Blog

  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 11

    –சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

     

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     ஓ இரவே !

     

    ஓ இரவே

    __________________________

    நீயே பரிபூரண அமைதி !
    சொர்க் கத்தில்
    புத்துயிர் பெற்ற ஆன்மாக்கள்
    மர்மங்களை வெளியாக்கும் !
    பயனுக்கும் வியப்புக்கும் இடையே
    பகற் பொழு தானது
    ஆத்மாக் களை
    ஆட்டு விக்கும் ஒரு கொந்தளிப்பு !
    நீயே நீதிக் களம் ! அது
    இழுத்துச் செல்லும்
    பலவீனர் கனவுகள்
    உறங்கும் குகைப் பொந்துக்கு !
    வலுவானவர் நம்பிக்கை யாவும்
    ஐக்கியம் அடைவதற்கு !

    ____________

    நீயே கருணை வேந்தன் !
    ஏழைகள் இதயத்தைக் கவர்ந்து
    நேச ஆட்சிக்குள்
    நெஞ்சங் களைப் புகுத்துவோன் நீ !
    காதலர் உள்ளத்தின் இச்சைகள்
    அடைக்கலம் அடையும் உனது
    உடைக்குள் !
    அப்பாவி மக்கள்
    உதிர்க்கும் கண்ணீர்த் துளிகள்
    உனது பாதங்களை மூழ்க்கி விடும்
    பனித்துளிகளாய் !
    பசும்புல் வனாந்திர
    நறுமணம் கமழும்
    உந்தன் உள்ளங்கையில்
    அந்நியர் தமது
    தாகத்தைத் தீர்க்க எளிதாய்ப்
    பாதை காண்பார் !

    “குருதி ஆறுகள் ஆகிவிடும்
    ஒருநாள்
    ஒயின் மது ஓடும் நதிகளாய் !
    பனித்துளி களாய்ப்
    புவித்தளம் மீது பொழிந்த
    கண்ணீர்த் துளிகள் விளைவிக்கும்
    ஒருநாள்
    நறுமணப் பூக்களை !
    இருக்கை விட்டுப் பிரிந்த
    ஆத்மாக்கள்
    ஒருங்கு கூடிப்
    புதுத் தொடு வானாய் அமையும்
    பொழுது புலர்ச்சியில் !
    நியாயத்தையும்,
    நீதியின் காரணத்தையும்
    அடிமைச் சந்தையில்
    விலை கொடுத்து
    வாங்கியதாய் உணர்வான்
    மனிதன் !
    தனக்குள்ள உரிமைக்காக
    ஊழியம் செய்து செலவழிப்பவன்
    ஒருபோதும் தான்
    இழப்ப தில்லை யெனப்
    புரிந்து கொள்வான்.”
    கலில் கிப்ரான். (The Giants)

    __________________________

    “எதேட்சை அதிகாரத்தை எதிர்த்து ஒரு குழுவினர் ஏழைகளுக்கு விடுதலை அளிக்க அரசியல் சீர்திருத்தங்களைப் புகுத்த வருகிறார். தீப் பறக்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, அவர் ஊசிபோல் குத்தும் பதிப்புகளை வெளியிட்டுப் புரட்சிக் கருத்துகளை முரசடிக்கிறார். ஆனால் ஒரு மாதம் கழித்து நம் காதில் விழுவதென்ன ? அரசாங்கம் அக்குழுத் தலைவரைச் சிறையில் போட்டிருப்பது அல்லது அவருக்கு அரசாங்கப் பெரிய பதவியை அளித்து அவரது வாயை மூடியிருப்பது. அதற்குப் பிறகு மூச்சுப் பேச்சில்லை !”
    கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

    __________________________

    Share
  • கண்ணன் எனக்கொரு பிள்ளை …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    ‘கண்ணன் எனக்கொரு பிள்ளை 

    நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை’

    Kannan Enakkoru Pillaiசூலமங்கலம் பாடும் பாடல். ‘ஏன்’ திரைப் படத்தில், இசைப் பேரறிஞர் டி.ஆர். பாப்பா அமைத்த இசையில் கண்ணன் ராதை கோலாகலம்! புல்லாங்குழலெடுத்து போதைமுத்தம் தான் கொடுத்து விட்டால் மயங்காதார் யாரிங்கே? ஆடலும் பாடலும் இல்லையென்றால் அகிலத்தில் ரசிக்க என்ன இருக்கிறது? கண்ணன் பிறந்த நாள், தொடர்ந்து கண்ணதாசன் பாடல்களில் ஒன்று உள்ளம் கொள்ளைகொள்ளத் தரலாமே என்று எண்ணியபோது சிந்தனையில் வந்த பாடலிது.

    திரையில் தோன்றும் நட்சத்திரங்களாய் லட்சுமி – ரவிச்சந்திரன். இன்பங்களின் ஒட்டுமொத்தக் குத்தகையை எடுத்துக் கொடுக்கும் இசையமைப்போடு ஒரு சுப லாலி. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத வார்த்தைகளில் கவிஞரின் சொல்லோவியம்! லீலா விநோதங்களில் காணும் ‘பா’வங்கள் அணிவகுக்கும் கோலங்கள்!

    இருவராய் இருந்தாலும் ஒருவராய் வாழ்தலே இன்பம் என்கின்ற வரம்தரும் வார்த்தைகள் வந்து விழுகின்றன கண்ணதாசனுக்கு.

    Kannan Enakkoru Pillai3இவனுக்கு இவளென்ற கருத்து – அந்த
    இறைவன் எழுதிய எழுத்து
    இடமுண்டு நேரங்கள் உண்டு- என்
    இதயமே பொறுமைகொள் இருவரும் ஒன்று

    இதயத்தைப் பொறுமைகொள் என்று சொல்லும் அழகு, கவிதையின் சிறப்பு மட்டுமல்ல அங்கே கன்னியின் சிறப்பும் கூட.

