Blog

  • தன்கர் எங்கே? & முகிலன் எங்கே?

    தன்கர் எங்கே? & முகிலன் எங்கே?

    அண்ணாகண்ணன்

    குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரைக் காணவில்லை. பதவி விலகிய பிறகு அவர் இருக்கும் இடமே தெரியவில்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என ஐயம் எழுப்புகிறார்கள். தன்கர் எங்கே என முழங்கி வருகிறார்கள்.

    தன்கரைக் காணவில்லை என அவரைச் சார்ந்தவர்கள், குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டும் இதை ஊதிப் பெரிதாக்கி வருகின்றன.

    இதே போன்ற முழக்கத்தை எங்கோ பார்த்திருக்கிறோமே என யோசித்த போது, எங்கே முகிலன் நினைவுக்கு வந்தது. முகிலன், ஸ்டெர்லைட், கூடங்குளம், காவிரி மணல்கொள்ளை போன்றவற்றுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் பங்கேற்றார். திடீர்ப் போராளியாகப் பல கூட்டங்களில் தோன்றினார்.

    2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று இரவு முதல் முகிலனைக் காணவில்லை எனத் திமுக தரப்பில் பலரும் எழுதினார்கள். எங்கே முகிலன், முகிலன் எங்கே போன்ற ஹேஷ்-டாக்குகளில் பலரும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்கள். தோழர் எங்கே? கடத்தப்பட்டாரா? கொல்லப்பட்டாரா? எனப் பலவிதமான கோணங்களில் அலசினார்கள். காணாமல் போய் இன்று இத்தனாவது நாள் என ஒவ்வொரு நாளும் பதற்றத்தை ஏற்றினார்கள். கொட்டை எழுத்துகளில் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. அப்போது இருந்த அதிமுக அரசின் மீதும் காவல் துறை மீதும் ஐயம் எழுப்பினார்கள். அரசுக்கு எதிரான அலையை எழுப்பியதில் இந்த எங்கே முகிலன் என்ற பரப்புரைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

    தேர்தல் முடிந்து, மே 23 அன்று முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களைத் திமுக கூட்டணி வென்றது.

    முகிலன் காணாமல் போனது குறித்து, பிபிசி வெளியிட்டுள்ள செய்தியின் ஒரு பகுதி இங்கே.

    மனித உரிமைச் செயல்பாட்டாளரான ஹென்றி திபேன், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர், முகிலனைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கைத் தமிழக காவல் துறையின் சிபிசிஐடி பிரிவு விசாரித்து வந்தது.

    இந்த வழக்கு ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதியன்று திருப்பதி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டுக்கொண்டிருந்த முகிலனை ஆந்திரக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் அன்று இரவே தமிழக சிபிசிஐடி காவல் துறையினரிடம் முகிலனை ஒப்படைத்தனர்.

    ஜூலை 7ஆம் தேதியன்று சென்னை சிபிசிஐடி வளாகத்தில் முகிலன் வைக்கப்பட்டிருந்தபோது, அவரது மனைவி, வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் உள்ளிட்டோர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், முகிலன் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 417, 376ன் கீழ் கைது செய்யப்பட்டார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முகிலன் கைது செய்யப்பட்டார்.

    முகிலன் காணாமல் போனவுடன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த வழக்கறிஞரான சுதா ராமலிங்கம், சென்னையில் போலீஸ் காவலில் இருந்தபோது சென்று சந்தித்தார். “அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை. நன்றி என்று மட்டும் கூறினார். இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. மாஜிஸ்ட்ரேட்டிம் சொல்வதாகக் கூறினார். அதற்குப் பிறகு நான் வலியுறுத்தவில்லை” என்கிறார் சுதா ராமலிங்கம்.

    இன்று திரும்பிப் பார்க்கும்போது, மொத்த முகிலன் அத்தியாயமும், ஒரு நாடகமாகவே தெரிகிறது. ஒருவரைப் பல இடங்களில் போராளியாக முன்னிறுத்தினர். அவரைக் கொண்டே தூத்துக்குடி துப்பாக்கிச் சுடுதல் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிடச் செய்தனர். அன்று இரவே அவரைக் காணவில்லை எனப் பதறினர். அரசுக்கு எதிராகப் பெரிய அளவில் பரப்புரை செய்தனர். தேர்தல் முடிந்து 45 நாள்களுக்குப் பிறகு எந்தச் சிக்கலும் இல்லாமல் அவராகவே வெளியே வந்தார்.

    இந்தப் பின்னணியை வைத்துப் பார்க்கிற போது, ஜெகதீப் தன்கரைக் காணவில்லை என்பதும் ஒரு நாடகமாகவே தெரிகிறது. ஒரே வித்தியாசம், இது தேசிய அளவிலான பரப்புரையின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. இது, 2026 தேர்தலுக்கான செயல் திட்டமா என்பது, போகப் போகத் தெரியும்.

    Share
  • கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !

    கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எண்ணாய் இருப்பான் எழுத்தாய் இருப்பான்
    கண்ணாய் இருப்பான் மணியாய் இருப்பான்
    உண்ணும் உணவாய் பருகும் நீராய்
    எல்லாம் ஆகி இருப்பான் கண்ணன்

    கடலாய் இருப்பான் அலையாய் எழுவான்
    முகிலாய் இருப்பான் மழையாய் பொழிவான்
    வயலாய் இருப்பான் பயிராய் இருப்பான்
    வளமாய்க் கண்ணன் நிறைந்தே இருப்பான்

    ஆக்கும் சக்தியாய் அழிக்கும் சக்தியாய்
    காக்கும் சக்தியாய் கண்ணன் இருப்பான்
    நோக்கும் இடமெலாம் இருப்பான் கண்ணன்
    வாக்கும் கண்ணனே வரமும் கண்ணனே

    எல்லாச் சுவையிலும் இருப்பான் கண்ணன்
    கண்ணன் இல்லாச் சுவையே இல்லை
    பாலும் அவனே தேனும் அவனே
    பழத்தின் சுவையாய் இருப்பவன் அவனே

    பிறப்பைக் கொடுப்பான் இறப்பைக் கொடுப்பான்
    பிறவிப் பிணியை நீக்கவும் செய்வான்
    அறத்தை மறந்தால் அழிக்கவும் செய்வான்
    அன்பைக் காட்டி அணைத்துமே நிற்பான்

    அன்பாய் அழைத்தால் அருகில் வருவான்
    அமைதி தருவான் ஆறுதல் அளிப்பான்
    ஆணவம் கொண்டால் ஆத்திரம் அடைவான்
    அவனே ஆசான் அவனே அரசன்

    நல்வழி காட்டும் நண்பனும் ஆவான்
    நயமுடன் உரைக்கும் நாயகன் அவனே
    தொல்லை கொடுத்தால் புகட்டுவான் பாடம்
    தூய்மையாம் மனத்தில் துயிலுவான் கண்ணன்

    இசையும் அவனே இலக்கியம் அவனே
    இங்கிதம் அவனே சங்கீதம் அவனே
    அசையும் பொருளும் அசையாப் பொருளும்
    அனைத்தும் கண்ணன் இருப்பிடம் ஆகும்

    கண்ணனே பரம்பொருள் கண்ணனே அனைத்தும்
    கண்ணனே அனைத்துமாய் ஆகியே இருக்கிறான்
    பூதல மாந்தர் புனிதமாய் இருக்க
    கீதையை ஈந்ததும் கண்ணனே ஆவான்

    கீதை என்பது வேதமே ஆகும்
    கீதையைப் படித்தால் கீழ்க்குணம் அகலும்
    கீதையில் இல்லா வழிமுறை இல்லை
    கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம்

    Share
  • நீதிமன்ற வழக்குச் சுருக்கம் – ஒரு யோசனை

    நீதிமன்ற வழக்குச் சுருக்கம் – ஒரு யோசனை

    அண்ணாகண்ணன்

    ஒவ்வொரு நீதிமன்றத்திலும் முடிவுற்ற, ஒவ்வொரு நாளும் முடிவுறும் வழக்குகளின் விவரங்களை இவ்வாறு சுருக்கமாகத் தொகுக்க முடிந்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆர்வம் உள்ளவர்கள், முழு விவரங்களைத் தேடிப் படிக்கலாம். முழுச் செய்தியையும் அதன் வழக்கின் முழு விவரங்களையும் ஒருவர் படித்துத் தெரிந்துகொள்வதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவை. இவ்வாறு சுருக்கமாகத் தொகுக்க முடிந்தால், நிறைய நேரம் மிச்சமாகும். இதை ஆங்கிலத்திலும் தமிழிலும் இந்திய மொழிகள் அனைத்திலும் வழங்கலாம். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இவ்வாறு செய்ய முடிந்தாலும் முயன்று பார்க்கலாம்.

    இதற்கு அடுத்த நிலையாக, ஒரே மாதிரியான வழக்குகள், ஒரு துறை சார்ந்த வழக்குகள், ஒரு பகுதியைச் சேர்ந்த வழக்குகள், ஒரு நபரின் மீதான வழக்குகள், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் எனத் தொகுக்க முடியும். நீதிபதி ஒருவரின் தீர்ப்புகள், வழக்குரைஞர் ஒருவரின் வழக்குகள், ஒருவர் தொடுத்த வழக்குகள் ஆகியவற்றையும் இவ்வாறு வரிசைப்படுத்தலாம். இவற்றை இணையத்தளத்திலும் செயலியிலும் வழங்க முடியும். நீதித் துறையே இதை முன்னெடுத்தால், மிகச் சிறப்பாக இருக்கும்.

    என் வேண்டுகோளுக்காக, கூகுள் ஜெமினி வழங்கிய விவரங்கள்:

    சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள் குறித்த சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்ட தகவல்கள், சமீபத்திய செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

    வழக்குச் சுருக்க விவரங்கள்

    1. தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பான வழக்கு

    • வழக்கு விவரம் என்ன? தனிநபர்களின் தொலைபேசி உரையாடல்களை குற்றங்களுக்காக ஒட்டுக் கேட்பதை தடை செய்வது.  
    • வழக்குத் தொடுத்தவர் யார்? கிஷோர் என்பவர்.  
    • யாருக்கு எதிராக? மத்திய உள்துறை அமைச்சகம்.
    • தீர்ப்பு என்ன? குற்றச் செயல்களை கண்டுபிடிக்க ரகசியமாக தொலைபேசி ஒட்டுக் கேட்பது அனுமதிக்கத்தக்கதல்ல என்று கூறி, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.  
    • வழக்குரைஞர் பெயர் கிடைக்கவில்லை.
    • நீதிபதி பெயர் கிடைக்கவில்லை.
    • மேல்முறையீட்டு நிலை தற்போதைய நிலையில், இது இறுதித் தீர்ப்பாக உள்ளது.

    2. ரிதன்யா தற்கொலை வழக்கு

    • வழக்கு விவரம் என்ன? வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்குவது.
    • வழக்குத் தொடுத்தவர் யார்? ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் அவரது மாமனார், மாமியார்.
    • யாருக்கு எதிராக? தமிழக அரசு (காவல்துறை).
    • தீர்ப்பு என்ன? முக்கிய சாட்சிகளின் விசாரணை முடிந்துவிட்டதால், குற்றவாளிகளை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • வழக்குரைஞர் பெயர் கிடைக்கவில்லை.
    • நீதிபதி பெயர் கிடைக்கவில்லை.
    • மேல்முறையீட்டு நிலை இந்த ஜாமீன் உத்தரவு தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டதாக தகவல்கள் இல்லை.

    3. நிலுவை வழக்குகள் தாமாக முன்வந்து விசாரணை (Suo Motu)

    • வழக்கு விவரம் என்ன? மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகளை விரைந்து முடித்து வைக்க தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
    • வழக்குத் தொடுத்தவர் யார்? சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது (Suo Motu).
    • யாருக்கு எதிராக? இது எந்த ஒரு தனிநபர் அல்லது அமைப்புக்கு எதிரானது அல்ல. இது வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நீதிமன்றத்தின் நடவடிக்கை.
    • தீர்ப்பு என்ன? நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு, அவற்றை விரைந்து முடித்து வைக்க ஏதுவாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • வழக்குரைஞர் பெயர் கிடைக்கவில்லை.
    • நீதிபதி பெயர் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா.
    • மேல்முறையீட்டு நிலை இது நீதிமன்றத்தின் உள் நடைமுறை என்பதால் மேல்முறையீடு இல்லை.

    4. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு

    • வழக்கு விவரம் என்ன? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது.
    • வழக்குத் தொடுத்தவர் யார்? இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்தனர்.
    • யாருக்கு எதிராக? ஞானசேகரன்.
    • தீர்ப்பு என்ன? குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • வழக்குரைஞர் பெயர் கிடைக்கவில்லை.
    • நீதிபதி பெயர் நீதிபதி ராஜலட்சுமி.
    • மேல்முறையீட்டு நிலை இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படலாம்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 5

     

    63 நாயன்மார்களின் வரலாறு 

    4. மெய்ப்பொருள் நாயனார்

     

    மங்கையைப் பாக மாக
    வைத்தவர் மன்னுங் கோயில்
    எங்கணும் பூசை நீடி
    ஏழிசைப் பாட லாடல்
    பொங்கிய சிறப்பின் மல்கப்
    போற்றுதல் புரிந்து வாழ்வார்
    தங்கள்நா யகருக் கன்பர்
    தாளலால் சார்பொன் றில்லார்.

    சிவஞானம் மட்டுமே மெய்ப்பொருள், ஏனைய மற்ற உலகப் பொருள்கள் அனைத்தும் பொய்ப்பொருள் என்பதை வெளிப்படுத்தும் இந்நாயனாரின் வரலாறு. சிவவேடம் தரித்த யாவரேனும் அவர் எத்தகையவராயினும் பேதம் ஏதும் காணாமல் அச்சிவவேடத்தையும் போற்றிப் பரவும் ஒரு உத்தம எண்ணம் கொண்ட நாயனார் இவர்.

    திருக்கோவிலூர் சோழவள நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையிலே அமைந்துள்ளது நடு நாடு. சேதி நாடு என்றும் இந்நடு நாடு அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு நடுவிலே அமைந்திருப்பதால் நடு நாடு என்றும், சேதியர் என்ற ஒரு வகை மரபினர் வாழ்வதால் சேதி நாடு என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்நாட்டின் தலைநகரமாக அமைந்த நகரம் திருக்கோவிலூர், அட்டவீரட்டான தலங்களில் ஒன்றாகும்.

    அட்டவீரட்டானக் கோயில்கள்

    அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பதாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

    1.திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்

    2.திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்

    3.திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்

    4.திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்

    5.திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்

    1. திருவழுவூர் : கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட தலம்

    7.திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்

    8.திருக்கடவூர் (அ) திருக்கடையூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.

    மேற்கண்ட எட்டு திருதலங்களிலும் எம்பெருமான் ஈசன் வீரட்டானேசுவரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார்.

    சம்பந்தரும், அப்பரும் பாடிய தொன்மையான திருக்கோவிலூர் எனும் இத்திருத்தலம் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நாட்டினை ஆண்ட அரசர்கள் மலாடர் என்று அழைக்கப்பெற்றனர். இவர்தம் வழியில் தோன்றியவரே மெய்ப்பொருள் நாயனார். இவர் தாம் தேடிய செல்வமனைத்தும் தில்லைக் கூத்தனின் அன்பர்களுக்கேச் சொந்தம் என்று கருதி மன நிறைவுடன் வாரி வழங்கியவர். மெய்ப்பொருள் நாயனார் சிவபெருமானாரின் திருக்கோவிலில் நடைபெற வேண்டிய அனைத்து திருவிழாக்களையும் சிறப்புற நடத்தியவர், சிவனடியார்களுக்கும் வேண்டுவன அனைத்தையும் வழங்கி வாழ்ந்து வந்தார். அனைத்திற்கும் மேலாக அரசியல் நெறி பிறழா அரும் காவலனாகவும், வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்ட ஆகச்சிறந்த வீரனாகவும் இருந்தார். அத்தகைய இம்மன்னனின் அண்டை நாட்டு அரசனான முத்தநாதன் என்பவன் பன்முறை மெய்ப்பொருளாருடன் போர் புரிந்து தோற்று புறமுதுகு காட்டி ஓடியவன்! எப்படியாவது ஏதேனும் சூழ்ச்சியாலாவது மெய்ப்பொருளாரைப் பழிவாங்க எண்ணம் கொண்டான். சைவ வேடம் பூண்டு வந்த அந்த வஞ்சக எண்ணம் கொண்ட முத்தநாதன் அவ்வடியாரை வீழ்த்த முடிவெடுத்தான்.

    உண்மையான சிவனடியார் போலவே முறைப்படி ஆசாரியன் சொன்ன இடங்களில் அளவு மாறாமல் திருநீறு  பூசி பழக்கம் இல்லாதவன் என்பதால் அங்கம் முழுதும் இடம் அளவு காணாது முழு நீறு பூசிய முனிவன் போன்ற தோற்றத்துடன் வந்தான். போலியான சடைமுடியையும் பொருத்திக் கொண்டான். கையிலே ஏட்டுச்சுவடிக் கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அதற்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். இத்தகைய, போலித் தோற்றத்துடன் முத்தநாதன் திருக்கோவிலூர் நகரத்தில் மெய்ப்பொருள் நாயனார் அரண்மனையைச் சென்று அடைந்தான். அரண்மனைக் காவலர்களும் அவன் மெய்யான சிவனடியார் என்று நினைத்து வணங்கி வழிவிட்டனர். முத்தநாதனும் எந்தத் தடையுமின்றி மன்னன் உறங்கும் சயன அறை வரை வந்துவிட்டான். பள்ளியறை வாயிலிலே மன்னவனின் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் வாளோடு நின்று கொண்டிருந்தவன், மன்னர் உறங்கும் நேரம் என்பதால் அவரைச் சந்திக்க இயலாது என்கிறான்.

    முத்தநாதனோ கோபமுற்றவனாக, “என்னையேத் தடுக்கின்றாயா? மன்னவருக்கு இறையவனின் மெய்ப்பொருளைக் கூற வந்த எனக்கே தடையா? என்று கடிந்தவாறு தத்தனையும் மீறி உள்ளே நுழைந்தான். உறங்கிக் கொண்டிருந்த மன்னவனின் கால்பகுதியில் மாதேவி அமர்ந்திருந்தார். முத்தநாதன் உள்ளே நுழைந்ததைக் கண்டவுடன் மாதேவியார் சட்டென்று கட்டிலிலிருந்து கீழே இறங்கினார். கணவரையும் எழுப்பினார் அம்மையார். சிவநாமம் சொல்லிச் சென்ற முத்தநாதனைக் கண்ட மெய்ப்பொருளார் அகமகிழ்ந்து கும்பிட்ட கையோடு எழுந்து நின்றார்.
    முத்தநாதனும், “மங்களம் பெருக” என்றான். மெய்ப்பொருளாரும், “இந்நேரத்தில் தாங்கள் இங்கு எழுந்தருளியுள்ள காரணம் யாது?” என்று வினவினார்.

    மங்கலம் பெருக மற்றென் வாழ்வுவந் தணைந்த தென்ன

    இங்கெழுந் தருளப் பெற்ற தென்கொலோ என்று கூற

    உங்கள்நா யகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்

    எங்குமில் லாத தொன்று கொடுவந்தேன் இயம்ப வென்றான்.

    முத்தநாதனும், வஞ்சகப் புன்னகையை உதட்டில் சுமந்தவாறு, “ உங்கள் நாயகர் முற்காலத்தே அருளிச் செய்த சைவ ஆகம நூல்களுள் உலகில் வேறெங்கும் கிடைத்திராத அரியதொரு நூலை உமக்கு உபதேசிக்கும் நோக்கோடு கொண்டு வந்துள்ளேன்” என்றான்.

    மெய்ப்பொருளாரும் அவ் ஆகமத்தை வாசித்து தாம் கடைத்தேற விரைந்து அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினார். உடனே முத்தநாதனும், “நானும் நீயும் தனியிடத்து இருக்கவேண்டும், உன் தேவி இவ்விடத்தை விட்டு அகல வேண்டும்” என்றபோது அதற்கு மன்னனும் இசைந்தான்.

    மன்னன் முத்தநாதனை உயர்ந்த ஆசனத்தில் அமரச்செய்து, தாமும் தாழ்ந்து தலைகுனிந்து அமர்ந்து உபதேசித்து அருள வேண்டினார். உடனே முத்தநாதனும் திருவெண்ணீற்றை எடுத்து தாமும் உடம்பிலும் நெற்றியிலும் பூசிக்கொண்டு மன்னனுக்கும் கொடுத்த பின்பு தம் கையிலிருந்த ஏட்டுச்சுவடிக்கட்டை அவிழ்த்தான். நாயனார் பணிந்து சிரம் தாழ்த்தி வணங்கும் நேரத்தில் வஞ்சகன் அவன் தன் சுவடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மன்னனைக் குத்தினான். அத்தகைய கடினமான நேரத்திலும் நாயனார் அந்த வஞ்சகன் முத்தநாதன் மீது எந்தவித வெறுப்பும், கோபமும் கொள்ளாது மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கூறி அவனைத் தொழுதார். குருதி வெள்ளத்திலே மிதந்த நாயனார் அக்கொடியவனின் திருநீறு அணிந்த உடம்பைப் பார்த்துச் சிவனையே நினைத்தார்.

    ஆனால் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட முத்தநாதன் மன்னனின் சயன அறைக்குள் சென்றபொழுதே, அவனைத் தடுத்து நிறுத்திய மெய்க்காப்பாளன் தத்தன், நொடிப் பொழுதில் சென்று வாட்படையால் அவனைத் தாக்கத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், ‘தத்தா நமர்’` என்று கூறித் தம் வீரம் பொருந்திய நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.
    நிலத்தில் சாய்ந்த மன்னனின் அன்பின் ஆழத்திற்கும், பக்தியின் உயர்விற்கும் அடிபணிந்த தத்தன், தலை வணங்கினான். தமது உள்ளம் கோபத்தால் துடி துடித்த போதும், உள்ளம் உருக, கண்கள் நீரைச் சொரிய, கைகள் தளர, உடைவாளை உறையில் போட்டபடியே அரசரைத் தாங்கிப் பிடித்தான் தத்தன்.

    அப்போது மெய்ப்பொருளார் தாங்க முடியாத வேதனையையும் தாங்கிக் கொண்டு தத்தனிடம், “தத்தா, எனக்கொரு உதவி செய்வாயா?  இவ்வடியார்க்கு எவ்வித இடரும் நேராவண்ணம் நம் எல்லைவரை அழைத்துச் சென்று விட்டு வா!” என்று ஆணையிட்டார்.

    தத்தனும் தாளாத வேதனையுடன் மன்னனின் கட்டளைக்கு அடிபணிந்து, அரக்க மனம் படைத்த அந்த முத்தநாதனை ஊர் எல்லையில் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பினான். தத்தன் திரும்பி வரும்வரை தம் இன்னுயிரைப் பிடித்து வைத்துக்கொண்டிருந்த நாயனார் தத்தனைக் கண்டு, “இன்றெனக் கையன் செய்தது யார் செய்ய வல்லாரென்று”, நின்றவன் தன்னை நோக்கி நிறைபெருங் கருணை கூர்ந்தார்.

    தம் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம் பிரிவால் வருந்தி நிற்கும் அரசமா தேவியார், ஏனைய சுற்றத்தார் என அனைவருக்கும் தம் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் கொள்கையைக் கூறும்முகமாக, முறையாகப் போற்றிக் காக்கத் தக்க திருநீற்றினிடத்து வைத்து வாழும் அன்பில் சோர்வு வாராது அதனை என்றும் பாதுகாத்துஇவ்வுலகில் வாழ்வீர் எனும் கட்டளையை மொழிந்தபின் நாயனார் பெருமானின் அழகிய வீரக்கழலினை அணிந்த திருவடியை மனத்தகத்து எண்ணியிருந்தார்.

    அப்போது உமையம்மையாரின் கணவராகிய சிவபெருமான், மெய்ப்பொருளார் தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் தோன்றியருளி, அவரை விண்ணுலகின்கண் வாழும் தேவர்களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்ததோடு அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

    மெய்ப்பொருள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    மெய்ப்பொருள் நாயனார் அழிகின்ற பொய்ப்பொருளை பொருளாகக் கருதாமல், சிவஞானமும், திருநீறும் கண்மணியுமே  மெய்ப்பொருள் எனக்கொண்டு வாழ்ந்தவர். சிவவேடம் அணிந்தவரேயாயினும் அவர்தம் குற்றம் குறை காணாது அச்சிவ வேடத்தையும் பணிந்து, அன்புடன் போற்றிவரும் சீலத்தார்.

    மாலற நேயம் மலிந்தவர் வேடமும்

    ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே

       எனும் சிவஞான போதரின் அடியொற்றி வாழ்பவராகிறார். வள்ளலார் ‘அகத்தே கருத்து புறத்தே வெளுத்த உலகர்’ என்பார் வேதனை பொங்க.

    இப்புராணத்தின் முக்கியமான ஒன்றாகக் கருத வேண்டிய ஒன்று என்றால் அது கவிஞர் சேக்கிழார் பெருமானாரின் இரட்டை அர்த்தப் பாடல்களின் வல்லமை மிக்க கருத்துக்களே!

    மெய்யெலாம் நீறு பூசி
    வேணிகள் முடித்துக் கட்டிக்
    கையினிற் படைக ரந்த
    புத்தகக் கவளி யேந்தி
    மைபொதி விளக்கே யென்ன
    மனத்தினுட் கறுப்பு வைத்துப்
    பொய்தவ வேடங் கொண்டு
    புகுந்தனன் முத்த நாதன்.

    என்றவாறு முத்தநாதன் பொய்த்தவ வேடத்தை உவகை பெறத்தக்க ஓர் அருமை உவமையோடு விளக்குகின்றார். அதாவது கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய்யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு முத்த நாதன் என்னும் பெயரில் சென்றான், என்கிறார்.

    மங்கலம் பெருக மற்றென் வாழ்வுவந் தணைந்த தென்ன

    இங்கெழுந் தருளப் பெற்ற தென்கொலோ என்று கூற

    உங்கள்நா யகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்

    எங்குமில் லாத தொன்று கொடுவந்தேன் இயம்ப வென்றான்.

    இப்பாடலில் நாயனாரைப் பார்த்து, ‘மங்கலம் பெருக’ என்று வாழ்த்துவது போல் முத்தநாதன் தம் தீய எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறான். மங்கலம் பெருக என்றால் நன்மை பெருக என்று ஒரு பொருள் மேலோட்டமாகத் தெரிந்தாலும், மங்கலம் பெருக என்றால் அமங்கலம் என்ற பொருளும் உண்டு. கணவனை இழந்த பெண்கள் தாலி நீக்கும் வழமை உண்டு. அந்த நிகழ்வுக்கு தாலி பெருகியது என்று கூறுவது மரபு.

    ‘மற்று என் வாழ்வு வந்தணைந்தது’. என் வாழ்வு எந்த முயற்சியும் இன்றி இன்று வாய்ப்பு வந்தது என்பது ஒரு பொருள். என் வாழ்வு அணைந்தது என்றால் என் வாழ்க்கை இகழத்தக்கது என்றும் மற்றொரு பொருள் உள்ளது. இங்கு கவிஞரின் சொல்வன்மையைக் காண முடிகின்றது.

    அதே போன்று மெய்ப்பொருளார் முத்தநாதனிடம் வந்த காரியம் குறித்து கேட்டபோது, அவன் உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல் எங்குமில்லாத தொன்று கொடுவந்தேன், என்கிறான்.

    முத்தநாதன் பொய்வேடமணிந்த வஞ்சகன் என்பதை சூசகமாக வெளிப்படுத்துகிறார். முத்தநாதன் நம் நாயகனார் என்றோ அல்லது என் நாயகனார் என்றோ கூறாமல் அதுவரை சிவபெருமானைப் பற்றிய எண்ணமே ஏதுமின்றி பொய்த்தவ வேடம் பூண்டவன், ‘உங்கள் நாயகர்’ என்கிறான். அதுபோல் மண் உலகில் இதுவரை இல்லாத புது நூல் என்று அவன் சொன்னதையும் இது போன்ற நூல் இதுவரை மண் உலகில் இல்லை என்றும் பொருள் தொனிக்கப் பாடியுள்ளார் சேக்கிழார் பெருமான்.

    தெய்வச் சேக்கிழார், மெய்ப்பொருளாரை தாம் திட்டமிட்டபடி கொன்றுவிட்ட முத்தநாதனின் நிலை மட்டுமே வென்றது. ஆனால் மெய்ப்பொருளாரைக் குத்தியதால் அவன் தோல்வியே கண்டான். ஆக நாயனார் தம் கொள்கை வழி வென்றார். சேக்கிழார் முத்தநாதனைத் தொழுது நாயனார் கொள்கைவழி வென்றார் என்கிறார்.

    பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே என்று, தன்னைக் குத்திக் கொன்ற முத்தநாதனைக்கூட தன் மெய்க்காப்பாளர் மூலமாக பாதுகாப்பாக ஊர் எல்லைவரை கொண்டுவிடச் சொல்கிறார். தத்தனும் அரசரின் கட்டளையை ஏற்று அப்படியே செய்துவிட்டு திரும்பியபோது, இன்றெனக் கையன் செய்த தியார்செய வல்லா ரென்று நின்றவன் தன்னை நோக்கி நிறைபெருங் கருணை கூர்ந்தார், என்று மெய்ப்பொருளாரின் பெருந்தன்மையான நிலையை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான்.

    மெய்ப்பொருள் நாயனார் தாம் உயிர் துறக்கும் தருணத்திலும், ஈசன் மீது கொண்ட அன்பு சற்றும் குறையாததையும் அடுத்து தாம் விளக்கப்போகும் நாயன்மார் குறித்தும் சேக்கிழார்,

    இன்னுயிர் செகுக்கக் கண்டும்
    எம்பிரான் அன்ப ரென்றே
    நன்னெறி காத்த சேதி
    நாதனார் பெருமை தன்னில்
    என்னுரை செய்தே னாக
    இகல்விறன் மிண்டர் பொற்றாள்
    சென்னிவைத் தவர்முன்
    செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.

    என்று சொல்லி விளங்கச் செய்கிறார்.

    திருச்சிற்றம்பலம்

    தொடரும்

    Share
  • வெட்கம் இல்லாத பதவி நேசர்களுக்காக ஒரு சட்ட மசோதா

    வெட்கம் இல்லாத பதவி நேசர்களுக்காக ஒரு சட்ட மசோதா

    அண்ணாகண்ணன்

    தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்

    மசோதாவின் வரைவின்படி, ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

    என் பார்வையில், செந்தில் பாலாஜி போன்றவர்களுக்காகவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது ஆகி, எவ்வளவு காலம் சிறையில் இருந்தாலும் அமைச்சர் பதவியை விடாதவர்களுக்கு இனி வேறு வழியில்லை.

    We cannot be so shameless that we continue to occupy constitutional positions while facing serious charges என அமித் ஷா கூறியுள்ளார். வெட்கம் இல்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களைப் பதவியிலிருந்து விரட்டத்தான் வேண்டும்.

    ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கத்தக்க குற்றச்சாட்டில், 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், 31ஆவது நாள் அவர்கள் பதவி இழந்துவிடுவார்கள். இதில் பிரதமர் பதவியையும் சேர்த்தது, பா.ஜ.க.வின் நடுநிலைமையைக் காட்டுகிறது. சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்று இதன் மூலம் நிலை நாட்டுகிறார்கள்.

    பொய்யான குற்றச்சாட்டில் கைது ஆகிச் சிறையில் இருந்தால்…? இப்படி நிறைய நடந்திருக்கிறதே.

    பொய் என நிரூபித்துவிட்டு வெளியே வந்து, பிறகு பதவி ஏற்க வேண்டியதுதான். குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையே விதித்தாலும் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்து, வழக்குகளைக் கால வரையின்றி இழுப்பார்கள். சாட்சிகளைக் கலைப்பார்கள். எதிர்க்கட்சிகளின் சதி என்பார்கள். இந்த அரசியல் விளையாட்டில், பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிறது. மேலும், சிறையில் இருந்து இவர்கள் எந்த அலுவலும் பார்க்க முடியாது. அப்படி இருக்க, அந்தப் பதவி எதற்காக?

    குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்றே சட்டம் கருதும். ஆனால், பெரும் பதவிகளில் இருப்பவர்கள், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, மிரட்டி, சாட்சிகளைக் கலைத்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அதிக வாய்ப்பு உண்டு. எனவே தார்மீக ரீதியாக அவர்கள் தாமாகப் பதவி விலக வேண்டும். அல்லது நீக்கப்பட வேண்டும்.

    சிறையில் இருக்கும் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்காத முதலமைச்சரை இந்தச் சட்டம், மறைமுகமாகக் கண்டிக்கிறது. இது ஈகோ விஷயம் கிடையாது, அரசு அலுவல் தடைப்படுகிறது, மக்கள் பணம் வீணாகிறது, குறுக்குவழியில் செல்வாக்கு செலுத்த இடம் உண்டாகிறது எனச் சுட்டிக் காட்டுகிறது.

    செந்தில் பாலாஜியைப் பதவியிலிருந்து நீக்கத் தமிழக ஆளுநர் வலியுறுத்திய போது, தமிழக முதலமைச்சர் மறுத்தார். இப்போது ஆளுநரின் நிலையே சரி என்பதை இந்தச் சட்டம் நிறுவுகிறது. இது ஒரு வகையில் ஆளுநருக்கு வெற்றி. தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் ஆளுநர் வழிகாட்டுகிறார்.

    Share
  • கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் – எடப்பாடியார் செய்ய வேண்டியவை

    கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் – எடப்பாடியார் செய்ய வேண்டியவை

    அண்ணாகண்ணன்

    எடப்பாடியாரின் சுற்றுப் பயணக் கூட்டத்தில் அவசர ஊர்தி வந்தது, சர்ச்சையாகியிருக்கிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில், கூட்டத்துக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வந்ததைப் பார்த்துக் கோபமான எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கூட்டத்திலும் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் ஏற்றி வந்து இடையூறு ஏற்படுத்துவதை அரசு வழக்கமாக வைத்துள்ளது. இதுவரை 30 கூட்டங்களில் இவ்வாறு நடந்துள்ளது. இது மீண்டும் நடந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டி வருபவரே பேஷண்ட் ஆகிவிடுவார் என்று பேசியுள்ளார்.

    முதலமைச்சர் பொறுப்பு வகித்த, வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் எடப்பாடியார், இன்னும் பண்பட்ட முறையில் இதை அணுகியிருக்கலாம். எந்தக் கூட்டம் நடந்தாலும் அங்கே ஓர் ஓரத்தில் அவசர ஊர்திகள் செல்ல வழி ஏற்படுத்தி வைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கூட்டத்திலும் கூட்டத்தின் அளவுக்கு ஏற்ப ஒன்றோ அதற்கு மேலோ அவசர ஊர்திகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு ஏதும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவர்களைக் கவனிக்க மருத்துவக் குழுவும் அவசர ஊர்தியும் முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மேலும், மொத்தமாகக் கூட்டம் கூடாமல், சற்றே இடைவெளி விட்டு நிற்க வேண்டும். தேவையுள்ளவர்களுக்குத் தண்ணீர், மருந்து போன்றவை அனுப்ப வசதியாக இடையிடையே ஒற்றையடிப் பாதைகளும் தேவை. கூட்டம் மொத்தமாக ஒரே நேரத்தில் கலையாமல், சிறுகச் சிறுகக் கலைவதற்கு ஏற்ப, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட வேண்டும். இவை அடிப்படை, அத்தியாவசிய ஏற்பாடுகள்.

    இத்தகைய இடர்கள் நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே, எந்தக் கட்சியின் கூட்டம், மாநாடு, பரப்புரை நிகழ்வதாக இருந்தாலும் சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அவற்றை ஏற்பாடு செய்த பிறகே அனுமதி எனக் காவல் துறை நிபந்தனை விதிக்கலாம். வந்த பின் நோவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது.

    Share
  • தூய்மைப் பணியாளருக்கு அநீதி – அடிப்படை அமைப்பிலேயே சிக்கல்

    தூய்மைப் பணியாளருக்கு அநீதி – அடிப்படை அமைப்பிலேயே சிக்கல்

    அண்ணாகண்ணன்

    சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்பட அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைவருக்கும் ஊதியம் உயர்கிறது. படிகள் உயர்கின்றன. ஓய்வூதியம் உயர்கிறது. பணிப் பாதுகாப்புடன் மருத்துவ வசதி, காப்பீடு, போனஸ் உள்ளிட்ட பலவும் கிடைக்கின்றன. எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இவை இன்னும் பெருமளவு உயரும்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் இவற்றை மறுப்பது ஏன்?

    அவர்களை அரசுப் பணியாளர் என்பதிலிருந்து தனியார் தொழிலாளர் என மாற்றியபோதே, அவர்களின் உரிமைகளை இழந்துவிட்டார்கள். அவர்கள் கேட்பது, ஊதிய உயர்வும் பணி நிரந்தரமும். வழங்க முன்வருவதோ, காலை உணவும் காப்பீடும்.

    அரசுத் துறைகளைத் தனியார்மயம் ஆக்குவது வரவேற்கத்தக்கது. ஆனால், சிலரை மட்டும் இவ்வாறு தனியார் துறைக்கு மாற்றிவிட்டு, இதர துறைகளில் உள்ளோர் பல மடங்கு ஊதியத்துடன் வாழ்வது, மிகப் பெரிய பாரபட்சமும் ஏற்றத்தாழ்வும் இல்லையா?

    1. தனியார்மயம் ஆக்குவதாக இருந்தால், அனைத்து நிலைகளிலும் அவ்வாறு ஆக்குங்கள். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ஊதியம் என்று வரையறை செய்யுங்கள். கார்ப்பரேட் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். வேலைத் திறனுக்கு ஏற்பவே ஊதியம், ஊதிய உயர்வு. வேலைத்திறனில் பழுது இருந்தால் பணிநீக்கம் என நடைமுறைப்படுத்துங்கள். கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒரே அளவுகோல் இருக்க வேண்டும்.

    2. அரசுத் துறை, தனியார் துறை ஊதிய முரண்பாடுகளைக் களையுங்கள். அரசுத் துறைக்கு மட்டும் கூடுதல் ஊதியம் என்பது தவறான முன்னுதாரணம். மக்கள் வரிப்பணத்திலிருந்தே இந்த ஊதியம் வழங்கப்படுகிறது. 7 கோடிப் பேரின் வரிப்பணம், 2 சதவிகித (14 லட்சம்) அரசு ஊழியர்களுக்காகச் செலவிடப்படுகிறது. பெரும்பான்மைத் தமிழர்கள், தகுதியான ஊதியம், பணிப் பாதுகாப்பு இல்லாமல் போராடும்போது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் பாதுகாப்பான வாழ்க்கை என்பது, சமூகத்தின் அடிப்படை அமைப்பிலேயே உள்ள சிக்கல். அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதில்லை. மற்றவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதே சிக்கல். கொடுத்தால் எல்லோருக்கும் கொடுங்கள். அனைவருக்கும் ஒரே நீதி, ஒரே சட்டம், ஒரே கண்ணோட்டம் இருக்க வேண்டும். இதுவே உண்மையான சமூக நீதியாக இருக்கும்.

    Share
  • சுதந்திர தினம் –  15, ஆகஸ்ட் 2025

    சுதந்திர தினம் – 15, ஆகஸ்ட் 2025

    ரா. பார்த்தசாரதி

    78  ஆண்டுகள் கடந்து  79 ஆம்  ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம்.

    சுதந்திர காற்றை சுகமாய் சுவாசித்த  நன்னாள்!
    அகிம்சை வழியில் கிடைத்த அன்புத்திருநாள்.
    அடிமைச்  சங்கிலியை உடைத்த அற்புதமான நாள்.
    வெள்ளையரை வெளியேற்றி வெற்றி பெற்ற பெருநாள்!
    கம்பிரமாய் மணிக்கொடி தரும் ஆனந்த திருநாள்.
    சுதந்திர காற்றை சுகமாய் சுவாசிக்கின்ற நன்னாள்!

    ஆம் ! இன்றைய பாரத சுதந்திர நாட்டின் நிலைமை என்ன?
    தொழில், மற்றும் எல்லா துறைகளிலும்  முன்னேற்றம் கண்டோம்,
    விண்வெளி ஆராய்ச்சியில் பிற நாட்டுடன் சேர்ந்து வெற்றிக்கொண்டோம்.
    நமது ராணுவப் படை  கொண்டு   எதிரிகளை அடிபணியச்  செய்தோம்.
    இருப்பினும் நாம் தீர்வு காண முடியாத, மதப்பிரிவினால் ஏற்படும் தீவிரவாதத்தை மட்டும் அடக்க முடிந்தபாடில்லை! மதப் பிரிவினையே எல்லா தீவிரவாதத்திற்கும்  அடித்தளமாக அமைகின்றது!!

    மணிப்பூர், காஷ்மீர்- நடந்த இனக் கலவரமே தீவரவாத்திற்கு முக்கிய காரணம்.

    காஷ்மீரில் பல ஆண்டுகளாக மத பிரச்சினை இருந்துவருகிறது.

    பல மொழி, பல ஜாதிகள்மாநிலத்தில் இருந்தாலும்  வேற்றுமையில் ஒற்றுமை  என்பதை  இத்தனை ஆண்டுகளாக நாம் காத்து வருகின்றோம்!

    மக்களே ! எந்நாளும், ஒற்றுமையுடன் இருந்து நம் பாரத தேசத்தைப் பேணி காப்போம்.

    பாரதி கூறுகிறார் – ஜாதிகள் இல்லையடி பாப்பா ! பயம் கொள்ளாதே பாப்பா, குலத்தாழ்ச்சி, உயர்ச்சி  சொல்லல் ஆகாது பாப்பா என்கிறார்.

    உச்சி மீது வானிடிந்து போயினும் அச்சமில்லை, அச்சமில்லை! என்றும் யாதும் ஊரே! யாவரும் கேளிர், தீதும், நன்றும் பிறர் தர வாரா! எனும் சங்கப் பாடலை உணர்த்தியதும் நம் நாடு!

    மேலும் பாரதி கூறுகிறார்:

    தாயின் மணிக்கொடி பாரீர் !
    அதை தாழ்ந்து பணித்திட வாரீர்!
    ஓங்கி வளர்ந்த்தோர்  கம்பம்
    அதன் உச்சியின் மேல்
    எங்கள் தாயின் மணிக்கொடி பறக்குது பாரீர் !
    வந்தே மாதரம் என்போம்
    நம் பாரதம்  காப்போம்

    எனக்  கூறுகிறார் !

    என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,
    என்று மடியும் இந்த அடிமையின் மோகம்,

    மற்றும் நெஞ்சம்  பொறுக்கவில்லையே இந்த நிலை கெட்ட  மானிடர்களை கண்டால் ! என்று முழங்கினார் பாரதி !

    நாம் அந்தமான்  தீவில் நமது  வீரத்  தியாகிகள் பட்ட  கஷ்டங்களை நினைந்து பார்த்தால்  நமக்கு சுதந்திரத்தின் அருமை புரியும். இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க அன்று பல உயிர்களின் மூச்சுக் காற்று நின்றது. மக்களே, நாம் சுகபோகத்தில் வாழ்ந்திடாமல் சுதந்திரம் பெற உழைத்தவர்களை மறக்காமல் நினைந்திடுவோம்!

    மக்களே, நல்ல தலைவர்களை தேர்ந்திடுங்கள்! பணத்திற்காக ஓட்டை அளித்து துரோகிகளாக நிற்காதீர்கள்.  ஓங்கி நமது குரல் ஒலிக்க நம் உரிமைகளை மீட்டெடுப்போமே! ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை உறைவிடம்  என அனைத்தும் கிடைக்கச்செய்வோமே!

    சாதிமத பேதம் நம் நாட்டிற்கு வேண்டாம்! நம் வீட்டிற்குள் சண்டையிட்டு வெளிநாட்டவரை விட வேண்டாமே! இளைஞர்களே! நாடு உனக்கு என்ன செய்தது, என்று நினையாமல் நீங்கள் நாட்டிற்கு என்ன செய்தீர்கள் என்பதையும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை சற்றே நினைந்து பாருங்கள் தலைமுறையிலியும் அணையாமல் காக்கப்படவேண்டிய  ஒளியே சுதந்திரம், அது வெறும் வார்த்தை அல்ல. அது பிறப்புரிமை, இளைஞர்களே!! எழுந்திருங்கள், விழித்திருங்கள் குறிக்கோள் அடையும் வரை உங்கள்   உரிமைக்கு  போராடுங்கள்.

    ஜெய் ஹிந்த்!

    Share
  • நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு

    அண்ணாகண்ணன்

    நாகாலாந்து ஆளுநர் மாண்புமிகு இல.கணேசன் அவர்கள், இன்று சென்னையில் மறைந்தார். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். சொற்சுவையும் கருத்தாழமும் சொல்வன்மையும் ஒருங்கே அமைந்த நாவரசர். ஆழ்ந்த புலமையும் தேச பக்தியும் பொதுநலமும் அணிகலன்களாய்ப் பூண்டவர். பொற்றாமரை என்ற அமைப்பின் மூலம் தமிழ் வளர்த்தார்.

    2006ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக இல.கணேசன் பொறுப்பு ஏற்றிருந்தார். சிஃபி நிறுவனத்தில் தமிழ்த் தளத்துக்கு நான் ஆசிரியராக இருந்தேன். உலகெங்கும் உள்ள சிஃபி வாசகர்களுடன் நேரலையில் கலந்துரையாட வருமாறு இல.கணேசன் அவர்களை அழைத்தேன். என் அழைப்பை ஏற்று, சென்னை டைடல் பூங்காவில் உள்ள சிஃபி அலுவலகத்துக்கு வந்து வாசகர்களின் கேள்விகளுக்குச் சுவையாகப் பதில் அளித்தார். அவர் பதில்களைச் சொல்லச் சொல்ல, மூத்த இதழாசிரியர் கே.வெங்கடேஷ் உடனுக்குடன் தட்டச்சு செய்தார். எங்களுடன் சிஃபி மலையாளம் இதழாசிரியர் சென்னி வர்கீஸ் இணைந்தார். எழுத்தாளர் மலர்மன்னன், இல.கணேசன் அவர்களை அழைத்து வரும் பணியினை ஏற்றுக்கொண்டார். தமிழில் இணைய இதழ்கள் என்ற என் நூலை, இல.கணேசன் அவர்களிடம் அளித்து மகிழ்ந்தேன்.

    இல.கணேசனின் மறைவு, ஒரு கட்சிக்கு இல்லை, தேசத்திற்கே இழப்பு.

    Share
  • ஆளுநர் – இரண்டு சீர்திருத்தங்கள் தேவை

    ஆளுநர் – இரண்டு சீர்திருத்தங்கள் தேவை

    அண்ணாகண்ணன்

    இரண்டு முக்கியச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

    பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களில் இத்தனைப் பேருக்குப் பட்டங்களை ஆளுநர் வழங்கினார் என்கிறார்கள். மாணவர்களும் நாங்கள் ஆளுநரிடமிருந்து பெற்றோம் என்கிறார்கள். உண்மையில் நடப்பது என்ன?

    மேடையில் ஏறும்போது யாரோ அலுவலர் ஒருவர், பட்டத்தை மாணவர்கள் கையில் கொடுக்கிறார். மாணவரே அதை ஆளுநரிடம் கொடுக்கிறார். நிழற்படக் கலைஞரைப் பார்க்கிறார்கள். படம் எடுக்கிறார். பட்டத்துடன் மாணவர், மேடையை விட்டு இறங்குகிறார்.

    உண்மையில் மாணவருக்குப் பட்டம் அளித்தவர், யாரோ ஒருவர். இதற்கான பெயர் மட்டும் ஆளுநருக்கு. இதை ஆளுநர் அல்லது பட்டம் வழங்குவோர் தம் கையால் மாணவருக்கு வழங்கும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும்.

    இதே போல், சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை ஆளும் அரசின் சார்பாக ஒருவர் எழுதுகிறார். அதைத்தான் ஆளுநர் வாசிக்கிறார். பெயர் மட்டும் ஆளுநர் உரை. இதை மாற்றி, ஆளுநர் உரையை ஆளுநரே நிகழ்த்தும் வகையில் நடைமுறையைத் திருத்த வேண்டும்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 4

     

           பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

    63 நாயன்மார்கள் வரலாறு

                                                                      3. இளையான்குடிமாற நாயனார்

     

    இயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த

    வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்

    செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்

    கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே

     

    இளையான்குடிமாற நாயனார், இளையான்குடி என்னும் நகரில், வேளாண் குடியில் பிறந்தவர். இன்றைய இராமநாதபுர மாவட்டத்தில், பரமக்குடிக்கு ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர். உலகின் தலைசிறந்த தொழிலான வேளாண்மைத் தொழிலை மிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்து அதன் மூலம்  அளவிறந்த செல்வத்தைப் பெறும் இறையருளால் குபேரனைப் போல வாழ்ந்தார். பிறையணிந்த சிவனடியார்கள்பால் அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டவர் மாறனார்.

    அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
    தம்பி ரானடி மைத்தி றத்துயர் சால்பின் மேன்மைத ரித்துளார்
    நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலஞ்செய்த வத்தினால்
    இம்பர் ஞாலம் விளக்கி னார்இளையான்கு டிப்பதி மாறனார்.

    அவர் தம்முடைய இல்லம் நாடி வரும் அடியவர்களுக்கு அன்னம் பாலிப்பதை தம் தலையாயக் கடமையாகக் கொண்டு வாழ்ந்துவந்தார்.

    அடியவர் யார், அவர் எத்தகையவர், எப்படியிருக்க வேண்டும் என்ற இலக்கணமெல்லாம் அறிந்துகொண்டு பின்னர் அவர்களுக்கு அன்னம் பாலிக்கும் வழமையறியாதவர் மாறனார். வாசலில் இறங்கி நடக்கும்போது எதிர்படும் எவரையும் அடியாராகக் கருதி அவரை வழிபட்டு அவருக்கு அமுது படைக்க தம் இல்லம் அழைத்து வந்துவிடுவார். சேக்கிழார் பெருமானார் இதனை, “நேரே வந்தவர் யாவராயினும்” என்று குறிப்பிடுகிறார். அதாவது இதன் ஆழ்ந்த பொருள் நோக்குங்கால், ஆண், பெண், ஆண்டான், அடிமை, மேல்குலம், கீழ்குலம், கற்றவன், கல்லாதவன், ஏழை, பணக்காரன் போன்று எந்த பாகுபாடும் காணாமல் அவர் யாவராயினும் ஆரம் என்பு புனைந்த அன்பர் எனும் தன்மையால் அடியவர் எனப்போற்றி வணங்கினார். அடியவர்களை எங்கனம் வழிபட வேண்டும் என்று சேக்கிழார் பெருமான் விளக்குகிறார்.

    கொண்டு வந்து மனைப்பு குந்துகு
    குலாவு பாதம்வி ளக்கியே
    மண்டு காதலினாதனத்திடை
    வைத்த ருச்சனை செய்தபின்
    உண்டி நாலுவி தத்தி லாறு
    சுவைத்தி றத்தினில் ஒப்பிலா
    அண்டர் நாயகர் தொண்டரிச்சையில்
    அமுது செய்யஅ ளித்துளார்.

    அந்த வகையில் அடியவர் எவராயினும் மெய்யன்போடு முகமன் கூறி அவர்களை வரவேற்று,  பாத வழிபாடு செய்து, இருக்கையில் அமர வைத்து மலர் தூவி வழிபாடு செய்தபின், அவர் வயிறார உண்ணும் வகையில், கைப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடன் கூடிய, உணவு உண்ணல், தின்னல், நக்கல், பருகல் என நான்கு வகையாக்கியும் சமைத்து வழங்கினாராம் மாறனார். அவரவருக்கு விருப்பமான அற்புதமான உணவை மகிழ்ந்து திருவமுது செய்விப்பார். அன்றாடம் இவ்வாறு மகேசுர வழிபாடு செய்து சிவபுண்ணியத்தில் திளைத்திருந்தார். அதனால் வற்றாத செல்வமும் பெற்று பெரும் செல்வந்தராக வாழ்ந்திருந்தார். அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் சிவபெருமான், அவ்விளையான்குடிமாற நாயனாரை சோதிக்கக் கிளம்பிவிட்டார்.

    பொன்னம்பலக் கூத்தன் தம் அடியார்களின் பெருமையை உலகறியச் செய்பவர். அளவிடற்கரிய செல்வம் இருக்கும்போது அடியார்களுக்கு அமுது படைப்பது எவர்க்கும் எளிதாம். ஆனால் செல்வம் வற்றி வறுமை வந்த காலத்தினும் தான் உண்ணாது இருப்பினும் மனம் தளராது தமது கொள்கையைக் காக்க வல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும் உலகறியச் செய்யவே வந்தார். இதன் காரணமாகவே சிவபெருமானார் நாயனாருக்கு வறுமை வர எண்ணியதால் அவருக்கு வறுமையும் உண்டாயிற்று. அடியவருக்கு அன்னம் பாலித்து வறுமையை ஏற்கவில்லை, அடியவர்தம் பெருமையை உலகறியச் செய்யவே கூத்தபிரானின் இவ்விளையாட்டு நிகழ்ந்தது என்பதை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். நாயனாரின் செல்வ வளம் சுருங்கியபோதும், அவர்தம் மனம் சுருங்குதல் இன்றித் திருத்தொண்டில் முன்னைவிடச் சிறப்பாக ஈடுபட்டிருந்தார் என்கிறார் சேக்கிழார் பெருமான். கடன் பெற்றும், தம் சொத்துகளை அடமானம் செய்தும் திருத்தொண்டு ஆற்றுகிறார் மாறனார்.

    தில்லையிலிருந்து புறப்பட்ட எம்பெருமான் அந்த மாரிக்காலத்து இரவில் அந்தணர் வடிவு தாங்கி இளையான்குடிமாற நாயனார் இல்லம் நோக்கி வந்தார். மாறனாரும், அவர்தம் மனைவியாரும் தாங்கள் உண்ணவே உணவின்றி உறங்கக் காத்திருந்தனர். அந்நேரத்தில் மழையில் நனைந்தபடி வந்து நின்ற அடியாரை வரவேற்று அவருடைய ஈரமேனியைப் போக்க துவாலையோடு துணை நின்றவரின் நெஞ்சில் ஈரம் கசிந்தது.

    அடுத்து வந்த விருந்தினரான அடியவருக்கு எங்கனம் உணவளிப்பது என்ற வினா எழுந்தது. தங்களுக்கு உண்ண உணவு இல்லாத நேரத்தில் எப்படி நல்ல உணவை பரிமாறப் போகிறோம் என்று நாயனார் கவலைப்பட்டார். இரவு நேரமாகிவிட்டதால், அவர்களால் சமைக்க ஏதாவது கடன் வாங்க கிராமத்திற்குச் செல்லவும் முடியவில்லை. நாயனார் தம் மனைவியை தெய்வீகத் தன்மை பெற்ற பெண் எனும் பொருள்படும்படி, ‘அணங்கே’ என்று அழைத்து அதற்கானத் தீர்வைக் கேட்கிறார். தங்களுக்கு இத்தகையதோர் நிலைமை வந்ததற்கு தான் செய்த தீவினைதான் காரணம் போலும் என்று அந்த அம்மையார் நொந்து போனாலும், அன்று நண்பகலில் தங்கள் சிறு வயலில் விதைத்த செந்நெல் விதைகளைக்  கொண்டு வந்தால் அடியாருக்கு அமுது படைக்கலாம் என்றார். நாயனாரும் வயல்வெளிக்குச் சென்று விதைத்த நெல்லை எடுத்து வரச் சென்றார்.

    இருள் சூழ்ந்த அந்த இரவில் மழை பெருக்கெடுத்தோடியது. ஆயினும் தம் மன உறுதி சற்றும் குறையாமல் தம் பாதங்களால் பாதையைத் துளவி உணர்ந்து தம் வயலினுள் நுழைந்தார். மழையால் வயலின் மூலைகளில் தள்ளப்பட்ட விதைகளை சேற்றுடன் சேர்த்து சேகரித்தார். தாம் கொண்டு வந்த கூடையை நிரப்பிவிட்டு விரைந்து சென்றார். அவரது மனைவியும் விதைகளிலிருந்து சேற்றைக் கழுவினார். ஆனால் தழல் மூட்ட விறகில்லை என்றதால் நாயனாரும் வீட்டின் விட்டத்தை அறுத்தளித்தார். நெல்லின் உமியை நீக்கி அரிசியாக்கி சமைத்துவிட்டாலும், சோற்றோடு பரிமாற கறிக்கு என் செய்வோம் என வருந்தி நின்றவரிடம், வீட்டின் பின்புறம் உள்ள குழி நிரம்பாதக் குறும்பயிரான கீரையைக் கொணர்ந்தார். அவரது மனைவியும் அந்தக் கீரையிலிருந்து பல்வேறு உணவுகளைச் சமைத்துக் காட்டினார். உணவு தயாராயிற்று. தங்கள் அன்பினால் சமைத்த அந்த எளிய உணவை ஏற்றருள வேண்டி அந்த அடியாரின் பாதம் பணிந்து வணங்கி நின்றனர்.

    ஆனால் அவர்கள் இருவரும் திகைத்து நிற்க, உறங்கிக் கொண்டிருந்த அடியவர் மறைந்து ஆங்கு ஓர் சோதியாய் தோன்றிய இறைவன், “நீயும் நின் துணைவியும் என் பெரும் பதத்தை எய்திக் குபேரன் உம் ஏவல் வழிச் செயல்பட ஆணை பிறப்பித்தோம்” என்று அருள் புரிந்தார்.

    இளையான்குடிமாற நாயனார் புராணம் சொல்லும் கருத்து!

    ஆண்டவன் வழிபாட்டை ஆராதனை என்றும், அடியவர் வழிபாட்டை சமாராதனை என்றும் அழைப்பர். ஆண்டவனுக்கு அமுது படைப்பதைக்காட்டிலும் அடியார்களுக்கு அமுது படைப்பதே சாலச்சிறந்தது என்பார் திருமூல நாயனார். கோவிலில் குடிகொண்டுள்ள இறைவனுக்கு உணவு கொடுத்தால் அது அடியவரைச் சாராது. அதே சமயம் நடமாடும் கோயிலான அடியவர்களுக்கு அன்னம் பாலித்தால் அது அவ்வடியார் வாயிலாக இறைவனையும் சென்றடையும் என்பதால் அடியவர்களுக்கு அன்னம் பாலிப்பதே சிறந்த தொண்டு என்கிறார் திருமூலர்.

    படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”, என்பார்.

    இவையனைத்தும் நன்குணர்ந்த இளையான்குடிமாற நாயனார் சிவனடியார்களுக்கு திருவமுது படைத்தலையே தம் முழுநேரத் திருத்தொண்டாக மேற்கொண்டார்.  அடியவருக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு என்பதை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடியவர் என்ற தபால் பெட்டியில் போடும் தபால் ஆண்டவன் என்ற தலைமைத் தபால் அகத்தைச் சென்றடையும் என்று அழகான உவமையுடன் விளக்குவார்.

    உலகியல் வாழ்வில் இன்பமோ, துன்பமோ எது நேர்ந்தாலும் இறைவன் மீது மாறாத அன்பு கொண்டவர்களே அடியார்கள். எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் இறையருள் தம்மை மீட்டுக் கொண்டுவரும் என்ற அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
    படரும் நெறி பணியாரேனும் – சுடர் உருவில்
    என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
    அன்பறா தென்நெஞ் சவர்க்கு      

    இறைவன் எனக்கு நேருகின்ற இடர்களைக் களையவில்லை என்றாலும், மனம் இரங்கி எனக்கு அருள் செய்யவில்லை என்றாலும், நான் செல்ல வேண்டிய நல்வழிகளைக் காட்டவில்லை என்றாலும், நெருப்பின் வடிவில் எலும்பு அணிந்து ஆடுகின்ற சிவனிடம் நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் குறையாது என்பார் காரைக்கால் அம்மையார்.

    “அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை மறத்து

    ளதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்று

    ளதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை

    யதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்.”

    என்கிறது திருவிளையாடற்புராணம். அடியார்கள் வழிபாட்டைவிட சிறந்த புண்ணியம் பிறிது இல்லை.

    ‘சிவனே சிவஞானி யாதலாற் சுத்த

    சிவனே யெனவடி சேரவல் லார்க்கு
    நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
    பவமான தின்றிப் பரலோக மாமே.”

    என்று திருமந்திரத்தின் 6-ம் தந்திரம் சிவகுரு தரிசனம் குறித்து விளக்குவதைக் காணலாம்.

    அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே
    யறிவுதனை யருளினா னறியாதே யறிந்து
    குறியாதே குறித்தந்தக் காரணங்க ளோடுங்

    கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயின்.”

    என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது.

    அடியார்கள் மீது கொள்ளும் இவ்வன்பானது ஒருவர்க்கு அத்துணை எளிதாக வாய்த்துவிடுவதில்லை. அவர் பல பிறவிகளிலே பயன் கருதாது செய்த புண்ணிய மிகுதியினாலே சிவபெருமானார் அருளிச் செய்யக் கிடைக்கும் வரம். அவனருளின்றி இவ்வன்பு ஒருவாற்றானும் நிகழாது. இடையறாது வளரும் அம்முதிர்ச்சியில் சிவம் விளங்கும் என்பதால் அன்பும் சிவமும் இரண்டற ஒன்றாய் நிற்கும்.

    “மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் –

    கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா – னொட்டிட்ட பண்பினுருத்திர பல்கணத்தார்க் – கட்டிட்டல்

    காணாதே போதியோ பூம்பாவாய்”

    என்னும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தில் சேக்கிழார் பெருமான் விளக்கியருளியதை அறியலாம்.

    இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய அடியார்களுக்கு திருவமுது படைத்தாற்றும் தொண்டு எந்நாளும் சிறிதாயினும் தவறாது சைவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால் மிகச் சிறப்புற்றவர் இவ்விளையான்குடிமாற நாயனார். அடியவர்கள் அன்னம் பாலிப்பு செய்வதனை இவர் செல்வம் உள்ள பொழுது செய்தமையினும், மிக்க வறுமை வந்தபொழுதும் மனம் சிறிதும் சுருங்குதலின்றி முன் போலவே சிறிதும் தவறாது செய்தமை போற்றுதலுக்குரியதாக்குகிறது.

    மன்னியலே ளாண்டொன்மை யிளைசை மாறர்

        வறுமையா லுணவுமிக மறந்து வைகி

    யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி

        யும்பர்பிரா னணையவய லுழுது வித்துஞ்

    செந்நென்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச்

        சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து

    பன்னலரு முணவருத்தற் கெழுந்த சோதிப்

        பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

    என்பார் சேக்கிழார் பெருமான்.

    திருச்சிற்றம்பலம்

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 3

    பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

    63 நாயன்மார்கள் வரலாறு – 2. இயற்பகை நாயனார்

    இயற்பகை நாயனார் புராணம்

     

    வானவர் பூவின் மாரி பொழிய மாமறைகள் ஆர்ப்ப

    ஞானமா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்

    ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்

    ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்.

     

    எழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்து

        ளியல்வணிக ரியற்பகையா ரிருவர் தேட

    வழலாய பிரான்றூர்த்த மறையோ னாகி

        யாயிழையைத் தரவேண்டி யணைய வையன்

    கழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக்

        காதலியைக் கொடுத்தமர் செய் கருத்தால் வந்த

    பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து மீளப்

        பிஞ்ஞகனா ரழைத்தருளப் பெற்று ளாரே.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் என்பார் சிவபெருமான் மீது மாளாத பற்றும், சிவனடியார்கள் விரும்பிக் கேட்பது மட்டுமன்றி அவர்கள் மனதால் நினைப்பதும் ஏதாயினும் இல்லை என்று கூறாமல் மனமுவந்து வழங்கும் வள்ளற்தன்மையும் கொண்டவர். சிவனடியார்கள்பால் நேசமும், அன்பும் கொண்டு அவர்களை மகிழ்வித்தால் சிவபெருமானாரின் அருள் பெறலாம் என்ற அளவில் சிறந்த பக்தி உடையவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் என்ன என்று தெரியவில்லை. உலக இயலுக்குப் பகையானவர் என்பதால் இவர் இயற்பகையார் என்று அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் சேக்கிழார் பெருமானார். இவரை முதலில் அறிமுகம் செய்பவரான நம்பி ஆரூரர், இல்லையே எனாத இயற்பகைக்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றுகின்றார்.

    ‘பொன்னொடு வந்து கரியொடு ஏகும்’ என்று சங்க காலத்தில் சிறப்பான வணிக நகரமாகத் திகழ்ந்த, சோழநாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தை பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. புகார் எனும் அழகிய துறைமுகப்பட்டினமான காவிரிப்பூம்பட்டினத்தில் வணிக மரபில் பிறந்தவர் இயற்பகை நாயனார். அவர் தம் வணிகத் திறமையால் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே சிவபெருமான் மீதும், சிவனடியார்கள் மீதும் அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததால் சிவனடியார்களுக்கு வேண்டுவதனைத்தையும் வழங்குவதே தலைசிறந்த அறமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஐயனின் திருவிளையாடலுக்கு ஆட்பட்டார் இந்நாயனார். சிவனடியார் கோலத்தில் வந்து  இயற்பகையாரின் மாறுபட்ட பக்தியின் திறத்தை உலகறிய வெளிப்படுத்த இறைவனின் திருவிளையாடல்தான் இது.

    அன்றே என்றன் ஆவியும் உடலும் உடமையும் எல்லாமும்

    குன்றே அனையாய் எனை ஆண்கொண்டபோதே கொண்டிலையோ

    என்ற மணிவாசகப் பெருமானின் கூற்றுக்கிணங்க வாழ்ந்த இயற்பகையாருக்கு என்னே வந்த சோதனை பாருங்கள்.

    சிவபெருமானின் திருவிளையாடல்:

    சிவபெருமான் ஒரு திருநாளில் சிவனடியார் வேடம் பூண்டு இயற்பகையாரின் வீட்டின் முன்பாக வந்து நின்றார். தம் இல்லம் தேடி வந்திருப்பவர் தாம் எந்நேரமும் பூசித்துக் கொண்டிருக்கும் சிவபெருமானார் என்பதை அறியாத இயற்பகையார், அவரை சிவனடியார் என்று நினைத்து ஆனந்தம் கொண்டு, அவ்வடியார் தன் வாசல் தேடி வந்தது தான் செய்த பெருந்தவப் பயனென்று பணிவுடன் வழிபட்டு வரவேற்றார். சிவனடியாராய் வந்த பெருமானாரும் இயற்பகையாரைப் பார்த்து,

    “நீர் அம்பலவர் அடியார்கள் யாது கேட்பினும் இல்லை என்று கூறாது அள்ளி வழங்கும் உம் வள்ளன்மையைப் பற்றித் தெரிந்துதான் உம்பால் ஒன்றை வேண்டி வந்தோம்” என்கிறார்.

    இயற்பகையாரும், “அடியவரே ஏன் தயக்கம்? எம்மிடமுள்ளதனைத்தும் என் உடமையல்ல. அவை அடியவர்களுக்குரியது என்பதே உண்மை. உரியவர் கேட்டால் பாதுகாவலனாகிய நான் கொடுப்பதில் தயக்கம் என்ன இருக்க முடியும்? என்னிடம் உள்ளது எதுவாகினும் தாராளமாகக் கேட்கலாம். ஐயம் ஏதும் தேவையில்லை” என்றார்.

    அந்த சிவனடியாரும் சற்றே தயங்கியவாறு, ‘‘இயற்பகையாரே, எமக்குப் பணிவிடை செய்ய காதல் உம் மனைவியைத் தாரும்’’ என்றார். அதற்கு இயற்பகை நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து, “தாங்கள் என்னிடம் இல்லாத ஒன்றைக் கேட்காமல் என் முன்னால் உள்ளதையே வேண்டியது எனது பெரும்பேறு” எனக் கூறுவதாக சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

    ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே

    அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர்
    நாயகிக்கும் அஃது அறியவோ? பிரியா

    நங்கைதான் அறியாமையோ? அறியோம்;
    தூய நீறு பொன் மேனியில் விளங்கத்

    தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
    மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர்

    மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்.

    இப்பாடலில் சேக்கிழார் பெருமானின் கவிக்கூற்றை உணர முடிகின்றது. இங்கு இறைவன் திருமேனி தாங்கிவரும் சிவனடியாரின்  இயல்பினைப் பற்றி ஆராய்கின்றார். இவரிடம் இரண்டு மாறுபட்ட இயல்புகள் காணப் பெறுகின்றன. தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறுடன் இப்படி வருங்கால் தமது இணையரான உமையம்மையார் அறிய வந்திருப்பாரோ அல்லது அறியாமல் வந்திருப்பாரோ? ஒருவேளை அவர் அறிய வந்திருப்பாராயின், இவர் இங்குப் பிறர் மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர் உடன்பட்டிருக்கமாட்டார். அதேபோல் அவர் அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பாராதலின் அதுவும் இயலாத காரியம். ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய அறியோம் என்கிறார் சேக்கிழார்.

    இயற்பகையார் தம் மனைவியின் முன் சென்றவர், “இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனம்” என்கிறார். அம்மையாரை ஒரு உயிரற்ற பொருளாக எண்ணி அந்த அடியாருக்குக் கொடுப்பதாகக் கூறியது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கலங்கி நிற்கிறார். எந்தக் கணவனும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்த கணவரின் இந்நிலை கண்டு ஊர் மக்கள் என்ன சொல்லப்போகிறார்களோ என்றும் கலங்கினார். ஆனாலும் தன் கணவனின் மனநிலையைப் புரிந்து கொண்டபின் மனம் தெளிந்ததாக சேக்கிழார் குறிப்பிடுகிறார். அம்மையார் தம் கணவனைப் பார்த்து, “இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என்னுயிர்க்கொரு நாத நீர் உரைத்ததொன்றை நான் செய்யும் அத்தனையல்லாமல் உரிமை வேறுளதோ” என்று வணங்கித் தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச் சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள், திருவினும் பெரியாள்.

    கணவன் சொல்லைக் காக்க முனைந்த மனைவியைத் தாழ்ந்து வணங்கினார் என்ற சொற்களால் சேக்கிழார் பெருமான் நாயனாரின் மனநிலையை நமக்கு விளங்கச் செய்கிறார். திருமகள் உலகில் நல்லவர், தீயவர், பெரியோர், சீலர், சீலமில்லார் என்றெல்லாம் பாரபட்சம் பாராமல் எல்லோரிடமும் சென்று சேர்வாள், என்பதனால் அம்மையாரையும் திருமகளுக்கு ஒப்பாகக் கூறுகின்றார் போலும்.

    கணவனின் வாக்கிற்கிணங்க அடியவரை வணங்கி நின்றார் நாயனாரின் மனைவியார். நாயனாரும் அடியவரைப் பார்த்து, அடுத்து தான் செய்ய வேண்டியது யாது என்று கேட்கிறார். அதற்கு அடியவர், “இந்த ஊரில் உனது உறவினர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். நான் உன் மனைவியை அழைத்துச் செல்லும்போது அவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் எனக்கு இடையூறு செய்யக்கூடும். எனக்கு அச்சமாக இருப்பதால் இவ்வூர் எல்லையைக் கடக்கும் வரை நீயும் எனக்குத் துணையாக வரவேண்டும்’’ என்றார்.
    உடனே மனைவியையும், சிவனடியாரையும் முன்னே போகவிட்டு நாயனாரும் பின் தொடர்கிறார். அந்த வேளையில் வாளொடு வந்து இவர்களைத் தடுத்து நிறுத்திய அவரது உறவினர்களையும் ஊர்க்காரர்களையும் சீற்றம் கொண்டு வெட்டி வீழ்த்தியவர், சிவனடியாருக்குக் காவலாக ஊரின் எல்லையிலுள்ள சாய்க்காடு என்ற இடத்தை அடைந்தனர். அத்தருணத்தில்தான் இறைவனே இயற்பகை நாயனாரின் பற்றற்ற செயலைக் கண்டு வியக்கிறார். ‘பொய் திகழ் உள்ளம் இல்லான்’ எனும் நற்சான்றை இறையருள் பெற்றுத்தர மெய்யான அடியாராகிறார் இயற்பகை நாயனார்! சேக்கிழார் பெருமானின் கவிமொழி இதனை அழகாக வெளிப்படுத்துகிறது.

    இயற் பகை முனிவா ஓலம்! ஈண்டு நீ வருவாய் ஓலம்!
    அயர்ப்பு இலாதானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்!
    செயற்கு அரும் செய்கை செய்த தீரனே ஓலம்! என்றான்
    மயக்கு அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்.

    அழைத்த பேர் ஓசை கேளா ‘அடியனேன் வந்தேன்! வந்தேன்!
    பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலித் தடக்கை வாளின்
    இழைத்தவர் ஆகின்றார்’ என்று இயற்பகையார் வந்து எய்தக்
    குழைப் பொலி காதினானும் மறைந்தனன்; கோலம் கொள்வான்.

    சென்றவர் முனியைக் காணார்; சேயிழை தன்னைக் கண்டார்;
    பொன் திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்னத்
    தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்;
    நின்று இலர்; தொழுது வீழ்ந்தார்; நிலத்தின்நின்று எழுந்தார்; நேர்ந்தார்.

    திருவிளையாடலை முடித்துக்கொண்ட எம்பெருமான் தமது அடியார் வேடத்தை விடுவித்து வான்மீது வெள்விடை மீது உமையம்மையுடன்  தோன்றியவர், இயற்பகை நாயனாரையும் அவர்தம் மனைவியாரையும் தங்களுடன் வரப்பணித்தார். இருவரும் சிவபெருமானுடன் விண்ணுலகம் சென்றனர்.  இயற்பகையாரின் வாளுக்குப் பலியான அவர்தம் சுற்றத்தார்களும் பொன்னுலகம் சென்றனர்.

     

     இயற்பகை நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    சிவபெருமானார் தம்மிடம் இடையறாத அன்பு பாராட்டும் மெய்யடியார்கள் மீது தாமும் இடையறாத அருள் பாலிக்கும் வள்ளன்மை மிக்க இனியர்.

    கனியினும் கட்டி பட்ட கரும்பினும்

    பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்

    தனிமுடி கவித்து ஆளும் அரசினும்

    இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே.

    எனும் திருநாவுக்கரசு நாயனாரின்  கூற்று இதனை விளங்கச் செய்யும்.

    இறைவன் மீது உண்மையான அன்பு கொண்ட மெய்யுணர்வுடையவர்கள் தம்மிடம் உள்ள சொத்து, சுகம் மட்டுமின்றி பந்தம் கொண்டோரும் கூட அந்த இறையனாருக்கேச் சொந்தம் என்று எண்ணுவதால் அனைத்தின் மீதும் தாமரையிலை தண்ணீர் போன்று ஒரு பற்றற்ற நிலையிலேயே இருக்கின்றனர். முற்பிறவியின் பயனாக இயற்பகை நாயனார் சிவனடியார்களையும் சிவலிங்கமாக எண்ணியே வழிபடும் வழமை கொண்டவராகிறார். அந்த வகையில் இந்நாயனார், தமக்கு உரிய எப்பொருள்களையும் தன்னை விடவும், அவ்வடியார்கள் அனுபவித்தலில் பெரிதும் விருப்பம் கொண்டவராதலின்  அவற்றை மகிழ்ச்சியோடு அவர்களுக்குக் கொடுக்கும் பெருந்தகைமையிற் சிறந்து விளங்கினார். இயற்கைக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் இத்தன்மையாலேயே அவர் இயற்பகை நாயனார் என்றும் அழைக்கப் பெற்றுள்ளார்.

    இவரிடத்துள்ள இவ்வரிய இம்மெய்யன்பை, சர்வ ஆன்மாக்களும் உணர்ந்து உய்யும்படி எடுத்துரைக்கும் திருவுளங்கொண்ட சிவபெருமான், மனைவியினும் இனிய பொருள் பிறிதொன்றும் இல்லை என்பதால்  சிவனடியார் வேடம் தரித்து வந்து அவர் மனைவியையே கேட்கிறார். கற்பினிற் சிறந்து விளங்கும் தம் மனைவியையும் பெருமகிழ்ச்சியோடு கொடுக்க உறுதி கொள்கிறார். இதனால் உலகத்தோரின் பழிப்புரைக்கு ஆளாக நேரிடும் என்பதறிந்தும் அதைச் செய்யத் துணிந்தார். பிறர்மனை நயத்தல் சிவாகமங்களில் விலக்கப்பட்ட மிகப்பெரிய பாவம் என்பதைக்கூட கருதாமல் தமது மனைவியைத் தரும்படி கேட்டவரை, சிவனடியார் என்று கொண்டமை குற்றமாகாதோ என்று தோன்றுவதே இயல்பு.

    இவ்வடியாரின் இத்தகைய இயல்பினை உலகறியச் செய்யும் நோக்கொடு இறைவன், அம்பலத்தாடும் பெருமானார் அத்தகைய வேடம் பூண்டு புறப்பட்டார். மனமுவந்து மனைவியை அனுப்பத் தயாரான நாயனார் மீது கடுங்கோபம் கொண்ட அந்த அம்மையாரின் சுற்றத்தார் வாளுடன் வந்து தடுத்து நிறுத்தப் பார்த்தனர். சமுதாயத்தில் தங்கள் கண் முன்னால் நடக்கும் அதீத கொடுமையான ஒரு நிகழ்வைப் பார்த்து கண்டுங்காணாமல் இருப்பது நியாயமன்று, தங்கள் உயிரைப் பணயம் வைத்தேனும் அதைத் தடுக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்க முனைந்தார் இறைவன் என்பதை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். பாரதி தம் பாஞ்சாலி சபதத்தில், திரௌபதியைக் குழல் பற்றிப் பாதையில் இழுத்துச் சென்ற துச்சாதனனைக் கூடி நின்று வேடிக்கைப் பார்த்த மக்களை,

    நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி இழுக்கையிலே

    நெட்டை மரங்களென நின்று புலம்பினர்

    பெட்டைப் புலம்பல் பிறர்க்காமோ?

    என்று கடிந்து கொள்கிறார். அதுபோல் கண்முன்னால் அநீதி நடக்கும் போது தடுத்து நிறுத்தாமல் இருப்பது ஆண்மைக்கே அழகன்று என்பதையும் விளங்கச் செய்கிறார் சேக்கிழார் பெருமான்.  அந்த வகையில் சிவபெருமானாராலேயே “செயற்கருஞ் செய்கை செய்ததீரனே” என்று வியக்கப்பட்ட இந்நாயனாரின் அற்புத பக்தியினை விளங்கச் செய்கிறார்.

    திருச்சிற்றம்பலம்

    தொடரும்

    Share
  • தெருநாய்களை என்ன செய்யலாம்?

    தெருநாய்களை என்ன செய்யலாம்?

    அண்ணாகண்ணன்

    நாடு முழுவதும் நாய்களைக் காப்பகங்களில் வைத்துப் பராமரிப்பது, மிகப் பெரிய வேலை. இது நிதிச் சுமையுடன் வேறு பல சிக்கல்களையும் கொண்டுள்ளது.

    நாய் பொதுவாகத் தனக்கென எல்லை வகுக்கக் கூடியது. வேறு நாய் தன் எல்லையில் நுழைந்தால், பயங்கரமாகச் சண்டையிட்டு விரட்டும். இப்போது எல்லா நாய்களும் ஒரே இடத்தில் இருப்பது, மிகப் பெரிய அதிகாரப் போட்டியை உருவாக்கும். இது, நாய்களுக்கு இடையே அடிக்கடி சண்டையை உருவாக்கும். இவற்றைத் தவிர்க்க, தனித் தனிக் கூண்டுகளில் அடைக்க வேண்டும்.

    நாய்களுக்கு உணவு அளிப்பது ஒரு நிலை. அதன் உடலுறவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அடுத்த சவால். எந்த நாயை எதனுடன் எந்தச் சுழற்சியில் சேர்ப்பது? இவற்றைக் கண்காணித்து, கணக்கெடுப்பது அடுத்த வேலை. பெண் நாயின் பிள்ளைப் பேறு சமயத்தில் அரசே கவனிக்க வேண்டும். குட்டிகளையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

    நாய்களைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, தடுப்பூசி போட்டு, அதன் கழிவுகளை அகற்றுவது, பெரும் பணி. இவற்றில் ஒரு பகுதியைத் தானியக்கமாகச் செய்ய முயலலாம்.

    நாய்களை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதற்கான என் யோசனைகள்

    1. நாய்கள், அதன் குட்டிகள் ஆகியவற்றின் விவரங்களை நிழற்படம், நிகழ்படங்களுடன் இணையத்தளத்தில் பட்டியலிடலாம். வேண்டுவோர், வந்து தத்து எடுக்க வழி வகை செய்யலாம்.

    2. நாய்களைச் செல்லப் பிராணிகளாக மட்டும் கருதாமல், காவல் பணியில் ஈடுபடுத்தலாம். அவரவர் மதிலுக்குள் நாய்களை வைத்துக்கொள்ள, காவல் பணியில் ஈடுபடுத்த, அவற்றை வளர்ப்போருக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும்.

    3. மோப்பத் திறன் கொண்ட நாய்களைக் காவல் துறை, தனியார் துப்பறியும் நிறுவனங்களுக்கு விற்கலாம்.

    4. குறிப்பிட்ட வேலைகளைச் செய்யவும் வித்தைகள் காட்டவும் நாய்களைப் பயிற்றுவிக்கலாம்.

    5. நாய்களின் கழிவுகள், மாடுகளின் கழிவுகள் போல் உரம் ஆகாது. ஆனால், நாய்களின் கழிவுகளிலிருந்து மீத்தேன் வாயுவைப் பிரித்தெடுத்து, அதை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.

    6. நாய்க்கறி, மனிதர்கள் உண்ண ஏற்றது இல்லை என்கிறார்கள். ஆயினும், சீனம், வியட்னாம் உள்ளிட்ட சில நாடுகளில் நாய்க்கறி உண்ணுகிறார்கள். எனவே, நாய்க்கறியை விரும்பும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். நாய்களை உயிருடனோ, மாமிசமாகவோ அனுப்பலாம். மாமிசமாக அனுப்பும் தேவை இருந்தால், நாய்க்கறிக் கூடங்களை அமைக்கலாம்.

    7. உயிரியல் பூங்காக்களிலும் தேசியப் பூங்காக்களிலும் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு நாய்களை உணவாக அனுப்பலாம்.

    8. நாய்கள் காப்பகங்களை உயிரியல் பூங்காக்களைப் போல் வளர்த்தெடுக்கலாம். இங்கே விதவிதமான நாய்களை ஒரே இடத்தில் காணலாம். எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களை இங்கே சுற்றுலா அழைத்து வரலாம்.

    9. பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் மக்கள், நாய்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யலாம். தங்கள் வீட்டு உணவுகளைச் சமைத்தும் கொண்டு வரலாம். அல்லது 100 நாய்களுக்கு ஆகும் உணவுச் செலவை நன்கொடையாகவும் வழங்கலாம். இதற்குச் சான்றிதழ் கொடுக்கவும் ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம், நாயுணவு நன்கொடை வளரும்.

    10. உணவகங்கள், மாணவர் விடுதிகள், திருமண மண்டபங்கள், வீடுகள் ஆகியவற்றில் மீதமாகும் உணவை இங்கே கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் உணவு வீணாவதையும் தடுக்கலாம். நாய்களுக்கும் உரிய உணவு கிடைக்கும். ஆனால், நாய்க் காப்பகங்களில் ஏற்கெனவே உணவு சமைத்துவிடுவார்கள். எனவே, மிச்சமாகும் உணவைச் சேமித்து வைத்து அடுத்த நாள் வழங்க, குளிர்ப்பதனிகளையும் அறை வெப்பநிலையில் உணவைச் சூடாக்கித் தரும் கருவிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

    11. நல்ல உணவு கிடைத்த பிறகு சும்மா இருப்பது, நாய்களின் உடல்நலனுக்கு நல்லதில்லை. அவை உடல் பெருத்து, சோம்பேறியாகும் வாய்ப்பு அதிகம். எனவே, நாள் முழுதும் அதற்கு வேலை தர வேண்டும். நாய்களுக்கு ஓட்டப் பந்தயம், பந்து விளையாட்டு, கூட்டமாகக் குளிப்பது, குழி தோண்டுவது, நீளம் தாண்டுவது, பல குரலில் பேசுவது, கண்களைக் கட்டிவிட்டுப் பொருளைக் கண்டுபிடிக்கச் சொல்வது.. எனப் பல போட்டிகளை நடத்தலாம். இவற்றைக் காண மக்களையும் அனுமதிக்கலாம். இதற்கெனக் கட்டணமும் விதிக்கலாம். இந்த வகையில், இந்தச் செலவுகளை ஈடுகட்டலாம்.

    12. நாய்கள் வரம்பு மீறிக் குழந்தைகளையும் அப்பாவிகளையும் விரட்டிக் கடித்து, தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக்கொண்டுள்ளன. பூனைகள் அமைதியாக, சுதந்திரமாகச் சுற்றித் திரிகையில், திமிரெடுத்துத் திரிந்த நாய்களுக்கு இதன் மூலம் நல்ல பாடம் கிடைக்கும். நாய்கள் தங்கள் எல்லையை உணர்ந்துகொள்ள வேண்டும். அதை மீறினால், இதுதான் கதி. இது தொடர்பாக, ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.

    Share
  • ஆளுநரை அவமதிப்பது, தவறான முன்னுதாரணம்

    ஆளுநரை அவமதிப்பது, தவறான முன்னுதாரணம்

    அண்ணாகண்ணன்

    ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்த மாணவியின் மீது ஊடக வெளிச்சம் பாய்கிறது. ஒட்டுமொத்த பட்டமளிப்பு நிகழ்வையும் திசைதிருப்பி, அவர் புகழப்படுகிறார். ஆளுநரை அவமதித்து விட்டதாகக் கொண்டாடுகிறார்கள். முந்தைய துணைவேந்தர்கள் மாநாட்டில், கலந்துகொள்ளக் கூடாது எனத் துணைவேந்தர்களைத் தடுத்துவிட்டதாக ஆளுநரே கூறியிருந்தார். ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் இல்லை. முதலமைச்சரே வேந்தர் என்ற சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாகக் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் இன்னும் பதில் அளிக்க வேண்டும். ஆளுநருக்கு எதிராக முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் இதர அமைச்சர்களும் கூட வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறார்கள். பொதுக் கூட்டங்களில், ஊடகங்களில் பேசுகிறார்கள்.

    ஆளுநர் தேவையா? என்பது குறித்தும் ஆளுநரின் நடவடிக்கைகள், பேச்சுகள் குறித்தும் பேசலாம், விமர்சிக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் ஆளுநருக்கு உரிய மதிப்பு அளித்து, கருத்தியல் ரீதியாக, சட்டப்பூர்வமாக மட்டுமே நிகழ்த்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று, பதவிப் பிரமாணம் செய்து, பதவி வகிக்கின்றவர்கள், அந்தச் சட்டத்துக்கு மாறாக, ஆளுநரை அவமதிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகவே பொருள். சட்டமன்றத்திலேயே ஆளுநருக்கு எதிராகக் கோஷம் எழுப்புவதும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மேடையிலேயே ஆளுநரைப் புறக்கணிப்பதும் தவறான முன்னுதாரணங்கள்.

    நாளை இத்தகைய அவமதிப்புகள், முதலமைச்சருக்கு எதிராக அல்லது அரசுப் பதவியில் இருக்கும் எவருக்கு எதிராகவும் நிகழலாம். அப்போதும் இப்படியே இவர்கள் கொண்டாடுவார்களா?

    ஆளுநரின் கருத்துகளை விமர்சிப்பது எனில், எந்தப் புள்ளிகளில், எந்தச் சான்றுகளின் அடிப்படையில் வேறுபடுகிறோம் என எடுத்துப் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட தாக்குதலாக அது மாறக் கூடாது. இத்தகைய நிகழ்வுகளைத் தரமான சம்பவமாகவும் சாகசமாகவும் வீரப் பிரதாபமாகவும் முன்வைக்கக் கூடாது. முக்கியப் பொறுப்புகளில் இருப்போர், வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். அவர்களே எல்லை மீறிப் பேசக் கூடாது. அவர்கள் கீழே பணியாற்றுவோர் இவ்வாறு ஏதும் செய்தால், கண்டிக்க வேண்டுமே தவிர, பாராட்டக் கூடாது. சட்டத்தை மீறுவோருக்கு இது ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடும்.

    ஆளுநருக்குக் கடிதம் எழுதலாம். அவருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றலாம். அவர் மீதான புகாரைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். சட்டப்பூர்வமான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றலாம். ஆனால், அவரைக் கேலி செய்வது, பட்டப் பெயர் வைப்பது (ரம்மி ரவி), ஒருமையில் அழைப்பது போன்றவை, உண்மையில் அவரைத் தூற்றவில்லை. இப்படிச் சொல்பவர்களின் / செய்பவர்களின் தரத்தையே காட்டுகின்றன. இவை தமிழ்நாட்டின் மாண்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த மண்ணின் மதிப்பைத் தாழ்த்துகின்றன. வள்ளுவருக்கும் கம்பருக்கும் பாரதிக்கும் விழா எடுக்கும் ஆளுநர், கம்ப ராமாயணத்தை மலையாளத்தில் மொழிபெயர்க்க முன்பணம் கொடுக்கும் ஆளுநர், தமிழ்நாட்டு அறிஞர்களுக்கும் ஆளுமைகளுக்கும் விருது அளித்துப் பாராட்டும் ஆளுநர், இந்த மண்ணில் எத்தகைய பண்புகளை எதிர்பார்ப்பார்?

    I Disapprove of What You Say, But I Will Defend to the Death Your Right to Say It என்ற புகழ்பெற்ற வாசகம் நினைவுக்கு வருகிறது. நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதைச் சொல்வதற்கான உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தேனும் காப்பேன் என்பது இன்றைய ஜனநாயகச் சூழலில் மிக முக்கியமானது. ஆளுநரின் கருத்தை நீங்கள் ஏற்காமல் போனாலும், அதைச் சொல்ல அவரை முழுமையாக அனுமதிக்க வேண்டும்.

    ஆளுநர் சட்டமன்றத்தில் பேசும்போதும் இதர நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் அவமதிப்பது, எள்ளி நகையாடுவது, கண்டனத்திற்கு உரியது. இதில் அரசியல் சாகசம் செய்வது, தமிழ்நாட்டின் மதிப்பைக் குறைக்கும். இன்றைய நிலையில் ஆளுநர் என்பது சட்டப்பூர்வமான, அரசியலமைப்புச் சட்டத்தின் படியான பதவி. அவருக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டியது, அனைவரின் கடமை. இதை மீறுவோர் மீது மாநில அரசு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, மாநில அரசே அந்தப் பிழையைச் செய்யக் கூடாது.

    Share
  • பெண்மைகள், ஆண்மைகள் – சில பிழைகள்

    பெண்மைகள், ஆண்மைகள் – சில பிழைகள்

    அண்ணாகண்ணன்

    யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். சிம்பு நடித்த தொட்டி ஜெயா திரைப்படத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், தாமரை எழுதிய பாடலை ஹரிணியும் ரமேஷ் விநாயகமும் இணைந்து பாடியுள்ளனர். இதயத்தை வருடும் இனிய இசையும் வரிகளும் கொண்ட பாடல். இதில் இடம்பெற்ற இந்தச் சொல்லும் இந்தக் கனவும் நிற்கட்டும், நம்மை வானம் வந்து ஈரக் கையால் வாழ்த்தட்டும் என்ற வரியை நான் மிகவும் ரசித்தேன்.

    இதில் இந்த வரிகளும் இடம் பெற்றுள்ளன

    உன்னைக் கண்டபின்னே எந்தன்
    பெண்மைகளும் உயிர் பெறுதே
    கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
    வெட்கங்களும் வெளிவருதே

    பெண்மை என்றும் பெண்கள் என்றும் சொல்லலாம். பெண்மைகள் என எங்கும் சொல்வதில்லை. அதுபோல் வெட்கம் எனச் சொல்வோம். வெட்கங்கள் எனச் சொல்வதில்லை. மெட்டுக்காக எழுத வேண்டும் எனில், பெண்மைமிக உயிர் பெறுதே என்றும் வெட்கம்அது வெளிவருதே என்றும் எழுதியிருக்கலாம். தாமரை இப்படி எழுதியது வியப்பளிக்கிறது.

    இதுபோல் இன்னொரு பாடலும் நினைவுக்கு வருகிறது. தேநீர் விடுதி என்ற படத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையமைப்பில் முருகன் மந்திரம் வரிகளில் உயிரோடு உறவாடி என்ற பாடலில் ஒரு வரி.

    உன் பெண்மைகள் ஏங்கிடுதே
    என் ஆண்மைகள் தூண்டிடுதே

    இவ்வாறு பெண்மைகள், ஆண்மைகள் என நாம் சொல்வதில்லை. பெண்மை, ஆண்மை மட்டுமே உண்டு. மெட்டுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனில், உன் பெண்மையது ஏங்கிடுதே, என் ஆண்மையது தூண்டிடுதே என எழுதியிருக்கலாம்.

    பிழைகளைத் தவிர்த்தால், பாடல்கள் இன்னும் சிறக்கும்.

    Share