பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11940169_881805541873646_1024827662_n

62059640@N05_rகாயத்ரி அகல்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.09.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

16 thoughts on “படக்கவிதைப் போட்டி (29)

 1. அகரத்தை உரமாய் இட்டு

  அகத்தினில் நேர்மை சேர்த்து

  இகத்தினில் வாழவேண்டும்

  இன்னல்கள் களையவேண்டும்

  யுகத்தினைக் கடந்த தமிழ்

  அகத்திலே பதியவேண்டும்

  தமிழோடு பண்பும் பண்பாடும்

  விழுதெனப் பதியவேண்டும்

  எழுந்திடு மகனே நீ

  தமிழனெனும் பெருமையோடு

  ராதா மரியரத்தினம்

  08.08.15

 2. நேரிய பார்வை

  துரிகையாக

  உன் அகம் காட்டும்

  தமிழ்ப் பன்பதைச் சொல்லும்

  நிமிர்ந்து நீ நில்லு

  நெஞ்சையும் நிமிர்த்து

  அகரத்தைத் தாண்டி

  சிகரத்தில் ஏறு

  உயரத்தில் நின்று

  பள்ளத்தை நோக்கு

  உள்ளத்தைத் திறந்து

  ஈகை எனும் பேராயுதம் ஏந்தி

  வறுமையைப் போக்கு

  சிறுமைகள் சாடு

  ஒருமையைப் பாடு

  பாரதி கண்ட உலகத்தைக் காணு

  ஐயா அப்துல் கலாம் கண்ட

  கனவை நீ காணு

  ராதா மரியரத்தினம்

  08.09.15

 3. இம்முறை 
  என்ன வாங்கி வந்தாய் 
  என்று கேட்ட 
  மகனிடம் 
  தங்கச்சி பாப்பாவோ 
  தம்பி பாப்பாவோ 
  வாங்கி வந்ததை 
  கூற முடியாமல் வயிற்றோடு 
  இழுத்து அணைத்துக் கொண்டாள் 
  இரண்டாவது திருமணம் 
  செய்து கொண்ட
  தாய்…
  ஏதோ மெய் தேடிக் கொண்டிருந்தது 
  உயிர் எழுத்துக்கள்…

  கவிஜி 

  கவிஜி 

 4. அகரத்தில் தொடங்கி
  அதையொட்டியப் பயணம்
  அளவற்றுப் பெருகி
  அவஸ்தைப் படுத்துகிறதே
  ஆனாலும் என்மனமிதையே
  ஆர்வமுடன் விரும்புகிறதே
  அகத்தை அடக்கியாளவும்
  இங்கெனக்கு வழியிலையே
  ………………
  இனியென்ன எழுதட்டும்
  ஈதென்ன செய்வதென்னும்
  உண்மையிங்குப் புரியாமல்
  ஊன்நிமிர்ந்து உதடுகுவித்து
  எனையிவனும் நேரிட்டான்
  ஏதொன்றும் கூறாமல்
  ஐயத்தைப் போக்குதற்கு
  ஒருவழியும் தெரியாமல்
  ஓவியமாய் யானமர்ந்தேன்
  ஔசித்யம் அறிந்தவனோ
  வெஃகல் விலக்கேலென்றான்

  [ஔசித்யம், propriety; truth; the state of being proper, fit, excellent.
  ஔசித்யம் அறிந்தவர்- ஞானி, [அ] கடவுள்]

  வெஃகல் விலக்கேல் – சிற்றாசைகளை விட்டு, பேரின்ப ஆசையைக் கைவிடாதிருத்தல்]

 5. அ ஆ இ என எழுதி

  ஈட்டியாய் உன் பார்வை

  உயரத்தை நோக்கட்டும்

  ஊறு இன்றி உன் அறிவு வளரட்டும்

  எத்திசையும் எக்கணமும்

  ஏற்றமுறும் வகையில்

  ஐயங்கள் அகற்றி

  ஒன்று பட்டு உயர்வாய்

  ஓராயிரம் வெற்றிகள் உனதாக்க

  ஔடதமாய் உண்மை,நேர்மையைக் கையாளு

  எ ஃ கு போல் இருந்து வருபவற்றை எதிகொள்

  ராதா மரியரத்தினம்

  08.09.15

 6. கண்ணன் தமிழ்
  ———————
  தூக்கம் வந்து நெடிலை குறிலாக்கினாலும்
  துயரம் எதுமில்லை! கொம்பும் முளைப்பதில்லை!
  தவறாய் தெரிந்து கண்களை உருட்டினாலும்
  பயமும் வருவதில்லை! கண்ணன் மாறவில்லை! 
  நிறத்தை திரித்து கண்போல் காட்டினாலும்
  தாக்கம் குறையவில்லை! பார்வை அகலவில்லை!.

 7. தமிழால் உயர்வேன்…

  எழுத்தறி வித்தவன் முதன்முதலில்
       எழுதிக் காட்டிய தாய்த்தமிழின்
  எழுத்தெலாம் எழுதித் தேர்ந்திடுவேன்,
       ஏணியாய் எனையவை ஏற்றிடுமே,
  உழுதவன் வளம்பெற வளர்பயிர்போல்
       உறுதுணை எனக்குத் தந்திடுமே,
  பழுதிலா தாய்த்தமிழ் படிப்பதால்நான்
       புகழொடு பெருநிலை பெறுவேனே…!

  -செண்பக ஜெகதீசன்…

 8. கரும்பலகையில்
  கற்றுக்கொள்ளும் அகரம்
  விரும்பியுன்னைத்  தொடவைக்கும்
  வெற்றியின் சிகரம்….

  உயிரும் மெய்யும்
  உயிர்மெய்யாயும்
  ஆயுத்ம் ஏந்திடு
  அருந்தமிழ் காக்க….

  வல்லினமாகி
  மெல்லினம் காத்து
  இடையின்ம் ஆகா
  இழிநிலை போக்கு….

  உயர்தனிச் செம்மொழியென்னும்
  பழங்கதைப் பேசிப் பழகாமல்
  அருந்தமிழ் மொழியை
  அரியணை ஏற்று….

  மெல்லத் தமிழினிச்
  சாகும் என்னும்
  பொல்லா மொழியினைப்
  பொடிப்பொடியாக்கு…..

  வையத் தலைமைகொள்
  வாழ்வில் தமிழைக கொள்
  மையப் புளளி நீயென
  மாநிலத்துக்கெடுத்துக் காட்டு….

  உய்யும் வழியென்றே
  உலகை உன்புறம் திருப்பு…
  ஐயம் அகற்றி
  அகிலத்திற்குச் சொல்…

  அருந்தமிழொன்றே
  அவனியில் நிலைக்கும்
  ஆயிரமாயிரம்
  ஆண்டுகள் கடந்தும்!
               “இளவல்” ஹரிஹரன், மதுரை.

 9. அகரம் எழுதிப் பழகுமுன்னை நாளை 
  சிகரத்தில் ஏற்றும் உலகு. -நகராமல் 
  மெய்யெழுத்துத்  தீட்டுமுன் கையெழுத்தை சீர்செய் 
  தலையெழுத்தை மாற்றும் உணர் 

  Your comment is awaiting approval.

 10.                           பாரதியின் சின்ன மடல்
  ஏடெடுத்து எழுத 
  உன்னிடம் எழுதுகோலெங்கே!
  எழுதியதை வண்ணமிட
  சுண்ணக் கட்டிகள் எங்கே?
  சுட்டிகளின் ஆதிக்கத்தில்
  மறைந்து போன கரும்பலகை
  உயிரெழுத்து தமிழ்நடை
   தமிழ்ப் பண்பாடு 
   உன் கையில் ஏன்
   இன்று  தள்ளாடுது!
  சுருங்கிய தமிழை
  விரித்துக் கொணர
  உன் சின்ன விழியால்
  சுட்டெரித்துப் பசுமையாக்க
  மகாபாரத அர்ஜூனனாய் மாறுவாயோ!
  பாடங்கள் எல்லாம்
  நேர்பட பேசினால்
  அனுபவ முத்திரை
  வாழ்க்கைப் பாடமோ
  மடிந்து வாழப் பேசுது!
  சாளரத்தில் இலஞ்சத் தென்றல்
  தீண்டியதில் உன் சின்ன
  இதயம் சீர்கெடாமல்
  இருக்க என் செய்வாய்?
  பணி அளிக்கும் ஏடுகள்
    தரையில் மடிந்து கிடக்கும்
  உன் தோள் பையில்
   தீந்தமிழுக்கும் இனி
  இடம் உண்டா?
  பொல்லா உலகைத்
  திருத்த  நினைத்த
  என் கனவும் பொய்தானோ!
  ஓடி விளையாடு பாப்பா
  என்றுதான் பாடினேனே!
  ஓயாமல் எழுத நானும்
  சொல்லவில்லையே!
  காக்கைக்கும் தாகமுண்டு
  என்றே நீயும் கொடைக் கர்ணனாய்
  வாழ்ந்திடுவாயா!
  ஓயாமல் பாடி அலுத்த
  வாய் இன்று 
   அழுக்காறு மனிதம் கண்டு
  பளிங்கு பொம்மையாய்
  வாய்மூடி நிற்கின்றேன்!
  உறங்கா சுயநல துரியர்கள் 
  மரங்களைக்காண வெட்கி 
  நாணி தலைகுனிய வேண்டாமோ!
  பளிங்கு சிலைகளாய்
  வடிக்கப்பட்டு மௌனம் காக்கவா
  பா வடித்தோம்!
  காக்க மறந்த கிருஷ்ணர்
  தேடி இனி எங்கு செல்வது?
  ஆங்கிலக் களிறினால் 
  இடறிய தமிழ்மகள்
  மெய்யுடம்பில் உயிரும்தான்
  இனி உளதோ!
  களிற்றரசு ஏறி
  அறிவியல் தமிழ்மகளும் 
  அகிலமெங்கும் உலாப்போகும் 
  நாள் எந்நாளோ
  அந்நாளே நான் காணும்
  தொலைநோக்கு பாரதம்!
  உன் சீரிய கண்விழிகள்
  சிங்கார பாரதம்
  சீர் கெடாமல் இருக்க
  தங்கையவளைக் கை பிடித்து
  பள்ளியிலே சேர்த்திடு!
  அடுக்களை மட்டுமே
  உனக்கு மட்டும் சொந்தமில்லை
  எனக்கும் அதிலே பங்குண்டு
  என்றே உதவிடு!
  பல கலைகள் கற்றிட
  உதவிடு!
  பாதகங்கள் செய்பவரைக் கண்டால்
  சீறும் பாம்பாய் மாறி சினந்து விடு!
  சிறுகச் சிறுகச் சேர்த்து
  வீட்டைக் கட்டிய பெற்றோர்
  நலமும் காத்திடு!
  எழுந்திடு! தமிழ் காக்க
  விழித்திடு!

 11.                                உயிரெழுத்து 
  உயிரெழுத்து எழுத
  மட்டும் விரல்களல்ல!
  தமிழ்ப்பண்பாடு காண
  உயிரெழுத்து சொர்க்கத்தில்
  நுழைய முதல்படி!
  உள்ளங்கையில் எழுதிய
  முதல் கீறல்மொழி
  தமிழ் மணக்க 
  கரும்பலகையிலே எழுதிடுவாய்!
  இறுதி ஆவி பிரியும்வரை
  சமன் செய்து சீர் தூக்கும்
  துலாக்கோலாய் நிற்பாயோ!
  ஆணென்ன! பெண்ணென்ன!
  ஆவியிரண்டும் ஒன்றெனவே
  அகிலம் போற்ற வாழ்வாயே!
  ஐந்துவிரலும் ஒரே வரிசையிலே
  அமைந்தாலும் நீள்வரிசை
  பணபலம் வாழ்க்கைப் புகழ்
  காக்க உதவாது!
  நிலையாமை என்பது
  யாக்கைக்கு மட்டும்
  சொந்தமில்லை என்றே 
  உணர்ந்து நீயும்
  அறம் செய்தே வாழப் பழகுவாய்.

 12.                                நாளைய விடியல்

  பத்துப் பாட்டு
  எட்டுத் தொகை
  பதினெண் கீழ்கணக்கென
  ஒரு கோடி
  இலக்கியங்கள் இருந்தும்
  மம்மி டாடியிலேயே
  மகிழ்கிறது நம் இனம்

  குழலினிது
  யாழினிதென்பர்
  தம் மக்கள்
  ஆங்கிலம் பேச கேளாதார்
  இதுவே
  இன்றையக் குறளாய்
  எங்கும் ஒலிக்கிறது

  வாவ் என்ற ஒலியே
  நம்
  வாழ்வின் தரத்தை
  நிர்ணயிக்கிறது

  கத்திரிக்காயை
  ப்ரிஞ்ஜால் என்பதே
  அறிவின் அடையாளமாய்
  அங்கிகரீக்கப்படுகிறது

  அன்னை மொழியில் பேச
  அவமானப்படும்
  ஒரே இனமென
  உலகெங்கும் நாம்
  அறியப்படுகிறோம்

  இந்த இழிநிலைகளை மாற்ற  
  உயிரெழுத்துப் பழகும்
  இளந் தளிரே
  உன்னால் மட்டுமே முடியும்

  மொழி என்பது
  இனத்தின் இதயம்
  இதயம் துறந்த இனம்
  பிணமொக்கும் என்பதை
  நம்மவருக்கு
  உரக்க சொல்
  நாளைய விடியலாவது
  நன்மை பயக்கட்டும்!

 13. கரும்பலகையில் தமிழ் பழகும் என்னை
  பார்த்ததும் உங்கள் மனதில் இந்த கேள்வி கனை

  “  தமிழை ஏனடா பழகுகிறாய் ?
  உன் நேரத்தை ஏன் விரையமாக்குகிறாய் ?
  ஆங்கிலத்தில் பெறு புலமை,
  அப்போது தான் நீ ஆள்வாய் உலகை ! ”

  தமிழை பழிக்கும் அண்ணே,
  உங்க கேள்விக்கு பதில் இதுதாண்ணே.

  “ இப்புவியில் மூத்த குடி நம் தமிழ் குடிண்ணே,
  நம் வரலாற்ற கொஞ்சமாச்சும் படிண்ணே.

  மொழிகளுள் முதலில் தோன்றியதால், தமிழ்
  பிறமொழிகளின் கலப்பில்லாதவள் !
  தனித்தமிழாய் விளங்குவதால்
  பிறமொழி போல் களங்கமில்லாதவள் !

  தமிழ்போல் எங்கும் அழகில்லை 
  அவளை ஆறத்தழுவு !
  அவளழகை சொந்தம்கொள்ள
  தினமும் தமிழைப்பழகு !

  மூப்பில்லா கன்னித்தமிழ் முன்னே
  அண்டத்தில் ஏதும் அழகில்லை !
  தமிழ் அமிழ்தாய் விளங்குவதால்
  அவளுக்கென்றும் அழிவில்லை !

  நம்பின யாரையும் 
  தமிழ் கைவிட்டதில்லை !
  தமிழை எதிர்காலமாய் எடுத்தவர் 
  கை என்றும் சுட்டதில்லை !

  தமிழின் மதிப்பை குறைத்து 
  எடை போடவேண்டாம் !
  தமிழைவிடுத்து கிடைப்பது
  சொர்க்கமாயினும் எனக்கு வேண்டாம் !

  போதுமாண்ணே இந்த விளக்கம்,
  பொறுத்திருந்து பாருண்ணே,
  இப்புவியை தமிழ் ஒரு கலக்கு கலக்கும் ! “

 14. படம் 29
  நம்பிக்கை கொடுங்கள்!

  எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
  கண்ணெனும் மொழியை நாம்
  மண்ணில் முதலில் எழுதினோம்.
  இங்கு சிலேட்டுப் பலகையில்.
  இப்படித் தயக்கம் வேண்டாம்.
  ” இ ” னா சுற்றிக் கட்டுமொரு
  இடறல் எழுத்துத் தான்!
  இசைவாக எழுதி முடிப்பானா!

  முகத்தின் தயக்கம் எடு!
  அகத்தில் நம்பிக்கையுடன் முன்னெடு!
  சுகமாக எழுதுவாய் சரியாகும்!
  தகவு தானாகச் சேரும்!
  நம்பிக்கை கொடுக்காது ஆசிரியரும்
  நழுவி அச்சுறுத்தல் கேடாகும்!
  நகுதலும் நளினம் செய்தலும்
  நல்ல வளர்ச்சிக்குக் குந்தகமாகும்!

  பா ஆக்கம்
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்.
  12-9-2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *