-செண்பக ஜெகதீசன்

அற்றர்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.  (திருக்குறள்-1007: நன்றியில் செல்வம்)

புதுக் கவிதையில்…

இல்லார்க்கு இல்லையெனச்
சொல்லாமல் கொடுக்காதவனிடம்
சேர்ந்த செல்வம்,
அழகுமிகுந்த குமரிப்பெண்
மணமாகாமல்
மூதாட்டியாவது போன்றதே!

குறும்பாவில்…

அழகுக் குமரி மணமாகாமல்
கிழவியாவதை ஒப்பதே,
ஏழைக்கு உதவாதவன் செல்வமும்!

மரபுக் கவிதையில்…

இல்லை யென்று வருமேழை
—இன்னல் தீரக் கொடுக்காமல்,
செல்வம் சேர்த்து வைத்திருக்கும்
—சீமான் கொண்ட பொருளெல்லாம்,
பல்லது வீழும் பருவம்வரைப்
—பருவ அழகெலாம் பாழாக,
நல்லதோர் இல்லறம் இல்லாமல்
—நலியும் கன்னிக் கொப்பாமே!

லிமரைக்கூ…

ஏழைக் குதவாதவன் செல்வம் பார்,
எழிலது குன்றிட முதுமைவரை
மணமது காணாத கன்னிக்கு நேர்!

கிராமிய பாணியில்…

குடுத்துவாழணும் குடுத்துவாழணும்
காசிருக்கவன் குடுத்துவாழணும்,
ஏழயளுக்குக் குடுத்துவாழணும்
எப்பவுமே குடுத்துவாழணும்

குடுக்காதவன் செல்வமெல்லாம்
கொமரிப்பொண்ணு கதயாவும்,
கொறயாத அழகிருந்தும்
கலியாணம் ஆவாமலே
கெழவியான கதயாவும்…

குடுத்துவாழணும் குடுத்துவாழணும்
காசிருக்கவன் குடுத்துவாழணும்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *