சுரேஜமீ

 

திறமை

 apeak

உலகில் அறிவும், திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் வெற்றி காண்பது என்பது மிகவும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், திறமையால் மட்டுமே வென்றவர்கள்தான், வரலாறு படைக்கிறார்கள். அப்படியென்றால், வாழ்வின் வெற்றிக்கு அறிவு தேவையில்லையா எனும் கேள்வி எழலாம். அதற்கு பதில் காண்பதற்கு முன், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அனைத்து வெற்றிக்கும் அடிப்படையாக இருப்பது அறிவுதான்!

ஆனால், அந்த அறிவை ஒவ்வொரு மனிதனும், தன் சூழ்நிலைக்கு ஏற்ப, தன்னுடைய லட்சியத்தை நோக்கிச் செலுத்தி, செயலில் வெற்றி காணச் செய்வதுதான்

‘திறமை’ என்பதை வெற்றியாளர்களின் சரித்திரம் நமக்குச் சொல்கிறது.

ஆக, திறமை என்பதே அறிவில் ஒளிந்து இருப்பதுதான் என்பதும், அதை ஒவ்வொருவரும், அவரவர் முயற்சியாலும், பயிற்சியாலும், தீவிர முனைப்பாலும், வெளிக்கொணர்ந்து, சாதனைகளுக்குச் சாதகமாக்கிக் கொளல் வேண்டும் எனவும் அறிதலே திறமையின் முதல் படி!

சரி, அறிவுக்கும், திறனுக்கும் உள்ள நுட்பத்தைத் எப்படி தெரிந்து கொள்வது? திறனை அறிவது எப்படி? திறனை வளர்ப்பது எப்படி? திறனைச் சோதித்துக் கொள்வது எப்படி? அதனால் வெற்றி காண்பது எப்படி?

அறிவோமா?

மனதை வெற்றிடமாக்குங்கள்….சிந்தையை ஒருமுகப்படுத்துங்கள்….சில விதைகள் இங்கே தூவப்படலாம்…முளைப்பதற்கு உங்களிடம் முனைப்பு இருக்கட்டும்!

அறிவு என்பது ஒரு செயலில் நமக்கு உள்ள நுணுக்கங்களையும், அது சார்ந்த அடிப்படைக் கூறுகளையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும்,

நூல்களின் மூலமாகவோ, ஊடகங்களின் மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ பெறுவதாக இருக்கக் கூடியது.

மாறாகத் திறமை என்பது ஒரு செயலில் நமக்கு இருக்கக் கூடிய விருப்பத்தைப் பொறுத்து, அது சார்ந்த அறிவைப் பெற்று, அந்த அறிவின் அடிப்படையில் ஒரு கனவை உருவாக்கி, அந்தக் கனவை நினைவாக்க, நாம் நாளும் செய்யும் தவம் என்றால் மிகையாகாது.

அறிவுகூடச் சிலவேளை மரபணு சார்ந்த விஷயமாகவோ, அல்லது பிறப்பின் அடிப்படையில் வருவதாகவோ கூட இருக்க வாய்ப்புண்டு! ஆனால், திறமை நிச்சயமாக, ஒருவரின் சொந்த முயற்சியில்தான் வர இயலும் என்பதே, அதன் தனித்தன்மை!

ஆக, அத்தகைய முயற்சிக்கு வித்தாக பல காரணிகள் இருக்கலாம். குடும்பச் சூழல், நண்பர்கள், சமூகம், இருப்பிடம், நாடு என எது வேண்டுமானலும் உங்களுக்குள் ஒரு நெருப்புப் பொறியை ஏற்படுத்திவிட்டு, உங்களின் திறமையைச் செதுக்கத் தூண்டலாம்!

மீண்டும் மீண்டும் நினைவின் ஆழத்தில் பதியுங்கள்…….

‘திறமை’ என்பது தனி மனிதனின் மட்டற்ற முயற்சியால் மட்டுமே விளையக் கூடியது!

நாளும் வளர்க்கும் திறமைதான் நாளைய வரலாறு ஆக முடியும்!

