–நாகேஸ்வரி அண்ணாமலை

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து மஹாசபா போன்ற இந்துத்துவவாதக் கட்சிகள் தங்கள் கொள்கைகளையும் அதன் மூலம் செயல்களையும் மக்களிடையே பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மொகலாய மன்னர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னும் பிரிட்டிஷ் காலனீயவாதிகள் இந்தியாவை ஆள ஆரம்பிப்பதற்கு முன்னும் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த எல்லோரும் இந்துக்களே எனவும், அதனால் இப்போது அவர்கள் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டும் என்று சொல்லி அப்பாவி மக்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றுகிறார்கள். குடிமக்கள் எல்லோருக்கும் பிரதம மந்திரியான மோதி இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

ஆர்.எஸ்.எஸ். கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் இந்தியக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இந்துக் கலாச்சாரமாகவும் பாரம்பரியமாகவும் எடுத்துக்கொண்டு அவற்றைக் காப்பதாகக் கூறிக்கொண்டு இளைஞர்கள் மனதை தங்கள் கொள்கைகளின் பக்கம் திருப்ப முயன்று வருகிறார்கள். இதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மோதியின் மௌனம் இவற்றையெல்லாம் அவர் ஆமோதிக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

Nathuram Godseஎல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல் இப்போது தேசத்தந்தை காந்திஜியைக் கொன்ற கோட்ஸேக்கு இந்து மஹாசபை மீரட்டில் கோவில் கட்ட முடிவுசெய்திருக்கிறது.

காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி இந்த ஆண்டோடு நூறு ஆண்டுகள் ஆகின்றன. இதை நினைவுபடுத்தி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவந்த தலையங்கத்தின் ஒரு பகுதியைக் கீழே கொடுக்கிறேன்.

“காந்தி இல்லாமல் இருந்திருந்தாலும் சரி, காந்தி இந்தியாவுக்குத் திரும்பாமல் இருந்திருந்தாலும் சரி இந்தியாவுக்கு எப்படியும் சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று காந்தியின் விமர்சகர்கள் ஒரு கருத்தை வழக்கமாகச் சொல்வார்கள். அது உண்மைதான். காந்தி இல்லாமலும் சுதந்திரம் கிடைத்திருக்கும். ஆனால், இந்த அளவு மாண்புடனும் உலக மக்களின் நன்மதிப்புடனும் அந்தச் சுதந்திரம் ஈட்டப்பட்டிருக்குமா? ஆங்கிலேயர் மீதான வெறுப்பைப் பெரும் நெருப்பாக வளர்த்து சுதந்திரத்தை வென்றெடுக்காமல் அவர்களை நண்பர்களாகவே வழியனுப்பியது இந்தியச் சுதந்திரம். முன்னுதாரணமற்ற நிகழ்வு அது. அது மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு போராட்டங்களுக்கும் அதுவே முன்மாதிரி.”

Nathuram Godse2சரித்திரம் காணாத ஒரு மாபெரும் ஞானியைக் கொலைசெய்த ஒரு பாதகனுக்கு கோவில் கட்ட முடிவெடுத்திருக்கும் செயல் காந்திஜியைப் போற்றுபவர்கள் எல்லோரையும் வெகுண்டெழச் செய்திருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகள் எத்தனையோ பேர் இருக்க காந்திஜிதான் தேசத்தந்தை என்று போற்றப்படுகிறார். அஹிம்ஸை என்ற ஆயுதத்தைக் கொண்டு பிரமாண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வென்ற அவரை உலகமே போற்றுகிறது. இத்தகைய மாமனிதருக்கும் சில எதிரிகள் இருந்தனர். இவர்கள் காந்திஜி பாகிஸ்தானுக்கு – முஸ்லீம்களுக்கு – சாதகமாக நடந்துகொண்டார் என்று நினைத்து அவரை அரசியலிலிருந்தே வெளியேற்ற நினைத்தனர். அவர்களில் ஒருவன்தான் கோட்ஸே. இவனுக்குப் பின் ஒரு இந்துத்துவவாதக் கூட்டமே இருந்தது. காந்திஜியைத் தடுத்து நிறுத்தத் தன்னால் சட்ட முறைகளைக் கையாண்டிருக்க முடியாது என்பதால் அவரைக் கொலைசெய்ததாகத் தன் வாக்குமூலத்தில் கோட்ஸே கூறியிருக்கிறான். ஆனால் இந்திய அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரை கோட்ஸே ஒரு கொலைகாரன். அதனால்தான் தூக்கிலிடப்பட்டான்.

வன்முறை இல்லாமல் எந்த சக்தியையும் வெல்லலாம் என்று உலகத்திற்கெல்லாம் நிரூபித்தவர் காந்திஜி. காந்திஜியை உலகுக்குத் தந்த நாடு என்ற முறையில் இந்தியா பெருமை பெற்றிருக்கிறது. உலகின் பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இப்படிப்பட்ட உலகம் போற்றும் மாமனிதரைக் கொன்றவனுக்கு கோவில் கட்டி இந்தியாவிற்கே களங்கம் தேடித் தர சிலர் முயல்கிறார்கள்.

Nathuram Godse3இந்தியாவை உலக அரங்கில் முதன்மை இடத்தில் வைக்கப் போவதாகப் பறைசாற்றிக்கொள்ளும் பா.ஜ.க. இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்து இந்தியாவுக்கு ஏற்படப் போகும் களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டமா? மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க.வினர் தங்களுக்கும் கோவில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? மோதி முதல் முதல் பாராளுமன்றத்தில் பிரதமராக நுழைந்து அலுவல்களைத் தொடங்கியபோது காந்திஜியின் சிலையை வணங்கிவிட்டுப் போனார். அமெரிக்காவுக்கு வந்தபோது அமெரிக்க ஜனாதிபதிக்கு காந்திஜி எழுதிய பகவத் கீதை விளக்கப் புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் காந்திஜி சிலையை வணங்கினார். இதெல்லாம் வெறும் நாடகமா? ஒரு பக்கம் காந்திஜியை மதிப்பதாகக் காட்டிக்கொண்டு இன்னொரு பக்கம் காந்திஜியைக் கொன்றவனுக்கு கோவில் கட்டும் முயற்சியை கண்டும் காணாதது போல் இருப்பது நாட்டிலுள்ள அனைவரின் நலன்களையும் காப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு பிரதமருக்கு அழகா? ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களுக்குள்ளேயே இந்தியாவை இந்துத்துவ நாடாக ஆக்க முயல்பவர்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதும் இந்துத்துவவாதத்தை முழுமையாக எதிர்த்த தேசத் தந்தை காந்திஜியைக் கொன்றவனுக்குக் கோவில் கட்டுவதைத் தடுத்து நிறுத்தாமலும் இருக்கும் மோதியையும் அவரது கூட்டத்தினரையும் உலகம் மன்னிக்காது.

ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு மாணவன், ‘நீங்கள் யாரோடு உணவு உண்ண விரும்புகிறீர்கள்? அப்படி நீங்கள் விரும்புபவர் உயிரோடு இருப்பவரானாலும் சரி, இறந்துவிட்டவரானாலும் சரி’ என்று கேட்ட கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கொஞ்சமும் தயங்காமல், ‘காந்திஜியோடு’ என்று சொன்னார். அவருக்கு காந்திஜி மேல் மிகுந்த மரியாதை உண்டு. அவர் அப்படி மரியாதை செலுத்திய காந்திஜியை கொன்றவனுக்குக் கோவில் எழுப்புபவர்களையும் அதைத் தடுத்து நிறுத்தாமல் தங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறும் பா.ஜ.க. அரசையும் பற்றி என்ன நினைப்பார்?

Photo courtesy:

http://timesofindia.indiatimes.com/india/Hindu-Mahasabha-plans-bike-rally-for-Nathuram-Godse/articleshow/45786327.cms
http://keralasnostalgia.blogspot.com/2012/09/nathuram-godse-before-assassinating-mr.html
http://www.prmoment.in/1671/modi-appropriates-mahatma-gandhi-and-revives-a-discarded-political-brand.aspx

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கொலைகாரனுக்கு ஒரு கோவில்

  1. இந்திய அரசியல்வாதிகளிக்கு காந்தியைப்பற்றி சொல்லித்தெரிய வேண்டியா உள்ளது. யாவரும் அந்த மகாத்மாவைப்பற்றி நன்கு அறிவர். இப்போது நடப்பதெல்லாம் தங்களை ஆதரிக்கும் ஓட்டுவங்கியை தக்கவைத்துக்கொள்ள நடக்கும் நாடகம்.

    அகிம்சையை கையில் எடுத்தால் வல்ல சாம்ராஜ்ஜியத்தேயே வீழ்த்தலாம் என்பது காந்தி கையாண்டது. இந்துத்வாவை கையில் எடுத்தால் ஆட்சி அமைக்கலாம் என்பது இன்றைய அரசியல்வாதிகள் கையாள்வது.

    கோட்சேவுக்கு கோயில் கட்டுவதால் ,கட்டுபவர்களின் பெயரோ பகழோ ஓங்கப்போவதில்லை. காந்தியின் பெயரோ புகழோ தாழ்ந்திடப்போவதில்லை.

    ஈசல்கள் மோதி
    இரும்புக்கோட்டை
    இடிந்துவிடுமா என்ன?

  2. நன்றாகச் சொன்னீர்கள் அமீர் ஈசல்கள் மோதி இரும்புக்கோட்டை இடிந்துவிடுமா என்ன? என்று. நெஞ்சின் பாரம் கொஞ்சம் குறைந்தது. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *