ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 18
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நமது பூமி
நமது பூமி
____________________________
“பலவீனம், கவலை ஆகியவற்றின் மெய்ப்பாடை விட்டுவிட்டு நமது கிழக்காசியர் வற்புறுத்துவதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.”
“எனது அன்புக்குரிய நாடு பாடுவது மகிழ்ச்சிக்காக இல்லாது, மக்களிடையே பயக் கொந்தளிப்பை உண்டாக்க என்னும் போது நான் வேதனைப் படுகிறேன்.”
கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
____________________________
புவியே உனை நாடினேன்
____________________________
ஒருநாள் தெளிவான இரவின்
அமைதியில்
உனைக் காண வெளியில் வந்தேன்,
என் ஆத்மாவின் கதவையும்
ஜன்னலையும் திறந்து,
இதயத்தில்
இச்சையும் மோகமும் மிகுந்து !
விண்ணை நோக்கி
புன்னகை புரியும்
விண்மீன்களைப் பார்த்த
வண்ணம் நீ
இருந்தாய் ! என்
கால்கட்டுச் சங்கிலியை
கழற்றி எறிந்தேன் !
____________________________
என் ஆத்மா குடியிருக்கும் இடம்
உன் சூழ்வெளி ! அதன்
காரணம் நான் அறிந்தேன் !
என் ஆத்மாவின் ஆசைகள்
ஒன்றி யுள்ளன
உன் ஆசைகளில் !
என் ஆத்மாவின் அமைதி
ஓய்வெடுக்கும்
உன் அமைதியில் !
விண்மீன்கள்
உன் உடலில் தெளித்திடும்
பொன் தூசிகளில்
புதைந்திருக்கும் ஆத்மாவின்
பூரிப்பு !
____________________________
ஒருநாள் இரவு வானம்
சாம்பல் நிறத்தில்
இருந்த போது
களைத்துப் போனது
என் ஆத்மா !
கவலை யுற்றது
என் ஆத்மா !
உன்னை நாடி வந்தேன்
வெளியில் !
பூத வடிவில் தோற்றினாய்
நீயே !
புயல்களை ஆயுதமாய்ப்
போர்த்திக் கொண்டி ருந்தாய் !
கடந்த காலத்தோடு
நிகழ் காலம்
சண்டை இட்டது !
பழையவை இடத்தைப்
புதியவை
பற்றிக் கொண்டது !
பலவீனரைத் துரத்திக் கொண்டு
வாழ்ந்து வந்தார்
வலுத்தவர் !
____________________________