தஞ்சை வெ.கோபாலன்

 

குறவஞ்சி இலக்கியம் நமக்கெல்லாம் புதியது அல்ல. அவற்றில் மிகப் பிரபலமானது “திருக்குற்றாலக் குறவஞ்சி”. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சரபோஜி மீது பாடப்பட்ட “சரபோஜி பூபால குறவஞ்சி” இன்னொன்று. இவைகள் எல்லாம் காலத்தால் பிற்பட்டவை. மொழி நடையும் சற்று கொச்சையாக நாட்டுப் புற வாடையுடன் இருக்கும். இந்த வகையில் இன்னொரு குறவஞ்சியும் திருவையாற்றில் கோயில் கொண்டுள்ள தர்மசம்வர்த்தினி எனப்படும் அறம்வளர்த்த நாயகி மீதான குறவஞ்சி ஒன்று உண்டு.

இந்த குறவஞ்சிக்கு “தர்மாம்பாள் குறம்” என்று பெயர். தர்மசம்வர்த்தினியைத்தான் தர்மாம்பாள் என்பார்கள். திருவையாற்றுப் பகுதியில் பிறந்த பல பெண்களுக்கு இந்தப் பெயர் வைப்பார்கள். இந்த குறம் பற்றி திருவையாறு இசைக் கல்லூரி முதல்வராக இருந்த முனைவர் இராம கெளசல்யா அவர்கள் ஒரு தீபாவளி மலரில் கட்டுரையொன்று எழுதியிருந்தார். திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானம் தான் அவருடைய ஊர். அவரிடம் கேட்டபோது தன்னுடைய இளம் வயதில் அந்த ஊரில் சில பெண்மணிகள் இந்த குறம் பாடல்களைப் பாடிக் கேட்டிருப்பதாகவும், அது சுமார் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது என்றும் சொன்னார். அதைத் தேடிக் கண்டுபிடித்து திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் – தர்மசம்வர்த்தினி அம்பாள் ஆலய குடமுழுக்கு விழாவையொட்டி மறுபதிப்பு செய்தால் என்ன என்று ஆலயத்தின் கட்டளை விசாரணை முனைவர் குமாரசாமி தம்பிரான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, முனைவர் கெளசல்யா அவர்கள் பல இடங்களில் தேடி பழைய பிரதியொன்றைக் கண்டுபிடித்து அதை புதிதாக மறுபதிப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நூலை அவர் ஆர்வமுள்ளவர்களுக்கு விலையில்லாமல் கொடுக்கவும் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. முனைவர் இராம கெளசல்யா அவர்கள் தில்லைஸ்தானத்தில் “மரபு ஃபவுண்டேஷன்” எனும் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதற்காக அதே ஊரில் ஒரு வீட்டையும் வாங்கி அங்கு சிறுவர் சிறுமியருக்கு நமது பாரம்பரியக் கலைகள், இலக்கியங்கள், இசை, நாடகம், நடனம் போன்றவற்றைக் கற்பித்து வருகிறார்கள். தேவார வகுப்புகளும், வெளிவராத பல அரிய இசை நூல்களையும் வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். ஊத்துக்காடு வேங்கடகவியின் பல அரிய வெளிவராத பாடல்களை ஒருவார காலம் பயிற்சி வகுப்பு எடுத்து இசை ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். இளம் குழந்தைகளுக்கு கோலாட்டம், கும்மி, பூத்தொடுத்தல், கையால் துணி தைத்தல், சமையல் செய்தல், கோலம் போடுதல், அகராதி பார்க்கும் முறை, ஆங்கிலப் பயிற்சி, தமிழில் பிழையின்றி பேசுதல் போன்ற பல தலைப்பில் வகுப்புகள் இங்கே எடுக்கப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் பயிற்சிகளுக்கு தங்கவும், உணவும் இங்கேயே தந்து விடுகிறார். இவை அனைத்தும் அவருடைய சொந்த செலவில் நடைபெறுவதுதான் முக்கிய அம்சம். இவருடைய தாயார் ருக்மிணி அம்மாள், தங்கை மீனாட்சி, மீனாட்சியின் மகள் ஆகியோர் இந்தப் பணியில் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

இப்போது அந்த “தர்மாம்பாள் குறம்” பற்றி சிறிது பார்க்கலாம். காவிரி நதியானது சமுத்திர ராஜனைத் தேடி கிழக்காக ஓடிவரும் சமயம் திருவையாற்றை அடைந்த போது அங்கு கோயில் கொண்ட தர்மசம்வர்த்தினி அவளைத் தடுத்து நிறுத்தி அங்கேயே இருக்கும்படியும் சமுத்திரராஜனை இங்கே வரவழைப்பதாகவும் குறத்தியாக வந்து குறி சொல்வதாக அமைந்தது இந்த இலக்கியம்.

 

தர்மாம்பாள் குறம்

கடவுள் வணக்கம்

(கண்ணிகள்)

1. சரணமய்யா கணபதியே சரஸ்வதியே முன்னடவாய்
ஆறுமுக வேலவனே அன்புடனே துணை வருவாய்
2. பார்வதியாள் குறவடிவை பக்தியுடன் நான்பாட
அறம் வளர்த்த நாயகியின் அழகான குறம்பாட
3. காவேரிக்குக் குறிகள்சொன்ன கதையைநானும் எடுத்துரைக்க
விக்கினங்களில்லாதே விநாயகரே முன்வருவீர்!

லோபாமுத்திரை காவேரி நதியாக வருதல்

4. ஸஹ்யமலை தனில்பிறந்து சமுத்திரரை மாலையிட
அகஸ்தியரை பிரிந்துமவள் அரியபெரும் நதியாகி
5. தட்சணத்தின் கங்கையென்னும் ஜலரூபந் தனையடைந்து
ஜலமரூபியாய் காவேரி யென்னும் திருநாமத்துடனே வந்தாள்
6. குடகுமலை தன்னைவிட்டு காடுசெடி மலைதாண்டி
பர்வதத்தைப் பிளந்துகொண்டு பாம்புகளைச் சேர்த்துக் கொண்டு
7. மலையைப் பிளந்துகொண்டு மரங்களெல்லாம் பேர்த்துக் கொண்டு
செடிகொடியைப் பிடுங்கிக் கொண்டு தோழிமாரைக் கூட்டிக் கொண்டு
8. ஆப்தமான தோழிமார்கள் ஐந்துபேரைச் சேர்த்துக் கொண்டு
அமராவதி யென்னுமொரு அன்புடைய தோழியையும்
9. பவானி யென்னுமொரு பிரசித்தமான தோழியையும்
லக்ஷுமணா நதியான லக்ஷணமாந் தோழியையும்
10. ஹேமவதி யென்னுமொரு இஷ்டமான தோழியையும்
காஞ்சனா நதியென்னுமொரு களிப்புடைய தோழியையும்
11. தோழிமாரைக் காவேரியம்மன் துணையாகச் சேர்த்துக் கொண்டு
பரவியெங்கும் நிறைந்துகொண்டு பார்வையாக வந்துவிட்டாள்
12. உயர்ந்து வரும் நுரையழகும் உத்ஸாக கொந்தளிப்பும்
பெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்
13. குயில்கூவி குதூகலிக்க குள்ர்ந்தகாற்று வீசிவர
சோனைதூரத் தென்றல்வீச சிறந்த நதியாக வந்தாள்
14. கனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்
வாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்
15. சாமுண்டி மலையருகில் ஸ்தலங்களெல்லாம் சுற்றிக் கொண்டு
மைசூரு ராஜ்ஜியத்தில் வைபோகமாய் நிறைந்து கொண்டு
16. சிவசமுத்திரந் தன்னில் வந்து சிலபிரிவாய்க் கீழிறங்கி
ஸ்ரீரங்கப் பட்டணத்தில் ரங்கருக்கு மாலையாகி
17. ஈரோடு கொடுமுடியின் எல்லைவழி யாக வந்து
அகண்டமென்னும் காவேரியாய் அழகுடனே பரவிவந்தாள்
18. ஜம்புநாதர் ஸ்ரீரங்கர்க்கு திருமாலையாக வந்தாள்
பாற்கடல்போல் அலைமோத படுகையெங்கும் நிறைந்துவந்தாள்
19. வயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்
அறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத் தோடு வந்தாள்
20. பஞ்சநத க்ஷேத்திரத்தில் காவேரியும் வந்தவுடன்
ஆள்கொண்ட சுவாமிசென்று அறம்வளர்த்தாளுக்கு அறிக்கையிட்டார்
21. அம்பிகையாள் தானெழுந்து ஆபரணஞ் சோதிவிட
பாக்குடனே வெற்றிலையும் பழத்துடனே தேங்காயும்
22. மஞ்சளுடன் குங்குமமும் மணமுடைய சந்தனமும்
புஷ்பவகை யுள்ளதெல்லாம் தட்டினிலே எடுத்துக் கொண்டு
23. காவேரியை வரவேற்று காணிக்கையும் தான்கொடுத்தாள்
வாங்கிக் கொண்டு காவேரி வணங்கி நமஸ்கரித்தாள்
24. வாழ்த்தியப்போ அம்பிகையும் நதியைக் கண்டு மனமகிழ்ந்தாள்
சமுத்திரரை நானடைய சந்தோஷமா யனுப்புமென்று
25. காவேரி கேட்கலுமே கல்யாணிதேவி சொல்வாள்
சமுத்திரரை இங்கழைப்பேன் சந்தோஷமா யிருப்பாயென்றாள்
26. காவேரி கேட்டுமதைக் கலங்கியவள் தன்மனதில்
சரீரமெல்லாம் அங்கேவைத்து சாக்ஷியாக ஒருரூபம்
27. சாக்ஷியான காவேரி சாகரத்தை நோக்கிச் சென்றாள்
அம்மனுட ஆக்ஞையினால் சமுத்திரரும் அக்ஷணமே
28. உத்ஸாகத் துடனேவந்தால் உலகமெல்லாம் முழுகுமென்று
பாதாளத்தில் மறைந்துகொண்டு பட்டணத்தின் நடுவேவந்தார்
29. ஸ்தலத்தினுட மகிமைதன்னை சமுத்திரருந் தான்பார்த்தார்
ஸப்தஸ்தல சுவாமிகளும் சமுத்திரரை வரவேற்று
30. பழங்களுடன் தாம்பூலம் பிரஸாதங்களும் தான்கொடுத்தார்
வாங்கிக்கொண்டு சந்தோஷமாய் சமுத்திரரும் போய்மறைந்தார்
31. சாக்ஷியென்னும் காவேரிநதி சாகரத்தில் தேடிவிட்டு
திரும்பிவந்து காவேரி தயங்கி மனந்தளர்ந்து
32. சமுத்திரரை யடையவென்று தர்மாம்பாளை நினைந்து
கன்னிகையாய் திருவையாற்றில் காவேரி தவமிருந்தாள்
33. பார்வதியாள் காவேரியை பரிஹாஸம் பண்ணவென்று
அறம்வளர்த்தாள் குறவடிவை அழகாகத் தானடைந்தாள்.

தர்மாம்பிகை குறத்தி வடிவெடுத்தல்
(2ஆவது வேறு மெட்டு)

1. பாடகந் தண்டையும் பாதஸரமும்
பத்து விரலுக்குப் பீலிமெட்டியும்
அடுக்குமோதிரம் சங்குவளையும்
அஸ்தகடகமும் தோள்வளையும்
2. குண்டும் பவழமும் குடமணித் தாழ்வடம்
கோத்தமுத்துடன் வஜ்ஜிரமாலையும்
சங்கு மணியும் பச்சை மணியும்
சரப்பளி உத்தண்டா மோகனமாலையும்
3. கொப்புடன் நல்ல முத்துவாளியும்
குந்தளஓலையும் குடைக்கடுக்கனும்
மின்னல் ஒளிபோல மூக்குத்தியும்
முத்துக்கட்டின வஜ்ஜிரக்கல்லும்
4. பல்லொளியும் புன் சிரிப்பும்
பவழம்போல சிவந்த வாயும்
கண் மலரும் மையழகும் இரு
கண்ணிடையில் பச்சிலைப்பொட்டும்
5. கஸ்தூரிப்பொட்டும் நெற்றியின் பட்டமும்
கல்லிழைத்த சுட்டியாழ்வானும்
மல்லிகை முல்லை மலர்கள்சூடி
மயிரைவாரி முடிந்த அழகும்
6. கறுப்பு ரவிக்கையும் பட்டுப்புடவையும்
கச்சிதமாகவே உடுத்தவழகும்
பாலகனை மார்புடனே
பட்டுத் தலைப்பாலே அரவணைத்து
7. குஞ்சுகளைக் குறத்தியம்மை
கூடத்தன்னுடன் கூட்டிக்கொண்டு
கொடிபோல இடையும் துவளக்
கூடையெடுத்து இடுப்பினில் வைத்து
8. பாக்குப்பையும் இடுப்பில் சொருகி
பாவனையாகவே சாய்ந்துநடந்தாள்
காதுவரையில் நீண்ட கண்ணும்
கனிவாயும் புன்சிரிப்பும்
9. செண்பகம் போல் மேனிவர்ணமும்
செந்தாமரை போல் முகமும்
தாழைமடல் போன்ற காதுகளும்
சந்திரன்போல வளைந்த நெற்றியும்
10. பஞ்சநதி திருவையாற்றின்
பெரியதொரு வீதியிலே
தையலந்த வண்ணக் குறத்தி
தானும் வந்தாள் குறிபார்க்க.

ஸ்திரி ஜனங்கள் குறத்தியிடம் குறிகேட்டல்

11. செம்பொன் கொடிபோல் மெல்லநடந்து
தெருவீதி சுற்றி வந்தாள்
தேர்மூட்டியினருகே நின்று
சிவதெரிசனம் பண்ணிக்கொண்டு
12. சிங்காரமாகவே வண்ணக் குறத்தி
தென்னண்டைவீதித் தெருவில் வந்தாள்
அம்பிகையென்னுங் குறத்தியிடத்தில்
ஆதரவாய் வந்து மாந்தரெல்லாம்
13. கூட்டமாய்க் கூடியே கொம்பனைமாரெல்லாம்
குறத்தியைப்பார்த்து கேட்கத் துவங்கினார்
பெண்களிரண்டுபேர் புத்தியறியல்லை
இங்கழைத்துவந்தேன் பாராய் குறத்தி
14. மூத்தபிள்ளைக்கு வேட்க வகையில்லை
சாஸ்திரம் பாரென்று சொன்னாளொருத்தி
இளையபிள்ளையும் என்னுடன் பேசவில்லை
எனக்குச் சொல்லென்று கேட்டாளொருத்தி
15. கைக்குழந்தைக்கு காச்சலடிக்குது
காட்டவந்தேனென்று சொன்னாளொருத்தி
நாத்தானாருக்கு ஆத்துப் புருஷன்
நலமில்லையென்று கேட்டாளொருத்தி
16. கொழுந்தனாரொத்தன் கூத்தியார் வீட்டிலே
குடியாய்க் கிடக்கின்றான் என்றாளொருத்தி
தோழியொருத்தி துர்க்கனா காண்கிறாள்
திருநீறுதாவென்று கேட்டாளொருத்தி
17. மாமனாருக்கு மண்டையிடிக்குது
மாத்திரை தாவென்று கேட்டாளொருத்தி
நாட்டுப் பெண்ணுக்கு பேய்பிடித் தாட்டுது
நல்ல மருந்துதா வென்றாளொருத்தி
18. இப்படிப் பெண்டுகள் எல்லாருங் கேட்கவே
இங்கிதமாகக் குறிகளுஞ் சொல்லி
கலாஸநாதரை ஆலயஞ் சென்று
கண்டுபின் வந்து குறிகளுஞ் சொல்வேன்
19. என்று சொல்லியந்தப் பெண்டுகளுடனே
ஈச்வரியாகிய வண்ணக்குறத்தி
அம்பிகை என்னும் வண்ணக்குறத்தி
ஆள்கொண்டார் கோவிலைக் கண்டுதொழுது
20. ஆள்கொண்ட சுவாமியின் கோயிலைவிட்டு
அய்யாரப்பரின் சந்நதிவந்தாள்
சூர்யபுஷ்கரணி ஜலத்தை யெடுத்து
ஸிரஸின் மேலே தெளித்துக் கொண்டாள்
21. தென்கைலாஸம் வடகைலாஸம்
சுற்றிப்ரதக்ஷணம் பண்ணிவந்தாள்
சுவாமியுடைய சந்நதித் தூணில்
சாய்ந்திருந்தாள் வண்ணக்குறத்தி
22. சந்நதியிலே யிருந்த குறத்தி
வடிவைக்கண்டு சங்கரரும்
கயல்மீன் போன்ற கண்ணழகும்
கஸ்தூரிப்பொட்டும் முகஒளியும்
23. புன்சிரிப்பும் பல்லொளியும்
புவனேச்வரி வடவழகும்
ராஜேச்வரி அழகைக் கண்டு
நாலுநாழி பிரமித்திருந்தார்
24. இந்நெடு நாளிதுவரைக்கும்
இந்த வடிவை நாம் கண்டதில்லை
மன்மதனை யெரித்த சிவன்
மயங்கியே தன் மனதிற்குள்ளே
25. காமனைநீறா யெரித்த சிவன்
கலங்கியே தன் மனதிற்குள்ளே
அந்தக் குறத்தி வடிவைக்கண்டு
ஆசையுடன் மோகங் கொண்டார்.

பஞ்சநதீசர் சுந்தரவடிவுடன் குறத்தியிடம் வந்து
சம்பாஷித்தல். (3ஆவது வேறு மெட்டு)

1. கைவளையும் சங்கிலியும் கணையாழி மோதிரமும் (சுவாமி)
கடுக்கனுடன் பதக்கம்கண்டி சரப்பளியும் தரித்தார்
2. சாயக்கம்பி வேஷ்டிகட்டி சரிகைச்சால்வை யணிந்து
தலைப்பாகையும் உருமாலை சங்கரரு மணிந்தார்
3. சந்தனக் குறுக்குமிட்டு ஜவ்வாதுப் பொட்டுமிட்டு
தங்கரைஞாண் தாழித்தும் கந்தம் புனுகணிந்தார்
4. கொழுந்து வெட்டிவேர் மல்லிகை குடமல்லிகைப் புஷ்பம்
குமுகுமுன்னு பரிமளிக்க குடுமியிலே அணிந்தார்
5. வாயிலே பாக்கடக்கி வெண்பட்டுப் பைபிடித்து
மடித்ததொரு வெற்றிலையை விரல்நடுவி லிடுக்கி
6. கந்தர்வ வேஷத்துடன் குறத்தியிடம் வரவே (சுமாமி)
கூர்விழியால் மயக்கியந்தக் குறத்தி மெள்ளச் சிரித்தாள்
7. ஈச்வரரைக் கண்டவுடன் எழுந்திருந்து குறத்தி (அம்மை)
இருகையினா லுங்கூப்பி அடிவணங்கி நின்றாள்
8. வாரும்பெண்ணே குறத்தியேயுன் வடிவைக்கண்டு வந்தேன்
மாலையிட்ட உன்கணவன் வந்தானோகூட
9. தாய்தகப்பன் உனக்குமுண்டோ சகோதரர்கள் உண்டோ
ஜாதிகுலம் நாமந்தன்னை தனித்தனியாய் சொல்வாய்
10. எந்தநாடு எந்ததேசம் எங்கேவந்தாய் குறத்தி
இந்நெடுநாள் உன்போல் வடிவைக்கண்டது நானில்லை
11. சித்திரைத் திருநாளுக்கு ஜனங்கள் மெத்த வருவார் (ஆனால்)
சுந்தரிஉன் வடிவைப்போல கண்டது நானில்லை
12. வைகாசி வஸந்தனுக்கு மனுஷ்யாள் இங்கு வருவார் (ஆனால்)
வையகத்தில் உன்னைப்போன்ற வடிவைக் கண்டதில்லை
13. செல்லத்துடன் சிவனாரும் சுந்தரியைக் கேட்க
வண்ணக் குறத்திகேட்டு மயக்கியவ ளுரைப்பாள்
14. ஜாதிகுலங் கேட்டீரே சுவாமியென்னை யிப்போ – நான்
தனித்தனியா யெடுத்துச் சொல்வேன் சலியாமல் கேளும்
15. ஜாதியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் – நாங்கள்
சாம்பபர மேசருக்கும் சம்பந்தங்களுண்டு
16. அப்பன் ஆயி என்னை அம்பிகையென் றழைப்பார்
என் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை
17. குச்சுக்கு காவலாயென் கிழவனாரும் இருப்பார்
கூடைமுறங் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்
18. குஞ்சுகளின் பசியார அன்னமது கொடுத்து
கொழித்தமுத்தும் முறத்தில் வைத்தால் குறிபார்த்துச் சொல்வேன்
19. வண்ணக் குறத்தியிந்த வக்கணைகள் படிக்க
கேட்டுமந்தப் பரமேசருங் கம்பீரமாய்ச் சொல்வர்
20. பட்டுச்சீலை படியரிசி பாக்குடன் வெற்றிலையும்
பசியடங்கப் பட்டைசாதம் பணமுங்காசுந் தருவேன்
21. உன்கணவன் கிழவனென்று சொன்னாயேநீ பெண்ணே
கந்தருவன் போன்றநானே உன்னழகுக் கேர்வை
22. செல்லத்துடன் சிவனாரும் சிரித்துக்கொண்டே சொல்ல
வண்ணக்குறத்தி சினந்து மறுத்திதனைச் சொல்வாள்
23. என்கணவன் குறவனெங்கள் கிழவனிதைக் கேட்டால்
ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெறிவார்
24. ஆசைபெரிதென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்
அறம்வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பள்
25. வேலைசெய்யத் தாதியுண்டு பாக்கியமெனக் குண்டு
விதம்விதமாய் பட்டுமுண்டு வெகுபணதி யுண்டு
26. கட்டிலுண்டு மெத்தையுண்டு கிழவனரு கிருப்பேன்
களஞ்சியத்தில் அரிசியுண்டு கவலை கெடயிருப்பேன்.

குறத்தி ஈசருக்குதன் பெருமையுரைத்தல்
(2ஆவது மெட்டுப்போல் பாடலாம்)

1. கோத்தமுத்து மாலையுடன் கொப்புடனே வாளிமின்ன
ஏற்றமுள்ள ஈச்வரியாள் எடுத்துச்சொல்வள் தன் பெருமை
2. பூத்திருக்கும் சோலைகளும் புஷ்கரணி தீர்த்தங்களும்
காஞ்சனத்தால் ஆலயமும் கடைத்தெருவும் வீதிகளும்
3. பார்வையுள்ள வீதிகளும் படித்துறையும் காவேரியும்
ஏழுநிலைக் கோபுரமும் எட்டவொண்ணாத் திருமதிலும்
4. பத்துநிலைக் கோபுரமும் என் பள்ளியரை சேர்வைகளும்
யாகம்வேள்வி செய்யும் நல்ல அந்தணர்கள் கூட்டங்களும்
5. வேத பாராயணத்தழகும் நான் வீதிவரும் வைபவமும்
பஞ்சநதி மகத்துவமும் எந்தன் பரிபூர்ண நதியழகும்
6. இன்னமுண்டு என்பெருமை ஜதீசரேநீர் கேளுமென்று
தையலந்த உமையவளும் தன்பெருமை பின்னுஞ்சொல்வள்.

குறத்தி ஈசருக்கு மலைவளமை யுரைத்தல்
(2வது மெட்டுப்போல் பாடலாம்)

1. கைலாஸத்தினில் வஹிப்பவரே காளவிஷத்தை புனித்தவரே
எந்தனுட மலைகள்தன்னை ஈச்வரரே நீர்கேளும்
2. கொங்குகுடகு சொல்லிமலை வங்கம் மலையாளதேசம்
கஞ்சிகாள ஹஸ்தியுடன் காசியிலும் நானிருப்பேன்
3. அங்குமிருப்பேன் சுவாமிமலையில் அடர்ந்தசோலைக் குடைந்தையிலும்
இங்குமிருப்பேன் பஞ்சநதியிலும் ஏழூஉரும் சுற்றிவருவேன்
4. வைத்தீச்வரன் கோவிலிலும் மனமகிழ்ந்துநான் வஸித்திடுவேன்
அறம்வளர்த்தாள் சந்நதியில் அனுதினமும் நானிருப்பேன்
5. சங்கமுகம் மாயவரமும் சபாநாதரைக் கண்டுவருவேன்
மங்கள நாயகரே மஹானுபாவா நாடுகேளும்

குறத்தி ஈசருக்கு நாட்டுவளமுரைத்தல்
(3ஆவது மெட்டுப் போல பாடலாம்)

1. எந்தனுட நாடுதன்னை கேளுமையா சுவாமி
ஏற்றமுள்ள ஈச்வரனார் வாழுமெங்கள் நாடு
2. பொங்குப் புகழ்காவேரி உள்ளதெங்கள் நாடு
புண்ணியராம் மானிடர்கள் புகழ்ந்தேற்றும் நாடு
3. சந்திரரும் சூரியரும் வஸிப்பதெங்கள் நாடு
சாரங்கபாணியனார் பள்ளிகொண்ட நாடு
4. அகிலாண்ட ஈச்வரியாள் வாழுமெந்தன் நாடு
அப்பருக்கு அருள் புரிந்த நாடுமெந்தன் நாடு
5. அஞ்சுநதியோடி வரும் பஞ்சநதம் நாடு
அன்னை பரமேச்வரியாள் அறம் வளர்த்தாள் நாடு
6. மாத்ரு பூதேச்வரனார் மலையுமெந்தன் நாடு
மலையின் மேலேவாழும் ஒரு மகனுமுண்டு எனக்கு
7. ஜம்புநாத ஸ்வாமியுடைய தீர்த்தமெந்தன் நாடு
ஸ்வயம்புவன பிக்ஷாண்டார் கோவிலுமென் நாடு
8. குத்தாலம் பாபவிநாசம் கோவில்மலை நாடு
முத்தான திருஅனந்தர் நாடுமெந்தன் நாடு
9. திருச்செந்தில் திருக்குன்றம் திருத்தணியும் நாடு
திருப்பதி யென்னும் அந்தத் திருமலை என் நாடு
10. வண்ணக் குறத்தியும் தன் பெருமையை வர்ணிக்க
கூட்டங்கூடி தேவரெல்லாம் சுவாமியுடன் கேட்க
11. சரஸ்வதியும் லக்ஷுமியும் சந்தோஷமாய்க் கேட்டு
குறத்தியுடமகிமை தன்னைக் காவேரிக்குச் சொன்னார்
12. காவேரியுங் கேட்டவுடன் தன் கவலைநீங்கி
சகியைவிட்டுக் குறத்திதன்னை அழைத்துவரச் சொன்னாள்

குறத்தி காவேரிக்குக் குறிசொல்ல வருகுதல்
(2ஆவது மெட்டுப் போல் பாடலாம்)

1. (அடி) கொங்கையழகி குறத்தியம்மே நீ
குறி சொல்லுகின்ற மகத்துவத்தை
2. எங்கள் நாயகி காவேரி கேட்டு
அழைக்கச் சொன்னாள் குறத்தியே யுன்னை
3. செம்பொன் கொடிபோல் குறத்தியெழுந்து
திருக்காவேரிக் கரையில் வந்தாள்
4. வீற்றிருந்து தவம் செய்யுமந்த
மெல்லி நல்லாள் காவேரி யம்மனும்
5. கண்டவுடன் குறத்தி வரவைக்
காவேரி யம்மனுங் கண்ணைவிழித்து
6. கயல்மீன் போன்ற கண்மலரும்
கஸ்தூரிப் பொட்டும் முகஒளியும்
7. நகைத் திடுமந்தப் பல்லொளியும்
ராஜேச்வரியின் வடிவழகும்
8. கண்டவுடனே குறத்தி வடிவை
காவேரி யம்மனும் மனந்திகைத்து
9. (அடி) ஸஹ்யமலைக்கும் சமுத்திரத்துக்கும்
சாய்ந்த வண்ணமாய் நானிருப்பேன்
10. இந்நெடு நாளாய்க் கண்டதில்லை
உந்தன் வடிவைப்போல குறத்தி
11. எந்த நாடடி குறத்தி யுனக்கு
எனக்குச் சொல்வாய் எமக்குறத்தி
12. என்றவுடன் மந்தஹாஸமாய்
உமையுமப்போ எடுத்துரைப்பள்
13. இந்த நாடெல்லாம் எந்தன் நாடுதான்
இன்னமுண்டெந்தன் நாடுகளும்
14. பொங்கித் தளும்பும் நாலுகடலும்
புவனேந்திரக் குறவருடன்
15. அங்கங்கிருந்து நான் வசிப்பேன்
அய்யா றப்பன் குறத்தியென்பேர்

குறத்தி காவேரிக்குக் குறி சொல்லுதல்
(3ஆவது மெட்டுப்போல் பாடலாம்)

1. எந்தனுட நாடுகளும் சொல்லித் துலையாது
ஏற்றமுள்ள ஈச்வரனார் ஆள்வதெங்கள் நாடு
2. சொல்லுவேண்டி உன் குறையை தயவெனக்குண்டாக
சொர்ணங்களையுங் கொணர்ந்து வைத்தால் தகுந்த குறிசொல்வேன்
3. நேர்த்தியான முத்துரத்னம் பவழங்களுங் கொணர்ந்தால்
(உன்) நெஞ்சிலுள்ள குறைகளை நான் நிவர்த்தியாகச் சொல்வேன்
4. வஜ்ஜிரமும் பச்சையுடன் வைடூர்யமுங் கொணர்ந்தால்
(உன்) மனதிலுள்ள குறையை நானும் மாற்றும்படி சொல்வேன்
5. சந்நியாசி வேஷங்கொண்ட தபஸியுந்தன் கணவன்
தலைமயிரை ஜடைதரித்து தபஸுபண்ணும் முனிவன்
6. கெளபீனம் கடுசூத்ரம் கமண்டலமும் தரித்த
அமைந்த கிருஷ்ணாஜினந்தரித்த அகஸ்தியருமவரே
7. அகஸ்தியரை மாலையிட்டு லோபாமுத்திரை நீயும்
அகண்டகாவேரியாகி அவரைவிட்டுப் பிரிந்தாய்
8. சமுத்திர ராஜனுடன் சங்க முகமாகி
சமுத்திரத்தப் போயடைய தபஸு பண்ணியிருக்காய்
9. மார்கழி மாதத்தினில் மணல்மேடு இடுவாய்
மடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்
10. ஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து
ஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்
11. வைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி
வையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்
12. ஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்டால்
அப்போ நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்
13. கொஞ்சுங்கிளிபோல் குறத்தி குறிகள் சொல்லிச்சிரிக்க
கூட்டங்கூடி சகலபேரும்கூடி நின்று கேட்டார்

குறத்தி ஈசருடன் சம்பாஷித்தல்
(4ஆவது வேறு மெட்டு)

1. குறத்தி முகத்தையும் குறிசொல்லும் நேர்த்தியும்
குறிப்புடனே பார்த்து
க்ஷணப் பொழுதாகொலும் கண்ணை மூடாமல்
சங்கரர் பார்த்திருந்தார்
2. (அடி) கொங்கையழகி குறப்பெண்ணே நீயும்
குறிசொன்னது போதும்
(என்) ஆலயம் புகுந்து அன்னம் புஜித்து
அணைவாய் நீ என்னையென்றார்
3. சிறுபிள்ளைப் புத்திபோல் சிவனுமுரைக்கவே
சிவகாமி தான் கேட்டு
சித்தத்திற்குள்ளே சிரித்து மகிழ்ந்து
சீறியே ஏதுசொல்வள்
4. பஞ்சாப கேசரின் பாததெரிசனம்
பண்ணவே நானும் வந்தேன்
ஆசைபெரிதென்று உம்மையும் நானும்
அணையவும் நீதியுண்டோ
5. அறம்வளர்த்த உம்மநாயகி யாளுமக்
கனுக்ஞை கொடுத்தாளோ
ஆகட்டுமிப்போ தவளுடன் சொல்லியே
ஆக்கினை பண்ணிவைப்பேன்

ஈசர் அம்பிகையைக் காணாமல் வருந்துதல்

6. சிரித்த முகத்தையும் துடுக்கான வார்த்தையும்
சிவசங்கரர்தான் கேட்டு
(நம்ம) சுந்தரிதேவியும் வந்தாளோ வென்றவர்
சுற்று முற்றும் பார்த்தார்
7. சரஸ்வதி லக்ஷுமி இருவருமாகச்
சரேலென் றெழுந்திருந்து
சங்கரியாளை அழைத்திட நாமும்
அறிவழிந்து போனோம்
8. ஆலயத்திற்சென்று அம்பிகையைத் தேடி
ஆராய்ந்து பார்த்துமவாள்
மூலை முடுக்கெல்லாம் தேடிக்காணாமல்
விசாரமுந் தானடைந்தார்
9. சிவசுந்தரியாளைக் காணாமலேயந்தச்
சங்கரர்தாம் புலம்பி
நந்திகேசரைவிட்டு எங்குந் தேடச்சொல்லி
(சிவ)நாதன் தவித்தழுதார்
10. சித்திவிநாயகா சங்கரியாளைக்
காணோமே என்னசெய்வேன்
சுந்தரிதேவியைக் காணாவிட்டால்நான்
ஜீவனிழப்பேன் என்றார்
11. சிவசுப்ரமண்யா உன்னுட அன்னையைக்
காணோமே என்ன செய்வேன்
அம்பிகையாளை நான் கண்ணிற் காணாவிட்டால்
ஆவி யிழந்திடுவேன்
12. கெளரீவல்லபர் என்று பிரபஞ்சத்தில்
கீர்த்தியாய் சொல்லிடுவர்
வாமபாகத்தினில் தேவியில்லாவிட்டால்
வாகன மேறுவரோ
13. பார்வதி சங்கரர் என்று பிரபஞ்சத்தில்
பக்தியாய்ச் சொல்லுவார்கள்
பத்தினியு மில்லாவிட்டால் பத்னிஹீனனுக்கு
பூஜையும் பண்ணுவாரோ
14. அம்பிகையாள் வந்து சேராவிட்டலெனக்
கன்னபானங்கள் வேண்டாம்
அபிஷேகம் வேண்டாம் அலங்காரம் வேண்டாம்
அர்ச்சனையும் வேண்டாம்
15. சுந்தரி சுந்தரி என்று எல்லோருமாய்
சேர்ந்து அலத்தலுற்றார்
சிவகாம சுந்தரிதேவியுங் கேட்டு
சிரித்தாள் மனதிற்குள்ளே
16. சபையிலுள்ள பேரைக் கடைக்கண்ணாலே பார்த்துச்
சங்கரி தானிருக்க
ஸரஸ்வதி லக்ஷுமி குறத்தியுடைய
சமிபத்திலோடு வந்து
17. சங்கரியாளைக் குறத்தி நீயும்
க்ஷணத்தில ழைத்தாயானால்
செம்பொன்னும் முத்தும் ரத்தினங்க ளெல்லாம்
சொர்ணத் தட்டிற் கொடுப்போம்
18. அம்பிகையாளை அழைப்பித்தா லிக்ஷணம்
யானை சேனை குதிரை
வெண்கலத் தேருடன் தங்கப் பல்லாக்கும்
வெகுமானந் தாரோமென்றார்
19. சேனை பரிவாரம் யானைகளுண்டென்று
துடுக்காகப் பேசுகின்றீர்
(என்)சித்தத் தினிலிப்போ கோபம் வந்துதானால்
தகித்து விடுவேன் நானும்
20. சினத்துடனே யந்தக் குறத்தியுரைத்திட
சரஸ்வதி லக்ஷுமியும்
குறத்தியை நாமும் அதட்டிப் பேசினது
குற்றமாய் நேர்ந்த திப்போ
21. குறத்திக்கு கோபம் வந்துவிட்டதானால்
குத்திவிடுவல் நம்மை
குறவரெல்லாருமாய் கூட்டமாய்க்கூடி
கொன்றுவிடுவார் நம்மை
22. என்று சொல்லிக்கொண்டு தேவியைக் காணாமல்
ஏக்கமடைந்திருந்தார்
தையல் குறத்தி சரஸ்வதியை நோக்கி
சாந்தமாய் தானுரைப்பாள்

அம்பிகை தன்னை அறிவித்து ஈசருடன் ஆலயம் சேர்தல்

23. சபையுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும்
சங்கரி கண்டிரங்கி
சந்தோஷமாகச் சபையோர்களைப் பார்த்து
தயவாகத் தூனுரைப்பாள்
24. கோடிநவரத்தினம் கொண்டு வந்தாலிப்போ
குறிபார்த்து நானுமுங்கள்
அம்பிகையாளை அரைநாழிக்குள்ளாக
அழைப்பித்துத் தாரேனென்றாள்
25. முப்பத்து முக்கோடி தேவர் ரிஷிகளும்
முன்னே நிறைந்திருக்க
ஆதிசிவனுட அண்டையில் சென்றவள்
அவர் கரத்தைப் பிடித்தாள்
26. தையல் குறத்தியும் கையைப் பிடிக்கவே
சங்கரர் தான் பயந்து
நெஞ்சந் துடிக்க சரீரம் பறக்கத்
திடுக்கிட்டுத்தான் திகைத்தார்
27. குறத்தியைக் கண்டாசைப் பட்டீரே
கூசாமல் கையை காட்டும்
வெட்டவெளியான பிரம்மம் உமக்கிந்த
வெட்கமுந் தானுமுண்டோ
28. விழுத்து எறிவீர் எடுத்து உடுப்பீர்
வித்தைகள் செய்திடுவீர்
சதாசிவப் பிரும்மம் நானென்று சொல்வீர்
சந்யாசி போலிருப்பீர்
29. பதிவிரதைமார்களைப் பங்கம் குலைப்பீர்
பரம்பிரம்ம மூர்த்தி என்பீர்
ரிஷிபத்தினிமாரண்டை நிர்வாணத்துடனே
நின்றது வெட்க மன்னோ
30. அறிவிலியாகிய அஸுரனுக்கு
அவன் கேட்ட வரங்கொடுத்து
அண்டம் பதினாலும் ஓடியலைந்து நீர்
ஐவேலிக்காயினி லொளித்தீர்
31. மூர்த்தியில் சமர்த்தராம் விஷ்ணுவுமப்போது
மோஹினி வேஷங்கொண்டு
அஸுரனைக் கபடத்தால் வதைசெய்த விஷ்ணுவை
அணைந்தது வெட்கமன்றோ
32. வண்ணக் குறத்தி பரிஹாஸம் பண்ணவே
மஹாதேவர் தான் கேட்டு
குறத்தியைக் கண்டு நாமிச்சையடைந்தது
குற்றந் தானென் றுணர்ந்தார்
33. சுவாமி தளர்ந்திடும் மேனியும் சங்கரர்
வாட்டமும் சங்கரி கண்டிரங்கி
க்ஷமிக்க வேணுமென்று சங்கரர் பாதத்தில்
சரண மென்றே பணிந்தாள்
34. தையல் குறத்தி பணிந்தவுடனே
சபையோர்கல் தான் பார்த்து
அம்பிகை தானிவள் என்றறிந்தவுடன்
ஆனந்த மாயிருந்தார்
35. ஆதி சிவனாரும் அம்பிகையுடனே
ஆலயந் தன்னிற் சென்று
குறத்தி வடிவான அம்பிகையாளைக்
கூசாமலே யணைந்தார்
36. அம்பிகையுடனே அபிஷேகமாடி
அமுதமும் தான் புஜித்து
வாமபாகத்தினில் தேவியுடன் சிவன்
மந்தஹாஸமாய் வீற்றிருந்தார்
37. பக்தியாய் சொன்னவர் சிரத்தையாய்க் கேட்டவர்
கற்றுக் கொடுத்தவர்க்கும்
அஷ்டபோகத்துடன் புத்திரபாக்கியமும்
அறம்வளர்த்தாள் கொடுப்பாள்
38. அறம் வளர்த்த பரதேவியின் பாதத்தை
அனுதினமும் ஸ்மரித்தால்
அம்பிகையும் திருப்பாதார விந்த
ஐக்கியமுந் தான் கொடுப்பள்
39. அம்பிகை யருளால் காவேரி பெருகி
ஆற்றினில் வெள்ளம் வந்து
சந்தோஷமாகிச் சமுத்திரத் தைக்கண்டு
சங்க முகமடைந்தாள்
40. மங்களம் மங்களம் தர்மாம்பிகையுடன்
பஞ்சநதீச்வரர்க்கும்
மங்களம் திருக்காவேரி நதிக்கும்
மண்ணில் வாழும் மாந்தருக்கும்

==========

காவேரியம்மன் கப்பல்
(விநாயகர்துதி கப்பல்)

நமோமஹா கணபதியே – சம்போ – நமோமஹா குணநிதியே
நமோஉமா ஸ்கந்தாய – சம்போ – நமோஹரன் ஆநந்தாய

(முடுகு)

விக்நராஜாய வெகு விக்னஹரணாய
லம்போதராய ஹேரம்பாய மஹதே
ரம்பாபலகராய அம்பா ஸுதாய
அபயவர கரதாய ஏகதந்தாய
சுபமுக வரதாய லம்போதராய
கபிலமுக வர்ணாய கஜகர்ணிகாய
விகடதந்தாய ஸுர கணபூஜிதாய
தூமகேதாய யக்ஷ கணஸேவிதாய
பாலசந்திராய ஹரஸ்கந்த ஜேஷ்டாய
சரவண பவாயநம கருணாரஸாய

ஏலேலோ கணராஜா — ஐயா
ஏலேலோ சர்வேசா

மண்டல மெல்லாம் புகழும் – பொன்னி
மங்களக் காவேரி கப்பல்
தென்கிழக்காய் காவேரி – அம்மன்
செல்லுகின்ற ஸ்தலங்கள் சொல்வாம்

(முடுகு)

விண்ணவர்கள் புகழும் ஸ்ஹ்யகிரி தனைவிடுத்து
மின்னொத்த குடகுகிரி காட்டின் வழிவந்து
உன்னத கிரிகடந்து கண்காணாம லோடி
தென்னலுடன் சிவசமுத்திர சிகரம்விட்டு இழிந்து
சேர்த்துவந்த கபிலையுடன் சந்தோஷமாய்ச் சேர்ந்து
திருமுக்கூ டென்னுமந்தத் திருநகரைத் தாண்டி
ஸ்ரீரங்க பட்டணத்தில் சடுதியாக வந்து
ஸ்ரீரங்க நாதருக்குத் திருமாலையாய் வளைந்து’
சீருடைய கெளமுகியும் சேலம் நகர் சேர்ந்து
க்ஷேத்திரமாம் பிரம்மகிரி சேர்வைமலை தாண்டி
அந்தமாய் பவானிநதி அன்புடனே கூட
ஆனைக்குந்தி மலையைவிட்டு அமராவதி சேர
சொந்தமாய் ஈரோடு விட்டு கொடுமுடியைச் சேர்ந்து
திருமூர்த்திகள் வஸிக்குமந்த ஸ்தலத்தைக் கண்டு மகிழ்ந்து
அந்த முள்ள சேரனுட அரசாட்சியில் அமைந்த
அழகான ஊர்களெல்லாம் அன்புடனே பரவி
பாச்சலூர் கருவூர் குழித்தலையும் பார்த்து
பெருகமணி சிருகமணி (திருப்) பளாத்துறையு மோடி
அகண்ட காவேரியாகி அடியார்களைக் காத்து
தலைமகளாய் கொள்ளிடத்தை வடபுரத்தில் செலுத்தி
திருச்சினாப் பள்ளிமலை ஈசனையும் ஸ்துதித்து
ஜம்புநாதர் ஸ்ரீரங்கர்க்கு திருமாலையுந் தரித்து
சிந்தாமணி தன்னைவிட்டுத் திருவானைக்கா நடந்து
கொண்டல்கண்டு மயிலாடும் கோவிலடி யடைந்து
கொக்கரசம்பேட்டை திருமழப்பாடி கடந்து
வண்டலுடன் பெருகி மகராஜபுரம் வந்து
தில்லைஸ்தானம் திருக்கண்டியூர் திருவையாற்றில் தங்கி
கணபதி அக்கிரகாரம் கபிஸ்தலமுங் கண்டு
வளமையான சுவாமிமலை கும்பகோணம் வந்து
பேரான மருதூரின் பரமரையும் பணிந்து
பேர்பெற்ற கோவிந்தபுரம் வஞ்சிநாடு புகுந்து
குத்தாலும் ஆடுதுறை உச்சிதமாய் கடந்து
கோனேரி ராஜபுரம் நரசிங்கன்பேட்டை வந்து
கெளரீ மாயூரநாதன் சந்நதியைக் கண்டு
களிப்புடன் துலாமாதக் கடசீ மட்டுமிருந்து
கண்டவுடன் ஜீவர்களின் கர்மங்களை யொழித்து
அன்புடனே கெளரீநாதன் அனுக்கிரக மடைந்து
சந்தோஷமாய் காவேரி சாயாவனந்தாண்டி
சங்கமுகத் துறையடைந்து சமுத்திரைச் சேர்ந்தாள்

அன்புடனே கூடி அலையுடன் போராடி
கண்கலங்கி வாடி கணவரிடம் ஓடி
களிக்கக் கடல் கொந்தளிக்க
முத்தைக் கொழிக்கத் தண்ணி சிவக்கச் சேர்ந்து
காதலுடன் கடல்மன்னனும்
காவேரியுங் கலந்துவிட

ஏலேலோ – ஏலேலோ – காவேரி
கடலுடனே கலந்த கப்பல்

காவேரியம்மன் ஊஞ்சல்

இருபுறமும் சோலைதன்னில் குயில்கள்கூவ
எத்திசையும் பக்ஷியினம் இசைந்து பாட
தோழியராம் நதிகூடத் தென்றல் வீச
திருக்காவேரி கணவருடன் ஆடிலூஞ்சல்.

ஓம் சுபம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““தர்மாம்பாள் குறம்”

  1. கிட்டத்தட்ட  மறைந்து விட்ட புத்தகத்தை தேடிக் கண்டுபிடித்து வெளிக்கொணர்ந்த 
    முனைவர் ராம கவுசல்யாவும், அதனை பிரபலப்படுத்திய கோபாலன்ஜியும் 
    நமது நன்றிக்கு உரியவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *