நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு
அண்ணாகண்ணன்
நாகாலாந்து ஆளுநர் மாண்புமிகு இல.கணேசன் அவர்கள், இன்று சென்னையில் மறைந்தார். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். சொற்சுவையும் கருத்தாழமும் சொல்வன்மையும் ஒருங்கே அமைந்த நாவரசர். ஆழ்ந்த புலமையும் தேச பக்தியும் பொதுநலமும் அணிகலன்களாய்ப் பூண்டவர். பொற்றாமரை என்ற அமைப்பின் மூலம் தமிழ் வளர்த்தார்.
2006ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராக இல.கணேசன் பொறுப்பு ஏற்றிருந்தார். சிஃபி நிறுவனத்தில் தமிழ்த் தளத்துக்கு நான் ஆசிரியராக இருந்தேன். உலகெங்கும் உள்ள சிஃபி வாசகர்களுடன் நேரலையில் கலந்துரையாட வருமாறு இல.கணேசன் அவர்களை அழைத்தேன். என் அழைப்பை ஏற்று, சென்னை டைடல் பூங்காவில் உள்ள சிஃபி அலுவலகத்துக்கு வந்து வாசகர்களின் கேள்விகளுக்குச் சுவையாகப் பதில் அளித்தார். அவர் பதில்களைச் சொல்லச் சொல்ல, மூத்த இதழாசிரியர் கே.வெங்கடேஷ் உடனுக்குடன் தட்டச்சு செய்தார். எங்களுடன் சிஃபி மலையாளம் இதழாசிரியர் சென்னி வர்கீஸ் இணைந்தார். எழுத்தாளர் மலர்மன்னன், இல.கணேசன் அவர்களை அழைத்து வரும் பணியினை ஏற்றுக்கொண்டார். தமிழில் இணைய இதழ்கள் என்ற என் நூலை, இல.கணேசன் அவர்களிடம் அளித்து மகிழ்ந்தேன்.
இல.கணேசனின் மறைவு, ஒரு கட்சிக்கு இல்லை, தேசத்திற்கே இழப்பு.
