இந்த வார வல்லமையாளர்!
செப்டம்பர் 7, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள்
சென்னை தியாகராய நகரில் உள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பு கடந்த வாரம் (ஆகஸ்ட் – 30) ஏழை எளிய குடும்ப் பெண்களுக்கு தையல், கணினி மற்றும் அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி அளித்து, அதற்கான சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கி, அதிகம் படித்திராத எளிய குடும்பப் பெண்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவியுள்ளது. இத்தகைய சமூகப்பணிகளுக்குத் தூண்டுகோலாய் இருந்து வந்துள்ள “உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனரும் மற்றும் அமைப்பின் அறங்காவலருமான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்களின் சமூகப்பணியைப் பாராட்டி அவரை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.
இதுவரை நான்கிற்கும் மேலான தொழிற்பயிற்சி நிலையங்கள், பத்திற்கும் மேலான பள்ளிமாணவர்களுக்கான நலத்திட்டங்கள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி உதவி, பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி என சமூகத் தொண்டு செய்துள்ளது “உதவும் உள்ளங்கள்” நிறுவனம். இந்த அமைப்பின் குழுவினர்கள், தன்னார்வலர்கள் பலரை ஒருங்கிணைத்தும், நன்கொடைகள் சேகரித்தும் தேவையுள்ளோர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். “உதவும் உள்ளங்கள்” சேவை நிறுவனத்தின் நிறுவனரான திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள் முன்னாள் வங்கி ஊழியர். இவர் 2000 ஆம் ஆண்டு உதவும் உள்ளங்கள் அமைப்பைத் தோற்றுவித்து தமது குழுவினர் துணையுடன் சமூகப்பணி செய்து வருகிறார். சமீபத்தில் வங்கிப்பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சமூகப்பணிக்கு முழுநேரத்தையும் செலவிட்டு வருகிறார்.
தற்பொழுது நானூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களை ஒருங்கிணைத்து, உதவும் உள்ளங்கள் அமைப்பு சமூகப்பணியாற்றி வருகிறது. உதவும் உள்ளங்களின் சேவைகள் பொதுவாகக் கல்வி உதவி, மருத்துவ உதவி, வாழ்வாதார தொழிற்பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அடங்குகிறது.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்துடனும், பாளையங்கோட்டையில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து திருல்வேலியில் புற்றுநோய்க்கான மருத்துவப்பணிகளிலும் உதவும் உள்ளங்கள் அமைப்பு பங்காற்றி வருகிறது. இதனால் புற்றுநோயினால் பாதிக்கப்பட பதினறாராயிரம் பேர் ஆரம்பக்கட்ட நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார்கள். தொழுநோயாளிகளுக்கு உதவித்தொகை என்று மருத்துவ உதவிகளும் உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.
சுனாமியில் பாழடைந்த பள்ளிகளுக்குக் கட்டிட சீரமைப்பு உதவி, கழிப்பறையற்ற பள்ளிகள் ஒருசிலவற்றிற்குக் கழிப்பறை கட்டும் உதவி, மாணவர்களுக்கு மேற்கல்வி பயில உதவித்தொகையளித்தல், தேவையான குழந்தைகளுக்கு காலையுணவு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், பள்ளிப்பாடங்களில் பயிற்சி, நேர்முகத் தேர்வு பயிற்சி வகுப்புகள், அவர்கள் வேலைவாய்ப்புக்கு உதவி, பெண்களுக்குக் கணினி, தையல், அழகுக்கலை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி எனக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி உதவிகளும், உதவும் உள்ளங்கள் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சமூகப்பணிகளுடன், 1998 ஆம் ஆண்டுமுதல், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்கு “ஆனந்த தீபாவளி’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, சென்னையில் உள்ள 18 இல்லங்களைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு ஆகியவையும் பரிசாக வழங்குவதை உதவும் உள்ளங்கள் அமைப்பு செய்து வருகிறது.
இந்திய செஞ்சிலுவை அமைப்பு, இரத்த வங்கி, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தொடர்ந்து பங்களித்து வரும் திரு. பி.சங்கர் மகாதேவன் அவர்கள், துன்பத்தில் உழலும், உதவும் தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்ற எளிய கொள்கையின் அடிப்படையில் உதவும் உள்ளங்கள் அமைப்பைத் துவக்கி, அதன் மூலம் இன்று பல்லாயிரம் மாணவர்களும், பெண்களும், நோயாளிகளும் பலன்பெறும் வண்ணம் சேவை அமைப்பினை வழி நடத்திச் செல்கிறார். அவரது சமூகப்பணியைப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
தொடர்பு கொள்ள:
Udhavum Ullangal
No.77, 1st Main Road,
C.I.T Nagar, Nandanam,
Opp FIAT Car Showroom
Chennai – 600 035
Phone numbers:
+91-44-24344743
+91-9444194743
Email: info@udhavumullangal.org.in, uu1sankar@gmail.com
http://www.udhavumullangal.org.in/
https://www.facebook.com/udhavumullangal
தகவல்கள் மற்றும் படங்கள் உதவி:
உதவும் உள்ளங்கள் வலைத்தளம்
மற்றும் …
http://www.dinamalar.com/news_detail.asp?id=1334519
CONGRATS AND BEST WISHES