தன்கர் எங்கே? & முகிலன் எங்கே?

அண்ணாகண்ணன்

குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரைக் காணவில்லை. பதவி விலகிய பிறகு அவர் இருக்கும் இடமே தெரியவில்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என ஐயம் எழுப்புகிறார்கள். தன்கர் எங்கே என முழங்கி வருகிறார்கள்.

தன்கரைக் காணவில்லை என அவரைச் சார்ந்தவர்கள், குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டும் இதை ஊதிப் பெரிதாக்கி வருகின்றன.

இதே போன்ற முழக்கத்தை எங்கோ பார்த்திருக்கிறோமே என யோசித்த போது, எங்கே முகிலன் நினைவுக்கு வந்தது. முகிலன், ஸ்டெர்லைட், கூடங்குளம், காவிரி மணல்கொள்ளை போன்றவற்றுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் பங்கேற்றார். திடீர்ப் போராளியாகப் பல கூட்டங்களில் தோன்றினார்.

2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அன்று இரவு முதல் முகிலனைக் காணவில்லை எனத் திமுக தரப்பில் பலரும் எழுதினார்கள். எங்கே முகிலன், முகிலன் எங்கே போன்ற ஹேஷ்-டாக்குகளில் பலரும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்கள். தோழர் எங்கே? கடத்தப்பட்டாரா? கொல்லப்பட்டாரா? எனப் பலவிதமான கோணங்களில் அலசினார்கள். காணாமல் போய் இன்று இத்தனாவது நாள் என ஒவ்வொரு நாளும் பதற்றத்தை ஏற்றினார்கள். கொட்டை எழுத்துகளில் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. அப்போது இருந்த அதிமுக அரசின் மீதும் காவல் துறை மீதும் ஐயம் எழுப்பினார்கள். அரசுக்கு எதிரான அலையை எழுப்பியதில் இந்த எங்கே முகிலன் என்ற பரப்புரைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

தேர்தல் முடிந்து, மே 23 அன்று முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களைத் திமுக கூட்டணி வென்றது.

முகிலன் காணாமல் போனது குறித்து, பிபிசி வெளியிட்டுள்ள செய்தியின் ஒரு பகுதி இங்கே.

மனித உரிமைச் செயல்பாட்டாளரான ஹென்றி திபேன், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர், முகிலனைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கைத் தமிழக காவல் துறையின் சிபிசிஐடி பிரிவு விசாரித்து வந்தது.

இந்த வழக்கு ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதியன்று திருப்பதி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டுக்கொண்டிருந்த முகிலனை ஆந்திரக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் அன்று இரவே தமிழக சிபிசிஐடி காவல் துறையினரிடம் முகிலனை ஒப்படைத்தனர்.

ஜூலை 7ஆம் தேதியன்று சென்னை சிபிசிஐடி வளாகத்தில் முகிலன் வைக்கப்பட்டிருந்தபோது, அவரது மனைவி, வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் உள்ளிட்டோர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், முகிலன் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 417, 376ன் கீழ் கைது செய்யப்பட்டார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் முகிலன் கைது செய்யப்பட்டார்.

முகிலன் காணாமல் போனவுடன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த வழக்கறிஞரான சுதா ராமலிங்கம், சென்னையில் போலீஸ் காவலில் இருந்தபோது சென்று சந்தித்தார். “அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை. நன்றி என்று மட்டும் கூறினார். இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. மாஜிஸ்ட்ரேட்டிம் சொல்வதாகக் கூறினார். அதற்குப் பிறகு நான் வலியுறுத்தவில்லை” என்கிறார் சுதா ராமலிங்கம்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது, மொத்த முகிலன் அத்தியாயமும், ஒரு நாடகமாகவே தெரிகிறது. ஒருவரைப் பல இடங்களில் போராளியாக முன்னிறுத்தினர். அவரைக் கொண்டே தூத்துக்குடி துப்பாக்கிச் சுடுதல் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிடச் செய்தனர். அன்று இரவே அவரைக் காணவில்லை எனப் பதறினர். அரசுக்கு எதிராகப் பெரிய அளவில் பரப்புரை செய்தனர். தேர்தல் முடிந்து 45 நாள்களுக்குப் பிறகு எந்தச் சிக்கலும் இல்லாமல் அவராகவே வெளியே வந்தார்.

இந்தப் பின்னணியை வைத்துப் பார்க்கிற போது, ஜெகதீப் தன்கரைக் காணவில்லை என்பதும் ஒரு நாடகமாகவே தெரிகிறது. ஒரே வித்தியாசம், இது தேசிய அளவிலான பரப்புரையின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது. இது, 2026 தேர்தலுக்கான செயல் திட்டமா என்பது, போகப் போகத் தெரியும்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *