கண்ணன் எனக்கொரு பிள்ளை …
— கவிஞர் காவிரிமைந்தன்.
‘கண்ணன் எனக்கொரு பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை’
சூலமங்கலம் பாடும் பாடல். ‘ஏன்’ திரைப் படத்தில், இசைப் பேரறிஞர் டி.ஆர். பாப்பா அமைத்த இசையில் கண்ணன் ராதை கோலாகலம்! புல்லாங்குழலெடுத்து போதைமுத்தம் தான் கொடுத்து விட்டால் மயங்காதார் யாரிங்கே? ஆடலும் பாடலும் இல்லையென்றால் அகிலத்தில் ரசிக்க என்ன இருக்கிறது? கண்ணன் பிறந்த நாள், தொடர்ந்து கண்ணதாசன் பாடல்களில் ஒன்று உள்ளம் கொள்ளைகொள்ளத் தரலாமே என்று எண்ணியபோது சிந்தனையில் வந்த பாடலிது.
திரையில் தோன்றும் நட்சத்திரங்களாய் லட்சுமி – ரவிச்சந்திரன். இன்பங்களின் ஒட்டுமொத்தக் குத்தகையை எடுத்துக் கொடுக்கும் இசையமைப்போடு ஒரு சுப லாலி. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத வார்த்தைகளில் கவிஞரின் சொல்லோவியம்! லீலா விநோதங்களில் காணும் ‘பா’வங்கள் அணிவகுக்கும் கோலங்கள்!
இருவராய் இருந்தாலும் ஒருவராய் வாழ்தலே இன்பம் என்கின்ற வரம்தரும் வார்த்தைகள் வந்து விழுகின்றன கண்ணதாசனுக்கு.
இவனுக்கு இவளென்ற கருத்து – அந்த
இறைவன் எழுதிய எழுத்து
இடமுண்டு நேரங்கள் உண்டு- என்
இதயமே பொறுமைகொள் இருவரும் ஒன்று
இதயத்தைப் பொறுமைகொள் என்று சொல்லும் அழகு, கவிதையின் சிறப்பு மட்டுமல்ல அங்கே கன்னியின் சிறப்பும் கூட.
மடியினில் நான் வைத்துச் சிரிக்க – அவன்
மயக்கத்தில் மேலாடை பறிக்க
இடையினை ஓர் கையில் வளைக்க – அந்த
இன்பத்தையல்லாமல் வேறெதை நினைக்க
கவிதையின் வாயிலாக இன்பங்களை அள்ளித்தருகிறார் பாருங்கள். கடவுளாய் இருந்தாலும் மனிதனாய் பிறப்பெடுத்தால் மயக்கத்தில் விழத்தான் வேண்டுமோ, நியதியும் இங்கே காணுங்கள்.
கண்ணன் எனக்கொரு பிள்ளை – நான்
கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொரு பிள்ளை – நான்
கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொரு பிள்ளை
மன்னன் சிரிப்பொரு முல்லை – அதன்
மணமே ஆனந்தக் கலைகளின் எல்லை (கண்ணன்)
மெல்லிதழ் தொடும் அவன் கரங்கள் – அந்த
வேளையில் ஆயிரம் குணங்கள்
சொல்லவொண்ணாதன சுகங்கள் – அவன்
தொடுவதும் அணைப்பதும் எத்தனை விதங்கள் (கண்ணன்)
மடியினில் நான் வைத்துச் சிரிக்க – அவன்
மயக்கத்தில் மேலாடை பறிக்க
இடையினை ஓர் கையில் வளைக்க – அந்த
இன்பத்தையல்லாமல் வேறெதை நினைக்க (கண்ணன்)
இவனுக்கு இவளென்ற கருத்து – அந்த
இறைவன் எழுதிய எழுத்து
இவனுக்கு இவளென்ற கருத்து – அந்த
இறைவன் எழுதிய எழுத்து
இடமுண்டு நேரங்கள் உண்டு – என்
இதயமே பொறுமைகொள் இருவரும் ஒன்று (கண்ணன்)
காணொளி: https://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU