அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : (7)

4

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லம் அருங்காட்சியகம், ஒட்டப்பிடாரம், தமிழகம், இந்தியா.

சுபாஷிணி ட்ரெம்மல்

இன்று நாம் நமது அருங்காட்சியகப் பயணத்தில் மேலும் ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறோம். நான் வசிக்கும் ஜெர்மனியின் லியோன்பெர்க் நகரிலிருந்து தமிழகத்திற்கு 7545 கிமீ தூரம் விமானம் மூலம் செல்கிறோம். எதற்கு விமானத்தில் பறக்க வேண்டும்? தமிழகத்தில் தானே இருக்கிறேன் என்று குறிப்பிடுவோருக்கு…, ஏதாவது ஒரு வகையில் பேருந்தோ, ரயிலோ எடுத்து தென் தமிழகம் வந்து விடுங்கள். அடுத்து உங்களை நான் அழைத்துச் செல்லவிருப்பது தென் தமிழகத்தில் திருநெல்வேலி நகருக்கு அருகே இருக்கும் நகரங்களில் ஒன்றான ஒட்டப்பிடாரம்!

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம் என ஒரு நகரின் பெயரை 2009ம் ஆண்டு வரை நான் கேள்விப்பட்டதில்லை. வ.உ.சி எனும் பெயரும் இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோரில் குறிப்பிடத்தக்கவர்களில் இவரும் ஒருவர் என்பதும் மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த நான் அதுவரை அறிந்த செய்திகள். அதற்கு மேல் இவரைப் பற்றி அவ்வப்போது வரும் சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்ததில் செக்கிழுத்த செம்மல் என்பதும் ஆங்கிலேய காலணித்துவ ஆதிக்கத்தில் கல்வி கற்ற சுதந்திர தாகம் மிக்க இளைஞராக இருந்ததோடு பலரையும் தனது ஆளுமையால் வசீகரித்து சுதந்திரச் சிந்தனைகளை ஆழமாக தமிழர் மனதில் பதிய தொண்டாற்றியவர் என்பதும் இவரைப் பற்றி நான் அறிந்திருந்த கூடுதல் செய்திகள்.

2009ம் ஆண்டின் இறுதியில் நான் தமிழகத்தில் தன்னார்வ தொண்டூழிய நிறுவனமான தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணி செய்வதற்காக 2 வார பயணம் ஒன்று ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் எட்டயபுரம் சென்று அங்கிருக்கும் எட்டயபுர ஜமீன் மாளிகையைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவினைத் தயாரிக்க வேண்டும் என்பது அப்பயணத்தின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அப்பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது எனது நண்பர் திரு.மாலன் அவர்களை அணுகி திட்டமிட ஆரம்பித்த வேளையில் எட்டயபுரம் செல்லும் முன் வழியில் ஒட்டப்பிடாரத்தைக் கடந்து சென்றால் அங்கிருக்கும் வ.உ.சி. நினைவு இல்ல அருங்காட்சியகமும் சென்று வரலாம். அது பயணத்திற்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டார். இது நல்ல யோசனையாக இருக்க நான் ஒட்டப்பிடாரத்திற்குச் செல்ல வேண்டும் என்று என் பயணக்குறிப்பில் இணைத்துக் கொண்டு தயாரிப்புக் காரியங்களில் ஈடுபட்டேன். திருநெல்வேலியில் திரு.மாலனின் இளைய சகோதரர் திரு.ஜெயேந்திரனின் இல்லத்தில் தங்கி அங்கிருந்து அவர் என்னுடன் துணைக்கு அனுப்பிய மூன்று ஆசிரியர்களையும் அழைத்துக் கொண்டு ஒட்டப்பிடாரம் பயணித்தேன்.

ஒட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள இந்த நினைவு இல்லம் ஓர் அருங்காட்சியகம் மட்டுமன்று; ஒரு நூலகமாகவும் இது இயங்குகின்றது என்பது தனிச்சிறப்பு. உள்ளூர் மக்கள் வந்து பயன்படுத்தும் நிலையில் இந்த நூலகம் சிறப்புடன் இயங்கி வருவது பாராட்டுதலுக்குரிய விஷயம்.

வ.உ.சி. நினைவு இல்லம் (2009)
வ.உ.சி. நினைவு இல்லம் (2009)

ஒரு வீடாக இருந்த இந்த கட்டிடத்தை அருங்காட்சியகமாகப் புதிதாக நிர்மாணிக்கத் திட்டம் எழ, 7.8.1957 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு.கு.காமராஜ் அவர்களால் இக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கட்டிடம் முழுமையடைந்த பின்னர் 12.12.1961ல் அன்றைய முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி அவர்கள் பெயரிலேயே ரூ 80 லட்சம் செல்வில் 2005ம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு மணிமண்டபம் ஒன்றும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்பதும் இவ்வேளையில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செய்தி.

இந்த நினைவு இல்லத்தில் உள்ளே நுழைந்ததுமே நம்மை வரவேற்பது ஒரு இரும்புத் தகட்டில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் வ.உ.சி அவர்களின் சிறு வாழ்க்கைக் குறிப்பு செய்திகள். அதில் உள்ள குறிப்பினைத் தருகிறேன்.

op2

1872 செப்டம்பர் 5 வியாழன். பிறப்பிடம்: ஒட்டப்பிடாரம்
1895 திருமணம்
1900 தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணி ஏற்பு
1908 ‘சுதேசிக் கம்பெனி’ எனும் பெயரில் கப்பல் கம்பெனி நிறுவுதல்
1907 சூரத் காங்கிரசில் புரட்சி
1908 மார்ச் 12 வ. உ.சி. கைது
1908 மார்ச் 13, நெல்லை தூத்துக்குடியில் கலகம்
1908 ஜூலை 7. வ. உ. சிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை

இவை வாசலில் இருந்த சிறு குறிப்பு மட்டுமே. உள்ளே நுழைந்ததும் நமக்கு வ.உ.சி .அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிமுகம் செய்யும் தகவல்கள் பல படங்களுடன் விளக்கப்பட்டிருப்பதையும் காண முடியும்.

சமூக பணிகளுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் வ.உ.சி எனச் சொன்னால் அது சிறிதும் மிகையில்லை. உணர்ச்சிப்பூர்வமான நிலையைக் கடந்து அறிவுப்பூர்வமான வகையில் செயல்பட்டு தமிழ் மக்களிடையே சுதந்திரச் சிந்தனையை வளர்த்தவர் இவர்.

காலணித்துவ ஆட்சியில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தவர்கள் கையாண்ட யுக்திகள் பலவிதம். இதில் வ. உ.சிதம்பரனாரின் உத்திகள் தனித்துவம் வாய்ந்தவை. பொருளாதார அடிப்படையில் மக்கள் சுயமாக முன்னேறவும் ஆங்கிலேயர்களை அண்டி இல்லாமல் சுயமரியாதையுடன் பொருளாதாரத் தேடலில் இயங்கவும் புரட்சிகரமாகத் திட்டமிட்டு செயல்பட்டவர் இவர். வணிகக் குடும்பத்தில் பிறந்து வக்கீலாக கல்வித் தகுதி பெற்றதோடு நின்றுவிடாமல் வணிகத்திலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தமிழர்களின் சரித்திரத்தில் கடந்த நூற்றாண்டில் வணிகத்திற்காகக் கப்பல் விட்டு சரித்திரம் படைத்தவர் இவர். இந்தச் செயல் இவருக்கு கப்பலோட்டிய தமிழன் என்னும் மங்காப் புகழை இன்றும் நினைவு கூறும் வகையில் அமைத்துத் தந்தது. பெரும் செல்வந்தராக இருந்த போதிலும் மக்கள் நலனுக்காகவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் மக்களோடு இணைந்து போராடி அவர்களுக்குச் சிந்தனை எழுச்சி ஊட்டியவர் இவர்.

வ.உ.சி. நினைவு தபால் தலை (2009)
வ.உ.சி. நினைவு தபால் தலை (2009)

அப்போதிருந்த ஆங்கிலேய அரசு இவர் மேல் குற்றம் சுமத்தி இவரைச் சிறைக்கு அனுப்பியதோடு மட்டுமல்லாது அவரது குடும்பச் சொத்துகளையும் பறிமுதல் செய்தது. செல்வந்தரான வ.உ.சி அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. நாட்டுக்காகத் தன் வாழ் நாளையே அர்ப்பணித்த இந்த மகான் தன் இறுதி நாட்களில் பொருளாதார நிலையில் மிகவும் நலிவுற்று சிரமத்தில் இருந்தார் என்பதை அறியும் போது நம் மனம் கலங்கத்தானே செய்யும்.

இத்தொடரின் அடுத்த பதிவில் இந்த அருங்காட்சியகத்தில் நான் அறிந்து கொண்ட குறிப்பிடத்தக்க தகவல்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

Suba Tremmel
http://subastravel.blogspot.com– சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com – ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com – மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com – Suba’s Musings
http://subas-visitmuseum.blogspot.com – அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com – த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com – மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com – விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com – மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் : (7)

  1. சென்ற வாரம் நீங்கள் குறிப்பிட்ட பொழுதே இந்தியாவாவைப் பற்றித்தான் எழுதப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்தேன். தமிழகத்தைப் பற்றி எழுதி இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வ. உ.சி அவர்களைப் பற்றி மேலும் பல தகவல்களை அறியும் ஆவலுடன்…..

  2. சென்ற வாரம் நான் கனித்தது தவறாகிவிட்டது. நம் தமிழகம், நம் சிதம்பரானார்,மேலும் அறிய ஆவல்.

  3. தனுசு – அடுத்த வாரம் வ.உ.சி முடித்து விட்டு வேறொரு நாட்டின் மற்றுமொரு அருங்காட்சியகம் நிச்சயம் செல்வோம். 

  4. திரு.சச்சிதானந்தம் – உங்கள் எதிர்பார்ப்பை போலவே இந்தியாவின் ஒரு அருங்காட்சியகத்தின் தகவல்களை வழங்கியதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன். வ.உ.சி பற்றி அடுத்த வார பதிவில் மேலும் சில தகவல்கள் தருகிறேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *