Blog

  • எங்களது தைப்பொங்கல்!

    -எம். ஜெயராம சர்மா -மெல்பேண்

    பொங்கலென்று சொன்னாலே
    பூரிப்புவந்து நிற்கும்
    மங்கலமாய் நினைவுகளும்
    மனங்களிலே நிறைந்துவிடும்!         http://www.dreamstime.com/royalty-free-stock-photo-indian-festival-pongal-illustration-image1753855

    தங்களது வாழ்க்கையிலே
    தைபிறந்தால் வழிபிறக்கும்
    என்றுஎண்ணி யெல்லோரும்
    இன்பமுடன் பொங்கிநிற்பர்!

    குடும்பமெலாம் ஒன்றானால்
    குதூகலமே நிறைந்துவிடும்
    குத்துவிளக் கேற்றிவைத்து
    கொண்டாடி மகிழ்ந்திடுவர்!

    மூத்தவர்கள் கையாலே
    முதலரிசி எடுத்தங்கே
    பால்பொங்கி வருகையிலே
    பக்குவமாய்ப் போட்டிடுவர்!

    சர்க்கரையும் பாலுமங்கே
    சரியாகக் கலப்பதுபோல்
    சன்மார்க்கம் சந்தோஷம்
    சகலர்க்கும் வந்துநிற்கும்!

    பொங்கல்பொங்கி வருகையிலே
    புதுச்சுவையும் கூடவரும்
    புத்துணர்வும் அதனூடாய்
    புறப்பட்டு வந்திடுமே!

    பட்டணத்தில் பொங்கலென்றால்
    பலபேர்க்குத் தெரியாது
    பட்டிக்காட்டான் பொங்கலென்று
    பகர்ந்துமே நின்றிடுவர்!

    பட்டிக்காட்டான் இல்லையென்றால்
    பட்டணமே இருக்காது
    பட்டினியாய்க் கிடந்தங்கே
    படவேணும் பலபாடு!

    சேற்றிலே காலைவைத்துச்
    சோற்றையே தந்த அவன்
    நாட்டிலே இல்லையென்றால்
    நம்பொங்கல் இனித்திடுமா!

    பொங்கலென்று சொன்னாலே
    புதுத்தெம்பு தருபவனே
    எங்களது ஏருழவன்
    ஏனதனை எண்ணவில்லை?

    மஞ்சள்இலை வந்துநிற்கும்
    மங்கலங்கள் நிறைந்துநிற்கும்
    பொங்கிவரும் பூரிப்பால்
    பொங்கலே மணக்குமங்கே!

    பட்டணத்தார் பொங்கல்பார்க்கப்
    பட்டிக்காடு போகின்றார்
    பட்டிக்காடு எல்லாமே
    பால்பொங்கி நிற்கிறது!

    பட்டணத்தில் பொங்கலிப்போ
    பத்திரமாய்க் கிச்சனிலே
    பாத்திரத்தில் இருக்கிறது
    பார்க்கமட்டும் பொங்கலாக!

    என்றாலும் பொங்குகிறார்
    இனிப்புவர வேணுமென்று
    இனிக்கட்டும் எல்லார்க்கும்
    எங்களது தைப்பொங்கல்!

    Share
  • வாழ்த்துவோம் பொங்கல் நாளில்…

    -செண்பக ஜெகதீசன்

    கண்ணுடைக் கரும்பை நட்டுவைத்தே       Pongal
         கதிரவன் காணப் பொங்கலிட்டு,
    பெண்ணொடு ஆணும் குரவையிட்டுப்
         பகலவன் அருளப் படைத்திடுவோம்,
    வண்ண மஞ்சள் இஞ்சியுடன்
         உறவும் நட்பும் சேர்ந்திடுவோம்,
    மண்ணில் உழவரை வாழ்த்தியேதான்
         மகிழ்வோம் பொங்கல் நாளினிலே…!

     

    Share
  • ஓம் பானுவே நம:

    –விசாலம்

    மார்கழி மாதப்பனி விலகிவிடும் காலம் வந்துவிட்டது. அதாவது தட்சியாயணக்காலம் முடிந்து உத்தராயணக்காலம் ஆரம்பமாகும் காலம். இன்னும் விளக்கமாகச் சொன்னால் சூரியன் தனுர் ராசியிலிருந்து நகர்ந்து மகர ராசிக்குப் பெயரும் நேரம். இதனால் தான் சபரிமலையில் வரும் ஜோதியை மகர ஜோதி என்கிறார்கள். மேலும் இந்நாளை மகரசங்கராந்தி என்றும் அழைப்பார்கள். அன்று சூரியனுக்கு பொங்கல் பிரசாதம் படைத்து நன்றியைத்தெரிவிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருக்கிறது. பொங்கிவரும் பாலும், அரிசியைப்பொங்குவதாலும் ‘பொங்கல்’ என்ற பெயருடன் திருவிழா ஆனது.

    Makar-Sankranti-2015-Dates-810x405
    இந்நாளில் ஆதவனை ஆராதிக்கும் மந்திரம்

    ஓம் மித்ராய நம:
    ஓம் சூர்யாய நம:
    ஓம் ககாய நம:
    ஓம் பூஷ்நே நம:
    ஓம் ஹிரண்யகர்பாய நம:
    ஓம் மரீசயே நம:
    ஓம் ஆதித்யாய நம:
    ஓம் ஸவித்ரே நம:
    ஓம் அர்க்காய நம:
    ஓம் பாஸ்கராய நம:

    “ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வன்ந்தி தினே தினே ஜனமாந்தர சஹஸ்ரேஷு தாரித்ர்யம் நைவ ஜாயதே” என்று சொல்வது வழக்கம். தினமும் நமஸ்கரித்தால் தரித்திரம் அகன்று செல்வ செழிப்பு ஏற்படும். நல்ல தேக ஆரோக்கியமும் உண்டாகும். கண்கள் பிரகாசமாக விளங்கும் கண்களில் பிரச்சனை அகலும் என்று வேதம் கூறுகிறது. பூவுலகில் சகல அண்டசராசரங்களுக்கும் தேவை இந்த சூரிய ஒளி. சூரிய சக்தி இல்லையேல் வாழ்வுமில்லை. ஆதலால் சூரியனுக்கு நன்றி செலுத்துவதே நமது தலையாயக் கடமை. இதுவே பொங்கல் திருநாள். இதுவே தை மாதப்பிறப்பு.

    வருடத்தில் 12 சங்கராந்திகள் வருகின்றன அவைகளிப்பற்றி ஒரு பண்டித் ஜி விளக்கினார். அதை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன் …

    சூரியன் மகரராசியில் பிரவேசிக்க அது “மகர சங்கராந்தி” என்று பார்த்தோம். இது தேவர்களுக்கு முஹூர்த்த நேரமான விடியல் காலம். 12 சங்கராந்திகளில் இது மிகவும் முக்கியமாகக்கருத்தப்படுகிறது. பித்ருக்களின் ஆசிகள் நமக்கு கிடைக்கின்றன.

    சூரியன் மகரத்தின் அடுத்த ராசியான கும்பத்திற்குச் செல்லும்போது மாசி மாதம் பிறக்கும். இதை “லவண சங்கராந்தி” என்பார்கள். இந்த நேரத்தில் சூரிய பூஜை செய்வதன் பலன் மோக்ஷபிராப்தி. இந்த மாதம் உபநயனத்திற்கு சிறந்த மாதம் என்கின்றனர்.

    சூரியன் மீனராசிக்குச் செல்லும் போது பங்குனி மாதம் பிறக்கும் இதை “போக சங்கராந்தி” என்கின்றனர். இந்த மாதம் ஆரம்பத்திலும் முடிவிலும் சூரியவணக்கம் செலுத்தி கோதானம், தான்ய தானம் செய்ய வாழ்க்கையில் சுபீக்ஷம் உண்டாகி நன்மை ஏற்படும்.

    சித்திரை மாதம் சூரியன் மீனத்திலிருந்து மேஷராசிக்கு போகிறார். இந்த மாதம் சூரியனை வணங்கி பூஜித்து தான்யங்களை தானம் செய்ய ஆயிரம் அக்னிஹோத்திரம் செய்த பலனை அடைவார்கள். சித்திரை மாத முதல் தேதியை வருடப்பிறப் பென்றும் “மேஷ சங்கராந்தி”, சித்திரை விஷு என்றும் சொல்வர்.

    வைகாசி மாதம் ஆதவன் ரிஷபத்திற்குச்செல்ல இந்நாளை “தாம்பூலசங்கராந்தி” என்ற பெயர் பெறுகிறது. இன்றைய தினம் தம்பதி பூஜை செய்து தாம்பூலம் அளிக்க பாபம் கழிந்து புண்ணியம் கிடைக்கும்.

    “மனோஹர சங்கராந்தி” என்பது ஆனிமாதம் வருகிறது. இந்நேரம் சூரியன் மிதுனத்தில் நுழைகிறார். சூரிய பூஜை வெல்லம் நிவேதனத்துடன் செய்ய ஆசைகள் பூர்த்தியாகும்.

    பின் வரும் ஆடிமாதம் சூரியன் மிதுனத்திலிருந்து கடகத்திற்கு வருகிறார். இதை “அசோக சங்கராந்தி” என்கின்றனர், இதுவே விஸ்வத் புண்யகாலம்.

    சூரியன் சிம்ம ராசியில் நுழையும் போது ஆவணி மாதம் பிறக்கிறது. இதை “ரூப சங்கராந்தி” என்கின்றனர். இந்த நாளில் பொன் பாத்திரத்தில் நெய் வார்த்து பிராம்மணர்களுக்குத் தானம் செய்ய நோய்கள் அண்டாது.

    புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதை “தேஜ சங்கராந்தி” என்கின்றனர். இன்று செந்நெல்அரிசியைப்பரப்பி கலசம் வைத்து கொழுக்கட்டை போன்ற நைவேத்தியங்கள் படைத்து வேதியர்களுக்கு போஜனம் அளிக்க வேண்டும்.

    சூரியன் துலா ராசியில் நுழையும் போது ஐப்பசி மாதம் பிறக்கிறது. இதன் பெயர் “ஆயுள் சங்கராந்தி”. ஒரு கும்பத்தில் பசும்பால் வெண்ணெய் நிரப்பி பூஜை செய்து தானம் கொடுக்க ஆயுள் அதிகரிக்கும்.

    விருச்சிக ராசியில் சூரியன் பிரவேசிக்க “சௌபாக்கிய சங்கராந்தி” பிறக்கிறது அதாவது கார்த்திகை மாதம். சூரியனுக்கு வஸ்திரம் சார்த்தி பூஜை செய்து வஸ்திரம் ,உப்பு தானம் செய்ய சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

    மார்கழியில் சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். இதை “தனுஷ் சங்கராந்தி” என அழைக்கின்றனர். இந்த வேளையில் ஒரு தீர்த்த கலசம் எடுத்து பூஜை செய்து அன்ன தானம் செய்ய நினைத்த காரியங்களில் ஜெயம்.

    பொதுவாகவே இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது, ஆனால் இடத்திற்கு இடம் சற்று மாறுபடுகிறது. வட இந்தியாவில் எள்ளுருண்டை, கடலை உருண்டை என்பது அதிகமாக விற்பனைக்கு வரும். மிகவும் குளிர் பாதிக்குமானதால் வெல்லம் கலந்த இந்த பணியாரம் உடலுக்கு சூட்டைக்கொடுத்து உதவும். தில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேஷ் போன்ற இடங்களிலும் இது போன்று சிக்கி என்று சொல்லப்படும் வெல்ல மிட்டாய் அதிகமாகக்காணலாம். இதில் எள், நிலக்கடலை, பொட்டுக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு, பாதாம் எல்லாம் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும். குளிர் முடியும் வரை இதைப்பலர் வாங்குவார்கள். நமது போகிப்பண்டிகை அவர்களது “லோடிப் பண்டிகை”. லோதி என்றும் சொல்வார்கள். பெயர் தான் மாறி இருக்கிறதே தவிர மற்றபடி கோயில் போவது, மாலையில் எரிப்பது எல்லாம் ஒன்றுதான். ஆனால் லோடி பண்டிகையில் பழைய மரக்கிளைகள், உடைந்த பலகைகள், அட்டைக்கள் என்று சேர்த்து ஒரு எட்டுஅடி வரை உயர்ந்ததும் அதை எரிப்பார்கள்.

    சென்னையில் வீட்டிலிருக்கும் குப்பை, பிளாஸ்டிக் குப்பைகள் என்று எல்லாமே சேர்த்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிப்பு நிறையவே இருக்கிறது. அத்தோடு இதுவும் சேர விசேஷம் தான்! பஞ்சாபி சர்தார்ஜி இதைக்கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள் என்றால் அந்தக்குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அர்த்தம். இந்தக்காலத்திலும் சர்தார்ஜி பஞ்சாபி குடும்பத்தில் ஆண் என்றால் ஸ்பெஷல்தான். ஆணுக்குப் பல சலுகைகளும் கிடைக்கும். அவர்கள் வீட்டில் பெண் குழந்தை பிறந்திருந்தால் சற்று சுமாராகத்தான் இந்த “லோடி” நடக்கும். பெயரளவுக்கு ஏதோ செய்து முடித்துவிடுவார்கள். பாப்கார்ன் என்ற சோளப்பொரியை இந்த அக்னியில் வீசி எறிவார்கள். அக்னியைச்சுற்றி பங்க்டா நடனம் மிகப்பிரமாதமாக நடப்பெறும். பார்க்கப்பார்க்க நம்மையும் குதிக்க வைக்கும்.

    பொங்கல் என்று எடுத்துக்கொண்டால் நம் முன் தோன்றுவது சூரியன்தான். கதிரவனின் மகிமைகளைச் சொல்லி மாளாது. நாம் தினமும் அவரைப்பார்க்கிறோம். இயற்கை அளிக்கும் தானியங்கள், காய்கனிகள் எல்லாமே சூரியனின் பலத்தினால் தான் விளைகின்றன. சூரியனைப்பற்றிப் பாடாத மகான்கள் இல்லை. இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரப்படைப்பில் முதன் வரியாக சூரியனை ஆராதிக்கிறார், “ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றுதும்” என்று ஆரம்பிக்கிறது.

    இதே போல் தமிழ்க்கடவுள் அழகன் எனும் முருகப்பெருமானுக்காக பாடிய பாடலில் திரு அருணகிரிநாதர் சீர்பாதவகுப்பு எனும் பாகத்தில் முதல் பாடலாக சூரியனை வர்ணிக்கிறார். சூரியனை அவர் ஏழுபரிரதத்து ரவி எனவும் சிவப்பு, பச்சை, ஊதா, நீலம் என்று ஏழு நிறக்குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஆதவன் வலம் வந்து அருள் பாலிக்கிறான் என்கிறார்.
    “உததியிடை கடவும்மர கதவருண குலதுரக
    உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
    உதயம் என அதிகவித கலபகக மயிலின் மிசை
    யுகமுடிவின் இருள் அகல ஒரு ஜோதி வீசுவதும் ” என பாடல் வர்ணனை செய்கிறது.

    விஞ்ஞானத்திலும் சூரிய சக்தியை “ஸோலார் பவர்” என்றும் “எனர்ஜி” என்றும் விவரித்து அதைப்பற்றி உயர்வாகக்கூறப்பட்டிருக்கிறது.

    ஸ்ரீ ராமர் ராவணனை வெல்ல திரு அகத்திய முனிவர் அளித்த மந்திரம் தான் “ஆதித்ய ஹிருதயம்”. இதில் முழுவதும் ஆதவனை வணங்கும் ஸ்லோகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன் பலன்களும் தெரிய வருகிறது. கண்கள் கெட்டிருந்தால் இதைப்படிப்பது ஒரு நல்ல பரிகாரம்.

    சூரிய தேவருக்கு உரிய மற்றொரு மந்திரம் “காயத்ரி மந்திரம்”. உபநயனத்தில் இந்த காயத்ரி மந்திரம் தான் பிரதானம். சூரியனுக்கு உரிய மந்திரம் இந்த காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்தில் சூரிய காயத்ரி, ருத்ர காயத்ரி, தேவி காயத்ரி, விஷ்ணு காயத்ரி என்றும் பிரிவுகளும் உண்டு. இதில் சூரிய காயத்ரிதான் மிகவும் முதன்மையானது.

    “ஓம் பூர்புவஸ்ஸுவ: தத் ஸவிதுவரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன பிரசோயதாத்”

    இதையே தான் பாரதியாரும் தன் பாஞ்சாலி சபதத்தில் “செங்கதிர் தேவன், சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என ஸ்ருதி மொழி காயத்ரியைச் சொல்கிறார்.

    யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ அந்தச்சூரியபகவானின் மேலான ஒளியைத் தியானிப்போமாக, என்பதே காயத்ரியின் பொருளாகக் கொள்ளலாம். விஸ்வாமித்ர ரிஷி அருளியதாக இதைக்குறிப்பிடுகிறார்கள். விசுவாமித்திரர் க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்தாலும் விடாது தவம் செய்து தவவலிமைப்பெற்று பின் அந்தணர் ஆனார். மஹரிஷி பட்டமும் அவருக்கு உணடு. அவரே காயத்ரி மந்திரத்திற்கு ஆசாரியர். கீதையில் “மந்திரத்தில் நான் காயத்ரியாக இருக்கிறேன்” என்கிறான் கண்ணன், அத்தனைச்சிறப்புஇந்த காயத்ரிக்கு !

    சூரிய காயத்ரி
    “ஒம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி
    தன்னோ ஆதித்ய: ப்ரசோயதாத்”

    இதை 108 தடவை மகர சங்கராந்தி அன்று சொல்லி வழிபடுவதன் பலன் சொல்லி மிகையாகாது.

    தொல்காப்பியமும் சூரிய இந்திர வழிப்பாட்டைவர்ணிக்கிறது
    “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
    வடு நீங்கு இறப்பின் முதலன மூன்றும்
    கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”

    மஹாகவி பாரதியாரும் சூரியனைப்பற்றி பாடியிருக்கிறார். காலை வேளையில் பாடும் ராகமான பூபாளத்தில் பாடல் மிகவும் அருமை.

    “பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
    பானுவே பொன் செய் பேரொளித்திறனே,
    கருதி நின்னை வணங்கிட வந்தேன் ,
    கதிர் கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

    வேதம் பாடிய சோதியைக் கண்டு,
    வேள்விப்பாடல்கள் பாடுதற்குற்றேன்.
    நாத வார் கடலினொலியோடு
    நற்ற மிழிச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்.

    காதமாயிரம் ஓர் கணத்துள்ளே,
    சுருதியோடும் கதிரியைப் பாடி,
    ஆதவா நினை வாழ்த்திட வந்தேன்
    அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

    ஆதித்தாய் தந்தை நீவீர் உமக்கே
    ஆயிரந்தரம் அஞ்சலி செய்வேன். “

    அன்பர்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்,
    பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

    Photo courtesy:
    http://indianastrology.co.in/977-makar-sankranti-2015-dates-kumbh-mela-2015-lohri-pongal-2015/

    Share
  • பொங்கல் நல்வாழ்த்துக்கள்….

    கிரேசி மோகன்

    Happy-Pongal-wallpaper-e1357883015898

    ”எத்தைநாம் செய்தாலும் பித்தம் தெளியாது,
    இத்தரை வாழ்வின் இயல்பது: -இத்தையில்,
    அத்தைதன் மீசைக்கும், ஆச்சரியம் கொள்ளாதே,
    சித்தத்தின் பொங்கல் சழுக்கு(குற்றம்)”….

    ”கங்குலைப் போக்கும் கதிரவா தைத்திங்கள்,
    பொங்கலை வைத்துப் பணிகின்றோம்: -எங்களுள்,
    பொங்கிடும் காமத்துப் பாலைத் தணித்திடு,
    சங்கராந்தி சூர்யா சரண்”….கிரேசி மோகன்….

    Share
  • கொலைகாரனுக்கு ஒரு கோவில்

    –நாகேஸ்வரி அண்ணாமலை

    பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து மஹாசபா போன்ற இந்துத்துவவாதக் கட்சிகள் தங்கள் கொள்கைகளையும் அதன் மூலம் செயல்களையும் மக்களிடையே பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மொகலாய மன்னர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னும் பிரிட்டிஷ் காலனீயவாதிகள் இந்தியாவை ஆள ஆரம்பிப்பதற்கு முன்னும் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த எல்லோரும் இந்துக்களே எனவும், அதனால் இப்போது அவர்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லி அப்பாவி மக்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றுகிறார்கள். குடிமக்கள் எல்லோருக்கும் பிரதம மந்திரியான மோதி இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

    ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் இந்தியக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இந்துக் கலாச்சாரமாகவும் பாரம்பரியமாகவும் எடுத்துக்கொண்டு அவற்றைக் காப்பதாகக் கூறிக்கொண்டு இளைஞர்கள் மனதை தங்கள் கொள்கைகளின் பக்கம் திருப்ப முயன்று வருகிறார்கள். இதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மோதியின் மௌனம் இவற்றையெல்லாம் அவர் ஆமோதிக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

    Nathuram Godseஎல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல் இப்போது தேசத்தந்தை காந்திஜியைக் கொன்ற கோட்ஸேக்கு இந்து மஹாசபை மீரட்டில் கோவில் கட்ட முடிவுசெய்திருக்கிறது.

    காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி இந்த ஆண்டோடு நூறு ஆண்டுகள் ஆகின்றன. இதை நினைவுபடுத்தி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த தலையங்கத்தின் ஒரு பகுதியைக் கீழே கொடுக்கிறேன்.

    “காந்தி இல்லாமல் இருந்திருந்தாலும் சரி, காந்தி இந்தியாவுக்குத் திரும்பாமல் இருந்திருந்தாலும் சரி இந்தியாவுக்கு எப்படியும் சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று காந்தியின் விமர்சகர்கள் ஒரு கருத்தை வழக்கமாகச் சொல்வார்கள். அது உண்மைதான். காந்தி இல்லாமலும் சுதந்திரம் கிடைத்திருக்கும். ஆனால், இந்த அளவு மாண்புடனும் உலக மக்களின் நன்மதிப்புடனும் அந்தச் சுதந்திரம் ஈட்டப்பட்டிருக்குமா? ஆங்கிலேயர் மீதான வெறுப்பைப் பெரும் நெருப்பாக வளர்த்து சுதந்திரத்தை வென்றெடுக்காமல் அவர்களை நண்பர்களாகவே வழியனுப்பியது இந்தியச் சுதந்திரம். முன்னுதாரணமற்ற நிகழ்வு அது. அது மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு போராட்டங்களுக்கும் அதுவே முன்மாதிரி.”

    Nathuram Godse2சரித்திரம் காணாத ஒரு மாபெரும் ஞானியைக் கொலைசெய்த ஒரு பாதகனுக்கு கோவில் கட்ட முடிவெடுத்திருக்கும் செயல் காந்திஜியைப் போற்றுபவர்கள் எல்லோரையும் வெகுண்டெழச் செய்திருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகள் எத்தனையோ பேர் இருக்க காந்திஜிதான் தேசத்தந்தை என்று போற்றப்படுகிறார். அஹிம்ஸை என்ற ஆயுதத்தைக் கொண்டு பிரமாண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வென்ற அவரை உலகமே போற்றுகிறது. இத்தகைய மாமனிதருக்கும் சில எதிரிகள் இருந்தனர். இவர்கள் காந்திஜி பாகிஸ்தானுக்கு – முஸ்லீம்களுக்கு – சாதகமாக நடந்துகொண்டார் என்று நினைத்து அவரை அரசியலிலிருந்தே வெளியேற்ற நினைத்தனர். அவர்களில் ஒருவன்தான் கோட்ஸே. இவனுக்குப் பின் ஒரு இந்துத்துவவாதக் கூட்டமே இருந்தது. காந்திஜியைத் தடுத்து நிறுத்தத் தன்னால் சட்ட முறைகளைக் கையாண்டிருக்க முடியாது என்பதால் அவரைக் கொலைசெய்ததாகத் தன் வாக்குமூலத்தில் கோட்ஸே கூறியிருக்கிறான். ஆனால் இந்திய அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரை கோட்ஸே ஒரு கொலைகாரன். அதனால்தான் தூக்கிலிடப்பட்டான்.

    வன்முறை இல்லாமல் எந்த சக்தியையும் வெல்லலாம் என்று உலகத்திற்கெல்லாம் நிரூபித்தவர் காந்திஜி. காந்திஜியை உலகுக்குத் தந்த நாடு என்ற முறையில் இந்தியா பெருமை பெற்றிருக்கிறது. உலகின் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இப்படிப்பட்ட உலகம் போற்றும் மாமனிதரைக் கொன்றவனுக்கு கோவில் கட்டி இந்தியாவிற்கே களங்கம் தேடித் தர சிலர் முயல்கிறார்கள்.

    Nathuram Godse3இந்தியாவை உலக அரங்கில் முதன்மை இடத்தில் வைக்கப் போவதாகப் பறைசாற்றிக்கொள்ளும் பா.ஜ.க. இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து இந்தியாவுக்கு ஏற்படப் போகும் களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டமா? மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க.வினர் தங்களுக்கும் கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? மோதி முதல் முதல் பாராளுமன்றத்தில் பிரதமராக நுழைந்து அலுவல்களைத் தொடங்கியபோது காந்திஜியின் சிலையை வணங்கிவிட்டுப் போனார். அமெரிக்காவுக்கு வந்தபோது அமெரிக்க ஜனாதிபதிக்கு காந்திஜி எழுதிய பகவத் கீதை விளக்கப் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் காந்திஜி சிலையை வணங்கினார். இதெல்லாம் வெறும் நாடகமா? ஒரு பக்கம் காந்திஜியை மதிப்பதாகக் காட்டிக்கொண்டு இன்னொரு பக்கம் காந்திஜியைக் கொன்றவனுக்கு கோவில் கட்டும் முயற்சியை கண்டும் காணாதது போல் இருப்பது நாட்டிலுள்ள அனைவரின் நலன்களையும் காப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு பிரதமருக்கு அழகா? ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களுக்குள்ளேயே இந்தியாவை இந்துத்துவ நாடாக ஆக்க முயல்பவர்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதும் இந்துத்துவவாதத்தை முழுமையாக எதிர்த்த தேசத் தந்தை காந்திஜியைக் கொன்றவனுக்குக் கோவில் கட்டுவதைத் தடுத்து நிறுத்தாமலும் இருக்கும் மோதியையும் அவரது கூட்டத்தினரையும் உலகம் மன்னிக்காது.

    ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவன், ‘நீங்கள் யாரோடு உணவு உண்ண விரும்புகிறீர்கள்? அப்படி நீங்கள் விரும்புபவர் உயிரோடு இருப்பவரானாலும் சரி, இறந்துவிட்டவரானாலும் சரி’ என்று கேட்ட கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கொஞ்சமும் தயங்காமல், ‘காந்திஜியோடு’ என்று சொன்னார். அவருக்கு காந்திஜி மேல் மிகுந்த மரியாதை உண்டு. அவர் அப்படி மரியாதை செலுத்திய காந்திஜியை கொன்றவனுக்குக் கோவில் எழுப்புபவர்களையும் அதைத் தடுத்து நிறுத்தாமல் தங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் பா.ஜ.க. அரசையும் பற்றி என்ன நினைப்பார்?

    Photo courtesy:

    http://timesofindia.indiatimes.com/india/Hindu-Mahasabha-plans-bike-rally-for-Nathuram-Godse/articleshow/45786327.cms
    http://keralasnostalgia.blogspot.com/2012/09/nathuram-godse-before-assassinating-mr.html
    http://www.prmoment.in/1671/modi-appropriates-mahatma-gandhi-and-revives-a-discarded-political-brand.aspx

    Share
  • மெளனமாய் இருக்கின்றேன் !

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    இலைகொடுப்பேன் காய்கொடுப்பேன்
    இனிமையொடு கனிகொடுப்பேன்
    எல்லோர்க்கும் உதவுவதே
    என்னோக்காய் கொண்டுவிட்டேன்!

    மங்கலங்கள் நடந்தாலும்                                        mango
    அமங்கலங்கள் நடந்தாலும்
    தங்குதடை ஏதுமின்றி
    தொங்கிநிற்கும் என்னிலையே!

    பொங்கல்பொங்கும் பானைதனைப்
    புதுப்பொலிவு ஆக்குதற்கு
    மங்கலமாய் என்னிலையே
    தொங்கிநிற்கும் பானையிலே!

    என்கனியை உண்பதற்கு
    ஏக்கமுடன் காத்திருப்பர்
    இனிப்பாக இருந்தவர்க்கு
    எப்போதும் சுவைகொடுப்பேன்!

    குழந்தைகளும் சுவைப்பார்கள்
    குமரர்களும் சுவைப்பார்கள்
    அரசர்முதல் ஆண்டிவரை
    அனைவருமே சுவைத்திடுவார்!

    மல்கோவா எனவழைப்பார்
    மனமெல்லாம் விருப்புடனே
    சேலத்தின் பெயர்சேர்த்தும்
    சிறப்புடனே அழைத்திடுவார்!

    ஈழத்தில் இருப்பவர்கள்
    என்கனிக்குப் பேர்கொடுப்பர்
    எத்தனைபேர் பெற்றிடினும்
    இனிப்பேயென் நிலைப்பாகும்!

    முக்கனியில் என்கனியே
    முன்னிற்கும் கனியாகும்
    அக்கனிகள் அத்தனையும்
    அபிஷேகப் பொருளாகும்!

    நல்லதொரு நாடகத்தை
    நாரதரும் நடத்துதற்கு
    நன்றாக உதவியதே
    நான்கொடுத்த கனியன்றோ!

    நான்கொடுத்த கனிதானே
    நாதன்மகன் மலையேற
    நற்கதையாய் அமைந்தனை
    நாடெல்லாம் அறிந்ததன்றோ!

    வேண்டும்வரம் கிடைப்பதற்கு
    விநாயகரை வழிபடுவோர்
    விருப்பமுடன் கொடுப்பதும்
    விதம்விதமாய் என்கனியே!

    ஓமம் வளர்ப்பதற்கு
    உடன்விறகாய் ஆகிடுவேன்
    உட்கார்ந்து இளைப்பாற
    உதவுவதும் என்னியல்பே!

    உயிரோடு இருக்கும்வரை
    உதவிடுவேன் யாவர்க்கும்
    உயிர்விட்டுப் போய்விடினும்
    உதவிடுவேன் விறகாய்நான்!

    காய்கொடுப்பேன் கனிகொடுப்பேன்
    கடைசிவரை உதவிடுவேன்
    கல்லெறியும் எனக்குவிழும்
    கண்களைநான் மூடிநிற்பேன்!

    என்மீது கல்லெறிவார்
    என்றுமே விருப்புடையார்
    என்றுநான் எண்ணியெண்ணி
    இன்னுமே உதவுகின்றேன்!

    மண்மீது உள்ளவர்கள்
    மனமெனக்குப் புரிந்தாலும்
    மாமரமாய் இருப்பதனால்
    மெளனமாய் இருக்கின்றேன் !

     

    Share
  • வந்தது போகி!

    -விசாலம்

    வந்ததுப் போகிப் பண்டிகை ,
    சூழ்ந்துக் கொண்டது ஒரேப் புகை
    வீட்டின் குப்பைகள் வெளியே வர,
    வெளிக் குப்பைகள் அதனுடன்  சேர
    தெருவுக்குத் தெருஅதுவும் எரிய,
    சுற்றுச் சூழ்நிலை வெகுவாய்க் கரிய,
    அளவிலா மாசில் மூச்சும்  அடைக்க,
    இது தேவையா என்று மனமும்  கேட்க
    யார் சொல்லுவார் பதில் ?
    இந்தச் சமூகத்தில் .
    உன் மனதில் குப்பை நிறைந்துள்ளதே
    அதில் அழுக்கும் சேர்ந்துள்ளதே
    கெட்ட எண்ணங்கள் சுழலுதே
    அன்பும் வாய்மையும் போனதே
    அதை முதலில் எரியப்பா,
    மனதைப் புனிதம் ஆக்கப்பா ,
    அதுதான்  போகித் திருநாளாம்
    அன்பு நிறைந்த மன நாளாம்!

     

    Share
  • யாரடி வந்தார்.. என்னடி சொன்னார்?

    –கவிஞர் காவிரி மைந்தன்

    வானம்பாடி
    வானம்பாடி பாடல்கள் அனைத்தும் என்றைக்கும் கேட்டாலும் தேன்மழைதான்! கவிஞரின் பூரணம் காணலாம் இப்படத்தில்! வங்கமொழியில் வாங்கிய கதைக்கு வார்த்தைப்பூச்சரம் சேர்த்துக் கொடுக்க… இசையை வழங்கியிருக்கிறார் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன். எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் இதோ இந்தப் பாடல் முழுதும் சொல் விளையாட்டு நடத்தியிருக்கிறார் கண்ணதாசன்!

    நடனமங்கை ஒருத்தி ஆடும் நாட்டியமும் அதை ரசிக்க வந்த செல்வந்தன் ஒருவனும் காட்சிப் பொருளாக… இசையும் கவிதையும் கூட இணைந்து ஆடுகின்றன!

    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?

    மங்கையரின் கூந்தல் ஆறடியாக இருந்திருக்கிறது என்கிற வரிகள் ஏதோ சரித்திரம் சொல்கிறதல்லவா?
    நிலா…நிலா… என்று வரிகள் தந்தவர் …
    காய் காய் என்று கவிதை சொன்னவர் …
    தேன் தேன் என்று நம் நெஞ்சை அள்ளியவர் …
    வண்ணம் வண்ணம் காட்டி வசீகரித்தவர்…
    இங்கே ஒவ்வொரு வரியிலும் அடி மேல் அடி எடுத்து வைக்கிறார். அந்த அழகைப் பாருங்கள்!

    எல்ஆர்.ஈஸ்வரியின் குரலில் இனிமை தவழும் பாடல்!

    காணொளி: http://www.youtube.com/watch?v=Z12Xa2R_BmE

     

    கவிஞர்: கண்ணதாசன்
    படம்: வானம்பாடி (1963)
    இசை: கே.வி. மகாதேவன்
    ரல்: எல். ஆர். ஈஸ்வரி

    kannadasnK.-V.-Mahadevan-Songslr-eswariVanampadi2

    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?
    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?
    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?

    ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
    ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
    ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
    ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
    பாரடி வந்து பக்கத்திலே – காதல்
    காவடி தூக்கும் கண்களிரண்டை
    வேலடி போலடி போடி வராமல்
    காவடி தூக்கும் கண்களிரண்டை
    வேலடி போலடி போடி வராமல்
    ஏனடி நின்றாய் வெட்கத்திலே?

    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?
    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?

    நில்லடி நில்லடி கண்ணடியோ ஓஓஓஓஓஓஓ
    என்னடி என்னடி சொல்லடியோ ஓஓஓஓஓ
    நில்லடி நில்லடி கண்ணடியோ
    என்னடி என்னடி சொல்லடியோ
    முன்னடி பின்னடி போடடியோ – இங்கு
    அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
    என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி
    அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
    என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி

    என் பெயர் கேட்டுச் சொல்லடியோ!

    யாரடி வந்தார்?
    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?
    காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
    மோதுவதென்னடி சந்தோஷம்?

    யாரடி வந்தார் என்னடி சொன்னார்?
    ஏனடி இந்த உல்லாசம்?

    Share
  • நாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது

     
     

    jay

    சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=cQMB7o3SXOw

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=4aYQixhdWY4

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Ri5MX9ygN2g

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=F6fvIpCVurk

    *********************


    காலக் குயவன் ஆழியில் சுழற்றிய
    ஞாலத்தின்  உட்கருவில்
    பூத வடிவிலே பிறப்பு முதல்
    அணுப்பிளவு உலை
    கணப்பளித்து வருகுது
    பில்லியன் ஆண்டுகளாய் !
    எருப் பொருள் தீர்ந்து இயக்கத்தில்
    இரட்டித்துப் பெருக்கும்
    வேகப் பெருக்கி அணு உலை !
    உட்கரு உள்ளே
    கட்டுப் பாடுடன் இயங்கியும்
    நிறுத்தம் அடைந்தும்,
    விட்டு விட்டு வேலை செய்வது !
    வெளிக் கருவிலே
    கனல் குழம்பைச் சூடாக்கிக்
    கொதிக்க வைக்குது !
    குவல யத்தைக்
    குத்தூசி போல் குடைந்து  துளையில்
    பீறிட்டெழும் எரிமலைகள் !
    தாறு மாறாய்
    ஊர்ந்து நடுங்கும்
    பூமியின் குடல் தட்டுகள் !
    அங்கிங் கெனாதபடிப் புவி மீதில்
    பொங்கி  எழும்
    பூத எரிமலைகள் !
    கூத்தாடும் நிலம் நடுங்கி !
    அணு உலைக் கனல் மீறல்
    தணிப்பது அவை !
    உட்கருவின்
    பூத உட்கரு அணு உலையே
    பூமியின் சுழற்சிக்கு
    ஆற்றல் ஊட்டும்
    ஊற்று சக்தி !

    புதிய உமர் கயாம்

    ++++++++++++++

    VolcanoBot-1


    எரிமலைகள் எப்படி வெடித்தெழுகின்றன என்று நுணுக்கமாக நாங்கள் இதுவரை அறியோம். எங்களிடம் உள்ள கணினிப் போலி மாடல் மிகவும் எளிமையானது.   இந்தத் திட்டம் அந்த மாடல்களை விருத்தி செய்ய ஏதுவாக இருக்கும்.  எரிமலை ஆய்வுக் கருவி விளைவுகள் மற்ற கோள்களில் உள்ள எரிமலைகளை ஆராய வழிகாட்டும்.  பூமி, செவ்வாய்க் கோளில் உள்ள எரிமலை வெடிப்பு வாயில்கள் ஒத்த முகமுடையவை.  இந்த  ஆய்வுகள் ஒரு காலத்தில் இயங்கிய எரிமலைகளைக் கொண்ட சந்திரன், புதன், என்சிலாடஸ், ஈரோப்பா போன்ற கோள்களுக்கும் மெய்யாகும்.

    காரோலின் பர்செட்டா [நாசா விஞ்ஞானி, ஜெட் உந்துவியல் ஆய்வகம், கலிஃபோர்னியா]

    கடந்த சில ஆண்டுகளாய் நாசாவின் விண்ணுளவிகள் அனுப்பிய உன்னத படங்களில் செவ்வாய்க் கோளிலும் சந்திரனிலும் உள்ள எரிமலை வெடிப்புத் துளைகள் போன்ற குழிகளைக் காட்டியுள்ளன.   அவற்றை நுட்பமாய் ஆராயத் தற்போது  எங்களிடம் தொழில் நுணுக்கமில்லை.  ஆனால் அவை எமக்கு மிக்க ஆர்வம் ஊட்டுகின்றன. கரோலினுடன் பணி புரிந்து பூமியின் எரிமலை ஆய்வுகளை ஒப்பிட்டு மற்ற கோள்களுக்கு இடையே உள்ள தூரத்தை நிரப்பிக் கொள்கிறோம்.

     ஆரன் பார்னஸ் [JPL Robotics Researcher & Carolyn Parcheta Co-adviser]


    Carolyn Parcheta on the Volcano Vent

    நாசா சுய இயக்கு யந்திரம் எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது.

    2015 ஜனவரி 7 ஆம் தேதி கலிஃபோர்னியா ஜெட் உந்தியல்  ஆய்வகத்தின் நாசா விஞ்ஞானி கரோலின் பர்செட்டா என்பவர் மேற்பார்வையில் வல்கானோபாட் -1 [VolcanoBot -1] என்னும் சுய இயக்கு யந்திரம் ஹவாயில் [Kilauea Volcano in Hawaii] ஆறிப்போய் ஓய்வாக உள்ள ஓர் எரிமலைத் துளைக்குள் செலுத்தப் பட்டுச் சோதனை செய்து வருகிறது.  எரிமலைக் குழம்புப் பாறை வழியை [Path of Magma] முதன்முதல் வரைபடம் மூலம் பதிய ஆரம்பித்தது : மே மாதம் 5-9, 2014 தினங்களில்.   எரிமலையின் உட்பாதைகளைத் துருவி ஆராய்வது எளிதான செய்முறை இல்லை.   இந்தச் சவாலான ஆராய்ச்சிகளைச் செய்பவர் இருவர் : கரோலின் பர்செட்டா, மற்றும் அவரது இணை ஆய்வாளர் ஆரன் பார்னெஸ் [Carolyn Parcheta & Aaron Parness].

    எரிமலைகள் எப்படி வெடித்தெழுகின்றன என்று விஞ்ஞானிகள் இதுவரை அறியவில்லை.  தற்போதுள்ளக் கணினிப் போலி மாடல்கள்  மிகவும் எளியவை.  கரோலின் புரியும் இந்த சுய இயக்குக் கருவி மூலம் பெறும் ஆய்வு முடிவுகள் கணினி மாடல்களை விருத்தி செய்து விளக்கம் பெற உதவும்.  தேசீயப் பூதளவியல் ஆய்வு நிறுவகம்  [National Geographic’s Expedition]  அளித்த நிதிக்கொடை 50,000 டாலர் கரோலின் திட்டத்துக்குப் பயன்படுகிறது.

    இந்த பூகோள எரிமலைத் துளை ஆராய்ச்சிகள், சந்திரன், செவ்வாய்க் கோள், புதன், வெள்ளி போன்ற பிறக் கோள்களின் ஆறிப்போன எரிமலைத் தடங்களை ஆராய மிகவும் உதவும்.    இரண்டு சக்கிரத்தில் நகரும் முதல் சுய இயக்கு யந்திரத்தின் [VolcanoBot -1] அளவுகள் :  நீளம் 12 அங்குலம் [30 செ.மீ], 6.7 அங்குல [17 செ.மீ.] விட்டமுள்ள சக்கிரங்கள்.  இரண்டாவது சுய இயக்கு யந்திரம் சிறியது; பளு குறைந்தது.  5 அங்குல [12 செ.மீ] விட்டமுள்ள சக்கிரம்].  2015 மார்ச்சில் ஓய்வாக உள்ள ஹவாயி எரிமலைத் துளையில் இரண்டாவது சுய இயக்கு யந்திரம் இறங்கி ஆய்வு செய்ய ஆரம்பிக்கும் என்று அறியப் படுகிறது.


    “பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ?  உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது.  அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”

    “பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”

    மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)

    “ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”

    பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)


    Two Volcano Robots

    பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை

    உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல !  கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார்.  காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார்.  டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார்.  அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது.  அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது.  தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !

    பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது !  துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து ! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல !  இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது !

    ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன !  2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது ! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண் விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன !  அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ?  அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !


    Upper mantle magma of Volcano

    பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன

    கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன.  1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது.  மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன !  நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது.  சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன.  பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும்.  2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ?  அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை.  ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.

    பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது !  புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம்.  அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது !  அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !

    பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை

    ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம்.  சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி !  திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது.  யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.


    உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm).  யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது.  தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ.  இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.

    தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது.  அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.



    யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான் களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங் களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்கு கின்றன.  பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது.  ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன.  அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும்.  அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும்.  திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.


    வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்று விக்கும்.  மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும்.  யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும்.  இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன.  அப்படி இயங்கும் அணுப் பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள்.  நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது.  இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !


    விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை

    பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார்.  அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor).  அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவை யில்லை.  மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும்.  தானாக நிறுத்தம் அடையும்.  அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது.  இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும்.  நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும்.  பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் !  இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.


    பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் !  அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு !  உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும்.  அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது.  செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது.  செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது !  செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது.  ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !


    4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான்.  அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது.  இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன

    Chile volcano -1

     

    (தொடரும்)

    +++++++++++++++++

    Images :  BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media

    Information  :

    1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
    2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
    3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
    4. Encyclopedia Britannica 15 Edition [1978]
    5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
    6. National Geographic Frontiers of Science [1982]
    7. The Vesuvius Volcano at the Bay of Naples.
    8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
    9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
    10. Inside the Volcano, National Geographic [November 2000].
    11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html (Italian Volcano))
    11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html (Hawaii Volcano)
    12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
    13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
    14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
    15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
    16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
    17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
    18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
    19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
    20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
    21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
    22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
    23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
    24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
    26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
    27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
    28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
    29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
    30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
    31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
    31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)
    32 NASA Report : What are (Volcanic) Aerosols ?
    33.  Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)
    34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)
    35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)
    36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe
    37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)
    38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)
    39 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)

    40  http://environment.nationalgeographic.com/environment/natural-disasters/volcano-profile/

    41 http://www.spacedaily.com/reports/NASA_Robot_Plunges_Into_Volcano_to_Explore_Fissure_999.html

    42  http://en.wikipedia.org/wiki/Volcano  [December 26, 2014]

    43 http://www.spacedaily.com/reports/NASA_Robot_Plunges_Into_Volcano_to_Explore_Fissure_999.html  [January 8, 2015]

    44  http://www.cnet.com/news/nasa-volcanobot-goes-where-no-human-dares-to-tread/  [January 8, 2015]

    45  http://www.nasa.gov/jpl/nasa-robot-plunges-into-volcano-to-explore-fissure/  [January 7, 2015]

    46  http://www.nasa.gov/jpl/nasa-robot-plunges-into-volcano-to-explore-fissure/#.VLKJnoezraZ  [January 7, 2015]

    ********************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  January 11, 2015

    Attachments area
    Preview YouTube video 10 Things You Didn’t Know About Volcanoes

    10 Things You Didn’t Know About Volcanoes

    Preview YouTube video 10 Most Active Volcanoes

    10 Most Active Volcanoes

    Preview YouTube video Engineering Volcanoes

    Engineering Volcanoes

    Preview YouTube video Este robot de la NASA quiere decirnos cómo entran en erupción los volcanes

    Este robot de la NASA quiere decirnos cómo entran en erupción los volcanes
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி  12, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு கவிஞர் ருத்ரா இ. பரமசிவன் அவர்கள் 

     

    ruthra-paramasivan

     

    கவிதைகள் எழுதுவதை தனது முதன்மை சிந்தனை வெளிப்பாடாகக் கொண்டாலும் அதிலும் பலவேறு கோணங்களில் திறமையைக் காட்ட முடியும் என்று தொடர்ந்து காண்பித்து வருகிறார் கவிஞர் (உ)ருத்ரா இ. பரமசிவன் அவர்கள். அவரது கவிதையிலக்கிய ஆளுமையையை வியந்து அவரை வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    கல்லிடைக்குறிச்சியை தனது பூர்வீகமாகக் கொண்டு தாமிரபரணி நதிக்கரையில் வளர்ந்த கவிஞர் ருத்ரா அவர்களின் கல்விப் பின்னணி பொருளாதாரத்துறை. தற்பொழுது 71 வது அகவையை எட்டியுள்ள ருத்ரா, கல்லூரி நாட்களில் பொருளாதார‌ப் பாட‌த்தில் தரவரிசையில் முத‌ல் நிலையில் தேர்வு பெற்றதால் ‘நேரடித் தேர்விற்கு உட்படுத்தத் தேவையில்லை’ என்ற சிறப்பு விதிகளின் அடிப்படையில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (LIC of INDIA) பணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பல்வேறு துறைக‌ளிலும் ப‌ணியாற்றியுள்ளார். பணி ஓய்விற்குப் பிறகு தனது மனைவியுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து கலிபோர்னியாவில் வசிக்கும் அவரது மகன் மற்றும் மகள் குடும்பத்துடனும், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார்.