    மடியினில் நான் வைத்துச் சிரிக்க – அவன்
    மயக்கத்தில் மேலாடை பறிக்க
    இடையினை ஓர் கையில் வளைக்க – அந்த
    இன்பத்தையல்லாமல் வேறெதை நினைக்க

    கவிதையின் வாயிலாக இன்பங்களை அள்ளித்தருகிறார் பாருங்கள். கடவுளாய் இருந்தாலும் மனிதனாய் பிறப்பெடுத்தால் மயக்கத்தில் விழத்தான் வேண்டுமோ, நியதியும் இங்கே காணுங்கள்.

    கண்ணன் எனக்கொரு பிள்ளை – நான்
    கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
    கண்ணன் எனக்கொரு பிள்ளை – நான்
    கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
    கண்ணன் எனக்கொரு பிள்ளை

    மன்னன் சிரிப்பொரு முல்லை – அதன்
    மணமே ஆனந்தக் கலைகளின் எல்லை (கண்ணன்)

    மெல்லிதழ் தொடும் அவன் கரங்கள் – அந்த
    வேளையில் ஆயிரம் குணங்கள்
    சொல்லவொண்ணாதன சுகங்கள் – அவன்
    தொடுவதும் அணைப்பதும் எத்தனை விதங்கள் (கண்ணன்)

    மடியினில் நான் வைத்துச் சிரிக்க – அவன்
    மயக்கத்தில் மேலாடை பறிக்க
    இடையினை ஓர் கையில் வளைக்க – அந்த
    இன்பத்தையல்லாமல் வேறெதை நினைக்க (கண்ணன்)

    இவனுக்கு இவளென்ற கருத்து – அந்த
    இறைவன் எழுதிய எழுத்து
    இவனுக்கு இவளென்ற கருத்து – அந்த
    இறைவன் எழுதிய எழுத்து
    இடமுண்டு நேரங்கள் உண்டு – என்
    இதயமே பொறுமைகொள் இருவரும் ஒன்று (கண்ணன்)

    காணொளி: https://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender

    ”கண்ணபிரான், காயாம்பூ வண்ணபிரான், வெண்ணைமண்
    தின்னபிரான், நற்கீதை சொன்னபிரான், -பின்னமுறா,
    முன்னவனாம், தென்மதுரை அன்னையவள் அண்ணனையே,
    எண்ணவரும் ஏகாந்தம் இங்கு”….

    ”திருக்கண் ணமுது, திரள்கின்ற வெண்ணை,
    பருப்புதயிர் சாதம், பழங்கள் -உருக்குலைந்து,
    அண்டாவில் சாறு, அதிரசம் சீடைமுறுக்கு,
    உண்டேனுன் நாமம் உரைத்து”….கிரேசி மோகன்….

    Share
  • ராஜ சியாமளா தண்டகம்

    crazy

    ———————————————

    நிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி
    விலாநோகச் சேலை வலம்வரும் சின்ன
    இலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள்
    கலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….(1)

    சிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும்
    கரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும்
    கரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும்
    தரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….(2)

    மேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு
    தேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு
    நாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு
    பாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….(3)

    ஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள்
    மாலையுற்ற கழுத்து மாலோலன் சங்கம்
    சேலையுற்ற தனங்கள் ஞானச்சீ தனங்கள்
    தாளையொற்றிப் பணிவீர் தாயளிப்பாள் குணங்கள்….(4)

    போகுமிடமெல்லாம் புகழ் உமக்குச் சேரும்
    ராகுகாலம் கூட மிகரம்யமாக மாறும்
    ஆதரவிக்கிங்கென்றும் அவளருளே போதும்
    ஆதலினால் அம்மா அபயமென்று ஓதும்….(5)

    சாமளையின் பாதச் சிலம்புனக்கு காப்பு
    கோமளையிரு காதின் குண்டலங்கள் யாப்பு
    நாமலைய வேண்டாம் நாலாயிரம் பாட
    தாமரையாள் தருவாள் நாமுகந்து நாட….(6)
    கல்வியவள் அருளால் கலவியாகப் படியும்
    வல்வினைகள் மாறி விளையாட்டாய் முடியும்
    செல்வமுனைத் தேர்ந்து சுவிகாரம் கொள்ளும்
    அல்மதியம் மாலை ஆதவனாய் ஒளிரும்….(7)

    ஸ்திரபுத்தியோடு ஸ்திதப் ப்ரஞ்ஞனாக
    பெருபக்தி கொண்டு பாரதிக்கு ஏக
    அறுபத்தி நான்கு ஆயகலை தம்மை
    குருவொத்து அளிப்பாள் வரசித்தி அம்மை….(8)

    ராணி லலிதாங்கி ராஜ சியாமளா
    வாணி மாதங்கி வாக்கிற் கதிபதியே
    பூநீ மகரந்தம் பொய்கை வண்டும்நீ
    நான்நீ ஆகிடயென் நாவில் அமர்வாயே….(9)
    மகரயாழை மடியினில் நீட்டி
    அகர உகர மகரம் மீட்டி
    சிகரமேரு சிரத்தினில் வீற்ற
    சகலகலா வல்லியைப் போற்று….(10)
    —————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    கண்ணிநுண் தாம்பினால், கட்டுண்ட காரணம்,
    அன்னையின் அன்பினாலா!, அல்லது -கண்ணனே,
    ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு,
    ஆயாசம் ஆனதா லா! ….

    மண்ணுண்டு , மாதா மயங்கிட, மாம்பழக்
    கன்னங்கள் உப்பக் கதவுவாய்க்குள், -அன்னன்டை,
    உள்ள மகோன்னத உன்னதங்கள் காட்டிய,
    புள்ளேபுள் ளூறும் பரம் ….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டம்பர் 7, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள்

    சங்கர் மகாதேவன் - 1

     

    சென்னை தியாகராய நகரில் உள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பு கடந்த வாரம் (ஆகஸ்ட் – 30) ஏழை எளிய குடும்ப் பெண்களுக்கு தையல், கணினி மற்றும் அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி அளித்து, அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கி, அதிகம் படித்திராத எளிய குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளது. இத்தகைய சமூகப்பணிகளுக்குத்  தூண்டுகோலாய் இருந்து வந்துள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனரும் மற்றும் அமைப்பின் அறங்காவலருமான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்களின் சமூகப்பணியைப் பாராட்டி அவரை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.

    இதுவரை நான்கிற்கும் மேலான தொழிற்பயிற்சி நிலையங்கள், பத்திற்கும் மேலான பள்ளிமாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி என சமூகத் தொண்டு செய்துள்ளது “உதவும் உள்ளங்கள்” நிறுவனம். இந்த அமைப்பின் குழுவினர்கள், தன்னார்வலர்கள் பலரை ஒருங்கிணைத்தும், நன்கொடைகள் சேகரித்தும் தேவையுள்ளோர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். “உதவும் உள்ளங்கள்” சேவை நிறுவனத்தின் நிறுவனரான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள் முன்னாள் வங்கி ஊழியர். இவர் 2000 ஆம் ஆண்டு உதவும் உள்ளங்கள் அமைப்பைத் தோற்றுவித்து தமது குழுவினர் துணையுடன் சமூகப்பணி செய்து வருகிறார். சமீபத்தில் வங்கிப்பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சமூகப்பணிக்கு முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார்.

    சங்கர் மகாதேவன் - 2

    தற்பொழுது நானூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, உதவும் உள்ளங்கள் அமைப்பு சமூகப்பணியாற்றி வருகிறது. உதவும் உள்ளங்களின் சேவைகள் பொதுவாகக் கல்வி உதவி, மருத்துவ உதவி, வாழ்வாதார தொழிற்பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அடங்குகிறது.

    சங்கர் மகாதேவன் - 3
    மருத்துவ உதவி

    சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துடனும், பாளையங்கோட்டையில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து திருல்வேலியில் புற்றுநோய்க்கான மருத்துவப்பணிகளிலும் உதவும் உள்ளங்கள் அமைப்பு பங்காற்றி வருகிறது. இதனால் புற்றுநோயினால் பாதிக்கப்பட பதினறாராயிரம் பேர் ஆரம்பக்கட்ட நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார்கள். தொழுநோயாளிகளுக்கு உதவித்தொகை என்று மருத்துவ உதவிகளும் உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

    சங்கர் மகாதேவன் - 5
    கல்வி உதவி

    சுனாமியில் பாழடைந்த பள்ளிகளுக்குக் கட்டிட சீரமைப்பு உதவி, கழிப்பறையற்ற பள்ளிகள் ஒருசிலவற்றிற்குக் கழிப்பறை கட்டும் உதவி, மாணவர்களுக்கு மேற்கல்வி பயில உதவித்தொகையளித்தல், தேவையான குழந்தைகளுக்கு காலையுணவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், பள்ளிப்பாடங்களில் பயிற்சி, நேர்முகத் தேர்வு பயிற்சி வகுப்புகள், அவர்கள் வேலைவாய்ப்புக்கு உதவி, பெண்களுக்குக் கணினி, தையல், அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி எனக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி உதவிகளும், உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

    சங்கர் மகாதேவன் - 4
    தொழிற்பயிற்சி

    இத்தகைய சமூகப்பணிகளுடன், 1998 ஆம் ஆண்டுமுதல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு “ஆனந்த தீபாவளி’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, சென்னையில் உள்ள 18 இல்லங்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு ஆகியவையும் பரிசாக வழங்குவதை உதவும் உள்ளங்கள் அமைப்பு செய்து வருகிறது.

    சங்கர் மகாதேவன்
    ஆனந்த தீபாவளி நிகழ்ச்சி

    இந்திய செஞ்சிலுவை அமைப்பு, இரத்த வங்கி, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தொடர்ந்து பங்களித்து வரும் திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள், துன்பத்தில் உழலும், உதவும் தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்ற எளிய கொள்கையின் அடிப்படையில் உதவும் உள்ளங்கள் அமைப்பைத் துவக்கி, அதன் மூலம் இன்று பல்லாயிரம் மாணவர்களும், பெண்களும், நோயாளிகளும் பலன்பெறும் வண்ணம் சேவை அமைப்பினை வழி நடத்திச் செல்கிறார்.  அவரது சமூகப்பணியைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்பு கொள்ள:
    Udhavum Ullangal
    No.77, 1st Main Road,
    C.I.T Nagar, Nandanam,
    Opp FIAT Car Showroom
    Chennai – 600 035
    Phone numbers:
    +91-44-24344743
    +91-9444194743

    Email: info@udhavumullangal.org.in, uu1sankar@gmail.com
    http://www.udhavumullangal.org.in/
    https://www.facebook.com/udhavumullangal

    தகவல்கள் மற்றும் படங்கள் உதவி:
    உதவும் உள்ளங்கள் வலைத்தளம்
    மற்றும் …
    http://www.dinamalar.com/news_detail.asp?id=1334519

    Share
  • படக்கவிதைப் போட்டி (29)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11940169_881805541873646_1024827662_n

    62059640@N05_rகாயத்ரி அகல்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.09.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • வேண்டுதல் வெண்பா – 36ம் ஆண்டு நிறைவு நாள்!

    ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்ற முதுமொழியின் இலக்கணமாகத் திகழும் கிரேசி கிரியேசன்சு குழுவினருக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    இன்று கிரேசி கிரியேஷன்ஸ் 36 ஆண்டுகள் நிறைவுபெற்று, 37ல் அடியெடுத்து வைக்கிறது….இதற்கு காரணம் கிரேசி மோகனின் எழுத்தோ இல்லை மாது பாலாஜியின் நடிப்போ அல்ல….கூட்டுக் குடும்பமாக நாங்கள் இருந்ததுதான்….Being Together தான் காரணம்….ஒன்று பட்டால் உண்டு ஆண்டு….

    crazy

    வேண்டுதல் வெண்பா….
    ———————————————-
    ஆண்டுகள்முப் பத்திஆ(று), ஆச்சு அரங்கேறி,
    வாண்டுகள் ஆனோம் வயோதிகமாய், -நீண்டு,
    உலகளந்த உத்தமா, உற்சாகம் தந்து,
    அலகிலா ஏற்றம் அளி ….கிரேசி மோகன்….

    crazy0

    சாக்லேட் கிருஷ்ணா வேண்டுதல் வெண்பாக்கள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 179

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    கண்ணகியின் பணிவுரை

    “அறவோர்க்கு உணவளித்தல்
    அந்தணர் போற்றுதல்
    துறவிகளை எதிர் கொள்ளுதல்
    பழங்காலம் முதல் இல்லறத்தினர் செய்துவரும்  kannaki
    பெருமைவாய்ந்த அறமாகிய
    விருந்தினரை வரவேற்று உபசரித்தல் ஆகிய
    நல்லறங்களை இழந்து
    மிகவும் வருத்தமுற்றிருந்தேன்.

    இங்ஙனம் துன்புற்ற என்னைக் காணப்
    பெருமை வாய்ந்த உம் தாயோடு,
    அனைவரிடமும் நற்பெயரும்
    பொருள் தேடுவதில் மிகச் சிறந்த முயற்சியும்
    மன்னனுக்கு நிகரான பெருமையுடைய
    மாசாத்துவானும் ஆகிய
    உம் தந்தையும் வருவர்.

    நீவிர் எம்முன் இல்லாது இருக்கும் வருத்தத்தை
    அவர்முன் காட்டாமல்
    மறைத்துச்  சிரித்து நடிப்பேன்
    அதனை உணர்ந்த அவர்கள்
    அன்பு கலந்த அருளுரைகள் கூறி
    என் பொறுமையான நிலையை மிகவும் பாராட்டுவர்.

    அவர்கள்முன் வருத்தம் காட்டாமல்
    நான் புன்னகைத்தாலும், அது
    உம் பிரிவால் ஏற்படும்
    மனத்துன்பத்தையும் மெய்வருத்தத்தையும்
    வெளிப்படுத்தி நிற்கும்
    அப் பொய்யான புன்னகையைக் கண்டு
    அவர்கள் மனம் வருந்திச் செல்வர்.

    இவ்வாறு உம் பெற்றோர் கலங்கும் வண்ணம்
    முறையற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டீர்களே!
    என்னதான் ஆனாலும்,
    நான் உங்கள் வார்த்தைகளை ஒருபோதும் மீறாத
    உறுதியான எண்ணத்துடன் வாழ்ந்திருப்பவள்;
    எனவேதான் தாங்கள் கூறியதும்
    உடனே புறப்பட்டு வந்தேன்”
    என்று கூறினாள் கண்ணகி.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 71 – 80
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • தந்தை பெரியார்!

    -பாவலர் கருமலைத் தமிழாழன்

    விடியாத   இரவுக்கு   விடியல்   தந்து
                –விரிகதிராய்   எழுந்திட்ட   வீரச்   சிங்கம்
    மடியாதோ   எனயேங்கி   மாய்ந்த   மக்கள்
                –மனக்குமுறல்   தீர்த்திட்ட   ஞான   வித்து  Thanthai_Periyar
    பிடியாதோ   எனும்மயலில்   பின்னால்   நின்றோர்
               — பிடறிதள்ளி   முன்நிறுத்திய   புரட்சி   வேந்தன்
    படியீதோ   எனத்தன்னைத்   தந்து   தாழ்ந்தோர்
                –பயணத்தைத்   துவக்கிவைத்த   பண்பின்   முத்து!

    நீவந்த   பின்னால்தான்   எங்கள்   வீட்டில்
               –நின்றிருந்த   பழமைகளும்   எரியக்   கண்டோம்
    நீவந்த   பின்னால்தான்     எங்கள்   நெஞ்சில்
                –நியாயத்தின்   நினைவுகளும்   எழும்பக்   கண்டோம்
    நீவந்த   பின்னால்தான்   இந்த   நாட்டில்
                –நின்றமூடம்   முடமான   காட்சி   கண்டோம்
    நீவந்த   பின்னால்தான்   தாழ்ந்தி   ருந்தோர்
                –நிமிர்ந்துதலை   நடக்கின்ற   துணிவு     கண்டோம்!

    சிந்தனையைத்     தூண்டிவிட்டே   அறிவால்   எந்தச்
                –சிறுவினையும்     செய்கவென்றே   முழக்க   மிட்டு
    இந்நிலத்தில்   பகுத்தறிவுப்   பாதை   வெட்டி
                –இருக்கின்ற   சூத்திரர்க்கே   உணர்வை   யூட்டி
    மந்தையென   வாழ்ந்தோர்க்கு   மதியை   ஈந்து
                –மறுமலர்ச்சி   வரலாற்றைப்     புதிதாய்   ஆக்கித்
    தந்திட்ட   பெரியாரை   நாம்ம   றந்தால்
                –தலைநிமிர்ந்த   நாம்மீண்டும்   தாழ்ந்து   போவோம்!

     

    Share
  • உன்னையறிந்தால் …….. (21)

    நேர்மையும் வாய்மையும்

    நிர்மலா ராகவன்

    உனையறிந்தால்
    கேள்வி: என் தந்தை என்னைப்பற்றி (வயது 17) புகழ்ச்சியாகப் பிறரிடம் கூறுகிறார். அது எல்லாமே உண்மையாக இருக்காது என்று தெரிந்தும், அவர்களும் ஏன் அதை நம்புவதுபோல் நடிக்கிறார்கள்?

    பதில்: உங்கள் தந்தைக்குத் தன் குடும்பத்தைப்பற்றி எல்லாரும் நல்லவிதமாக நினைக்கவேண்டும் என்ற ஆதங்கம். அனேகமாக அவரது நண்பர்களும் இப்படி இருப்பதால், மற்றவருக்குத் தலைகுனிவு ஏற்படாதவகையில், அவர் கூறும் பொய்யைப் பெரிதுபடுத்துவதில்லை.

    இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், தாயோ, தந்தையோ இப்படி ஒன்றைப் பத்தாக்கிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, `நம் பெற்றோர் சொல்வதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும்,’ என்று பிள்ளைகள் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். பொய் பேசுவது தவறில்லை என்ற குணம் பெரியவர்களிடமிருந்து படிந்துவிடும். பெற்றோர் எவ்வழி, பிள்ளைகள் அவ்வழி.

    குழந்தைகள் உண்மையே பேசவேண்டும், நேர்மை தவறாது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டாமா? பெற்றோரை நம்ப முடியாதவர்கள் அவர்களிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள மட்டும் வருவார்களா?

    சில பெற்றோர், `நான் உன் வயதாக இருந்தபோது..,’ என்று அளப்பார்கள், ஏதோ தாம் பெரிய ஹீரோவாக இருந்ததுபோல். பிள்ளைகளுக்கு அறிவும், உற்சாகமும் ஊட்டுவதாக நினைத்துக்கொண்டு.

    `அப்பாவோட கட்டுக்கதையையெல்லாம் யார் நம்புவார்கள்! சும்மா எங்களை ஏமாத்தற வேலை! மரியாதைக்காகக் கேட்டுவைப்போம்,’ என்று என் மாணவர்கள் என்னிடம் சொன்னபோது, எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    (நான் முதன்முதலில் அவர்கள் வகுப்புக்குள் நுழைந்ததும், மலாய் இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயத்துடன் என்னைப் பார்த்தார்கள். அது எனக்குப் புதிய அனுபவம். நான் சீன மாணவிகளுக்குத்தான் பெரும்பாலும் ஆசிரியையாக இருந்து வந்திருந்தேன்.

    அவர்களது பயத்தைப்போக்க, நான் நிறைய பேசினேன். மூன்றாம் நாள், `நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்!’ என்றான் ஒரு மாணவன். அது பாராட்டுதல்பொல் ஒலிக்கவில்லை. அவனுடைய கணிப்பு. அவ்வளவுதான். அவன் பிற ஆசிரியைகளின் வகுப்பில் வாயே திறக்கமாட்டானாம்.
    அதன்பின், தாமே வந்து, வந்து, தங்களைப் பாதிக்கும் விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள் அவர்கள். நான் படித்து அறிந்ததைவிட, என்னிடம் பயின்ற மாணவ மாணவிகளிடம் கற்றது அதிகம்).

    கலிகாலத்தில் நல்லவர்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாக, பொய்யும் பித்தலாட்டமும் செய்பவர்கள்தாமே செல்வந்தர்களாக இருக்கிறார்கள்? பிள்ளைகளை எதற்கு நல்லவர்களாக நடக்கப் பழக்க வேண்டும் என்று சில பெற்றோர் கேட்க நினைப்பது புரிகிறது.

    போலியாக வாழ்பவனுக்குள் எப்பவும் ஒரு பயம், நிம்மதியின்மை இருக்கும் — தன் செல்வம், பதவி, அதிகாரம், ஏதோ ஒன்று கைவிட்டுப் போய்விடுமோ என்று. Being good is its own reward.

    இருப்பினும், சிறு குழந்தைகளிடம் அவ்வப்போது பொய் சொல்லாதவர் யார்! நன்றாக அலங்கரித்துக்கொண்டு முக்கியமான ஓர் இடத்துக்குப் புறப்படுகையில், `நானும் வருவேன்,’ என்று அழும் குழந்தையிடம், `டாக்டரைப் பார்க்கப் போகிறேன்,’ என்று சொல்கிறாள் தாய். `நாளைக்கு உன்னையும் அழைத்துக்கொண்டு போகிறேன்,’ என்று சமாதானமும் சொல் கிறாள். எப்படியும், சிறிது நேரத்தில் குழந்தை அதை மறந்து விளையாட ஆரம்பித்துவிடும். இப்படிப் பொய் சொல்வதால் எந்த தீங்கும் விளைவதில்லை என்றே தோன்றுகிறது.

    தாம் ஏதாவது விஷமம் செய்துவிட்டு, குற்ற உணர்ச்சி பெருக, பெற்றோரிடம் வருவான். `தப்பு என்று புரிந்து, பயமும் உண்டானபின், தண்டனை எதற்கு!

    `போனால் போகிறது! தெரியாமல் செய்துட்டே!’ என்று அனுதாபம் காட்டினால், மனத்தளர்ச்சி ஏற்படும்போதெல்லாம் பெற்றோரை நாடத் தயங்கமாட்டார்கள்.

    எந்த வயதாக இருந்தாலும், பிள்ளைகள் செய்த செய்கையைப் பிறர்முன் அம்பலப்படுத்துவது கூடாது. அது அவர்களை அவமானப்படுத்துவதாகும். தனியாக அழைத்து, கண்டனம் இல்லாமல், அவர்கள் செய்தது ஏன் தவறு என்று சொல்லலாம்.
    சிறு, சிறு குற்றங்களையும் உடனுக்குடன் கண்டித்து, தண்டிக்க வேண்டும் என்று நினைத்து நடப்பார்கள் சில பெற்றோர். பெரிய குற்றங்கள் செய்யாதிருக்கும் வழியாம்!

    தாம் எதற்காகத் தண்டிக்கப்படுகிறோம் என்பதே புரியாத வயதில், `அப்பா அம்மாவிடம் சொன்னால்தானே அடி விழப் போகிறது!’ என்று.எதையும் மறைக்கப் பார்ப்பார்கள் சிறுவர்கள்.`

    ஆறு வயதுக்குமேல் ஆன குழந்தைகளிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும். வாரம் பூராவும் நன்றாகப் படித்தால், ஞாயிறன்று கடற்கரைக்கோ, மிருகக்காட்சி சாலைக்கோ அழைத்துப்போவதாக ஆசை காட்டியிருந்தீர்களா? அதன்படி நடந்தால்தான், நீங்கள் அடுத்தமுறை ஏதாவது சொன்னால் நம்பத் தோன்றும்.

    ஆனால், அன்று பேய்மழை என்று வைத்துக்கொள்வோம். காரணத்தை விளக்கி, ஒத்திப் போடுங்கள். இது சிறுவர்களுக்கும், அவர்களுடைய உணர்வுகளுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதை.

    ஒரு தாய், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தன் மகன் ஹாஸ்டலிலிருந்து விடுமுறைக்கு வீடு திரும்பியதும், அவனுடைய உடைமைகளைச் சோதனையிட்டு, அங்கு தட்டுப்படும் சிகரெட் டப்பாக்களை தூக்கி எறிவதாகப் பெருமையுடன் என்னிடம் சொல்லிக்கொண்டாள்.

    `வாராவாரம் இப்படி நடக்கும். அவனும் என்னை எதுவும் கேட்கமாட்டான். நானும் ஒன்றும் சொல்ல மாட்டேன்!’
    இப்படிப்பட்ட தாயை மகனால் மதிக்க முடியுமா என்று என் யோசனை போயிற்று. பெற்றோரின் நேரிடையான, அல்லது இத்தாய் செய்ததுபோல் மறைமுகமான எதிர்ப்பே தீய பழக்கங்கள் தொடர உந்துதலாக அமைகிறது. பெரியவர்கள் எதிர்த்தால், தாம் அவர்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெருமை பிள்ளைகளுக்கு எழும். தொடர்ந்து அதையே செய்வார்கள்.

    இன்னொரு பிள்ளை, `அம்மா! நான் சிகரெட் பிடிக்கிறேன்!’ என்று கூறினானாம், மனசாட்சியின் தொல்லை தாங்காது.
    தான் செய்வது தவறு என்ற உறுத்தலால்தானே அன்பான தாயிடம் அதைச் சொல்கிறான்! இது புரிந்து, நீண்ட பிரசங்கம் செய்யாது, `சரி. ஆனா, போதைப்பழக்கம் வேண்டாம்! பத்திரம்!’ என்றபடி அவள் நகர்ந்துவிட்டாள்.

    பல ஆண்டுகள் கழித்து, `நீங்க ரொம்ப மோசம்மா. அன்னிக்கு சிகரெட் பிடிக்கிறதா நான் சொன்னபோது நீங்க திட்டல. எனக்கு சுவாரசியமே போயிடுச்சு. விட்டுட்டேன்!’ என்றான் மகன் குறும்புச் சிரிப்புடன்!

    பதின்ம வயதினர் சிறுவர்களிலும் சேர்த்தியில்லை, வளர்ந்த பெரியவர்களும் இல்லை. பொருளாதார சுதந்திரம் கிடையாதுதான். இருந்தாலும், தம் உடலில் ஹார்மோன்களினால் ஏற்படும் மாற்றங்களைப்புரிந்துகொள்ள முடியாத நிலையில், `நான் இன்னும் சிறுகுழந்தை இல்லை!’ என்று முரண்டு பிடிப்பார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரம் கொடுத்து, தீய பழக்கங்கள், கெட்ட நண்பர்கள் ஆகியவற்றால் விளையக்கூடும் அபாயத்தை, வருமுன் காப்பது போன்று சொல்லித் தருவது நல்லது. எந்தப் பழக்கமும் முற்றியபின் மாற்றுவது கடினம்.

    நீங்கள் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குச் சரியாகப் பேசி, விளையாடிச் செய்திருந்தால், எதிர்த்துப் பேசாமல் கேட்டுக்கொள்வார்கள். பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலைத்திருக்கும்.

    Share
  • எவர்தான் கேட்டிடுவார்?

    -சக்தி சக்திதாசன்

    உயிரை இழக்கப் போகிறோம்
    எனும் உணர்வு
    பறித்திடும்
    வாழ்வுதனை எண்ணித்
    தகித்திடும் எதிர்காலக்
    கனவுகளோடு
    கடலேறிப் பயணமொன்று
    துடித்திடும்
    உயிர்கள் பலதை
    அடுக்கிட்ட கட்டைகள்
    போலவே
    நிறுத்திட்ட படகுகள்
    நீந்திடும் மறுகரை நோக்கி
    அடித்திடும் அலைகளின்
    வேகம் அறிந்திடுமா?

    அம்மனிதரின் நெஞ்சங்கூட்டில்
    அரித்திடும் வேதனைகளை
    முடித்திடாப் பயணங்களில்
    சரிந்திடும் படகுகளில்
    மூழ்கிடும் மனிதர்களில் எவர்
    சேர்ந்திடுவர் அக்கரையை?

    கூட்டமாய் அடுத்தொரு
    பயணத்துக்காய்ப்
    போரிடும் அகதிகள் கூட்டம்
    மறுபுறம்
    அகதிகளா இவர்கள்? இல்லை
    ஆசைமிக்க ஜரோப்பிய
    வாழ்வுக்காய் ஓடிடும்
    பேராசை கொண்ட
    மனிதர்கள் கூட்டமா? எனும்
    அறிஞர்கள் மகாநாடு!

    ஜயகோ!
    கடற்கரைதனில் ஒதுங்கிட்ட
    பிஞ்சொன்றின் முடங்கிய
    சடலத்துள் முடிந்துபோன
    ஓலத்தின் ஒலியை
    இவ்வோங்கார உலகில்
    எவர்தான் கேட்டிடுவார்?

     

    Share
  • நல்ல மனுஷா!

    -மீ.விசுவநாதன்

    எவ்வளவு நாளாச்சு
    ஒன்னப்பாத்து என்றார்
    எதிரில் வந்தவர்
    ஆமாம்…
    …நீங்க சௌக்கியமா?
    ரொம்ப சௌக்கியம்…
    வா நம்மாத்துக்கு…
    ஒரு காப்பி குடிச்சுண்டே பேசலாம்…
    நல்ல மனுஷா நீங்க…!
    ஆத்துக்காரி கொழந்தைகள
    அழைச்சுண்டு அவசியம் வா…
    விலாசம் சொல்லி நடந்தார்…
    போனேன்…
    விலாசம் இருந்தது அவரில்லை!

    அந்த வீட்டு வெளிச்சுவரில்
    ஒரு சுவரொட்டி விளம்பரம்…
    “செய்கூலி இல்லை
    சேதாரம் இல்லை
    வாங்க தங்கம் வாங்க”

    வாங்கிய நகையில்
    தங்கமே இல்லை!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(87)

    -செண்பக ஜெகதீசன்

    அற்றர்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
    பெற்றாள் தமியள்மூத் தற்று.  (திருக்குறள்-1007: நன்றியில் செல்வம்)

    புதுக் கவிதையில்…

    இல்லார்க்கு இல்லையெனச்
    சொல்லாமல் கொடுக்காதவனிடம்
    சேர்ந்த செல்வம்,
    அழகுமிகுந்த குமரிப்பெண்
    மணமாகாமல்
    மூதாட்டியாவது போன்றதே!

    குறும்பாவில்…

    அழகுக் குமரி மணமாகாமல்
    கிழவியாவதை ஒப்பதே,
    ஏழைக்கு உதவாதவன் செல்வமும்!

    மரபுக் கவிதையில்…

    இல்லை யென்று வருமேழை
    —இன்னல் தீரக் கொடுக்காமல்,
    செல்வம் சேர்த்து வைத்திருக்கும்
    —சீமான் கொண்ட பொருளெல்லாம்,
    பல்லது வீழும் பருவம்வரைப்
    —பருவ அழகெலாம் பாழாக,
    நல்லதோர் இல்லறம் இல்லாமல்
    —நலியும் கன்னிக் கொப்பாமே!

    லிமரைக்கூ…

    ஏழைக் குதவாதவன் செல்வம் பார்,
    எழிலது குன்றிட முதுமைவரை
    மணமது காணாத கன்னிக்கு நேர்!

    கிராமிய பாணியில்…

    குடுத்துவாழணும் குடுத்துவாழணும்
    காசிருக்கவன் குடுத்துவாழணும்,
    ஏழயளுக்குக் குடுத்துவாழணும்
    எப்பவுமே குடுத்துவாழணும்

    குடுக்காதவன் செல்வமெல்லாம்
    கொமரிப்பொண்ணு கதயாவும்,
    கொறயாத அழகிருந்தும்
    கலியாணம் ஆவாமலே
    கெழவியான கதயாவும்…

    குடுத்துவாழணும் குடுத்துவாழணும்
    காசிருக்கவன் குடுத்துவாழணும்…!

     

    Share
  • ஆழ்வார்களை ஆட்கொண்ட கண்ணன் – 1

    — எஸ். வி. நாராயணன்.

    Krishnan with butterஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியும், கண்ணனின் பால லீலைகளைப் பற்றியும் குறிப்பிடும்போது காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ரசமானதொரு கருத்தைக் கூறுவார். ஸ்ரீகிருஷ்ணன் சேஷ்டைகள் செய்யும் குழந்தையாக, ஆநிரை மேய்க்கும் சிறுவனாக, குழல் ஊதும் கண்ணனாக, கோபிகைகளைச் சீண்டும் பாலகனாக, அசுரர்களை வதைக்கும் அசகாய சூரனாக, ஆபத்பாந்தவனாக, அனாத ரஷகனாக, தூதுசெல்பவனாக, சாரதியாக இப்படி பல ரூபங்களை தரித்து அனேக லீலைகளை செய்திருக்கிறான். சாதுக்களையும் நல்லவர்களையும் மட்டுமின்றி, எல்லோரையும் கவர வேண்டு மென்றே ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். அனைவரையும் ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அன்புக்கும் பாத்திரமாக்கிக் கடைத் தேற வைத்தான் என்று கூறுவார் காஞ்சிப் பெரியவர். இப்படி, அனைவருக்கும் அருள் புரிவதற்காகவே அவதரித்த கிருஷ்ணனின் அவதாரமே பூர்ண அவதாரம். ‘சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ – என்னையே தஞ்சமென்றிருந்தால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன் என்று கூறியவர் கிருஷ்ண பகவான். ‘மாசு.ச.’ – கவலைப்படாதே, என்று நமக்கெல்லாம் உறுதியளித்த தெய்வம் அல்லவா அந்த கார்மேகவண்ணன்.

    இராம அவதாரம் ஆதர்ச புருஷ அவதாரம். உலகத்திற்கு ஒரு உதாரபுருஷனாக அவர் விளங்குகிறார். தாம் பரம்பொருள் என்பதை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஆனால், கிருஷ்ணாவதாரத்தில் பகவான் தமது சக்தியை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருந்தான். பிறந்தவுடன், அன்னை தேவகிக்கும், தந்தை வசுதேவருக்கும் சங்கு சக்கர கதாதாரியாக, தமது சுயரூபத்துடன் காட்சியளித்தார். பின்னர், தமது மாயையால், தங்களுடைய குழந்தையாக அவர்கள் காணும்படி செய்கிறார்.

    வளர்ப்புத்தாயான யசோதை, பிள்ளை வாயில் வையம் ஏழும் கண்டு “ஆயர் புத்திரன் அல்லன்: அரும் தெய்வம்” என்று அதிசயிக்கிறாள். ஆனால் அந்த உணர்வு சில நொடிகளே நீடித்தது. கள்ளக் கண்ணனின் மாயை மூடி மறைத்தது. ”வெண்ணைதான் தின்கிறாயே, மண்ணை ஏன் தின்கிறாய்” என்று அதட்டத் துவங்கி விடுகிறாள். கோவர்த்தன கிரியை விளையாட்டாக குடை போல் எடுத்ததை அனைவரும் பார்க்கிறார்கள். காளியன் என்ற பயங்கர நாகத்தின் மீது அவன் நின்று நடன மாடிய அழகை எல்லோரும் பிரமிப்புடன் பார்க்கிறார்கள்.

    அமானுஷியமான பரம்பொருள் நமது கண்ணன் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படாமல் அவன் பார்த்துக் கொண்டான் என்பதை நினைக்கும்போது, அவனுடைய அந்த செளலப்யத்தை எடுத்துச் சொல்ல வார்த்தைகளும் உண்டோ? பாண்டவர்களுக்காக, நடையாய் நடந்து தூதுபோன அந்த நீர்மைக்கு இணையும் உண்டோ!

    நம்முடைய இந்த நாட்டிலே, வேதம் ஒதப்படும் இந்த புண்ணிய பூமியிலே, கிருஷ்ண பக்தி ஆங்காங்கே பெரியதொரு பிரேமையாகவே மிளிர்வதைக் காணலாம். சூர்தாஸ், மீரா, ஜயதேவர், நரசிமேத்தா, சைதன்யர் போன்ற எண்ணற்ற ஹரிதாசர்கள் கிருஷ்ணானுபவத்தின் அருமையையும் பெருமையையும் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.

    பக்தியே கடவுள்தரிசனத்திற்கு வழி. பக்தியின் மூலமே கண்ணனை உணரலாம். வெறும் படிப்பினாலும், மேதையின் பலத்தினாலும் அவனை உணரமுடியாது. உளம் உருகி அவனை நினைத்தாலன்றி அவன் நமக்கு அருகில் வரமாட்டான் என்ற வைணவ நெறியை நன்கு எடுத்துக் காட்டியவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணனையும் அவனது அற்புத லீலைகளையும் நினைந்து, நினைந்து உருகி, ‘உண்ணும்சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்ற நிலையிலே இருந்து, தத்தம் அனுபவங்களை பற்பல பாசுரங்களாக, அழியாப் படைப்புகளாக, நெஞ்சிற்கினிய தமிழ்ப்பாடல்களாக அருளி, பெரும் கிருபை செய்திருக்கிறார்கள். கிருஷ்ணாவதாரத்திலே தமது மனதை பறி கொடுத்து, அதிலே பூரணமாக லயித்து, அந்த பரப்ரம்மம் ‘அம்மா’ என்றழைத்திட என்ன தவம் செய்தாளோ என்று எல்லாரும் போற்றிய யசோதையாகவே தன்னை பாவித்துக் கொண்டு, பாலகிருஷ்ணனின் வினோத லீலைலைகளை எல்லாம், மிக அழகாக, படம் பிடித்துக் காட்டுவது போல் காட்டுகிறார் பெரியாழ்வார். பெரியாழ்வார் அருளிச் செய்துள்ள அந்தப் பாசுரங்களை நாம் நமது இல்லங்களில் படித்து மகிழும்போது அந்த இல்லங்களிலே அந்த மாயக்கண்ணன் நிச்சயம் தன் பாதங்களை அடிமேல் அடி வைத்து, தளர் நடையுடன், காலினிற் சிலம்பு கொஞ்ச முத்து மாலைகள் அசைந்திட வந்து அருள்புரிவான் என்பதில் ஐயமில்லை.

    பெரியாழ்வார் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் பாருங்கள். கண்ணன் பிறந்தபோது ஆய்ப்பாடி எப்படி இருந்தது என்கிறார்:
    “ஓடுவார், விழுவார், உகந்து ஆலிப்பார்
    நாடுவார், நம்பிரான் எங்குத்தான் என்பார்
    பாடுவார்களும், பல்பறைகொட்ட நின்று
    ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே”

    கண்ணன் பிறந்ததைக் கேட்டு பாடினார்கள்,ஆடினார்கள் ஆயர்பாடி ஆயர்கள். அத்துடனா?
    உரியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
    நறுநெய் பால்தயிர் நன்றாகத் தரவுவார்
    செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து,
    எங்கும் அறிவழிந்தனர் ஆய்ப்படி ஆயரே.

    ஆயர்பாடி ஆயர்கள் எல்லாம் நந்தகோபன் வீட்டுக் குழந்தையை தங்கள் குழந்தையாகத்தான் எண்ணினர். அதனால்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம், இவ்வளவு களிப்பு.

    தாயான யசோதை தன் மகன் கண்ணனை தொட்டு தொட்டுப் பார்த்து மகிழ்கிறார். இங்கே வாருங்களேன். என் குழந்தையின் பாதக் கமலங்களைப் பாருங்களேன். இந்தக் குழந்தை பாதக் கமலங்களை வாயில் வைத்து சுவைத் துண்ணும் அந்த அழகைப் பாருங்களேன். “பேதைக் குழவி பிடித்து சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணிரே’ என்கிறார் பெரியாழ்வார். சங்கும் சக்கரமும் நிலாவிய அந்த கைத்தலங்களைப் பாருங்களேன். ‘வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணிரே’ , ‘கண்கள் இருந்தவா காணிரே’, ‘புருவம் இருந்தவா காணிரே’, நெற்றி யிருந்தவா காணிரே’ , ‘ குழல்கள் இருந்தவா காணரே என்று குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் சுட்டிக் காட்டி உச்சி மோந்து யசோதை எப்படி மகிழ்ந்திருப்பாளோ அப்படி மகிழ்ந்து போகிறார் பெரியாழ்வார். தாயுமாகி, அவர் படைத்த இப்பாடல்கள் அந்த மாயக்குழவியை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

    [தொடரும் …]

     

    Share