சின்னதொரு மனதுக்குள்ளே சிங்காரத் தேர் போன்றது!

 

அன்பே மணிமொழி!

காலமெல்லாம் நம் காதல் மலர்ந்த நாள்முதல் வரைந்த கடிதங்கள் – தமிழால் உன்னை அளந்த கடிதங்கள்.. நம் அன்பைப் பொழிந்த கடிதங்கள்.. இலக்கியத் தமிழால் இதயம் நனைக்கும் கடிதங்கள்.. ஒன்றா இரண்டா.. அப்படி நம் காதல் பொக்கிஷத்தைப் புரட்டிப் பார்த்தேன்.. பிடித்தப் பக்கங்களை இங்கே உன் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்!

கற்றாரும் கல்லாரும் காதலை மறந்தார் எவருமில்லை என்கிற வகையில் உற்றாரும் உறவினரும் உயிர்கொண்டோர் அனைவருமே பெற்றிடும் பேரின்பம் இவ்வுலக வாழ்க்கையிலே இதற்கு ஈடு இணை இல்லை என்பதாக.. முற்றாத கனியிதுமூன்றாம்பாலிது! மோகன ராகமிதுமூழ்கிக் கரையேறுவது! அச்சாரமிது!  ஆனந்தப் பாடலிது! அணைகளிட்டாலும் கரைகளை மீறுவது! உதட்டளவில் நில்லாமல் உள்ளத்தளவில் புரளுவது! உயிரோடு உயிராக உலவி வருவது! கற்பனைக் கடலிது! காதலின் நிலையிது! வற்றாத ஜீவனிது! வழிந்தோடி வருகிறது! அறிவினால் அறியப்பட்டாலும் அன்பினால் ஆளப்படுவது! ஐம்புலன்களையும் ஆட்சிபுரிவது

அலைகள்போலவே அடங்க மறுப்பது! ஆற்றின்நீர்போல் பாய்ந்து வருவது! மேடுபள்ளங்கள் யாவும் கடப்பது! ஜாதிமதங்களையும் கேள்வி தொடுப்பது! முப்போதும் எப்போதும் உள்ளம் கேட்பதுதப்பாது உயிர்தன்னில் தாமாக முளைப்பது! கடும்குளிரில் நடுங்காதது! சுடும்வெயிலில் சுருளாதது! சட்டங்களால் மிரளாததுகஷ்டங்களால் கலங்காதது! காதல் ஒன்றே உயிரானதுபேதங்கள் பாராதது! எண்ணங்களில் நீராடுது! ஏக்கங்களில் கரைமோதுது! சின்னதொரு மனதுக்குள்ளே சிங்காரத் தேர் போன்றது! இன்பத்தைப் பொழிகிறதுஇதயத்தை நனைக்கிறதுபிரிவென்று வந்தாலும் உயிரீந்து காக்கிறது! அன்பிற்குப் பொருளை அழுத்தமாய் சொல்கிறது!

அவளுக்கு நான் தான் என்றெண்ணி வாழ்கிறது! அவனுக்கு நான்தான் என மறுபிறவி எடுக்கிறது! அனுதினமும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது! வாழ்க்கைக்கு பொருள் எல்லாம் இதிலிருந்தே தொடங்குகிறது! இதைவிடுத்து கணக்கிட்டால் வறட்சிதான் வளர்கிறது! மலர்கின்ற பூக்களெல்லாம் இதழ்விரித்து சிரிப்பதுவும்.. மழைகூட இம்மண்ணில் தவறாமல் பெய்வதும்.. இதுவெல்லாம் காதலைத்தான் வாழவைக்க என்று உறுதிமொழி எடுக்கிறது! வசந்தகாலம் வருவதுவும் வைகறையில் சூரிய உதயம் என்று எதையெடுத்துக் கொண்டாலும் இவையெல்லாம் காதலுடன் மானிடரை வாழ்த்திடவே வைக்கிறது! தோல்வியெனும் பள்ளமதில் தான்வீழ்ந்த பலரையும் வெற்றியெனும் சிகரம்நோக்கி படையெடுக்க வைக்கிறது!

நான் என்னும் தத்துவத்தை தானாக அறியாமல்.. தன்னுடனே இன்னொரு உயிர்சேரும்போது புரிகிறது! வீணான மனக்குழப்பம்  யாதாக இருந்தாலும் காதலியின் கடைக்கண்ணில் கற்பூரமாகிறது! தேடும்பொருள் கையில்கிடைக்க.. தேவியருள் நித்தமென வாழ்வதிலே அர்த்தமிருக்கிறதுவிண்ணிலிருந்து விழுந்தமழை மண்ணில்வந்து சேர்ந்தவுடன் நிறம்மாறிக் காட்டுவதுபோல் நம் மனதில் புத்தம் புதியதாய் காதல் கொடி பறக்கிறது!  சங்கீத மேகங்கள் சதிராடும் நேரங்கள்.. நம் காதல் சந்தங்களை ஸ்ருதியோடு பாடுகிறது! இமைக்காமல் உனைப் பார்க்க ஏகாந்தம் தான்பிறக்க.. வளர்காதல் நிலையாக வந்துவிட்டேன் என்கிறது! எழுதாத வார்த்தை எங்கே .. இன்னும்கூட இருக்கிறதா என்று நீ என்னைக் கேட்க.. உன் கண்கள் பேசும்நாள்வரை புதிய அகராதி வந்துகொண்டே இருக்கும் என்றேன்!!

மனக்கோவில்சிலையாய் நீயும் எனக்குள்ளே அமர்ந்திருக்கும் மகராணியே! மலர்மாலை தினம் சூட்டி தரவேண்டுமா அர்ச்சனைகள் என்று கேட்டதற்கு கவிமாலை போதும் என்று கண்ணசைவால் பதில் சொன்னாய்!  புத்தம் புதியதாய்.. உன் புகழ்பாடிடவே.. கற்பனை மேகங்களில் கொஞ்சம் தவழ்ந்து.. காற்று, மழை இவை யாவிலும் ஊர்வலம் கண்டு நீ போற்றும்வகையில் கவிமடல்கள் வரைந்திட நானும் கற்றுக் கொண்டேன்!!

சுகமும் சோகமும் சொந்தம் கொள்ளும் மனித மனம் காதலிலே விழுந்துவிட்டால் இந்தக் கலவை வந்து பற்றிக்கொள்ளும்!  இது மகிழ்ச்சியின் உச்சமா என்று முன்மொழிந்தால்.. சில நேரம் கவலை என்னும் வலையாகவும் இது மாறும்!  வாழ வந்தவள் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டே என்னை ஆளவந்தவளாய் மாறுகின்ற விசித்திரம் என்ன?  இதயத் தாமரையில் இதழ்கள் விரிப்பு எல்லாம் சிறப்பாய் நடப்பது எப்போது தெரியுமா.. உன் முகம் பார்த்து உறவாடி.. உயிரின் சுமையை உள்ளம் மறந்து உன் மடியில் தலைசாய்ப்பேனே அப்போது!!

தேவ சுகம் என்பதெல்லாம் இதுதான் என்று தேவியே உன்னிடம் நான் கண்டேன்!  அதுவும் தேவைகள் அறிந்து சேவைகள் செய்வது உறவின் பெருமையல்லவா? வாய்திறந்து பெண்மை சொல்லும் வழக்கமான ஒற்றைச் சொல்லும் அங்கே வந்து வந்து போகும்! வண்ணக் கனவை எண்ணம் சுமந்து சுகமாய் தாளம் போடும்!  எதையோ சொல்ல வாய்திறக்க.. அதையே சொல்லி நீ தடுக்க.. நெஞ்சங்கள் இரண்டும் சங்கமமாகும் திருக்கோலம் என்ன சொல்ல?  வற்றாத ஜீவநதிபோல் நாளும் வளரும் காதல் மோகம்.. தொட்டால் மலரும் பூவாய் தொடங்கும் கதைகள் என்ன?  விரல் பட்டால் சிலிர்க்கும் பூவை.. விழிமலர் திறந்து விடைதரும் பார்வை என்வசமாகும்போது.. விடியும்வரை கதைபடிக்கும் படலம் தொடரும்! அம்மம்மா.. என்று நீ மூச்சுவிடுவது ஆனந்தலஹரியாக.. அங்கேதான் தோன்றும் இன்பம் எப்படி வார்த்தையில் சொல்ல?

கயல்விழி ஜாலம் கிடைத்திடும்போது கவிதைக்கு ஊற்று பெறுவேனே!  புதுமொழி பயிலும் மாணவனாக உன்முன் நானும் நிற்பேனே!!  அறிமுகம் ஏதும் இல்லா நிலையில் அரிச்சுவடியிலிருந்து தொடங்குவேனே!  கிளிமொழி பேசும் காதலியின் அடிமனம் தொட்டுப் பாடிடுவேன்!  அன்பின் சுவாசம் இனி வேண்டும் என்றே அனுதினம் அடைக்கலமாகி வென்றிடுவேன்!  இதுவரை நடந்த நாடகத்தை மறு ஒத்திகை பார்க்க வரவேற்பேன்!  இனித்திடும் இரவுகள் இன்றுமுதல் என்று உன் இருவிழிவாசலில் எழுதிவைப்பேன்!!  எதுவரை இன்பம் எனக்கேட்டால்.. நம் உயிர்வரை பயணம் தொடருட்டுமே!!

அன்றொரு நாள் நீ… கார்குழலைக் கலைந்தாடவிட்டபடி..  கன்னி நீயும் காத்திருந்த கணத்திலேதான் கவிதை சொல்ல உன் அறையில் நான் நுழைய, எத்தனையோ அலைகளடி எந்தன் பின்னே.. எல்லாமே உன்னை வந்து சேரும் முன்னே! அட.. என் ஆசைகளைச் சொன்னேன்!  உன் கண்ணசைவில் நூறுவித அர்த்தங்கள்.. களிநடனம் காட்டுகின்ற பெண்மயில்!  என் மடியில் கண்ணுறங்க வேண்டுமென்று ஏகாந்த வேளைதனில் ஏங்கிநிற்க.. மையலுடன் மையல்கொண்டு நானுமங்கே மலர்க்காற்றின் தாலாட்டில் மயங்கிநின்றேன்!  எண்ணத்தில் வந்த பல ஆசைகளும் உன் வண்ணத்தைக் கண்டு அங்கே சொக்கிநிற்க.. சந்தங்களைச் சொல்லிச் சொல்லி காட்டு கண்ணே.. சரணங்களாய் வந்து நிற்பேன் உந்தன் முன்னே!  அந்திபகல் இரண்டிலுமே தொடர்ந்திருக்கும் உன்னுடைய நினைவுகளே எந்தன் சொர்க்கம்!

கண்விழித்தால் மட்டுமல்ல உந்தன் பூமுகம்! கனவுகளிலும் தொடருகின்ற விந்தை அற்புதம்! சந்தனத்தால் செய்துவைத்த சிற்பம் நீயடி.. உனைச் சாய்ந்தபடி பாடுகிற இன்பம் நூறடி!!  உன் தேகமது வீணைபோல எந்தன் மடியிலே வந்ததொரு வசந்தகால பூக்கள் தூவவே..  விரல்களினால் மீட்டுகின்ற ஸ்வரங்கள் கேளடி.. இதயமது வழியுமின்ப கலசம்தானடி!!  விடியும்வரை தொடருமின்பக் கதைகள் பாரடி என்று உன்னை எடுத்தணைத்த போதுவந்த இன்பங்கள் கோடி!  முத்தமிழில் மூன்றாம் தமிழ் போதுமென்று உன் முகபாவணைகள் சொல்ல..  முதல் தமிழால் அதை நான் அலங்கரித்து வார்த்தையில் சொல்ல.. இடையில் உள்ள தமிழ் மட்டும் சும்மா இருக்குமா? ‘ம்’ என்னும் ஸ்வரமெடுத்து பாடியதே!!   அள்ளும்கரம் அணைக்கவரும் என்றபடி அங்கங்கள் அங்கங்கே சுபலாலி பாடுதற்கு நாங்கள் தயார் என்று சொல்ல.. முத்துச்சரம் தத்தையிடம் நித்தம்வளர் சுகங்களென முத்திரையிட்டதே!

நீ இட்ட அடி நோகுமென்று அடுத்த அடி எடுத்துவைக்க.. மலரணைகள் விரித்திடுவேன்.. சித்திரமே.. செந்தமிழே.. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனும் சீர்கொண்டுவரும் சேயிழையே.. அன்னம்போல் நடைநடக்கும் என்னவளே.. அழகுதாமரைபோல் இதழ்விரிக்கும் சின்னவளே.. உன் கன்னங்களில் விழுகின்ற குழிகளில் என்னைக் கொஞ்சம் தடுமாற வைப்பவளே.. ஆருயிரே.. ஆயிழையே.. ஆனந்தப்  பூங்காற்றே! நேரிடையாய் என் நெஞ்சத்தைக் குறிவைத்துத் தாக்கும் உன் போர்முறையை கொஞ்சம் மாற்றேன்! கொள்ளையிடுவதற்கு பல்வேறு வழிகள் கொண்டுதிகழும் காதல்பொதுமறையைக் கற்று சொல்லெடுத்து கொஞ்சம் சுழற்று!  கள்ளவிழிபேசும் மொழியை எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடு!!

ஓர் நொடிக்குள் ஓராயிரம் பரிபாஷை பேசும் உன் கண்கள் மட்டும்தானடி என் கவிதைக்கான களன்!  மறுபார்வை பார்ப்பதென் வழக்கம் என்றாலும் முதல்பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல்.. சில நேரம் மலைத்துப்போகிற சங்கதிகள் நிரம்ப உண்டு! வெட்கித்தலைகவிழும்நேரம்கூட உன் கண்கள் ஓரப்பார்வை பார்ப்பதால் அந்த நிமிடமும்கூட அந்தரங்கத் தொடரெழுதும் அழகென்ன!  ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாய் அங்கே அணிவகுத்து வருவதென்ன? பேசும்விழிகள் அங்கே பேசாதிருப்பதென்ன?  ஓசைகொண்டெழுதும் உள்நாட்டு விவரங்களை ஆசைகொண்டெழுதும் அற்புதம் நடப்பதென்ன?

உன் மைவிழிக்கூடு செய்கின்ற ஜாலத்தில் என் மெய்மறந்து போகிறேன் நான்! சொல்லுதிரும் வாயோ சொல்லாமல் போக.. உன் பொல்லாத கண்கள் எனை ஆள்வதைக் காண்என்னுயிரில் பாதி ஏந்திழையாள் கொள்ள.. அரைகுறையாய் ஆனவன்தான் நான்.. இதில் நிறையென்று கொள்வது நின்னிடம்தான்!   ஏட்டினில் எல்லாம் எழுதிட முடியுமா.. ‘மனது’.. தனக்குள் எப்போதும் வைத்துக்கொண்டே.. மீதியைத்தான் தருகிறதுஇருந்தாலும் என்ன.. தினசரி அதிலே ரகசியக் கொள்ளை அவசியம் செய்து வரைகின்ற மடல்கள்இன்னும்கூட சொல்லப்போனால், உன் அழகெனும் முதலுக்கு.. அன்பெனும் வங்கிக்கு.. நான் கட்டும் வட்டிதானிதுவென்று வைத்துக் கொள்ளலாமா? அதை இனி ஊருக்கும் சொல்லலாமா?

மோக அலைகள் கூடும் நிலையில் பாடும் கவிதை பாரடியோ! ஆசைக்கடலில் பேசும் அலைகள் அதுபோல் நெஞ்சம் தானடியோ! கோடி கதைகள் பேசும் விழிகள் கற்றுத்தந்தது யாரடியோ? தேவை எதுவோ தீரும் வரையில் தாகம் எடுப்பது எங்ஙனமோஊடல் வந்தால் உள்ளம் முழுவதும் உருகிவிடுவது எப்படியோ? உனக்கும் எனக்கும் கணக்கு எதற்கு என்று கேட்பது விசித்திரமோ? கேட்டுப் பெறுவது சுகம்தான் எனிலும் கேளாமல் தருவது பெருமையன்றோ? பார்த்துக் களிப்பதில் பரவசம் வருமே பாவை நீதான் அறியாததோ? சேர்ந்து நடப்பதில் இருவரின் நெஞ்சம் இடம் மாறித் துடிப்பது உண்மைதானே! ஒருமித்த எண்ணங்கள் ஊர்வலம் போகும் பாதை காதல் வழிதானே! உன்வசம் என்னை ஒப்படைத்தபின் உரிமை கொள்வது சுகம்தானே! மறுமுறை வரும்வரை மனம் படுகின்ற பாடு கொஞ்சமல்லவே தேன்மொழியே! உறவின் பெருமைகள் உள்ளம் உணர்வதால் உண்டாகும் உயிரெனப் போற்றிடும் நிலையதுவேமாலையிடுவதும்.. மஞ்சம் தொடுவதும் மரபினில் வருகின்ற முறைதானே! நிறைகுடம் போலவே நீயங்கு வந்து நெஞ்சம் தொடுகிற கோலமென்ன? என் இருவிழியரங்கிலும் நீயே நிறைகிறாய் என்றதும் வருகிற வெட்கமென்ன?

தன்னிலை மறக்கும் என்னிலை பற்றி உன்னிடம் சொல்லிட ஓடிவந்தேன்அங்கு பெண் நிலை என்ன என்பதை அறிய இன்னமும் நானும் ஆவல் கொண்டேன்என்னிடமிங்கு நானே இல்லை என்பதால் உன்னிடம் என்னைத் தேடுகின்றேன் என்று மெய்யகம் காட்டி என் தோள் சாய்ந்தாய்என்னடி இதுவென உன் விழியிமை திறந்து உன்னிடம் நான் கேட்ட கேள்விக்கு சொன்னது பதில் ஒரு சொல்தான் அதுவே காதல்என்று! நாளும் பொழியும் உங்கள் சொல் மழையில் நான் மட்டும் நனைகிறேன் அல்லவா பாழும் இதயம் வாழும் வரையில் தேவை உங்கள் செந்தமிழ் என்றாய்! என் எண்ணத்திரையில் என்றுமே உனை நான் பொங்கும் தமிழினில் வரைந்திருப்பேன் .. கண்ணே என்பேன்! கண்மணியே என்பேன்! காலம் முழுவதும் உன்பேர் சொல்வேன்!

அன்புடன் கவிச்சந்திரன் 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.