-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

பட்சணங்கள் பலசெய்வார்
பக்குவமாய் ஊட்டிடுவார்
நட்டநடு ராத்திரியில்
நானழுதால் எழும்பிடுவார்!

இஷ்டமுடன் எனையணைப்பார்
எக்கணமும் எனைநினைப்பார்
கஷ்டமின்றி நான்வளரக்
காரணமாய் இருந்தாரே!

அவர்மடியில் படுத்துவிடின்
அரைநொடியில் தூங்கிடுவேன்
அவர்முகத்தைப் பார்ப்பதிலே
ஆனந்தம் அடைந்திடுவேன்!

பள்ளிப் படிப்பறியார்
பலவிஷயம் தானறிவார்
வெள்ளை மனமுடையார்
விபரமாய்ப் பேசிடுவார்!

கள்ளமெலாம் செய்துவிடின்
கடுங்கோபம் காட்டிடுவார்
உள்ளமதில் அன்புடையார்
ஊரார்க்கும் உதவிடுவார்!

பல்லில்லா வாயாலே
பலகதைகள் சொல்லிடுவார்
நல்லநல்ல விஷயமெல்லாம்
நயமாகப் புகட்டிடுவார்!

கைதொட்டுப் பார்த்துவிடின்
கழன்றுவிடும் நோயெல்லாம்
கணநேரச் சிந்தனையில்
கண்டிடுவார் அத்தனையும்!

திருமுறைகள் பாடிடுவார்
திருக்குறளும் கூறிடுவார்
எவர்வரினும் வீட்டினுக்கு
இன்முகமே காட்டிடுவார்!

மனத்திலே துணிவுடையார்
வள்ளல்குணம் மிகவுடையார்
தனக்கெதுவும் சேர்த்துவையார்
தன்பாட்டில் மகிழ்ந்துநிற்பார்!

குடும்பமது குதூகலிக்கக்
கொடிபிடிப்பார் பாட்டியம்மா
குத்துவிளக் காயிருந்து
குலம்விளங்கச் செய்துநிற்பார்!

பண்டிகை வந்துவிடின்
பாட்டிகாலில் விழுந்திடுவோம்
பாட்டிதரும் ஆசியினால்
பயனெல்லாம் வந்துநிற்கும்!

பொங்கல்வந்து விட்டாலே
பூரித்து நின்றிடுவார்
பொக்கைவாய்ப் பாட்டிக்கு
பொங்கிவிட்டால் ஆனந்தம்!

பொங்கலிலே பாட்டிநின்றால்
எங்குமே ஆனந்தம்
எங்கள்பாட்டி இப்போது
இருக்கின்றார் படமாக!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இருக்கின்றார் படமாக !

  1. பார்க்கின்ற பக்கங்கள் எல்லாம்
    நெஞ்சப் பதிவுகளாய் மாறும்!
    கனக்கின்ற மனதோடு அந்த
    நினைவுகளில் மனமங்கு நீந்தும்!
    அன்பாலே ஆர்ப்பரித்த அவளை..
    தன்பிள்ளையின் பிள்ளையைக் கொஞ்சிய அவளை..
    முத்துநவரத்தினமே என்று தாலாட்டிய அவளை..
    அன்னையைக் காட்டிலும் அன்பைப் பொழிந்தவளை..
    இன்னுமின்னும் எண்ணுகிறதே நெஞ்சம்!!
    பண்பிலே பாசத்திலே பரிவட்டம்கட்டிய பாட்டி..
    கண்துயிலாமல் தோளில் தூக்கிவளர்த்த பாட்டி..
    என்பேரன்.. என்பேத்தி என்று மகிழ்ந்த பாட்டி..
    இன்று வீட்டுச்சுவற்றில் படமாய்..
    நல்லதோர் நினைவதை நயமிகுவரிகளால்
    மீட்டியது உம்கவிதை.. நன்றி! நன்றி!!
    அன்புடன்
    காவிரிமைந்தன்

  2. எளிய சொற்கள். இனிய நடை. படிப்பவர் கண்களைப் பனிக்க வைக்கும்.படைப்பு. அருமை. கே.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.