அத்தகைய திறமையை வளர்க்க உதவும் காரணிகளை அடையாளம் காணலில்தான், நாளைய வெற்றியின் சரித்திரம் அடங்கி இருக்கிறது.

ஆர்க்கிமிடிஸ் எனும் தத்துவ ஞானி என்ன சொல்கிறார் தெரியுமா?

நான் நிற்பதற்குத் தேவையான இடத்தையும் ஒரு நெம்புகோலையும் என்னிடம் கொடுங்கள். இந்த பூமியையே நகர்த்திக் காட்டுகிறேன் என்கிறார்!

இதைவிட உங்கள் முயற்சிக்கு வித்தாகக் கூடிய வார்த்தைகள் வேறென்ன இருக்க முடியும்?

திறனைப் பெறுவதற்குப் பல காரணிகள் இருந்தாலும், அதனை வளர்ப்பதற்குத் தேவையானது

திடமான எண்ணமும், தீவிர நம்பிக்கையும், தொடர்ந்து செயலாற்றுவதும், பிழைகளைத் திருத்தித் தடைகளைக் களைந்து, இலக்கினை நோக்கிப் பயணிப்பதேயாம்!

சரி திறனைக் கண்டுகொண்டோம்….பெருக்குகின்றோம்….பின் என்ன செய்யவேண்டும்? நம்மிடம் உள்ள திறனைச் சோதிக்க வேண்டாமா? எப்படிச் சோதிப்பது?

எந்த வேலையானாலும், அதில் தன்னை விட யாரும் சிறப்பாகச் செய்ய இயலாதவாறு ஒரு செயல் இருக்குமானால்,

நீங்கள் திறமைசாலி என்பதில் ஐயம் துளிகூடத் தேவையில்லை!

தாம் எடுத்துக்கொண்ட செயலில், தம்மை விட யார் திறமைசாலியோ, அவர்களோடு போட்டியிட்டுத் தன்னை மேம்படுத்தித் தன் திறனை அவ்வப்போது மெருகேற்றிக் கொள்ளக் கற்றுக் கொண்டால்,

நம் திறமையை வியந்து வெற்றித் திருமகள் நம்மை நாடி வருவாள்! அந்நாள், இந்த உலகமே நம்மைப் பார்த்து வியக்கும்!

இதற்குச் சான்றாக எத்தனையோ பேர் நம் கண்முன்னே வாழ்ந்தார்கள்! வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சிலரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

1. சிவாஜிராவாக இருந்த ஒரு சாதாரண மனிதருக்குள் இருந்த திறமைதான் ஒரு சிறந்த நட்சத்திர நடிகரான ரஜினிகாந்தை உருவாக்கியது.

2. குண்டுராவாக மத்திய அரசுப் பணியில் இருந்தவரை, அப்பணியை உதறித் தள்ளிவிட்டு, அவருக்குள் இருந்த திறமைதான், ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரான நாகேஷைக் கண்டெடுத்தது.

3. எண்பதுகளின் ஆரம்பத்தில், ஒரு பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இன்ஃபோஸிஸ் எனும் நிறுவனத்தை, அமெரிக்கச் சந்தை முதல் கொண்டு சேர்த்தது,

நாரயணமூர்த்தி எனும் தனிமனிதனின் திறமைதான்!

எடுத்துக்காட்டுகள் அடுக்கிக் கொண்டே போகலாம்; ஏன் உங்கள் அருகாமையிலேயே எத்தனையோ மனிதர்கள், தங்கள் திறமைகளை ஏதோ ஒரு வகையில் மேம்படுத்தி,

தங்கள் வாழ்வில் ஒளி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே, நாம் செய்ய வேண்டுவன எல்லாம், நம்முள் இருக்கக் கூடிய சிறந்த வேட்கை என்ன என்பதைத் தன்னாய்வு செய்வதும்,

அதைச் செயல்வடிவம் கொடுத்து, ஒரு இலக்கினை நிர்ணயித்து, அதன் வழி பயணத்தைத் தொடர்வதும்தான்!!

வழிகள் பல இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுக்கக் கூடிய இடத்தில் இருப்பது நாம்தான் என்பதை அறிந்து

நகர்வோம் சிகரத்தை நோக்கி!

தொடரும்………………

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *