Blog

  • வல்லமைப் பெண்மணி!

    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    பாரதி கண்ட புதுமைகளை 
    கனவுகளாய்  மறையாது
    நிழலாய் கண்ட மாதருக்குள்
    நிஜமாகக் நிமிர்ந்திடத் தானோ
    அழகாய் எழுந்தவள் நீ..!
    நமக்கேன் வம்பென பேசாமல்
    ‘சரவணன் மீனாட்சி’யில் மனம் மகிழ
    புரட்டு சீரியலுள் புதைந்து போகாமல்
    அகத்து பெண்மணிகளின் வல்லமையை
    கோபுரத்திலேற்றிக்   காட்டிய
    சாபமெனும் பெயரில் கல்லெனக்
    கிடந்திடாத வல்லமைத் தடம்
    பட்ட இன்னுமோர் அகலிகை நீ..!
    உறங்கிக் கிடக்கும் உயிர்களுக்குள்
    உரத்தைத் தூவி உயிர்ப்பை இருத்தி
    கடலுக்கடியில் பாறையாய் பதுங்காது
    வெட்ட வெளியிலே ஊர்வலமாக்கி
    உன்னதத்தின் மேன்மைகளை
    உழைப்பவளின் உன்னதத்தை
    பேனா முனையில் எழுத்தாண்டவள் நீ..!
    புத்தாண்டுப் பரிசுகளாய்
    விடியலின் வேர்களை  வெளிச்சத்துக்கு
    அழைத்து வந்து – பெண்மை வாழ்க..!
    எனக் கூத்திட்டு  – சக்திதனை
    நிர்கதியென நிறுத்தாது..!
    வானம்பாடியாக்கி  திக்கெட்டும்
    பறை சாற்றிய இலக்கிய தேவி நீ..!
    ஓயாத உழைப்பில்
    தன்னலமற்ற தியாக தீபமேற்றி
    சாதனைப் பெண்களின் அணிவரிசையில்
    தீபம் ஏந்தும் புதுமைப்பெண் நீ ..!
    வல்லமைக்கே ஒளி கொடுக்கும்
    இன்றைய உலக மகளிர் தினத்தில்
    உந்தனை சிந்தனை செய்வதில்
    செருக்கடைகிறது எந்தன் மனம்..!
    உயரட்டும் உந்தன் கொடி புரட்சிப்பெண்ணே!
    =======================================
    Share
  • முன்னேறு பெண்ணே!

     

    ஷைலஜா

    அழுதுபுலம்பித்தேய்வதனால்
    ஆகும் பயனிங்கேதுமில்லை
    ஆற்றல் கொண்டே எழுந்திடுவாய்
    அவனியும் உந்தன் வசமாகும்

    தவித்துத் தனியே நிற்பதனால்
    தடைகள் குறையப்போவதில்லை
    புவியை அசைக்கப் போராடிடுவாய்
    புதுமை செய்யப் புறப்படுவாய்!

    அரண்டு அதிர்ந்து நிற்பதனால்
    ஆளுமை செய்ய வழியுமில்லை
    புரட்சி செய்யப் புறப்படுவாய்
    புவனம் உனக்கு வசமாகும்

    வெட்டிப்பேச்சு பேசுவதனால்
    விளையும் பயன்பெற இயல்வதில்லை
    வெற்றிச்சிகரம் அடைந்திடுவாய்
    விரைந்து முன்னேறு பெண்ணே!

    ***************************************************

    Share
  • மகளிர்தின வாழ்த்து…

     

     

    செண்பக ஜெகதீசன்…

     

    மாதவம் செய்து பிறந்தவரே

    மாதா வாகும் பெண்ணினமே,

    பாதகம் நிறைந்த பாரினிலே

    பண்பை வளர்க்கும் தாய்க்குலமே,

    சோதனை பலவாய் வந்தாலும்

    சொந்தம் காப்பது உன்செயலே,

    சாதனை பலவும் புரிந்திடவே

    ஜெகமே வாழ்த்திடும் இத்தினமே…!

     

    Share
  • புதுயுகம் படைக்கும் மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..

    இராஜராஜேஸ்வரி

    ஏட்டையும் பெண்கள் தொடுவது தீது என்று

    எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்;

     

    வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற

    விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

     

    வீ‌ட்டையு‌ம், நா‌ட்டையு‌ம் ஒரு சேர ஆள முடியு‌ம் எ‌ன்று

    பெண்கள்  ‌நிரூ‌பி‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

    பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;

    எட்டு மநிவினில் ஆணுக்கிங்கே பெண்

    இளைப்பில்லை காணென்று பலதுறைகளிலும்

    இணையற்று சாதனைகள் நிகழ்த்திவருகிறார்கள் பெண்கள்..

    வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

    வேண்டிவந் தோமென்று வேதனைகள் தீர்க்கின்றனர் பெண்கள்..

    சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்

    சாதி படைக்கவும் செய்திடுவோம்

    என பலதுறைகளிலும் முனைப்புடன் சாதனை படைத்துவருகிறாள் புதுயுக நவ யுவதியாக வலம் வரும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள் சமர்ப்பிப்பதில் பெருமை அடைகிறோம் நாம்…

    வீறு கொண்டு எழுந்து வெற்றிச் சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்ட காலமிது.

    புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் மலர்ந்து மணம் வீசும் மகளிர் தினம் மகிழ்ச்சிக்குரியது ..

    மனிதப் பிறவியில் ஏறத்தாழ சரிபாதியாக விளங்கும் மகளிர் சமுதாயம் சமூக, அரசியல், பொருளாதார விடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அனைத்து நாடுகளிலும் எழுச்சியுடன் கொண்டாடப்படும் திருநாள்!

    இந்தத் துறைதான் பெண்களின் சொந்தத் துறை என்ற நிலை மாறி, எந்தத் துறையும் பெண்களின் சொந்தத் துறைதான் என்ற உண்மை உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.

    புதிய விடியலை நோக்கிய புனிதப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கும் திருநாளாய் இந்த மகளிர் தினம் மலரட்டும்.

    தையலை உயர்வு செய்! என்னும் மகாகவி பாரதியின் கவிதைக் கட்டளை மானுடத்தின் பொதுச் சட்டமாக ஆகட்டும்

    இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் –

    நிச்சயமாக நம்புங்கள் – அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.

     1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம்

    கொண்டாடப்பட்டு வருகிறது.

    1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.

     அனைத்து துறைகளிலும் பெண்கள் முழுமையாகவும் சமத்துவமாகவும் பங்குபற்றுவதன் மூலமே ஸ்திரமான சமாதானத்தையும் ஐ.நா. சாசனத்தின் கீழான சமூகத்தையும் நாம் எதிர்பார்க்க முடியும்’ என வலியுறுத்தும் வகையில் சிறப்பாக மகளிர் தினம் கவனத்தில் கொள்ளப்படுகிறது ..

    தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

    மகளிர் தினத்தையொட்டி சில ஆண்டுகளாக ஆண்கள் துணையின்றி பெண் விமானிகளே பங்கு பெறும் விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருவது  மகிழ்ச்சி அளிக்கிறது.

    விமானத்தை பெண்களே இயக்குவது ஒரு புதுவிதமான அனுபவம். . நவீன யுகத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் பெண்களுக்கு வழங்குவது ஊக்குவிப்பதாக உள்ளது.

    Share
  • பெண்தான்! பெண்மை வாழியவே!!

     

    சத்தியமணி

    மாமியாரை அன்னையென  அணைப்பதுவும் பெண்தான்

    மாமியாரை இல்லம்விட்டு  விலக்குவதும்  பெண்தான்

    மருமகளை தன்மகளாய்      மதிப்பதுவும் பெண்தான்

    மருமகளை மாடெனவே      மாற்றுவதும் பெண்தான்

    தமக்கையின் தங்கையென  வாழ்வதுவும் பெண்தான்

    தமக்கையின்  உழைப்பினிலே தள்ளுவதும் பெண்தான்

    மகளென்ற போதும்மகன்  கடமைதரும் பெண்தான்

    மகளென்று  சொத்துரிமை நாடுவதும் பெண்தான்

    மனைவியென துணைபுரிய மின்னுவதும் பெண்தான்

    மனைவியென மற்றொருத்தி வாழ்க்கையிலும் பெண்தான்

    அழகான  அணிகளோடு   அணிவகுப்பும் பெண்தான்

    அரைகுறை ஆடைகளில் விளம்பரமும் பெண்தான்

    ஆண்களினம் பெற்றோனாய் ஆக்குவதும் பெண்தான்

    ஆண்களினக் கொடுமையிலே அழிவதுவும் பெண்தான்

    முன்வரியில் சக்தியென பெண்பெருமை பேணட்டும்
    பின்வரிசை பாவமெலாம் திருந்தநிலை மாறட்டும்
    பெண்களினம் பெண்மைதனைப் புரிந்துநடை போடட்டும் !
    பெண்களினம் பொன்மயமாய் புவியினிலே வாழ‌ட்டும் !!

    இனிய மகளிதர் தின வாழ்த்துக்கள்

    படத்திற்கு  நன்றி :

    http://www.igirlsgames.com/gphotos/indian-traditional-girl/1.html

    Share
  • அறுமுகநூறு (4)

     

    -சச்சிதானந்தம்

     

    சிதிலம் அடைந்த சிந்தனை கடந்து,

    உதிரம் அடைந்த நஞ்சினைக் களைந்து,

    எதிலும் நிலையா மனதை மறந்து,

    கதியென் றறுமுகன் மதிமுகம் தொழுவோம்!                                                                 16

     

    தா ளிரெண்டும்  தீ யாக,

    தோ ளிரெண்டும் பூ வாக,

    மே  னிஎங்கும்  நீ ரோட,

    வா என்றாய் தா விவந்தேன்!                                                                                           17

     

    பிடியோடு உறவாடும் உன்னண் ணனை,

    பிடிசாம்பல் கொண்டாடும் உன்னப் பனை,

    விடிவெள்ளி போலொளிரும் உன்னம் மையை,

    படியேறி வருகையில் பாடுகின் றேன்!                                                                             18

     

    கதிரேறி உச்சிக்கு வந்த பின்னும்,

    படியேறு மிச்சைக்கு ஏது விண்ணம்?

    நிலவேறு மிரவென்னு மினிய வெண்ணம்,

    மனமேறிக் குளிர்வதால் படி ஏறுவோம்!                                                                         19

     

    அரகரா! அரகரா! அதரங்கள் சொல்லும்,

    சரவணா! சரவணா! சிகரங்கள் சொல்லும்,

    முருகனே! முருகனே! என்றுமனம் சொல்லும்,

    பரமனின் குமரனைப் பாடிடச் செய்யும்!                                                                          20

     

    படத்துக்கு நன்றி: http://muruganarul.blogspot.com/2009/11/blog-post.html

     

    Share
  • என்னைப் போலவே

    -வருணன்

     

    விசித்திரமானதென் வீடு
    வாசல்களற்றது
    மேற்கூரையில் சன்னல்கள்

    பகலில் இருளும் இரவில் ஒளிரும்
    அதன் அறைகள்
    தமக்குள்ளே உரையாடும்
    மௌனத்தில்

    வழிந்து கொண்டேயிருக்கும்
    இசையில்லாத பாடலொன்றும்
    வார்த்தைகளில்லா கவிதையொன்றும்

    முன்னோக்கி மட்டுமே
    நகர வேண்டிய நிர்ப்பந்தம் துறந்த
    நாட்காட்டி

    வீட்டிற்கு வெளியே
    இருந்து கொண்டேயிருக்கிறது
    எல்லையில்லா வேலியொன்று
    இன்னமும்

    விசித்திரமானதென் வீடு
    என்னைப் போலவே
    என் அகத்தைப் போலவே.

     

    படத்துக்கு நன்றி: http://blog.michaelmartinho.com/architecture/upside-down-house-in-szymbark-poland/

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (5)

    பவள சங்கரி

    ”ஒரு கொள்கையை எடுத்துக்கொள் அதற்காகவே உன்னை அர்ப்பணித்து, பொறுமையுடன் போராடிக் கொண்டிரு.  உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும் – சுவாமி விவேகானந்தர்.

    ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதியான எண்ணம் கொண்டு அதை ஆரம்பிக்கும் போதே அதற்குரிய சக்தி தானகாவே கிடைத்துவிடும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். நமக்குள் புதைந்து கிடக்கும் சக்தியை பாதி அளவிற்கும் கூட நாம் பயன்படுத்துவது இல்லை என்றே கூறுகின்றனர். நம் முயற்சியை முழுமையாகப் போடும்போது அது பன்மடங்காகப் பெருகத்தான் செய்யும் என்பதும் நாம அனுபவத்தில் காணும் உண்மைதான். கண்ணிற்குத் தெரியாத கடவுள் போலத்தான் நம் சக்தியும் அல்லவா.நம் பார்வைக்குத் தெரியாவிட்டாலும் நமக்குத் தேவையான நேரத்தில் நம்முள் புகுந்து பெரும் சாதனைகள் புரிகிறதல்லவா?

    எதையும் தள்ளிப்போடாமல் உடனே செய்யப் பழகுங்கள்!

    எடுத்த காரியத்தை உடனடியாக முடிக்கப் பார்க்க வேண்டும். தேவையில்லாமல் தள்ளிப்போடும் வழக்கம் நம் வெற்றிப் படிக்கு ஓர் தடைக்கல்லாக ஆகிவிடும்.  தள்ளிப்போடாமல் காரியங்கள் செய்வது எப்படி?

    முதல் நிலையாக நாம் எப்பொழுது, எப்படி, ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று பார்க்கலாமா? நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளியில்தான் இந்தத் தள்ளிப்போடும் வழமை வந்து தொற்றிக்கொள்கிறது. உதாரணமாக, பலர் தன் அன்றாடக் கடமைகள் அனைத்திலும் மிகத் தெளிவாக இருப்பவர்கள், வழக்கமாகச் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனை, உணவுக் கட்டுப்பாடு, போன்றவற்றில் கோட்டை விட்டு விடுவார்கள். கடந்த 6 மாத காலத்தில் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் என்பதைப் புரட்டிப் பார்த்தோமானால் நாம் எதற்கெல்லாம் தள்ளிப் போட்டிருக்கிறோம் கண்டு கொள்ளலாம். இது ஒரு சுய பரிசோதனை. நம்முடைய தொழில் சம்பந்தப்பட்டதாகவோ, சமூக வாழ்க்கை, பொருளாதாரச் செயல்கள், இப்படி எதுவாகவும் இருக்கலாம். அது. எதனால் தள்ளிப் போடப்பட்டது என்று ஆராய்ந்தால் அதற்கான காரணம், பயம், சலிப்பு, களைப்பு, நன்றாக செய்ய வேண்டும் என்ற பேராவல் போனறவைகளாக இருக்கலாம். இல்லை என்றால் வேறு ஏதாவது பொழுதுபோக்கில் ஈடுபட்டு, இதையெல்லாம் தள்ளிப் போட்டோமா என்பதைக் கண்டறிந்தாலே அதிலிருந்து, எளிதாக மீண்டு விடலாம்.

    இரண்டாம் நிலையாக; மிக நன்றாக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் எனற எதிர்பார்ப்பில்,   நிதானமாக நன்றாகச் செய்யலாமே என்று தள்ளிப் போடுவோம். ஒரு வேளை அது தகுதிக்கு மீறிய உயர்தரத்தை எதிர்பார்ப்பதாகக்கூட இருக்கலாம். அதனைக் கண்டறிந்து, உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனைத் தவிர்த்தாலே, இது போன்று தள்ளிப் போடுதலை விட்டுவிடுவோம்.,  அதற்காக ஒழுங்கு முறையைக் கைவிட்டு விட வேண்டும் என்பது பொருளல்ல. அதிகப் படியான கவனம் தேவைப்படக்கூடிய பணியைக் கண்டறிந்து செயல்படுவதால் அவசியமான வகையில் நம் பொன்னான நேரத்தைச் செலவிட முடியும்.

    அடுத்து மூன்றாம் நிலையாக, ஒரு வேலையை நாம் தள்ளிப் போடுவதற்கான காரணம் பல நேரங்களில் நம் அணுகு முறையால்தான். உதாரணமாக, வரவு செலவுக் கணக்கு போடுவது போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் பணியை இரவு 10 மணிக்கு மேல் ஓய்வெடுக்கும் வேளையில் செய்ய முனைவது.  குறிப்பிட்ட அந்த , வேலையைத் தள்ளிப் போடத் தூண்டுகிறது.

    இது போன்று தொடர்ந்து தள்ளிப் போடுகிறோம் என்றால், அந்த வேலையச் செய்யும் முறையை சற்றே மாற்றியமைக்க வேண்டும் சலிப்படையச் செய்யக்கூடிய வேலைகளைச் செய்ய முற்படும் போது விடுமுறை நாளையோ, ஓய்வாக இருக்கும் நேரத்தையோ தேர்ந்தெடுத்து, மனம் விரும்புகிற நல்ல பாடலோ, பிடித்த உணவு வகைகளோ, பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்ய முற்பட்டால எப்படித் தள்ளிப் போடும் எண்ணம் வரும்? எந்த வேலையாக இருந்தாலும், அதை விருப்பத்துடன் உற்சாகமாக, நகைச்சுவை உணர்வுடன்,ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும். அப்படியும் செய்ய முடியவில்லையென்றால் வேறு ஒருவரது மூலமாகவாவது வேலையை முடிக்கப் பார்க்க வேண்டும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கப் பார்ப்பதால், அதை நிறைவேற்றுவதற்குரிய சக்தியையும், நேரத்தையும் விட அதிகமாகவே செலவிட வேண்டி வரும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

    சில நேரங்களில் நாம் மிகவும் விரும்பிச் செய்யக் கூடிய வேலைகளைக் கூடத் தள்ளிப் போட நேரிடுகிறது. உதாரணமாக நல்ல அழகான  ஓவியம் வரைந்து புதிதாகக் கட்டியிருக்கும்  நம்முடைய வீட்டின் வரவேற்பறையில் மாட்ட வேண்டும் என்ற ஆசை. நம்முடைய மற்றப் பணிகள் மற்றும் பொறுப்புகள் காரணமாக  தள்ளிப் போய்க்கொண்டே இருக்கலாம். தம்மைப் போன்றே இது போன்ற கலைகளில் நாட்டம் கொண்ட வேறு நண்பரையோ அல்லது பயிற்சி வகுப்பின் மூலமாகவோ ஊக்கச் சக்தியைப் பெற்று, மளமளவென வேலையை முடிக்க முயல வேண்டும். அப்படி முயற்சி எடுத்து ஒரு வேலையை முடிக்கும் பட்சத்தில் ,அதை நமக்குப் பிடித்த உணவோடு, குடும்பத்துடன், கொண்டாடலாமே.

    சில நேரங்களில் ஒரு காரியத்தில் இறங்கும் போது, அதனால் அவமானப் பட்டுவிடுவோமோ அல்லது தவறாகப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகக் கூட, தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். இது போன்ற நேரங்களில் நாமே நன்றாக சிந்தித்து எதற்காக அஞ்சுகிறோம் என்பதைக் கண்டறிந்து, அதனைத் தவிர்க்கப் பார்க்க வேண்டும். முடியவில்லையென்றால், நண்பர்களிடம் ஆலோசனை பெற்றாவது, அக்காரியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும். அந்தக் காரியத்தின் மூலம் நமக்கு ஆதாயம் கிடைக்கும் என்று உணர்ந்தால் அதை எப்படியாவது முடிக்க முயல வேண்டும்.

    அன்றாடம் நாம் முடிக்க வேண்டிய பணிகளை, நம் கைப்பட குறிப்பெடுத்து எழுதி வைத்துக்  கொள்ள வேண்டும்.
    தேவையான ஓய்வு எடுக்கவும் தயங்கக் கூடாது. இல்லாவிட்டால்  அது வேலை செய்யும் நேரத்தை நம்மையறியாமலே கைப்பற்றிவிடும்.

    மிகவும் சலிப்படையச் செய்யக் கூடிய நீண்ட வேலையாக இருந்தால், அதைப் பிரித்து ஒரு வாரத்திலோ அல்லது மாதக் கணக்கிலோ குறிப்பிட்டு நிர்ணயித்து சலிப்படையாமல் செய்து முடிப்பதற்கு வழி வகுத்துக் கொள்ள வேண்டும்.

    நண்பர்களுடன் போனில் பேசுவது, படிப்பது, எழுதுவது, போன்ற மன உற்சாகம் அளிக்கக் கூடிய செயல்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து விசயங்களையும் உள் வாங்கி, செம்மையாக நம் கடமையை நேரந்தவறாமல் செய்யும் போது, வெற்றி நிச்சயம்தானே!

    தொடரும் .

    படங்களுக்கு நன்றி:

    http://photosofinteriors.com/contact-us/home/landscape.html?start=1

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(48)

    சக்தி சக்திதாசன்

       

     

     

     

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்திலிருந்து இனிய வணக்கங்கள் .

    “அரசனுக்கொரு காலம் வந்தால் புருஷனுக்கொரு காலம் வரும் ” என்றொரு முதுமொழி உண்டு. அதே போல ஆங்கிலத்தில் உள்ள முதுமொழி ஒன்று “If the mountain will not come to Muhammad, then Muhammad will go to the mountain” அதாவது மலை முகமதுவிடம் வராவிட்டால், முகமது மலையிடம் போக வேண்டும். ஆமாம் காரியம் ஆக வேண்டுமானால் யார் பெரியவர் என்று பார்த்துக் கொண்டு இருக்காமல் யாருக்கு அந்தக் காரியம் முக்கியமானதாக இருக்கிறதோ அவர்கள் அக்காரியத்தின் நிறைவேற்றுதலுக்கு முதல் முயற்சியை எடுக்க வேண்டும் என்பதுவே உண்மை.

    என்னடா சக்தி என்ன பிதற்றுகிறானோ ? என்று எண்ணுகிறீர்களா ? கவலையை விடுங்கள் .

    அது சரி யார் அரசன் ? யார் புருஷன் ? . யார் மலை? யார் முகமது ?  யோசனையாக இருக்கிறது இல்லையா ? எனது இந்தக் கடிதத்தின் சாரமே பெப்பிரவரி மாதம் 17ம் திகதயளவில் நடைபெற்ற இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் இந்திய விஜயத்தைப் பற்றியே ஆகும் ?

    அது எல்லாம் இருக்கட்டும் அவரது விஜயத்திற்கும் நான் மேலே குறிப்பிட்ட முதுமொழிகளுக்கும் என்ன சம்மந்தம்? விளக்க வேண்டியது எனது கடமையல்லவா?

    ஆனந்தமாக ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு இப்போ அடங்கிப் போயிருக்கிறது.

    எத்தனையோ விதமான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்து பல நடவடிக்கைகளை முடுக்கி விட்டும் கூட எதிர்பார்த்த அளவில் நாட்டின் பொருளாதாரம் அவர்கள் எதிர்பார்த்த திசையில் எதிர்பார்த்த அளவில் முன்னேறவில்லை.

    பொருளாதாரத்தைச் சீர் செய்கிறோம் என்று சூளுரைத்து பதவியேற்ற கூட்டரசாங்கத்தின் ஜந்து வருட கால பதவிக் காலம் தனது மூன்றாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை.

    இன்னும் இரண்டே வருடங்களில் மற்றொரு தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையிலிருக்கும் அரசாங்கம் ஏதாவது வகையில் நாட்டின் பொருளாஅதாரத்தை முன்னோக்கித் தள்ள வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

    அதிகமாகப் பேசப்பட்டு வரும் ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் இதேமாதிரியான பொருளாதாரச் சிக்கலுக்குள் தம்மைப் புதைத் துக் கொண்டு வெளிவரத் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையிது. ஜரோப்பிய ஒன்றியத்தினுள் ஓரளவு பொருளாதாரச் சிக்கலில் விடிகாணத் திடங்கிய ஜேர்மனிய தேசமும் மீண்டும் பிந்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இங்கேதான் இங்கிலாந்துப் பிரதமரின் இந்திய நாட்டு வ்ஜயத்தின் முக்கியத்துவம் உணரப்பட வேண்டியிருக்கிறது.

    மேலைத்தேச நாடுகள் விரும்பியோ விரும்பாமலோ எதிர்கால உலகப் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா எடுக்கப்போகும் பங்கு மிகவும் பிரதானமாகி விட்டது.

    இந்தியாவை விட பொருளாதார முன்னேற்றம் அதிக அளவு காணப்படும் சீனாவை விட இந்தியாவில் முதலீடு செய்வதையே இம்மேலைத் தேசநாடுகள் அதிலும் குறிப்பாக இங்கிலாந்து முனைப்புக் காட்டி வருகிறது.

    இங்கிலாந்தின் அரசாங்கத் திணைக்களங்கள் உட்பட பல முன்னனி கம்பெனிகள் தமது பிந்தள வேலைகளை இந்தியாவில் நிகழ்த்தும் வகையில் தமது கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    நிலமை இவ்வாறிருக்க இங்கிலாந்தின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் உலகப்பொருளாதாரச் சூழல்களை கணக்கிலெடுக்கத் தவரும் வகையில் தமது உள்நோக்கக் பார்வையைத் தீவிரப்படுத்தினார்கள்.

    விளைவு ,

    வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு பணிபுரியவோ அன்றி கல்வி பயிலும் வசதிக்காகவோ வருபவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டுபவர்களைப் போலக் காட்டுவதனால் அரசியல் கட்சிகள் சில தமது ஆத்ரவைப் பெருக்கிக் கொள்ளலாம் எனக் கண்டு கொண்டு தமது துவேஷ உணர்வை ஆசியாவிலிருந்து அதுவும் குறிப்பாக இந்தியாவிருந்து சமீபத்தில் வந்தவர்களை நோக்கிக் கக்கத் தொடங்கினார்கள்.

    பொருளாதாரச் சிக்கலினால் தவித்துக் கொண்டிருந்த இங்கிலாந்து மக்கள் இவ்வுணர்வலைகளினால் தாக்கப்பட்டத்தைக் கண்ட அரசும் கல்விபயில வரும் இந்திய மாணவர்களின் விசா விடயத்தில் கெடுபிடியக் காட்டினார்கள்.

    அப்போது இது பல பகுதிகளில் சர்ச்சைக்குரிய விடயமாகவிருந்தது. இத்தகைய கெடுபிடிகள் இங்கிலாந்துக்கு வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து இங்கிலாந்துக்கு வரும் அந்நியச் செலவாணி வரும்படியைத் தக்கி விடும் எனும் வாதம் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் நிலவியது.

    இத்தகையதொரு நிலைமையில் தான் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கைகள் இங்கிலாந்தின் பொருளாதாரம் வீழ்ழ்ச்சியிலிருந்து மீண்டு விட்டாலும் மறுபடி வளர்வதற்கு அதிக காலம் எடுக்கும் என்று சுட்டிக்காட்டின.

    புரிந்தது இங்கிலாந்து அரசுக்கு இந்நிலையிலிருந்து தமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தமது வியாபார நுணுக்கங்களை பொருளாரத்தில் ஓங்கி வளரும் இநியா போன்ற நாடுகளில் விச்தரிப்பது ஒன்றேதான் சிறந்தமுறை எனும் முடிவெடுத்தார்கள்.

    இதோ அதன் விளைவாக 159 பேர் அடங்கிய குழுவுடன் இங்கிலாந்துப் பிரதமர் இந்தியாவிற்குப் படையெடுத்து விட்டார்.

    இந்தியாவிற்கும், இங்கிலாந்திற்கும் இடையே உள்ள உறவின் பாரம்பரியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பிரதமரின் பேச்சுக்கள் அடங்கியிருந்தன.

    தமது நன்மைக்காக இதைச் செய்திருந்தாலும் உலகத்தில் முன்னனி நாடுகளில் இந்தியா வகிக்கும் கேந்திர ஸ்தானத்தை சுட்டிக் காட்டும் வகையில் இந்நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

    அதுமட்டுமின்றி இங்கிலாந்தின் பல வங்கிகளின் பிற்தளச் செயற்பாடுகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. இங்கிலாந்து மக்களின் வங்கிக் கணக்குகளின் விபரங்கள் பல அவர்களின் பிரத்தியேக விபரங்கள் உட்பட இந்திய நாட்டுக் கிளைகளில் உள்ளன. இணையத்தளத்தில் நடைபெறும் சமூகவிரோத செயற்பாடுகளினால் இத்தனித்துவமான விபரங்கள் திருடர்கள் கைகளில் கிடைத்து விடக்கூடாது என்று பொதுமக்கள் மனதில் பீதி நிலவுகிறது.

    தனது இந்த இந்திய விஜயத்தின் மூலம் இருநாடுகளுகிடையிலும் இணையத்தள மோசடிகளைத் தடுக்கும் வகையிலான ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்திலும் பிரதமர் கையொப்பமிட்டுள்ளார்.

    இது இங்கிலாந்து மக்களுக்கு தமது வங்கிகளில் உள்ள நம்பிக்கையைக் கூட்டுவதோடு மேலும் பல நிதி நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை இந்தியாவில் விஸ்தரிப்பதற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நம்புகிறார் போலும்.

    அது மட்டுமா?

    எந்த இந்திய மாணவர்களின் வருகைக்கு சில மாதங்களின் முன்னால் கெடுபிடி விதித்தார்களோ அதே இந்திய மாணவர்களுக்கான விசா ஒரேநாளில் கிடைபதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும், இந்திய வியாபார முகவர்கள் தமது வியாபாரங்களை இங்கிலாந்திலும் நடத்துவதற்கு ஏதுவாக அவர்களுக்கான விசாவும் ஒரேநாளில் கிடைப்பதற்கு வழிவகுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் நம்முடைய பிரதமர்.

    இதற்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள் ?

    அமரர் தமிழ்வாணன் அவர்களின் “துப்பறியும் சங்கர்லால்” எனும் மர்ம நாவல்களைப் படிக்காதவர்கள் மிகவும் சொற்பமானவர்களே ! அவரது கதையின் நாயகன் “சங்கர்லால்” பற்றி எழுதும் போது “சங்கர்லாலின் ஜாகுவார் சீறிக் கொண்டு கிளம்பியது” என்று எழுதுவார்.

    இப்போது அமரர் தமிழ்வாணன் இருந்திருந்தால் அந்த ஜாகுவாரைத் தயாரிக்கும் நிறுவனன் ஒரு இந்தியருடைய கைகளிலே என்று கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பார்.

    ஆமாம் இங்கிலாந்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாகனங்களாக இருந்த “ஜாகுவார்” மற்றும் “லாண்ட்ரோவர்” என்பன மிகவும் மோசமான நிதிநிலைமையடைந்து அதை இந்திய நிறுவனமான “டாட்டா” கொள்வனவு செய்து அத்தொழிலாளர்களின் வாழ்வையும் அக்கார்களின் பெயரையும் காப்பாற்றியது. அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் அனைத்துப் பெரிய நிறுவனங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு பொருளாதாரச் சூழலில் இக்கார்களைத் தயாரிக்கும் நிறுவனம் மட்டும் தனது வியாபாரம் பெருகக் கண்டது.

    இவ்வியாபாரப் பெருக்கத்தின் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்புக் கிட்டியது. இந்நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை விளக்கிய ஒரு பொருளாதார நிபுணர் கொடுத்த விளக்கம் என்னை வியப்பிலாழ்த்தியது.

    பிரித்தானிய பொரியிலளாரின் நிபுணத்துவத்தையும், ஜெர்மனிய நிர்வாகிகளின் நிர்வாகத் திறனையும் இந்திய முதலீட்டாளர்கள் நன்கு பயனுள்ல முறையில் உள்வாங்கி இந்நிறுவனத்தைத் தகுந்த முதலீட்டுடன் முன்னெடுத்துச் சென்றதே இந்நிறுவனத்தின் வியாபார வெற்றியின் இரகசியம் என்று சொன்னார்.

    இவரது இக்கூற்று இந்தியர்களின் வியாபார நுணுக்கங்களையும், அவர்கள் வெற்றியடைய எடுக்கும் கூட்டு நடவடிக்கையின் திறனையும் நன்கு எடுத்துக்காட்டுகிறது.

    இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்து அரசாங்கமும் மேலும் பல இந்திய முதலீட்டாளர்கள் இத்தகைய மென்னெடுப்புக்களை எடுப்பார்கள் என எண்ணி அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முனைகிறார்கள் என்பது தெளிவாகிறது.

    அத்தோடு மும்பாயிலிருந்து பெங்களூர் வரை ஒரு வியாபாரக் அதவொன்றை ஏற்படுத்தும் வகையில் ஒரு வழி சமைத்து பல புதிய மாதிரி நகரங்களை உருவாக்க பிரித்தானிய கட்டிட, நகர ஆராய்வாளர்களின் உதவியை அளிக்க இங்கிலாந்து ஏறந்தாழ 1 பில்லியன் இங்கிலாந்து பவுண்ஸை முதலீடு செய்வதாகவும் பிரதமர் கமரன் அறிவித்துள்ளார்.

    அதுசரி இந்திய மக்களின் மனதில் இடம்பிடிக்க பிரதமர் கமரன் கையாண்ட யுத்தி என்ன தெரியுமா? இந்திய மக்களின் அது உன்னத விளையாட்டான கிரிக்கட் விளையாட்டை விளையாடியதன் மூலம் இந்திய மக்களின் கவனத்தைத் தன்பால் ஈர்த்து விட்டதாக எண்ணி விட்டார் கமரன் போங்கள் !

    இதற்கு இந்தியாவின் நிலைப்பாடு என்ன ?

    இங்கிலாந்து தனது நன்மைக்காக இத்தகிய ஒரு அதீத உறவைப் பெண முன்வந்தது எனினும் இந்தியா உலக பொருளாதார முன்னனி நாடுகளில் முன்வரிசையில் நிற்கும் காரண்த்தினால் இதனை தனக்குச் சாதகமான முறையில் உள்வாங்கிக் கொள்ல வேண்டும்.

    பொருளார முன்னேற்றம் சமுதாயத்தில் அடிமட்டத்தில் அல்லலுறும் மக்களைச் சென்றடைவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வடகிழக்கு ஆசியப் பிராந்தியத்தின்  அதிமுக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது. அதுமட்டுமின்றி பொருளாரத்தில் முன்னனியில் நிற்கும் நாடுகளைக் கொண்ட க்20 அமைப்பிலும் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

    2020 இல் இந்தியா உலகின் முன்னனி நாடாகத் திகழும் என்று வலியுறுத்திய இந்திய முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களிஉன் கனவு எமது கண்முன்னே நிஜமாவது போன்ற உணர்வு தோன்றவில்லையா?

    காத்திருப்போம், களித்திருப்போம்

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மீன் சமையல்காரன்

     

    பிச்சினிக்காடு இளங்கோ

     

    வலையை விரிக்கிறேன்

    விழித்து

    விழிமூடும்வரை

     

    வலையில் விழவேண்டும்

    என்பதற்காக அல்ல

     

    விழுபவை

    வீணாகிவிடக்கூடாதே

    என்பதற்காக

     

    இருந்தநிலையில்

    வந்துசேர்வதில்லை

    அனைத்தும்

     

    அவசர அவசியத்திற்காக

    சந்தைக்கும்

    சென்று திரும்புவதுண்டு

     

    வலைவிரிக்கத்தெரியாதவர்களுக்கு

    அரிய தருணங்கள்

    அறியாத்தருணங்களே

     

    கணமும் வலைகளோடு

    கவனமாய்த்திரிகிறேன்

    கர்வமடைகிறேன்

     

    இருந்தும் தேடியும்

    பெறவேண்டியதைப்

    பெறவேண்டும் என்பதே

    பெருநோக்கம்

     

    படத்துக்கு நன்றி: http://pdnphotooftheday.com/2009/01/288

     

    Share
  • நெற்றித்திலகமிடுவோம்!

     

    ஷைலஜா

    சகுந்தலை தொலைத்த
    கணையாழியைப்போல
    காணாமல் போயிருந்த
    பெண்ணினத்தின் துணிச்சல்
    உச்சியின் கிரீடமாக
    இன்று மீண்டிருக்கிறது.
    மசிக் கசிவினையெல்லாம்
    மனக் கசிவாக்க வேண்டாம்
    உபாதைகளை எல்லாம்
    நம் பாதைகளாய்ப்
    புலம்ப வேண்டாம்
    மறைமுகமின்றி
    உள்முகம் காட்டுவோம்
    அடுப்பு வெளிச்சத்தில்
    எழுதிய எழுத்துக்களை
    ஆற்றலுடன் வெளியே படைப்போம்
    நேற்றைய தழும்புகளுக்கு
    சோர்ந்துபோகாமல்
    இன்றைய வியர்வையினை
    நெற்றிக்குத்
    திலகமிடுவோம்!

     

     

    Share
  • மணிக்கொடி ஏற்றிய வெற்றிக்கொடி …!

    ஜெயஸ்ரீ ஷங்கர்

     “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்…
    ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்…”

    இந்த சாதாரண சினிமாப் பாடலின் அசாதாரணமான வரிகள், ஒவ்வொருவரின் சாதாரண இதயத்திலும் கூட  அசாதாரண அதிர்வலைகளை நிச்சயமாக எற்படுத்தி இருக்கும். சாதிக்க நினைக்கும் இதயங்களுக்கு இந்த வரிகள் தான் ஊக்கபானமாக இருந்திருக்கும்.

    இதைப் பற்றி சிந்தனை செய்யும் போதே, சிந்தனைகள்  செயலாகி செயல் புத்தகமாகி எழுதிய புத்தகம் அனைத்தையும் தாண்டிச் சென்று புகழ்க்கொடியை விரித்து “வெற்றிக் கொடி ” ஏந்தி வெளிவந்து , அதை எழுதியவருக்கு “மலர் மாலையை” அணிவித்து அழகு பார்த்தால்..!
    ஆம்…அதுவும் நடந்தது. உண்மையின் அடிப்படையில் செய்யும் இந்த விமர்சனம் நிலைக்கும் என்று   நம்புகிறேன் நம்புகிறேன்.

    இரவும், பகலுமாக கருமமே கண்ணாக ஊன், உண் மறந்து  துயில் துறந்து சமுதாயச் சிந்தனையோடு பல தலை முறைகளுக்கும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு “மணியான சுதந்திர எண்ணங்களை” ‘மணிக்கொடி’ கதையாக  900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வரலாற்றில் இடம் பெரும் வண்ணம் நாவலை எழுதி முடித்து நிம்மதி பெருமூச்சு விட்டதும்….அந்த ‘மணிக்கொடி’ மகளே தன்னை ஈன்ற தாய்க்கு மலர்மாலையை பெற்றுத் தந்து அணிந்தவரை அழகு பார்க்கும் பாக்கியம் எழுத்தாளருக்கு மட்டும் தான் கிட்டும்  ஒரு வரப்பிரசாதம்.

    அந்த இன்பத்தை தமது வாழ்வில் அனுபவித்தவர் பிரபல சமூக எழுத்தாளர், சீரிய சிந்தனையாளர்.’ஜோதிர்லதா கிரிஜா‘ அவர்கள் என்று இந்த உலக மகளிர் தினத்தில் சொல்லிப் பெருமைப் படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    அறுநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுத்தோடு வாழ்வை பின்னிக் கொண்ட “சாதனைப் பெண்மணி”  காலங்களைக் கடந்து பேசப்படும் பொக்கிஷமான ‘மணிக்கொடி‘ என்ற புத்தகத்தை தன் வாழ்நாளின் சாதனையாக எழுதிப் படைத்தவர். சிதம்பரம் அண்ணாமலைச் செட்டியார் பரிசும், விருதும் பெற்றது மணிக்கொடி.

    ஏதோ…பிறந்தோம்….இருந்தோம்…வாழ்ந்தோம் என்று மட்டும் இல்லாமல் ‘நாட்டுக்கு நீ என்ன செய்தாய்’..? என்ற கேள்விக்கு இடம் வைக்காமல் ‘நாட்டுக்காக இவர் இதைச் செய்தார்..’ என்று சொல்லும் பட்டியலில் இவரது ‘மணிக்கொடி’யே …’தாயின் மணிக்கொடி பாரீர்’  என்று ‘வெற்றிக் கொடியை ‘ உயரே பிடித்தபடி, தன்னையும் உயர்த்தி தன்னைப் படைத்தவரையும் உயர்த்தி நிறுத்தும் போது …

    மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்மணிகளை நினைவு கூர்ந்து வாழ்த்துச் சொல்லும் விதமாக என்றென்றும் அழியாப் புகழ் கொண்ட எழுத்தாளர் ‘ஜோதிர்லதா கிரிஜா ‘ அவர்களுக்கு வாழ்த்துக் கூறி நல்லாசிகள் வேண்டுவோம்.

    Share
  • கனவுத் தொழிற்சாலையின் கன்சல்டன்டாக நான்

    பேரா. நாகராசன்

    கன்சல்ட்டன்ட் என்று நான் என்னைச் சொல்லிக் கொண்டால் அது இன்சல்ட்தான் ஆனாலும் தொழிற்துறையில் அந்த வார்த்தை மட்டும்தான் அப்போது என் வேலையைக் குறிக்க ஓரளவு உதவி செய்தது. என் கல்வியும் நான் பெற்ற மதிப்பெண்களும் எனக்கு ஒரு சாதாரண வேலையைக்கூட வாங்கித் தராது என்பதை மற்றவர்களைவிட நான் தெளிவாக அறிந்திருந்தேன். ஆனாலும் சிவகாமிப்பாட்டி மட்டும் ஒரு மாற்றுக்கருத்தை எனனைப்பற்றி முன்மொழிந்து கொண்டிருந்தார்.  கண்ணில் பூவிழுந்து பார்வை சரியில்லாதபோதும் என் கைரேகையைப் பார்ப்பதில் குறியாக இருப்பார்.  அவர் மட்டுமே என் கையில் உள்ள மேடுகளும் ஆழமாய்ப் பதிந்த கோடுகளும் நான் ஒரு மாதிரியான அறிவாளியாக் வருவேன் என்று கட்டியம் கூறுவதாகச் சொல்வார்.  படிப்பென்னவோ விஞ்ஞானம் கல்வியியல் உளவியல் என்று கூட்ஸ் வண்டி அடிக்கடி பாதை மாறுவதுபோல் மாறி நான் படித்த பல்கலைக் கழகத்திலேயே நான் மாணவராக இருந்தபோது புகழ்ந்துபேசிய ஒருவர் துணைவேந்தராக வந்தபோது என்னை ஆசிரியராக்கியது.  அவரே வெறி பிடித்தவர் போன்று எனக்குப் பதவி உயர்வு கொடுத்து என்னை நானே நம்பமுடியாத உயரத்தில் தக்க வைத்தார்

    எனக்கு எளிதாக வந்த திறன் ஒன்று உண்டென்றால் அது நலிந்த நிறுவனங்களை விலைக்குவாங்கி விற்பது பற்றி ஜக்கம்மா குறி சொல்வதுபோல் அருள்வாக்குச் சொல்வது.  எந்த நிறுவனங்கள் இந்த வேலைக்குச் சரிப்படும் என்று என்னால் உடனே கண்டுபிடிக்க முடிந்ததால் அவ்வாறு வாங்கி விற்பது லாபகரமாக் இருந்ததால் எனக்கு நல்ல மார்க்கெட் இருந்தது.  அப்படி ஒரு வாங்கி விற்கும் கன்சல்டன்சியில் நான் ஒருவரைச் சந்தித்தது என்னைக் கனவுத் தொழிற்சாலையில் கொஞ்சகாலம் குப்பை கொட்ட வைத்தது. தமிழ்த் திரை உலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குழுவின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு வளர்ந்த தொழில்.  முதலில் ஸ்டூடியோ சொந்தக்காரகள் கையில், பின்னர் பெரிய கதாநாயகர்களின் கைக்குள், அதன்பின் வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஃபைனான்சியர்கள் கையில் அப்புறம் தொழிநுட்பம் தெரிந்த இயக்குநர் குழுவின் கையில் என்று மாறி மாறி வந்துள்ளது.  ஒரு காலத்தில் திரை உலகைத் தன் ஆளுமைக்குள் வைத்திருந்த குடும்பம் இனிமேல் ஸ்டுடியோ நடத்தத் தன்மானம் இடங்கொடுக்கவில்லை என்று கருதி அவர்களின் ஸ்டுடியோவை விலைக்கு விற்கவந்து அது தொடர்பாக வாங்குபவருடன் இந்தக் குறிசொல்லும் பணியால் தொடர்பு ஏற்பட்டது.  வாங்கியபின் அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் உத்திகள் தீர்மானம் செய்யும் நிலையில் எனக்கு ஒரு வாய்ப்பு அங்கே கிடைத்தது

    ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தில் எழுதப்படாத விதி.  அப்படியாகத்தான் எனக்குக் கிடைத்த வேலை ஆராய்ச்சி சஞ்சிகளைப் பதிப்பித்து விற்று வருமானம் ஈட்டுவது.  மூன்று சஞ்சிகளைப் பதிக்கும் வேலையைத் தொடங்கி அதன் வடிவமைப்பு விற்பனை என்று நானாவித வேலையையும் செய்து பழகிக் கொண்ட எனக்கு என்பலம் என்னவென்று ஒருநாள் தெரிந்தது.  சக ஆய்வு மாணவர் ஒருவன் என்னுடைய வழிகாட்டியான பேராசிரியத் தலைவர் என்னை வெளியேற்ற ஏற்பாடு செய்துவருவதைச் சொன்னார்.  வழிகாட்டிக்கும் ஆய்வு மாணவனுக்கும் உள்ள உறவு பலசரக்குக் கடைச் செட்டியாருக்கும் பொட்டலம் கட்டும் இளைஞனுக்கும் இடையே உள்ள உறவு போன்றது.  செட்டியார் எச்சரிக்கை எத்திராஜராகப் எதிர்க்கடை வராதவாறு வேலை செய்பவர்களுக்குப் பொட்டலம் கட்டுவது தவிர எந்த வேலையையும் கற்றுக்கொடுக்க மாட்டார்.  அப்படியே அவரைத் தாண்டிக் கற்றுக் கொண்டவனையே விட்டால் வினை என்று கூலியில்லாத வேலையாளாக மாற்றி மருமகனாக ஆக்கிக்கொள்வார்.  இங்கு நான் வெளியேற்ற்ப்படும் நிலையில் முன்யோசனை இல்லாமல் என் சக ஆய்வாளரிடம் இந்த மடம் இல்லையென்றால் எனக்கென்ன கவலை இங்கிருந்து நேராக எந்தப் பத்திரிக்கை வாசலில் நின்றும் நான் ப்ரூஃப் ரீடர் வேலைக்கு வந்திருக்கேன் என்று சொன்னால் அப்படியே தூக்கிட்டுப் போயிடுவாய்ங்க தெரியுமா என்று ஆண்டுக் கணக்காக ஆய்வு என்ற பெயரில் நான் செய்த புரூஃப் ரீடர் வேலையைச் சொல்ல அவர் என்னுடைய பேராசிரியரிடம் போட்டுக் கொடுக்க அதனால் என் வழிகாட்டி என்னை வெளியே போக முடியாதபடி செய்துவிட்டார். அதுமூலம் நான் பத்திரிக்கையில் ஒரு வேலையை உருப்படியாகச் செய்யமுடியும் என்று எண்ணத் தோன்றியது

    எனது நண்பரின் புதிய முயற்சியில் அவர் முன் எடுத்த ஒரு திட்டம் சினிமாத் துறையில்  ஒரு வாரப் பத்திரிக்கை தொடங்குவது.  அந்தக் காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பும் சூல்நிலையில் அவரை ஆசிரியராகக் கொண்டு இந்தப் பத்திரிக்கையை நடத்தவேண்டும் என்பது அவரின் இந்த முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது பத்திரிக்கையைத் தொடங்கி வடிவமைத்து உருவாக்கி வெளிவிடும் வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.  ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்துக்கொண்டு கால் இடறிக்கீழே விழுந்தால் ஒரு தியேட்டர் படியில் விழவேண்டும் என்ற சூழலில் ஆய்வறிக்கைக்காக அல்லும் பகலும் நேரம் செலவழித்ததால் ஒரு திரைப்படம்கூடப் பார்த்ததில்லை.  ஒருமுறை என் சகஆய்வு மாணவரின் காதல் திருமண வரவேற்புக்காக இடம் புக் செய்ய ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில் ஏகப்பட்ட கூட்டம் என்னவென்று தெரியாமலேயே வரவேற்பாளரிடம் சென்று பணம்கட்டிவிட்டுத் திரும்பி வந்தால் கூட்டம் என்னைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் பார்த்தது.  ஏணிப்படி ஏறுமாறாக என்று கேடடதற்கு உன் அருகில் ரிசப்சனில் நின்றது யார் தெரியுமா  என்று கேட்டது கூட்டம். ஐயா தெரியாதய்யா என்று சொன்னேன்.  நீயெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்ததே ஒரு பெரிய பாவம் என்று சலித்துக்கொண்ட ஒரு பெரிசு பையா அதுதான் இந்தியத் திரை உலகின் கனவுக் கன்னி அவரைப் பார்க்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று சொன்னார்கள்.  இந்த இரண்டு நிகழ்வுகளுமே திரைத்துறையைப்பற்றிய என் பாண்டித்துவத்தைப் பறைசாற்றும்.

    எப்படியோ போடப்போகும் பணம் 5 லட்சம் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் நான் கவலைப்படமாட்டேன் நீங்கள் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை என்று சொல்லிவிட்டார் நண்பர். நன்குபடித்துப் பட்டம் பெற்ற எழுத்தாற்ற்ல் மிக்க கணினிப் பயன்பாடு தெரிந்த தலைமை ஏற்கவும் தலைமையின்கீழ்ப் பணி செய்யவும் விழைவுள்ள ஆறுபேரை ஆசிரியக்குழுவாக அமைத்து இந்திய அளவில் தலை சிறந்த இயக்குனர் நடிகர்களை அழைத்துவந்து நேருக்குநேர் சந்திப்பு பேட்டி என்று பயிற்சி அளித்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் தலைமையில் மற்றவர்கள் குழுவாகப் பணி செய்து பத்திரிக்கையைக் கொண்டுவரும் அளவுக்குப் பயிற்சி அளித்துப் பத்திரிக்கையின் வெள்ளோட்டமாக மூன்று மாதங்கள் பத்திரிக்கையை முழுமையாக அச்சிட்டு தெரிந்தெடுத்த சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக் கேட்டு இறுதியில் ஐந்து நிமிட விளம்பரப்படம் ஒன்றை சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் உருவாக்கி அந்தப் பத்திரிக்கை வெளியானது.  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நாடுதிரும்பாமல் அமெரிக்காவில் உயிர் துறந்தார்.  அவருக்கென்று ஆரம்பித்த பத்திரிக்கை என்பதால் வேறு  யாரையும் ஆசிரியராகப் போடாமல் அந்தப் பத்திரிக்கை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்தது.

    அந்தப் பத்திரிக்கையின் ஆல் இன் அழகுராஜாவாக ஆல் ரவுண்டராக நான் இருந்த காலத்தில் ஒரு பெரிய அச்சுக்கூடத்தில் ஸ்டாப் தி பிரஸ் என்று அச்சிடுவதை நிறுத்தும் அதிகாரத்துடன் பவனிவந்து திரை உலகம் தொடர்பான ஒரு பெரிய தரவுத் தளத்தினை உருவாக்கி (திரை உலகக் கிசுகிசுவும் உள்ளடக்கம் ஆனால் வெளியிட்டதில்லை) புலனாய்வுக் கட்டுரை நம்பகமான் தகவல் என்று அது தரமான திரை உலகச் செய்திகளுடன் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடக்க அடித்தளம் அமைத்தேன்.

    அந்தப் பத்திரிக்கை மூடப்படும்வரை பெண்களைக் காட்சிப்பொருளாகவோ கவர்ச்சிப் பொருளாகவோ காட்டாமல் ஒரு படத்தில் தாரகையாகி சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் மறைந்த கதாநாயகிகள் மரணப் படுக்கையில் வெளி உலகின் பார்வையில் இருந்து மறைந்து இருந்த மாபெரும் நடிகையைக் கண்டுபிடித்து வெளி உலகுக்குக் கொணர்ந்து அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றியது என்று மங்கையருக்கு ஒருசில நற்பணிகள் செய்தது இந்நாளின் என்னுடைய மலரும் நினைவுகளாகக் கருதலாம்.

    படத்திற்கு நன்றி உதயன்.

    Share
  • தாய்க்குப்பெருமை சேர்த்த மகன்!….

    விசாலம்                                                                                                                                                                                                                          

    ஒரு தாயின்  சொற்படி நடந்து அந்தத் தாய்க்குப் பெருமைச் சேர்க்கும் வண்ணம் ஒரு மகன் இருந்து விட்டால் அந்தத் தாய்க்கு அதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? ஆம்  கொல்கத்தாவில் ஒரு ஏழைக் குடுமபம்  இருந்தது

    ஒரு தாயும் அவரது மகனும் , அவர்கள் சிறிய கிராமத்தில் வ  சித்து வந்தனர் தாய் மிகவும்   சிரமப்பட்டு  உழைத்து மகனை படிக்க வைத்தார் .மகனும் தெருவில் இருக்கும்  விளக்கின் அடியில் அமர்ந்து   படிப்பான் படிக்கும் நேரம் தவிர அவனும்  மிகக் கடுமையாக உழைத்தான் ,உழைப்பின் பலன் கிடைத்தது    காலேஜும் சேர்ந்து பின்   துகலைப் பட்டப்   படிப்பும் படித்து முதல் இடத்தில் தேறினார்  பின்  மேடையிலும் பேச ஆரம்பித்து சிறந்த பேச்சாளராகவும்  ஆனார் .மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் பேசியதால் அவர் பேச்சைக் கேட்கக் கூட்டம்  அதிகம் வரும் இத்தனை இருந்தும் ப்ல மாதங் ள் வேலைக் கிடைக்காமல் இருந்ததால் வீட்டில் வறுமை மிகுந்தது தாய்க்கும் வயதானதால் முன்பு போல் வேலைச் செய்யமுடியவில்லை ஆகையால் கஞ்சி வைத்து குடிப்பார்கள்  தாய் தனக்கு இல்லாமல் தன் மகனுக்கு அளிப்பார்      மகனோ ஆசையுடன் தாய்க்கு அளிப்பார்  இத்தனைக் கஷ்டப்பட்டவர் பிற்காலத்தில்  யாவரும் போற்றும்   மகன்  ஆனார் அவர்தான் திரு ஈச்வர சந்திர வித்யாசாகர்

    பல நாட்கள் பொறுமையாக இருந்த பின்  அவருக்கு நல்ல வேலைக் கிடைத்து முதல் சம்பளம் வாங்கியதும் தன் தாயிடம்  ஓடி வந்து  அவர்  பாதங்களில் வைத்து “அம்மா எனக்காக் நீங்கள் எத்தனைக்  கஷ்டப் பட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும்? நான் உடனே வாங்கித் தருகிறேன் “என்றார்

    அதற்கு அந்தத் தாய் ” எனக்கு இப்போது ஒன்றும் வேண்டாம் தகுந்த நேரம் வரும் போது நானே கேட்கிறேன் ” என்றார்

    ஒரு சமயம் தாயுடன் கிராமத்தில் நட்ந்த ஒரு சந்தைக்கு ஈச்வர சந்தரவிதயாசாகர் புறப்பட்டார் தாய் மிகுந்த பழைய புடவையைக் கட்டிக் கொண்டு கிளம்பினார் , உடனே மனம் பொறுக்காமல்  கடையிலிருந்து நாலு  புது புடவைகள் வாங்கித் தன் தாயிடம் தந்தார் .

     “அம்மா இந்தாருங்கள் இப்போதாவது சொல்லுங்கள் ,,உங்களுக்கு என்ன வேண்டும்”

    மகனே  நமது கிராமத்தில் சிறந்த பள்ளிகூடம் இல்லை வெகு தூரம் நட்ந்து சென்றால் தான் ஒரு பள்ளி வருகிறது     அந்தக்குழந்தைகள் பத்திரமாகத்  திரும்பி வரும் வரை பெற்றோர்கள் தவித்துப் போகிறார்கள்   ஆகையால் நான் மூன்று ஆபரணங்களைக் கேட்கப் போகிறேன் முதல் ஆபரணம் நமது கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம்      அதை நீதான் கட்டிக் கொடுக்க வேண்டும்”

    மகனின் கண்களில் கண்ணீர் வழிய  தாயின் ஆசையைப் பூர்த்திச்செய்தார் , பின் கொஞ்சக்காலம்   கழிந்தப்பின் ” இரண்டாவது ஆபரணம் எது அம்மா “? என்று கேட்டார் அப்பா மகனே  கிராமத்து மக்கள் குடிநீருக்காக  மிக கஷ்டப்படுகின்றனர் ஆகையால் கிரமத்திற்கு குடிநீர் வரவழைக்க எதாவது வழி செய்  இதுதான் என் இரண்டாவது  ஆபரணம் ”  திரு வித்யாசாகரரும் பல இடத்தில் குழாய்கள்  கிணறுகள் வைத்து   அந்தக் கிராமத்தை வசதியாக்கினார் தாயின் மனமும்  மகிழ்ச்சி அடைந்தது

    ஒருநாள் தெருவில் வந்துக் கொண்டிருக்கையில்   ஒரு  யாளியைப்பார்த்து மனம் வருந்தினார் அந்தத் தாய் உடனே தன் மகனிடம் “மகனே என் மூன்றாவது ஆபரணம் கேட்கும் நேரம் வந்து விட்டது பள்ளிக்கூடம் அமைத்தாய்  குடிநீரும் கொடுத்தாய் இப்போது அவர்களுக்கு ஒரு   மருத்துவ மனையும் கட்டிக் கொடுத்து விடு  ” தன் தாயை அன்புடன் அணைத்துக் கொண்டார் அவர்      உடனே அவர் ஆசை நிறைவேறியது

    தன் மகனை அணைத்துக் கொண்டு “ஒரு தாய்க்கு  உன்னைப் போன்று ஒரு மகன் இருந்தால் போதும்  உலகமே சுவர்க்கமாகிவிடும் ‘ என்று நெஞ்சு தழுக்கக் கூறினாள் ஸ்ரீசத்யசாயி பாபா சொன்ன உண்மைச் சம்பவம்   இது


    Share
  • காட்சிகள் சில . மகளிர் தினம்

    விசாலம்

    காலை நேரம் .}    என்ன  இன்னும் பொன்னம்மா வேலைக்கு வரவில்லையே  இந்த வேலைக்காரி டென்சன்   என்னிக்குத்தான் போகுமோ ?’
    ‘
    “ஏன் பொன்னம்மா இவ்வளவு லேட் ? ” ஏன் இப்படி அழுவுறே  “.

    “அத ஏம்மா கேக்கறீங்க .இஸ்கூல் பீஸுன்னு வச்சிக்கினுருந்தேன் ஒரு நூறு ரூபா  ..அதயும்  என் புருசன் எடுத்துக்குனு ஓடிட்டாரு. என் முவத்தைப்பாருங்கம்மா   கன்னத்தல எத்தன அடின்னு பாருங்கம்மா .’

    “ஆமாம்  என்ன இப்படி அடிச்சிருக்கான்  ? எதுக்கு அவனுக்கு பணம் ?

    “அதாம்மா  . அந்தப்பாழாப்போன  குடி  ……. எல்லாம் நா  பொண்னா பொறந்த வேளை  இந்த அழகல  இன்னிக்கி “மகளிர் தினமாம் ”

    கோடி வீட்டம்மா  சொல்லிச்சு  …..இதுவாம்மா  “மகளிர் தினம் .புருசன்டேந்து அடி வாங்கி சாவரதா   மகளிர் தினம் “?

    காட்சி 2        “என்னங்க  டாக்டரம்மா  என் வயித்தல வளர்ர குழந்தை நன்னாருக்குன்னு சொன்னா ……..நானு ..நன்னா சத்துள்ள  உணவை
    சாப்பிடணுமாம்
    ‘
    “அது சரி  தாமரை  .    என்ன குழந்தன்னெ  கேக்கச் சொன்னேன்னே  கேட்டயா  ‘?

    ” கேட்டேங்க   . சொல்லமாட்டேன்னுட்டாங்க  . எதுவா இருந்தா என்னாங்க   ?

    “என்ன?      எதுவா இருந்தா என்னாங்க,,,,,,, இழுக்கறே  அப்போ பொட்டப்புள்ள தான் பொறக்கும்  .எனக்கு வேண்டாம் அது    ஏற்கனவே
    ஒன்னு இருக்கு சிலவு வைக்க  ….. அத  அழிச்சுடு  …”

    ” நான் அந்த பாவத்த  செய்யமாட்டேனுங்க  .  அது நம்ம குழந்தைங்க ‘

    “சீ வாய மூடு . எனக்கு வர சம்பளத்ல  இன்னொரு மவளா?    அப்படி பெத்துண்டேன்னா உங்கப்பன் வூட்டுக்கு போ  இங்க வராதே ‘

    “என்னங்க  இன்னிக்கு ‘மகளிர் தினம்” னு பேபர்ல போட்டிருந்துச்சு  இப்படி
    நடந்துக்கிறீங்களே!

    ‘மகளிர் தினமாவது மண்ணாங்கட்டியாவது .இதெல்லாம் நமக்கில்லை  அதல்லாம் பெரிய இட சமாச்சாரம்   இங்க நான் சொல்றத நீ கேக்கணும்  தெரிமா?”

    காட்சி மூன்று  . .. ஏம்பா    கொஞ்சம் பஸ்ஸ  நிறுத்துப்பா    ஸ்டாப்பில கூட ஓட்டிண்டே போறயே ‘

    ”  என்னம்மா  ஆம வேகத்ல  வந்துகிட்டு  …. ஏறுங்கம்மா  சீக்கரம் .   ”

    ” அம்மாடி   எத்தன  மேல படி  ஏறவே முடியலை   கைல வேற இரண்டு பை,,,,,, இன்னிக்கின்னு பாத்து மளிகை சாமானும் தெரியாத்தனமா வாங்கிட்டேன் வீட்ல இருக்கற ஆம்பள பசங்கள  என்னத்த சொல்றது ?”

    ” என்னங்கம்மா   ……ஏறிட்டீங்களா ? இந்தாங்க  சீட்டு  ‘

    ” என்னப்பா  நான் எப்படிப்பா    சில்லறை  எடுக்கறது  உட்க்கார ஒரு இடமில்ல .  யாராவது ஒத்தராவது எழுந்து எடம் விடறாளா பாரு
    எல்லாம் இளம் வயசுகள் . ஆனா  கூட வயசுக்கு மரியாத கொடுக்கறாளோ பாரு ஏதுடா ஒரு வயசான பொம்பள  நிக்கறாளே ன்னு
    ஒத்தருக்கும் தோணலயே ‘

    “அம்மா  அதெல்லாம் அந்தக்காலம் .சரி சரி டிக்கட்ட பிடிங்கோ  ‘

    ”  ஏண்டா  சுரேஷ்  மகளிர் தினத்துக்கு    உங்கம்மாக்கு   என்ன வாங்கி  தரப்போறே ‘

    ஒ  இன்னிக்கு மகளிர் தினமா  மறந்தே போயிடுத்து , வேலன்டின் டே தான் எப்பவும் ஞாபகம் இருக்கு ‘

    “சரி சரி இதான் சாக்குன்னு  என் கன்னத்தை கிள்ளாதே . பக்கத்தல நிக்கற அந்த வயசான மாமி பாக்கறா,”

    “எழுந்து இடம் தரவா?’

    ” என்ன லூஸுடா நீ     என்னிக்கோ உம் பக்கத்தல உட்காந்துக்க  சான்ஸ் கிடைச்சிருக்கு அதபோய்  விடறேங்கறயே

    காட்சி  4      ஏண்டி கலா  பக்கத்தாத்து மாமாக்கு இந்த அல்வாவ கொடுத்துட்டு வா இத்தன நாளா உனக்கு கணக்கு வேற கத்துக்கொடுத்திருக்கா தவிர உன் பிறந்த நாள் வேறு ‘

    “சரியம்மா  கொடு .”

    ”  மாமா  சீனுமாமா  ..எங்கே இருக்கீங்க  ? ஓ உள்ளே படுத்திருக்கீங்களா? ‘

    ‘ ஆமாண்டி செல்லம்    தலவலி …  உள்ள வா ……. கையில என்ன ?

    “அல்வா மாமா  . இன்னிக்கி என் பெர்த் டே . மாமா’

    ‘ ஆஹா   கங்ராஜுலேஷன்ஸ் .அதான் இன்னிக்கு இந்த நீல டிரெஸ்லே ரொம்ப அழகா இருக்கே என்ன போனமாசம் முழுக்க வரலை ,’

    ” அதுவா   …….வந்து      வந்து ..’

    ஐயோ என்ன வெட்கம் பாரு  . நீ பெரிய மனுசி ஆயிட்டே  இல்லையா ? என்ன ஒன்னும் பேசமாட்டேங்கறே .அது  சரி  அங்க  தலவலி
    பாம் வச்சிருக்கேன்  அத எடுத்துண்டு வந்து என் நெத்திலே தடவி விடு  .’

    சரி மாமா  ”

    “ஆஹா  என்ன இதமாக தடவி விடறே . அப்படியே உன்னைக்கட்டிக்கணும்போல  இருக்கு ‘

    ” சீ  என்ன  மாமா செய்றீங்க   . தப்பான காரியம் செய்யறீங்க   என்ன விடுங்க நான் வரேன் ஐயோ அம்மா  …… என்ன இந்த மாமா
    தனி ரூம்முக்கு கூட்டிண்டு போறாம்மா  . ‘

    ” உங்கம்மாவுக்கு  காதில விழாது  .  சும்மா இரு . இன்னிக்கு மகளிர் தினம் அதான் உனக்கு இந்த பரிசு   . என்  அன்பை  உனக்கு காட்டவேண்டாமா ”

    “என்ன  இது அல்வா கொடுக்கப்போன பொண்ணை இன்னும் காணோம்   ஏண்டி கலா என்னடி பண்ற இத்தன நேரம் ”

    காட்சி 5   என்னம்மா  நான் இத்தன நிறைய மார்க் எடுத்து  கிளாசிலே முதல் இடம் வந்திருக்கேன்  . மேலே படிக்க விடமாட்டேங்கற ‘

    ” எல்லாம் இத்தன படிச்சது போறும் ஜானா …  கல்யாணம் ஆகி ஒரு இடத்துக்குத்தானே போணும்  உன் தம்பிகள் இரண்டு பேர் இருக்கா ஞாபகம்  வச்சுக்க  உனக்கே படிப்புக்கு சிலவழிச்சுட்டா  அவாளுக்கு எங்க போறது ?’

    “என்னம்மா  நீ   ரமேஷுக்கு படிப்பே வரலை   சிவா  ஊரை சுத்தறான் .  ஆனா நான் எல்லாத்லேயும் முதலா இருந்தாலும் மேலே படிக்க விடமாட்டேங்கற அப்பா  நீங்களாவது சொல்லுங்கோ இந்த  அம்மாக்கு ‘

    ”   ஜானா செல்லம் அம்மா சொல்றது சரிதான் நீ உன் புக்காத்துக்க போனப்பறம்  மேலே படி இல்ல  ஸ்டேட்ஸ்க்குத்தான் போ

    இப்ப  உன் தம்பிகளத்தான்  பாக்கணும்  ‘

    “என்னப்பா  நீங்களுமா   …….. மகளிர் தினத்ல இப்படி  ஒரு பதிலா ?  நம் நாடு மாறவே போறதில்ல   இந்த பெண்கள் விஷயத்ல ,,,,,,,

    காட்சி  6     ” அன்பு சகோதரிகளே   இன்று மகளிர் தினம்   மார்ச் எட்டாம் தேதி  .   பெண்கள் சுதந்திரத்திற்கு இன்னும் நாம் போராட வேண்டும்

    ஆண்களுக்கு சரிசமமாக நாம் எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு அவர்களைவிட ஒரு படி மேலேயே வளர்ந்திருக்கிறோம்
    ஆனாலும்  நமக்கு ஒரு  ரெகக்னிஷன்  கிடைப்பதில்லை  வீட்டிலும் அடிமைப்போல் தான்  வாழ்க்கை இருக்கிறது

    டிரீங்க  டிரீங்  ……….. ” ஒரு நிமிடம்    இதோ வந்துவிட்டேன்

    ” என்னங்க  என்ன வேணும்  இந்த நேரத்தல கூப்படறீங்க நான் மேடைல பேசிண்டிருகேங்க ‘

    “போதும் பேசினது  வீட்டுக்கு வந்து தொலை , ஒம் பொண்ணு  முத்தரசி ஙொய் ஙொய்ன்னு  அழறது என்னால பாத்துக்க முடியாது

    “ஏன் சீட்டு விளையாட போணுமா என்ன…….  வழக்கம்போல ‘

    ‘ நீ முதல்ல வீட்டிற்கு வா  அப்பறம் பேசலாம் ‘

    “மன்னித்துக்கொல்ளுங்கள்  அன்பு சகோதரிகளே  நான் என்ன சொன்னேன்  ஆம் நாம் மகளிர் சுதந்திரத்திற்காக போராட வேண்டும்

    தைரியமாக  சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டும் தன் காலிலிலேயே நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்   .  மகளிர் தினத்திற்காக  என் நல் வாழ்த்துகள்

    அவசரமாக நான் வீடு போக வேண்டும் . நன்றி வணக்கம்

    Share