இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
சமூக அக்கறை என்பது நம் மக்களிடம் மிகவும் குறைந்து போய்விட்டது என்பது கவலையான செய்திதான்.. நாம் வாழும் இக்காலம்தான் இப்படியா.. அல்லது வருங்காலம் இன்னமும் மோசமாக இருக்குமா என்பது இன்னமும் கவலையாக உள்ளது.
ஆந்திராவில் கடந்த பத்து வருடங்களாக நான் கவனித்து வரும் விஷயம் இந்த ஆரம்ப நிலைக் கல்விக்கூடங்கள் எப்படியெல்லாம் குழந்தைகளைக் கஷ்டத்தில் உள்ளாக்குகின்றன என்பதைத்தான். காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் கல்வி அந்தக் குழந்தையை இரவு 8 மணி வரை அங்கேயே உட்கார வைத்து பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள் (லீவு நாட்கள் கூட). இது ஒரு விதத்தில் அந்தப் பிள்ளைக்கு பாடத்திலே மட்டும் கவனம் செய்ய உதவுகிறது என்றாலும் அந்தக் குழந்தைக்கு வெளி உலக அனுபவம் இல்லாமலே செய்கின்றன என்ற மாபெரும் உண்மையை பெற்றவர்களும் மறந்துவிடுகிறார்கள்.
இன்றைக்கு ஐ.ஐ.டி போன்ற வெகு கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஆந்திர மாணவர்கள்தான் அதிகம் தேர்ச்சி பெற்று தகுதி பெறுகிறார்கள் என்பதற்கு இந்த கடினமான படிப்பு முறை ஒன்றே முறையானது என்று கல்வி கற்பிப்பவர்கள் இங்கே அறைகூவலிட்டு பெற்றோர்களையும் ‘கன்வின்ஸ்’ செய்து விடுகிறார்கள். ஐ.ஐ.டி யில் படிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இளமையில் வாழ்க்கையின் பல சுவையான கட்டங்களை இழந்த மாணவனுக்கு எதிர்காலம் என்பது எப்படிப்பட்ட சுவையான வாழ்வைக் காண்பிக்கும்? எப்படி அவன் வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளப் போகிறான். ஐ ஐ டி படிப்பு ஒன்றே அவன் வாழ்வில் எல்லா நிறைவுகளையும் கொடுத்து விடுமா? கேள்விக்கு யார் விடை சொல்வது என்று புரியவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் வல்லமையில் ஒரு அழகான கட்டுரை ஒன்று வந்துள்ளது!! இக் கட்டுரையை எழுதியவர் திரு. குரு பிரசாத்.
ஆறரை மணி பஸ்ஸை பிடிக்க ஒவ்வொரு குழந்தையும் காலை நாலரை மணிக்கு எழுந்து டாய்லெட் போயி, குளித்து ஏதோ ஒன்றை வயிற்றில் அந்த விடியற்காலையில் அடைத்து, யூனிபார்ம், ஷூ, சாக்ஸ் என்று அடித்து பிடித்து பஸ்ஸை பிடிக்கிறது. ஒவ்வொரு குழந்தையாக ஏற்றி அந்த பஸ் எட்டரை மணிக்கு பள்ளி சேர்கிறது. ஒன்பது மணிக்கு ஆரம்பமாகும் பணி மூன்றரை நாலு மணிக்கு முடிகிறது. அதன்பின் மீண்டும் ஒரு மணிநேர பேருந்து பயணம். ஆறு மணிக்கு அந்த குழந்தை மீண்டு ஹோம்-ஒர்க், ப்ராஜெக்ட் ஒர்க், அசைன்மென்ட் ஒர்க் என்று எல்லா வேலைகளையும் முடிக்கும்போதே மணி நிச்சயம் பத்தை நெருங்கும். தூக்கம் சொக்கும். எப்போது படிக்கும்? இதில் சனிக்கிழமை வேறு பாதி நாள் பள்ளிக்கூடம் சிலர் முழு நாள் வேறு!
ஸ்ட்ரெஸ், ஹைபர்டென்ஷன், ப்ரெஷர் எல்லாம் ஏதோ ஐ.டி. ஃபீல்ட் சமாச்சாரம் என்று நினைத்திருப்பவர்களே. அதெல்லாம் இப்போதே எத்தனை மடங்கு அனுபவிக்கிறார்கள் இந்த குழந்தைகள் என்று தெரியுமா?
எவ்வளவுக்கு எவ்வளவு இத்தனை அதிக சுமை/துக்கம்/டார்ச்சர் எல்லாம் இருக்கிறதோ அந்த அளவு சிறப்பான பள்ளி/உயர்ந்த பள்ளி என பெற்றோர்கள் நினைப்பது தான் இந்த குழந்தைகளை மேலும் வதைக்க உதவுகிறது.
நாமக்கல் புகழ் ப்ராய்லர் கோழி மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களை முன்மாதிரியாக வைத்து தமிழகம் முழுவதும் வளர்கின்ற மாணவர்கள் வெறும் மதிப்பெண் சார்ந்த கல்வியை பெற்று மனப்பாடம் செய்து வாங்கும் மார்க் மூலம் கவுன்ஸ்லிங்கிலோ அல்லது தந்தை தரும் காசிலோ பொறியியல் (பி.ஈ) சேர்ந்த பின் தான், தான் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பதையே உணர்கிறான். ஆனால் அப்போதும் இதை அவன் தந்தை உணர்வதில்லை. மீண்டும் அதே பாணி படிப்பில் (வேறு வழி…பாதி புரியாதபோது!…) எப்படியோ டிகிரி முடித்து கரூர் வைசியா பேங்க், ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் என வங்கி குமாஸ்தாவாகிறான்.
கணக்குப் பிள்ளையாகவா தன் இளமையை தொலைத்து கனவை விற்று இத்தனை சித்ரவதை, வசை எல்லாம் அனுபவிக்கணும்?
ஒரு காலத்தில் “ப்ரஃபஷனல்” கோர்ஸில் சேர்வது பெருமை. ஏனென்றால் அவர்கள் வேலைக்குத்தான் போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனியாக ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கும் விதம் சம்பாதிக்கலாம். டாக்டர், வக்கீல், ஆடிட்டர் மற்றும் எஞ்சினியர்.
இப்போது எஞ்சினியர் பெரும்பாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போவதால் பி.ஈ படிப்பு “ப்ரஃபஷனல் கோர்ஸ்” என்னும் தகுதியை இழந்துவிட்டது.
சயின்டிஸ்ட் சிதம்பரம், சிவதாணுப்பிள்ளை, அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை எல்லாம் கிராம பள்ளிகளில் தரையில் அமர்ந்து படித்த சாதாரணக் கல்வியில் அதுவும் தமிழ் மீடியத்தில் படித்து அணுவிஞ்ஞானி ஆனார்கள். ஆனால் இன்றைய இந்த போந்தாகோழி படிப்பில் எத்தனை சயின்டிஸ்ட் உருவாகி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
சுற்றித் திரியும் பட்டாம்பூச்சிகள், துள்ளித் திரியும் பள்ளி பருவங்கள் எல்லாம் ஏட்டில் படிக்கும் வரிகள் ஆகிவிட்டன. சிறு வயதில் நானெல்லாம் காலை 9.30 மணி பிரேயருக்கு தான் செல்வேன். நாலு மணிக்கு வீட்டில் இருப்பேன். ஆறரை மணி வரை கபடி, கில்லிதாண்டு, கொ-கொ என சவுகிரியத்துக்கு ஆட்டம் போட்டு விட்டு ஏழு மணிக்கு கை கால் கழுவிக்கொண்டு படிக்க உட்காருவேன்.நன்றாகத்தான் படித்தோம். நன்றாகத்தான் வாழ்கிறோம்.
வாழ்க்கை என்றால் அது விலை உயர்ந்த ஆடம்பரப்பொருட்கள், சந்தோஷம் என்றால் விலை உயர்ந்த கைப்பேசி, செக்யூரிட்டி என்றால் கடனோ உடனோ வாங்கி கட்டும் அபார்ட்மென்ட் வீடு என்று எப்போது ஆக்கிக்கொண்டோமோ அப்போதே நம் குழந்தையின் சுதந்திரத்தை, சந்தோஷத்தை அடமானம் வைத்துவிட்டோம்!
வாழும் கலாச்சாரம் என்பது ஈ.எம்.ஐ. கலாச்சாரம் ஆகி விட்டது. நம் குழந்தைகளுக்கு மெத்தையை வாங்கிக் கொடுத்துவிட்டோம்! அவை தமது தூக்கத்தை தொலைத்து விட்டன!
சிந்திக்கவைக்கும் அர்த்தமுள்ள கட்டுரையை எழுதிய திரு குரு பிரசாத் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். வல்லமையாளர் குரு பிரசாத்திற்கு நம் வாழ்த்துகள்.
கடைசி பாரா: திரு. சு. கோதண்டராமன் எழுதி வரும் மாணிக்கவாசகர் பாடல்:
குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்
“உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.”
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
கல்லைப் பிசைந்து கனியாக்கும் திருவாசகப் பாடலைப் படிக்கவும் அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது ஒரு பெரும் பேறு. போற்றுதலுக்கு உரியவர் மணிவாசகரே.
மிக்க நன்றி சார்…
வாழ்த்துகள் குரு பிரசாத் சார்! 🙂
இந்த வார வல்லமையாளர் திரு.குருபிரசாத் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திருவாசகப் பாடலை அழகாக விளக்கிய திரு.கோதண்டராமன் அவர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
அருமை குருப்ரசாத்! ஆனால் எல்லோரும் தெரிந்தே செய்யும் இந்தத் தவறைத் திருத்தப்போவதுயார்? பெரும்பாலும் நாமக்கல் வட்டார மார்க் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் இந்த மாணவர்கள் இறுதியில் வங்கியில் குமாஸ்தாக மாறுவது வேதனையானதுதான். பி.இ(சிவில்) மட்டும் தான் இன்று ப்ரொபஷனல் கோர்ஸாகத்தங்கியுள்ளது. பெற்றோர்கள் மனதில் மாற்றம் வந்தாலொழிய இந்த நிலை மாற வாய்ப்பில்லை.
வல்லமையாளர் குரு பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள். எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒரு தவறான செயல், இது எப்படி மாறும் என தெரியவில்லை. நல்லதொரு கட்டுரை தந்தமைக்கு மீண்டும் பாராட்டுக்கள்.