(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 32

கருவில் உருவானது

அவனுக்கு அமைந்த நண்பர்களிடம் உள்ள திறமையைப் பார்த்து அவன் வியந்திருக்கிறான். அதுவும் கிராமத்தில் இருந்து கொண்டு, அந்தக் காலத்தில் இருக்கும் குறைந்த விஞ்ஞான வசதிகளை வைத்துக் கொண்டு அவனுக்கு நண்பர்கள் சிலர் தங்களது திறமையை எப்படி வளர்த்துக் கொண்டார்கள் என்று இன்றும் நண்பர்களுடனும், குடும்பத்தார்களுடனும் சொல்லிப் பெருமை கொள்வான். அப்படி அமைந்த நண்பர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ்.வி. என்ற எஸ்.வெங்கடராமன், சங்கர் என்ற ஆ.சங்கரநாராயணன். இவர்கள் இருவரையும் அவன் குறிப்பிடக் காரணம், அவர்களது திறமையை அவர்களது அருகில் இருந்தே கவனித்தவன் என்ற காரணத்தினால்தான்.

எஸ்.வி. என்ற எஸ். வெங்கடராமன்

“சீதாராமன் அப்பளம் டெப்போ” நிறுவனர் சீதாராமன் ஐயர், திருமதி. மீனாக்ஷி என்ற சம்பு மாமியின் மூத்த மகன் வெங்கடராமன். அவனும், நண்பர்களும் வெங்கடராமனை “எஸ்.வி.” என்றே அழைப்பார்கள். அவனைவிட “எஸ்.வி.” மூன்று வயது மூத்தவன். அவன் லக்ஷமீபதி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது எஸ்.வி.யும் அங்கு படித்துக் கொண்டிருந்தான். ஒரு வருடம் பள்ளி விழாவுக்கு எஸ்.வி. திருடன் வேடமும், ஆர்.எஸ். என்ற ரமணி பெண் வேடமும் ஏற்று ஒரு நாடகம் நடந்தது. அதற்கு வசனங்கள் சொல்லிக் கொடுத்து இயக்கியவர் “சீதாராமன் சார்”. அந்த நாடகத்தின் ஒத்திகையின் போது அவனும் அங்கிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். போலீஸ் காரர்களால் தேடப் பட்டுக் கொண்டிருக்கக் கூடிய திருடன் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியை சந்திக்கும் காட்சியை சீதாராமன் சார் விளக்கிக் கொண்டிருந்தார்.

திருடன்: (தன் மனைவியைப் பார்த்து) ” …உஸ்ஸ்…சப்தம் போடாதே..கூச்சல் போட்டாயோ குத்திவிடுவேன் ” என்று சொல்ல அதற்கு மிகவும் பயந்த குரலில் அந்தத் திருடனின் மனைவி,” நாதா..பதட்டப் படாதீர்கள்…இந்தாருங்கள் இந்தப் பாயாசம் குடித்து ஆயாசம் தீருங்கள்” என்று சொல்லுவாள்.

இந்தக் காட்சிக்கு எஸ்.வி.க்கு கருப்பு நிறத்தில் ஒட்டு தாடி வைத்து, அவனது கையில் ஒரு அட்டைக் கத்தியும் கொடுத்திருந்தார்கள். அந்தக் காட்சியில் மெதுவாகப் பூனையைப் போல தன்னுடைய கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து எஸ்.வி. பேசிய அந்த வசனமும், அதன் உச்சரிப்பும் இன்றும் அவனுக்குப் பசுமையாக இருக்கிறது. எஸ்.வி.க்கு இயற்கையாகவே விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறமை இருந்தது. அவன் நன்றாக விளையாடுவான், நீந்துவான், நகைச்சுவையாகப் பேசுவான், நன்றாகவே படிக்கவும் செய்வான். எஸ்.வி.யுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது. அவன் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் P.U.C. படித்துக் கொண்டிருக்கும் பொழுது எஸ்.வி. மூன்றாம் ஆண்டு B.Sc. படித்துக் கொண்டிருந்தான். எஸ்.வி.க்கு பௌதிகத்தில் (Physics) மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே “எஸ்.வி.” தொலைகாட்சிப் பெட்டிக்கான உதிரி பாகங்களை வரவழைத்து, தானே ஒரு தொலைகாட்சிப் பெட்டியைத் தயாரித்து நண்பர்களுக்குக் காட்டினான். அப்பொழுது நம் நாட்டில் தொலைக்காட்சி வராத காலம். எஸ்.வி.யின் பெற்றோர்கள் இது போன்ற திறமைகளை நன்றாக ஊக்குவித்தனர். எஸ்.வி.யின் திறமையைப் பார்த்தது அவனுக்கும், நண்பர்களுக்கும் பெருமையாக இருக்கும்.

எஸ்.வி.தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், எஸ்.வி.யின் நண்பர்கள் சங்கர், வெங்காச்சம் போன்றவர்களுக்கு B. A .R . C. (மும்பையில்) நிறுவனத்தில் இருந்து வேலைக்கு நேர்காணல் வந்ததில், சங்கர் மாத்திரம் தேர்வாகி விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்துவிட்டதாகவும், மற்றவர்களுக்கு அதில் வேலை கிடைக்கவில்லை என்றும் எஸ்.வி.யின் சகோதரன் குட்டிச் சங்கர் அவனிடம் சொன்னான். அந்த சமயத்தில் நண்பர்களுடன் ஆற்றங்கரைக்குக் குளிக்கச் செல்லும் பொழுது, கிராமத்துப் பெரியவர் ஒருவர் .” என்ன ரமணி ஒனக்கு வேலை கிடைக்கலியா” என்று ஏளனாமாகக் கேட்ட பொழுது,” ஒய்..நான் என்ன ஒங்க வீட்டுலையா சோறு தின்னறேன்..எங்கப்பாதானே சோறு போடறார்..ஒம்ம வேலையப் பாத்துட்டு பேசாமப் போங்கோ ” என்று எஸ்.வி. பளிச்செனச் சொன்னான். இப்படி வம்பு பேசும் ஆட்களுக்கு எஸ்.வி. உடனுக்குடன் “டோஸ்” விடுவதை அவனே பலமுறை பார்த்திருக்கிறான். அவனது திறமைக்கேற்ற வேலை B.S.N.L.ல் கிடைத்து பெங்களூருக்குச் சென்று விட்டான்.

1987ம் வருடம் ஆதிவராகப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எஸ்.வி. கல்லிடைக்குறிச்சிக்கு வந்திருந்தான். அப்பொழுது கோவிலுக்காக சில மரங்களைக் கொண்டு வருவதற்காக மணிமுத்தாறு காட்டுப் பகுதிக்கு ஒரு ஜீப்பில் சிலர் கிளம்பினார்கள். எஸ்.வி., ” கண்ணா இவாளெல்லாம் போய் மரம் எடுத்துண்டு வரட்டும் நாம ரெண்டுபேரும் அந்தக் காட்ட ரசிக்கலாம்..நீயும் வா ” என்று அவனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது “அருவித் தண்ணீர் ஏன் இப்படி ஜில்லுனு இருக்கு தெரியுமா?” என்று கேட்டு ,”அத்தனை உயரத்தில் இருந்து விழும் பொழுது ஒரு நிலையில் அது “zero degree”க்குக் கீழே போய்விடும். அப்பொழுது தண்ணீர் ஜில்லுனு ஆகிவிடும்.” என்று ஒரு ஆசிரியரைப் போலச் சொல்லிக்கொடுத்தான். மேலும் “ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்..சர்வதேவ நமஸ்கார ஸ்ரீ கேசவம் ப்ரதிகச்சதி” என்ற சந்தியாவந்தனத்தின் மந்திரத்தைச் சொல்லி “கடல் நீர் ஆவியாகி, மழைமேகமாகி, மலைதனில் மழையைப் பொழிந்து இப்படி அருவியாக விழுந்து ஆறாக ஓடி மீண்டும் சமுத்திரத்தில் கலப்பதுபோல, யார் என்ன பெயரைச் சொல்லி அழைத்தாலும் எல்லாப் பெயரும் அந்த ஒருவனையே சேரும்” என்ற கருத்தையும் சொன்னான். “ஆழிமழைக் கண்ணா” என்ற பாசுரத்திலும் ஆண்டாள் இந்த தத்துவத்தைத் தொட்டுக் காட்டுகிறாள் என்று ஆன்மிகமும், இலக்கியமுமாக அவனோடு எஸ்.வி. அந்த மணிமுத்தாறு மலையில் வைத்துப் பேசினான்.

நீண்ட இடைவெளிக்குப் பின் எஸ்.வி. கல்லிடைக்குறிச்சிக்கு ஒரு விடுமுறை நாளில் வந்திருந்தான். அன்று ஊரில் கோலாட்டப் பல்லக்கு உற்சவம் நடத்தது. எஸ்.வி. அந்த ஊர்வலத்துடன் எல்லாத் தெருவுக்கும் கூடவே வந்தான். தெருவில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை எல்லோரிடமும் தானே சென்று பேசிக் கொண்டிருந்தான். மறுநாள் மதியம் அவனும், எஸ்.வியும் குட்டிச்சங்கரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “கண்ணா…நீ எழுதின “இரவில் நனவில்” என்ற சிறுகதைத் தொகுப்பை சங்கர் தந்தான். படிச்சேன். நீ ரொம்ப நன்னா எழுதிருக்காய்..அதுவும் எல்லாக் கதையையும் நம்ம கிட்டேந்தே எடுத்து எழுதி இருக்கிறது எனக்குப் பிடிச்சிருந்தது …ஒன்னோடு கவிதைகளும் படிச்சிருக்கேன்..நீ ஒரு “கிரியேட்டிவ் ஆள்டா”..என்று அவன் தோள்களை தழுவிக் கொண்டு பாராட்டினான் எஸ்.வி. அந்த வார இறுதியில் எஸ்.வி. பெங்களூருக்குச் சென்று விட்டான். அதுதான் அவன், “எஸ்.வி.” யைக் கடேசியாகப் பார்த்தது.

ஒருவாரம் சென்ற பிறகு ஒருநாள் இரவு பத்து மணிக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு,” கண்ணா …நீ சங்கருக்கு வாங்கிகொடுத்திருந்த சுவாமி பரமார்தானந்தாவின் “சந்தியாவந்தனம்” விளக்க உரையைக் கேட்டேன். பிரமாதம். “சந்தியாவந்தனம் செய்யும் பொழுது தண்ணீர் இல்லாத பாலைவனத்தில் இருந்தோம் என்றால் கூட, அங்கிருக்கும் மணலையே கையில் எடுத்து அர்க்கியமாகக் கொடுக்கலாம்” என்று அவர் சொன்னதைப் போலவே என்னுடைய அப்பாவும் சொல்லியிருக்கிறார்”, எனக்கு அந்த உரையின் “ஒரு செட்” உடனே வாங்கி அனுப்பிவை. உன்னுடைய சிறுகதைகளைப் பற்றி என் கொழந்தைகளுக்குச் சொன்னேன். அவர்கள் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். நீ பெங்களூருக்கு என்னுடைய வீட்டுக்கு அவசியம் வா என்று “எஸ்.வி.” பேசினான். எஸ்.வி.யின் ரசனை அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எஸ்.வி. அழைத்தது போலவே அவன் அடுத்த மாதம் பெங்களூருக்குச் சென்றான். ஆனால் எஸ்.வி.யைத்தான் பார்க்கமுடியவில்லை. தனது நாற்பத்தொன்பதாவது வயதில் திடீரென வந்த இதயவலியால் இறந்து போய்விட்டான்.

எஸ்.வி. இறந்து இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும், ஒரு நாள் மதியம் அவனுக்கு நண்பனும், எஸ்.வி. யின் தம்பியுமான மூர்த்தி அவனைத் தொடர்புகொண்டு,” கண்ணா நீ..இப்ப ஆபீசில்தானே இருக்காய்” என்று கேட்டான். “ஆமாம்” என்று பதில் சொன்னான். ” ரமணியோடு ரெண்டாவது பொண்ணு “வசந்தா” வந்திருக்கா..ஒன்னப் பாக்கணும்னு ஆசைபடறா..கூட்டிண்டு வரேன்” என்றான். சரியாக இரண்டு மணிக்கு அவன் வேலை செய்கிற “காட்பரீஸ்” அலுவலகத்திற்கு மூர்த்தியும், எஸ்.வி.யின் இளைய மகள் வசந்தாவும் வந்தார்கள். அவனும் மூர்த்தியும் பேசிக் கொண்டிருந்தார்கள். எஸ்.வி.யின் பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்னம்மா சொக்கியமா இருக்கயா” என்ற அவனது கேள்விக்கு அந்தப் பெண் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்கரையே” என்றான் அவன்.

“ஒங்களப் பத்தியும், ஒங்களோடு கதைகள், கவிதைகளைப் பத்தியும் எங்கா அப்பா எங்களோட ரொம்ப நேரம் பேசிண்டிருந்தார்..சில கதைகளப் படித்தும் காட்டினார்…ஒங்களோட எழுத்து எங்களுக்கு பிடித்திருந்தது. அப்பா உங்களப் பத்திச் சொன்னதுலேந்து உங்களப் பாக்கணும் போல இருந்தது. அதுதான் ஒங்களப் பாக்கணும்னு சித்தப்பாட்டச் சொன்னேன். …இப்ப பாத்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று அவனுக்கு நண்பன் எஸ்.வி. என்கிற ரமணியின் பெண் வசந்தா சொன்னது அவன் காதுகளில் “எஸ்.வி.”யின் குரலாகவே ஒலித்தது.

நண்பன் எஸ்.வி.க்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் மீனாக்ஷி என்ற அகிலா. இரண்டாவது மகள் வசந்தா. இரண்டு பேருமே அப்பாவின் பெயர் போற்றும் புத்திசாலிக் குழந்தைகளாக அமெரிக்காவிலும், ஜெர்மனியிலுமாக வாழ்கிறார்கள். எஸ்.வி. இன்றும் அவர்களை வாழ்த்திக் கொண்டே இருக்கிறான்.

01.10.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

படம்  உதவி  குட்டி சங்கர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *