Blog

  • அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே!

    ஆட்படல்.. ஆளுதல்.. அன்பின் இருபக்கங்கள்.. அறிமுகமாதல்..

    அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே!

    என்ன இது? போட்டியெல்லாம்!!  மாறிவரும் உலகமிதில் மாறாத காதல் என்பதை நிரூபிக்கும் வழியா? சரி.. பார்க்கலாம்இந்த சுயவரத்தில் மற்றுமொரு முறை வெற்றிகொண்டு எனக்கு மாலையிடுங்களேன் என்று நீ அழைத்தபின் அதுவும் மனதைத் தொடும் ஒரு மடல்தான் வேண்டும் என்று அறிந்தபின்.. கரும்பு தின்னக் கூலியா? இன்றைய உலகில் எழுத்து என்பது எப்படியிருக்கும் என்கிற ஆராய்ச்சி நடக்கிறதுஏதோ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஏதோ கடமைக்காக எழுதியவர்கள்.. வாழ்க்கை என்று வந்தவுடன் எழுத்தைக் கைகழுவி விட்டார்கள்! பாவம் அவர்கள் என்பதைவிட வேறு என்ன சொல்வது? குற்றால அருவியை ஏதோ குறுஞ்செய்திக்குள் அடக்கிவிட்டதாய் கற்பனையில் வாழ்கிறார்கள்!

    bird honey animation

    பொங்கிப் பெருகிவரும் உற்சாக கங்கையை உள்ளத்துள் உணர்ந்து ஒவ்வொரு வார்த்தையையும் உனக்காக.. இது உனக்காக என்று தேர்ந்தெடுத்து தொடுக்கின்ற ஆரமல்லவா மடல்! இந்த ஆனந்தம் அறிந்தவர்கல்லவா தெரியும்? ஆட்படல்.. ஆளுதல்.. அன்பின் இருபக்கங்கள்.. அறிமுகமாதல் முதல் அடைக்கலம் கொள்ளுதல் என்று அடடா.. பக்கம் பக்கமாய் பரவிக்கிடக்கும் காதலை.. யார் இவர்கள் ஏதோ மின்னஞ்சலில் அனுப்பிவைப்பார்களாம்! அலைபேசியில் ஆழ்ந்துகிடப்பார்களாம்! சேட்டிங்கில் செத்துவிழுவார்களாம்! ஒரு மடல் என்பது ஒரு மடல் அல்ல.. அது உள்ளப் பதிவு! ஒவ்வொரு முறையும் அதைப் படிக்கின்ற போது கிடைத்திடும் ஆனந்தம் அளவிடற்கரியது! ஆழ்கடல் மனது.. அதில் அலைகள்போல் உன் நினைவு!! ஓர்நொடியும் ஓய்வதில்லை.. ஒய்யாரம் குறைவதில்லை!! வா அதிலே நீந்தலாம் என்று உன்னைத்தான் அழைக்கிறேன்!

    உறவின் பெருமைகளை உணர்ந்தவர்களால்மட்டுமே காதலின் உயரத்தை அறியமுடியும்போது.. அந்த உயரத்தைத் தொடும்போது மட்டுமே வாழ்க்கையின் பொருளை உணரமுடியும்போது.. நாம்தானே அங்கே ராஜாங்கம் நடத்துபவர்கள்! பிரிவு என்று வருகிறபோதும்.. மனம் படும் பாட்டை எழுத்தில் வடிக்கும்போதல்லவா கலம்பகங்கள் பிறக்கின்றனஇத்தனை அன்பா என்மீது என்று ஒருவர் மற்றொருவரை இன்னும் நேசிக்க முடிகிறது

    உயிரோடு ஒன்றியிருக்கும் காதலை உள்ளத்தால் தொடுகிற கலைதான் எழுத்துஅதைவிடுத்து.. எந்த வகையில் எடுத்துப் பார்த்தாலும் குறைப்பிரசவங்களாகவே அவை தோன்றுகின்றன! வாழ்வில் வாட்டம் வந்து சூழும்போதுகூட இதுபோன்ற மடல்கள் எடுத்துப்படித்தால் மனம் துன்பத்திலிருந்து மீளும்! ஒன்றிரண்டல்ல.. உனக்காக நான் வரையும் மடல்கள்.. வாழ்க்கையில் நடந்த வசந்தவிழாக்கள் எல்லாம் இன்னும் நம் மனத்தோட்டத்தில் பூத்துக்குலுங்குவதற்கு இந்த மடல்கள்தானே சாட்சி!! வெறும் சதைப்பிண்டம் நரம்பு மண்டலம் எலும்புவடிவம் அல்ல இவ்வுலகில் நாம் வாழும் வாழ்க்கை! இவற்றையெல்லாம் தாண்டி.. எங்கிருக்கிறது என்பதை அறிய முடியாத மனம்.. அந்த மனதில் நாம் இணைந்து எழுப்பிய காதல் மாளிகை.. அதை வரவேற்று வரைந்துவைத்த எண்ண மடல்கள்! சொல்லப்போனால் கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் போல ஒவ்வொருவருக்குள்ளும் இயங்கும் மனம்.. அது என்னென்ன சொன்னது..சொல்கிறது என்று இதயம் சொல்ல விரல்கள் எழுத இதோ உனக்காக நான் வரைந்த கவிதை ஒன்று!

    ஆசைநதியில் ஆடிப்பெருக்காம்!!

    இதயம்வழியும் கருணைமழையில் என்னைஅணைத்திருந்தாய்!

    கனவோ நனவோ காலம்முழுதும் உன்னைநினைத்திருந்தேன்!

    எதுகை மோனை இரண்டும் வேண்டும் எந்த கவிதைக்கும்!

    துணைதான் வேண்டும் சிறகைவிரிக்கும் எந்த பறவைக்கும்!

    உறவின்சுகங்கள் உள்ளதுகோடி உலகம் அறிவதில்லை!

    உயிரே உந்தன் நினைவேயன்றி என்னிடம் ஏதுமில்லை!

    வண்ணம்சிதறா வடிவழகெல்லாம் உந்தன் முகம்தானே?

    கனிவாய் திறந்து சொல் ஒன்று சொல்லேன்செல்லக்கிளிபோலே!

    விழிமலர்மூடி விடைகள்தேடும் வித்தையைக் காட்டட்டுமா?

    உன்பனிமலர்க் கன்னம் பக்கத்திலிருந்தும் பஞ்சாங்கம் பார்க்கலாமா?

    ஆசையைக் கொஞ்சம் ஆற்றிட வேண்டும் அன்பே நீ அருகில்வா!

    ஆற்றங்கரையும் அதற்குத் தோதாய் அழைப்பு விடுக்கிறதே!

    பூங்குயில்கூட்டம் கூவும்மொழிக்கு அர்த்தம் நானறிவேன்!

    புரியும்வரையில் உனக்கும் அதையே நானே எடுத்துரைப்பேன்!

    கொட்டும் அருவி கொள்ளை அழகு கொஞ்சம் குளிக்கலாமா?

    சாகசத் தென்றல் மேனிதழுவி சரசங்கள் நடத்தலாமா?

    பேசும் சித்திரம் பெண்மை என்றால் உன்னைக் காட்டட்டுமா?

    வீசும்காற்றாய் மூங்கில்  துளைகளில் வழிந்து ஓடட்டுமா?

    பெளர்ணமி வெளிச்சம் பாயுமிடத்தில் பஞ்சணை போடட்டுமா?

    உன்பட்டுவிரல்கள் கட்டுப்படவே மெத்தையில் மூழ்கலாமா?

    தேவைகள் எல்லாம் தீரும்வரைக்கும் கார்குழல்விரிக்கட்டுமா?

    பார்வையில் தருகின்ற போதைமதுவில் மறுபடி நீந்தலாமா?

    ஆசைநதியில் ஆடிப்பெருக்காம் அள்ளிக் கொள்ளலாமா?

    அன்பில் அணைத்து அல்லும்பகலும் இன்பம் சேர்க்கலாமா?

     

    உன்னைப் பற்றிய நினைவு வரும்நேரமெல்லாம் ஏடெடுத்து எழுதிவைப்பேன்.. அவை உன் உள்ளம்நோக்கி ஓடிவரும் அன்புவெள்ளம்! மோகமலர் சூடிவரும் ஆரணங்கின் அழகை.. ரகசியமாய் காணும் அதிசயம்தான் என்ன? நாதமணி ஓசையுடன் நடந்துவரும் போது நான் மயங்கிக் கொஞ்சம் உன்னில் சாய்கின்றேன் கண்ணேபாவிரித்துப் பாடுவது பாவலனின் வேலை.. நாவிரித்து நாளுமே போற்றுகிறேன்.. உன்னை! தேனெடுத்து கொஞ்சம் தீண்டுதலைத் தொடங்கு! தெள்ளுத்தமிழ் பண்ணில் துள்ளிவரும் நெஞ்சு!! யாழினிசை போலவரும் காதலியின் குரலில் ஏழுஸ்வர ராகங்கள் வேண்டுகிறேன் கண்ணேநீ அசைந்து வருகின்ற சோலையில் தென்றலுக்குக் கூட தெம்மாங்கு பிடிக்கும்! உனைக் காணும்நேரத்தில் பூத்திருக்கும் மலர்களெல்லாம் புன்னகையால் வரவேற்கும்! பச்சைப் பசும்புல்கூட நீ இங்கே வந்து அமர மாட்டாயா என்றேங்கும்! பறந்துசெல்லும் கிளிகளெல்லாம் ஏதோ பாடம்படிக்க அருகில் வரும்! நடுவில் உள்ள தடாகத்தில் நீந்தும் வெள்ளை அன்னங்கள் உன்னை விழுங்குவதைப் போல் பார்க்கும்!

    இவைகளுக்கெல்லாம் காட்சிதந்தபடி.. நீ என் மார்மீது சாய்ந்தாயடி.. கொள்ளை அழகு அங்கே கொட்டிக்கிடக்க.. நான் எந்த இடத்தை மெல்லத் தீண்ட என்று திண்டாட.. சொல்லுங்கள் என்று ஒரு புல்லாங்குழல் போன்ற குரலில் வருடினாய்அப்படியே என் மனதைத் திருடினாய்மைதீட்டிய விழிகளிரண்டும் மன்மதராகம் பாட.. மையலின் பல்லவிகள் மனதிற்குள் ஓட.. உன் கூந்தலில் மறைந்திருந்த மல்லிகைப்பூக்கள் தம் பங்கிற்கு மயக்கத்தைக் கூட்ட.. நான் என்ன கதியானேன் என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ?

    நான்கு குணங்களும் ஒருங்கே அமைந்த பெண்ணே.. நீயும் நாணத்தில் நலம் பாடினாய்.. வெட்கத்தில் கொஞ்சம் மூழ்கினாய்அச்சத்தில் மீண்டும் தவித்தாய்! ஆசையில் என்னைத் தேடினாய்! அன்பே என்று பாடினாய்! அல்லிவிழி மூடினாய்! துள்ளும் கயலாகினாய்! சொல்லில்வரா உணர்வலையில் சுற்றிக்கிடந்தாய்! உன் பட்டுக்கன்னங்களை என் விரல் தொட்டு விளையாட.. ‘ம்என்னும் போதையூட்டி என்னைத் தள்ளாட வைத்தாய்! இடையிடையே உன் காதருகே நான் ஏதோ சொல்ல.. கலகலவென்றே சிரித்தாய்! கட்டிமுத்தம் கொடுத்தாய்துடியிடையால் துவண்டாய்இலைமறையாய் இருந்ததை எல்லாம் எனக்கு மட்டும் தனிமறையாக்கினாய்நகங்களைக் கொஞ்சம் பற்களால் கடித்து நளினம் காட்டினாய்! நல்ல பழக்கமில்லை என்றே நானும் சொல்ல.. அந்த நகங்களைக் கொண்டு என்னைக் கொஞ்சம் கிள்ளினாய்! இல்லை.. இல்லை.. உன் மனதோடு அள்ளினாய்! இதழ்மருந்து பெறவேண்டி உன் இசைவுபெற துடித்திருந்தேன்மாலையது மறைந்து செல்ல.. இரவது வந்தது மெல்ல.. வாரிக்கொடுப்பதற்கும் வள்ளலாவதற்கும் வஞ்சி நீ காத்திருக்க.. வற்றாத தாகங்கள் வளைந்தோடும் நதிபோல.. உனை நோக்கி ஆசையின் அலைகளை அள்ளித்தெளித்தபடி.. அங்கே நான்! பேசும் சித்திரத்தோடு பெறும்விருந்து இதுவென்றே.. அரவணைக்க நானெழுந்தேன்.. அதிகாலை தூக்கத்தில்!!  

    அன்பு மனிமொழியே… என் ஆசைப் பைங்கிளியே ..- பேராசிரியர் கல்கியின் ஒரு பாடல் – “மாலைபொழுதினிலே ஒரு நாள் மலர் பொய்கையிலே …” என்ற பாடலில் முருகனே தன் கைபிடிக்க வந்ததாக எண்ணி உவகை பெற்ற காதலி “கண் விழித்தே எழுந்தேன், துயரக்கடலிலே விழுந்தேன்; கண்கள் மூடா தோ,  அக்குறை கனவினை நான் காணேனோ ..” என்று  கதறுவது போல் என் மனம் உனக்காக ஒவ்வொரு மடல் எழுதிடும்போதும் உயிர் பெறுகிறது!

    காதலியே.. என் இதயம் நுழைந்தவள் நீ என்பதால்தான் எனக்குள் இத்தனை மாற்றங்கள்! ஒருமுறை உன் பார்வை வேண்டும் என்றுதான் கேட்டிருந்தேன்.. இப்படி உன் பார்வையிலேயே என்னை முற்றுகையிடுவாய் என்று எண்ணிப்பார்க்கவில்லை! மாலையிலே சந்திக்கலாம் என்கிற விருப்பம் ஒருபக்கமிருக்க.. நாள்முழுவதும் நினைவுகளால் என்னுடன் இருக்கிறாயே அது என்ன கணக்காம்? கலாபக் காதல் என்கிறார்களே.. அது என்ன.. கண்டவுடன் காதல் என்கிறார்களே அது என்ன.. காதலிலே இத்தனை வகைகள் இருந்தாலும் நம் காதல் எந்த வகை?

    அன்பின் பரிபாஷையை அடுத்தவர் கேட்காமல் உந்தன் காதில் வந்து ஓதும் நிமிஷம் மறக்க முடியுமா? என் வருகைக்காக காத்திருந்த உன் கண்களைப் பார்.. கதைகள் சொல்லும்!  படபடப்புடன் இயங்கிக்கொண்டிருந்த உன் இதயத்தைக் கேள்.. பதில்கள் சொல்லும்!  நேற்றா இன்றா.. நெஞ்சம் நெருங்கியது எப்போது என்பதை எப்படிக் கண்டெடுக்க முடியும்?  சுவாசக்காற்றில் கலந்து உச்சரிக்கப்படும் உன் பெயர் என்றானபின் சொந்தமில்லாமல் போகுமா?  கதை இன்றோடு தீருமா?  அளவுகளால் அடங்கிப்போகாதது அன்பு மட்டும்தான் என்று நீ சொன்னபோதும்.. காதலும் பக்தியும் தராசுத்தட்டில் இருபக்கங்களில் சமநிறையுடன் இருக்கும் என்கிற உன் தர்க்கமும் என்னை சற்றே புரட்டிப்போட்டன.

    எங்கேயிருந்தாய் இத்தனை நாள் என்று நான் கேட்டபோது.. உங்களை நோக்கி நகர்ந்துகொண்டு என்று பதில் அளித்தாய்! சரிந்தேன்..விழுந்தேன் என்றேன்.. நான்.. எங்கே என்றாய் நீ! உன்னுள்ளத்தில் என்பதே என் பதில்! உள்ளமே பூவாய் மலரும் உன்னதம் காதல் என்றேன்.. நம்பமாட்டேன் என்றாய்..  உயிர்ப்பூவைக் கிள்ளிப்பார்ப்பது உனக்குப் பிடிக்கும் என்றால் என் காதலை பரிசோதனை செய்துகொள் என்றேன்!  பற்றியிருக்கும் பாசத் துடிப்பை பாதியில் நிறுத்த முடியாது!  பக்குவப்பட்ட மனதால்கூட காதலை அடக்க முடியாது! தப்போ சரியோ .. காதலுக்கு கண்கள் கிடையாது! அன்பிற்கும் அறிவிற்கும் போட்டிவைத்தால் ஆரம்பக்கட்டத்திலேயே.. அறிவு சரணடைந்துவிடும்! அன்பே அங்கு வெற்றியுறும்!  போதும் என்று சொல்கிற எந்த மனமும் போதும் என்று நினைப்பதில்லை.  வேண்டாம் என்று சொல்லும் பெண்மனம் இப்பூமியில் இருக்கவே நியாயமில்லை!  யாரிங்கே யார்வசம் யார் சொல்லக்கூடும்? தத்துவங்கள் எல்லாம் தவிடுபொடியாகும்.. அத்துமீறல்கூட அவசியமாய் தோன்றும்!

    இன்றுவரை இந்த பூமியில் காதலில் விழுந்தவர்கள் கணக்கை எண்ணிப்பார்க்க முடியுமா?  பரஸ்பரமாய் நெஞ்சில்பூக்கும் இந்தப் பவளமல்லிகையை.. உள்ளம் உள்ள எவரும் மறுப்பதில்லை..  உன்னில் நானும் என்னில் நீயும் என்றாகும் ஒரு நிலை என்பதை நீ உணரத்தொடங்கிய அந்த நொடியில்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கிறது!  இது வெறும் உடற்கூறு அல்ல.. உள்ளத்தின் கூறு என்பதை உணரும்படி கூறவா? சொந்தம் என்பதும் பந்தம் என்பதும் எங்கு இருக்கிறதோ அங்குதான் அன்பு நிலவும்.. ஆசை தவழும்.. இன்பம் தழுவும்.. இதயம் மலரும்! அக்கறை என்று எப்போது ஏற்பட்டுவிடுகிறதோ..  இனி நாளெல்லாம் அப்படித்தான்!

    அன்புடன் கவிச்சந்திரன் 

    மு.இரவிச்சந்திரன் (காவிரிமைந்தன்)

    115  24வது தெரு  சங்கர் நகர்

    பம்மல் சென்னை 600 075

    தற்போது – அபுதாபி – ஐக்கிய அமீரகக் கூட்டமைப்பு

    0091 9444236999

    00971 50 2519693

    kaviri2012@gmail.com

    www.thamizhnadhi.com

    Share
  • அன்பே மணிமொழி!

    சின்னதொரு மனதுக்குள்ளே சிங்காரத் தேர் போன்றது!

     

    அன்பே மணிமொழி!

    காலமெல்லாம் நம் காதல் மலர்ந்த நாள்முதல் வரைந்த கடிதங்கள் – தமிழால் உன்னை அளந்த கடிதங்கள்.. நம் அன்பைப் பொழிந்த கடிதங்கள்.. இலக்கியத் தமிழால் இதயம் நனைக்கும் கடிதங்கள்.. ஒன்றா இரண்டா.. அப்படி நம் காதல் பொக்கிஷத்தைப் புரட்டிப் பார்த்தேன்.. பிடித்தப் பக்கங்களை இங்கே உன் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்!

    கற்றாரும் கல்லாரும் காதலை மறந்தார் எவருமில்லை என்கிற வகையில் உற்றாரும் உறவினரும் உயிர்கொண்டோர் அனைவருமே பெற்றிடும் பேரின்பம் இவ்வுலக வாழ்க்கையிலே இதற்கு ஈடு இணை இல்லை என்பதாக.. முற்றாத கனியிதுமூன்றாம்பாலிது! மோகன ராகமிதுமூழ்கிக் கரையேறுவது! அச்சாரமிது!  ஆனந்தப் பாடலிது! அணைகளிட்டாலும் கரைகளை மீறுவது! உதட்டளவில் நில்லாமல் உள்ளத்தளவில் புரளுவது! உயிரோடு உயிராக உலவி வருவது! கற்பனைக் கடலிது! காதலின் நிலையிது! வற்றாத ஜீவனிது! வழிந்தோடி வருகிறது! அறிவினால் அறியப்பட்டாலும் அன்பினால் ஆளப்படுவது! ஐம்புலன்களையும் ஆட்சிபுரிவது

    அலைகள்போலவே அடங்க மறுப்பது! ஆற்றின்நீர்போல் பாய்ந்து வருவது! மேடுபள்ளங்கள் யாவும் கடப்பது! ஜாதிமதங்களையும் கேள்வி தொடுப்பது! முப்போதும் எப்போதும் உள்ளம் கேட்பதுதப்பாது உயிர்தன்னில் தாமாக முளைப்பது! கடும்குளிரில் நடுங்காதது! சுடும்வெயிலில் சுருளாதது! சட்டங்களால் மிரளாததுகஷ்டங்களால் கலங்காதது! காதல் ஒன்றே உயிரானதுபேதங்கள் பாராதது! எண்ணங்களில் நீராடுது! ஏக்கங்களில் கரைமோதுது! சின்னதொரு மனதுக்குள்ளே சிங்காரத் தேர் போன்றது! இன்பத்தைப் பொழிகிறதுஇதயத்தை நனைக்கிறதுபிரிவென்று வந்தாலும் உயிரீந்து காக்கிறது! அன்பிற்குப் பொருளை அழுத்தமாய் சொல்கிறது!

    அவளுக்கு நான் தான் என்றெண்ணி வாழ்கிறது! அவனுக்கு நான்தான் என மறுபிறவி எடுக்கிறது! அனுதினமும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! வாழ்க்கைக்கு பொருள் எல்லாம் இதிலிருந்தே தொடங்குகிறது! இதைவிடுத்து கணக்கிட்டால் வறட்சிதான் வளர்கிறது! மலர்கின்ற பூக்களெல்லாம் இதழ்விரித்து சிரிப்பதுவும்.. மழைகூட இம்மண்ணில் தவறாமல் பெய்வதும்.. இதுவெல்லாம் காதலைத்தான் வாழவைக்க என்று உறுதிமொழி எடுக்கிறது! வசந்தகாலம் வருவதுவும் வைகறையில் சூரிய உதயம் என்று எதையெடுத்துக் கொண்டாலும் இவையெல்லாம் காதலுடன் மானிடரை வாழ்த்திடவே வைக்கிறது! தோல்வியெனும் பள்ளமதில் தான்வீழ்ந்த பலரையும் வெற்றியெனும் சிகரம்நோக்கி படையெடுக்க வைக்கிறது!

    நான் என்னும் தத்துவத்தை தானாக அறியாமல்.. தன்னுடனே இன்னொரு உயிர்சேரும்போது புரிகிறது! வீணான மனக்குழப்பம்  யாதாக இருந்தாலும் காதலியின் கடைக்கண்ணில் கற்பூரமாகிறது! தேடும்பொருள் கையில்கிடைக்க.. தேவியருள் நித்தமென வாழ்வதிலே அர்த்தமிருக்கிறதுவிண்ணிலிருந்து விழுந்தமழை மண்ணில்வந்து சேர்ந்தவுடன் நிறம்மாறிக் காட்டுவதுபோல் நம் மனதில் புத்தம் புதியதாய் காதல் கொடி பறக்கிறது!  சங்கீத மேகங்கள் சதிராடும் நேரங்கள்.. நம் காதல் சந்தங்களை ஸ்ருதியோடு பாடுகிறது! இமைக்காமல் உனைப் பார்க்க ஏகாந்தம் தான்பிறக்க.. வளர்காதல் நிலையாக வந்துவிட்டேன் என்கிறது! எழுதாத வார்த்தை எங்கே .. இன்னும்கூட இருக்கிறதா என்று நீ என்னைக் கேட்க.. உன் கண்கள் பேசும்நாள்வரை புதிய அகராதி வந்துகொண்டே இருக்கும் என்றேன்!!

    மனக்கோவில்சிலையாய் நீயும் எனக்குள்ளே அமர்ந்திருக்கும் மகராணியே! மலர்மாலை தினம் சூட்டி தரவேண்டுமா அர்ச்சனைகள் என்று கேட்டதற்கு கவிமாலை போதும் என்று கண்ணசைவால் பதில் சொன்னாய்!  புத்தம் புதியதாய்.. உன் புகழ்பாடிடவே.. கற்பனை மேகங்களில் கொஞ்சம் தவழ்ந்து.. காற்று, மழை இவை யாவிலும் ஊர்வலம் கண்டு நீ போற்றும்வகையில் கவிமடல்கள் வரைந்திட நானும் கற்றுக் கொண்டேன்!!

    சுகமும் சோகமும் சொந்தம் கொள்ளும் மனித மனம் காதலிலே விழுந்துவிட்டால் இந்தக் கலவை வந்து பற்றிக்கொள்ளும்!  இது மகிழ்ச்சியின் உச்சமா என்று முன்மொழிந்தால்.. சில நேரம் கவலை என்னும் வலையாகவும் இது மாறும்!  வாழ வந்தவள் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டே என்னை ஆளவந்தவளாய் மாறுகின்ற விசித்திரம் என்ன?  இதயத் தாமரையில் இதழ்கள் விரிப்பு எல்லாம் சிறப்பாய் நடப்பது எப்போது தெரியுமா.. உன் முகம் பார்த்து உறவாடி.. உயிரின் சுமையை உள்ளம் மறந்து உன் மடியில் தலைசாய்ப்பேனே அப்போது!!

    தேவ சுகம் என்பதெல்லாம் இதுதான் என்று தேவியே உன்னிடம் நான் கண்டேன்!  அதுவும் தேவைகள் அறிந்து சேவைகள் செய்வது உறவின் பெருமையல்லவா? வாய்திறந்து பெண்மை சொல்லும் வழக்கமான ஒற்றைச் சொல்லும் அங்கே வந்து வந்து போகும்! வண்ணக் கனவை எண்ணம் சுமந்து சுகமாய் தாளம் போடும்!  எதையோ சொல்ல வாய்திறக்க.. அதையே சொல்லி நீ தடுக்க.. நெஞ்சங்கள் இரண்டும் சங்கமமாகும் திருக்கோலம் என்ன சொல்ல?  வற்றாத ஜீவநதிபோல் நாளும் வளரும் காதல் மோகம்.. தொட்டால் மலரும் பூவாய் தொடங்கும் கதைகள் என்ன?  விரல் பட்டால் சிலிர்க்கும் பூவை.. விழிமலர் திறந்து விடைதரும் பார்வை என்வசமாகும்போது.. விடியும்வரை கதைபடிக்கும் படலம் தொடரும்! அம்மம்மா.. என்று நீ மூச்சுவிடுவது ஆனந்தலஹரியாக.. அங்கேதான் தோன்றும் இன்பம் எப்படி வார்த்தையில் சொல்ல?

    கயல்விழி ஜாலம் கிடைத்திடும்போது கவிதைக்கு ஊற்று பெறுவேனே!  புதுமொழி பயிலும் மாணவனாக உன்முன் நானும் நிற்பேனே!!  அறிமுகம் ஏதும் இல்லா நிலையில் அரிச்சுவடியிலிருந்து தொடங்குவேனே!  கிளிமொழி பேசும் காதலியின் அடிமனம் தொட்டுப் பாடிடுவேன்!  அன்பின் சுவாசம் இனி வேண்டும் என்றே அனுதினம் அடைக்கலமாகி வென்றிடுவேன்!  இதுவரை நடந்த நாடகத்தை மறு ஒத்திகை பார்க்க வரவேற்பேன்!  இனித்திடும் இரவுகள் இன்றுமுதல் என்று உன் இருவிழிவாசலில் எழுதிவைப்பேன்!!  எதுவரை இன்பம் எனக்கேட்டால்.. நம் உயிர்வரை பயணம் தொடருட்டுமே!!

    அன்றொரு நாள் நீ… கார்குழலைக் கலைந்தாடவிட்டபடி..  கன்னி நீயும் காத்திருந்த கணத்திலேதான் கவிதை சொல்ல உன் அறையில் நான் நுழைய, எத்தனையோ அலைகளடி எந்தன் பின்னே.. எல்லாமே உன்னை வந்து சேரும் முன்னே! அட.. என் ஆசைகளைச் சொன்னேன்!  உன் கண்ணசைவில் நூறுவித அர்த்தங்கள்.. களிநடனம் காட்டுகின்ற பெண்மயில்!  என் மடியில் கண்ணுறங்க வேண்டுமென்று ஏகாந்த வேளைதனில் ஏங்கிநிற்க.. மையலுடன் மையல்கொண்டு நானுமங்கே மலர்க்காற்றின் தாலாட்டில் மயங்கிநின்றேன்!  எண்ணத்தில் வந்த பல ஆசைகளும் உன் வண்ணத்தைக் கண்டு அங்கே சொக்கிநிற்க.. சந்தங்களைச் சொல்லிச் சொல்லி காட்டு கண்ணே.. சரணங்களாய் வந்து நிற்பேன் உந்தன் முன்னே!  அந்திபகல் இரண்டிலுமே தொடர்ந்திருக்கும் உன்னுடைய நினைவுகளே எந்தன் சொர்க்கம்!

    கண்விழித்தால் மட்டுமல்ல உந்தன் பூமுகம்! கனவுகளிலும் தொடருகின்ற விந்தை அற்புதம்! சந்தனத்தால் செய்துவைத்த சிற்பம் நீயடி.. உனைச் சாய்ந்தபடி பாடுகிற இன்பம் நூறடி!!  உன் தேகமது வீணைபோல எந்தன் மடியிலே வந்ததொரு வசந்தகால பூக்கள் தூவவே..  விரல்களினால் மீட்டுகின்ற ஸ்வரங்கள் கேளடி.. இதயமது வழியுமின்ப கலசம்தானடி!!  விடியும்வரை தொடருமின்பக் கதைகள் பாரடி என்று உன்னை எடுத்தணைத்த போதுவந்த இன்பங்கள் கோடி!  முத்தமிழில் மூன்றாம் தமிழ் போதுமென்று உன் முகபாவணைகள் சொல்ல..  முதல் தமிழால் அதை நான் அலங்கரித்து வார்த்தையில் சொல்ல.. இடையில் உள்ள தமிழ் மட்டும் சும்மா இருக்குமா? ‘ம்’ என்னும் ஸ்வரமெடுத்து பாடியதே!!   அள்ளும்கரம் அணைக்கவரும் என்றபடி அங்கங்கள் அங்கங்கே சுபலாலி பாடுதற்கு நாங்கள் தயார் என்று சொல்ல.. முத்துச்சரம் தத்தையிடம் நித்தம்வளர் சுகங்களென முத்திரையிட்டதே!

    நீ இட்ட அடி நோகுமென்று அடுத்த அடி எடுத்துவைக்க.. மலரணைகள் விரித்திடுவேன்.. சித்திரமே.. செந்தமிழே.. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனும் சீர்கொண்டுவரும் சேயிழையே.. அன்னம்போல் நடைநடக்கும் என்னவளே.. அழகுதாமரைபோல் இதழ்விரிக்கும் சின்னவளே.. உன் கன்னங்களில் விழுகின்ற குழிகளில் என்னைக் கொஞ்சம் தடுமாற வைப்பவளே.. ஆருயிரே.. ஆயிழையே.. ஆனந்தப்  பூங்காற்றே! நேரிடையாய் என் நெஞ்சத்தைக் குறிவைத்துத் தாக்கும் உன் போர்முறையை கொஞ்சம் மாற்றேன்! கொள்ளையிடுவதற்கு பல்வேறு வழிகள் கொண்டுதிகழும் காதல்பொதுமறையைக் கற்று சொல்லெடுத்து கொஞ்சம் சுழற்று!  கள்ளவிழிபேசும் மொழியை எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடு!!

    ஓர் நொடிக்குள் ஓராயிரம் பரிபாஷை பேசும் உன் கண்கள் மட்டும்தானடி என் கவிதைக்கான களன்!  மறுபார்வை பார்ப்பதென் வழக்கம் என்றாலும் முதல்பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல்.. சில நேரம் மலைத்துப்போகிற சங்கதிகள் நிரம்ப உண்டு! வெட்கித்தலைகவிழும்நேரம்கூட உன் கண்கள் ஓரப்பார்வை பார்ப்பதால் அந்த நிமிடமும்கூட அந்தரங்கத் தொடரெழுதும் அழகென்ன!  ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாய் அங்கே அணிவகுத்து வருவதென்ன? பேசும்விழிகள் அங்கே பேசாதிருப்பதென்ன?  ஓசைகொண்டெழுதும் உள்நாட்டு விவரங்களை ஆசைகொண்டெழுதும் அற்புதம் நடப்பதென்ன?

    உன் மைவிழிக்கூடு செய்கின்ற ஜாலத்தில் என் மெய்மறந்து போகிறேன் நான்! சொல்லுதிரும் வாயோ சொல்லாமல் போக.. உன் பொல்லாத கண்கள் எனை ஆள்வதைக் காண்என்னுயிரில் பாதி ஏந்திழையாள் கொள்ள.. அரைகுறையாய் ஆனவன்தான் நான்.. இதில் நிறையென்று கொள்வது நின்னிடம்தான்!   ஏட்டினில் எல்லாம் எழுதிட முடியுமா.. ‘மனது’.. தனக்குள் எப்போதும் வைத்துக்கொண்டே.. மீதியைத்தான் தருகிறதுஇருந்தாலும் என்ன.. தினசரி அதிலே ரகசியக் கொள்ளை அவசியம் செய்து வரைகின்ற மடல்கள்இன்னும்கூட சொல்லப்போனால், உன் அழகெனும் முதலுக்கு.. அன்பெனும் வங்கிக்கு.. நான் கட்டும் வட்டிதானிதுவென்று வைத்துக் கொள்ளலாமா? அதை இனி ஊருக்கும் சொல்லலாமா?

    மோக அலைகள் கூடும் நிலையில் பாடும் கவிதை பாரடியோ! ஆசைக்கடலில் பேசும் அலைகள் அதுபோல் நெஞ்சம் தானடியோ! கோடி கதைகள் பேசும் விழிகள் கற்றுத்தந்தது யாரடியோ? தேவை எதுவோ தீரும் வரையில் தாகம் எடுப்பது எங்ஙனமோஊடல் வந்தால் உள்ளம் முழுவதும் உருகிவிடுவது எப்படியோ? உனக்கும் எனக்கும் கணக்கு எதற்கு என்று கேட்பது விசித்திரமோ? கேட்டுப் பெறுவது சுகம்தான் எனிலும் கேளாமல் தருவது பெருமையன்றோ? பார்த்துக் களிப்பதில் பரவசம் வருமே பாவை நீதான் அறியாததோ? சேர்ந்து நடப்பதில் இருவரின் நெஞ்சம் இடம் மாறித் துடிப்பது உண்மைதானே! ஒருமித்த எண்ணங்கள் ஊர்வலம் போகும் பாதை காதல் வழிதானே! உன்வசம் என்னை ஒப்படைத்தபின் உரிமை கொள்வது சுகம்தானே! மறுமுறை வரும்வரை மனம் படுகின்ற பாடு கொஞ்சமல்லவே தேன்மொழியே! உறவின் பெருமைகள் உள்ளம் உணர்வதால் உண்டாகும் உயிரெனப் போற்றிடும் நிலையதுவேமாலையிடுவதும்.. மஞ்சம் தொடுவதும் மரபினில் வருகின்ற முறைதானே! நிறைகுடம் போலவே நீயங்கு வந்து நெஞ்சம் தொடுகிற கோலமென்ன? என் இருவிழியரங்கிலும் நீயே நிறைகிறாய் என்றதும் வருகிற வெட்கமென்ன?

    தன்னிலை மறக்கும் என்னிலை பற்றி உன்னிடம் சொல்லிட ஓடிவந்தேன்அங்கு பெண் நிலை என்ன என்பதை அறிய இன்னமும் நானும் ஆவல் கொண்டேன்என்னிடமிங்கு நானே இல்லை என்பதால் உன்னிடம் என்னைத் தேடுகின்றேன் என்று மெய்யகம் காட்டி என் தோள் சாய்ந்தாய்என்னடி இதுவென உன் விழியிமை திறந்து உன்னிடம் நான் கேட்ட கேள்விக்கு சொன்னது பதில் ஒரு சொல்தான் அதுவே காதல்என்று! நாளும் பொழியும் உங்கள் சொல் மழையில் நான் மட்டும் நனைகிறேன் அல்லவா பாழும் இதயம் வாழும் வரையில் தேவை உங்கள் செந்தமிழ் என்றாய்! என் எண்ணத்திரையில் என்றுமே உனை நான் பொங்கும் தமிழினில் வரைந்திருப்பேன் .. கண்ணே என்பேன்! கண்மணியே என்பேன்! காலம் முழுவதும் உன்பேர் சொல்வேன்!

    அன்புடன் கவிச்சந்திரன் 

    Share
  • அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே..

    எந்தன் கணிணி திறப்பின் ரகசிய குறியீடு எண்ணாக உன் பெயரே!!

    அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே..

    எண்ணங்களில் உனைச் சுமந்து.. ஏட்டளவில் அதை வரைந்து.. எழுதிவைக்கும் கடிதங்கள் எல்லாமே உன் திசை நோக்கி ஏற்றிய தீபங்களே!!  அன்பின் அடர்த்தியை அன்றாடம் எனக்களித்து ஆதாரம் நீ என்பதை என் நெஞ்சில் நிலைநிறுத்தியவளே! கண்துயிலும் நேரம்கூட கனவுகளில்தான் கலந்து ஒன்றாகி இருக்கின்ற உறவே! மண்மூடும் நாள்வரையில் மறக்காத உன்னை நான் ஒரு நாளும் எண்ணிடவே மறவேன்! இதயத்தில் எழுதிவைத்த உன் பெயரில் இம்மியளவும் மாற்றமில்லை பார் என்றே இரவுபகல் துடிக்கின்ற இதயமது சொல்வதை நீ வந்து கேள் கண்ணே!  நாட்கள் கழிகின்றன! வாரங்கள் வருகின்றன! மாதங்கள் செல்கின்றன! வருடங்கள் உருள்கின்றன! மங்கையே நீ எங்கே சொல்? 

    பிரிவென்னும் இருளினிலே தவிக்கின்ற என்னை நீ மறந்தாயோ என்றுமட்டும் என்னால் எண்ணிப்பார்க்க இயலவில்லை! கண்களால் பேசும் கலையினைக் கற்றுத்தந்தாய்!  காதல் என்னும் பல்கலைக்கழகத்தைக் கண்களிலே திறந்துவைத்தாய்! கவிஞன் என்கிற அடையாளத்தை உனக்காக வரைகின்ற ஒவ்வொரு வரியிலும் நிச்சயித்தாய்! ஆழ்மனதில் உன்னைமட்டும் பத்திரமாய் வைத்திருப்பேன் என்று நீ சொல்லிய சொற்கள் இன்னும் என் காதுகளில்! அன்பின் நீலாம்பரியாய் நீ அனுதினமும் என்னில் வந்தாய்! தினமும் காலையிலே பூபாளம் பாடி எனைத் துயிலெழுப்ப வருகின்றாய்! அனுதினமும் அமிர்தவர்ஷினியாக அன்புமழை பொழிகின்றாய்! இமைப்பொழுதும் நீங்காதிருக்க இரவிலும் நீலாம்பரி நீயாகின்றாய்! இத்தனை சுகங்களிருக்க.. ஏனடி முகாரி தந்து பிரிவில் என்னைத் தள்ளுகிறாய்? திகட்டத்திகட்டப் பேசியிருந்த காலங்கள்.. திசைமறந்து போனது இக்கணமோ?

    கவிதைவழி உறவே.. கனிந்துருகும் நினைவே.. நீ எனக்காக எழுதிய மடலொன்று உன் மனதின் பிரதிபிம்பமாய் இதோ என் நினைவுப்படலத்தில் நித்தம் நிழலாடுகிறது!

    மாயம் செய்தவனே!!

    ஒன்றா இரண்டா உன் மடல்கள்

    ஒவ்வொன்றும் எனக்கானதன்றோ?

    தேனா கள்ளா நானறியேன்

    திசைகள் மறந்து நான்பறந்தேன்!!

     

    கவிதைப் பாற்கடல் வார்க்கிறாய்

    காதலில் நூதனம் சேர்க்கிறாய்

    களவியில் வாழ்க்கைப் பாடத்தை

    கரும்பென வார்த்தையில் வடிக்கிறாய்!!

     

    தலைப்புகள் தருவதில் மன்னனாய்

    தலைப்புக்குள் நீயொரு கண்ணனாய்

    மயக்கம் தருபவன் நீயன்றோ?

    மலர்ந்தேன் நானும் பெண்ணன்றோ?

     

    காவிரி என்கிற பெயர்கொண்டு

    கரைபுரண்டு ஓடும் தமிழ்கண்டு

    ஆவலைத் தூண்டும் அலைகடலே – நான்

    காவலைத் தாண்டும் நாள்வருதே!!

     

    எழுதும் ஒவ்வொரு சொல்லிலும்

    ஏகாந்தம் கலப்பது எப்படி?

    ஏட்டினில் பதியும் மடல்களில்

    எத்தனை எத்தனை சுகமடி??

     

    உறக்கம் மறக்க வைக்கிறாய்

    உள்மனதில் எப்போதும் நிற்கிறாய்

    உலகம் முழுக்க சொர்க்கமாய்

    உடனே மாற்றிக் காட்டுகிறாய்!!

     

    முத்தம் மோகம் மோகனம்

    பித்தம் பிடிக்கவே வைக்கிறாய்

    நித்தம் இதுபோல்நீ தொடர்ந்தால்

    சித்தம் என்னடா ஆகிடும்??

     

    நீ பொழியும் கவிமழையில்

    நான் நனைந்தபிறகுதான்

    என்னிருவிழிகள் மெளனமாய்

    தூக்கம் கொள்ளச் செல்லுமே!!

     

    செந்தமிழில் தொட்டில்கட்டி

    என்தலைவன் பாடும்போது

    உன்மடியில் தலைவைத்தே

    கண்ணயர்வேன் கண்ணாளா!!

     

    சிந்துகவிச் சரம்யாவும்

    வந்துவந்து மோதுகையில்

    என்வசத்தில் நானின்றி

    உன்வசமாய் ஆகின்றேன்!!

     

    அன்புமழை தினம்பொழிந்து

    ஆனந்தத் தேனில்நனைந்து

    இன்பமதை அணுஅணுவாய்

    இதயம்வழியத் தருபவனே!!

     

    உன்னிதயம் நான் வசிக்கும்

    பள்ளியறை ஆனதடா!!

    ‘ம்’என்ற ஒற்றைச் சொல்லும்

    உன்வரையில் நாதலயம்!

     

    கண்மலர்ந்து கவிதைசொல்ல

    காதலனே நீ வருக!!

    என்னிடத்தில் உள்ளதெல்லாம்

    உனதென்று உரிமை கொள்க!!

     

    பெண்மையினை பேசவைக்கும்

    உன்மடல்கள் ஆயுதமா?

    உன்னை நான் களவாட..

    என்னுள்ளம் எங்கும் நீயாட

    உன்னடிமை ஆனதனை

    உரிமையோடு கூறிடுவேன்!”

    மறக்குமா நெஞ்சம்? மறந்தால் உயிர் நிலைக்குமா இன்னும்!!  எழுதிவைத்த ஓவியம்போல் என் நெஞ்சில் குடிகொண்ட உன் வார்த்தைகள் எத்தனை இன்பமடி!!

    செவ்வாய் கனிந்து அவ்வாய் மலர்ந்து அருளிய முத்தங்கள் தித்திக்க.. பெண்மையின் மென்மையில் பேசமறந்த நான் உன்னை எண்ணியே வாயசைக்க.. இன்னுமா என்று நீ கேட்டாய் கண்ணசைவால்!  ரத்தத்தில் கலந்தினிக்கும் முத்தத்தைக் கொண்டு சித்தத்தைக் குளிரவைக்கும் கலையினையே காதல் புத்தகத்தில் எல்லாப் பக்கங்களும் பக்கம் பக்கமாக விவரிக்க.. கண்ணே.. உன்னிடம் நான் சொல்லவந்த சேதி என்ன தெரியுமா? அக்கம் பக்கம் யாரும் இல்லை.. வெட்கம்விலக்கி இங்கே வா! முன்னுரை எழுத முகம் மட்டும் தா! கன்னங்கள் இரண்டும் கடன்கள் கேட்கும்.. நமக்குள் என்ன கணக்கா? 

    வண்ணம்சிதறாமல் வந்துவிழும் முத்தங்களை ஒன்றுவிடாமல் சேர்த்துவைக்க கன்னங்களைவிட ஏற்ற இடம் எங்கே சொல்? கலகலவென நீ சிரிக்க.. உன் கெண்டைக் கொலுசுகள் ஜதிசொல்ல.. வாயாடி வளையல்கள் சிணுங்க.. அப்பப்பா.. எத்தனை சப்தஸ்வரங்கள்.. இதற்கிடையில் சத்தமிடாமல் முத்தமிடுவது எப்படி? புதிதாய் ஏதோ வரம்கேட்பதுபோல்.. புன்னகைப் பூவே.. உன்னிடம் நான்.. ஒன்று என்கிறேன்.. வேண்டாம் என்கிறாய்! ஆவல் தீரவே அள்ளி அணைக்கிறேன்.. அதற்குள் என்ன அவசரம் என்கிறாய்! கிடைக்கும்பொழுதை இனிக்க வைப்பதற்கு இதுபோல் சேவைகள் வேண்டும் என்றேன்! தேவைகளுக்கு புதிய பெயர் சேவைகளா என்று செல்லமாய் கிள்ளினாய்! ஏதோ கோர்வையாய் வருகிறதே என்று சொல்லிவைத்தேன் என்றேன்! கவிஞருக்கு எதுகையும் மோனையும் கைவந்த கலைதானே என்றாய்! ஒருபக்கம் நீயும் உன் பக்கம் நானும் இருந்தால் முப்போதும் நான் கவிஞன்தானே!

    நேற்றிரவு ரகசியமாய் உன் நெஞ்சம் தொட்டு எழுதிய வரிகளிவை..  பார் கண்ணே!  இன்பக் காதல்!  இலக்கியக் காதல்!  நினைக்கும்போதே இனிக்கும் காதல் என்பதில் வியப்பென்ன?

    அசைந்தாடும் அழகிய வண்ணங்கள்.. நீர் அள்ளித்தெளித்து அங்கே புள்ளிவைத்து நீ வரைந்த கோலங்கள்.. வைத்த கண் வாங்காமல் அதை நான் பார்த்த காலங்கள்! காலையிளந் தென்றல் போகும் வழிதனிலே மங்கை நீ நடைபோட்ட மாயங்கள்! ஊரணியை நோக்கி நீ நடந்து ஓர்குடத்தைச் சுமந்து நீர் கொண்டுவர.. காதலியைத் தேடி நானும் பின்தொடர்ந்து பல்லவியைத் தொடரும் சரணம்போல! உன் பாதக்கொலுசொலி சொல்லிய ஜதியைக் கேட்டு என் திசைகள் திரும்பிக்கிடந்தன!  ஓரவிழிப்பார்வையால் ஒரு பார்வை பார் என்றே என் உள்ளம் உன்னை நோக்கித் தவமே கிடந்தது! மண்ணை நோக்கிய உன் பார்வை என்னை நோக்குவது எப்போது என்கிற கேள்விக்கு விடைகிடைக்காமல்..

    தன்னையே உன்னிடம் தந்தவனாய்.. தாகம் உன் மேல் கொண்டவனாய்.. பெண்மையே வரம்தர வேண்டுமென்று நித்தமும் காத்திருக்கும் என் நெஞ்சம்! தும்பைப்பூ மலர்காட்டும் நிறம்தன்னை தூய நின் உள்ளத்திற்கு உவமையிட்டு.. சொல்லவிரும்பும் காதலை சொல்வதற்கு வார்த்தைக்கு வலிமையின்றி.. நான் தவித்த கதைதன்னை நீயறிவாய்!  ஏதோ விக்கல் வந்தவனாய் நான் நடிக்க..  அதையும் அறிந்தே நீ வந்து நீர்கொடுக்க.. கண்சிமிட்டும்நேரத்தில் நம் கண்கள் ஒன்றோடு ஒன்று கலந்துகொள்ள.. தீராத தாகமங்கே தீர்ந்ததென்பேன்! ஆறாத காயமங்கே ஆறியதாய்.. அன்பே நான் உணர்ந்தேன் அக்கணமே! போராட்டம் நடத்திய உன் இமைச்சிறகுகள் தாமாக தாழ்ந்தனவே வெட்கத்தால்!

    யாரேனும் பார்த்துவிடப்போகிறார்கள் என்கிற பதட்டம் மட்டும் உன்னில்! மாலைக்கருக்கலென்றாலும் மலர்வனமே.. சோலைக்குள் நாம் கொஞ்சம் ஒதுங்கிநிற்கலாம்! காலைக் கதிரவனின் கடமையாற்றலிலே இவ்வுலகம் வெளிச்ச இதழ்களின் விரிப்பில் மலர்கிறதே!  நீர்த்துறையிலிருந்து நிறையவே பெண்கள் யார் கண்ணில் யாரென்று கணக்கெடுத்து வருகின்றார் பாரும் என்று உன் கண்ணசைவில் சொல்லிவிட்டுச் சென்றாய்! நீ அவசரத்தில் அள்ளியதால் குடத்தில் நிறைவுக்கு வழியின்றி நீரும் தள்ளாடித் தள்ளாடி நடத்தும் சங்கீதம் கேட்டபடி நானும்.. உன் வழியே நடைபோட்டுப் போனேன்! தொட்டுவிடத் தோதின்றி தொடர்ந்துவந்த உறவில்.. கண்பட்டுவிட்டால் போதுமென்று காத்திருந்த காலம்!

    மாலை வருகிறேன் என்று மலர்க்கூந்தல் தனைப்பின்னி மகராணி காட்டிவிட்டாய் கோலம்! மனக்கதவைத் திறந்துவைக்க.. அங்கே எனக்கான ராஜ்ஜியங்கள்.. மையல்காலத்தில் மெளன ராஜாங்கம்! உந்தன் கரங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ள நினைக்கும் மனம்! எண்ணத்தை எழுதிவைத்ததுபோல் எப்படி நீயும் அப்படியே நினைக்கிறாய்? கற்பனைக் கலப்பில்லை.. கவிதைக்கு இடமில்லை.. சொற்களின் கூட்டணிகள் ஒருதுளியும் அங்கில்லை!  கண்கள் நான்கு  கலந்தபடி.. காதலின்பம் பொழிந்ததடி!  இந்திரசபை போல இதயம் திறந்ததடி!  மந்திரம் செய்தாயோ மாற்றம் நிகழ்ந்ததடி!! வார்த்தைகளைவிட அங்கே மெளனமே சிறந்ததடி! என்றும்  இருதயத்தின் அடித்தளத்தில் குடியிருப்பு நடத்தும் பெண்ணே.. நீ எந்தன் காதலி என்கிற பந்தம் கர்வம் தந்ததடி!

    உன் பெயரைச் சொல்வதிலே உள்ள சுகம் என்றைக்கும் குறையாது என்பேனே! உயிர்சுமந்து செல்கின்ற வழியெல்லாம் உன் பார்வைதான் வேண்டும் பொன்மானே! கண்வழியே நீ நடத்தும் காதல்  பாடங்கள் காலமெல்லாம் நான் படிக்கும் நூலாகும்! தேன்சிந்தும் மோகனங்கள் உன்னிலுண்டு.. அவைதானே நான் விரும்பும் அச்சகங்கள்!! மறுபிறவி வரை உனை விரும்பும் என் மனம் மாற்று இங்கே கொள்வது எவ்விதம்? மனசுக்குள் மழைபொழியும் காதலியே.. மெளனத்தால் எனை அழைக்கும் காதலியே.. ரகசிய பாஷைகள் போதாதா பரிமாற.. அவை உன் கண்வழியே பிறந்து எனைத் தாக்க!!  இதழ்திறந்து பேசடி நீ என்றேனே.. அப்போது இதயம்திறந்து காட்டுவாய் என்பதால்தானே!! ஒவ்வொரு வார்த்தையிலும் இனிப்பிருக்கும் என் அஞ்சுகமே.. நீ எப்போதும் என்னருகே இருக்கும்போது!!  மலர்வாய் மொழிசொல்லும் மரகதமே!  இன்பயாழ்மீட்டும் விதம்போலன்றோ உன் குரலே! கண்ணாடி முன்நிற்கும்போது நீ உன்னழகில் மயங்கிவிடாதே.. எந்நாளும் எனக்கான ராணி நீ!  எனைக் களவாடிய கணம் முதலாய் மறவாதே!  பிடிவாதம் எதை நீ செய்தாலும் அடியேனை அணைத்துக்கொள் என்றுதானே கேட்கிறேன்!  ஊடலுக்கும் கூடலுக்கும் நடுவினிலே அடடா.. எத்தனை ஆழமான பள்ளமது சொல்லவா? தப்பித்தால் கரையேறிச் செல்லலாம்!  தடுமாறி விழுந்தால் நான் என் செய்வேன்?  கோபம் நீ கொள்வதெல்லாம் சரிதான்!  என் மீது வேண்டாம் என்றுதானே சொல்கிறேன்!  கரைதொடவே வரும் அலைகளை நீ பாரடி.. கதறுவதாய் கொண்டாலும் கொள்ளலாம்! மகிழ்ச்சியிலே புரளுவதாய் கொண்டாலும் கொள்ளலாம்! மனம் எதை எடுத்துக் கொள்கிறதோ சொல் நீ!  காதலுக்கு இலக்கணங்கள் என்ன உண்டோ கண்ணே அதை நீ கடைப்பிடி!  மாறாய்.. வேதனையை பரிசளிக்க நீ விரும்பினாலும் மறுப்பில்லை.. வாழ்வியலில் வகைகளில் அதுவும் ஒன்று என்று  கொள்வேன்!  ஆதலினால் காதல் செய்யும் லீலை இது!

    ஒரு நாள் ஏதோ உனது உதடுகள் உச்சரித்த உஷ்ண வார்த்தைகளில் என் உள்ளம் நொறுங்கிக் கிடந்தேன்! எந்தச் சூழலில்.. எந்தத்தருணத்தில்  இந்த வார்த்தைகள் வந்து விழுந்தன என்பது இதயத்திற்கு மட்டுமே தெரியும்!  மனதிடம் உள்ள குறைகள் ஆயிரம் இருந்தாலும் மனது அதை ஒப்புக்கொள்வதில்லை.. எந்த விகிதத்திலும் இதயங்கள் துடிக்கலாம் என்பது தெரிந்திருந்தும்.. உடன்பட முடியாமல் விலகும் பந்தமாக நான்! எங்கே இதன் தொடக்கம்.. எங்கே இதன் அடக்கம்.. என்பது உயிருக்கேப் பொருந்தும்போது உறவுக்கு அது இன்னுமல்லவா மிகப் பொருந்தும்?  இந்த நிலை தெரிந்திருந்தும்.. இதயம் ஏன் இப்படி அல்லலுறுகிறது? இது அன்பின் அதீதம் என்பது உனக்குத்  தெரியாதவரை.. என் வரையில் நான் எங்கே துயில்வது?  பேசிக்கொள்வது பல நேரங்களில் சரியாக இருக்கும்!  பேசிக் கொல்வது கூட சில நேரங்களில் நடக்கும்.. இது கூட காதல்பாடம் என்பதே காலம் சொல்லிக் கொடுக்கும்!  எல்லாம் இந்த மனம் என்னும் சிற்றிடம் படுத்தும் பாடு என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால்.. இதன் விளைவுகள் அலைகளாய் தொடர்கின்றனவே!

    எந்தப் பாதையில் நடந்து சென்றோமோ.. அதே பாதையில் தனியாக நடந்துவர நேரும்போது.. இதயம்  எதையெதையோச் சொல்லியழும்!  மறந்துவிடு என்று நீ சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.. மண்ணுலகில் எத்தனையோ பேர் சொன்னதைத்தான் நீயும் சொல்கிறாய் என்று விட்டிருப்பேன்.. அட..மறப்பதற்கே என்னை நினைத்திடு என்றாயே.. எப்படி?   கவிதையோடு கவிதை இணையவில்லையே என்கிற கவலை இன்றோடு போகட்டும்! அது எப்படி இரண்டு ஒரேவிசை துருவங்கள் இணைசேர முடியும்.. இந்த இயற்கை நியதியைப் புரிந்துகொள்ள இத்தனை ஆண்டுகள் ஆனதோ? எதையோ தேடிக் கொண்டிருந்தோம்.. இன்று இனம் கண்டுகொண்டோம் என்று நமது சந்திப்பின் துவக்கத்தில் சொன்னதெல்லாம் உண்மைதான்! ஆனால்.. அதன் கனபரிமாணங்கள் என்னவென்று காலம் அல்லவா தீர்ப்பு சொல்கிறது!!

    ஏதோ ஒரு நிழல்போல என்னுடன் வந்தாய் என்கிற சுகம் அலாதியாகத்தான் இருந்தது. புதிதாய் அமைகின்ற எதுவும் புரியாத இன்பத்தைத் தரும் என்கிற பழைய நியதிதான் நமக்குப் புரியாமலிருந்திருக்கிறது.  சொந்தம்  சொல்கிற ஒரு பந்தம் கிடைத்துவிட்டதாய் பெருமிதம் கொண்ட மனம்.. தன் ராஜ்ஜியத்தை உறுதிசெய்ய நினைத்தபோது.. ஏற்படும் கேள்விகளுக்கான விடைகள் பெரும்பாலும் எதிர்மறையாகத்தான் இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டேன்.  எத்தனை முறை வலித்தாலும் காதலை மட்டும் மனிதன் அனுபவித்துத் தெரிந்துகொள்வதுதான் சாத்தியம் என்று சாசனம் எழுதிவைத்திருக்கிறான் போலும்!!  அறிவுநலம் சூழ்ந்திருந்தாலும்.. அன்பின் ஆழத்தில் பயணிக்கிறபோது.. அங்கே உள்ள சுழல்களும் சூறாவளிகளும் அல்லவா அந்தப் பயணத்தை தீர்மானிக்கின்றன.. நான் கவிஞனாக.. இருக்கிற வரை கடலலைகளோடு கொண்டிருக்கிற உறவு மாறப்போவதில்லை.. நான் புலவனாக இருக்கின்ற வரையில் விண்ணில் நிலவோடு வேறுபடப்போவதில்லை.. கண்ணே.. உன்னோடு மட்டும்தானே.. காரணம் நீ பெண்ணல்லவா?  எந்த ஆணும் இதுவரை தான் காதலித்த பெண்ணை முழுமையாக மறந்ததில்லை.. எனவேதான் மறக்க முடியாத உன்னை மனதில் வைத்துக்கொண்டு.. நான் உன்னை மறப்பதற்கே நினைக்கிறேன் என்று பல்லவி பாடுகிறேன்! இங்கே எந்தன் கணிணி திறப்பின் ரகசிய குறியீடு எண்ணாக உன் பெயரே!!

    அன்புடன் கவிச்சந்திரன் 

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு,

       31-03-2014

                                                                        43,அக்ரகாரத்தெரு,

       பாரதி                                                                                                                                     தஞ்சை

    அன்புள்ள மணிமொழிக்கு,

    மணிமணியான கையெழுத்தில் உன் தமிழ்மொழி கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது பார்! நீயும், நானும் எழுதிய கடிதங்களை நம் ஊர்த்தோட்டத்து மாமர நிழலில் கட்டிய ஊஞ்சலில் ஆடியபடியே, படித்துச் சிரித்த நாட்கள் என் கண்ணிற்குள் நிற்கிறது.

    நீயும், நானும் கிணத்தடியருகில் விளையாடிய மாக்கல் செப்பு எனது பெயர்த்தி வைத்து விளையாடுகிறாள். காலச்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுற்றுகிறது பார்! உனக்கும், எனக்கும் 13 வயதில் திருமணம்.

     14 வயதில் குழந்தை. நல்லவேளை! இன்னமும் சீக்கிரம் பிறக்கவில்லை. இல்லையெனில் பருவ வயதை அடையும்முன்னே திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள். நீ மாதவையா நாவல்களை முன்பொருமுறை எனக்குப் படித்துக்காட்டினாயே! ஞாபகம் இருக்கிறதா?

    என்ன கொடூரமான விதவைக்கோலம் இல்லையா!ப்ச்…இன்று நினைத்தாலும் பெண்ணின் நிலையை நினைத்து வருந்துகிறேன்.

    நீ எழுதிய வரிகளை ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் பார்த்தேன்.

    உனது வீட்டின் அருகில் இன்னமும் இத்தகைய கொடுமை நடக்கிறதா?

    குழந்தை இல்லையெனில் மருத்துவரிடம் செல்வதுதான் முறை. அதைவிட்டு சோழிகளைக்குலுக்கி சோசியம் பார்ப்பதும், ஆணைவிட்டு திருநீறு மந்திரித்து தலையில்போட்டு கைகளைத் தடவி விடுவதும்,சர்ச்சில் மண்டியிடச்சொல்வதும் படிக்கவே அருவெறுப்பாக இருக்கிறது. அந்தப்பெண் படித்திருக்கிறதா? படித்திருந்தால் எங்காவது வேலைக்குச்சென்று பிழைத்துக்கொள்ளச்சொல். யாரிடம் குறை உள்ளது என்பதைத் திருமூலர் சொல்லவில்லையா?

    கணவன்,மனைவிக்குள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மனவேறுபாட்டை உருவாக்காதா?

    உசிலம்பட்டி மக்கள் என்றுதான் மாறப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

    பெண்கள் வேலைக்குப்போவது நல்லது. ஆனால், நீ உன்னுடைய அமெரிக்கப் பயணம் குறித்து எழுதியிருந்தாய். இங்கும் பல கணவர்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் வரதட்சணை தரும் அமுதசுரபிகளாய் மணிமேகலைகள் தினமும் உலா வருகின்றனர். நோயுற்று வாழ்ந்த காலத்திலும் பணிக்குச் செல்லும் பெண்ணிற்குத் தேவையான உணவுகளைத் தயாரிப்பதில் ஆண்வர்க்கம் உதவுவதில்லை. தமது குழந்தைகளுக்காக அவர்கள் கேட்கும் ஆடம்பரப்பொருட்களுக்காகத் தன்னை மாய்த்து உருக்கி வாழும் மெழுகுவர்த்திகளாகப் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண் உதவினால் மனைவிக்குதாசன். பெண் படித்திருக்கிறாள் என்ற அகம்பாவம். கொண்டுவரும் பணம்வரும்தேதி மட்டும் அவள் அந்தநேரத்து வீட்டுவிளக்கு இளவரசி. பணி முடிந்து வரும்நேரம் சற்று லேட்டானாலும் இன்னமும் பழைய பல்லவிதான்.பொண்ணுன்னா விளக்கேத்தறதுக்கு முன்னாடி வந்தாத்தானே நன்னாருக்கும்.

    இந்தப்பெண்களும் தனது பணிக்குத் தகுந்தாற்போல உடை உடுத்துவது கிடையாது. வெளிதேசத்தில் இருப்பதுபோல அரைகுறையாய் உடை உடுத்துகின்றனர். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பானா ரோட்டில்! திரும்பிய இடமெல்லாம் டாஸ்மாக்! ஊத்திக்கிட்டவனுக்கு நிதானந் தெரியுமா?இவ நம்ம அம்மாபோல,இவ நம்ம சகோதரிபோலன்னு!

    பஸ்ஸூல அண்ணான்னு பொண்ணு சொன்னா பிராமணாத்து அண்ணாவான்னு கேக்கறதுகள் காலேஜ் படிக்கும் கழிசடைகள். இதெல்லாம் என்ன செய்யப்போகுதுகளோ!

    இதுல பொண்ணுங்க நகை வேற! கழுத்து நிறைய அம்பிகைக்கு சார்த்துறமாதிரி அள்ளிப்போட்டுக்கறது! பெண்ணுக்கு எதிரி முதல்ல நகையும், அரைகுறை ஆடையும்தான்.

    எனது பக்கத்துவீட்டில் ஒரு பெண் இருக்கிறாள். எங்கோஒரு பெரிய பணியில் இருக்கிறாள். இருக்கிற இடம் தெரியாது. வழிய வழிய தலை.ஒருக்ளிப்போ,ஆடம்பர உடையோ கிடையாது. அப்புறம்தான் ஒருநாள் டிவிலயும்,யுட்யுப்லயும் பாத்தேன்.என்னமா பேசுது அந்தப்பெண்.

    அன்னைக்கு முழுதும் அந்தப்பெண்ணைப்பத்தித்தான் எங்காத்துல ஓயாத பேச்சு.எங்காத்துக்காரர் சொல்றார்.இப்ப புரிஞ்சுதா! பொண்ணுன்னா ஆடை, அலங்காரத்துல இல்லன்னு…..எனக்கு அந்த நிமிஷமே ஃப்ளாட்டை விட்டு வெளியேறி அந்த பொண்ணை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு தோணிச்சு…..அவா வீட்டு காலிங்பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தேன். அவளே வந்தாள் நைட்டியோட…கையில பக்கோடா பிசைந்த மாவோட…என்னம்மா இது…நீ பேசுன பேச்சுல மீடியாவே கேட்டுக்கிட்டிருக்கே…நீ கேக்கலையா……….எனது கணவர் கேட்டுக்கிட்டு இருக்கார் மாமி….அவருக்கு பிடிக்குமேன்னு வெங்காய பக்கோடா செஞ்சேன்.அவருக்கு வெளில இருக்கறதெல்லாம் உடம்புக்கு ஆகாதுன்னா…..ஒரு நிமிஷம் நான் மௌனமானேன்.என்ன விஷயமாக வந்தீர்கள்?உள்ளே வாருங்கள்,பக்கோடா சாப்பிட்டுப் பாருங்கள் என்றாள்.

    உனது திறமையைப் பாராட்டி எங்காத்துக்காரர் உன்னைப் பாராட்டணும்னு சொல்லி காத்துண்டிருக்கார் குழந்தை.அவருக்கு வயது 80க்கும் மேலே ஆறது..ஒரு நிமிஷம் வர முடியுமா! என்றேன். அந்த நேரத்தில் எனக்கு வள்ளுவர் கூறிய இல்வாழ்க்கைதான் ஞாபகத்திற்கு வந்தது.

    வீடென்னவோ 400 சதுர அடிதான்.அதில் அறிவை அந்தப்பொண்ணு எப்படி வளர்த்தான்னு தெரியல! புடவைய மாத்திட்டு ஒருவழியா வீட்டிற்கு வந்து… எங்க ரெண்டுபேர்கிட்டயும் ஆசி வாங்கிட்டா! புடவை வச்சுக்கொடுத்தேன்.

    மறுத்துட்டா! கணவன்கிட்டயும்,பெத்தவங்க,கூடப்பிறந்தவங்ககிட்டயும்தான் வாங்கிக்கட்டறதுன்னு பழக்கம்னு  பழம்பஞ்சாங்கம் பேசிட்டா!

    சரி! அவள் விருப்பம்னு விட்டுட்டேன். மறுநாள் ஷாப்பிங்மால்ல பாத்துப்பேசினா! எப்படி இப்படி இருக்க முடிகிறது என்றேன். எனது குறிக்கோள் ஒன்றுதான் எனது கண்ணில் தெரியுது! பாக்கறதுக்கு என் கணவர் சைலண்டா இருக்கறாருன்னு தோணும். இப்ப இருக்கற பொண்ணுங்க மாதிரி எடுத்ததுக்கெல்லாம் டைவோர்சா பண்ணமுடியும். வேலைக்குப் போற பொண்ணுன்னாலே அப்பிடித்தான் முத்திரை குத்திடுவாங்க! வெளியிலயும் போகவிடமாட்டாங்க. அதான் சமையலறையில எங்க சாம்ராஜ்யம்தான். அப்புறம் டைவோர்சாவது! மண்ணாவது! முடிஞ்சா நான் செத்தேன்னா அவருக்குத் தனியா பண்ணிச் சாப்பிடத்தெரிஞ்சுக்கணும்னு கத்தும் கொடுத்திருக்கேன். அவா வீட்ல தெரிஞ்சா கத்துவா! இவர் அதல்லாம் சொல்ல மாட்டார். இதுதான் வாழுற வாழ்க்கையின் அடிப்படை ரகசியம். எடுத்ததுக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு அம்மாவிடம் குறை சொல்றது இரண்டு பேருக்குமே வீக். என்ன மாமி நான் சொன்னது சரிதானே! என கன்னத்தில் குழி விழச் சிரித்தாள்.ஆனாலும், அவள் உள்மனதில் என்னவோஒரு சோகத்தின் சாயல் இருப்பதை அவள் கண்கள் காட்டியது. அவள் பெயர் வாணி. பத்திரிகையில் நிறைய எழுதியிருக்கிறாள்.இப்போதான் வந்திருக்கிறாள். அவள் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதை நான் கண்டுபிடிக்கிறேனா பார்! எனது அம்மா ஒளித்து வைத்த லட்டு டப்பாவையே கண்டுபிடிச்சுடுவியேன்னு! நீ சிரிக்கும் சத்தம் இங்குவரை எனக்குக்கேட்கிறது. நான் நேற்று ஒரு கதை படித்தேன். அதில் நண்பரில் ஒருவர் தினமும் மற்றவர் வீட்டிற்குப் போய்விடுவாராம். திடீரென்று அவர் நண்பர் இறந்து விட்டார்.இருப்பினும் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் அவர் சொன்னாராம். எப்போதும்போல அந்த ஈசிசேரை எடுத்துப்போடுங்க…கடைசிவரை எனது நண்பன் இருப்பதுபோல சேரில்வந்து உட்கார்ந்து பார்த்துச்செல்கிறேன் என்றாராம்.

    அதைப்படித்தபின் எனக்கு உன் நினைவாகவே உள்ளது. நீ எப்போது வருவாய்? வருவதைக் கடிதம் எழுது. இந்தக்காலத்துக்குழந்தைகளுக்கெல்லாம் கடிதமே எழுதத்தெரியறதுல்ல…எல்லாம் மெயில், மெசேஞ்தான்.

     உனக்குப் பிடித்த தேன்குழலும்,மைசூர்பாகும் செஞ்சு வச்சுருக்கேன். சாப்பிடத்தான் அருகில் நீ இல்லை. நீ தண்ணீர் ஊற்றி வளர்த்த மாமரத்து நிழலில்எத்தனை பிஞ்சுகள் உனக்காக காத்திருக்கின்றன தெரியுமா! மணிமொழி எங்கே?எங்கே? எனப்பூக்கள் ஏங்கிக் கிடக்கின்றன. உனது ஃபோட்டோவின் அருகில் பலகாரப் பித்தளைத் தூக்குடனும்,மாம்பிஞ்சு சாப்பிட காரமா கேப்பியே உரல்ல இடிச்ச உப்பு மிக்ஸ்டு மிளகாய்த்தூளுடனும் காத்திருக்கும் உனது அருமை தோழி.

    பின்குறிப்பு-

    வழக்கம்போல எனது ஒற்றுப்பிழைகளையெல்லாம் திருத்தி வாசிக்கவும். நமது தமிழாசிரியர்(இலட்சுமணன்) ஒற்றுப்பிழை நீக்கும் வகுப்பு எடுக்கும்போது தூங்கிவிட்டேன். நீயும் கற்றுத்தரவில்லை.

     வெண்ணிலா

     பெறுநர்

    மணிமொழி,

    7, காந்தி தெரு,

    உசிலம்பட்டி.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 31, 2014

    வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

    **************************************************************************************

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  முனைவர். ராஜம் ராமமூர்த்தி அவர்கள்

    வீ எஸ் ராஜம்

    **************************************************************************************

    முனைவர். ராஜம் பற்றி அறியாத இணையத்தமிழர்கள் இருப்பது அரிது.

    தமிழ் இலக்கணம் பயிற்றுவிக்க வலைத்தளம் (http://www.letsgrammar.org) ஒன்று உருவாக்கி இன்றும் தமிழ்ப்பணி செய்பவர் இவர்.  அத்துடன் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம், உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகம், முனைவர். ராஜமும், இவருடன்  இணைந்து பணியாற்றிய மற்றொரு ஆராய்ச்சியாளரும் உருவாக்கிய ஆய்வு நூலை வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது ( The Earliest Missionary Grammar of Tamil, Harvard Oriental – Series 76, Fr. Henriques’ Arte da Lingua Malabar: Translation, History, and Analysis, Translated with commentary by Jeanne Hein and V. S. Rajam – http://www.hup.harvard.edu/catalog.php?isbn=9780674727236&content=bios).

    முனைவர். ராஜம் அவர்களது சிறப்பு, அவர் பல துறைகளில் (கணிதம், கணினி தொழில் நுட்பம், தமிழிலக்கியம்) வல்லவராக இருப்பது.  அத்துடன் அத்திறன்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழ் வளர்சிக்காக தனது பங்கினை சிறப்புற அளிப்பது.

    இவர் திறமையை நான் சொல்லுவதை விட சமீபத்தில் மற்றொரு தமிழறிஞர் முனைவர். ராஜம் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதை (கற்றாரைக் கற்றாரே காமுறுவர் அன்றோ?) சொல்வதில்தான் அவரது சிறப்பு மேலும் சிறப்புற விளங்கும். இந்த வாரம் சென்னையில் நடைபெறும் “கணிணித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு” நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் முனைவர். பேராசிரியர். ந. தெய்வசுந்தரம் அவர்கள், முனைவர். ராஜம் பற்றிக் குறிப்பிட்டது இங்கு  உங்கள் பார்வைக்கு…

    “பேராசிரியை இராசம் அவர்களுக்கு தமிழாய்வு உலகில் ஒரு சிறந்த இடம் உண்டு. குறிப்பாக, தமிழ்க் கணினிமொழியியல் துறையில் மிகச் சிறந்த இடம் உண்டு. இந்த ஆய்வில் ஈடுபட்ட முதல் ஆய்வாளர் என்றுகூட அவர்களைச் சொல்லலாம். பலருடைய பங்களிப்பு வெளியுலகில் தெரியாமல் இருந்துவிடுகிறது. அவர்கள் பெயரெல்லாம் ஆய்வுலகில் நிலைக்க நாம் வழிசெய்யவேண்டும்.”

    –பேராசிரியர். ந. தெய்வ சுந்தரம்

    ஆம், இது உண்மை. பேராசிரியர். ந. தெய்வசுந்தரம் அவர்கள் குறிப்பிட்டது போல முனைவர். ராஜம் கணிணித்தமிழ் வளர்ச்சியில் ஒரு முன்னோடி. இவர் 1978-இலிருந்து தமிழைக் கணினிக்குள் புகுத்த வேண்டிப் பல கணினி மொழிகள் படித்துள்ளார்  (APL,  C, C+, FORTRAN, Java, Javascript, LISP, Macro-11 [Assembly Language], Pascal, PHP, SQL, XML, …). அவரது பல்கலைகழக நாட்களில், அதாவது ஒரு முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கும் முன்னரே தொடங்கிவிட்டது இவருடைய கணிணித்தமிழ்ப்பணி.

    தமிழிலக்கிய நூல்களில் நாம் ஒரு சொல்லைத் தேட வேண்டியிருப்பின்,  நூலின் பின்பகுதியைப் புரட்டி அங்கு கொடுக்கப் பட்டுள்ள சொற்களின் பட்டியலில் அச்சொல் எங்கு வருகிறது என்று தேடுவோம். பிறகு அப்பக்கத்தைத் திருப்பி அச்சொல் எவ்வாறு, என்ன பொருளில் குறிபிடப்பட்டுள்ளது என்று தொடர்ந்து ஆராய்வோம். இவ்வாறு  தமிழில் சொல்லடைவு, தொடரடைவு இரண்டும் நமக்குத் தேவை (சொல்லடைவு எனில் ஒரு பாடலில் உள்ள சொற்களையும், அப் பாடலில் ஒவ்வொரு சொல்லும் வருமிடங்களையெல்லாம் அகரவரிசையில் தொகுத்துக்கூறுவது – Word Index எனலாம்.  தொடரடைவு  எனில், ஒவ்வொரு சொல்லுடன், அது வரும் அடிகளையே கொடுப்பது – concordance)

    காட்டாக, இராமாயணத்தில் ‘அங்கதன்’ என்ற சொல் வருமிடங்கள்…

    அங்கதன் (41 இடங்களில் ஒரு சில …)

    அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கிட்:9 33/3
    அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கிட்:10 66/1
    அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கிட்:11 100/1
    அங்கதன் உடன் செல அரிகள் முன் செல – கிட்:11 118/1  (இவ்விளக்கப் பகுதி முனைவர். பாண்டியராஜா பதிவு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது)

    ஒரு கணிநிரல் (Program) சில விநாடிகளில் ஒரு சொல்லடைவையோ அல்லது தொடரடைவையோ தொகுத்து வழங்கிவிடும்.  ஆனால் அந்த நிரலை எழுதும் முயற்சிக்கு எத்தனை எத்தனையோ மணிநேரங்கள் தேவைப்படும். ‘ஜாவா’ நிரல் எழுதினாலும் பல கோப்பைகள் ‘ஜாவா’ (காஃபி) அருந்திய பின்னரும், பலநாள் தூக்கம் தொலைத்த பின்னரும் நிரல் எழுதுபவர் விரும்பிய வண்ணம் அது அமைந்ததா  என்பதை கணினிநிரல் எழுதியவரே வந்து சொன்னால்தான் உண்டு.

    ஆனால் அது போன்ற நிரல்களை, தனது பல்கலைகழக மாணவப் பருவத்திலேயே எழுதி ஐம்பது மதிப்பெண் வழங்கும் ஒரு தேர்வில் அறுபது மதிப்பெண்கள் (தவறு என்று சந்தேகிக்க வேண்டாம், சரியாகத்தான் குறிப்பிட்டுள்ளேன் 60/50 மதிப்பெண்கள்) வாங்கியவர் முனைவர். ராஜம் ராமமூர்த்தி.

    doctor rajam

    அவரது மாணவப் பருவத்தில் அவர் எழுதிய தொடரடைவு (Concordance) உருவாக்கம் நிரலிக்கு அவர் தேர்ந்தெடுத்த பாடல் ஒளவையார் எழுதிய குறுந்தொகைப் பாடல் ஒன்று.


    அகவன் மகளே அகவன் மகளே
    மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன் மகளே பாடுக பாட்டே
    இன்னும் பாடுக பாட்டே அவர்
    நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.

    — ஒளவையார், குறுந்தொகை: 23

    [பாடலின் பொருள்: காதல் நோய் தாக்கி உடலும் மனமும் நலிவடைந்த தலைவியினைக் கண்டு வருந்திய பெற்றோர், அகவல்மகள் என்னும் குறிக்காரியிடம் சென்று குறி கேட்கிறார்கள்.  குறிசொல்லத் தொடங்கும் அவளது கடவுள் வாழ்த்துப்பகுதி மலைநாட்டுத் தெய்வத்தின் புகழ் பாடுகிறது அத்துடன் அது தலைவியின் உள்ளத்திலிருக்கும் தலைவனை வாழ்த்துவது போலவும்  அமைந்துவிடுகிறது. அதனைக் கேட்ட தோழி அவன் குன்றத்தைப் பாடிய பாட்டை இன்னும் பாடுக என்கிறாள்.  அதாவது தோழி அறத்தொடு நிற்பது என்ற நிலையில் அடங்கும் வகையில், தலைவியின் காதலைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் அமைகிறது இப்பாடல். இவ்வாறு இவள் சொல்வதிலிருந்து தலைவியின் சுற்றத்தார் தலைவியின் தலைவனை பற்றித்  தெரிந்துகொள்வார்களாம்.]

    சென்ற வாரம் குழும மடலாடல் ஒன்றில் கணிணித்தமிழ் கொண்டு எவ்வாறு கணிணித்தமிழ் வளர்ச்சியில் பங்களிப்பது என்பது பற்றிய விவாதத்தில் பங்கேற்ற முனைவர். ராஜம் அவர்கள், மேலே குறிப்பிட்ட பாடலுக்கு, அவர் படித்த UNIX வகுப்பில் இறுதித் தேர்வுக்காக எழுதிய நிரல்களை பகிர்ந்து கொண்டார் ( “Unix visits South India” project – http://www.letsgrammar.org/oldProjects/UNIX_Project_Rajam.pdf).

    இது போன்று கணிணித்தமிழ் வளர்ச்சிக்கு இக்கால மாணவர்களை ஊக்குவிக்கும் கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து கொண்ட முனைவர். ராஜம் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறார்கள்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • நுழைதல்

    எம்.ரிஷான் ஷெரீப்sadimages

    எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்

    எனது கைவிரல்களை ஒற்றியொற்றி

    உன் நேசத்தைச் சொல்லிற்று

     

    பசியினைத் தூண்டும் சோள வாசம்

    காற்றெங்கிலும் பரவும்

    அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை

    முடித்து வந்திருந்தாய்

    குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்

    பெண்களின் சித்திரங்களை

    புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்

    வெயிலெரித்த சருமத்தின் துயரம்

    உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்

    அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது

     

    நகரும் தீவின் ஓசை

    நீ நடந்த திசையெங்கிலும்

    பாடலாகப் பொழிந்திடக் கூடும்

    அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்

    வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்

     

    உனைத் தீண்டி நகர்ந்திருந்ததொரு விஷத் தேள்

    உச்சியிலிருந்து சருக்கச் செய்தது அதன் நச்சு

    எல்லாம் கடந்துவிட்டன

    நேற்றிருந்த மேகத்தைப் போல

    இக் கணத்து நதி நீர் போல

     

    உனது பயணங்கள் முடிவற்றன

    எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன

    ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து

    அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது

    பாளங்களாய்க் கனன்றெரிந்து

    உன் வாழ்வின் கதைகள் பேசிற்று

    உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட

    தெப்பமென நனைந்தேன்

     

    நரகப் பெருநெருப்புக்கஞ்சி

    எவருக்கெனவோ மூடிக் காத்திருந்த பொக்கிஷ நந்தவனமொன்று

    நீ வரத் திறந்தது

    அன்று

    உனக்கென உதிர்ந்ததொரு மந்திரப் பூ

    உனக்கெனத் தெளிந்ததொரு வாசனைப் பொய்கை

    உனக்கென மட்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது ஒரு தளிர்

     

    எல்லாவற்றையும் குறித்துத் தெரிந்திருக்கிறாய்

    ஆனாலும் சகா

    நீ உணர்வதற்கும் நம்புவதற்கும்

    அப்பாலுள்ளது எனதுலகம்

     

    http://visualnovelaer.fuwanovel.org/2013/10/where-are-all-the-blog-posts/

    Share
  • ராசி பலன்: 31.03.2014-06.04.2014

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: மாணவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றினால் வெற்றி என்னும் இலக்கை அடைவது என்பது உறுதியாகும். வியாபாரிகள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மன நிம்மதியோடு வேலைகளில் ஈடுபடலாம். இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் தேவையில்லாத இடங்களிலும், நேரங்களிலும் உங்கள் விறுப்பு, வெறுப்புகளை வெளியே கொட்டாதீர்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் பணம் தண்ணீராய் செலவழிந்தாலும் கிடைக்கும் பலன் சொற்பமே.
    ரிஷபம்: நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத பிரச்னைகள் முடிவுக்கு வருவதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நலம். பொறாமை இல்லாமல் ஈடுபடும் போட்டிகளில் வெற்றி வாகை சூடுவீர்கள். விருந்தினர் வருகையும், சுபச் செலவுகளும் கூடும். அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி, உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வீடு, மனை வாங்கி விற்பவர்கள் அகலக் கால் வைக்க வேண்டாம்.
    மிதுனம்: “என் வாழ்க்கை என் கையில்” என்று செயல்படுங்கள். பிரச்னைகள் பிசுபிசுத்து விடும். சண்டை சச்சரவுகளை விலக்கினால், குடும்பம் அமைதிப் பூங்காவாய் திகழ்வது உறுதி. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் வீண் விரயம் ஏற்படாமல் செயல்பட, இரட்டிப்பு லாபம் வந்து சேரும். ஒரு சிலர் ஆன்மீக யாத்திரை சென்று வருவார்கள். கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு புதிய திருப்பம் உண்டாகும். பத்திரிகைத் துறையில் உள்ளவர்களின் தகுதி உயரும் தருணமிது.
    கடகம்: மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இடமளிக்க வேண்டாம். கணவன் வழி உறவினர்களுடன் இருந்த சிறு மோதல்கள் விலகும். வேலையில் உள்ளவர்கள் மன உளைச்சலை தீர்க்கப் புதிய வழிகளைக் கண்டு பிடிப்பார்கள். வீடு, வாசல் அமையவில்லையே என்று சிரமப் பட்டவர்கள், கிரகப் பிரவேசம் செய்து மகிழும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். எதையும் தீர ஆலோசித்துச் செய்தால் குடும்பத்தில், வீண் குழப்பங்களும், விவாதங்களும் தலை தூக்காமலிருக்கும்.
    சிம்மம்: பணியில் இருப்பவர்கள், தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். பொறுப்பாக நடந்து கொள்ளும் பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையாட்களின் போக்கை உணர்ந்து வேலை வாங்க, புதிய ஒப்பந்தங்கள் பல உங்கள் கை வசமே! வீட்டை விரிவுபடுத்துவதில் பணம் செலவழியும். போட்டிகள் கடுமையாய் இருந்தாலும், ஈடு கொடுத்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்கள் தன் அபரிமிதமான ஆற்றல் கொண்டு உயர்வடைவார்கள். புதியவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. ஒரு சில மாணவர்கள் மேற்படிப்பிற்காக வேறு ஊர்களுக்குச் செல்வர்.
    கன்னி: வியாபாரத்தில் உயரும் வருமானத்தைக் கொண்டு புதிய கிளைகள் திறக்கும் வாய்ப்புக் கிட்டும். உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூர்விகச் சொத்தில் இருந்த பிரச்னைகள் சுமூகமாக முடிவதால், பிரிந்திருந்த உறவுகளுடன் மீண்டும் இணைந்து, சுற்றுலா, விழா என்று மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் உரசல்களைப் பெரிது படுத்த வேண்டாம். சக கலைஞர்களுடன் கவனமாகப் பழகி வந்தால், உளைச்சலையும், அலைச்சலையும் தவிர்த்து விடலாம்.
    துலாம்: கை மாற்றாய் வாங்கியிருந்த கடனைத் தீர்த்து விடுவீர்கள். தடைபட்டு வந்த குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி வர, சுப காரியங்கள் விரைவில் முடிவாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் குறைவிலா லாபம் கிட்டும். தற்காலிக வேலையில் இருப்பவர்களின் பணி நிரந்திரமாகும். பிள்ளைகளின் உயர்வுக்கு என்று பட்ட பாட்டுக்கு நல்ல பன் கிடைக்கும். வெளியூர் செல்பவர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
    விருச்சிகம்:கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருந்து இலக்கை எட்டுவார்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவதால், பழைய கசப்புகள் மறைந்து விடும். மாணவர்கள் கடுமையாய் உழைத்து, தவறிய பாடங்களில் தேர்ச்சி பெற்று மகிழ்வர். திடீர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், பெண்கள் அதனைத் திறம்பட சமாளித்து விடுவர். வேலையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகளும், உயர்வும் கிடைக்கும். மருத்துவச் செலவுகளைக் குறைக்க, படபடப்பையும், தூக்கமின்மையும் தவிருங்கள்.
    தனுசு:மாணவர்கள் தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்பாடு-இரண்டையும் மேற்கொள்வதன் மூலம் உயர்வான நிலைக்கு செல்லலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகா மலிருக்கும். இந்த வாரம் பணியாளர்களிடையே அதிருப்தியான சூழல் நிலவும். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சுய தொழில் புரிபவ ர்கள் கேட்டிருந்த கடன் உதவி, சிறிது மந்த கதியில் உங்கள் இடம் தேடி வரலாம். பெண்கள் கவனிக்காமல் விட்ட ஆரோக்கிய நலிவு, பணியில் சில தடைகளை ஏற்படு த்தக் கூடும்.
    மகரம்: தேவையற்ற கோபத்தைத் தவிர்த்தால், குடும்ப உறவுகளின் நெருக்கம் கூடும். குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும், ஒரு வரைமுறை வைப்பது அவசியம். வெளிவட்டாரப் பழக்கத்தில், இதமான அணுகுமுறை விரும்பிய பலனைத் தரும். தொழில், வியாபார முன்னேற்றத்தில், கூடுதல் உழைப்போடு, சீரான திட்டங்களையும், சேர்த்துக் கொள்வது அவசியம். பணியில் இருப்பவர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.
    கும்பம் புதிய தொடர்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிட்டும். கடன் நிலவரத்தில் கூடுதல் கவனமிருந்தால், வரவுக்குள் செலவை முடித்துக் கொள்ளலாம். பொது விஷயங்களில் ஒத்த கருத்தை அடைய, அதிக முயற்சியும், பொறுமையும் தேவை. உறவினர் கேட்ட உதவிகளை சிரமப்பட்டு செய்து முடிக்கும் நிலை நிலவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலைகளில் தொய்வில்லாமல் இருக்க, வேகத்தோடு விவேகத்தையும் சேர்த்துக் கொண்டாலே நல்ல பலன் கிட்டும்.
    மீனம்:தேடி வரும் ஒப்பந்தங்களை, திறம்பட முடிக்கும் கலைஞர்களுக்குப் பாராட்டோடு, பரிசும் வந்து சேரும். பங்குச் சந்தையில், நிலவரத்திற்கேற்றவாறு சமயோசிதமாகச் செயல்பட்டால், போட்ட பணத்தை எடுத்து விடலாம். பணத் தட்டுப்பாடு நீங்க சிக்கன நடவடிக்கை கை கொடுக்கும். விமர்சனங்களைத் தாண்டி, வேலைகளை முடிப்பதில் கவனம் காட்டினால், உயர் பதவிக்கான வாய்ப்புக்கள் உறுதிப் படும். நிதானமான போக்கை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு, நெருக்கடிகள் தானே குறைந்து விடும்.

    Share
  • 27. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!

    27. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! சின் யோங் திரைப்பட அருங்காட்சியகம், ஜேஜூ தீவு, தென் கொரியா.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    சினிமா தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல.. உலகில் எல்லா சமூகங்களுமே விரும்பி பார்க்கும் ஒரு பொழுது போக்கு அம்சமாக மனித வாழ்க்கையில் இடம் பிடித்துக் கொண்டு விட்டதை நாம் மறுக்க முடியுமா?

    பொழுது போக்கு அம்சம் என்பதையும் கடந்து சமூகத்தின் சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய மிக பலம் பொருந்திய ஒரு ஊடகமாக இன்று சினிமா விளங்குகின்றது. குறிப்பிட்டு சொல்வதானால் திரைப்படத் துறையின் வளர்ச்சி என்பது மிகத் துரிதமாகக் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றது எனலாம். வளர்ச்சி அடைந்த நாடுகள் மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளும் தத்தம் மொழிகளில் சினிமா துறையில் விரிவான வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. பொதுவாகத் தமிழக சூழலின் பின்னனியில் பார்க்கும் நமக்கு நன்கு பரிச்சயமானதாக இருப்பவை ஹாலிவூட் தயாரிப்புக்களான அமெரிக்க திரைப்படங்களும், இந்திய திரைப்படங்களும் எனலாம்.

    எனது வாழ்க்கை பின்னனியில் மலேசிய சினிமாவின் பரிச்சயமும் தற்சமயம் ஜெர்மானிய திரைப்படங்களின் பரிச்சயமும்  கிடைக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதால் இந்த மொழி படங்கள், இவற்றின் பொதுவான கதை புலன்கள், நடிக நடிகையரின் தோற்றத் தேர்வு பற்றிய பொதுவான கருத்துக்கள், எனச் சில விஷயங்களை அறிந்திருக்கின்றேன். இத்தகைய படங்களை அவ்வப்போது பார்க்க வாய்ப்பு கிடைப்பதால் ஓரளவு இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து அலசவும் முடிகின்றது. என் கணிப்பில் அமெரிக்க படங்களை விட ஜெர்மானிய தயாரிப்புக்களாக அமையும் படங்கள் மிக இயல்பான தோற்றத்தை தருவதாக அமைந்திருக்கின்றன என்பதை பல படங்கள் எனக்கு ஊர்ஜிதப்படுத்துகின்றன. இந்தியப் படங்களையும் மலாய் மொழிப் படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலாய் படங்கள் பொதுவாக 60, 70, 80களில் தமிழ் படங்களைக் காப்பியடித்து எடுக்கப்பட்டவை போலவே அமைந்திருக்கிருக்கும். பின்னர் படிப்படியாக வட இந்திய படங்கள் மலாய் மக்களின் சினிமா மோகத்திற்கு விருந்தாக அமைந்ததன் விளைவாக பல மலாய் படங்கள் இவ்வகை பின்னனியிலே அமைந்திருப்பதைக் காணமுடியும். இதில் அமெரிக்க படங்களையும் கலந்து வைத்தார்போல கலவையாக சில படங்கள் அமைவதுண்டு. இதனையும் மீறி சில படங்கள் மலாய் சமூக மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது போலவும் தனித்துவத்துடன் விளங்குவதையும் ஒதுக்கி விட முடியாது.

    சினிமா துறை என்பது கேளிக்கை, பொழுது போக்கு அம்சம் என்பதோடு  மட்டும் முடிந்து விடுவதல்ல. தற்கால சூழலில் பற்பல புதிய யுத்திகள், நுணுக்கமான கருவிகள், புத்தம் புதிய தொழில்நுட்பங்கள்  என இத்துறை மிக நுணுக்கமானதொரு துறையாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளதை காண்கிறோம். ஆரம்ப கால சினிமா துறை நிலையிலிருந்து இக்காலத்து மாற்றங்கள் வரை அறிந்து கொள்வதென்றால் அதனை சினிமா துறைக்கானப் பிரத்தியேக அருங்காட்சியகங்கள், அல்லது தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள், நூலகங்கள் எனச் சென்று தான் தேட வேண்டும். உலகின் பல நாடுகளில் சினிமா துறை வளர்ச்சியின் தொடர்ச்சியை பதிவாக அமைத்து பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சில அருங்காட்சியகங்கள் இயங்குகின்றன. அத்தகைய அருங்காட்சியகங்கள் வரிசையில் அமையும் ஒன்று தான் தென் கொரியாவில் உள்ள  சின்யோங் திரைப்பட அருங்காட்சியகம் (Sinyoung Cinema Museum).

     unnamed

    ஜேஜு தீவை இந்த தென் கொரிய வரைப்படத்தில் காணலாம். தெற்குப் பகுதியில் மிக கீழே அமைந்திருக்கும் ஒரு தீவு இது.

    1999ம் ஆண்டு ஜூன் மாதம் தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜேஜூ தீவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.  மூன்று மாடிகளைக் கொண்டு அமைந்த ஒரு மாடர்ன் வடிவ கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

    2003ம் ஆண்டில் டிசம்பர் மாதம் தென் கொரியாவிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்த வேளையில் ஒரு நாள் இந்தத் திரைப்பட அருங்காட்சியகத்திற்கும் சென்று வந்தேன். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் இது. நான் சென்றிருந்த வேளையிலும் கணிசமான வருகையாளர்களும் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

     sy3

    தென் கொரிய திரைப்படங்கள்  (டிசம்பர் 2003)

    இந்த அருங்காட்சியகத்தின் உள்ள மூன்று தளங்களில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அரும் பொருட்களும் தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

    ஒரு தளத்தில் Hall of Fame என் பெயரிடப்பட்டு தென் கொரிய சினிமா துறையில் மிக முக்கியப் பங்கு வகித்தோரின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் சினிமா நடிக நடிகையர் மட்டுமன்றி தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஒலி, ஒளிப்பதிவாளர்கள் என தென் கொரிய சினிமா துறைக்கு முக்கியப் பங்கு வகித்தோர் படங்கள் இடம்பெருகின்றன. கீழே நின்று பார்க்கும் போது நம்மை சுற்றி இருக்கும் இந்தப் பல்வேறு கலைஞர்களும் நம்மை பார்ப்பது போன்ற பிரமையை இந்த அமைப்பு நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றது.

     sy4

    தென் கொரிய சினிமா துறையினருக்கு ஒரு அஞ்சலி (டிசம்பர் 2003)

    இந்த Hall of Fame அடுத்து சினிமா தொழில் நுட்பக்கருவிகளின் கண்காட்சி ஒரு பகுதியிலும், அசையும் படங்கள் என்ற வகையில் ஒரு பகுதியும், பிரத்தியேகமான முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் ஒரு பக்கமும், சினிமா படங்களில் பயன்படுத்தப்பட்ட ராட்ஷஸ வடிவங்களின் வடிவங்கள் ஒரு புறமும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் நூதன முறைகள் பற்றிய விளக்கப் படங்களுக்கு ஒரு பகுதி எனவும் தனித்தனியாக அமைந்திருக்கின்றன.

    இந்த அருங்காட்சியகத்தின் தனிச் சிறப்பு எனக் குறிப்பிடுவதென்றால் அது தென் கொரியாவின் சினிமா துறையின் படிப்படியான வளர்ச்சியை ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஆவணக் கூடம் என தயங்காது சொல்லலாம். தென் கொரியாவில் படமாக்கப்பட்ட திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பக் கருவிகள்,  சினிமா செட்டிங், வடிவங்கள், கதை வசனப் பதிவுகள், சினிமா சுருள்கள் என பல சேகரிக்கப்பட்டு இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

     sy1

    தொழில் நுட்பக் கருவிகள் (டிசம்பர் 2003)

    தென் கொரியாவின் புகழ் மிக்க நடிகர் ஒருவரின் பெயர்தான் Sinyoung. அவர் பெயரில் தான் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் திரைப்பட பூங்கா என இருப்பது போல இங்கு ஒரு புகழ் பெற்ற ஒரு சினிமா துறை கலைஞரை சிறப்பு செய்யும் வகையில் அவர் பெயரில் இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றனர் என அறியமுடிகின்றது.

    இந்த அருங்காட்சியகத்தின் இரண்டாம் தளம் முழுமையாக சினிமா துறை பணிகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  அருகிலேயே வேற்று கிரகத்து கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருளில் காட்சிகள் அமைக்கப்பட்டு அதில் சிறுவர்களின் கவனத்தைக் கவரும் வகையிலான அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

     sy5

    ஆரம்பகால முயற்சிகளின் பதிவு பகுதியில்  (டிசம்பர் 2003)

    அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு வெளியே வரும் முன்னர் அங்கிருக்கும் விற்பனை பொருட்கள் நிலையத்தில் இந்த அருங்காட்சியகம் வந்து சென்றதன் நினைவாக  இருக்க ஏதாகினும் நினைவுப் பொருட்களையும் இங்கு வருகை தருவோர் வாங்கிக் கொள்ளலாம். இந்த அருங்காட்சிகம் கடற்கரையை மிக ஒட்டி அமைந்திருக்கின்றமையால் அருங்காட்சியகத்தைப் பார்க்க வருவோர் கடற்கரையிலும் சில மணி நேரங்களை ஓய்வெடுக்கச் செலவிடலாம். இயற்கை சூழலில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் பெரியோர் முதல் சிறியவர்கள் வரி தென் கொரிய சினிமா துறையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்கு நிறைய விஷயங்களைக் வழங்கக்கூடிய ஒரு கருவூலம்தான்.

    அருங்காட்சியக வளாகத்தின் கீள்தளத்தில் சிறிய ரெஸ்டாரண்ட் ஒன்றும் இருக்கின்றது. இங்கு நம் களைப்பு தீர காபி வாங்கி அருந்து விட்டு மீண்டும் மற்றொரு அருங்காட்சியகத்திற்கு நம் பயணத்தை நாம் தொடர்வோமா.. ?

    Share
  • காதல் என்பது என்ன ? ஸர் வால்டர் ராலே [The Phoenix Nest (1593)]

    சி. ஜெயபாரதன்image

    உன்னைப் பரிந்து கேட்கிறேன்
    இப்போது சொல் !
    காதல் என்பது என்ன ?
    அது ஓர் எழுச்சி ஊற்று !
    ஒரு கிணறு !
    சோகமும், சுகமும்
    சூழ்ந்து கொள்வது;
    ஆலய மணிபோல் காதிலே
    ஒலிப்பது !
    பலியாவது சொர்க்கமோ, நரகமோ ?
    இதுதான் காதலென்று
    பிறர் கூற நான் காதில்
    கேட்டது !

    ஆயினும் சொல் !
    உனை வேண்டுகிறேன்
    காதல் என்ப தென்ன ?
    புனித நாளில் அது ஒரு பணி !
    கூதல் மாதத்தைக் காதல்
    வேனில் மாதமுடன்
    பின்னுவது !
    மோகக் குருதிகள் புத்துயிருடன்
    போகம் பெறுவது !
    நாடகம் பற்றிப் பின்னர்
    கேள்விப் படுவது
    மற்ற பத்து மாதங்கள் !

    காதல் என்ன வென்று
    சொல் !
    கதிரோன் ஒளியும்,
    மழைத் துளியும் சேர்ந்த
    கலவை அது !
    பல்வலி அது !
    அல்லது அதைப் போல்
    வலிப்பது !
    ஊதியம் எவர்க்கும் கிடைக்காத
    ஓர் விளையாட்டு அது !
    இல்லை என்று மங்கை சொல்லி
    முழுமை பெறுவாள் !
    இதுதான் காதல் !
    கேட்டதைச் சொல்கிறேன் !

    காதல் என்ப தென்ன
    சொல் !
    ஆம் என்பது,
    பிறகு இல்லை என்பது !
    ஒரு பொழுது போக்கு அது,
    முறிவு முறைப்பாடு !
    விரைவில் மாயமாய் மறைவது !
    காதலைச்
    சாதகமாய் ஆக்கிக் கொள்
    உன்னால்
    இயன்ற மட்டும் !
    இதுதான்
    காதல் என்பேன் நான் !

    காதல் என்ன வென்று
    காட்டெனக்கு ஆயினும் ?
    ஊர்ந்து செல்வது
    உனை விட்டுப் போகாதது !
    ஊசலாடும் ஒரு வெகுமதி
    இங்கும் அங்கும் !
    ஒருவருக்கு ஒற்றைப் பயன்,
    அல்லது
    பெருமளவில் பலன்
    அதை நிரூபித்தவன்
    அப்படிக்
    கண்டு பிடிக்கவும் வேண்டும் !
    இனிய தோழா !
    இதுதான் காதல்
    உனது சிந்தனைக்கு !

    Share
  • அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம் – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம் – கவிஞர் வாலி – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் -மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் – நடிகை பாரதி – குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல்.

    ஒரு காதல் பாடல் மனதை வருடிக் கொண்டே இருக்குமா? இன்பரசத்தை இதயம் முழுவதும் அள்ளித்தெளிக்கும் வண்ணக் கோலமிதோ! கவிஞர் வாலியின் கரங்களில் முளைத்து வந்த வசந்த கீதமிது!

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் நடிகை பாரதி இணைந்து திரையில் தோன்றிய கோலமிது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் குழந்தையும் தெய்வமும் திரைப்பாடல்.

    காதலியிடம் காதலன் சொல்ல நினைக்கும் வார்த்தைகளைப் பட்டுமெத்தையிட்டு பக்குவமாய் பந்தி விரிப்பதுபோல் – மென்மை கலந்து வினாக்களாய் எடுத்த விழா.. இந்தப் பாடல்.

    அன்பின் மிகுதியால் தனது காதலன் விடுத்த வினாக்களுக்கு தக்க விடைகளும் அதே தரத்தோடு இன்பம் குறையாமல் எடுத்து வழங்குகின்றாள் – அன்புக் காதலி! இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இப்படியோர் காதல் செய்ய எந்த இதயம் விரும்பாமலிருக்கும்?

    பெண்மையின் மேன்மைகள் எல்லாம் பெருமைக்குரியவனவாக ஆராதிக்கப் படும்பொழுது எழுந்துவரும் மோகனமாய் இந்தப் பாடல் நம் இதய வாசலில் வந்து விழுகிறது! அலங்கார வார்த்தைகளாய் அணி வகுக்காமல் இயல்பான எழுத்துக்களால் எழுதிவைக்கப்பட்ட காதல் சாசனம் இதுவென்றே கலங்களை வென்று நிற்கிறது!

    கண்ணும் கண்ணும் கலந்து காதல் என்னும் விருந்து..
    கவிதை வடிவில் வரைந்து.. இனிய இசையும் கலந்து..
    திரையில் ஓவியமாய் மலர்ந்து.. நம் இதயங்களில் குடியிருக்கும் பாடல்!

    சந்தோஷம் தருகிற சங்கீதம் என்பதை சர்வ சாத்தியமாக்க .. இப்பாடலை இன்னொரு முறை கேட்டு மகிழலாமே!

    அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம்…
    நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை…
    அன்புள்ள மன்னவனே …ஆசையில் ஓர் கடிதம்…
    அதை கைகளில் எழுதவில்லை…
    இரு கண்களில் எழுதி வந்தேன்…

    நலம் நலம்தானா முல்லை மலரே…
    சுகம் சுகம்தானா முத்து சுடரே…
    இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
    எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ..
    வண்ணப்பூங்கொடி வடிவம் கொண்டதோ
    வாடை காற்றிலே வாடி நின்றதோ…

    அன்புள்ள மான்விழியே…ஆசையில் ஓர் கடிதம்…
    நான் எழுதுவது என்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை…

    நலம் நலம்தானே நீ இருந்தால் \
    சுகம் சுகம்தானே நினைவிருந்தால்…
    இடை மெலிந்தது இயற்கை அல்லவா
    நடை தளர்ந்தது நாணம் அல்லவா..
    வண்ணப்பூங்கொடி பெண்மை அல்லவா..
    வாட வைத்ததும் உண்மை அல்லவா…

    அன்புள்ள மான்விழியே…

    ஆசையில் ஓர் கடிதம்…
    அதை கைகளில் எழுதவில்லை…
    இரு கண்களில் எழுதி வந்தேன்…

     

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    கவா கம்ஸ்

    அன்புள்ள மணிமொழிக்கு,

         வணக்கம். நீ யார் என்று எனக்குத் தெரியும். நான் யார் என்று உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இந்த கடிதம் உனது வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பது மட்டும் சர்வ நிச்சயம். நான் கூறும் இக்கதையை கேள். அதன்பிறகு, நான் யார் என்பதை நீயே அறிந்து கொள்வாய்.

         அவள், சென்னையின் அந்த நேர்த்தியான சாலையில் திக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தாள். யாரையோ தேடுவதுபோல் தோன்றியது. அவளது விழிகளோ, பல நாட்கள் சூரியனைக் காணாத மலர்களை போல் வாடியிருந்தது. உதடுகள் பாலைவன நிலமாய் வறண்டு வெடித்திருந்தது. உடம்பில் விலையுயர்ந்தது என்று பார்த்தால் ஒரே ஒரு தங்க சங்கிலி மட்டுமே. காதில் பிளாஸ்டிக் தோடும் கைகளிலே மரவளையல்களும் அணிந்திருந்தாள். கால்களில் கொலுசு இருந்ததா இல்லையா என்பதை அவளது புடவை ரகசியமாய் வைத்திருந்தது.

         அந்த சாலையில் கார்களும் வேன்களும் தனக்கே உரிய வேகத்துடன் பறந்து கொண்டிருந்தன. ஓரமாய் சென்று கொண்டிருந்த அவள், தடுமாறியவளாய் சாலையின் உள்ளே நுழைந்து குடிகாரனை போலத் தள்ளாடி தள்ளாடி நடந்தாள். பலநாள் பட்டினி போலும். அப்போது, அந்த வழியே வேகமாக வந்த டாக்ஸி அவள் மேல் மோதியது. மயங்கி சரிந்தாள் அவள்.

         “ அம்மா ! அம்மா ! எழுந்திரு ! ரொம்ப அடி பட்டிடுச்சா ?,” என்று பதறினான் டாக்ஸி டிரைவர். பதில் ஏதும் கிடைக்காததால், அவளைத் தூக்கி டாக்ஸியில் போட்டுக் கொண்டு, கூட்டம் கூடும்முன் அங்கிருந்து கிளம்பி சென்று தப்பித்தான்.

         அவளை ஒரு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றான்.

    “ உங்க பேர் என்ன ? ”, டாக்டர்.

    “ ஹரி “, என்றான் டாக்ஸி டிரைவர்.

    “ இந்த பெண் உனது மனைவியா ? என்ன கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்குது “, டாக்டர்

    உண்மையை சொன்னால் போலீஸ் கேஸ் ஆகி உதைபடுவது உறுதி.

    ஒரு முடிவுடன் , “ ம் …. ம் … அமாங்க ! “, என்றான் ஒரு பயத்துடன்.

    “ பேரு ? “, டாக்டர்.

    “ ம் .. ம் ..  ! .. ஹரிணி “, என்று கூறிவிட்டு அந்த பெண்ணை ஏறிட்டான். அந்த பெண் அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

    “ ரொம்ப பெரிசா ஒண்ணுமில்லை .. கை கால்ல லேசா சிராய்ப்பு … அவ்வளவுதான். நாலு நாளா சாப்பிடலை போல… புருஷன் பொண்டாட்டி சண்டைன்னா பட்டினி போடுவையா ? போலிச கூப்பிடணுமா என்ன ? “, என்று அதட்டினார் டாக்டர்.

         “ இல்லீங்க … இனிமேல் ஒழுங்கா பார்த்துப்பேன் .. “, என்றான் ஹரி.

         தன் வீட்டிற்கே அவளைக் கூட்டிச் சென்றான். சின்னதாய் ஒரு ஒட்டு வீடுதான் என்றாலும் அங்கிருந்தவர்களின் மனது மிகப்பெரியதாக இருந்தது.

         தனது அம்மா, அப்பா, தங்கையிடம் விவரமாக நடந்தவற்றை கூறினான். ஹரியின் தங்கை , “ ஹையா ! எனக்கு கதைபேச ஒரு ஆன்டி கிடைச்சாச்சு “, என்று குதூகலித்தாள்.

         “ அம்மா ! அப்புறமா அவ யாரு என்னன்னு விசாரிங்க. நான் எது கேட்டாலும் பதில் சொல்ல மாடேங்கறா. பேந்தப் பேந்த முழிக்கறா. முதல்ல அவளுக்கு சாப்பாடு கொடு. கொஞ்ச நேரம் தூங்கட்டும். அப்புறம் கேட்டுக்கலாம் “, என்று அம்மாவிடம் ஹரி கூறினான்.

         நன்கு தூங்கி எழுந்த பின்னும் அவள் திரு திருவென்றே விழித்துக்கொண்டிருந்தாள்.

         நீ யாரம்மா ? எங்கிருந்து வந்திருக்க ? கைல துணிமணி, பணம் எதுவுமே இல்லாம எப்படி வந்த ? உங்க வீடு எங்க ? கொண்டுபோய் விட்டுடறோம் சொல்றியா ? “, என்றெல்லாம் கேட்டாள் ஹரியின் அம்மா.

         ஒரு மாணவனுக்கு, தேர்வில் அத்தனை கேள்விகளும் “அவுட் ஆப் சிலபஸ்” ஆக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவளுக்கு. அதிர்ச்சியாகி மயங்கி சரிந்தாள்.

         அதன்பிறகு அவர்கள் அவளை விசாரிப்பதையே நிறுத்திவிட்டனர். அவள் குடும்பத்தில் வாழ பிடிக்காமல் ஓடி வந்திருக்கலாம் என்று யூகித்தனர். செய்தித்தாளில் தகவல் கொடுக்கலாம் என்று யோசித்து, பின் அவளுக்கு பிரச்சனையை கொடுக்கலாம் என்பதால் அதையும் கைவிட்டனர்.

         நாட்கள் மாதங்களாயின. மாதங்கள் வருடங்கள் ஆகின. நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அவள் அந்தக் குடும்பத்தினர் மனதில் ‘ஈஸி சேர்’ போட்டு நன்கு அமர்ந்துவிட்டாள். அவளுக்கும் அந்த குடும்பமே உலகமாய் ஆனது. தனது கடந்த காலத்தைபற்றி யோசிப்பதையே விட்டுவிட்டாள்.

                    கூடவே ஹரிக்கும் அவளுக்கும் சிநேகம் காதலாய் மாறியது. ஆனால், அதை மனதளவில் உணர்ந்திருந்த இருவருமே வாய்விட்டுக் கூறிக்கொள்ளவே இல்லை.

         கணவன், குழந்தையென்று யாராவது வந்து விடுவார்களோ என்ற அச்சம் ஹரிக்கு.

         “ நான் யார் ? “, என்ற கேள்விக்கே விடைதெரியாத  போது காதல் தனக்கு ரொம்ப அவசியமா ? என்ற பதபதைப்பு அவளுக்கு.

         அந்த நாள் ! அனைவரும் பயந்து கொண்டிருந்த அந்த நாள் வந்தேவிட்டது. ஆம், அவர்கள் கோவிலில் குதூகலித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வயதான பெரியவர் அவளை அடையாளம் கண்டுகொண்டார்.

         “ அம்மா ! மணிமொழி ! இத்தனை நாளா எங்கே போய்ட்ட … எங்க செல்வமே ! உங்கப்பா அம்மா உன்ன தேடாத இடமில்லை… என்னைத் தெரியலையா ? நான்தான் உன் பெரியப்பா மா ! “, என்று கூறி அழுதார்.

         அவர்களது சொந்த ஊர் மதுரை. அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரரின் மகள், மணிமொழி. காலேஜ் டூர் வந்த இடத்தில் அவள் விபத்துக்குள்ளானாள். அப்போது ஏற்பட்ட பாதிப்பில் அவளுக்கு பழைய நினைவுகள் அழிந்து போயின. அவளை பத்திரமாக பெற்றோரிடம் சேர்க்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்த சமயத்தில் அவள் காணாமல் போய்விட்டாள்.

         கல்லூரி பேரைக் காப்பாற்ற நிர்வாகமும், குடும்ப கவுரவத்தை காப்பாற்ற பெற்றோரும் போலிசுக்கு போகாமல் தாங்களே சென்னையில் தங்கி இரண்டு வருடங்கள் தேடினர். பின்பு, நம்பிக்கையிழந்து திரும்பிவிட்டனர்.

         இந்த விஷயங்களை அந்த பெரியவர் மூலமாக அனைவரும் அறிந்து கொண்டனர்.

         அவளுக்கு இது அனைத்தும் வேறு யாரோ ஒருவருடைய கதைபோல் இருந்தது.

         பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை தரப்பட்டது. ஒரு சிறிய ஆபரேஷன் செய்தால், பழைய நினைவுகள் அனைத்தும் வந்துவிடும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆனால், இந்த நான்கு வருடத்து நினைவுகள் அழிந்து போய்விடும் என்ற செய்தி ஹரிக்கும் அவளுக்கும் இடியாய் இறங்கியது.

         அவளின் பொக்கிஷ நினைவுகளை அழிக்கும் புண்ணிய நாளும் முடிவாகிவிட்டது.

         “ ஹரி “ “ ஹரி “ என்று சதா ஜெபம் செய்துகொண்டிருந்தாள்.

         இன்னும் பத்து நாட்களில் தன் ஹரியை தனக்கே அடையாளம் தெரியாது என்று எண்ணும்போதே அவள் கண்கள் சூடேறின. கண்ணீர் சுட்டது.

         அதற்காகத்தான், அதற்காகத்தான் இந்தக் கடிதம் !

         அவள் ஹரியை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை உணர்த்துவதர்க்காகவே இந்த கடிதம்.

    ஆம். அந்த “ அவள் “ நீதான்.

    ஹரியை விட்டுவிடாதே !

    ஹரியை விட்டுவிடாதே !

         உன் மானம் காத்தவன் ! உனக்கென ஒரு குடும்பத்தைக் கொடுத்தவன் ! நிராயுதபானியாக நின்ற உனக்கு வாழ்வளித்தவன் !! அவன் இல்லையேல், எங்கோ யாரோ ஒரு காமவெறியன் கையில் சிக்கி சின்னாபின்னப்பட்டு இறந்திருப்பாய் ! ஹரி ஏழைதான். ஆனால், உத்தமன்.

    ஹரியை மறந்துவிடாதே !

    ஹரியை ஏமாற்றிவிடாதே  !!

    என்று உனக்குக் கூறவே இக்கடிதம்.

    நான் யார் என்று இப்போது அறிந்திருப்பாய்.

    ஆம் ! அந்த நீ நான்தான்.

         நான் எனக்காகவே எழுதிக்கொள்ளும் கடிதம். இன்னும் பத்து நாட்களில் நான் நானாக இருக்க மாட்டேன் அல்லவா ? அதற்காகத்தான் இந்த கடிதம். இந்த நான்காண்டுகளில் எனக்கு என்ன ஆயிற்று என்று நானே என் கைப்பட எனக்கு எழுதிய கடிதம்.

         இதை நான் என் பெற்றோரிடம் கொடுக்கமாட்டேன். அவர்கள் கிழித்து எறிந்து விடுவார்கள். ஹரி பெற்றோரிடமும் கொடுக்க மாட்டேன். எனக்கு நல்லது செய்வதாக எண்ணி மறைத்துவிடுவார்கள். என் மனதை நன்கு உணர்ந்த எனது தோழி, ஹரியின் தங்கையிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறேன். ஆபரேஷன் முடிந்தவுடன் இந்த கடிதம் என் கைகளில் கிடைக்கும்.

         பின்பு, இதே மலர்ச்சியுடன் எனது காதலுக்காகப் பெற்றோரிடம் போராடுவேன்.  நிச்சயமாக !

    ஹரியிடம் எனது காதலை சொல்வேன், மணிமொழியாக !

    –    அதுவரையில் காத்திருப்பேன்

    ஹரியின் ஹரிணியாக !!!

    Share
  • திருமால் திருப்புகழ் (41)

    கிரேசி மோகன்

    104988487.FVDLzhV2
    தனதான தத்தன தனதான தத்தன
    தனதான தத்தன -தனதான….

    ———————————————————————————————————————-

    “கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும், f-1
    தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும்
    குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும்,
    படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை

    சபைகூச வைத்திடும் சனிவாய்அ சுத்தமும்
    உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும்,
    செரிமானம் அற்றிட வலியால்து டித்தலும்,
    சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக

    அபவாத புத்தியும், மமகார சித்தமும்,
    அவதூறு ரைத்திடும் -விடநாவும்,
    அணுகாது சத்துவ மனமேனி உற்றிட images (2)
    அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா

    மதுகேசி, சக்கிரன், முலைபூதம், சர்ப்பமும்,
    சிசுபால வர்க்கமும், -முறைமாமன்
    தரைசாய இத்தரை அவதார முற்றனை,
    அருளாய்யெ னக்கரி -பெருமாளே”
    ————————————————————————————————–

     

     

     

    Share
  • அன்பு நண்பி மணிமொழிக்கு!

    அன்பு நண்பி மணிமொழிக்கு ஆதிரை எழுதியது.

    இங்கு நான் நலமே.  அங்கு உன் நலத்தையும் உன் குடும்பத்தார் நலத்தையும் அறிய ஆவல்.

    நீண்ட நாட்களுக்குப் பின் உன் கடிதத்தைப் பார்த்தவுடன், மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விட்டேன்.  ஆனால் அதில் உன் அண்ணன் மகன் பாலச்சந்தரின் திருமண முறிவு பற்றி நீ கவலையுடன் எழுதியிருந்ததைப் படித்தவுடன் மிகவும் வேதனையாகிவிட்டது.  அவனை எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது.  சிறு வயதில் நீ தானே அவனை வளர்த்தாய்?  அவனது பெற்றோரை விட, ‘அத்தை’ ‘அத்தை’ என்று உன்னிடம் தான் அவனுக்கு ஒட்டுதல் அதிகம்!

    நீ குறிப்பிட்டிருந்தது போல், இக்காலத்தில் திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் மண முறிவு நிகழ்வது, மிகவும் கவலையளிக்கும் செய்தி தான்.   இக்கால பிள்ளைகளுக்கு எங்கும் எதிலும் அவசரம் தான்.  கண்டவுடன் காதல், பெற்றோரை எதிர்த்து அவசரத் திருமணம், மஞ்சள் கயிறு காய்வதற்குள்ளாகவே மணமுறிவு!

    ஹிந்து பத்திரிக்கையில் மணமகன்/மகள் தேவை விளம்பரங்களில் பாதிக்குப் பாதி மணமுறிவு பெற்றவர்களின் விளம்பரம் வருவதைப் பார்த்தாயா? நம் குழந்தைகள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் மணி?

    ஒரு குழந்தை பிறந்த பின்னரும், பாலுவின் மனைவி மணமுறிவு பெறுவதில்  ஆர்வம் காட்டுவது தான் பெரிய கொடுமை. குழந்தையின் நலனை உத்தேசித்தாவது, இருவரும் சேர்ந்திருக்கக் கூடாதா? சிறுவயதிலேயே பெற்றோரைப் பிரிந்து வாழ, அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது?

    மணமுறிவுக்கு அப்பெண் வீட்டார் பதினைந்து லட்சம் கேட்கிறார்கள் என்பதையறிந்து அதிர்ச்சி.  மணமுறிவை இப்போது பெண்வீட்டார் ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

    ஏனெனில் என்னுடன் வேலை பார்க்கும் விஜி என்பவரின் மகனுக்கும், இது போன்றே நடந்தது.  திருமணம் முடிந்த ஆறு மாதங்களுக்குள் விஜியின்  மருமகள், “இனிமேல் இங்கு வாழ முடியாது,” என்று சொல்லி விட்டு அவளது அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள்.  இரவில் அலுவலக நண்பர்களுடன் பார்ட்டியில் கூத்தடித்து விட்டு, நேரங்கழித்து வீட்டுக்கு வந்தவளைக் கணவன்   கண்டித்தானாம்.  தன் சுதந்திரத்தில்(!) தலையிடுவதாக அவனோடு சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீட்டுக்குப் போனவள், போனவள் தான்.

    இவர்களும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்கள்.  “பெண்ணையும் பையனையும் தனிக்குடித்தனம் வைத்து விடுகிறோம்;  நாங்கள் யாருமே வரமாட்டோம்,” என்றெல்லாம் கூடச் சொல்லிப் பார்த்தார்கள்.  ஆனால் அவள் எதற்கும் மசிவதாய் இல்லை.  ‘இனி இவனோடு சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை,’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாளாம்.

    பெண்ணின் பெற்றோரும், அவளது அந்த முடிவுக்கு எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்ற போது விஜி மிகவும் நொந்து போய்விட்டார்.  நம் பிள்ளையோ, பெண்ணோ இது போல் தவறு செய்யும் போது பெற்றோராகிய நாம் என்ன செய்வோம்?

    திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர்!  குடும்பத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்.  இரண்டு பேரும் வெவ்வேறு குடும்பத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்தவர்கள் என்பதால், துவக்கத்தில் கருத்து வேறுபாடு இருக்கவே செய்யும்.  அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு, வாழ்க்கையை நாசம் செய்து கொள்ளக்கூடாது; விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையே ஈகோ என்ன வேண்டிக்கிடக்கிறது? என்றெல்லாம் நம் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்லி, இருவருக்கும் சமரசம் செய்து வைக்கத் தானே முயல்வோம்?

    ஆனால் இப்போது பெற்றோரே, தம் பெண்ணிடம், “நீயும் தான் அவனுக்கிணையாகச் சம்பாதிக்கிறாய்; நீ எதற்கு அடங்கிப் போக வேண்டும்?  பிரிந்து வருவது தான் சரி,” என்று பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதில் இன்னும் அதிகமாக்குகிறார்கள்.  அல்லது “இது என் மகளுடைய வாழ்க்கை பிரச்சினை; இதில் அவள் தான் முடிவெடுக்க வேண்டும்; எங்களால் எதுவும் செய்ய முடியாது,” என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்.  விளைவு?  மணமுறிவு!

    அதற்கு நஷ்ட ஈடாக பையன் வீட்டாரிடம் பதினைந்து அல்லது இருபது லட்சம் எனப் பேரம் பேசுவது தான் எல்லாவற்றிலும் கொடுமை!  எத்தனை லட்சம் கொட்டிக் கொடுத்தாலும், நாசமாய்ப் போன தம் பெண்ணின் வாழ்வு சீராகி விடுமா என்பதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

    நாம் இருபது ஆண்டுகள் வேலை செய்து பெற்ற வருமானத்தை நம் பெண்கள் இருபது வயதிலேயே பெறுகிறார்கள் என்பது மகிழ்ச்சி தான்.    ஆனால் அதற்காக பெரியவர்களை மதிக்காமல்,  அவர்களது புத்திமதியை அலட்சியம் செய்யும் போக்கு, எதற்கும் விட்டுக்கொடுத்து வாழாத பிடிவாதம் தான் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

    மேல்நாட்டுக் கலாச்சாரத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி நம்முடையதைக் காற்றில் பறக்க விட்டு விட்டுக் காதலர் தினம் கொண்டாடுவதும்,  திருமணத்துக்கு முன்பே, எந்தவிதக் கட்டுப்பாடுமின்றிக் காதலனுடன் சினிமா, பார்க் என்று சுற்றுவதும், ஆண் பெண் என்ற பேதமில்லாமல், மது அருந்துவதும்,  புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் நடு இரவில் பாட்டு, டான்ஸ் என்று பொது இடங்களில் கும்மாளம் அடிப்பதும்,  அங்கிங்கென்னாமல் எல்லா இடங்களிலும் மிகவும் சகஜமாகிவருகிறது. இதனால் பாரம்பரியம் மிக்க நம் குடும்பம் என்ற அமைப்பே, சிதைவுக்குள்ளாகும் ஆபத்து இருப்பதாக உணர்கிறேன் மணி!

    இது தான் பெண்களின் உண்மையான சுதந்திரம் என்ற மாயையில் இவர்கள் உழலுவது தான் சோகத்திலும் பெரிய சோகம்!

    கயலுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் துவங்கியிருக்கிறது மணி!  பையன்  ஏழையாக இருந்தாலும் படித்தவனாக, பண்புள்ளவனாக, நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாக, எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவனாக அமைய வேண்டும் என்பதே என் வேண்டுதல்!   அவளிடம் ஒரு அம்மாவாக மட்டுமில்லாமல், எந்த விஷயமானாலும் கூச்சப்படாமல் தயங்காமல் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு ஒரு தோழியாக நடந்து கொள்கிறேன்.  மேலும் அவளுக்கு நம் தமிழ்க் கலாச்சாரப் பின்னணி மற்றும் குடும்ப மதிப்பீடுகளைச் சொல்லியே வளர்த்திருக்கிறேன்.  எனவே மாமியார் வீட்டில், ‘பெண்ணை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்,’ என்ற நற்பெயரை அவள் எனக்கு வாங்கித் தருவாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.  உனக்குத் தெரிந்த இடத்திலும், கயலுக்கு மாப்பிள்ளை பார்க்கவும்.

    மற்றவை உன் அன்பு கடிதங்கண்டு பதில்,

    இப்படிக்கு,

    ஞா.கலையரசி

    Share
  • கண்ணின் கருமணியாம் மணிமொழிக்கு!

     

    சேஷா சீனிவாசன்

    என்னுயிரினும் இனிய மகள் மணிமொழிக்கு,

    உன் அன்பு அன்னை எழுதுவது. உன் வாழ்வில் நலமும் இன்பமுமே என்றும் சூழ்ந்திருக்க வேண்டுகின்றேன்.

    எங்கள் ஆசைமகளாகிய நீ எங்களுக்குத் தெரிவிக்காமலே உன் விருப்பப்படி உன் மணவாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்டாய். ஆரம்பத்தில் அது எங்களுக்குப் பெருத்த இடியாகவும், சொல்லொணாத் துயரம் தரும் நிகழ்வாகவும் இருந்ததென்னவோ உண்மைதான்; ஆயினும், மணவாழ்க்கை என்பது ஒரு பெண்ணுக்கு அவள் மனம் விரும்பும் வாழ்க்கையாக அமைவதுதானே சிறப்பு? அந்த அடிப்படையில் பார்த்தால் நீ உன் மனத்திற்குப் பிடித்த மணவாளனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்; இஃதொன்றும் மன்னிக்கமுடியாத பெரிய குற்றமில்லை. அத்தோடு…இளம்பெண்கள் தம் விருப்பப்படிக் கணவனை வரிப்பதும் அவனோடு உடன்போவதும் நம் தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிதுமில்லை.

    தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்ட தன்மகளைப் பிரிந்த தாய் ஒருத்தி தன் அன்புமகள் சிறு குழந்தையாய் இருந்தபோது வைத்து விளையாடிய பாவையையும், சிறிய கிள்ளையையும் காணுந்தோறும் ”இவையெல்லாம் என் இனிய பைங்கிளி வைத்து விளையாடிய பொருள்களாயிற்றே!” என்று சொல்லிச் சொல்லிப் புலம்புவதை ஐங்குறுநூற்றுப் பாடலொன்றில் ஓதலாந்தையார் எனும் அருந்தமிழ்ப் புலவர் சொல்லோவியமாய் வடித்திருப்பார். கல்லூரியில் நான் அப்போது படித்த பாடல் இப்போது என் நினைவில் நிழலாடுகின்றது…..

    ”இதுவென் பாவை பாவை யிதுவென்
    அலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற்
    பைங்கிளி யெடுத்த பைங்கிளி யென்றிவை
    காண்டொறுங் காண்டொறுங் கலங்க
    நீங்கின ளோவென் பூங்க ணோளே.” 

    மணிமொழி! என் சூழ்நிலையின் பிரதிபலிப்பாகவே இப்பாடலை உணர்கிறேன்….கண்களில் வழியும் கண்ணீரருவிக்கு அணைகட்ட இயலவில்லை மகளே!

    உன் தந்தையின் நிலையோ,

    ”ஒருமகள் தன்னை யுடையேன்

      உலகம் நிறைந்த புகழால்

    திருமகள் போல வளர்த்தேன்

      செங்கண்மால் தான்கொண்டு போனான்”

    என்று ஆண்டாளை அரங்கத்தானுக்கு மணம்செய்து கொடுத்துவிட்டுப் புலம்பும் பெரியாழ்வாரின் நிலையை ஒத்திருக்கின்றது. வேறென்ன சொல்ல?

    ”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது” என்று கீதையில் அந்தக் கண்ணபிரான் உபதேசித்திருப்பதை எண்ணும்போது மனம் சிறிது அமைதிப்படுகின்றது. வாழ்வில் நடப்பவை எதுவும் நம் விருப்பப்படி நடப்பதில்லையே. நீரின் போக்கில் செல்லும் புணைபோல் விதியின் போக்கில் செல்வதுதான் உயிர்வாழ்க்கை என்பது ‘உளவியல் அறிஞராய்’த் திகழும் கணியன் பூங்குன்றனார் என்ற சங்கப் புலவர் கண்டு சொன்ன உண்மையல்லவா!

    ”……………………………..மின்னொடு
    வானந் தண்டுளி தலைஇ யானாது

    கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்

    முறைவழிப் படூஉ மென்பது திறவோர்

    காட்சியிற் றெளிந்தனம்…………..” 

     

    எத்துணைப் பொருள்பொதிந்த மொழிகள் இவை!

    மனம் கவல்கின்றபோதும், வாழ்வின் போக்கை நினைத்துப் பேதுறும்போதும் இதுபோன்ற பாடல்களும், ஆன்றோரின் அறவுரைகளுமே மனத்துயர் தீர்க்கும் மருந்துகளாகின்றன.

    போகட்டும்… இந்தக் கடிதத்தை மேலும் அவலச்சுவை நிறைந்ததாக்க விரும்பவில்லை; வேறு செய்திகளுக்கு வருகிறேன்….

    நீ சென்னையில் இருப்பதாகவும் உன் வாழ்க்கைத் துணைவன் நல்ல வேலையில் இருப்பதால் உனக்குப் பொருளாதார நெருக்கடி ஏதும் எழ வாய்ப்பில்லை என்றும் உன் தோழி பூங்குழலி மூலம் அறிந்தேன். (உன் முகவரியையும் அவள்தான் தந்தாள்). எங்களோடு நீ தொடர்பை முறித்துக்கொண்ட போதிலும் உன் தோழியுடன் தொடர்பிலிருப்பது குறித்து மகிழ்ச்சி. இல்லையென்றால் உன் நிகழ்காலம் நாங்கள் அறியாத இருண்டகாலமாகவே அல்லவா போயிருக்கும்!

    மணிமொழி! உன்மீது எங்களுக்குக் கோபமோ வருத்தமோ கொஞ்சமும் இல்லை. நீ மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழவேண்டும் என்பதே உன் பெற்றோராகிய எங்கள் விருப்பம். எங்கள் முயற்சியின்றியே இறைவன் அருளால் அது நல்லபடியாக நடந்துவிட்டது. அளவற்ற அருளாளனான அந்த இறைவனுக்கு நன்றி!

    இனி, உன் அன்னை என்ற முறையில் உனக்குச் சில அறிவுரைகளைக் கூற விரும்புகிறேன். எங்களுக்கு நீ ஒரே பெண் என்பதால் உன்னைச் செல்ல(வ)மகளாக வளர்த்துவிட்டோம்; உன் விருப்பப்படியே எல்லாம் செய்தோம் (மணவாளனைத் தேடித் தருவதைத் தவிர!). எனவே சிரமம் என்பதே என்னவென்று அறியாதவள் நீ; சுடுசொல்லே கேட்டறியாதவள். உன் பெற்றோர் போலவே உன் புகுந்த வீட்டினரும் உன்னைக் கொண்டாடவேண்டும் என்றும் உன் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்காதே! புதிதாகச் சென்ற நீ(தான்) அவர்களின் விருப்பங்களையும், வாழ்க்கைமுறையையும் முதலில் அறிந்துகொள்ள முயலவேண்டும். அதற்கேற்ப உன்னை ஓரளவிற்கேனும் மாற்றிக்கொள்ள முயல்வது தேவையற்ற கருத்துமுரண்களும், சச்சரவுகளும் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

    கூடுமானவரைக்கும் அடுக்களை வேலைகளை நீயே விருப்பத்தோடு செய்.

    அன்போடும் சுவையோடும் பரிமாறும் உணவும், பண்பான பேச்சும் புகுந்த வீட்டினரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ரகசியங்கள்; இவை நல்ல பெண் என்ற பெயரை உனக்கு விரைவில் பெற்றுத்தரும். இப்படிச் சொல்வதனால் உன் அன்னை உன்னை மற்றவர்களுக்கு அடிமையாக வாழச் சொல்கிறாள் என்று பொருள் கொள்ளாதே! விட்டுக்கொடுத்துச் செல்வதும் அனுசரித்து நடந்துகொள்வதும் அடிமையாயிருப்பது என்று பொருள்படாது. அதுவும் காதல் திருமணம் செய்துகொண்ட உன்னையும் உன் கணவனையும் உன் புகுந்த வீட்டினர் அன்போடு ஏற்றுக்கொண்டனர் என்பதை அறிந்தபோது நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது! ஆகவே அவர்கள் எங்களைவிடவும் நல்ல மனிதர்கள் என்றே எனக்குத் தோன்றுகின்றது. அத்தோடு, மணமான பெண்ணுக்குத் தன் மாமியாரும் மாமனாருமே தாய் தந்தையர்! அவர்களை அன்போடு பேணுவது அப்பெண்ணின் கடனாகும்.

    அடுத்து, நீ கற்ற பொறியியல் கல்விக்கு ஏற்ற வேலை ஒன்றையும் அடைவதற்கு முயற்சி செய் உன் புகுந்த வீட்டினரின் சம்மதத்துடன்! சிறுவயது முதலே நற்பண்புகளை அறிந்தும் புரிந்தும் வளர்ந்த நீ, நல்ல பொறுப்புள்ள பெண்ணாக நடந்துகொண்டு பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு!

    மணிமொழி! எங்களின் சம்மதம் பெறாமல் நீ மணம்புரிந்து கொண்டதனால் நாங்கள் உன்னை ஏற்றுக்கொள்வோமோ…..மாட்டோமோ என்றெல்லாம் அலமருவதைத் தவிர்த்து எங்களோடு பழையபடி நீ அன்பாயிருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். எங்களுக்கு நீ ஒரே பெண் அல்லவா? உன்னைவிட்டால் எங்களுக்குத்தான் யார் இருக்கிறார்கள் அம்மா?

    விரைவில் உன்னிடமிருந்து தொலைபேசி அழைப்பை எதிர்பார்க்கிறேன். எங்கள் அருமை மாப்பிள்ளைக்கு (உன் கணவனுக்கு) எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவி. உன் புகுந்த வீட்டினர் அனைவரையும் நானும் உன் தந்தையும் நலம் விசாரித்ததாகச் சொல்லவும்.

    கணவனுக்கு ஏற்ற மனைவியாக…..அவன் பெருமையை உயர்த்தும் பீடுடைய பெண்ணாக நடந்துகொள்.

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

    சொற்காத்துச் சோர்விலாள் பெண். என்பது நீ அறியாதது அல்லவே!

    விரைவில் உன்னையும், மாப்பிள்ளையையும் நேரில் காணும் ஆவலுடன் வழிமேல் விழிவைத்தபடி,

    உன் அன்புப் பெற்றோர்.

    Share
  • இசைக்கவி ரமணன் – அனு ரமணன் மணிவிழா வாழ்த்து

     

    Ramanan

    Ramanan1

    Ramanan 2

     

    திருவாழும் பதிமயிலைத் திருப்பதியில்
    திருமகளும் கலைமகளின் கண்மணியும்
    பார்போற்றும் தம்பதியராய் புவிவாழ்த்தும்
    கவியும் பாரதியும் போல பரிதியும் அல்லியும்போல
    கடலும் அலையும்போல இணைந்தே இதமாய்
    நட்பும் சுற்றமும் அலையலையாய் அருகிருந்து
    பாசமும் நேசமும் பெருமழையாய் பொழியவே
    பொங்கும் அன்பும் பொற்றாமரையாய் பொலிகவே
    நலமும் வளமும் தடையறப் பெருகிடவே
    இசையும் கவியுமாய் இணைந்திருப்போரின்
    இதயமாய் இருக்கும் இல்லாளின் இதத்தோடு
    இன்னுமொரு நூற்றாண்டு நித்தியமாய்
    பொங்கும் மழையாய் நீவிர் இருவரும்
    பெரியோர் ஆசிகளுடன் வாழ்வாங்கு வாழ்வீரே
    நன்மக்களும் நல்லாசிகள் பெற்றுய்யவே
    நீவிர் நித்தியப்புன்னகையுடன் வாழிய வாழியவே!
    வாழ்த்துரைக்கட்டும் தெய்வங்களைனைத்தும்
    சித்திகளனைத்தும் வசமாகட்டும் உங்களுக்கு
    ஆலம் விழுதுகளாய்ப் பரவி நிற்கும் உங்கள்
    வேர்கள் கண்டு என்றென்றும் வாழ்த்துரைக்கட்டும் என் நா!!
    பூமரத சாந்திக்கும் சதாபிஷேகத்திற்கும் கனகாபிஷேகத்திற்கும்
    வேதமந்திரங்களுடன் நட்பும் உறவுமாய் நிறைந்த வாழ்த்து
    எட்டுத்திக்கும் சங்காய் முழங்க வாழ்வாங்கு வாழ்வீரே நீவிர்!!!

    Share