வல்லமைப் பெண்மணி!

ஜெயஸ்ரீ ஷங்கர்.
பாரதி கண்ட புதுமைகளை 
கனவுகளாய்  மறையாது
நிழலாய் கண்ட மாதருக்குள்
நிஜமாகக் நிமிர்ந்திடத் தானோ
அழகாய் எழுந்தவள் நீ..!
நமக்கேன் வம்பென பேசாமல்
‘சரவணன் மீனாட்சி’யில் மனம் மகிழ
புரட்டு சீரியலுள் புதைந்து போகாமல்
அகத்து பெண்மணிகளின் வல்லமையை
கோபுரத்திலேற்றிக்   காட்டிய
சாபமெனும் பெயரில் கல்லெனக்
கிடந்திடாத வல்லமைத் தடம்
பட்ட இன்னுமோர் அகலிகை நீ..!
உறங்கிக் கிடக்கும் உயிர்களுக்குள்
உரத்தைத் தூவி உயிர்ப்பை இருத்தி
கடலுக்கடியில் பாறையாய் பதுங்காது
வெட்ட வெளியிலே ஊர்வலமாக்கி
உன்னதத்தின் மேன்மைகளை
உழைப்பவளின் உன்னதத்தை
பேனா முனையில் எழுத்தாண்டவள் நீ..!
புத்தாண்டுப் பரிசுகளாய்
விடியலின் வேர்களை  வெளிச்சத்துக்கு
அழைத்து வந்து – பெண்மை வாழ்க..!
எனக் கூத்திட்டு  – சக்திதனை
நிர்கதியென நிறுத்தாது..!
வானம்பாடியாக்கி  திக்கெட்டும்
பறை சாற்றிய இலக்கிய தேவி நீ..!
ஓயாத உழைப்பில்
தன்னலமற்ற தியாக தீபமேற்றி
சாதனைப் பெண்களின் அணிவரிசையில்
தீபம் ஏந்தும் புதுமைப்பெண் நீ ..!
வல்லமைக்கே ஒளி கொடுக்கும்
இன்றைய உலக மகளிர் தினத்தில்
உந்தனை சிந்தனை செய்வதில்
செருக்கடைகிறது எந்தன் மனம்..!
உயரட்டும் உந்தன் கொடி புரட்சிப்பெண்ணே!
=======================================

About ஜெயஸ்ரீ ஷங்கர்

எழுத்தாளர்

One comment

 1. வையப் பெண்டிர் தினத்தில்
  , வல்லமைச் செல்வி, வைரச் சிற்பி
  எழுத்துலகில் தனியிடம் பிடித்த, பவளச் செல்வி,
  பைந்தமிழ்ச் செல்விக்கு ஆரமாய்
  செந்தமிழ்ப் பா
  பாராட்டுகள் ஜெயஶ்ரீ.

  சி. ஜெயபாரதன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க