-சக்தி சக்திதாசன்

உயிரை இழக்கப் போகிறோம்
எனும் உணர்வு
பறித்திடும்
வாழ்வுதனை எண்ணித்
தகித்திடும் எதிர்காலக்
கனவுகளோடு
கடலேறிப் பயணமொன்று
துடித்திடும்
உயிர்கள் பலதை
அடுக்கிட்ட கட்டைகள்
போலவே
நிறுத்திட்ட படகுகள்
நீந்திடும் மறுகரை நோக்கி
அடித்திடும் அலைகளின்
வேகம் அறிந்திடுமா?

அம்மனிதரின் நெஞ்சங்கூட்டில்
அரித்திடும் வேதனைகளை
முடித்திடாப் பயணங்களில்
சரிந்திடும் படகுகளில்
மூழ்கிடும் மனிதர்களில் எவர்
சேர்ந்திடுவர் அக்கரையை?

கூட்டமாய் அடுத்தொரு
பயணத்துக்காய்ப்
போரிடும் அகதிகள் கூட்டம்
மறுபுறம்
அகதிகளா இவர்கள்? இல்லை
ஆசைமிக்க ஜரோப்பிய
வாழ்வுக்காய் ஓடிடும்
பேராசை கொண்ட
மனிதர்கள் கூட்டமா? எனும்
அறிஞர்கள் மகாநாடு!

ஜயகோ!
கடற்கரைதனில் ஒதுங்கிட்ட
பிஞ்சொன்றின் முடங்கிய
சடலத்துள் முடிந்துபோன
ஓலத்தின் ஒலியை
இவ்வோங்கார உலகில்
எவர்தான் கேட்டிடுவார்?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *