    கோடையில் அளவற்ற
    கொடை உள்ளம் உனக்கு !
    அதைப் போல்
    இலையுதிர் காலத்திலும் நீயொரு
    பெருங் களஞ்சியம் !
    ____________________________

    Share
  • பாட்டு… ஒரு பாட்டு …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    பாட்டு.. ஒரு பாட்டு…

    பாட்டு ஒரு பாட்டு3புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைக் கதாநாயகனாக வைத்து 16 திரைப்படங்களைத் தயாரித்த பெருமை தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் அவர்கள் ஒருவருக்கே உண்டு. கருப்பு வெள்ளையில் – தாய்க்குப் பின் தாரம் என்னும் திரைப்படத்தில் ஆரம்பித்து, வண்ணத்தில் – நல்ல நேரம் திரைப்படத்தில் நிறைவுற்ற அத்தனைப் படங்களிலும் ஒரு அழகிய எம்.ஜி.ஆர். ஃபார்முலா காணலாம். ஆம்… ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும் ஒரு சண்டைக்காட்சி, ஒரு பாடல் என்று விறுவிறுப்பு குறையாத திரைக்கதையோடு தடாகத்தில் பூத்த தாமரைகளாக பெரும்பாலும் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அமைத்த இசையில் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா குரல்களில் காலவெள்ளத்தைத் தாண்டி இன்றும் கரைபுரண்டு ஓடிவருகிற இன்பநதியாக இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

    பாட்டு ஒரு பாட்டு2ஏனைய பாடல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தப் பாடலுக்கு உண்டு.கள்ளமில்லாப் புன்னகையை ஏந்திவரும் கன்னி மலராக சரோஜாதேவி, அன்றுமலர்ந்த ரோஜாப் பூவாக எங்கள் எம்.ஜி.ஆர். திரையில் எழுதியிருக்கும் காதல் சித்திரம்தான் இப்பாடல்! ஒரு முறையல்ல, பல முறை ஒலிக்கும் ஒரு சொல் … பாட்டு. அது என்ன பாட்டு என்பதைச் சூசகமாக வார்த்தைகளில் விளையாடி வரைந்தளித்திருக்கிறார் கவியரசு கண்ணதாசன். கேட்டுக் கேட்டுக் கிறங்கவைக்கும் இசையை இனிமையாகச் சேர்த்திருக்கிறார் கே.வி.மகாதேவன். ஒரு அரை நூற்றாண்டாகத் தமிழ்த்திரையில் ஆட்சிபுரிந்த குரல்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா!

    அப்படி என்ன பாட்டு? கவிதைக்குள் பொருள் வைத்து,பாடல் முழுவதும் இன்பச் சுவை சேர்த்து கவிஞர் கைவண்ணம் காட்ட …

    இசையில் ஒரு தேனருவி வழிகிறது இங்கே….இங்கே…

    ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

    ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
    எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு
    ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
    எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு

    தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
    தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
    தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

    தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
    தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு
    தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெற்ற
    தந்தையையும் மதிப்பதில்லை ஓரே ஒரு பாட்டு

    பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
    பாய் விரித்துப் படுக்கும் போதும் ஓரே ஒரு பாட்டு
    பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு

    உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
    உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை
    நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு நம்
    இருவருக்கும் தெரிந்தது தான் காதலென்னும் பாட்டு
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு காதல்
    பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
    ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

    காணொளி: https://www.youtube.com/watch?v=cAjFHn8V9q8

    https://youtu.be/cAjFHn8V9q8

    Share
  • சிரிப்பதிகாரம் (7)

    கிரேசி மோகன்

     ”உன்னைப்பார்த்(து) இந்த உலகம் சிரிக்கட்டும்,
    எண்ணைவார்த் துத்தீ எரிதல்போல், -முன்னை
    சிரித்தீசன் முப்புரம் சாம்பலில் மூழ்த்த,
    விரித்தனன் நெற்றி விழி”

     

    சிரிங்க”சிலர்சிரிப்பார், வேறுசிலர் சிந்திப்பார், ஆனால்,
    கலர்சிரிப்பே கண்ணுக்கு கூலிங், -மலர்சிரிப்
    போடுசேர்ந்து சிந்திக்கும் புத்தி மணத்திடும்,
    நாடு மணக்க நகை”
    ”தாய்சிரிக்கத் தானழுது சேய்பிறக்கு மாற்போல்நீ,
    வாய்சிரிக்க, சிந்திக்க வைநெஞ்சே, -பாய்விரிக்கும்
    மூப்பில் வருமே முனகல்தான், புன்னகைக்
    காப்பில் இருக்கக் களிப்பு”

    ”கழுதையின் பாலைக் குடித்திடல் வேண்டாம்
    அழுத மகன்வாய் அகண்டு, -பொழுதுபோக,(ராத்திரி)
    கண்ணயர்ந்த வேளையில், காட்டிடுவார் கண்ணபிரான்
    புன்னகைக்க உம்மாச்சி பூ”

    Share