அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே!
ஆட்படல்.. ஆளுதல்.. அன்பின் இருபக்கங்கள்.. அறிமுகமாதல்..
அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே!
என்ன இது? போட்டியெல்லாம்!! மாறிவரும் உலகமிதில் மாறாத காதல் என்பதை நிரூபிக்கும் வழியா? சரி.. பார்க்கலாம்! இந்த சுயவரத்தில் மற்றுமொரு முறை வெற்றிகொண்டு எனக்கு மாலையிடுங்களேன் என்று நீ அழைத்தபின் அதுவும் மனதைத் தொடும் ஒரு மடல்தான் வேண்டும் என்று அறிந்தபின்.. கரும்பு தின்னக் கூலியா? இன்றைய உலகில் எழுத்து என்பது எப்படியிருக்கும் என்கிற ஆராய்ச்சி நடக்கிறது! ஏதோ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஏதோ கடமைக்காக எழுதியவர்கள்.. வாழ்க்கை என்று வந்தவுடன் எழுத்தைக் கைகழுவி விட்டார்கள்! பாவம் அவர்கள் என்பதைவிட வேறு என்ன சொல்வது? குற்றால அருவியை ஏதோ குறுஞ்செய்திக்குள் அடக்கிவிட்டதாய் கற்பனையில் வாழ்கிறார்கள்!
பொங்கிப் பெருகிவரும் உற்சாக கங்கையை உள்ளத்துள் உணர்ந்து ஒவ்வொரு வார்த்தையையும் உனக்காக.. இது உனக்காக என்று தேர்ந்தெடுத்து தொடுக்கின்ற ஆரமல்லவா மடல்! இந்த ஆனந்தம் அறிந்தவர்கல்லவா தெரியும்? ஆட்படல்.. ஆளுதல்.. அன்பின் இருபக்கங்கள்.. அறிமுகமாதல் முதல் அடைக்கலம் கொள்ளுதல் என்று அடடா.. பக்கம் பக்கமாய் பரவிக்கிடக்கும் காதலை.. யார் இவர்கள் ஏதோ மின்னஞ்சலில் அனுப்பிவைப்பார்களாம்! அலைபேசியில் ஆழ்ந்துகிடப்பார்களாம்! சேட்டிங்கில் செத்துவிழுவார்களாம்! ஒரு மடல் என்பது ஒரு மடல் அல்ல.. அது உள்ளப் பதிவு! ஒவ்வொரு முறையும் அதைப் படிக்கின்ற போது கிடைத்திடும் ஆனந்தம் அளவிடற்கரியது! ஆழ்கடல் மனது.. அதில் அலைகள்போல் உன் நினைவு!! ஓர்நொடியும் ஓய்வதில்லை.. ஒய்யாரம் குறைவதில்லை!! வா அதிலே நீந்தலாம் என்று உன்னைத்தான் அழைக்கிறேன்!
உறவின் பெருமைகளை உணர்ந்தவர்களால்மட்டுமே காதலின் உயரத்தை அறியமுடியும்போது.. அந்த உயரத்தைத் தொடும்போது மட்டுமே வாழ்க்கையின் பொருளை உணரமுடியும்போது.. நாம்தானே அங்கே ராஜாங்கம் நடத்துபவர்கள்! பிரிவு என்று வருகிறபோதும்.. மனம் படும் பாட்டை எழுத்தில் வடிக்கும்போதல்லவா கலம்பகங்கள் பிறக்கின்றன! இத்தனை அன்பா என்மீது என்று ஒருவர் மற்றொருவரை இன்னும் நேசிக்க முடிகிறது!
உயிரோடு ஒன்றியிருக்கும் காதலை உள்ளத்தால் தொடுகிற கலைதான் எழுத்து! அதைவிடுத்து.. எந்த வகையில் எடுத்துப் பார்த்தாலும் குறைப்பிரசவங்களாகவே அவை தோன்றுகின்றன! வாழ்வில் வாட்டம் வந்து சூழும்போதுகூட இதுபோன்ற மடல்கள் எடுத்துப்படித்தால் மனம் துன்பத்திலிருந்து மீளும்! ஒன்றிரண்டல்ல.. உனக்காக நான் வரையும் மடல்கள்.. வாழ்க்கையில் நடந்த வசந்தவிழாக்கள் எல்லாம் இன்னும் நம் மனத்தோட்டத்தில் பூத்துக்குலுங்குவதற்கு இந்த மடல்கள்தானே சாட்சி!! வெறும் சதைப்பிண்டம் நரம்பு மண்டலம் எலும்புவடிவம் அல்ல இவ்வுலகில் நாம் வாழும் வாழ்க்கை! இவற்றையெல்லாம் தாண்டி.. எங்கிருக்கிறது என்பதை அறிய முடியாத மனம்.. அந்த மனதில் நாம் இணைந்து எழுப்பிய காதல் மாளிகை.. அதை வரவேற்று வரைந்துவைத்த எண்ண மடல்கள்! சொல்லப்போனால் கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் போல ஒவ்வொருவருக்குள்ளும் இயங்கும் மனம்.. அது என்னென்ன சொன்னது..சொல்கிறது என்று இதயம் சொல்ல விரல்கள் எழுத இதோ உனக்காக நான் வரைந்த கவிதை ஒன்று!
ஆசைநதியில் ஆடிப்பெருக்காம்!!
இதயம்வழியும் கருணைமழையில் என்னைஅணைத்திருந்தாய்!
கனவோ நனவோ காலம்முழுதும் உன்னைநினைத்திருந்தேன்!
எதுகை மோனை இரண்டும் வேண்டும் எந்த கவிதைக்கும்!
துணைதான் வேண்டும் சிறகைவிரிக்கும் எந்த பறவைக்கும்!
உறவின்சுகங்கள் உள்ளதுகோடி உலகம் அறிவதில்லை!
உயிரே உந்தன் நினைவேயன்றி என்னிடம் ஏதுமில்லை!
வண்ணம்சிதறா வடிவழகெல்லாம் உந்தன் முகம்தானே?
கனிவாய் திறந்து சொல் ஒன்று சொல்லேன்செல்லக்கிளிபோலே!
விழிமலர்மூடி விடைகள்தேடும் வித்தையைக் காட்டட்டுமா?
உன்பனிமலர்க் கன்னம் பக்கத்திலிருந்தும் பஞ்சாங்கம் பார்க்கலாமா?
ஆசையைக் கொஞ்சம் ஆற்றிட வேண்டும் அன்பே நீ அருகில்வா!
ஆற்றங்கரையும் அதற்குத் தோதாய் அழைப்பு விடுக்கிறதே!
பூங்குயில்கூட்டம் கூவும்மொழிக்கு அர்த்தம் நானறிவேன்!
புரியும்வரையில் உனக்கும் அதையே நானே எடுத்துரைப்பேன்!
கொட்டும் அருவி கொள்ளை அழகு கொஞ்சம் குளிக்கலாமா?
சாகசத் தென்றல் மேனிதழுவி சரசங்கள் நடத்தலாமா?
பேசும் சித்திரம் பெண்மை என்றால் உன்னைக் காட்டட்டுமா?
வீசும்காற்றாய் மூங்கில் துளைகளில் வழிந்து ஓடட்டுமா?
பெளர்ணமி வெளிச்சம் பாயுமிடத்தில் பஞ்சணை போடட்டுமா?
உன்பட்டுவிரல்கள் கட்டுப்படவே மெத்தையில் மூழ்கலாமா?
தேவைகள் எல்லாம் தீரும்வரைக்கும் கார்குழல்விரிக்கட்டுமா?
பார்வையில் தருகின்ற போதைமதுவில் மறுபடி நீந்தலாமா?
ஆசைநதியில் ஆடிப்பெருக்காம் அள்ளிக் கொள்ளலாமா?
அன்பில் அணைத்து அல்லும்பகலும் இன்பம் சேர்க்கலாமா?
உன்னைப் பற்றிய நினைவு வரும்நேரமெல்லாம் ஏடெடுத்து எழுதிவைப்பேன்.. அவை உன் உள்ளம்நோக்கி ஓடிவரும் அன்புவெள்ளம்! மோகமலர் சூடிவரும் ஆரணங்கின் அழகை.. ரகசியமாய் காணும் அதிசயம்தான் என்ன? நாதமணி ஓசையுடன் நடந்துவரும் போது நான் மயங்கிக் கொஞ்சம் உன்னில் சாய்கின்றேன் கண்ணே! பாவிரித்துப் பாடுவது பாவலனின் வேலை.. நாவிரித்து நாளுமே போற்றுகிறேன்.. உன்னை! தேனெடுத்து கொஞ்சம் தீண்டுதலைத் தொடங்கு! தெள்ளுத்தமிழ் பண்ணில் துள்ளிவரும் நெஞ்சு!! யாழினிசை போலவரும் காதலியின் குரலில் ஏழுஸ்வர ராகங்கள் வேண்டுகிறேன் கண்ணே! நீ அசைந்து வருகின்ற சோலையில் தென்றலுக்குக் கூட தெம்மாங்கு பிடிக்கும்! உனைக் காணும்நேரத்தில் பூத்திருக்கும் மலர்களெல்லாம் புன்னகையால் வரவேற்கும்! பச்சைப் பசும்புல்கூட நீ இங்கே வந்து அமர மாட்டாயா என்றேங்கும்! பறந்துசெல்லும் கிளிகளெல்லாம் ஏதோ பாடம்படிக்க அருகில் வரும்! நடுவில் உள்ள தடாகத்தில் நீந்தும் வெள்ளை அன்னங்கள் உன்னை விழுங்குவதைப் போல் பார்க்கும்!
இவைகளுக்கெல்லாம் காட்சிதந்தபடி.. நீ என் மார்மீது சாய்ந்தாயடி.. கொள்ளை அழகு அங்கே கொட்டிக்கிடக்க.. நான் எந்த இடத்தை மெல்லத் தீண்ட என்று திண்டாட.. சொல்லுங்கள் என்று ஒரு புல்லாங்குழல் போன்ற குரலில் வருடினாய்! அப்படியே என் மனதைத் திருடினாய்! மைதீட்டிய விழிகளிரண்டும் மன்மதராகம் பாட.. மையலின் பல்லவிகள் மனதிற்குள் ஓட.. உன் கூந்தலில் மறைந்திருந்த மல்லிகைப்பூக்கள் தம் பங்கிற்கு மயக்கத்தைக் கூட்ட.. நான் என்ன கதியானேன் என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ?
நான்கு குணங்களும் ஒருங்கே அமைந்த பெண்ணே.. நீயும் நாணத்தில் நலம் பாடினாய்.. வெட்கத்தில் கொஞ்சம் மூழ்கினாய்! அச்சத்தில் மீண்டும் தவித்தாய்! ஆசையில் என்னைத் தேடினாய்! அன்பே என்று பாடினாய்! அல்லிவிழி மூடினாய்! துள்ளும் கயலாகினாய்! சொல்லில்வரா உணர்வலையில் சுற்றிக்கிடந்தாய்! உன் பட்டுக்கன்னங்களை என் விரல் தொட்டு விளையாட.. ‘ம்’ என்னும் போதையூட்டி என்னைத் தள்ளாட வைத்தாய்! இடையிடையே உன் காதருகே நான் ஏதோ சொல்ல.. கலகலவென்றே சிரித்தாய்! கட்டிமுத்தம் கொடுத்தாய்! துடியிடையால் துவண்டாய்! இலைமறையாய் இருந்ததை எல்லாம் எனக்கு மட்டும் தனிமறையாக்கினாய்! நகங்களைக் கொஞ்சம் பற்களால் கடித்து நளினம் காட்டினாய்! நல்ல பழக்கமில்லை என்றே நானும் சொல்ல.. அந்த நகங்களைக் கொண்டு என்னைக் கொஞ்சம் கிள்ளினாய்! இல்லை.. இல்லை.. உன் மனதோடு அள்ளினாய்! இதழ்மருந்து பெறவேண்டி உன் இசைவுபெற துடித்திருந்தேன்! மாலையது மறைந்து செல்ல.. இரவது வந்தது மெல்ல.. வாரிக்கொடுப்பதற்கும் வள்ளலாவதற்கும் வஞ்சி நீ காத்திருக்க.. வற்றாத தாகங்கள் வளைந்தோடும் நதிபோல.. உனை நோக்கி ஆசையின் அலைகளை அள்ளித்தெளித்தபடி.. அங்கே நான்! பேசும் சித்திரத்தோடு பெறும்விருந்து இதுவென்றே.. அரவணைக்க நானெழுந்தேன்.. அதிகாலை தூக்கத்தில்!!
அன்பு மனிமொழியே… என் ஆசைப் பைங்கிளியே ..- பேராசிரியர் கல்கியின் ஒரு பாடல் – “மாலைபொழுதினிலே ஒரு நாள் மலர் பொய்கையிலே …” என்ற பாடலில் முருகனே தன் கைபிடிக்க வந்ததாக எண்ணி உவகை பெற்ற காதலி “கண் விழித்தே எழுந்தேன், துயரக்கடலிலே விழுந்தேன்; கண்கள் மூடா தோ, அக்குறை கனவினை நான் காணேனோ ..” என்று கதறுவது போல் என் மனம் உனக்காக ஒவ்வொரு மடல் எழுதிடும்போதும் உயிர் பெறுகிறது!
காதலியே.. என் இதயம் நுழைந்தவள் நீ என்பதால்தான் எனக்குள் இத்தனை மாற்றங்கள்! ஒருமுறை உன் பார்வை வேண்டும் என்றுதான் கேட்டிருந்தேன்.. இப்படி உன் பார்வையிலேயே என்னை முற்றுகையிடுவாய் என்று எண்ணிப்பார்க்கவில்லை! மாலையிலே சந்திக்கலாம் என்கிற விருப்பம் ஒருபக்கமிருக்க.. நாள்முழுவதும் நினைவுகளால் என்னுடன் இருக்கிறாயே அது என்ன கணக்காம்? கலாபக் காதல் என்கிறார்களே.. அது என்ன.. கண்டவுடன் காதல் என்கிறார்களே அது என்ன.. காதலிலே இத்தனை வகைகள் இருந்தாலும் நம் காதல் எந்த வகை?
அன்பின் பரிபாஷையை அடுத்தவர் கேட்காமல் உந்தன் காதில் வந்து ஓதும் நிமிஷம் மறக்க முடியுமா? என் வருகைக்காக காத்திருந்த உன் கண்களைப் பார்.. கதைகள் சொல்லும்! படபடப்புடன் இயங்கிக்கொண்டிருந்த உன் இதயத்தைக் கேள்.. பதில்கள் சொல்லும்! நேற்றா இன்றா.. நெஞ்சம் நெருங்கியது எப்போது என்பதை எப்படிக் கண்டெடுக்க முடியும்? சுவாசக்காற்றில் கலந்து உச்சரிக்கப்படும் உன் பெயர் என்றானபின் சொந்தமில்லாமல் போகுமா? கதை இன்றோடு தீருமா? அளவுகளால் அடங்கிப்போகாதது அன்பு மட்டும்தான் என்று நீ சொன்னபோதும்.. காதலும் பக்தியும் தராசுத்தட்டில் இருபக்கங்களில் சமநிறையுடன் இருக்கும் என்கிற உன் தர்க்கமும் என்னை சற்றே புரட்டிப்போட்டன.
எங்கேயிருந்தாய் இத்தனை நாள் என்று நான் கேட்டபோது.. உங்களை நோக்கி நகர்ந்துகொண்டு என்று பதில் அளித்தாய்! சரிந்தேன்..விழுந்தேன் என்றேன்.. நான்.. எங்கே என்றாய் நீ! உன்னுள்ளத்தில் என்பதே என் பதில்! உள்ளமே பூவாய் மலரும் உன்னதம் காதல் என்றேன்.. நம்பமாட்டேன் என்றாய்.. உயிர்ப்பூவைக் கிள்ளிப்பார்ப்பது உனக்குப் பிடிக்கும் என்றால் என் காதலை பரிசோதனை செய்துகொள் என்றேன்! பற்றியிருக்கும் பாசத் துடிப்பை பாதியில் நிறுத்த முடியாது! பக்குவப்பட்ட மனதால்கூட காதலை அடக்க முடியாது! தப்போ சரியோ .. காதலுக்கு கண்கள் கிடையாது! அன்பிற்கும் அறிவிற்கும் போட்டிவைத்தால் ஆரம்பக்கட்டத்திலேயே.. அறிவு சரணடைந்துவிடும்! அன்பே அங்கு வெற்றியுறும்! போதும் என்று சொல்கிற எந்த மனமும் போதும் என்று நினைப்பதில்லை. வேண்டாம் என்று சொல்லும் பெண்மனம் இப்பூமியில் இருக்கவே நியாயமில்லை! யாரிங்கே யார்வசம் யார் சொல்லக்கூடும்? தத்துவங்கள் எல்லாம் தவிடுபொடியாகும்.. அத்துமீறல்கூட அவசியமாய் தோன்றும்!
இன்றுவரை இந்த பூமியில் காதலில் விழுந்தவர்கள் கணக்கை எண்ணிப்பார்க்க முடியுமா? பரஸ்பரமாய் நெஞ்சில்பூக்கும் இந்தப் பவளமல்லிகையை.. உள்ளம் உள்ள எவரும் மறுப்பதில்லை.. உன்னில் நானும் என்னில் நீயும் என்றாகும் ஒரு நிலை என்பதை நீ உணரத்தொடங்கிய அந்த நொடியில்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கிறது! இது வெறும் உடற்கூறு அல்ல.. உள்ளத்தின் கூறு என்பதை உணரும்படி கூறவா? சொந்தம் என்பதும் பந்தம் என்பதும் எங்கு இருக்கிறதோ அங்குதான் அன்பு நிலவும்.. ஆசை தவழும்.. இன்பம் தழுவும்.. இதயம் மலரும்! அக்கறை என்று எப்போது ஏற்பட்டுவிடுகிறதோ.. இனி நாளெல்லாம் அப்படித்தான்!
அன்புடன்… கவிச்சந்திரன்
மு.இரவிச்சந்திரன் (காவிரிமைந்தன்)
115 24வது தெரு சங்கர் நகர்
பம்மல் சென்னை 600 075
தற்போது – அபுதாபி – ஐக்கிய அமீரகக் கூட்டமைப்பு
0091 9444236999
00971 50 2519693