–விசாலம்

மார்கழி மாதப்பனி விலகிவிடும் காலம் வந்துவிட்டது. அதாவது தட்சியாயணக்காலம் முடிந்து உத்தராயணக்காலம் ஆரம்பமாகும் காலம். இன்னும் விளக்கமாகச் சொன்னால் சூரியன் தனுர் ராசியிலிருந்து நகர்ந்து மகர ராசிக்குப் பெயரும் நேரம். இதனால் தான் சபரிமலையில் வரும் ஜோதியை மகர ஜோதி என்கிறார்கள். மேலும் இந்நாளை மகரசங்கராந்தி என்றும் அழைப்பார்கள். அன்று சூரியனுக்கு பொங்கல் பிரசாதம் படைத்து நன்றியைத்தெரிவிக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருக்கிறது. பொங்கிவரும் பாலும், அரிசியைப்பொங்குவதாலும் ‘பொங்கல்’ என்ற பெயருடன் திருவிழா ஆனது.

Makar-Sankranti-2015-Dates-810x405
இந்நாளில் ஆதவனை ஆராதிக்கும் மந்திரம்

ஓம் மித்ராய நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்நே நம:
ஓம் ஹிரண்யகர்பாய நம:
ஓம் மரீசயே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

“ஆதித்யஸ்ய நமஸ்காரான் யே குர்வன்ந்தி தினே தினே ஜனமாந்தர சஹஸ்ரேஷு தாரித்ர்யம் நைவ ஜாயதே” என்று சொல்வது வழக்கம். தினமும் நமஸ்கரித்தால் தரித்திரம் அகன்று செல்வ செழிப்பு ஏற்படும். நல்ல தேக ஆரோக்கியமும் உண்டாகும். கண்கள் பிரகாசமாக விளங்கும் கண்களில் பிரச்சனை அகலும் என்று வேதம் கூறுகிறது. பூவுலகில் சகல அண்டசராசரங்களுக்கும் தேவை இந்த சூரிய ஒளி. சூரிய சக்தி இல்லையேல் வாழ்வுமில்லை. ஆதலால் சூரியனுக்கு நன்றி செலுத்துவதே நமது தலையாயக் கடமை. இதுவே பொங்கல் திருநாள். இதுவே தை மாதப்பிறப்பு.

வருடத்தில் 12 சங்கராந்திகள் வருகின்றன அவைகளிப்பற்றி ஒரு பண்டித் ஜி விளக்கினார். அதை இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன் …

சூரியன் மகரராசியில் பிரவேசிக்க அது “மகர சங்கராந்தி” என்று பார்த்தோம். இது தேவர்களுக்கு முஹூர்த்த நேரமான விடியல் காலம். 12 சங்கராந்திகளில் இது மிகவும் முக்கியமாகக்கருத்தப்படுகிறது. பித்ருக்களின் ஆசிகள் நமக்கு கிடைக்கின்றன.

சூரியன் மகரத்தின் அடுத்த ராசியான கும்பத்திற்குச் செல்லும்போது மாசி மாதம் பிறக்கும். இதை “லவண சங்கராந்தி” என்பார்கள். இந்த நேரத்தில் சூரிய பூஜை செய்வதன் பலன் மோக்ஷபிராப்தி. இந்த மாதம் உபநயனத்திற்கு சிறந்த மாதம் என்கின்றனர்.

சூரியன் மீனராசிக்குச் செல்லும் போது பங்குனி மாதம் பிறக்கும் இதை “போக சங்கராந்தி” என்கின்றனர். இந்த மாதம் ஆரம்பத்திலும் முடிவிலும் சூரியவணக்கம் செலுத்தி கோதானம், தான்ய தானம் செய்ய வாழ்க்கையில் சுபீக்ஷம் உண்டாகி நன்மை ஏற்படும்.

சித்திரை மாதம் சூரியன் மீனத்திலிருந்து மேஷராசிக்கு போகிறார். இந்த மாதம் சூரியனை வணங்கி பூஜித்து தான்யங்களை தானம் செய்ய ஆயிரம் அக்னிஹோத்திரம் செய்த பலனை அடைவார்கள். சித்திரை மாத முதல் தேதியை வருடப்பிறப் பென்றும் “மேஷ சங்கராந்தி”, சித்திரை விஷு என்றும் சொல்வர்.

வைகாசி மாதம் ஆதவன் ரிஷபத்திற்குச்செல்ல இந்நாளை “தாம்பூலசங்கராந்தி” என்ற பெயர் பெறுகிறது. இன்றைய தினம் தம்பதி பூஜை செய்து தாம்பூலம் அளிக்க பாபம் கழிந்து புண்ணியம் கிடைக்கும்.

“மனோஹர சங்கராந்தி” என்பது ஆனிமாதம் வருகிறது. இந்நேரம் சூரியன் மிதுனத்தில் நுழைகிறார். சூரிய பூஜை வெல்லம் நிவேதனத்துடன் செய்ய ஆசைகள் பூர்த்தியாகும்.

பின் வரும் ஆடிமாதம் சூரியன் மிதுனத்திலிருந்து கடகத்திற்கு வருகிறார். இதை “அசோக சங்கராந்தி” என்கின்றனர், இதுவே விஸ்வத் புண்யகாலம்.

சூரியன் சிம்ம ராசியில் நுழையும் போது ஆவணி மாதம் பிறக்கிறது. இதை “ரூப சங்கராந்தி” என்கின்றனர். இந்த நாளில் பொன் பாத்திரத்தில் நெய் வார்த்து பிராம்மணர்களுக்குத் தானம் செய்ய நோய்கள் அண்டாது.

புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதை “தேஜ சங்கராந்தி” என்கின்றனர். இன்று செந்நெல்அரிசியைப்பரப்பி கலசம் வைத்து கொழுக்கட்டை போன்ற நைவேத்தியங்கள் படைத்து வேதியர்களுக்கு போஜனம் அளிக்க வேண்டும்.

சூரியன் துலா ராசியில் நுழையும் போது ஐப்பசி மாதம் பிறக்கிறது. இதன் பெயர் “ஆயுள் சங்கராந்தி”. ஒரு கும்பத்தில் பசும்பால் வெண்ணெய் நிரப்பி பூஜை செய்து தானம் கொடுக்க ஆயுள் அதிகரிக்கும்.

விருச்சிக ராசியில் சூரியன் பிரவேசிக்க “சௌபாக்கிய சங்கராந்தி” பிறக்கிறது அதாவது கார்த்திகை மாதம். சூரியனுக்கு வஸ்திரம் சார்த்தி பூஜை செய்து வஸ்திரம் ,உப்பு தானம் செய்ய சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

மார்கழியில் சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கிறார். இதை “தனுஷ் சங்கராந்தி” என அழைக்கின்றனர். இந்த வேளையில் ஒரு தீர்த்த கலசம் எடுத்து பூஜை செய்து அன்ன தானம் செய்ய நினைத்த காரியங்களில் ஜெயம்.

பொதுவாகவே இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது, ஆனால் இடத்திற்கு இடம் சற்று மாறுபடுகிறது. வட இந்தியாவில் எள்ளுருண்டை, கடலை உருண்டை என்பது அதிகமாக விற்பனைக்கு வரும். மிகவும் குளிர் பாதிக்குமானதால் வெல்லம் கலந்த இந்த பணியாரம் உடலுக்கு சூட்டைக்கொடுத்து உதவும். தில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேஷ் போன்ற இடங்களிலும் இது போன்று சிக்கி என்று சொல்லப்படும் வெல்ல மிட்டாய் அதிகமாகக்காணலாம். இதில் எள், நிலக்கடலை, பொட்டுக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு, பாதாம் எல்லாம் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும். குளிர் முடியும் வரை இதைப்பலர் வாங்குவார்கள். நமது போகிப்பண்டிகை அவர்களது “லோடிப் பண்டிகை”. லோதி என்றும் சொல்வார்கள். பெயர் தான் மாறி இருக்கிறதே தவிர மற்றபடி கோயில் போவது, மாலையில் எரிப்பது எல்லாம் ஒன்றுதான். ஆனால் லோடி பண்டிகையில் பழைய மரக்கிளைகள், உடைந்த பலகைகள், அட்டைக்கள் என்று சேர்த்து ஒரு எட்டுஅடி வரை உயர்ந்ததும் அதை எரிப்பார்கள்.

சென்னையில் வீட்டிலிருக்கும் குப்பை, பிளாஸ்டிக் குப்பைகள் என்று எல்லாமே சேர்த்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிப்பு நிறையவே இருக்கிறது. அத்தோடு இதுவும் சேர விசேஷம் தான்! பஞ்சாபி சர்தார்ஜி இதைக்கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள் என்றால் அந்தக்குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அர்த்தம். இந்தக்காலத்திலும் சர்தார்ஜி பஞ்சாபி குடும்பத்தில் ஆண் என்றால் ஸ்பெஷல்தான். ஆணுக்குப் பல சலுகைகளும் கிடைக்கும். அவர்கள் வீட்டில் பெண் குழந்தை பிறந்திருந்தால் சற்று சுமாராகத்தான் இந்த “லோடி” நடக்கும். பெயரளவுக்கு ஏதோ செய்து முடித்துவிடுவார்கள். பாப்கார்ன் என்ற சோளப்பொரியை இந்த அக்னியில் வீசி எறிவார்கள். அக்னியைச்சுற்றி பங்க்டா நடனம் மிகப்பிரமாதமாக நடப்பெறும். பார்க்கப்பார்க்க நம்மையும் குதிக்க வைக்கும்.

பொங்கல் என்று எடுத்துக்கொண்டால் நம் முன் தோன்றுவது சூரியன்தான். கதிரவனின் மகிமைகளைச் சொல்லி மாளாது. நாம் தினமும் அவரைப்பார்க்கிறோம். இயற்கை அளிக்கும் தானியங்கள், காய்கனிகள் எல்லாமே சூரியனின் பலத்தினால் தான் விளைகின்றன. சூரியனைப்பற்றிப் பாடாத மகான்கள் இல்லை. இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரப்படைப்பில் முதன் வரியாக சூரியனை ஆராதிக்கிறார், “ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றுதும்” என்று ஆரம்பிக்கிறது.

இதே போல் தமிழ்க்கடவுள் அழகன் எனும் முருகப்பெருமானுக்காக பாடிய பாடலில் திரு அருணகிரிநாதர் சீர்பாதவகுப்பு எனும் பாகத்தில் முதல் பாடலாக சூரியனை வர்ணிக்கிறார். சூரியனை அவர் ஏழுபரிரதத்து ரவி எனவும் சிவப்பு, பச்சை, ஊதா, நீலம் என்று ஏழு நிறக்குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஆதவன் வலம் வந்து அருள் பாலிக்கிறான் என்கிறார்.
“உததியிடை கடவும்மர கதவருண குலதுரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயம் என அதிகவித கலபகக மயிலின் மிசை
யுகமுடிவின் இருள் அகல ஒரு ஜோதி வீசுவதும் ” என பாடல் வர்ணனை செய்கிறது.

விஞ்ஞானத்திலும் சூரிய சக்தியை “ஸோலார் பவர்” என்றும் “எனர்ஜி” என்றும் விவரித்து அதைப்பற்றி உயர்வாகக்கூறப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ ராமர் ராவணனை வெல்ல திரு அகத்திய முனிவர் அளித்த மந்திரம் தான் “ஆதித்ய ஹிருதயம்”. இதில் முழுவதும் ஆதவனை வணங்கும் ஸ்லோகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன் பலன்களும் தெரிய வருகிறது. கண்கள் கெட்டிருந்தால் இதைப்படிப்பது ஒரு நல்ல பரிகாரம்.

சூரிய தேவருக்கு உரிய மற்றொரு மந்திரம் “காயத்ரி மந்திரம்”. உபநயனத்தில் இந்த காயத்ரி மந்திரம் தான் பிரதானம். சூரியனுக்கு உரிய மந்திரம் இந்த காயத்ரி மந்திரம். காயத்ரி மந்திரத்தில் சூரிய காயத்ரி, ருத்ர காயத்ரி, தேவி காயத்ரி, விஷ்ணு காயத்ரி என்றும் பிரிவுகளும் உண்டு. இதில் சூரிய காயத்ரிதான் மிகவும் முதன்மையானது.

“ஓம் பூர்புவஸ்ஸுவ: தத் ஸவிதுவரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன பிரசோயதாத்”

இதையே தான் பாரதியாரும் தன் பாஞ்சாலி சபதத்தில் “செங்கதிர் தேவன், சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என ஸ்ருதி மொழி காயத்ரியைச் சொல்கிறார்.

யார் நம்முடைய அறிவைத் தூண்டுகிறாரோ அந்தச்சூரியபகவானின் மேலான ஒளியைத் தியானிப்போமாக, என்பதே காயத்ரியின் பொருளாகக் கொள்ளலாம். விஸ்வாமித்ர ரிஷி அருளியதாக இதைக்குறிப்பிடுகிறார்கள். விசுவாமித்திரர் க்ஷத்ரிய வம்சத்தில் பிறந்தாலும் விடாது தவம் செய்து தவவலிமைப்பெற்று பின் அந்தணர் ஆனார். மஹரிஷி பட்டமும் அவருக்கு உணடு. அவரே காயத்ரி மந்திரத்திற்கு ஆசாரியர். கீதையில் “மந்திரத்தில் நான் காயத்ரியாக இருக்கிறேன்” என்கிறான் கண்ணன், அத்தனைச்சிறப்புஇந்த காயத்ரிக்கு !

சூரிய காயத்ரி
“ஒம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய: ப்ரசோயதாத்”

இதை 108 தடவை மகர சங்கராந்தி அன்று சொல்லி வழிபடுவதன் பலன் சொல்லி மிகையாகாது.

தொல்காப்பியமும் சூரிய இந்திர வழிப்பாட்டைவர்ணிக்கிறது
“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடு நீங்கு இறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”

மஹாகவி பாரதியாரும் சூரியனைப்பற்றி பாடியிருக்கிறார். காலை வேளையில் பாடும் ராகமான பூபாளத்தில் பாடல் மிகவும் அருமை.

“பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
பானுவே பொன் செய் பேரொளித்திறனே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன் ,
கதிர் கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

வேதம் பாடிய சோதியைக் கண்டு,
வேள்விப்பாடல்கள் பாடுதற்குற்றேன்.
நாத வார் கடலினொலியோடு
நற்ற மிழிச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்.

காதமாயிரம் ஓர் கணத்துள்ளே,
சுருதியோடும் கதிரியைப் பாடி,
ஆதவா நினை வாழ்த்திட வந்தேன்
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

ஆதித்தாய் தந்தை நீவீர் உமக்கே
ஆயிரந்தரம் அஞ்சலி செய்வேன். “

அன்பர்கள் யாவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்,
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

Photo courtesy:
http://indianastrology.co.in/977-makar-sankranti-2015-dates-kumbh-mela-2015-lohri-pongal-2015/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.