Blog

  • சிக்கு புக்கு ரயிலு

     

    ரமணி பிரபா தேவி

    என்னுடைய பயணங்களில் பெரும்பாலானவை, நீண்ட நெடிய ரயில் பயணங்களாகத்தான் இருக்கும். சில சமயங்களில் நிகழும் உள்ளூர் ரயில் பயணங்கள், இரண்டு மூன்று நிறுத்தங்களோடேயே முடிவடைந்திருக்கிறது. அதனுள் மக்கள் வெள்ளம் அலைமோதும். சுவாரசியம் ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா எனக்காணும் முன்பே மறைந்து போகும் பயணமது. ஆனால் இந்நீள் பயணத்தில் நான் சந்தித்த‌ மானுடங்கள் ஏராளம். ஒவ்வொருவரும், தத்தம் வலிகளையும், பிணிகளையும், நிராசைகளையும் தாண்டி, ஏதோவொரு நம்பிக்கையினைப் பிடிப்பாய்க் கொண்டு வாழ்கிற‌வர்கள்.

    இக்கட்டுரையினைக் கூட, ரயில் தன் தண்டவாளத் தாளங்க‌ளால் தாலாட்ட, கலங்களோடு கலங்கித் தவிக்கும் காவிரித்தாயைக் கடந்த படியே எழுதுகிறேன். அருகிலொரு புதுமணத் தம்பதியைக் காணமுடிகிறது. ஒரு இளைஞன்கூட என்னைக் கவனித்தபடியே இருப்பது புலனாகிறது. மேலே ஒருவர் படுக்கையிலிருந்தபடியே கை பேசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டிய ஒருபெண், தன் தலையலங்காரத்தில் மும்முரம் கொண்டிருக்கிறார்.

    ஒரு ரெயில்வண்டி, இதுவரை எத்தனை விதமான மனிதர்களைக் கண்டிருக்கும்? எவ்வளவு பேரைத் தன் வசப்படுத்தியிருக்கும்? பிறப்புமுதல் இறப்புவரை அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்குமல்லவா..!!

    தன் நெடும்பயணத்தின் போது, புவி தீண்டாச் சிசுவின் பூவுடலையும், முதிர்ந்து சருகாய்ப் போன பெரியவர்களின் உடலையும் கூட ஏந்தியிருக்கும். தற்கொலை ,கொலை, இறப்பு, பிறப்பு ,கடத்தல், வழிப்பறி எனவொரு பெரும்பட்டியல் கண்டிருக்கும்.

    எத்தனையோ ரயில் வண்டிப் பெட்டிகள், கோச்சுகள், கழிவறை, முகம் கழுவ, பணியாட்களின் அறைகள், பயணச்சீட்டுப் பரிசோதகருக்கான அறை, உடனடிச் சமையலறை எனச் சின்னஞ்சிறு உலகத்தையே தன்னுள் அடக்கியுள்ள, ரயில்வண்டி ஓட்டுநரின் மனநிலை எவ்வாறானதாயிருக்கும்? இத்தனை நீளம் பெட்டிகளைப் பொருத்தி, பயணிகளைச் சுமந்துவரும் ரயில்வண்டியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஓட்டுனர் ஒரு கணம் நிலைகுலைந்தால் என்னவாகும்?

    மனித வாழ்க்கை எப்பொழுதும் சுவாரசியங்களைத் தேடுகிறது. அதற்காகவே நிறையப் பயணிக்கிறது. தவறு,வேண்டாத இடர்வரவு என மண்டைக்கு உறைத்தாலும் புதிதாய் ஒரு விஷயத்தைப் புரிந்து, அதன் போக்கிலே பயணிக்க முயல்கிறது. மனிதன் எப்பொழுதும் கூரவாவுடைய, அடக்கமுடியா ஆர்வத்தால் தூண்டப்பட்ட உயிர்க் கூறினைக் கொண்டவன்.

    இப்படித்தான் நான், அடுத்தடுத்து வேறு உலகங்களினுள் பயணிப்பதுண்டு. இது பெரும்பாலும், என் தேர்வு சமயங்களில் ந‌டக்கும். படிப்பின் மீதுள்ள கவனம், வேறெதாவது ஒன்றிற்குத் தாவி, அதிலிருந்து வேறொன்று, மற்றொன்று என முற்றிலும் தொடர்பே இல்லா இடத்தில் கொண்டுபோய்த் தள்ளியிருக்கும். தலை உதறித் தன்னிலை வரும்போது, சமயங்களில் ஐந்து, பத்து நிமிடத்துளிகள் கடந்துவிட்டிருக்கும்.

    எனக்கு எதிரிலிருக்கும் இரு யுவதிகள் கூட, இப்போது என்னைப் பார்த்தபடியே குசுகுசுத்துக் கொண்டிருக்கின்றனர், இந்தக் காலை வேளையில், என்ன பதிவு செய்கிறேன் என்பதனை அறியும் ஆவலாகவும் அது இருக்கலாம்.

    இன்னும் இரண்டு மூன்று சந்திப்புகளில் ரயில், எனது நிறுத்தத்தை எட்டிவிடுமெனத் தோன்றுகிறது. கட்டுகடங்கா சிந்தனை, என் உள்ளக் குதிரையைக் கட்டவிழ்க்கிறது. நானும் என் மனத்தினில் தோன்றுவதையெல்லாம் பதிவு செய்திட முனைகிறேன். உதிக்கும் எண்ணங்கள் அனைத்தையும் எழுத்தாக்க இயலாமல் கை தேங்குகிறது. உட்தெறிக்கும் சிந்தனைக் கோவைகள், தானாகவே இந்தப் பிரபஞ்சத்தில் கலக்கின்றன.

    தோன்றுவதையெல்லாம் எழுதிப் பதிவுசெய்து, ஓர் வடிவங்கொடுத்தாலே,உலகில் எண்ண‌ற்ற படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். இதோ, நான் இறங்கவேண்டிய இடம் வந்தானது. தனக்கே உரிய நாதத்துடன் ரயில் வண்டி, தனது சக்கரங்களின் ஓட்டத்தைச் சற்றே நிறுத்தி, இளைப்பாறுகிறது.

    சில துளிகளில் என் போல அனேகப் பயணிகள், தங்களின் நீடுநிகழ் பயணத்தை முடித்து, இல்லம் நோக்கிச் செல்லத் தொடங்குகின்றனர். பலரின் பயணத்தைப் பூர்த்தி செய்து, இறங்குமிடம் அறியாப் பயணி போல, தன் வழி நோக்கி எதிர்பார்த்து, தீராப் பயணப்பசி கொண்டு பயணிக்கத் தொடங்குகிறது ரயில் வண்டி.

    படத்துக்கு நன்றி: http://realhdwallpaper.com/wp-content/uploads/2013/05/Train-HD-Wallpaper-Free-Download.jpg

    Share
  • தர்மாம்பாள் குறம்

    ஆசிரியர்: முனைவர் ராம. கெளசல்யா

    சமுதாயத்தின் சிந்தனைகளும் கொள்கைகளும் காலத்திற்கேற்ப மாறுகின்றன. இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி என்பர். ஆ க, சமுதாயச் சிந்தனை மாற்றங்களுக்கு ஏற்ப மொழியும் காலந்தோறும் புதிய வடிவங்களை அளிக்கின்றது. அவ்வகையில், அரசர்களை யும் வள்ளல்களையும் மையப்படுத்தி நின்ற தமிழ் இலக்கியம் சாதாரண மக்களையும் மையப்படுத்தி எழத்தொடங்கியது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் குறம், குளுவ நாடகம், குறவஞ்சி, நொண்டி நாடகம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்கள் தமிழிலக்கிய உலகில் தோன்றிப் பிரபலமாயின.

    தமிழ் மரபில் குறி பார்த்தல் சிறப்பிடம் பெறுகிறது. தலைவியிடம் வேறுபாடு காணப்பட, நற்றாயும், செவிலித்தாயும் கட்டு வைத்தும், கழங்கு வைத்தும் வெறியாட்டின் வாயிலாகக் குறி பார்த்து வேறுபாட்டிற்கான காரணத்தை அறிய முற்படுகின்றனர்.

    “கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
    ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” தொல்.கள.நூ.25: 3-4

    குறுந்தொகை கட்டுவிச்சியை அகவன் மகள் என்கிறது. குறி பார்ப்பவள் கட்டுவிச்சி எனப்பட்டாள்.

    “அகவன் மகளே அகவன் மகளே
    மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன் மகளே பாடுக பாட்டே” குறுந். பா. 23

    மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிநில மகளிர் குற மகளிர் எனப்பட்டனர். பன்னிரு பாட்டியல், குறத்திப் பாட்டு என்றதொரு இலக்கிய வகைக்கு இலக்கணம் தருகிறது.

    “இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலமும்
    திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே”

    “குறத்திப் பாட்டும் அதனோடற்றே”

    பத்துப் பாக்களால் அமையும் இக்குறத்திப் பாட்டிற்கு ஒரு சான்றுகூட இன்று கிடைக்கவில்லை.

    கலம்பகத்து உறுப்பாகக் குறம் என்ற ஒன்று காணப்படுகிறது. குறத்தி குறி கூறுதல் தொடர்பான குறம், குறவஞ்சிகளில் இடம்பெறும் நிகழ்வுகளும் செயல்களும் இதில் உள்ளன.

    குறவனை மையப்படுத்திக் குளுவ நாடகம் என்ற ஒன்றும் எழுந்தது. குறத்திப் பாட்டும் கலம்பகத்து உறுப்பாகிய குறமும் சேர்ந்து குறம் என்ற வடிவத்தையும், குறவன் குறித்த செய்திகளைத் தரும் குளுவ நாடகமும் குறமும் சேர்ந்து குறவஞ்சி என்ற வடிவத்தையும் அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குளுவ நாடகம் காலத்தில் பிற்பட்டது என்று கருதுவாரும் உண்டு. இவ்வகையில் மீனாட்சியம்மை குறம் முதல் குறமாகவும், கும்பேசர் குறவஞ்சி முதல் குறவஞ்சியாகவும் கருதப்படுகிறது.

    ஏறத்தாழ பதினெட்டு குறங்களின் பெயர்கள் கிடைக்கின்றன. வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, குறவஞ்சி என்று குறிக்கப்பட்டாலும் குறமே ஆகும். கிடைக்கும் குறங்களுள் தர்மாம்பாள் குறம் பல்வகைச் சிறப்புகளையும், தனித்த கூறுகளையும் கொண்டதாக உள்ளது.

    தர்மாம்பாள் குறம் வி.எஸ்.வாலாம்பாள் என்பவரால் இயற்றப்பட்டிருக்கிறது. இக்குறம் 1915இல் முதல் பதிப்பும், 1938இல் இரண்டாம் பதிப்பும், 1947இல் மூன்றாம் பதிப்புமாக மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இதிலிருந்தே இக்குறம் பரவலாகப் பாடப்பட்டு வழக்கிலிருந்ததை உணர முடிகிறது.

    தர்மாம்பிகையே குறத்தியாக வந்து காவேரி அம்மனுக்குக் கடலரசனை அடைய அருளியதாக இக்குறம் அமைந்துள்ளது. கிளைக் கதையாக பஞ்சநதீசர் – தர்மாம்பிகை இணையும் கதையும் காணப்படுகிறது.

    இக்குறம் கண்ணிகளாக அமைந்துள்ளது. நிகழ்வுகள் உட்தலைப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. திருவையாற்றுப் பகுதியில் இக்குறம் பெண்களால் தங்கள் நாள் வழிபாட்டில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களோடு பாடப்படுவதை இக்கட்டுரையாளர் கேட்டிருக்கிறார்.

    அக்காலத்தில் இத்தகைய பாடல்கள் மெட்டுக்கள் என்று அழைக்கப்பட்ட இசையமைப்பு முறையாலேயே குறிக்கப்பட்டன. சான்று: ஆண்டிப்பண்டாரம் மெட்டு, பாம்பாட்டி மெட்டு, ஆறுமுக வடிவேலவனே மெட்டு. இவை ஆழ்ந்த இசை ஞானம் இல்லாதவர்களையும் எளிமையாகப் பாடவைத்தன.

    இக்குறத்தில், மூன்று மெட்டுக்கள் குறிக்கப்பட்டாலும், அவை எந்த மெட்டு என்று குறிக்கப்படாததால் பாடுபவர்களே மெட்டுக்களைப் பாடல்கலின் அமைப்பிற்கேற்ப உணர்ந்து பாடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒருவகையான ஓதும் (RECITATION) முறையிலும் இவை பாடப்பெற்றன. அந்த ஊர் குடும்பத்துப் பேச்சு நடை இக்குறம் முழுவதும் விரவி வருவதைக் காணமுடிகிறது.

    கடவுள் வணக்கத்துடன் தர்மாம்பாள் குறம் தொடங்குகிறது. கணபதி, சரசுவதி, ஆறுமுகவேலவன் ஆகியோர் வேண்டப் படுகிறார்கள். லோபாமுத்திரை காவேரி நதியாகி, அகத்தியரைப் பிரிந்து சஹ்யமலையில் பிறந்து சமுத்திரருக்கு மாலையிட வருகிறாள். குடகு மலையிலிருந்து ஐயாறு வரை அவள் வரும் அழகு ஒரு சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அமராவதி, பவானி, லட்சுமணா, ஹேமவதி, காஞ்சனா என்னும் தோழிகளைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு வருகிறாள்.

    “…………………………………………………………………..
    உயர்ந்துவரும் நுரையழகும் உத்ஸாகக் கொந்தளிப்பும்
    பெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்
    குயில்கூவி குதூகலிக்க குளிர்ந்தகாற்று வீசிவர
    சோனைதூரத் தென்றல்வீச சிறந்தநதி யாகவந்தாள்
    கனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்
    வாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்
    ………………………………………………………………….
    வயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்
    அறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத்தோடு வந்தாள்.”

    காவேரி திருவையாற்றுக்கு வந்த செய்தியை ஆட்கொண்டார் அம்பிகைக்கு அற்விக்கிறார். அம்பிகை, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்களைத் தட்டினில் வைத்துக் காணிக்கையாக அளித்து, காவேரியை வரவேற்கிறாள். காணிக்கையைப் பெற்றுக் கொண்ட காவேரி, அம்பிகையை வணங்கி, தான் சமுத்திரரை அடைய மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்படி வேண்டுகிறாள்.

    கல்யாணி தேவியோ, “சமுத்திரரை இங்கேயே வரவழைக்கிறேன்; மகிழ்ச்சியுடன் இருப்பாய்” என்று கூறுகிறாள். அதைக் கேட்டுக் கலங்கும் காவேரி, உடலை அங்கு வைத்துவிட்டு, சாட்சியாக ஓர் உருவம் எடுத்துக் கொண்டு கடலை நோக்கிச் செல்கிறாள். சமுத்திரரோ அம்மனின் கட்டளைப்படி, பாதாளத்தில் மறைந்து கொண்டு ஊரின் நடுவே வருகிறார். மகிழ்ச்சியுடன் வந்தால் உலகமெல்லாம் மூழ்கிவிடுமாம். சப்தஸ்தான சுவாமிகளும் வரவேற்று அளித்த மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு சமுத்திரரும் போய் மறைந்து விடுகிறார்.

    சாட்சி என்னும் காவேரி கடலில் போய்த் தேட, அங்கு சமுத்திரர் இல்லை. திரும்பி வந்த காவேரி மனம் தளர்ந்து சமுத்திரரை அடைய வேண்டி, தர்மாம்பிகையை நினைத்து திருவையாற்றில் கன்னிகையாகத் தவம் இருக்கிறாள். அறம்வளர்த்தாள் அவளைப் பரிகசிக்கக் குறத்தி வடிவம் எடுக்கிறாள்.

    குறத்தியாகிய தர்மாம்பிகை அணிந்துள்ள நகைகள் பாதாதி கேசம் வரை வருணிக்கப்படுகின்றன. அவள் அழகும் உருவ வருணனையும் சரளமாக வருகின்றன. ஐயாற்று வீதியில் வரும் குறத்தியிடம் ஊர்ப்பெண்கள் குறி கேட்கிறார்கள். மருந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு இங்கிதமாகக் குறிகள் சொல்லிவிட்டு ஆலயம் சென்று கைலாசநாதரைத் தரிசித்து வந்து பின் குறிகள் சொல்வதாகக் கூறி, ஆலயத்திற்குச் செல்கிறாள். சுவாமி சந்நதித் தூணில் சாய்ந்து அமர்ந்திருக்கும் குறத்தியின் அழகைக் கண்டு பிரமித்த காமனை நீராய் எரித்த சிவன் அவள் மீது மோகம் கொள்கிறார்.

    தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு (இந்த வர்ணனையும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளது) குறத்தியிடம் வருகிறார்; அவள் யார் என்று வினவுகிறார். அவள் விவரிக்கிறாள்.

    “……………………………………………………………………
    ஜாடியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் நாங்கள்
    சாம்ப பரமேசருக்கும் சம்பந்தங்களுண்டு
    அப்பன் ஆயிஎன்னை அம்பிகையென் றழைப்பார்
    என் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை
    குச்சுக்குக் காவலாயென் கிழவனாரும் இருப்பார்
    கூடைமுறம் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்
    ………………………………………………..”

    “உன் கணவன் கிழவனென்று சொன்னாயே, கந்தருவன் போன்ற நானே உன் அழகுக்கு ஏற்றவன்” என்று கம்பீரமாகச் சொல்கிறார். அவள் சினந்து இதனை மறுக்கிறாள். தன்னுடைய வளமான வாழ்க்கையை விவரித்து,

    “இதைக் கேட்டல் என் கணவன் ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெரிவார்,
    ஆசைபெரி தென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்
    அறம் வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பாள்”

    என்று கூறுகிறாள். பிறகு குறத்தி தன் பெருமைகளையும், மலை வளத்தையும், நாட்டு வளத்தையும் ஈசருக்கு உரைக்கிறாள். இவற்றைக் கேட்கும் சரசுவதியும் லெட்சுமியும் காவேரியிடம் கூற, அவள் சகியை அனுப்பி, குறத்தியை அழைத்து வரச் செய்கிறாள். அதன்படியே குறத்தி திருக்காவேரிக் கரைக்கு வருகிறாள். காவேரியும் குறத்தியின் அழகைக் கண்டு திகைத்துப் போகிறாள். அவளுக்குக் குறி சொல்கிறாள் குறத்தி. அவள் யார் என்பதைக் கூறிவிட்டு, அவள் சமுத்திரரை அடைவாள் என்றும் கூறுகிறாள். மாதந்தோறும் காவேரியின் நிலை எப்படி மாறுகிறது? இதோ:

    “மார்கழி மாதத்தினில் மணல் மேடு இடுவாய்
    மடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்
    ஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து
    ஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்
    வைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி
    வையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்
    ஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்டால்
    அப்போது நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்!”

    அவள் குறி சொல்லும் நேர்த்தியையும் அவள் முகத்தையும் கண்ட சங்கரர் தன்னை அடையும்படி கேட்கிறார். குறத்திச் சீறிச் சினக்கிறாள். அவள் துடுக்கான வார்த்தைகளைக் கேட்ட சிவசங்கரர் பார்வதிதான் வந்தாளோ என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார். அம்பிகையைத் தேடுகிறார்கள். அவளை எங்கும் காணாமல் சங்கரர் புலம்பி அழுகிறார். எல்லோரும் சுந்தரி சுந்தரி என்று அனற்றுகிறார்கள்.

    சரசுவதியும் லெட்சுமியும் குறத்தியிடம் ஓடிச் சென்று சங்கரியாளை அழைத்துத் தரும்படி கேட்கிறார்கள். அவையிலுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும் கண்டு இரங்கி குறத்தி, சங்கரர் கரத்தைப் பிடித்து அவர்தம் அரிய செயல்களைக் கேலியாகக் குறி சொல்கிறாள்.

    அவள் பரிகசித்துக் கூறக் கேட்ட மகாதேவர் குறத்தியைக் கண்டு இச்சைப் பட்டது தவறு என்று உணர்ந்து கொள்கிறார். சங்கரரின் வாட்டம் கண்ட சங்கரி தன்னை வெளிப்படுத்தி இறைவன் அடி பணிகிறாள். பலி ஸ்ருதி, மங்களத்துடன் தர்மாம்பிகை குறம் நிறைவு பெறுகிறது.

    (ஓம் சக்தி இதழ் 2005ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)

    Share
  • தமிழ் படும் பாடு

    ஆர். எஸ். மணி

    நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது கிழக்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Grid Zawadski என்னும் பெண் என்னுடைய ‘பேனா தோழி’ யாக இருந்தாள். அவளுக்கு கடிதம் மூலம் தமிழ் சொல்லித்தர முயன்றபோது, தமிழின் ஒலிகளைப் பற்றி விளக்க முயன்றேன். அதன் விதிகளை விளக்கிச் சொல்ல எனக்கு யாரும் இல்லாததால் நானே எழுத்துக்களையும் வார்த்தைகளையும் உச்சரித்துப் பார்த்து, பார்த்து விதிகளை எழுதினேன். ஆறு வல்லினங்களும் ஆறு மெல்லினங்களை மணந்து இல்லற வாழ்க்கை நடத்துவதைக் கண்டேன். அவைகளுக்கு ஒன்றுக்கும் மேலே உச்சரிப்பு இருப்பதையும், அவை ஒரு விதியின்படி நடப்பதால், ஆங்கிலம் போலில்லாமல், இன்னொருவர் சொல்லிக் கேட்காமலேயே வார்த்தைகளை உச்சரிக்க முடியும் என்பதையும் பார்த்தேன். மனைவியுடன் வரும் கணவன் இனிமையாக நடந்துகொள்வதைப் போல, தான் மணந்த மெல்லினத்தை அடுத்துவரும் வல்லினங்கள் மென்மையாவதையும், தமிழின் இனிமையே ‘ழ’வில் இருப்பதையும், அதை மொழியின் பெயரிலேயே வைத்திருக்கும் ‘அழகை’ வியந்தேன்.

    சமீப காலத்தில் தமிழின் உச்சரிப்பைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தெலுங்கு பாடகர்கள் தமிழ் திரைப்படத்தில் பாடத்தொடங்கியதிலிருந்து, ‘சொல்லு’ என்பது ‘ஸொல்லு’ என்றும் ‘சம்மதமா’ என்பது ‘ஸம்மதமா’ என்றும் பரவலாக உச்சரிக்கப்படுவதும், ழ/ள, ல/ள, ன/ண வித்தியாசமில்லாமல் பேசுவதும் வேதனை தருகிறது.

    சில வருடங்களுக்கு முன்னே, “தமிழ்ப் பேச்சு, என் மூச்சு” என்று ஓர் இயக்கம் தொடங்கலாமா என்றுகூட நினைத்தேன். இப்போது யாரோ அப்படி ஒன்று துவங்கியிருப்பதாக நினைக்கிறேன்.

    இப்பொழுது போகும் திசையில் சென்றால் தமிழ் எப்படி மாறும் என்பதை கற்பனை செய்து ஒரு சிறு கட்டுரையைப் சில வருடங்களுக்கு முன்னால் எழுதினேன். நகைச்சுவைப் போர்வையில் இருந்தாலும் மன வேதனையில் பிறந்த எழுத்துகள் இவை. அதை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

    “How Hamilton became a barber”

    or “வாழ்க வழமுடன்”

    I have always been concerned about the future of Tamil. Not in the field

    of literature – because there are quite a number of extremely capable

    scholars taking care of it – but rather Tamil’s future in the field of

    Phonetics. Although not apparent now, the problems lie in wait.

    In fact, I have already seen a glimpse of these problems, and if we do not

    immediately take the necessary steps, we will no longer recognize our

    language as it is heard or written now.

    Let me first recount a true-life story which has a lot in common with

    my concern mentioned above.

    Those of you, who lived in Madras a few decades ago, may know the story

    of the strange transformation of Hamilton into a barber. For those who

    do not, the story goes as follows:

    Hamilton was a prominent Englishman who lived in India during the

    British Raj. He was so well known that ‘Hamilton Bridge’ was named in his

    honor.

    Over the many years since the dedication, local Tamils repeated the

    name of ‘Hamilton bridge’ enough number of times to distort it

    to “அம்பட்டன் ப்ரிட்ஜ்” (Ambattan bridge). This in no way is meant

    to blame the Tamils for the metamorphosis. After all, both ‘Hamilton’

    and ‘bridge’ are foreign words to Tamil language. If the British

    could have the audacity to change திருவனந்தபுரம் to

    Trivandrum or வாராணசி to Benaras, we Tamils have every right to take

    liberties with the pronunciation of Hamilton.

    In any event, as time passed on, the city grew and with it, Madras’s

    public transport system. In fact, Ambattan bridge became one of the

    destinations for bus routes. When the transport authorities decided to name the

    bus stop, they knew enough English to translate “அம்பட்டன்” as “barber”.

    Remember that they were not acquainted with Sir (or Lord) Hamilton. As time

    had removed him from the scene, Hamilton was not present to object to the

    change of his profession either. And so, the name board on the

    front and rear of the bus read as “அம்பட்டன் வாராவதி”.

    Years later, someone in the transportation department decided to

    translate the name back into Engish. The name was promptly changed to

    “Barber’s Bridge”.

    More years passed, and a curious researcher wanted to know about

    the famous barber in whose memory the bridge had been named. It was then

    that the name Hamilton re-surfaced. Now all is well and Hamilton has been

    reinstated to his rightful place, and the barber is gone.

    Now let us turn our attention to the problem on hand.

    If you glance at the heading to this article, you will read two Tamil

    words: வாழ்க வழமுடன். ‘வாழ்க’ is fine. What is ‘வழமுடன்’? As

    we are all familiar with this famous greeting/blessing, we know that it should

    read ‘வளமுடன்’. Then why is it written differently? I initially

    thought it was a misprint. However, upon reflection, I realized the reason behind

    the grand “blessing.”

    The person who wrote the pamphlet always pronounced the letter ‘ழ’ as ‘ள’. If he were to say the words “பழுத்த பழம் பள்ளத்தில் விழுந்தது”,

    He will say, “பளுத்த பளம் பள்ளத்தில் விளுந்தது”.

    If he sits down to write the sentence, some of the ‘ள’s in his spoken words

    would be written as ‘ழ’s and some as ‘ள’s. If one is not careful, things could

    get mixed up. That was what happened in the case of “வாழ்க வழமுடன்”.

    When the word ‘Hamilton’ turned into ‘barber’, it followed this path:

    ‘Hamilton’ (English) to ‘ambattan’ (Tamil) to ‘barber’ (English).

    The changes occurred because of the corrupted pronunciation.

    There was an exchange between two different languages.

    In case of the transformation of ‘வளமுடன்’ to `வழமுடன்’, it was

    done within Tamil language itself. The reason is again, corrupted pronunciation.

    There are other persons that do not make any distinction between

    ‘ள’ and ‘ல’. I knew a man who ran a school for children in Madras.

    My children studied there for a few years. Every year, during the

    annual school day celebration, he would get up and begin his address

    invariably with the words:

    ” எங்கல் பல்லியில் படிக்கும் பில்லைகலே!”

    And it is also not uncommon to hear people getting mixed up with the

    letters ‘ண’ and ‘ன’.

    The other day, I started picturing a person having trouble with all

    these sounds. When I went to bed that night, I had an unusual dream in

    which a proud looking Tamil gentleman led me through a long corridor.

    At the end of the passage stood a large crystal ball. The gentleman

    asked me to gaze intensely into the ball, and I slowly realized that I could

    see the words: கி.பி. 2153.

    As I continued to gaze at the crystal ball, the following Tamil words appeared:

    கள் தோண்றி நின்ற காழத்திலேயே புகலோங்கி செலித்த

    நம்மொளி வால்க! வழர்க!!

    The gentleman said that if I continued to gaze at the crystal, it would

    allow me to time travel another century more into the future. There,

    I was told, I would have the rare opportunity to witness a much more

    refined form of Tamil writing. Before I could respond, I woke up from my dream.

    I am glad that it was only a dream!

    ——————————————————————————–

    Note: The above article was written in a lighter vein to emphasize

    the importance of correct pronunciation to preserve the beauty and

    integrity of our mother tongue. If it has hurt anyone even slightly, please

    forgive me.

    அன்புடன்,
    ஆர்.எஸ்.மணி
    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

    Share
  • காஞ்சி மகா பெரியவாளும் காமாட்சி அன்னையும்!

    சுவாமிநாதன்

    அன்புடையீர்,

    நமஸ்காரம்.

    Cd release group

    ‘காஞ்சி மகா பெரியவாளும் காமாட்சி அன்னையும்’ மற்றும் காஞ்சி மகா பெரியவாளும் அன்னதான மகிமையும்’ என்கின்ற இரண்டு ஆடியோ சி.டி-க்கள் ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் கடந்த 12.9.2013 வியாழன் அன்று இறையருளாலும் குருவருளாலும் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டன.

    திருவாளர்கள் ஏ.எம். ராஜகோபாலன் (ஆசிரியர், குமுதம் ஜோதிடம்), ஒய். பிரபு (ஸ்ரீகிருஷ்ண கான சபா), டெக்கான் மூர்த்தி (வாணி மஹால்), சுகி. சிவம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, மகா அவதார் பாபாஜி பக்தர் பெங்களூரு ஹரி, இசைக்கவி ரமணன், கண்ணன் விக்கிரமன், ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆர். தியாகராஜன் (ஓய்வு சீஃப் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்) உட்பட பல பிரபலங்கள் வந்திருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்னைப் பெருமைப்படுத்தினார்கள். இவர்கள் தவிர, மகா பெரியவாளின் அத்யந்த பக்தகோடிகள், என் நலம் விரும்பிகள் மற்றும் ஏராளமான அன்பு உள்ளங்களை அன்றைய தினம் அரங்கில் பார்த்தேன். அனைவரையும் ஒரு சேர அரங்கில் பார்த்தபோது என் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு அன்பருக்கும் நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

    எல்லாம் மகா பெரியவாளின் குருவருள் அன்றி வேறில்லை என்பதை நான் அறிவேன். முதல் இரண்டு சி.டி-க்கள் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் ‘அடுத்த சி.டி. ரிலீஸ் எப்ப?’ என்று இப்போதில் இருந்தே கேட்கத் துவங்கி விட்ட மகா பெரியவா பக்தகோடிகளுக்கு என் பணிவான நன்றிகள்.

    அடுத்த ரிலீஸ் அநேகமாக அக்டோபரில் இருக்கலாம். எல்லாம் பெரியவா அருள்தான்.

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

    அன்புடன்,
    பி. சுவாமிநாதன்

    குறிப்பு: சி.டி. தேவைப்படும் அன்பர்கள் மணியார்டர் அனுப்புவதைத் தவிர்க்கவும். அக்கவுண்ட்டில் பணம் கட்டுவது, செக், டிராப்ட் போன்றவற்றை கையாளவும். செக் அல்லது டிராப்ட் எடுப்பவர்கள் sree media works என்ற பெயருக்கு எடுத்து அனுப்பவும்.

    இரண்டு சி.டி-க்களும் ரூபாய் 198/-

    * சென்னைக்குள் இருப்பவர்களுக்கு துவக்க கட்டத்தில் மட்டும் கூரியர் செலவு இலவசம்.

    * தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் ரூபாய் 198 உடன் ரூபாய் 35-ஐ கூரியர் செலவாக சேர்த்து அனுப்பவும்.

    * பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரத்தில் இருப்பவர்கள் ரூபாய் 198-உடன் ரூபாய் 55-ஐ கூரியர் செலவாக சேர்த்து அனுப்பவும்.

    * தமிழகம் மற்றும் மேலே குறிப்பிட்ட நகரங்கள் தவிர இந்தியாவின் இதர பகுதிகளில் வசிப்பவர்கள் ரூபாய் 198 உடன் கூரியர் செலவாக ரூபாய் 65 சேர்த்து அனுப்பவும்.

    kumudam jothidam CD

    ‘காஞ்சி மகா பெரியவாளும் காமாட்சி அன்னையும்’ மற்றும் ‘காஞ்சி மகா பெரியவாளும் அன்னதான மகிமையும்’ என்கிற இரு தலைப்புகள் நான் சொற்பொழிவாற்றி வெளியிட்டுள்ள இரண்டு சி.டி-க்களைப் பற்றி ‘குமுதம் ஜோதிடம்’ வார இதழில் என் மரியாதைக்குரிய ஸ்ரீமான் ஏ.எம்.ராஜகோபாலன் அவர்கள் மதிப்புரை வழங்கி உள்ளார்கள்.

    அதன் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்.

    அன்புடன்,
    பி. சுவாமிநாதன்

    Share
  • குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

    பவள சங்கரி

    DSC09812-167x300ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக விவேகானந்தரும் இளமை முதலே காசியில் இருக்கும் கைலாயநாதரின் தவக்கோலத்தை சிலையுருவில் விரும்பி வழிபட்டதால் தானும் துறவியாக வேண்டும் என்பதில் நாட்டம் அதிகமானது. தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டு தன் ஆன்ம சக்தியையும் பெருக்கிக் கொண்டிருக்கிறார். பாம்பு ஊர்வது கூட அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். இந்த ஆத்ம ஞானம் பலருக்கும் வழிகாட்டியாக, ஆசைக் கடலில் அகப்பட்டு அல்லற்பட இருந்தோரை  மீட்டு இறைவழியில் செலுத்தி நித்திய இன்பம் காணச்செய்தது.

    இதெல்லாம் இருக்க, இன்றும் இளம் வயதிலேயே துறவறம் வாங்குவதென்பது,, குடும்பத்தையும், உலகியல் இன்பங்களையும் விட்டு ஒரு குறுகிய எல்லைக்குள் தங்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக தோற்றம் ஏற்படுத்துகிறது. வெகு சமீபத்தில் அப்படி ஒருவரைச் சந்தித்தபோது என்னுள் எழுந்த பல கேள்விக்கணைகளுக்கு  பொறுமையாக அவர் பதில் சொன்னவிதம் ஏதோ இருப்பதை உணர்த்தத்தான் செய்தது. மீனாட்சி இன்று குகப்பிரியானந்தாவாகி, விரைவிலேயே , இன்னும் ஓராண்டுகால படிப்பு முடிந்தவுடன்,  பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதன் அச்சாரமாக  சித்த வித்தியானந்தா  என்ற பட்டத்தையும் வெல்லப்போகும் இவருக்கு இந்த எண்ணம் தோன்றியது தன் 13 வயதில் என்கிறார். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களின் ஆசிரமத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இவரைச் சந்தித்தபோது, வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டியவர் என்பதில்லாமல், ஒரு தோழமை உணர்வே ஏற்பட்டது. ஒரு சிறு வியாபாரியின் மகளாக, வேலூரில் பிறந்து வளர்ந்த இவருக்கு, துறவறம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளும் தேடல் ஆரம்பித்திருக்கிறது. வேலூரில் அடிக்கடி வாரியார் சுவாமிகளின் சமயச் சொற்பொழிவு நடைபெறும் காலம் அது. மாலை நேரங்களில் இது போன்று எங்கு சமய சொற்பொழிவுகள் நடந்தாலும் தவறாது கலந்து கொள்வது வழக்கமாகியிருக்கிறது. பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவறத்தில் ஈடுபடும் எண்ணம் தோன்றியிருக்கிறது. துறவறத்திற்கான மிகவும் இள வயது என்பதால் ஒரு வருடம் குழந்தைகள் பள்ளியில் சேவை செய்துகொண்டு பயிற்சி எடுத்தபின்பு மடத்தில் சேரலாம் என்றிருக்கிறார்கள். ஒரு வருடம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு சில அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் சேலம் சாரதா கல்லூரி மடத்தில் சென்று தன்னை இணைத்துக்கொண்டு பி.ஏ. வகுப்பில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் முடிப்பதற்குள் பிரம்மச்சரியத்திற்கான அடிப்படை பயிற்சிகள் அனைத்தும் முடித்து, பகவத்கீதை, வேதாந்தம் என ஓரளவிற்கு தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். சேர்ந்த புதிதில் ஒரே வண்ண மஞ்சள் நிற சேலை மட்டுமே உடுத்த வேண்டும். அதன் பிறகு 10 ஆண்டுகள்  சைதன்யா என்கிற வெள்ளை சேலையில் சிகப்பு கரை  வைத்த  சேலை உடுத்த வேண்டியிருந்தது.  பின் 2000ம் ஆண்டில்  தன்னுடைய 35 வது வயதில் பிரம்மச்சரிய தீட்சை எடுத்த பின்பு காவி உடை வழங்கப்பெற்றிருக்கிறார். புருச சுத்தம் நாராயண சுத்தம், பிரம்ம சுத்தம்,  தேவாரம் திருவாசகம், இராமலிங்க அடிகளார், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற அனைத்திலும் தேர்ந்த ஞானம் கொண்டிருக்கிறார் அம்மையார்.

    அன்றாடம், விடியற்காலை 4. 30 மணி முதல்  5.30 வரை பிரார்த்தனை செய்து, 5.30 முதல் 6.30 வரை பூ பறித்தல், பின் 7.30 மணி வரை உடற்பயிற்சி யோகா என அனைத்தும் முடித்து, 7.30 மணி முதல் 8 மணி வரை  சுவாமி சித்பவானந்தா அவர்களின் விளக்க உரைகளுடன் மந்திர உச்சாடணைகளை  முடித்து காலை 8 மணிக்கு காலை உணவு, அதன் பின் 9 மணிக்குள் அவரவர் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டும். 12.30 முதல் 2 வரை ஓய்வு பிறகு மீண்டும் மதியப் பணிக்குத் திரும்ப வேண்டும். மாலை 5 முதல் 6.30 வரை பிரார்த்தனை 7 மணி முதல் 7.30 வரை  மடத்திற்குள் இருக்கும் பணிகள்,. 8 மணி  வரை தியானம். அதற்குப் பிறகு இரவு உணவு, பின் ராமகிருஷ்ணர் உபதேசம், ஏனைய மகான்கள் வாழ்க்கை முறைமைகள் பற்றிய உபதேசம். 9.30 வரை நடக்கும் . பிறகு 10 மணிக்கு உறக்கம். அடுத்த நாள் இதே வழமையாக நின்று, நிதானிக்க, யோசிக்க நேரமில்லாத இடைவிடாத இறைப்பணி.  கைக்குத்தல் அரிசி, மசலா பொருட்கள் தவிர்த்த கட்டுப்பாடான உணவு. குறிப்பிட்ட காலங்களுக்கொரு முறை   பணியிடம் மாற்றம்.  இதுவரை 11 பணியிடங்கள் மாறியிருக்கிறார்.

    தற்போது ஆணைக்கட்டியில் உள்ள தயானந்த சரசுவதி ஆசிரமத்தில்  இருக்கிறார்.  இங்கு முழுவதும் தத்துவார்த்த வகுப்புகளுக்குத்தான் முதலிடம் என்கிறார்.  தன்னுடைய மதம் சார்ந்த கொள்கையை அறிந்து கொள்ள வேண்டியே ஒருவர்  வேதம் படிக்க வேண்டியது  அவசியமாகிறது.  சங்கர பாஷ்யம் என்ற மூல நூலிலிருந்து கீதை விரிவுரைகள், பதவுரைகள்  தயானந்த சுவாமிஜி பாரம்பரியத்தோட சொல்லிக்கொடுப்பதற்கு. ஈடு இணை இல்லை என்கிறார். வெளிநாட்டவர் 50 க்கும் மேற்பட்டவர் வந்து நமது வேதமும், கலாச்சாரமும் கற்று கொள்கின்றனர் என்பவர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து வேதம், சமஸ்கிருதம் மற்றும் நம் கலாச்சாரம்  பற்றி படிக்க வருபவர்களுக்குத் தேவையான உதவியை அவர்களுடைய அரசாங்கம் வழங்குகிறதாம். ஆனால் நம் நாட்டில் அது போன்ற உதவியோ, அல்லது கிருத்துவ மதம் மற்றும் இசுலாமிய மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு உதவுவது போல நம் இந்து மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. இந்திய பொருளாதாரமே அதற்கு எந்த விதத்திலும் சாதகமாக  இல்லை என்கிறார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வந்தும்  சந்நியாசம் வாங்குகிறார்களாம். அதற்கு அவர்கள்   முதலில் சட்டப்படி விவாகரத்து வாங்கினால்தான் செல்லுபடியாகும் என்ற ஆச்சரியமான தகவலும் கொடுக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற்ற பின்பே சந்நியாசம் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

    இத்துனை சிரமப்பட்டு பெறும் சந்நியாசத்தினால் மக்களுக்கு என்ன பயன் என்பதே நமது சந்தேகம். இதை அவரிடமே நான் கேட்டபோது, அவருடைய தெளிவான பதில், “வேதாந்தம் என்பது  அடுத்தவருக்கு சொல்லித்தருவதற்காக  படிப்பது அல்ல. பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் வந்து கேட்போருக்குச் சொல்லிக் கொடுத்தால் போதும்.. உன்னதமான  வேத பாடத்தை அப்படி எளிதாகப் பெற  முடியாது. அதற்கான தகுதியுடையவர்கள் மட்டுமே அதனை உணர்ந்து கற்க முடியும் ” என்பதே எங்கள் குருவின் வாக்கு என்கிறார்.

    ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்றால் இப்படி இத்துனை வேதப்பாடம் அனைத்தும் கற்பதோடு நின்று அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகிறதே, என்று கேட்டபோது,

    பிரேமானந்தா,  நித்தியானந்தா, சங்கர் பாபா, கல்கி போன்ற விஷப்பூடுகளின் வளர்ச்சி உண்மையில் நல்லனவற்றை பகுத்தாய்ந்தறியும்  சக்தியை பாழாக்குகிறது. அதனால் மக்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதால் எங்களாலும் எளிதாகச் சென்று மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போகிறது. குறிப்பாக வட நாடு மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் இருப்பதைக்காட்டிலும், தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது, என்கிறார். தங்கள் குருவின் வாக்குப்படி,  ‘காடு முழுவதும் முட்கள் நிறைந்திருக்கும் போது அதனைச்  சுத்தம் செய்ய ஒருவருக்கு ஒரு பிறவி போதாது. அதனால் செருப்பு போட்டுக்கொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம். அறியாமை மட்டுமே இன்றைய  இத்தகைய நிலைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.  அந்த அறியாமை முதலில் விலக வேண்டும். அதற்கு தெளிவான சிந்தனை வேண்டும். நம்மைச் சுற்றி தெய்வீக அலை பரவ வேண்டும். சந்நியாசிகளைச் சுற்றி இருக்கும் அந்த தெய்வீக அலை பல மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்று இவர் சொல்வதை முழுமையாக ஏற்க மனம் ஆதாரத்தைத் தேடுகிறது! கர்ம யோகமோ, பக்தி யோகமோ அல்லது ஞான மார்க்கமோ, எதுவாயினும் அவரவர் தர்மப்படி வாழ  வேண்டும் என்பதே கீதை. காட்டும் பாதை. எடுத்துக்கொண்ட வாழ்க்கையை  முறைப்படி வாழ வேண்டும்.

    இறுதியாக  சித்து வேலை என்று அம்மையார் வர்ணித்த விசயங்கள் பற்றி மீண்டும் கேட்டபோது, லிங்கம், திருநீறு போன்றவைகள் வரவழைக்கும் வித்தகம்  பார்ப்பதற்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும் தென்படலாம்.  ஆனால் அது தெய்வ சக்தியின் உச்ச நிலையை அடைவதற்கு பெருந்தடையாக இருக்கக்கூடியது. அதாவது, முள்ளுச் செடியைச் சாப்பிடும் ஓட்டகம்  தன் இரத்தத்தின் சுவைதான் அது என்ற உணர்வே இல்லாமல் அதை இரசித்து  ருசித்து, மேலும், மேலும் உண்ணுகிறது. அது போலத்தான் இந்த சித்து விளையாட்டும், தன் சக்தியை தானே சுவைத்து மேற்கொண்டு உன்னத நிலைக்குச் செல்வதற்கு தடையேற்பட தானே காரணமாகிவிடுகிறார்கள். ஆனால் பொது நலம் கருதி, தன் சுயநலம் தவிர்த்து, சித்து மூலம் மானுட சேவையில் சிறந்து விளங்குவதும் ஒரு வகையில் பாராட்டுக்குரியதோ என்று கேட்டபொழுது, இப்படி எண்ணுவது முழுமையான அறியாமை என்கிறார். இந்த அறியாமை இருளைத்தான் போக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம் என்கிறார். சந்நியாசம் பெறுபவர்கள் இந்த ஆன்ம பலத்தைத்தான் முதலில் பெற வேண்டியுள்ளது. மக்கள் எங்களை ஏற்கும் பக்குவம் வரும்போது நாங்களும் வெளியில் வந்து சேவை செய்யக் காத்திருக்கிறோம். ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லை. போலிகள் ஏற்படுத்துகிற தீய அலைகளின் தாக்கம் முற்றிலும் மறைய வேண்டும் என்கிறார்.

    “நம் இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது  ஆன்மீகம் . இதனாலேயே  தான் நம் இந்தியா சீரும், சிறப்புமாக வாழுகிறது. அந்த சக்தி என்றென்றும் நம் நாட்டை வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை. எவரும் வந்து வாழ வைக்க வேண்டிய நிலையில் நம் இந்தியாவும், நம்முடைய இந்து மதமும் இல்லை. இதனை வெளிநாட்டவர் புரிந்து கொண்டுள்ள அளவிற்கு நம் நாட்டவர் உணரவில்லை என்பதுதான் வேதனை. அவர்கள் நம் நாட்டிற்கு வந்து, மூன்று மாதங்களுக்கு மேல் வாழத் தகுதியில்லாவிட்டாலும், திரும்பத் திரும்ப சிரமப்பட்டு விசாவை புதுப்பித்துக்கொண்டு, தங்கியிருந்து நம் வேதங்களையும், கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், பணிவுடன் கற்றுக் கொள்வதோடு தங்கள் நாட்டிலும் சென்று நம் கலாச்சாரத்தின் பெருமையை பரவச் செய்கிறார்கள் என்பதே நாங்கள் காணும் உண்மை நிலை. ஆனால், 5000 – 10,000 ஆண்டுகள் பழமையான  நம் பாரம்பரியத் தத்துவங்களை முழுமையாகப் படித்துணர்ந்து, அதனை ஆத்மார்த்தமாக, தவறின்றி  சொல்ல சரியான ஆளில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதுதான் அறியாமை எனும் கழிவுகள் நிறைந்த பாத்திரமாக மாறி இருக்கிறது. தப்பைச் சொல்லி புரிஞ்சிக்கிட்டிருக்காங்க.. காலிப் பாத்திரமாக இருக்கும்போது நல்லவைகளை நிரப்ப எளிதாக இருக்கும். ஆனால் இன்று அல்லவைகளை வெளியேற்றவே பல காலம் வேண்டும் போல் உள்ளது. பகவானின் அருளால் அது நடக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்கிறார்.

    ஆரம்பத்தில் தோழமை உணர்வு மட்டுமே உந்தித்தள்ள அதன் போக்கிலேயே அமைந்த காரசாரமான விவாதங்கள், இறுதியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியது. ஒரு வேளை இதைத்தான் தெய்வீக அலை என்கிறாரோ என்று எண்ணத்தோன்றியது. நல்ல சுத்தமான எண்ணங்கள்தானே தெய்வீக அலை என்பது? என் பாத்திரத்தை காலியாக்கிக்கொண்டு, காலில் விழுந்து ஆசி பெற்று திரும்பினேன்.

    —————-

    நன்றி : திண்ணை

    Share
  • தொட்டுப் போகும்

    —ஆர்.எஸ்.மணி

    நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம்.

    எதை நாம் கவனிக்கிறோம் என்பது, வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.

    அதோடு மட்டுமல்ல. எந்த ஒரு பொருளையும் பார்க்கும்போது பார்ப்பவர் எல்லோருக்கும் ஒரே விதமான எண்ணம் எழுவதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வேறுபட்ட எண்ணங்கள் எழும். கலைஞன் கலைக்கண்ணோடு பார்ப்பான். வியாபாரி விலைக்கண்ணோடு பார்ப்பான்.

    அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அழகாகத் தொகுத்து ஒரு கவிதையாகப் புனைந்திருக்கிறார். என்னைத் தொட்ட அந்தக் கவிதையை இசையில் அமைத்து இங்கு இட்டிருக்கிறேன்.

    —ஆர்.எஸ்.மணி
    (கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

    காணொளி: http://youtu.be/JgArHotZTPE

    திரு.அண்ணாகண்ணனுடைய கவிதை:

     

    “தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்”

    குரல் மின்னிடும் இசை உன்னதம்
    உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
    கரு வண்டினம் வலம் வந்திடும்
    அரு மலர்வனம் அதன் நறுமணம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    அருள் தூறிடும் அமுதூறிடும்
    பொருள் மீறிடும் புதையல் தடம்
    தலையாட்டிடும் மழலை மனம்
    தாலாட்டெனும் தனி மந்திரம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    சிலை சித்திரம் நடை நாடகம்
    ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
    உரு மாறிடும் நிழல் ஓவியம்
    கலை மேவிடும் மலை மாருதம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    கரை யாவையும் கரைத்தே எழும்
    சிறை யாவையும் மறுத்தே எழும்
    குறை யாவையும் அறுத்தே எழும்
    நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
    சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
    மனம் ஆடிடும் குடை ராட்டினம்
    களி காதலின் துளிப் பாற்கடல்

    தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

    ——————————————————————————-

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    சமூக அக்கறை என்பது நம் மக்களிடம் மிகவும் குறைந்து போய்விட்டது என்பது கவலையான செய்திதான்.. நாம் வாழும் இக்காலம்தான் இப்படியா.. அல்லது வருங்காலம் இன்னமும் மோசமாக இருக்குமா என்பது இன்னமும் கவலையாக உள்ளது.

    ஆந்திராவில் கடந்த பத்து வருடங்களாக நான் கவனித்து வரும் விஷயம் இந்த ஆரம்ப நிலைக் கல்விக்கூடங்கள் எப்படியெல்லாம் குழந்தைகளைக் கஷ்டத்தில் உள்ளாக்குகின்றன என்பதைத்தான். காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் கல்வி அந்தக் குழந்தையை இரவு 8 மணி வரை அங்கேயே உட்கார வைத்து பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள் (லீவு நாட்கள் கூட). இது ஒரு விதத்தில் அந்தப் பிள்ளைக்கு பாடத்திலே மட்டும் கவனம் செய்ய உதவுகிறது என்றாலும் அந்தக் குழந்தைக்கு வெளி உலக அனுபவம் இல்லாமலே செய்கின்றன என்ற மாபெரும் உண்மையை பெற்றவர்களும் மறந்துவிடுகிறார்கள்.

    gurujiஇன்றைக்கு ஐ.ஐ.டி போன்ற வெகு கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஆந்திர மாணவர்கள்தான் அதிகம் தேர்ச்சி பெற்று தகுதி பெறுகிறார்கள் என்பதற்கு இந்த கடினமான படிப்பு முறை ஒன்றே முறையானது என்று கல்வி கற்பிப்பவர்கள் இங்கே அறைகூவலிட்டு பெற்றோர்களையும் ‘கன்வின்ஸ்’ செய்து விடுகிறார்கள். ஐ.ஐ.டி யில் படிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இளமையில் வாழ்க்கையின் பல சுவையான கட்டங்களை இழந்த மாணவனுக்கு எதிர்காலம் என்பது எப்படிப்பட்ட சுவையான வாழ்வைக் காண்பிக்கும்? எப்படி அவன் வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளப் போகிறான். ஐ ஐ டி படிப்பு ஒன்றே அவன் வாழ்வில் எல்லா நிறைவுகளையும் கொடுத்து விடுமா? கேள்விக்கு யார் விடை சொல்வது என்று புரியவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் வல்லமையில் ஒரு அழகான கட்டுரை ஒன்று வந்துள்ளது!! இக் கட்டுரையை எழுதியவர் திரு. குரு பிரசாத்.

    ஆறரை மணி பஸ்ஸை பிடிக்க ஒவ்வொரு குழந்தையும் காலை நாலரை மணிக்கு எழுந்து டாய்லெட் போயி, குளித்து ஏதோ ஒன்றை வயிற்றில் அந்த விடியற்காலையில் அடைத்து, யூனிபார்ம், ஷூ, சாக்ஸ் என்று அடித்து பிடித்து பஸ்ஸை பிடிக்கிறது. ஒவ்வொரு குழந்தையாக ஏற்றி அந்த பஸ் எட்டரை மணிக்கு பள்ளி சேர்கிறது. ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் பணி மூன்றரை நாலு மணிக்கு முடிகிறது. அதன்பின் மீண்டும் ஒரு மணிநேர பேருந்து பயணம். ஆறு மணிக்கு அந்த குழந்தை மீண்டு ஹோம்-ஒர்க், ப்ராஜெக்ட் ஒர்க், அசைன்மென்ட் ஒர்க் என்று எல்லா வேலைகளையும் முடிக்கும்போதே மணி நிச்சயம் பத்தை நெருங்கும். தூக்கம் சொக்கும். எப்போது படிக்கும்? இதில் சனிக்கிழமை வேறு பாதி நாள் பள்ளிக்கூடம் சிலர் முழு நாள் வேறு!

    ஸ்ட்ரெஸ், ஹைபர்டென்ஷன், ப்ரெஷர் எல்லாம் ஏதோ ஐ.டி. ஃபீல்ட் சமாச்சாரம் என்று நினைத்திருப்பவர்களே. அதெல்லாம் இப்போ​தே எத்தனை மடங்கு அனுபவிக்கிறார்கள் இந்த குழந்தைகள் என்று தெரியுமா?

    எவ்வளவுக்கு எவ்வளவு இத்தனை அதிக சுமை/துக்கம்/டார்ச்சர் எல்லாம் இருக்கிற​தோ அந்த அளவு சிறப்பான பள்ளி/உயர்ந்த பள்ளி என பெற்றோர்கள் நினைப்பது தான் இந்த குழந்தைகளை மேலும் வதைக்க உதவுகிறது.

    நாமக்கல் புகழ் ப்ராய்லர் கோழி மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை முன்மாதிரியாக வைத்து தமிழகம் முழுவதும் வளர்கின்ற மாணவர்கள் வெறும் மதிப்பெண் சார்ந்த கல்வியை பெற்று மனப்பாடம் செய்து வாங்கும் மார்க் மூலம் கவுன்ஸ்லிங்கிலோ அல்லது தந்தை தரும் காசிலோ பொறியியல் (பி.ஈ) சேர்ந்த பின் தான், தான் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பதையே உணர்கிறான். ஆனால் அப்போதும் இதை அவன் தந்தை உணர்வதில்லை. மீண்டும் அதே பாணி படிப்பில் (வேறு வழி…பாதி புரியாதபோது!…) எப்படியோ டிகிரி முடித்து கரூர் வைசியா பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் என வங்கி குமாஸ்தாவாகிறான்.

    கணக்குப் பிள்ளையாகவா தன் இளமையை தொலைத்து கனவை விற்று இத்தனை சித்ரவதை, வசை எல்லாம் அனுபவிக்கணும்?

    ஒரு காலத்தில் “ப்ரஃபஷனல்” கோர்ஸில் சேர்வது பெருமை. ஏனென்றால் அவர்கள் வேலைக்குத்தான் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனியாக ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கும் விதம் சம்பாதிக்கலாம். டாக்டர், வக்கீல், ஆடிட்டர் மற்றும் எஞ்சினியர்.

    இப்போது எஞ்சினியர் பெரும்பாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போவதால் பி.ஈ படிப்பு “ப்ரஃபஷனல் கோர்ஸ்” என்னும் தகுதியை இழந்துவிட்டது.

    சயின்டிஸ்ட் சிதம்பரம், சிவதாணுப்பிள்ளை, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை எல்லாம் கிராம பள்ளிகளில் தரையில் அமர்ந்து படித்த சாதாரணக் கல்வியில் அதுவும் தமிழ் மீடியத்தில் படித்து அணுவிஞ்ஞானி ஆனார்கள். ஆனால் இன்றைய இந்த போந்தாகோழி படிப்பில் எத்தனை சயின்டிஸ்ட் உருவாகி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

    சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகள், துள்ளித் திரியும் பள்ளி பருவங்கள் எல்லாம் ஏட்டில் படிக்கும் வரிகள் ஆகிவிட்டன. சிறு வயதில் நானெல்லாம் காலை 9.30 மணி பிரேயருக்கு தான் செல்வேன். நாலு மணிக்கு வீட்டில் இருப்பேன். ஆறரை மணி வரை கபடி, கில்லிதாண்டு, கொ-கொ என சவுகிரியத்துக்கு ஆட்டம் போட்டு விட்டு ஏழு மணிக்கு கை கால் கழுவிக்கொண்டு படிக்க உட்காருவேன்.நன்றாகத்தான் படித்தோம். நன்றாகத்தான் வாழ்கிறோம்.

    வாழ்க்கை என்றால் அது விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள், சந்தோஷம் என்றால் விலை உயர்ந்த கைப்பேசி, செக்யூரிட்டி என்றால் கடனோ உடனோ வாங்கி கட்டும் அபார்ட்மென்ட் வீடு என்று எப்போது ஆக்கிக்கொண்டோமோ அப்போதே நம் குழந்தையின் சுதந்திரத்தை, சந்தோஷத்தை அடமானம் வைத்துவிட்டோம்!

    வாழும் கலாச்சாரம் என்பது ஈ.எம்.ஐ. கலாச்சாரம் ஆகி விட்டது. நம் குழந்தைகளுக்கு மெத்தையை வாங்கிக் கொடுத்துவிட்டோம்! அவை தமது தூக்கத்தை தொலைத்து விட்டன!

    சிந்திக்கவைக்கும் அர்த்தமுள்ள கட்டுரையை எழுதிய திரு குரு பிரசாத் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். வல்லமையாளர் குரு பிரசாத்திற்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு. சு. கோதண்டராமன் எழுதி வரும் மாணிக்கவாசகர் பாடல்:

    குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில்

    விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்

    “உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.”

     Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Share
  • வடமுல்லைவாயில் பதிகம் 2

    SivakaamaSundhari
    வணக்கம், வாழியநலம்,

    பொன்னோ,பொருளோ, பெயரோ, புகழோ- எதிலும் நாட்டமில்லமல், அவளையே நினைந்த தினங்களில்
    அவளோடு ஒரு உரையாடல்…

    இணைப்பில், சிவகாமசுந்தரி கோட்டோவியம்

    பார்க்க,  படிக்க, ரசிக்க…

    ராகம்: ஆபேரி

    பொருள்தேடி வாழாமல்  பொழுதெலாம் வாழ்க்கைக்குப்
    பொருந்துமோர் பொருள்தேடினேன்
    பொன் தேடி அலையாமல், பெயர்,பேறு விழையாமல்
    புரியாமல் உனைநாடினேன்!
    இருள்மூடும் இகவாழ்வில் எனைஆழ்த்த முடியாமல்
    இதமான ஒளிதேடினேன்
    இதமான ஒளிகாண முடியாமல் மனமெங்கும்
    துயர்சூழ மிக வாடினேன்!
    சுருளோடும்  சடையோனின் இடபாக வடிவே உன்
    சுந்தரப்   பாதங்களில்
    சுவையான கவிகோடி மலர்தூவ நீமகிழும்
    சுகமெனக் கருளுவாயே!
    அருள்கூடும் விழிகளாம் ஆனந்த வாரிதியில்
    ஐயனை ஆழ்த்தும் அழகே!
    வடமுல்லைவாயிலில் படர் முல்லையே எனை
    வாழ்விக்க வரும் அன்னையே!

    சு.ரவி

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : (7)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அருங்காட்சியகம், ஒட்டப்பிடாரம், தமிழகம், இந்தியா.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இன்று நாம் நமது அருங்காட்சியகப் பயணத்தில் மேலும் ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறோம். நான் வசிக்கும் ஜெர்மனியின் லியோன்பெர்க் நகரிலிருந்து தமிழகத்திற்கு 7545 கிமீ தூரம் விமானம் மூலம் செல்கிறோம். எதற்கு விமானத்தில் பறக்க வேண்டும்? தமிழகத்தில் தானே இருக்கிறேன் என்று குறிப்பிடுவோருக்கு…, ஏதாவது ஒரு வகையில் பேருந்தோ, ரயிலோ எடுத்து தென் தமிழகம் வந்து விடுங்கள். அடுத்து உங்களை நான் அழைத்துச் செல்லவிருப்பது தென் தமிழகத்தில் திருநெல்வேலி நகருக்கு அருகே இருக்கும் நகரங்களில் ஒன்றான ஒட்டப்பிடாரம்!

    தமிழகத்தில் ஒட்டப்பிடாரம் என ஒரு நகரின் பெயரை 2009ம் ஆண்டு வரை நான் கேள்விப்பட்டதில்லை. வ.உ.சி எனும் பெயரும் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோரில் குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர் என்பதும் மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த நான் அதுவரை அறிந்த செய்திகள். அதற்கு மேல் இவரைப் பற்றி அவ்வப்போது வரும் சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்ததில் செக்கிழுத்த செம்மல் என்பதும் ஆங்கிலேய காலணித்துவ ஆதிக்கத்தில் கல்வி கற்ற சுதந்திர தாகம் மிக்க இளைஞராக இருந்ததோடு பலரையும் தனது ஆளுமையால் வசீகரித்து சுதந்திரச் சிந்தனைகளை ஆழமாக தமிழர் மனதில் பதிய தொண்டாற்றியவர் என்பதும் இவரைப் பற்றி நான் அறிந்திருந்த கூடுதல் செய்திகள்.

    2009ம் ஆண்டின் இறுதியில் நான் தமிழகத்தில் தன்னார்வ தொண்டூழிய நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணி செய்வதற்காக 2 வார பயணம் ஒன்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரம் சென்று அங்கிருக்கும் எட்டயபுர ஜமீன் மாளிகையைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவினைத் தயாரிக்க வேண்டும் என்பது அப்பயணத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அப்பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது எனது நண்பர் திரு.மாலன் அவர்களை அணுகி திட்டமிட ஆரம்பித்த வேளையில் எட்டயபுரம் செல்லும் முன் வழியில் ஒட்டப்பிடாரத்தைக் கடந்து சென்றால் அங்கிருக்கும் வ.உ.சி. நினைவு இல்ல அருங்காட்சியகமும் சென்று வரலாம். அது பயணத்திற்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டார். இது நல்ல யோசனையாக இருக்க நான் ஒட்டப்பிடாரத்திற்குச் செல்ல வேண்டும் என்று என் பயணக்குறிப்பில் இணைத்துக் கொண்டு தயாரிப்புக் காரியங்களில் ஈடுபட்டேன். திருநெல்வேலியில் திரு.மாலனின் இளைய சகோதரர் திரு.ஜெயேந்திரனின் இல்லத்தில் தங்கி அங்கிருந்து அவர் என்னுடன் துணைக்கு அனுப்பிய மூன்று ஆசிரியர்களையும் அழைத்துக் கொண்டு ஒட்டப்பிடாரம் பயணித்தேன்.

    ஒட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள இந்த நினைவு இல்லம் ஓர் அருங்காட்சியகம் மட்டுமன்று; ஒரு நூலகமாகவும் இது இயங்குகின்றது என்பது தனிச்சிறப்பு. உள்ளூர் மக்கள் வந்து பயன்படுத்தும் நிலையில் இந்த நூலகம் சிறப்புடன் இயங்கி வருவது பாராட்டுதலுக்குரிய விஷயம்.

    வ.உ.சி. நினைவு இல்லம் (2009)
    வ.உ.சி. நினைவு இல்லம் (2009)

    ஒரு வீடாக இருந்த இந்த கட்டிடத்தை அருங்காட்சியகமாகப் புதிதாக நிர்மாணிக்கத் திட்டம் எழ, 7.8.1957 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு.கு.காமராஜ் அவர்களால் இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கட்டிடம் முழுமையடைந்த பின்னர் 12.12.1961ல் அன்றைய முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி அவர்கள் பெயரிலேயே ரூ 80 லட்சம் செல்வில் 2005ம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு மணிமண்டபம் ஒன்றும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்பதும் இவ்வேளையில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செய்தி.

    இந்த நினைவு இல்லத்தில் உள்ளே நுழைந்ததுமே நம்மை வரவேற்பது ஒரு இரும்புத் தகட்டில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் வ.உ.சி அவர்களின் சிறு வாழ்க்கைக் குறிப்பு செய்திகள். அதில் உள்ள குறிப்பினைத் தருகிறேன்.

    op2

    1872 செப்டம்பர் 5 வியாழன். பிறப்பிடம்: ஒட்டப்பிடாரம்
    1895 திருமணம்
    1900 தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணி ஏற்பு
    1908 ‘சுதேசிக் கம்பெனி’ எனும் பெயரில் கப்பல் கம்பெனி நிறுவுதல்
    1907 சூரத் காங்கிரசில் புரட்சி
    1908 மார்ச் 12 வ. உ.சி. கைது
    1908 மார்ச் 13, நெல்லை தூத்துக்குடியில் கலகம்
    1908 ஜூலை 7. வ. உ. சிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை

    இவை வாசலில் இருந்த சிறு குறிப்பு மட்டுமே. உள்ளே நுழைந்ததும் நமக்கு வ.உ.சி .அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிமுகம் செய்யும் தகவல்கள் பல படங்களுடன் விளக்கப்பட்டிருப்பதையும் காண முடியும்.

    சமூக பணிகளுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் வ.உ.சி எனச் சொன்னால் அது சிறிதும் மிகையில்லை. உணர்ச்சிப்பூர்வமான நிலையைக் கடந்து அறிவுப்பூர்வமான வகையில் செயல்பட்டு தமிழ் மக்களிடையே சுதந்திரச் சிந்தனையை வளர்த்தவர் இவர்.

    காலணித்துவ ஆட்சியில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தவர்கள் கையாண்ட யுக்திகள் பலவிதம். இதில் வ. உ.சிதம்பரனாரின் உத்திகள் தனித்துவம் வாய்ந்தவை. பொருளாதார அடிப்படையில் மக்கள் சுயமாக முன்னேறவும் ஆங்கிலேயர்களை அண்டி இல்லாமல் சுயமரியாதையுடன் பொருளாதாரத் தேடலில் இயங்கவும் புரட்சிகரமாகத் திட்டமிட்டு செயல்பட்டவர் இவர். வணிகக் குடும்பத்தில் பிறந்து வக்கீலாக கல்வித் தகுதி பெற்றதோடு நின்றுவிடாமல் வணிகத்திலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தமிழர்களின் சரித்திரத்தில் கடந்த நூற்றாண்டில் வணிகத்திற்காகக் கப்பல் விட்டு சரித்திரம் படைத்தவர் இவர். இந்தச் செயல் இவருக்கு கப்பலோட்டிய தமிழன் என்னும் மங்காப் புகழை இன்றும் நினைவு கூறும் வகையில் அமைத்துத் தந்தது. பெரும் செல்வந்தராக இருந்த போதிலும் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் மக்களோடு இணைந்து போராடி அவர்களுக்குச் சிந்தனை எழுச்சி ஊட்டியவர் இவர்.

    வ.உ.சி. நினைவு தபால் தலை (2009)
    வ.உ.சி. நினைவு தபால் தலை (2009)

    அப்போதிருந்த ஆங்கிலேய அரசு இவர் மேல் குற்றம் சுமத்தி இவரைச் சிறைக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாது அவரது குடும்பச் சொத்துகளையும் பறிமுதல் செய்தது. செல்வந்தரான வ.உ.சி அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. நாட்டுக்காகத் தன் வாழ் நாளையே அர்ப்பணித்த இந்த மகான் தன் இறுதி நாட்களில் பொருளாதார நிலையில் மிகவும் நலிவுற்று சிரமத்தில் இருந்தார் என்பதை அறியும் போது நம் மனம் கலங்கத்தானே செய்யும்.

    இத்தொடரின் அடுத்த பதிவில் இந்த அருங்காட்சியகத்தில் நான் அறிந்து கொண்ட குறிப்பிடத்தக்க தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    Suba Tremmel
    http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
    http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
    http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
    http://ksuba.blogspot.com – Suba’s Musings
    http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
     
    http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
    http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
    http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
    http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
    http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர் – முடிவுரை

     ராமஸ்வாமி சம்பத்

    images alex‘உத்தமன் அலெக்சாண்டர்’ குருந்தொடரை மிக்க விரும்பியும் உன்னிப்பாகவும் படித்ததோடு மட்டும் அல்லாமல் தங்கள் உயர்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்ட நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அலெக்சாண்டரைப் பற்றி பல கருத்துகள் (நல்லதும் கெட்டதும்) புழக்கத்தில் உள்ளன. அவன் ஒரு போர் வெறியன், முரடன், எதிரிகளை கொடுமைக்கு ஆளாக்கியவன், ஓரினச்சேற்கையாளன் என்றெல்லாம் கூறப்பட்டாலும், அவனுடைய சில சற்குணங்களும் அவ்வப்போது வெளிபட்டதாகவும் பதிவுகள் உள்ளன.

    அவன் கீழை நாடுகள்மீது தொடுத்த போர்களில் எளிதாக வெற்றி பெற்றதும் பரதகண்டத்தின் எல்லையில்தான் அவன் புருஷோத்தமனின் வீர பராக்ரமத்தைக் கண்டு வியந்ததும் வரலாற்று குறிப்புகளே. மாசிடோனிய வரலாற்று ஆசிரியர்கள் அவன் புருஷோத்தமனை தோற்கடித்ததாகவும், பவுரவ நாட்டு மன்னனின் வீரத்தை மெச்சி அவனைக் கொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்கள். ஆனால் இதனை கிரேக்க வரலாற்று அறிஞர்களும் ரஷ்யாவைச் சேர்ந்த மார்ஷல் ஜுகோவும் ஒப்புக்கொள்ளவில்லை. மார்ஷல் ஜுகோவ் அவர்கள், அலெக்சாண்டர் ஜீலம் நதிக்கரையிலும் நெப்போலியன் வாடர்லூவிலும் மாபெறும் தப்புக் கணக்கு போட்டுவிட்டதாக கருதுகிறார். இந்திய வரலாற்று அறிஞர்களும் ஜீலம் போரில் வென்றது யார் என்பதனை திட்டவட்டமாகக் கூறவில்லை.

    அலெக்சாண்டரைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்துள்ள காப்டன் அஜித் வடகயில் (அவர் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவர்) என்பவர் அவனது யுத்த தந்திரங்களை புருஷோத்தமன் முறியடித்து வெற்றி பெற்றதாகவும், யவன மன்னனை மன்னித்து பரிசுகள் அளித்து நாட்டுக்குத் திரும்பச் செய்ததாகவும் கூறுகிறார். மாசிடோனிய வீரர்களின் கலகம் ஒரு ஜோடனை என்றும் அபிப்பிராயப்படுகிறார்.

    ஜீலம் போர் இருபக்கங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி எவர்க்கும் வெற்றி தோல்வியின்று முடிந்திருக்க வேண்டும் என்பது எளியேனின் ஊகம். எது எப்படியானாலும் ஜீலம் போர்க்குப் பின்னர்தான் அலெக்சாண்டர் ஒரு முற்றிலும் மாறுபட்ட மனிதனாகத் திகழ்ந்தான் என்பது வெள்ளிடை மலை.

    அடியேனின் ஆன்மீக ஆசான், திருப்பெருந்திரு ஸமர்த்த ஸத்குரு ஹனுமத் காளி வர பிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்கள், “அலெக்சாண்டர் பரத கண்டத்திற்கு வந்ததின் நோக்கம் இம்மண்ணின் ஆன்மீகப் பலத்தைப் புரிந்து கொள்ளவே” என்பார். கீழை திக்விஜயத்திற்கு முன் அவன் தன் ஆசானான அரிஸ்டாடில் அவர்களிடம் ஆசி கோரியபோது அவர் அவனுக்கு பரத கண்டத்தினரின் ஆன்மீக பலத்தைப் பற்றி அறிந்து வருமாறு பணித்தார் என்றும் பாபுஜி மஹராஜ் சொல்லுவார். இந்த ஒரு உன்னதமான கருத்தே இந்த குருந்தொடருக்கு அடிப்படை.

    அண்மையில் குண்டூர் (ஆந்திரா) அருகில் நடந்த ஒரு சாது சம்மேளனத்தில், ஹைதரபாத்தைச் சேர்ந்த வியாசாஸ்ரம பீட்த்தின் அதிபதியான பரிசுத்தானந்த சுவாமிகள் உரையாற்றும் பொழுது, அலெக்சாண்டரின் அன்னை தன் மகனிடம் பரத கண்டத்திலிருந்து தனக்கு மூன்று பரிசுகளை கொண்டுவருமாறு கேட்டார் என்று குறிப்பிட்டார். “அக்கண்டத்தில் பகவத்கீதை எனும் ஒரு ஒப்பற்ற ஆன்மீக நூல் உள்ளதாம். அது எனக்கு வேண்டும். இரண்டாவதாக அங்கிருந்து ஒரு நல்ல ஆசார்யரை இங்கு அழைத்து வா. மூன்றாவதாக புனிதமான நதி என்று புகழ்பெற்ற கங்கை நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வா” என்று ஆணையிட்டார் என்றும் அவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

    ஆக மாவீரன் அலெக்சாண்டர் உத்தமனாக மாறியதற்கு இச்சான்றுகளே போதுமானது..

    துரதிருஷ்டவசமாக அலெக்சாண்டர் ஜீலம் போருக்குப் பின் மூன்று ஆண்டுகளே வாழ்ந்து தனது முப்பத்து மூன்றாவது வயதில் (கி.மு. 323) நோய்வாய்ப்பட்டு பாபிலோனில் காலமானான். பிறரை நம்பும் நற்பண்பைப் பயன்படுத்தி அவனது விரோதி ஒருவன் நஞ்சு கலந்த பானத்தைப் பருகச்செய்ததால் அலெக்சாண்டர் நோய்வாய்ப்பட்டான் என்பது ஒரு வரலாற்று குறிப்பு. அவன் இறந்த சில மாதங்களுக்குப்பின் ரொக்ஸானா ஒரு ஆண்மகவை (நான்காம் அலெக்சாண்டரை) ஈன்றெடுத்தாள். அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவனான காசெண்டர் என்பவன் அவளையும் அவள் மகனையும் ஓட ஓட விரட்டியடித்து கொன்று உத்தமன் அலெக்சாண்டரின் வம்சத்தை அடியோடு அழித்ததும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.

    எது எப்படியாகிலும் அலெக்சாண்டர் எனும் உத்தமனின் பாரத வருகை அவனைப் பொறுத்தவரை அவன் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம்தானே?

    படத்திற்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://upload.wikimedia.org/wikipedia/commons/0/05/Alexander_Hamilton_portrait_by_John_Trumbull_1806.jpg&imgrefurl=http://en.wikipedia.org/wiki/Alexander_Hamilton&h=3000&w=2532&sz=2264&tbnid=IQ-qkEXijuxBkM:&tbnh=101&tbnw=85&zoom=1&usg=__q0gvqoYcbsQBIdtDZPSyN1X0rk0=&docid=t_-Kv5gKJWCBKM&sa=X&ei=fyU_Uo-EN8jorQfwioDgBQ&ved=0CDYQ9QEwAw&dur=4835

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 90!…

    மலர் சபா 

    silambu (1)

     

     

     

     

     

     

    “புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை”

     

    கோவலன் வருகையும், அவன் நிகழ்ந்ததற்கு இரங்கிக் கூறுதலும்*

    அப்போது அங்கே ஓடி வந்த

    ஒரு பணிப்பெண் கூறினள்:

    “நங்கையே!

    பெருமையுடைய அரசன் போன்ற ஒருவர்

    நம் வாயிலிடத்தே வந்து கொண்டிருக்கிறார்;

    அவர் நம் கோவலன் தான்…”

     

    விரைந்து வந்த கோவலனும்

    கண்ணகியின் பெருமைவாய்ந்த

    பள்ளியறையில் நுழைந்தான்.

    தன் காதலியின் வருத்தமுற்ற முகமும்

    வாட்டமுற்ற மேனியும் கண்டான்.

     

    “வஞ்சமுடைய கொள்கையுடன்

    பொய்மை பேசுபவளோடு

    கூடி உறவாடியதால்

    நம் குலத்தில் உள்ளோர் தேடித்தந்த

    மலை போன்ற பெரிய

    செல்வக்குவியலை எல்லாம் இழந்தேன்.

    வறுமையுடையவன் ஆகிவிட்டேன்.

    இச்செயல் யாவும் என்னை

    நாண வைக்கிறதே”

    எனக் கூறி வருந்தினான்.

     

    *கண்ணகியின் விடை*

    (மாதவிக்குக் கொடுக்கப் பொருள் *

    *ஏதும் இல்லாததால்

    வருந்துகிறான் கோவலன் என்றெண்ணிய)*

    கண்ணகி,

    தன் அழகிய ஒளி பொருந்திய முகத்தில்

    புன்முறுவல் காட்டி,

    “இன்னும் இரண்டு சிலம்புகள் உள்ளன;

    அவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்”

    எனக் கூறினாள்.

     

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 64 – 73

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    படத்துக்கு நன்றி:

    Kannagi’s Last Resort, Siruvachur

    Share
  • “தர்மாம்பாள் குறம்”

    தஞ்சை வெ.கோபாலன்

     

    குறவஞ்சி இலக்கியம் நமக்கெல்லாம் புதியது அல்ல. அவற்றில் மிகப் பிரபலமானது “திருக்குற்றாலக் குறவஞ்சி”. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சரபோஜி மீது பாடப்பட்ட “சரபோஜி பூபால குறவஞ்சி” இன்னொன்று. இவைகள் எல்லாம் காலத்தால் பிற்பட்டவை. மொழி நடையும் சற்று கொச்சையாக நாட்டுப் புற வாடையுடன் இருக்கும். இந்த வகையில் இன்னொரு குறவஞ்சியும் திருவையாற்றில் கோயில் கொண்டுள்ள தர்மசம்வர்த்தினி எனப்படும் அறம்வளர்த்த நாயகி மீதான குறவஞ்சி ஒன்று உண்டு.

    இந்த குறவஞ்சிக்கு “தர்மாம்பாள் குறம்” என்று பெயர். தர்மசம்வர்த்தினியைத்தான் தர்மாம்பாள் என்பார்கள். திருவையாற்றுப் பகுதியில் பிறந்த பல பெண்களுக்கு இந்தப் பெயர் வைப்பார்கள். இந்த குறம் பற்றி திருவையாறு இசைக் கல்லூரி முதல்வராக இருந்த முனைவர் இராம கெளசல்யா அவர்கள் ஒரு தீபாவளி மலரில் கட்டுரையொன்று எழுதியிருந்தார். திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானம் தான் அவருடைய ஊர். அவரிடம் கேட்டபோது தன்னுடைய இளம் வயதில் அந்த ஊரில் சில பெண்மணிகள் இந்த குறம் பாடல்களைப் பாடிக் கேட்டிருப்பதாகவும், அது சுமார் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது என்றும் சொன்னார். அதைத் தேடிக் கண்டுபிடித்து திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் – தர்மசம்வர்த்தினி அம்பாள் ஆலய குடமுழுக்கு விழாவையொட்டி மறுபதிப்பு செய்தால் என்ன என்று ஆலயத்தின் கட்டளை விசாரணை முனைவர் குமாரசாமி தம்பிரான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, முனைவர் கெளசல்யா அவர்கள் பல இடங்களில் தேடி பழைய பிரதியொன்றைக் கண்டுபிடித்து அதை புதிதாக மறுபதிப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நூலை அவர் ஆர்வமுள்ளவர்களுக்கு விலையில்லாமல் கொடுக்கவும் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. முனைவர் இராம கெளசல்யா அவர்கள் தில்லைஸ்தானத்தில் “மரபு ஃபவுண்டேஷன்” எனும் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதற்காக அதே ஊரில் ஒரு வீட்டையும் வாங்கி அங்கு சிறுவர் சிறுமியருக்கு நமது பாரம்பரியக் கலைகள், இலக்கியங்கள், இசை, நாடகம், நடனம் போன்றவற்றைக் கற்பித்து வருகிறார்கள். தேவார வகுப்புகளும், வெளிவராத பல அரிய இசை நூல்களையும் வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். ஊத்துக்காடு வேங்கடகவியின் பல அரிய வெளிவராத பாடல்களை ஒருவார காலம் பயிற்சி வகுப்பு எடுத்து இசை ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். இளம் குழந்தைகளுக்கு கோலாட்டம், கும்மி, பூத்தொடுத்தல், கையால் துணி தைத்தல், சமையல் செய்தல், கோலம் போடுதல், அகராதி பார்க்கும் முறை, ஆங்கிலப் பயிற்சி, தமிழில் பிழையின்றி பேசுதல் போன்ற பல தலைப்பில் வகுப்புகள் இங்கே எடுக்கப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் பயிற்சிகளுக்கு தங்கவும், உணவும் இங்கேயே தந்து விடுகிறார். இவை அனைத்தும் அவருடைய சொந்த செலவில் நடைபெறுவதுதான் முக்கிய அம்சம். இவருடைய தாயார் ருக்மிணி அம்மாள், தங்கை மீனாட்சி, மீனாட்சியின் மகள் ஆகியோர் இந்தப் பணியில் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

    இப்போது அந்த “தர்மாம்பாள் குறம்” பற்றி சிறிது பார்க்கலாம். காவிரி நதியானது சமுத்திர ராஜனைத் தேடி கிழக்காக ஓடிவரும் சமயம் திருவையாற்றை அடைந்த போது அங்கு கோயில் கொண்ட தர்மசம்வர்த்தினி அவளைத் தடுத்து நிறுத்தி அங்கேயே இருக்கும்படியும் சமுத்திரராஜனை இங்கே வரவழைப்பதாகவும் குறத்தியாக வந்து குறி சொல்வதாக அமைந்தது இந்த இலக்கியம்.

     

    தர்மாம்பாள் குறம்

    கடவுள் வணக்கம்

    (கண்ணிகள்)

    1. சரணமய்யா கணபதியே சரஸ்வதியே முன்னடவாய்
    ஆறுமுக வேலவனே அன்புடனே துணை வருவாய்
    2. பார்வதியாள் குறவடிவை பக்தியுடன் நான்பாட
    அறம் வளர்த்த நாயகியின் அழகான குறம்பாட
    3. காவேரிக்குக் குறிகள்சொன்ன கதையைநானும் எடுத்துரைக்க
    விக்கினங்களில்லாதே விநாயகரே முன்வருவீர்!

    லோபாமுத்திரை காவேரி நதியாக வருதல்

    4. ஸஹ்யமலை தனில்பிறந்து சமுத்திரரை மாலையிட
    அகஸ்தியரை பிரிந்துமவள் அரியபெரும் நதியாகி
    5. தட்சணத்தின் கங்கையென்னும் ஜலரூபந் தனையடைந்து
    ஜலமரூபியாய் காவேரி யென்னும் திருநாமத்துடனே வந்தாள்
    6. குடகுமலை தன்னைவிட்டு காடுசெடி மலைதாண்டி
    பர்வதத்தைப் பிளந்துகொண்டு பாம்புகளைச் சேர்த்துக் கொண்டு
    7. மலையைப் பிளந்துகொண்டு மரங்களெல்லாம் பேர்த்துக் கொண்டு
    செடிகொடியைப் பிடுங்கிக் கொண்டு தோழிமாரைக் கூட்டிக் கொண்டு
    8. ஆப்தமான தோழிமார்கள் ஐந்துபேரைச் சேர்த்துக் கொண்டு
    அமராவதி யென்னுமொரு அன்புடைய தோழியையும்
    9. பவானி யென்னுமொரு பிரசித்தமான தோழியையும்
    லக்ஷுமணா நதியான லக்ஷணமாந் தோழியையும்
    10. ஹேமவதி யென்னுமொரு இஷ்டமான தோழியையும்
    காஞ்சனா நதியென்னுமொரு களிப்புடைய தோழியையும்
    11. தோழிமாரைக் காவேரியம்மன் துணையாகச் சேர்த்துக் கொண்டு
    பரவியெங்கும் நிறைந்துகொண்டு பார்வையாக வந்துவிட்டாள்
    12. உயர்ந்து வரும் நுரையழகும் உத்ஸாக கொந்தளிப்பும்
    பெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்
    13. குயில்கூவி குதூகலிக்க குள்ர்ந்தகாற்று வீசிவர
    சோனைதூரத் தென்றல்வீச சிறந்த நதியாக வந்தாள்
    14. கனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்
    வாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்
    15. சாமுண்டி மலையருகில் ஸ்தலங்களெல்லாம் சுற்றிக் கொண்டு
    மைசூரு ராஜ்ஜியத்தில் வைபோகமாய் நிறைந்து கொண்டு
    16. சிவசமுத்திரந் தன்னில் வந்து சிலபிரிவாய்க் கீழிறங்கி
    ஸ்ரீரங்கப் பட்டணத்தில் ரங்கருக்கு மாலையாகி
    17. ஈரோடு கொடுமுடியின் எல்லைவழி யாக வந்து
    அகண்டமென்னும் காவேரியாய் அழகுடனே பரவிவந்தாள்
    18. ஜம்புநாதர் ஸ்ரீரங்கர்க்கு திருமாலையாக வந்தாள்
    பாற்கடல்போல் அலைமோத படுகையெங்கும் நிறைந்துவந்தாள்
    19. வயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்
    அறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத் தோடு வந்தாள்
    20. பஞ்சநத க்ஷேத்திரத்தில் காவேரியும் வந்தவுடன்
    ஆள்கொண்ட சுவாமிசென்று அறம்வளர்த்தாளுக்கு அறிக்கையிட்டார்
    21. அம்பிகையாள் தானெழுந்து ஆபரணஞ் சோதிவிட
    பாக்குடனே வெற்றிலையும் பழத்துடனே தேங்காயும்
    22. மஞ்சளுடன் குங்குமமும் மணமுடைய சந்தனமும்
    புஷ்பவகை யுள்ளதெல்லாம் தட்டினிலே எடுத்துக் கொண்டு
    23. காவேரியை வரவேற்று காணிக்கையும் தான்கொடுத்தாள்
    வாங்கிக் கொண்டு காவேரி வணங்கி நமஸ்கரித்தாள்
    24. வாழ்த்தியப்போ அம்பிகையும் நதியைக் கண்டு மனமகிழ்ந்தாள்
    சமுத்திரரை நானடைய சந்தோஷமா யனுப்புமென்று
    25. காவேரி கேட்கலுமே கல்யாணிதேவி சொல்வாள்
    சமுத்திரரை இங்கழைப்பேன் சந்தோஷமா யிருப்பாயென்றாள்
    26. காவேரி கேட்டுமதைக் கலங்கியவள் தன்மனதில்
    சரீரமெல்லாம் அங்கேவைத்து சாக்ஷியாக ஒருரூபம்
    27. சாக்ஷியான காவேரி சாகரத்தை நோக்கிச் சென்றாள்
    அம்மனுட ஆக்ஞையினால் சமுத்திரரும் அக்ஷணமே
    28. உத்ஸாகத் துடனேவந்தால் உலகமெல்லாம் முழுகுமென்று
    பாதாளத்தில் மறைந்துகொண்டு பட்டணத்தின் நடுவேவந்தார்
    29. ஸ்தலத்தினுட மகிமைதன்னை சமுத்திரருந் தான்பார்த்தார்
    ஸப்தஸ்தல சுவாமிகளும் சமுத்திரரை வரவேற்று
    30. பழங்களுடன் தாம்பூலம் பிரஸாதங்களும் தான்கொடுத்தார்
    வாங்கிக்கொண்டு சந்தோஷமாய் சமுத்திரரும் போய்மறைந்தார்
    31. சாக்ஷியென்னும் காவேரிநதி சாகரத்தில் தேடிவிட்டு
    திரும்பிவந்து காவேரி தயங்கி மனந்தளர்ந்து
    32. சமுத்திரரை யடையவென்று தர்மாம்பாளை நினைந்து
    கன்னிகையாய் திருவையாற்றில் காவேரி தவமிருந்தாள்
    33. பார்வதியாள் காவேரியை பரிஹாஸம் பண்ணவென்று
    அறம்வளர்த்தாள் குறவடிவை அழகாகத் தானடைந்தாள்.

    தர்மாம்பிகை குறத்தி வடிவெடுத்தல்
    (2ஆவது வேறு மெட்டு)

    1. பாடகந் தண்டையும் பாதஸரமும்
    பத்து விரலுக்குப் பீலிமெட்டியும்
    அடுக்குமோதிரம் சங்குவளையும்
    அஸ்தகடகமும் தோள்வளையும்
    2. குண்டும் பவழமும் குடமணித் தாழ்வடம்
    கோத்தமுத்துடன் வஜ்ஜிரமாலையும்
    சங்கு மணியும் பச்சை மணியும்
    சரப்பளி உத்தண்டா மோகனமாலையும்
    3. கொப்புடன் நல்ல முத்துவாளியும்
    குந்தளஓலையும் குடைக்கடுக்கனும்
    மின்னல் ஒளிபோல மூக்குத்தியும்
    முத்துக்கட்டின வஜ்ஜிரக்கல்லும்
    4. பல்லொளியும் புன் சிரிப்பும்
    பவழம்போல சிவந்த வாயும்
    கண் மலரும் மையழகும் இரு
    கண்ணிடையில் பச்சிலைப்பொட்டும்
    5. கஸ்தூரிப்பொட்டும் நெற்றியின் பட்டமும்
    கல்லிழைத்த சுட்டியாழ்வானும்
    மல்லிகை முல்லை மலர்கள்சூடி
    மயிரைவாரி முடிந்த அழகும்
    6. கறுப்பு ரவிக்கையும் பட்டுப்புடவையும்
    கச்சிதமாகவே உடுத்தவழகும்
    பாலகனை மார்புடனே
    பட்டுத் தலைப்பாலே அரவணைத்து
    7. குஞ்சுகளைக் குறத்தியம்மை
    கூடத்தன்னுடன் கூட்டிக்கொண்டு
    கொடிபோல இடையும் துவளக்
    கூடையெடுத்து இடுப்பினில் வைத்து
    8. பாக்குப்பையும் இடுப்பில் சொருகி
    பாவனையாகவே சாய்ந்துநடந்தாள்
    காதுவரையில் நீண்ட கண்ணும்
    கனிவாயும் புன்சிரிப்பும்
    9. செண்பகம் போல் மேனிவர்ணமும்
    செந்தாமரை போல் முகமும்
    தாழைமடல் போன்ற காதுகளும்
    சந்திரன்போல வளைந்த நெற்றியும்
    10. பஞ்சநதி திருவையாற்றின்
    பெரியதொரு வீதியிலே
    தையலந்த வண்ணக் குறத்தி
    தானும் வந்தாள் குறிபார்க்க.

    ஸ்திரி ஜனங்கள் குறத்தியிடம் குறிகேட்டல்

    11. செம்பொன் கொடிபோல் மெல்லநடந்து
    தெருவீதி சுற்றி வந்தாள்
    தேர்மூட்டியினருகே நின்று
    சிவதெரிசனம் பண்ணிக்கொண்டு
    12. சிங்காரமாகவே வண்ணக் குறத்தி
    தென்னண்டைவீதித் தெருவில் வந்தாள்
    அம்பிகையென்னுங் குறத்தியிடத்தில்
    ஆதரவாய் வந்து மாந்தரெல்லாம்
    13. கூட்டமாய்க் கூடியே கொம்பனைமாரெல்லாம்
    குறத்தியைப்பார்த்து கேட்கத் துவங்கினார்
    பெண்களிரண்டுபேர் புத்தியறியல்லை
    இங்கழைத்துவந்தேன் பாராய் குறத்தி
    14. மூத்தபிள்ளைக்கு வேட்க வகையில்லை
    சாஸ்திரம் பாரென்று சொன்னாளொருத்தி
    இளையபிள்ளையும் என்னுடன் பேசவில்லை
    எனக்குச் சொல்லென்று கேட்டாளொருத்தி
    15. கைக்குழந்தைக்கு காச்சலடிக்குது
    காட்டவந்தேனென்று சொன்னாளொருத்தி
    நாத்தானாருக்கு ஆத்துப் புருஷன்
    நலமில்லையென்று கேட்டாளொருத்தி
    16. கொழுந்தனாரொத்தன் கூத்தியார் வீட்டிலே
    குடியாய்க் கிடக்கின்றான் என்றாளொருத்தி
    தோழியொருத்தி துர்க்கனா காண்கிறாள்
    திருநீறுதாவென்று கேட்டாளொருத்தி
    17. மாமனாருக்கு மண்டையிடிக்குது
    மாத்திரை தாவென்று கேட்டாளொருத்தி
    நாட்டுப் பெண்ணுக்கு பேய்பிடித் தாட்டுது
    நல்ல மருந்துதா வென்றாளொருத்தி
    18. இப்படிப் பெண்டுகள் எல்லாருங் கேட்கவே
    இங்கிதமாகக் குறிகளுஞ் சொல்லி
    கலாஸநாதரை ஆலயஞ் சென்று
    கண்டுபின் வந்து குறிகளுஞ் சொல்வேன்
    19. என்று சொல்லியந்தப் பெண்டுகளுடனே
    ஈச்வரியாகிய வண்ணக்குறத்தி
    அம்பிகை என்னும் வண்ணக்குறத்தி
    ஆள்கொண்டார் கோவிலைக் கண்டுதொழுது
    20. ஆள்கொண்ட சுவாமியின் கோயிலைவிட்டு
    அய்யாரப்பரின் சந்நதிவந்தாள்
    சூர்யபுஷ்கரணி ஜலத்தை யெடுத்து
    ஸிரஸின் மேலே தெளித்துக் கொண்டாள்
    21. தென்கைலாஸம் வடகைலாஸம்
    சுற்றிப்ரதக்ஷணம் பண்ணிவந்தாள்
    சுவாமியுடைய சந்நதித் தூணில்
    சாய்ந்திருந்தாள் வண்ணக்குறத்தி
    22. சந்நதியிலே யிருந்த குறத்தி
    வடிவைக்கண்டு சங்கரரும்
    கயல்மீன் போன்ற கண்ணழகும்
    கஸ்தூரிப்பொட்டும் முகஒளியும்
    23. புன்சிரிப்பும் பல்லொளியும்
    புவனேச்வரி வடவழகும்
    ராஜேச்வரி அழகைக் கண்டு
    நாலுநாழி பிரமித்திருந்தார்
    24. இந்நெடு நாளிதுவரைக்கும்
    இந்த வடிவை நாம் கண்டதில்லை
    மன்மதனை யெரித்த சிவன்
    மயங்கியே தன் மனதிற்குள்ளே
    25. காமனைநீறா யெரித்த சிவன்
    கலங்கியே தன் மனதிற்குள்ளே
    அந்தக் குறத்தி வடிவைக்கண்டு
    ஆசையுடன் மோகங் கொண்டார்.

    பஞ்சநதீசர் சுந்தரவடிவுடன் குறத்தியிடம் வந்து
    சம்பாஷித்தல். (3ஆவது வேறு மெட்டு)

    1. கைவளையும் சங்கிலியும் கணையாழி மோதிரமும் (சுவாமி)
    கடுக்கனுடன் பதக்கம்கண்டி சரப்பளியும் தரித்தார்
    2. சாயக்கம்பி வேஷ்டிகட்டி சரிகைச்சால்வை யணிந்து
    தலைப்பாகையும் உருமாலை சங்கரரு மணிந்தார்
    3. சந்தனக் குறுக்குமிட்டு ஜவ்வாதுப் பொட்டுமிட்டு
    தங்கரைஞாண் தாழித்தும் கந்தம் புனுகணிந்தார்
    4. கொழுந்து வெட்டிவேர் மல்லிகை குடமல்லிகைப் புஷ்பம்
    குமுகுமுன்னு பரிமளிக்க குடுமியிலே அணிந்தார்
    5. வாயிலே பாக்கடக்கி வெண்பட்டுப் பைபிடித்து
    மடித்ததொரு வெற்றிலையை விரல்நடுவி லிடுக்கி
    6. கந்தர்வ வேஷத்துடன் குறத்தியிடம் வரவே (சுமாமி)
    கூர்விழியால் மயக்கியந்தக் குறத்தி மெள்ளச் சிரித்தாள்
    7. ஈச்வரரைக் கண்டவுடன் எழுந்திருந்து குறத்தி (அம்மை)
    இருகையினா லுங்கூப்பி அடிவணங்கி நின்றாள்
    8. வாரும்பெண்ணே குறத்தியேயுன் வடிவைக்கண்டு வந்தேன்
    மாலையிட்ட உன்கணவன் வந்தானோகூட
    9. தாய்தகப்பன் உனக்குமுண்டோ சகோதரர்கள் உண்டோ
    ஜாதிகுலம் நாமந்தன்னை தனித்தனியாய் சொல்வாய்
    10. எந்தநாடு எந்ததேசம் எங்கேவந்தாய் குறத்தி
    இந்நெடுநாள் உன்போல் வடிவைக்கண்டது நானில்லை
    11. சித்திரைத் திருநாளுக்கு ஜனங்கள் மெத்த வருவார் (ஆனால்)
    சுந்தரிஉன் வடிவைப்போல கண்டது நானில்லை
    12. வைகாசி வஸந்தனுக்கு மனுஷ்யாள் இங்கு வருவார் (ஆனால்)
    வையகத்தில் உன்னைப்போன்ற வடிவைக் கண்டதில்லை
    13. செல்லத்துடன் சிவனாரும் சுந்தரியைக் கேட்க
    வண்ணக் குறத்திகேட்டு மயக்கியவ ளுரைப்பாள்
    14. ஜாதிகுலங் கேட்டீரே சுவாமியென்னை யிப்போ – நான்
    தனித்தனியா யெடுத்துச் சொல்வேன் சலியாமல் கேளும்
    15. ஜாதியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் – நாங்கள்
    சாம்பபர மேசருக்கும் சம்பந்தங்களுண்டு
    16. அப்பன் ஆயி என்னை அம்பிகையென் றழைப்பார்
    என் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை
    17. குச்சுக்கு காவலாயென் கிழவனாரும் இருப்பார்
    கூடைமுறங் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்
    18. குஞ்சுகளின் பசியார அன்னமது கொடுத்து
    கொழித்தமுத்தும் முறத்தில் வைத்தால் குறிபார்த்துச் சொல்வேன்
    19. வண்ணக் குறத்தியிந்த வக்கணைகள் படிக்க
    கேட்டுமந்தப் பரமேசருங் கம்பீரமாய்ச் சொல்வர்
    20. பட்டுச்சீலை படியரிசி பாக்குடன் வெற்றிலையும்
    பசியடங்கப் பட்டைசாதம் பணமுங்காசுந் தருவேன்
    21. உன்கணவன் கிழவனென்று சொன்னாயேநீ பெண்ணே
    கந்தருவன் போன்றநானே உன்னழகுக் கேர்வை
    22. செல்லத்துடன் சிவனாரும் சிரித்துக்கொண்டே சொல்ல
    வண்ணக்குறத்தி சினந்து மறுத்திதனைச் சொல்வாள்
    23. என்கணவன் குறவனெங்கள் கிழவனிதைக் கேட்டால்
    ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெறிவார்
    24. ஆசைபெரிதென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்
    அறம்வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பள்
    25. வேலைசெய்யத் தாதியுண்டு பாக்கியமெனக் குண்டு
    விதம்விதமாய் பட்டுமுண்டு வெகுபணதி யுண்டு
    26. கட்டிலுண்டு மெத்தையுண்டு கிழவனரு கிருப்பேன்
    களஞ்சியத்தில் அரிசியுண்டு கவலை கெடயிருப்பேன்.

    குறத்தி ஈசருக்குதன் பெருமையுரைத்தல்
    (2ஆவது மெட்டுப்போல் பாடலாம்)

    1. கோத்தமுத்து மாலையுடன் கொப்புடனே வாளிமின்ன
    ஏற்றமுள்ள ஈச்வரியாள் எடுத்துச்சொல்வள் தன் பெருமை
    2. பூத்திருக்கும் சோலைகளும் புஷ்கரணி தீர்த்தங்களும்
    காஞ்சனத்தால் ஆலயமும் கடைத்தெருவும் வீதிகளும்
    3. பார்வையுள்ள வீதிகளும் படித்துறையும் காவேரியும்
    ஏழுநிலைக் கோபுரமும் எட்டவொண்ணாத் திருமதிலும்
    4. பத்துநிலைக் கோபுரமும் என் பள்ளியரை சேர்வைகளும்
    யாகம்வேள்வி செய்யும் நல்ல அந்தணர்கள் கூட்டங்களும்
    5. வேத பாராயணத்தழகும் நான் வீதிவரும் வைபவமும்
    பஞ்சநதி மகத்துவமும் எந்தன் பரிபூர்ண நதியழகும்
    6. இன்னமுண்டு என்பெருமை ஜதீசரேநீர் கேளுமென்று
    தையலந்த உமையவளும் தன்பெருமை பின்னுஞ்சொல்வள்.

    குறத்தி ஈசருக்கு மலைவளமை யுரைத்தல்
    (2வது மெட்டுப்போல் பாடலாம்)

    1. கைலாஸத்தினில் வஹிப்பவரே காளவிஷத்தை புனித்தவரே
    எந்தனுட மலைகள்தன்னை ஈச்வரரே நீர்கேளும்
    2. கொங்குகுடகு சொல்லிமலை வங்கம் மலையாளதேசம்
    கஞ்சிகாள ஹஸ்தியுடன் காசியிலும் நானிருப்பேன்
    3. அங்குமிருப்பேன் சுவாமிமலையில் அடர்ந்தசோலைக் குடைந்தையிலும்
    இங்குமிருப்பேன் பஞ்சநதியிலும் ஏழூஉரும் சுற்றிவருவேன்
    4. வைத்தீச்வரன் கோவிலிலும் மனமகிழ்ந்துநான் வஸித்திடுவேன்
    அறம்வளர்த்தாள் சந்நதியில் அனுதினமும் நானிருப்பேன்
    5. சங்கமுகம் மாயவரமும் சபாநாதரைக் கண்டுவருவேன்
    மங்கள நாயகரே மஹானுபாவா நாடுகேளும்

    குறத்தி ஈசருக்கு நாட்டுவளமுரைத்தல்
    (3ஆவது மெட்டுப் போல பாடலாம்)

    1. எந்தனுட நாடுதன்னை கேளுமையா சுவாமி
    ஏற்றமுள்ள ஈச்வரனார் வாழுமெங்கள் நாடு
    2. பொங்குப் புகழ்காவேரி உள்ளதெங்கள் நாடு
    புண்ணியராம் மானிடர்கள் புகழ்ந்தேற்றும் நாடு
    3. சந்திரரும் சூரியரும் வஸிப்பதெங்கள் நாடு
    சாரங்கபாணியனார் பள்ளிகொண்ட நாடு
    4. அகிலாண்ட ஈச்வரியாள் வாழுமெந்தன் நாடு
    அப்பருக்கு அருள் புரிந்த நாடுமெந்தன் நாடு
    5. அஞ்சுநதியோடி வரும் பஞ்சநதம் நாடு
    அன்னை பரமேச்வரியாள் அறம் வளர்த்தாள் நாடு
    6. மாத்ரு பூதேச்வரனார் மலையுமெந்தன் நாடு
    மலையின் மேலேவாழும் ஒரு மகனுமுண்டு எனக்கு
    7. ஜம்புநாத ஸ்வாமியுடைய தீர்த்தமெந்தன் நாடு
    ஸ்வயம்புவன பிக்ஷாண்டார் கோவிலுமென் நாடு
    8. குத்தாலம் பாபவிநாசம் கோவில்மலை நாடு
    முத்தான திருஅனந்தர் நாடுமெந்தன் நாடு
    9. திருச்செந்தில் திருக்குன்றம் திருத்தணியும் நாடு
    திருப்பதி யென்னும் அந்தத் திருமலை என் நாடு
    10. வண்ணக் குறத்தியும் தன் பெருமையை வர்ணிக்க
    கூட்டங்கூடி தேவரெல்லாம் சுவாமியுடன் கேட்க
    11. சரஸ்வதியும் லக்ஷுமியும் சந்தோஷமாய்க் கேட்டு
    குறத்தியுடமகிமை தன்னைக் காவேரிக்குச் சொன்னார்
    12. காவேரியுங் கேட்டவுடன் தன் கவலைநீங்கி
    சகியைவிட்டுக் குறத்திதன்னை அழைத்துவரச் சொன்னாள்

    குறத்தி காவேரிக்குக் குறிசொல்ல வருகுதல்
    (2ஆவது மெட்டுப் போல் பாடலாம்)

    1. (அடி) கொங்கையழகி குறத்தியம்மே நீ
    குறி சொல்லுகின்ற மகத்துவத்தை
    2. எங்கள் நாயகி காவேரி கேட்டு
    அழைக்கச் சொன்னாள் குறத்தியே யுன்னை
    3. செம்பொன் கொடிபோல் குறத்தியெழுந்து
    திருக்காவேரிக் கரையில் வந்தாள்
    4. வீற்றிருந்து தவம் செய்யுமந்த
    மெல்லி நல்லாள் காவேரி யம்மனும்
    5. கண்டவுடன் குறத்தி வரவைக்
    காவேரி யம்மனுங் கண்ணைவிழித்து
    6. கயல்மீன் போன்ற கண்மலரும்
    கஸ்தூரிப் பொட்டும் முகஒளியும்
    7. நகைத் திடுமந்தப் பல்லொளியும்
    ராஜேச்வரியின் வடிவழகும்
    8. கண்டவுடனே குறத்தி வடிவை
    காவேரி யம்மனும் மனந்திகைத்து
    9. (அடி) ஸஹ்யமலைக்கும் சமுத்திரத்துக்கும்
    சாய்ந்த வண்ணமாய் நானிருப்பேன்
    10. இந்நெடு நாளாய்க் கண்டதில்லை
    உந்தன் வடிவைப்போல குறத்தி
    11. எந்த நாடடி குறத்தி யுனக்கு
    எனக்குச் சொல்வாய் எமக்குறத்தி
    12. என்றவுடன் மந்தஹாஸமாய்
    உமையுமப்போ எடுத்துரைப்பள்
    13. இந்த நாடெல்லாம் எந்தன் நாடுதான்
    இன்னமுண்டெந்தன் நாடுகளும்
    14. பொங்கித் தளும்பும் நாலுகடலும்
    புவனேந்திரக் குறவருடன்
    15. அங்கங்கிருந்து நான் வசிப்பேன்
    அய்யா றப்பன் குறத்தியென்பேர்

    குறத்தி காவேரிக்குக் குறி சொல்லுதல்
    (3ஆவது மெட்டுப்போல் பாடலாம்)

    1. எந்தனுட நாடுகளும் சொல்லித் துலையாது
    ஏற்றமுள்ள ஈச்வரனார் ஆள்வதெங்கள் நாடு
    2. சொல்லுவேண்டி உன் குறையை தயவெனக்குண்டாக
    சொர்ணங்களையுங் கொணர்ந்து வைத்தால் தகுந்த குறிசொல்வேன்
    3. நேர்த்தியான முத்துரத்னம் பவழங்களுங் கொணர்ந்தால்
    (உன்) நெஞ்சிலுள்ள குறைகளை நான் நிவர்த்தியாகச் சொல்வேன்
    4. வஜ்ஜிரமும் பச்சையுடன் வைடூர்யமுங் கொணர்ந்தால்
    (உன்) மனதிலுள்ள குறையை நானும் மாற்றும்படி சொல்வேன்
    5. சந்நியாசி வேஷங்கொண்ட தபஸியுந்தன் கணவன்
    தலைமயிரை ஜடைதரித்து தபஸுபண்ணும் முனிவன்
    6. கெளபீனம் கடுசூத்ரம் கமண்டலமும் தரித்த
    அமைந்த கிருஷ்ணாஜினந்தரித்த அகஸ்தியருமவரே
    7. அகஸ்தியரை மாலையிட்டு லோபாமுத்திரை நீயும்
    அகண்டகாவேரியாகி அவரைவிட்டுப் பிரிந்தாய்
    8. சமுத்திர ராஜனுடன் சங்க முகமாகி
    சமுத்திரத்தப் போயடைய தபஸு பண்ணியிருக்காய்
    9. மார்கழி மாதத்தினில் மணல்மேடு இடுவாய்
    மடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்
    10. ஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து
    ஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்
    11. வைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி
    வையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்
    12. ஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்டால்
    அப்போ நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்
    13. கொஞ்சுங்கிளிபோல் குறத்தி குறிகள் சொல்லிச்சிரிக்க
    கூட்டங்கூடி சகலபேரும்கூடி நின்று கேட்டார்

    குறத்தி ஈசருடன் சம்பாஷித்தல்
    (4ஆவது வேறு மெட்டு)

    1. குறத்தி முகத்தையும் குறிசொல்லும் நேர்த்தியும்
    குறிப்புடனே பார்த்து
    க்ஷணப் பொழுதாகொலும் கண்ணை மூடாமல்
    சங்கரர் பார்த்திருந்தார்
    2. (அடி) கொங்கையழகி குறப்பெண்ணே நீயும்
    குறிசொன்னது போதும்
    (என்) ஆலயம் புகுந்து அன்னம் புஜித்து
    அணைவாய் நீ என்னையென்றார்
    3. சிறுபிள்ளைப் புத்திபோல் சிவனுமுரைக்கவே
    சிவகாமி தான் கேட்டு
    சித்தத்திற்குள்ளே சிரித்து மகிழ்ந்து
    சீறியே ஏதுசொல்வள்
    4. பஞ்சாப கேசரின் பாததெரிசனம்
    பண்ணவே நானும் வந்தேன்
    ஆசைபெரிதென்று உம்மையும் நானும்
    அணையவும் நீதியுண்டோ
    5. அறம்வளர்த்த உம்மநாயகி யாளுமக்
    கனுக்ஞை கொடுத்தாளோ
    ஆகட்டுமிப்போ தவளுடன் சொல்லியே
    ஆக்கினை பண்ணிவைப்பேன்

    ஈசர் அம்பிகையைக் காணாமல் வருந்துதல்

    6. சிரித்த முகத்தையும் துடுக்கான வார்த்தையும்
    சிவசங்கரர்தான் கேட்டு
    (நம்ம) சுந்தரிதேவியும் வந்தாளோ வென்றவர்
    சுற்று முற்றும் பார்த்தார்
    7. சரஸ்வதி லக்ஷுமி இருவருமாகச்
    சரேலென் றெழுந்திருந்து
    சங்கரியாளை அழைத்திட நாமும்
    அறிவழிந்து போனோம்
    8. ஆலயத்திற்சென்று அம்பிகையைத் தேடி
    ஆராய்ந்து பார்த்துமவாள்
    மூலை முடுக்கெல்லாம் தேடிக்காணாமல்
    விசாரமுந் தானடைந்தார்
    9. சிவசுந்தரியாளைக் காணாமலேயந்தச்
    சங்கரர்தாம் புலம்பி
    நந்திகேசரைவிட்டு எங்குந் தேடச்சொல்லி
    (சிவ)நாதன் தவித்தழுதார்
    10. சித்திவிநாயகா சங்கரியாளைக்
    காணோமே என்னசெய்வேன்
    சுந்தரிதேவியைக் காணாவிட்டால்நான்
    ஜீவனிழப்பேன் என்றார்
    11. சிவசுப்ரமண்யா உன்னுட அன்னையைக்
    காணோமே என்ன செய்வேன்
    அம்பிகையாளை நான் கண்ணிற் காணாவிட்டால்
    ஆவி யிழந்திடுவேன்
    12. கெளரீவல்லபர் என்று பிரபஞ்சத்தில்
    கீர்த்தியாய் சொல்லிடுவர்
    வாமபாகத்தினில் தேவியில்லாவிட்டால்
    வாகன மேறுவரோ
    13. பார்வதி சங்கரர் என்று பிரபஞ்சத்தில்
    பக்தியாய்ச் சொல்லுவார்கள்
    பத்தினியு மில்லாவிட்டால் பத்னிஹீனனுக்கு
    பூஜையும் பண்ணுவாரோ
    14. அம்பிகையாள் வந்து சேராவிட்டலெனக்
    கன்னபானங்கள் வேண்டாம்
    அபிஷேகம் வேண்டாம் அலங்காரம் வேண்டாம்
    அர்ச்சனையும் வேண்டாம்
    15. சுந்தரி சுந்தரி என்று எல்லோருமாய்
    சேர்ந்து அலத்தலுற்றார்
    சிவகாம சுந்தரிதேவியுங் கேட்டு
    சிரித்தாள் மனதிற்குள்ளே
    16. சபையிலுள்ள பேரைக் கடைக்கண்ணாலே பார்த்துச்
    சங்கரி தானிருக்க
    ஸரஸ்வதி லக்ஷுமி குறத்தியுடைய
    சமிபத்திலோடு வந்து
    17. சங்கரியாளைக் குறத்தி நீயும்
    க்ஷணத்தில ழைத்தாயானால்
    செம்பொன்னும் முத்தும் ரத்தினங்க ளெல்லாம்
    சொர்ணத் தட்டிற் கொடுப்போம்
    18. அம்பிகையாளை அழைப்பித்தா லிக்ஷணம்
    யானை சேனை குதிரை
    வெண்கலத் தேருடன் தங்கப் பல்லாக்கும்
    வெகுமானந் தாரோமென்றார்
    19. சேனை பரிவாரம் யானைகளுண்டென்று
    துடுக்காகப் பேசுகின்றீர்
    (என்)சித்தத் தினிலிப்போ கோபம் வந்துதானால்
    தகித்து விடுவேன் நானும்
    20. சினத்துடனே யந்தக் குறத்தியுரைத்திட
    சரஸ்வதி லக்ஷுமியும்
    குறத்தியை நாமும் அதட்டிப் பேசினது
    குற்றமாய் நேர்ந்த திப்போ
    21. குறத்திக்கு கோபம் வந்துவிட்டதானால்
    குத்திவிடுவல் நம்மை
    குறவரெல்லாருமாய் கூட்டமாய்க்கூடி
    கொன்றுவிடுவார் நம்மை
    22. என்று சொல்லிக்கொண்டு தேவியைக் காணாமல்
    ஏக்கமடைந்திருந்தார்
    தையல் குறத்தி சரஸ்வதியை நோக்கி
    சாந்தமாய் தானுரைப்பாள்

    அம்பிகை தன்னை அறிவித்து ஈசருடன் ஆலயம் சேர்தல்

    23. சபையுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும்
    சங்கரி கண்டிரங்கி
    சந்தோஷமாகச் சபையோர்களைப் பார்த்து
    தயவாகத் தூனுரைப்பாள்
    24. கோடிநவரத்தினம் கொண்டு வந்தாலிப்போ
    குறிபார்த்து நானுமுங்கள்
    அம்பிகையாளை அரைநாழிக்குள்ளாக
    அழைப்பித்துத் தாரேனென்றாள்
    25. முப்பத்து முக்கோடி தேவர் ரிஷிகளும்
    முன்னே நிறைந்திருக்க
    ஆதிசிவனுட அண்டையில் சென்றவள்
    அவர் கரத்தைப் பிடித்தாள்
    26. தையல் குறத்தியும் கையைப் பிடிக்கவே
    சங்கரர் தான் பயந்து
    நெஞ்சந் துடிக்க சரீரம் பறக்கத்
    திடுக்கிட்டுத்தான் திகைத்தார்
    27. குறத்தியைக் கண்டாசைப் பட்டீரே
    கூசாமல் கையை காட்டும்
    வெட்டவெளியான பிரம்மம் உமக்கிந்த
    வெட்கமுந் தானுமுண்டோ
    28. விழுத்து எறிவீர் எடுத்து உடுப்பீர்
    வித்தைகள் செய்திடுவீர்
    சதாசிவப் பிரும்மம் நானென்று சொல்வீர்
    சந்யாசி போலிருப்பீர்
    29. பதிவிரதைமார்களைப் பங்கம் குலைப்பீர்
    பரம்பிரம்ம மூர்த்தி என்பீர்
    ரிஷிபத்தினிமாரண்டை நிர்வாணத்துடனே
    நின்றது வெட்க மன்னோ
    30. அறிவிலியாகிய அஸுரனுக்கு
    அவன் கேட்ட வரங்கொடுத்து
    அண்டம் பதினாலும் ஓடியலைந்து நீர்
    ஐவேலிக்காயினி லொளித்தீர்
    31. மூர்த்தியில் சமர்த்தராம் விஷ்ணுவுமப்போது
    மோஹினி வேஷங்கொண்டு
    அஸுரனைக் கபடத்தால் வதைசெய்த விஷ்ணுவை
    அணைந்தது வெட்கமன்றோ
    32. வண்ணக் குறத்தி பரிஹாஸம் பண்ணவே
    மஹாதேவர் தான் கேட்டு
    குறத்தியைக் கண்டு நாமிச்சையடைந்தது
    குற்றந் தானென் றுணர்ந்தார்
    33. சுவாமி தளர்ந்திடும் மேனியும் சங்கரர்
    வாட்டமும் சங்கரி கண்டிரங்கி
    க்ஷமிக்க வேணுமென்று சங்கரர் பாதத்தில்
    சரண மென்றே பணிந்தாள்
    34. தையல் குறத்தி பணிந்தவுடனே
    சபையோர்கல் தான் பார்த்து
    அம்பிகை தானிவள் என்றறிந்தவுடன்
    ஆனந்த மாயிருந்தார்
    35. ஆதி சிவனாரும் அம்பிகையுடனே
    ஆலயந் தன்னிற் சென்று
    குறத்தி வடிவான அம்பிகையாளைக்
    கூசாமலே யணைந்தார்
    36. அம்பிகையுடனே அபிஷேகமாடி
    அமுதமும் தான் புஜித்து
    வாமபாகத்தினில் தேவியுடன் சிவன்
    மந்தஹாஸமாய் வீற்றிருந்தார்
    37. பக்தியாய் சொன்னவர் சிரத்தையாய்க் கேட்டவர்
    கற்றுக் கொடுத்தவர்க்கும்
    அஷ்டபோகத்துடன் புத்திரபாக்கியமும்
    அறம்வளர்த்தாள் கொடுப்பாள்
    38. அறம் வளர்த்த பரதேவியின் பாதத்தை
    அனுதினமும் ஸ்மரித்தால்
    அம்பிகையும் திருப்பாதார விந்த
    ஐக்கியமுந் தான் கொடுப்பள்
    39. அம்பிகை யருளால் காவேரி பெருகி
    ஆற்றினில் வெள்ளம் வந்து
    சந்தோஷமாகிச் சமுத்திரத் தைக்கண்டு
    சங்க முகமடைந்தாள்
    40. மங்களம் மங்களம் தர்மாம்பிகையுடன்
    பஞ்சநதீச்வரர்க்கும்
    மங்களம் திருக்காவேரி நதிக்கும்
    மண்ணில் வாழும் மாந்தருக்கும்

    ==========

    காவேரியம்மன் கப்பல்
    (விநாயகர்துதி கப்பல்)

    நமோமஹா கணபதியே – சம்போ – நமோமஹா குணநிதியே
    நமோஉமா ஸ்கந்தாய – சம்போ – நமோஹரன் ஆநந்தாய

    (முடுகு)

    விக்நராஜாய வெகு விக்னஹரணாய
    லம்போதராய ஹேரம்பாய மஹதே
    ரம்பாபலகராய அம்பா ஸுதாய
    அபயவர கரதாய ஏகதந்தாய
    சுபமுக வரதாய லம்போதராய
    கபிலமுக வர்ணாய கஜகர்ணிகாய
    விகடதந்தாய ஸுர கணபூஜிதாய
    தூமகேதாய யக்ஷ கணஸேவிதாய
    பாலசந்திராய ஹரஸ்கந்த ஜேஷ்டாய
    சரவண பவாயநம கருணாரஸாய

    ஏலேலோ கணராஜா — ஐயா
    ஏலேலோ சர்வேசா

    மண்டல மெல்லாம் புகழும் – பொன்னி
    மங்களக் காவேரி கப்பல்
    தென்கிழக்காய் காவேரி – அம்மன்
    செல்லுகின்ற ஸ்தலங்கள் சொல்வாம்

    (முடுகு)

    விண்ணவர்கள் புகழும் ஸ்ஹ்யகிரி தனைவிடுத்து
    மின்னொத்த குடகுகிரி காட்டின் வழிவந்து
    உன்னத கிரிகடந்து கண்காணாம லோடி
    தென்னலுடன் சிவசமுத்திர சிகரம்விட்டு இழிந்து
    சேர்த்துவந்த கபிலையுடன் சந்தோஷமாய்ச் சேர்ந்து
    திருமுக்கூ டென்னுமந்தத் திருநகரைத் தாண்டி
    ஸ்ரீரங்க பட்டணத்தில் சடுதியாக வந்து
    ஸ்ரீரங்க நாதருக்குத் திருமாலையாய் வளைந்து’
    சீருடைய கெளமுகியும் சேலம் நகர் சேர்ந்து
    க்ஷேத்திரமாம் பிரம்மகிரி சேர்வைமலை தாண்டி
    அந்தமாய் பவானிநதி அன்புடனே கூட
    ஆனைக்குந்தி மலையைவிட்டு அமராவதி சேர
    சொந்தமாய் ஈரோடு விட்டு கொடுமுடியைச் சேர்ந்து
    திருமூர்த்திகள் வஸிக்குமந்த ஸ்தலத்தைக் கண்டு மகிழ்ந்து
    அந்த முள்ள சேரனுட அரசாட்சியில் அமைந்த
    அழகான ஊர்களெல்லாம் அன்புடனே பரவி
    பாச்சலூர் கருவூர் குழித்தலையும் பார்த்து
    பெருகமணி சிருகமணி (திருப்) பளாத்துறையு மோடி
    அகண்ட காவேரியாகி அடியார்களைக் காத்து
    தலைமகளாய் கொள்ளிடத்தை வடபுரத்தில் செலுத்தி
    திருச்சினாப் பள்ளிமலை ஈசனையும் ஸ்துதித்து
    ஜம்புநாதர் ஸ்ரீரங்கர்க்கு திருமாலையுந் தரித்து
    சிந்தாமணி தன்னைவிட்டுத் திருவானைக்கா நடந்து
    கொண்டல்கண்டு மயிலாடும் கோவிலடி யடைந்து
    கொக்கரசம்பேட்டை திருமழப்பாடி கடந்து
    வண்டலுடன் பெருகி மகராஜபுரம் வந்து
    தில்லைஸ்தானம் திருக்கண்டியூர் திருவையாற்றில் தங்கி
    கணபதி அக்கிரகாரம் கபிஸ்தலமுங் கண்டு
    வளமையான சுவாமிமலை கும்பகோணம் வந்து
    பேரான மருதூரின் பரமரையும் பணிந்து
    பேர்பெற்ற கோவிந்தபுரம் வஞ்சிநாடு புகுந்து
    குத்தாலும் ஆடுதுறை உச்சிதமாய் கடந்து
    கோனேரி ராஜபுரம் நரசிங்கன்பேட்டை வந்து
    கெளரீ மாயூரநாதன் சந்நதியைக் கண்டு
    களிப்புடன் துலாமாதக் கடசீ மட்டுமிருந்து
    கண்டவுடன் ஜீவர்களின் கர்மங்களை யொழித்து
    அன்புடனே கெளரீநாதன் அனுக்கிரக மடைந்து
    சந்தோஷமாய் காவேரி சாயாவனந்தாண்டி
    சங்கமுகத் துறையடைந்து சமுத்திரைச் சேர்ந்தாள்

    அன்புடனே கூடி அலையுடன் போராடி
    கண்கலங்கி வாடி கணவரிடம் ஓடி
    களிக்கக் கடல் கொந்தளிக்க
    முத்தைக் கொழிக்கத் தண்ணி சிவக்கச் சேர்ந்து
    காதலுடன் கடல்மன்னனும்
    காவேரியுங் கலந்துவிட

    ஏலேலோ – ஏலேலோ – காவேரி
    கடலுடனே கலந்த கப்பல்

    காவேரியம்மன் ஊஞ்சல்

    இருபுறமும் சோலைதன்னில் குயில்கள்கூவ
    எத்திசையும் பக்ஷியினம் இசைந்து பாட
    தோழியராம் நதிகூடத் தென்றல் வீச
    திருக்காவேரி கணவருடன் ஆடிலூஞ்சல்.

    ஓம் சுபம்!

     

    Share
  • வார ராசி பலன்!…23-09-13 – 29-09-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்:  சில நேரங்களில் கண் மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்வைப் பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து விடுங்கள். கலைஞர்கள் விழா, விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப்பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழுப் பொறுப்பை அளிக்காமல், உங்கள் கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பணியில் இருப்போர் வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும் வாய்ப்பு உங்களை நாடி வரும்.

    ரிஷபம்: பணத்தை வங்கியில் செலுத்தும் போது தகுந்த முன்னெச்சரிக்கையாய் இருப்பது அவசியம்.அக்கம் பக்கத்தாரிடம் அளவாகப் பழகி வாருங்கள். நேரடி கவனம் செலுத்தும் எதுவும் வியாபாரிகளுக்கு லாபகரமாக அமையும். உறவுகளிடம் அன்பாகப் பேசி வாருங்கள். வம்பான ஆட்களும் வாய் மூடிக் கொள்வார்கள். கலைஞர்கள் நிதானமான வளர்ச்சிதான் நிலைக்கும் என்பதை நினைவில் வைத்து செயல்படுவது நல்லது. மறதியால் பொருட்களை இழக்க வேண்டி வரலாம். கூட்டுத் தொழிலில், இருப்போர்கள் சந்தேகம், மற்றும் வாக்குவாதம் தோன்றாதவாறு விழிப்பாய் செயலாற்றுவது நல்லது. சிறிய மனத்தாங்கலால் நட்பில் உரசல் தோன்றி மறையலாம்.

    மிதுனம்: பெண்கள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி கவனமாய் இருந்தால், வேண் டிய பணப் புழக்கம் கையில் இருக்கும். வேலை கிடைக்க வில்லையே என ஏங்கிக் கொண்டிரு ந்தவர்கள் மனதுக்கு பிடித்த வேலையில் அமர்வார்கள். கலைஞர்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பும் அதன் மூலம் ஆதாயமும் கிட்டும். வியாபாரிகள் வீண் தம்பட்டத்தைத் தவிருங்கள். புதிய முயற்சிகளால் புகழ் தானே கிட்டும். முக்கிய பொறுப்பில் இருப்போர்கள் , உங்கள் கடமையை தள்ளிப் போடாது அவ்வப்போது முடித்து வந்தால், நற்பெயருக்கு களங்கம் ஏதும் இராது. மாணவர்கள் எந்த சூழலிலும் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து சிக்கலை வரவேற்காதீர்கள் .

    கடகம்: பெண்கள் தேவையில்லாமல் குடும்ப ரகசியங்களைபிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வாங்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பது அவசியம். வியாபாரிகள் அதிகமாய் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பிருப்பதால், ஆரோக்கிய பராமரிப்பில் விசேஷ கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் அவசியமான நேரங்களில் மட்டும் வாகன பயணத்தை மேற்கொள்ளுங்கள். மேலும் நட்பு வட்டத்தில் தீய சகவாசத்தை தவிர்த்தல்,புத்திசாலித்தனம். கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகாது.

    சிம்மம்: வருத்தப் பட வைத்தவர்கள், வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வார்கள். உங்கள் திறமையை பிறர் அறிய, புதிய முயற்சிகள் கை கொடுக்கும். சொந்த பந்தங்களின் வரவு மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கும். அலுவலக வட்டத்தில் பேச்சில் கடுமை கூடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்..தள்ளிப் போட்டு வந்த காரியங்கள் உடன் முடியும். பெண்கள் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வததற்கு முதலிடம் கொடுப்பது நல்லது. வியாபார்கள் புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருங்கள் .மறைமுகமான நஷ்டங்களைக் குறைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெற தீவிரமாக உழைப்பீர்கள்.

    கன்னி: பெற்றோர்கள் பிள்ளைகளின் தேவைக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உயர் மட்ட கூட்டங்களில், தேவையற்ற வாக்குவாதத் தில் ஈடுபடுவதைத் தவிர்த்து விடவும். வியாபாரிகள் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய உரிமங்களை, தாமதமின்றி புதிப்பித்தல் அவசியம். உறவினர் ஒருவரால், தொழிலில் புதிய திருப்பம் ஏற்படும். பழைய நட்பை புதிப்பித்து கொள்ள இது ஏற்ற வாரம். குடும்பத்தில் நிலவி வந்த மனக் கசப்பு விலகி, நிலைமை பழையபடி சுமூகமாகும். அதிகம் உழைத்தாலும், சுய தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த லாபம் வருவதற்கு சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.

    துலாம்: உங்கள் உழைப்பால் உயரதிகாரிகளின் நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். பெண்கள் பண விஷயங்களில் புதியவர்களை நம்ப வேண்டாம் . வியாபாரிகள் வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்தாலும் ஒப்பந்தங்கள் கைக்கு வர சற்றே காத்திருக்கும் சூழலுக்குத் தள்ளப்படலாம். மாணவர்கள் வேண்டாத பிரச்னைகளிலிருந்து விலகி இருப்பது அவசியம். கடன் அட்டை மூலம் பொருட்கள் பெறுவதில் கவனமாய் இருக்கவும். பங்குதாரர்கள் நடுவே காரசாரமான விவாதங்கள் வந்து போகும் வாய்ப் பிருப்பதால், எதனையும் ஆலோசனைக்குப்பின் செய்வது நல்லது. உடனிருக்கும் உறவுகளாலும் ஊழியராலும் மனச் சங்கடம் நேரிடலாம்.

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் சேமிப்பை கரைத்து, வீட்டுப் பொருள்களை வாங்குவர். பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் உங்கள் கவனம் இருந்தால், அவர்களின் பாதை நேராகவே இருக்கும். குடும்பச் சொத்துக்காக, கருத்து மோதல்கள் உருவாகும். அகால போஜனம், தூக்கக் குறைவு ஆகியவற்றால் பணி புரிபவ ர்களுக்கு சிறு உபாதைகள் ஏற்படலாம். வியாபாரிகள் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனித்து விட்டால், அவர்க அவர்களின் ஒத்துழைப்பு உங்களோடு தங்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளுக்காக கடன் வாங்க நேரிடும்.

    தனுசு: பெண்கள் பல சந்தோஷ நிகழ்வுகளில் பங்கு கொள்வதால் குடும்பச் செலவுகள் வரவுக்கு மேல் செல்லும். எந்த சூழலிலும் இங்கிதமாகப் பேசுங்கள் . சச்சரவுகள் தானே சுமூகமாகிவிடும்.வியாபாரிகள் கொடுத்த வாக்கை ,குறித்த காலத்தில் நிறைவேற்றி விடுவீர்கள். பங்குச் சந்தையில் ஒருவித நிச்சியமற்ற நிலைமை நிலவுவதால், பண முதலீட்டில் அதிக அவசரம் வேண்டாம். மாணவர்கள் வேண்டாத எண்ணங்களை வளரவிடாமல், நல்ல பொழுது போக்குகளில் உங்கள் கவனத்தை திசைத் திருப்புங்கள். மனம் தெளிவடையும். விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள் புதிய சாதனை படைப் பார்கள்.

    மகரம்: கணினித் துறையில் உள்ளவர்கள் தங்களின் ஆற்றலின் உதவியால் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வார்கள் . கூட்டுத்தொழிலில் முன்பு இருந்த முன்பு இருந்த இறுக்கம் விலகுவதால், துணிவுடன் செயல்படுவீர்கள். பணியில் உள்ளவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் வரும். வியாபாரிகள் சிறிது அலைக்கழிப்பிற்குப் பின் வரவேண்டிய பணத்தை பெறுவார்கள். கலைஞர்கள் மேற்கொள்ளும் வெளி நாட்டு பயணங்கள் லாபகரமாய் அமையும். உடல் நலனில் அக்கறை காட்டினால், மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். நட்பு எப்போதும் இனிக்கும்.

    கும்பம்: முக்கியமான முடிவெடுக்குமுன் மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள். நீங்கள் பெறும் நன்மைகள் இரட்டிப்பாகும். பிறர் செய்யும் தவறுகளை இதமாகச் சுட்டிக் காட்டினால், குடும்ப உறவுகளின் இனிமை மாறாமலிருக்கும். வியாபாரிகள் கவனமாய் இருந்தால், கணக்கு வழக்குகளில் குளறுபடிகள் எழாதவாறு பார்த்துக் கொள்ளலாம். பெண்கள் நிதி நிலைக்கேற்றவாறு செலவுகள் செய்தால், கடன் பட வேண்டியிராது. சக கலைஞர்களின் ஆலோசனைப்படி நிகழ்ச்சிகளில் புதிய மாற்றங்களை புகுத்தினால் நல்ல வரவேற்பிருக்கும்.மாணவர்கள் சோம்பேறித்னத்துக்கு இடம் தராமல், கருத்தூன்றி படிப்பது நல்லது.

    மீனம்: மாணவர்கள் திறமை என்னும் மூலதனத்தை சேமிப்பாய் வைப்பதோடு, வேகம் என்பது பேச்சில் இல்லாமல் செயலில் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பர்க்கும் உயர்வும் உங்கள் வாழ்வில் கை கோர்த்துக் கொள்ளும். பெண்கள் வதந்திகளை நம்பி அவசர முடிவெடுக்க வேண்டாம். வழக்குகளில் மட்டுமல்லாது வருங்கால நலன் கருதி எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்ட, யோசித்து செயல்படுங்கள். சொந்த பந்தங்களிடையே பகையை வளர்க்காமல் பார்த்துக் கொண்டால், உறவுகளின் அனுசரணை அனைத்திலும் கிடைக்கும். வேலையில் சிலருக்கு பொறுப்புக்கள் கூடும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடலாம்

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 1

    தஞ்சை வெ.கோபாலன்

    நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கே உட்கார்ந்திருந்த போது ஒரு ஜோடி மண்டபத்துக்குள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவரில் ஆணுக்கு வயது எழுபது இருக்கலாம், பக்கத்தில் அவரது மனைவி அறுபது வயதைத் தாண்டியவர். கன்னங்கரேலென்ற நிறம். தேர் அசைவது போல ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் பக்கவாட்டில் சாய்ந்து சாய்ந்து நடை. பெரியவருக்கு வயதானதாலோ அல்லது காலில் ஏதாவது ரிப்பேரோ தெரியவில்லை ஒரு கைத்தடியை ஊன்றிக் கொண்டு வந்தார். அவரை கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு அந்த அம்மையார் குழந்தையை நடத்தி வருவது போல மெல்ல அழைத்து வந்து கொண்டிருந்தார்.

    ‘மெதுவா வாங்கோ. பார்த்து காலடியை எடுத்து வையுங்கோ. கீழேயெல்லாம் டைல்ஸ், வழவழன்னு இருக்கு. வழுக்கிவிட்டுடப் போறது. இதுல தண்ணியை ஊத்தி வைச்சாக்கூட கண்ணுக்குத் தெரியாது. வழுக்கிவிட்டுட்டா என்ன பண்றது. பாருங்கோ, அங்கே குழந்தைங்க ஓடிப்பிடிச்சு விளையாடறதை. ஓடிவந்து ஒங்க மேல விழுந்துட்டா என்ன பண்றது. மெதுவா, என்னைப் பிடிச்சுண்டு வாங்கோ’ என்று ராஜோபசாரம் செய்தபடி அந்தப் பெண்மணி உள்ளே நுழைந்தாள்.

    ‘வரேன், வரேன், நன்னா கையைப் பிடிச்சுக்கோ! நான் தான் சொன்னேனே, இந்த மாதிரி கல்யாண மண்டபத்துக்கெல்லாம் போறது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு, நீ கேட்டியா, ஒன்னோடு அத்தங்கா பொண்ணு கல்யாணம்னு என்னையும் இழுத்துண்டு வந்து நிக்கறே’ என்றார்.

    ‘வரலைன்னா, அவா ​கோவிச்சுக்குவா, நாம வந்து பெரியவாளா லட்சணமா கல்யாணத்தைப் பண்ணி வச்சாதான் அவாளுக்குத் திருப்தி. வேற யாரு இருக்கா, பெரியவாளா அவாளுக்கு இதைச்செய் அதைச்செய்னு சொல்றதுக்கு. பேசாம வாங்கோ, வந்து ஒரு இடத்துலே ஒக்காந்துக்கோங்கோ’ என்று அவரைப் பிடித்துக் கொண்டு போய் அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள் அந்தப் பெண்மணி.

    எனக்கும் பொழுது போகவேண்டாமா? இந்த முதிய காதல் ஜோடியின் ராசக்கிரீடையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

    கல்யாண வீட்டுக்காரர்கள் இந்த ஜோடியைப் பார்த்துவிட்டுப் பரவசமாய் ஓடிவந்து, ‘வாங்கோ, வாங்கோ, என்னடாது, இதுவரை மாமா மாமியைக் காணலியேன்னு கவலையா பேசிண்டு இருந்தோம். நீங்க வந்துட்டேள். நீங்கதான் எங்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் சொல்லித் தரணும். எங்காத்துல இதுதான் மொத கல்யாணம் இல்லியா, எதையும் தவற விடாம நன்னா நடத்தணும். உள்ளே வாங்கோ, டேய்! அங்க யாரப்பா, அந்த பரிசாரகர்கிட்டே சொல்லி ரெண்டு டம்ளர் காப்பி கொண்டு வரச் சொல்லு” என்றார் அதில் ஒருவர்.

    ‘அதெல்லாம் வேண்டாம். அவருக்கு ஷுகர், காப்பியெல்லாம் சாப்பிட மாட்டார், மாத்திரை சாப்பிடணும் கொஞ்சம் வெந்நீர் இருந்தா போட்டுக் கொண்டு வரச் சொல்லுங்கோ, நான் வந்து டிபன் சாப்பிட்டுக்கறேன்’ என்றாள் அந்த அம்மாள்.

    ‘பரவாயில்லே, எனக்கும் ஒரு காப்பி கொண்டு வரச்சொல்லுங்கோ, ஆனா, அதுல சக்கரை போட வேணாம்’ என்றார் அந்தப் பெரியவர்.

    ‘பாத்தேளா! இப்படித்தான் வாயைக் கட்டாம எதையாவது சாப்பிட்டுடறது, பின்னாலே மயக்கம் வரது, தலையைச் சுத்தறது அப்படிம்பேள், சொன்னா கேக்கவா போறேள்’ என்று சொல்லிவிட்டு அந்த கல்யாண வீட்டு அம்மாளிடம், ‘சரி மாமி, அவருக்கும் சக்கரை இல்லாம ஒரு காப்பி கொடுத்துடச் சொல்லுங்கோ’ என்றாள்.

    ‘எங்கே ஒங்க புள்ளை மாட்டுப்பெண் எல்லாம் வரலியா?’ என்றாள் கல்யாண வீட்டு அம்மாள்.

    ‘அவனுக்கு எங்கே ஒழியறது, ஆபீஸ் ஆபீஸ்னு ஆபீசை கட்டிண்டு அழறான். காலைல போனா ராத்திரி பத்தோ பதினொண்ணோ எப்போ வரானோ அப்போதான். மாட்டுப்பெண்ணுக்கு இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு. அவளும் வேலைக்கு போறாளா, வந்து டயர்டா இருக்குன்னு படுத்துண்டுடறா, கல்யாணம் கார்த்தின்னு நாலு இடத்துக்குப் போனாதானே, நம்மாத்துக்கும் மத்தவா வருவான்னு அவாளுக்குப் புரியல. அது கெடக்கு விடுங்கோ, நானும் மாமாவும்தான் வந்துட்டோமே’ என்றாள் மாமி.

    ‘சரி உட்காருங்கோ, காப்பி கொண்டு வரச்சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு கல்யாண வீட்டு அம்மாள் உள்ளே சென்றாள். உடனே ஜோடிப் பெண்மணி கணவரிடம் “வந்த இடத்திலே ஏன் மானத்தை வாங்கறேள். அவா காபி வேணுமா, டிபன் சாப்பிடறேளான்னு கேட்கத்தான் கேட்பா. வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறமா சாப்பிட்டாதான் கவுரமா இருக்கும். அல்பம் மாதிரி சரி சரி கொண்டாங்கோம்பாளா, உங்களோட எனக்கு மானம் போறது’ என்றாள்.

    அப்போது கல்யாணப் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு கல்யாண வீட்டு அம்மாள் வந்து பெண்ணை அந்த வயதான தம்பதியருக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னாள். அந்தப் பெண்ணும் மிக நளினமாகத் தன் பட்டுப்புடவை கலையாமல் குனிந்து மண்டியிட்டு நமஸ்காரம் செய்து எழுந்தாள்.

    உடனே பெரியவர் கையைத் தூக்கி ‘மகாராஜியா நன்னா இரும்மா’ என்று சொல்லிவிட்டு தன் மனைவியை நோக்கி ‘ஊம், நீயும் குழந்தையை ஆசீர்வாதம் பண்ணு’ என்றார். அந்த அம்மாளும் அந்த மணப்பெண்ணை ஆசீர்வாதம் செய்த பின் அந்தப் பெண்ணும், அவள் அம்மாவும் உள்ளே சென்று விட்டனர். இந்த தம்பதியர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

    அப்போது கல்யாண வீட்டுக்காரர் ஒருவர் அந்தப் பக்கம் வந்தார். அவரை இந்தத் தம்பதியருக்குத் தெரியாது என்றாலும் அந்த அம்மாள் அவரை அழைத்தாள். அவரும் ‘என்ன மாமி, என்ன வேணும்’ என்று அருகில் வந்தார்.

    அந்த அம்மா சொன்னாள், ‘மாமாவுக்கு ஒடம்பு சரியில்லே. கொஞ்சம் ஓரமா ரெண்டு பெஞ்சை புடிச்சுப் போட்டுட்டேள்னா, படுத்துப்பார்’ என்றாள்.

    அவரும் அதுக்கென்ன போட்டுடறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு பெஞ்சுகளைக் கொண்டு வந்து போட்டு அதில் ஜமக்காளம் விரித்து தலையணை வைத்துக் கொடுத்தார். மாமி மறுபடி அவரைக் கூப்பிட்டு, ‘ஒரு பெடஸ்டல் ஃபேன் இருந்தா கொண்டு வந்து வச்சுடுங்கோ, மாமாக்கு காத்து வேணும்’ என்றாள். அதையும் அவர் செய்து கொடுத்தார். இப்போது பெரியவர் மிகவும் செளக்கியமாக பெஞ்சில் படுத்துக் கொண்டு ஓய்வு எடுத்தார். மாமி மெல்ல உள்ளே சென்றாள்.

    மணமகள் வீட்டார் இருக்கும் பகுதிக்குச் செல்லாமல் அந்த அம்மாள் சமையலறை நோக்கிச் சென்றாள். அங்கு சமையலுக்காக ஊழியர்கள் காய் நறுக்கிக் கொண்டும், மாவு அரைத்துக் கொண்டும் தேங்காய் துறுவிக்கொண்டும் இருந்தார்கள். அந்த அம்மாள் அங்கிருந்த ஒருவரை அழைத்து ‘யார் சமையல்?’ என்றாள்.

    அங்கிருந்த ஒருவர், ‘கிடாரங்கொண்டான் கிச்சாதான் சமையல், அதோ சாம்பார் அண்டாண்டே நிக்கறார் பாருங்கோ’ என்றான்.

    மாமி உடனே அவரிடம் சென்றாள். அவரும் இவரை வரவேற்று, ‘என்ன மாமி, என்ன வேணும், ஏதாவது சாப்பிடறேளா?’ என்றார், இந்த அம்மாளை யாரென்று தெரியாவிட்டாலும், மரியாதைக்காக அவர் அப்படிக் கேட்டார். இந்த அம்மாள் வந்த சந்தர்ப்பத்தை விடுவாளா?

    ‘நாங்க வெங்காயம் சேத்துக்க மாட்டோம். நானும் மாமாவும் காசிக்குப் போயிட்டு வந்துட்டோமா, அங்க பொடலங்கா சாப்பிடறதை விட்டுட்டோம், அதனால நீங்க சமையல்ல வெங்காயம் சேக்காதீங்கோ, பொடலங்காயை எதுலேயும் போட்டுடாதீங்கோ’ என்றாள்.

    நளபாகம் கிடாரங்கொண்டான் கிச்சா திகைத்துப் போனார்.

    ‘ஏம்மா! வெங்காயம், புடலங்கா சேக்காம பின்ன நாங்க எதைத்தான் வச்சு சமைக்கறது. கல்யாண வீட்டுல ஆயிரக்கணக்குல சாப்பிடுவா. அவா ஒவ்வொருத்தரும் எனக்கு இது பிடிக்காது, நான் இதை காசில விட்டுட்டேன்னு சொல்லிண்டிருந்தா, எதைச் சமைக்கறதுன்னு கொஞ்சம் கல்யாண வீட்டுக்காராகிட்டே கேட்டுச் சொல்லிடுங்கோ. இன்னொண்ணு மாமி, வீட்டுக்காரா என்ன சொல்றாளோ அதைத்தான் நாங்க செய்யணும், நீங்க அவாளுக்கு என்ன உறவோ தெரியாது. எதுன்னாலும் அவா கிட்டே சொல்லி எங்ககிட்டே இதெல்லாம் பண்ணலாம், இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லச் சொல்லிடுங்கோ, அதுபடி செஞ்சுடறோம்’ என்றார் கிச்சா.

    ‘அப்போ நாங்க சாப்பிட வேணாமா, என்ன இப்படி பேசறேள். காசில பொடலங்கா விட்டுட்டோம்னு சொல்றேன், அதைத்தான் பண்ணுவேன்றேளே’ என்றாள் மாமி உரத்த குரலில்.

    அப்போது அங்கே வந்த கல்யாண வீட்டுக்காரர் இவர்கள் பேசுவதைக் கவனித்து விட்டுச் சொன்னார், ‘மாமி, நீங்கா காசில பொடலங்காயைத்தான் விட்டேளோ, வாழைக்காயைத்தான் விட்டேளோ தெரியாது. பொது இடத்துல ஆயிரக்கணக்கான பேருக்குச் சமையல் செய்யற இடத்துல வந்து, எனக்கு அது பிடிக்காது, அதை விட்டுட்டேன் இதை விட்டுட்டேன் அப்பிடின்னெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்குப் பிடிக்கலையா, பேசாம அதை ஒதுக்கிட்டுப் பிடிச்சதை சாப்பிட்டுட்டு போகணும். நீங்க சமையல்காரங்க கிட்டே தனியா உத்தரவு போடறதெல்லாம் நன்னா இல்லை’ என்றார்.

    அந்த மாமிக்கு கோபம், விறுவிறுவென்று ஹாலுக்கு வந்தாள். அனந்த சயனத்திலிருந்த தன் கணவர் பெருமானை எழுப்பினார். ‘வாங்கோன்னா, நாம ஆத்துக்குப் போகலாம். சாப்பாட்டுல வெங்காயம் புடலங்கா சேக்காதீங்கோன்னு சமையல்காரர் கிட்டே சொல்றேன். ஒருத்தர் வந்து உங்களுக்கு வேணும்னா சாப்பிட வேண்டாம். மத்தவாளுக்குப் போடப்படாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாருங்கறார். வாங்கோ, நாம ஆத்துக்குப் போகலாம்’ என்றாள்.

    அவர் சாவகாசமாக எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘என்னடீ இப்படிச் சொன்னா ராத்திரி சாப்பாட்டுக்கு என்னடீ பண்றது. அங்கே ஆத்துல உன் அருமை மாட்டுப் பொண்ணு புருஷனைக் கூட்டிண்டு ஓட்டலுக்கு போயிடுவா, நாம போய் என்னத்தைச் சாப்பிடறது. ராத்திரிக்குத்தான் நாம கல்யாணத்துல சாப்பிடப்போறோம், இது மிச்சம் வைக்க வேணாம்னு காலைல பண்ணின வத்தக் குழம்பையும்தான் நீ மத்தியானமே சாப்பிட்டுட்டியே’ என்றார்.

    ‘சரி சரி, நீங்க பேசாம படுத்துக்கோங்க, பந்தி பரிமாறினவுடனே பார்த்துண்டு வந்து உங்களை அழைச்சுண்டு போறேன். முதல்ல சாப்பிட்டுட்டு நாம ஆத்துக்குப் போயிடலாம், என்ன?’ என்று கேட்டுவிட்டு சமையல் கட்டுக்குள் மறுபடியும் நுழைந்து விட்டாள்.

    அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், கல்யாண வீட்டுக்காரர் ஒருவரை அழைத்து அந்த தம்பதி யார் என்று கேட்டேன். அவர் சொன்னார்: ‘அவங்க ஏதோ தூரத்துச் சொந்தம். தெரிஞ்சவங்க வீட்டுக் கல்யாணம்னா தவறாம ஆஜராயிடுவாங்க. இப்படித்தான் அங்கே போயி இவங்க இஷ்டத்துக்கு உத்தரவு போடுவாங்க. சில இடங்கள்ளே செல்லுபடியாகும், சிலபேர் துரத்திவிட்டுடுவாங்க. இவங்க அதுக்கெல்லாம் மான அவமானம் பாக்க மாட்டாங்க” என்றார்.

    அது சரி அவங்க பேர் என்ன? என்று கேட்டேன்.

    அதற்கு அவர் “அவங்களோட உண்மையான பேர் என்னன்னு தெரியலை. ஆனால் எல்லோரும் அவரை ‘தில்’ அப்படின்னும், அந்த அம்மாவை ‘திவானா’ ன்னும் கூப்பிடுவாங்க.

    ‘தில், திவானா’ நல்லா இருக்கே பெயர் என்று சிரித்துக் கொண்டேன்.

    (​தொடரும்)

    Share
  • கடவுள் என்பவர் யார்?

    ​கோ. ஆலாசியம்

    Untitled

    கடவுள் தத்துவம் பற்றிய விவேகானந்தரின் சிந்தனைகளை, நான் புரிந்துக் கொண்டவைகளை, இங்கே உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

    கடவுள் தத்துவம்

    கடவுள் என்பவர் யார்?

    ‘ஜன்மாத்யஸ்ய யத: யாரிடம் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபெறல், ஒடுக்கம் இவை நடைபெறுகின்றனவோ’1

    அவரே கடவுள். அவர் என்றும் உள்ளவர், எப்போதும் தூயவர், என்றும் சுதந்திரர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர், கருணை வடிவானவர், குருவிற்கெல்லாம் குருவானவர்

    எல்லாவற்றிற்கும் மேலாக

    ‘ஸ ஈச்வர: அநிர்வசனீய ப்ரேம ஸ்வரூப:

    அந்த இறைவன் சொல்லுக்குள் அடங்காத அன்பு வடிவினன்.’2

    இந்த விளக்கங்கள் நிச்சயமாக சகுணக் கடவுளுக்கானவை.

    (அனைவரும் வணங்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் உருவத்தை செய்துக் கொண்டு வணங்கும், அந்த உருவக் கடவுள்)

    அப்படி என்றால் இரண்டுக் கடவுள்கள் இருக்கிறார்களா?

    தத்துவ ஞானியின் ‘இதுவல்ல, இதுவல்ல’ என்ற சச்சிதானந்தக் கடவுள், பக்தனின் அன்பே வடிவான கடவுள் என்று இரண்டு கடவுளரா?

    இல்லை, இல்லை, இல்லை.

    சச்சிதானந்தப் பொருள் எதுவோ அதுவே அன்புமூர்த்தியும்.

    நிர்குணமும், சகுணமும் ஒருவரே. அப்படியானால் பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்திலிருந்து வேறானவரா?

    அதுவும் இல்லை.

    இந்த பிரபஞ்சம் (நாம் பூதக் கண்களால் காணும் இந்த உலகம், வெளி, கோள்கள், நட்சத்திரங்கள் என்று யாவும்) பிரமத்தில் இருந்து தோன்றியது, தோன்றியது என்றால் மறையவும் செய்யும். எங்கே மறையும். என்றக் கேள்வி வரும்.

    எங்கிருந்து தோன்றியதோ அதனுள்ளேச் சென்று மறையும். பிறகு அது மீண்டும் தோன்றும். இது படைப்பின் சுழற்சி. இதை இங்கே தற்காலிகமாக நிறுத்தி விசயத்திற்கு செல்வோம்.

    சகுணக் கடவுள் என்பவர் மாயையின் வழியாக காணப் படும் பரம் பொருளே அதாவது பரம்பொருள் என்பது தான்; நிர்குணக் கடவுள் / சச்சினானந்தம் / பிரபஞ்சத்தின் ஆதி மூலம்.

    (இங்கே மாயை என்பது என்ன என்று விளக்க / புரிய / ஞாபகப் படுத்த வேண்டும். பிரபஞ்சப் பொருள்கள் யாவும் ஜடப் பொருள்கள் என்றுக் கொள்வோம், அப்படி இருக்கும் போது அதனுள் ஒரு இயக்கம் வேண்டும் அல்லவா? அந்த இயக்கம் பெறுவதற்கு, இந்த சக்தி / இயற்கை /அதாவது மாயை தான் காரணம். இதை பிராணன் என்றும் கூறுவோம். )

    ஆக,

    அந்த பரம் பொருள், அந்த ஒரேக் கடவுள், இயற்கையின் ஆதிக்கத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் போது “ஜீவன்” எனப்படுகிறார்.

    இயற்கையை தான் ஆளும் போது “ஈசுவரன்” அல்லது சகுணக் கடவுள் எனப்படுகிறார்.

    நிர்குணமும், சகுணமும் ஒருவரே. பக்தன் வழிபடுகின்ற சகுணக் கடவுள், பிரமத்தில் இருந்து வேரானதோ, வேறுபாடு உள்ளதோ இல்லை.

    எல்லாமே இரண்டற்ற ஒன்றே தான். ஒன்றேயானப் பிரம்மம் தான்.

    மனத்தால் உணர முடியாதபடி மிகமிக நுண்ணியதாக இருப்பதால் நம்மால் அன்பு செலுத்தவோ, வழிபடவோ இயலாதபடி விளங்குகிறது. எனவே பக்தன் பிரமத்தை, குணங்களோடு  கூடிய நிலையில், அதாவது உலகங்கள் அனைத்தையும் ஆள்பவராகிய நிலையில்; அதாவது இயற்கையை ஆளும் ஈசுவரனாக, இறைவனைக் கொண்டு வழிபடுகிறான்.

    சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்.

    ஒருப் பொருள் கொண்டு பல பொம்மைகள் செய்கிறோம் என்றுக் கொள்வோம். அது களிமண்ணாகவோ, மரமாகவோ, கல்லாகவோ, கண்ணாடியாகவோ இருக்கலாம். அப்படி செய்யும் போது, அந்த செய்யப்பட்டப் பொருள் உருவத்தில் மாறுபாடு கொண்டு அதற்கு எலி என்றும் புலி என்றும் பெயர் வைக்கிறோம் என்றுக் கொள்வோம்.

    இப்போது எலியைப் புலியாகவோ, புலியை எலியாகவோ மாற்ற முடியாது. ஆனால் அந்த இரண்டும் உருவான மூலப் பொருள் ஒன்றே.

    அந்த மூலப் பொருள் இந்த பொம்மைகளை செய்வதற்கு முன்பே இருந்தது, இப்போதும் இருக்கிறது. ஆனால் அது உருவமும், நாமகரணமும் (பெயரும்) கொண்டு இருக்கிறது.

    இவை இரண்டும் வேறு வேறானவை என்றுக் கொள்கிறோம். எதிலிருந்து எதுவரை என்றால், அந்த மூலப் பொருளில் இருந்து இவைகள் உருவம் பெற்றதிலிருந்தும், அந்த உருவம் அழியும் வரை.

    உருவம் பெறாத மூலப் பொருளாக இருந்தவரையில் அவை இரண்டும் ஒன்றே.

    அதுபோன்றே, அறுதி உண்மையான பிரமத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடே இறைவன். இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமென்றால், பிரமத்தைப் பற்றி மனித மனத்தால் உணரமுடிந்த மிக உயர்ந்தக் கருத்து இறைவன்.

    படைப்பு அநாதி காலந்தொட்டு (நிர்ணயிக்க முடியாதக் காலம் தொட்டு) இருந்து வருகிறது. ஆக இறைவனும் அப்படியே.

    ***

    தமிழின் அருமருந்தாம் திருமூலம்!

    அதனின் காணும் கடவுள் வாழ்த்தை அடிகோடிட்டு சிந்தனைக்கு விருந்தாக்கி முடிக்கிறேன்.

    கடவுள் வாழ்த்து

    ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்

    நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

    சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

    பொழிப்புரை:

    ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான் கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான்.

    செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.

    (இதில் மறக்கருணை என்பது, அவதாரங்களாக வந்து தீமையின் மொத்த உருவமாக இருக்கும் ‘அகங்கார மமகாரத்தை’ அழித்து நற்கதியுரச் செய்வது)

    ——————————————————————————

    1. பிரம்ம சூத்திரம்,

    2. சாண்டில்யப் பக்தி சூத்திரங்கள்

    நன்றி:

    ஞான தீபம் சுடர் 4.

    http://thevaaram.org

    Share