-செண்பக ஜெகதீசன்

நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்
மண்மாண் புனைபாவை யற்று. (திருக்குறள்:407 – கல்லாமை)

 புதுக் கவிதையில்…

அழகாய்ச் செய்தாலும்,
மண்பொம்மை நிலைப்பதில்லை,
பயனற்றது…

ஆய்ந்தறியும்
அறிவுக்கூர்மை இல்லாதவன்
அழகும்
மண்பொம்மை போன்றதே…!

குறும்பாவில்…

பயனற்றதுதான் அழகு,
மண்பொம்மை மற்றும்
மதிநுட்பம் இல்லாதவனிடமும்…!

மரபுக் கவிதையில்…

எண்ணக் கலவை பலசேர்த்தே
எழிலுறு உருவில் படைத்தாலும்,
மண்ணில் செய்த பொம்மையது
மண்ணாய்ப் போகும் நிலைக்காதே,
எண்ணிப் பார்த்ததை ஆராய்ந்தே
எதையும் கல்லார் எழிலதுவும்
மண்ணால் செய்த பொம்மையதன்
மிகுந்த அழகை ஒப்பதன்றோ…!

லிமரைக்கூ…

மண்ணில் செய்த பொம்மையழகு வீண்,
மதிநுட்பம் எதுவும் இல்லா
கல்லார் அழகதிலும் பயனில்லை காண்…!

கிராமிய பாணியில்…

அழகுதான் அழகுதான்
அழிஞ்சிபோவும் அழகுதான்,
மண்ணுபொம்ம அழகுதான்
மறஞ்சிபோவும் அழகுதான்
மண்ணாப்போவும் அழகுதான்…

படிக்கணும் படிக்கணும்
ஆராஞ்சறிஞ்சி படிக்கணும்,
அப்புடிப் படிக்காதவன்
அழகுமண்ணு பொம்மதான்..

அழகுதான் அழகுதான்
அழிஞ்சிபோவும் அழகுதான்…!

 

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(54)

  1. அழகைவிட அறிவே சிறந்தது என்பதை சொல்லும் குறள்.
    அதனை குறளரசர் தன் பானியில் அழகாய் சொல்லியுள்ளார்.

  2. அன்பு நண்பர் அமீர் அவர்களின் கருத்துரைக்கு
    மிக்க நன்றி..
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க