    கல்கி, ஜூவி, குங்குமம், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளிலும் கவிஞர் ருத்ராவின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அகரமுதல, திண்ணை, வார்ப்பு போன்ற இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், தனது பல்வேறுபட்ட வலைப்பூக்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். பொருளாதாரத் துறையின் பின்னணி கொண்டாலும் அறிவியலில், அதிலிலும் குறிப்பாக இயற்பியலில் ஆர்வம் மிகக் கொண்டவர் கவிஞர் ருத்ரா. குவாண்ட‌ம் மெக்கானிக்ஸ், ஆலன் கத்ஸ் இனஃப்லேஷன் தியரி(Alan Guth Inflation Theory), சவ்வுப்படல வெளிகள் (RS MODELS I AND II), அண்டம், பெருவெடிப்பு, ஹிக்ஸ் போசோன் சப்அட்டாமிக் பார்டிகில் (higgs boson subatomic particles) போன்றவற்றைப் பற்றி விளக்கிக் கட்டுரைகள் எழுதும் வல்லவர். இயற்பியல் கட்டுரைகள் மட்டுமன்றி அத்தகவல்களை கவிதையின் கருப்பொருளாகவும் கொண்டு கவிதைகளும் எழுதுவார்.

    கவிஞர் ருத்ராவின் கவிதைகளின் பாடுபொருள் பொதுவாக வழங்கிவரும் கருப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை, கவிதைகளின் நயமும் கவிதைநடையில் வேறுபட்டவை. பொதுவான புழக்கத்தில் இருக்கும் கவிதை பாணியிலும் இவரால் எழுத முடியும், பிற கவிஞர்கள் தொட்டிராத கோணங்களையும் கவிஞர் ருத்ராவால் காட்ட முடியும். இவர் எழுதும் கவிதைகளுக்கு சொல்லலங்காரம் ஆதாரம் அல்ல. சொல்லவரும் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். இவர் கவிதைகளின் பல்வேறு கோணங்களை அடுத்து பார்ப்போம் (கவிதைகள் முழுமையாகவோ அல்லது சிறப்பு வரிகள் மட்டுமோ இடத்திற்குத் தக்கவாறு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது).

    அறிவியல் தாக்கக் கவிதைகள்:
    களிப்பருளும் “களிப்பே” என்ற கவிதையில் கவிஞர் ருத்ரா இயற்பியல் கருத்துக்களின் வழி ஆன்மிக விளக்கமளிக்கிறார்.

    களிப்பருளும் “களிப்பே”!
    =======================

    […]
    எது ஞானம்?
    எது அஞ்ஞானம்?
    அது மெய்ஞானம்?
    எது விஞ்ஞானம்?
    முடிவில்லாததற்கு
    முடி போட்டு குடுமி போடமுடியாது.
    முனை தெரியும் வரை
    கையில் கருத்தில் நிரடும் வரை
    பாதியாக்கு
    பாதியாக்கிக்கொண்டே இரு.
    கிரேக்க மொழியில்
    மெலிடஸ் (கிமு 610_540)
    இதை “அபெய்ரான்” என்றார்.
    இன்ஃபினிடி என்று
    இது நுண்கணிதம் ஆயிற்று.
    லிமிட்டிங் டு சீரோ என்பது
    டிஃபரன்ஷியல் கால்குலஸ்.
    லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது
    இன்டெக்ரல் கால்குலஸ்.
    தொகுத்ததை பகுத்த போதும்
    பகுத்ததை தொகுத்த போதும்
    வெறுமையே அங்கு விஸ்வரூபம்.
    விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.
    மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன்.
    ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்
    குவாண்டம் பிடித்து
    ஒரு லிங்கம் செய்தால்
    அதுவே இங்கு ஒரு
    குவாண்ட லிங்கம்.
    ஃபெர்மியானும் போஸானும்
    கொண்டு பிசைந்த லிங்கமே அது.
    […]

    ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரு வேறு தன்மை கொண்டு இருப்பதை இன்று அறிவியல் அறிகிறது, ஆனால் இந்தக் கருத்தை ஆன்மிகம் முன்னரே குறிப்பிட்டுள்ளது. இறைவன் ஒரே நேரத்தில் சிவனாகவும் சக்தியாகவும் இருப்பது அணுவின் தன்மையைப் போன்றது என்று மாணிக்கவாசகர் கூறிய “அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க” கருத்தை கவிஞர் ருத்ரா இக்கவிதையில் கையாண்டதை முனைவர் க. கணேசலிங்கம் பாராட்டியுள்ளார்.

    சங்கநடைக் கவிதைகள்:
    பிற கவிஞர்களிலும் இருந்து ருத்ராவை வேறுபடுத்திக் காட்டுவது அவரது சங்கஇலக்கியச் சாயல் கொண்ட கவிதைகள். கீழே ஒரு எடுத்துக்காட்டு…

    பசலை பூத்தே…
    =============

    கதழ்பரி கலிமா அலரிதூஉய்
    ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும்
    முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும்
    இன்னிய பலவின் முள்பசுங்காய்
    மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும்.
    நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும்
    ஓதையுண்பினும் ஓவா உறுபசி
    உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும்.
    நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர்
    தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே.
    பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும்
    துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா.
    துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு
    அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும்
    அகவும் மஞ்ஞை என்னுள் அகவி
    உருவும் என்னுயிர் மின்னல் மயிரிய‌
    நார்ப்பூ தொடுக்கும் பசலை பூத்தே!

    ============
    பொழிப்புரை:-
    ============
    குளம்புகள் பதிய குதித்துச்செல்லும் குதிரையை அதன் அலரிப்பூக்குஞ்சம் அசைய அதனால் அப்பூக்கள் எங்கும் உதிர குதிரை (பூட்டிய தேரில்) செல்லும் காதலன் வழியெல்லாம் வேங்கை மரங்கள் அடர்ந்திருக்கும் அந்த வெங்காட்டு வழியில் செல்கிறான்.நெருக்கமான வழி அது.இடையிடையே உள்ள இலஞ்சி எனும் சுனைகள் செறிந்த ஊரில் இனிய தன்மை கொண்ட பலாமரங்கள் தரை தொடும்படி பலாக்கனிகளை (வேர்ப்பலா)வீழ்த்திக்கிடக்கும்.பலாவின் மேல் புறம் முள் அடர்ந்தது போல் உள்ள தோற்றத்தைக்கண்டு அவையும் சிறு சிறு வண்டுகள் என நினைத்து அந்த பசுங்காய்கள் மீது வண்டுகள் மொய்க்கும்.
    அவை யாழ் போல சிறகுகளை அதிரச்செய்து இசைக்கும்.காதலனின் நெடிய தேரின் மணியின் நாக்கும் நடுங்கலுற்று அதிலிருந்து மெல்லொலி கேட்கும்.
    அந்த இன்னொலியை உண்டபோதும் தன் தீராத பசியால் அலைவுற்று அவை அந்த வெட்டவெளியில் மொய்த்துப்பறக்கும்.வழியில் குறுக்கு நெடுக்காக கிடக்கும் மரத்தின் வேர்கள் நீண்ட மலைப்பாம்புகள் போல் காதலன் செல்லும் வேகத்தை தடுத்து மறிக்கும்.இதை என்ன செய்வது?என் பிரிவுத்துயரத்தை இது இன்னும் அதிகப்படுத்துகிறதே என்று காதலி துன்பம் கொள்கிறாள்.மனக்கண்ணில் காதலன் விரைந்து வரும் காட்சிகள் விரிகின்றன.
    அவன் திரண்ட தோளின் வலிமைமிக்க செயலினால் விரையும் குதிரைகள் அவன் வலிய தன்மையை அறியும்.உடம்பில் அழகிய புள்ளிகள் நிறைந்த அரிய அந்த அழகிய குதிரை அதிர்வோடு துள்ளி துள்ளி ஓடும்.இங்கு துவண்டு போன உள்ளத்தோடு வேதனை அடையும் என் நெஞ்சில் பொங்கும் அலைகள்
    அவன் அகன்ற நெஞ்சத்தில் சூடேற்றி கிளரச்செய்து அவன் நெஞ்சக்கூட்டிலும் உள்ளே உள்ளே தைத்து வருத்தும்.எங்கோ கூவும் மயில் அதன் அகவல் ஒலியை என்னுள் பாய்ச்சும்.அது என்னுயிர் ஊடுருருவி மயிரிழை போன்ற மின்னல் உணர்வை நுழைத்து அதை நார் ஆக்கி பூ தொடுக்கும்.அந்த மலர் மாலை பசலை நோயாய் (பிரிவு துன்பத்தின் வலி)என் மீது மலர்ந்து படரும்.
    இவை காதலியின் மனவெழுச்சி மிக்க காதலின் சொற்கள்.

    “கவிதை என்ற பெயரில் அயற் சொற்களைக் கலந்து உரை நடையைத் தருவோர் இடையே மரபுப் பாடல்கள் புனையும் தங்கள் ஆர்வமும் ஆற்றலும் பாராட்டிற்குரியது,” என்று முனைவர். இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் இவர் முயற்சியைப் பாராட்டி உள்ளார்கள். காப்பியாற்றுப்படை, மாவின் அளிகுரல், நெடுநல் மாயன், இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும், காய்நெல் அறுத்த வெண்புலம், கல்பெயர்த்து இழிதரும், வேழ விரிபூ! என்று பல தலைப்புகளில் சங்க இலக்கிய நடைக் கவிதைகளை கவிஞர் ருத்ரா வழங்கியுள்ளார். இக்கவிதையை எழுதியவரும் முன்னர் குறிப்பிட்ட அறிவியல் கவிதையை எழுதியவரும் ஒரே கவிஞரா என வியக்காமல் இருக்க இயலாது.

    குறும்பாக்கள்:

    குறும்பாக்கள் குறைந்த வரிகளில் முக்கியமானக் கருத்தை சொல்வதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சொல்லப்பட்ட கருத்தும் மனதில் தக்க வேண்டும். கவிஞர் ருத்ராவின் மற்றொரு சிறப்பு, குறும்பாக்களிலும் முத்திரை பதிப்பது. குறும்பாக்கள் பற்றி அவர் சொல்லும் குறும்பா….

    குறும்பாக்களைப்பற்றி குறும்பா…
    ===============================

    ஆயிரம் பக்க
    எழுத்துக்களின்
    ”போன்சாய்” மரம்

    கீழே அவருடைய இருவேறு குறும்பாத் தொகுப்புகளில் இருந்து சில பாடல்கள். எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனத்தை மூன்று நான்கு வரிகளில் மிகக் கச்சிதமாக முடித்து விடுக்கிறார். தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் சிலரில் அவர் தன்னைப்பற்றிக் கூறுவதும் இடம் பெறுகிறது.

    சுஜாதா
    ======
    எழுத்துக‌ளுக்கு எல‌க்ட்ரானிக்ஸை
    ஊற்றிய‌வ‌ர்….ஆயிர‌ம்
    “எந்திர‌ன்”க‌ளின் அடிப்ப‌டை “சிப்”

    கல்கி
    =====
    எத்தனை தலையணைகள்.
    அத்தனையிலும்
    சரித்திரம் விழித்துக்கொண்டிருந்தது.

    ருத்ரா
    ======
    ருத்ராவா? யார் அது?
    ப‌த்திரிகை ஆஃபீஸ்க‌ளின்
    குப்பைத்தொட்டியில் தேடுங்க‌ள்.
    (ம‌ற்ற‌ ருத்ராக்க‌ள் ம‌ன்னிக்க‌)

    *****
    எழுதிச்செல்லும்
    விதியின் கை
    எழுதி எழுதி மேற்செல்லும்.
    எங்கே முடியும் விதி?

    பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை
    ======

    பேனாவுக்கு
    மட்டுமே புரிந்தது.
    காகித‌ம் ம‌ட்டுமே
    ர‌சித்த‌து.

    “க‌விதை”
    ======

    எழுதி முடிக்க‌வில்லை.
    பேனாவில் எல்லாம்
    எறும்புக‌ள்.

    த‌மிழுக்கும் அமுதென்று பேர்
    ======
    இங்கு சுட்டப்பட்ட எழுத்தாளர்கள் தவிர்த்து, தமிழ் எழுத்தாளர்களில் மேலும் பலரை விமர்சித்து நான்கு தனிப் பாடல் திரட்டாகக் கொடுத்துள்ளார். அவை கீழ்காணும் சுட்டிகளின் வழி படிக்கக் கிடைக்கும்.
    எழுத்தாளர்களின் ஊர்வலம்- பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4 .

    விமர்சனக் கவிதைகள்:
    அறிவியல் ஆன்மிகக் கவிதைகளுக்கும், சங்க நடைக் கவிதைகளுக்கும், குறும்பாக்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில் முற்றிலும் வேறுபட்ட பாடுபொருளைக் கருத்தாக வைத்தும் கவிஞர் ருத்ராவால் கவிதை எழுத முடியும். யாரும் பொதுவாகக் கையாளும் கவிதைக் கருவுக்கு மாறுபட்டு விளையாட்டு விமர்சனம் என்பதைக் கூடக் கவிதையாக வடிப்பவர் ருத்ரா. சென்ற உலகக் கால்பந்து போட்டியில் நெதர்லாந்தும் மெக்ஸிகோவும் மோதியதையும் விமர்சனக் கவிதையாகவே வழங்கியிருந்தார்…அக்கவிதை கீழே.

    உலக கோப்பை கால்பந்து
    நெதர்லாந்தும் மெக்ஸிகோவும்
    =============================

    நியூயார்க் டைம்ஸ் கொப்பளிக்கிறது
    பி.பி.ஸி ஸ்போர்ட்ஸ்
    நரம்பு புடைக்கிறது.
    டிவி திரை பூராவும்
    உணர்ச்சிக்கம்பளிப்பூச்சிகளின்
    அடைசல்கள்.துள்ளு முள்ளுகள்.
    கழுத்துப்பிடியாய்
    கடையில் ஒரு அமுக்கு.
    அப்புறம்
    பெனால்டியில்
    மெக்ஸிகோ தோல்விக்குப்பெட்டிக்கு
    கடைசி ஆணி.
    தொண்ணூத்து நாலாவது நிமிடத்தில்
    “க்ளாஸ் ஜான் ஹண்டெலார்”
    அடித்த கோல்..
    வானத்தின்
    உச்சிமண்டை பிளந்து கொண்டது.
    அந்த உற்சாகக்குரல்
    உலகத்தின்
    செவிட்டுக்காதுகளின்
    பாறாங்கல்லையெல்லாம்
    கூட‌
    உருட்டித்தள்ளியிருக்கும்.
    நாக் அவுட் வந்த பிறகும்
    இனியும்
    ஒரு நாக்கை
    தொங்கப்போட்டுக்கொண்டிருக்க முடியுமா?
    சிலிக்கு
    இப்படித்தானே பிரேஸில்
    ஒரு பச்சை மிளகாயை
    கடிக்க கொடுத்தது.
    அவர்களுக்கு
    பச்சை மிளகாய் எல்லாம்
    இனிப்புக்காய்கள் என்றாலும்
    இந்த நாக் அவுட்டின்
    அந்த “ஆலப்பினோ அல்லது ஜாலப்பினோ”
    செம காரம் தான்.
    மூக்கில் காதில் கண்ணில்
    எல்லாம் காரம் தான்.
    பிஃபாவின்
    வண்ண வண்ண ரத்தப்புடைப்புகளை
    இந்த கால்பந்தில் பார்த்து
    நரம்புக்குள்
    நல்லபாம்புகளை கொத்தவிட்டு
    நுரை தள்ளி
    பார்த்து ரசிக்கும் விளையாட்டு
    எந்த சொர்க்கத்திலும்
    கிடைக்காது.
    கிரிக்கெட் கூட‌
    அகராதிப்படி
    வெறும் பூச்சி விளையாட்டு தான்.

    மாறுகோணச் சிந்தனையின் மறுஉருவமாக பலகோணங்களில் கவிதைகள் படைத்து வரும் கவிஞர் ருத்ராவை இவ்வார வல்லமையாளராக தேர்வு செய்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். தொடர்ந்து கவிதை இலக்கியத்தில் புதுமைகள் புகுத்த அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ***

    கவிஞர் ருத்ராவின் வலைப்பூக்கள்:

    http://ruthraavinkavithaikal.blogspot.com/
    http://ruthraasivan.blogspot.com/
    http://ruthraa.wordpress.com/
    http://nunpaa.blogspot.com/
    http://nunbaa.blogspot.com/
    http://oosiyilaikkaadukal.blogspot.com/

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • பாட்டுக்கு பாட்டெடுத்து, – கவிஞர் வாலி – படகோட்டி திரைப்பாடல்!!

    கவிஞர் காவிரி மைந்தன்

    kaviri

    படகோட்டி திரைப்பாடல்கள் அனைத்தையும் வரைந்த கவிஞர் வாலிக்கு முழுக்க முழுக்க புகழ்மாலை சூட்டிய பாடல்கள்! அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் வாலியின் வாடாமலர்கள் இவை என்றால் அது மிகையில்லை!

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையில் விளைந்த அற்புதவிளைச்சல் எக்காலத்திற்கும் இப்பாடல்களை பவனிவரச் செய்கிற பணியை இனிதே செய்துகொண்டிருக்கிறது! டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் உள்ள மாயம் என்ன.. எங்கே நாம் அறிந்துகொள்ள முடிகிறது? அந்த மயக்கத்திலிருந்து விடுபடுவதொன்றும் அத்தனை எளிதில்லையே!!

    எம்.ஜி.ஆர்.. சரோஜாதேவி இணைசேர்ந்து எத்தனையோ படங்களைத் தந்திருக்கும்போதும்.. இந்தப்படமும் இப்பாடல்களும் மகோன்னதம் பெற்றவை! கற்பனைகலந்த கவிதைமுத்துக்கள்.. காதலின் பாலபாடமாய்.. உரைநடைக் கவிதையாகவே ஓடிவரும் பாடலிது! உள்ளம்தொடும் கீதமிது! இப்படியொருபாடல் அதற்கு முன்னும் பின்னும் பிறந்திருக்கிறதா என்கிற ஐயம் எனக்கு உண்டு! பிரிவெனும் நெருப்பில் விழுகின்ற உள்ளங்கள் இரண்டும் இக்கரையில் ஒன்றும் அக்கரையில் ஒன்றுமாய் ஏக்கப்பெருமூச்சுடன் தூதுவிடும் படலம் நடக்கிறது! இடையே உள்ள நீர்ப்பரப்பு இருவருக்கும் சாதகமாக.. மனதின் துடிப்பையெல்லாம் வார்த்தைப் பூக்களாக்கி காற்றில்தவழவிடுகிறார்கள்!

    கர்நாடக ராகங்களின் அடிப்படையில் உருவான பாடல்கள் இவை என்பதால் காலங்களைத் தாண்டி இன்றும் மக்கள் மனதில் இடம்பெறும் தகுதியைப் பெறுகின்றன!

    kaviri1

    புரட்சித்தலைவரின் புகழுக்கு மகுடம்சூட்டிய படகோட்டி திரைப்படம் பார்க்கப் பார்க்க சலிக்காதது! பாடல்களும் கேட்கக் கேட்கத் திகட்டாதவை என்பதற்கு இப்பாடலும் சாட்சியாகும்!

    பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ
    துள்ளி வரும் வெள்ளலையே
    நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

    கொத்தும் கிளி இங்கிருக்க
    கோவைப் பழம் அங்கிருக்க
    தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
    தூது சொல்ல மாட்டாயோ
    தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
    தூது சொல்ல மாட்டாயோ

    இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
    இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
    இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
    ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
    ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே

    ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
    ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு

    மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
    பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
    மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
    மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே

    ஆசைக்கு ஆசை வச்சேன்
    நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
    ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

    வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
    ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
    ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
    நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
    நான் மட்டும் இங்கிருக்க …நான் மட்டும் இங்கிருக்க

    தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
    சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு

    பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
    சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 150

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    சுருங்கை வீதி வழியாகச் செல்லுதல்

    வேலி சூழ்ந்த காவல் காட்டுடன் பொருந்தி
    வளைந்த நீர்ப்பரப்புடைய அகழியின்கண்    akazhi
    பெரிய தும்பிக்கையுடைய யானைகள்
    போக்குவரத்து செய்வதற்கு வசதியாக அமைத்த
    சுருங்கையுடைய  வீதியைக் கடந்துபோய்

    மதில் வாயிலைக் கடந்து,  அகநகரின் எல்லையைச் சார்தல்

    அச்சம் விளைவிக்கும் மதில் வாயிலைக்
    காக்கும் தொழிலால் சிறப்புப் பெற்ற
    கொல்லும் தொழில் புரிகின்ற
    வாளைக் கையில் ஏந்திய யவனர் கண்படாது
    ஆயிரம் கண்களையுடைய இந்திரனின்
    பெறுவதற்கரிய அணிகலன்களை வைத்திருக்கின்ற
    பேழையின் வாய் திறந்தாற்போல விளங்கும்
    மதிலின் உள்ளே இருக்கும் அந்நகரின் எல்லைக்கண்

    டை கழி மகளிரின் பொழுது போக்கு, காலைப் பொழுதைக் கழித்தல்

    மேற்கிலிருந்து காற்று வீசுவதால்
    கொடிகள் அசைகின்ற மறுகின்கண் உள்ள
    பெண்டிர்க்கென்று வகுக்கப்பட்ட எல்லையைக் கடந்த
    பொது மகளிர்,
    தம்மீது காதல் கொண்ட செல்வந்தரான இளைஞர்களுடன்
    எப்போதும் இடைவிடாது நீர் வற்றாது காணப்படும்
    வைகை ஆற்றின் ஓங்கிய திருமருதத்துறையின் முன்
    விரிந்து பரந்து பொலிவுடன் விளங்குகின்ற
    ஆற்றிடைக்குறையின் வெண்மணல் உடைய
    அடைகரைக்கண் உயர்ந்த ஓடங்களோடு
    தோணிகளை ஏறிச் செலுத்தியும்
    பொலிவுபெற்ற தெப்பத்தில் நீந்திப்
    புனலாடுதலை விரும்பி…

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 63 – 75
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    http://tamilpandal.blogspot.in/2014/05/10.html

     

    Share
  • இருக்கின்றார் படமாக !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    பட்சணங்கள் பலசெய்வார்
    பக்குவமாய் ஊட்டிடுவார்
    நட்டநடு ராத்திரியில்
    நானழுதால் எழும்பிடுவார்!

    இஷ்டமுடன் எனையணைப்பார்
    எக்கணமும் எனைநினைப்பார்
    கஷ்டமின்றி நான்வளரக்
    காரணமாய் இருந்தாரே!

    அவர்மடியில் படுத்துவிடின்
    அரைநொடியில் தூங்கிடுவேன்
    அவர்முகத்தைப் பார்ப்பதிலே
    ஆனந்தம் அடைந்திடுவேன்!

    பள்ளிப் படிப்பறியார்
    பலவிஷயம் தானறிவார்
    வெள்ளை மனமுடையார்
    விபரமாய்ப் பேசிடுவார்!

    கள்ளமெலாம் செய்துவிடின்
    கடுங்கோபம் காட்டிடுவார்
    உள்ளமதில் அன்புடையார்
    ஊரார்க்கும் உதவிடுவார்!

    பல்லில்லா வாயாலே
    பலகதைகள் சொல்லிடுவார்
    நல்லநல்ல விஷயமெல்லாம்
    நயமாகப் புகட்டிடுவார்!

    கைதொட்டுப் பார்த்துவிடின்
    கழன்றுவிடும் நோயெல்லாம்
    கணநேரச் சிந்தனையில்
    கண்டிடுவார் அத்தனையும்!

    திருமுறைகள் பாடிடுவார்
    திருக்குறளும் கூறிடுவார்
    எவர்வரினும் வீட்டினுக்கு
    இன்முகமே காட்டிடுவார்!

    மனத்திலே துணிவுடையார்
    வள்ளல்குணம் மிகவுடையார்
    தனக்கெதுவும் சேர்த்துவையார்
    தன்பாட்டில் மகிழ்ந்துநிற்பார்!

    குடும்பமது குதூகலிக்கக்
    கொடிபிடிப்பார் பாட்டியம்மா
    குத்துவிளக் காயிருந்து
    குலம்விளங்கச் செய்துநிற்பார்!

    பண்டிகை வந்துவிடின்
    பாட்டிகாலில் விழுந்திடுவோம்
    பாட்டிதரும் ஆசியினால்
    பயனெல்லாம் வந்துநிற்கும்!

    பொங்கல்வந்து விட்டாலே
    பூரித்து நின்றிடுவார்
    பொக்கைவாய்ப் பாட்டிக்கு
    பொங்கிவிட்டால் ஆனந்தம்!

    பொங்கலிலே பாட்டிநின்றால்
    எங்குமே ஆனந்தம்
    எங்கள்பாட்டி இப்போது
    இருக்கின்றார் படமாக!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(54)

    -செண்பக ஜெகதீசன்

    நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்
    மண்மாண் புனைபாவை யற்று. (திருக்குறள்:407 – கல்லாமை)

     புதுக் கவிதையில்…

    அழகாய்ச் செய்தாலும்,
    மண்பொம்மை நிலைப்பதில்லை,
    பயனற்றது…

    ஆய்ந்தறியும்
    அறிவுக்கூர்மை இல்லாதவன்
    அழகும்
    மண்பொம்மை போன்றதே…!

    குறும்பாவில்…

    பயனற்றதுதான் அழகு,
    மண்பொம்மை மற்றும்
    மதிநுட்பம் இல்லாதவனிடமும்…!

    மரபுக் கவிதையில்…

    எண்ணக் கலவை பலசேர்த்தே
    எழிலுறு உருவில் படைத்தாலும்,
    மண்ணில் செய்த பொம்மையது
    மண்ணாய்ப் போகும் நிலைக்காதே,
    எண்ணிப் பார்த்ததை ஆராய்ந்தே
    எதையும் கல்லார் எழிலதுவும்
    மண்ணால் செய்த பொம்மையதன்
    மிகுந்த அழகை ஒப்பதன்றோ…!

    லிமரைக்கூ…

    மண்ணில் செய்த பொம்மையழகு வீண்,
    மதிநுட்பம் எதுவும் இல்லா
    கல்லார் அழகதிலும் பயனில்லை காண்…!

    கிராமிய பாணியில்…

    அழகுதான் அழகுதான்
    அழிஞ்சிபோவும் அழகுதான்,
    மண்ணுபொம்ம அழகுதான்
    மறஞ்சிபோவும் அழகுதான்
    மண்ணாப்போவும் அழகுதான்…

    படிக்கணும் படிக்கணும்
    ஆராஞ்சறிஞ்சி படிக்கணும்,
    அப்புடிப் படிக்காதவன்
    அழகுமண்ணு பொம்மதான்..

    அழகுதான் அழகுதான்
    அழிஞ்சிபோவும் அழகுதான்…!

     

    Share
  • ‘அவள்’

    தேவா

    வானத்தில் புள்ளிவைத்து – என்
    இதயத்தில்  கோலம் போட்டாய்,
    நிலவுப்பொட்டில் உன் முகம்!

     

     

    Share