நடராஜன் கல்பட்டு

மறு நாள் ஆறரை மணிக்கே நான் உபநிஷத் வகுப்பு நடக்கும் இடத்தை அடைந்து முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டேன். சரியாக 7-00 மணிக்கு சுமார் 25 முதல் 28 வயது நிரம்பிய, வெள்ளை வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்த இளைஞர் ஒருவர் மேடையை வந்தடைந்தார். (நேரம் காத்தல் என்றால் என்ன என்பதை சின்மயா மிஷனிடம்தான் கற்க வேண்டும்.)

எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம்.

கம்பீரமான, ஆனால் அதே சமயம் சாந்தமான குரலில் அவர் பேச ஆரம்பித்தார், “உங்களில் எவ்வளவு பேர் இதற்கு முன் சின்மயா மிஷன் வகுப்புகளில் பங்கேற்றுக் கொண்டுள்ளீர்கள்? நான் அளிக்கப் போகும் முன்னுரை உங்கள் பதிலைப் பொருத்து இருக்கிறது” என்றார் அவர்.

உடனே நான் எழுந்து, “பிரும்மச்சாரி அவர்களே இந்தக் கூட்டத்தில் நான் ஒருவன் மட்டுமே இதற்கு முன் சின்மயா மிஷன் வகுப்புகளில் பங்கேற்காதவன் என்று இருந்தாலும் கூட தயவு செய்து முழுமையான முன்னுரையை அளியுங்கள்” என்று கேட்டேன்.

அவரும், “சரி” என்று சொல்லித் தன் பேச்சை ஆரம்பித்தார்.

“நேற்றைய தினசரியை நீங்கள் திறக்கிறீர்கள். அதனுள்ளே ஒரு துண்டுப் பிரசுரம். ‘பிரும்மச்சாரி ஹரிதாஸ், அணு பௌதீக சாஸ்திரத்தில் தங்கப் பதக்கம் பெற்ற மேல் நிலைப் பட்டதாரி, கீதை பற்றிய உரை நிகழ்த்துகிறார் இன்று மாலை 6-00 மணியளவில் ……… அரங்கில். நாளை காலை 7-00 மணி முதல் உபநிஷத் வகுப்பு ஆரம்பம். சின்மயா மிஷன், விஜயவாடா’.

அணு விஞானம் பற்றிப் படித்தவர் ஆன்மீகம் பற்றி என்ன பேசப் போகிறார் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும் நான் என்று நினைத்து வீட்டை விட்டுக் கிளம்ப ஆரம்பிக்கிறீகள் நீங்கள். அப்போது பல நாட்களாக ‘வருகிறேன் வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்த உங்கள் நண்பர் தன் மனைவி குழந்தையுன் வருகிறார் உங்கள் வீட்டிற்கு. அவரை வரவேற்று உள்ளே செல்கிறீர்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தமின்றி பதிலளிக்கிறிர்கள். உங்கள் உடல் அங்கிருந்த்தே யொழிய மனம் இங்கு இருந்தது. இதுதான் இன்று நம் எல்லோரிடமும் ஏற்படும் மனதுக்கும் உடலுக்குமான போராட்டம். இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி இதை நமக்குச் சொல்லித் தருவதுதான் சனாதன தர்மம் என்றழைக்கப்படும் நமது இந்து மதம். இந்த அறிவுரைகள் வேத உபநிஷத் மந்திரங்களாகவும், புராண இதிகாசங்களாகவும் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கின்றன.”

இந்த வார்த்தைகளை அவர் சொன்ன போது என் உடலின் ஒவ்வொரு ரோமமும் எழுந்து நின்றது என் உடலில். அன்று முதல் அடுத்த பத்து நாட்களுக்கு முதல் வரிசையில் நான்.

முதல் நாள் பேசிய பேச்சில் எனக்கு எழும் சந்தேகங்களை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டு செல்லுவேன் பிரும்மச்சாரியிடம் கேட்க வேண்டும் என்று.

என் மனத்தில் எழுந்த சந்தேகங்கள் அவருக்கு எப்படித் தெரியுமோ. நான் கேட்காமலேயே அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை முதலில் தந்து விட்டுப் பின் தன் அன்றைய பேச்சினைத் துவக்குவார்.

எல்லா நல்ல விஷயங்களுமே ஒரு நாள் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. பத்து நாட்கள் சொற்பொழிவும் முடிந்தது.

“இந்த நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புவோர் மேடைக்கு வந்து பேசலாம்” என்று அறிவித்தார்கள்.

அன்று வரை மேடை ஏறிப் பேசாத நான் அந்தப் பத்து நாட்களில் அனுபவித்த ஆனந்தத்தைப் பற்றியும் நிகழ்ச்சி முடிவடைந்ததால் என் மனத்துள் உண்டான வருத்தத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் பேசினேன்.

பத்து நாட்களிலும் பக்தர்கள் சிலர் பழங்களைக் கொண்டு வந்து பேச்சாளர் கையில் கொடுத்து விட்டு நமஸ்காரம் செய்து விட்டுச் செல்வார்கள். முதலில் நமஸ்கரிப்பவருக்கு விபூதிப் பிரசாதம் கிடைக்கும், பின் வருபவர்களுக்கு முன்னவர் கொடுத்த பழங்கள் கிடைக்கும். எதையும் உள்ளே எடுத்துச் செல்வதில்லை. கடைசீ நாளன்று பிரும்மச்சாரி இரண்டு ஆப்பிள் பழங்களை எடுத்துத் தன் தோள் பைக்குள் போட்டுக் கொண்டார். நான் நினைத்தேன் அவர் ரயில் பயணத்தின் போது சாப்பிடுவதற்காக எடுத்து வைத்துக் கொள்கிறார் போலும் என்று.

கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கலைந்தது. பிரும்மச்சாரி, “நான் நடராஜனுடைய வண்டியில் வருகிறேன்” என்றார்.

“ஐந்து நிமிஷத்தில் வருகிறேன்” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் எனது மனைவியையும் அப்போது என் கூட வசித்து வந்த இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு அரங்கிற்குத் திரும்பினேன். அன்று வரை நான் அவர்களை அங்கு அழைத்துச் சென்றதில்லை.

பின் ரயில் நிலையத்தில் வண்டி கிளம்பும் போது பிரும்மச்சாரி தன் ஜோல்னாப் பைக்குள் கையை விட்டு இரண்டு ஆப்பிள்களையும் எடுத்து என் மகள்களிடம் கொடுத்தார்.

அவருக்கு எப்படித் தெரிகிறது என் மனத்துள் நடப்பவை எல்லாம்? எப்படித் தெரிகிறது அவருக்கு அவரை வழி அனுப்ப என்னுடன் வசித்து வந்த இரு பெண்களும் ரயில் நிலையம் வருவார்கள் என்று? அதிர்ச்சியில் ஆழ்ந்தேன் நான்.

சின்மயா மிஷனோடு எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு பற்றியும் நான் எடுத்துக் கொண்ட பங்கினைப் பற்றியும் எழுதும் முன் நான் வாழ்க்கையில் கண்ட, கேள்விப் பட்ட சில போலி ஆன்மீகவாதிகள் பற்றி எழுத நினைக்கிறேன். அதன் பின்னர் மீண்டும் திரும்புகிறேன் சின்மயா மிஷனுக்கு.

(தொடரும்……)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *