கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் – எடப்பாடியார் செய்ய வேண்டியவை
அண்ணாகண்ணன்
எடப்பாடியாரின் சுற்றுப் பயணக் கூட்டத்தில் அவசர ஊர்தி வந்தது, சர்ச்சையாகியிருக்கிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில், கூட்டத்துக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வந்ததைப் பார்த்துக் கோபமான எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கூட்டத்திலும் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் ஏற்றி வந்து இடையூறு ஏற்படுத்துவதை அரசு வழக்கமாக வைத்துள்ளது. இதுவரை 30 கூட்டங்களில் இவ்வாறு நடந்துள்ளது. இது மீண்டும் நடந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டி வருபவரே பேஷண்ட் ஆகிவிடுவார் என்று பேசியுள்ளார்.
முதலமைச்சர் பொறுப்பு வகித்த, வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் எடப்பாடியார், இன்னும் பண்பட்ட முறையில் இதை அணுகியிருக்கலாம். எந்தக் கூட்டம் நடந்தாலும் அங்கே ஓர் ஓரத்தில் அவசர ஊர்திகள் செல்ல வழி ஏற்படுத்தி வைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கூட்டத்திலும் கூட்டத்தின் அளவுக்கு ஏற்ப ஒன்றோ அதற்கு மேலோ அவசர ஊர்திகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு ஏதும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவர்களைக் கவனிக்க மருத்துவக் குழுவும் அவசர ஊர்தியும் முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், மொத்தமாகக் கூட்டம் கூடாமல், சற்றே இடைவெளி விட்டு நிற்க வேண்டும். தேவையுள்ளவர்களுக்குத் தண்ணீர், மருந்து போன்றவை அனுப்ப வசதியாக இடையிடையே ஒற்றையடிப் பாதைகளும் தேவை. கூட்டம் மொத்தமாக ஒரே நேரத்தில் கலையாமல், சிறுகச் சிறுகக் கலைவதற்கு ஏற்ப, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட வேண்டும். இவை அடிப்படை, அத்தியாவசிய ஏற்பாடுகள்.
இத்தகைய இடர்கள் நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனவே, எந்தக் கட்சியின் கூட்டம், மாநாடு, பரப்புரை நிகழ்வதாக இருந்தாலும் சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அவற்றை ஏற்பாடு செய்த பிறகே அனுமதி எனக் காவல் துறை நிபந்தனை விதிக்கலாம். வந்த பின் நோவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது.
