புலவர் இரா. இராமமூர்த்தி.

வாழ்க்கையின் இனிமை இளமைக்காலக் காதலால் மேலும் இனிக்கும்! இயல்பாகக் காதலுணர்வை வெளிப்படுத்தி, தம் இணையுடன் இசைந்து வாழ்வதைப் பற்றித் திருவள்ளுவரைப் போல் எவருமே கூறியதில்லை! புலவர்கள் அனைவரும் காதலின் உயர்வை மிகவும் அழகாகப் பாடியுள்ளனர்!

”காதல் போயின் காதல் போயின்
சாதல்!சாதல்!சாதல்!”

என்று மகாகவி பாரதியாரும்,

”காதல் அடைதல் உயிரியற்கை – அது
கட்டில் அகப்படும் தன்மை யதோ?”

என்று பாவேந்தரும் பாடியுள்ளனர்! இந்தக் காதல்தான் உண்மையான இன்பத்தைத் தருகிறது என்று திருவள்ளுவரே கூறுகின்றார்!

கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள!(1101)

என்ற திருக்குறள், ” ஐந்து புலன்களின் வழியே பெறத்தக்க இன்பங்கள் அனைத்தையும் தன் இல்லக்கிழத்தியிடம் மட்டிலுமே உள்ளது!” என்று கணவன் பாராட்டிக் கூறுவதைத் திருவள்ளுவர் கூறுகிறார்! இவ்வாறு கூறியமையால் பிற பெண்டிரிடத்து இவ்வளவு சிறந்த இன்பத்தைப் பெற இயலாது என்பதை வள்ளுவர் மிகவும் நுட்பமாக உணர்த்துகிறார்! இதனால், கணவனும் மனைவியும் இணைந்து பெறும் இல்லற இன்பமே உண்மையான தகுதி வாய்ந்த இன்பம் என்பது புலனாகின்றது!

முறையாகப் பெறத்தக்க காமவின்பம், பேதைமை மற்றும் புல்லறிவால் முறையை மீறி உருவாதலும் உண்டு. இந்தக் காமம் தம் மனைவியிடத்தும், விலைமகளிரிடத்தும், மாற்றான் மனையாளிடத்தும் முறைமை கருதாமல் பரவும் தன்மை உடையது! அதனாலேயே திருவள்ளுவர், பெண்வழிச் சேறல் , வரைவில் மகளிர், பிறனில் விழையாமை என்ற மூன்று அதிகாரங்களில் இந்த முறையற்ற காமத்தைக் கண்டிக்கிறார்! தன் மனையாளிடம் உருவாகும் முறையற்ற காமம் , தன்னால் அடக்கப்பெறும் தன்மை உடைய மனைவியிடம், தானடங்கி அவள் ஆசைக்கேற்ப நடந்து கொள்ளும் அடிமைத் தனத்தைக் கணவனிடம் சேர்க்கும்! உடலாசையின் தீய விளைவாகப் பிறன் மனையாளிடத்தும், விலை மகளிரிடத்தும் சென்று சேரும் இழிதகைமை ஒருவனிடம் உண்டாக்கும். காமத்தால் தூண்டப் பெற்ற ஒருவன் பிறன் மனையாளிடம் இச்சை கொள்வதை நாலடியார் பெரிதும் கண்டிக்கிறது!

”அச்சம் பெரிதால் அதற்கின்பஞ் சிற்றளவால்
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையாம் – நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடையார்!”

”புக்க விடத்தச்சம் போதரும்போ தச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறனில் புகல் ”

ஆகியவை நாலடியார் பாடல்கள்! அவ்வாறே பெண் ஒருத்தியும் காமவேட்கை மீதூரத் தவறு செய்ததைப் பட்டினத்தாரும் பாடியிருக்கிறார்!

”கைப்பிடி நாயகன் தூங்கையி லேஅவன் கையைஎடுத்து
அப்புரந் தன்னில் அசையாமல் முன்வைத்து அயல்வளவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்து உறங்குவளை
எப்படி நான்நம்பு வேன்இறை வாகச்சி ஏகம்பனே!”

இது பட்டினத்தார் பாடல்! தன்னிடம் அதிகாரபலம் இருப்பதால் இழிந்த காமம் உடையவனாய் இந்திரன் அகலிகையிடம் நடந்து கொண்ட செயலைத் திரு வள்ளுவரே ,

”ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி!”(25)

என்று பாடுகிறார்! அதே இந்திரன் அமிசமாய்ப் பிறந்த வாலியும் சுக்ரீவன் மனைவியை நயந்தான் என்கிறது வான்மீகம்! வரபலமும் உடலாற்றலும் பெற்ற இராவணன், வேதவதியையும் அவள் மறுபிறப்பாகிய சீதையையும் விரும்பினான்! அந்த இழிவான காமம் பேரரசனாகிய அவனை இராமன் அம்புகளுக்கு இரையாக்கியது! இதையும் திருவள்ளுவர்,

”தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று!”(274)

என்கிறார் இவற்றையெல்லாம் பார்க்கும்போது அறத்துப்பாலின் அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை , கூடாவொழுக்கம் ஆகியவற்றின் வழியே தகாத காமத்தை விளக்கியவர், மீண்டும் பிறனில் விழையாமை என்ற அதிகாரத்தை எழுதியது, இத்தகைய இழிந்த காமம் இல்லறத்தானுடன் துறவறத்தானையும் பற்றி வீழ்த்தும் தன்மையது என்பதை விளக்குகின்றது! பொருட்பாலில் பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர் ஆகியவை இடம்பெற்றது, ஆட்சி, அதிகாரம், செல்வம் இவற்றைப் பெற்றவரையும் முறையற்ற காமம், பற்றிப் பிணித்துக் கீழே வீழ்த்தும் என்பதைக் குறிக்கிறது!

நமக்கு இன்றும் வியப்பைத்தரும் செய்தி என்னவென்றால் தனிமனிதனின் பிறன்மனை நாடும் தீய காமம், ஒரு சமுதாயத் தீமையாக எப்போது மாறியது? கள் , சூது, விலைமகளிர் ஆகிய பொதுத் தீமைகள் வேறு; பிறனில் விழைதல் என்ற தனிமனிதத்தீமை வேறு! இதனைப் பொதுத்தீமையாக எண்ணி ஓர் அதிகாரம் படைத்ததன் நுட்பம் எனக்குப் புரியவில்லை! கள்ளை யாவரும் உண்பர்; சூதினை எல்லாரும் விரும்புவர்; ஆனால் எல்லாரும் பிறன்மனை நாடுவோரா? அனைவரும் பிறன்மனை நாடுவோரே என்ற எண்ணமே, கள்ளுண்ணாமை, சூதாடாமை, ஆகியவற்றுடன் பிறனில் விழையாமையையும் சேர்த்து எண்ண வைத்தது; இந்த நிலை ஏனென்று எனக்குப் புரியவில்லை! தனி மனிதனின் தீமை பொதுத்தீமையாக மாறியது எப்போது? யாரேனும் விளக்குவார்களா?

காமம் பொதுவாகப் பற்பல தீமைகளைச் செய்து விடும்! அது மனிதனின் மனத்தைக் கெடுக்கும்; பழி பாவச்செயல்களைக் கூசாமல் செய்ய வைக்கும்! முறையற்ற காமம், கொலையையும் செய்யத் தூண்டும்! அது உடல்நலத்தினைக் கெடுத்துப் பெரிய நோய்களை உருவாக்கிவிடும்! இதனை இக்காலத்தார் ஆராய்ந்து ”எய்ட்ஸ்” என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு பற்பல நாட்டு மக்கள் பலியாகின்றனர் என்று கண்டறிந்து இதனை எதிர்த்துப் போராடித் தடுப்பதற்கு சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்கின்றனர்!

இங்கு நாம் இப்போது பார்க்கப் போகும் திருக்குறளின் புதிய பொருள், நம்மை வியப்புக்கு உள்ளாக்குகின்றது! எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் முயற்சிகளுள் முதன்மையானது இந்தியக் கலாச்சாரமாகிய ”ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன்!” என்ற கற்புநிலையை மனித குலம் மேற்கொள்ள வேண்டும், என்பதாகும்! இதனை அன்றே திருவள்ளுவர் கூறியுள்ளார் என்பது வியந்து மகிழ்தற்கு உரியதாகும்! அவர், ”எளிய இல்லற வாழ்க்கையின் இன்பங்களை முறையாகத் துய்க்கின்ற ஒருவன், கடினமான துறவு நெறியை நாடிப் போய் என்ன நலத்தைப் பெறப்போகிறான்? ” என்ற பொருளில் ஒரு குறட்பா எழுதியுள்ளார் ! மிகவும் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், இதே குறட்பா, உயிர்க்கொல்லி நோய் பற்றிய விழிப்புணர்வையும் அளிக்கின்றது என்பதுதான்! இனி, அந்தக் குறட்பாவைப் பார்ப்போம்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப்பெறுவ தெவன்? (46)

என்ற திருக்குறள் மேம்போக்காகத் துறவு நெறியைக் கடைப்பிடிப்பதன் கடினத்தை உணர்த்தினாலும், இல்லறநெறிக்குரிய இன்பத்தை இல்வாழ்வில் துய்க்காமல், வேறு தீய வழிகளில் முறையற்ற காமத்தை அனுபவிக்க விரும்புகிறவன் எதனைப் பெறுவான்? ”உயிர்க்கொல்லி நோயைத்தான் பெறுவான்!”
என்கிறது அக்குறட்பா! இப்போது அக்குறட்பா அளிக்கும் புதிய பொருள் புலனாகின்றதல்லவா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *